Wednesday, 12 January 2022

வைகுண்ட ஏகாதசியின் பலன் என்ன? - தோழர் பெரியார்

 வைகுண்ட ஏகாதசியின் பலன் என்ன?

சிறீரங்கத்தில் மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி என்கின்ற ஒரு உற்சவம் ஆண்டுதோறும் நடக்கிறது.

அதற்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் சென்று, உற்சவத்தில் கலந்து சொர்க்கவாசல் புகுந்து, மோகினி அவதாரத்தைக் கண்டு களித்து, தங்கள் பாவத்தைத் தொலைத்துவிட்டுத் திரும்புவது என்பது வெகுகாலமாய் நடந்து வரும் காரியமாகும். இந்த ஏகாதசி என்பது 15 நாள்களுக்கு ஒரு முறை வரும் நாளாகும்.



இப்படிப்பட்ட ஏகாதசி ஒரு ஆண்டில் மாதத்துக்கு 2 வீதம் 12 மாதங்களுக்கு வரும் 24 ஏகாதசிகளில் மார்கழி மாதத்தில் வரும் இரண்டு ஏகாதசிகளில் ஒன்றுக்குப் பெயர் வைகுண்ட ஏகாதசி என்பது. இது வைணவர்களுக்கு ஒரு முக்கிய நாள். அதாவது சைவர்களுக்கு சிவராத்திரி வருவது போன்ற ஒரு நாள்.

இந்த ஏகாதசியை ஒரு உற்சவமாக ஆக்கி அதற்கு பகல் பத்து, இராப் பத்து என்று இருபது நாட்களை ஒதுக்கி தினம் ஒரு சடங்கு போல் உற்சவம் கொண்-டாடுவார்கள். இந்த வைகுண்ட ஏகாதசி அன்று மக்கள் நாள் முழுவதும் பட்டினி கிடக்கவேண்டும். அதற்கு ஏகாதசி விரதம் என்று பெயர். அடுத்த நாளைக்குப் பெயர் துவாதசி என்பது.

ஏகாதசி என்றால் 11 ஆவது திதி; துவாதசி என்றால் 12 ஆவது திதி என்பது பொருள். 11 ஆவது நாள் முழுவதும் பட்டினி கிடந்து 12 ஆவது நாள் பாரணை என்னும் பெயரால் வயிறு புடைக்கச் சாப்பிடுவதுதான் இந்த ஏகாதசி, துவாதசி சடங்கு.

இதில் மற்றொரு விஷயம்என்னவென்றால், இந்த ஏகாதசி நாள் முழுவதும் பட்டினி கிடப்பது மாத்திரமல்லாமல் அன்று இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்துக் கொண்டு இருக்க வேண்டும். தூங்கினால் ஏகாதசி விரதத்தின் பலன் வீணாகிவிடும். அதாவது பலன் இல்லாமல் போகும்!

அறிவுக்கு ஒவ்வாத சடங்குகள்

இந்த ஏகாதசி நாள் உற்சவங்கள் தமிழ் நாட்டில் சீரங்கத்தில்தான், பலமாக, ஆடம்பரமாக, ஆயிரம், பதினாயிரம் மக்கள் வந்து கூடும்படியாக மிகப் பிரபலமாய் நடக்கும். 20 நாள்களுக்கு பல சடங்குகள், சாமி ஊர்வலங்கள் முதலியவை நடக்கும்.

ஏகாதசி உற்சவங்களுக்கு சீரங்கம் போனவர்கள்

1. சுவர்க்கவாசல் புகவேண்டும்.

2. மோகினி அவதார தரிசனம் பார்க்கவேண்டும்.

3. முத்தங்கி சேவை பார்க்க வேண்டும்.

சுவர்க்கவாசல் புகுவது என்பது கோயிலில் மற்ற நாளெல்லாம் மூடிக் கிடந்து ஏகாதசி அன்று காலையில் திறக்கப்பட்ட வாசல் வழியில் முட்டி அடித்துக் கொண்டு புகுந்து வெளியில் வருவதுதான்.

மோகினி அவதாரம் என்பது சீரங்கம் கடவுளை பெண் வேஷம் போட்டு பெண்ணாகச் சிங்காரித்துக் காட்டுவதுதான்.

முத்தங்கி சேவை என்பது சீரங்கம் கடவுளுக்கு முத்துக் கோத்துத் தைத்த ஒரு சட்டையைப் போட்டுக் காட்டுவதுதான்.

இதுதான் ஏகாதசி உற்சவத்தின் காட்சி!

இந்தக் காட்சியினால் மக்களுக்கு என்ன பயன் ஏற்படும்?

பெரும்பாலும் அங்கு செல்கிற மக்களின் கருத்தெல்லாம் பெரிய ஜனக் கூட்டத்தைப் பார்க்கலாம் என்பதுதான். செல்பவர்களில் 100 க்கு 90 ஆண், பெண்களின் கருத்தாகும்.

அறிவு கெடுவதே உற்சவ பலன்

மக்களுக்கு சினிமா பார்ப்பதில் உள்ள ஆர்வம், உணர்ச்சி, பயன் என்னவோ அதுதான் இந்த உற்சவங்களைக் காண்பதிலும் இருந்து வருகிறது. சினிமா வந்தபிறகு உற்சவங்களின் பெருமை மோகம் நல்ல அளவுக்குக் குறைந்துவிட்டது. என்றாலும், அதைப் பழையபடி ஆக்க பார்ப்பனர்களும், அரசாங்கமும் இப்போது அதிகமுயற்சி செய்கிறார்கள்! சினிமாவால் ஒழுக்கம் கெடும்; உற்சவத்தால் அறிவே கெடும்! இதுதான் பலன்.

------------------------- தந்தைபெரியார் - ‘விடுதலை’, 8.1.1966

Tuesday, 11 January 2022

பாரதி ஆராய்ச்சி

 

அறிவாளியா? இயற்கைவாத கவியா?  அவர் ஒரு புராண பண்டிதரே


நம் தமிழ் நாட்டில் சமீபத்தில் பாரதியின் தினத்தைப் பல இடங்களில் கொண்டாடினார்கள். அப்பொழுது அவரை ஒரு தெய்வமாகப் பாவித்து அவருடைய படத்துக்கு மாலை போட்டுத் தூபதீப நைவேத்தியங் கூடச் சிலர் செய்தார்கள். இப்படியெல்லாம் செய்வதற்குப் பார்ப்பனரின் சூழ்ச்சி பிரசாரமும் பொதுமக்களின் குருட்டுத்தனமான முட்டாள் நம்பிக்கையுமே காரணமென்றும் மற்றபடி இவர்கள் பாரதியைப் பற்றியோ அல்லது அவருடைய பாடல்களைப் பற்றியோ அறிந்து கொண்டாடப்பட்டதல்லவென்றும் எடுத்துக் காட்டவே இக்கட்டுரையை எழுதத் துணிந்தோம். ஆகையால் வாசகர்கள் இதைப் படித்த பின்பாவது தாங்கள் அக்கொண்டாட்டங்களில் கலந்து கொண்டதின் அறியாமையை உணர்ந்து அதற்குத் தக்கபடி நடந்து கொள்ளுவார்களாக.

பாரதிக்குக் கவி இயற்றவல்ல அறிவு சிறிது உண்டு என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அவரைப்பற்றி இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்யும்படியான மேதாவித்தன்மை எதுவும் அவரிடம் இருந்ததென்றோ, அவர் உயர்ந்த ஞானமும் ஒழுக்கமு முள்ளவரென்றோ, இன்னும் சிலர் விளம்பரஞ் செய்கிறபடி எந்த விதத்திலும், சமீப காலத்தில் தோன்றி மறைந்து போன தமிழ்ப் புலவர்களைப் போல ஆற்றல் படைத்தவரென்றோ யாரும் சொல்ல முடியாது. அப்படியிருந்தும் ஏன் அவரைப்பற்றி இவ்வளவு கூச்சல் போட வேண்டும் என்றும் கேட்கலாம். அதைத்தான் இங்கு ஆராய விரும்புகிறோம்.

முக்கிய காரணம் அவர் ஒரு பார்ப்பனர் என்பதேயாகும். எப்படியென்றால் ஒரு பார்ப்பான் எவ்வளவு அயோக்கியனாயிருந்தாலும், ஒழுக்கங் கெட்டவனாயிருந்தாலும், துர்ப் பழக்கமுடையவனாயிருந் தாலும், பேடியாயிருந்தாலும், பித்துக்கொள்ளியாயிருந்தாலும் அவனைப்பற்றி அவனுடைய குற்றங்களையெல்லாம் மறைத்து “இந்திரன்” என்றும் “சந்திரன்” என்றும் உயர்த்திப் பேசி, எழுதி, அதன் மூலம் தங்கள் இனப்பிழைப்புக்கு வழி தேடிக்கொள்கிறார்கள். இந்த அடாத காரியத்துக்குத் தகுந்த வசதிகள் அவர்களுக்கு தாராளமாய் இருக்கின்றன.

பாரதியின் அறிவு

பாரதி, ஏதாவது அறிவுக்குப் பொருந்திய பாடல் எழுதியிருக் கிறாரா என்று பார்த்தால் அதுவும் இல்லையென்று நன்கு விளங்கும். “எல்லோரும் ஓர் இனம்” என்றும் “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்றும் என்னவோ வாய்க்கு வந்ததை அளந்து தள்ளியிருக்கிறார்; நடை முறைக்கும், அனுபவத்துக்கும், பகுத்தறிவுக்கும் சம்பந்தமில்லாத விஷயங்களையே சொல்லியிருக்கிறார். அவரைப் பாமரமக்கள் புகழ்வதற்குக் காரணம் அவர்களுடைய மூடப்பழக்க வழக்கங்களை வளர்க்கத் தக்கதாகவும் மனு நீதியை உயிர்ப்பித்து நிலைநாட்டக்கூடியதாகவும் அவருடைய பாடல் இருப்பதே ஆகும். எப்படி யென்றால் இதிகாசம், புராணம், வேதம், சாஸ்திரம் முதலியவைகளை அப்படியே தழுவி அவைகளில் அடங்கியிருக்கும் விஷயங்களை, இக்காலத்து தேவைகளை அதில் கலக்கி அதற்குத் தகுந்தாற்போல வேஷம் மாற்றிக்காட்டி அவர் பாடல் செய்திருப்பதேயாகும். மனு ஆட்சி எப்படியாவது ஏற்பட வேண்டும் என்று பார்ப்பனர்கள் இரவும் பகலும் கனவு கண்டுகொண்டிருக்கும் பொழுது அதற்கு உதவியாக எழுதப்பட்டிருக்கும் பாடல்களைப் பார்ப்பனர்கள் கைநழுவ விடுவார்களா?

பாரதி அநேக பாடல்களைக் குடி வெறியில் பாடியிருக்கிறாரே தவிர நிதான புத்தியோடு பாடவில்லை என்று சுலபத்தில் அறிந்து கொள்ளலாம். பெண்களைப்பற்றி வானமளாவப் புகழ்ந்து பல பாடல்கள் செய்திருக்கிறார். ஆனால் பெண்களைப் பற்றி அவருடைய அந்தரங்க சுத்தியான அபிப்பிராயம் மிகக் கேவலமானது என்பது அவரது கிளிக்கண்ணியில் “பெண்களின் கூட்டமடி” என்று தன்னை மறந்து உண்மையைக் கக்கியிருப்பதிலிருந்து தெரிகிறது.

பார்ப்பனரைப் பற்றி பாரதியின் உண்மையான அபிப்பிராயம் என்னவென்றால் பார்ப்பனரே உயர்ந்த வகுப்பினரென்றும் இந்தியா அவர்களுக்குச் சொந்த சொத்து என்றும், அவர்களுடைய ஆரிய பாஷையே உயர்ந்ததென்றும் கருதியே வந்திருக்கிறார் என்பதுதான். பார்ப்பனரின் நிலைமை உயர வேண்டுமென்பதே அவருடைய நோக்கமென்றும் தெரிகிறது. இதற்கு மாறாக யாராவது அவரைப் பற்றி நினைத்துக்கொள்ள “பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே,” “தமிழ் மொழி போல் எங்கும் காணோம்” என்று சொல்லப்படுமானால், இப்பாட்டுகள் போல் எங்கோ அங்கொன்றும் இங்கொன்றும் எடுத்துக் காட்ட முடியுமே தவிர, அதிகமில்லை யென்றும், அப்படி இரண்டொன்று பாடியிருப்பதும் கூடக் குடிவெறி யென்றும்தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் அவர் அபின், கஞ்சா, சாராயம் முதலியவைகளைச் சர்வ சாதாரணமாகவே உபயோகப்படுத்தி வந்திருக்கிறார். அவருக்குப் பார்ப்பானுடைய சுகமே லôயமென்பதாகத் தெரிகிறது என்பதற்கு ஆதாரமான சொற்களை அவர் தேசீயப் பாடல்களிலிருந்து மட்டும் இச்சந்தர்ப்பத்தில் எடுத்துக் காட்டி இக்கட்டுரையை முடிக்கின்றோம்.

பாட்டின் தலைப்பும் அதில் வரும் அடியும் கீழே தருகின்றோம்.

வந்தேமாதரம் – ஆரிய பூமியில்.

பாரத நாடு – யாகத்திலே தவ வேகத்திலே.

நாட்டு வணக்கம் – துங்க முயர்ந்து வளர்கெனக் கோயில்கள் சூழ்ந்தது மிந்நாடே.

பாரததேசம் – மந்திரங் கற்போம், வினைத் தந்திரங் கற்போம் (குட்டிக் காந்தியின் வினைத் தந்திரம். வி.க.)

தொழில் – பிரம்மதேவன் கலையிங்கு நீரே விண்ணினின்று எமை வானவர் காப்பார்.

எங்கள் நாடு – என்னரு முபநிட நூல்கள் எங்கள் நூலே உன்னத ஆரிய நாடெங்கள் நாடே.

வந்தேமாதர மொழிபெயர்ப்பு – காலமெல்லிதழ்களிற் களித்திடுங் காலை நீ.

எங்கள் தாய் – நாவினில் வேதமுடையவள், வெண்மை வளரிமையாசலந் தந்த விறன் மகளாமெங்கள் தாய்.

பாரதமாதா – முன்னையிலங்கை அரக்கர் அழிய, ஆரிய ராணியின் சொல், ஆரிய தேவியின் தோள், போர்க்களத்தே பரஞானமெய்க் கீதை.

திருப்பள்ளியெழுச்சி – தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன.

தசாங்கம் – ஆரிய நாடென்றே யறி.

நவரத்தினமாலை – ஆணிமுத்துப் போன்ற மணி மொழிகளாலே (சமஸ்கிருதம்)

மகாத்மாவின் துவஜம்:- ஆரியக் காட்சி ஓர் ஆனந்தமன்றோ, செந்தமிழ் நாட்டுப் பொருநர் – கொடுந்தீக்கண், மறவர்கள், சேரன்றன் வீரர், சிந்தை துணிந்த தெலுங்கர் – தாயின் சேவடிக்கேயணி செய்திடு துளுவர். (ஆரியருக்கு அடிமைகள்)

லஜபதிராய் – ஆதிமறை தோன்றிய நல்லாரிய நாடெந்நாளும் நீதி மறைவின்றி நிலைத்த திருநாடு, ஆரியர் தம் தர்மநிலை ஆதரிப்பான், ஆரியர் பாழாகா தருமறையின் உண்மைதந்த.

திலகர்:- அன்போடோதும் பெயருடை யாரியன்.

கிருஷ்ணன் துதி:- எண்ணரும் புகழ்க் கீதையெனச் சொலும், எங்களாரிய பூமியெனும்,

கிருஷ்ணன் ஸ்தோத்திரம்:- ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே, ஆரிய நீயுநின் துறமறந்தாயோ, வெஞ்செய லரக்கரை வீட்டிடுவோனே வீரசிகாமணி, ஆரியர்கோனே.

ஆங்கிலப் பயிற்சி:- அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை ஆரியர்க்கிங் கருவருப்பாவதை, இயல்புணர்த்திய சங்கரனேற்றமும், பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள், நாட்டுக்கல்வி – மந்திர வேதத்தின் பேரொலி,

தமிழ்த்தாய்:- உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் (சமஸ்கிருதமே உலகில் சிறந்த பாஷை என்பது கருத்து)

புதுவருஷம்:- ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்.

என்று இவ்வாறாக ஆரிய மேன்மையையே – பார்ப்பனீயத்தின் மேன்மையையே அவரது நோக்கமாக எழுதியிருக்கிறார்.

ஆகவே பாரதிக்கும் கனம் ஆச்சாரியாருக்கும் தோழர் சத்தியமூர்த்தியாருக்கும் பார்ப்பன சூழ்ச்சி, பார்ப்பன ஆதிக்கப் புத்தி ஆகியவைகளில் எவ்வித வித்தியாசமும் காண முடியவில்லை. மற்றபடி தனிப்பட்ட முறையில் அவரது குணங்களைப் பற்றியும் மற்றும் அவரது சரித்திரத்தைப் பற்றியும் கவிபாடுவதில் அவருக்குள்ள கற்பனை அலங்காரம், பகுத்தறிவுக்கு ஏற்ற இயற்கை வருணணை அற்றதன்மை ஆகியவைகளைப் பற்றியும் பிறிதொரு சமயம் விவரிப்பேன். அவசரப்படுபவர்கள் “நவமணி” வருஷ மலரில் கண்டு கொள்ளலாம்.


குடி அரசு – கட்டுரை – 17.10.1937

Monday, 10 January 2022

சபாஷ் அம்பத்கார் - தோழர் பெரியார்

 

சபாஷ் அம்பத்கார்

தோழர் டாக்டர் அம்பத்கார் நாசிக்கில் கூடிய பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மகாநாட்டில் தலைமை வகித்துச் செய்த தலைமைப் பிரசங்கத்தில்,

“”மேல் ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர் களிடத்தில் நம் மீது கருணை ஏற்படும்படி நாம் செய்து வந்த முயற்சிகள் எல்லாம் வீணாய்ப் போய் விட்டன.

இனி அவர்களிடத்தில் சமத்துவமாயும், ஒற்றுமையாயும் வாழ முயற்சித்து நம் சக்தியையும், உழைப்பையும், பணத்தையும் செலவழிப்பது வீண் வேலையாகும். நமது குறைகளும், இழிவுகளும் மேல் ஜாதிக்கார இந்துக்களால் தீர்க்கப்படும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தைத் தான் அளிக்கும்.

இனி நாம் செய்ய வேண்டியது என்ன என்கின்ற விஷயத்தில் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். அம் முடிவு என்னவென்றால்,

நாம் இந்து மதத்தை விட்டு அடியோடு விலகி விடுவது என்பதுதான்.

நமக்கு யார் சுதந்திரம் கொடுக்க மறுக்கிறார்களோ அவர்களை இனி நாம் கெஞ்சக் கூடாது. அவர்களது சம்மந்தத்தை இனி நாம் விலக்கிக் கொள்ள வேண்டும்.



நாம் நம்மை இந்துக்கள் என்று இனி கூறிக் கொள்வது கூடாது.

அதனால்தான் மேல்ஜாதிக்காரர்கள் நம்மை இழிவாகவும் கொடுமை யாகவும் நடத்துகிறார்கள். நாம் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தால் நம்மை இம்மாதிரி கொடுமைப்படுத்த அவர்களுக்கு துணிவு இருந்திருக்காது.

எந்த மதத்தினர் உங்களுக்கு சம அந்தஸ்து கொடுத்து சமத்துவமாய் நடத்து கிறார்களோ அப்படிப்பட்ட மதம் எதுவாயினும் அதில் சேர்ந்து கொள்ளுங்கள்.

பிறக்கும்போதே நான் தீண்டப்படாதவனாய்ப் பிறந்தேன் என்றாலும், அது நான் செய்த குற்றமல்ல. ஆனால் இறக்கும்போது நான் தீண்டப்படாதவனாய் இறக்க மாட்டேன். அதற்கு மார்க்கம் என் கையிலேயே இருக்கிறது.

அதாவது நான் ஒரு இந்துவாய் இறக்கப் போவதில்லை” என்று பேசி இருக்கிறார்.

இப்பேச்சுக்குப் பிறகு சுமார் 15000 பேர்கள் கூடி உள்ள அம்மகாநாட்டில் ஏகமனதாய் ஒரு தீர்மானம் நிறைவேறி இருக்கிறது.

