Tuesday, 16 May 2017

விதவைக் கலப்பு மண பாராட்டுவிழாவில் பெரியார். - 07.10.1934


விதவைக் கலப்பு மண பாராட்டுவிழாவில் பெரியார். புதுக்கோட்டையில் தோழர் ஈ.வெ.ரா.

தலைவரவர்களே, தோழர்களே!

இந்தப் புதுக்கோட்டையில் எங்களுக்காக நடத்தப்பட்ட ஆடம்பர வரவேற்புகளுக்கும், விருந்துகளுக்கும் இங்கு நடைபெறுகிற நடவடிக்கை களுக்கும் நான் நன்றி செலுத்துவதுடன் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

தோழர்கள் ரங்கம்மாள் சிதம்பரம் தம்பதிகள் சீர்திருத்த முறையில் விவாகம் செய்து கொண்டவர்களாதலால், அவர்கள் பாராட்டுதலுக்கும், வரவேற்புக்கும் உரியவர்கள் ஆவார்கள். ஆனால் எனக்கு எதற்காக இந்த ஆடம்பர வரவேற்புகள் என்பது எனக்கே விளங்கவில்லை.

இந்த ராஜ்யம் ஒரு சுதேச சமஸ்தானமாதலால் இங்கு நமது இயக்கத்தைப் பிரசாரம் செய்வதற்கு சமஸ்தானத்திலோ, அல்லது வேறு வகையிலோ ஏதாவது இடையூறு ஏற்படுமோ எனக் கருதி, இந்த முறையில் ஏதாவது வகை செய்யக் கருதி தோழர் வல்லத்தரசும் அவர்களது தோழர்கள் முரு. தேனப்பன், அ.செ.சு. சாமிநாதன், லெ. சோமசுந்தரம், கா.ச. சடையணன், சி.பெ.க. பெரிய கருப்பன் முதலியவர் களும் இந்த ஏற்பாடு செய்தார்களோ என்று எண்ணுகிறேன். (சிரிப்பு)

இந்த இரகசிய ஏற்பாட்டிற்கு இவ்வளவு பேர்கள் வந்து கூடியிருப்பது எனக்கு மகிழ்ச்சியாய் இருப்பதோடு, இந்த வரவேற்புப் பத்திரத்தில் கண்ட வாக்கியங்களைக் கவனிக்கும் போது சுயமரியாதை இயக்க சீர்திருத்தத் துறையில் இந்த ராஜ்யம் உச்சஸ்தான விருப்பம் கொண்டதாகவே தெரிகின்றது. வரவேற்புப் பத்திரத்தில் என்னைப் பற்றி புகழ்ந்திருக்கும் விஷயங்களை நான் ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும் அதில் கண்டுள்ள அதி தீவிர வாக்கியங்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு அதற்காக நன்றி செலுத்த வேண்டியவனாயிருக்கிறேன்.

இந்த வரவேற்பு ஆடம்பரங்கள் புதுக்கோட்டை சமஸ்தான இளைஞர் சங்கத்தின் பேரால் இருப்பதால், இளைஞர்களைப் பற்றி இரண்டொரு வார்த்தை பேசிவிட்டுப் பிறகு பத்திரத்திற்குப் பதில் சொல்லுகிறேன்.

இளைஞர்கள் என்பவர்கள் தூய்மையான மனதையுடையவர்கள். அவர்கள் உலக வாழ்க்கை வியாபாரத்தில் நுழையாதவர்களாதலால் அவர்கள் எண்ணமும், காரியமும் ஒன்றாய் இருப்பதற்குச் சௌகரியம் உண்டு.

ஆனால் அவர்களுக்குப் போதிய உலக அனுபவம் ஏற்படக் காலம் இல்லை. ஆதலால் இளைஞர்கள் திடீரென்று எந்தக் காரியத்திலும் பிரவேசித்துவிடக் கூடாது. விஷயங்களை ஆலோசித்துப் பார்க்க வேண்டும். தங்கள் எண்ணங்களுக்கும், செய்கைகளுக்கும் அனுபவ பலன் என்ன? அது எப்படிப்பட்டது? என்பதை நடுநிலைமையிலிருந்து யோசித்துப் பார்த்து சரித்திரங்களையும் சம்பவங்களையும் அறிந்தே ஒரு துறையில் இறங்க வேண்டும்.

இளைஞர்கள் முதலில் சமூக வாழ்விலுள்ள கஷ்டங்களை ஒழிக்கப் பாடுபட வேண்டும். திடீரென்று அரசியலில் குதிக்க வேண்டியதில்லை. ஏனெனில் அரசியல் என்பது சூதாட்டம் போன்ற காரியமானதால் இளைஞர்கள் சுலபத்தில் ஏமாந்து போகக் கூடும். அதைப் பெரியவர்களுக்கு விட்டு விட்டு மனித வாழ்க்கையைச் சுலபமாகவும், சௌக்கியமாகவும் இருக்கும்படி பார்க்க வேண்டும். இந்தப் பலனால்தான் ஒரு தேசத்தின் சமூகத்தின் பெருமை இருக்கின்றதே ஒழிய அரசியலிலேயே இருப்பதாகச் சொல்ல முடியாது.

நிற்க, சீர்திருத்தத் துறையில் நான் பெரிய மாறுதல் செய்திருப்பதாகப் புகழுகிறீர்கள்.

சீர்திருத்தம் என்பது ஒரு பிரமாதமான காரியமல்ல. மக்கள் தாங்கள் இருக்கும் நிலையிலிருந்து முற்போக்கடைய எண்ணுவதும் மாறுதல் அடைய ஆசைப்படுவதும் இயற்கையேயாகும்.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மனிதனும் அவனவன் வாழ்வில் முற்போக்கும், மாறுதலும் அடைந்துகொண்டே வருகிறான். இதற்காகத் தனி லட்சியம் தேவையில்லை. மரக்கட்டை போல் உணர்ச்சியற்றவனாய் இருந்தாலும் அவன் கூட காலப்போக்கில் தானாகவே மாறுதலும், முற்போக்கும் அடைந்துதான் தீருவான்.

ஆனால் அப்படிப்பட்ட விஷயங்களில் நம் போன்றவர்கள் செய்யும் விசேஷ காரியம் என்னவென்றால் எப்படிப்பட்ட மாறுதல், எப்படிப்பட்ட முற்போக்கு அவசியம் என்பதில் செலுத்தும் கவனமேயாகும்.

தானாகப் போய்க்கொண்டிருக்கும் முற்போக்குக்கும், மாறுதலுக்கும் தடையாயிருந்து அவற்றை வேறு வழியில் திருப்புவதினால் சில சமயங்களில் பெருத்த கிளர்ச்சி ஏற்பட்டு விடுகின்றது. அதற்கு எதிர்ப்பும், பழிப்பும் பலமாய் ஏற்பட்டு விடுகின்றது. இப்படிப்பட்ட சமயங்களில் சிலர் பழமையை எதாஸ்திதியை குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டு உபத்திரவப்படுகிறார்கள். தொல்லைகளை விளைவிக்கிறார்கள். இத்தொல்லையும் உபத்திரவமும் தங்கள் அறியாமையால் செய்வதும் உண்டு. சிலர் தங்கள் சுயநலங்களுக்கு ஹானி ஏற்படுமே என்ற கெட்ட எண்ணத்தின் மீது செய்வதும் உண்டு.

எப்படியிருந்தாலும் அபாயமான வழியில் கெடுதி உண்டாக்கும் வழியில் மாறுதலும், முற்போக்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மக்கள் கடமையாகும். மாறுதல் வரும் போது அதைக் கையாளுபவர்கள் துன்பத்துக்கும், பழிப்புக்கும் ஆளாவது என்பதில் புதிதல்ல. சரித்திரகால இயற்கையாகும். சாக்ரடீஸ், புத்தர், கிறிஸ்து, மகம்மது ஆகிய பெரியார்கள் இன்று எவ்வளவோ மக்களின் வணக்கத்துக்கும், மதிப்புக்கும் உரியவர்களானாலும் அவர்கள் காலத்தில் எவ்வளவோ தொல்லைக்கும், இழிவுக்கும், பழிப்புக்கும் ஆளானதாகச் சரித்திரங்கள் சொல்லுகின்றன.

அதுபோலவே சில மாறுதல்கள் தற்கால மக்களுக்குக் கசப்பாயிருந் தாலும் பிற்கால மக்களால் மதிப்பும், பெருமையும் பெறும் என்ற துணிவு எனக்குண்டு. அந்த நம்பிக்கையின் பேரில் தான் நாம் எந்த மாறுதலையும் திருத்தத்தையும் செய்யத் துணிய வேண்டுமே ஒழிய, நாம் இன்றே பாராட்டப்பட வேண்டும் என்று கருதிக் கொண்டு செய்வது பயன்படாது.

கல்யாணம், இழவு, வாழ்வு முதலிய துறைகளில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் சுயமரியாதை இயக்கம்தான் என்று இங்கு பேசியவர்கள் சொன்னார்கள். அதை முழுவதையும் நான் ஒப்புக் கொள்ள வில்லை. காலதேசவர்த்தமானம் மக்களை அப்படிச் செய்யச் செய்கின்றது. அதில் சிலவற்றிக்கு சு.ம. இயக்கம் துணைபுரிந்தது என்று சொல்லலாம்.

குறிப்பாக மனித சமூகத்தில் பெண்கள் விஷயத்தில் ஒரு பெரும் மாறுதல் ஏற்பட வேண்டியது அவசியம். இது தீண்டாமையை ஒழிப்பதை விட அவசரமாய்ச் செய்ய வேண்டிய காரியம் என்பது எனது அபிப்பிராயம். அதிலும் விதவைக் கொடுமை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். அது மனித தர்மத்துக்கு மாத்திரமல்லாமல், ஜீவ தர்மத்துக்கே விரோதமானதாகும். விதவைகளைப் பற்றி நினைக்கும் போது எனக்கு ராஜாராம் மோகன்ராயைப் பற்றித்தான் ஞாபகம் வருகின்றது. இன்றைய விதவைகளின் கொடுமைக்கு அவர்தான் காரணம் என்று சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்துகிறேன்.

ஏனெனில் இந்து சாஸ்திர முறைப்படி புருஷன் இறந்தவுடன் பெண்ஜாதியை கட்டையில் பலாத்காரமாயாவது வைத்து புருஷனுடன் கட்டி நெருப்பை வைத்து சுட்டுவிடும் முறை இன்று இருக்குமானால் இன்று உலகில் விதவைகளே இருக்க மாட்டார்கள். விதவைக் கொடுமையும் இருக்காது.

விதவைகளை சுடக்கூடாது என்று சொன்னவர் அவ்விதவைகளுக்கு ஏதாவது ஒரு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அதில்லாமல் இன்று இந்தியாவில் மாத்திரம் குழந்தைகள் உள்பட பெண்களில் 100க்கு 25 பேர் விதவைகளாய் இருக்கிறார்கள் என்றால் இது கொடுமை அல்லவா? இதை ஒழிப்பதைவிட வேறு ஜீவகாருண்ய வேலையோ, சீர்திருத்த வேலையோ இருக்கின்றதா என்று கேட்கின்றேன். அதுபோலவே பெண்கள் சுதந்திர விஷயமும் மோசமாகவே இருக்கின்றது. பெண்கள் விலைப் பொருளாக மதிக்கப்படுகின்றனர். மற்றும் அடிமைப் பொருளாகவும் மதிக்கப்படுகின்றனர். குழந்தைப் பருவம், இளமைப் பருவம், கல்யாணப் பருவம், வாழ்க்கைப் பருவம், முதுமைப் பருவம் ஆகிய எல்லாப் பருவங்களிலும் பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். இவைகளைப் பற்றி நான் சொல்லுவது பழமை விரும்பிகளுக்கு கஷ்டமாய்த் தோன்றலாம். ஆனால் அப்படிப் பட்டவர்கள் பெண்களாயிருந்து அனுபவித்துப் பார்த்தால் தெரியும்.

ஆஸ்திக நாஸ்திகம்

முடிவாக ஆஸ்திக நாஸ்திகத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள். இது ஒரு பயனற்ற விஷயம். ஏனெனில் ஆஸ்திகமும், நாஸ்திகமும் 100க்கு 99 பேர்களின் அபிப்பிராயங்கள், பழக்கவழக்கங்கள், பிறர் சொல்லிக் கொடுப்பதால் சேர்க்கையால் ஏற்படுவதே ஒழிய ஒரு இயற்கை உணர்ச்சி அல்ல. அன்றி பசி, தூக்கம், பஞ்சேந்திரிய உணர்ச்சி ஆகியவைகளைப் போல் இயற்கையாய் ஏற்படும் எண்ணமும் அல்ல. அதைப்பற்றி மனிதன் கவலைப்பட வேண்டியதே இல்லை. அது இன்று ஒரு ஆராய்ச்சி விஷயமாகி, நாகரீக விஷயமாகவும் பேசப்பட்டு வருகின்றது. மனிதனுக்கு கட்டும், காவலும், சட்டமும், போலீசுமாய்த்தான் இருக்கின்றனவே ஒழிய கடவுளோ, நரகமோ, சாஸ்திரமோ, ஒழுக்கமோ கட்டிக் காப்பாற்றி விடவில்லை. அனுபவத்திலும் எவனும் அவற்றின் மீது எவ்வித பொறுப்பையும் சுமத்துவதும் இல்லை.

ஆதலால் ஆஸ்திகம் நாஸ்திகம் என்பது ஒரு பயனற்ற பிரச்சினையாகும். மற்றும் அது அவனவனுடைய சொந்த புத்தி, யோசனையைப் பொருத்ததாகும்.

ஆதலால் நமது வாழ்வில் ஏற்பட வேண்டிய இன்ப, துன்பங்களுக்கும், முற்போக்குக்கும், மாறுதலுக்கும் ஆஸ்திக நாஸ்திகத்தைக் கொண்டு வந்து குறுக்கே போட்டுக்கொண்டு யாரும் கஷ்டப்பட வேண்டியதில்லை.

நம்மைப் பொருத்தவரையில் எந்த அளவில் ஆஸ்திகத்தில் பிரவேசிக்கின்றோம் என்று நினைப்பீர்களானால் வாழ்க்கையின் நலங்களைக் கடவுளின் மீது பொறுப்பேற்றுவதும், கடவுளுக்காகச் செல்வங்களை மக்கள் வாழ்க்கைக்குரிய பொருள்களைப் பாழாக்குவதையும் பொருத்த அளவில் தான் பிரவேசிக்கின்றோம். மற்றபடி எவன் எத்தனை கடவுளை எந்த விதமாக நினைத்துக் கொண்டாலும், வணங்கினாலும், அவற்றோடு பேசினாலும் அதுவே ஆய்விட்டாலும் நமக்கு அக்கரையில்லை (சிரிப்பு)

உலகத்தைப் பொது என்றும் உலகப் பொருள் போக போக்கியங்கள் யாவருக்கும் சமம் என்றும் எண்ண வேண்டும். இதற்குக் கடவுள் குறுக்கிடாமல் இருந்தால் கடவுளைப்பற்றிய வேலை நமக்கு இல்லை. அதைப் பற்றிய கவலையும் இல்லை. ஆகையால் அதை ஒரு பெரிய பிரச்சினையாக வைத்துக் கொண்டு எவரும் கஷ்டப்பட வேண்டியதில்லை.

மற்றொரு சமயம் இந்த ஊருக்கு வந்து இன்னும் பல விஷயங்களைப் பற்றிப் பேச ஆசைப்படுகிறேன். கடைசியாக உங்கள் வரவேற்புக்கும், புகழ்மொழிகளுக்கும், என்னிடம் காட்டிய அன்புக்கும் சிறப்பாக தோழர் முத்துசாமி வல்லத்தரசு அவர்களுக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

07.10.1934இல் புதுக்கோட்டை டவுன்ஹாலில் நடைபெற்ற கோட்டையூர் தோழர் சிதம்பரம் தோழர் ரங்கம்மாள் ஆகியோருக்குத் திருச்சியில் நடந்த விதவைக் கலப்பு மண பாராட்டுவிழாவில் தந்தைபெரியார் ஆற்றிய உரை.

”பகுத்தறிவு” சொற்பொழிவு 14.10.1934

கடவுளுக்கு நோட்டீஸ் கொடுங்கள்! - பெரியார் - 29.2.1948

கடவுளுக்கு நோட்டீஸ் கொடுங்கள்!-பெரியார்


இழிவுக்குக் கடவுள்தான் காரணம் என்று உங்களுக்குத் தோன்றினால் அந்தக் கடவுளுக்கு உடனே நோட்டீஸ் கொடுங்கள். இந்த நோட்டீஸ் விண்ணப்பத்தை அறிந்த இரண்டு வாரத்திற்குள் நீ ஏதாவது ஒரு முடிவான பதில் தெரிவிக்கா விட்டால் உன் கோயிலை இடித்து விடு வோம் என்று எச்சரிக்கை செய்யுங்கள்!

எவனாவது உங்களைப் பார்த்து, ஒதுங்கிப் போ என்று சொன்னால், ஏனப்பா, நான் ஒதுங்க வேண்டும்; என் காற்றுப்பட்டால் உனக்கு என்ன காலராவா  வந்துவிடும்? என்று கேளுங்கள். அவன் தானாகவே ஒதுங்கிப் போய் விடுவான். எவனாவது உங்களைக் கண்டு ஒதுங்கிப்போனால், அவனையும் சும்மா விடாதீர்கள்.

என்னப்பா என்னைப் பார்த்து தவளை மாதிரி எட்டிக் குதிக்கிறாய்? நான் என்ன மலமா, தொட்டால் நாற்றமடிக்க? அல்லது நான் என்ன நெருப்பா, தொட்டால் சுடும் என்று கூற; ஏனப்பா இப்படிப் பித்தலாட்டம் செய்கிறாய்? மலத்தைக் தொட்டால்கூட கையைக் கழுவிவிட்டால் சரியாய்ப் போகிறது என்கிறாய்; என்னைத் தொட்டால் உடுத்தியிருக்கிற வேட்டியோடு குளிக்க வேண்டுமென்று சொல்கிறாயே; இதற்கு என்னப்பா அர்த்தம்? என்று கேளுங்கள். நீங்களே சிந்தித்துப் பாருங்கள்  இவை யெல்லாம் கலப்பற்ற அயோக்கியத்தனமா, அல்லவா என்று! நீங்கள், உங்களது இந்த சமுக இழிவுபற்றிக் கவலைப்படாத - உங்கள் மூடநம்பிக்கை நடத்தை பற்றிக் கவலைப்படாத கிஸான் சபையை நம்பாதீர்கள். கூலி உயர்வால் மட்டுமே உங்கள் இழிவு போய்விடாது. எஜமான் கூலி என்கிற அந்த வேற்றுமையும் அதனால் மறைந்து விடாது. உழைக்காத சோம்பேறிக்கு ஏன் உடைமை இருக்க வேண்டும்? உழைக்கும் பாட்டாளி ஏன் அவனிடம் கூலி பெற்று வாழவேண்டும்? என்று நீங்கள் கேளுங்கள்.

 நீங்கள் முதலில் சரிசமம் ஆன மனிதனாகுங்கள்; பிறகு உடைமையைச் சரிசமமாக்கிக் கொள்ள நீங்கள் பாடுபடுங்கள். உடைமையில் அதிகமான உடைமைக்காரர்களாக இருந்தும் அனேகம் பேருக்கு இழிவு நீங்கவில்லை. உடைமை வரும்; போகும் தற்செயலாய். இழிவு அப்படி அல்ல.. ஆகவே, ஒரு காலணா கூலி உயர்வுக்காக அடிபட்டுச் சாவதைவிட, அவன் ஏன் மேல்ஜாதி, அவன் ஏன் முதலாளி, நான் ஏன் தொழிலாளி என்று கேட்பதில் உயிர் விடுங்கள். கிஸான் தலைவர்களும் அர சாங்கத்தின் ஏவலாளர்கள்; மிராசு தாரரின் கையாள்கள்; பெரிதும் சுயநலமி கள்; நீங்கள் உங்கள் அறிவு காட்டும் வழியைப் பின்பற்றி நடவுங்கள். அரசியலில் வோட்டுரிமை பெறவும், சமுக இயலில் இழிவு நீங்கவும், பொருளாதாரத்தில் முதலாளி ஒழியவும் நீங்கள் ஒன்றுபட்டுக் கிளர்ச்சி செய்யுங்கள்.

நமது மக்கள் மாத்திரம் பெரிதும் பலகாலமாகவே முன்னேற்றமடையாமல் இருக்கக் காரணம் என்ன என்று யோசிக்க வேண்டும். இப்படிப்பட்ட நாளை இவ்வாறு சிந்தனை செய்யத்தான் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெகுகாலமாகவே நம் மக்கள் அறிவு வளர்ச்சியடையாமல் இருந்துவரக் காரணம் கடவுள் இல்லாத குறையாலா? அல்லது அவைகளுக்குப் பூஜை சரிவர நடத்தி வைக்காததாலா? அல்லது அவற்றை மதிக்கத் தவறி விட்டதாலா? யாரேனும் பூஜை நடத்தி வைக்கவில்லை என்றோ, கடவுளை நாம் மதிக்கவில்லை என்றோ, அல்லது கடவுள்களுக்கு நம் நாட்டில் பஞ்சம் என்றோ நம்மீது குற்றம் கூற முடியுமா? அப்படியிருக்க, மற்ற சமு தாய மக்களுக்குள்ள வசதியும் வாய்ப்பும் நமக்கேன் இல்லாமற் போய்விட்டன? இவற்றை நீங்கள் சிந்திக்க வேண்டு மென்பதுதான் எனது முக்கிய கருத்து. எனது வாழ்நாளில் கிடைக்கும் வசதியை இந்தக் காரியத்திற்கே பெரிதும் பயன் படுத்த நான் ஆசைப்படுவதால், இதைப் பற்றித் திருப்பித் திருப்பிக் கூறுகிறேன்.

