Sunday, 2 January 2022

சென்னை ஆதி திராவிட சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானம் - தோழர் பெரியார்

 சென்னை ஆதி திராவிட சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானம் 

தந்தை பெரியார் சென்னை நேப்பியர் பார்க்கில் (தில்லைவனத்தில்) ஆதி திராவிட சுயமரியாதை மகாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானமாவது:

ஆறரைக் கோடி மக்கள் அடங்கிய எங்களுடைய பெரும் சமூகமானது, இந்து மதத்தில் சேர்க்கப்பட்டிருப்பதின் நிமித்தம் தீண்டப்படாதவர்களாயிருப்பதாலும், அம்மதத்தில் சமத்துவ உரிமை இல்லாதிருப்பதாலும், இனி அடுத்து வருகின்ற சென்சஸ் கணக்கில் எங்களை இந்துக்கள் என்று பதியாமலிருக்கும்படியும், சர்க்கார் தஸ்தாவேஜூகளிலும் எங்களை இந்துக்கள் என்ற பதவியிலிருந்து நீக்கி விடும் படிச் சர்க்காரையும், சட்டசபை அங்கத்தினர்களையும் இம்மகாநாடு வேண்டிக் கொள்ளுகின்றது என்பதாகத் தீர்மானித்திருக்கின்றது.  திருவாங்கூர் ராஜ்ஜியத்திலும் சுமார் 3 வருடங்களுக்கு முன்பாக முதுகுளத்தூர் என்கின்ற இடத்தில் கூடிய ஒரு எஸ்.என்.டி.பி. யோகத் தில்  அதாவது ஈழவ சமுதாய மகா நாட்டில் இதை அனுசரித்த ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதாவது, இந்து மதத்தில் மனித சுதந்திரம் இல்லாததால் இம் மதத்தை விட்டு வேறு மதத்திற்குப் போய் விடவேண்டும் என்பதாகும்.

இத்தீர்மானம் ஒன்று வரப் போவதாகத் தெரிந்து சில கிறிஸ்தவ பாதிரிகளும், ஆரிய சமாஜிகளும், புத்தமதப் பிரமுகர்களும் அக் கூட்டத்திற்கு வந்திருந்து தங்கள் தங்கள் மதத்தின் பெருமையை எடுத்துச் சொன்னார்கள்.

திரு ஈ.வெ. ராமசாமியும், அம்மகா நாட்டுக்குப் போயிருந்தார். தீர்மானத்தை ஆதரித்துப் பேசியபோது, இது சமயம் வேறு மதத்திற்குப் போக வேண்டியதில்லை. இனியும் சிறிது காலம் பார்க்கலாம் என்றும், அப்படி மதம் மாறுவதாயிருந்தால் மகமதிய மதத்திற்குப் போவது நல்லது என்றும், ஏனெனில், மதத்தின் பேரால் மக்கள் இப்போது மகம்மதிய மதத்தைக் கண்டால் தான் பயப்படுகிறார்கள் என்றும், அதில் பெண்கள் விஷயம் தவிர, மற்ற வழிகளில் உண்மையான சர்வ சுதந்திரமும் இருக்கிறது என்றும், நமது நாட்டில் உள்ள கிறிஸ்தவ மதம் வரவர பார்ப்பன மதம் மாதிரியாகி வருகின்ற தென்றும், அதிலும் ஜாதி உயர்வு பாராட்டப்படுகிறது என்றும், ஆரிய சமாஜம் என்பது பார்ப்பன மதத்தின் வேறு ஒரு ரூபமே ஒழிய வேறில்லை என்றும், பவுத்தக் கொள்கைகள் இப்போதுள்ள மற்ற எல்லா மதங்களின் கொள்கைகளை விட மேலானது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை என்றும், ஆனாலும் பார்ப்பன மதத்தை அடக்கி நமது நாட்டிற்கு உண்மையான விடுதலை தேடிக் கொடுக்க வேண்டுமானால் இது சமயம்  மகமதிய மதத்தினால் தான் முடியுமென்றும் பேசினார். பிறகு அவர் சொன்னபடியே இப் போது மதம் மாறவேண்டியதில்லை என தீர்மானிக்கப்பட்டது.

 இப்போது ஆதிதிராவிட மகாநாட்டிலும் சரியாக அதே போல் இல்லாவிட்டா லும், இந்து மதத்திலிருந்து விலகிக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட் டிருக்கின்றது. அப்படியானால் இனி அவர்கள் என்ன பெயரில் அழைக்கப் படுவது என்று சிலர் கேட்கலாம். ஒரு பெயராலும் அழைக்க வேண்டியதில்லை என்றும், அவசியமானால் இந்தியன் என்று அழைக்கலாம் என்றும் சொல்லுவோம். மேலும் சர்க்காரில் குறிக்க ஏதாவது ஒரு பெயர் வேண்டாமா என்றால், அதற்காக இப்போது இந்தியாவில் உள்ள 20 கோடி இந்துக்கள் என்பவர் களை எப்படி அரசியல் முறையில் மகம்மதியரல்லாதவர்கள் என்று அழைக்கப்படுகின்றதோ, அது போல் 61/2 கோடி தீண்டப்படாத மக்கள் என்பவர்களை இந்துக்களல்லாதவர்கள் என்று அழைக்கலாம் என்று சொல்லுவோம்.

பார்ப்பனரல்லாதவர்களும், மகமதியரல்லாதவர்களும் இருக்கும் போது இந்துக்களல்லாதவர்கள் என்று ஒரு கூட்டம் இருப்பதால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது என்றும், அதனால் எவ்வித இழிவும் ஏற்பட்டுவிடாது என்றும் சொல்லுவோம். அப்படி ஓர் இழிவு ஏற்படுவதாயிருந் தாலும் இந்துக்கள் என்ற பெயரை வைத்துக் கொண் டிருப்பதன் மூலம் ஏற்பட் டிருக்கும் இழிவை விட அதிகமான இழிவாய் விடாது என்பது நமது அபிப்பிராயம்.  இந்து மதம் என்பதாக ஒரு மதமே இல்லாத நிலையில்,  அதன் பேரில் மக்கள் அழைக்கப்படுவது மிகவும் அக்கிரமமான செய்கையாகும். அப்படியிருக்க, அதன் பேரால் மனிதனின் உரிமை களை மறுத்து கோயில், குளம், தெரு, பள்ளிக்கூடம் முதலியவற்றின் உரிமை களை மறுப்பது எல்லாவற்றையும் விட அக்கிரமும் அயோக்கியத்தனமுமாகும். சாதாரணமாக, இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்பதைப் பற்றி நாமே தனித்து சொல்லுவதாகவும், அதைப் பற்றிய படிப்பு சிறிதும் இல்லை என்றும், அதுவும் பார்ப்பனர்கள் மீது துவேஷத்தால் சொல்லுவதாகவும் சிலர் சொல்லுகின்றார்கள்.

ஆனால், இப்போது நமது நாட் டில் ஆங்கிலத்திலும், தமிழிலும் வல்லவர் என்றும், சமய ஆராய்ச்சியில் தேர்ந்தவர் என்றும், மிக்க நுண் ணிய அறிவுடையவர் என்றும் பல் லோராலும் மதிக்கப்படும் உயர்திரு வாளர் திருநெல்வேலி கா. சுப்பிர மணியபிள்ளை எம்.ஏ., எம்.எல்., அவர்கள் சுமார் 7, 8 வருடங்களுக்கு முன் செந்தமிழ்ச் செல்வி என்னும் புத்தகத்தில் எழுதி இருப்பதை இங்கு அப்படியே எழுதுகின்றோம்.

"முதல் முதல் மக்கள் உள்ளத்தே பதிய வேண்டியது யாதெனில், இந்து மதம் என்ற ஒரு சமயம் உண்மையில் கிடையாது என்பதும், இந்து மதம் என்பது இந்தியா நாட்டிலுள்ள மக்களின் சமயம் என்று கொள்ளப் படும் சிந்து நதிக் கரையில் உள்ளவர் களைக் குறிக்கும் ஹிந்து என்ற பாரசீகச் சொல்லை கிரேக்கர் இந்து என வழங்க, அவர் வழக் கத்தைப் பின்பற்றி மேலை தேசத்தார் யாவரும் இந்நாட்டிலுள்ளாரை இந் துக்கள் எனவும், இந்நாட்டை இந் தியா எனவும் வழங்கலாயினர். இந்து என்ற சொல் இப்பொருளில் ஆரியம், தமிழ் என பண்டைய இரு மொழி நூல்களிலும் கிடையாது.

இந்நாட்டிலே சமயங்களைப் பற்றிச் சிறிதும் அறியாதவர்கள் தங்கள் மதத்தை இந்து மதம் என்று கூறுவார்கள்.  அய்ரோப் பியம், அமெரிக்கம், ஆங்கிலம் என்ற சொற்கள் வாயிலாக அன்னாரது சொற்களும், நாகரிகங் களும் குறிக்கப்படுவதே யல்லாது சமயம் குறிக் கப்படாமை போல, இந்து என்ற சொல்லும் இமயம் முதல் குமரி வரையில் உள்ள மக்களின் நாகரி கத்தைக் குறிப்பதேயன்றி சமயத்தைக் குறிப்பதன்று. இக்கருத்தைச் சுவாமி விவேகானந்தரும் தமது சொற்பொழிவு பலவற்றி லும் சுட்டிக் காட்டி உள்ளார்.  ஒரு சமயத்திற்குப் பெயர் அதன் கடவுளை வைத்தாதல், தலைமை ஆசிரியரை வைத்தாதல், அருள் நூலை வைத்தாதல் எழுதுவது முறை கிறித்து மதமும், மகம்மதிய மதமும் தங்களது தலை வரின் பெயரைத் தமக்குப் பெயராகக் கொண்டுள் ளன. அவ்வாறே புத்த மதமும் ஆருகதமுமாம். ஆனால் இந்து என்ற சொல்லோ சமயக் கருத்து யாதொன்றையும் குறித்தில்லை.

இக்குறிப்பில் திரு பிள்ளை அவர்கள் சுவாமி விவேகானந்தரும் இதே அபிப்பிராயம் கொண்டதாகக் கூறியிருக்கிறார். எனவே இப்படி ஓர் அர்த்தமே இல்லாத வார்த்தையின் பேரால் மதம் என்று ஒன்றைக் கற் பித்துக் கொண்டு, சமயத்திற் கேற்றபடியெல்லாம் கொள்கை களைச் சொல்லிக் கொண்டு, 20 கோடி மக்களையும், பல வளப்பமுள்ள ஒரு பெரிய தேசத்தையும் பாழாக்கி வருவதை இனியும் எத்தனை காலத்திற்கு மக்கள் பொறுத்துக் கொண்டு இருப்பது என்பது விளங்கவில்லை.

இதைப் பற்றி மற்றொரு சமயம் டாக்டர் எஸ். சுப்பிரமணிய அய்ய ரான ஒரு பார்ப்பனர் அவர்கள், காமன்வீல் என்ற பத்திரிகையில் எழுதி இருப்பதாவது:-

இந்துக்களின் தற்கால நிலை மையைக் கவனித்துப் பார்த்தால் தாறுமாறாகச் சீர்குலைந்து அலங் கோலப்பட்டு இடிந்து பாழாகிக் கிடக்கும் மதம் இந்து மதம் என்றும், பழைய கோட்டை அங்கே சிறிது இங்கே சிறிதாக எவ்வாறு ஒழுங்கு படுத்தி முட்டுக் கொடுத்துப் பழுது பார்த்தாலும் பயன்படாது. தயவு தாட்சண்யமின்றி நெட்டித் தள்ளி ஒதுக்கிவிட்டு ஆதி அடிப்படை களின் மீது நமது தற்கால அவசியத் திற்கும்,  உபயோகத்திற்கும் ஏற்ற தாகச் சாதாரணமான புதுக்கட்டடம் ஒன்று கட்டுவதே உத்தமம் என்று தோன்றுகின்றது என்று எழுதி இருக்கின்றார்."

இன்னும் அநேக பெரியோர் களும் ஆராய்ச்சியாளர்களும் இதே அபிப்பிராயம் கொண்டிருக்கின் றார்கள். இந்நிலையில் குழந்தை மணத்தைத் தடுக்கவும், மக்கள் தெருவில் நடக்கவும், சாமிகளின் பேரால் கோயில்களில் நடக்கும் விபச்சாரத்தனத் தைத் தடுக்கவும், சிறு குழந்தைகளைப் படுக்கை அறையில் தள்ளுவதை ஒழிக்கவும் செய்யப்படும் முயற்சிகளை இம் மாதிரி ஒரு பொய் மதம் தடுப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் எந்த விதத்தில் மானமும், வீரமும், யோக்கியமும் உடையவர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியும்.

எனவே, ஆதிதிராவிட மக்கள் தங்களை எப்படி இந்துக்கள் என் கின்ற பதிப்பில் பதியக்கூடாது என்கின்றார்களோ, அது போலவே நாமும் சொல்ல வேண்டியவர்களாய் இருக்கின்றோம். 

ஏனெனில் இந்துக்கள் என்கின்ற பதிப்பில் நம்மைப் பதிந்து கொள்ள நாம் சம்மதிப்பதனால், நமக்கு ஆதி திராவிடர்களை விடக் கீழான நிலையான சூத்திரன் என்கின்ற பதவிதான் கிடைக்கின்றது. அதை நீக்கிக் கொள்ள இதுவரை எந்தச் சீர்திருத்தக்காரரோ, சட்டசபைப் பிரதிநிதியோ, வேறு எந்தச் சமூகத் தவரோ  முயற்சித்ததாகத் தெரிய வில்லை. ஆஸ்திகம் போச்சு கடவுள் போச்சு மதம் போச்சு  சமயம் போச்சு புராணம் போச்சு கலை போச்சு என்று கூப்பாடு போட்டுக் கூலி பெற நம் நாட்டில் ஆட்கள் மலிந்து கிடக்கின்ற தேயல்லாமல், மானம் போச்சு, மனித உரிமை போச்சு, மிருகத்திலும் கீழாச்சு என்று சொல்லி மனிதத் தன்மை பெற யாரையும் காணோம். எனவே நாமும் ஆதி திராவிட சகோதரர்கள் போலவே நம்மையும் இந்து என்னும் தளையில் இருந்து பிரித்துவிடு என்று கேட்கும் நாள் சீக்கிரத்தில் வரும் என்றே கருது கிறோம்.