அதாவது,

“”ஆதி இந்துக்கள் இந்துமதத்தை விட்டு அடியோடு விலகிவிட வேண்டும். சமத்துவ பாவிப்பு உள்ள வேறு எந்த மதத்திலாவது சேர்ந்து கொள்ள வேண்டும்” என்பதாகும்.

இதற்கு இந்துக்கள் என்ன பதில் சொல்லுகிறார்கள், “”வருணாச்சிரமமும் கீதை உபதேசமும் எனது இரு சுவாசங்கள்” என்றும்,

“”இந்து மதமே நானாய் இருக்கிறேன்” என்றும் சொல்லும் காந்தியாரும்,

மதத்தில் நாங்கள் பிரவேசிப்பதில்லை என்றும், பழய கலைகளையும் பழய பழக்க வழக்கம் தொழில் முறை ஆகியவைகளையும் வெகு பத்திரமாய் காப்பாற்றிக் கொடுப்போம் என்றும்,

இந்துக்களுக்கும் வருணாச்சிரம தர்மிகளுக்கும் வாக்குறுதியும் பாதுகாப்பும் அளித்திருக்கும் “”சமதர்ம” காங்கிரஸ்காரர்களும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.

தோழர் அம்பத்கார் அவர்கள் பேசியிருக்கும்  பேச்சும், பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மகாநாட்டில் தீர்மானித்து இருக்கும் தீர்மானமும் புதிதல்ல. அல்லது அவர்களே முதல் முதல் கண்டுபிடித்த சொந்தக் கருத்தல்ல.

ஏனெனில்,

இந்து மதத்தை பார்ப்பனரல்லாத மக்கள் விட்டுவிட வேண்டுமென்றும், யாரும் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது என்றும், சுயமரியாதை இயக்கமானது 1925 முதலே சங்குநாதம் செய்து வருகிறது.

சென்ற ஜன கணிதத்தில் அனேக ஜாதி இந்துக்கள் என்பவர்களே தங்களை இந்துக்கள் அல்ல என்று பெயர் கொடுத்திருக்கிறார்கள்.

தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் தீண்டப்படாத வகுப்பு என்பதைச் சேர்ந்தவர் அல்ல என்று சொல்லப்படுபவரானாலும், தான் சாகும்போது இந்துவாய்ச் சாகப் போவதில்லை என்று சுமார் 10 வருஷத்துக்கு முன்பே சொல்லி இருக்கிறார்.

அதுமாத்திரமல்லாமல் இந்துமதம் என்பதாக ஒரு மதமே இல்லை என்றும், அது ஜாதி பாகுபாட்டின் பயனாய் பயன் அனுபவிக்கும் சோம்பேறிக் கூட்டத்தின் கற்பனை என்றும் சொல்லி, அந்தப்படி பல மகாநாடுகளில் பல தீர்மானங்களும் செய்யச்செய்திருக்கிறார்.

இவ்வளவோடு மாத்திரமல்லாமல் மனு நூலையும் இராமாயணத்தையும் சுட்டெரிக்க வேண்டும் என்று, 1922ல் திருப்பூரில் கூடிய சென்னை மாகாண தமிழ்நாடு காங்கிரஸ் மகாநாட்டில் மாகாண காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியாய் இருக்கும்போதே கூறி இருக்கிறார்.

அந்தப்படியே சுயமரியாதை மகாநாட்டில் ராமாயணமும், மனுதர்ம சாஸ்திரங்களும் சுட்டெரிக்கப்பட்டுமிருக்கின்றன.

மற்றும் கேரள தேசத்து அதாவது மலையாளம், கொச்சி, திருவாங்கூர் தேசத்து தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களாகிய தீயர், ஈழவர், நாடார், பில்லவா ஆகிய சுமார் 20 அல்லது 30 லட்சம் ஜனத் தொகை கொண்ட சமூகம் தங்களது மகாநாட்டிலும் தாங்கள் இந்து மதத்தை விட்டுவிட வேண்டும் என்றும், தங்களை இனி யாரும் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது என்றும், தங்களுக்கு மதத்தில் நம்பிக்கையே இல்லை என்றும் பல தீர்மானங்கள் இந்த 6, 7 வருஷ காலமாகவே 10000க்கணக்கான மக்கள் கூட்டத்தில் ஏகமனதாய் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்றன.

கடைசியாக 1933ல் கூட்டப்பட்ட  கு.N.ஈ.க. யோகம் என்னும் அவர்களது சமூக மகாநாட்டில் மிதவாதி பத்திராதிபரும் பெரிய செல்வவானும் சென்னை சட்டசபை அங்கத்தினருமான தோழர் சி.கிருஷ்ணன்,  ஆ.அ., ஆ.ஃ., அவர்களது தலைமையில் “”ஈழவ சமூக மக்களுக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை. ஆதலால் ஈழவ சமூக மக்கள் தங்களை இனிமேல் இந்துக்கள் என்று யாரும் சொல்லிக் கொள்ளக் கூடாது”  என்று தீர்மானித்து இருக்கிறார்கள்.

ஆகவே பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மகாநாட்டுத் தீர்மானமும் தலைவர் அம்பேத்கார் அவர்களது வீர கர்ஜனையும் எதுவும் புதிதல்ல.

இவற்றிற்கு இதுவரை காந்தியாரும், காங்கிரசுக்காரரும், வருணாச் சிரமிகளும், பார்ப்பனர்களும், இந்துமத பாதுகாப்பாளர்களும் என்ன பதில் சொல்லி வந்தார்களோ, எப்படி கருதினார்களோ அப்படியேதான் இதையும் கருதுவார்கள்  இதற்கும் பதில் சொல்லுவார்கள் என்பதில் சிறிதும் அய்யமில்லை.

தீண்டப்படாதவர்கள் விஷயமாகவோ, ஜாதி வித்தியாசம் விஷயமாகவோ, இந்து மத சீர்திருத்த விஷயமாகவோ இந்து மதம் என்றும் சாதி வித்தியாசம் என்றும் ஏற்பட்ட காலம் முதலே முயற்சிகள் செய்யப்பட்டுத்தான் வந்திருக்கின்றன.

கபிலர், திருவள்ளுவர், ராமானுஜர் முதலாகியவர்கள் “”தெய்வத் தன்மையில்” இருந்து பாடுபட்டிருப்பதாய் சரித்திரம் கூறுகின்றன. புத்தர் முதலிய அரசர்கள் பாடுபட்டிருப்பதாய் ஆதாரங்கள் கூறுகின்றன.

ராம் மோகன்ராய் மற்றும் சுவாமி தயானந்த சரஸ்வதி, ராமலிங்க சுவாமிகள், விவேகானந்தர் முதலிய ஞானவான்கள் முயற்சித்திருப்பதாய்ப் பிரத்தியட்ச அனுபவங்கள் கூறுகின்றன.

இவர்கள் எல்லாம் இன்று பூஜிக்கப்படுகிறார்கள் என்றாலும் காரியத்தில் ஒரு பயனும் ஏற்பட்டதாகக் கூற முடியாது.

மேற்கண்ட பெரியார்களுக்கு சிஷ்யர்களாக 100 பேர்களோ பதினாயிரம் பேர்களோ ஒரு லட்சம் பேர்களோ இருக்கலாம்.

அவரவர்கள் ஸ்தாபனங்களில் ஒரு சில லக்ஷம் அங்கத்தினர்கள் இருக்கலாம். மற்றப்படி காரியத்தில் நடந்ததென்ன என்று பார்த்தால் பழய நிலைமையேதான். சட்டதிட்டங்கள் மூலம், வருணாச்சிரம கூட்டங்கள் மூலம் பத்திரப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

ஆகவே இவ்விஷயத்தில் ஏதாவது ஒரு காரியம் தகுந்த அளவுக்கு நடைபெற வேண்டுமானால் மேல்கண்டபடி சுவாமிகள் என்றும், அவதாரங்கள் என்றும், மகாத்மா என்றும், பூஜிக்கப்படத்தக்கவர்கள் என்றும் சொல்லி சொல்லிக் கொள்ளுபவர்களால் ஒரு காரியமும் நடைபெறாது. இவர்களை பண்டார சன்னதிகள், சங்கராச்சாரியார்கள் என்று சொல்லப் படுபவர்களுக்கு ஒரு படி மேலாகச் சொல்லலாம். ஆனால் பொது ஜனங்களால் வெறுக்கப்படுகிறவர்களாலும் தூற்றப்படுகின்றவர்களாலும் தான் அவசியமான ஏதாவது மாறுதல்கள் காரியத்தில் நடைபெறக்கூடும்.

எனவே தோழர் அம்பத்கார் அவர்களின் கர்ஜ்ஜனையும், வீரமும், ஞானமும் நிறைந்த தீர்மானமும் பொது ஜனங்களால் எவ்வளவுதான் வெறுக்கப்பட்ட போதிலும் அவர் எவ்வளவு தான் தூற்றப்பட்ட போதிலும் அதுதான் தாழ்த்தப்பட்ட மக்கள் மாத்திரமல்லாமல் இந்தியாவில் உள்ள இந்துக்களில் பார்ப்பனரல்லாத மக்களாகிய 100க்கு 97 விகிதாச்சாரமுள்ள 24 கோடி இந்து மக்களின் விடுதலைக்கு சர்வசமய சஞ்சீவி ஆகப் போகிறது.

இதைப் பாராட்டும்போது நாம் சொல்வதெல்லாம் அம்பேத்கார் அவர்கள் பார்ப்பன சூட்சிக்கு ஏமாந்து மறுபடியும் இத் தீர்மானத்தை மாற்றிக் கொள்ளக் கூடாது என்பதோடு வைதீகமும், மூடநம்பிக்கையும், குருட்டு பழக்க வழக்கமும் கொண்ட வேறு எந்த மதத்திலும் விழுந்து விடக்கூடாது என்றும் எச்சரிக்கை செய்கிறோம்.

அனேகமாய் மதங்கள் என்பவைகள் எதுவும் ஏதோ ஒருவிதமான குருட்டு நம்பிக்கை மீதும் முரட்டுப் பிடிவாதத்தின் மீதே தான் கட்டப் பட்டிருக்கின்றன. எல்லா மதங்களுக்கும் ஒரே அஸ்திவாரம் தான்.

ஆதலால் “”ஒரு தப்பிதத்தின் பாவ நிவர்த்திக்கு ஆக மற்றொரு தப்பிதம் செய்யக் கூடாது” என்கின்ற பழமொழியை இந்தச் சமயத்தில் நன்றாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது நமது ஆசையாகும்.

நிற்க தோழர் அம்பேத்காரின் வாக்குமூலத்துக்கும் பம்பாய் ஆதி திராவிட மகாநாட்டு தீர்மானத்துக்கும் காந்தியாரும், பார்ப்பனர்களும் என்ன பதில் சொன்னார்கள் என்று பார்ப்போம். தோழர் காந்தியார் தனது வழக்கமான சூட்சித் திறத்தைக் காட்டும் முறையில் “”தோழர் அம்பேத்கார் இந்தப்படி பேசியதை நான் நம்பவில்லை” என்பதாக பாசாங்கு காட்டிவிட்டு பிறகு அந்த தீர்மானமும் அவரது பேச்சும் துர்அதிர்ஷ்டவசமானது என்றும், கோபத்தில் பேசியது என்றும், தீண்டாமை விஷயத்தில் ஏதோ அங்கொன்று இங்கொன்றுமாகத்தான் தவறுதல் நடக்கின்றனவென்றும், அதற்கு ஆக இப்படி செய்யக் கூடாதென்றும், அம்பேத்காருக்கு கடவுளிடம் நம்பிக்கை இருக்குமானால்தான் தன் அபிப்பிராயங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லிவிட்டு,

மதம் என்பது ஒருவருக்கு மாற்றிக் கொள்ளக்கூடியது அல்ல வென்றும், அது முடியாதது என்றும், மதம் மாறிவிட்டதினாலேயே தீண்டாமை ஒழிந்துவிடாது என்றும் சொல்லி அம்பேத்காரை நாஸ்திகர் என்று ஜனங்கள் பழிக்கும்படி விஷமம் செய்து இருக்கிறாரே ஒழிய, அக் கொடுமைகளுக்கு  திருப்தியும் சாந்தியுமளிக்கத்தக்க வேறு எவ்வித சமாதானமும் சொல்லவில்லை. ஆகவே காந்தியாரின் கருத்துக்களை ஒரு வாக்கியத்தில் சொல்வதாய் இருந்தால் அம்பேத்காருடன் பந்தயம் கட்டுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதாவது உன்னால் முடியாது, உன் இஷ்டப்படி நடக்காது, உன்னால் ஆனதைப் பார், உன்னை துலைத்து விடுகிறேன் என்பதுதான் கருத்தாகும்.

மற்றபடி காங்கிரஸ்காரர்களுடையவும், பார்ப்பனர்களுடையவும் பதில் என்ன என்று பார்ப்போமானால்,

சுதேசமித்திரன் பத்திரிகையானது அம்பேத்காரை பரிகாசம் செய்கிறது.

அதாவது “”ஏரியோடு கோபித்துக் கொண்டு கால் கழுவாமல் போகிறார் அம்பேத்கார். அதற்கேற்ற தீர்மானம் செய்திருக்கிறது ஆதி இந்து மகாநாடு” என்று ஏளனம் செய்திருக்கிறது.

அதாவது ஜாதி இந்துக்கள் சமூகம் ஏரியைப் போல் இருக்கிறதென்றும், அம்பேத்காரும் 6 கோடி தீண்டப்படாத மக்களும் (வெளிக்குப் போய்) கால் கழுவாத மக்கள் என்றும், வெளிக்குப் போய் கால் கழுவாமல் அசுத்தமாய் இருக்கிறவன் ஏரியுடன் கோபித்துக் கொண்டால் ஏரிக்கு ஒரு குறைவும் ஏற்படாதென்றும், ஏரி சுத்தமாக இருக்கும் என்றும் கோபித்துக் கொண்டு கால் கழுவாமல் போகிறவன் தான் அசிங்கத்துடன் இருக்க வேண்டும் என்றும், ஆதலால் அம்பேத்காரும் தீண்டப்படாதவர்களும் வேறு மதத்துக்கு போய்விட்டால் ஜாதி இந்துக்களுக்கு லாபமே ஒழிய நஷ்டமில்லை என்றும் பொருள்பட அதற்கு ஏற்ற பழமொழியைச் சொல்லுகிறது.

அதோடு “”நீண்டகாலப் பழக்கவழக்கங்களை திடீரென்று மாற்றி விடமுடியாது”

“”தீண்டாமை ஒழிய வேண்டுமானால் தாழ்ந்த வகுப்பினரின் மனோபாவத்திலும் விசேஷ மாறுதல் ஏற்பட வேண்டும்”

அம்பேத்காரின் பேச்சும் ஆதி இந்துக்களின் தீர்மானமும் “”காரியத்தில் நடக்கக்கூடிய காரியம் அல்ல” வெறும் வாய் பேச்சு மிரட்டல் என்கிறது.

டாக்டர் அம்பேத்காரே தான் வேறு மதத்துக்கு போகக் கூடுமே ஒழிய மற்ற தாழ்ந்த வகுப்பார் இவர் பேச்சை கேட்க மாட்டார்கள் என்றும் தைரியம் கொள்ளுகிறது.

அதோடு கூடவே அம்பேத்காரை நம்பாதீர்கள் நம்பி எந்த மதக்காரரும் அவரை சேர்த்துக் கொள்ளாதீர்கள் என்று மற்ற மதக்காரர்களுக்கும் எச்சரிக்கை செய்கிறது. கடசியாக இதனால் எல்லாம் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை என்றும் வீரம் பேசுகிறது.

மற்றபடி அக்கிரகாரத் தெரு திண்ணைகளில் இருக்கும் மடிசஞ்சிகளும், அவர்களது வார்சுகளும், காபிக் கடைகளிலும், வக்கீல்கள் தாழ்வாரங்களிலும் சுதேசமித்திரனின் பழமொழி போலவே அதைவிட சற்று மேன்மையாக,

“”மூக்கு மயிர் பிடுங்கப்படுவதால் ஆள் பாரம் குறைந்து விடப் போகிறதா?” என்று அலட்சியமாய் பேசப்படுகின்றன.

ஆகவே அம்பேத்கார் சொன்ன பேச்சும், தீர்மானமும் பல காலமாய் இருந்து வந்திருப்பதால் பழய பாட்டானதால் பார்ப்பனர்களுக்கும் இந்து மதப் பித்தர்களுக்கும் சிறிதும் உருத்தப் போவதில்லை என்பது உறுதி.

ஆனாலும், தோழர் அம்பேத்காருடைய பேச்சுக்கும், ஆதி இந்துக்கள் தீர்மானத்துக்கும் ஏதாவது மதிப்பு இருக்க வேண்டுமானால், அவர் உடனே இந்தக் காரியத்தை அதாவது ஆதி இந்துக்கள் ஆதி திராவிடர்கள் முதலிய தீண்டப்படாத வகுப்பு என்பவர்களிடையில் உடனே பிரசாரம் செய்து அவர்களை இந்து மதத்திலிருந்து வெளிக் கிளப்பிவிட வேண்டும். தோழர் அம்பேத்காரை பொறுத்தவரையில் சிறிது நாள் பொறுத்துத்தான் மதத்தை போக்கிக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் நமது பார்ப்பனர்களுக்கு இப்படிப்பட்ட ஆட்கள் இந்துமதத்தை விட்டுப் போய்விட்டால் இவர்களுடைய தொல்லை ஒழிந்தது என்று சந்தோஷமடைந்து விடுவார்கள். ஆகையால் மதம் மாறாமல் இருந்து கொண்டு எவ்வளவு பெயர்களை மதத்தில் இருந்து வெளியாக்கலாமோ அந்தக் காரியத்தை செய்ய வேண்டியது அம்பேத்காரின் முதல் கடமையாகும். பூனா ஒப்பந்தத்தால் ஏமாற்றப்பட்ட அம்பேத்காருக்கு இப்பொழுதாவது உண்மை கண்டு கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டதற்கு ஆக நாம் அவரை மனமாரக் கையாரப் பாராட்டுகிறோம்.

மற்றவை மற்றொரு சமயம் எழுதுவோம்.

-- குடி அரசு  தலையங்கம்  20.10.1935

ஜாதி ஒழிப்பில் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி - தோழர் பெரியார்

 

ஜாதி ஒழிப்பில் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி


அம்பேத்கர் உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இவ்வளவு பெரிய அறிஞராக விளங்கக் காரணம் என்ன? படிப்பு, திறமை, என்று சொல்வதெல்லாம் இரண்டாவதுதான். அவரைவிடப் படித்தவர்கள், திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் அம்பேத்கர் பெரிய அறிவாளியாக விளங்கக் காரணம் அவரது படிப்பு, திறமை என்பவை மாத்திரமல்ல; அவருடைய படிப்பும் திறமையும் நமக்குப் பயன்படுகிற தன்மையில் இருப்பதால்தான் அவரை அறிவாளி என்று சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் படிப்புத் திறமையெல்லாம் வேறு விதத்தில் பயன்படுத்தப்படுகிறது. அம்பேத்கர் ஒரு நாஸ்திகர். அவர் இன்றல்ல; நீண்ட நாளாகவே நாஸ்திகர். ஒன்று சொல்லுகிறேன். உலகத்தில் யார் யார் பெரிய அறிவாளிகளாக இருக்கிறார்களோ அவர்களெல்லாம் நாஸ்திகர்கள்தான்; நாஸ்திகனாக இருக்கிறவர்கள்தான் ஆராய்ச்சியின் சிகரமாக, அறிவு பிரகாசிக்கக்கூடிய மனிதராக ஆகமுடிகிறது. அவர்கள்தான் தங்கள் படிப்பை, திறமையைப் பயன்படுத்துகிறார்கள்.



டாக்டர் அம்பேத்கர் ஒரு பெரிய அறிஞர். அதன் காரணமாகவே அவர் ஒரு பெரிய நாஸ்திகர். அவர் தனது சொந்த அறிவை உபயோகித்து தான் கண்டதைத் தைரியமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். நம் நாட்டில் அறிஞர் கூட்டம் என்பவரெல்லாம் எடுத்துச் சொல்லப் பயப்படுவார்கள். அவர் இதுபோலல்லாமல் தைரியமாக எடுத்துச் சொல்லி வந்திருக்கிறார்.

