Monday, 17 January 2022

விவாகரத்து - தோழர் பெரியார்

 

விவாகரத்து


சமீபத்தில் சென்னையில் நடந்த ஸ்திரீகள் மகாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை வாசகர்கள் அறிந்திருக்கலாம். அவைகளில் முக்கியமாக இரண்டு தீர்மானங்கள் மாத்திரம் அதிகமான விவாதத்திற்குக் காரணமாயிருந் தன. “ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சரிசமானமான ஒழுக்க முறைகள் ஏற்படுத்த வேண்டும்” என்பது ஒன்று. “கலியாணமானப் பெண்கள் தகுந்த காரணமிருப்பின் தங்களுக்கிஷ்டமான போது தங்கள் விவாகத்தை ரத்து செய்து கொள்ளலாம்” என்பது இரண்டு. இந்த இரண்டு தீர்மானங்களும் பெரிய படித்த மனிதர்கள் என்பவர்களையும் பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுகிற வர்கள் என்பவர்களையும் சரியான பரீட்சை பார்த்துவிட்டது என்றே சொல் வோம். நமது தென்னிந்தியாவிலுள்ள பத்திரிகைகள் எல்லாம் ஒன்றுவிடாமல் “விவாகரத்து” தீர்மானத்தை கண்டித்துவிட்டன.




இத்தீர்மானம் சம்பந்தமாக பத்திரிகைகளில் நடந்த வாக்குவாதங்களும், மறுப்புகளும், கண்டனங்களும் அவைகளுக்கு எழுதப்பட்ட பதில்களும் நமது வாசகர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். வயது சென்ற ஸ்திரீகள் என்று சொல்லக்கூடியவர்களில் சிலர் தீர்மானத்தின் உண்மையை உணராமல் இதை எதிர்த்த விஷயம் நமக்கு மிகவும் ஆச்சரியமாகவே இருக்கிறது.

ஸ்திரீகள் மகாநாடு நடைபெற்ற அன்றைய தினமே, இவ்விதமான தீர் மானங்கள் கொண்டு வருவது தனக்கு இஷ்டமில்லையென்று சொல்லி, அக்கி ராசனர் ஸ்ரீமதி சீனிவாசய்யங்கார் அவர்கள் தன்னுடைய அக்கிராசனப் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார்கள். பிறகு வேறு ஒருவருடைய அக்கிரா சனத்தில் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு மேற்சொன்ன தீர்மானங்களும் இன்னும் இதர தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பிறகு இது சம்பந்தமாக பிரபல ஸ்திரீகள் சிலருக்குள் அபிப்பிராய பேதம் ஏற்பட்டு பத்திரிகைகள் மூலியமாக இரு சாரார்களுடைய அபிப்பிராயங்களையும் வெளியிட்டு வந்தார்கள். இன்னும் அத்தீர்மானங்களின் சம்பந்தமான அபிப்பிராயங்கள் பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஆதலால்தான் இந்த முக்கியமான விஷயத்தைப் பற்றி நமது அபிப்பிராயத்தையும் வெளியிட விரும்புகிறோம். மேலும் சென்னை மாகாணத்தின் முதலாவது சுயமரியாதை மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மேற்கண்ட இதே இரண்டு தீர்மானங் களுக்கு இப்போதிருக்கும் எதிர்ப்புக்களைவிட பலமான எதிர்ப்புகள் தோன்றியதும் வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம். அந்த சந்தர்ப்பத்தில் இதைவிட “வேகமானதும்” “புரட்சியானதும்” என்று பிறரால் அநாவசியமாக தூற்றப்பட்ட சில இதர தீர்மானங்களைப் பற்றி நாம் எழுத வேண்டியதா யிருந்ததால், ஸ்திரீகளைப் பற்றி மேற்கண்ட இரண்டு தீர்மானங்களைப் பற்றி அதிகமாக விவரித்து எழுத அவகாசமில்லாது போயிற்று. ஆகையால் இந்த சந்தர்ப்பத்திலாவது இது சம்பந்தமாக நமது கருத்தை விளக்கிவிட வேண்டு மென்று எண்ணுகிறோம்.
முதலாவதாக, ஆண், பெண், இருபாலாருக்கும் சமமான ஒழுக்க முறைகள் இருக்க வேண்டுமென்பது, இது விஷயமாக அபிப்பிராய பேதமே இருக்காது என்று எதிர்பார்த்தோம். ஆனால், இதில்கூட படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் கூட மாறுபாடான அபிப்பிராயத்தைக் கொண்டி ருக்கிறார்கள் என்பதை அறிந்தவுடன் நமக்கு, பெரிய அதிசயமாகவே இருந்தது. உதாரணமாக பார்ப்பனரல்லாதாருக்காக உழைக்கும் “ஜஸ்டிஸ்” பத்திரிகையில் ஆண், பெண்ணுக்கு சமமான சட்டம் இருக்க வேண்டு மென்று சென்னை ஸ்திரீகள் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கண்டித்துத் தலையங்கம் எழுதியிருந்ததைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனோம் ஏழை மக்களுக்காகவும், நியாயத்திற்காகவும், சகோதரத்துவத்திற் காகவும், சமத்துவத்திற்காகவும் உழைப்பதாகச் சொல்லும் “ஜஸ்டிஸ்” பத்திரி கையானது சாஸ்திரங்களை உதாரணமாகக் காட்டி இத்தீர்மானத்தை கண்டித்த தானது நாம் என்றும் எதிர்பாராததும், ஏமாற்றமுமான விஷயமேயாகும். பகுத்தறிவுக்கு ஏற்றதான காரணங்களைச் சொல்லாமல் “ஜஸ்டிஸ்” பத்திரிகையானது, “பொதுவாகவே பெண்கள் இயக்கம் சரிவர நடத்தப்படுவ தில்லை”என்ற பெரும் குற்றத்தைச் சுமத்துகிறது. இந்த அபிப்பிராயம் உண்மையா? இல்லையா என்பதைப் பற்றி நமக்கு அதிகக் கவலையில்லை. ஆனால், நமக்கு வேண்டியதெல்லாம் இது மாதிரி விஷயங்களில் பெண் பாலருடைய முடிவான அபிப்பிராயம் என்னவென்பதே. ஏனெனில், பெண் கள் சம்பந்தமான விஷயங்களைப் பற்றி ஆண்கள் முடிவு செய்வதை விட பெண்களது அபிப்பிராயத்தையே பின்பற்றுவதுதான் முறையான வழியாகும். இன்று நமது நாட்டிலும் பிற நாடுகளிலும் பெண்கள் நிலைமை சற்று தாழ்மை யாகவே இருப்பதற்குக் காரணம் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விதிகள் சட்டதிட்டங்களெல்லாம் பெண்மக்கள் படித்திராத காலத்தில் ஆண் மக்களால் ஏற்படுத்தப்பட்டதால் தான். பார்ப்பனரல்லாதார் படிக்காத காலத் தில் எப்படி நம்மைப் பற்றி தூஷித்து நம்மை ‘அடிமைகள்’ என்பது புராணம் முதலானவைகள் எழுதி வைத்தார்களோ அதே மாதிரியாகத்தான் ஆண் மக்களும் தங்களுக்கு ஏற்றவாறு பாரபட்சமான சட்ட திட்டங்களை ஏற்படுத்தி னார்கள். உதாரணமாக புருஷன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏற வேண்டுமென்ற கட்டாயத்திற்கு பெண்கள் சம்மதித்திருப்பார்களா என்று யோசித்துப் பாருங்கள். அப்படி சம்மதித்திருந்தாலும் அதே மாதிரி மனைவி இறந்த புருஷனையும் உடன்கட்டை ஏற்ற வேண்டு மென்றாவது கேட்டிருக்க மாட்டார்களா என்பதும் சற்று யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயமாகும்.
ஆகவே, இம்மாதிரியாக பலவழிகளிலும் பெண் மக்களை அடிமைப் படுத்தி வைத்திருப்பதற்கு ஆண்களுடைய சுயநலமே காரணம் என்பது “ஜஸ்டிஸ்” போன்ற பத்திரிகைகளுக்கு இன்னும் இவை தெரியாமலா இருக்கிறது என்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துரிமை, ஒழுக்கம் முதலிய விஷயங்களில் சமமான சட்டங்கள் இருத்தலே அவசியம் என்பதை “ஜஸ்டிஸ்” போன்ற பத்திரிகைகள் மறைத்தாலும் அல்லது எதிர்த்தாலும் நமது நாட்டுப் பெண்கள் ஆயிரக் கணக்காய்ப் படிக்க ஆரம்பித்து விட்ட இக்காலத்தில் ஆண் மக்களது சுயநல அபிப்பிராயங்களுக்கு எவ்வித செல்வாக்கும் மதிப்பும் இருக்காது என்பது நமக்கு நன்றாக தெரியும். ஆகவே இந்த அடிப்படையான முக்கிய கொள்கையிலேயே நமது சகோதரப் பத்திரிகையின் அபிப்பிரா யத்துக்கு நாம் மாறுபட வேண்டியிருக்கும் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை.
இரண்டாவதாக உள்ள “விவாகரத்து” விஷயந்தான் சற்று கூர்ந்து கவனிக்கவேண்டிய விஷயமாகும். இது சம்பந்தமாக செங்கற்பட்டு சுய மரியாதை மகாநாட்டிலும் சென்னை ஸ்திரீகள் மகாநாட்டிலும் நிறைவேற்றப் பட்ட தீர்மானமானது பொறுப்பற்றவர்களால் செய்யப்பட்டதல்லவென்பது வாசகர்களுக்குத் தெரியும். ஆண் மக்களே நூற்றுக்கு 95க்கு மேல் கூடி யிருந்த செங்கற்பட்டு மகாநாடும், பெண்மக்களே நூற்றுக்கு நூறு கூடியிருந்த சென்னை ஸ்திரீகள் மகாநாடும் ஒரே தீர்மானத்தை நிறைவேற்றியிருக் கின்றனவென்றால் இதில் ஏதாவது தவறு இருப்பதற்கு மார்க்கமிருக்கிறதா என்று கேட்கின்றோம்.

இதைப் பற்றி ஆராய்வதற்கு முன்பு இது சம்பந்தமாக அநேக தப்ப பிப்பிராயம் கொண்டுள்ளார்கள் என்பதை விளக்க வேண்டியது அவசியமா கின்றது. “விவாகரத்து” சட்டமானால் உடனே எல்லாப் பெண்களும் தங்கள் கணவர்களை விட்டு ஓடிப்போவார்கள் என்றும், “கற்புநிலை” அடியோடு கெட்டுப் போகுமென்றும் பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். பாதுகாப் பிற்கும், அவசியத்திற்கும் ஒரு சட்டம் செய்தால் ஜனங்கள் எல்லோரும் அதே வேலையாயிருப்பார்களென்பதே நியதியல்ல. அவசியமான சந்தர்ப் பங்களில் மாத்திரம்தான் ஜனங்கள் அதனைக் கையாளுவார்கள். ஏனெனில், அதனால் ஏற்படக்கூடிய கஷ்டநஷ்டங்களுக்கு தாங்களே பாத்தியப்பட்டவர் கள் என்பது அநுபவத்தினால் மக்களுக்கு நாளடைவில் விளங்கிவிடும். ஆகவே “விவாகரத்து” அனுமதிக்கப்படுமானால் ஏதோ ஆபத்து வந்துவிடு மென்று சிலர் நினைத்துக் கொண்டிருப்பது அவர்களது சுயநலத்தினால் ஏற்படக்கூடிய பயம் என்றுதான் சொல்லுவோம்.

“விவாகரத்து” சட்டமாவது பெண்கள் சமூகத்திற்கு ஒரு இன்றியமையாத பாதுகாப்புக்கருவி என்பது நமது முடிவான அபிப்பிராயம். புருஷனுக்கும் மனைவிக்கும் பரஸ்பர அன்பும் சமமான வாழ்க்கையும் ஏற்படவேண்டுமானால் இருவருக்கும் தனித்தனியாக உரிமையிருந்தால்தான் முடியும். இப்போதிருக்கும் “இந்திய” சமூகத்திலுள்ள மணவாழ்க்கையானது பல வழிகளிலும் பெண் மக்களுக்கு பாதகமான முறையிலேயே நடைபெற்று வருகிறது. ஒரு புருஷன் தனக்குத் தேவையில்லாதபோது தனது மனைவி அளித்திருக்கும் நமது சட்டமானது, பெண்களுக்கு அதே உரிமையைக் கொடுக்காமலிருப்பது வருந்தத்தக்க விஷயமாகும். இந்த உரிமை மனிதனுக்கு இருப்பதால், எல்லாப் புருஷர்களும், இதே வேலையாகவா இருக்கிறார்கள் என்று தான் கேட்கி றோம். ஆகவே, இதே உரிமையை பெண் மக்களுக்கும் அளிக்கவேண்டியது நியாயமும் சமமும் ஆகும் என்பதை இன்னும் ஏன் ஆண்மக்களில் சிலர் அறியவில்லை என்பதுதான் நமக்கு விளங்கவில்லை. இந்த விவாகரத்துத் தீர்மானத்தை வைதீகப் பத்திரிகைகள் தான் கண்டித்தனவென்றால், நமது “ஜனநாயக”த் தினசரியான “ஜஸ்டிஸ்” பத்திரிகையும் கண்டித்ததுதான் நமக்கு விளங்கவில்லை. எது எப்படியாயினும், இந்தத் தீர்மானத்தின் அவ சியத்தை நமது சுயமரியாதை இயக்கத்து அன்பர்கள் நன்கு அறிவார் களாகையால், இம்மாதிரி சமத்துவமான நோக்கமுடைய விஷயங்களில் எவ் வளவு எதிர்ப்பு இருந்தாலும், அதற்காக நாமோ அல்லது நமது இயக்கத்தைச் சேர்ந்தவர்களோ எங்கள் கடமையினின்றும் பின்வாங்க மாட்டோம் என் பதை மாத்திரம் உறுதி கூறுகிறோம். கடைசியாக “ஜஸ்டிஸ்” பத்திரிகைக்கு ஒன்று கூற விரும்புகிறோம். பொது மக்களின் உணர்ச்சிக்காக ஏற்படுத்தப் பட்ட அப்பத்திரிகையானது இனியாகிலும் மக்களின் அபிப்பிராயத்தை ஒட்டி சீர்த்திருத்தத்தில் முன்னணியில் நின்று தனது பழைய குருட்டு நம்பிக்கைகள் ஏதேனும் மிஞ்சி இருக்குமானால் அவைகளை உடனே ஒழித்து சமூகத் தொண்டையே பிரதானமாகக்கொண்டு வேலை செய்யும் என்று எதிர்பார்க் கிறோம். மற்றொரு சந்தர்ப்பத்தில் இதுசம்பந்தமாக இன்னும் விவரமாக எழுதுவோம்.


குடி அரசு – தலையங்கம் – 29.12.1929

Sunday, 16 January 2022

மதமும், கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள் - தோழர் பெரியார்

 
மதமும், கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள்.


மனிதனுக்குள் கடவுளைப் புகுத்துவது மனிதனை முட்டாளாக்கும் டானிக்(வைட்டமின் சத்து) ஆகும். இதை இன்று பார்ப்பனர்கள், சங்கராச்சாரிகள் கடவுள் பிரசாரம் செய்வதில் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

கடவுள் மனித நலத்துக்காகக் கண்டு பிடித்த சாதனம் அல்ல. மனிதனை முட்டாளாக்குவதற்குப் பயன்படுத்தும் சாதனமேயாகும். சூரியனை, சந்திரனை நெருப்பை, நீரை, காற்றை, கல்லை, மண்ணை எந்த மனிதனும் கண்டுப்பிடிக்கவில்லை. அவற்றின் பெயர்களைத்தான் மனிதன் தெரிந்து கொண்டான்.




இவற்றிற்கு விளக்கம் தேவை இல்லை. காரண காரியங்கள் தேவையில்லை. மனிதன் என்றால் இவைகளை அறிந்தே ஆகவேண்டும்; இவற்றின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.