இழிவின் மூலகாரணத்தை நீக்குக:

நமது இழிவின் மூலகாரணத்தைக் கண்டுபிடித்து அதை நீக்குவதில்தான் நாம் பூரா கவனத்தையும் செலுத்த வேண்டும். நம் ஊரில் காலராவோ, மலேரியாவோ வந்தால் நாம் எப்படி அவற்றுக்குக் காரணமாயிருந்து வரும் அசுத்தங்களை யும், கசுமாலங்களையும் நீக்கி, அந்நோய் பரவவொட்டாமல் செய்கிறோமோ, அதே போல் நமது இழிவுக்குக் காரணமாயிருந்து வரும் சில கசுமாலங்களையும் நீக்க வேண்டும். நம் குறைபாடுகளுக்கு நாம் தழுவி நிற்கும் மதந்தான் காரணமே தவிர, கடவுள் ஒருபோதும் காரணகர்த்தராக மாட்டார். கடவுள் மீது பழி போடுவது என்பது அற்பத்தனம் அயோக்கியத்தனம். ஏனப்பா திருடினாய்? என்று ஒரு மாஜிஸ்ட்ரேட் ஒரு திருடனைப் பார்த்துக் கேட்டால், நான் என்ன செய்யட்டுமுங்க; கடவுள் செயல் என்னை அப்படிச் செய்துட் டதுங்க என்று சொன்னால், மாஜிஸ்ட்ரேட் ஒப்புக் கொள்வாரா? எவனாவது ஒரு போக்கிரி உங்கள் பாக்கெட்டில் கைபோட் டால், எல்லாம் கடவுள் செயல் என்று நீங்கள் யாராவது சும்மா இருந்து விடுவீர்களா?
கடவுள் இருக்கிறார் எல்லாம் பார்த்துக் கொள்வார்  என்று எந்த பக்தனாவது தனது பெட்டியைப் பூட்டாமல் விட்டு விடு கிறானா? கடவுள் காப்பாற்றுவார் என்று நினைத்து எவனாவது காசு, பணம் தேடா மல் தெருவில் சோம்பித் திரிகிறானா? அப்படியிருக்க, நமது இழிவு நீக்கத்திற்கு மட்டும் ஏன், எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நாம் விட்டு வைக்க வேண்டும்? நமது இழிவுக்கும் கடவுளுக் கும் சம்பந்தமில்லை. யாரோ, சில சுயநல நயவஞ்சகக் கூட்டத்தார் தம் சுகபோக வாழ்வுக்காகத் தம்மை மேன்மைப்படுத்தியும், மற்றவரைத் தாழ்மைப்படுத்தியும்  சாஸ்திர புராணங்களை எழுதி வைத்துக் கொண்டு, அவற்றைக் கடவுள் வாக் கென்று கூறி, நம்மை ஒப்புக் கொள்ளும்படி சொன்னால்  நாமும் பேசாமல் ஒப்புக் கொண்டு விடுவதா? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? என்ன குற்றம் செய்தோம்?

நாம் என்ன குற்றம் செய்ததற்காக நம்மைக் கடவுள் சூத்திரனாகப் படைத்தார்? நாம்தானே கோயில் கட்டுவதும் கும்பாபிஷேகம் செய்வதும்? நம் முன்னோர்தானே சாமிக்குப் படியளந்து வந்தார்கள்? அப்படியிருக்க, நம்மவர் கொடுத்ததை வாங்கி வயிறு வீங்க உண்டு, சோம்பேறி வாழ்வு நடத்திய பார்ப்பான், எப்படி உயர்ஜாதியாக்கப்பட்டான்? பாடு பட்டு உழைத்த நம்மவர், எப்படி கீழ்ஜாதி யாக்கப்பட்டார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.

இந்த இழிவிற்குக் கடவுள்தான் கார ணம் என்று உங்களுக்குத் தோன்றினால், அந்தக் கடவுளுக்கு உடனே நோட்டீஸ் கொடுங்கள். கடவுளே, நாங்கள்தான் உனக்கும், உன்னைக் குளிப்பாட்டிவரும் உனது அர்ச்சகனுக்கும் அன்றாடம் படி அளந்து வருகிறோம்; அதை உணராமல் நீ நன்றி மறந்து எங்களை இழிஜாதியாய்ப் படைத்து விட்டாய். பாடுபடாத உன்னை யும், பாடுபடுகிற என்னையும் ஏமாற்றுகிற அவனை  உயர்ஜாதி ஆக்கிவிட்டாய்; ஆகவே  ஒன்று இனி மக்களில் உயர்வு தாழ்வு இல்லை என்றாவது கூறு; அல்லது நீயல்ல அதற்குக் காரணம் என்றாவது ஒப்புக் கொண்டுவிடு. இந்த நோட்டீஸ் விண்ணப்பத்தை அறிந்த இரண்டு வாரத்திற்குள் நீ ஏதாவது ஒரு முடிவான பதில் தெரிவிக்காவிட்டால் உன் கோயிலை இடித்து விடுவோம் என்று எச்சரிக்கை செய்யுங்கள். கடவுள் என்று ஒன்று அந்தக் குழவிக் கல்லில் அடைந் திருக்குமானால், அது வாய் திறந்து பேசட்டும்! இன்றேல் அதை உதறித் தள்ளுங்கள். கடவுள் நரகத்திற்கு அனுப்பி விடுவார் என்று நீங்கள் அஞ்சாதீர்கள்; அப்படி ஒன்று இருக்குமானால், அது அர்ச்சகருக்கே சரியாய்ப் போய்விடும். நரகம் என்பது வெறும் கற்பனைப் பூச் சாண்டி; மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள  அறிவாராய்ச்சியைத் தடை செய்து தமது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள  சூழ்ச்சிக்காரர்கள் செய்த ஒரு தந்திரம்.

தந்தை பெரியார் --  “விடுதலை”, 29.2.1948

Monday, 15 May 2017

தமிழனுக்கு கடவுள் உண்டா? - 29.6.1930.

தமிழனுக்கு கடவுள் உண்டா?

உலகத்தில் மற்ற மதக்காரர்களுடைய கடவுளைப்பற்றிக் கவனித்துப் பார்த்தாலும், இவ்வளவு ஆபாசமாக இல்லா விட்டாலும், யுக்திக்கோ, வாதத்திற்கோ நிற்க முடியாமல் அவைகளுக்கு பெரிதும் பரிகசிக்கத்தக்கதாய்த் தானிருக்கின்றது. அதாவது, உலக சிருஷ்டிக்கு கடவுளைப் பொறுப்பாக்கி அதனோடு கடவுளைப் பொருத்துகிறபோது எல்லாக் கடவுள்களின் யோக்கியதைகளும் ஒரே மாதிரியாகத் தானிருக்கின்றன. உதாரணமாக, இந்துமதத்தில் உலக சிருஷ்டிக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் சொல்லுகிறபோது, கடவுள் முதலில் தண்ணீரை உண்டாக்கி, அதன்மீது இருந்து கொண்டு அதில் ஒரு விதையைப் போட்டு. அந்த வித்திலிருந்து உலகத்தை உண்டாக்கி அவ்வுலகத்திலிருந்து பிர்மாவை சிருஷ்டித்து, அந்த பிர்மா அந்த உலகத்தை இரண்டாக்கி ஒன்றைச் சுவர்க்கமாகவும், மற்றொன்றை பூலோகமாகவும் செய்து, அந்த பூலோகத்தில் பஞ்ச பூதங்களையுண்டாக்கி, பிறகு மனிதர், மிருகம், பட்சி முதலிய ஜாதிகளை சிருஷ்டித்து என்று ஆரம்பித்து மற்றும் இவைபோல அடுக்கடுக்காக எப்படிச் சொல்லிக் கொண்டே போகின்றதோ, அதுபோலவே தான் கிறிஸ்து முதலிய இதர மதங்களிலும் கடவுள் முதல்நாள் ஒன்றை சிருஷ்டித்தார், மூன்றாவது நாள் வேறொன்றைச் சிருஷ்டித்தார் என்பதுபோலவே சொல்லிக் கொண்டு போகப்படுகின்றன.

ஆகவே, அஸ்திவாரத்தில் கடவுள் சிருஷ்டியைப்பற்றிச் சொல்லுகிற விஷயம் எல்லா மதத்திலும் ஒன்று போலவேதானிருக்கின்றன. இவை ஏன் இப்படியிருக்கின்றன என்று பார்ப்போமேயானால், கடவுள் உண்டு என்பதற்கு சமாதானம் சொல்லும் போது, உலக உற்பத்திக்கு ஒரு ஆதாரம் வேண்டாமா? என்று கேட்டுவிட்டு, அதற்காக கடவுள் உலகத்தை உண்டாக்கினார் என்று ஆரம்பித்து, அந்த உண்டாக்கப்பட்டவையென்பதை முதலில் இன்னதையுண்டாக்கினார் இன்னார் என்பதாகச் சில மதமும், முதல் நாள் இன்னதை யுண்டாக்கினார், இரண்டாவது நாள் இன்னதையுண்டாக்கினாரென்பதாகச் சில மதமும் சொல்லுகின்றன. ஆகவே, இந்த இடம் மாத்திரம் எல்லாம் ஒன்றுபோலாகவேதானிருக்கின்றன. இதில் ஏதாவது தகராறு ஏற்படுமானால் எல்லா மதக் கடவுளுக்கும் ஒரே கதிதான் நேரும். கடவுள் ஸ்தாபனத்திற்கு ஒரே மாதிரி அஸ்திவாரம் ஏற்படுவதற்குக் காரணமென்னவென்று பார்ப்போமானால், முதன் முதலாக ஆரிய மதத்திலிருந்து சீர்திருத்தமாக கிறிஸ்தவ மதமேற்பட்டதும், அதிலிருந்து சீர்திருத்தமாக மகம்மதிய மதமேற்பட்டதும் நமக்குக் காணப்படுகிறபடியால், எல்லா மதமும் அதையே பின்பற்றிக்கொண்டு வருவதாயிற்றே தவிர வேறில்லை என்றே தோன்றுகிறது. ஆனால், நாம் ஒரு தமிழர் என்கின்ற முறையில் கடவுள் என்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்வோமானால், "கடவுள்" என்கின்ற பதமே கட+உள் = (கடவுள்) என்பதான இரண்டு சொற்கள் சேர்ந்த பகுபதமாக இருக்கின்றதே தவிர, வட மொழியிலும், ஆங்கில மொழியிலும் இருப்பது போன்ற பகவான் காட் (படின) அல்லா என்பது போன்ற ஒரு தனி வார்த்தையோ அல்லது அந்த விதங்களான அர்த்தத்தைக் கற்பிக்கக் கூடியதான வாக்கியமோ, தமிழில் இல்லையென்பதை உணர வேண்டும். தமிழர்களுக்கு பாஷை தோன்றிய காலத்தில் "கடவுள்" உணர்ச்சி இருந்து இருக்குமானால் அதற்கு ஒரு தனி வார்த்தை இருந்திருக்கும். அது மாத்திரமல்லாமல், ஆங்கிலம் முதலிய பாஷைகளில் கடவுள் இல்லை என்று சொல்லப்படுவதை உணர்த்துவதற்கு எப்படி எத்தீசம், எத்தீஸ்ட், நாஸ்திகம், நாஸ்திகன் என்கின்ற வார்த்தைகள் இருக்கின்றனவோ அவைபோலவே தமிழிலும் கடவுள் இல்லை என்று சொல்லுவதை உணர்த்துவதற்கும், கடவுள் இல்லை என்று சொல்லுபவனைக் குறிப்பிடுவதற்கும் அப்பொருள்கள் கொண்ட ஏதாவது ஒரு வார்த்தை இருந்திருக்கும். ஆகவே, அவற்றிலிருந்து தமிழர்களுக்கும் (அதாவது தமிழ் நாட்டாருக்கும்) கடவுளுக்கும் ஆதியில் எவ்வித சம்பந்தமுமிருந்ததில்லை என்பது ஒருவாறு புலப்படும். இறைவன் என்கின்ற பதத்தை கடவுளுக்கு உள்ள தமிழ்ப் பதம் என்று பண்டிதர்கள் சொல்லக் கூடுமானாலும் அது அரசனுக்கும், தலைவனுக்கும் ஏற்பட்டதே தவிர, கடவுளுக்காக ஏற்பட்ட தனிப் பொருளமைந்த சொல் அல்லவென்றே சொல்லுவோம். ஆனால், கடவுள் என்பது எப்பொருளுக்கும் தலைவன் என்கின்ற முறையில் வேண்டுமானால் இறைவன், பெரியவன் எனினும் பொருந்தும் என்று சப்புக் கட்டலாமேயொழிய அது அதற்கே ஏற்பட்ட தனி வார்த்தை ஆகாது. நிற்க;

தமிழ்நாட்டில் பலர் காலம்சென்ற பிதுர்க்களையும், செல்வாக்குள்ள பெரியார்களையும் அன்பினாலும், வீரர்களை கீர்த்தியாலும் வழிபட நினைத்து அவர்களை உருவகப்படுத்த என்று ஒரு கல் நட்டு அக்கல்லை வணங்கி வந்ததாக மாத்திரம் சொல்லப்படுவதை நான் கேட்டிருக்கிறேன். மற்றபடி இப்போதைய கடவுள்களான சிவன், விஷ்ணு, பிரமன், பிள்ளையார், சுப்பிரமணியன் முதலிய கடவுள்களையோ மற்றும் அது சம்பந்தமான குட்டிக் கடவுள்களையோ தமிழ் மக்கள் வணங்கி வந்தார்கள் அல்லது நம்பி இருந்தார்கள் என்றாவது சொல்லுவதற்குக்கூட இடமில்லை என்று கருதுகிறேன். இதற்கெனக்குத் தோன்றும் ஆதாரம் என்னவென்றால், இப்போது உள்ள கருப்பன், காத்தான் முதலிய பேர்கள் கொண்ட நீச்சக் கடவுள்கள் தவிர மற்ற கடவுள்கள் பெயர்களெல்லாம் வடமொழியிலேயே இருக்கின்றதென்பதே போதுமானதாகும். ஆனால், வடமொழிப் பெயருள்ள சில கடவுள்களின் பெயர்களை தமிழில் மொழிபெயர்த்து அந்தக் கடவுள்களை தமிழில் அழைப்பதைப் பார்க்கின்றோம். என்றாலும், இவை தமிழர்களுக்குள்ளும் ஆதியில் இருந்தது என்பதற்குத் தக்க சமாதானம் சொல்ல யாரும் முன் வருவதை நான் பார்க்கவில்லை. இது மாத்திரமல்லாமல், சைவம், வைணவம் என்று சொல்லப்படும் சமயங்களாகிய தமிழ் மக்களைப் பிடித்த நோய்களான சைவ, வைணவ மதக் கடவுள்கள் எல்லாம் வட மொழிப் பெயர்கள் உடையதாகவும், அவற்றின் ஆதாரங்கள் முழுவதும் வடமொழி வேத சாஸ்திர புராண இதிகாசங்களாகவும்தானே இருக்கின்றதே அல்லாமல், தமிழ் ஆதாரத்தால் ஏற்பட்டதாகச் சொல்லக்கூடிய கடவுள் ஒன்றையுமே நான் கண்டதும் கேட்டதும் இல்லை.

இவற்றுக்கு செய்யப்படும் பூசை முதலியவையும், வடமொழி நூல்கள் ஆதாரப்படி, வடமொழிப் பெயர்கள் கொண்ட வஸ்துகளும் செய்கைகளுமாகவே இருப்பதையும் காணலாம். அதாவது அருச்சனை, அபிஷேகம், பலி, கற்பூரம், சாம்பிராணி, காணிக்கை முதலியவையாகும். தவிரவும், மேற்கண்ட இரண்டு சமயங்களின் பேரால் சொல்லப்படும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் முதலிய சமயாச்சாரியார்களும், பக்தர்மார்களும் கும்பிட்டதும், தேவாரம், திருவாசகம், திருத்தாண்டகம், பிரபந்தம் முதலியவை பாடினதும், மற்ற மக்கள் வாழ்க்கையில் உபயோகப்படுத்துவதும், ஆகிய எல்லாம் வடமொழிப் பேர் கொண்ட கடவுள்களைப் பற்றியும், அவர்களது செய்கைகளைப் பற்றிச் சொல்லப்பட்ட வடமொழிப் புராண இதிகாசங்களிலுள்ள கதைகளைப் பற்றியுமே இருக்கின்றனவே அல்லாமல் மற்றபடி அவை தமிழர்களோ அல்லது தமிழ் பண்டிதர்களோ தமிழர்களுக்கு ஆதியில் இருந்தது என்று சொல்லத்தக்கதாக ஒன்றையுமே, ஒருவர் வாக்கையுமே நான் பார்த்ததும் இல்லை; பிறர் சொல்லக் கேட்டதும் இல்லை. மற்றும், சமயக் குறிகள் என்று சொல்லப்படும் விபூதி, நாமம் முதலிய சின்னங்களின் பெயர்கள்கூட வடமொழியில் உள்ளதே தவிர, தமிழில் உள்ளவையல்ல என்பதே எனது அபிப்பிராயம். வேண்டுமானால் அதை தமிழில் - விபூதியை திருநீறு என்றும், திருமண் என்றும் சொல்லிக் கொள்ளுகிறோம். ஆனாலும், அது சரியான மொழி பெயர்ப்பல்லவென்று சொல்வதோடு, விபூதி, நாமம் என்கின்ற பெயர்கள் எந்தக் கருத்துடன் சொல்லப்படுகின்றனவோ அந்தக் கருத்தும், பொருளும் அவற்றில் இல்லை என்றே சொல்லுவேன்.

விபூதி என்றும், நாமம் என்றும் சொல்லப்படும் வஸ்துகள் சாம்பலும், மண்ணுமாய் இருப்பதால் அந்தப் பெயரையே அதாவது, சாம்பலுக்குள்ள மாறு பெயராகிய நீறு என்றும், மண்ணை மண் என்றும் திரு என்பதை முன்னால் வைத்து திருநீறு, திருநாமம் என்று சொல்லப்படுகின்றதே ஒழிய வேறில்லை என்றே தோன்றுகின்றது. ஆகவே, தமிழில் காட், அல்லா, பகவான் என்பவற்றைக் குறிப்பதற்கு ஒரே வார்த்தையாக ஒன்றுமே இல்லை என்பதும், அதன் சின்னங்களையும் குறிப்பிடுவதற்கு தமிழில் வார்த்தைகள் இல்லை என்பதும், அனுபவத்திலுள்ள கடவுள்களும், பெயர்களும் அவற்றின் நடவடிக்கைகளும்கூட தமிழில் இல்லை என்பதும், மற்றபடி இப்போது இருப்பவை எல்லாம் வடமொழியில் இருந்து தமிழர்கள் எடுத்துக்கொண்டு தங்களுடையனவாக்கிக் கொண்ட மயக்கமே என்றும் எனக்குப் பட்டதை உங்களுக்குச் சொன்னேன்.



- கண்ணனூர் செவ்வாய் தரும சமாஜ ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்களின் தலைமை முடிவுரை --"குடிஅரசு"- 29.6.1930.

கோபுரத்து மீதிருந்து கூவுவேன் - 5 . 7 . 1925

கோபுரத்து மீதிருந்து கூவுவேன்

லார்டு லிட்டன் அரசாங்கம் சுயராஜ்யக் கட்சியை வெட்டிப் புதைத்துக் கருமாதியும் செய்துவிட்டது. நமது சுயராஜ்யக் கட்சி வீரர்கள் புதைத்த பிணத்தை எடுத்துக் கொண்டு இன்னும் உயிர் இருப்பதாகவே ஜனங்களுக்குக் காட்டி செத்தப் பாம்பை ஆட்டி வருகின்றனர். " இரட்டை ஆட்சியை ஒழித்து விட்டோம் - ஒழித்துவிட்டோம் " என்று மாத்திரம் சொல்லிக்கொண்டு பொய் வெற்றிமுரசு அடிக்கிறார்கள். லார்டு லிட்டனோ இவர்களுக்குப் புத்தி வரும் வரை இதுதான் இவர்கள் தலையெழுத்து என்று சொல்லிவிட்டார்.