- தோழர் பெரியார் அவர்கள் கட்டுரை - "குடிஅரசு", 21.7.1929

இராசிபுரம் தாலுகா ஆதி திராவிடர் மகாநாடு - தோழர் பெரியார் தலைமை உரை

 இராசிபுரம் தாலுகா ஆதி திராவிடர் மகாநாடு

தோழர்களே! இந்நாட்டில் இன்று எங்கு பார்த்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் மகாநாடு என்பதாகப் பல மகாநாடுகள் கூட்டித் தாழ்த்தப்பட்ட மக்கள் குறைகளைப் பற்றிப் பேசப்படுகின்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் சுதந்திரம் பெற வேண்டும் என்றும், சுயமரியாதை பெற வேண்டும் என்றும், இந்த 10, 18 வருஷகாலமாகத்தான் வெளிப்படையாகவும், தைரியமாகவும் கிளர்ச்சி செய்யச் சந்தர்ப்பமும் சௌகரிய மும் பெற்றிருக்கிறார்கள் என்பதோடு, உங்களுக்கே இந்த உணர்ச்சியும் இப் போதுதான் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நாட்டில், புராண காலங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் மேம்பாட்டிற் காகப் பொதுவாக உழைத்ததாகவோ, உழைக்க ஆசைப்பட்டதாகவோ காண முடியவில்லை என்றாலும், ஏதோ இரண் டொருவர் நந்தன், பாணன், சொக்கன் என்பதாகச் சிலர் தங்கள் தங்கள் சொந்தத் தில் முக்தி அடையவோ, கடவுளைத் தரிசிக்கவோ என்று பாடுபட்டதாகப் புராணங்களில் காணலாம்.

அவை வெற்றி பெற்றதாகக் கதைகள் இருந்தபோதிலும் அவை நம்ப முடியாததும், சாதிக்க முடியாத பெரிய நிபந்தனைகள் மீது அதாவது நெருப்பில் குளித்து விட்டு வந்தும், கடவுளுடைய சம்மதமும் உத்தரவும் பெற்ற பிறகும் ஏதோ முக்தியோ, மோட்சமோ அடைந்ததாகத்தான் காணப்படுகின்றனவே ஒழிய, இந்த உலகத்தில் மற்ற மனிதர்களைப் போல் மானத்துடன் வாழ முயற்சித்த தாகவோ, வாழ முடிந்த தாகவோ பொய்க் கதைகள் கூடக் கிடையாது.

அது மாத்திர மல்லாமல் இந்து (ஆரிய) அரசர்கள் காலத் திலும், நீங்கள் இன்றுள்ள நிலையைவிட மிக்க கேவலமான நிலையில் நடத்தப்பட்ட தாகத்தான் காண முடிகின்றது. அன்றியும், தமிழ் அரசர்கள் மூவேந்தர்கள் முதலியவர் களுடைய ஆட்சிக் காலத்திலும் நீங்கள் மிக கேவலமாகவே உயிர்வாழ்ந்ததாகத்தான் காணக்கிடக்கிறது.

அவற்றிற்கு உதாரணம் திருவாங்கூர், கொச்சி முதலிய இந்து அரசர்கள் வாழும் நாட்டில் நீங்கள் எப்படி நடத்தப்பட்டீர்கள்? நடத்தப்படுகிறீர்கள்? என்பதைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

இந்து அரசர்கள் அல்லாத முகமதியர் அரசர்கள், கிறிஸ்தவ அரசர்கள் ஆகிய வர்கள் ஆட்சிக் காலமே உங்களை ஒரு அளவுக்காவது மனிதர்களாக நடத்தப் பட்டதாகச் சரித்திரமும் பிரத்தியட்ச அனு பவமும் காணப்படுகின்றது. உண்மையா கவே இந்நாட்டில் முகமதிய அரசர்கள் ஆட்சி 600, 700 வருஷகாலம் நடந்திருக்க வில்லையானால், தாழ்த்தப்பட்ட தீண்டப் படாத மக்களின் எண்ணிக்கை இன்று தோட்டத்தில் முக்கால் பாகம் கிணறு என்பதுபோல் சுமார் 15, 20 கோடி மக்களுக் குக் குறையாமல் இருந்திருக்கும்.

தீண்டப் படாதவர்கள் எண்ணிக்கை இன்று இந்திய ஜனத்தொகையில் 5-ல் ஒரு பாகத்திற்கு உள்ளாக இருப்பதற்குக் காரணம் முகமதிய ஆட்சியே ஆகும். அது பெருகாமல் அந்த அளவுக்கு உள்ளாகவே இருந்து வருவ தற்கும், கூடிய சீக்கிரத்தில் அடியோடு ஒழிந்து போவதற்கும் நம்பிக்கைக்கு இடம் ஏற்படக் காரணமாய் இருப்பது பிரிட்டிஷ் அரசாட்சியின் பயனே ஆகும்.

இந்த இரண்டு ஆட்சியும் எந்தக் கார ணத்தாலோ இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்க வில்லையானால் இந்தியாவில் ராஜ குடும்பமும், பார்ப்பனர் குடும்பமும் தவிர, மற்ற மக்கள் எல்லோரும் தீண்டத்தகாத வர்களாய், தாழ்த்தப்பட்ட மக்களாய்த்தான் இருந்திருக்க வேண்டும். இன்றுகூடப் பார்ப்பனரொழிந்த மற்ற மக்கள் கீழ் ஜாதிக்காரராய் மத சம்பிரதாயப் படியும், பழக்க வழக்கப்படியும் ஏன் அரசாங்க சட்ட முறைப்படியும் குறிப்பிடப் பட்டிருப்பதை யாரே மறுக்க முடியும்?

பழைய கால அரசர்கள் யோக்கி யதைகள் பார்க்க வேண்டுமானால், அவர்கள் மக்களை எப்படி நடத்தினார்கள் என்பதை உணர வேண்டுமானால், ராமன், அரிச்சந்திரன், சந்தனராஜன், பாண்டியன் முதலிய இந்து அரசர்கள் என்பவர்கள் நாடகத்தைப் பார்த்தாலே அறியலாம். முதன் முதலாக அரசன் கொலு மண்டபத் துக்கு வந்தவுடன் என்ன கேட்கின்றான்? மந்திரி! நமது நாட்டில் பிராமணர்கள் ஜபதபம், ஓமம், எக்கியம், யாகம் முதலிய வைகளைச் செய்து சுகமாக வாழ்கின் றார்களா?

அவர்களுக்கு மான்யங்கள் முதலிய வைகள் தாராளமாக விடப்பட்டிருக்கின் றனவா? சூத்திரர்கள், பிராமணர் முதலிய வர்களுக்கு அடங்கி ஒடுங்கி ஒழுங்காகத் தொண்டு செய்து வருகிறார்களா? என்று தானே நகர விசாரணை செய்கிறார்களே ஒழிய வேறு என்ன? ஆனால் இன்றுள்ள பிரிட்டிஷ் ஆட்சியின் நகர விசாரணை எப்படி இருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள். சமீப காலத்தில் பாராளுமன்றம் என்னும் பார்லிமெண்டைத் துவக்கியபோது, அரசர் பெருமான் என்ன சொன்னார்?

என்னுடைய பிரஜைகள் எல்லோரை யும் அவர்கள் எந்த ஜாதியினராய் இருந் தாலும், எவ்வித வித்தியாசமும் இல்லாமல் எல்லாத் துறையிலும் சரி சமமாய் நடத் துவேன் என்று சொல்லித் திறந்து வைத்தார். அந்தப்படி அவர் நடத்துவார் என்பதற்கு என்ன நம்பிக்கை என்று ராமராஜ்ய ஸ்தா பிதர்களாகிய காந்தியாரும், காந்தி பக்தர் களும்  கேட்கலாம்.

மற்ற காரியங்களில் பிரிட்டிஷ் அரசாங்கம் எப்படி நடந்து கொண்டு வந்தது என்றாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களாகிய உங்களைப் பொறுத்தமட்டில் யோக்கியமாகவும் கூடிய அளவுக்கு நீதியாகவும் ஆட்சி புரிந்திருக்கிறது என்று தைரியமாய்ச் சொல்லுவேன்.

இன்று தாலுகா போர்டு, ஜில்லா போர்டு, பஞ்சாயத்துச் சபை, சட்டசபை, இந்திய சட்டசபை ஆகியவைகளில் உங்களுக்கு ஸ்தானம் அளித்து பெரிய சாஸ்திரிகள், கனபாடிகள், சங்கராச்சாரிய சுவாமிகள், ராஜாக்கள், ஜமீன்தார்கள் என்பவர் களுக்குச் சமமாய் நடத்துகிறார்கள். ராம ராஜ் ஜியத்தில் இந்தச் சபைகளுக்கு கக்கூஸ் வாரவோ, பங்கா போடவோ கூட உங்களை அனுமதிக்க மாட்டார்கள்.

உதாரணமாக இன்னும் சில அக்கிர காரங்களில்  எச்சிலை எடுக் கவோ, குப்பை கூட்டவோ, கக்கூஸ் வாரவோ கூட உங்களை அனுமதிப்பதில்லை. கும்பகோணம் முனிசிபாலிட்டி யில் அக்ராகாரத்துக்கு கக்கூஸ் எடுக்கச் சூத்திரர்கள் என்பவர்களை நியமிக்க வேண்டும் என்று பாடுபட்டது உங்களுக்குத் தெரியாதா? இப்படி பிரிட்டிஷ் அரசாங்கம் உங்களைப் பொருத்தவரை எவ்வளவோ நன்மை செய்து வந்திருப்பதோடு உங்களுக்கு ஒரு மந்திரி ஸ்தானமும் கிடைக்கும் படியான அளவுக்குச் சட்டசபைகளில் பிரதிநிதித்து வம் கிடைக்கும்படி சீர்திருத்தம் வழங்கி யிருக்கிறது.

ஆகவே நான் ஏதோ ராஜ விசுவாசம் உபன்யாசம் செய்வதாய் தேசாபிமான வீரர்களுக்குத் தோன்றலாம். பிரிட்டிஷ் அரசாங்கம் மாத்திரமே அல்லாமல், உலகில் உள்ள அரசாங்கங்கள் எல்லாமே ஒழிந்து போக வேண்டும் என்கின்ற ஆசையுள்ளவன் நான். ராஜாக்கள் என்பவர்களே இன்றைய உலகுக்கு அவசியமில்லாதவர்கள் என்றும் பொது ஜனங்களுடைய சுயமரியாதைக்குக் கேடானவர்கள் என்றும் கருதியும், சொல்லியும் எழுதியும் வருகின்றவன் நான்.

ராஜாக்கள் மாத்திரமல்லாமல் பணக்காரர்கள், ஜமீன்தார்கள், வியாபாரிகள், முதலாளிகள் என்கின்றதான கூட்டங்கள் கூடப் பொது ஜனங்களை அரித்துத் தின்னும் புழுக்கள் ஆனதால் அவை அழிக்கப்பட வேண்டியவை என்றும் கூடச் சொல்லுகிற வன் நான். உங்களைப் பொறுத்த வரை யிலும் நீங்கள் காந்தி ராஜ்ஜியத்துக்கோ, ராமராஜ்ஜியத் துக்கோ கராச்சி சமதர்ம ராஜ்ஜியத்துக்கோ போவதைவிட பிரிட்டிஷ் அரசாங்கம் ஆயிரம் மடங்கு மேலானது என்று பறை அடிப்பேன்.

ராமராஜ்ஜியத்தில் ஆகட்டும், காந்தி ராஜ்ஜியத்திலாகட்டும், கராச்சி திட்ட சமதர்ம ராஜ்ஜியத்திலாகட்டும், வருணா சிரம தர்மமோ, ஜாதிப் பாகுபாடோ, இவைகள் சம்பந்தப்பட்ட பழைய பழக்க வழக்கங்கள் அது சம்பந்தமான கலைகளோ சிறிதுகூட மாற்ற முடியாது என்றும், அவை பத்திரமாகக் காப்பாற்றப்படும் என்றும் மேல் ஜாதியாருக்கு வாக்குறுதிகள் கொடுக்கப்பட் டிருக்கிறது.

இந்த வாக்குறுதிகள் உங்களுக்கு எவ்வளவு ஆபத்து என்பது இப் போது ஒரு சமயம் உங்களுக்குத் தெரியா மல் இருக்கலாம். இந்த வாக்குறுதிகள் எவ்வித முற்போக்குக்கும் முட்டுக் கட்டையாக வந்து தடுத்துக் கொள்ளும்.

ஏதோ ஒரு காலத்தில் விக்டோரியா மகாராணியார், உங்கள் மத விஷயங்களில் பிரவேசிப்பதில்லை என்று வாக்குறுதி கொடுத்ததாகக் கூறிக் கொண்டு, இன்று, அவ்வாக்குறுதியை, ஏதாவது ஒரு பொதுக் கிணற்றில் எல்லோரும் தண்ணீர் இறைத்துக் கொள்ளலாம் என்றாலும், ஏதாவது ஒரு பொது ரோட்டில் எல்லோரும் நடக்கலாம் என்றாலும், ஒரு பொதுச் சத்திரத்தில் எல் லோரும் இருக்கலாம் என்றாலும், விபசாரத்துக்குக் கடவுள் பேரால் பெண்களுக்கு (பொட்டுக்கட்டு) லைசென்சு கொடுக்கக் கூடாது என்றாலும், ஏதாவது ஒரு கடவுள் என்பதைக் கோயிலில் சென்று தரிசிக்கலாம் என்றாலும், பால் குடிக்கும் குழந்தைகளைச் சீலை கட்டத் தெரியாத குழந்தைகளைப் பெண் ஜாதியாக ஆக்கிப் படுக்கை வீட்டிற் குள் விடக் கூடாது என்றாலும் அவ்வாக் குறுதிகள் வந்து முட்டுக்கட்டையாக இருக்கும்படி பயன்படுத்தப்படுகின்றன.

