Wednesday 10 May 2017

புத்தர் - வள்ளுவர்

புத்தர் - வள்ளுவர்

திராவிடர் கழகத்தினர் வள்ளுவர், புத்தர் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்கள். அதையே வைத்துக் கொண்டு மக்களை, இதைத்தான் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டோம்.

இப்பொழுது மட்டும் வள்ளுவரையும், புத்தரையும் வாழ்த்திக் கொண்டாடுகிறார்கள் என்று கூறமுடியாது.  இதற்குமுன் 30 ஆண்டுப் பிரச்சாரமும் அதுவேதான்.  இதையும் தள்ளிவிடுங்கள்.

நாங்கள் செய்தது தவறு என்று உங்கள் மனம் கூறுமானால் உங்களுக்கு இரட்டிப்பு உரிமை உண்டு தள்ளுவதற்கு.  நல்லதைக் கடைப்பிடியுங்கள். இப்படி இருந்தால்தான் மனித சமுதாயம், நாளுக்கு நாள் வளரும். நமக்கு அதிகமான அறிவு, சிந்தனை தேவை. ஈரோட்டில் மாநாடு நடந்ததைப் பார்த்து கண்டவர் அலட்சியமாகப் பேசினார்கள். கடைசியில் அகில இந்திய பண்டிகையாக புத்தர் விழா ஆகிவிட்டது.

இதுகூடப் பெரிதில்லை. சர்க்கார் இதற்காக ஒரு நாள் குறிப்பிட்டு விடுமுறையளித்ததுதான் இதைவிடப் பெரிய ஆச்சரியம்! புத்தர் பெயரால் அவருடைய பிறந்த நாளில் புதிய ஸ்டாம்புகளை வெளியிட்டிருக்கிறார்கள்! ஒவ்வொருவருக்கும் புத்தர் படத்தை இலவசமாகக் கொடுத்திருக்கிறார்கள்! இரண்டு மாதத்திற்கு ஒரு படமாக புத்தர் பிறந்தது, வளர்ந்தது,  மனைவி மக்களிடமிருந்து பிரிந்து சென்றது சந்நியாசம் வாங்கினது போன்ற படங்களை அதில் போட்டிருக்கிறார்கள்! மிகவும் நன்றாக இருந்தது. அவர் வகுத்த கொள்கைகளை இந்நாட்டில் விழாவாக இன்று கொண்டாடினால்கூட தப்பு என்கிறார்களே சிலர்!

மதமில்லாத சர்க்கார் என்று பெயர் வைத்துக் கொண்டு இப்படி ஒரு விழாவிற்கு ஆதரவு கொடுத்தால் என்ன அர்த்தம்? புத்தி இருக்கிறதா? இல்லையா? என்றனர். அவர்களெல்லாம் புத்தர் விழா கொண்டாடுவது தப்பு என்றும் சொல்லவில்லை. நல்லது என்றும் சொல்லவில்லை. இவ்வாறு பத்திரிகைகளில் எழுதி வருகின்றனர். மதச்சார்பற்ற சர்க்காரில் தீபாவளிக்கு இரண்டு நாள், சரஸ்வதி பூஜைக்கு மூன்று நாள் விடுமுறை! இவைகளெல்லாம் பண்டிகையில்லையா? பூணூல் போட ஒரு நாள் லீவு விடலாமா? எத்தனை பேர் இந்த நாட்டில் அன்றைக்குப் பூணூல் போடுகின்றனர். இதையெல்லாம் யார் கேட்கிறார்கள்? எந்தப் பத்திரிகை எழுதுகிறது?

இந்த நாட்டின் பிரசிடென்ட் பிரசாத், முதலமைச்சர் நேரு,  மாஜி கவர்னர் ஜெனரல் இராஜாஜி வரையில் புத்தரைப் பற்றி மிக ஜாக்ரதையாகப் பேசியிருக்கிறார்கள். சிலர் ரிஷிகள் சொன்னதுதான். உபநிஷத்தில் இருப்பதுதான். கீதையில் இருப்பதுதான் இவை புதிதாக புத்தர் ஒன்றையும் சொல்லிவிடவில்லை என்று பேசினார்கள்.

நேரு அவர்கள் ஜாதியை ஒழிக்க வேண்டும்; கிரகணங்களின் போது முழுக்குப் போடுவது தப்பு, ஜோதிடம் பார்ப்பது முட்டாள்தனம் அது இது என்ற சகுனங்கள் தப்பு என்று பச்சையாகவே பேசிக் கண்டிக்க ஆரம்பித்து விட்டார். இப்படி ஒரு பெரிய மாறுதலோடு புத்தர் விழா கொண்டாடப்பட்டது. நாம் முயற்சி எடுத்துச் செய்த காரியம் தப்பு இல்லை என்கிற அளவுக்கு வந்துவிட்டது. அவர்கள் கொண்டாடுவதைப் பார்த்து, கூட இருக்கிறவர்கள் சிரிக்கிறார்கள். எதிரிகளும் புத்தரைப் பற்றிக் கூப்பாடு போடுகிறார்கள்.
தமிழ்நாடு கொஞ்சம் திருப்பு முனைக்கு வந்திருக்கிறது. இதைக் கண்டு நாடு எப்படிப் போகுமோ என்று தடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள். இப்படித்தான் திருக்குறளைப் பள்ளியில் வைப்பதையும் நிறுத்திவிட்டார்கள். எங்கு பார்த்தாலும் பரிமேலழகர் உரையாகவே இருக்கும். அதனால் வேதமும், குறளும் ஒன்று என்று மக்கள் எண்ணினர். ஓர் ஆங்கிலப் புத்தகத்தில் கீதையிலிருந்த கருத்துகளை எடுத்துத்தான் குறளில் சொல்லப்பட்டிருக்கிறது என்று எழுதியிருந்ததைப் பார்த்தேன். இப்படிக்கு மக்களை ஏய்க்கிறார்கள்.