ஆனால், கடவுள் அப்படி அல்ல; ஒருவன் சொல்லி அதுவும் சொல்லுவது மாத்திரமல்ல; நம்பும்படி செய்து, நம்பும்படி செய்வது மாத்திரமல்ல; நம்பும்படி கட்டாயப்படுத்தி மனித மூளைக்குள் புகுத்தியாக வேண்டும்.

இந்தக் கதி சர்வ சக்தியுள்ள "கடவுளுக்கு" ஏற்பட்டது பரிதாபம்! மகா பரிதாபம்!

கடவுள் கதை ஒரு முட்டாளுக்குத் தோன்றிய தோற்றம். இது உலக அறிவையே பாழாக்கிவிட்டது. அதாவது சிறு குழந்தை கையில் கிடைத்த நெருப்புப்பந்தம் வீட்டையே, ஊரையே எரித்து சாம்பலாக்கியது என்பது போல் கடவுள் எண்ணம் அறிவையே கொன்று விட்டது என்று சொல்லலாம்.

கடவுள் என்பது "பிடிக்குப்பிடி நமசிவாயம், (நமசிவாயம் என்றால், இங்கு ஓன்றும் இல்லை; சூனியம் என்றுதான் பொருள்)

அது "கடவுள்" என்றால் ஒரு "சக்தி," "சக்தி கூட அல்ல;" "ஒரு காரணம்" "காரணப் பொருள்கூட அல்ல" அப்படி நினைப்பது, நினைத்துக் கொள்வது மனிதனுக்கு ஒரு "சாந்தி" என்பதாக கா.சு.வும் (M.L .பிள்ளை), திரு.வி.க.வும் சொன்ன விளக்கம் - இதை பழைய "குடிஅரசு" இதழில் காணலாம். ஆனாலும் இவர்கள் விக்கிரக பூசையும், பட (உருவ) பூசையும் செய்து வந்தார்கள். கடைசியாக மாற்றிக் கொண்டார்கள்.


மனிதனுக்கு எதற்காக கடவுள் தேவைப்பட்டது என்பது எனக்கு இன்னமும் விளங்கவில்லை. அதிலும், கடவுளை நம்பும் எவனும் அதன் சர்வ சக்தியில் நம்பிக்கை வைப்பதே இல்லை. எவனும் சம்பிரதாயத்திற்காக "கடவுள் செயல்" என்கிறானே தவிர, காரியத்தில் மனிதன் செயல் என்றும், இயற்கை என்றும், அகஸ்மாத், தற்சம்பவம், ஆக்சிடெண்ட் என்றும் தான் முடிவு செய்து கொண்டவனாகிறான்.

சர்வம் கடவுள் செயல் என்று சொல்லுகின்ற எவனும் சர்வத்திற்கும் தற்காப்பு செய்து கொள்ளாமல் இருப்பதில்லை. சர்வம் கடவுள் செயலாயிருக்கும் போது நாஸ்திகன் - கடவுள் இல்லை என்பவன் எப்படித் தோன்றினான் என்பது பற்றிச் சிந்திப்பதில்லை.

மற்றும் சர்வத்திலும் வியாபகமாக இருக்கிற கடவுள் மக்களுக்கு ஏன் தான் இருப்பதாக, தன்னைத் தானாகத் தெரிந்து கொள்ளச் செய்ய முடியவில்லை என்பதை சிந்திக்கவே மாட்டேன் என்கிறான்.

கிருஸ்து பாதிரி இந்தக் கேள்விக்குப் பதிலாக "கடவுள் மனிதனுக்கு அறிவைக் கொடுத்துவிட்டான்; அந்த அறிவைக் கொண்டு கடவுளைத் தெரிந்து கொள்ள வேண்டியது மனிதன் கடமை" என்று சொல்லிவிட்டார்.

உன் அறிவுக்கு எட்டிய கடவுள் ஏன் என் அறிவுக்கு எட்டவில்லை? என்று கேட்டதற்கு, "பாபஜன்மங்களுக்கு எட்டாது" என்று சொல்லிவிட்டார்.

அந்த பாபஜன்மங்களை யார் படைத்தது? படைத்தது கடவுளானால், பாபஜன்மங்களை ஏன் படைத்தார்? கடவுள் பாபஜன்மங்களைப் படைக்கவில்லையானால், பாபஜன்மங்களைப் படைத்தது யார்? என்று கேட்டேன்.

'சாத்தான் படைத்தான்' என்றும், மற்றும் அவருக்கே புரியாத எதை எதையோ யோசித்துப் பேசினார்.

இஸ்லாத்தின் கதியும் இப்படித்தான். இந்துவின் கதியே மும்மூர்த்திகள், ஓங்காளி, மாரி, காத்தவராயன், மதுரை வீரன், கருப்பண்ணன், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சமாதி, கல்லுகள், படங்கள், பட்சிகள், மிருகங்கள், மரங்கள், சாணி (மூட்டை உருவ), உருண்டைகள், செத்துப்போன மனிதர்கள் முதலிய எத்தனையோ பண்டங்கள் கடவுள்களாக வணங்கத் தக்கவைகளாகவும் இருந்து வருகின்றன.

இவைகளை ஏன் சொல்லுகிறேன் என்றால், ஒரு சர்வ சக்தியுள்ள கடவுளுக்குத் தன்னைப்பற்றித் தெரிவித்துக் கொள்ள – தன் உருவத்தை விளக்க சக்தியில்லை என்பதைக் காட்டத்தான்.

பிறகு – முன்ஜென்மம் - பின் ஜென்மம், கருமம், விதி, நரகம், சொர்க்கம், வைகுண்டம், கைலாயம் இப்படி இன்னும் பல பைத்தியக்காரனுக்குக் கள் ஊற்றினது போல் உளறல் மேல் உளறல்கள்.

மனிதனுக்குப் பிறகு முதல் சாவுவரை எதத்னையோ துன்பமும், தொல்லையும், இருக்க இந்தக் கடவுள், கருமம், மோட்ச – நரகத் தொல்லைகள் ஒருபுறம் மனிதனைச் சித்திரவதை செய்கிறது. மனிதன் (ஜீவ கோடிகள்) பிறப்புக்கும், வாழ்க்கைக்கும், சாவுக்கும் இடையில் அனுபவிக்கும் இன்பம், துன்பம், கவலை, தொல்லை முதலிய காரியங்களுக்கு அவசியம் என்ன? காரணம் என்ன? என்பதை எவனாலும் இதுவரை தெரிந்து கொள்ள முடியவில்லையே! இத்தனைக்கும் மனிதன் கழுதை, குதிரை, நாய், நரி, எருமை, யானை, புலி, சிங்கம், ஈ, எறும்பு முதலான எண்ணிறந்த ஜீவராசிகளைவிட அதிகமான அறிவு (பகுத்தறிவு) படைத்தவனாவான்.

இந்தப் பகுத்தறிவின் பயனால்தான் மற்ற ஜீவப்பிராணிகளுக்கு இல்லாத தொல்லையை மனிதன் அனுபவிக்கிறான். காரணம், இந்தப் பாழாய்ப்போன கடவுளால் தான் அதிகத் தொல்லை என்பேன்.

"உள்ளத்தைப் பங்கிட்டு உண்பது," "உழைப்பைப் பங்கிட்டுச் செய்வது" என்ற நிலை ஏற்பட்டால் கடவுளுக்கு, வேலையோ, அவசியமோ இருக்காது.

இப்போது கையில் வலுத்தவன் காரியமாகவும், அயோக்கியன் ஆதிக்கமாகவும் இருப்பதால், மனிதன் அறிவு இருந்தும் தொல்லைக்கும் துன்பத்திற்கும் ஆளாகிறான் - அடிமையாக வாழ்கிறான்.

இனி ஒரு அய்ம்பது ஆண்டுக்குள் மனிதனுக்கு சராசரி வயது 100–ஆகப் போகிறது. இது உறுதி. இப்பொழுதே பல நாடுகளில் சராசரி மனித வயது
67-முதல் 74-வரை இருந்து வருகிறது. நமது நாட்டில் 1950–ல் சராசரி வயது 32- ஆக இருந்தது. இன்று 50-ஆக ஆகிவிட்டது! இதற்குக் காரணம், 1940–ல் படித்த மக்கள் நம்நாட்டில் 100–க்கு 9–பேராக இருந்தவர்கள் காமராசர் முயற்சியால் 100– க்கு 50–பேராக ஆனதுதான். அதோடு கூடவே, "கடவுளும்," "கடவுள் செயலும்" வெகுதூரம் குறைந்து மறைந்து வருவதும் தான் என்று சொல்லுவேன்.

கடவுள் மறைய மறைய மனிதனுக்கு அறிவு வளரும்; சுதந்திரம் அதிகமாகும். நமது பெண்களுக்குப் பூணர சுதந்திரம் இருக்குமானால் - வாழ்வில் சுயேச்சையும், சமத்துவமும் ஏற்படுமானால், மனிதன் அறிவும், ஆயுளும் எல்லை இல்லாமல் வளர்ந்து கொண்டே போகும்.

முதலில் கடவுள் எண்ணம் மறையட்டும். இன்னும் நம்நாட்டு ஆட்சியாளர்களுக்கு (உண்மையான) தி.மு.க. காரருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவர்கள் (தி.மு.க.காரர்) இனியும் இரண்டு லட்சம் மெம்பர்களைச் சேர்க்க வேண்டும். பிறகு இவர்களை அசைக்க எந்த மாஜிகளாலும் முடியாது.

இது தான் கடவுள் இரகசியம்.



----------------------------------03.11.1970- "விடுதலை" நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்

பெண்ணடிமை நீங்க, பெண்களே சம்பாதியுங்கள் - தோழர் பெரியார்

 பெண்ணடிமை நீங்க, பெண்களே சம்பாதியுங்கள்

இந்த நிகழ்ச்சி பெருமளவில் நம் நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு மாறுபாடாகத் தோன்றலாம். இந்த முறை ஏன் மாற்றப்பட்டது? இதற்கு முன் நமக்கு எந்த முறை இருந்து வந்தது? எந்தக் காலம் முதற்கொண்டு இருந்து வந்தது? இந்த முறையின் தன்மை என்ன? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.

எனது ஆராய்ச்சி எனக்குப் பல பெரிய புலவர்கள், வித்வான்கள், பண்டிதர்கள், நண்பர்களாக இருந்து இருக்கின்றார்கள். அவர்களிடம் கேட்டும், அறிந்து இருக்கின்றேன்.

என்னுடைய ஆராய்ச்சிப்படி சொல்கிறேன். நம் இலக்கியம் முழுவதும் எந்த இலக்கியமானாலும் சரி, குறள், தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு முதலியவை யாவும் பார்ப்பனர்கள் வருகைக்குப் பின்தான் ஏற்படுத்தப்பட்டவை. நம் தமிழ் இலக்கியங்கள் யாவும் ஆரியர் இந்த நாட்டிற்கு வந்த பின் தான் தோற்றுவிக்கப்பட்டன. தமிழனுக்கு இப்படி ஒரு நிகழ்ச்சி முறை இருந்திருக்க வேண்டுமானால், அதற்கு ஒரு பெயர் இருக்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சி முதலாவதாக யாருக்கு நல்ல பலன் அளிக்கிறது என்றால் பெண்களுக்குத் தான். பெண்கள் தான் பழைய முறை மூலம் அடிமைகளாக ஆக்கப்படுகிறார்கள். ஆண்களுக்கு நிரந்தரமான அடிமையாவது தான் இந்தத் தத்துவம். இதனால் இந்த நாடு, சமுதாயம் பெண்களால் அடையும் நலன்களை அடைய முடியாமல் போய்விட்டது. பெண்களின் அடிமை நிலையை நினைத்தால் ஜாதிக் கொடுமையை விட, சமுதாயத்தில் இருக்கும் தீண்டப்படாதவர்களை விட கொடுமையானதாகும்.

இப்போது மாறுதல் நிகழ்ச்சியின் பயனாகப் பெண்கள் அடிமை நீங்கி, ஆண்களால் இந்த நாட்டிற்கு எவ்வளவு பயன் ஏற்படுகிறதோ அந்த அளவு பயன் பெண்களால் நாட்டிற்கு ஏற்பட வேண்டுமென்கிற தன்மை ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்கின்ற பெயரோ, திருமணம் என்கின்ற பெயரோ இல்லாவிட்டால் மீதி உள்ளவையாவும் வடமொழிச் சொற்களேயாகும். கல்யாணம் என்ற சொல்லுக்கு அர்த்தம் கணவன் - மனைவியாக வாழச் செய்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு உரிய சொல் அல்ல. மங்களகரமான காரியம் என்று தான் அர்த்தம். விவாகம் என்ற சொல்லும் மேல் - கீழ் என்ற தன்மையை உடையதே தவிர, நிகழ்ச்சிக்குரிய சொல் அல்ல.

ஒரு காரியத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் ஏன்? எதற்காக? என்று சிந்திக்க வேண்டியது அவசியம்.

இந்தக் காரியத்திற்குத் தமிழில் ஒரு சொல்லே இல்லை. சொல் இல்லை என்றால், அதற்கு முன் இந்நிகழ்ச்சி நம்மிடையே இல்லை என்றுதான் அர்த்தமாகும். இப்போது காஃபி குடிக்கிறோம். உலகத்தில் உள்ள எல்லா மக்களும் காஃபி - காஃபி என்று தான் சொல்கிறார்கள். ஆனால், அது தமிழ்ச் சொல் அல்ல. ஆங்கிலச் சொல். ஆங்கிலச் சொல் மட்டும் அல்ல; 10- மொழிகளின் சொல்லாகும். கிரீஸ், ஸ்பெயின், ஃபிரெஞ்சு எல்லாம் சேர்ந்தது அய்ரோப்பிய மொழிகள்; அவை எல்லாவற்றிலும் காஃபி என்றே அழைக்கப்பட்டு வருகின்றது. அதையே தமிழிலும் அழைக்கிறோம்.

ஆரியனுக்கும் இந்தத் திருமண வழக்கம் இல்லை. மத்தியில் கொண்டு வந்து புகுத்திய முறையேயாகும். அதற்கு முன் ஆண் - பெண் இல்லையா? அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று கேட்கலாம். இருந்தார்கள். ஆனால், இப்போது போல் அடிமையாக இல்லை. சுதந்திரமாக இருந்தார்கள். இந்த அமைப்பை வைத்துப் பெண்களைக் கீழ்மையாக்கி விட்டார்கள்.

நமக்கெல்லாம் புத்தி இல்லையா என்பீர்கள். ஓர் உதாரணம் சொல்கிறேன். நமக்கெல்லாம் அறிவு இல்லை, மானம் இல்லை, புத்தி இல்லை என்பதற்கு (ஆரியன்) பார்ப்பான் வந்த பின்தானே நாம் "சூத்திரன்?" அதற்கு முன் நாம் "சூத்திரனாக" இருந்ததில்லையே. அரசியலில் இருக்கும் முதல்மந்திரி (திரு. பக்தவத்சலம்) சூத்திரன் என்பதற்குக் கவலைப்படவில்லையே! அதை ஒரு ராவ்பகதூர் பட்டமாகக் கருதுகிறாரே! கடவுள் அப்படிச் சொல்கிறார் - மதத்தில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது - சாஸ்திரத்தில் இருக்கிறது என்று இந்த மூன்றையும் தான் எந்தக் காரியமானாலும் எடுத்துக் காட்டுகிறானே தவிர, என் அறிவு இப்படிச் செல்கிறது என்று எவனும் சொல்லுவதில்லையே!

முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் மூட நம்பிக்கை - முட்டாள்தன காரியங்களுக்கு மதம் - சாஸ்திரம் - கடவுள் - இவற்றைத் தான் காட்டுகின்றனர். பார்ப்பானின் தயவினால் தான் இன்று நம்மை மலம் தின்னாமல் வைத்திருக்கின்றான். நான் சொல்லுவது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். இன்று உங்களை சாணியைத் தின்ன வைத்திருக்கின்றானா இல்லையா? பார்ப்பான் நம் வீட்டில் நடைபெறும்  காரியங்கள், திவசம், சாந்திக்கு வந்தால் நமக்கு முன்னாலேயே சாணி, மூத்திரம், நெய், பால், தயிர் இவற்றைக் கலந்து "பஞ்சகவ்வியம்" குடி என்கிறான்! நம் மடையன் பயபக்தியோடு கையில் வாங்கி குடித்துவிட்டு, தலையில் கூடத் தடவிக் கொள்கிறான். இது மதத்தின் பெயரால் நடைபெறுகிறது தானே?