இப்படி இருக்கும்போது, பழைய பழக்க வழக்கங்கள், சாஸ்திரங்கள், கலைகள், தொழில் முறைகள் ஆகியவை காப்பாற்றப்படும் என்று வாக்குறுதி கொடுத்து ஒரு சமதர்ம ராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பதென்றால், அந்த சமதர்த ராஜ்ஜியத்துக்குக் காந்தியாரால் ராமராஜ்ஜியம் என்றும் வருணாசிரம ராஜ்ஜியம் என்றும் பாஷ்யம் சொல்லப்பட்டு இருக்கிறது என்றால் சர்வ வியாதிக்கும் ஒரே மாத்திரை என்பது போல் சகலவித சீர்திருத்தத்துக்கும் இந்த ஒரு வாக்குறுதியே எமனாய் வந்து கொன்றுவிடாதா என்று யோசித்துப் பாருங்கள்.

இந்த வாக்குறுதியின் கீழ் என்ன என்ன சீர்திருத்தமோ, ஏதாவது ஒரு மாறுதலோ செய்ய முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். இன்று உங்கள் மக்களுக்கு இருக்கும் தரித்திரமும், கொடு மையும் சேர்த்து இந்த ராமராஜ்ஜியத்தை ஆதரிக்கச் செய்கின்றது. ஏன் உங்களைவிட பெரிய ஜாதி என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனரல்லாத மேல் ஜாதி இந்துக்கள் என்பவர்களுடைய வயிற்றுப் பசியால், தங்களுடைய சூத்திரப் பட்டம் இந்த ராமராஜ் ஜியத்தில் வருணாசிரம ராஜ்ஜியத்தில், கராச்சி சமதர்ம ராஜ்ஜியத்தில் ஒழியாது என்று தெரிந்திருந்தும், எத்தனை பேர் இன்று அதை ஆதரிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, உங்களில் சிலர் ஆதரிப்பதைப் பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை.

இவ்வளவு தூரம் நான் இவற்றை விவரித்துச் சொல்லக் காரணம், இன்று உள்ள உங்கள்  குறைகள், இழிவுகள் நீங்கி மனிதத் தன்மை பெறுவதற்கு நீங்கள் பிரிட்டிஷ் ஆட்சியைத் தான் நம்ப வேண்டு மென்றும், அது உள்ள காலத்திலேயே உங்கள் குறைகளை, இழிவுகளை நிவர்த் தித்துக் கொள்ள முயல வேண்டும் என்றும், அரசாங்கத்துக்கு விரோதமாகப் பேசவோ, மக்களுக்குள் விரோத உணர்ச்சி ஏற்படச் செய்கின்றதான, அரசாங்கத்தாரோடு போர் புரிவதாகவோ சொல்லிக் கொள்கின்ற கட்சியிலோ, கூட்டத்திலோ நீங்கள் கலந்து கொள்ளக் கூடாது என்றும் சொல்லுவதற்கு ஆகவே இவற்றைச் சொல்லுகிறேன்.

நீங்கள் எல்லாம் அப்படிச் செய்ய வில்லையா என்றும், மற்றும் எத்தனையோ பேர் அந்தப்படி அரசாங்கத்துக்கு விரோதமாய் நடந்து கொண்டு வாழவில்லையா என்றும் கேட்பீர்கள். அவர்கள் நிலை வேறு, உங்கள் நிலை வேறு. அவர்களில் சிலர் இன்று மதத்தில் கீழாக மதிக்கப்பட்டாலும், பழக்க வழக்கத்தில் பலர் சமமாக மதிக்கப் படுகிறார்கள். கல்வியில்  சிறிது முன்ன ணிக்கு வந்து விட்டார்கள். உத்தியோகம்,  தொழில்கள் ஆகியவைகளில் எதிலும் போட்டி போடத் தகுதி அடைந்து விட்டார் கள். பார்ப்பனர்கள் சங்கதியோ கேட்க வேண்டியதில்லை.

எல்லா விதத்திலும் மதத்தாலும் பழக்க வழக்கத்தாலும் பிரத்தி யட்சத்திலும் மேல் நிலையில் இருக் கிறார்கள். பாடுபடாமல் வாழ்க்கை நடத்தும் யோக்கியதை அடைந்துவிட்டார்கள். 100க்கு 100 பேர் படித்து இருக்கிறார்கள். 100க்கு 90க்கு மேல் உத்தியோகங்கள் அவர்கள் கைவசம் இருக்கின்றன.

இனி அவர்களுக்கு வேண்டியதெல் லாம் அவர்களோ, அவர்களது அடிமை களோ நாட்டை ஆள வேண்டியது என் பதைத் தவிர வேறு இல்லை. ஆதலால் அவர்கள் அரசாங்கத்தாரோடு போராடவும், சட்டம் மீறுவதும், அரசாங்கத்துக்குச் சதா தொல்லை விளைவிக்கவும் சௌகர்ய முடையவர் களாகயிருக்கிறார்கள்.

இது மாத்திரமல்லாமல் அவர்கள் மதத்துக்கும், பழக்க வழக்கத்துக்கும் விரோ தமாக அரசாங்கம் சில சீர்திருத்தங்களை செய்ய முற்படுவதாலும், அதனால் பார்ப்பன ஆதிக்கத்துக்குப் பங்கம் வரும்போல் இருப்பதாலும், அச் சீர்திருத்தங்களைச் செய்ய வொட்டாமலும் செய்து விட்டால் அது அமலில் நடத்தப்படாமலும் இருப்பதற்கு ஆக வேண்டியாவது, அரசாங்கத்தை வழிமறிப்பதற்காக அரசாங்கத்துக்குத் தொல்லை விளைவிக்க வேண்டியவர் களாக இருக்கிறார்கள்.

ஆதலால், அவர்களுடன் நீங்கள் சேரக் கூடாது என்று சொல்ல வேண்டியவனாய் இருக்கிறேன்.


-----------------------------------ராசிபுரம் தாலுகா தாழ்த்தப்பட்ட மக்கள் மாநாட்டில்- தந்தை பெரியார்  29.09.1935 இல்  ஆற்றிய தலைமை உரை-" குடிஅரசு" - சொற்பொழிவு - 06.10.1935

Saturday, 1 January 2022

சுயமரியாதைத் திருமணமும் வைதீகத் திருமணமும் புரோகிதத்தின் லக்ஷணம் என்ன? - தோழர் பெரியார்

 சுயமரியாதைத் திருமணமும் வைதீகத் திருமணமும் புரோகிதத்தின் லக்ஷணம் என்ன?

தோழர்களே!

இன்று இங்கு நடந்த திருமண ஒப்பந்தத்தை கேட்டதோடு அதன் வினைமுறைகளையும் பார்த்தீர்கள். இதைத்தான் இன்று பலர் சுயமரியாதைத் திருமணம் என்று சொல்லுகிறார்கள். மற்றும் சிலர் சீர்திருத்த திருமணம் என்றும் சொல்லுகிறார்கள். இரண்டும் ஒன்றுதான். எப்படிச் சொன்னாலும் சரி, வயது வந்த ஒரு பெண்ணும், ஒரு ஆணும் வாழ்க்கையில் பிரவேசிப்பதற்கு ஆக தங்களுக்குள் செய்து கொள்ளும் ஒப்பந்த வினையைத்தான் இன்று நாம் திருமணம் என்கிறோம்.



அந்த வினைகள் பல விதமாக செய்யப்பட்டு வருகின்றன. அத்தனை விதங்களுக்கும் ஆதாரமோ அவசியமோ என்ன என்பதற்கு யாராலும் காரணம் சொல்ல முடியாவிட்டாலும் ஏதோ பழக்க வழக்கம் என்று சொல்லிக் கொண்டு தங்கள் கௌரவங்களையும் நினைத்துக்கொண்டு என்ன என்னமோ செய்து வருகிறார்கள்.

உலகில் மக்கள் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு துறையிலும் மாற்றம் ஏற்பட்டு வருவதுபோல் இத்திருமணம் என்கின்ற முறையிலும் காலதேச வர்த்தமானத்தை உத்தேசித்து பல மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. மற்றும் பல துறைகளிலும் அனாதியான பழக்க வழக்கம் என்பவைகளிலும் கூட அறிவு விசாலத்தை முன்னிட்டும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

மற்றும் பல துறைகளில் வெறும் மாறுதலை விரும்பியே பல பல மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இவை உலக இயற்கையே யாகும். ஏதோ ஒரு விதத்தில் மாறுதல்கள் ஏற்படுவது தள்ள முடியாத காரியமாகும். இந்த உண்மையை நமது வாழ்க்கையையும் அனுபவத்தையையும் ஞாபகப் படுத்திப் பார்த்தால் அதன் விபரம் பூராவும் நமக்கு நன்றாய்விளங்கும்.

நாம் மாறுதல்களுக்கு கட்டுப்பட்டவர்களும் அடிமைப்பட்டவர்களும் ஆசைப்பட்டவர்களும் ஆவோம்.

ஆதலால் அந்த மாறுதலேதான் அதுவும் அறிவு ஆராய்ச்சி ஆகிய காரணங்களைக் கொண்டுதான் இந்தத் திருமணமுறையில் காணப்படுகிற மாறுதல்கள் ஏற்பட்டவைகளாகும்.

திருமணங்களை இப்போது பெரும்பாலும் ஒரு நாளில் முடித்து விடுவது என்பது பெரும்பாக மக்களுக்குள் அதுவும் அறிவாளிகளான மக்கள் என்பவர்களுக்குள்ளாகவே ஒப்புக்கொண்ட விஷயமாகி விட்டது. அதோடு சடங்கு முதலியவைகளும் கூட பெரிதும் சவுகரியத்திற்கு ஏற்றபடி நழுவவிட்டும் மாற்றியும் அமைத்துக்கொண்டாகி விட்டது. நகை உடை ஆகியவைகளும் முன்பு சமயத்துடனும் சடங்குடனும் பிணைத்திருந்ததெல்லாம் இப்போது விடுவிக்கப்பட்டு சௌகரியம்போல் அமைத்துக் கொள்ளப்பட்டு விட்டது. பெரிதும் பாமரத்தன்மை உள்ள வகுப்புகளில்தான் ஏதோ பல பிடிவாதங்களை காண்கின்றோமே அல்லாமல் மற்றபடி அனேக விஷயங்கள் திருத்தி அமைத்துக் கொள்ளப்பட்டு வருகின்றதை காண்கின்றோம். எப்படியோ மக்கள் மாறுதல்களை விரும்பவும் சகிக்கவும் வந்து விட்டார்கள். ஆனால் அவை வெறும் மாறுதல்களுக்கு ஆகவே இல்லாமல் அறிவுக்கும் அனுபவ சவுகரியத்திற்கும் ஒத்ததாக இருக்க வேண்டும் என்பது தான் நமது ஆசை. அது தான் இன்று நமது தொண்டும் ஆகும். இந்தத் திருமணத்தில் நாம் காணும் மாறுதல்கள் அதை அனுசரித்தன என்று தான் உங்களிடம் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.

இத்திருமணத்தில் நீங்கள் என்ன மாறுதல் காண்கிறீர்கள்?

புரோகிதன் இல்லை; அது ஒரு முக்கிய மாறுதல். ஆனால் புரோகிதன் எதற்கு? புரோகிதன் என்றால் என்ன? என்பது முதலில் யோசிக்கத்தக்கதாகும். இன்று புரோகிதன் என்பவனுக்கு உள்ள லட்சணம் எல்லாம் முதலில் அவன் பெரிய ஜாதிக்காரனாக இருக்கவேண்டும். அவனுடைய நடத்தை தன்மை முதலியவைகளைப்பற்றி நமக்கு கவலையில்லை. பெரிதும் நமக்கு தெரியாத பாஷையில் அவசியம் புரியாத சடங்குகளைச் செய்யச் சொல்லி பணம் வசூலித்துக்கொண்டு போகிறவனையேதான் இன்று புரோகிதன் என்கின்றோம். மற்றும் அவன் காலில் நாமும் மணமக்களும் விழுந்து கும்பிடுகிறோம்; அவனை சாமி என்று அழைக்கிறோம். இவற்றைத் தவிர புரோகிதனுக்கு வேறு லக்ஷணம் சொல்லுங்கள் பார்க்கலாம். அல்லது வேறு பயனையாவது சொல்லுங்கள் பார்க்கலாம். இந்தப் புரோகிதன் நமக்கு எதற்கு என்று உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? அவன் நமது தமிழ் மக்கள் திருமணங்களில் எந்தக் காலத்தில் வந்து கலந்து கொண்டான் என்று உங்களுக்குள் யாருக்காவது தெரியுமா? அவனால் வகுக்கப்பட்ட சடங்குகள் மந்திரங்கள் முதலியவை எதற்கு ஆக எப்போது என்ன அவசியத்தின் மீது ஏற்பட்டதென்று உங்களுக்கு யாருக்காவது தெரியுமா? உங்கள் பழய இலக்கியங்கள் பழய ஆதாரங்கள் என்று சொல்லப்படுபவைகளில் இந்த புரோகிதனுக்கும் சொற்களுக்கும் அவன் சடங்குகளுக்கும் ஏதாவது ஆதாரங்கள் இருக்கின்றனவா? ஆகவே புரோகிதம் என்பது ஏதோ உங்கள் பழக்கம் அல்லது முன்னோர்கள் நடந்த வழி என்பது அல்லாமல் வேறு எந்த அவசியத்தைக் கொண்டது என்று யோசித்துப் பாருங்கள். ஆதலால் இங்கு புரோகிதன் இல்லாத ஒரு மாறுதலானது ஒன்றும் பிரமாத மாறுதல் அல்ல என்பதோடு அவனில்லாததால் எவ்வித குறையும் ஏற்பட்டு விடவில்லை என்பதையும் உணருகிறீர்கள்.