இந்த நிலையில் சுயராஜ்யக் கட்சித் தலைவர்களுக்கு இனிமேல் என்ன செய்கின்றதென்கிற விஷயத்தில் தங்களுக்கும் புத்தி இல்லாமல் போய்விட்டது. சொல்புத்தி கேட்பதற்கும் சொல்லுவாரற்றுப் போய்விட்டது. சுயராஜ்யக் கட்சியார் முட்டுக்கட்டை போடுவோம் என்று ஜனங்களிடை வீரப்பிரதாபம் பேசும்பொழுதே எப்படிப் போடப்போகிறீர்களென்று பொது ஜனங்கள் கேட்டார்கள். மந்திரிகளை ஒழித்து, அரசாங்கத்தை அழித்துவிடுவோம் என்று சொன்னார்கள். மந்திரிகளை ஒழித்துவிட்டால் அரசாங்கத்துக்கு லாபமேயன்றி நஷ்டமில்லை. அதற்குமேல் என்ன செய்யப் போகின்றீர்களென்று கேட்டார்கள். செய்வதின்னதென்று அந்த சமயத்தில் நாங்கள் சொல்லுவோம் என்று சொன்னார்கள். அந்த சமயமும் வந்துவிட்டது; இன்னது செய்வதென்று தெரியாமல் விழிக்கிறார்கள். யாரிடத்தில் போனாலும் ஆதரவைக் காணோம். மகாத்மா காந்தியோ இவர்களுக்குப் புத்தி வரும்வரை ஒன்றும் சொல்லப்போவதில்லை என்கின்ற முடிவின் பேரில் இவர்கள் கூடவே சும்மா இருந்து கொண்டிருக்கிறார்கள். மிஞ்சியிருக்கும் தலைவர்களோ எல்லோருக்கும் மூக்குப்போய் விட்டால் யாரை யார் மூக்கரையன் என்று கூப்பிடுவார் களென நினைத்துக்கொண்டு எல்லோரையும் தங்கள் கட்சியில் சேருங்கள் என்று ஜனங்களைக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

"வேகின்ற வீட்டில் பிடுங்கியது லாபம்" என்பதுபோல் சிலர் இந்த சமயத்தில் முனிசிபாலிட்டியிலும், தாலுகா போர்டிலும், ராஜாங்க சபையிலும் பதவிப் பெற மிகவும் அவசரமாய் அலைந்து கொண்டிருக் கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கும் சுயராஜ்யக் கட்சிக்கோ கட்சி எப்படி ஆயினும் சரி, சுயராஜ்யம் எப்படி ஆயினும் சரி, பிராமணர்களுக்கு எப்படி உத்தியோகம் சம்பாதித்துக் கொடுப்பது என்பதுதான் அவர்களுடைய திட்டம்.

அவர்கள் சென்ற வருஷத்தில் சென்னைக் கார்ப்பரேஷன் தேர்தலின்போது முதல் முதல் ஜனங்களை ஏமாற்ற வேண்டியிருந்ததால் எல்லா அபேட்சகர்களையும் பிராமணரல்லாதவர்களாகவே போட்டு தங்களுக்கு வகுப்பு வித்தியாசம் இல்லையென்று ஜனங்கள் நம்பும்படியாக நடந்து நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொண்டார்கள். இப்பொழுது இந்த வருஷத்திய தேர்தல்களுக்கோ பிராமண அபேட்சகர்களையே அளவுக்கு மிஞ்சி கொண்டுவந்து நிறுத்தி அபாரப் பிரசாரங்கள் நடைபெறுகின்றன. ஒரு வருஷத்திலேயே இவ்வளவு மாறுதல்கள் இருக்கும்பொழுது இன்னும் அடுத்த வருஷம் எப்படி நடக்கும் என்பதை வாசகர்களே கவனித்துக் கொள்ள வேண்டும். ராஜாங்க சபையிலும் இதே மாதிரியாகவே சுயராஜ்யக் கட்சி என்கின்ற பெயர் வைத்து எல்லா ஸ்தாபனங்களும் பிராமணர்களுக்கே கிடைக்கும்படியான மாதிரிக்கு பிரசாரங்கள் ஆரம்பமாகிவிட்டன.

"பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக் குடிப்பதுபோல்" சுயராஜ்யக் கட்சியின் பேரால் தமிழ்நாட்டில் அட்டகாசம் செய்யப்பட்டு வருகின்றது. பிராமணர்களே கூடாதென்றாவது, பிராமணரல்லாதார்களே இருக்கவேண்டுமென்றாவது என்னுடைய அபிப்பிராயமல்ல. மிதவாதக் கட்சியின் பெயர் சொல்லிக் கொண்டு பிராமணர்கள் பட்டமும், பதவியும், உத்தியோகமும் பெறுவதைப் பற்றியாவது ஐஸ்டிஸ் கட்சியின் பெயரைச் சொல்லிக்கொண்டு பிராமணரல்லாதார் பட்டமும், பதவியும், உத்தியோகமும் சம்பாதிப்பதைப் பற்றியாவது நமக்குக் கவலையில்லை. அதற்காகவே அவர்கள் கட்சி வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் பெயரையும், மகாத்மா பெயரையும் சொல்லிக் கொண்டு எத்தனையோ தேசபக்தர்களும், தொண்டர்களும் செய்த தியாகத்தையும், அவர்கள் ஜெயிலுக்குப்போய் அனுபவித்த கஷ்டங்களையும் “கரையான் புற்றெடுக்க பாம்பு குடிவருவதுபோல்” சில பிராமணர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளப் பார்ப்பது யோக்கியமாகுமா? இதை அனுமதிக்கலாமா? என்பதுதான் எனது கேள்வி. அல்லது காங்கிரஸ்காரர்கள் போய்த்தான் ஆகவேண்டும். அவர்கள் மேற்படி இரண்டு கட்சிக்காரரைவிட யோக்கியர்கள் என்று சொல்லப் படுவார்களேயானால் அவரவர்களுடைய எண்ணிக்கைக்குத் தகுந்தபடி பதவி, பட்டங்கள் உபயோகப்பட வேண்டுமென்பதுதான்.

பிராமண ரல்லாத மற்றவர்களில் இந்த ஸ்தானத்திற்கு தகுதி உள்ளவர்கள் இல்லையென்கின்ற முடிவுக்கு நாம் வந்துவிட்டால் பிறகு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். தகுந்த ஆட்கள் இருக்கிறார்களென ஒப்புக்கொண்டு அவர்களுக்காகவே தாங்கள் பாடுபடுவதாக வேஷமும் போட்டு, சமயம் வருகிற காலத்தில் இம்மாதிரி மோசம் செய்வதும் அதற்கு ஏற்ற மாதிரி ஒரு கட்சியை அமைத்துக்கொண்டு பொது நன்மைக்கு என்று சொல்லிக் கொண்டிருந்தால் எத்தனை காலத்திற்கு ஜனங்கள் ஏமாறுவார்கள்.

கொஞ்ச காலத்திற்கு எல்லோரையும் ஏமாற்றலாம். கொஞ்சம் பேரை எப்பொழுதும் ஏமாற்றலாம். எப்பொழுதும் எல்லோரையும் ஏமாற்றமுடியாது என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. இந்தப் பழமொழி சுயராஜ்யக் கட்சிக்காரருக்கு ஞாபகத்திற்கு வரும்படியாக தமிழ் மக்கள் எப்பொழுது நடந்துகொள்கின்றனரோ அப்பொழுதுதான் தமிழ்நாட்டுக்கும், தமிழர்க்கும் விடுதலையும், சுயமரியாதையும் ஏற்படும் என்பதை கோபுரத்து மீதிருந்து கூவுவேன்.


தமிழர் கதி

வைக்கம் சத்தியாக்கிரகமும் சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் தமிழ்மக்களுக்கு தங்கள் நாட்டில் தங்களுக்கு ஏதாவது சுயமரியாதை உண்டா என்பதைப் பற்றியும் இந்துமதத்தில் தங்களுக்கு ஏதாவது இடமுண்டா என்பதைப் பற்றியும் தீர்ப்பளிக்கப் போகின்றது. இது தமிழர்க்கோர் பரீட்சைக் காலமாகும். வைக்கம் சத்தியாக்கிரகமோ தமிழரைப் பார்த்து நான்கு வீதியில் மூன்று வீதிகளை உங்களுக்குத் திறந்து விட்டாய்விட்டதே ஒரு வீதியில்தானா உங்களுக்குப் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிட்டது? இதற்காக இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் செய்கிறீர்களே இதென்ன பயித்தியமா என்று கேட்கிறது.

குருகுலப் போராட்டமோ பதினெட்டுப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் பதினேழு பிள்ளைகள் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டு ஓர் பிள்ளை மாத்திரம் தான் சாப்பிடுவதை மற்றவர்கள் மற்றவர்கள் பார்க்கக் கூடாதென்றால் என்ன குடிமுழுகிப் போய் விட்டது ? இதற்காகவா இவ்வளவு பெரிய கிளர்ச்சி தமிழ்நாட்டில் நடக்க வேண்டும் என்று சொல்லிக் கொள்வதல்லாமல், உட்சண்டைகளையும் கிளப்பி விட்டுக்கொண்டிருக்கிறது. வைக்கம் சத்தியாக்கிரகமும் குருகுலப் போராட்டமும் அந்த வீதிகளில் நடப்பதினாலும், ஒரு குழந்தை உண்பதைப் பார்ப்பதினாலும் தமிழர்களுக்கு மோட்சம் கிடைத்துவிடும் என்கிற எண்ணத்தைக் கொண்டதல்ல. வீதிகளில் நடக்கக்கூடாதென்று சொல்லும் பொழுதும், கண்ணால் பார்க்கக்கூடாதென்று சொல்லுகிற பொழுதும், சொல்லுகிறவர்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டு எந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு சொல்லுகின்றனர் என்பதைப் பற்றித்தான் யோசிக்க வேண்டும்.

அன்னிய மதஸ்தர்களான மகமதியர்கள், கிருஸ்தவர்கள், பார்சிகள் முதலியோர்கள் நடக்கலாம். பன்றியும், நாயும், பூனையும், எலியும் வீதியில் நடக்கலாம்; சாப்பிடும் பொழுதோ இதர சமயங்களிலோ பார்க்கலாம்; ஆயிரக்கணக்கான வருஷங்களாக தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்து, தமிழ்நாட்டைத் தன்னுடையதாக்கிக் கொண்டிருக்கும் இந்துவாகிய தமிழனை அவனுடைய நாட்டில் மற்றொருவன் " நீ வீதியில் நடக்காதே, என் முன் வராதே " என்று சொன்னால் மனித உடல் தரித்திருக்கும் ஒரு ஜீவன் அதை எப்படி சகித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் வைக்கம் சத்தியாக்கிரகத்தினுடையவும் குருகுலப்போராட்டத்தினுடையவும் தத்துவம். இதே தத்துவத்திற்காகத்தான் மகாத்மா காந்தி தென்னாப் பிரிக்காவில் செய்த சத்தியாகிரகமும், கெனிய ஏகாதிபத்திய பகிஷ்கார தினக்கொண்டாட்டமும் நடத்தப்பட்டனவென்பதை ஞாபகப் படுத்திப் பாருங்கள்.

சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை "குடி அரசு" 5 . 7 . 1925

Friday, 12 May 2017

எல்லா மதமும் மூர்க்கப் பிரச்சாரமே ! - 24.08.1930

எல்லா மதமும் மூர்க்கப் பிரச்சாரமே !

சங்கராச்சாரி மதம் பவுத்த மடங்களில் நெருப்பு வைத்ததும், சைவ மதம் சமணர்களைக் கழுவேற்றி னதும்,  வைணவ மதம் புத்த விக்கரகங்களை உடைத்து உருக்கினதுமான காரியங்கள் எல்லாம் நினைத்துப் பார்ப் போமானால் அந்த காலத்தில் மகமதியர்கள் செய்ததாகச் சொல்லப் படுபவைகள் எதற்கும் இக்காரியங்கள் இளைத்ததல்ல. என்று தோன்றும். ஆனாலும் மகமதிய மதம் வாள் கொண்டு பிரச்சாரம் செய்யப்பட்டதா இல்லலையா என்பதில் இன்னமும் தகரார் இருக்கின்றது, மகமதியர்கள் அதை ஒப்புக் கொள்வதில்லை. மற்றபடி அதைத் தங்கள் எதிரிகளால் தங்கள் மீது கற்பிக்கப்பட்ட ஓர் பழி என்று சொல்லுகின்றார்கள்.

ஆனால் சமணர்களைச் சைவர்கள் கழுவேற்றியதை சைவர்களே ஒப்புக் கொண்டு தங்களா லேயே எழுதி வைத்து புண்ணிய சரித்திரமாக இன்றும் பிரசாரம் செய்வதுடன் அதன் பெருமை யைக் காட்டிக் கொள்ள வருஷந்தோறும் பல ஆயிரம் ரூபாய்கள் செலவில் பல இடங்களில் உற்சவங்கள் நடத்திக் காட்டப்படு கின்றன. அக் கோயில்களில் இன்றும் கழுவேற்றிய காட்சிகள் சித்திர ரூபமாய் எழுதி வைக்கப்பட்டி ருக்கின்றன.

அது போலவே வைணவர்களும் புத்த மத விக் கிரகத்தை அழித்ததற்கு ஆதாரமாய் ஸ்ரீரங்கம் கோயில் இருப்பதுடன், அவ்விக்கிரகத் தைத் திருடி உடைத்த திருமங்கையாழ்வாரின் சரித்திரத்தில் இதையொரு பெருமையாகவும் எழுதி புண்ணிய சரித் திரமாகப் பாவித்து தினமும் படிக்கப்பட்டும் வரு கின்றன. இவைகள் ஒரு புறமிருக்க இன்றைய தினமும் எனக்கு வரும் சில கடிதங்களையும், என்னைப் பற்றி பேசும் பல பேச்சுகளையும் பார்த்தாலும் எனது கொள்கை களை எதிர்த்துப் பிரசாரம் செய்யும் சைவ வைணவர்களின் வார்த்தைகளைப் பார்த்தாலும் அவைகளும் மகமதியர் செய்ததாய்ச் சொல்லப் படும் வாள் பிரசாரத்திற்குச் சிறிதும் இளைத்ததல்ல வென்றே தோன்றும்.

கிறிஸ்து நாதர் ஏன் சிலுவையில் அறையப் பட்டார்? சாக்ரட்டீஸ் ஏன் விஷமருந்தச் செய்யப் பட்டார்? மகமது நபி ஏன் மலைக் குகைக்குள் ஒழியப்பட்டார். என்பவைகளை எல்லாம் கவனித்தால் ஆரம்பகாலம் தொட்டே உலகத்தில் சிறப்பாக நமது நாட்டில் மதப் பிரசாரங்களின் கதி இப்படித்தான் இருந்து வந்திருக் கின்றன என்பது விளங்கும் இவைதவிர இன்றைய தினமும் இந்து மத தர்மத்தில் இருக்கும் தர்மங்கள் அதாவது நாஸ்திகர்களை நாக்கறுக்க வேண்டும், கண்ணைக் குத்த வேண்டும், சித்திரவதை செய்ய வேண்டும். நாட்டை விட்டுத் துரத்த வேண்டும் என்பன வெல்லாம் எந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கேட்கின்றேன்?

மற்றும் இந்து வேத சாஸ்திரங்களைப் படித்தால் நாக்கறுக்க வேண்டும், கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும், பார்த்தால் கண்ணைக் குத்த வேண்டும் மனதில் ஏறிவிட்டால் நெஞ்சைப் பிளக்க வேண்டும், என்பன வெல்லாம் எந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது? என்று கேட்கிறேன். மற்றும் பெரியோர் வாக்கைப் புராண இதிகாசங்களை எவன் தர்க்க புத்தியால் விவகாரம் பண்ணுகின்றானோ அவன் நாதிக னாவான். அப்படிபட்டவனை அரசன் தண்டிக்க வேண்டும் என்பனவாகிய வெல்லாம் எந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது?

மற்றும் நந்தன் நெருப்பில் பொசுக்கப்பட்டது போன்ற கதைகள் எந்தத் தத்துவத்தை அடிப் படையாகக் கொண்டது.

ஆகவே உலகில் மதப் பிரசாரம் என்பதே மூர்க்கத்தனத்தையும் பலாத்காரத்தையும் கொண் டதே யொழிய அனுபவத்தில் அன்புமயமான மதம் உலகில் ஒன்றுமே இல்லை என்றே சொல்லுவேன்.

இந்து வேதத்தை எடுத்துக் கொண்டாலும் அந்த காலத்திய வேத மதக்காரர்களுக்குத் தங்கள் எதிர் மார்க்கக்காரர்களை அடிக்கவும், கொல்லவும் செய்வதும், அப்படிச் செய்ய சக்தி இல்லாவிட்டால் அவர்களைக் கொல்ல வேண்டும் அழிக்க வேண் டும் என்று தங்களது கடவுள்களைத் தோத்திரம் பண்ணுவதுமான காரியங்கள் நிறையப் பார்க் கலாம்.

ஆகவே எப்பொழுதும் மத விஷயத்தில் கையிலானவர்கள் எல்லாம் பலாத்காரத்திலும் கையிலாகாதவர்கள் எல்லாம் கடவுளை வேண்டியும் சாபம் கொடுத்தும்தான் இருக் கிறார்கள்.  தவிர இந்து மதத்தில் உள்ள தீண்டா மையும், பெண் அடிமையும் சிறிதும் மனிதத் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதை உலகமே சொல்லுகின்றன.

24.08.1930-  குடிஅரசு

தந்தை பெரியார் பார்வையில் பொங்கல் - 19.01.1949

தந்தை பெரியார் பார்வையில் பொங்கல்!

தீபாவளிப் பண்டிகை ஆரியர் உயர்வுக்கும், திராவிடர் இழிவுக்கும் ஆகவே கற்பிக்கப்பட்டது என்றும், அதைத் திராவிடர் கொண்டாடுவது தன் மானமற்ற இழிசெயல் என்றும், சற்றேறக்குறைய 25 ஆண்டுகளாக சுயமரியாதை இயக்கம் மக்களிடையே செய்துவந்த வேண்டுகோளுக்குத் தன்மானத் தமிழர்கள் பலர்,

“தீபாவளியைக் கொண்டாடுவது மானமற்றதும், அறிவற்றதுமான செய்கை தான் என்றாலும் மக்கள் இன்பத்துக்குப் பண்டிகை ஒரு சாதனமாக இருப்பதால் தமிழர்கள் அவர்களது குடும்பம் கூடிக்குலாவி இன்ப மடைய ஏதாவது ஒரு பண்டிகை வேண்டுமே அதற்கென் செய்வது?’’

என்று கேட்ட காலத்தில், பொங்கல் பண்டிகையைத் தமிழர் பண்டிகையாகக் கொண்டு கொண்டாடலாம் என்று சுயமரியாதை இயக்கம் விடை கூறிற்று. அக் கூற்றுக்கு ஏற்ப இந்த 10 ஆண்டில் பொங்கல் பண்டிகை தமிழர்கள் இடை யில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து இன்று தீபாவளிப் பண்டிகைக்கு மேலாகத் தமிழ்நாட்டில் மக்கள் கொண் டாட ஆளாகிவிட்டார்கள். தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் தமிழ் இளைஞர்களும், மாணவர்களும் திராவிடர் கழகத்தவர்களும் பெரிதும் தீபாவளிப் பண்டிகையைக் கைவிட்டு விட்டார்கள் என்றும் பொங்கல் பண்டிகைகளைப் போற்றிக் கொண் டாடி வருகிறார்கள் என்றும் வலிமையாகக் கூறலாம்.

450 பொங்கல் வாழ்த்து

இதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு கூற வேண்டு மானால், இந்த ஆண்டில் எனக்கு வந்த பொங்கல் வாழ்த்துக் கடிதங்கள் என் கைக்குக் கிடைத்தது மாத் திரம் 450-க்கு மேற்பட்டவை களாகும். (இவைகளுக்கு நன்றி செலுத்தி, பதில் எழுத எனக்கு கார்டு, கவர் உட்பட 20 ரூபாய்க்கு மேல் செலவு ஏற்பட்டு இருக்கிறது.)

இவைகளை அனுப்பினவர்கள் திராவிடர் கழகத் தையும் சுயமரியாதை இயக்கத்தையும் சேர்ந்தவர்கள் மாத்திர மல்லாமல் பார்ப்பனர் தவிர்த்த மற்ற எல்லா வகுப்பு மக்களை சேர்ந்தவர் களாகும். இந்த அளவுக்குத் தமிழ் நாட்டில் பொங்கலை மக்கள் உணர்ந்து கொண் டாடியதைப் பற்றி மாத்திரமல்லாமல் இதைக் கொண் டாடிய மக்கள் 100க்கு 90க்கு மேற்பட்டவர்கள் தீபாவளி யையும் மற்றும் பல ஆரியப் பண்டிகைகளையும் வெறுத்து விலக்கி இருப்பது மகிழத் தக்கதாகும்.

தமிழ் மக்கள் இந்தப் பொங்கல் விழாவைக் கொண் டாடி இருப்பது பற்றியும் அவர்கள் எனக்கு வாழ்த்துக் கூறி இருப்பது பற்றியும் நான் மகிழக் கூடியதும் எனக்கு அவர்கள் வாழ்த்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் உண்மை யாகவே அவர்களது வாழ்த்துதலால் எனக்கு நல்வாழ்வு ஏற்பட்டது என்று கருதி மகிழ்வதும் நன்றி யறிவித்துக் கொள்ளக் கூடியதும் ஒரு காரியத்திற்கு ஆகவே அவசியம் என்றும், கடமை என்றும் கருதுகிறேன். அது என்ன காரியம் என்றால் அதுதான் தீபாவளி கொண்டாடுவதை விட்டுவிட்டு பொங்கலைக் கொண்டாட முன் வந்ததின் மூலம் ஆரியத்தில் இருந்து பொதுமக்கள் விடுபட்டு தன்மானத் தன்மை அடைந் ததேயாகும். இந்த மகிழ்ச்சிக்கு ஈடாக என் வாழ்வில் எனக்கு வேறு எந்தப் பெரிய நிலை ஏற்பட்டாலும் எனக்கு மகிழ்ச்சி ஏற்படாது  - பொங்கல் பண்டிகை யினால் நமக்கு, நம் தமிழர் சமுதாயத்துக்கு பொதுவில் ஏற்பட்ட பயன், நம்மவர்கள் ஆரியத்தை வெறுக்கும் உணர்ச்சிக்கு ஆகப் பொங்கலை பயன்படுத்திக் கொண்டதுதான் என்பேன்.

