Tuesday 11 April 2017

நீடாமங்கலம் வன்கொடுமை - முன்னுரை


நீடாமங்கலம் வன்கொடுமை - முன்னுரை

தமிழகத்தில் திராவிட இயக்கம் குறிப்பாகத் திராவிடர் கழகம்/ சுயமரியாதை இயக்கம் என்ன செய்தது என்ற கேள்வியும் தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டோருக்கு எதுவும் செய்யவேயில்லை என்ற பொய்ப் பரப்பலும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். அவர்களுக்கு விடையளிக்கும் நிகழ்ச்சியாக அமைவது நீடாமங்கலம் நிகழ்ச்சியாகும்.

 நீடாமங்கலத்தில் நடந்த தென் தஞ்சை மாவட்ட  காங்கிரஸ் அரசியல் மாநாட்டில் ஆதி திராவிடத் தோழர்கள் சிலர் சாப்பாட்டுப் பந்தியில் கலந்து கொண்டதற்காக அவர்களை அடித்துத் துன்புறுத்தி மொட்டையடித்துச் சாணி ஊற்றிக் கொடுமை நடந்தது. பெரியாரே அதைப் பற்றி எழுதி போராட்டம் நடத்தி ஒரு கிளர்ச்சி நடக்கக் காரணமாய் இருந்தார்.

அதில் பாதிக்கப்பட்ட தோழர் தேவ சகாயம் 26.1.1938 அன்று ஈரோட்டில் ஆற்றிய உரை 30.1.1938 அன்று விடுதலையில் வெளியானது.

ஆண்டமாரே! நாங்கள் நீடாமங்கலம் காங்கிரஸ் கூட்டத்திற்கு வேடிக்கை பார்க்கப் போனோம். அங்கு எல்லோரும் சாப்பாட் டிற்குப் போகும்போது எங்களையும் கூப்பிட் டார்கள். நாங்களும் சாப்பாட்டிற்குப் போனோம். பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எங்களை ஒரு சபாபதி உடையார் என்பவர் வந்து தலைமயிரைப் பிடித்து இழுத்து ஏண்டா பள்ளப் பயல்களா? உங்களுக்கு இவ்வளவு ஆணவமா, இந்தக் கூட்டத்தில் வந்து உட்கார்ந்து சாப்பிடலாமா? என விறகுக் கட்டையால் அடித்தார்கள். அடி பொறுக்க மாட்டாமல் சிலர் ஓடி ஆற்றில் விழுந்து அக்கரைக்குப் போய்விட்டார்கள். நாங்கள் சிலர் அடிபட்டு வீட்டிற்குப் போய் விட்டோம். மறுநாள் நாங்கள் வயலில் அறுவடை அறுத்துக் கொண்டிருக்கும்போது கூட்டத் தில் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டது யார்? அவர்களைக் கொண்டு வா என்று கிருஷ்ணமூர்த்தி அய்யர் வந்து சொன் னார். நான் போனேன். அப்போது அய்யர் அவனைச் சும்மா கொண்டு வருகிறாயா? அடிபடவாவை என்று சொன்னார். தலை யாரி மாணிக்கம் தடிக்கம்பால் அடித்துக் கொண்டு வந்தார். அடி பொறுக்க மாட்டாமல் ஓட ஆரம்பித்தேன். என்னைப் பிடித்துக் கொண்டு வந்து விளா மரத்தில் கட்டி வைத்து மறுபடி 10 அடி தடிக்கம்பால் அடித்தார். நாட்டாமைக்காரர் அடைக்கலம், நாட்டாமை ராமன் ஆகியவர்களை அய்யர் கூப்பிட்டு இவனை அவிழ்த்துக் கொண்டு போய் மொட்டை அடித்துச் சாணியை ஊத்தி விடு என்று சொன்னார். அந்தப் பிரகாரம் பாரியாரிமகன் ஆறுமுகம் மொட்டை அடித் தார். தலையாரி மாணிக்கம் சாணி ஊத்தி னார். பிறகு நாங்கள் தலையை முழுகிவிட்டு வீட்டிற்குப் போய்விட்டோம்.

நீடாமங்கலம் காங்கிரஸ் அரசியல் மாநாட் டில் ஆதி திராவிடத் தோழர்களுக்கு நேரிட்ட கொடுமையை ஆதாரபூர்வமாகச் சாட்சிகள டன் கொடுமைக்கு ஆளானவர்களின் அறிக் கைகளோடு குடிஅரசு எடுத்துக்காட்டியது உண்மையிலேயே ஒரு பெருங்கிளர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. காங்கிரஸ் சிகாமணிகளின் யோக்கியதையும் இவர்களுக்குத் தாளம் போடும் தன்னலக்காரரின் வண்டவாளமும் வெளிப்பட்டுச் சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டது.

குடிஅரசு ஏட்டில் மட்டுமல்லாது, விடு தலை ஏட்டிலும் இச்செய்தி வெளியாயிற்று. ஆனால் அதைக் காங்கிரஸ் தோழர்கள் அடியோடு மறுத்துக் கூறியதுடன் அவற்றைப் பொய்யாக்கிக் காட்டத் தப்பான வழிகளில் முயற்சித்தனர். இச்செய்தி வெளியான 15 நாள் கழித்து, அடிபட்டு- உதைபட்டு மொட்டை அடித்துச் சாணி அபிடேகம் செய் யப்பட்ட ஆதிதிராவிடர் பலரைப் பிடித்துக் கொண்டு வந்தும் மிரட்டி, அம்மாதிரியான செயல் ஒன்றுமே நடக்கவில்லையென்று எழுதிக்கொண்டு, அதில் அவர்களது கையெ ழுத்து வாங்கி அதில் சேராதவர்கள் புகைப் படத்தையும், வாக்குமூலத்தையும் பத்திரிகை களில் போட்டு மக்களை ஏமாற்றப் பார்த்த துடன் விடுதலை பத்திரிகை பொய்யான சேதியை வெளிப்படுத்திற்று என்று தலைப்புக் கொடுத்து தினமணி முதலிய பத்திரிகைகள் பிரச்சாரம் செய்தன. அத்தோடு நிற்காமல் காங்கிரசார் வழக்கும் தொடர்ந்தனர். அதை உறுதியுடன் எதிர் கொண்ட பெரியார் நீதிமன்றம் அபராதம் விதித்தாலும் அது அதிகாரத்தைப் பயன்படுத்தி பெற்றத் தீர்ப்பு என்று துணிவுடன் குடியரசிலும், விடுதலையிலும் எழுதினர்.


No comments:

Post a Comment