இப்பொழுது அதிசயமாக உலகம் பூராவும் நினைக்கும்படியான சம்பவம் ஒன்று நடந்தது. அதுதான் அம்பேத்கர் புத்தமதத்தில் சேர்ந்தது. இப்போது பேருக்குத்தான் அவர் புத்தமதத்தில் சேர்ந்ததாகச் சொல்கிறாரே தவிர அம்பேத்கர் வெகுநாட்களாகவே புத்தர்தான்.

டாக்டர் அம்பேத்கர் 20, 30 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தே இந்து மதத்தை ஒத்துக்கொள்வதில்லை. அவர் காந்தியைப்பற்றிச் சொல்லும் போது காந்தி ஒரு பச்சை இந்து. மனுதர்ம முறை, வருணாசிரம முறையைப் பாதுகாக்க நினைப்பவர். அவர் ஆதித்திராவிட மக்களுக்கு என்ன செய்ய முடியும்? என்று கடுமையாகத் தாக்கி வருணாசிரம ஆதார சுலோகங்களையெல்லாம்கூட எடுத்துப்போட்டு, காந்தி பச்சை இந்துவாக இருப்பதால்தான் அவர் புத்தி இப்படிப் போகிறது என்று எழுதினார்.

1930_35லேயே ஜாதி ஒழிப்பில் தீவிரக் கருத்துள்ளவராக இருந்தார்; ஜாதி ஒழிப்புக்காக பஞ்சாபில் (ஜாத்மத்தோடகமண்டல் என்று கருதுகிறேன்.) ஒரு சபை ஏற்படுத்தியிருந்தார்கள். என்னைக்கூட, அதில் ஒரு அங்கத்தினராகச் சேர்த்திருந்தார்கள். அந்தச் சபையினர் ஜாதி ஒழிப்பு மாநாடு என்பதாக ஒரு மாநாடு கூட்ட ஏற்பாடு செய்து அந்த மாநாட்டுக்கு அம்பேத்கர் அவர்களைத் தலைமை வகிக்கக் கேட்டுக்கொண்டார்கள். அவரும் ஒத்துக் கொண்டு தலைமையுரையாக (address) 100 பக்கம் ஆங்கிலத்தில் எழுதினார். அதில் பல ஆதாரங்களை எடுத்துப்போட்டு ஜாதி ஒழிய இந்து மதமே ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். இதைத் தெரிந்து அவரிடம் உங்கள் மாநாட்டுத் தலைமை உரையை முன்னாடியே அனுப்புங்கள் என்று கேட்டு வாங்கிப் பார்த்தார்கள். அதில் ஆதாரத்தோடு இந்து மதம் ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்துவிட்டு உங்கள் தலைமையுரை எங்கள் சங்க மாநாட்டில் படிப்பதற்கு ஏற்றதாக இல்லை. ஜாதி ஒழிப்புச் சங்கமே தவிர, இந்து மத ஒழிப்புச் சங்கமல்ல. ஆகையால் நீங்கள் இந்து மதம் ஒழிய வேண்டும் என்கிற அந்த ஒரு அத்தியாயத்தை (Chapter) நீக்கிவிடவேண்டும் என்று அம்பேத்கரிடம் கேட்டார்கள். அதற்கு அம்பேத்கர் ஜாதி ஒழிப்பிற்கு இந்து மதம் ஒழியவேண்டும் என்கிறதுதான் அஸ்திவாரம். அதைப்பேசாமல் வேறு எதைப்பேசுவது? ஆகையால், அதை நீக்கமுடியாது என்று சொல்லிவிட்டார்.

பின் மாளவியா ஏதேதோ சமாதானமெல்லாம் சொன்னார். அதற்கும் அவர் நான் தலைமை உரையைப் பேசுகிறபடி பேசுகிறேன்; நீங்கள் வேண்டுமானால் அதைக் கண்டித்து மாநாட்டில் பேசுங்கள்: தீர்மானம் வேண்டுமானாலும் போடுங்கள், நான் முடிவுரையில் அதுபற்றிப் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டார். பிறகு மாநாடே நடக்காமல் போய்விட்டது. நான் அம்பேத்கரிடம் அந்தப் பேச்சை வாங்கி ஜாதியை ஒழிக்கும் வழி என்று தமிழில் புத்தகமாகப் போட்டு வெளியிட்டேன். அவர் அப்போதே அவ்வளவு தீவிரமாக இருந்தார்.

நாம் இராமாயணத்தைப்பற்றி வாயால் பேசிக்கொண்டிருக்கும் போதே, அதாவது 1932 லேயே அவர் இராமாயணத்தைக் கொளுத்தினார். அந்த மாநாட்டுக்கு சிவராஜ்தான் தலைவர், இதெல்லாம் குடியரசில் இருக்கிறது.

அவர் ஒரு தடவை சென்னைக்கு வந்திருந்தபோது, கீதையைப்பற்றிப் பேசும்போது, கீதை ஒரு பைத்தியக்காரனின் உளறல் என்றே பேசினார். அப்போது சி. பி. ராமசாமி அய்யர் போன்றவர்கள் இதென்ன அக்ரமம்; வெறும் அம்பேத்கர் பேசியிருந்தால்கூடக் கவலையில்லை; ஒரு கவுன்சில் மெம்பராக இருக்கிற அம்பேத்கர் அதுவும் சென்னையில் வந்து, கீதை பைத்தியக்காரனின் உளறல் என்று பேசுவதென்றால் அக்ரமம் என்றெல்லாம் கூச்சல் போட்டார்கள்.

நான் 1930இல் ஈரோட்டில் நடந்த சீர்திருத்த மாநாட்டிற்கு அம்பேத்கரைஅழைத்தேன். அந்த மாநாட்டுக்கு, சண்முகஞ் செட்டியார் வரவேற்புரை அளித்தார். என்ன காரணத்தாலோ அம்பேத்கர் வரவில்லை. அவருக்குப் பதிலாக ஜெயக்கர் வந்திருந்தார். அவர் ஏதோ நம்மைப் பாராட்டிப் பேசிவிட்டுப் போய்விட்டார். அம்பேத்கர் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அந்தச் சமயத்தில்தான் அம்பேத்கர் இஸ்லாம் ஆகப்போகிறேன் என்று சொன்னார். நானும் ராமனாதனும் இங்கிருந்து தந்தியடித்தோம். தயவுசெய்து அவசரப்பட்டுச் சேர்ந்துவிடாதீர்கள். குறைந்தது 1லட்சம் பேராவது கூட பின்னால் வந்தார்கள் என்றால்தான் அங்கும் மதிப்பிருக்கும்; இல்லாவிட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும். அவர்களோ கைவைக்கக்கூடாத மதம் (Perfect Religion) என்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். எவனுக்குமே கைவைக்க உரிமையில்லை என்பவர்கள். வெறும் தொழுகை அது இது எல்லாம் உங்களுக்கு ஜெயில் போலத்தான் இருக்கும். தனியே போவதால் அங்கும் மரியாதை இருக்காது, உதைக்க வந்தால்கூட சிபாரிசுக்காவது ஆள்வேண்டாமா? என்று சொன்னோம். அதன் பிறகு யார் யாரோ அவர் வீட்டிற்குப் போய் மதம் மாறக்கூடா தென்று கேட்டுக் கொண்டார்கள். பத்திரிகையில் வந்தது. அப்போதே அவர் மதம் மாறுவதில் தீவிர எண்ணம் வைத்திருந்தார். எப்படியோ கடைசியாக இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார். என்றாலும் அவர் ஏற்கெனவே புத்தர்தான்.

நாங்கள் உலக புத்தர் மாநாட்டிற்குச் சென்றபோது அவரை பர்மாவில் சந்தித்தேன். புத்தர் மாநாட்டில் நான் பேசுவதாக ப்ரோகிராமில் (நிகழ்ச்சி நிரல்) போட்டிருந்தார்கள். ஆனால், எனக்குச் சொல்லவில்லை. நான் போனேன். பிறகு என்னமோ வேறொருவரை பேசச் சொல்லிவிட்டார்கள் அப்போது அம்பேத்கர் என்னிடம் இன்றைக்குக் கையெழுத்துப்போட்டு புத்தமதத்தில் சேர்ந்துவிடுவோம், என்று சொன்னார்.

மைசூர் மகாராஜா புத்தமதக் கொள்கையில் ரொம்பப் பற்றுள்ளவர். நானும் மைசூரிலேயே நிரந்தரமாகத் தங்கலா மென்றிருக்கிறேன். அவர் எத்தனையோ ஏக்கர் நிலம்கூட தருவதாகச் சொல்லி இருக்கிறார். இப்படி இதையெல்லாம் வைத்து ஒரு பெரிய யூனிவர்சிட்டி (பல்கலைக்கழகம்) ஆரம்பிக்காமல் நாமும் சாகிறவரையில் பேசிக்கொண்டேயிருந்துதான் என்னாவது? ஏதாவது சாவதற்குள் செய்ய வேண்டாமா? என்று இன்னும் என்னென்னமோ சொன்னார். அதோடு தைரியமாக இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார். சேர்ந்த பிறகு ஒரு அறிக்கை வெளியிட்டார். நான் இனிமேல் ராமன், கிருஷ்ணன், சிவன், இந்திரன் முதலியவைகளைக் கடவுளாக ஏற்றுக் கொள்வதில்லை. அவதாரங்கள் என்பவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. உருவ வணக்கத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ஜாதிமுறையில், இன்னும் மோட்சம் நரகம் இவற்றை நம்பு-வதில்லை; சடங்கு, திதி - திவசங்கள் ஆகியவைகளில் நம்பிக்கையில்லை. இனிமேல் இவைகளைச் செய்யமாட்டேன். இதுபோல இன்று நாம் எதை எதைக் கண்டிக்கிறோமோ, ஒத்துக்கொள்வதில்லையோ, அதையெல்லாம் சொல்லியிருக்கிறார்.

அம்பேத்கர் மக்களுக்கு வழி காட்டுபவர். ஜாதிமதக் குறைபாடுகளை மனதில்பட்டதைத் தைரியமாக எடுத்துக் கூறிவந்தார். சுயநலமில்லாமல் பாடுபட்டவர்; இந்தியா பூராவும் விளம்பரம் பெற்றவர். அவர் தமது மக்களுக்குப் பௌத்த மதத்திற்குப் போகும்படி வழி காட்டியிருக்கிறார். இங்கு பலபேர் மாறக்கூடிய நிலை ஏற்படும். தன் சமுதாயத்திற்குப் படிப்பு, உத்தியோகம் முதலிய காரியங்களில் முயற்சி செய்து பல வசதிகளைச் செய்திருக்கிறார். உத்தியோகத்தில் 100க்கு 15 என்று வாங்கிக்கொடுத்தார்.

அவர் உள்ளபடியே ஒரு பெரிய தலைவர். அவருக்குப் பிறகு அவரைப் போன்ற ஒரு தலைவர் தோன்ற முடியாது. அவர் சமதர்ம காலத்திற்குமுன் ஏற்பாடு செய்யப்பட்ட தலைவர். அம்பேத்கருக்குப் பிறகு அவரைப் போன்ற தலைவர் ஏற்பட முடியாது.

----------------- தந்தை பெரியார் 28.10.1956 இல் வேலூர் நகராட்சி மன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை - 7.12.1956)


Sunday, 9 January 2022

திருவாங்கூர் பிரகடனம்

 

திருவாங்கூர் பிரகடனம்


திருவிதாங்கூர் அரசாங்கமானது தனது ஆதிக்கத்துக்கு உட்பட்ட கோவில்களை தாழ்த்தப்பட்ட மக்கள் உள்பட சகல வகுப்பு இந்துக்கள் என்பவர்களும் சென்று வணங்கலாம் என்று அனுமதி அளித்து அரச பிரகடனம் பிறப்புவித்துவிட்டது.

அந்த ராஜ்யமானது வைதீகப் பித்தும் வருணாச்சிரமக் குரும்பும் கொண்ட ராஜ்யமாகும். விவேகாநந்தர் அந் நாட்டை ஒரு பைத்தியக்காரர்கள் ஆஸ்பத்திரி என்று சொன்னார். தோழர்கள் லஜபதிராய் அவர்களும், காந்தியாரும், பண்டித ஜவஹரும் அந்நாட்டிற்குச் சென்றிருந்த காலையில் அவர்கள் கோவிலுக்குள் போக அனுமதிக்கப்படவில்லை.

அந் நாட்டின் தீட்டின் தன்மையானது மனிதனை மனிதன் கண்ணால் பார்ப்பதினாலும், நிழல் மேலே படுவதினாலும், பேசுவதினாலும் ஒட்டிக் கொள்ளக்கூடிய அவ்வளவு கொடுமையான தன்மையது என்று சொல்லலாம். அதோடு இன்ன இன்ன ஜாதி இவ்வளவு இவ்வளவு தூரத்தில் இருக்க வேண்டும் என்ற தூர வித்தியாசமும் உண்டு. கீழ் ஜாதியார் என்பவர்களுக்கு எப்படி இவ்வளவு இழிவும் கொடுமையும் உண்டோ அதேபோல் அந்நாட்டில் மேல் ஜாதியார் என்பவர்களுக்கும் உயர்வும் சௌகரியங்களும் போக போக்கியங்களும் உண்டு. அதாவது,

ஒருவன் பார்ப்பான் என்று சொல்லிக்கொள்ளுவானானால் அவனுக்கு ஆயுள் உள்ள அளவும் அரசாங்க சத்திரங்களில் அப்பளம், வடை பாயாசத்துடன் சாப்பாடு கிடைக்கும். சாப்பாடு மாத்திரமல்லாமல் பெண்கள் விஷயத்திலும் பார்ப்பனன் என்பவர்களுக்குக் குறையே இருக்காது. பார்ப்பானுக்குப் பெண் விஷயத்தில் உள்ள சௌகரியத்திற்கு இரண்டொரு உதாரணம் கூறலாம். அதாவது ஒரு மலையாளியைப் பார்த்து ஒரு நம்பூதிரிப் பார்ப்பான் “அடே சுகுமார உன் பாரியை மிகுந்த சவுந்திரவதி என்று கேள்விப்பட்டேன். அது உண்மையா?” என்றால், “அவடத்திய கடாக்ஷத்தால் ஆமாம் சுவாமிகளே” என்று பதில் சொல்லுவதும் அதற்கு அந்தப் பார்ப்பனன்,

“அப்படியானால் நாம் அவாளை அனுபவித்துப் பார்க்க வேண்டாமா” என்றால் “பாக்கியம் பாக்கியம்” என்று கூறிக்கொண்டு ஆனந்தக் கடலில் மூழ்கி குதியாட்டம் போட்டுக்கொண்டு ஓடோடிப் போய் பாரியாளை அழைத்து வந்து பார்ப்பானிடம் ஒப்புவித்து “அவடத்திய சவுகரியம் போல் அனுப்பிக் கொடுக்கலாம்” என்று சொல்லிவிட்டு திரும்பிக் கூடப் பார்க்காமல் போவதும், மற்றும் பெரிய வீடு பாரம்பரியமாய் பெருமை உள்ள குடும்பம் என்பவைகளில் உள்ள பெண்கள் தங்கள் பார்ப்பனர்களை கணவனாகக் கொள்வதிலும் சொல்லிக்கொள்வதிலும் பெருமை அடைவதும் அப்பார்ப்பனர்கள் தங்களுக்கு புருஷனாய் இருப்பதற்காக சம்பளம் 100, 200 என்பதாக ராயல் குடும்பம் என்பது வரையில் கொடுப்பதும் வழக்கமாகவும் பெருமையாகவும் இருந்து வந்த நாடாகும். இப்போது மற்ற எல்லாத் துறைகள் போலவே இதிலும் சில மாறுதல் இருக்கலாம்.

மற்றும் பார்ப்பனர் சாப்பிட்ட எச்சில் இலைகளை அரசாங்கம் கண்டிராக்ட் விடுவதும் கண்டிராக்டில் எடுத்தவர் இலை ஒன்றுக்கு காலணாவுக்கு குறையாமல் அரையணா ஒரு அணாவுக்கு விற்பதுமான ராஜ்யமாகவும் இருந்தது. அப்படிப்பட்ட சுயமரியாதையும் மனிதத் தன்மையும் பகுத்தறிவும் குறைந்திருந்த அந்த நாடானது அந்நாட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்குள் ஏற்படுத்தப்பட்ட சுயமரியாதை உணர்ச்சியின் காரணமாக இப்போது ஒரு பெரும் புரட்சிகரமான சேதியையும் செய்கையையும் கேட்கவும் பார்க்கவுமான தன்மை ஏற்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால் இந்த திருவாங்கூர் அரச பிரகடனத்தைக் கண்ட பலர் இப்பிரகடனம் ஏற்படக் காரணமாய் இருந்தது வைக்கம் சத்தியாக்கிரகம் என்பதாகக் கருதுகின்றனர் எழுதுகின்றனர் பேசுகின்றனர். அதோடு கூடவே சிலர் தோழர் ஈ.வெ. ராமசாமியையும் பாராட்டி பேசியும் எழுதியும் நேரில் கடிதங்களும் எழுதுகிறார்கள்.

மற்றும் ஒரு சிலர் இதற்கு காங்கிரசு தான் காரணம் என்றும் காந்தியார் அனுமதி அளித்ததென்றும் பலவிதமாக எழுதி மக்களை மயக்குகின்றார்கள். திருவாங்கூர் பிரகடனத்துக்கு காங்கிரசோ, காந்தியாரோ, வைக்கம் சத்தியாக்கிரகமோ சிறிதும் சம்மந்தமில்லை என்பதை முதலில் மக்கள் உணர வேண்டுகிறோம். இப்பிரகடனம் மனித சமூகத்துக்கோ நாட்டுக்கோ நன்மையா தீமையா என்பது ஒரு பெரிய கேள்வி என்பதாய் இருந்தாலும் நம்மைப் பொறுத்தவரை இப்பிரகடனம் மனித சமூகத்துக்கு இந்திய நாட்டுக்கு சிறப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் சமூகத்துக்கு ஒரு விதத்தில் கேட்டை விளைவிக்கக்கூடியது என்பதே நமது அபிப்பிராயம். இது ஒரு புறமிருக்கட்டும். இப்போது மக்கள் இப்பிரகடனத்தை ஒரு நன்மையாகவும் பெருமையாகவும் கருதுவதாலேயே அரசியல் வாழ்வுக்காரர்களும் அரசியல் பத்திரிகைகளும் இதை காங்கிரசினாலும் காந்தியாலும் ஏற்பட்ட பயன் என்று சொல்லி பொய்ப் பெருமையை காங்கிரசுக்கு சம்பாதித்துக் கொடுக்கப் பார்க்கிறார்கள்.