ஆதலால் பொங்கல் வாழ்த்துக்கு ஆக எனக்கு வாழ்த்து அனுப்பியவர்களுக்கு நன்றி செலுத்துவதோடு, அவர் களுக்கு நான் திருப்பி மறு வாழ்த்துக் கூறுவது என்னவென்றால் பொங்கலின் பயனாய் உங்களுக்கு வாழ்வு (மான வாழ்வு) ஏற்பட்டது குறித்து எல்லையற்ற மகிழ்ச்சி அடைவதோடு, இந்த ஆண்டில் அதாவது அடுத்த பொங்கல் ஆண்டுக் குள் மற்றும் உங்களைப் பிடித்த ஆரியப் பண்டிகை, கலை, பண்பு காரியங்களும் உணர்ச்சிகளும் அடியோடு ஒழிந்து சுத்தத் தமிழனாக, தன்மானத் தனித் தமி ழனாக விளங்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அந்தப்படியே நீங்கள் அனேகமாய் விளங்குவீர்கள் என்ற நம்பிக்கை கொள் ளுகிறேன் என்பது ஆகும்.

மற்றொரு வாழ்த்து

இந்தப் பொங்கல் வாழ்த்து நான் பெற்றதுபோலவே கூடிய சீக்கிரம் குறள் வாழ்த்துப் பெற்று மகிழும் கால மும் எனக்கு வெகு அண்மையில் இருக்கிறது என்றே இவ்வாண்டுத் தொடக்கத்தில் கருதி எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

ஏன் எனில் தீபாவளி முதலாய ஆரி யர்க்கு உயர்வும் திராவிடர்களுக்கு - தமிழர்களுக்கு இழிவும் ஏற்படு வதற்கு ஆக எப்படி ஆரியப் பண்டிகைகள் இருந்து வருகின்றனவோ அதேபோல்தான் ஆரியர் களுக்கு உயர்வும் திராவிடர்களுக்கு இழிவும் கீழ்மையும் மானமற்ற தன்மையும் நிரந்தரமாய் இருந்து வருவதற்கு ஆகவே கற்பிக்கப்பட்டு, நிலை நிறுத்தப்பட்டு வருவதானவைதான் வேதம், (மனுதர்ம) சாஸ்திரம், புராணம், கீதை, இராமாயணம், பாரதம் முதலியவை கொண்ட கலை, காவியம், இலக்கியம், தர்மநூல், நெறி நூல் என்று சொல்லப்படுபவைகளாகும்.

இந்த ஆதாரங்களை நிலைநிறுத்தவும் பரப்பவும் ஆரியர்கள் தன்மானமற்ற தமிழர் களையும் அறிவற்ற தமிழ் மடையர்களை யும் பல தந்திரங்களால் மானம், அற்ற சூழ்ச்சிகளால் தங்கள் வயப்படுத்தி சமயம், சட்டம், கல்வி, கலை முதலியவை சார்பாகத் தமிழ் மக்கள் எல்லோருடைய இரத் தத்திலும் கலக்கும்படி செய்துவிட்டார்கள்.

இராமாயணத்தை, கீதையை ஏற்றுக் கொள்ளாதவனுக்கு ஜட்ஜூ பதவி இல்லை, மந்திரி பதவி இல்லை என்பது மாத்திரமல்லாமல் இராமாயணம், கீதை முதலிய வைகளை ஏற்றுக்கொண்டு பிரசாரம் செய்பவன், பிரசாரம் செய்ய உதவுபவன் எவ்வளவு அயோக்கி யனாக இழிதன்மை உடைய மகனாக இருந்தாலும் அவனே மேல்மகனாக, மகானாக, சிறந்த அறிவாளி யாக, பண்டிதனாக, சிரோன்மணியாகக் கருதப்படுபவன் - கருதப்படுகிறான் என்கின்ற தன்மைக்கு அவை வந்துவிட்டபடியால் ஒரு சுயமரியாதைக்காரன் என்ற நிலையில் விழுந்துபட்டு நிலைகுலைந்து கீழ்மைப் பட்டுத் தலையெடுக்க முடியாமல் செய்யப்பட்டுவிட்ட திராவிட சமுதாயத்தை - தமிழர் சமுதாயத்தை இழிவி லிருந்தும் பிறவி அடிமைத் தன்மையிலிருந்தும், முன் னேற்றத் தடையிலிருந்தும் என்ன விலை கொடுத்தாவது விடுதலை செய்து நல்வாழ்வு வாழ்விக்க வேண்டுவது, அதற்காக தொண்டாற்றி மடிவது என் வாழ் நாளினு டையவும் நான் விடும் மூச்சினுடையவும் உள்ளே வாங்கும் மூச்சினுடையவும் லட்சியம் என்று கருதி இருக்கும் நான் அவைகளை அதாவது அந்த ஆரிய நூல்களான சாஸ்திரம், புராணம், இதிகாசம், இராமா யணம், கீதை, பாரதம் ஆகியவை களைத் தமிழர்களு டைய உள்ளத்திலிருந்து, சித்திரத்திலிருந்து, கலையில் இருந்து வேரோடு களைந்து எறிய வேண்டியது முக்கிய, முதலாய, இன்றியமையாத கடமை. ஆனதால் தீபாவளி முதலிய ஆரியப் பண்டிகைகளுக்குப் பதிலாக பொங் கலைக் காட்டியதுபோல் வேதம், சாஸ்திர, புராணம், இராமாயணம், பாரதம், கீதை, முதலியவை களுக்குப் பதிலாக ஒருநெறி, கலை, வழி காட்டுவதற்கு என்று குறளைக் காட்ட வேண்டிய அவசியத்திற்கு ஆளானேன்.

“குறள் இல்லாவிட்டால் மனிதன் வாழமாட்டானா? வாழ முடியாதா?’’ என்ற கேள்வி பிறக்கலாம். குறளில்லா விட்டால் மனிதன் வாழலாம்; ஆனால், அறிவும் மானமும் வேண்டும். இவை உள்ளவர்கள் வேறு எது இல்லாவிட்டாலும் மனிதனாக வாழ முடியும். ஆனால் ஆரியமானது நம் நாட்டில் உள்ள தமிழர்களில் 100க்கு 99 பேர்களும் அறிவை அடிமைப்படுத்தி மானத்தை அழித்து இழிமகனாக, கடை மனிதனாக ஆக்கப்பட்டு விட்டதால் ஆக்கப்பட்டது மாத்திரமல்லாமல் அந்தப் படி ஆக்கப்பட்டிருப்பதை ஆசீர்வாதமாகக் கொள் ளும்படி செய்யப்பட்டிருப்பதால் அறிவையும் மான உணர்ச்சியையும் காட்டுவதற்கு ஒரு சாதனம் விளக்கு ஒளி தேவைப்பட்டுவிட்டது. ஆகவே, தமிழனுக்கு இருக்கும் இழிவை - கடைத் தன் மையைக் காட்டவும் மான உணர்ச்சியைத் தூண்டவும்  அறிவு வருவதற்குக் குறளைத் தூண்கோலாகக் கொள்ளும்படி செய்ய வேண்டியவனானேன்.

எனது பொங்கல் பரிசு!

நான் கூறுகிறேன் குறள் படிப்பவனுக்கு வேதம் ஏன்? எதற்கு ஆக வேண்டும்? மனுதர்மம் ஏன்? எதற்கு ஆக வேண்டும்?  பாரதம், கீதை, இராமாயணம் ஏன்? எதற்கு ஆக வேண்டும்? என்பதை மனிதன் மான முள்ள, அறிவுள்ள மனிதன் சிந்திக்கட்டும். எல்லா மனிதனும் சிந்திக்காவிட்டாலும் தமிழன் - திராவிடன் சிந்திக்கட்டும் என்பது தான் எனது வேண்டுகோளும், ஆசையு மாகும். ஆகவே குறள் மனித தர்மத்துக்கு என்று ஆரியர்களால் கற்பிக்கப்பட்ட எல்லா சாதனங் களுக்கும் மாற்றுப் பண்டமாகும்.

ஆகவே இந்த ஆண்டு - பொங்கல் ஆண்டு தொடக்கத்தில் தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்தாகவும் பொங்கல் பரிசாகவும் குறளைக் கொடுக்கிறேன். இக்குறள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ்ப் பெரியோர்களால் கொடுத்து வரப்பட்டதே யாகும். அதுபோல்தான் பொங்கல் விழாவும் பல்லாண்டுகளாகத் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் பெரியோர்களால் கொடுத்து வரப்பட்டாலும் நான் கொடுப்பதற்கும் அவர்கள் கொடுத்து வந்ததற்கும் பேதம் உண்டு. அதாவது அவர்கள் தீபாவளி, அஷ்டமி, நவமிகளுடன் அவை போல் பொங்கலையும் கருதிக் கொடுத்து வந் தார்கள். அப்படியே பாரதம், கீதை, இரா மாயண புராணம், மனுதர்மம்போல் குறளையும் ஒன்றாக கருதிக் கொடுத்து வந்தார்கள். இதன் பயனாய் பன்றியுடன் சேர்ந்த பசுவின் பண்புபோல் பொங்கலும், குறளும் அதனால் ஏற்பட வேண்டிய நலம் கெட்டு கேடு ஏற்படும்படி ஆயிற்று. ஆனால் நான் கொடுப்பது ஆரியப் பண்டிகைகளை ஒழித்து விட்டுவிட்டு அந்த இடத்தில் அதற்கு பதிலாகப் பொங்கலை யும், ஆரியக் கலை, தர்ம சாஸ்திரம் ஆகியவைகளான வேத சாஸ்திர புராண இதிகாசங்களை - கீதை, இராமாயணம், பாரதம் ஆகியவைகளை அடியோடு நீக்கிவிட்டு, மக்கள் உள்ளத்தில் இருந்து ஒழியச்செய்து விட்டு அதற்குப் பதிலாக அவை இருந்த இடத்தில் குறளை - குறள் ஒன்றையே கொடுக்கிறேன். ஆதலால் தமிழர்களுக்கு இப்பொங் கலாண்டில் எனது பொங்கல் பரிசாகக் குறளைக் கொடுக்கிறேன். இதை எப்படிக் கொடுக் கிறேன் என்றால், தமிழ் மக்களுக்கு எனது காணிக் கையாக அவர்கள் என்பால் கொண்டுள்ள அருளுக்கு, அன்புக்கு, நம்பிக்கைக்கு “தட்சிணை’’ யாகக் கொடுக்கிறேன்.

பதில் பரிசு தருவீர்களா?

இந்த எனது தட்சிணையை, காணிக்கையை தமிழ் மக்கள் ஏற்று எனக்கு அருள்கூர்ந்தார்கள் என்பதை அவர்கள் காட்டிக்கொள்ள வேண்டுமானால் குறைந்த அளவு என்பால் அருளும் அன்பும் நம்பிக்கையும் கொண்ட தமிழர் ஒரே ஒரு சிறு கருணை காட்ட வேண்டும். அந்தக் கருணை காட்டுவது என்பது அருள்கூர்ந்து - கருணைகூர்ந்து இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு உண்மைத் தமிழனும் பார்ப்பனர்களால் வெளியிடும் பத்திரிகைகளையும், அவர்களால் வெளியாகும் நூல்களையும் கண்டிப்பாக வாங்கக் கூடாது; ஆதரிக்கக் கூடாது என்பதுதான்.

உண்மையும், மானமும் இன உணர்ச்சியும் உள்ள தமிழனையும் காண வேண்டுமானால் அவன் பார்ப் பனப் பத்திரிகையை வாங்காதவன்  -  ஆதரிக்காதவனாக இருக்க வேண்டும். இது தமிழர்களுக்கு, அவர்களது மானத் திற்கும் முன்னேற்றத்திற்கும் மீட்சியின் உயிர்நாடி ஆகும்.

தமிழர்களாகிய நாம் இந்த ஈன நிலையில் இருப் பதற்கு பாரதம், இராமா யணம், கீதை, மனுநீதியைவிட இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளே இன்று முக்கிய காரணமாகும். தமிழர்கள் பலர் இன்று பார்ப்பனர்களுக்கு உண்மையான சூத்திரர்களாய், சூத்திரச்சிகளாய் இருப்ப தற்குக் காரணமும் இந்தப் பார்ப்பனப் பத்திரிகை களேயாகும்.

ஆதலால் தமிழ் மக்களுக்குப் பொங் கலுக்கு எனது வாழ்த்தும் காணிக்கையும் விண்ணப்பமும் இந்த மூன்றும் தான். அதாவது,

1. ஆரியப் பண்டிகைகளை ஒழித்து, விலக்கி பொங்கல் விழாக் கொண் டாடுவது.

2. பாரதம், இராமாயணம், கீதை, புராணம் முதலிய ஆரிய இலக்கியம், இதிகாசம், தர்ம சாஸ்திரம் முதலி யவைகளை ஒழித்து, விலக்கி, குறளை ஏற்று படித்து உணர்ந்து அதன்படி நடப்பது.

3. இந்து, சுதேசமித்திரன், தினமணி, பாரததேவி, இந்தியன் எக்ஸ்பிரஸ், கல்கி, ஆனந்தவிகடன் முதலிய பார்ப்பனப் பத்திரிகைகளை அடியோடு விலக்கி தமி ழர்கள் திராவிடர்களால் நடத்தப்படும் பத்திரிகைகளை வாங்கிப் படித்து ஆதரிப்பது.

பத்திரிகைக்கு ஆக என்று ஒரு தனித் தலையங்கம் பின்னால் எழுத இருக் கிறேன். அதைப் பார்ப்பனர்களும் அதா வது பத்திரிகைக்காரப் பார்ப்பனர்கள் தவிர்த்து மற்ற பார்ப்பனர்கள் யாவரும் பெரிதும் ஏற்கும் வண்ணம் இருக்கும்.

பொங்குக பொங்கல்!

பொங்குக தமிழ் மக்கள் மானமும் அறிவும்!!

(‘விடுதலை’ 19.01.1949)

Wednesday, 10 May 2017

புத்தர் - வள்ளுவர்

புத்தர் - வள்ளுவர்

திராவிடர் கழகத்தினர் வள்ளுவர், புத்தர் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்கள். அதையே வைத்துக் கொண்டு மக்களை, இதைத்தான் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டோம்.

இப்பொழுது மட்டும் வள்ளுவரையும், புத்தரையும் வாழ்த்திக் கொண்டாடுகிறார்கள் என்று கூறமுடியாது.  இதற்குமுன் 30 ஆண்டுப் பிரச்சாரமும் அதுவேதான்.  இதையும் தள்ளிவிடுங்கள்.

நாங்கள் செய்தது தவறு என்று உங்கள் மனம் கூறுமானால் உங்களுக்கு இரட்டிப்பு உரிமை உண்டு தள்ளுவதற்கு.  நல்லதைக் கடைப்பிடியுங்கள். இப்படி இருந்தால்தான் மனித சமுதாயம், நாளுக்கு நாள் வளரும். நமக்கு அதிகமான அறிவு, சிந்தனை தேவை. ஈரோட்டில் மாநாடு நடந்ததைப் பார்த்து கண்டவர் அலட்சியமாகப் பேசினார்கள். கடைசியில் அகில இந்திய பண்டிகையாக புத்தர் விழா ஆகிவிட்டது.

இதுகூடப் பெரிதில்லை. சர்க்கார் இதற்காக ஒரு நாள் குறிப்பிட்டு விடுமுறையளித்ததுதான் இதைவிடப் பெரிய ஆச்சரியம்! புத்தர் பெயரால் அவருடைய பிறந்த நாளில் புதிய ஸ்டாம்புகளை வெளியிட்டிருக்கிறார்கள்! ஒவ்வொருவருக்கும் புத்தர் படத்தை இலவசமாகக் கொடுத்திருக்கிறார்கள்! இரண்டு மாதத்திற்கு ஒரு படமாக புத்தர் பிறந்தது, வளர்ந்தது,  மனைவி மக்களிடமிருந்து பிரிந்து சென்றது சந்நியாசம் வாங்கினது போன்ற படங்களை அதில் போட்டிருக்கிறார்கள்! மிகவும் நன்றாக இருந்தது. அவர் வகுத்த கொள்கைகளை இந்நாட்டில் விழாவாக இன்று கொண்டாடினால்கூட தப்பு என்கிறார்களே சிலர்!

மதமில்லாத சர்க்கார் என்று பெயர் வைத்துக் கொண்டு இப்படி ஒரு விழாவிற்கு ஆதரவு கொடுத்தால் என்ன அர்த்தம்? புத்தி இருக்கிறதா? இல்லையா? என்றனர். அவர்களெல்லாம் புத்தர் விழா கொண்டாடுவது தப்பு என்றும் சொல்லவில்லை. நல்லது என்றும் சொல்லவில்லை. இவ்வாறு பத்திரிகைகளில் எழுதி வருகின்றனர். மதச்சார்பற்ற சர்க்காரில் தீபாவளிக்கு இரண்டு நாள், சரஸ்வதி பூஜைக்கு மூன்று நாள் விடுமுறை! இவைகளெல்லாம் பண்டிகையில்லையா? பூணூல் போட ஒரு நாள் லீவு விடலாமா? எத்தனை பேர் இந்த நாட்டில் அன்றைக்குப் பூணூல் போடுகின்றனர். இதையெல்லாம் யார் கேட்கிறார்கள்? எந்தப் பத்திரிகை எழுதுகிறது?

இந்த நாட்டின் பிரசிடென்ட் பிரசாத், முதலமைச்சர் நேரு,  மாஜி கவர்னர் ஜெனரல் இராஜாஜி வரையில் புத்தரைப் பற்றி மிக ஜாக்ரதையாகப் பேசியிருக்கிறார்கள். சிலர் ரிஷிகள் சொன்னதுதான். உபநிஷத்தில் இருப்பதுதான். கீதையில் இருப்பதுதான் இவை புதிதாக புத்தர் ஒன்றையும் சொல்லிவிடவில்லை என்று பேசினார்கள்.

நேரு அவர்கள் ஜாதியை ஒழிக்க வேண்டும்; கிரகணங்களின் போது முழுக்குப் போடுவது தப்பு, ஜோதிடம் பார்ப்பது முட்டாள்தனம் அது இது என்ற சகுனங்கள் தப்பு என்று பச்சையாகவே பேசிக் கண்டிக்க ஆரம்பித்து விட்டார். இப்படி ஒரு பெரிய மாறுதலோடு புத்தர் விழா கொண்டாடப்பட்டது. நாம் முயற்சி எடுத்துச் செய்த காரியம் தப்பு இல்லை என்கிற அளவுக்கு வந்துவிட்டது. அவர்கள் கொண்டாடுவதைப் பார்த்து, கூட இருக்கிறவர்கள் சிரிக்கிறார்கள். எதிரிகளும் புத்தரைப் பற்றிக் கூப்பாடு போடுகிறார்கள்.
தமிழ்நாடு கொஞ்சம் திருப்பு முனைக்கு வந்திருக்கிறது. இதைக் கண்டு நாடு எப்படிப் போகுமோ என்று தடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள். இப்படித்தான் திருக்குறளைப் பள்ளியில் வைப்பதையும் நிறுத்திவிட்டார்கள். எங்கு பார்த்தாலும் பரிமேலழகர் உரையாகவே இருக்கும். அதனால் வேதமும், குறளும் ஒன்று என்று மக்கள் எண்ணினர். ஓர் ஆங்கிலப் புத்தகத்தில் கீதையிலிருந்த கருத்துகளை எடுத்துத்தான் குறளில் சொல்லப்பட்டிருக்கிறது என்று எழுதியிருந்ததைப் பார்த்தேன். இப்படிக்கு மக்களை ஏய்க்கிறார்கள்.

நான் 30 ஆண்டுகளாக பார்த்துக் கொண்டு வருகிறேன். ஆரியர்கள் இந்நாட்டுக்குக் குடியேறியவர்கள் என்று எழுதியிருக்கும்.    ஆனால், இப்போது அந்த சரித்திரத்தையே தலைகீழாக மாற்றி வருகிறார்கள். கொஞ்ச நாட்களுக்கு ஆரியர்கள் என்பவர்கள் குடி புகுந்தார்கள். அவர்கள் வருவதற்கு முன்பு திராவிடர்களும் குடிபுகுந்தவர்கள்தான். அவர்களும் இந்த நாட்டுக்குச் சொந்தம் இல்லை என்று எழுதி வருகிறார்கள். இவைகளை யார் கேட்கிறார்கள்? நம் புலவர்களை எடுத்துக் கொண்டால் எல்லோரும் வயிற்றுக்காகப் பாடுபடுபவர்கள்! அறிவுக்கு என்று படித்தவர்கள் 1000 க்கு ஒருவர்தான். அப்படிப் படித்துப் பட்டம் பெற்று இருந்தாலும் வேலைக்காக சிபாரிசுக்குத் தேடுவதற்குச் சரியாக இருக்கிறது.
தப்பித்தவறி கல்லூரியில் பேசிவிட்டால் நம் தப்புதானே. போ, போ, வெளியே இந்த மாதிரிப் பேசாதே என்று கூறுகிறான். நான் ஒருவன்தான் வயிற்றெரிச்சலில் பேசுகிறேன். ஜாதி ஒழியவேண்டும் என்று வள்ளுவர் சொன்னார். புத்தர் சொன்னார். அவர்களுக்கு அடுத்தபடியாக நான் சொல்லுகிறேன். ஜாதிகள் ஒழிய வேண்டும் என்று கஷ்டத்துடன் பாடுபடுகிறேன்.