மற்றொரு மாறுதல் மணமக்களின் ஒப்பந்தம் என்பதில் நிகழ்ந்ததாகும். அதாவது பழய முறைப்படி செய்யப்படும் மண ஒப்பந்தத்தில் எஜமான் அடிமை ஒப்பந்த வாசகம் இருக்கும். அதாவது ஆணுக்கு பெண் அடிமை, பெண்ணுக்கு ஆண் எஜமான் என்பதும், பெண்ணை ஆண் எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்பதும், அதற்கெல்லாம் பெண் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்பதுமான அடிமை முச்சலிக்காவே ஒப்பந்தத்தில் மிளிரும்.

ஆனால் இந்த திருமண ஒப்பந்தத்தில் இருவரும் சமம் என்றும் வாழ்க்கை இன்ப துன்பங்களிலும் போக போக்கியங்களிலும் இருவருக்கும் சம உரிமை உண்டு என்றும் குறிப்பிட்ட சமத்துவபாவம் மிளிரும். இந்த மாறுதல் அவசியமா இல்லையா என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள். உங்கள் மனைவிமார்களை நினைத்துக்கொண்டே யோசிக்காதீர்கள். உங்களுடைய செல்வப் பெண் குழந்தைகளையும் அன்பு சகோதரிகளையும் மனதில் கொண்டு யோசித்துப்பாருங்கள். உங்கள் தாய்மார் சுதந்திரவாதிகளா யிருந்தால் நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள் என்பதையும் யோசித்துப் பாருங்கள். இன்று உலகில் கீழ் ஜாதியார் என்பவர்களுக்கு சம சுதந்தரம் வேண்டும் என்று போராடுகிறோம். அரசாங்கத்தினிடமிருந்து விடுதலை பெற்று சுதந்திரமாய் வாழவேண்டுமென்று போராடுகிறோம். அதே போராட்டத்தை நமது தாய்மார்கள் விஷயத்திலும் நமது சகோதரிகள் விஷயத்திலும் நமது பெண் குழந்தைகள் விஷயத்திலும் கவனிக்க வேண்டாமா? நமது வாழ்க்கைத் துணைகளிடத்திலும் கவனிக்கப்பட வேண்டாமா? அந்தப்படி கவனிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களானால் அதற்கு இந்த சந்தர்ப்பத்தைவிட வேறு சந்தர்ப்பம் எது என்று கேட்கின்றேன். இத்திருமணத்தை சீர்திருத்த மணம் என்றும் வைதீக மணம் என்றும் சொல்லாமல் இது ஒரு சுயமரியாதை மணம் என்றும் நாஸ்திக மணம் என்றும் சொல்லப்படுவதற்கு அந்த இரண்டு காரியங்களில் ஏற்பட்ட மாறுதல்கள் தான். அதாவது புரோகிதம் இல்லாததாலேயே நாஸ்திகம் என்றும் பெண்ணுக்கு சம சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதாலேயே சுயமரியாதை திருமணம் என்றும் சொல்லப்படுகிறது. அந்தப்படி சொல்லப்படுவதற்கு ஆக நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. திருமணங்களில் ஆஸ்திக நாஸ்திகத்துக்கு இடமே இல்லை. நாஸ்திகம் அவரவர்கள் உணர்ச்சி ஆராய்ச்சிதிறன் ஆகியவைகளைக் கொண்டதே தவிர அது ஒரு குணமல்ல ஒரு கக்ஷி அல்ல; ஒரு மத மல்ல. ஆகையால் இத் திருமணமுறை மாறுதல்களில் நாஸ்திகத்திற்கு இடமில்லை. கடவுள் நம்பிக்கைகாரர்கள் இந்த இடத்தில் கடவுள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? கடவுள் நம்பிக்கைக்காரர்கள் இந்த திருமணம் கடவுள் சித்தமில்லாமல் நடைபெற்றது என்று சொல்லிவிட முடியுமா? என் போன்றவர்கள் அப்படி சொல்லுவதானாலும் எந்த கடவுள் நம்பிக்கைக்காரராவது அதை நம்ப முடியுமா? ஆதலால் இதில் நாஸ்திகத்தை புகுத்துவது சரியல்ல. புரோகிதன் இல்லாததே நாஸ்திகம் என்றால் அவன் இல்லாமல் நாம் செய்யும் மற்ற அனேக காரியங்கள் நாஸ்திகம் என்று தான் அருத்தம். ஆதலால் அதையும் நாம் லக்ஷியம் செய்ய வேண்டியதில்லை. மற்றொரு விஷயமான ஆண் பெண் சமத்துவம் என்கின்ற சுயமரியாதை சிலருக்கு பிடிக்கவில்லையானால் நாம் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆண் பெண் சமத்துவமாய் பாவிக்கப்பட்டு சமத்துவமாய் நடத்தப்படுவதாய் இருந்தால் தான் இம்மாதிரி வாழ்க்கை ஒப்பந்தங்கள் அதாவது திருமண காரியங்கள் இருக்கவேண்டுமே ஒழிய அப்படி இல்லாவிட்டால் பெண்கள் “திருமணம்” இல்லாமல் தனித்து வாழ்வதே மேல் என்று சொல்லுவேன். எதற்காக ஆணுக்கு பெண் அடிமையாக இருக்க வேண்டும்? இஷ்டப்படா விட்டால் என்ன செய்யமுடியும்? அதற்கு என்ன நிர்ப்பந்தம் செய்ய யாருக்கு பாத்திய முண்டு? ஆகையால் வேறு எந்த காரியங்களில் மாறுதல் இல்லாவிட்டாலும் இந்த வாழ்க்கை சுதந்திரத்தில் சமசுதந்திரம் என்பது ஏற்பட்டுத்தான் ஆகவேண்டும். சுயமரியாதை இயக்கத்தின் முதல் லட்சியமே அதுவாகும். ஆதலால் அது விஷயத்தில் உள்ள ஏற்படப்போகும் மாறுதலை மக்கள் வரவேற்றுத்தான் ஆக வேண்டும்.

மற்றபடி இத்திருமணத்தில் உள்ள மாறுதல் செலவு சுருக்கம் என்பது. இதையெல்லோரும் ஒப்புக்கொள்ளுவீர்கள் என்றே நினைக்கிறேன். இந்தியாவின் பொருளாதார நிலையைப்பற்றி கண்ணீர் வடிக்காத அரசியல்வாதிகள் கிடையாது. அதை நம்பி கோவிந்தா போடாத பாமர மக்களும் கிடையாது. அது உண்மையாய் இருக்குமானால் இந்த மாதிரி ஒரு 5 நிமிஷ காரியத்துக்கு ஆக 4 வரி ஒப்பந்த வார்த்தைக்கு ஆக ஆயிரக்கணக்காகவும் பதினாயிரக்கணக்காகவும் செலவழிக்க அனுமதிக்கப் படலாமா என்று கேட்கிறேன். இப்படி செலவு செய்வது கிரிமினல் குற்றமாகாதா என்று யோசித்துப் பாருங்கள். இந்தியாவில் ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு அணா வரும்படி என்கிறார்கள். அப்படியானால் தினம் நான்கு அணாவே வரும்படி உள்ள ஒரு ஜோடிக்கு இந்த வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்திற்கு எவ்வளவு ரூபாய் செலவழிப்பது. குறைந்தது 250 ரூபாய் செலவானாலும் 1000 நாளைய வரும்படி செலவழிக்கப்படுகிறதா இல்லையா என்று பாருங்கள். இந்த வழக்கம் இது வரை அனுமதிக்கப்பட்டிருப்பதிலிருந்தே இந்த நாட்டில் பொறுப்புள்ள சீர்திருத்தக்காரரோ, பொருளாதார துணைவர்களோ, நல்ல அரசியல் தலைவர்களோ, ஜீவகாருண்யமுடையவர்களோ, தேசீயவாதிகளோ இல்லை என்று அருத்தமாகவில்லையா? நான் ஒரு நிமிஷம் அரசனாய் இருந்தாலும் முதல் முதல் இம்மாதிரியான பொருள் விரையத்தை தடுக்கவே தூக்கு தண்டனை நிபந்தனையுடன் சட்டம் செய்வேன். இம்மாதிரியான பொருள் நஷ்டம் தான் இன்று இந்தியாவுக்கு பிடித்த பெரும்பிணி என்று சொல்லுவேன். சம்பாதனை மார்க்கங்கள், பொருள் உற்பத்தி மார்க்கங்கள் நாளுக்கு நாள் அருகிக்கொண்டு போகின்றன. செலவு மார்க்கங்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டு வருகின்றன. நமது மக்கள் வாழ்க்கைக்கு பொருளாதார கணக்கு வரவு செலவுத் திட்டமே கிடையாது. அப்படிப்பட்ட நாடு எந்தக் காலத்திலும் எந்த ஆட்சியினும் பொருளாதார சவுக்கியத்தை உண்டாக்கவே முடியாது. நமது திருமணங்கள் மாத்திரமல்லாமல் நமது தெய்வங்களின் திருமணங்கள் நமக்கு பெரியதொரு கழுத்தறுப்பாகும். மற்றவை நம் வாழ்க்கை சடங்கு முறைகள், ஜாதி ஆச்சார முறைகள் ஆகியவைகளில் உள்ள பொருளாதாரக் கொடுமையாகும். இவைதவிர பாடுபட ஒருவன், பயன் அடைய ஒருவன், உட்கார்ந்து சாப்பிட ஒருவன் என்கின்ற முறை நமது பொருளாதாரத்தை எவ்வளவு பாதிக்கிறது என்பதை நாம் உணருவதில்லை. ஆகையால் இம்மாதிரி திருமணங்களில் மக்களின் சராசரி வரும்படியில் ஒரு 10 நாள் அல்லது 15 நாள் வரும்படிக்கு மேல் செலவு செய்ய அனுமதிக்கவே கூடாது. மற்றும் நாள் சுருக்கமும் ஒரு மாறுதலாகும். இதை இன்று வைதீக ஜாதியான பார்ப்பனர் முதல் ஒப்புக்கொண்டு விட் டார்கள். ஆதலால் அந்த மாறுதல் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டதே யாகும்.

இன்னும் பல மாறுதல் செய்ய வேண்டியதும் உண்டு. அவை தம்பதிகள் தங்களில் தெரிந்தெடுத்துக்கொள்ள வேண்டியதும், தக்க பொருத்தம் இருக்க வேண்டியதும் தக்க வயதும் தொழிலும் ஏற்பட்ட பின் மணத்தில் இறங்க வேண்டியதும் மற்றும் பல காரியங்களும் உண்டு.

-- 06.12.1936 ஆம் நாள் திருப்பூரில் நடைபெற்ற எஸ்.ஆர். சுப்பிரமணியம் சென்னியம்மாள் திருமணத்திலும் 09.12.1936 ஆம் நாள் நடைபெற்ற துரைசாமி லட்சுமிபாய் அம்மாள் திருமணத்திலும் தலைமைவகித்து ஆற்றிய சொற்பொழிவு. --"குடி அரசு" சொற்பொழிவு 13.12.1936

வெள்ளையனுக்கு ஆதரவாளர்களா நாங்கள்? - தோழர் பெரியார்

 வெள்ளையனுக்கு ஆதரவாளர்களா நாங்கள்? - தோழர் பெரியார் 

காங்கிரசாரை நான் கேட்கிறேன்! அந்நியனாகிய வெள்ளையனுக்கு நாம் அடிமையாக இருக்க வேண்டும் என்றா அல்லது அவன் போக வேண்டாமென்றா நான் சொல்லுகின்றேன்? தேர்தலுக்குக் கூட நாங்கள் நிற்கவில்லையே! எங்களுக்கு வேண்டியதெல்லாம் நமக்கு இருக்கும் சூத்திரப் பட்டம் ஒழிய வேண்டும். நமது நாட்டை வேறு எந்த நாட்டானும், ஆரியனும் சுரண்டப்படக்கூடாது. நாடிமுத்துவோ, வடபாதி மங்கலம் மைனரோ, காமராஜரோ மற்றும் எந்தத் திராவிடரோ சூத்திரர்களாக இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கவலை.



காங்கிரசிலுள்ள திராவிடத் தோழர்களே, ஏன் எங்களுக்கு இடையூறு செய்கின்றீர்கள்? வெள்ளையன் எங்களுக்கு வேண்டாம், அவன் எதற்கும் எங்களுக்குத் தேவையில்லை. நாட்டை ஆண்டு வந்த நாங்கள் வெள்ளையன் வந்தபிறகு பியூனாக, பட்லராக, கான்ஸ்டேபிளாக இருக்கின்றோம். ஆனால் பிச்சை எடுத்தக் கூட்டத்தார், இன்று ஹைகோர்ட் ஜட்ஜாக, அட்வகேட் ஜனரலாக, திவானாக, மந்திரியாக, சங்கராச்சாரியாக, பகவான்களாக இருக்கின்றனர்.