மனு தர்மம், பாரதம், இராமாயணம் இவற்றை நாம் படிக்கிறோம் என்றால் படிக்கக் கூடாது என்று எழுதி வைத்திருக்கிறான். இவற்றின் மூலமே நம்மை அடிமையாக்கி வைத்திருக்கின்றான். நம் மக்களும் இதையே நம்பிக் கொண்டிருப்பதால் இன்றும் சூத்திரர்களாக, இழி மக்களாக இருந்து வருகின்றனர். இத்தன்மையால், இதில் மாற்றம் வேண்டுமென்று எவனுமே நினைக்கவில்லை. நாம் தான் முதன்முதலில் இதைப் பற்றிச் சிந்தித்து இதில் மாற்றம் வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டு வருகின்றோம். எதனால், எங்களால் மட்டும் இதைக் கூற முடிகிறது என்றால், கடவுள் - மதம் - சாஸ்திரம் இவற்றில் நம்பிக்கை எங்களுக்குக் கிடையாது. ஆகவே தான் துணிந்து எங்களால் இவற்றை எல்லாம் எடுத்துக் கூற முடிகிறது.

உலக நாடுகள் எப்படி முன்னேறிக் கொண்டிருக்கின்றன? வெளிநாட்டில் உள்ளவன் சந்திர மண்டலத்திற்குச் சென்று திரும்புகின்றான். எல்லா ஜீவன்களையும் விடச் சிறந்த பகுத்தறிவு மனிதனுக்கு இருக்கிறது. மற்ற நாட்டு மக்கள் தங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி மிக விரைவில் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், நாம் இன்னும் பகுத்தறிவைப் பயன்படுத்தாத காரணத்தால் காட்டுமிராண்டிகளாக இருக்கிறோம். சூத்திரர்களாக பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனாக இருக்கின்றோம்.

இன்னும் 10-ஆண்டுகளில் இந்த முறையே இருக்காது. எங்களின் கடைசி இலட்சியமும், அடுத்த இலட்சியமும் இதுதான். எதற்காக இந்தக் கணவன் - மனைவி முறை? இது இல்லாவிட்டால் என்ன கெட்டுவிடும்? மேல்நாடுகள் பலவற்றில் இந்த முறை இல்லையே! அதனால் அந்த நாடு என்ன கெட்டு விட்டது? இந்த முறை ஒழிந்தால் மற்ற மக்களுக்குத் தொந்தரவு அற்ற நிலை ஏற்படும். குடும்பக் கவலை இன்று பிறருக்குத் தொண்டு செய்யவும் முடியும். 

பெண்களுக்குப் பிழைக்க வழி இல்லை என்பதால் பெண்ணுக்கு ஆணின் துணை தேவை இருந்தது. பெண் வாழும்படியான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டால் அவள் தேவைக்கு அவள் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால் அப்பறம் எதற்குத் துணை தேவை? 

பகுத்தறிவுவாதிக்கு எந்தப் பற்றும் இருக்கக் கூடாது. எந்தப் பற்று இருந்தாலும் அவன் பகுத்தறிவுவாதியாக முடியாது. பகுத்தறிவுவாதியாக வேண்டுமானால் அவனுக்குக் கடவுள்பற்று - மதப்பற்று - சாஸ்திரப்பற்று - தேசப்பற்று - மொழிப்பற்று எதுவுமே இருக்கக் கூடாது. மக்கள் வளரணும் - மக்கள் வளர்ச்சியடையணும் என்ற பற்றுத் தான் இருக்க வேண்டும். எந்தக் காரியத்தையும் நிர்வாணமாகப் பார்த்துச் சிந்திக்க வேண்டும். மனித சமுதாயத்திற்குக் கேடாக அமைந்திருக்கிற பெண்ணடிமை - மூடநம்பிக்கை - ஜாதி இழிவு - இவை ஒழிய வேண்டும். இவை ஒழிந்தால் தான் சமுதாயம் வளர்ச்சியடைய முடியும். 

இந்த மாறுதல் நிரந்தரமான மாறுதல் அல்ல இது 1966-ஆம் ஆண்டு மாடல். அவ்வளவுதான்! 1987-இல் இந்த முறை எப்படி மாறுமோ? 1980-இல் கணவன் மனைவி என்ற முறையே மாற்றமடையும். பெண்களுக்கு முழு சுதந்திரம் வந்தது என்றால் நிச்சயம் இம்முறை மாற்றமடைந்தே தீரும். அது முடியுமா என்பீர்கள்! இதுவரை ஆண்களுக்கு இந்த உரிமை இருக்கிறதா இல்லையா? இப்போது பெண்கள் 100-க்கு 20-பேர் படித்தவர்களாக இருக்கிறார்கள். இன்னும் 10-ஆண்டுகளில் 100-க்கு 100-ம் படித்தவர்களாகி விடுவார்கள். அப்போது கட்டாயம் இந்த முறை மாற்றமடைந்தே தீரும். இந்த ஆட்சி ஒழுங்கான ஆட்சியாக இருப்பின் பகுத்தறிவையே ஒரு பாடமாக்கி இருக்கும். 

ஜாதியின் காரணம் தான் - மக்கள் மூட நம்பிக்கைக்காரர்களாக - இழிஜாதி மக்களாக - சமுதாயத்தில் கீழ்ப்படுத்தப்பட்டவர்களாக இருப்பதற்கு முக்கிய அடிப்படையாகும். 

மணமக்கள் கூடுமான வரையில் தங்கள் வரவிற்குள் செலவிடப் பழக வேண்டும். மனிதன் அயோக்கியனாவதே வரவிற்கு மேல் செலவிடுவதால் தான். மக்கள் ஆடம்பரமான வாழ்வை விரும்பக் கூடாது. சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும். மற்றும் குழந்தைகள் பெறுவதில் மிக  எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 100-க்கு 97-பேராக நாம் இருந்தாலும் 7- பேருக்குத் தான் நிம்மதியான வாழ்க்கை நடத்தக் கூடிய வருவாய் வருகிறது. மிச்சம் 90-பேருக்கு வயிற்றுக் கணக்குப் பார்த்துத் தான் மற்றும் பற்றாமல் வருவாய் வருகிறது. இந்த நிலையில் அதிகக் குழந்தைகள் பெற்றுக் கொள்வதால் வருவாய் போதாமை ஏற்பட்டு அவதிப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆகவே, ஒன்றிரண்டு குழந்தைகளோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். பகுத்தறிவுவாதி கவலையற்று வாழ முடியும். பகுத்தறிவு அற்றவனுக்கு எவ்வளவு செல்வமிருப்பினும், கவலையும் அவனோடு இருந்து கொண்டுதான் இருக்கும். 

இதுவரை நடைபெற்ற ஆட்சி மனுதர்ம ஆட்சி. இப்போது நடைபெற்று வருவது மனித தர்ம ஆட்சியாகும். இந்த ஆட்சியைக் காப்பாற்ற வேண்டியது இந் நாட்டின் பெருங்குடி மக்களான நம் கடமையாகும். 

-- 02.09.1966- பழனியில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை" 27.09.1966

Thursday, 13 January 2022

கடவுளுக்குத் தூதர் எதற்கு? - தோழர் பெரியார்

 

கடவுளுக்குத் தூதர் எதற்கு?


பகுத்ததறிவுள்ள மனிதன் இந்த 20- ஆம் நூற்றாண்டில் கடவுள், மதம், வேதம், மதத் தலைவர் என்றெல்லாம் நம்பிக் கொண்டும் ஏற்றுக்கொண்டும் நடப்பது மனித சமூதாயத்திற்கு மிகமிக வெட்கக்கேடான காரியமாகும். ஏனென்றால் இவையெல்லாம் 1000, 2000, 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கால மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட கருத்தும், காரியங்களுமாகும். இவைகள் அறியாமையின் காரணமாகவும், அக்காலக் காட்டுமிராண்டித்தன்மை காரணமாகவும், நல்லெண்ணத்துடனோ அல்லது கெட்ட எண்ணத்துடனோ பல கற்பனையான அதிசயம் அற்புதம் என்பவைகளை உண்டாக்கி, அவற்றின் மூலம் மக்களை நம்பச் செய்து ஏற்பாடு செய்யப்பட்டவைகளேயாகும்.




ஏன் அப்படிச் சொல்கிறேனென்றால், கடவுள், மதம், வேதம், வேத தத்துவம், மதத் தலைவர்கள் என்பவர்கள் ஆகியவை எதுவும் நம்பியாக வேண்டியதே ஒழிய, அறிவுக்கு, ஆராய்ச்சிக்கு, அனுபவத்திற்கு, சாத்தியத்திற்குப் பொருத்தமில்லாததாகவே இருப்பதால் தான் இப்படிச் சொல்கிறேன். அக்காலத்திய எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும், அந்த மதத் தலைவர்கள், தன்மைகள் எல்லாம் அறிவுக்கு, ஆராய்ச்சிக்கும், அனுபவத்திற்கும், பொருத்தமில்லாமல் நம்பித் தீரவேண்டியவர்களேயாவார்கள்.

உதாரணமாக கடவுளை உண்டாக்கியவன் யார் என்பதே யாருக்கும் தெரியாது. "தானாக உண்டானான்" என்று தான் சொல்லுவார்கள். எப்போதென்பது யாருக்கும் தெரியாது. இவை இரண்டும் தெரிய முடியாமல் இருப்பது தான் கடவுள் என்றால் அதைப்பற்றி அறிவுள்ள மக்களுக்குத் தெரியப்படாமல் போனதற்குக் காரணம் என்ன? அன்றியும், கடவுள் ஏன் உண்டானார்? ஏன் ஏற்பட்டார்?அவர் வேலை என்ன? அந்த வேலைகளை அவர் ஏன் மேற்கொண்டார்? இவை மனிதனுக்கு மாத்திரம்தானா? இவை இல்லாமல் இருந்தால் என்ன? என்பனபற்றி யாருக்காவது தெரியுமா? கடவுள் சர்வ சக்தி உள்ளவர் என்றால் இந்த அடிப்படைக்குக் காரியம் - கருத்துக்கூட மனிதனுக்குத் தெரியும்படி செய்ய சர்வ சக்திக்கு முடியாமல் போனது ஏன்? தவிரவும், சர்வ சக்தியுள்ள கடவுள் இருப்பதாக நம்ப வேண்டி இருக்கிறதே ஒழிய தெரிந்து கொள்ள, அறிந்து கொள்ள காணமுடிவதில்லையே! மற்ற ஜீவராவிகளுக்குச் சொன்னால் தெரியாதே! அது ஏன்?

தவிர, இந்துக்கள் என்பவர்கள் (பார்ப்பனர்களும், பார்ப்பனதாசர்களும்) முதலில் உலக நடப்புக்குக் "கடவுள்" தான் காரணம் என்பதைத் தெரிந்து கொள்ளாமல், மனிதத் தன்மைக்கு மேற்பட்ட குணமுள்ளவர்களான தேவர்கள் என்பவர்கள் தாம் காரணம் என்றும், இந்திரன், வருணன், வாயு, பிரமன், விஷ்ணு, ருத்திரன், எமன், சந்திரன், சூரியன் முதலியவர்கள் உலகத்தை நடத்துகிறார்கள் என்றும் கருதி, சொல்லி நடந்து வந்தார்கள். பிறகு பிரமா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்கள் என்று ஆக்கினார்கள். பிறகு அவற்றை மனிதனை விட இழிதன்மை - குணங்கள் உடையவனாக ஆக்கிப் பிரச்சாரத்தால் நிலை நிறுத்திவிட்டார்கள். இதிலிருந்து ஒரு கடவுள் என்பதும் கடவுள் சர்வசக்தி உடையது என்பதும் பெரிதும் மறைந்துவிட்டன.

அதன் பிறகு இந்த மூன்று கடவுள்களின், அவற்றின் மனைவி, மக்கள்களின் அவதாரம், அம்சம் என்பதாகக் கருதி, 300- கடவுள்கள், 3000 -கடவுள்களாக ஆக்கப்பட்டு விட்டன. அதன் பின்பு பார்ப்பனர் தங்கள் வயிற்றுப் பிழைப்பைக் கருதி, இந்த ஆயிரக்கணக்கான கடவுள்களுக்குச் சோறு, சிலை, கல்யாணம், சண்டை, சச்சரவு, மக்களைக் கொல்லுதல் என்பன போன்ற காரியங்களைக் கற்பித்து, மக்களுக்குள் புகுத்தி, மக்களைப் பயன்படுத்தி ஜீவித்து வருகிறார்கள். இந்தக் கருத்து தத்துவத்தில் உலகில் பல பாகங்களில் இருந்தது என்றாலும் இந்தியாவில் மாத்திரம் நிலை பெற்று நடந்துவருகிறது.

மற்ற பாகங்களில் இக்கருத்து பெரிதும் மறைந்து, ஒரு கடவுள், அதற்கு உருவமில்லை, அதற்கு ஒன்றும் தேவையில்லை, கடவுளைப் பிராத்தனை செய்வது தான் கடவுள் காரியம் என்பதாகக் கருதி பலர் நடந்துவருகிறார்கள். இந்தக் கருத்துக்கு மேற்பட்ட மதங்கள், மதத் தலைவர்கள், வேதங்கள் இருந்து வருகின்றன. இந்த மதக்காரர்களுக்குப் பிராத்தனை, ஜெபம், தொழுகை முதலியவைகள் தாம் முக்கிய கடவுள் தொண்டாக இருந்து வருகின்றன. இதற்குக் காலம், தலைவர், வேதம் இருந்தாலும் அவையும் பெரிதும் மூட நம்பிக்கை அடிப்படையில் தான் கற்பிக்கப்பட்டிருக்கிறன்றன.

"இந்து மதத்திற்கு"க் காலம் பல ஆயிரம் வருஷங்கள் கொண்ட யுகக் கணக்கில் சொல்லப்படுகின்றது. தலைவர்கள் - ரிஷிகள் - முனிகள் - தெய்வீகத்தன்மை கொண்ட அவதாரங்கள், புருஷர்கள் என்கிறான். வேதங்களோ தெய்வங்களால் அசரீரியாய்ச் சொல்லப்பட்ட சப்தங்கள் என்கிறான். இந்த மூன்றையும் ஓப்புக்கொள்ளாவிட்டால் இந்துமதம் (ஆரிய மதம்) என்பது இருப்பதற்கில்லை. அதாவது அசரீரியாய் இருந்த வேதத்தைப் பராசரன் மகன் வியாசன் தொகுத்து உருவாக்கினானாம். இந்தப் பராசன் என்பவன் பாண்டவர்களுக்குப் பாட்டனாம். இந்த வியாசன்தான் பாரதத்தைச் சொன்னானாம். இவன் சொல்ல கணபதி என்கின்ற கடவுள் எழுதினானாம். இவற்றையெல்லாம் நம்பினால் தான் இந்து (ஆரிய) மதம் ஏற்றத்தக்கதாகும்.

இதுபோல் தான் மற்ற கிறிஸ்து, இஸ்லாம் (முகமது) முதலிய மதங்களுமாகும்.கிருஸ்துவ மதத்தலைவர் ஏசு கிருஸ்து என்பவர் 2000 - ஆண்டுகளுக்கு முன் தகப்பனில்லாமல், பரிசுத்த ஆவிக்குப் பிறந்தாராம். ஆகவே அவர் கடவுளுக்கு மகனாம் (தேவதுமாரனாம்) ஆகவே அவர் சிலுவையில் அறையப்பட்டுக்) கொல்லப்பட்டாராம். செத்தவர் மறுபடியும் பிழைத்தாராம். பல அற்புதங்களைச் செய்தாராம். வியாதிகளைப் பார்வையால் சவுகரியப்படுத்தினாராம். ஒரு ரொட்டித் துண்டை ஆயிரக்கணக்கான பேர்களுக்குக் கொடுத்துப் பசியாற்றினாராம். குருடர்களுக்கு கண்ணைக் கொடுத்தாராம். இப்படி பல காரியங்கள் செய்தாராம். இவற்றையெல்லாம் நம்பினால் தான் கிருஸ்தவ மதம் இருக்க முடியும்.