காந்தியத்தைப் பின்பற்றுகிறவர்களில் யார் சொல்லுகிறார்கள் ஜாதி ஒழியவேண்டும் என்று? தீண்டாமை பேதம் ஒழிய வேண்டும் என்று சொல்லுவார்களே தவிர ஜாதிகள் அனைத்தும் ஒழிய வேன்டும் என்று சொல்லமாட்டார்கள்.

யார் எப்படிப் பேசினாலும் ஜாதி இந்த நாட்டை விட்டு ஒழியத்தான் போகிறது. இவர்கள் புத்தர் கொள்கைகளை ஆதரித்திருந்தால், அது ஜப்பான், மலேயா, பர்மா, சயாமுக்கு ஏன் போகிறது? தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களிலும் சரித்திரங்களிலும் புத்தநெறி விரட்டி அடிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். பவுத்தர்களுடைய மடம், கலாசாலைகளைத் தீ வைத்துக் கொளுத்தி இருக்கிறார்கள். பவுத்தர்களைக் கழுவேற்றிக் கொன்றிருக்கிறார்கள்.

காஞ்சிபுரம் வரை புத்தர்கள் கொள்கைகள் பரவி, ஜப்பான், பர்மா, மலேயா போன்ற நாடுகளுக்கும் பரவி விட்டது. ரங்கநாதரைக் காப்பியடித்து அதற்குத் தங்கமுலாம் பூசி வைத்திருக்கிறார்கள். ஆனால், எண்ணெய் விளக்குகள் இல்லை. இங்கிருப்பதைப் போல் பரிவார தேவதைகள் அங்கும் இருக்கிறார்கள். நாத்திகர் என்று நிந்திக்கப்பட்டு, வையப்பட்டு 2,000 வருடங்களாக மறைக்கப்பட்டு வந்த ஒருவரை இன்று 1956-இல் திடீரென்று அரசாங்கம் முதற்கொண்டு பல அறிஞர்கள் வரையில் ஊர்ஊராகப் பெருமைப்படுத்திப் பேசி விழா கொண்டாடுகிறார்கள் என்றால், என்ன அர்த்தம்? நன்றாக சிந்தித்துப் பாருங்கள். புத்தர் தன் கொள்கைகளை மாற்றிக் கொண்டாரா? இதனுடைய அர்த்தம் என்ன? முன்னிருந்த நிலைமையைவிட ஒரு படி நாம் முன்னேறியிருக்கிறோம்.  நம் நிலையிலிருந்து கொஞ்சம் மாறியிருக்கிறோம் என்பதுதான். நமக்குப் புத்தி வந்துவிட்டது என்பதுதான் அர்த்தம். புத்தர் சொல்லியிருந்தாலும் யோசித்துப் பார்ப்போமே என்ற அளவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.

--`விடுதலை", 11.-6.-1956

+++++++++++++++++++++++++++++++++++++++

சிந்திக்க முடிந்தது
புத்தர் அந்தக் காலத்திலேயே துணிந்து சொன்னார்; கடவுள் என்று ஒன்று இல்லை; அது இருக்க வேண்டிய அவசியமுமில்லை என்று சொன்னார். கடவுள் இல்லை என்பதை உணர்ந் ததால் தான் புத்தரால் அறிவோடு சிந்திக்க முடிந்தது.
- (விடுதலை, 23.1.1968)


Tuesday, 9 May 2017

குறளும் பக்தி - நூல்களும்! - தந்தை பெரியார்

குறளும் பக்தி - நூல்களும்! - தந்தை பெரியார்


இன்று குறள் மாநாடு என்னும் பேரால் இங்கு கூடியிருக்கிறோம். இன்று தமிழ் நாட்டில் திராவிடர் கழகங்களுக்கும் அதன் கூட்டங்களுக்கும் எப்படி ஒரு செல்வாக்கும், மக்கள் கூட்டங்களும் வருகிறதோ அதுபோல் குறளுக்கு, குறள் கூட்டங்களுக்கும் செல்வாக்கும், பெரும் கூட்டங்களும் வருகின்றன.

இல்லாவிட்டால் இந்தக் காலை நேரத்தில் விளம்பரம் இல்லாத இந்த மாநாட்டிற்கு, அதுவும் நான் இன்று இங்கு வருகிறேன் என்பதே யாருக்கும் தெரியாத நிலையில் இத்தனை பேர் இங்கு வந்து கூடுவதென்றால் முடியக்கூடிய காரியமா? தலைவர் அவர்களும், அறிஞர் முனுசாமி அவர்களும் குறளுக்கு இன்றுள்ள இந்த மாதிரியான செல்வாக்குக்கு என்னையும் ஒரு  காரணமாகச் சொன்னார்கள். நீங்களும் அதை ஆமோதிக்கும் அறிகுறியாய் ஆரவாரம் செய்தீர்கள். குறளுக்கிருக்கிற செல்வாக்கு, விளம்பரம் காரணமாக பல பேருக்குக் குறளின் பேரால் புத்தகம் போட, பத்திரிகை போட, பிரச்சாரம் தெரிய நல்ல வாய்ப்பு, வியாபாரம்,  வருவாய் இருக்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். காங்கிரசுக்காரர்கள், காங்கிரஸ் பிரச்சாரகர்கள் பலர்கூட, தங்கள் ஸ்தாபனத்திற்கோ, தங்கள் பேருக்கோ கூட்டம் சேருவதில்லை என்கின்ற காரணத்தால் குறளின் பெயரை உபயோகித்துக் கூட்டம் சேர்த்துக் கொள்கிறார்கள். குறளின் பேரால் புத்தகம், பத்திரிகை, கூட்டம் நடத்துகிறார்கள். பல காங்கிரஸ் கூலிகள் காங்கிரசின் பேரால் தங்களுக்கு மதிப்பு போய்விட்டது கண்டு, தமிழ், தமிழ் கலை, தமிழ் இலக்கியம் என்னும் பேரால் விளம்பரம் பெற்று வாழ்க்கை நடத்துகிறார்கள். இந்த நிலைமை ஏற்பட்டதற்குக் காரணம் என்னவென்றால், 1939 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியால் தமிழுக்கு ஏற்பட்ட செல்வாக்கேயாகும்.

குறளுக்கும், தமிழுக்கும் இன்றைய தினம் உள்ள உணர்ச்சிக்கு நான் காரணம் என்பதையும், நமது திராவிடர் கழகம் என்பதையும், அடியோடு நான் ஒப்புக்கொள்ள முடியாது. ஏதாவது சிறிது காரணம் இருந்தால் இருக்கலாம். ஆனால், பெரிதும் உண்மையானதுமான காரணம் இன்று மக்களுக்கு ஏற்பட்ட விஞ்ஞானமும், பகுத்தறிவும்,  சுயமரியாதை உணர்ச்சியுமேயாகும். 1920 ஆம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரசின் மாபெருந் தலைவர்களான பானர்ஜி, மாளவியா, நேதாஜி, தாதாபாய் நவுரோஜி, சங்கர நாயர், விஜயராக வாச்சாரியா, திலகர், பெசண்டு முதலிய தலை வர்கள் தலைமையில் கூட்டப்பட்ட காங்கிரஸ் மாநாடுகளில் பாராட்டப்பட்டு, நன்றி செலுத்தப்பட்டு, கடவுளுக்குப் பிரார்த்தனை செலுத்தப்பட்டு, காட்டி வந்ததான பிரிட்டிஷ் ஆட்சியானது சுமார் 200 வருட காலமாய் ஆட்சி  செய்ய நேர்ந்த காரணத்தால் நம்மக்களுக்கு ஏற்பட்ட விஞ்ஞான அறிவும், பகுத்தறிவு சுதந்திரமும் மக்களை சிந்திக்கச் செய்ததன் பயனாய் மக்கள் இன்று அந்தப் பகுத்தறிவுக் கண்களால் குறளைப் பார்க்க ஆரம்பித்ததால், இன்று குறளின் பெருமை மக்களுக்கு விளங்குகிறது.

குறள் இதுவரை ஒரு மத நூலாக, பக்தி நூலாக, பார்ப்பன நூலாகவே இருந்து வந்தது. சைவன் குறளை தங்கள் மதத்து நூல் என்றும், வைணவன் தங்கள் மதத்து நூல் என்றும், சமணன் தங்கள் மதத்து நூல் என்றும் சுய வயப்படுத்தி அதை ஒரு புராணமாகவும் பக்தி நூலாகவும் கருதியும் பிரச்சாரம் செய்தும் வந்தார்கள்.

அது மாத்திரமல்லாமல் குறளுக்கு ஆரிய மத சம்பிரதாயப்படியே உரை எழுதப்பட்டு, அந்த உரையையே தமிழ் மக்கள், தமிழ்ப் புலவர்கள், தமிழ் சமயவாதிகள் ஆகிய எவரும் ஒப்புக்கொண்டு அந்த உரையே பள்ளிப்பாடமாகவும் ஆக்கப்பட்டு அதை மற்றொரு மனுதர்ம சாஸ்திரமாகக் கொள்ளும்படி செய்யப்பட்டுவிட்டது.

இந்தநிலையில்ஆக்கப்பட்டகுறளானது பாரதம்,  இராமாயணம், கீதை, மனுதர்ம சாஸ்திரம் ஆகியவைகளைவிட எப்படி உயர்ந்ததாகக் கருதப்பட முடியும்?

குறளுக்கு மதிப்புரை எழுதியவர்களும், சில தமிழ்ப் பெரியார்களும் அதாவது, மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை போன்றவர்களும் குறளுக்கும் மற்ற மேற்கண்ட ஆரிய நூல்களுக்கும் உள்ள பேதத்தைத் தெளிவுற எடுத்துக்காட்டியிருந்தாலும், இந்த நாட்டில் பார்ப்பனர்களுக்கு இருந்து வந்த ஆதிக்கமானது குறளையும் ஆரியத்தையும் பிரித்துக் காணுவதே மாபெரும் துவேஷ புத்தி என்பதான நிலையை ஏற்படுத்தி விட்டதால் தமிழ் புலவர்கள் என்று வெளிவந்த எல்லா தமிழர்களும் ஆரியத்திற்கு அடிமையாகி குறளை மனுதர்ம சாஸ்திரம் போலவும், கீதைக்கு அடுத்த பெருமை பொருந்தியது போலவும் ஒப்புக்கொண்டு ஆரியக் கூலிகள் அதுபோல் பிரச்சாரம் செய்து வந்து விட்டார்கள்.

இந்த நிலையில் குறளுக்கு ஒரு தனிமதிப்பு எப்படி ஏற்பட முடியும்? ஒரு முஸ்லிமும் ஒரு கிறித்தவனும், ஒரு பகுத்தறிவுவாதியும் - ஒரு நாஸ்திக ஞானமுடையவனும் அதாவது ஒரு தத்துவவாதியும் இப்படி ஆக்கப்பட்ட குறளை ஏன், எதற்கு ஆக மதிக்க முடியும்?

அதிலும் ஆரிய மதமான இந்து மத பக்தன் ஒருவனுக்கு,  தன்னை ஆரிய இனம் என்று கருதி ஆரிய அடிமையாய் இருப்பவனுக்கு குறளை, பாரத இராமாயணத்தைவிட அதிகமான மதிப்பு தந்து எப்படி மதிக்க முடியும்?

ஆதலால் மக்களுக்குள் இன்று தோன்றி யிருக்கும் பகுத்தறிவு உணர்ச்சியும், திராவிட இன உணர்ச்சியும், தத்துவ வளர்ச்சியும் அதாவது ``நாஸ்திக’’ புத்தியுமே தான் குறளை ஆரிய வேத சாஸ்திர புராண இதிகாசத்தில் இருந்தும், அவை களை ஆதாரமாகக் கொண்ட தேவார, திருவாசக, பிரபந்தம் முதலிய சமயப் பக்தர்களின் கவிகளில் இருந்தும் பிரித்துக் காண முடிந்தது. இந்த முடிவின் காரணமாகவே குறளின் மேன்மை திடீரென்று விளங்கவும் மக்கள் பாராட்டவும் மதிக்கவும் அதனிடம் அன்பு செலுத்தவும் முடிந்தது.

குறள் பக்தி நூலல்ல;  கடவுளைக் காட்டும் எந்தவிதமான மத நூல் அல்ல, மதப் பிரச்சாரம் செய்யும் மதக்கோட்பாடு நூலல்ல. ஆனால், வேதசாஸ்திரம், புராணம், இதிகாசம், தேவாரம், திருவாசகம் பிரபந்தம் முதலிய எவையும் மத நூல்;  கடவுள் பெருமையைக் கூறும் வேத சாஸ்திர நூல்கள்;  பக்தி ஊட்டி மோட்சத்திற்கு அனுப்பும் பக்தி நூல்களே ஆகும்.

குறள் அப்படி அல்ல;  குறள் அறிவு நூலே ஆகும். மற்றும் கடவுளை அடைய மோட்சத்திற்கு போக மனிதனுக்கு ஒழுக்கம் தேவையில்லை. ஏனெனில் விபசாரம் புரட்டு பித்தலாட்டம் வஞ்சகம், சூது, கொலை, கொள்ளை முதலிய கூடா ஒழுக்கமான காரியங்கள் செய்வதும், பக்தியின் பாற்பட்டதாகவும் மோட்ச சாதனமாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றன, பக்தி நூல்களிலும் சாஸ்திரங்களிலும் மத ஒழுக்க நூல்களிலும்!

இப்படிப்பட்ட காரியங்கள் எதுவும் வெறுக்கப்பட்டு உண்மையான ஒழுக்கத்தை அதாவது யாவருக்கும் பொருந்தும் சமத்துவமான ஒழுக்கத்தை போதிப்பதாக இருக்கின்றது குறள். ஆதலால்தான் குறளை பக்தி நூலல்ல, ஆஸ்திக நூலல்ல, மூடநம்பிக்கை நூலல்ல, அது ஓர் அறிவு நூல் என்றும், எல்லா மக்களும் ஏற்கக்கூடிய எல்லாமக்களுக்கும் பொருந்தக்கூடிய ஒழுக்க நூல் என்கின்றேன்.

எந்த நூலை எடுத்துக்கொண்டாலும் அதன் மதிப்பு அந்த நூலின் பயனை அளவாக கொண்டதே ஒழிய, அதை ஆக்கினவனையோ, அதில் உள்ள தெய்வீகத் தன்மை’’ என்பதையோ, இலக்கண இலக்கிய அளவையோ அமைப்பையோ ``அற்புதத்’’ தன்மையையோ அளவாகக் கொண்டதாக ஆகாது?

ஆகவே, குறள் வெறும் ஒழுக்கத்தையும், வாழ்க்கைக்கு வேண்டிய அனுபவபூர்வமான பிரதியட்ச வழியையும் கொண்டதாகும்.

அறிவு பெற்றவன், அறிவையே முதன்மையாகக் கொண்டவன், ஆலோசித்துப் பார்க்கும் ஆராய்ச்சித் தன்மை கொண்டவன் எவனும் குறளை மதித்தே தீருவான். குறளைப் பாராட்டியே தீருவான். சிறிதாவது பின்பற்ற குறளை வழிகாட்டியாய்க் கொண்டே தீருவான்.

ஆதலால் குறளுக்கு இன்று திராவிடர்கள் சிறப்பாக தமிழ் மக்கள் இடையில் பெருமையும் செல்வாக்கும் இருக்கிறது என்றால் இதுதான் காரணம். இந்தப் பெருமைக்கும் செல்வாக்குக்கும் நான் சிறிதும் காரணமான வனாகமாட்டேன் என்றாலும், எனக்கு ஏதாவது ஒரு சிறு பங்காவது கொடுக்கவேண்டுமென்று அறிஞர்கள் யாராவது நினைப்பார்களானால், அந்த சிறு பங்கு இந்த விஷயங்களை நானும் எனது கழகமும் மானாவமானத்தைக் கவனிக்காமல், சிறுமை - பெருமையைக் கவனிக்காமல்,  லாப, நஷ்டங்களை கவனிக்காமல், கஷ்ட சுகங்களை கவனிக்காமல், எழுதியும், பேசியும் வருகிறோமே அதற்கு ஆக இருக்கலாம். ஆனால், அதுவும் இன்று எங்களால்தான் முடிகிறது என்று சொல்ல முடியாது. அநேகர் புறப்பட்டு விட்டார்கள், இந்த வேலைக்கு. ஆதலால், குறளின் பெருமையைப் பற்றி இனி பேசுவதை நிறுத்திவிட்டு, இனி அதை காரியத்தில் கொண்டு வரும் பணியில் பிரவேசிக்கவேண்டியது தமிழர் - திராவிடர் ஒவ்வொருவரின் கடமையுமாகும். ஏனெனில், குறளுக்குப் பெருமை ஏற்பட்டு விட்டதால், இன்று குறளின் மூலக் கொள்கைகளுக்கு மாறுபாடாக நடந்து வருகிறவர்கள் எல்லாம்கூட இன்று குறள் பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறார்கள்.

உதாரணமாக, சைவர் -வைணவர் பார்ப்பனர் - தாசிகள் - வியாபாரிகள் - வக்கீல்கள் - மந்திரிகள் - சட்டசபை மெம்பர்கள் - சில காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் குறளைப் பாராட்டவும், குறள் பிரச்சாரம் செய்யவும் புறப்பட்டுவிட்டார்கள். இந்தக் கூட்டத்தாருக்கும், குறளுக்கும் எதில் ஒற்றுமை என்பது நமக்கு விளங்கவில்லை.

ஒரு மனிதன் தன்னை இந்து என்றும், ஆரிய தர்ம புராணங்களை பின்பற்றும் சமயவாதி என்றும் சொல்லிக்கொண்டு, புராணக் கூற்றுப்படி, மனு கொள்கைப்படி நடந்துகொண்டு, அவரும் குறளைப் பாராட்டுகிறார், போற்றுகிறார், பிரச்சாரம் செய்கிறார் என்றால் இதற்கு ஏதாவது பொருள் உண்டா? இக்காரியத்தில் அறிவுடைமையோ அல்லது நாணயமோ உண்டா என்று கேட்கிறேன். குறள் பிரச்சாரம் போதும். இனி அது பயன்படும் காரியமும், குறளுக்கு முரண்பாடற்ற காரியமும், குறள் வெற்றி பெறும் காரியமும் ஒவ்வொரு குறள் பாராட்டுவாதியும் செய்யவேண்டும்.

எனக்குத் தெரிகிறது, சில குறள் பாராட்டு பக்தர்கள் நமது மேடையிலும் காணப்படுவது - கம்பராமாயண, பாரத, புராண மேடைகளிலும் காணப்படுகிறது. வள்ளுவரையும் பாராட்டுவது, கம்பனையும் -வால்மீகியையும் பாராட்டுவது; குறளையும் காலட்சேபம் செய்வது, திருவிளை யாடல், பெரிய புராணங்களையும் காலட்சேபம் செய்வது; குறளில் நுண்பொருள் காணுவது, தேவார திருவாசக பிரபந்தங்களில் நுண்பொருள் கண்டு கண்ணீர் சொரிவது.

குறளை தலைகீழ் பாடம் செய்து விஞ்ஞானத் துக்குப் பொருந்த பொருள் உழைப்பது, சாம்பல் பூச்சுடன், கொட்டை கட்டிக்கொண்டு கோவிலுக்குச் சென்று குழவிக் கல்முன் நின்றும்படுத்தும் - புரளுவது; ஆரிய மத தர்ம பண்டிகைகளைக் கொண்டாடுவது; ஆரிய மதக் குறிகளை அணிந்து மத வேஷத்துடன் திகழ்வது.

யாராயும் இருந்துகொண்டு, எந்த வேஷமும் போட்டுக் கொண்டு, என்ன காரியமும் செய்து கொண்டு குறளைக் கூறிக்கொண்டு திரிவ தென்றால் இவர்கள் உண்மையில் குறள் பக்தர்கள் ஆவார்களா?

ஒரு மனிதன் உண்மையான குறள் பக்தனாக இருப்பானானால், அவன் குறளுக்கு எதிரான எல்லாக் கொள்கைக்கும் எதிரானவனாக இருக்கவேண்டும். எந்தக் கருத்துகளை - கொள் கைகளை எதிர்க்க, ஒழிக்க குறள் ஏற்பட்டதோ - குறளைப் பயன்படுத்துகிறானோ, அந்தக் கருத்துகளை எதிர்த்து, கொள்கைகளை ஒழிக்க முயற்சிப்பவனாய் இருக்க வேண்டும்.

அதற்கு குறள் பக்தர்கள், குறளைப் பாராட்டுகிறவர்கள், குறள் கொள்கையைப் பரப்புகிறவர்கள், குறளுக்கு ஆக தங்கள் வாழ்க்கையை ஒப்படைத்தவர்கள் குறள் வெற்றிக்கு ஆக சில ஆக்க வேலை செய்ய வேண்டியது எப்படி அவசியமோ அதுபோல் குறள் வெற்றிக்கு எதிரான காரியங்கள், கருத்துகள், ஆதாரங்கள், நூல்கள் ஆகியவை ஒழிய அழிவு வேலையும் கூடவே செய்பவர்களாக இருக்கவேண்டும்.

எந்த ஒரு நல்ல, உயர்ந்த தத்துவங்கள் கொண்ட காரியத்திற்கும் நிர்மாண வேலை, நாச வேலை ஆகிய இரண்டும் செய்ய வேண்டியது இன்றியமையாததாகும். நாச வேலையை விட்டுவிட்டு நிர்மாண வேலை மாத்திரம் செய்தால் எதிர் சாதனங்கள், நிர்மாணத்தை அழித்துக்கொண்டே இருக்கும்.