பார்ப்பனர்கள் ஜட்ஜ் முதலிய பெரிய பதவிகளில் இருக்கின்றார்கள். அதனால் அவர்களுக்கு வெள்ளையன் இருப்பதால் நஷ்டமொன்றுமில்லை. எங்களுக்குத்தான் முதலில் வெள்ளையன் வெளியே போகவேண்டுமென்ற கவலை. ஏனெனில் வெள்ளையனுக்கும் ஆரியனுக்கும் நாங்கள் தான் அடிமைகளாக இருக்கின்றோம். காங்கிரஸ் தோழர்களே! எங்களைச் சந்தேகிக்க வேண்டாம். வெள்ளையன் வெளியேறினால், பார்ப்பானுடைய உயர்வுக்கும், நமது தாழ்மைக்கும் அறிகுறியாகிய உச்சிக்குடுமி பூணூல் ஆகியவைகளைக் காங்கிரசிலுள்ள திராவிடத் தோழர்களாகிய நீங்கள் தான் கத்திரிக்கப் போகின்றீர்களென்று ஆரியனுக்கும் தெரியும். ஏன்? அதுபாடுபடாத கூட்டம். 'கடுகளாவது நாங்கள் உங்கள் விரோதிகளல்ல.' அணுகுண்டு காலத்தில், இந்த அதிசய காலத்தில் நீங்கள் இதை உணரவில்லையென்றால் பின்பு எப்போழுது நீங்கள் உணரப் போகின்றீர்கள். எச்சில் காப்பிக் கடைகளில் திராவிடன் நுழையக் கூடாது என்று இந்தக் காலத்திலா சொல்லுவது? நாம் பாடுபடுகின்றோம். மண்வெட்டி எடுத்துப்  பூமியைத் திருத்தி உழுது பயிரிட்டுப் பாடுபடுகின்றோம். அப்படியிருக்க ஏன் நமக்கு இந்த இழிவு? யாரை நாம் வஞ்சித்தோம்? இந்த மானமற்றத் தன்மை போவதாக நாம் பாடுபட்டால், நாம் துரோகிகளா?

அகிம்சையே தங்கள் அடிப்படைக் கொள்கை என்று பெருமை பேசிய காங்கிரஸ் பதவி ஏற்புக்குப் பிறகு எங்கள் மாநாட்டுப் பந்தல்கள் நெருப்புக்கிரையாக்கப்பட்டன. கண்போனது கால் வெட்டப்பட்டது. அகிம்சா மூர்த்திகளாகிய காங்கிரஸ்காரர்களே! இந்தக் கொடுமைகளை நீங்கள் செய்யலாமா? இது நேர்மையா? சிந்தித்துப் பார்த்து நீங்களே தீர்ப்பளியுங்கள். காங்கிரஸ்காரர்களை விட நாங்கள் பின் வாங்கியவர்களா? நாங்கள் அப்படியே செய்தால் நாடு என்ன கதியாகும்? திராவிடர்களுக்குத்தானே கஷ்டம் ஏற்படும்.

கம்யூனிஸ்ட் தோழர்களே! எங்களிடத்தில் உங்களுக்கு ஏன் சந்தேகம்? கம்யூனிஸ்ட் காங்கிரஸ்காரர்களால் எங்களுக்கு எவ்வளவு தொந்தரவு, வெள்ளையன் வாழ வேண்டுமென்றா நாங்கள் சொல்லுகின்றோம்? சுயராஜ்யம் வந்துவிட்டதாகச் சொல்லிக் கொள்ளும் காங்கிரசார் சுயராஜ்ய காலத்தில் இப்படிச் செய்தால் இதை மக்கள் எப்படிச் சகிப்பார்கள்? காந்தியார்கூட சொல்லிவிட்டாரே, "வெள்ளையன் மேல் சந்தேகம் வேண்டாம், அவன் நல்லவனாகி விட்டான்" என்று! இது தானா சுயராஜ்யம்?

கம்யூனிஸ்ட் கட்சியார், மில்லிலும், எஞ்சினிலும் வேலை செய்யும் தொழிலாளர்களையே தொழிலாளர்களர்களாகக் கருதுகின்றார்கள். சரீரத்தினால் பாடுபடும், சூத்திரப்பட்டம் தாங்கிய நாலுகோடி மக்களும் தொழிலாளர்களல்லவா? சூத்திரனைக் கூலி இல்லாமல் பார்ப்பனன் வேலை வாங்கலாம் என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்லுகின்றதே, இது கடவுளின் கட்டளையாம். திராவிடச் சங்கம் என்றால் சூத்திரன் சங்கம் என்றுதானே கருத்து? இதற்குத்தானே, இப்படிச் சொல்ல வெட்கப்பட்டுத்தானே பார்ப்பனரல்லாதார் சங்கம் என்றும் சொன்னோம்? ஏன் இந்த இழிவான பெயர்கள் நமக்கு? பார்ப்பனன் வேண்டுமென்றால் தங்கள் சங்கத்தைச் சூத்திரனல்லாதான் சங்கம் என பெயர் வைத்துக் கொள்ளட்டுமே. நாம் ஏன் நம்மை பார்ப்பனரல்லாதான் என்று அழைத்துக் கொள்ள வேண்டும்? நமக்குச் சொந்தப் பெயரில்லையா? நாம் திராவிடர்கள் அல்லவா?

பிராமணன் உயர்வானவனென்று எக்ஞவல்யர், நாரதர், பராசரர் சொன்னது இன்று இந்து சட்டமாகக் காட்சியளிக்கின்றதே. சட்டத்திலே, சாஸ்திரத்திலே, நடத்தையிலே, பிறவியிலே நாம் சூத்திரராயிற்றே. "கடவுளாலே கொடுக்கப்பட்டது" என்று சொல்லப்படும் இந்தச் சூத்திரப் பட்டத்தைத் தாங்கி நிற்பவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்யும் தொழிலாளர்களாகிய திராவிடர்களல்லவா? நாம் எப்பொழுது இந்தச் சூத்திரப்பட்டத்தை ஒழிப்பது?

கம்யூனிஸ்ட் தோழர்களே! சூதுகள், தந்திரங்கள் ஒழியவேண்டும். நயவஞ்சகமாக இவ்வளவு நாள் நடந்த இந்த ஆட்சி பிரிட்டிஷ் ஆட்சியா? இது பிரிட்டிஷ் நாட்டு ஆட்சி அல்ல. இந்தப் பேதங்கள் அங்கேயில்லை. பார்ப்பனர் நூற்றுக்கு நூறு வாழ வசதி செய்து கொடுத்தது இந்த ஆட்சி. சூத்திரன் படித்தால் ராஜாவுக்குக் கேடு, பட்டத்துக்குக் கேடு என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்லுவதுபடி நடந்தது இந்த ஆட்சி பிராமணன் உடலால் உழைக்கக் கூடாது என்பதற்காகத்தான் அவனுக்கு ஜட்ஜூ (நீதிபதி) முதலிய உயர்ந்த உத்தியோகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வெள்ளையன் பார்ப்பானுக்கு உடந்தையாக இருக்கின்றான். இது வெள்ளை ஆரியனுக்கும், மஞ்சள் ஆரியனுக்கும் உள்ள ஒப்பந்தம்தான் இனி ஏற்படப்போவது கூட அந்த ஒப்பந்தம்தான். மற்றப் பேர்களெல்லாம் தந்திரம் இதை இரண்டு வருடத்துக்கு முன்பே நான் சொல்லி விட்டேன். அம்பேத்கரும், ஜின்னாவும் இப்பொழுது சொல்லுகிறார்கள். இன்றைய சமுதாய அமைப்பைக் காப்பாற்றுவதுதான் சுயராஜ்யம் இதற்கு ஒரு உதாரணம் திருவையாற்றிலே, சாப்பாட்டில் பேதம் கூடாது என்று சொன்ன காலத்திலே, மகாகனம் சாஸ்திரியார், பி.எஸ். சிவசாமி ஐயர், டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரியார் முதலியோர் "நாம் செய்து கொண்ட உடன்படிக்கை மீறுகின்றாயே" என வெள்ளையனைக் கேட்டார்கள். இதைத்தான் நாம் உடைக்க வேண்டும்.

வெள்ளையன் இந்த நாட்டை விட்டுப் போய்விடுகிறேன் என்று சொல்லுவது, மற்ற வல்லரசுகளிடம் அவன் செய்து கொண்ட ஒப்பந்தம். சண்டை நீங்கியவுடன் அவரவர்கள் நாட்டை அவரவர் நாட்டை அவர்களிடம் விட்டுவிட வேண்டும் என்று நிபந்தனை செய்து கொண்டார்கள். அந்தப்படி அமெரிக்கன், பிலிப்பைன்ஸ் நாட்டை விட்டுவிட்டான். அதைப்போலவே பிரஞ்சுக்காரனும் வியட்நாம் நாட்டை விட்டுவிட்டான். ஆனால் நமது நாட்டை நம்மிடம் விடாமல் வெள்ளையன் தந்திரம் செய்கிறான். காங்கிரஸ் ஏன் அவனிடம் பேரம் பேசுகின்றது? நாட்டை ஆள நமக்குத் தகுதி இல்லையா? நாட்டில் ஆட்சிக்கு முட்டுக்கட்டையாக, ஒற்றுமைக்கு விரோதமாக எவன் ஜாதிப்பட்டம் வைத்திருக்கின்றானோ, எவன் பெயருக்குப் பின்னால் ஜாதியைக் குறிப்பிடும் வால் வைத்திருக்கின்றானோ அவனுக்கு 6-மாத தண்டனை விதிக்கட்டுமே!

பெருவாரியான ஜாதிமத பாகுபாடுள்ள நாட்டிலே ஒரே கொள்கையுடைய ஒரு இனம் அதுவும் நூற்றுக்கு 60-க்கு மேல் மெஜாரிட்டியாகவும் இடத்தைத் தங்களுக்கென முஸ்லீம்கள் தனியே பிரித்து கொள்ளுகிற தென்றால் இதில் என்ன தவறு? இது என்ன முட்டுக்கட்டை? நாடு என்ன பிளந்துபோகும்? நாடு என்ன வெடித்துப்போகும்? இதற்கு எதிர்ப்பு இருக்கின்றது என்றால் இது வெள்ளையனும் ஆரியனும் உண்டாக்குகிற கலகம். இங்கு இருக்கின்ற பிணக்கு, ஆபாசம் வெள்ளையனுக்குத் தெரியாதா? பார்ப்பான் என்று ஒரு ஜாதியும், பறையன் என்று ஒரு ஜாதியும் இருப்பதும், ஹோட்டலுக்குள் ஒரு ஜாதிக்காரன் போகக்கூடாது என்பதையும் பார்த்து வெள்ளைக்காரன் சிரிக்கமாட்டானா?

                                      - கும்பகோணத்தில் 18.08.1946-ஆம் தேதி காங்கேயன் பார்க்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. உரை   "குடிஅரசு" தலையங்கம், 09.10.1946


Saturday, 13 January 2018

பொங்கல் கொண்டாடவேண்டும் ஏன்?- 14-1-1972

பொங்கல் கொண்டாடவேண்டும் ஏன்?



பொங்கல்  என்பது தமிழனுக்கு, பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை. இந்தப் பண்டிகையின் பொருள் என்னவென்றால், விவசாயிகள் தாங்கள் செய்த விவசாயத்தில் உற்பத்தியான பொருளை, அவ்வாண்டு முதல் தடவையாகச் சமைப்பது மூலம் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சி என்பதாகும். இது தமிழனுக்கே உரியதாகும்.

நமது மற்ற பண்டிகைகள் என்பவை எல்லாம் ஆரிய மத சம்பந்தமான கதைகளை அடிப் படையாகக் கொண்டு, பார்ப்பனரால் கற்பனை செய்தவைகளேயாகும். இது விவசாயிகளுக்கு உரிய பண்டிகை ஆனதினால் தான், முதல் நாள் தானியம் சமைக்கும் பண்டிகையும், அடுத்த நாள் விவசாயிகளுக்கு முக்கியமான இன்றியமையாததான கால்நடை ஜீவன்களைப் பாராட்டும் மாட்டுப் பொங்கல் என்கின்ற நிகழ்ச்சியையும் ஒரு பண்டிகையாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த நிகழ்ச்சி களுக்குப் பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங்கல் பண்டிகை என்று பெயர் வழங்கப் பட்டு வருகிறது.

இதைப் பார்ப்பனர்கள், தங்கள் ஜாதி நலத்துக்கு ஏற்ற வண்ணம் திருத்தி கற்பனை செய்து இதை சங்கராந்திப் பண்டிகை என்று ஆக்கி இதில் பல மூடநம்பிக்கை களைப் புகுத்திவிட்டார்கள்.

இந்தப் பொங்கல் நாளைக் கெட்ட நாளாக ஆக்க, அந்த நாளில் துஷ்ட தேவதையின் மூதேவி மக்களைப் பற்றுவதாகவும், அதற்குப் பரிகாரம் செய்வதுதான் பொங்கல் முதலிய காரியங்கள் என்றும், அன்று மூதேவி நமது வீட்டிற்குள் புகாமல் இருப்பதற்கு நமது வீட்டுக் கூரைகளில் ஆவாரம்பூ, பூளைப்பூ, வேப்பிலை ஆகிய மூன்றையும் சொருகி வைத்தால், மூதேவி வராது, உள்ளே நுழையாது என்றும் மற்றும் பல முட்டாள்தனமான கருத்துக் களைக் கற்பனை செய்து மக்களை அறிவிலி களாக ஆக்கிவிட்டார்கள். மற்றும் இப்பண் டிகைக்குப் போகிப் பண்டிகை என்று சொல்லப் படுகின்றது. இந்த போகி என்னும் சொல்லுக்குப் போகப் போக்கியங்களை அனுபவித்தல் என்பது பொருள் இதற்கும் விளைந்த பண்டங்களை அனுபவித்தல் என்பதுதான் தத்துவம். இந்தக் கருத்துக் கொண்டே போகிப் பண்டிகை என்பதையும் பார்ப்பனர் தங்கள் ஜாதி நலனுக்கு ஏற்பக் கற்பனைக் கதைகளை உண்டாக்கி இந்திரனுக்கும், கிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட பொறாமை விரோத சம்பவம் ஒன்று செய்து, அதற்குப் பரிகாரமாகக் கொண்டாடுவது என்றும் ஆக்கி விட்டார்கள்.
இவையெல்லாம் மகா மகாப் புரட்டுகளாகும். எப்படியெனில், கிருஷ்ணனையும், இந்திரனையும் இவர்கள் யார், எப்போது இருந்தார்கள், இவர்களுக்கு ஏன் சண்டை வந்தது, இவர்கள் எவ்வளவு அற்பர்கள் என்றெல்லாம் பகுத்தறிவுப் பார்வையில் பார்த்தால், இதன் புரட்டு வெளியாகும், எனவே, பொங்கல் என்பது தமிழர்க்கே உரியதல்லாமல், பார்ப்பனர்க்கு இதில் ஏதும் சம்பந்தமில்லை.