அறிவைக் கொண்டு பார்த்தால் தேவனுக்கு, கடவுளுக்குக் குமாரன் எதற்கு? கடவுள் ஒருவனை மாத்திரம் குமாரனாக ஆக்குவது ஏன்? கடவுள் தோன்றி எத்தனையோ காலம் ஆனபிறகு அப்போது (2000 வருடங்களுக்கு முன்) மாத்திரம் எதற்காக மகனை உண்டாக்கினார்? அதற்கு முந்தின காலத்தில் ஏன் உண்டாக்கவில்லை? அப்போதெல்லாம் செத்தவர்கள் இல்லையா? குருடர்கள் இல்லையா? பசித்தவர்கள் இல்லையா? அந்த (கி.பி. 1 - ஆவது) வருஷம் மாத்திரம் என்ன சிறந்தது? கடவுள் செய்யவேண்டியதை - சொல்ல வேண்டியதை ஒரு மனிதனைக் கொண்டு மாத்திரம் ஏன் சொல்ல வேண்டும்? அதுவும் ஒரு சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன் சொல்ல வேண்டும்? அந்தக் காரியங்கள் இப்போது ஏன் நடப்பதில்லை? இன்று ஏன் அவர் வரவில்லை? இப்போது கிருஸ்துவை ஏற்காதவர்கள், நம்பாதவர்கள், வழிபடாதவர்கள் ஏனிருக்கிறார்கள்? தேவகுமாரனுக்கு இவ்வளவு தான் சக்தியா?

இது போலத்தானே இஸ்லாம் மதம் என்பதும் சொல்லப்படுகிறது? முகம்மது கடவுளுக்கு (கடவுளால் அனுப்பப்பட்ட) தூதராம். கடவுளுக்குத் தூதர் எதற்கு? குரான் கடவுளால் தூதரருக்கு (நபிக்கு)ச் சொல்லப்பட்ட செய்தியாம். கடவுள் மக்களுக்குச் செய்தி சொல்ல வேண்டுமானால் ஒரு மனிதர் (தூதர்) வாயினால் தான் சொல்லச் செய்ய வேண்டுமா? கடவுளால் எல்லா மனிதருக்கும் ஏககாலத்தில் தெரியும்படிச் செய்ய முடியாதா? உலகில் மனிதன் தோன்றி எத்தனையோ இலட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஊரிலே, யாரோ ஒரு சிலருக்கு மாத்திரம் சொல்லும்படி ஏன் சொல்லுகிறார்? மற்றவர்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை? முகமது நபி என்பதை ஏற்றுக் கொண்டு, அவரை நம்பினவர்களுக்குத்தானே குரான்? மற்றவர்கள் அதை ஏற்பதில்லையே! மற்றவர்களுக்குப் பயன்படுவதில்லையே! ஏன்?

கடவுள் சொல், அப்படி ஏன் நம்பச் செய்தவர்களுக்கு மாத்திரம் தெரிய வேண்டும்? இன்னும் எத்தனை மக்கள் நம்பியாக வேண்டி இருக்கிறது! இதுதான் கடவுள் தன்மையா? இவையெல்லாம் மனிதத் தன்மையா? மனிதக் கற்பனையா? தெய்வத்தன்மையா? ஒரு சர்வசக்தியுள்ள தெய்வம், தெய்வத்தால் அனுப்பப்பட்ட அவதாரம், அம்சம், மகன், குமாரன், தூதர், வேதம் ஏன் உண்டாக்க வேண்டும்? இருந்தால் இத்தனை வேதங்கள், குமாரர், தூதர், வேதம் ஏன் உண்டாக்க வேண்டும்? இருந்தால் இத்தனை வேதங்கள், குமாரர், அவதாரம், தூதர்கள், சமயங்கள், மதங்கள், போதகர்கள் இருக்க வேண்டிய அவசியமென்ன என்பதைச் சிந்தித்தால் இவையெல்லாம் மூட நம்பிக்கை, அதாவது அறிவைக் கொண்டு சிந்திக்காமல் கண்முடித்தனமாய் நம்ப வேண்டியவை ஆகின்றனவா இல்லையா? இது மனிதர் என்பவர்களுக்கு ஏற்றதா என்று கேட்கிறேன். இதற்காகக் கோபிப்பதில் பயன் என்ன?

மூடநம்பிக்கை ஒழிய வேண்டுமானால் மக்களிடம் உள்ள இப்படிப்பட்ட கருத்துக்கள் ஒழியாமல் எப்படி ஒழிய முடியும்? அறிவுள்ளவர்களே! பகுத்தறிவாதிகளே! சிந்தித்துப் பாருங்கள்! இது சந்திர மண்டலத்திற்கு மனிதன் போய் வரும் காலம்; காட்டுமிராண்டிக் காலமல்ல. எனவே சிந்தித்துப் பாருங்கள்! பின் சந்ததி மக்களை மடையர்களாக்காதீர்கள்!

(14-06-1971 "உண்மை" இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்.)

Wednesday, 12 January 2022

மூடப் பண்டிகைகளை கொண்டாடுவது சரியா? - தோழர் பெரியார்

 மூடப் பண்டிகைகளை கொண்டாடுவது சரியா?

இனி, அடுத்தாற்போல் வரும் புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்களும், திருப்பதி முதலிய நூற்றுக்கணக்கான சனிக்கிழமை பிடிப்பதன் மூலம் அவரவர்கள் வீட்டில் ஏராளமாய் சமைத்துக் கொண்டு சோம்பேறிகளையும், அயோக்கியர்களையும் மெனக்கட்டுத்தேடிப் பிடித்து வந்து அவர்களுக்கு வயிறு நிறையவும் போட்டு கஞ்சாவுக்கோ, கள்ளுக்கோ, சூதாடவோ கையில் பணமும் கொடுத்து, இவ்வளவும் போதாமல், அந்த நாளெல்லாம் பட்டினிக்கிடந்து அந்தச் சோம்பேறிகளின் காலிலும் விழுந்து மாலை 3 மணி 4 மணி சுமாருக்குச் சாப்பிடும் பண்டிகைகளிலோ, விரதத்திலோ கடுகளவு அறிவு இருக்கின்றதா என்று கேட்கின்றேன்.




புரட்டாசி சனிக்கிழமை வந்தால் எத்தனைப் பேர் தங்களுக்கும் பட்டை நாமம் போட்டுக் கொண்டு, சொம்புக்கும் நாமத்தைக் குழைத்துப் போட்டுக்கொண்டு, துளசியையும், அரளிப்பூவையும் அந்தச் சொம்புக்கு சுத்திக்கொண்டு, வெங்கிடாசலபதி கோவிந்தா என்றும், நாராயணா கோவிந்தா என்றும் கூப்பாடுப் போட்டு அரிசியோ, காசோ வாங்கிக் கொண்டு போவதில் ஏதாவது பலனுண்டா என்றுதான் கேட்கிறேன்.

மற்றும், திருப்பதிக்குப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு, தலை மயிரும் தாடி மயிரும் வளர்த்து வெறும் மஞ்சள் நனைத்த துணிகட்டிக்கொள்வதும், மேளம் வைத்துக் கொள்வதும், வருஷமெல்லாம் பணம்போட்டு மொத்தமாய் பணம் சேர்ப்பதும், அல்லது வேண்டுதலையின்மேல் இவ்வளவு பணம் என்று கடன் வாங்கியாவது எடுத்துக்கொள்வதும், அல்லது வியாபாரத்திலோ, வேறு வரும்படியிலோ லாபத்தில் இத்தனைப்பங்கு என்று கணக்கு வைத்துச் சேர்த்து எடுத்துக்கொள்வதும் ஆன பணமூட்டையைக் கட்டிக் கொண்டு, கடைவாயிலும், நாக்கிலும் வெள்ளிக் கம்பியைக் குத்திக்கொண்டு, போதாதக் குறைக்குத் தெருவில் கூட்டமாய், கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா என்று கூப்பாடுப் போட்டு, வீட்டு வீட்டுக்கு, கடை கடைக்குக் காசு பணம் வாங்கி, ஒரு பகுதியை ரயிலுக்குக் கொடுத்து திருப்பதி போவதும், அங்கு முழங்கால் முறிய மலையேறுவதும், ஆண்களும், பெண்களும் தலைமொட்டை அடித்துக்கொள்வதும், அந்த மலைசுனைத் தண்ணீரில் குளிப்பதும், அந்தப் பட்டை நாமம் போட்டுக் கொள்வதும், கொண்டு போன பணத்தைக் கடாரத்தில் காணிக்கையாகக் கொட்டுவதும், ஆண்களும், பெண்களும் நெருக்கடியில் இடிபடுவதும், பிடிபடுவதும், வெந்தும் வேகாததுமான சோற்றை தின்பதும், மற்றும் பல சோம்பேறிகளுக்கும், மேகவியாதி காரருக்கும் வேகவைத்ததோ, விலைக்கு வாங்கியோ போடுவதும், விறகுக் கட்டையிலும், வேர்களிலும் செய்த மரமணிமாலைகளை வாங்கி கழுத்தில் போட்டுக் கொள்ளுவதும், மலைக்காய்ச்சலோடு மலையை விட்டு இறங்கிவருவதும், வீட்டுக்கு வந்து மகேஸ்வரபூசை பிராமணசமார்த்தனை செய்வதும் தவிர, மற்றபடி இவைகாளல் ஏதாவது செய்தவனுக்கோ, கூடப்போன மக்களுக்கோ, நாட்டுக்கோ, ஒழுக்கத்திற்கோ, மதத்திற்கோ கடுகளவு நன்மை உண்டாகின்றதா என்று கேட்கின்றேன்.

திருப்பதிக்குப் போய்வந்த பிறகாவது யாராவது தங்கள் துர்க்குணங்களையோ, கெட்ட செய்கைகளையோ விட்டு விட்டதாகவாவது, அல்லது திருப்பதி யாத்திரையானது இம்மாதிரி குணங்களை விடும்படிச் செய்ததாகவாவது நம்மில் யாராவது பார்த்திருக்கின்றோமா என்று கேட்பதுடன், இம்மாதிரி அறிவீனமான காரியத்திற்காக நமது நாட்டில் வருஷத்திற்கு எத்தனைக் கோடி ரூபாய் செலவாகின்றது என்பதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணராவது கணக்குப் போட்டார்களா என்று கேட்கின்றேன்.

இனி, அடுத்த மாதம் தீபாவளிப் பண்டிகை என்று கஷ்டமும் நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வரப்போகின்றது. அதிலும் ஏதாவது அறிவுடைமை உண்டா என்று கேட்கின்றேன். தீபாவளி பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டு மிராண்டித்தனமானதுமாகும். அதவாது விஷ்ணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசூரன் என்பவன் வருணனுடைய குடையைப் பிடுங்கிக்கொண்டதால் விஷ்ணு கடவுள் கிருஷ்ணாவதாரத்தில் கொன்றாராம். அந்தத் தினத்தைக் கொண்டாடுவதற்கு அறிகுறியாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவதாம்.

சகோதரி, சகோதரர்களே! இதில் ஏதாவது புத்தியோ, மனிதத்தன்மையோ இருக்கின்றதா என்று பாருங்கள். விஷ்ணு என்னும் கடவுள் பூமியைப் புணருவது என்றால் என்ன என்றாவது, அது எப்படி என்றாவது, நரகாசூரன் என்றால் என்ன? வருணன் என்றால் என்ன? என்பதாவது, அப்படி ஒன்று இருக்கமுடியுமா என்றாவது, இவைகள் உண்மையா என்றாவது, கருதிப் பாருங்கள்.

இப்படிப் பொய்யானதும், அர்த்தமற்றதுமான பண்டிகையினால், எவ்வளவு கஷ்டம், எவ்வளவு ரூபாய் நஷ்டம், எவ்வளவு கடன், எவ்வளவு மனஸ்தாபம், எவ்வளவு பிரயாணச் செலவு என்பவைகளை ஒரு சிறிது கூட நமது மக்கள் கவனிப்பதில்லையே. அப்பண்டிகையை உத்தேசித்து ஒவ்வொருவனும் தனது யோக்கியதைக்கும் தேவைக்கும் மேற்பட்ட பணம் செலவு செய்து, துணிவாங்க ஆசைப்படுகிறான்; தன்னிடம் ரூபாய் இல்லாவிட்டாலும் கடன் வாங்குகிறான்; கடன் என்றால் வட்டி அல்லது ஒன்றுக்கு ஒன்றரை பங்கு கிரையம் ஏற்பட்டு விடுகின்றது.

இது தவிர, மாமனார் வீட்டுச் செலவு எவ்வளவு? தவிர, சுத்த முட்டாள்தனமான பட்டாசு கொளுத்துவது எவ்வளவு? மற்றும் இதனால், பலவித நெருப்பு உபாதை ஏற்பட்டு வீடு வேகுதலும், துணியில் நெருப்புப்பிடித்து மருந்து வெடித்து, உடல் கருகி கண், மூக்கு, கை, கால், ஊமையாவதுமான காரியங்கள் எவ்வளவு நடக்கின்றது. இவ்வளவும் அல்லாமல், இந்தப் பண்டிகை கொண்டாடுவதற்கு அறிகுறியாக எவ்வளவு பேர்கள் கள்ளு, சாராயம் குடித்து மயங்கி தெருவில் விழுந்து புரண்டு மானம் கெடுவது எவ்வளவு? மேலும், இதற்காக இனாம்! இனாம்!! என்று எத்தனைப் பாமர மக்கள் பிச்சை எடுப்பது? அல்லது தொந்தரவு கொடுத்துப் பணம் வசூல் செய்வது? ஆகிய இந்தக் காரியங்களால் எவ்வளவு பணம், எவ்வளவு நேரம், எவ்வளவு ஊக்கம், எவ்வளவு பணம் செலவாகின்றது என்று கணக்குப் பாருங்கள்.

இவைகளை எல்லாம் எந்த இந்தியப் பொருளாதார தேசிய நிபுணர்களாவது கவனிக்கிறார்களா என்று கேட்கின்றேன். துலாஸ்நானம் தவிரவும், இந்த மாதத்திலேயே அய்ப்பசி துலாஸ்நான மென்று புதுத் தண்ணீர் காலத்தில் நதிகளில் போய் அழுக்குத் தண்ணீரில் தினம் தினம் காலையில் குளிப்பதும், புதுத்தண்ணீர் ஒத்துக்கொள்ளாமல் கஷ்டப்படுவதும், இதற்காக ஊரை விட்டு ஊர் பணம் செலவு செய்து கொண்டு போய் கஷ்டப்படுவதும், ஒன்று இரண்டு தண்ணீரில் இழுத்துக் கொண்டு போகப்படுவதும், குளித்து முழுகிவிட்டு நதிக்கரையில் இருக்கும் பார்ப்பனர்களுக்கும் அரிசி, பருப்பு, பணம், காசு கொடுத்து அவன் காலில் விழுவதுமான காரியங்கள் செய்வதும், ஆதிமுதல் அந்தம்வரை அத்தனையும் பொய்யும் ஆபாசமுமான காவேரிப் புராணம் படிக்கக் கேட்பதும், அதற்காக அந்தப் பொய்யையும் கேட்டு விட்டுப் பார்ப்பானுக்கு சீலை, வேஷ்டி, சாமான், பணம் கொடுத்து காலில் விழுவதுமான காரியம் செய்கின்றோம். காவேரியை பெண்தெய்வ மென்பதும், அதில் ஆண்கள் குளிப்பதுமான காரியம் ஆபாசமல்லவா?