முதலாவது வைக்கம் சத்தியாக்கிரகத்துக்கும் காந்தியாருக்கும் சம்பந்தம் இல்லை என்பதை மக்கள் உணர ஆசைப்படுகிறோம். வைக்கம் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டதானது தோழர்கள் டி.கே. மாதவன், கே. அய்யப்பன் முதலிய ஈழவ சமூக சீர்திருத்தத் தலைவர்களால் திடீரென்று துவக்கப்பட்டதாகும். அதில் தோழர்கள் கே.பி. கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப்பு முதலிய அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டார்கள். திருவாங்கூர் சர்க்கார் ஒரே அடியாக எல்லா பிரமுகர்களையும் ஆரம்பித்த உடனே கைதிசெய்து விட்டார்கள். சத்தியாக்கிரகத்தை நடத்த ஆளில்லாமல் போய்விட்டது. தோழர்கள் ஜார்ஜ் ஜோசப்பும், கே.பி. கேசவமேனன் அவர்களும் “நிலைமை மோசமாகி விட்டதால் நீங்கள் உடனே வந்து சத்தியாக்கிரக தலைமையை ஏற்று நடத்தாவிட்டால் பெருத்த அவமானத்துக்கு இடம் ஏற்படும்” என்று தந்தியும் கடிதமும் ஆளும் தோழர் ஈ.வெ. ராமசாமிக்கு அனுப்பினார்கள். தோழர் ஈ.வெ.ரா. தன் சொந்த முறையிலேயே உடனே சென்றார். அதன்பிறகு காந்தியார் ராஜகோபாலாச்சாரியார் ஆகியவர்கள் அதற்கு பூரண அனுமதி அளிக்காமல் சில ஆக்ஷேபணைகள் கிளப்பினார்கள். கடசியாக ஈ.வெ.ரா. பிடிவாதத்தின் மீதும் சத்தியாக்கிரகம் எல்லா இந்திய விஷயமாகிவிட்ட பிறகும் சத்தியாக்கிரகத்தில் தாங்களும் கலந்திருப்பதாக காட்டிக் கொண்டார்கள். வைக்கம் சத்தியாக்கிரகம் கூடாது என்று ஆச்சாரியாரும் காந்தியாரும் எழுதிய கடிதங்கள் தமிழ்நாடு பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது. மற்றும்,

தோழர் காந்தியார், தோழர் ஜார்ஜ் ஜோசப்பை மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வெளியேறும்படி சொன்னதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன. சத்தியாக்கிரகத்துக்கு பண உதவி செய்து நடத்த வந்த சீக்கியர்களை வெளியேறும்படி சொன்னதற்கும் ஆதாரங்கள் உண்டு. இம்மாதிரி இன்னும் பலவித தொல்லை கொடுத்து வந்தார்கள். இது விஷயங்களை எல்லாம் அப்போதைய “தமிழ்நாடு” வாரப் பத்திரிகையில் நன்றாய்க் காணலாம்.

இந்த நிலை ஒருபுறமிருக்க வைக்கம் சத்தியாக்கிரகம் நடக்கும் ரோட்டைப் பொறுத்ததே தவிர கோவிலைப் பொருத்ததல்ல என்று காந்தியார் அப்போது 100 தடவை வெளிப்படுத்தி அப்பொழுது “அரசாங்கத்தாருக்கு வைக்கம் சத்தியாக்கிரகத்துக்கும் கோவில் பிரவேசத்திற்கும் சம்மந்தமில்லை” என்று வியக்தமாகச் சொல்லப்பட்டு வாக்குறுதியும் கொடுக்கப்பட்டது. இந்தியா பூராவிலுமே வைக்கம் சத்தியாக்கிரகம் ஒன்றுதான் அதுவும் சுதேச மன்னர் ராஜ்யத்தில் ஜெயித்தது என்றாலும் அது எந்த விதத்திலும் இந்த கோயில் பிரவேச பிரகடனத்திற்கு சம்பந்தம் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாய் கூறுவோம். அதிலும் காந்தியாருக்கும் கோவில் பிரவேச கூட்டத்திற்கும் சிறிது கூட சம்மந்தமில்லை என்பதற்கும் ஆதாரங்கள் பல கூறலாம்.

தோழர் காந்தியார் எந்த சீர்திருத்தமும் அதுவும் கோவில் நுழைவு “சீர்திருத்தம்” சட்டத்தின் மூலம் செய்யக் கூடவே கூடாது என்று சொன்னவர்.

சமீபத்தில் இந்திய சட்டசபையில் இந்த ரங்கய்யர் கோவில் நுழைவு மசோதாவை கொலை செய்தவர். மற்ற இந்திய சட்டசபை மெம்பர்களுக்கும் அப்படிப்பட்ட மசோதாவோ வேறு எந்த சமூக சீர்திருத்த சம்பந்தமான மசோதாவோ சட்டசபைக்குக் கொண்டுவரக்கூடாது என்றும் சொன்னவர். காங்கிரஸ்காரர்களும் தோழர் ஆச்சாரியார், சத்தியமூர்த்தியார், டாக்டர் ராஜன் ஆகியவர்களும் சீர்திருத்தத்திற்கு எவ்வித சட்டமும் கூடாது என்றவர்கள்.

சீர்திருத்த காரியங்களுக்கு சத்தியாக்கிரகம் செய்யக்கூடாது என்றும் சொன்னவர்கள்.

இப்படிப்பட்ட நிலையில் உள்ள காந்தியாரும் காங்கிரசும் காங்கிரஸ் தலைவர்களும் வைக்கம் சத்தியாக்கிரகமும் திருவாங்கூர் கோவில் நுழைவு பிரகடனத்துக்கு காரணம் என்றோ, சம்மந்தம் உண்டு என்றோ சொல்ல யாராவது வருவார்களானால் அவர்கள் இழி தன்மைக்கும் அல்லது அறிவீனத்துக்கும் வருந்தவேண்டியதே அல்லாமல் வேறில்லை. இதுவிஷயமாய் “தலைவர்கள்” நடத்தை பற்றி இன்னும் அனேக ரகசியங்கள் உண்டு. அதை இப்போதும் வெளியிட நாம் விரும்பில்லை.

ஆனால் “இந்தப்பிரகடனத்துக்கு ஒன்றுமே காரணம் இல்லையா? திடீரென்று அரசருக்கோ திவானுக்கோ தோன்றிய ஞானோதயமா?” என்று சிலர் கேட்கலாம். காரணம் உண்டு என்பதாகவே பதில் கூறுவோம். அந்த பதில் என்னவென்றால் இப்பிரகடனத்துக்கு ஆக மகாராஜாவை வாழ்த்தி பாராட்டி வரும் விஷயங்களைப் பார்த்தால் அக்காரணம் என்ன என்பது விளங்கிவிடும் என்பது ஒன்று.

அதாவது அனேகமாக பெரும்பாலும் ஒவ்வொரு வாழ்த்துதலிலும் பாராட்டுதலிலும் “இந்துமதத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான சமயத்தில் மகாராஜா இந்த பிரகடனத்தின் மூலம் உதவி செய்து இந்து மதத்தைக் காப்பாற்றினார்” என்பது மிளிர்கின்றதைப் பார்க்கலாம்.

ஆகவே, இந்து மதத்திற்கு இன்று ஏற்பட்ட நெருக்கடி என்ன? இத்தனைநாள் இல்லாத நெருக்கடி இப்போது என்ன வந்துவிட்டது? என்பவைகளை யோசித்துப்பார்க்கும்படி வாசகர்களை வேண்டுகிறோம். “புத்தர், சமணர், முஸ்லீம்கள் ஆகியவர்கள் காலத்தில் நால்வர், ராமானுஜர் செய்தது போல்” என்று பலர் பாராட்டுதல்களில் குறிப்பிட்டிருக்கிறார்களே இதன் இரகசியமென்ன? இவற்றிற்கு காரணங்கள் கண்டு பிடித்தால் அந்தக் காரணங்கள்தான் இந்த பிரகடனத்துக்கு காரணம் என்று சொல்லுவோம். களிமண்ணு மாளவியா பண்டிதர் இப்போது ஏன் பேசவில்லை? சனாதனப் புலிகளின் வாய் ஏன் புளிஇட்டு அடைக்கப்பட்டு விட்டது? மகாகனம் சாஸ்திரியின் சர்வாதிகாரக் கனவுகள் எங்கே போயின? “சோஷியல் ரிபார்மர்” பத்திராதிபர் தோழர் கே. நடராஜன் போன்றவர்களின் சூழ்ச்சி உபாயம் இப்போது எங்கே தூங்குகிறது? ஆகவே இந்தப் பதில்களில் தான் திருவாங்கூர் பிரகடனத்தின் பிறப்பு அஸ்திவாரம் கர்ப்பதானம் இருக்கிறது என்போம்.

அதென்ன வென்றால் அதுதான் “இந்து மதம் ஒழிய வேண்டும், கோவில்கள் இடிபட வேண்டும், எல்லோரும் முஸ்லீம்களாக வேண்டும், நாஸ்திகமே பரவவேண்டும்” என்ற பிரசாரமும் அனேக மகாநாட்டுத் தீர்மானங்களும் ஈழவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களது மகாநாட்டு தீர்மானமும் இவர்களில் பலர் முஸ்லீம்களாகவும், கிறிஸ்தவர் களாகவும், சீக்கியர்களாகவும், மதம் மாறினதும் அம்பேத்கார் வெடிகுண்டும் சுயமரியாதைக்காரர்களின் டம் டம் குண்டும் இதற்கு முன்னின்றவர்கள் பிரசாரங்களும் முதலாகியவைகளே யாகும்.

அன்றியும் உண்மையிலேயே கோயில், இந்துமதம் முதலியவை ஒழியவேண்டும் என்பவர்களுக்கு இந்த பிரகடனம் விரோதமானது தான். அதனால்தான் மகாராஜாவை பாராட்டினவர்கள் பெரும்பாலோர் “நல்ல சமயத்தில் இந்து மதத்தைக் காப்பாற்றினீர்கள்” என்று பாராட்டினார்கள். என்ன நல்ல சமயம் என்றால் இந்துமதம் ஒழியப்போகிற சமயத்தில் என்பது தவிர வேறு என்னமாய் இருக்கும்? சிலர் பொறுப்பில்லாமலோ வீண் ஜம்பமாகவே பெருமை பேசிக்கொள்ளலாம். “இந்து மதத்தை அழிக்க யாராலும் ஆகாது” என்று பேசலாம். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதையில் வெகு சங்கதி ஆடிப்போய்விட்டது.

கோவில் பிரவேசம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டுமென்று 1928ல் தோழர் ஈ.வெ. ராமசாமி தேவஸ்தான கமிட்டி பிரசிடெண்டாய் இருந்த காலத்திலேயே அவர் போர்டில் தீர்மானிக்கப்பட்டது. அதனால் பிறகு கோயில் பிரவேசம் செய்தவர்கள் சர்க்காரால் தண்டிக்கப்பட்டதும் ஹைகோர்ட்டில் விடுதலையானதும் பிறகுசட்டம் ஏற்பட்ட பிறகுதான் அது செய்யப்பட வேண்டுமென்று கருதி சட்டம் செய்ய முயற்சித்ததும் காந்தியார் சத்தியமூர்த்தியார் போன்றவர்கள் சட்டம் கூடாது என்று தடுத்ததும் சாரதா சட்டம் போன்றதற்கே காங்கிரஸ் தலைவர் தோழர் சத்தியமூர்த்தி “என் மகளுக்கு சாரதா சட்டத்தை மீறி சிறுவயதில் கல்யாணம் செய்து நான் ஜெயிலுக்கு போகப்போகிறேன்” என்று சொல்லி பொது ஜனங்களை கிளப்பி விட்டதுமான காரியங்களுக்கு பிறகுதான் கோவில்கள் இடிக்கப்படவேண்டும் இந்துமதம் அழிக்கப்படவேண்டும் முஸ்லீம் மார்க்கத்தில் சேரவேண்டும் என்பவையான பிரசாரம் பலமாய் தொடங்கப் பட்டது என்பதும் யாவரும் உணர்ந்ததேயாகும்.

வைகளை தொடங்கினவர்கள் பொதுஜனங்களால், தங்கள் கூட்டத்தாரால், தங்களை பின்பற்றுபவர்களால் எவ்வளவுதான் மதத்துரோகி, தேசத்துரோகி, அரசாங்க அடிமை பயங்காளி கீழ் நோக்குக்காரர் என்றெல்லாம் வையப்பட்ட போதிலும் பாமர ஜனங்களிடம் செல்வாக்கு இழந்த போதிலும் அதன் பலன்கள் மாத்திரம் இன்று திருவிதாங்கூர் கோவில் கதவு திறக்கப்படக்கூடிய நிலைக்கும் மற்றும் பல பழக்கவழக்கங்கள் பிடிவாதங்கள் ஒழியக்கூடிய நிலைக்கும் கொண்டு வந்து விட்டன.

இப் பிரகடனத்தில் பலவித சூழ்ச்சிகள் இருந்தாலும் இருக்கலாம். எப்படியோ ஆகட்டும், சூழ்ச்சி வெற்றி பெறட்டும். அதையும் அனுகூலமாய் பயன்படுத்திக்கொள்ள நாம் அதைரியப்படவில்லை. என்றாலும் 5, 6 வருஷத்துக்கு முன் இந்து சாஸ்திரங்கள் ஸ்மிருதிகள் என்பவைகளுக்கு விரோதமாய் எப்படி பெண்களுக்கு புஷ்பவதியான பிறகு தான் கல்யாணம் செய்யவேண்டுமென்று சட்டம் செய்யப்பட்டதோ அதேபோல் இப்போது துருப்பிடித்த செல்லரித்த ஆகமங்களுக்கு விரோதமாய் எல்லா (தாழ்த்தப்பட்ட) வகுப்பாருக்கும் கோவில் நுழைவு உண்டு என்று பிரகடனம் போட்டதும் அதை சத்தியமூர்த்தி உள்பட அதாவது தன் மகளை “புஷ்பவதி ஆகு முன் கல்யாணம் செய்து ஜெயிலுக்குப் போய் சாரதா சட்டத்தை ஒழிப்பதற்கு உயிரை விடுவேன்” என்று சௌரியம் கூறிய சத்தியமூர்த்தி உள்பட ராஜாவையும் (மந்திரியை) திவானையும் பாராட்டுவதுமான காரியம் ஏற்பட்டு விட்டது பெரிய காரியம் என்றும் இது ஒரு புரக்ஷி காரணமானது என்றும் மக்களுக்கு இனி எவ்வித புரக்ஷியும் செய்யலாம் செய்தால் முடியும் என்று கருதும்படியானதுமான காரியம் என்றும் கூறுவோம். அன்றியும் இப்போது கோவில் பிரவேசத்தைப் பற்றி நாம் ஆச்சரியமோ மகிழ்ச்சியோ அடையவில்லை. ஆனாலும் இந்துமத ஆதாரங்களில் தீ வைக்கப்பட்டதற்கும் அத்தீய்க்கு பார்ப்பனர்களே இன்று ஆகுதி செய்வதற்கும் நாம் மகிழ்ச்சியும் தைரியமும் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

தோழர் சர்.சி.பி. ராமசாமி அய்யர் சீர்திருத்தத்திற்கு சட்டம் செய்ய ஒருப்படாதவர் என்பது யாவரும் அறிந்ததேயாகும். இதை அவர்தான் இந்திய சட்டசபை தேர்தலுக்கு நிற்கும்போது கும்பகோணத்து வருணாச்சிரமி களுக்கு சொன்ன பதிலில் விளக்கியிருக்கிறார். அவர்பார்த்து இப் பிரகடனத்தை நிறுத்தி இருந்தால் நிறுத்தி இருக்கக் கூடுமானாலும் அவருடைய போட்டி நண்பர் தோழர் சர். ஷண்முகம் செட்டியார் ஓடுகிற ஓட்டத்தில் பஞ்சாமிர்தம் சாப்பிடுவது போல் கொச்சி ராஜ்யத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ பிரகடனம் செய்யச் செய்துவிட்டார். அதனால் 100க்கு 45, 50, 75 வீதம் உத்தியோகம் பெற்றுவந்த பார்ப்பனர்கள் 100க்கு 2 வீதமே பெறும்படியாகவும் 100க்கு 2 வீதம் கூட பெறக்கூடாமல் இருந்த ஈழவர்கள் 100க்கு 22 பெறும்படியாகவும் செய்து ஒரே அடியாய் நல்ல பேர் வாங்கிவிட்டார்.

இதை எந்தப் பார்ப்பானும் தேசியவாதியும் பாராட்டவில்லை. ஆனாலும் உள்ளூர 10 லக்ஷக்கணக்கான மக்களின் உள்ளத்தில் அன்பு உருவமாய் ஊசலாடிக்கொண்டு இருக்கும் பேற்றை அடைந்துவிட்டார். இதை உண்மையில் கண்ட தோழர் ராமசாமி அய்யர்தான் ஏதாவது செய்து ஒரு நல்ல பெயரை வாங்கவேண்டாமா என்பது முள்ளு முனையில் இருந்து தவம் செய்யவேண்டிய தேவை போல் இருந்துவந்தது மற்றொரு காரணமாகும்.

இவற்றையெல்லாம்விட மற்றொரு காரணம் அதுவும் சரியான காரணம் என்னவென்றால் திருவாங்கூர் ராஜ்யம் சுமார் 45 லக்ஷம் ஜனத் தொகை கொண்டது. இதில் கிட்டத்தட்ட 20 லக்ஷம் கிறிஸ்தவரும், 4, 5 லக்ஷம், முஸ்லீம்களுமாக இப்போதே தோட்ட விஸ்தீரணத்தில் பகுதிக்குமேல் கிணறு என்பது போல் திருவாங்கூர் (இந்து மகாராஜா) பிரஜைகளில் பகுதிக்கு மேல் வேறு மதக்காரர்களாக இருக்கிறார்கள். மீதி உள்ள இந்துக்கள் என்பவர்களும் சுற்று (பாம்பேரி) கட்டிடம் இல்லாத கிணறு நாளுக்கு நாள் ஓரம் இடிந்து சரிந்து கிணறே தோட்டமெல்லாம் விழுந்துவிடுவதுபோல் மக்கள் நாளுக்கு நாள் வேறு மதத்தில் சேர ஆரம்பித்து விட்டார்கள். வேறு மதத்தில் சேர இஷ்டமில்லாதவர்கள் இந்து மதத்தையே அடியோடு விட்டுவிட தீர்மானித்து விட்டார்கள். சகல மதக்காரர்களும் லக்ஷம் இரண்டு லக்ஷம் ரூபாயுடன் மதமாற்ற வியாபாரம் அங்கு ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த நிலை இப்படியே இருந்தால் நாளைக்கு மகாராஜாவின் பாடே அவர் எந்த மதம் என்பது திண்டாட்டமாய்விடும் நிலைமை ஏற்படலாம். ராஜ்யம் கிறிஸ்து அல்லது முஸ்லீம் ராஜ்யமாகக்கூட ஆகிவிடலாம். ஆகவே தனது பிரஜைகள் பகுதியாவது இந்துக்களாய் இருக்கட்டுமே என்கின்ற ஆசையே இந்தப் பிரகடனத்துக்கு கல்லுப் போன்ற உறுதியான காரணமாகும்.

ஆகையால் இப்படிப்பட்ட பிரகடனத்தை அதற்கு எதிரிகளாய் இருந்த காந்தியாராலும் காங்கிரசாலும் பார்ப்பன தலைவர்களாலும் ஏற்பட்டது என்று சொல்லுவது அறிவீனம் என்றே சொல்லுவோம். தங்களுக்கு இது விஷயத்தில் போதிய அறிவு இருக்கிறது, நன்றாய் ஆராய்ந்து பார்த்துத்தான் சொன்னோம் என்று யாராவது சொல்வாரானால் மற்றபடி அதை மாற்றி வடிகட்டின அயோக்கியத்தனம் என்று சொல்ல மடிகட்டி நிற்கிறோம்.

- குடி அரசு தலையங்கம் 22.11.1936

கேரள சீர்திருத்த மகாநாடு தலைமையுரை

 

கேரள சீர்திருத்த மகாநாடு

சகோதரிகளே! சகோதரர்களே!!


இன்று இங்கு இவ்வளவு பெரிய கூட்டத்தையும், வாலிபர்களுடைய உற்சாகத்தையும் பார்க்க எனக்கு அளவிலா மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் உங்கள் பாஷையாகிய மலையாளத்தில் பேச எனக்குத் தெரியாம லிருப்பதற்கு வருந்துகின்றேன். எனினும் ஏதோ எனக்குத் தெரிந்த சாதாரண தமிழ் பாஷையில் என்னுடைய அபிப்பிராயத்தை வெளியிடுகிறேன். ஒருவாறாக உங்களுக்கு அது புரியக் கூடும் என்று கருதுகின்றேன்.

சகோதரர்களே! மகாநாட்டைத் திறந்து வைத்த பொழுது நமது நண்பர் திருவாளர் ராமவர்மாத்தம்பான் அவர்கள் செய்த பிரசங்கத்தில் அநேக விஷயங்கள் சொல்லி இருக்கின்றார்கள். அவைகள் நான் உங்களுக் குச் சொல்ல வேண்டுமென்று கருதி இருந்தவைகளுக்கும் மேலாகவே சொல்லப் பட்டிருப்பவைகளாகும். ஆகையால் இப்போது நானும் அதைத் தான் திருப்பிச் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றேன்.