இந்தப் பொங்கல் பண்டிகை என்பதற்குச் சரியான பொருள் அறுவடைப் பண்டிகை என்பதாகும். இவற்றில் கன்னிப் பொங்கல் என்ற ஒரு நிகழ்ச்சியும் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது, யாவரும் அறிந்ததே. இந்தக் கன்னிப் பொங்கல் என்பது, சிறு பெண் அதாவது பூப்படையாத, கல்யாணமில்லாத, கலவி அறியாத பெண் என்பவர்கள் சமையல் செய்து பழகுவதற்கு ஆக அவர்களையே கொண்டு சமையல் செய்யப்படுவதாகும். இதில் பெரிய பெண்கள், அந்தச் சிறு பெண்களுக்கு சமையல் முறையை சொல்லிக் கொடுப்பார்கள்.

ஆகவே, இந்த நிகழ்ச்சிகளுக்குத்தான் பொங்கல், மாட்டுப் பொங்கல், கன்னிப் பொங்கல் விழா என்பதாகும். இது முழுக்க முழுக்க தமிழர்களுக்கே உரிய தமிழ் (பார்ப்பனரல்லாதார்) பண்டிகையாகும். எப்படியெனில், பார்ப்பான் கலப்பையைத் தொட்டால் பாவம் என்பது அவனது தர்மம். நமது பார்ப்பனர்களுக்கு எந்தக் காரியம் எப்படியிருந்தாலும், யார் எக்கேடு கெட்டாலும், தாங்கள் மனித சமுதாயத்தில் உயர்ந்த பிறவி மக்களாகவும், உடலுழைப்பு இல்லாமல் வாழும் சுக ஜீவிகளாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மனித சமுதாயம் முழுவதுமே அறிவைப் பயன்படுத்தாத ஆராய்சியைப் பற்றியே சிந்திக்காத முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் இருக்கச் செய்யவேண்டும் என்பதே அவர்களுடைய பிறவி புத்தியானதால் அதற்கேற்ப உலக நடப்பைத் திருப்பிப் பாதுகாத்து வைக்கிறார்கள்.
பார்ப்பனர்களின் இம்மாதிரியான அட்டூழிய அக்கிரம காரியங்களில் இருந்து விடுபட்டு, மனிதர்களாக நாம் வாழ வேண்டுமானால், பொங்கல் பண்டிகை என்பதை முதல் நாள் அன்று மட்டும் நல்ல உயர்வான உணவு அருந்துவதையும், மனைவி மக்கள் முதியவர்களுடன் இன்பமாகக் காலம் கழிப்பதையும் கொண்டு நம்மால் கூடிய அளவு மற்றவர்களுக்கு உதவி, அவர்களுடன் குலாவுவதான காரியங்களையும் செய்வதன் மூலம் விழாக் கொண்டாடுவது அவசியமாகும்.

மற்றபடியாக, மதச் சார்பாக உண்டாக்கப் பட்டிருக்கும் பண்டிகைகள் அனைத்தும், பெரிதும் நம் இழிவிற்கும், பார்ப்பனர் உயர்விற்கும், நம் மடமைக்கும், காட்டுமிராண்டித் தன்மைக்கும் பயன்படத்தக்கதாகவே இருந்து வருவதால், பயனளித்து வருவதால், அறிவுள்ள, மானமுள்ள மக்கள் மத சம்பந்தமான எந்தப் பண்டிகையையும் கொண்டாடாமலிருந்து தங்களை மானமும், அறிவுமுள்ள மக்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மானமும் அறிவுமே மனிதர்க்கு அழகு!

- தந்தை பெரியார்- "விடுதலை" - 14-1-1972

தந்தை பெரியாரின் பொங்கல் வாழ்த்து - 14.01.1949

தந்தை பெரியாரின் பொங்கல் வாழ்த்து


பொங்கல் வாழ்த்து என்பது பொதுமக்கள் இடையில் அண்மையில் செல்வாக்குப் பெற்றுவிட்டது. இதற்குக் காரணம் பொங்கல் விழா தமிழர்கள் விழாவாகக் கருதப்பட்டு வருவதேயாகும்.

உண்மையில் இன்று தமிழர்களுக்குத் தமிழர் விழா என்று சொல்லத்தக்க வண்ண மாக பொங்கல் விழாவைத் தவிர வேறு விழா எதுவுமே இல்லை என்றே சொல்லலாம்.

ஆகவே, தமிழர்கள் இந்த உண்மைக் காரணத்தினாலேயே பொங்கல் நாளை பொங்கல் விழாவாகக் கொண்டதோடு அதைத் தனிப்பெரும் தமிழ் நாளாகவும் கொண்டாட வேண்டியவர்கள் ஆனார்கள். இப்படிப்பட்ட இந்த கொண்டாட்ட விழா நாளில் தமிழர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் வாழ்த்தை அனுப்ப ஆசைப்படுவது தமிழர் இயல்பேயாகும். அந்த முறையில் நான் ஒவ்வொரு தமிழருக்கும் பொங்கல் வாழ்த்தாக நல்வாழ்த்து திராவிட நாடு மூலம் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

என்ன வாழ்த்து என்றால், தமிழர்கள் யாவரும் ஒன்றுபட்டு தமிழர்க்கு இன்றுள்ள இழிவும் குறைபாடுகளும் நீங்கி, மனிதப் பண்பு பெற்று மானமுள்ள மக்களாக வாழவேண்டும் என்பதான வாழ்த்துதல்தான்.

-ஈ.வெ.ராமசாமி 14.01.1949
(14-.01.1949 "திராவிட நாடு" இதழில் தந்தை பெரியார் தம் கைப்பட எழுதிய பொங்கல் வாழ்த்து)

Sunday, 26 November 2017

சிறையில் கழகத் தோழர்கள் ! - 2.12.1957

சிறையில் கழகத் தோழர்கள் !

என் மகனுக்கு மாத்திரம் எதற்கு ஜாமீன்?

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் சென்ற மாதம் 26ந் தேதி அரசியல் சட்டத்தாளைக் கொளுத்திய திராவிடர் தோழர்களில் 34 பேர்கள் மீது தொடரப்பட்டிருந்த வழக்குகள் 19.12.57ந் தேதி திருச்சி மாவட்ட மாஜிஸ்திரேட் அவர்களால் விசாரிக்கப்பட்டு தலா 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆங்கரை ஆண்டிமகன் தவசு, மைனராய் இருந்ததால் தவசு தகப்பனாரை அழைத்து உங்கள் மகனை ஜாமீனில் அழைத்துப் போகிறீர்களா? என்று கேட்டதற்கு ஆயிரக்கணக்கான தோழர்கள் சிறையில் இருக்கும்போது என் மகனுக்கு மாத்திரம் எதற்கு ஜாமீன்? என்று மறுத்துவிட்டார். இவரது இந்த பதில் நேகார்ட்டிலிருந்த எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இச்சிறுவனுக்கு 12 வயது இச்சிறுவனையும் சேர்த்து நேற்று தண்டிக்கப்பட்டவர்கள்.
சிறுதையூர் மாரிமுத்து (திராவிட விவசாய சங்கச் செயலாளர்) பூவாளுர் தி.க. செயலாளர் வீராசாமி, வளவனூர் ஆரோக்கியசாமி ஆங்கரை ரத்தினம், அன்பில் கதப்பட நாட்டர் சிறுதையூர் சலாம் (பஞ்சாயத்து போர்டு தலைவர், உட்பட 35 பேர்கள் தோழர்கள் யாவரும் தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்று சிறையேறினர்.

லால்குடி வாளாடி பெருகமணி ஆகிய ஊர்களில் சட்டத்தாள் கொளுத்திய தோழர்களுக்கு சென்ற 16ந் தேதி ஜில்லா மாஜிஸ்திரேட் தலா 2 ஆண்டு கடுங்காவல் தட்ணனை விதிக்கப்பட்டது. கொளுத்த முயற்சி செய்தவர்களுக்கு தலா 18 மாதம் கடுங்காவல் விதிக்கப்பட்டது. முத்துச் செழியன் குழுவினர் மீதுள்ள வழக்குகள் முறையே 24, 26ந் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

லால்குடி வட்டத்தைச் சேர்ந்த தோழியர்கள் சிறையில் பிரசவமான தோழியர் அஞ்சலை அம்மாள் உட்பட அனைவரும் கோர்ட்டுக்கு கொண்டுவரப்பட்டு அவர்கள் மீதுள்ள வழக்குகளும் முறையே 24, 26 தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன. தாய்மார்கள் திருச்சி துணைச் சிறையில் ரிமாண்டில் இருக்கிறார்கள்.

பெரியார் பெரும்படைக்கு சிறையில் இடமில்லை

லால்குடி வட்டாரத்தில் அரசியல் சட்டம் எரித்து கைது செய்யப்பட்ட தோழர்களை திருச்சிக்கு வானில் கொண்டு வந்து மாஜிஸ்திரேட்டிடம் ரிமாண்ட் வாங்கி திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். சிறையதிகாரிகள் மத்திய சிறையில் இடமில்லையெனச் சொல்லிவிடவே அவர்களை திரும்பவவும் லால்குடி சப்ஜெயிலுக்கு கொண்டு சென்றனர் போகும் போது தொண்டர்கள் பெரியார் பெரும்படைக்கு சிறையில் இடமில்லை என ஒலி முழக்கமிட்டுக் கொண்டே சென்றனர். லால்குடி சப்ஜெயலில் அடைக்கப்பட்ட பின் இரவு 10.30 மணிக்கு கலெக்டர் சென்று மத்திய சிறையில் இடம் ஒழித்து வைத்திருப்பதாகவும் திரும்பவும் கொண்டு வருமாறும் லால்குடிக்கு செய்தி வந்தது. பின்னர் போலீஸ் வேன்கள் போதாமல் வாடகை லாரி பிடித்து இரவு 11 மணிக்கு மேல் மத்திய சிறைக்கு கொண்டு வந்தனர்.

சிறை மீளும் வீரர்கள் 30.11.1957 சனி, ஆர்.வி. ரங்கசாமி (ஈரோடு), பி.டி. சுப்பராயலு (கடலூர்) லட்சுமி - சுப்பராயலு (கடலூர்), கி. நடேசன் (கடலூர்), கல்யாணி - நடேசன் (கடலூர்), மா. பலராமன் (கடலூர்), ஆ. வைத்திலிங்கம் (கடலூர்), வி. புருஷோத்தமன் (கடலூர்), மா. ஜானகி ராமன் (கடலூர்), எஸ்.ராமலிங்கம் (கடலூர்), கே. வேணு (கடலூர்), கோ. வெங்கட்ராமன் (புத்தூர்).

வருத்தத்தோடு...

நன்னிலம் தாலுக்கா தி.க. தி.வி.தொ.ச. உதவி செயலாளர் என்.வி.முருகப்பா 26.11.1957ந் தேதி மாலை 4 மணிக்கு வாழ்குடி சத்தி ரைஸ் மில் பக்கத்தில் இந்திய அரசியல் சட்ட புத்தகத்தைக் கொளுத்தினார். ஏராளமான பொது மக்கள் ஆதரவு தந்தார்கள். இந்த சட்டத்தின் தத்துவத்தை விளக்கி பொது மக்களுக்கு எடுத்து உரைத்துவிட்டுக் கொளுத்தினார். போலீகார் யாரும் வரவில்லை. என்னை இதுவரையிலும் தண்டிக்கவில்லை என்று வருத்தத்தோடு தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் என்று அவர் எழுதியுள்ளார்.

உணவு தராத போலீசார்

கடந்த 26.11.1957இல் இந்திய அரசியல் சட்டத்தை எரித்து கைதான எடமேலையூர் தோழர்களின் வழக்குகள் 3.12.1957இல் பகல் 2 மணிக்கு மன்னார்குடி முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. தோழர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்புக் கூறி தலா 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டனர்.
தோழர்கள் 35 பேருக்கு காலை உணவுடன் மாலை 6.30 மணி வரை உணவு இன்றி துன்பப்பட்டார்கள். கழகத் தோழர்கள் வாங்கி வருகிறோம் என்றாலும் மறுத்துவிட்டனர் போலீசார். பலர் மயக்கமுற்று மாலை 4.45க்கு வீழ்ந்து விட்டனர். உடனே அவர்களுக்கு தோழர்கள் காப்பி வாங்கிக் கொடுத்து தெளிவு உண்டு பண்ணினர்.
அன்பு பின்பு மாலை 6.35 மணிக்கு போலீசாரால் உணவு அளிக்கப்பட்டது. அதன்பின் இரவு சுமார் 7 மணிக்கு அவர்கள் நீடாமங்கலம் ரயில் மூலம் அனுப்பப்பட்டனர். தேழர்கள் அனைவரும் திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்கள்.


சிறை சென்ற சிறுவர் - சிறுமி

நீடாமங்கலத்தில் சென்ற 26ந் தேதி அரசியல் சட்டத் தாளைக் கொளுத்தி கைது செய்யப்பட்ட தோழர் கே.ஆர்.குமார் அவர்களின் மகள் செல்விக்கு இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு சென்னையிலுள்ள மைனர் பெண்கள் சிறைக்கு அனுப்பிவிட்டார்கள்.