இனி, அதற்கு அடுத்த மாதமாகிய கார்த்திகை மாதம் வந்தால் கார்த்திகைப் பண்டிகை என்று வீணாக ஆயிரக்கணக்கான தீபம் கொளுத்துவதின் மூலம் எண்ணெயையும், நெய்யையும் பாழாக்கிப் புகைப்பதும், மலைகளில் பேரில் கட்டைகளையும் விறகுகளையும் போராய்க் குவித்து அதில் நெய்யையும், வெண்-ணெயையும் டின்னு டின்னாய் குடம் குடமாய்க் கொட்டிக் கொளுத்துவதும், இந்த வேடிக்கைப் பார்க்க திருவண்ணாமலை, திருச்செங்கோடு முதலிய மலைக் கோயில் உள்ள ஊர்களுக்கு ஜனங்கள் லட்சலட்சமாய்ப் பணம் செலவு செய்து, இரயில் சார்ஜ்கொடுத்து நெருக்கடியில் சிக்கிக் கஷ்டப்பட்டு, கண்ட ஆகாரத்தைப் புசித்து வயிற்றைக் கெடுத்துக்கொண்டு ஊர் வந்து சேருவதும், விளக்கு நெருப்புப்-பிடித்து உடல் வெந்து சாவதும் ஆகிய காரியங்கள் இல்லாமல், அவைகளால் வேறு ஏதாவது பலன் உண்டா என்று கேட்கிறேன். முன்போலவே, இந்தப்பண்டிகை மூலமும் வருஷம் ஒன்றுக்கு இந்த நாட்டில் எவ்வளவு ரூபாய்கள் செலவாகிறது என்றும், எவ்வளவு நேரமும் அறிவும் செலவாகின்றது என்றும், எந்த இந்திய தேசிய பொருளாதார நிபுணர்-களாவது கணக்குப் பார்த்தார்களா? என்று கேட்கின்றேன்.

இனி, அதற்கு அடுத்த மார்கழிமாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம்கூட்டமாய் சீரங்கம் முதலிய ஊர்களுக்குப் பணம் செலவு செய்துகொண்டு போவதும், தை மாதம் வந்தால் பூசம் காவடிகளைத் தூக்கிக் கொண்டு பழனி முதலிய மலைகளுக்குப் போவதும் பொய்யையும் புளுகையும் காவடிக்கதையாய் சொல்வதும், அறுத்துச்சமைத்த பாம்பும், மீனும், கோயிம், உயிர்பெற்று விட்டது என்பதும், மண்ணு சக்கரையாகி விட்டது என்பதும், வெட்டித் துண்டாக்கப்பட்ட குழந்தை உயிர்பெற்று எழுந்துவிட்டதென்பதும், இன்னும் இதுபோல பல பொய்களை வெட்கமில்லாமல் சொல்லுவதும், அழுக்குக் குளங்களில் குளித்து, அழுக்குத் தண்ணீரைச் சாப்பிட்டு, பஞ்சாமிர்தம் என்னும் ஒரு அசிங்கமான வஸ்துவை கண்டபடி சாப்பிட்டு வயிற்றுப் போக்கெடுத்து காலரா ஏற்பட்டு, திரும்பிப்போகும் போது வழியில் சாவதும், சிலர் அந்தக் காலராவைத் தங்கள் தங்கள் ஊருக்குக் கொண்டு போய் பரவவிட்டு, அங்குள்ளவர்களைக் கொல்வதும், அவர்கள் நதி வாய்க்கால் ஓரங்களில் குடி இருந்தால் அந்தக் காலரா அசிங்கம் வாய்க்கால்களில் கலந்து, கரை ஓரங்களில் இருக்கும் ஊர்களிலெல்லாம் பரவி மக்கள் நூற்றுக்கணக்காகச் சாவதுமான காரியங்கள் வருஷந்தோறும் நடைபெறுகின்றன.

சாதாரணமாக, சீரங்கம் வைகுண்ட ஏகாதசி உற்சவத்திலும், பழனி தை பூச உற்சவத்திலுமே ஏற்பட்ட சுகாதாரக் கெடுதியால் ஒவ்வொரு வருஷமும் முதல் முதல் அங்கு காலரா உற்பத்தியாகி பிறகு இரண்டு மூன்று மாதம் தென்னாடெல்லாம் பரவி, வருஷம் ஆயிரம் பேருக்குக் குறைவில்லாமல் கொள்ளைக் கொண்டு போகின்றது.

இதன் உண்மையை ஒருவரும் அறியாமல் பேதியாயி, மாரியாயி, ஓங்காளியாயி, ஊருக்கு ஒருகுடம் எண்ணெய் கொண்டு வந்து ஆளுக்கு அரை கரண்டி கொடுத்துவிட்டாள் என்று சொல்லி ஊரிலுள்ள மக்களின் சிலபாகம் செத்து - காலரா தானாக ஒடுங்கிய பின் ஓங்காளியின் பொங்கலும், காளி பூசையும் செய்து பேதியை நிறுத்திவிட்டதாக வெட்கமில்லாமல் பேசிக்கொள்வதும், அன்றியும், கிராமங்களில்லெல்லாம் மார்கழி, தை மாதங்களிலேயே மாரியம்மன் பண்டிகை கொண்டாடி, வெந்தும் வேகாத பொங்கலும், பச்சை மாவுமாய், சரியாய் சுத்தம் செய்யாத வேகாத மாமிசமும் கண்டபடி புசிப்பதால் அஜீரணம், காலரா முதலிய வியாதிகள் உண்டாவதையும் பார்க்கின்றோம். பொதுவாகவே, நமது நாட்டில் கூட்டம் சேர்ந்தாலே அசுத்தம் உண்டாகி வியாதிகள் ஏற்படுவதை அனுபவத்தில் பார்த்து வருகின்றோம்.


இனி, அதற்கடுத்த மாசி மாதம் வந்தால் சிவராத்திரி என்று கண்டபடி கிழங்கு வகைகளையும், தானிய வகைகளையும், பலகாரவகைகளையும் ஒரே நாளில் செய்து அளவுக்கு மேல்தின்று குழந்தைகளையும் தின்னச் செய்து அஜீரணத்தையும், வயிற்று வலியையும் உண்டாக்கிக் கொள்வதோடு, இதனால் ஏற்படும் செலவு எவ்வளவு என்பதை யாராவது யோசித்துப் பார்க்கின்றார்களா? என்று கேட்கின்றோம்.

இப்படியே ஒவ்வொரு மாதமும் உற்சவமும், பண்டிகைகளும், விரதங்களும், சடங்குகளும் ஏற்பட்டு மொத்தத்தில் வருஷத்தில் எவ்வளவு கோடி ரூபாய்கள் செலவு? எவ்வளவு வியாதிகள் வரவு? எவ்வளவு உயிர்கள் போக்கு? என்பவைகளை யார் கவனிக்கின்றார்கள்.

இந்தப் பணம் எல்லாம் தேசிய பணமல்லவா? ஏழை தேசம், தரித்திரதேசம், அடிக்கடி பஞ்சம் வரும் தேசம், வேலையில்லாமல், தொழிலில்லாமல் கூலிக்காரர்கள் கும்பல் கும்பலாய் பட்டினிக் கிடந்து மடிவதுடன், பெண்டுபிள்ளை, குழந்தைகளுடன் வெளிநாட்டிற்குக் கூலிக்காகக் கப்பலேறும் தேசம் என்று சொல்லிக்கொண்டிருக்கின்ற நாம், எத்தனை நாட்களை, எத்தனை ரூபாய்களை, எத்தனை ஊக்கங்களை இந்தப்பாழும் அர்த்தமற்ற, பொய்யான, ஒரு காசுக்கும் உதவாததான, நமக்கு இழிவையும் அவமானத்தையும் தருவதான பண்டிகைக்கும், உற்சவத்திற்கும் பூசைக்கும், சடங்குக்குமாக ஒவ்வொருவரும் செலவு செய்கின்றோம் என்பதைக் கவனித்தால், இந்த நாடு பணமில்லாத நாடா அல்லது புத்திய இல்லாத நாடா என்பது நன்றாய் விளங்கும்.

எனவே, இப்படிக்கெல்லாம் சொல்வதைப் பார்த்தால் இந்தப் பண்டிகைகளையும், உற்சவம் முதலியவைகளையும், ஏற்படுத்தியவர்கள் எல்லோரும் அறிவில்லாதவர்களா என்கின்ற கேள்வி பிறக்கலாம். நான் அவர்களை அறிவில்லாதவர் என்று சொல்ல இஷ்டப்படமாட்டேன். மற்றபடியோ என்றால் பெரும்பாலும் அவர்கள், சுயநலக்காரர்களும், தந்திரக்காரர்களும், அதிகாரம் ஆசை உடையவர்களுமாயிருக்க வேண்டுமென்றே சொல்லுவேன்.

என்புத்திக்குட்பட்ட வரையில் இந்தப் பண்டிகை, உற்சவம் முதலியவைகள் எல்லாம் புரோகிதர்களான பார்ப்பனர்களும், ஆட்சிக்காரர்களான அரசர்களும் கலந்து கண்டு பிடித்துச் செய்த தந்திரமென்பதே எனது அபிப்பிராயம்.

உலகத்தில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அறியாமைக்கும், கொடுமைக்கும், புரோகிதர்களும், அரசர்களுமே சேர்ந்து கூட்டுப் பொறுப்பாளர்களாவார்கள்.

இவ்விருவர்களும், ஜனங்களை ஏய்த்து ஆதிக்கம் செலுத்தவகை கண்டுபிடிக்கவேண்டிய அவசிய முடையவர்கள்.

அந்தப்படி, மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வாழ வேண்டுமானால், அந்த மக்களை அறிவினாலும், செல்வத்தினாலும் தாழ்மைப்படுத்தி வைத்திருந்தால்தான் முடியும். ஒரு மனிதன் அறிவுடையவனாயிருப்பானானால் புரோகிதனுக்கு ஏமாற மாட்டான். செல்வமிருக்குமானால், அரசனுக்குப் பயப்படமாட்டான். ஆகையால், அறிவும், செல்வமும் இல்லாமல் செய்வதற்கே கோயில், உற்சவம், பண்டிகை, சடங்கு ஆகியதான செலவுக்கு ஏற்ற வழிகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

மக்கள் சம்பாதிக்கும் பணங்களில் கணக்குப் பார்த்தால் பெரும்பாகமும் இவைகளுக்கே செலவு செய்யும்படியாகவும், மேல் கொண்டு மீதி ஆவதெல்லாம் இவர்கள் சமூகத்திற்கே பயன்படும்படியாகவும், மற்றும், மேல்கொண்டு ஒவ்வொரு குடும்பமும் அதாவது, நூற்றுக்குத் தொண்ணூறு குடும்பங்கள் இவைகளின் பயனாய் கடன்காரர்களாக இருக்கவுமே இருந்துவரப்படுகின்றது. எனவே, நமது நாடு என்றைக்காவது அறிவுள்ள நாடாகவும், செல்வமுள்ள நாடாகவும், சுயமரியாதை உள்ள நாடாகவும் இருக்கவேண்டுமானால், முதலில் உற்சவம், பண்டிகை, சடங்கு, கோயில் பூசை ஆகியவைகள் ஒழிந்தாக வேண்டும்.

இவைகளை வைத்துக்கொண்டு மலைகளை எல்லாம் தங்கமும் வைரமுமாக ஆக்கினால், சமுத்திரங்களையெல்லாம் பாலும், நெய்யும், தேனுமாக ஆக்கினாலும் மேல் கண்ட உற்சவம், சடங்கு, கோவில், பூசை, பண்டிகை ஆகியவைகளே சாப்பிட்டுவிடும். ஆதலால் இனிமேலாவது இம்மாதிரியான காரியங்களுக்கு அடிமையாகி வீண்செலவு செய்யக்கூடாது என்பதே எனது ஆசை.

--------------- ஈரோடு உண்மை நாடுவோர் சங்கக் கூட்டத்திலும், பார்ப்பனரல்லாதார் வாசகசாலை கூட்டத்திலும் கலந்து கொண்டு தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் மற்றொரு பகுதி. 20.10.1929 "குடிஅரசு" இதழில் வெளியானது.

வைகுண்ட ஏகாதசியின் பலன் என்ன? - தோழர் பெரியார்

 வைகுண்ட ஏகாதசியின் பலன் என்ன?

சிறீரங்கத்தில் மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி என்கின்ற ஒரு உற்சவம் ஆண்டுதோறும் நடக்கிறது.

அதற்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் சென்று, உற்சவத்தில் கலந்து சொர்க்கவாசல் புகுந்து, மோகினி அவதாரத்தைக் கண்டு களித்து, தங்கள் பாவத்தைத் தொலைத்துவிட்டுத் திரும்புவது என்பது வெகுகாலமாய் நடந்து வரும் காரியமாகும். இந்த ஏகாதசி என்பது 15 நாள்களுக்கு ஒரு முறை வரும் நாளாகும்.



இப்படிப்பட்ட ஏகாதசி ஒரு ஆண்டில் மாதத்துக்கு 2 வீதம் 12 மாதங்களுக்கு வரும் 24 ஏகாதசிகளில் மார்கழி மாதத்தில் வரும் இரண்டு ஏகாதசிகளில் ஒன்றுக்குப் பெயர் வைகுண்ட ஏகாதசி என்பது. இது வைணவர்களுக்கு ஒரு முக்கிய நாள். அதாவது சைவர்களுக்கு சிவராத்திரி வருவது போன்ற ஒரு நாள்.

இந்த ஏகாதசியை ஒரு உற்சவமாக ஆக்கி அதற்கு பகல் பத்து, இராப் பத்து என்று இருபது நாட்களை ஒதுக்கி தினம் ஒரு சடங்கு போல் உற்சவம் கொண்-டாடுவார்கள். இந்த வைகுண்ட ஏகாதசி அன்று மக்கள் நாள் முழுவதும் பட்டினி கிடக்கவேண்டும். அதற்கு ஏகாதசி விரதம் என்று பெயர். அடுத்த நாளைக்குப் பெயர் துவாதசி என்பது.

ஏகாதசி என்றால் 11 ஆவது திதி; துவாதசி என்றால் 12 ஆவது திதி என்பது பொருள். 11 ஆவது நாள் முழுவதும் பட்டினி கிடந்து 12 ஆவது நாள் பாரணை என்னும் பெயரால் வயிறு புடைக்கச் சாப்பிடுவதுதான் இந்த ஏகாதசி, துவாதசி சடங்கு.

இதில் மற்றொரு விஷயம்என்னவென்றால், இந்த ஏகாதசி நாள் முழுவதும் பட்டினி கிடப்பது மாத்திரமல்லாமல் அன்று இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்துக் கொண்டு இருக்க வேண்டும். தூங்கினால் ஏகாதசி விரதத்தின் பலன் வீணாகிவிடும். அதாவது பலன் இல்லாமல் போகும்!

அறிவுக்கு ஒவ்வாத சடங்குகள்

இந்த ஏகாதசி நாள் உற்சவங்கள் தமிழ் நாட்டில் சீரங்கத்தில்தான், பலமாக, ஆடம்பரமாக, ஆயிரம், பதினாயிரம் மக்கள் வந்து கூடும்படியாக மிகப் பிரபலமாய் நடக்கும். 20 நாள்களுக்கு பல சடங்குகள், சாமி ஊர்வலங்கள் முதலியவை நடக்கும்.

ஏகாதசி உற்சவங்களுக்கு சீரங்கம் போனவர்கள்

1. சுவர்க்கவாசல் புகவேண்டும்.

2. மோகினி அவதார தரிசனம் பார்க்கவேண்டும்.

3. முத்தங்கி சேவை பார்க்க வேண்டும்.

சுவர்க்கவாசல் புகுவது என்பது கோயிலில் மற்ற நாளெல்லாம் மூடிக் கிடந்து ஏகாதசி அன்று காலையில் திறக்கப்பட்ட வாசல் வழியில் முட்டி அடித்துக் கொண்டு புகுந்து வெளியில் வருவதுதான்.