இன்று இங்கு கூடிய இந்த மகாநாட்டிற்குக் கேரள சீர்திருத்தச் சங்க மகாநாடு என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் திருவாளர் தம்பான் அவர்கள் சொன்னபடிக்கு நமது லக்ஷியத்தின்படி பார்ப்போ மானால் சீர்திருத்தம் செய்யப்படவேண்டிய காரியம் ஒன்றுமே இருப்பதாக எனக்குப் புலப்படவில்லை. ஒரு பெரிய தலைகீழான புரட்சியே தான் நாம் செய்ய வேண்டியவர்களாய் இருக்கின்றோம். ஆதலால் இச்சங்க மகா நாட்டில் இந்நாட்டுக்கு ஏதாவது பயன் ஏற்பட வேண்டுமானால் இதைக் கேரள புரட்சிச் சங்க மகாநாடு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் நமது முன்னேற்றத்திற்கும், மனிதத் தன்மைக்கும், இயற்கைக்கும் விரோத மாய் இருக்கும் மதம் ஜாதி முதலிய காரியங்களில் சீர்திருத்தம் செய்யத்தக்க பாகமோ மீத்து வைத்துக் கொள்ளத் தக்க பாகமோ ஒரு சிறிதுமே கிடை யாது. ஆதலால் தான் அவைகளை அடியோடு அழிக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம். அதோடு இல்லாமல் அவைகளுக்கு அதிகமாக ஆதர வளித்து வரும்படியான கடவுள் உணர்ச்சியென்பதையும் நாம் அழித்துத் துலைக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம். ஆகவே இந்த நாட்டு மக்களால் மாத்திரமல்லாமல் பொதுவாக உலக மக்களாலேயே மிக்கப் பிரதானமாய்க் கருதப்படும்படியானவைகளான மேற்கண்ட ஜாதி, மதம், கடவுள் உணர்ச்சி ஆகியவைகளையெல்லாம் அடியோடு அழிப்பது என்பதை யாரும் சீர்திருத்த வேலை என்று சொல்ல முடியாது. தைரியமாய்ச் சொல்வதானால் நாம் அவற்றை ஒரு அழிவு வேலை என்பதாகவே கருதி நம்மையும் அழிவு வேலைக்காரர்கள் என்றே சொல்லிக் கொள்ள வேண் டும். ஆகையால் தான் நமது சுயமரியாதை இயக்கம் இதையே தனக்கு தலையான கொள்கையாகக் கொண்டிருக்கின்றது. இந்தக் காரியங்களைச் செய்யப் பயந்தவர்களால் உண்மையான ஒரு முற்போக்குக்  காரியமும் செய்து விட முடியாது.

இந்த நாட்டில் சீர்திருத்த வேலைகள் வெகுகாலமாக செய்யப்பட்டு வந்திருக்கின்றன. செய்தவர்களையெல்லாம் சாதாரண மனிதர்களாய் கூடக் கருதாமல் பெரிய “தெய்வத்” தன்மை பொருந்தினவர்களாகவும், விஷேச “அவதார” புருஷர்களாகவும் “மகாத்மா”க்களாகவும் கூடக் கருதப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் அவர்களால் ஆன வேலை என்னவென்று பார்ப்போமானால் குளிக்கப்போய் சேற்றைப் பூசிக் கொண்டு வந்த பலன் போலதான் ஏற்பட்டு வந்திருக்கின்றனவே அல்லாமல் வேறில்லை. இப்படி இருந்தும் இனியும் அதே துறையில் அநேகர் பாடுபடுகின்றார்கள் என்றா லும் அவர்களாலும் இன்று பலனுள்ள ஒரு காரியமும் நடத்த முடியவில்லை. நடைபெறுமென்ற நம்பிக்கையுமில்லை. காரணம் என்னவென்றால் அவர் கள் மக்களுக்கு எந்தெந்த பலன் ஏற்படவேண்டும் என்கிறார்களோ அந்தந் தப் பலன்களுக்கு எதிராயிருக்கும் அஸ்திவாரமான தடைகளை நீக்கும் விஷயத்தில் அவர்கள் சிறிதும் சம்மதிப்பதில்லை. அதன் கிட்டப் போவ தற்கே பயப்படுகின்றார்கள். மற்றும் பலர் அவைகளைக் காப்பாற்றிக் கொண்டே சீர்திருத்தம் அடைய வேண்டும் என்கின்றார்கள். ஆதலால் தான் அப்படிப்பட்டவர்களால் இதுவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு கானலை அதாவது காட்டை விவசாயம் செய்யும் படியான வயல்களாக ஆக்க வேண்டுமானால் முதலில் அதிலுள்ள புதர்களையும், முட்களையும், செடி கொடிகளையும் பிடுங்கி நெருப்பிட்டுக் கொளுத்தி ஆகவேண்டும். பிறகு மேடுகளை வெட்டி பள்ளத்தில் போட்டு நிரவவேண்டும், கல்லுக ளையும், பாறைகளையும் உடைத்து வெளியாக்க வேண்டும். இந்த காரியங்க ளெல்லாம் செய்த பிறகே அந்த பூமி எந்த விதமான வெள்ளாமை செய்யப் பயன்படும் என்று கருதி அதற்கேற்ற எருக்களிட்டு பயிர்களைச் செய்து பயன்பெற வேண்டும். அப்படிக்கில்லாமல் உள்ள நிலையிலேயே பயிர் செய்வதானது மனிதனது முயற்சியும் ஆற்றலும் விதைப் பண்டமும் வீணாய் போவதுடன் பயனற்ற கொடியும் செடியும் மேலும் வளர்ந்து துஷ்ட மிருகங்களும் விஷ ஜந்துக்களும் தாராளமாய்க் குடியிருக்கத்தகுந்த புதர் களாகத்தான் ஏற்பட்டு விடும். ஆகையால் நாம் இப்போது புதர்களிலுள்ள கொடி, செடி, முள், புல் பூண்டு ஆகியவைகளை அழித்து நெருப்பு வைத்துக் கொளுத்தும் வேலையில் இருக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம். இந்த வேலை செய்யும் முன் பயிர்செய்யும் வேலையில் நாம் ஒருக்காலமும் புகக்கூடாது. மேடு பள்ளங்களைச் சமனாக்காமல் அதில் தண்ணீர் பாய்ச்சும் வேலையை நாம் தொடங்க மாட்டோம். ஏனெனில் நாம் பாய்ச்சும் தண்ணீ ரெல்லாம் ஏற்கனவே தண்ணீர் நிறைந்திருக்கும் பள்ளத்திற்கே போய்ச் சேர்ந்து விடும். மேட்டிற்கு எவ்வளவு தண்ணீர் பாய்ச்சினாலும் அங்கு கொஞ்சம் கூடத் தங்காது. ஆகவே தைரியமான அழிவு வேலை அதாவது காட்டைத் திருத்தி மேட்டை வெட்டி பள்ளத்தில் போட்டு சமனாக்கும் சமத்துவ வேலையைக் கைக்கொள்ள வேண்டும். அதற்கு பயப்படக் கூடாது.

இந்த வேலையில் நமக்குப் பெரிதும் கஷ்டமுண்டு என்பதையும் மனதில் வைக்க மறந்துவிடக் கூடாது.

புதர்களில் இருந்து கொண்டு சுகமாய் வாழ்ந்து வரும் ஜந்துக்களால் நமக்கு பல ஆபத்துகள் ஏற்படலாம். அதற்கும் துணிந்து தைரியத்தோடு தான் அழிவு வேலை செய்ய வேண்டியிருக்கின்றது.

ஆகவே, சகோதரர்களே இப்போது நமது நாட்டில் ஆக்க வேலை செய்வது என்பது சாத்தியப்படாதது என்பதை நான் உங்களுக்குத் தெரிவித் துக் கொள்ளுகின்றேன்.

பாழும் மதத்தின் பேரால் உலகமே பல பிரிவுகளாக பிரிந்து கிடக் கின்றது.

குறிப்பாக நமது நாடு மதத்தின் பேரால் பிரிந்தது மாத்திரமல்லாமல் ஜாதிகளின் பேரால் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்றன.

இவை மாத்திரமல்லாமல் பணக்காரன் ஏழை படித்தவன் பாமரன் என்கின்ற பிரிவுகளும் நிரந்தரமாய் இருக்கும்படி ஏற்பாடுகள் ஆகிக் கொண்டும் வருகின்றன. இந்தப்படி நிரந்தரமாயிருக்கும் படியாக ஏற்பாடு செய்து கொண்ட மேல் ஜாதி, கீழ் ஜாதி முதலாகிய பிரிவுகளை அழிக்க ஆரம்பித்தால் இதை ஆதரவாய்க் கொண்டு மற்றொரு கெடுதி நமது நாட்டில் நிரந்தரமாய் இருக்கும் படியாக அதாவது பணக்காரன் ஏழை என்கின்ற பிரிவு நிரந்தரமாய் இருக்கும் படியாக ஒரு புது முயற்சி நமது நாட்டில் இப்போது அதிகமாகச் செய்யப்பட்டு வருகின்றது. முதலாளி, தொழிலாளித் தன்மையும் நிரந்தரமாய் இருக்க ஏற்பாடாகி வருகின்றது. இவைகள் எல்லாம் அரசியல் கிளர்ச்சியாலும் சீர்திருத்த முயற்சியாலுமே தான் செய்யப்படுகின்றது. அதாவது இவ்வேற்பாடுகளைத் தான் இன்றைய முன்னேற்றமென்றும், சீர்திருத்தமென்றும், சுதந்திரமென்றும் சொல்லப்பட்டு வருகின்றன.  நமது பாமர ஜனங்கள் இதன் இரகசியத்தைத் தெரியாமல் அதில் விழுந்து விளக்கில் வீட்டில் பூச்சிகள் விழுவது போல் விழுந்து மடிந்து வருகின்றார்கள். இதற்காகவே தான் கடவுளும், மதமும், ஜாதியும், அரசியலும் ஏற்படுத்தப் பட்டதென்றும், அந்தப்படியே பயன்படுத்தப்பட்டு வருகின்றதென்றும் நான் உறுதியாய்க் கூறுகிறேன். இவைகளையெல்லாம் அடியோடு ஒழிப்பது தான் நாம் மனித சமூகத்திற்குச் செய்ய வேண்டிய உண்மையான தொண்டாகும். இதை விட்டுவிட்டுச் செய்யும் படியான வேறு எந்தத் தொண்டும் மனித சமூகத்திற்கு கேடு விளைவிப்பதாகும்.

ஆகவே நாட்டிற்கு நன்மை செய்வதாய்க் கூறிக் கொண்டு மக்களை மீளாத அடிமையிலும், கொடுமையிலும் ஆழ்த்தப்போகும் பாதகமான வேலைகளை எல்லாம் கூட நாம் அழிக்க வேண்டியவர்களாய் இருக்கின் றோம். நாட்டுச் செல்வங்களை நாட்டிலுள்ள மக்களில் சிலர் தங்கள் தேவை களுக்கு மேலாகவும் தகுதிக்கு மேலாகவும் சேர்த்து வைத்துக் கொண்டு அவைகளையெல்லாம் அக்கிரமமான வழியில் செலவு செய்து கொண்டு மக்களை அடிமைப்படுத்தி ஆனந்தமாய் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற மக்களேதான் இன்று “இந்த நாடு தரித்திர நிலையில் இருக்கின்றது விடுதலை பெற வேண்டும்” என்று பாசாங்கு செய்கின்றார்கள். கஷ்டப்படும் மக்களும், ஏழை மக்களும் தங்கள் மீது திரும்பாமல் இருக்கட்டும் என்று அன்னிய நாட்டுக்காரர்களை நமக்குக் காட்டி நம்மை அந்தப் பக்கம் திருப்பி விடு கின்றார்கள்.

சாதாரணமாக நாம் குழந்தைகளிடம் இருந்து ஏதாவது சாமான்கள் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றால் எப்படி அதற்கு வேறு ஒரு வேடிக்கையைப் பார்க்கச் சொல்லி ஆகாயத்தைப் பார், அந்தப் பக்கம் பார் என்பதாக பிராக்குக் காட்டி அது அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கும் போது நாம் அந்த சாமானை எடுத்துக் கொள்ளுகின்றோமோ அது போலவே பாமர மக்களை சுயராஜ்யம் பார் பூரண சுயேச்சையைப் பார் மோட்சம் பார் கடவுளை பார் என்று பிராக்கு காட்டி அவர்கள் வேலையின் பயனையும் அவர்களது செல்வத்தின் பங்குகளையும் சிலரே கொள்ளை அடித்துக் கொள்ளுகின்றார்கள். இந்தக் கூட்டத்தாரின் தந்திரமே தான் இந்த நாட்டில் தரித்திரம் என்பதற்கும் அடிமைத்தனம் என்பதற்கும் அறிவும் ஆராய்ச்சி யும் அற்றதனம் என்பதற்கும் ஆதாரமாய் இருக்கின்றன.

இந்த நாட்டின் செல்வத்தில் எவ்வளவு பெரிய பாகம் மதமும் கடவுளும் என்கின்ற பேரால் வேலை செய்யாத சோம்பேறிகள் அனுபவிக் கின்றார்கள் என்பதை நமது மூட ஜனங்கள் அறியாமலேயே இந்த நாடு தரித்திரமான நாடு என்று அழுகின்றார்கள். இந்த நாட்டில் உள்ள சந்நியா சிகள் துறவிகள் மதாச்சாரிகள் என்பவர்களுக்கு உள்ள சொத்துக்களும், வரும்படிகளும் வேறு யாருக்காவது இருக்கின்றதென்று யாராவது சொல்ல முடியுமா? அவர்களுக்கு எதற்காக அவ்வளவு சொத்தும் வரும்படியும் வேண்டி இருக்கின்றதென்று எந்த பொருளாதாரவாதியாவது கவனிக் கின்றானா? ஒரு சந்நியாசி கோடிக்கணக்கான ரூபாய் சொத்தும் வருஷத்தில் லட்சக் கணக்கான ரூபாய்கள் வரும்படியும் உடையவனாக இருந்தால் அந்த நாடு ஏழை நாடு தரித்திர நாடு என்று யாராலாவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றேன். ஒரு முழம் முக்கால் முழம் உயரமுள்ள குளவிக் கல்லுக ளுக்கு நமது நாட்டில் எத்தனை கோடி ரூபாய்கள் சொத்தும் எத்தனை லட்ச ரூ. வரும்படியும் இருக்கின்றன வென்று பாருங்கள். இப்படி எத்தனை நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான குளவிக்கல்லுகள் நமது நாட்டில் செல்வத்தோடு யானை ஒட்டகை குதிரை பல்லக்கு தேர், ரதம் முதலிய வாகனங்களோடு பல பெண்டாட்டிகளோடு பல கலியாணங்களோடு வாழ் கின்றன என்பவைகளை நேரில் பார்க்கும் ஒரு யோக்கியன் உண்மையில் நமது நாடு தரித்திரமுள்ள நாடு என்று சொல்ல வருவானா? இதை  எந்த பொருளாதார நிபுணனாவது கவனித்து நமது நாடு தரித்திரமுள்ள நாடு என்று சொல்லுகின்றானா? மற்றும் பிரபுக்கள் செல்வவான்கள் லட்சுமி புத்திரர்கள் என்று சொல்லிக் கொண்டு எத்தனை ஆயிரக்கணக்கான  ஏக்கர் பூமிகள் உடையவர்களும் எத்தனை ஆயிரக்கணக்கான ரூபாய்கள் இன்கம் டாக்ஸ் வரிகொடுக்கக் கூடிய லாபம் அனுபவித்துக் கொண்டு லட்ச லட்சமாய் கோடி கோடியாய் பொருள் சேர்த்து தாசி வேசி ராஜபோகம் அனு பவித்துக் கொண்டு நிரந்தர ராஜாவாகவும் நிரந்தர ஜமினாகவும் நிரந்தர பிரபுவாகவும் நிரந்தர பாளையதாரராகவும் இருக்க முயற்சி மேல் முயற்சி செய்து கொண்டு இருக்கும் மக்கள் பல நூற்றுக்கணக்காக ஆயிரக்கணக்காக இருந்து கொண்டு இருக்கும் இந்த நாட்டை தரித்திரமுள்ள நாடு என்று யாராலாவது சொல்ல முடியுமா? மற்றும் நாள் ஒன்றுக்கு 100,  200, 500, 1000 ரூபாய்கள் வீதம் சம்பாதிக்கும் வக்கீல்களும் டாக்டர்களும் ஏராளமாய் இருந்து கொண்டு ஒவ்வொருவரும் ஐம்பதாயிரம் லட்சம் ஐந்து லட்சம் பெறும்படியான பங்களாக்களில் வாழ்ந்து கொண்டு நிலத்தில் கால் படாமல் நகத்தில் அழுக்குப் படாமல் சரீரத்தில் வேர்வை இல்லாமல் பிழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் பல ஆயிரக்கணக்காக, லட்சக்கணக்காக வாழும் இந்த நாட்டை தரித்திரமுள்ள நாடு என்று யாராவது சொல்ல முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். மற்றும் இந்தக் கூட்டத்தினர்கள் தானே இன்றையத் தினம் இந்த நாடு தரித்திர நாடு, ஏழை நாடு, அடிமை நாடு, சுதந்திர நாடு என்றும் ஆக வேண்டும் சுயராஜ்ஜிய நாடு ஆக வேண்டும் என்றும் பிரமாதமாய்க் கூப்பாடு போடுகின்றார்கள். ஒவ்வொரு காலத்திலும் வரு கின்ற சீர்திருத்தங்களில் எல்லாம் இந்த மாதிரி ஜனங்கள் தானே நமது பிரதிநிதிகளாய் இருந்து நமக்காக என்று ஆட்சி புரிந்து வருகின்றார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு தானே இன்னமும் அதிகாரமும் பெருமையும் கீர்த்தியும் பணமும் வரவும் ஏற்படவும் நாம் மதத்தையும் கடவுளையும் ஜாதி யையும் காப்பாற்ற முயற்சிப்பதோடு சுயராஜ்ஜியமும் பெற  வேண்டுமென்று பெரிய பாடுகளைப்படுகின்றோம்.

நமது நிலைக்கு காரணமென்ன? நமது தரித்திரத்திற்கு யார் காரணம்? நமது செல்வமும் பாடும் என்ன ஆகின்றது? என்கின்ற அறிவு நமக்கு இல்லாமல் இருக்கிற முட்டாள்தனமே நமது இன்றைய இழிவு நிலைக்கு காரணமாயிருக்கின்றது. மதத்தையாவது ஜாதியையாவது கடவுளையாவது உண்மையென்று நம்பி அவைகளைக் காப்பாற்ற முயர்ச்சிக்கும் எவனாலும் மக்களுக்கு சமத்துவமும் அறிவும் தொழிலும் செல்வமும் ஒருக்காலும் ஏற்படவே ஏற்படாது என்பது எனது உறுதி.

ஆனால் இவைகளை அழிக்க மக்கள் ஒருக்காலமும் சம்மதிக்க மாட் டார்கள். இவைகளைக் காப்பற்ற அனேக விதமான ஸ்தல ஸ்தாபனங்கள் ஆதியிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு வந்து குழந்தைப் பருவ முதலே நமக்குள் புகுத்தப்பட்டு வந்திருப்பதால் இது சுலப சாத்தியமான காரியமாக இருக்க முடியவில்லை. இவைகளில் எங்கு கைவைத்தாலும் நமது எதிரிகள் நம் மீது நாஸ்திகன் என்னும் ஆயுதத்தை வீசி எறிந்து நம்மை கொல்லப் பார்த்து விடுவார்கள். நமது மக்களும் பெரும்பாலும் மூடர்களாயிருப்பதால் அந்த நாஸ்திகம் என்னும் ஆயுதத்தைக் கொண்டே நமது எதிரிகளுக்கு உதவியாகவும் நமக்கு எதிராகவும் நின்று நமது முயற்சிகளுக்கு இடையூறு செய்வார்கள். ஆகையால் நாம் இன்றைய நிலையில் இருந்து ஒரு சிறு மாறுதல் செய்ய வேண்டுமானாலும் நமது எதிரிகளின் ஆயுதமாகிய நாஸ்திகத்திற்கு பயப்படாமல்  “ஆமாம் நான் நாஸ்திகன் தான்” என்று சொல்லிக் கொண்டு அந்த நாஸ்திகத்தையே நாட்டில் எங்கும் மூலை முடுக்குகளில் கூட பரப்ப நாம் துணிய வேண்டும். அப்போது தான் நமது எண்ணம் ஈடேற முடியும். ஆதலால் நாம் இனிச் செய்ய வேண்டியது முக்கியமாய், நாஸ்திகப் பிரசாரமேயாகும். அதாவது “எனக்கு இந்த மதம் வேண்டாம், இந்த சாதி வேண்டாம், இந்த சாஸ்திரம் வேண்டாம், இந்தக் கடவுள் வேண்டாம் இவைகள் இல்லாமல் ஜீவிக்க என்னால் முடியும். எனக்கு வேண்டியதெல்லாம் சமத்துவமும் மனிதத் தன்மையுமேயாகும்” என்று தைரியமாய்ச் சொல்ல வேண்டும். அதுவும் இந்த நாட்டில் இந்த உலகத்திலேயே வேண்டுமே ஒழிய மேல் உலக சங்கதியை இதில் கலக்க வேண்டாம் என்று தைரியமான பிரசாரம் செய்ய வேண்டும். இன்றைய வாலிபர்களுக்கு இது தான் முக்கிய வேலை என்பது எனது உறுதியான அபிப்பிராயமாகும். இதற்கெல்லாம் முதலில் மனிதனை மோட்சத்தை சுவர்க்கத்தை மறக்கச் சொல்ல வேண்டும்.