மற்றும் இதுபோலவே, கலியபெருமாள், கோவிநத்ராஜ் ஆகிய இரு சிறுவர்களுக்கும் இரண்டு ஆண்டு தண்டனை அளித்து, ஒருவரை திருநெல்வேலிச் சிறைக்கும், மற்றொருவரை செங்கற்பட்டு சிறுவர் சிறைக்கும் அனுப்பி வைத்தார்கள்.

மன்னார்குடி வட்டத் தோழர்கள் 68 பேருக்கும் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதென்று முன்னர் வந்த செய்தியில் 20 பேருக்கு மட்டுந்தான் தண்டனை விதிக்கப்பட்டதென்றும், மீதமுள்ள 48 பேர் மீதுள்ள வழக்கும் 7.12.1957ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.

விடுதலை - 2.12.1957

ஆம் கொளுத்தினேன் -தோழர்கள் வாக்கு மூலம் - 27.11.1957



ஆம் கொளுத்தினேன்

சென்னை ஜியார்ஜ் டவுன் 4வது மாஜிஸ்திரேட் திரு.எஸ்.வரதராசன் முன்னி லையில் அரசியல் சட்டம் கொளுத்திய வீரர்களின் வழக்கு விசாரணை, இன்று காலை 11.15 மணிக்கு ஆரம்பமாகியது. தேசிய பாதுகாப்பு சட்டப்படி கைது செய்யப்பட்ட தோழர்கள் தோழியர்கள் அனைவரும் முக மலர்ச்சியுடன் வீற்றிருந்தனர்.

முதலில் தோழர் நடராஜன் அவர்களை கோர்ட்டார் அழைத்தனர்.
நீங்கள் பழைய ஜெயில் சி3 போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிராக அரசியல் சட்ட புத்தகத்தை கொளுத்தியது உண்மைதானா? என்று கேட்டதற்கு ஆம் கொளுத்தினேன் என்றார்.

போலீசார் மாஜிஸ்திரேட்டிடம் அவர் கொளுத்தின அரசியல் சட்ட நூலை காட்டினார்.

அடுத்து தோழர்கள் தாமோதரன் அபிபூடீன் ராமலிங்கம், வைத்தியநாதன், கன்னியப்பன், நெடுஞ்செழியன், கந்தசாமி ஆகியோர் மேலுள்ள வழக்குகள் தனித்தனியாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

தனித்தனியாக நீங்கள் அரசியல் சட்ட புத்தகத்தை கொளுத்த முயன்றீர்களா என்று கேட்டதற்கு கொளுத்தினோம் என்றனர்.

கடைசியாக தோழர் எம்.எஸ்.மணி தோழியர்கள் எம்.எஸ்.வள்ளியம்மாள் செண்பக வல்லி அம்மாள் (கையில் சிறு பையனுடன்) புரட்சிமணி ஆகியோர் மீதுள்ள வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நீங்கள் சைனாபஜார் பூக்கடை போலீஸ் ஸ்டேஷன் முன்பாக கும்பலாக பெரியாரை விடுதலை செய் என முழக்கமிட்டுக் கொண்டும் புத்தகங்கள் ஆகியவைகளை எரிக்க முற்பட்டது உண்மையா? எனக் கேட்டனர் ஆமாம் உண்மை என அவர்கள் பதில் அளித்தனர்.

கடைசியாக போலீசார் மாஜிஸ்திரேட்டை நோக்கி தண்டணையளிப்பதில் சற்று தாராள மனப்பான்மை காட்ட வேண்டுமென கேட்டுக் கொண்டதற்கு இல்லை இது பெரும் குற்றம் என மாஜிஸ்திரேட் கூறினார்.

கடைசியாக மாஜிஸ்திரேட் கீழ் கண்டவாறு தண்டனை அளித்து தீர்ப்புக் கூறினார்.

தோழர் எம்.எஸ். மணி தோழியர்கள் எம்.எஸ்.வள்ளியம்மாள், செண்பகவள்ளி (கையில் சிறுவன்) புரட்சிமணி ஆகியோரைப் பார்த்து அபராதம் விதித்தால் கட்டுவீர்களா எனக் கேட்டதற்கு கட்டமாட்டோம் என அவர்கள் பதில் கூறினார்கள்.

தோழியர்கள் எம்.எஸ்.வள்ளியம்மாள், செண்பகவல்லி, புரட்சிமணி ஆகியோருக்கு 2 மாதம் கடுங்காவல் தண்டனையும் தோழர் நடராசன் அவர்களுக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனையும் எம்.எஸ்.மணி, கே. கன்னியப்பன், தாமோதரன், நெடுஞ்செழியன், அபிபுடீன் ராமலிங்கம், கந்தசாமி, வைத்திய நாதன் ஆகியயோருக்கு 9 மாதம் கடுங்காவல் தண்டனை விதித்தார்.

தோழர்கள் மேற்படி தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்று சிறைவாசம் புகுந்தனர்.
கோர்ட்டில் ஏராளமான கழகத் தோழர்கள் வந்திருந்து வழக்கை கவனித்தனர்.

விடுதலை, 27.11.1957

பெரியார் கைது - 26.11.1957


பெரியார் கைது


பெரியார் அவர்கள் சீரங்கம் பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காகப் புறப்பட்டு ஆயத்தப்படுகையில் சூபரிண்டென்ட் திரு.எஸ்.சோலை அவர்கள் பெரியார் மாளிகைக்கு வந்து பெரியார் அவர்களை கிரிமினல் புரொசீஜர் கோடு 151ஆவது பிரிவுப்படி (குற்றங்களைத் தடை செய்வதற்கான சட்டப்பிரிவு) உத்தேசிக்கப்பட்ட நவம்பர் 26ந் தேதி அரசியல் சட்ட புத்தகத்தைக் கொளுத்துவதைத் தடுப்பதற்காகக் கைது செய்வதாகக் கூறி தமது காரில் அழைத்துச் சென்றார்.

பின்னர் அடிஷனல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் திரு. இராமச்சந்திரன் அவர்கள் முன்பாக பெரியார் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு 8 நாட்களுக்கு ரிமாண்டில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டார்.

பெரியார் அவர்கள் திருச்சி மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

பெரியார் அவர்கள் சீரங்கம் கூட்டத்தை முடித்துக் கொண்ட, எக்ஸ்பிரஸ் டிரெயின் மூலம் சென்னைக்கு வந்து நவ. 26ந் தேதி சென்னையில் எழும்பூர் பெரியார் திடல் (டிராம்ஷெட்) கூட்டத்தில் பேசி இறுதியில் அரசியல் சட்டத்தைத் தீயிட்டுக் கொளுத்தத் திட்டமிட்டிருந்தார்கள். இதைத் தடுக்கவே முன்னேற்பாடாக போலீசார் கைது செய்தனர் என்று நம்பப்படுகிறது.
நேற்று மாலை பெரியார் அவர்களைக் கைது செய்ய போலீசார் பெரியார் மாளிகைக்கு வரும்போத அங்கு கழகத் தோழர்கள் யாரும் இல்லை. எல்லோரும் சீரங்கம் கூட்டத்திற்குச் சென்று விட்டார்கள். பெரியார் கைது செய்யப்படும்போது, திரு.ஆனைமலை நரசிம்மன் அவர்களும் திருமதி. மணியம்மையார் அவர்களும் மட்டும் உடன் இருந்தார்கள்.

விடுதலை, 26.11.1957

தந்தை பெரியார் சிறை புகு முன் விடுத்துள்ள அறிக்கை - 14-12-1957


தந்தை பெரியார் சிறை புகு முன் விடுத்துள்ள அறிக்கை! 



நான் இன்று தண்டனை அடையப்போவது உறுதி. ஏன் என்றால் இந்தியப் பிரதமர் என்னும் பதவியில் உள்ள பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் எனது வழக்கு நடக்கிற ஊராகிய திருச்சிகே வந்து எனது வழக்கு நடைபெறும் நியாயத்தல நீதிபதியாகிய செஷன்ஸ் ஜட்ஜ் (மாவட்ட நீதிபதி) அவர்கள் முன்னிலையில் இருந்து "பார்ப்பனர்களைக் கொல்லு என்று சொல்லி இருக்கிறவர்களைக் கண்டிப்பாகத் தண்டிக்க வேண்டும். அது மாபெரும் தேசத்துரோகக் குற்றமாகப் பாவிக்க வேண்டும். இந்தக் கருத்துடையவன் ஜெயிலில் (சிறையில்) இருக்க வேண்டியவன்!" என்பதாகச் சொல்லி தூண்டிவிடும்படியான அளவுக்குப் பேசிவிட்டுப் போயிருக்கும்போது, எந்த நீதிபதிதான் என்னைத் தண்டிக்காமல் விட்டுவிட முடியும்? அதுபோலவே 'அரசமைப்புச் சட்டம் எரித்ததாகக் குற்றம் சாட்டி ஜெயிலில் (சிறையில்) பிடித்து அடைத்து வழக்குத் தொடரப்பட்டிருக்கும் 4000 குற்றவாளிகள் பற்றியும், அந்தக் குற்றம் தேசத் துரோகக் குற்றமாகும், அவர்கள் கடினமாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள், ஜெயிலில் (சிறையில்) இருக்க வேண்டியவர்கள்!' என்பது ஆகவும் விசாரணை செய்துத் தீர்ப்புக் கூறவேண்டிய மாஜிஸ்திரேட் நீதிபதி முன்னிலையிலும் சொல்லிவிட்டுப் போயிருக்கும் போது எந்த ஜட்ஜ்தான், எந்த மாஜிஸ்திரேட்தான் குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தண்டியாமல் கடினமாகத் தண்டியாமல் விடமுடியுமா?

உதாரணமாக, பண்டிதநேரு அவர்கள் திருச்சிக்கும், தமிழ்நாட்டில் மற்ற ஊர்களுக்கும் வந்து இப்படியாகப் பேசுவதற்கு முன் 3 மாதம், 6 மாதம், 9 மாதம் போட்ட வழக்குகள் இவர் வந்து இந்தப்படிப் பேசியபின் 9 மாதம், 1 வருடம், 11/2 (ஒண்றரை வருடம்) 2 வருடம் வீதம் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் என்னை ஜட்ஜீ (நீதிபதி) தண்டிக்கப்போவது உறுதி.

நான் தண்டிக்கப்பட்டால் பொதுமக்களும் குறிப்பாக கழகத் தோழர்களும், "இந்தத் தண்டனையும் நம் கழக முயற்சிகளும் வெற்றிபெறும் நாள், பயனளிக்கும் காலம் நெருங்கிவிட்டது; பூக்க, காய்க்க ஆரம்பித்து விட்டது" என்று மகிழ்ச்சிப் பெருக்கோடு கழகப்பணி ஆற்ற ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்; பங்குகொள்ள வேண்டும்; ஆதரவளிக்க வேண்டும். எப்படியோ இது ஒரு இனப் போராட்டமாகப் பார்ப்பனர்கள் செய்துவிட்டார்கள்.

ஆதலால் கழகத் தோழர்களும், மற்றவர்களும் எவ்விதமான பலாத்காரமான, இம்சையான, கொல்வதான, நாசகரமான காரியம் எதையும் செய்ய முன்னடையாமல், மனதிலும் செய்ய நினைக்காமல் பிறர் சொல்லும்படியும் நடவாமல் சாந்தத்தோடும் சமாதானத்தோடும் கழகப்பணியில் ஈடுபட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

மற்றும் இன்று நம் தோழர்கள் 3000 பேருக்கு மேல் சிறைப்படுத்தப்பட்டுக் கடினமாகத் தண்டனைக் கொடுமை வழங்கப்பட்டிருப்பதற்கு முக்கியக்காரணம் நாம் செய்த எந்தவிதமான குற்றங்களுக்கு ஆகவும் அல்ல. அதாவது நாம் நம் உரிமைக்கு விரோதமாய், நீதிக்கு விரோதமாய், எவ்வித காரியமும் செய்துவிடவில்லை. யாருக்கும் எவ்விதமான கேடும் செய்துவிடவில்லை - ஏற்பட்டுவிடவுமில்லை.

இதை இன்றைய நம் மந்திரிமார்களே (தமிழக அமைச்சர்களே) சொல்லிவிட்டார்கள்; சொல்லியும் வருகிறார்கள். அப்படியிருந்தும் இந்த நாட்டுப் பார்ப்பனர்களின் கட்டுப்பாடான, பத்திரிகைகளின் கட்டுப்பாடான பொய் விஷமப் பிரசாரத்தின் காரணமாகவும், மத்திய அரசாங்க அதிபர்கள் ஆதிக்கக்காரர்களின் சர்வாதிகாரக்கட்டளைக்காவும் வேறு மார்க்கமில்லாமல் இணங்கி தீரவேண்டிய அரசியத்தின் காரணமாக ஏற்பட்டவைகளாகும்.