மோகினி அவதாரம் என்பது சீரங்கம் கடவுளை பெண் வேஷம் போட்டு பெண்ணாகச் சிங்காரித்துக் காட்டுவதுதான்.

முத்தங்கி சேவை என்பது சீரங்கம் கடவுளுக்கு முத்துக் கோத்துத் தைத்த ஒரு சட்டையைப் போட்டுக் காட்டுவதுதான்.

இதுதான் ஏகாதசி உற்சவத்தின் காட்சி!

இந்தக் காட்சியினால் மக்களுக்கு என்ன பயன் ஏற்படும்?

பெரும்பாலும் அங்கு செல்கிற மக்களின் கருத்தெல்லாம் பெரிய ஜனக் கூட்டத்தைப் பார்க்கலாம் என்பதுதான். செல்பவர்களில் 100 க்கு 90 ஆண், பெண்களின் கருத்தாகும்.

அறிவு கெடுவதே உற்சவ பலன்

மக்களுக்கு சினிமா பார்ப்பதில் உள்ள ஆர்வம், உணர்ச்சி, பயன் என்னவோ அதுதான் இந்த உற்சவங்களைக் காண்பதிலும் இருந்து வருகிறது. சினிமா வந்தபிறகு உற்சவங்களின் பெருமை மோகம் நல்ல அளவுக்குக் குறைந்துவிட்டது. என்றாலும், அதைப் பழையபடி ஆக்க பார்ப்பனர்களும், அரசாங்கமும் இப்போது அதிகமுயற்சி செய்கிறார்கள்! சினிமாவால் ஒழுக்கம் கெடும்; உற்சவத்தால் அறிவே கெடும்! இதுதான் பலன்.

------------------------- தந்தைபெரியார் - ‘விடுதலை’, 8.1.1966

Tuesday, 11 January 2022

பாரதி ஆராய்ச்சி

 

அறிவாளியா? இயற்கைவாத கவியா?  அவர் ஒரு புராண பண்டிதரே


நம் தமிழ் நாட்டில் சமீபத்தில் பாரதியின் தினத்தைப் பல இடங்களில் கொண்டாடினார்கள். அப்பொழுது அவரை ஒரு தெய்வமாகப் பாவித்து அவருடைய படத்துக்கு மாலை போட்டுத் தூபதீப நைவேத்தியங் கூடச் சிலர் செய்தார்கள். இப்படியெல்லாம் செய்வதற்குப் பார்ப்பனரின் சூழ்ச்சி பிரசாரமும் பொதுமக்களின் குருட்டுத்தனமான முட்டாள் நம்பிக்கையுமே காரணமென்றும் மற்றபடி இவர்கள் பாரதியைப் பற்றியோ அல்லது அவருடைய பாடல்களைப் பற்றியோ அறிந்து கொண்டாடப்பட்டதல்லவென்றும் எடுத்துக் காட்டவே இக்கட்டுரையை எழுதத் துணிந்தோம். ஆகையால் வாசகர்கள் இதைப் படித்த பின்பாவது தாங்கள் அக்கொண்டாட்டங்களில் கலந்து கொண்டதின் அறியாமையை உணர்ந்து அதற்குத் தக்கபடி நடந்து கொள்ளுவார்களாக.

பாரதிக்குக் கவி இயற்றவல்ல அறிவு சிறிது உண்டு என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அவரைப்பற்றி இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்யும்படியான மேதாவித்தன்மை எதுவும் அவரிடம் இருந்ததென்றோ, அவர் உயர்ந்த ஞானமும் ஒழுக்கமு முள்ளவரென்றோ, இன்னும் சிலர் விளம்பரஞ் செய்கிறபடி எந்த விதத்திலும், சமீப காலத்தில் தோன்றி மறைந்து போன தமிழ்ப் புலவர்களைப் போல ஆற்றல் படைத்தவரென்றோ யாரும் சொல்ல முடியாது. அப்படியிருந்தும் ஏன் அவரைப்பற்றி இவ்வளவு கூச்சல் போட வேண்டும் என்றும் கேட்கலாம். அதைத்தான் இங்கு ஆராய விரும்புகிறோம்.

முக்கிய காரணம் அவர் ஒரு பார்ப்பனர் என்பதேயாகும். எப்படியென்றால் ஒரு பார்ப்பான் எவ்வளவு அயோக்கியனாயிருந்தாலும், ஒழுக்கங் கெட்டவனாயிருந்தாலும், துர்ப் பழக்கமுடையவனாயிருந் தாலும், பேடியாயிருந்தாலும், பித்துக்கொள்ளியாயிருந்தாலும் அவனைப்பற்றி அவனுடைய குற்றங்களையெல்லாம் மறைத்து “இந்திரன்” என்றும் “சந்திரன்” என்றும் உயர்த்திப் பேசி, எழுதி, அதன் மூலம் தங்கள் இனப்பிழைப்புக்கு வழி தேடிக்கொள்கிறார்கள். இந்த அடாத காரியத்துக்குத் தகுந்த வசதிகள் அவர்களுக்கு தாராளமாய் இருக்கின்றன.

பாரதியின் அறிவு

பாரதி, ஏதாவது அறிவுக்குப் பொருந்திய பாடல் எழுதியிருக் கிறாரா என்று பார்த்தால் அதுவும் இல்லையென்று நன்கு விளங்கும். “எல்லோரும் ஓர் இனம்” என்றும் “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்றும் என்னவோ வாய்க்கு வந்ததை அளந்து தள்ளியிருக்கிறார்; நடை முறைக்கும், அனுபவத்துக்கும், பகுத்தறிவுக்கும் சம்பந்தமில்லாத விஷயங்களையே சொல்லியிருக்கிறார். அவரைப் பாமரமக்கள் புகழ்வதற்குக் காரணம் அவர்களுடைய மூடப்பழக்க வழக்கங்களை வளர்க்கத் தக்கதாகவும் மனு நீதியை உயிர்ப்பித்து நிலைநாட்டக்கூடியதாகவும் அவருடைய பாடல் இருப்பதே ஆகும். எப்படி யென்றால் இதிகாசம், புராணம், வேதம், சாஸ்திரம் முதலியவைகளை அப்படியே தழுவி அவைகளில் அடங்கியிருக்கும் விஷயங்களை, இக்காலத்து தேவைகளை அதில் கலக்கி அதற்குத் தகுந்தாற்போல வேஷம் மாற்றிக்காட்டி அவர் பாடல் செய்திருப்பதேயாகும். மனு ஆட்சி எப்படியாவது ஏற்பட வேண்டும் என்று பார்ப்பனர்கள் இரவும் பகலும் கனவு கண்டுகொண்டிருக்கும் பொழுது அதற்கு உதவியாக எழுதப்பட்டிருக்கும் பாடல்களைப் பார்ப்பனர்கள் கைநழுவ விடுவார்களா?

பாரதி அநேக பாடல்களைக் குடி வெறியில் பாடியிருக்கிறாரே தவிர நிதான புத்தியோடு பாடவில்லை என்று சுலபத்தில் அறிந்து கொள்ளலாம். பெண்களைப்பற்றி வானமளாவப் புகழ்ந்து பல பாடல்கள் செய்திருக்கிறார். ஆனால் பெண்களைப் பற்றி அவருடைய அந்தரங்க சுத்தியான அபிப்பிராயம் மிகக் கேவலமானது என்பது அவரது கிளிக்கண்ணியில் “பெண்களின் கூட்டமடி” என்று தன்னை மறந்து உண்மையைக் கக்கியிருப்பதிலிருந்து தெரிகிறது.

பார்ப்பனரைப் பற்றி பாரதியின் உண்மையான அபிப்பிராயம் என்னவென்றால் பார்ப்பனரே உயர்ந்த வகுப்பினரென்றும் இந்தியா அவர்களுக்குச் சொந்த சொத்து என்றும், அவர்களுடைய ஆரிய பாஷையே உயர்ந்ததென்றும் கருதியே வந்திருக்கிறார் என்பதுதான். பார்ப்பனரின் நிலைமை உயர வேண்டுமென்பதே அவருடைய நோக்கமென்றும் தெரிகிறது. இதற்கு மாறாக யாராவது அவரைப் பற்றி நினைத்துக்கொள்ள “பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே,” “தமிழ் மொழி போல் எங்கும் காணோம்” என்று சொல்லப்படுமானால், இப்பாட்டுகள் போல் எங்கோ அங்கொன்றும் இங்கொன்றும் எடுத்துக் காட்ட முடியுமே தவிர, அதிகமில்லை யென்றும், அப்படி இரண்டொன்று பாடியிருப்பதும் கூடக் குடிவெறி யென்றும்தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் அவர் அபின், கஞ்சா, சாராயம் முதலியவைகளைச் சர்வ சாதாரணமாகவே உபயோகப்படுத்தி வந்திருக்கிறார். அவருக்குப் பார்ப்பானுடைய சுகமே லôயமென்பதாகத் தெரிகிறது என்பதற்கு ஆதாரமான சொற்களை அவர் தேசீயப் பாடல்களிலிருந்து மட்டும் இச்சந்தர்ப்பத்தில் எடுத்துக் காட்டி இக்கட்டுரையை முடிக்கின்றோம்.

பாட்டின் தலைப்பும் அதில் வரும் அடியும் கீழே தருகின்றோம்.

வந்தேமாதரம் – ஆரிய பூமியில்.

பாரத நாடு – யாகத்திலே தவ வேகத்திலே.

நாட்டு வணக்கம் – துங்க முயர்ந்து வளர்கெனக் கோயில்கள் சூழ்ந்தது மிந்நாடே.

பாரததேசம் – மந்திரங் கற்போம், வினைத் தந்திரங் கற்போம் (குட்டிக் காந்தியின் வினைத் தந்திரம். வி.க.)

தொழில் – பிரம்மதேவன் கலையிங்கு நீரே விண்ணினின்று எமை வானவர் காப்பார்.

எங்கள் நாடு – என்னரு முபநிட நூல்கள் எங்கள் நூலே உன்னத ஆரிய நாடெங்கள் நாடே.

வந்தேமாதர மொழிபெயர்ப்பு – காலமெல்லிதழ்களிற் களித்திடுங் காலை நீ.

எங்கள் தாய் – நாவினில் வேதமுடையவள், வெண்மை வளரிமையாசலந் தந்த விறன் மகளாமெங்கள் தாய்.

பாரதமாதா – முன்னையிலங்கை அரக்கர் அழிய, ஆரிய ராணியின் சொல், ஆரிய தேவியின் தோள், போர்க்களத்தே பரஞானமெய்க் கீதை.

திருப்பள்ளியெழுச்சி – தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன.

தசாங்கம் – ஆரிய நாடென்றே யறி.

நவரத்தினமாலை – ஆணிமுத்துப் போன்ற மணி மொழிகளாலே (சமஸ்கிருதம்)

மகாத்மாவின் துவஜம்:- ஆரியக் காட்சி ஓர் ஆனந்தமன்றோ, செந்தமிழ் நாட்டுப் பொருநர் – கொடுந்தீக்கண், மறவர்கள், சேரன்றன் வீரர், சிந்தை துணிந்த தெலுங்கர் – தாயின் சேவடிக்கேயணி செய்திடு துளுவர். (ஆரியருக்கு அடிமைகள்)

லஜபதிராய் – ஆதிமறை தோன்றிய நல்லாரிய நாடெந்நாளும் நீதி மறைவின்றி நிலைத்த திருநாடு, ஆரியர் தம் தர்மநிலை ஆதரிப்பான், ஆரியர் பாழாகா தருமறையின் உண்மைதந்த.

திலகர்:- அன்போடோதும் பெயருடை யாரியன்.

கிருஷ்ணன் துதி:- எண்ணரும் புகழ்க் கீதையெனச் சொலும், எங்களாரிய பூமியெனும்,

கிருஷ்ணன் ஸ்தோத்திரம்:- ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே, ஆரிய நீயுநின் துறமறந்தாயோ, வெஞ்செய லரக்கரை வீட்டிடுவோனே வீரசிகாமணி, ஆரியர்கோனே.

ஆங்கிலப் பயிற்சி:- அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை ஆரியர்க்கிங் கருவருப்பாவதை, இயல்புணர்த்திய சங்கரனேற்றமும், பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள், நாட்டுக்கல்வி – மந்திர வேதத்தின் பேரொலி,

தமிழ்த்தாய்:- உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் (சமஸ்கிருதமே உலகில் சிறந்த பாஷை என்பது கருத்து)

புதுவருஷம்:- ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்.

என்று இவ்வாறாக ஆரிய மேன்மையையே – பார்ப்பனீயத்தின் மேன்மையையே அவரது நோக்கமாக எழுதியிருக்கிறார்.

ஆகவே பாரதிக்கும் கனம் ஆச்சாரியாருக்கும் தோழர் சத்தியமூர்த்தியாருக்கும் பார்ப்பன சூழ்ச்சி, பார்ப்பன ஆதிக்கப் புத்தி ஆகியவைகளில் எவ்வித வித்தியாசமும் காண முடியவில்லை. மற்றபடி தனிப்பட்ட முறையில் அவரது குணங்களைப் பற்றியும் மற்றும் அவரது சரித்திரத்தைப் பற்றியும் கவிபாடுவதில் அவருக்குள்ள கற்பனை அலங்காரம், பகுத்தறிவுக்கு ஏற்ற இயற்கை வருணணை அற்றதன்மை ஆகியவைகளைப் பற்றியும் பிறிதொரு சமயம் விவரிப்பேன். அவசரப்படுபவர்கள் “நவமணி” வருஷ மலரில் கண்டு கொள்ளலாம்.


குடி அரசு – கட்டுரை – 17.10.1937

Monday, 10 January 2022

சபாஷ் அம்பத்கார் - தோழர் பெரியார்

 

சபாஷ் அம்பத்கார்

தோழர் டாக்டர் அம்பத்கார் நாசிக்கில் கூடிய பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மகாநாட்டில் தலைமை வகித்துச் செய்த தலைமைப் பிரசங்கத்தில்,

“”மேல் ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர் களிடத்தில் நம் மீது கருணை ஏற்படும்படி நாம் செய்து வந்த முயற்சிகள் எல்லாம் வீணாய்ப் போய் விட்டன.

இனி அவர்களிடத்தில் சமத்துவமாயும், ஒற்றுமையாயும் வாழ முயற்சித்து நம் சக்தியையும், உழைப்பையும், பணத்தையும் செலவழிப்பது வீண் வேலையாகும். நமது குறைகளும், இழிவுகளும் மேல் ஜாதிக்கார இந்துக்களால் தீர்க்கப்படும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தைத் தான் அளிக்கும்.

இனி நாம் செய்ய வேண்டியது என்ன என்கின்ற விஷயத்தில் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். அம் முடிவு என்னவென்றால்,

நாம் இந்து மதத்தை விட்டு அடியோடு விலகி விடுவது என்பதுதான்.

நமக்கு யார் சுதந்திரம் கொடுக்க மறுக்கிறார்களோ அவர்களை இனி நாம் கெஞ்சக் கூடாது. அவர்களது சம்மந்தத்தை இனி நாம் விலக்கிக் கொள்ள வேண்டும்.



நாம் நம்மை இந்துக்கள் என்று இனி கூறிக் கொள்வது கூடாது.

அதனால்தான் மேல்ஜாதிக்காரர்கள் நம்மை இழிவாகவும் கொடுமை யாகவும் நடத்துகிறார்கள். நாம் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தால் நம்மை இம்மாதிரி கொடுமைப்படுத்த அவர்களுக்கு துணிவு இருந்திருக்காது.

எந்த மதத்தினர் உங்களுக்கு சம அந்தஸ்து கொடுத்து சமத்துவமாய் நடத்து கிறார்களோ அப்படிப்பட்ட மதம் எதுவாயினும் அதில் சேர்ந்து கொள்ளுங்கள்.

பிறக்கும்போதே நான் தீண்டப்படாதவனாய்ப் பிறந்தேன் என்றாலும், அது நான் செய்த குற்றமல்ல. ஆனால் இறக்கும்போது நான் தீண்டப்படாதவனாய் இறக்க மாட்டேன். அதற்கு மார்க்கம் என் கையிலேயே இருக்கிறது.