கடவுளைக் காக்க கடவுளுக்கு எதிரான நாஸ்திகம் அழிக்கப்பட வேண்டியது எவ்வளவு அவசியமோ, பகுத்தறிவைக் காப்பதற்கு மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, சைவ, வைணவ, ஆரிய மதங்களைக் காப்பதற்கு பவுத்த மதத்தை அழிக்க வேண்டியிருந்தது எவ்வளவு அவசியமோ, தொழிலாளி ஆட்சி ஏற்பட முதலாளிகள் ஆட்சி அழிபடவேண்டியது எவ்வளவு அவசியமோ, முதலாளிகள் ஆட்சி ஆதிக்கம் நடைபெற தொழிலாளிகள் இயக்கம் அழிபட வேண்டியது எவ்வளவு அவசியமோ, தனி உடைமைவாதிகள் காப்பாற்றப்படுவதற்கு பொதுவுடைமை வாதிகளை நாசமாக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, ஆரிய ஆதிக்க மென்னும் காங்கிரஸ் ஆட்சி நிலைப்பதற்கு - ஆதிக்கத்திலிருப்பதற்கு திராவிடர் கழகம் ஒழித்துக்கட்டப்படவேண்டியது எவ்வளவு அவசியமோ அது போலவே குறள் கருத்து, கொள்கை ஆகியவைகளை மக்களிடம் பரவச் செய்ய அது அனுபவத்தில் நடைமுறையில் கொண்டு வருவதற்கு ஆரிய சாஸ்திர - புராணங்கள் அவைகளை பிரபல பிரச்சாரமாகக் கொண்ட தேவார, திருவாசகம், பிரபந்தங்கள், அந்த கருத்துகளை செய்கைகளை நடப்பாகக் கொண்ட மதக் கோட்பாடுகள், அவைகளின் மீது நிறுத்தப்பட்டிருக்கின்ற கடவுள்கள் முதலிய வைகள் ஒழியாமல் அழியாமல் - நாசமாக்கப்படாமல் எப்படி குறள் கொள்கை அனுபவத்தில் நடைமுறையில் ஆதிக்கம் செய்யமுடியும்?

ஆகவே, குறள் விஷயத்தில் குறளைப் பிரச்சாரம் செய்து மக்களிடையே பரப்புவது, குறள் நிர்மாண, குறள் ஆக்கவேலைகளாகும். அதற்கு (குறளுக்கு) எதிரான மேற்கண்ட கருத்துகளை, காரியங்களை, நூல்களை மறையச் செய்வது என்பது குறள் ஆக்கத்திற்கு ஆகச் செய்யப்படும் அழிவு வேலையாகும். ஒரு காரியத்திற்கு ஆக ஆக்க வேலையும் அழிவு வேலையும் ஒரு உடலுக்கு இரண்டு கைகளைப் போன்றதாகும். இரண்டு கையும் சேர்ந்து தட்டினால்தான் ஓசை உண்டாவதுபோல் - காரியம் நடைபெறுவது போல் - ஆக்கமும் அதற்கெதிரானவைகளின் அழிவும் சேர்ந்தால்தான் காரியம் வெற்றிபெறும். அழிவில் வெற்றி பெற்றவன்தான் ஆக்கத்தில் வெற்றிபெறுவான்.

ஆகவே குறளைப் பரப்ப குறளின் மேன்மையை எடுத்துச் சொல்வதும், குறள் மாநாடு கூட்டுவதும், குறள் புத்தகங்கள் - பத்திரிகைகள் நடத்துவதும் போலவே குறள் கருத்துக்கு எதிரான ராமாயணம், பாரதம், கீதை, மனுதர்மம் முதலாகியவைகளின் கேடுகளைப் பற்றி பிரசாரம்செய்ய, இவை ஒழிப்பு மாநாடு, இந்த கருத்துகளை நடப்புகளை எடுத்துக் கூறுதல் இந்த ஆதாரங்கள் ஒழியும் படி செய்தல், அதன் நடப்புகளை எதிர்த்து மக்களிடையிலிருந்து மறையும்படி செய்தல் முதலான காரியங்களை மக்கள் செய்ய வேண்டாமா?

குறளுக்கு எதிரான காரியங்களாகிய மேற்கண்ட தன்மைகளைப் பரப்புகிறவர்கள் - அதாவது மனுதர்மம், புராண, இதிகாசம் ஆகிய வைகளை பரப்புகிறவர்கள் அதற்கு ஆக எவ்வளவு முயற்சியுள்ள ஆக்கவேலையும், அதன் எதிர்ப்புகளை அழிக்கும் அழிவு வேலையும் செய்கிறார்கள் என்பதை சற்று கவனியுங்கள்.

முதலாவதாக பார்ப்பனப் பிரசாரங்களையும், பார்ப்பனப் பத்திரிகைகளின் பிரச்சாரங்களையும், பார்ப்பன அதிகாரிகள், வக்கீல்கள், டாக்டர்கள், ஓட்டல்காரர்கள், புரோகிதர்கள் அர்ச்சகர்கள் முதலியோரின் வேலைகளையும் சற்று கவனித்துப் பாருங்கள். அவர்கள் நம்மையும், நமது முயற்சிகளையும் நமது பண்பு, முன்னேற்றம், சுதந்திரம், உரிமை ஆகியவைகளை ஒழிப்பதையும் அழிப்பதையுமே அதாவது, மாபெரும் நாச வேலையையே தங்கள் ஆக்கவேலைப் பணியாகக் கொண்டிருக்கிறார்கள்.

அய்க்கோர்ட் ஜட்ஜ் பார்ப்பனர் முதல் நமது முயற்சிகளை அழிக்கும் வேலையையே தங்கள் முக்கிய வேலையாகக் கொண்டு நடக்கிறார்கள்.

இராமாயணம், கீதை, பாரதம், புராணங்கள் பிரச்சாரமாகத்தானே இருக்கின்றது அவர்கள் வாழ்வு. பார்ப்பனர்கள் உத்தியோக முறையில் நமக்கு எவ்வளவு கேடு செய்கிறார்கள்? அவர் களது ஆட்சியில் நமது மக்களுக்கு எவ்வளவு கேடுகள் நடக்கின்றன?

ஒரு சங்கதி எடுத்துக் கொள்ளுங்கள்; உணவு விஷயத்தில் தொழில் விஷயத்தில், நமது மக்கள் ஏழைகள் - தொழிலாளிகள் எவ்வளவு கஷ்டப் படுகிறார்கள்?

இந்த நாட்டில் எந்தப் பார்ப்பனருக்காவது உணவு, உடை, வீடு, வேலை, கஷ்டம், உண்டா? நாம் தான் ``6 அவுன்ஸ்’’, ``வேலை இல்லை’’, ``கூலி இல்லை’’, ``பட்டினியால் சாகிறோம்‘’, ``பிள்ளையை விற்கிறோம்‘’ என்றெல்லாம் பரிதவிக்கிறோம்.

எந்தப் பார்ப்பனக் குஞ்சுக்காவது இவற்றில் ஏதாவது ஒரு விஷயத்தில் ஒரு சிறு குறைபாடோ அதிருப்தியோ கவலையோ உண்டா? காரணம் என்ன? அவர்களுக்கு மாத்திரம் எப்படி இவ்வளவு கஷ்ட காலத்திலும் அவ்வளவு நல்ல வாழ்வு நடந்து வருகிறது?

இதெல்லாம்,  மதமும் - மனுதர்மமும், இராமாயண, பாரத, கீதையும் தானே? அல்ல என்று யாராவது சொல்ல முடியுமா? நிற்க. இராமாயணத்திற்கு நம் நாட்டில் இந்தக் காலத்தில் இவ்வளவு மதிப்பு இருக்கலாமா? இராமனும், கிருஷ்ணனும், சீதையும், விபீஷணனும், அனுமாரும் நமக்குக் கடவுள்களாக இருக்கலாமா?

தேவாரம், திருவாசகம், பிரபந்தம் நமக்குப் பாராயணங்களாக இருக்கலாமா? நாமமும், விபூதிப் பூச்சும் நமக்கு பக்திச் சின்னமாகவும் இருக்கலாமா, அதுவும் இந்தக் காலத்தில்? குறள் பக்தர்களில் எத்தனை பேர் இவைகளை எதிர்த்து இவைகள் மறைந்து ஒழிய வேலை செய் கிறார்கள்? குறளைப் பேசிக்கொண்டு இந்த வேலைகளையும் செய்துகொண்டு இருப்பானானால் வலது கையால் செய்யும் காரியத்தை இடது கையால் அழித்துக்கொண்டு போகிறான் என்றுதானே அர்த்தம்.

அட முட்டாள்தனமே! இராமாயணம் நமக்கு ஒரு தெய்வ நூலா? அதில் என்ன இருக்கிறது? திராவிட நாசத்துக்கு வழிகாட்டியாகக் கற்பிக்கப்பட்ட நூல் அது. அதற்குத் தலையும் இல்லை, காலும் இல்லை. தேவர்களுக்கு ஆக அசுரர்களை, அரக்கர்களை, இராக்கதர்களை அழிக்க கடவுள் மனிதனாக - இராமனாகப் பிறந்து அரக்க வம்சத்தை அழித்தார் என்பதுதானே சுருக்கக் கருத்து. தேவர்கள் யார்? அசுரர்கள் யார்? எந்தத் திராவிடனாவது - தமிழனாவது சிந்தித்தானா? இராமயணப்படியே பார்த்தாலும் இராட்சதர்கள் என்கிற ஒரு ஜாதியோ இனமோ பிறவியோ காணப்படவில்லையே, தேவர்களுக்கு எதிரிதானே இராட்சதன் - அசுரன் - அரக்கன் - சூரன்களாகப் பெயரிடப்பட்டிருக்கிறார்கள்.

தேவர்களுக்கு எதிரிகள் யார்? மனு தர்மப்படி நடக்காதவன், வர்ணாசிரமத்தை ஒப்புக்கொள்ளாதவன், பார்ப்பனர்களுக்கு அடிமையாக இல்லாதவன் என்றுதானே புராண இதிகாசங்களில் மனுதர்மத்தில் கூறப்பட்டிருக்கிறது.

சாதாரணமாக விபீஷணனை எடுத்துக்கொண்டால் தேவர்கள் எங்கே? ராட்சதர்கள் அனுமார்கள் எங்கே? இவர்கள் எல்லோரும் சகோதரர்களுக்கு துரோகம் செய்து எதிரிகளிடம் சரணாகதி அடைந்து கூலி பெற்றதாலேயே தேவர்களுக்கு மேம்பட்ட ஆழ்வார்களாக ஆகி இருக்கிறார்கள். சென்ற வாரம் 2 நாள் சுதேசமித்திரனைப் பார்த்தேன். அதில் 1 நாள் மித்திரனில் விபீஷணன் சரணாகதியும். மற்றொருநாள் மித்திரனில் விபீஷணன் பட்டாபிஷேகமும் என்கிற தலைப்புகளில் 4 கலம் 5 கலம் இராமாயண பிரச்சாரம் இருந்தது. இதன் கருத்து என்ன வாய் இருக்க முடியும்? நீங்களே யோசித்துப் பாருங்கள். அதுவும் இந்த சமயத்தில் பார்ப் பனர்களுக்கு அடிமையானால் சரணாகதி அடைந்தால் பதவி கிடைக்கும் பட்டாபிஷேகம் பெறலாம் என்பதுதானே கருத்து.

அந்த விசயங்களை பார்ப்பனர் நம் மக்களுக்கு பச்சையாய் சொல்லுவதற்கு பதிலாக, முதல் நாள் சரணாகதி படலமும், 2 ஆம் நாள் பட்டாபிஷேகப் படலமும் பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்குப் பேர் என்ன? நம் ஆக்க வேலைகளை அழிப்பதுதானே அவர்கள் நோக்கம். நாம் அந்த ஆயுதங்களை சாதனங்களை அழிக்க வேண்டாமா?

விபீஷணன் யார்? இராவணன் தம்பி - இராவணன் ஆபத்தான நெருக்கடியான நிலைமையில் இருக்கும்போது அவன் இராஜ்யத்தை அடைவதற்காக துர் எண்ணங் கொண்டு அண்ணனின் எதிரிக்கு, அண்ணனை காட்டிக் கொடுப்பதற்கு ஆக துரோக வஞ்சக எண்ணத்துடன் அண்ணன் எதிரியிடம் சரணாகதி அடைந்து காட்டிக் கொடுத்து கூலி பெற்றவன்தானே? இதை யாராவது மறுக்க முடியுமா? மறுக்க ஆசைப்படுபவர்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன் விபீஷணனைப் பற்றி மேலே நான் குறிப்பிட்ட சொற்கள் நான் சொல்லுவதல்ல, ``விபீஷணன் இராஜ்யத்திற்கு ஆக என்னிடம் வந்திருக்கிறான்’’ என்பதை மிகத் தெளிவாக இராமன் கூறுகிறான். ``என்றால் இராவணனை நாசமடையச் செய்து அவன் இராஜ்யத்தைத் தான் அடைய வேண்டுமென்று விரும்பி என்னிடம் வந்திருக்கிறான்’’

``தனது காரியம் கெட்டு விடுமே என்கின்ற பயத்தால் எனக்குக் கெடுதி செய்யாமல் இருப்பான் ஆகையால் இவனை சேர்த்துக் கொள்ள லாம்.’’

``இவன் பலவானான இராவணனிடமிருந்து தனக்கு ஆபத்து வருமே என்று அறிந்து பயந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இங்கே வந்திருக்கிறான் என்று இவனுடைய தொனியாலும் வார்த்தைகளாலும் தெரிகிறது. ஆதலால், இவனை ஒப்புக் கொள்ளுவதால் யாதொரு கெடுதலும் வராது.’’

``தனது மூத்தவன் துஷ்டனாயிருந்தாலும் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்கின்ற எண்ணம் எல்லோருக்கும் வராது.’’

``உடன்பிறந்தவர்கள் எல்லோரும் பரதனைப்போல் ஆவார்களா?

``ராஜ்யம் பரதனுக்கு நியாயமாய் கிடைத்ததாகும். அதை வேண்டாம் என்று கருதி என்னைக் கண்டுபிடித்துவந்து எனக்கு கொடுப்பது என்றால் இது பரதனைத் தவிர வேறு யார் செய்வார்கள்?’’ என்று சொல்லி விபீஷணனை ஏற்றுக்கொண்டு இருக்கிறான். இந்த வாக்கியங்கள் இந்தப்படியே வால்மீகி ராமாயணம் யுத்தகாண்டம் சருக்கம் 17-இல் இருக்கிறது. (சி.ஆர்.சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு யுத்த காண்டம் பக்கம் 76, 77-இல் உள்ளதாகும்.)

சுக்ரீவன் சொல்கிறான்: இந்த விபீஷணன் நன்றியற்றவன். தன் தமையன் இப்படிப்பட்ட ஆபத்தில் இருக்கும் போது அவனைக் கைவிட்டவன் - எவனைக் கைவிட மாட்டான்? என்கிறான்.

அனுமான் சொல்லுகிறான்: இராவணனுடைய முயற்சி தோல்வி அடையுமென்பதையும் தங்கள் முயற்சி வெற்றி அடையு மென்பதையும் தாங்கள் வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்கு இராஜ்யத்தைக் கொடுத்ததையும் பார்த்து, தானும் இலங்கா இராஜ்யத்தை அடையவேண்டுமென்ற எண்ணத்துடன் இங்கே வந்திருக்கிறான். ஆகவே இவனை அங்கீகரிக்கலாம் என்கிறான்.

சாம்பவன் கூறுகிறான்: விபீஷணன் நம்மை வந்தடைவதற்கு ஏற்ற காலமல்ல இது. தனது எஜமானும் சகோதரனுமான இராவணனுக்கு ஆபத்து நேர்ந்திருக்கையில் அவனைக் கைவிட இதுதானா சமயம்? எப்படி யோசித்தாலும் இவனை நம்பக்கூடாது. என்கிறான். விபீஷணன் இராமனைப்பார்த்து சொல்லுகிறான், ஸ்வாமி என்னை நம்புங்கள். ராட்சதர்களை நாசஞ் செய்வதிலும் இலங்கையைப் பிடிப்பதிலும் என் உயிருள்ள மட்டும் என்னால் கூடியதைச் செய்கிறேன். தங்கள் சைன்னியத்தில் என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்கிறான்.

(சருக்கம் - 18 பக்கம் 92)

இவ்வளவு சங்கதி எதற்கு ஆக? விபீஷணன் வாயாலேயே அவன் மனதில் இருந்த பேராசை துரோகக் கருத்துகளைப் பச்சையாகக் கொட்டி விட்டான். அதாவது, இராமனும் லட்சுமணனும் நாகபாசத்தால் கட்டுண்டு மூர்ச்சையான சமயத்தில், ``இராம - லட்சுமணர்களுடைய வீரியத்தை அண்டிநான் க்ஷேமமடையலாம் என்று இருந்தேனே, என் எண்ணங்கள் எல்லாம் வீணாகி ராஜ்யம் கிடைப்பதும் போய்விட்டதே, இராஜ்யத்தை இழந்து பரிதவிக்கிறேனே, இனி எனக்கு விபத்து ஏற்படுமே. என் சத்துருவான இராவணன் வெற்றி பெற்றுவிட்டானே!’’ என்று புரண்டு அழுகிறான்.

``சுக்கிரீவன் தேற்றுகிறான்; ``விபீஷணா, துக்கப்படாதே!  இலங்கா இராஜ்யம் உனக்குக் கிடைப்பதில் சந்தேகமில்லை’’ என்று சொல்லி சமாதானம் சொல்லித் தேற்றினான்.

(இவை வால்மீகி இராமாயணம் யுத்த காண்டம், சருக்கம் 49 இல் 203-ஆம் பக்கம்)

இது மாத்திரமல்லாமல் அண்ணன் உயிருடன் இருக்கும்போதே அவன் இராஜ்ஜியத்தை அண்ணன் எதிரிகளால் தனக்கு பட்டாபிஷேகம் செய்யும்படி செய்துகொண்டு, அண்ணனின் உளவுகளையெல்லாம் இராமனுக்குச் சொல்லிக் கொடுக்கிறான். இப்படியான துரோகியும் அயோக்கியனுமான விபீஷணனைப் பார்ப்பனர்கள் அந்தக் குணங்களுக்கும் காரியங்களுக்கும் ஆகவே எவ்வளவு போற்றி புகழ்ந்து விபீஷணத் தன்மையை பிரசாரம் செய்கிறார்கள்? அதனால் எத்தனை விபீஷணர்களை உண்டாக்கிக் கொண் டார்கள். மற்றும் இராமாயணக் கதை முழுவதும் இதுபோலவேதான் துரோகம், வஞ்சனை மயமாய் இருக்கும்.  இது மாத்திரமல்லாமல் பாரதம்,  கீதை முதலியவைகளும் இப்படியே ஆபாசங்களாக இருக்கும். கீதையைப் பற்றி பேசுகையில் டாக்டர் அம்பேத்கர் ``கீதை முட்டாள்களின் பிதற்றல்கள்’’ என்றார். இவற்றை யெல்லாம் நாம் நம்மிட மிருந்து அழிக்க வேண்டாமா? குறளுக்கு மதிப்பு வந்து விட்டது என்றால், மற்றவைகளை - அதாவது குறளுக்கு எதிரானவை ஒழிய வேண்டும். ஆகவே அவற்றை ஒழியுங்கள். நாமத்தையும் விபூதியையும் நாட்டை விட்டு விரட்டுங்கள். 1951 ஆம் ஆண்டு குறள் பிரச்சாரமாக இவற்றைச் செய்யுங்கள்.’’

6.1.1951 அன்று திருச்சி தென்னூர் குறள் மாநாட்டில் தந்தை பெரியார் உரை (`விடுதலை', 13.1.1951).

Thursday, 4 May 2017

நாஸ்திகர் ஆவதற்கு அஞ்சாதீர்கள் -- பெரியார் - 27.5.1956


நாஸ்திகர் ஆவதற்கு அஞ்சாதீர்கள் -- பெரியார்

பேரன்புமிக்க தாய்மார்களே! தோழர்களே! டாக்டர் நாயுடு அவர்களே! உங்கள் அனைவருக்கும் என் வணக்கம். இன்று புத்தரின் 2500ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் கடைசி நாள். இதைப் பொதுக் கூட்டமாக வைத்து இதில் அநேக தோழர்கள் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. முக்கியமானவர்கள் எல்லாம் பேச இருக்கிறார்கள். ஆகவே நான் கடைசியில் பேசுவதாகவே இருக்கிறேன். இங்கு பலதரப்பட்டவர்கள், பல கருத்துடைய தோழர்கள் பேசுவார்கள். எந்தக் கருத்துக்களைப் பேசினாலும் நீங்கள் அமைதியாக இருந்து பொறுமை, அன்பு இவைகளைக் கடைப்பிடித்து, இங்கு விளையாட்டு எதுவும் விளையாடாமல், கைத்தட்டுதலைக் குறைத்துக்கொண்டு கடைசி வரை அமைதியாய் இருக்கவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
புத்தரைப்பற்றிப் பேசுகிறவர்கள் எல்லாம் புத்தரின் சரித்திரம் சரிவரச் சொல்லவில்லை. என்னமோ திண்ணை வேதாந்தம் பேசுகிற மாதிரிப் பேசுகிறார்கள். யாரும் சொல்லாததை புத்தர் ஒருவர்தான் சொன்னார்.

