Friday, 11 February 2022

குருக்களின் புரட்டு

 

குருக்களின் புரட்டு


சகோதரர்களே!

இதுவரை அரசியல் புரட்டையும், மதப் புரட்டையும் பற்றிச் சொல்லி வந்தேன். இனி ஆச்சாரியார், குரு, மகந்து, சங்கராச்சாரியார்கள், மடாதிபதிகள் என்பவர்களின் பேரால் நடக்கும் புரட்டுகளையும் சற்று கவனித்துப் பாருங்கள் .

எந்த தனிப்பட்ட நபர் மீதிலும் எனக்கு எவ்விதமான மன வருத்தமும், துவேஷமும் இல்லை. இவர்களுக்கு கொடுக்கும் பணம் நின்றுவிட்டால் எனக்கு ஒன்றும் லாபம் கிடையாது. நான் சொல்லுவதெல்லாம் நம்முடைய பணம் எவ்வளவு அக்கிரம வழியிலும், அவிவிவேக வழியிலும் செலவாகிறது என்பதையும் இதன் மூலம் நமது சுயமரியாதைகள் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுவதோடு நாம் எந்தெந்த வழிகளில் ஏமாற்றப்படுகிறோம் என்பதையும் உங்கள் அறிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற எண்ணமே அல்லாமல் வேறல்ல.



ஆசாரியார், மகந்து, மடாதிபதி, சிஷ்யன், குரு என்று சொல்லும் வார்த்தைகள் தமிழ் வார்த்தைகள் அல்ல. அவை ஆரியர்கள் நாட்டு வார்த்தைகள் . அவர்கள் இங்கு வந்தபிறகு அவ்வார்த்தைகளை நம்முள் புகுத்தி அவர்களே அவர்களை அவ்வார்த்தைக்கு அருகர்களாக்கிக் கொண்டு, நம்மை அவர்களது சிஷ்யர்களாக்கிக் கொண்டு, நம்மை அவர்களது சிஷ்யர்கள் என்பதாகச் சொல்லி, அந்த மாதிரியான குரு சிஷ்ய பாவத்திற்கு என்னென்னமோ நிபந்தனைகள் ஏற்படுத்தி, அவைகளுக்கு நம்மை கட்டுப்படுத்தி, அவர்களை நாம் கடவுளை விட சிறந்தவர்களாக மதிக்கும்படியாகச் செய்து ஏமாற்றியிருக்கிறார்கள்.

முக்கியமான கோயிலாகிய திருப்பதியில் மகந்து என்பதாக ஒருவர் எதற்காக இருக்கிறார்? அவருக்கு ஏற்பட்ட வேலை என்ன? அவரால் அக்கோயிலுக்கோ அங்கு செல்பவருக்கோ உண்டாகும் லாபம் என்ன? அவர் கோயிலுக்கு தர்மகர்த்தாவென்று சொல்லுவதானால் மற்ற தர்மகர்த்தாக்களுக்கு இல்லாத தனி மரியாதை அவருக்கு ஏன் செய்ய வேண்டும்? அவர் ஒரு அரசனின் போகபோக்கியம் அனுபவிக்க எந்த விதத்தில் உரிமை உள்ளவர்? மற்ற பெரும்பான்மையான கோவில்களுக்கில்லாத முறை திருப்பதி கோயிலுக்கு மாத்திரம் ஏன் ஏற்பட வேண்டும்? அல்லாமலும், அவர் எந்த பரம்பரையில் வந்தவர்? அவர் ஜாதி, குலம், தாய், தகப்பன் முதலியவர்களின் தொழில், யோக்கியதை முதலியவைகள் என்ன? இந்த மகந்து வேலையில் இதுவரை இருந்து வந்தவர்களின் யோக்கியதை என்ன? எத்தனை மகந்துகள் கிரிமினல் குற்றத்திற்கு தண்டனை அடைந்தவர்கள்? எத்தனை மகந்துகள் லட்சக்கணக்காக சுவாமியின் சொத்தை குடி, இழிவான காரியம், மதுபானம், மாம்சம் உண்ணல், விபசாரம் முதலியவைகளில் செலவு செய்து குற்றங்கள் சாட்டப்பட்டனர் என்பவைகளை யோசித்துப் பார்த்தால் இவர்களது வழக்கமான யோக்கியதை இன்னதென்பதும், எந்த விதத்தில் இவர்கள் மதிக்கத் தகுந்தவர்கள் என்பதும் விளங்காமல் போகாது. மற்றும் இம்மகந்துகள் என்போர் சுவாமிக்கு வேண்டுதலை என்பதாக மக்கள் கொண்டுவரும் பொருள்களில் எவ்வளவு பாகம் கணக்குக்கு போகவிடாமல் திருடிக் கொள்ளுகிறார்கள் என்பதும் போய் வந்தவர்களை விசாரித்தால் யாவருக்கும் சுலபமாய் விளங்கும். ஒவ்வொரு யாத்திரைக்காரனிடமிருந்தும் வழிபறிக் கொள்ளை போல் வழி மறித்து பிடுங்கிக் கொள்ளப்படுகிறது எவ்வளவு?