மோட்சமும் சுவர்க்கமும் இன்றைய கள்ளு சாராயக் கடைகளை விட தாசி வேசிகள் வீடுகளைவிட மோசமானது என்பதை மக்கள் உணரும்படி செய்ய வேண்டும். மோட்ச நரகம் என்பது எப்படி திருடர்கள் பிரயாணி களை வழிப்பறி செய்வதற்கு தனி வழியில் ஆள் அடையாளம் தெரியாமல் வேஷம் போட்டுக் கொண்டு வந்து வழி மறித்து மண்டையை உடைக்க தடிக் கம்பையும் ஈட்டியையும் ஆயுதமாகக் கொண்டு பொருள் பறித்துச் செல்லுகின்றார்களோ அது போலவே பகல் வழிப்பறிக்காரர்கள் மக்களின் வாழ்க்கைப் பிரயாணத்தில் வழி மறித்துப் பொருள் பரித்துப் போகச் செய்து கொண்ட ஆயுதங்களேயாகும். ஆகையால் அதை மனிதன் முதலில் மறந் தாகவேண்டும். இந்த உலக வாழ்க்கையையும் ஒழுக்கத்தையும் மக்களுக்கு உதவி செய்வதையும் தனது அளவுக்கும் தேவைக்கும் மேல் பட்டதை அடைய ஆசைப்படாமலுமிருக்க வேண்டியதையே மோட்சம் என்று லட்சியம் கருத வேண்டும். இந்தப்படி அளவுக்கும் தேவைக்கும்மேல் மக்களை அடையச் செய்யாமல் பார்த்துக் கொள்ளு வதையே மக்களை மோட்சத்திற்கு அனுப்பும் வேலையென்று நாம் கருத வேண்டும். மனிதன் இந்த நாட்டில் எப்படி தனது தேவைக்கும், அளவுக்கும், தகுதிக்கும் மேல் அடைய ஆசைப்படுகின்றானோ அதற்கு ஆதாரவாய் இருப்பதற்காகவே மூடர்களுக்கு மேல் உலகத்தில் அவரது தகுதிக்கும், அளவுக்கும், தேவைக்கு மேலாக அனுபவிக்க ஆசை காட்டி இங்கு தட்டிப் பிடுங்கிக் கொள்ளுகி றார்கள். மூடர்களும், பேராசைக்காரர்களும் தான் மோக்ஷத்தை விரும்பு வதை நாம் பல உதாரணங்களால் காணலாம். மோட்சத்திற்கும், சுவர்க்கத்திற் கும் பாமர மக்களுக்குச் சொல்லப்படும் கருத்துக்களைச் சற்றுக் கவனித்துப் பாருங்கள். மனிதனுக்கு எதெதில் சாதாரணமாய் ஆசை வரக்கூடுமோ அதையே தான் மோட்சத்தில் சிருஷ்டித்து இருக்கிறார்கள்.

அதாவது இங்குள்ள மனிதனுக்குப் பொருள் வேண்டும், பெண் வேண்டும், தேவையானதெல்லாம் நினைத்த மாத்திரத்தில் வேண்டும், நல்ல வாலிபப் பருவம் வேண்டும், சதா இடைவிடாமல் போக போக்கியம் வேண் டும், சாகாமல் இருக்க வேண்டும் ஆகிய இந்த விஷயங்கள் மனித னுக்கு சாகும் வரையிலும் செத்த பிறகும் அனுபவிக்கக் கூடியதாய் ஆசைப்படக் கூடியது என்பது யாரும் அறிந்ததாகும்.

ஆகவே இந்தக் காரியங்களையே மேல் உலகத்தில் இருப்பதாகவும் அதை அடையக் கூடும் என்றும் ஆசையுண்டாகும்படி அதாவது மேல் உலகத்தில் எங்கு பார்த்தாலும் பொன்னும் ரத்தனங்களும் இறைந்து கிடக்கு மென்றும் உலகமே பொன்னுலகமென்றும் அங்கு அரம்பை ஊர்வசி முதலாகிய தேவ கன்னிகைகள் என்பவர் என்றைக்கும் வாலிபமாய் நம் பக்கத்தில் இருந்து கொண்டு நமக்கு சதா போகம் கொடுத்துக் கொண்டிருப் பார்களென்றும், காமதேனு கற்பக விருட்சங்கள் நமக்கு எது தேவையோ அது உடனே கொண்டு வந்து கொடுக்குமென்றும், நரை, திரை மூப்பில்லை யென்றும், நாம் சாகாமல் சிரம் சீவியாய் இருப்போமென்றும் சொல்லி ஏற்பாடு செய்து விட்டதால் அவைகளை மனிதன் நித்தியமாய் நம்பி இந்த உலகத்தையும், இங்குள்ள போக போக்கியங்களையும் அநித்தியமாய் எண்ணி கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருள்களையெல்லாம் இந்த மோக்ஷத் திற்கு என்றே செலவு செய்வதுடன் நில்லாது இதற்காக என்று பலவிதமான அக்கிரமமான வழிகளிலும் மற்ற மக்களை வஞ்சித்தும், பட்டினி போட்டும் பொருள் பறித்தும் கூட இதற்காகச் செலவு செய்ய வேண்டியிருக்கின்றது. உதாரணமாக ஏழை மக்கள் கஞ்சிக்கு அலையும் போது குடம் குடமாய் பால் குடங்களைத் தினமும் கல்லின் தலையில் கொட்டி அவற்றை நாற வைப்பதின் கருத்து என்ன என்று பாருங்கள். குடியிருக்க நிழல் இல்லாமல் மக்கள் திரியும்போது மலைகளையும் பாறைகளையும் உடைத்து கோட்டை கள் போல் சந்திரகாந்த மண்டபங்கள் போல் மக்கள் கோவில்கள் கட்டுவ தின் கருத்து என்னவென்று பாருங்கள். எவ்வித தொழிலும் செய்வதற்கு மூலதனம் இல்லாமலும் தொழிலில்லாமலும் மக்கள் வயிறு வளர்க்கக் கப்பலேறி வேறு நாட்டிற்கு கூலிகளாய் போய் சொத்துப் பொத்தென்று மாண்டு மடிந்து கொண்டிருக்கும் போது பொம்மைகளை வைத்து உற்சவம் செய்வதும் அவற்றிற்கு பத்து லக்ஷம், ஒருகோடி, பத்துக் கோடிக் கணக்காக நகைகளும், பாத்திரங்களும், வாகனங்களும், துணிகளும் சேர்த்து வைப் பதின் கருத்தென்னவென்று பாருங்கள். நாளுக்கு நாள் வாழ்வு கஷ்டத்திற்கு வந்து ஏழைகள் மலிந்து வரும்போது லக்ஷம், ஐம்பதாயிரம், மூன்று லக்ஷம் ரூபாய்கள் செலவு செய்து கும்பாபிஷேகங்கள் செய்வதின் கருத்து என்ன வென்று யோசித்துப் பாருங்கள். பூமிகளை உழுது கஷ்டப்பட்டு பயிர் செய்யும் குடியானவர்கள் அரைவயிற்றுக்குக்கூட போதும்படியான ஆகார மில்லாமல் கஷ்டப்படும் போது குழவிக்கல்லுகளுக்கும், செம்பு, பித்தளை பொம்மைகளுக்கும் தினம் பத்து மூட்டை, இருபது மூட்டை, முப்பது மூட்டை போன்ற அரிசிகள் போட்டுப் பொங்கி நைவேத்தியம் செய்து பாடுபடாத சோம்பேறிகளுக்கு குடும்பத்துடன் போட்டுக் கொண்டிருக்கும் கருத்து என்ன என்று எண்ணிப்பாருங்கள். மக்களில் நூற்றுக்கு 10 பேர்களுக்குக் கூட அதாவது சாராசரி படிப்பு எழுத்து வாசனைகூட இல்லா மல் இருக்கும்போது வேத பாடசாலை, தேவார பாடசாலை முதலியவை களும் கல்லுகள், பொம்மைகள் பின்னால் நின்று கொண்டு ஆயிரத்திற்கு ஒருவருக்குக் கூட புரியாத வேத பாராயணம் முதலியவைகள் செய்யப் படுவதற்கும் லக்ஷக்கணக்காய் செலவு செய்யப்படுவதின் நோக்கம் என்ன என்பதை யோசித்துப் பாருங்கள். இப்படியாக நமது நாட்டில் இது போலவே எவ்வளவு காரியங்கள் நடைபெறுகின்றது என்பதை நோக்கினால் மற்ற மக்களை எவ்வளவு பாடுபடுத்தியாவது, அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாலாவது சிறிதும் லக்ஷியமில்லாமல் நாம் மோக்ஷத்திற்குப் போக வேண்டும். நாம் பிரபுவாய் இருக்க வேண்டும். லக்ஷ&மி புத்திரராய் ராஜாவாய் நிரந்தர செல்வவானாய் சிரம்சீவியாய் இருக்க வேண்டும் என் கின்ற பேராசையல்லாமல் வேறு தத்துவம் அதில்  என்ன இருக்கிறது என் பதை யோசித்துப் பாருங்கள். இந்த மாதிரி மோக்ஷம் கற்பிக்கப்பட்டு அதை அடைவதே மனிதனின் முக்கிய லக்ஷியம் என்று போதிக்கப்பட்டிருக் கின்ற பேராசை ஜனங்கள் மலிந்திருக்கும் இந்த நாட்டில் இந்த உணர்ச்சியை அழிக்காமல் என்ன காரியம் நம்மால் செய்ய முடியும் என் பதை யோசித்துப் பாருங்கள். ஆதலால் தான் முதலில் மோக்ஷ உணர்ச்சி ஒழிக்கப்பட வேண் டியது அவசியம் என்று கருதுகின்றேன்.

சகோதரர்களே! இந்த மோக்ஷ உணர்ச்சி ஒழிக்கப்பட வேண்டியதைப் போலவே நரக உணர்ச்சியும் அழிக்கப்பட வேண்டும். மோக்ஷ உணர்ச்சி எப்படிப் பேராசையின் பிரதிபிம்பமோ அது போலவே நரக உணர்ச்சியும், அடிமைத்தனத்தினுடையவும், பயங்காளித்தனத்தினுடையவும் பிரதி பிம்பமாகும். நரகத்திற்கு பயப்படுவதாலேயே அநீதிகளுக்கு மனிதன் ஆளாகின்றான். தைரியமில்லாத கோழையாயிருக்கின்றான். இவைகளை யெல்லாம் விட மனிதன் சிறிதாவது முற்போக்கடைய வேண்டுமானால் சிறிதாவது இயற்கையின் இன்பத்தை நுகர வேண்டுமானால் யெல்லாவற்றை யும்விட மனிதனுக்கு விதி – கர்ம பலன் – என்கின்றதான உணர்ச்சிகள் கண்டிப்பாய் ஒழிய வேண்டும். விதியும் கர்மபலனும் என்கின்றவைகளான உணர்ச்சி இந்திய நாட்டிற்கு ஏற்பட்டிருக்கவில்லையானால் இன்றைய தினம் இந்தியா அநேக விஷயங்களில் ருஷியர்களுக்கு ஏன் இந்த உலகத் தில் உள்ள மற்ற எந்த நாட்டு மக்களின் நிலைமைக்கு மேலாக இருந்து அநேகமாக உலக மக்களுக்கே சமத்துவத்தையும் சம இன்பத்தையும் இயற்கை இன்ப நுகர்ச்சியையும் கொடுத்து சர்வ சுதந்திரத்துடன் வாழச் செய்திருக்கும் என்று தைரியமாய்ச் சொல்லுவேன். ஆகையால் இந்த கர்ம பலன் உணர்ச்சி மனிதத் தன்மைக்கு மிகவும் கேடான எதிரி என்பதை நீங்கள் நன்றாய் ஞாபகத்தில் வைக்க வேண்டும். நான் மேலே காட்டிய இந்த காரணங்கள் தான் இந்த உலகத்தில் நமது நாட்டை மாத்திரம் இந்த இழிவான நிலையிலும், மீளா அடிமைத்தனத்திலும் வைத்திருக்கின்றன. இவைகள் ஒழிந்தால் தானாகவே இந்தியா சுயமரியாதை பெற்று விடும்! சுதந்திரம் பெற்று விடும்! மனிதத் தன்மை அடைந்துவிடும். ஆகையால் சகோதரர் களே நீங்கள் இந்திய நாட்டின் முற்போக்குக்கும் விடுதலைக்கும் மனிதத் தன்மைக்கும் பாடுபட வேண்டுமானால் மேற்கண்ட காரியங்களில் உங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றே கேட்டுக் கொள்ளுகிறேன்.

இதற்கு மாறுபாடான அபிப்பிராயமுள்ளவர்கள் சிலர் – ஏன் பலர் இருக்கலாம். இன்றைய உலகம் பெரிதும் அப்படிப்பட்டவர்களையே அதிகமாகக் கொண்டிருக்கின்றது. ஆதலால் இந்த எனது அபிப்பிராயம் அவர்களுக்கு மிக்க கஷ்டமானதாகத் தோன்றலாம். அவர்களால் நமக்குப் பல வித கஷ்டங்களும், தொல்லைகளும், தடைகளும், ஆபத்துகளும் ஏற்பட்டாலும் ஏற்படலாம். நாம் அவைகளைத் தாராளமாய் எதிர்பார்த்து அவைகளைப் பற்றி ஆச்சரியப்படாமல் பயப்படாமல் சமாளித்து நிற்க முனைந்து கொண்டு தான் இந்தத் தொண்டு செய்ய வேண்டும். சுயமரியாதை இயக்கத் தொண்டு என்பது மற்றத் தொண்டுகளைப் போல் அதாவது ஏதாவது, புராணங்களைப் படித்து விட்டு பக்தி ரசக் கீர்த்தனை பாடி விட்டு அல்லது மேடைகளில் நின்று “இந்த இராக்ஷச அரசாங்கத்தை அழிக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு மக்களிடத்தில் இருந்து பண்டிதன் என்றோ, பக்திவான் என்றோ, தேசீய வீரன் என்றோ சுலபத்தில் பெருமை பெற்றுவிடக் கூடிய காரியமல்ல என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

போகிற இடத்தில் எல்லாம் கல்லடி படவும், வசவு கேட்கவும் கலகக் காரர்களாலும் நமது எதிரிகளின் கூலிகளாலும் தொல்லைப்படத் தயாரா யிருக்க வேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆகவே இவ்வளவு நேரம் எனக்கு சரி என்று பட்டதை நான் மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டு என்று நினைத்ததை எனது நாடு என்று சொல்லப்படுவதை மற்ற நாடுகள் எதற்கும் இளைத்ததல்ல என்னும் படியான நிலைமைக்குக் கொண்டு வர வேண்டியதற்கு ஏற்ற சாதனம் என்று கருதியதை உங்களுக்கு எடுத்துச் சொன்னேன். உங்கள் அபிப்பிராயங்களை யும் என்னிலும் உங்களிலும் மாறுபட்டவர்களது அபிப்பிராயங்களையும் பொறுமையாய் கேட்டு எல்லாவற்றையும் நடுநிலையில் இருந்து யோசித்து உங்கள் புத்திக்கு எட்டிய முடிவுப்படி நடக்க முயலுங்கள். குற்றமிருப்பினும் அனுபவத்தில் சீக்கிரம் திருத்தமாகிவிடும்.

குறிப்பு: திருவாங்கூர் ராஜ்யத்தில் சேர்த்தலையில் 7-9-1930 இல் நடைபெற்ற கேரள சீர்திருத்த மாநாட்டுத் தலைமையுரை.

- குடி அரசு – சொற்பொழிவு – 14.09.1930

Thursday, 6 January 2022

பெண்கள் சொத்துரிமை

 

பெண்கள் சொத்துரிமை 



இந்த வாரத்தில் பெண்கள் சொத்துரிமை விஷயமாய் ஒரு மகிழ்ச்சி அடையத்தக்க சேதி நமது தகவலுக்கு எட்டி இருக்கின்றதை மற்றொரு பக்கத்தில் காணலாம்.

3, 4 வாரங்களுக்கு முன் நாம் “இனியாவது புத்திவருமா” என்னும் தலைப்பின் கீழ் பெண்கள் சொத்துரிமையைப் பற்றி எழுதியிருந்தது வாசகர்கள் கவனித்திருக்கக் கூடும். அதற்கு அனுகூலமாக இவ்வாரம் சென்னையில் ஒய். எம்.சி.எ. கட்டடத்தில் நடந்த ஒரு மீட்டிங்கின் நடவடிக்கை யானது நமக்கு சிறிது நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொடுக்கின்றது. அதாவது,

பெண்களுக்கு ஆண்களைப் போலவே சொத்துரிமை கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி இரு கனவான்கள் தங்கள் அபிப்பிராயத்தை மிக வலிமையாய் வற்புருத்திப் பேசி இருக்கின்றார்கள். அவர்கள் பேசி யிருப்பவைகளில் முக்கியமானவை எவையெனில்,

மனிதருக்குள் ஆணுக்கும் பெண்ணுக்கும் எத்தகைய வித்தியாசமில்லை என்பதும்,

ஆண்கள் அடைய விரும்பும் சீர்திருத்தங்கள் போலவே பெண்களுக்கும் அளிக்க வேண்டும் என்பதும், ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துக்கள் அநுபவிப்பதென்பது சர்வ சுதந்திரமாய் இருக்க வேண்டும் என்பதும், இதைப் பற்றி இதுவரை யாரும் எவ்வித கிளற்சியும் செய்யவில்லை என்பதைப் பற்றியும், கணவன் அயோக்கியனாக இருந் தாலும், கெட்ட வியாதிக்காரனாய் இருந்தாலும் மனைவிகள் அவனை விட்டு விலகி வாழலாம் என்றும்,

இப்படி விலகி வாழ்ந்தாலும் புருஷன் ஜீவனாம்சமும் அவன் சொத்தில் பாத்தியதையும் இருக்க வேண்டும் என்றும் விதவைகள் மறு மணம் செய்து கொண்டாலும் முதல் புருஷன் சொத்தில் பங்கு பெற பாத்தியம் இருக்க வேண்டு மென்றும் உபந்நியாசகராகிய திரு. நாராயண குரூப் அவர்கள் பேசி இருக்கிறார்.

அக் கூட்டத்திற்கு தலைமை வகித்த திரு. டி. ஆர். வெங்கிட ராம சாஸ்திரியார் என்பவர் மாஜி அட்வொகேட் ஜனரலும் சென்னை அரசாங்க மாஜி சட்ட மெம்பரும் ஆவார்.

இவரும் இந்தியாவில் எல்லா ஜாதி மதஸ்தர்களுக்கும் பொதுவாக ஒரு சட்டம் செய்ய வேண்டுமென்று பேசியிருப்பதோடு சீர்திருத்த விஷயத்தில் முஸ்லீம்கள் ஒத்து வர மாட்டார்கள் என்று பயப்படுவதாகவும் அதற்காதாரமாய் சாரதா சட்டத்தைப் பற்றிய முஸ்லீம்களின் ஆட்சேபனையையும் எடுத்துக் காட்டிவிட்டு,

மேலும் பெண்கள் இப்போது ஆண்களைப் போலவே எல்லா வழிகளிலும் முன்னேறி இருப்பதாகவும் குறிப்பிட்டு விட்டு, அவர்களுக்கு சகல உரிமையும் கொடுக்க வேண்டும் என்பதை மனப் பூர்வமாய் ஒப்புக் கொண்டுமிருக்கிறார்.