 அவருடைய கொள்கைகளைக் கட்டாயம் நாம் எல்லோரும் பின்பற்ற வேண்டும். புத்தரைப்பற்றி பலர் பலவிதமாகச் சொன்னார்கள். புத்தர் ஒருவர் தான், தான் (புத்தர்) சொன் னதைச்கூட தட்டிக்கேட்க உரிமை கொடுத்தவர். நான் சொன்னதை நம்பாமற் போனால் நாசமாகத்தான் போவாய் என்பதைத்தான் வேதம் சொல்லுகிறது. நாரதர், தேவர், உப நிஷத்து முதலிய எல்லாமுமே அதுதான் சொல்லுகின்றன. இவைகள் எல்லாம் சொந்த அறிவைத் துணையாகக் கொண்டு நடக்க வேண்டும் என்று சொல்லவில்லை. எனவேதான் தீண்டப்படாதவரை வண்டியில் கொண்டு வந்து நடுப்பந்தியில் உட்கார வைத்தால் எப்படியோ அதுபோல இதுவரை தீண்டப்படாதவனாகவும், அயோக்கியன், நாத்திகள் என்று கூறப்பட்டு வந்த புத்தரை இன்று நாடெங்கும் போற்றி விழா கொண் டாடுகிறார்கள்.

2000 வருடங்களாக தீண்டப் படாதவன், தாழ்த்தப்பட்டவன், தேவடி யாள் மகன், சூத்திரன் என்று ஒதுக்கி வைத்துக் கொண்டேபோனால், எத்தனை நாளுக்குத் தான் பொறுத்துக் கொண்டு வருவான். கோடி கடவுள், ஆயிரம் மகான்கள் இவர்களுக் கெல்லாம் கோயில்கள் கட்டி, அவை களுக்கு வேளா வேளைக்குச் சோறு போட்டு, கல்யாணம் பண்ணி ஒரு வருடம் கல்யாணம் செய்தால் போதாது என்று வருடா வருடம் செய்து, கருமாதி செய்தும் பார்த் தாயிற்று. இவ்வளவும் செய்த நாம் சூத்திரன்தான் என்றால் என்ன அர்த்தம்? இதை யார் மறுக்க முடியும், பார்ப்பனர்களைத் தவிர? இதுதான் கடவுள் விசுவாசமா? இப் படியே எத்தனை நாளைக்கு இருப்பது? 1953ஆம் வருடத்திலும் இப்படியே சொல் லிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?

இந்த புத்தர் விழா பெரும்பாலான ஊர்களில், நாடுகளில் 60 கோடி மக்களுக்குக் குறையாமல் கொண்டாடு கிறார்கள். நாம் தனியாகக் கொண் டாடிய அன்று ஒரு சிலர் ஆத்திரம் அடைந்தார்கள். இப்பொழுது சைனா, ஜப்பான், பர்மா, இலங்கை முதலிய இடங்களில் கொண்டாடுகிறார்கள்.

இங்கு இருக்கிற மாதிரி, பார்ப்பான், சூத்திரன், பறையன் அங்கு இல்லை. இராமன், கிருஷ்ணன், பிள்ளையார் போன்ற ஆயிரக்கணக்கான கடவுள்கள் இல்லை. மூத்திரத்தைக் கரைத்துக் குடிக்கும் மூட வழக்கம் அங்கு இல்லை. எனவே அங்கு புத்தநெறிக்கு ஆதரவு வளர்கிறது. புத்தர் கொள்கைகள் வாழ, புத்தர் சங்கம் வாழ, அன்பு, அஹிம்சை வேண்டுமென்கிறார், புத்தர்.
அன்பு, அஹிம்சையெல்லாம் சூழ் நிலைக்குத் தகுந்தபடி மாற்றிக்கொள்ள வேண்டியதாக இருக்கும். இந்த வார்த்தைகளையெல்லாம் அநேக வருடங்கள் சென்ற பிறகு சொல்ல வேண்டும். புலி அருகில் சென்று அஹிம்சை, அஹிம்சையென்று சொன்னால் என்ன நடக்குமோ அதே போன்றதுதான், நாம் பார்ப்பனரிடம் போய் ஜாதி பேதம் நமக்குள் வேண்டாம் என்று கூறிக் கொண்டுவருவதும். அவன் சூத்திரன் என்று சொன்னால், நாம் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம் என்றால் நமக்குப் புத்தி யில்லை, மானமில்லை என்றுதானே அர்த்தம்?
நமக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளை, இழிவுகளை மாற்றிக் கொண்ட பிறகுதான் பிறருக்கு நாம் அன்புகாட்ட முடியும். ஒரு மனிதனை 2000 வருடங்களாக கீழ்ஜாதி, வைப்பாட்டி மகன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? மடத்தனமாய், அறிவில்லாதவனாய், ரோஷமில்லாதவனாய் இருந்தால் இந்த நாடு எப்படி முன்னேறும்? கவர்னர் முதல் மந்திரிவரை பைத்தியக் காரத் தனமாய்க் கூறிக் கொண்டு வரு கிறார்கள்.
அய்க்கோர்ட் ஜட்ஜுகள், கடவுள் பக்தியைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆயிரக்கணக்கான வழக்கில் அவர்கள் தீர்ப்புக் கூறியிருப்பார்கள் பலரகக் குற்றவாளிகளைக் கண்டு இருப் பார்கள். மக்களிடம் நாணயம், ஒழுங்கு இல்லையென்று, அவர்களுக்குத் தெரியாதா? இப்படி இருந்தும் கடவுள் பக்தி வேண்டும் என்றால் என்ன அர்த்தம்? எத்தனை அயோக்கியத் தனம் செய்தாலும் ஒருவனுக்குக் கடவுள் பக்தி இருந்தால் போதும் என்று தானே பொருள்?

யாருக்கு இல்லை பக்தி? இந்த சென்னை மாகாணத்தில் இருக்கும் எல்லா சென்டிரல் ஜெயில்களிலும் சுமார் பத்தாயிரம் கைதிகள் இருப் பார்கள். அவர்களில் என்போல் பத்து பேர் இருக்கலாம், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். மற்றவர்கள் எல்லோ ரும் காலையில் எழுந்த உடனே திரு நீற்றுப் பட்டையை நெற்றியில் தடவிக்கொண்டு, பகவானே, விடுதலை சீக்கிரம் செய் என்றுதானே வேண்டுகிறார்கள் கடவுளை? ரிமாண் டில் இருப்பவன்  தண்டனை கொஞ்ச மாக இருக்க வேண்டுமென்றும், கடவுளே என் மேல் கேசே போடக் கூடாதென்றும் தானே ஒவ்வொருவனும் வேண்டிக் கொள்கிறான்? இதெல்லாம் பக்தி இல்லாமலா நடக்கிறது?

புத்தர் எவ்விடத்திலும் கடவுளைத் தாக்கிப் பேசவில்லை என்று கூறுவது சுத்தப் பைத்தியக்காரத்தனம். இப்படிப் பேசுகிறவர்களுக்கு இந்து மதம் என்றால் என்ன என்பதே தெரியாது. வேதத்தை ஏற்று நடந்துவருவதுதான் இந்து மதம். உபநிஷத்துக்கள், மந்திர சாஸ்திரங்கள்படி நாம் நடப்பதனால் தான் இங்கு பார்ப்பான் - பறையனும், மேல்சாதி - கீழ்சாதியும், எண்ணற்ற கடவுள்களும் இலட்சக்கணக்கான கோவில்களும், குப்பைகூளங்களும் இருக்கின்றன.

எல்லாவற்றையும் கற்று, எது உண்மை? எது பொய்? என்று யார் தெரிந்து வைத்திருக்கிறானோ அவன் தான் புத்தன் திருடனும் பவுத்தனும் ஒன்றே; பவுத்தனுக்கும் நாத்திகனுக் கும் வித்தியாசமில்லை. ஆகையால் அவனை நாட்டில் விட்டு வைக்காதே என்று இராமன் பரதனுக்குச் சொல்லி யிருக்கிறான். மற்றொரு இடத்தில் பரதா, பவுத்தர்கள் எல்லாம் நாத்தி கர்கள்; அவர்களோடு பழகாமலிருக் கிறாயா? தங்களுடைய சாமர்த்தியத் தால் வேத, புராணங்களையும் சாஸ் திரங்களையும் பெரியோர் ஏற்படுத்தி வைத்த மத சம்பிரதாயங்களையும் அர்த்தம் செய்ய மாட்டார்கள். கேள்வி ஞானங்கொண்டு தங்கள் கருத்துக் களைச் சொல்லி மக்களை மாற்றி விடுவார்கள். அவர்களை நாட்டை விட்டுத் துரத்தி விட்டாயா? என்று இராமன் கூறுகிறான். கேவலம் தன் சொந்தப் புத்தியைக் கொண்டு, அறிவு என்னும் ஆயுதத்தைக் கொண்டு வேதங்களை, புராணங்களை, ரிஷிகள் எனப்படுபவர்களை ஆராய்ச்சி செய் கிறார் என்ற ஒரே காரணத்திற்காக நாஸ்திகன் என்று சொல்கிறார்கள்.

இந்து மதப்படி, மனுதர்ம சாஸ்திரப் படி நாம் எல்லாம் சூத்திரன்; அவன் பார்ப்பனன். அவன் உடம்பு மட்டும் அப்படி என்ன மணக்கிறது? நம் உடம்பில் மட்டும் நாற்றம் வீசுகிறதா? அவர்கள் சிறுநீர் பன்னீர் வாசனையும், நம் சிறுநீர் துர்நாற்றமும் வீசுகிறதா? இதைக் கேட்டால் நான் முகத்தில் பிறந்தேன்; நீங்கள் காலில் பிறந் தீர்கள்; என்று சொல்லுகிறார்கள்! புராணங்களை ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்தால் புண்ணியம் என்றும், மறுத்தால் பாபம் என்றும் தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் முதலியவைகளில் எழுதப்பட்டு இருக் கின்றன. உதாரணமாகப் பெரிய புராணத்தில் ஒரு பக்தன் தான் மோட்சம் செல்வதற்கு தன்னுடைய மனைவியை ஒரு பார்ப்பானுக்கு விட்டுக்கொடுத்து இருக்கிறான். இப்பொழுது இது மாதிரி யார் செய்வார்கள்? இம்மாதிரி எழுதிவைத் திருக்கிறாயே என்று கேட்டால் நாத்திகனா?

நேற்று எந்தப்பத்திரிகை என் பேச்சை வெளியிட்டது? பார்ப்பனர் களின் பத்திரிகைகள் தங்களுக்குள் கட்டுப்பாடு செய்து கொண்டன. என் பேச்சைப் போட்டால் தன் தலை மேலேயே கொள்ளியை எடுத்து வைத்துக்கொண்ட மாதிரி ஆகி விடாதா? கவர்னர் பேச முடியாமல் போய் விட்டதைப் பெரிதாக்கிப் போட்டிருக்கிறார்கள். புத்தர் விழாவுக்கு இழுக்கு கற்பிப்பதில் அவ்வளவு அக்கறை. கூட்டம் மறுநாள் நன்கு நடந் ததே அதைப்பற்றி ஏன் போடவில்லை? இராமசாமி வேண்டாதவன். அதனால் போடவில்லை. சுமார் 500, 1000 வருடங்களுக்கு முன் மேல்நாடுகளில் யாராவது மதத் திற்கு விரோதமாகப் பிரச்சாரம் செய் தால் கொன்று போட்டுவிடுவார்கள். இங்கு அரசாங்கமும், பார்ப்பனரும் உள்ள ஆதரவும் போதாமல் திண் ணைக்குத் திண்ணை இராமாயண காலட்சேபம் செய்கிறார்கள். இவை களுக்கெல்லாம் அரசாங்கம் அனுமதி கொடுக்கிறது. நாம் ஆதாரத்துடன் எடுத்துச் சொல்ல முன் வந்தால் தடையுத்தரவு போடுகிறார்கள். குப்பை கூளத்திற்கெல்லாம் 3, 4 தடவை ஆதரித்துப் பொம்மை போட்டு ஆதரவு கொடுத்து விளம்பரம் செய்கிறார்கள்.
புத்தன், வள்ளுவன், என்னைத் தவிர வேறு யார் சொல்லியிருக் கிறார்கள் ஜாதி ஒழிய வேண்டு மென்று? நேற்று இருந்தாரே ரமண ரிஷி, ஒரு வார்த்தை ஜாதி ஒழிய வேண்டுமென்று சொல்லி இருப்பாரா? நாயன்மார், ஆழ்வார்கள் சொல்லியி ருப்பார்களா? மகாத்மாதான் சொன் னாரா? 1956ஆம் வருடம் வரை எங்களைத் தவிர வேறு யாராவது சொன்னார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா? சில பார்ப்பனர்கள் புத்தர் கடவுளைத் திட்டிப் பேசவில்லை என்று பேசுகிறார்கள். இம்மாதிரியாக சிலர் பெரிய விஷயங்களில் தலை கொடுத்து விடு கிறார்கள். புத்தர், உன் புத்தியைக் கொண்டாடு; ஆராய்ச்சி செய். மூடக்கொள்கை களை, மூடத்தன பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்காதே என்று கூறி யிருக்கிறார். அப்படி ஆராய்ச்சி செய்து பார்த்தால் ஒரு கடவுள் மிஞ்சுமோ? இராமன், கிருஷ்ணன் எல்லோரும் பறந்து விடமாட்டார்களா? புத்தர் கூறிய ஒரு லட்சியத்தை வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு கடவுளைக் கண்டுபிடியுங்களேன், பார்ப்போம்!

புத்தர் சிலையின் முகத்தைப் பாருங்கள், அன்பு, அமைதி, சாந்தம் இருக்கிறது. கிருஸ்துவின் முகத்தைப் பாருங்கள், பார்த்தவுடன் நமக்கே ஒரு சக்தி ஏற்படுகிறது. இங்கு இருக்கிற கடவுள்களை எடுத்துக் கொள்ளுங்கள். 5,6 முகங்கள்! 10, 20 கைகள்! கண்கள் வெளியே வந்து விடுகிற மாதிரி இருக்கும் கோரமான முகம்! கையில் அரிவாள் கத்தி, பெரியவயிறு இவைகள்தானே நம் கடவுள்கள்? 21 லட்ச வருடங்களுக்கு முன் திரோதாயுகத்தில் இராமாயணம் நடந்தென்று எழுதப்பட்டிருக்கிறது. 2000 - 3000 ஆண்டுகட்கு முன் இருந்த தமிழன் கதையே நமக்கு அகப்படவில்லை. இராமாயணம் மாத்திரம் அப்படியேயிருக்குமா? 21 லட்ச வருடங்களுக்கு முன் டார்வின் ஆராய்ச்சிப்படி மனிதன் குரங்காகத் தானே இருந்திருப்பான். 5000, 6000 வருடங்களுக்கு முன்பே நான்கைந்து தடவைகள் வெள்ளப் பெருக்கு ஏற்பட் டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொ ல்லியிருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் மதுரை, சேர, சோழ பாண்டியர் முதலிய அரசர்கள் இருந்திருப்பார்களா? இவை களை நாம் எப்படி ஒப்புக் கொள்வது? சில வருடங்களுக்குமுன் தேவடியாள் பட்டம் பொட்டுக்கட்டி கோவிலில் விடுதல் போன்ற பழக்க வழக்கங்கள் இருந்தன. நாம் தானே அவர்கள் ஒரு வகுப்பாக மாறிவிடக் கூடாது என்றும் சமுதாயத்தில் ஒருவராக ஆகி சம மதிப்புப் பெற வேண்டும் என்றும் கருதி ஒழிக்கப் பாடுபட்டோம். கக்கூஸ், எடுத்தலும் பியூன் வேலை பார்ப்பதும் நம்மவர்களுக்கே; அதற் கெல்லாம் மேல் ஜாதியார் வர மாட் டார்கள். கீழ்த்தரமான வேலைகளை நமக்குக் கொடுத்து விட்டு, பெரிய உத் யோகங்களை அவர்கள் எடுத்துக் கொண்டு விகிதாச்சாரப்படி என்று கூறிவிடுவார்கள்.
கிருஷ்ணன் பல்லாயிரக்கணக்கான கோபிகா ஸ்திரிகளுடன் விளையாடி னான். அதைக்கண்ட நாரதருக்கும் பெண்ணாசை பிடித்துக்கொண்டது. அதற்குக் கிருஷ்ணன், நான் இல்லாத வீட்டில் நீ போய் இரு என்று சொன் னான். நாரதர் எங்குபோய்ப் பார்த் தாலும் கிருஷ்ணன் இருந்தானாம். இதுதான் கடவுள்களின் லட்சணம் போலும்?

இன்று நாம் எல்லோரும் இவ் விழாவைக் கொண்டாடியதனால் ஒரு படிப்பினையை உண்டாக்கிக்கொள்ள வேண்டும். குறைந்த அளவு இங்கு வந் திருக்கும் தாய்மார்கள் வாசற்படியில் குங்குமம் தடவுவதையாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். கோவிலுக்கு ஏன் போகவேண்டும். அக்காலத்தில் சுங்கம் வரி போட்டிருந்தான். இக்காலத்தில் கோயிலில் பணம் பிடுங்குகிறான். அம் மாதிரி ஒவ்வொன்றையும் ஆராய்ச்சி செய்து அதன்படி நடந்தால் 25 வருடத்திற்குள்ளாக பார்ப்பான்-பறையன் பூண்டே இருக்காது.
எனக்கு என்ன வேறு வேலை இல்லையா? நான் அவர்கள் சொல்லு கிறபடியே தலையாட்டி விட்டால், பார்த்தீர்களோ! கடவுள், நாயக்கருக்கு கட்டாயம் நல்ல அறிவு கொடுப்பார் என்று அப்பொழுதே சொன்னேனே என்று சொல்லிக்கொண்டே என் காலில் விழுவானே! திடீர் என்று நான் சாமியாராகிவிட்டால் எல்லோருடைய வீட்டிலும் என் படம் தொங்குமே!

எனக்கு வயது 77 முடிந்து 78 பூர்த்தி யாகப் போகிறது. இப்பொழுது தலை நடுக்க ஆரம்பித்து விட்டது. எனக்கு என்ன நஷ்டம் வந்துவிட்டதென்று சொல்லிக் கொண்டேயிருக்கிறேன். சாகும் வரை இப்படியே இருப்பதாக உத்தேசம். அடிமையாக விலைக்கு வாங்கப்பட்ட நீக்ரோக்கள் இப்பொழுது 100க்கு 80 பேர் படித்துப்பட்டம் பெற்று இருக்கின்றார்கள். இப்பொழுது அவர் களும் வெள்ளையர்களுடன் சம உரிமை யுடன் வாழ்கிறார்கள்.

நாம் நன்றாக வாழ்ந்தபொழுது வெள்ளையருக்கு வேட்டிக் கட்டக்கூடத் தெரியாது. பச்சை மாமிசத்தை அப்படியே தின்று கொண்டிருந்தார்கள்! இப்பொழுது ஆகாயத்தில் ஏரோப் ளேனில் பறக்கிறான்! நாம் கட்டைத் தேரில் கடவுளை வைத்து ஆயிரம் பேர் சேர்ந்து இழுத்துக் கொண்டேயிருக் கிறோம். முஸ்லிம்கள்கூட 1000 வருடங்களுக்கு முன் காட்டுமிராண்டித் தனமாக மூடத்தனமான பழக்க வழக் கங்களைக் கையாண்டு வந்தனர். நபி தோன்றினார். சீர்திருத்தம் செய்தார். அதேபோல் கிருஸ்தவர்களுள் இயேசு வந்தார். உருவத்தைக் கும்பிடுபவர்கள் சண்டாளர்கள் என்று சொல்லிவிட்டார்.

இவைகளைப் பார்த்தாவது நமக்கு இனிமேல் புத்திவர வேண்டாமா? சொந்தப் புத்திதான் இல்லையென்றால் புத்தர் சொன்னபிறகாவது வரவேண் டாமா? அப்படியும் வரவில்லையானால் 10 - 15 ஆண்டுகளுக்குப்பின் பார்ப் பனர் ஆட்சி ஏற்பட்டு நம்மையெல்லாம் நெற்றியில் சூத்திரன் என்று பச்சை குத்திக் கொள்ளச் செய்வார்கள். நமக்கு எவ்வித உத்தியோகமும் இல்லையென்று சொல்லிவிடுவார்கள். ஆகவே நீங்கள் எல்லோரும் பகுத்தறிவு வழி, புத்தர் சொன்ன வழிகளைப் பின்பற்றினால் உங்களுக்குப் பின்வரும் சந்ததிகளுக்குப் பெருத்த நிதி சேர்த்து வைத்தவராவீர்கள்.


27.5.1956 சென்னை கடற்கரையில் நடைபெற்ற புத்தர் விழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு,  (விடுதலை 2.6.1956)

Wednesday, 3 May 2017

ஆட்சி புரிவது அரசியல் அல்ல; மத, சமூக, ஜாதி இயல்களே! - 25-03-1961

ஆட்சி புரிவது அரசியல் அல்ல; மத, சமூக, ஜாதி இயல்களே!


தோழர்களே! வரவேற்பு மடலில் முதலாவது அரசியல், மதம், சமுதாயம் ஆகிய துறைகளில் புரட்சிகரமான கருத்துகளைப் பரப்பி வருவதாகக் குறிப்பிட்டு உள்ளீர்கள்.