அதாவது நான் ஒரு இந்துவாய் இறக்கப் போவதில்லை” என்று பேசி இருக்கிறார்.

இப்பேச்சுக்குப் பிறகு சுமார் 15000 பேர்கள் கூடி உள்ள அம்மகாநாட்டில் ஏகமனதாய் ஒரு தீர்மானம் நிறைவேறி இருக்கிறது.

அதாவது,

“”ஆதி இந்துக்கள் இந்துமதத்தை விட்டு அடியோடு விலகிவிட வேண்டும். சமத்துவ பாவிப்பு உள்ள வேறு எந்த மதத்திலாவது சேர்ந்து கொள்ள வேண்டும்” என்பதாகும்.

இதற்கு இந்துக்கள் என்ன பதில் சொல்லுகிறார்கள், “”வருணாச்சிரமமும் கீதை உபதேசமும் எனது இரு சுவாசங்கள்” என்றும்,

“”இந்து மதமே நானாய் இருக்கிறேன்” என்றும் சொல்லும் காந்தியாரும்,

மதத்தில் நாங்கள் பிரவேசிப்பதில்லை என்றும், பழய கலைகளையும் பழய பழக்க வழக்கம் தொழில் முறை ஆகியவைகளையும் வெகு பத்திரமாய் காப்பாற்றிக் கொடுப்போம் என்றும்,

இந்துக்களுக்கும் வருணாச்சிரம தர்மிகளுக்கும் வாக்குறுதியும் பாதுகாப்பும் அளித்திருக்கும் “”சமதர்ம” காங்கிரஸ்காரர்களும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.

தோழர் அம்பத்கார் அவர்கள் பேசியிருக்கும்  பேச்சும், பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மகாநாட்டில் தீர்மானித்து இருக்கும் தீர்மானமும் புதிதல்ல. அல்லது அவர்களே முதல் முதல் கண்டுபிடித்த சொந்தக் கருத்தல்ல.

ஏனெனில்,

இந்து மதத்தை பார்ப்பனரல்லாத மக்கள் விட்டுவிட வேண்டுமென்றும், யாரும் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது என்றும், சுயமரியாதை இயக்கமானது 1925 முதலே சங்குநாதம் செய்து வருகிறது.

சென்ற ஜன கணிதத்தில் அனேக ஜாதி இந்துக்கள் என்பவர்களே தங்களை இந்துக்கள் அல்ல என்று பெயர் கொடுத்திருக்கிறார்கள்.

தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் தீண்டப்படாத வகுப்பு என்பதைச் சேர்ந்தவர் அல்ல என்று சொல்லப்படுபவரானாலும், தான் சாகும்போது இந்துவாய்ச் சாகப் போவதில்லை என்று சுமார் 10 வருஷத்துக்கு முன்பே சொல்லி இருக்கிறார்.

அதுமாத்திரமல்லாமல் இந்துமதம் என்பதாக ஒரு மதமே இல்லை என்றும், அது ஜாதி பாகுபாட்டின் பயனாய் பயன் அனுபவிக்கும் சோம்பேறிக் கூட்டத்தின் கற்பனை என்றும் சொல்லி, அந்தப்படி பல மகாநாடுகளில் பல தீர்மானங்களும் செய்யச்செய்திருக்கிறார்.

இவ்வளவோடு மாத்திரமல்லாமல் மனு நூலையும் இராமாயணத்தையும் சுட்டெரிக்க வேண்டும் என்று, 1922ல் திருப்பூரில் கூடிய சென்னை மாகாண தமிழ்நாடு காங்கிரஸ் மகாநாட்டில் மாகாண காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியாய் இருக்கும்போதே கூறி இருக்கிறார்.

அந்தப்படியே சுயமரியாதை மகாநாட்டில் ராமாயணமும், மனுதர்ம சாஸ்திரங்களும் சுட்டெரிக்கப்பட்டுமிருக்கின்றன.

மற்றும் கேரள தேசத்து அதாவது மலையாளம், கொச்சி, திருவாங்கூர் தேசத்து தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களாகிய தீயர், ஈழவர், நாடார், பில்லவா ஆகிய சுமார் 20 அல்லது 30 லட்சம் ஜனத் தொகை கொண்ட சமூகம் தங்களது மகாநாட்டிலும் தாங்கள் இந்து மதத்தை விட்டுவிட வேண்டும் என்றும், தங்களை இனி யாரும் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது என்றும், தங்களுக்கு மதத்தில் நம்பிக்கையே இல்லை என்றும் பல தீர்மானங்கள் இந்த 6, 7 வருஷ காலமாகவே 10000க்கணக்கான மக்கள் கூட்டத்தில் ஏகமனதாய் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்றன.

கடைசியாக 1933ல் கூட்டப்பட்ட  கு.N.ஈ.க. யோகம் என்னும் அவர்களது சமூக மகாநாட்டில் மிதவாதி பத்திராதிபரும் பெரிய செல்வவானும் சென்னை சட்டசபை அங்கத்தினருமான தோழர் சி.கிருஷ்ணன்,  ஆ.அ., ஆ.ஃ., அவர்களது தலைமையில் “”ஈழவ சமூக மக்களுக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை. ஆதலால் ஈழவ சமூக மக்கள் தங்களை இனிமேல் இந்துக்கள் என்று யாரும் சொல்லிக் கொள்ளக் கூடாது”  என்று தீர்மானித்து இருக்கிறார்கள்.

ஆகவே பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மகாநாட்டுத் தீர்மானமும் தலைவர் அம்பேத்கார் அவர்களது வீர கர்ஜனையும் எதுவும் புதிதல்ல.

இவற்றிற்கு இதுவரை காந்தியாரும், காங்கிரசுக்காரரும், வருணாச் சிரமிகளும், பார்ப்பனர்களும், இந்துமத பாதுகாப்பாளர்களும் என்ன பதில் சொல்லி வந்தார்களோ, எப்படி கருதினார்களோ அப்படியேதான் இதையும் கருதுவார்கள்  இதற்கும் பதில் சொல்லுவார்கள் என்பதில் சிறிதும் அய்யமில்லை.

தீண்டப்படாதவர்கள் விஷயமாகவோ, ஜாதி வித்தியாசம் விஷயமாகவோ, இந்து மத சீர்திருத்த விஷயமாகவோ இந்து மதம் என்றும் சாதி வித்தியாசம் என்றும் ஏற்பட்ட காலம் முதலே முயற்சிகள் செய்யப்பட்டுத்தான் வந்திருக்கின்றன.

கபிலர், திருவள்ளுவர், ராமானுஜர் முதலாகியவர்கள் “”தெய்வத் தன்மையில்” இருந்து பாடுபட்டிருப்பதாய் சரித்திரம் கூறுகின்றன. புத்தர் முதலிய அரசர்கள் பாடுபட்டிருப்பதாய் ஆதாரங்கள் கூறுகின்றன.

ராம் மோகன்ராய் மற்றும் சுவாமி தயானந்த சரஸ்வதி, ராமலிங்க சுவாமிகள், விவேகானந்தர் முதலிய ஞானவான்கள் முயற்சித்திருப்பதாய்ப் பிரத்தியட்ச அனுபவங்கள் கூறுகின்றன.

இவர்கள் எல்லாம் இன்று பூஜிக்கப்படுகிறார்கள் என்றாலும் காரியத்தில் ஒரு பயனும் ஏற்பட்டதாகக் கூற முடியாது.

மேற்கண்ட பெரியார்களுக்கு சிஷ்யர்களாக 100 பேர்களோ பதினாயிரம் பேர்களோ ஒரு லட்சம் பேர்களோ இருக்கலாம்.

அவரவர்கள் ஸ்தாபனங்களில் ஒரு சில லக்ஷம் அங்கத்தினர்கள் இருக்கலாம். மற்றப்படி காரியத்தில் நடந்ததென்ன என்று பார்த்தால் பழய நிலைமையேதான். சட்டதிட்டங்கள் மூலம், வருணாச்சிரம கூட்டங்கள் மூலம் பத்திரப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

ஆகவே இவ்விஷயத்தில் ஏதாவது ஒரு காரியம் தகுந்த அளவுக்கு நடைபெற வேண்டுமானால் மேல்கண்டபடி சுவாமிகள் என்றும், அவதாரங்கள் என்றும், மகாத்மா என்றும், பூஜிக்கப்படத்தக்கவர்கள் என்றும் சொல்லி சொல்லிக் கொள்ளுபவர்களால் ஒரு காரியமும் நடைபெறாது. இவர்களை பண்டார சன்னதிகள், சங்கராச்சாரியார்கள் என்று சொல்லப் படுபவர்களுக்கு ஒரு படி மேலாகச் சொல்லலாம். ஆனால் பொது ஜனங்களால் வெறுக்கப்படுகிறவர்களாலும் தூற்றப்படுகின்றவர்களாலும் தான் அவசியமான ஏதாவது மாறுதல்கள் காரியத்தில் நடைபெறக்கூடும்.

எனவே தோழர் அம்பத்கார் அவர்களின் கர்ஜ்ஜனையும், வீரமும், ஞானமும் நிறைந்த தீர்மானமும் பொது ஜனங்களால் எவ்வளவுதான் வெறுக்கப்பட்ட போதிலும் அவர் எவ்வளவு தான் தூற்றப்பட்ட போதிலும் அதுதான் தாழ்த்தப்பட்ட மக்கள் மாத்திரமல்லாமல் இந்தியாவில் உள்ள இந்துக்களில் பார்ப்பனரல்லாத மக்களாகிய 100க்கு 97 விகிதாச்சாரமுள்ள 24 கோடி இந்து மக்களின் விடுதலைக்கு சர்வசமய சஞ்சீவி ஆகப் போகிறது.

இதைப் பாராட்டும்போது நாம் சொல்வதெல்லாம் அம்பேத்கார் அவர்கள் பார்ப்பன சூட்சிக்கு ஏமாந்து மறுபடியும் இத் தீர்மானத்தை மாற்றிக் கொள்ளக் கூடாது என்பதோடு வைதீகமும், மூடநம்பிக்கையும், குருட்டு பழக்க வழக்கமும் கொண்ட வேறு எந்த மதத்திலும் விழுந்து விடக்கூடாது என்றும் எச்சரிக்கை செய்கிறோம்.

அனேகமாய் மதங்கள் என்பவைகள் எதுவும் ஏதோ ஒருவிதமான குருட்டு நம்பிக்கை மீதும் முரட்டுப் பிடிவாதத்தின் மீதே தான் கட்டப் பட்டிருக்கின்றன. எல்லா மதங்களுக்கும் ஒரே அஸ்திவாரம் தான்.

ஆதலால் “”ஒரு தப்பிதத்தின் பாவ நிவர்த்திக்கு ஆக மற்றொரு தப்பிதம் செய்யக் கூடாது” என்கின்ற பழமொழியை இந்தச் சமயத்தில் நன்றாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது நமது ஆசையாகும்.

நிற்க தோழர் அம்பேத்காரின் வாக்குமூலத்துக்கும் பம்பாய் ஆதி திராவிட மகாநாட்டு தீர்மானத்துக்கும் காந்தியாரும், பார்ப்பனர்களும் என்ன பதில் சொன்னார்கள் என்று பார்ப்போம். தோழர் காந்தியார் தனது வழக்கமான சூட்சித் திறத்தைக் காட்டும் முறையில் “”தோழர் அம்பேத்கார் இந்தப்படி பேசியதை நான் நம்பவில்லை” என்பதாக பாசாங்கு காட்டிவிட்டு பிறகு அந்த தீர்மானமும் அவரது பேச்சும் துர்அதிர்ஷ்டவசமானது என்றும், கோபத்தில் பேசியது என்றும், தீண்டாமை விஷயத்தில் ஏதோ அங்கொன்று இங்கொன்றுமாகத்தான் தவறுதல் நடக்கின்றனவென்றும், அதற்கு ஆக இப்படி செய்யக் கூடாதென்றும், அம்பேத்காருக்கு கடவுளிடம் நம்பிக்கை இருக்குமானால்தான் தன் அபிப்பிராயங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லிவிட்டு,

மதம் என்பது ஒருவருக்கு மாற்றிக் கொள்ளக்கூடியது அல்ல வென்றும், அது முடியாதது என்றும், மதம் மாறிவிட்டதினாலேயே தீண்டாமை ஒழிந்துவிடாது என்றும் சொல்லி அம்பேத்காரை நாஸ்திகர் என்று ஜனங்கள் பழிக்கும்படி விஷமம் செய்து இருக்கிறாரே ஒழிய, அக் கொடுமைகளுக்கு  திருப்தியும் சாந்தியுமளிக்கத்தக்க வேறு எவ்வித சமாதானமும் சொல்லவில்லை. ஆகவே காந்தியாரின் கருத்துக்களை ஒரு வாக்கியத்தில் சொல்வதாய் இருந்தால் அம்பேத்காருடன் பந்தயம் கட்டுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதாவது உன்னால் முடியாது, உன் இஷ்டப்படி நடக்காது, உன்னால் ஆனதைப் பார், உன்னை துலைத்து விடுகிறேன் என்பதுதான் கருத்தாகும்.

மற்றபடி காங்கிரஸ்காரர்களுடையவும், பார்ப்பனர்களுடையவும் பதில் என்ன என்று பார்ப்போமானால்,

சுதேசமித்திரன் பத்திரிகையானது அம்பேத்காரை பரிகாசம் செய்கிறது.

அதாவது “”ஏரியோடு கோபித்துக் கொண்டு கால் கழுவாமல் போகிறார் அம்பேத்கார். அதற்கேற்ற தீர்மானம் செய்திருக்கிறது ஆதி இந்து மகாநாடு” என்று ஏளனம் செய்திருக்கிறது.

அதாவது ஜாதி இந்துக்கள் சமூகம் ஏரியைப் போல் இருக்கிறதென்றும், அம்பேத்காரும் 6 கோடி தீண்டப்படாத மக்களும் (வெளிக்குப் போய்) கால் கழுவாத மக்கள் என்றும், வெளிக்குப் போய் கால் கழுவாமல் அசுத்தமாய் இருக்கிறவன் ஏரியுடன் கோபித்துக் கொண்டால் ஏரிக்கு ஒரு குறைவும் ஏற்படாதென்றும், ஏரி சுத்தமாக இருக்கும் என்றும் கோபித்துக் கொண்டு கால் கழுவாமல் போகிறவன் தான் அசிங்கத்துடன் இருக்க வேண்டும் என்றும், ஆதலால் அம்பேத்காரும் தீண்டப்படாதவர்களும் வேறு மதத்துக்கு போய்விட்டால் ஜாதி இந்துக்களுக்கு லாபமே ஒழிய நஷ்டமில்லை என்றும் பொருள்பட அதற்கு ஏற்ற பழமொழியைச் சொல்லுகிறது.

அதோடு “”நீண்டகாலப் பழக்கவழக்கங்களை திடீரென்று மாற்றி விடமுடியாது”

“”தீண்டாமை ஒழிய வேண்டுமானால் தாழ்ந்த வகுப்பினரின் மனோபாவத்திலும் விசேஷ மாறுதல் ஏற்பட வேண்டும்”

அம்பேத்காரின் பேச்சும் ஆதி இந்துக்களின் தீர்மானமும் “”காரியத்தில் நடக்கக்கூடிய காரியம் அல்ல” வெறும் வாய் பேச்சு மிரட்டல் என்கிறது.

டாக்டர் அம்பேத்காரே தான் வேறு மதத்துக்கு போகக் கூடுமே ஒழிய மற்ற தாழ்ந்த வகுப்பார் இவர் பேச்சை கேட்க மாட்டார்கள் என்றும் தைரியம் கொள்ளுகிறது.

அதோடு கூடவே அம்பேத்காரை நம்பாதீர்கள் நம்பி எந்த மதக்காரரும் அவரை சேர்த்துக் கொள்ளாதீர்கள் என்று மற்ற மதக்காரர்களுக்கும் எச்சரிக்கை செய்கிறது. கடசியாக இதனால் எல்லாம் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை என்றும் வீரம் பேசுகிறது.