எல்லாவற்றையும் விட அவர் பேசி இருப்பதில் குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயம்  என்னவென்றால் “ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னால் பெரியோர்கள் செய்த ஏற்பாடு என்பதற்காக கண் மூடித்தனமாய் ஒன்றை பின்பற்ற வேண்டு மென்பது அறிவுடைமையாகாது” என்பதும் இந்த நாகரீக காலத்தில் அதாவது 20 வது நூற்றாண்டில் இருந்து கொண்டு 13 வது நூற்றாண்டு கதைகளைப் பற்றி பேசி அவற்றை மக்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக்குவது மிகவும் பரிகசிக்கத்தக்கதாகுமென்று பேசியிருப்பதுமாகும்.

இதை மற்றப் பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாத பழமை விரும்பி களும் கவனிக்க வேண்டுமாய் விரும்புகின்றோம்.

பெண்கள் ஆண்களுக்கு அடிமைகள் அல்ல வென்றும் அவர்களும் ஆண்களைப் போலவே சுதந்திரமாய் இருக்கத் தகுந்தவர்கள் என்றும் நாம் முதலில் தீர்மானம் செய்து கொண்டோமேயானால் பிறகு மேல் கண்ட சீர்திருத்த விஷயங்களும் மற்றும் ஒழுக்க சம்மந்தமானதென்றும் கட்டுப்பாட்டுக்காக இருக்க வேண்டும் என்று சொல்லப்படும் கொள்கைகளின் யோக்கியதைகள் எல்லாம் தானாகவே விளங்கி விடும். அந்த எண்ணம் ஆண்களுக்குச் சரியாக உண்டாகாததினாலேயே பெண்கள் சுதந்திரம்  என்னும் விஷயங்களில் எதை எடுத்துக் கொண்டாலும் ஆண்கள் பெண்களுக் குத் தயவு செய்து பிச்சை கொடுப்பது போலவே கருதுகின்றார்கள். உண்மை யான சுதந்திரம் பெண்களுக்கு ஏற்பட வேண்டுமானால் வாழ்வில் அதாவது ஒரு பெண்ணும் ஆணும் வாழ்க்கைத் துணைகளாய் வாழும் வாழ்க்கையில் இருவருக்கும் ஒழுக்கத்திலும் கட்டுப்பாடுகளிலும் ஒரேமாதிரியான ஒழுக்க மும் கட்டுப்பாடும் இருக்கும்படி வாழ்க்கையையும் அது சம்பந்தமான அரசியல் சட்டங்களையும் திருத்திக் கொண்டாலொழிய உண்மையான சுதந்திரம் ஏற்படவே முடியாது. மக்கள் மனதிலும் “இயற்கையிலேயே பெண்கள் பலவீனர்களாகவும் ஆண்களுடைய சம்ரக்ஷணையிலும் இருக்கும்படியாக படைக்கப்பட்டிருக்கின்றார்கள்” என்கின்ற உணர்ச்சி அடியோடு மாறியுமாக வேண்டும். அந்த வுணர்ச்சி ஆண்களுக்கு மாத்திரமல்லாமல் இன்றைய நிலை பெண்களுக்கே பெரிதும் முதலில் மாற வேண்டியதாக இருக்கின்றது.

ஏனெனில் அவர்களை அழுத்தி அடிமைப்படுத்திய கொடுமையான பலமானது பெண்கள் தாங்கள் மெல்லியலார்கள் என்றும், ஏதாவது ஒரு ஆணின் காப்பில்  இருக்க வேண்டியவர்களென்றும் தங்களையே கருதிக் கொள்ளும்படி செய்து விட்டது. ஆதலால் அது முதலில் மாற வேண்டியது அவசியமாகின்றது.

ஆகவே அவர்களது சுதந்திரத்திற்கு சொத்துரிமை இல்லாததோடு தங்களின் அடிமையுணர்ச்சியும் பயமும் காரணமாயிருப்பதால் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு துறையிலும் அவ்வடிமை உணர்ச்சியும் பயமும் அடியோடு மறையும்படியாகவும் பார்த்துக் கொள்ள வேண்டியது பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவர்களின் முக்கிய கடமை என்பதை ஞாபகப் படுத்துகின்றோம்.

தவிர பெண்களை ஆண்கள் எவ்வளவு கொடுமைப்படுத்தியிருக்கின்றார்கள் என்பதற்கு ஆதாரமாக சமீபத்தில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தையும் இந்த சந்தர்ப்பத்திலேயே குறிப்பிட விரும்புகின்றோம்.

அதாவது மலையாள நாட்டு நம்பூதிரிப் பார்ப்பனர்கள் தங்கள் வகுப்புக்களில் ஆண்கள் குடும்பத்தில் மூத்தவர் யாரோ அவர் மாத்திரமே தங்கள் ஜாதியில் அதாவது நம்பூதிரி ஜாதியிலேயே ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வது என்றும் மற்ற ஆண்கள் வேறு ஜாதியில் அதாவது நாயர் ஜாதியில் உள்ள பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அந்தப்படி வைத்துக் கொள்வதிலும் நாயர் பெண்கள் வயிற்றிலும் பிறக்கும் குழந்தைகளுக்கு அக் குழந்தைகளைக் கொடுத்த நம்பூதிரியின் சொத்தில் பங்கு இல்லை என்றும் ஒரு கொள்கை இன்றும் இருந்து வருவதுடன் இதை நாயர் பெண்களும் ஆண்களும் ஒரு பெருமையாகவும் கருதி வருகிறார்கள். இதனால் நம்பூதிரி வகுப்புப் பெண்கள் அநேகர் 40, 50 வருஷம் வரையில் கூட கல்யாண மில்லாமல் பேருக்கு மாத்திரம் சாகும்போது ஒரு நம்பூதிரிப் பார்ப்பனக் கிழவனால் தாலிகட்டச் செய்து விடுவதும் மற்றும் இதற்காகவே ஒரு கிழவனுக்கு 6, 7 மனைவிகளைக் கட்டுவதும் வழக்கமாயிருந்து வருகின்றது. இந்தக் கொடுமையை உணர்ந்த நம்பூதிரி வாலிபர்கள் தங்கள் சமூகத்தின் காட்டு மிராண்டித் தனமான இக்கொள்கைகளை அழிக்கத் தோன்றி இப்போது எவ்வளவோ தாராள நோக்கங்களுடன் வெளிக்கிளம்பி விட்டார்கள். இவைகளில் ஒன்றாகத்தான் நம்பூதிரிப் பார்ப்பனர்கள் பூணூல் அணிவது முட்டாள்த் தனமென்றும் அவற்றை கழற்றி நெருப்பில் போட்டு கொளுத்த வேண்டும் என்றும் தீர்மானம் செய்து அவ்வாரே பலர் கழற்றி நெருப்பில் கொளுத்தியும் விட்டார்கள்.

பலர் தலையில் உள்ள முன் குடுமிகளை எல்லாம் சிறைத்து விட்டு கிராப் செய்து கொண்டார்கள். இப்போது தம்பியாய் இருக்கின்றவர்களும் கல்யாணமும் செய்து கொண்டார்கள்.

இந்தக் கல்யாணக் கொள்கை விஷயத்தில் நாம் முக்கியமாய் மகிழ்ச்சியடையும் விஷயம் ஒன்றேயாகும். அதாவது நம்பூதிரிப் பெண்கள் 40, 50 வருஷம் வரை பலர் புருஷனில்லாமல் இருக்கும் கொடுமைகள் ஒருவாறு ஒழியும் என்பதேயாகும். நம்பூதிரி ஆண்கள் கல்யாணமில்லாமல் இருக்கவேண்டும் என்றும் பெண்ஆசை இருந்தால் நாயர் பெண்களை வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளலாம் என்றும் செய்து கொண்ட கட்டுப் பாடுகளைப் போலவே நம்பூதிரிப் பெண்களிலும் கல்யாணம் செய்து கொள்ள முடியாதவர்கள் வேறு ஏதாவது ஒரு வகுப்பு ஆண்களை சம்மந்தக் காரனாக நாயகனாக வைத்துக் கொள்ளலாம் என்பதாக ஒரு திட்டம் செய்து கொண்டிருப்பார்களானால் அந்த வகுப்புப் பெண்களுக்குக் கஷ்டமே இருந்திருக்காது. அப்படிக்கில்லாமல் தங்கள் வகுப்பு பெண்களை வீட்டில் கல்யாண மில்லாமல் அடைத்து வைத்து விட்டு வேறு வகுப்புப் பெண்களை வைப்பாட்டிகளாக அனுபவித்துக் கொண்டு இருப்பதானதும் மிகவும் கொடுமையான காரியம் என்றே சொல்ல வேண்டும். இந்தக் கொடுமையை ஒழிக்க நம்பூதிரி வாலிபர்கள் முயற்சித்தால் அதற்கு இடையூ றாக நாயர் கனவான் பிரவேசித்து அந்த வாலிபரை பகிஷ்காரம் செய்வது என்பது மிகவும் மானக்கேடான காரியமாகும். சுயமரியாதை அற்ற ஜாதி யைச் சேர்ந்த பெண்கள் என்று அந்த ஜாதியைப் பற்றி நம்பூதிரி வாலிப சங்கத்தார் வெளியிட்ட சுற்று அறிக்கையில் குறிப்பிட்டது மிகவும் பொருத்த மானது என்றே சொல்லுவோம். ஆகவே பழமையின் பேரால் பெண்களை வெகு காலமாகக் கொடுமைப்படுத்தி வந்த காரியங்கள் இப்போது திடீர் திடீரென்று அழியும் படியாக ஆங்காங்கு முயற்சிகள் அதுவும் காரியத்தில் நடைபெறுவதை இந்த இரண்டொரு வருஷங்களாகத் தான் பார்க்க முடி கின்றன. இவற்றிற்கு ஏற்படும் எதிர்ப்புகளை மக்கள் எவ்வளவு கேவலமாக வும், அலட்சியமாகவும் கருதக் காலம் வந்து விட்டது என்பதை நினைக்கும் போது நமக்கு ஏற்படும் மகிழ்ச்சி அளவிட  முடியவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் ஹைகோர்ட்டில் நடந்த ஒரு அரசியல் சம்மந்தமான வழக்கில் பழமை விரும்பியான ஒரு வருணாசிரமப் பார்ப்பனர் அதாவது திரு. டி. ஆர். ராமச்சந்திரய்யர் என்பவர் “சில காலிகள் நாளைய தினம் பூணூல் போடக்கூடாது என்று சொன்னால் அதற்கும் கட்டுப்படுவதா?” என்று பேசி இருக்கிறார். இதை ஒரு தேசீயவாதியும் கண்டிக்கவே இல்லை.

இந்த திரு. டி. ஆர். ராமச்சந்திரய்யர் அவர்கள் மலையாளத்தில் பூணூலைக் கழட்டி நெருப்பில் போட்டு கொளுத்திய நம்பூதிரி பார்ப்பனர் களை என்ன செய்தார் என்றும் அந்த நம்பூதிரிப் பார்ப்பனர்கள் கூட்டத்தில் பூணூல் போடுவது முட்டாள்தனமென்று தீர்மானித்த தீர்மானத்தை பற்றி என்ன செய்தார் என்றும் கேழ்க்கின்றோம்.

அறிவு விஷயத்தில் உலகம் போகும் முற்போக்கை கவனிக்காமல் தங்களுடைய சுயநலத்தையே பிரதானமாய்க் கொண்டு பழைய கந்தல்களை புரட்டிக் கொண்டு கசுமாலங்களைக் கழுவி விட்டுகொண்டே இருந்தால் அதை இனி யார் மதிப்பார்கள் என்பதை இந்த கூட்டத்தின் சுயநல ஆத்திர மானது அவர்களை அறிய முடியாமல் செய்து கொண்டே வருகின்றன.

ஆகவே இனி பொது நல சேவைக்காரர்களும் மக்கள் பிரதிநிதிகள் என்பவர்களும் அரசாங்க நிர்வாகத்தைப் பற்றிய திட்டத்தை மாத்திரம் போட்டுக் கொண்டிருக்கும் யோசனையை விட்டுவிட்டு சமூக வாழ்க்கை நிர்வாக சம்மந்தமான விஷயத்திலும் அவசியமான திட்டங்களைப் போட வேண்டிய காலம் வந்திருப்பதை கவனிக்க விரும்புகின்றோம்.

குடி அரசு – துணைத் தலையங்கம் –  26.10.1930

கல்யாண விடுதலை

 

கல்யாண விடுதலை

ஆண் பெண் கல்யாண விஷயத்தில் அதாவது புருஷன் பெண்சாதி என்ற வாழ்க்கையானது நமது நாட்டிலுள்ள கொடுமையைப் போல் வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது என்று சொல்லலாம். நமது கல்யாண தத்துவம் எல்லாம் சுருக்கமாகப் பார்த்தால் பெண்களை ஆண்கள் அடிமை யாகக் கொள்வது என்பதைத் தவிர வேறு ஒன்றுமே அதில் இல்லை. அவ் வடிமைத்தனத்தை மறைத்து பெண்களை ஏமாற்றுவதற்கே சடங்கு முதலிய வைகள் செய்யப்படுவதோடு அவ்வித கல்யாணத்துக்கு தெய்வீக கல்யா ணம் என்பதாக ஒரு அர்த்தமற்றப் போலிப் பெயரையும் கொடுத்து பெண் களை வஞ்சிக்கின்றோம்.

பொதுவாக கவனித்தால் நமது நாடு மாத்திரமல்லாமல் உலகத் திலேயே அநேகமாய் கல்யாண விஷயத்தில் பெண்கள் மிக்க கொடுமை யும், இயற்கைக்கு விரோதமான நிர்ப்பந்தமும் படுத்தப்படுகிறார்கள் என் பதை நடுநிலைமையுள்ள எவரும் மறுக்க முடியாது. ஆனால் நமது நாடோ இவ்விஷயத்தில் மற்ற எல்லா நாட்டையும் விட மிக்க மோசமாகவே இருந்து வருகிறது.

இக்கொடுமைகள் இனியும் இப்படியே நிலைபெற்று வருமானால் சமீப காலத்திற்குள்ளாக அதாவது ஒரு அரை நூற்றாண்டுகளுக்குள்ளாக கல்யாணச் சடங்கும், தொந்தமும் உலகத்தில் அனேகமாய் மறைந்தே போகும் என்பதை உறுதியாய்ச் சொல்லலாம். இதை அறிந்தே மற்ற நாடு களில் அறிஞர்கள் பெண்கள் கொடுமையை நாளுக்கு நாள் தளர்த்திக் கொண்டு வருகின்றார்கள். நம் நாடுமாத்திரம் குரங்குப் பிடியாய் பழய கருப் பனாகவே இருந்து வருகின்றது. ஆதலால் தலைகீழ் முறையான பெண்கள் கிளர்ச்சி ஒன்று நமது நாட்டில் தான் அவசரமாய் ஏற்பட வேண்டியிருக் கின்றது.

சென்ற வருஷம் செங்கல்பட்டு மகாநாட்டில் பெண்களுக்கும் ஆண் களுக்கும் தங்கள் தங்கள் கல்யாண விடுதலை செய்து கொள்ள உரிமை இருக்க வேண்டும் என்பதாக ஒரு தீர்மானம் செய்யப்பட்டவுடனும் சமீபத் தில் சென்னையில் கூடிய பெண்கள் மகாநாட்டில் கல்யாண ரத்துக்கு ஒரு சட்டம் வேண்டும் என்று தீர்மானித்தவுடனும் உலகமே முழுகி விட்டதாக சீர்திருத்த வாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் உட்பட பலர் கூக்குரலிட்டார்கள். ஆனால் செங்கற்பட்டுத் தீர்மானத்திற்கு பிறகு வெளி நாட்டிலும், இந்தியாவிலும் பல விடங்களில் கல்யாண ரத்துச் சட்டங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது. ருஷியாவில் கல்யாணமே தினசரி ஒப்பந்தம் போல் பாவிக்கப்பட்டு வருகிறது. ஜர்மனியில் புருஷனுக்கும் பெண் ஜாதிக்கும் இஷ்டமில்லையானால் உடனே காரணம் சொல்லாமலே கல்யா ணத்தை ரத்து செய்து கொள்ளலாம் என்பதாக சட்டம் கொண்டு வரப்பட்டது யாவருக்கும் தெரிந்த விஷயமாகும். சமீபத்தில் பரோடா அரசாங்கத்தாரும் கல்யாண ரத்துக்குச் சட்டசபையில் சட்டம் நிறை வேற்றிவிட்டார்கள். மற்ற மேல் நாடுகளிலும் இவ்விதச் சட்டங்கள் இருந்து வருகின்றது. நமது நாட்டில் மாத்திரம் இவ்விஷயம் சட்டம் செய்வதில் கவனிக்கப்படாம லிருந்து வருகின்றதானது மிகவும் அறிவீனமான காரியம் என்றே சொல்ல வேண்டும். சாதாரணமாக தென்னாட்டில் பத்திரிகைகள் மூலம் அனேக புருஷர்கள் தங்களது பெண் ஜாதிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு என்பதாய் கொலைகள் செய்ததாக தினம் தினமும் செய்திகள் வெளியாவதை பார்த்து வருகின்றோம்.

சில சமயங்களில் ஒரு பெண்ஜாதியின் நடவடிக்கை சந்தேகத்திற்கு பல கொலைகள் நடந்ததாகவும் பார்க்கிறோம். தெய்வீக சம்மதமான கல்யாணங்கள் இப்படி முடிவடைவானேன் என்பதைப் பற்றி தெய்வீகத்தில் பிடிவாதமுள்ள எவருக்குமே யோசிக்கப் புத்தியில்லை. பெண்கள் உலகம் முன்னேற்றமடைய வேண்டுமானால் அவர்களுக்கும் மனிதத்தன்மை ஏற்பட வேண்டுமானால் ஆண்களுக்கும் திருப்தியும், இன்பமும், உண்மை யான காதலும், ஒழுக்கமும் ஏற்பட வேண்டுமானால் கல்யாண ரத்துக்கு இடமளிக்கப்பட வேண்டியது முக்கியமான காரியமாகும். அப்படிக்கில்லாத வரை ஆண், பெண் இருவருக்கும் சுதந்திர வாழ்க்கைக்கு இடமே இல்லாமல் போய்விடும்.

நமது “சீர்திருத்தவாதிகள்” பலர் ஒரு மனிதன் இரண்டு பெண்டாட்டி களைக் கட்டிக் கொள்வதை பற்றி மாத்திரம் குடி முழுகிப் போய் விட்டதாகக் கூச்சல் போடுகின்றார்கள். இவர்கள் எதை உத்தேசித்து இப்படி கூச்சல் போடுகின்றார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. மதத்தை உத்தேசித்தா? அல்லது பகுத்தறிவை உத்தேசித்தா? அல்லது பெண்கள் நலத்தை உத்தே சித்தா? அல்லது மனித சுதந்திரத்தை உத்தேசித்தா? என்பது நமக்கு சிறிதும் விளங்கவில்லை. அல்லது மனித ஒழுக்கத்தை உத்தேசித்து இப்படி பேசு கின்றார்களா என்பதும் விளங்கவில்லை. இதைப் பற்றி மற்றொரு சமயம் விவரிப்போம்.

நிற்க, ஒரு பெண்சாதிக்கு மேல் மனிதன் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று சொல்லுபவர்களை நாம் ஒன்று கேட்கின்றோம்.