ஆதலால் நம் மக்கள் இந்த நடவடிக்கைகளுக்கும், சென்னை அரசாங்க மந்திரிகளுக்கும், பார்ப்பனரல்லாத போலீசு நீதி நிருவாக அதிகாரிகளுக்கும், எவ்வித பந்தமும் இல்லை என்பதாகக் கருதி அவர்களுக்கு வெறுப்பும் அதிருப்தியும் கொள்ளாமல் இருக்க வேண்டும். பலாத்கார, இம்சையான, நாசமான, செயலிலும் ஈடுபடாமல், பார்ப்பனர்கள் தங்கள் கொடுமைச் செயலின் பயனை அனுபவிக்கும் வண்ணம் அதாவது தாங்கள் செய்தது தப்பு என்று உணரும் வண்ணம் அவர்களை நாம் வெறுப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும். அவர்கள் உறவை நீக்க வேண்டும். அவர்கள் சம்பந்தத்தை வெறுக்க வேண்டும். அவர்களுடன் எவ்வித உறவாடலும் சம்ந்தமும் கூடாது. கூடுமானவரை அவர்களுடன் பேசுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்களை நாம் வேலைக்கு வைத்துக் கொள்ளக்கூடாது. பார்ப்பன வக்கீல்களைப் பகிஷ்கரிக்க (புறக்கணிக்க) வேண்டும். அவர்களிடம் எந்தவிதமான வியாபார சம்பந்தமும் வைத்துக் கொள்ளக்கூடாது. அவர்கள் உண்டி நிலையங்களுக்கு அறவே நாம் செல்லக்கூடாது. அவர்களைக் கண்டிப்பாக நமது நன்மை தீமை ஆகிய காரியங்களுக்கு அழைக்கவோ சம்பந்தப்படுத்தவோ கூடாது. எல்லாவற்றையும் விட அவர்கள் பூசை செய்யும், தொண்டு செய்யும் எந்தக் கோவிலுக்கும் தொழுகை இடத்திற்கும் நாம் செல்லவே கூடாது. அவர்களுக்கு உணவுப் பண்டங்கள் விற்பதோ கொடுப்பதோ கூடாது. நம்முடைய வண்டி வாகனக்காரர்கள் அவர்களை (பார்ப்பனர்களை) ஏற்றக்கூடாது. இன்னும் உள்ள எவ்வித சம்பந்தங்களிலிருந்தும் நாம் விலகி நிற்க வேண்டும். எல்லாவற்றையும்விட பார்ப்பனப் பத்திரிகைகளைப் பகிஷ்காரம் (புறக்கணிப்புச்) செய்யும்படி பிரச்சாரம் செய்ய வேண்டும். மற்றும் இந்தப் பார்ப்பனர்களைப் போலவே வட நாட்டார்களையும் கருதவேண்டும். பார்ப்பனர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை என்பது மேலே எடுத்துக்காட்டிய அவ்வளவையும் வட நாட்டாருடனும் வைத்துக் கொள்ள வேண்டும். நடந்து கொள்ள வேண்டும். உடனடியான நிருமாணத்திட்டமாக வடநாட்டான் கடைகளை வியாபாரத்துறைகளில் பகிஷ்கரிக்க புறக்கணிக்க ஏற்பாடு செய்ய கழக செயற்குழுவைக் கூட்டி யோசித்து நடத்த வேண்டும். வட நாட்டான் கடைகளில் நம்மவர் வியாபாரம் செய்யக்கூடாது என்று நம்மவர்களை வடநாட்டான்கள் வியாபார தலங்களில் நின்று சமாதான முறையில் சாந்தமான தன்மையில் வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்விதக் காரியங்களை அரசாங்கத்தார் தடுத்தால் அதற்கு மாத்திரம் நாம் இணங்காமல் இருக்கலாம் என்பது எனது கருத்து.

தமிழ்நாடு முழுவதிலும் கன்னியாகுமரி மாவட்டம் முதல் எல்லா மாவட்டங்களிலும் கழகங்களை ஏற்படுத்த வேண்டும்.

ஒரு இலட்சம் உறுப்பினகர்களையாவது சேர்க்க வேண்டும்.

அங்கத்தினர்களைச் சேர்ப்பதற்கு நல்லபடி படித்த பெண்களை மாவட்டத்திற்கு இருவர் அல்லது மூவர் வீதம் தேவையான அளவுக்கு அலவன்ஸ் (செலவுப்படி) கொடுத்து உறுப்பினர் சேர்க்கும் ஃபாரங்கள் (படிவங்கள்) இலட்சக்கணக்கில் அச்சடித்துக் கொடுத்து, சேர்க்கச் செய்ய வேண்டும்.

அவர்கள் மூலமே இயக்கப் புத்தகங்களையும் இந்த அறிக்கை முதலியவற்றையும் குறைந்த விலைக்கு விற்கச் சொல்ல வேண்டும். இந்தப் பெண்களுக்குச் சிவப்புக்கரை போட்டக் கருப்புச் சேலை, சிவப்புரவிக்கை சப்ளை செய்ய வேண்டும். திருமதி நாகரசம்பட்டி விசாலாட்சி அம்மையார், ஆனமலை ராமகிருஷ்னம்மாள் முதலியவர்கள் இந்த நிருவாகத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டிக் கொள்ளச் செய்ய வேண்டும். மாவட்டத்திற்கு ஒருவர் அல்லது இருவர் ஆண் தோழரை இக்காரியத்திற்கு ஏற்படுத்தி அவர்களுக்கும் தேவையான அவலன்ஸ் (செலவுப்படி) கொடுத்து இந்த வேலைகளைச் செய்யச் செய்ய வேண்டும். முழுநேரத் தொண்டர்களாக வரும் ஆண்களையும், பெண்களையும் ஏற்று அவர்களுக்கு உணவு போக்குவரத்துச் செலவு அளித்து மேற்படி வேலை செய்யச் செய்யலாம். ஒவ்வொருவரின் வேலையையும், செய்த அளவையும் அறிந்து வேலைக்குத்தக்கபடி உற்சாகப்படுத்தி அலவன்ஸ் (செலவுப்படி) கொடுத்து வேலை செய்யச் செய்ய வேண்டும்.

மற்றக் கட்சிக்காரர்களைப்பற்றியோ, கோஷ்டியைப் பற்றியோ, காங்கிரசைப் பற்றியோ, கோஷ்டியைப் பற்றியோ, மந்திரிகளைப் பற்றியோ எவ்விதக் குற்றம் குறைகளும் நம் பேச்சாளர்கள் யாரும் பேசக்கூடாது. அவர்கள் நம்மீது சுமத்தும் விஷமப்பிரசாரக் குற்றங்களுக்குக் கண்ணியமான முறையில் சமாதானம் சொல்லலாம். நமது இயக்கத்தின் தலைவர்கள் பொறுப்பானவர்கள் என்கின்ற முறையில் உயர் திரு.தி.பொ.வேதாசலம் அவர்களும், திருமதி. மணியம்மை அவர்களும் மற்றும் பல நண்பர்களும் வெளியில் இருக்கிறார்கள். திரு.வேதாசலம் அவர்கட்கு உடல் நலம் சரியாக இல்லாததால் முழுப்பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியுமா என்பது எனக்குக் கலக்கமாக இருக்கிறது. என்றாலும் தோழர்கள் அவர்களது கட்டளையை மதிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.

திருமதி. மணியம்மையார் கூடுமான அளவு தக்க பேச்சாளர்களுடன் நாடு முழுவதும் சுற்றுப்பிரயாணம் செய்வார்கள். அங்காங்குள்ள நமது கழகம் அமைத்தல், மெம்பர் (உறுப்பினர்) சேர்த்தல், புத்தகம் அறிக்கை விற்றல் ஆகிய காரியங்களைக் கவனிப்பார்கள்.

நான் இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் தண்டிக்கபட்டு சிறைவாசம் செய்து திரும்பிவரும் வாய்ப்பு இருந்து வந்து சேருவேனேயானால் ஒரு லட்சம் அங்கத்தினர், மூவாயிரம் கழகங்கள், 1500 ரூபாய்க்குக் குறையாத அறிக்கைப் புத்தக விற்பனைக் கணக்கு காண்பேனேயானால் நானும் மற்றும் அன்பான தோழர்கள் 4000 பேரும் சிறை சென்றது நல்ல பயன் அளித்தது என்றே கொள்ளுவோம்.

பல நண்பர்கள் நமக்குக் கூடுமான அளவு பொருளுதவி செய்ய முன்வந்திருக்கிறார்கள். முக்கியமாக ஒரு நண்பர் பெரும் அளவுக்கு அதாவது 50 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக வாக்களித்துள்ளார்.

இந்தச் சிறைப்பிடிப்பில் போக முடியாமல் வெளியில் இருப்பவர்களும், சிறைப்பிடித்து நாள் கணக்கில் வைத்திருந்து விடுதலையானவர்களும் மேற் குறித்த எனது வேண்டுகோள் பணிக்கு நல்ல ஆதரவு தரவும், எங்கள் தண்டனைக் கால அளவுக்கு முழு நேரத்தொண்டு செய்யவும், பலர் தாங்களாகவே முன் வந்திருக்கிறார்கள். தயாராய் இருக்கிறார்கள். அவர்கள் பெயரை நான் இதில் குறிப்பிடவில்லை யென்றாலும் அவர்களது முழு சம்மதத்துடன் பெயர்களை மணியம்மையார், திருவாளர்கள் வேதாசலனார், சுப்பிரமணியம், திருநாவுக்கரசு ஆகியவர்களுடன் யோசித்து வெளியிடுவார்கள். அவர்களைக் கழகத்தோழர்கள், அபிமானிகள் (பற்றாளர்கள்) ஆதரவாளர்கள் நல்லபடி பயன்படுத்திப் கொள்ள வேண்டுகிறேன்.

கடைசியாக பலாத்காரம், இம்சை, நாசவேலை, கலவரம், சாந்த சமாதான பங்கம், தனிப்பட்டவர்களிடம் நேரிடையான வாக்குவாதம், கலவரம் ஆகிய காரியங்கள் எதுவும் சிறிதும் தலைகாட்ட இடமில்லாமல் என்னுடைய தோழர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

அப்படி ஏதாவது தாறுமாறாக நடந்து கொண்டால் அவர்கள் எனக்கு எதிரிகளும் கழகத்திற்குக் கேடு செய்பவர்களும் ஆவார்கள்.

என் பிறவி காரணமாக, என் இன இழிவுக் காரணமாக இருக்கும் ஜாதியை ஒழிப்பதும் என் இனமக்களாகிய தமிழர்களுடையவும், என்னுடையவும், தாய்நாடான தமிழ் நாட்டை பனியா, பார்ப்பனர்களின் அடிமைத் தளையிலிருந்தும் சுரண்டலில் இருந்தும் மீட்டு சுதந்திரமாக வாழ வைக்க வழி செய்வதுமான 'தனித்தமிழ் நாடு' பெறுவதும் என் உயிரினும் இனிய கொள்கைகளாகும்.

அந்த இலட்சியங்களை அடையத் தகுந்த விலையாக என் உடல் பொருள் ஆவி ஆகிய எதையும் கொடுப்பதற்கு உடன்பட்டே நான் இப்போது சிறை செல்கிறேன், சென்று வருகிறேன்.

வணக்கம்! வணக்கம்!! வணக்கம்!!!



14-12-1957 பெரியார் ஈ.வெ.ரா. அறிக்கை : “விடுதலை”, 15.12.1957

26ஆம் தேதி கிளர்ச்சியில் நீதிமன்றத்தில்ல் கூற வேண்டியது !


26ஆம் தேதி கிளர்ச்சியில் நீதிமன்றத்தில்ல் கூற வேண்டியது !

நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப் படவுமில்லை; அச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை.
ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக்-கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமையுண்டு. இதனால் எந்த உயிருக்கும் எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளியல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்து-கொள்ள விரும்பவில்லை. நான் எதிர்-வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்-கொள்ளத் தயாராயிருக்கிறேன்.
- பெரியார் அறிக்கை  (விடுதலை 23-11-1957)

Thursday, 16 November 2017

சட்டத்தைக் கொளுத்துங்கள்! - 16.11.1957

சட்டத்தைக் கொளுத்துங்கள்!


சட்டத்தைக் கொளுத்துங்கள்!

சாம்பலை மந்திரிக்கு அனுப்புங்கள்!!

சட்டத்தை நிறைவேற்றிவிட்டதன்மூலம், அரசாங்கத்தினர் ‘சாதியைக் காப்பாற்றித்தான் தீர வேண்டும்’ என நமக்குச் சவால்விட்டு இருக்கின்றனர்.

இந்தச் சவாலுக்கு, நீங்கள் சட்டம் கொளுத்தாவிட்டால் மனிதர்கள்தானா?

சட்டம் கொளுத்திச் சாம்பலைச் சட்டம் செய்த மந்திரிக்கு அனுப்பிக் கொடுங்கள்! சட்டம் கொளுத்தின மக்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை அதன்மூலம் கொஞ்சமாவது தெரிந்துகொள்ளட்டும்!

 ‘விடுதலை’ 16.11.1957

நான் எதற்காகச் சிறை செல்கிறேன்? - 09-11-1957


நான் எதற்காகச் சிறை செல்கிறேன்?

சூதாடிய குற்றத்துக்காகவா?
கள்ளச்சாராயம் காய்ச்சிய குற்றத்துக்கா கவா?
கொள்ளைக் குற்றத்துக்காகவா?
கொலைக் குற்றத்துக்காகவா?
மோசடிக் குற்றத்துக்காகவா?
பலவந்தப் புணர்ச்சிக் குற்றத்துக்காகவா?
பதுக்கல் – கலப்படம் குற்றத்துக்காகவா?
சாதிவெறியின் கலவரக் குற்றத்துக்காகவா?
என்ன குற்றத்துக்காக நான் சிறை செல்கிறேன்?

சாதியை ஒழிப்பதற்காகப் போராடினேன்! மறியல் செய்தேன்!
சிறை சென்றேன்! சர்க்கார் கண் விழிக்கவில்ல. ஆகவே, சாதிக்கு ஆதாரமான சட்டத்தை கிழித்துத் தீயிலிட்டாவது இந்திய சர்க்காரின் (அரசின்) மனதை மாற்றலாமா, என்று கருதி அதைச் செய்தேன்.

இதில் எந்த உயிருக்கேனும் சேதமுண்டா ? எந்தப்பொருளுக்கேனும் நாசமுண்டா?

இதற்காக எனக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை என்றால், இதை நான் மகிழ்ச் சியுடன் வரவேற்க வேண் டாமா?
‘சாதியை ஒழிப்பதற்காக மூன்றாண்டு சிறை வாசஞ்செய்தான்’ என்பதைவிடப் பெரும்பேறு, முக்கியக் கடமை, வேறென்ன இருக்கிறது?

இந்த விதமாக நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

–  விடுதலை 09-11-1957