நான் 30 ஆண்டுகளாக பார்த்துக் கொண்டு வருகிறேன். ஆரியர்கள் இந்நாட்டுக்குக் குடியேறியவர்கள் என்று எழுதியிருக்கும்.    ஆனால், இப்போது அந்த சரித்திரத்தையே தலைகீழாக மாற்றி வருகிறார்கள். கொஞ்ச நாட்களுக்கு ஆரியர்கள் என்பவர்கள் குடி புகுந்தார்கள். அவர்கள் வருவதற்கு முன்பு திராவிடர்களும் குடிபுகுந்தவர்கள்தான். அவர்களும் இந்த நாட்டுக்குச் சொந்தம் இல்லை என்று எழுதி வருகிறார்கள். இவைகளை யார் கேட்கிறார்கள்? நம் புலவர்களை எடுத்துக் கொண்டால் எல்லோரும் வயிற்றுக்காகப் பாடுபடுபவர்கள்! அறிவுக்கு என்று படித்தவர்கள் 1000 க்கு ஒருவர்தான். அப்படிப் படித்துப் பட்டம் பெற்று இருந்தாலும் வேலைக்காக சிபாரிசுக்குத் தேடுவதற்குச் சரியாக இருக்கிறது.
தப்பித்தவறி கல்லூரியில் பேசிவிட்டால் நம் தப்புதானே. போ, போ, வெளியே இந்த மாதிரிப் பேசாதே என்று கூறுகிறான். நான் ஒருவன்தான் வயிற்றெரிச்சலில் பேசுகிறேன். ஜாதி ஒழியவேண்டும் என்று வள்ளுவர் சொன்னார். புத்தர் சொன்னார். அவர்களுக்கு அடுத்தபடியாக நான் சொல்லுகிறேன். ஜாதிகள் ஒழிய வேண்டும் என்று கஷ்டத்துடன் பாடுபடுகிறேன்.

காந்தியத்தைப் பின்பற்றுகிறவர்களில் யார் சொல்லுகிறார்கள் ஜாதி ஒழியவேண்டும் என்று? தீண்டாமை பேதம் ஒழிய வேண்டும் என்று சொல்லுவார்களே தவிர ஜாதிகள் அனைத்தும் ஒழிய வேன்டும் என்று சொல்லமாட்டார்கள்.

யார் எப்படிப் பேசினாலும் ஜாதி இந்த நாட்டை விட்டு ஒழியத்தான் போகிறது. இவர்கள் புத்தர் கொள்கைகளை ஆதரித்திருந்தால், அது ஜப்பான், மலேயா, பர்மா, சயாமுக்கு ஏன் போகிறது? தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களிலும் சரித்திரங்களிலும் புத்தநெறி விரட்டி அடிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். பவுத்தர்களுடைய மடம், கலாசாலைகளைத் தீ வைத்துக் கொளுத்தி இருக்கிறார்கள். பவுத்தர்களைக் கழுவேற்றிக் கொன்றிருக்கிறார்கள்.

காஞ்சிபுரம் வரை புத்தர்கள் கொள்கைகள் பரவி, ஜப்பான், பர்மா, மலேயா போன்ற நாடுகளுக்கும் பரவி விட்டது. ரங்கநாதரைக் காப்பியடித்து அதற்குத் தங்கமுலாம் பூசி வைத்திருக்கிறார்கள். ஆனால், எண்ணெய் விளக்குகள் இல்லை. இங்கிருப்பதைப் போல் பரிவார தேவதைகள் அங்கும் இருக்கிறார்கள். நாத்திகர் என்று நிந்திக்கப்பட்டு, வையப்பட்டு 2,000 வருடங்களாக மறைக்கப்பட்டு வந்த ஒருவரை இன்று 1956-இல் திடீரென்று அரசாங்கம் முதற்கொண்டு பல அறிஞர்கள் வரையில் ஊர்ஊராகப் பெருமைப்படுத்திப் பேசி விழா கொண்டாடுகிறார்கள் என்றால், என்ன அர்த்தம்? நன்றாக சிந்தித்துப் பாருங்கள். புத்தர் தன் கொள்கைகளை மாற்றிக் கொண்டாரா? இதனுடைய அர்த்தம் என்ன? முன்னிருந்த நிலைமையைவிட ஒரு படி நாம் முன்னேறியிருக்கிறோம்.  நம் நிலையிலிருந்து கொஞ்சம் மாறியிருக்கிறோம் என்பதுதான். நமக்குப் புத்தி வந்துவிட்டது என்பதுதான் அர்த்தம். புத்தர் சொல்லியிருந்தாலும் யோசித்துப் பார்ப்போமே என்ற அளவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.

--`விடுதலை", 11.-6.-1956

+++++++++++++++++++++++++++++++++++++++

சிந்திக்க முடிந்தது
புத்தர் அந்தக் காலத்திலேயே துணிந்து சொன்னார்; கடவுள் என்று ஒன்று இல்லை; அது இருக்க வேண்டிய அவசியமுமில்லை என்று சொன்னார். கடவுள் இல்லை என்பதை உணர்ந் ததால் தான் புத்தரால் அறிவோடு சிந்திக்க முடிந்தது.
- (விடுதலை, 23.1.1968)


No comments:

Post a Comment