அதென்னவெனில் கல்யாணம் என்பது மனிதன் இன்பத்திற்கும், திருப்திக் குமா? அல்லது சடங்குக்காகவா? என்று கேட்பதோடு இஷ்ட மில்லாத, ஒற்றுமைக்கு இசையாத, கலவிக்கு உதவாத, ஒரு பெண் எந்த காரணத் தினாலோ ஒருவனுக்கு பெண்ஜாதியாக நேர்ந்து விட்டால் அப்போது புருஷனுடையக் கடமை என்ன என்று கேட்கிறோம். அதுபோலவே ஒரு பெண்ணுக்கும் அப்படிபட்ட ஒரு புருஷன் அமைந்து விட்டால் அப் பெண்ணின் கதி என்ன என்று தான் கேட்கின்றோம். கல்யாணம் என்பது தெய்வீகமாகவோ, பிரிக்க முடியாததாகவோ உண்மையில் இருக்குமாயின் அதில் இவ்வித குணங்கள் ஏற்பட முடியுமா என்பதை யோசித்தாலே தெய்வீகம் என்பது முழுப் புரட்டு என்பது எப்படிப்பட்ட மனிதனுக்கும் புரியாமல் போகாது. ஆகவே நமது நாட்டிலும் மற்ற நாடுகளில் இருப்பது போன்ற கல்யாண ரத்துக்குச் சட்டம் சமீபத்தில் ஏற்படாமல் போகுமாயின் கல்யாண மறுப்புப் பிரசாரமும் கல்யாணம் ஆன புருஷர்களுக்கும், பெண்களுக்கும் பலதாரப் பிரசாரமும் தான் செய்ய வேண்டிவரும், அன்றியும் இது சமயம் ஒற்றுமைக்கும் திருப்திக்கும் இன்பத்திற்கும் உதவாத பெண்களை உடைய புருஷர்கள் கண்டிப்பாக தைரியமாக முன் வந்து தங்களுக்கு இஷ்டமான பெண்களை திரும்பவும் மணம் செய்து கொள்ளத் துணிய வேண்டும் என்றும் தூண்டுகின்றோம். ஏனெனில் அப்படி ஏற்பட்டால் தான் தெய்வீகம் என்கின்ற பெயரைச் சொல்லி கொண்டு புருஷர்களுக்கும் பெண்களுக்கும் சம்மதமும் முன்பின் அறிமுகமில்லாமல் செய்யப் பட்டுவரும் கல்யாணங்களில் மக்கள் அடையும் துன்பம் ஒழிபட முடியும். மனிதன் ஏன் பிறந்தானோ ஏன் சாகிறானோ என்பது வேறு விஷயம். ஆதலால் அது ஒரு புறமிருந்தாலும் மனிதன் இருக்கும் வரை அனுபவிக்க வேண்டியது இன்பமும் திருப்தியுமாகும். இதற்கு ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் முக்கிய சாதனம்.

அப்படிப்பட்ட சாதனத்தில் இப்படிப்பட்ட துன்பத்திற்கிடமான இடையூறு இருக்குமானால் அதை முதலில் களைந்தெறிய வேண்டியது ஞானமுள்ள மனிதனின் கடமையாகும். மனித ஜீவ கோடிகளின் திருப்திக் கும் இன்பத்திற்கும் வேலை செய்பவர்கள் இதையே செய்ய வேண்டும். அப்படிக் கில்லாமல் “ஏதோ கல்யாணம் என்பதாக செய்து கொண்டோமே, செய்தாய் விட்டதே, எப்படி இருந்தாலும் சகித்துக் கொண்டுதானே இருக்க வேண்டும்” என்று கருதி துன்பத்தையும் அதிருப்தியையும் அனுபவித்துக் கொண்டிருப்பதும் அனுபவித்துக் கொண்டிருக்கச் செய்வதும் மனிதத் தன்மையும் சுயமரியாதையும் அற்ற தன்மையுமேயாகும் என்பதே நமதபிப் பிராயமாகும்.

குடி அரசு – தலையங்கம் – 17.08.1930

Monday, 3 January 2022

லால்குடி தாலூகா ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் மகாநாடு - தோழர் பெரியார் தலைமை உரை

 லால்குடி  ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் மகாநாடு

தலைவரவர்களே! தோழர்களே!! இன்று உங்களை இவ்வளவு பெரிய கூட்டமாகக் காண்பது எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் எல்லோரும் இங்கு எதற்காக இந்த வெய்யில் காலத்தில் கஷ்டப்பட்டு வந்து சேர்ந்து கூடியிருக்கின்றீர்கள். உங்களுடைய இன்றைய நோக்கமெல்லாம் இந்து மதத்தில் எவ்வளவோ காலமிருந்து கீழான ஜாதியாய் கருதப்பட்டு நீங்கள் அடைந்து வந்த இழிவைப் போக்கிக் கொள்வதற்காக வேறு மதத்தில் வந்துசேர்ந்தும் அங்கும் அந்த இழிவு இருந்து உங்களைப் பழைய கருப்பனாகவே நடத்தி வந்தால் எப்படியாவது அந்த இழிவை போக்கிக் கொள்ள வேண்டுமென்ற உணர்ச்சியின் மீது இந்த மகாநாட்டைக் கூட்டி நீங்கள் எல்லோரும் இங்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள். ஆனால் இந்த மகா நாட்டில் பலர் ஆவேசமாய் பேசிவிடுவதினாலும், பலர் அதிதீவிரமான தீர்மானங்கள் செய்து விடுவதினாலும் உங்களுக்கு ஏதாவது ஒரு பெரிய பலன் கிடைத்து விடுமா? என்று பார்த்தால் அது முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் இம்மாதிரி தீர்மானங்களும், இம்மாதிரி ஆவேசப் பேச்சுகளும் வெகுகாலமாக நடந்துகொண்டேதான் வருகிறது. ஆனால் இவையெல்லாம் மேல்ஜாதிக்காரர்கள் என்பவர்களால் அலட்சியமாக கருதி அசட்டை செய்யப்பட்டுதான் வருகிறது. உங்களுக்கு மதப்பித்தின் பயனாக சு. ம. உணர்ச்சி இல்லையென்பதை உங்கள் பாதிரிமார்கள் நன்றாய் உணர்ந்தி ருக்கிறார்கள். கட்டுப்பாட்டை மீறி நீங்கள் ஏதும் செய்யமாட்டீர்களென்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். நீங்களும் மதத்திற்காகவும், கடவுளுக் காகவும் எவ்வளவு கஷ்டங்களையும் , இழிவுகளையும் பொறுத்துக்கொண்டு வெறும் வாயினாலே மாத்திரம் எதையாவது பேசிக்கொண்டிருப்பீர்களே யொழிய கட்டுப்பாடுகளை மீறவோ உங்கள் இழிவுக்குக் காரணமானவற்றை உதறித் தள்ளவோ அதை அழிக்க முயற்சிக்கவோ ஒரு நாளும் சம்மதிக்க மாட்டீர்கள்.



உண்மையான விடுதலை உங்களுக்கு வேண்டுமானால் உங்கள் இழிவுக்கும், அடிமைத் தன்மைக்கும் அஸ்திவாரமான ஆதாரத்தை அழிக்க நீங்கள் தைரியம் கொள்ள வேண்டும். அந்த தைரியம் எவ்வித கட்டுப்பாடு களையும், நம்பிக்கைகளையும் உடைத்தெரிய தக்கதாகயிருக்கவேண்டும். அப்படிக்கில்லாமல் வீணே வாய்ப்பேச்சிலும், காகிதத் தீர்மானத்திலும் சாதித்து விடலாமென்று கருதுவது பைத்தியகாரத்தனமாய் தான் முடியும். நீங்கள் கீழ் ஜாதி என்பதும், தொடக்கூடாதவர்களென்பதும், சமத்துவமளிக் காமல் தனியாய் வைக்கப்பட வேண்டியவர்களென்பதும் ஆகிய காரியங் களுக்குவென்றும் மதமோ, பழக்கவழக்கமோ, சாஸ்திரமோ, கடவுள் செயலோ என்பதெல்லாம் வெறும் பித்தலாட்டமேயாகும். உங்களுடைய கீழ் சாதி தன் மைக்கும் மேற்கண்ட காரியங்களுக்கும் யாதொரு சம்பந்தமுமே கிடையாது. உண்மையான காரணத்தைச் சொன்னால் ஒரே நிமிஷத்தில் நீங்கள் அவர்கள் மீது பாய்ந்து சின்னாபின்னமாய்க் கிழித்தெறிந்து விடுவீர்களென்று கருதி ஏதேதோ சாக்கு போக்குகளைச் சொல்லி உங்களை ஏமாற்றுவதற்கு கடவு ளையும், மதத்தையும், பழக்க வழக்கத்தையும் சொல்லி வருகிறார்கள். கடவுள் மதத்தினர் கட்டளை என்றபடி பழக்க வழக்கங்கள் என்ற முறைப்படி யார் நடக்கிறார்கள்? அவர்கள் சொந்த விஷயத்தை பொறுத்த மட்டில் எவ்வித கட்டுப்பாட்டிற்கும் பழக்க வழக்கத்திற்கும் கடவுள் மத கட்டளைக்கும் கீழ்படியாமல் தங்கள் இஷ்டம் போலவே சமயத்திற் கேற்றபடியே நடந்து கொள்கிறார்கள். ஆனால் பிறத்தியானை அடக்கி ஆண்டு அடிமை கொள்வதற்காக மாத்திரம் இந்தப்படி சொல்லி பயன் பெறுகிறார்கள்.

கீழ் ஜாதி என்பதாக ஒரு பிரிவு எதற்காக? யாரால் ஏற்படுத்தப்பட்டது என்பதின் ரகசியத்தை உணர்ந்தால் பிறகு அதை அழிக்கும் விஷயம் வெகு சுலபமாக விளங்கி விடும்.

கீழ் ஜாதி, மேல் ஜாதி என்று சொல்வதின் தத்துவம் என்பதைப் பாருங்கள். ஒரு பார்ப்பானையும், ஒரு பறையனையும் கூட்டிவந்து நிறுத்தி கீழ் ஜாதி, மேல் ஜாதி என்பது அவர்களிடத்தில் எப்படி விளங்குகிற தென்று பார்த்தால் மேல் ஜாதி என்பவன் பாடுபடாமல் சோம்பேறியாய் இருந்து ஊரார் உழைப்பில் வாழ்கிறவன் என்பதும், கீழ் ஜாதி என்பவன் பாடுபட்டு உழைத்து உழைப்பின் பயனையெல்லாம் அன்னியருக்கே அழுதுவிட்டு வீடில்லாமல், துணியில்லாமல், கஞ்சியில்லாமல், கல்வியில்லாமல், மிருகத்திலும் கேடாய் வாழ்கிறவன் என்பதும் நன்றாய் விளங்கும். ஆகவே கீழ் ஜாதி தன்மை ஒழிய வேண்டும் என்று கருதுகிற ஒருவன் அன்னியருக்காக நாம் உழைக்கப் பிறந்தோமென்கிற எண்ணத்தை விட்டு விட்டு நமது உழைப்பின் பயனை சோம்பேறிகள், பாடுபடாத மக்கள் அனுபவிக்க விடக்கூடாது என்கிற உறுதி கொண்டு, பிறவியில் நமக்கும் மற்றவருக்கும் எவ்வித வித்தியாமுமில்லை என்கின்ற உறுதியோடு சோம்பேறி கூட்டத்தோடு எவன் போர் தொடுக்க முனைந்து நிற்கின்றானோ அவனே இவ்வித இழிவுகளை நீக்கிக்கொள்ள அருகதையுள்ளவனாக ஆகிறான். அதைவிட்டு விட்டு மதக்கட்டளையை மதிப்பவன், பாதிரிகளின் சொல்லுக்கு கீழ்படிந்துதான் ஆக வேண்டும். கடவுள் நம்பிக்கையை கொண்டவன் அவனவன் தற்கால நிலைமைக்குக் காரணம் “கடவுள் சித்தம்” என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும். மத கட்டளையையும், கடவுள் நம்பிக்கையையும் கொண்ட ஒரு அடிமை ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன் ஒரு நாளும் விடுதலை அடையவோ, முன்னேற்ற மடையவோ முடியவே முடியாது. மத கட்டளையும், கடவுள் நம்பிக்கையும், மேல்ஜாதிக்காரனுக்கும், பாதிரிகளுக்கும், முதலாளிகளுக்கும் தான் மேன்மை யையும், அனுகூலத்தையும் அழிக்கக் கூடியதாகும். இந்த நாட்டில் 1000 கணக் கான வருஷங்களாக ஏழை மக்களும் தாழ்ந்த ஜாதிக்காரர்களும் இருந்துதான் வருகிறார்கள். அவர்கள் அன்று முதல் இன்றுவரை மத பக்தியும், கடவுள் பக்தியும் கொண்டு அதற்காக எவ்வளவோ பணத்தையும், நேரத்தையும், செலவு செய்து தங்கள் கஷ்டங்களும், இழிவுகளும் ஒழிய வேண்டுமென்று பிரார்தனை செய்து கொண்டு தான் வந்திருக்கிறார்கள். ஏழைகளின் எண்ணிக்கை குறைந்ததா? கீழ் ஜாதிக்காரர்களின் எண்ணிக்கை குறைந்ததா? அல்லது இவர்களுடைய கஷ்டமாவது ஒழிந்ததா? யோசித்துப் பாருங்கள்.

உலகில் எவ்வளவோ அதிசயங்களும், அற்புதங்களும், முன்னேற்ற மான காரியங்களும் நாளுக்குநாள் விருத்தியடைந்தும் அதற்கு தகுந்த படி தொழில் முறைகளும், யந்திர சௌகரியங்களும், ஒன்றுக்குப் பத்து நூறாய் உயர்ந்தும் இவற்றின் பயனாய் லட்சாதிபதிகள் பத்துலட்சாதிபதியாகவும், பத்து லட்சாதிபதிகள் கோடீஸ்வரர்களாகவும்தான், முடிந்ததேயொழிய உங்களு டைய நிலைமை அன்றும் இன்றும் ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகிறது. நீங்கள் ஒரு உயிருள்ள இயந்திரம் போல் தான் இருக்கிறீர்கள். இயந்திரங் களுக்கு எப்படி எண்ணை ஊற்றினால் எண்ணையிருக்கிற வரையில் ஓடுகிறதோ அதுபோல் உங்களுக்கு ஏதாவது ஆகாரம் கொடுத்தால் அது ஜீரணமாகிறவரையில் வேலை செய்துவிட்டு மடிவது என்கிற முறையில் தானிருக்கிறீர்கள்.

உங்களுக்கு உங்களுடைய பிரதி பிரயோஜனமெல்லாம் உங்களுடைய வயிற்றுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவுதான். அதுவும் நீங்கள் சாகாமலிருப்பதற்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு தான் என்பதாகப் பதினாயிர வருஷங்களுக்கு முன்பதாகவே நிர்ணயிக்கப் பட்டுவிட்டது. இந்த நிர்ணயத்தை மீறி நீங்கள் அதிகம் கேட்காமல் இருக்க வேண்டுமென் பதற்காகத்தான் உங்களை பறையர், சக்கிலியர் என்று சொல்லி தீண்டாத சாதியார்களென்று ஆக்கியும் உங்கள் அண்ணன்மார்களை யெல்லாம் ‘அடிமை’ ‘பார்ப்பானின் வைப்பாட்டி மகன்’ ‘சூத்திரன்’ என்று சொல்லி தாழ்ந்த ஜாதியும் ஆக்கிவைக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு ஜீவனத்திற்காக என்று கொடுக்கப்படும் கூலிகளும் உங்கள் மீதுள்ள கருணையினால் என்று நினைத்து விடாதீர்கள். இந்த ஆகாரமும் இல்லாமல் மடிந்து போவீர் களேயானல் நாளைக்கு மேல் ஜாதிக்காரர்களுக்கும் முதலாளிமார்களுக்கும் வேலை செய்ய ஆள் இல்லாமல் போகுமே என்கின்ற சுயநல கருணை கொண்டுதான் மாடு வளர்க்கிறவன் தீனி போடாவிட்டால் பால் கறக்காதே. பாடுபடாதே என்று கருதி அதற்கு தீனிபோடுவது போல் உங்களுக்கும் ஜீவனத்திற்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை மாறவேண்டு மென்பதில் தான் உங்களுடைய முக்கிய வேலையாக இருக்க வேண்டுமே யொழிய சும்மா பறையர் பட்டம் போனால் போதும், கிறாதியை எடுத்து விட்டால் போதும், கோயிலுக்குள் நுழைய விட்டால் போதும் என் றெல்லாம் கருதுவதில் பிரயோசனமில்லை. கிறாதி வித்தியாசமில்லாமலும் பறஜாதி பட்டம் இல்லாமலும் கோயிலுக்குள் போய் தொழுகிற உரிமை யுடனும் இருக்கின்ற கோடிக்கணக்கான மக்கள் கஞ்சிக்கு வகையில்லாமல் இருக்க, வீடில்லாமல் ஊர் ஊராய் பிச்சைக்காரர்கள் போல் லம்பாடிகள் போல் திரிவ தையும் மரத்து நிழல்களில் தலைக்கு கல்லையோ, கையை மடக்கியோ வைத்து படுத்துக்கொண்டிருப்பதை இன்றைய தினம் எங்கும் பார்க்கலாம். இதற்குக் காரணம் என்ன என்று கருதுகிறீர்கள்.

ஆகவே உங்களுடைய கிளர்ச்சியானது பொருளாதாரத் துறையில் நீங்கள் மற்றவர்களால் ஏமாற்றப்படுவதும் வஞ்சிக்கப்படுவதும் ஒழிய வேண்டுமென்பதையே அஸ்திவாரமாகக் கொண்டிருக்கவேண்டும். அதில் தான் உங்கள் விடுதலை இருக்கிறது. எந்தக்கடவுளும், எந்த பாதிரியும் இதற்கு வகை செய்ய முடியாது?

உங்கள் மதங்களை எல்லாம், உங்கள் கடவுள் கட்டளை எல்லாம் “பொறு பொறு” “அவசரப்படாதே” “ஆத்திரப்படாதே” உனது வாழ்வில் உள்ள எல்லா துன்பங்களையும், எல்லா இழிவுகளையும் பொருமையோடு பொறுத்துக் கொண்டிருந்தால் நீ செத்த பிறகு மேல்லோகத்தில் கடவுள் உன்னுடைய பொறுமைக்காக நல்லசன்மானம் கொடுப்பார். அடுத்த ஜன்மத்தில் நல்ல பிறவி பெறுவாய் பொறுத்தார் பூமியாள்வார் என்று தான் உபதேசிக்கும் இந்த உபதேசத்தை ஆயிரக்கணக்கான வருஷங்களாக கேட்டு கேட்டு அதன்படி பொறுமையாய் இருந்து வந்ததின் பலன் தான் இன்றும் இன்னமும் நீங்கள் பொறுமையாகவே இருந்து இழிவடைந்து கஷ்டப்பட்டு சீக்கிரம் செத்து கடவுளிடம் சன்மானம் பெற வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள்.

ஆகவே செத்த பிறகு மேல் லோகத்தில் அல்லது அடுத்த ஜன்மத்தில் பயன் பெறலா மென்கின்ற பித்தலாட்ட, சுயநல சூட்சியான உபதேசத்தை அடியோடு மறந்து இந்த ஜன்மத்தில் நீங்கள் சாவதற்கு முன் உங்கள் இழிவுக்கும், கஷ்டத்திற்கும் என்ன பரிகாரம் என்பதைக் கவனித்து அதற்குத் தக்கது செய்ய முன் வாருங்கள். இந்தப்படி நினைத்து தைரியமாய் முன் வந்த மக்கள் தான் இன்று உலகில் ஒருபக்கத்தில் அடிமையாய் கூலியாய் இழி ஜாதியாய் ஏழையாய் இல்லாமல் மனிதனாய் கவலையற்று தேசமே ஒரு குடும்பமாகவும் எல்லோரும் ஒரு தாய் வயிற்று சகோதரர்களாகவும் வாழ்ந்து வருகின்றார்கள்.

ஆகவே இந்த விஷயங்களை கவனித்து நன்றாய் ஆலோசித்து தங்களுக்கு சரி என்று பட்டதை பின்பற்றுங்கள் என்பதை தெரிவித்துக் கொண்டு இத்துடன் முடித்துக் கொள்ளுகிறேன்.

-- 23.04.1933 இல் களத்தில் வென்றான் பேட்டை கிராமத்தில் நடைபெற்ற இலால்குடி தாலூக்கா ஆதிதிராவிட கிருஸ்தவர்கள் மாநாட்டில் தந்தைபெரியார்  சொற்பொழிவு."குடி அரசு' - சொற்பொழிவு - 07.05.1933