மற்றபடி அக்கிரகாரத் தெரு திண்ணைகளில் இருக்கும் மடிசஞ்சிகளும், அவர்களது வார்சுகளும், காபிக் கடைகளிலும், வக்கீல்கள் தாழ்வாரங்களிலும் சுதேசமித்திரனின் பழமொழி போலவே அதைவிட சற்று மேன்மையாக,

“”மூக்கு மயிர் பிடுங்கப்படுவதால் ஆள் பாரம் குறைந்து விடப் போகிறதா?” என்று அலட்சியமாய் பேசப்படுகின்றன.

ஆகவே அம்பேத்கார் சொன்ன பேச்சும், தீர்மானமும் பல காலமாய் இருந்து வந்திருப்பதால் பழய பாட்டானதால் பார்ப்பனர்களுக்கும் இந்து மதப் பித்தர்களுக்கும் சிறிதும் உருத்தப் போவதில்லை என்பது உறுதி.

ஆனாலும், தோழர் அம்பேத்காருடைய பேச்சுக்கும், ஆதி இந்துக்கள் தீர்மானத்துக்கும் ஏதாவது மதிப்பு இருக்க வேண்டுமானால், அவர் உடனே இந்தக் காரியத்தை அதாவது ஆதி இந்துக்கள் ஆதி திராவிடர்கள் முதலிய தீண்டப்படாத வகுப்பு என்பவர்களிடையில் உடனே பிரசாரம் செய்து அவர்களை இந்து மதத்திலிருந்து வெளிக் கிளப்பிவிட வேண்டும். தோழர் அம்பேத்காரை பொறுத்தவரையில் சிறிது நாள் பொறுத்துத்தான் மதத்தை போக்கிக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் நமது பார்ப்பனர்களுக்கு இப்படிப்பட்ட ஆட்கள் இந்துமதத்தை விட்டுப் போய்விட்டால் இவர்களுடைய தொல்லை ஒழிந்தது என்று சந்தோஷமடைந்து விடுவார்கள். ஆகையால் மதம் மாறாமல் இருந்து கொண்டு எவ்வளவு பெயர்களை மதத்தில் இருந்து வெளியாக்கலாமோ அந்தக் காரியத்தை செய்ய வேண்டியது அம்பேத்காரின் முதல் கடமையாகும். பூனா ஒப்பந்தத்தால் ஏமாற்றப்பட்ட அம்பேத்காருக்கு இப்பொழுதாவது உண்மை கண்டு கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டதற்கு ஆக நாம் அவரை மனமாரக் கையாரப் பாராட்டுகிறோம்.

மற்றவை மற்றொரு சமயம் எழுதுவோம்.

-- குடி அரசு  தலையங்கம்  20.10.1935

ஜாதி ஒழிப்பில் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி - தோழர் பெரியார்

 

ஜாதி ஒழிப்பில் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி


அம்பேத்கர் உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இவ்வளவு பெரிய அறிஞராக விளங்கக் காரணம் என்ன? படிப்பு, திறமை, என்று சொல்வதெல்லாம் இரண்டாவதுதான். அவரைவிடப் படித்தவர்கள், திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் அம்பேத்கர் பெரிய அறிவாளியாக விளங்கக் காரணம் அவரது படிப்பு, திறமை என்பவை மாத்திரமல்ல; அவருடைய படிப்பும் திறமையும் நமக்குப் பயன்படுகிற தன்மையில் இருப்பதால்தான் அவரை அறிவாளி என்று சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் படிப்புத் திறமையெல்லாம் வேறு விதத்தில் பயன்படுத்தப்படுகிறது. அம்பேத்கர் ஒரு நாஸ்திகர். அவர் இன்றல்ல; நீண்ட நாளாகவே நாஸ்திகர். ஒன்று சொல்லுகிறேன். உலகத்தில் யார் யார் பெரிய அறிவாளிகளாக இருக்கிறார்களோ அவர்களெல்லாம் நாஸ்திகர்கள்தான்; நாஸ்திகனாக இருக்கிறவர்கள்தான் ஆராய்ச்சியின் சிகரமாக, அறிவு பிரகாசிக்கக்கூடிய மனிதராக ஆகமுடிகிறது. அவர்கள்தான் தங்கள் படிப்பை, திறமையைப் பயன்படுத்துகிறார்கள்.



டாக்டர் அம்பேத்கர் ஒரு பெரிய அறிஞர். அதன் காரணமாகவே அவர் ஒரு பெரிய நாஸ்திகர். அவர் தனது சொந்த அறிவை உபயோகித்து தான் கண்டதைத் தைரியமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். நம் நாட்டில் அறிஞர் கூட்டம் என்பவரெல்லாம் எடுத்துச் சொல்லப் பயப்படுவார்கள். அவர் இதுபோலல்லாமல் தைரியமாக எடுத்துச் சொல்லி வந்திருக்கிறார்.

இப்பொழுது அதிசயமாக உலகம் பூராவும் நினைக்கும்படியான சம்பவம் ஒன்று நடந்தது. அதுதான் அம்பேத்கர் புத்தமதத்தில் சேர்ந்தது. இப்போது பேருக்குத்தான் அவர் புத்தமதத்தில் சேர்ந்ததாகச் சொல்கிறாரே தவிர அம்பேத்கர் வெகுநாட்களாகவே புத்தர்தான்.

டாக்டர் அம்பேத்கர் 20, 30 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தே இந்து மதத்தை ஒத்துக்கொள்வதில்லை. அவர் காந்தியைப்பற்றிச் சொல்லும் போது காந்தி ஒரு பச்சை இந்து. மனுதர்ம முறை, வருணாசிரம முறையைப் பாதுகாக்க நினைப்பவர். அவர் ஆதித்திராவிட மக்களுக்கு என்ன செய்ய முடியும்? என்று கடுமையாகத் தாக்கி வருணாசிரம ஆதார சுலோகங்களையெல்லாம்கூட எடுத்துப்போட்டு, காந்தி பச்சை இந்துவாக இருப்பதால்தான் அவர் புத்தி இப்படிப் போகிறது என்று எழுதினார்.

1930_35லேயே ஜாதி ஒழிப்பில் தீவிரக் கருத்துள்ளவராக இருந்தார்; ஜாதி ஒழிப்புக்காக பஞ்சாபில் (ஜாத்மத்தோடகமண்டல் என்று கருதுகிறேன்.) ஒரு சபை ஏற்படுத்தியிருந்தார்கள். என்னைக்கூட, அதில் ஒரு அங்கத்தினராகச் சேர்த்திருந்தார்கள். அந்தச் சபையினர் ஜாதி ஒழிப்பு மாநாடு என்பதாக ஒரு மாநாடு கூட்ட ஏற்பாடு செய்து அந்த மாநாட்டுக்கு அம்பேத்கர் அவர்களைத் தலைமை வகிக்கக் கேட்டுக்கொண்டார்கள். அவரும் ஒத்துக் கொண்டு தலைமையுரையாக (address) 100 பக்கம் ஆங்கிலத்தில் எழுதினார். அதில் பல ஆதாரங்களை எடுத்துப்போட்டு ஜாதி ஒழிய இந்து மதமே ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். இதைத் தெரிந்து அவரிடம் உங்கள் மாநாட்டுத் தலைமை உரையை முன்னாடியே அனுப்புங்கள் என்று கேட்டு வாங்கிப் பார்த்தார்கள். அதில் ஆதாரத்தோடு இந்து மதம் ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்துவிட்டு உங்கள் தலைமையுரை எங்கள் சங்க மாநாட்டில் படிப்பதற்கு ஏற்றதாக இல்லை. ஜாதி ஒழிப்புச் சங்கமே தவிர, இந்து மத ஒழிப்புச் சங்கமல்ல. ஆகையால் நீங்கள் இந்து மதம் ஒழிய வேண்டும் என்கிற அந்த ஒரு அத்தியாயத்தை (Chapter) நீக்கிவிடவேண்டும் என்று அம்பேத்கரிடம் கேட்டார்கள். அதற்கு அம்பேத்கர் ஜாதி ஒழிப்பிற்கு இந்து மதம் ஒழியவேண்டும் என்கிறதுதான் அஸ்திவாரம். அதைப்பேசாமல் வேறு எதைப்பேசுவது? ஆகையால், அதை நீக்கமுடியாது என்று சொல்லிவிட்டார்.

பின் மாளவியா ஏதேதோ சமாதானமெல்லாம் சொன்னார். அதற்கும் அவர் நான் தலைமை உரையைப் பேசுகிறபடி பேசுகிறேன்; நீங்கள் வேண்டுமானால் அதைக் கண்டித்து மாநாட்டில் பேசுங்கள்: தீர்மானம் வேண்டுமானாலும் போடுங்கள், நான் முடிவுரையில் அதுபற்றிப் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டார். பிறகு மாநாடே நடக்காமல் போய்விட்டது. நான் அம்பேத்கரிடம் அந்தப் பேச்சை வாங்கி ஜாதியை ஒழிக்கும் வழி என்று தமிழில் புத்தகமாகப் போட்டு வெளியிட்டேன். அவர் அப்போதே அவ்வளவு தீவிரமாக இருந்தார்.

நாம் இராமாயணத்தைப்பற்றி வாயால் பேசிக்கொண்டிருக்கும் போதே, அதாவது 1932 லேயே அவர் இராமாயணத்தைக் கொளுத்தினார். அந்த மாநாட்டுக்கு சிவராஜ்தான் தலைவர், இதெல்லாம் குடியரசில் இருக்கிறது.

அவர் ஒரு தடவை சென்னைக்கு வந்திருந்தபோது, கீதையைப்பற்றிப் பேசும்போது, கீதை ஒரு பைத்தியக்காரனின் உளறல் என்றே பேசினார். அப்போது சி. பி. ராமசாமி அய்யர் போன்றவர்கள் இதென்ன அக்ரமம்; வெறும் அம்பேத்கர் பேசியிருந்தால்கூடக் கவலையில்லை; ஒரு கவுன்சில் மெம்பராக இருக்கிற அம்பேத்கர் அதுவும் சென்னையில் வந்து, கீதை பைத்தியக்காரனின் உளறல் என்று பேசுவதென்றால் அக்ரமம் என்றெல்லாம் கூச்சல் போட்டார்கள்.

நான் 1930இல் ஈரோட்டில் நடந்த சீர்திருத்த மாநாட்டிற்கு அம்பேத்கரைஅழைத்தேன். அந்த மாநாட்டுக்கு, சண்முகஞ் செட்டியார் வரவேற்புரை அளித்தார். என்ன காரணத்தாலோ அம்பேத்கர் வரவில்லை. அவருக்குப் பதிலாக ஜெயக்கர் வந்திருந்தார். அவர் ஏதோ நம்மைப் பாராட்டிப் பேசிவிட்டுப் போய்விட்டார். அம்பேத்கர் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அந்தச் சமயத்தில்தான் அம்பேத்கர் இஸ்லாம் ஆகப்போகிறேன் என்று சொன்னார். நானும் ராமனாதனும் இங்கிருந்து தந்தியடித்தோம். தயவுசெய்து அவசரப்பட்டுச் சேர்ந்துவிடாதீர்கள். குறைந்தது 1லட்சம் பேராவது கூட பின்னால் வந்தார்கள் என்றால்தான் அங்கும் மதிப்பிருக்கும்; இல்லாவிட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும். அவர்களோ கைவைக்கக்கூடாத மதம் (Perfect Religion) என்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். எவனுக்குமே கைவைக்க உரிமையில்லை என்பவர்கள். வெறும் தொழுகை அது இது எல்லாம் உங்களுக்கு ஜெயில் போலத்தான் இருக்கும். தனியே போவதால் அங்கும் மரியாதை இருக்காது, உதைக்க வந்தால்கூட சிபாரிசுக்காவது ஆள்வேண்டாமா? என்று சொன்னோம். அதன் பிறகு யார் யாரோ அவர் வீட்டிற்குப் போய் மதம் மாறக்கூடா தென்று கேட்டுக் கொண்டார்கள். பத்திரிகையில் வந்தது. அப்போதே அவர் மதம் மாறுவதில் தீவிர எண்ணம் வைத்திருந்தார். எப்படியோ கடைசியாக இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார். என்றாலும் அவர் ஏற்கெனவே புத்தர்தான்.

நாங்கள் உலக புத்தர் மாநாட்டிற்குச் சென்றபோது அவரை பர்மாவில் சந்தித்தேன். புத்தர் மாநாட்டில் நான் பேசுவதாக ப்ரோகிராமில் (நிகழ்ச்சி நிரல்) போட்டிருந்தார்கள். ஆனால், எனக்குச் சொல்லவில்லை. நான் போனேன். பிறகு என்னமோ வேறொருவரை பேசச் சொல்லிவிட்டார்கள் அப்போது அம்பேத்கர் என்னிடம் இன்றைக்குக் கையெழுத்துப்போட்டு புத்தமதத்தில் சேர்ந்துவிடுவோம், என்று சொன்னார்.

மைசூர் மகாராஜா புத்தமதக் கொள்கையில் ரொம்பப் பற்றுள்ளவர். நானும் மைசூரிலேயே நிரந்தரமாகத் தங்கலா மென்றிருக்கிறேன். அவர் எத்தனையோ ஏக்கர் நிலம்கூட தருவதாகச் சொல்லி இருக்கிறார். இப்படி இதையெல்லாம் வைத்து ஒரு பெரிய யூனிவர்சிட்டி (பல்கலைக்கழகம்) ஆரம்பிக்காமல் நாமும் சாகிறவரையில் பேசிக்கொண்டேயிருந்துதான் என்னாவது? ஏதாவது சாவதற்குள் செய்ய வேண்டாமா? என்று இன்னும் என்னென்னமோ சொன்னார். அதோடு தைரியமாக இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார். சேர்ந்த பிறகு ஒரு அறிக்கை வெளியிட்டார். நான் இனிமேல் ராமன், கிருஷ்ணன், சிவன், இந்திரன் முதலியவைகளைக் கடவுளாக ஏற்றுக் கொள்வதில்லை. அவதாரங்கள் என்பவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. உருவ வணக்கத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ஜாதிமுறையில், இன்னும் மோட்சம் நரகம் இவற்றை நம்பு-வதில்லை; சடங்கு, திதி - திவசங்கள் ஆகியவைகளில் நம்பிக்கையில்லை. இனிமேல் இவைகளைச் செய்யமாட்டேன். இதுபோல இன்று நாம் எதை எதைக் கண்டிக்கிறோமோ, ஒத்துக்கொள்வதில்லையோ, அதையெல்லாம் சொல்லியிருக்கிறார்.

அம்பேத்கர் மக்களுக்கு வழி காட்டுபவர். ஜாதிமதக் குறைபாடுகளை மனதில்பட்டதைத் தைரியமாக எடுத்துக் கூறிவந்தார். சுயநலமில்லாமல் பாடுபட்டவர்; இந்தியா பூராவும் விளம்பரம் பெற்றவர். அவர் தமது மக்களுக்குப் பௌத்த மதத்திற்குப் போகும்படி வழி காட்டியிருக்கிறார். இங்கு பலபேர் மாறக்கூடிய நிலை ஏற்படும். தன் சமுதாயத்திற்குப் படிப்பு, உத்தியோகம் முதலிய காரியங்களில் முயற்சி செய்து பல வசதிகளைச் செய்திருக்கிறார். உத்தியோகத்தில் 100க்கு 15 என்று வாங்கிக்கொடுத்தார்.

அவர் உள்ளபடியே ஒரு பெரிய தலைவர். அவருக்குப் பிறகு அவரைப் போன்ற ஒரு தலைவர் தோன்ற முடியாது. அவர் சமதர்ம காலத்திற்குமுன் ஏற்பாடு செய்யப்பட்ட தலைவர். அம்பேத்கருக்குப் பிறகு அவரைப் போன்ற தலைவர் ஏற்பட முடியாது.

----------------- தந்தை பெரியார் 28.10.1956 இல் வேலூர் நகராட்சி மன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை - 7.12.1956)