உண்மையிலேயே இத்துறைகளில் தொண்டாற்றி வருகின்றேன் என்றாலும், என்னைப் பொறுத்தவரையில் இந்த நாட்டில் அரசியல் என்று ஒன்று இல்லை என்று கருதுகிறவன். அதற்கு மாறாக மத இயலும், சமூக இயலும்தான் ஆட்சி புரிகின்றன என்றுதான் கூறவேண்டும். அரசியல் என்பது மத ஆட்சிக்கு அல்லது சமுதாய ஆட்சிக்குப் பயன்படுத்திக் கொண்ட சொல் ஆகும். இது சரித்திர காலம் தொட்டே இப்படி நடந்து வருகின்றது. மக்களுடைய நலனுக்காக இன்ன கொள்கையைப் பொறுத்து ஆள்வது என்று புராணக் காலங்களிலும் இல்லை. அடுத்த சரித்திரக் காலங்களிலும் இல்லை. இந்த நாட்டு அரசுகள் எல்லாரும் தம் சொந்த புத்தியைக் கொண்டு ஆண்டது இல்லை.

அடுத்து முஸ்லிம்கள் ஆண்டார்கள் என்றால், அவர்கள் தங்கள் மதம், தங்கள் ஜாதி இதன் பெருமையைக் கருதி ஆண்டார்களே ஒழிய, மக்களுக்காக இன்னக் கொள்கை என்று வகுத்து ஆளவில்லை அப்படி ஆண்டதாக ஆதாரம் காட்ட முடியாது.

அடுத்து வெள்ளைக்காரன் ஆட்சியில் மட்டும் என்ன நடந்தது? அவன் படித்தவன் நாகரிக நாட்டான் என்று கூறப்படுபவன். அவன் 200-ஆண்டுகள் ஆண்டுங்கூட நம் மக்களின் அத்தியாவசியம் ஆன குறைகளைப் போக்க முயலாமல் தங்கள் ஆட்சியைத் தொல்லை இல்லாமல் நடத்த யார் யார் தங்களுக்குப் பயன்பட்டார்களோ அந்தக் குறிப்பிட்ட மேல்ஜாதிக்காரர்களின் நலத்திற்குத்தான் வழிவகை செய்தான்.

எவனாவது மனித தருமத்தின்படி - நியாய முறைப்படி ஆண்டு இருப்பானேயானால் இப்படி 100 க்கு 80 பேர் தற்குறிகளாகவும், 100 க்குத் 97 பேர்கள் இழி மக்களாகவும் இருந்திருக்க மாட்டார்கள். உலகில் எந்த நாட்டிலும் இதுபோலத் தற்குறிகளும், அந்த நாட்டுக்கே சொந்தமான மக்கள் இழி மக்களாகவும் இருக்கவில்லை. இந்த நாட்டில்தான் இந்த அவல நிலை இருக்கின்றது.

நம் மதம் போல உளுத்துப்போன மதம் உலகில் வேறு எங்கும் நாம் காண முடியாது. இந்த உளுத்துப்போனக் காட்டுமிராண்டி இந்து மதம்தான் நம்மை இன்று ஆட்சி செய்கின்றது.

அடுத்து ஜாதி முறை. இது உலகிலேயே எங்கும் இல்லாத ஜாதி முறையாகும். மோசடியானதும், காட்டுமிராண்டித்தனம் ஆனதும், கொடுமை ஆனதும் ஆகும். இந்தச் ஜாதி முறைக்கும், மதத்திற்கும் பாதுகாப்ப அளிப்பதுதான் இன்றைய ஆட்சியின் சட்டமாக உள்ளது. இந்த நாட்டில் உண்மையிலேயே ஒரு மனிதன் பொதுத் தொண்டாற்ற வேண்டும் என்று கருதுவானேயானால் அவன் முதலாவதாகக் செய்ய வேண்டிய முக்கியத் தொண்டு ஜாதியை ஒழிக்கப் பாடுபடுவதும் மக்களின் இழி நிலையையும் மடமையையும் ஒழிக்கப் பாடுபடுவதும் ஆகும்.

மற்றத் தொண்டுகள் எல்லாம் வயிற்றுப் பிழைப்புத் தொண்டுகளாகும். சும்மா வியாபாரத் தொண்டு மாதிரியாகத்தான் கூறுவேன். மற்றத் தொண்டுகள் செய்ய வேண்டுமானால் நாட்டில் ஏராளமான மக்கள் வருவார்கள். ஆனால் எங்கள் தொண்டுகள் செய்ய எங்களைத் தவிர வேறு யாரும் முன் வருவதும் இல்லை. வந்தாலும் மிஞ்சுவதும் இல்லை. எங்கள் தொண்டில் ஈடுபட்டால் பொதுமக்களை அணுகி ஓட்டுப் பெற முடியாது. இதன் காரணமாக எவரும் இந்தத் துறைக்கு வருவது இல்லை.

அடுத்து உள்ள வரவேற்புப் பத்திரத்தில் அந்நிய ஆட்சியை அடியோடு அழிக்க அரும்பாடுபட்டதாகக் குறித்து இருகின்றீர்கள். இது மிகவும் முட்டாள்தனம் என்றே கருதுகின்றேன். நாம் தற்குறிகளாக இருக்கும்போதே - அறிவு பெறுவதற்கு முன்னமேயே அநியாயமாக மேலும் சிக்கலில் மாட்டிக் கொள்ளத்தான் இந்தச் சுதந்திரம் பயன்பட்டது என்று கூறுவேன்.

சுதந்தர, ஜனநாயக ஆட்சியில் தான் ஜாதியை - மதத்தைக் காப்பாற்றப்படும் என்று அரசமைப்புச் சட்டம் உள்ளது.

நாட்டில் இன்றையத் தினம் மக்களிடத்தில் உள்ள கட்டுப்பாடுகள், கிளர்ச்சிகள் இருப்பதற்கு வெளிநாட்டுக்காரனாக இருந்தால் கட்டாயம் ஜாதியையும் மதத்தையும் ஒழித்து இருப்பான். இந்த இந்திய ஆட்சி ஜாதியையும், மதத்தையும் காப்பாற்றுவதால் தான் இவற்றை ஒழிக்க முடியவில்லை.

ஜாதியை, மதத்தை, சாஸ்திரத்தை ஒழிக்கக் காரணமாக உள்ள எனக்கு இப்படி வரவேற்புக் கொடுத்துள்ளீர்கள். இந்தப் பணிக்கு உற்சாகப்படுத்துகின்றீர்கள்.

மற்ற நாட்டார்கள் போல நாமும் (தமிழர்களும்) சீக்கிரம் முன்னேற்றம் அடைய வேண்டும். நாம் இந்த 20-ஆம் நூற்றாண்டிலும் ஆமை வேகத்தில்தான் போய்க் கொண்டு இருக்கின்றோம். சீக்கிரம் போய் மற்ற நாட்டார் நிலையினைப் பிடிக்க வேண்டும்.

இன்றைய விஞ்ஞான - அதிசய - அற்புதக் காலத்தில் மணிக்கு 20.000, 25.000- மைல்கள் மனிதன் பறக்கும் சக்தியைப் பெற்றுவிட்டான். நாய்க் குட்டி எல்லாம் சந்திர மண்டலத்துக்குப் போய் உயிருடன் திரும்பி வந்துவிட்டது. அடுத்து மனிதனே போகப் போகின்றான். நம்முடைய அறிவின் நிலையோ மிகமிகப் பாதாளத்திலேயே இன்னும் உள்ளது.

உலகில் மனிதன் மற்ற ஜீவராசிகளை (உயிர்ப் பிறவிகளை) விடச் சிறந்தவனாகக் கருதப்படுவது அவன் எல்லையற்ற சக்தி அறிவு பெற்று இருப்பதால்தான்.

மற்ற நாட்டு மனிதன் அந்த அறிவினைப் பயன்படுத்தி மிகமிக முன்னுக்கு வந்திருக்கின்றான். ஆனால் இந்த நாட்டு மனிதனோ அந்த அறிவினைப் பயன்படுத்தாத காரணத்தினால் மிகமிகப் பின்னுக்குப் போய்க் கொண்டு இருக்கின்றான்.

இங்கு நாம் "ஞானபூமி", "வெங்காய பூமி" என்று சொல்லிக் கொண்டு செய்த காரியம் என்ன? கோயில் குளம் கட்டுவதும், சாமி சோறு கேட்கின்றது, சாறு கேட்கின்றது, பெண்டாட்டி - தேவடியாள் கேட்கின்றது என்று கூறிக் கொண்டு, தூக்கித் திரிந்து கொண்டு தானே உள்ளோம்?

நாம் துணிந்து இப்படிச் சமுகக் கேடானவைகளை எல்லாம், அறிவுக்குப் பொருத்தமற்றவைகளை எல்லாம் மாற்ற வேண்டும். இப்படிப்பட்ட நகராட்சியில் அங்கம் வகிப்பவர்களும், இளைஞர்களும், துணிந்து இந்தத் துறையில் இறங்கிப் பாடுபட வேண்டும்.

இன்று இதற்குமேல் அரசியலில் என்ன வேண்டியுள்ளது? இதற்கு மேலே சுதந்திரம் வர வழியும், நியாயமும் இல்லை. எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்குக்கூட ஓட்டு அளிக்கப்பட்டு உள்ளது. எவன் வேண்டுமானாலு; - ஓட்டர் லிஸ்ட்டில் (வாக்காளர் பட்டியல்) பேர் உள்ளவன் தேர்தலில் நிற்கலாம்; பதவிக்கு வரலாம் என்று உள்ளது. இதைவிட வேறு என்ன வேண்டும்?



25-03-1961- அன்று கோவையில் பெரியார் ஈ.வெ.ரா சொற்பொழிவு. ”விடுதலை”02-04-1961

Monday, 1 May 2017

மே தினம் - II - 29.04.1934

மே தினம்


மே தினம், அதாவது பிரதி வருஷத்திய மே மாத முதல் நாளை உலகமெங்கும் உழைப்பவர்களால் பெரு நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கடைசியில், முதல் அமெரிக்க தேசத்தில், தொழிலாளர், கிருஷிகர் அடங்கிய மக்கள் 8மணி நேரத்திற்கு மேல் தொழிற்சாலைகளிலும், வயல்களிலும், நிலங்களிலும் வேலை செய்வது அநீதி என்றும், அதனை வற்புறுத்துவது அதனினும் அநீதி என்றும், 8மணி நேர உழைப்பே போதுமானதென்றும் ஒரு கிளர்ச்சி புறப்பட்டது. அக்கிளர்ச்சியை முதலாளிகள் அடக்க முயன்றனர். அவ்வடக்கு முறை, மே மாதம் முதல் நாள் கொடூரமாக முடிந்ததன் பயனாக, எளிய தொழிலாளர், விவசாயிகளின் இரத்தம் சிந்தியபடியால், அந்நாள் தொழிலாளர்களின் மாபெரும் தியாக ஞாபகார்த்தமாகக் கொண்டு உலக முழுமையும் அத்தினத்தைக் கொண்டாடிக் கொண்டு வருகின்றார்கள்.

தொழிலாளர் உலகில் முதலாளித் திட்டம் ஏற்பட்டது முதல் 8மணி நேரம் மாத்திரமல்ல, அவர்கள் உழைத்து வந்தது 10மணி நேரம், 12 மணி நேரம், 16 மணி நேரம் ஊண் உறக்கமின்றி உழைத்து வந்திருக்கின்றார்கள். சுரங்கங்களிலும், குன்றின் மேற்களிலும், புயல் காற்றிலும், பெரும் வெள்ளத்திலும் உழைத்து வருகின்றார்கள் . தொழிலாளர்களில் முதியோர் மாத்திரமல்ல, சிறு குழந்தைகளும் தூங்க வேண்டிய இரவிலும் உழைத்து வருகின்றனர். அனுதினமும் வேகா வெய்யிலிலும், குளிரிலும் தீக்ஷண்யத்திலும், வயலிலும், பாலைவனத்திலும் உழைத்து வருகின்றவர் யார்? இவ்வளவு கஷ்டமும் தங்கள் வயற்றுக்கு மட்டிலும் தானா? மணிக்கு 100 மைல் ஓடும் எக்ஸ்பிரஸ் வண்டியில் ஆயிரக்கணக்கான பிரயாணிகளுடைய உயிர் ஒரு சிக்னல் மென் அதாவது, அடையாளம் காட்டும் ஒரு கூலிவயமிடமிருக்கின்றது! அவனைப் பன்னிரண்டு மணி நேரம் இரவில் விழித்திருக்க வேண்டுமென்றால் இதனினும் கொடுமை எங்குளது. இவன் 8மணி நேரம் வேலை செய்வதுதான் உசிதமென்று வாதமிட்டால், அவனை மிஷின் கன்களைக் கொண்டு கொல்லுவதென்றால் யாரால் பொருக்க முடியும். இத்தியாதி கொடுமைகளைப் போக்கி, உலகத்தில் தொழிலாளருக்கு நியாயத்தை ஸ்தாபிக்க நேர்ந்த தினம் இந்நாளாகும்.

சென்னை புளியந்தோப்பில் பன்னீராயிரம் நெசவுத் தொழிலாளர்கள் ஐந்து மாத காலமாக பசியும் பட்டினியாயும் கிடக்க நேரிட்ட காலையில் அவர்களுக்குப் பதிலாக வேலைக்குப் போகும் கருங்காலிகளை நிறுத்த எத்தனித்த காலையில், அமைதிக்கும் ஒழுங்குக்கும் ஏற்பட்டுள்ள அதிகாரிகள் தொழிலாளர் எழுவரைச் சுட்டுக் கொன்றனர்!! இத்தியாகத்தைக் கொண்டாடும் தினமும் மே தினமாகும்.

1905ம் வருஷத்தில் வீணாக ஜப்பானியர் மேல் படையெடுத்த ஜார் சக்கிரவர்த்தியின் கொடுமையைத் தடுக்க முயன்ற ரஷியத் தொழிலாளிகள், பதினாயிரக்கணக்காக கொல்லப்பட்ட ஞாபக தினமும் இத்தினமாகும்.

பிரான்சு தேசம் புரட்சிக்கு பின்பு பிரான்சு நாட்டில், அநீதியும் கொடுமையும் மிகுந்து வந்தபடியால் பிரான்சு தேச தொழிலாளிகளும், விவசாயிகளும் ஒன்று சேர்ந்து, பாரீஸ் நகரத்தில் ஏகாதிபத்திய ஆட்சியை, தீ கம்யூன் என்ற உழைப்பவர்கள் ஆட்சியை ஸ்தாபித்த காலை, முதலாளிகளுடைய தந்திரத்தால் கொல்லப்பட்ட லட்சக் கணக்கான பிரான்சுத் தொழிலாளர்களுடைய ஞாபகத்தைக் குறிக்கும் தினம் இம் மேதினமாகும்.

ஆங்கில நாட்டினும் நிலவரியிலும், நிலங்களை இழந்ததாலும் மனம் பொறாத தொழிலாளர்கள் சார்ட்டிஸ்ட் என்ற இயக்கத்தைக் கிளப்பியதன் காரணமாக, அக்கூட்டத்தைச் சேர்ந்த அனைவரையும் நாசப்படுத்திய ஞாபகப் படுத்தப்படும் தினம் இத்தினமாகும்.

சீன நாட்டில் சன்யாட்சன் என்ற பெரியோர் ஸ்தாபித்த தேசீயத்தை அபிவிருத்தி செய்ய ஏற்பட்ட தொழிற்கட்சியை நாசமாக்கிய ஞாபக தினமும் இதுவாகும்.

நேற்று தென்இந்திய ரயில்வேயில் முப்பதினாயிரம் பேர்கள் வேலை நிறுத்திய காலையில் அவர்களின் தலைவர்கள் நிரபராதிகளாகிய பதினெட்டு பேரை, பத்து வருஷம் சிறை வாசமிட்ட ஞாபக தினமும் இத்தினமாகும். இவ்விதமாக உலகம் முழுமையும் அந்தந்த நாடுகளின் தொழிலாளர் இயக்கங்கள் தோன்றிய நாள் முதல் பல்லாயிரக்கணக்காக கஷ்டப்பட்டு, மாண்டு மடிந்த உழைப்போர்களுடைய தியாகத்தை ஞாபகார்த்தமாக கொண்டாட இத்தினம் ஏற்பட்டுள்ளது.

உலகில் உயிர் முளைத்த கால முதல், கஷ்டமும் தியாகமும் அவ்வுயிர் களுடன் கலந்தேயிருக்கின்றன. இது பிரபஞ்ச வாழ்க்கையிலொன்றாகும். கஷ்டமில்லாமல் தியாகமில்லாமல் ஒன்றும் கை கூடுவதாக வில்லை. உலகத்தின் மேல் நடப்பது, பெரும்பான்மை மக்களுக்கு முள் கம்பளத்தின் மேல் நடப்பதைப் போல் ஒத்திருக்கின்றது. முள் கம்பளத்தின் மேல் நடக்க யாருக்குத்தான் மனம் வரும்? ஆனால் அக்கம்பளத்தின் மேல் நடந்தால்தான், சுகப் பேற்றையடைய முடிகின்றது. இதைத்தான் தொழிலாளர் இயக்கத்துக்கு ஆசானாகிய காரல் மார்க்ஸ் என்பார் லோகாயுதத்தின் முரண் என்பார். கஷ்டமில்லாமல் சுகமில்லை. சுகமும் கஷ்டமில்லாமல் கிடைப்பதில்லை. இதுதான் சமதர்மத் தத்துவத்தின் முரண்பாடு. பொது உடைமைக்காரர் யாராகிலும், இந்தப் பிரபஞ்ச முரண்பாட்டை அலட்சியம் செய்ய முடியாது. சோஷலிஸ்ட் அனைவரும் இந்த பிரபஞ்ச முரண்பாட்டை அடிப்படையாக வைத்து தங்கள் தத்துவத்தைக் கட்ட வேண்டும். சுதந்திரம் வேண்டுமானாலும், ஸகோதர தத்துவம் வேண்டுமானாலும், சரிசம தத்துவம் வேண்டுமானாலும் தியாகத்தால் தான் அடைய முடியும்.

உடலுக்கு உணவு வேண்டுமானால், அறிவுக்குக் கல்வி வேண்டுமானால், தியாகம் அன்னியில் எதையுமடைய முடியாது! சுகம், துக்கம்; துக்கம், சுகம் வாழ்வில் பிணை கொண்டிருக்கிறபடியால், தியாக மூர்த்திகள் செய்து வரும் தியாகம் உலக ஞாபகத்தில் இருந்து கொண்டேயிருக்கும். இவ்வித தியாக மூர்த்திகளின் ஞாபகத்தைக் கொண்டாடும் தினம் இந்த மே மாதம் முதல் தேதியாகும்.

இந்த மே தின ஞாபகம் ஏகாதிபத்திய ஆட்சிக்கல்ல, செல்வத்திற்கும் சம்பளத்திற்குமல்ல, கொடுங்கோன்மைக்குமல்ல, உலக மக்களனைவரும் உண்டு உடுக்கவும், இருந்து வாழவும், சந்ததி விருத்தி செய்யவும், அந்த சந்ததியார் உலக சுகப் பேற்றை பெறவும் செய்யும் தியாகமாகும்.

தற்போது உலகம் பலவித இடுக்கண்களால் கஷ்டப்பட்டு வருகின்றது. இல்லாமையும் வறுமையும், பஞ்சமும், வெள்ளமும் உலகை ஒருபுறம் வருத்தி வர கொடுங்கோன்மைக் கட்சிகளாலும், முதலாளிகளின் அட்டூழியத்தாலும், வறுமையாலும் உலக நெருக்கடி அதிகரிக்கும் போலும்! உலகம் பிற்போக்கால் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டிவரும் போலும்!! உலக நெருக்கடி குறைந்த பாடில்லை. சேனைத் தளங்கள் உலகில் அதிகரித்து வருகின்றன. மகாயுத்தத்தின் முன்னிருந்த சேனைத்தளங்களைவிட எண்மடங்கு அதிகரித்திருக்கின்றன. இத்யாதி வியர்த்தங்களால் உலக மக்கள் இனிவரும் மாபெரும் யுத்தத்தில் மடியப் போகின்றனர். இனிவரும் யுத்தம் உலகில் விளைபொருள் போதாதென்பதற்கல்ல. செய்பொருள் செய்ய முடியவில்லை என்பதற்கல்ல. வல்லரசுகளின் ஆணவத்தாலும் அகம்பாவத்தாலும் விளையப் போகும் மகா பாதகமென அறிக!!! இம்மாபெரும் கேட்டைத் தடுப்பதற்கு உலகில் ஒருவரேயுளர். அவர்களால்தான் ரஷ்ய தேசம், புரட்சிக்குப் பின் நடந்த உள்நாட்டுக் கலகம் அடக்கப்பட்டது. வெளிநாடுகளின் உதவி பயன்படாமல் போயிற்று. போலண்ட் தேசத்து நெருக்கடியைச் சாக்காக வைத்துக் கொண்டு வல்லரசுகள் சோவியத் அரசை நசுக்கச் செய்த முயற்சி வீணானதாயிற்று. இவர்கள் யாரெனில் அகில உலக தொழிலாளர்களாவர். இவர்கள் தான் உலக சமாதானத்தை நிலைக்க வைக்க வலிமை கொண்டவர். இவர்கள்தான் அகில உலகப் போரை நிறுத்த வல்லவர். இவர்களுக்கு வேண்டியதொன்றே. அதாவது, அகில உலகத் தோழர்கள் ஒற்றுமைப்பட்டு சுகத்திலும், துக்கத்திலும் ஒன்றுபட்டு வாழ வேண்டிய தொன்றே. இந்த ஒற்றுமைக்காக உலகத் தொழிலாளர் பல்லாண்டுதோறும் பட்ட கஷ்ட நிஷ்டூரங்களை யெல்லாம் ஞாபகப்படுத்தும் தினம் மே மாதம் முதல் தேதியாகும்.

தந்தைபெரியார் -”புரட்சி”  தலையங்கம் 29.04.1934