அடுத்தப்படியாக லோககுரு என்னும் சங்கராச்சாரியார் என்பவர்களின் புரட்டு எவ்வளவு என்று யோசியுங்கள். லோககுரு என்று அவருக்கு எப்படி பெயர் தகும்? அவர் யார்? யாருக்கு குரு? என்று பார்ப்போமானால் அவர் இந்தியாவுக்கு குரு அல்ல. இந்தியாவில் உள்ள இந்துக்கள் என்பவர்களில் பார்ப்பனர்கள் எல்லோருக்குங் கூட குருஅல்ல. பார்ப்பனர்களில் உள்ள பல பிரிவுகளில் ஸ்மார்த்தர்கள் என்கிற ஒரு சிறு கூட்டத்தாருக்கு இவர் குரு என்ற பாத்தியமுடையவர். அச்சிறு கூட்டத்தாருக்கும் இவரைப்போல் இன்னமும் நான்கு ஐந்து சங்கராச்சாரியார்கள் என்போர்கள் உண்டு. ஆகவே ஒரு சிறு கூட்டத்தின் - அதாவது நமது நாட்டிலுள்ள சில ஆயிரக்கணக்கான மக்களில் 5 அல்லது 6 ல் ஒரு பாகத்தாருக்கு - குரு என்று ஏற்பட்ட ஒருவர் அக் கூட்டத்தினரின் செல்வாக்காலும், தந்திரத்தினாலும், ஏமாற்றுதலாலும், நம்மவர்களின் அறிவீனத்தினாலும், ஏமாந்த தனத்தினாலும் லோககுரு என்பதாக அழைக்கப்பட்டு இந்துக்கள் என்கிற எல்லா மக்களுக்கும் குருவாகி கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடித்து வெறும் பார்ப்பனர்களுக்கே பொங்கிப் போட்டு பார்ப்பனப் பிரசாரம் செய்து வருகிறார்.

ஒரு சங்கராச்சாரி என்பவர் ஒரு ஊருக்கு வருவாரானால் அந்த ஊரிலுள்ள பார்ப்பன உத்தியோகஸ்தர், பார்ப்பன மிராசுதார், பார்ப்பன வக்கீல் முதலிய செல்வாக்குள்ள ஆசாமிகளின் மூலம் அந்நாட்டிலுள்ள செல்வவந்தர்களை எல்லாம் ஏமாற்றி 100, 200, 1000, 2000, 5000, 10000 என்பதாக வசூலிப்பதும், தீர்த்தபதி, nக்ஷத்திரபதி, தர்ம பூஷணம் முதலிய பட்டங்கள் கொடுப்பதாகச் சொல்லி அறிவில்லாத செல்வவந்தர்களை ஏமாற்றி 1000, 2000 வாங்குவதும், பாத பூஜைக்கு இத்தனை ரூபாய் என்றும், பாத தீர்த்தத்திற்கு இத்தனை ரூபாய் என்றும், தங்கப் பல்லக்கில் ஊர்கோலம் செய்ய இத்தனை ரூபாய் என்றும், வீட்டிற்கு வர இத்தனை ரூபாய் என்றும், வீட்டில் பூஜை செய்ய இத்தனை ரூபாய் என்றும், நமக்கு சொந்தமான குளத்தில் குளிக்க இத்தனை ரூபாய் என்றும், பிருதுகளுடன் வர இத்தனை ரூபாய் என்றும், வெறும் தீர்த்தத்திற்கு இத்தனை ரூபாய் என்றும், பாத தீர்த்தத்திற்கு இத்தனை ரூபாய் என்றும், வியாபார முறையில் பேசி கொள்ளை அடிக்கிறார்கள் . எந்த ஊருக்கு வந்தாலும் அந்த ஊர்களில் பிரபலமாயுள்ள கோயில்களிலேயே வந்து தங்குவதும், அக்கோயிலுக்குள்ளாகவே சங்கராச்சாரியாருக்கு வேண்டிய சகல நடவடிக்கைகளையும் அதாவது கக்கூசு, ஸ்நானம், சமையல் முதலியவைகள் வைத்துக் கொள்வதோடு காலிலுள்ள மிதியடியுடனேயே சுவாமியின் மூலஸ்தானம் வரையில் போய் சாமி கும்பிடுவதுமான காரியங்களையும் செய்கிறார்கள்.

இம்மாதிரி உலகத்திற்கே குரு என்று சொல்லிக் கொண்டும் பாடல் பெற்ற கோயில்களில் கக்கூசு கட்டிக் கொண்டும், மிதியடியுடனும் சாமி கும்பிடவும் உரிமையுள்ளவரான இந்த சங்கராச்சாரியார்களின் கொள்கை என்ன என்று பார்ப்பீர்களானால், அவர்கள் ஒரு விதத்தில் கடவுள் இல்லை என்று சொல்லுகிற நாஸ்திக மதத்தைச் சேர்ந்தவர்கள் . அதாவது தன்னைத் தவிர கடவுள் என்கிற வேறொரு பொருளோ தன்மையோ கிடையாது. தாங்களே தான் கடவுள் என்கிற கொள்கையையுடையவர்கள் . அதனால்தான் கோயிலில் கக்கூசு கட்டிக் கொள்வதிலும், மிதியடியுடன் மூலஸ்தானத்திற்கு போவதிலும் ஆட்சேபணை இல்லாதவர்களாயிருக்கிறார்கள் . இந்த கொள்கையுடையதற்கு ஸ்மார்த்தம் என்று பெயர். இது சைவ மதத்திற்காவது வைணவ மதத்திற்காவது கொஞ்சமும் சம்பந்தமில்லாதது. கிறிஸ்தவ மதத்திற்கும் மகமதிய மதத்திற்கும் ஒன்றுக்கொன்று எவ்வளவு வித்தியாசம் உண்டோ அதைவிட அதிகமாக சைவ மதத்திற்கும் வித்தியாசம் உண்டு. ஸ்மார்த்தாளுக்கும் சைவ கோயில்கள் கிடையாது. தன்னையே கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் இவர் வேறு கோயில்களை கும்பிடுவது ஏமாற்றுவதற்கேயல்லாமல் வேறல்ல. இன்னும் இவர் சன்னியாசி வேஷம் போட்டுக் கொண்டு தன்னை சன்னியாசி என்று சொல்லிக் கொண்டும் அரசபோகம் அனுபவிப்பார். தனக்கெனவே யானை, குதிரை, ஒட்டகம், சிப்பாய் முதலிய படைகளும் போகிற இடங்களுக்கெல்லாம் கொண்டு போகிறார்கள் . தன்னுடைய சிஷ்யர்கள் என்போர்களாகிய நம்மவர்களிடமே இவைகளுக்கு செலவுக்கு வேண்டிய பண்டங்களையும் சம்பாதித்து வருகிறார்கள். இவ்வளவும் செய்தும் அவரிடமுள்ள மத சம்பந்தமான நாணயமோ மிகவும் மோசமானது. தான் மனதில் மாத்திரம் ஸ்மார்த்தராயிருந்து கொண்டு வெளியில் சைவ வேடம் போட்டுக் கொண்டு ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத நடவடிக்கைகளை உடையவராயிருக்கிறார்கள் .

மகந்துகள் சங்கதியும் உலக குருக்கள் சங்கதியும் இப்படியானால் மற்ற குட்டி சாமியார்கள் , ஜீயர்கள் முதலிய வைணவ மடாதிபதிகள் சங்கதி எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இது தவிர இந்த ஆச்சாரியர்களுக்கு கட்டுப்பட்ட மக்களுக்குள்ளாகவே அநேகருக்கு இந்த குருமார்கள் தவிர குலகுரு என்பதாகவும் தங்கள் ஜாதி குரு என்பதாகவும் அநேகருண்டு. அவர்களும் இது போலவே சஞ்சாரம் என்கிற பெயரை வைத்துக் கொண்டு வருஷத்திற்கு ஒரு முறை பிரயாணம் செய்து குரு காணிக்கை யென்பதாக வரி வசூலிப்பதும், வரி அல்லாமல் மடத்திற்கு கடன் அதிகமாய் விட்டது, மழை இல்லை, சாமியார் விலைக்கு வாங்க, பட்டத்தை நிலைநிறுத்த, செய்த வியாஜ்ஜியத்தில் கடன் ஏற்பட்டு விட்டது, இரண்டு பெண்டாட்டி கட்டியும் பிள்ளையில்லை, மூன்றாவது கல்யாணத்துக்கு தங்கப் பல்லக்கு செய்யப் பணம் வேண்டும், வெள்ளிப் பாத்திரம், பிறாது இவைகளுக்கு பணம் வேண்டும் என்பவைகளான பெயரினால் வசூலிக்கும் பணம் கணக்கு வழக்கில்லை. இம்மாதிரி சாமியார் வரிகள் தினம் ஒன்றுக்கு 4 அணா சம்பாதிக்கும் ஏழைக் கூலியைக்கூட விடுவதில்லை. சாமியார் இல்லாவிட்டால் தங்களுக்கு அவமானம் என்று நினைக்கும்படியாய் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த சாமியார்களின் சொந்த யோக்கியதை ஒழுக்கங்கள் என்ன என்பதைப்பற்றி சிஷ்யர்கள் யாராவது கவனிக்கிறார்களா? ஒரு சாமியாருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தால் அந்த இரண்டு பிள்ளைகளும் உள்ள சிஷ்யர்களை மாடு கன்றுகளைப் பிரித்துக் கொள்வது போல் ஆளுக்குப் பகுதியாகப் பிரித்துக் கொள்ளுகிறார்கள். மேல், கடை சங்கராச்சாரியார்களும் இம் மாதிரியே ஒருவருக்கொருவர் எல்லை பிரித்துக் கொண்டிருக்கிறார்கள் . ஒருவர் எல்லையில் ஒருவர் வந்ததற்காக கோர்ட்டுகளில் விவகாரமும் நடந்து வருகிறது.

இது போலவே சிறு கிராமங்களும் குடும்பங்களும் சாமியார்களுக்கு பிரிவினையாக்கப்படுகிறது. இந்த சாமியார்களில் அநேகம் பேர் தங்களுடைய சஞ்சாரத்தில் தாசிகளைக் கூட்டிக் கொண்டு போகிறார்கள் . சில சாமியார்கள் சஞ்சாரத்திற்கு தாங்கள் போக சவுகரியப்படாமல் தங்களுடைய தாசிகளை அனுப்பி விடுகிறார்கள் .

அந்த அம்மா சாமியார்களும் சால்வையைப் போர்த்துக் கொண்டு சிஷ்ய கோடிகளைத் தங்கள் காலில் விழச் செய்து பிரசாதம் கொடுத்து காணிக்கை வாங்கி வருகிறார்கள் . சில சாமியார்கள் வாரண்டு சேவகர்களுடன் காணிக்கை வசூல் செய்யவும், வாரண்டு கடன் தீர்க்கவும் சஞ்சாரம் செய்கிறார்கள் . எனது மைத்துனரின் சாமியார் தாசி வைத்திருப்பதால் அடிக்கடி வாரண்டில் பிடிபடுவதுண்டு. எங்கள் குலகுரு என்பவர் வருவதற்கு சாவகாசமில்லை என்கிற காரணத்தால் கண் தெரியாத தன்னுடைய 80 வயது தாயாரான விதவைக் கிழவியை அனுப்பிக் காணிக்கை வசூல் செய்யச் செய்வதும், எங்கள் குடும்பமும் அந்த குருட்டுக் கிழவிக் காலில் விழுந்து காணிக்கை கொடுப்பதும் இன்னமும் நடந்து வருகிறது. என் தகப்பனாருக்கும் தாயாருக்கும் இந்த குருடி காலில் விழுவதற்கு வெட்கப்பட்டு வேறொரு சாமியாரை ஏற்படுத்திக் கொண்டார்கள். வேறு சாமியாரும் நல்லாஞ் சக்கிரவர்த்திகள் என்கிற ஒரே பரம்பரை என்று சொல்லிக் கொள்வதானாலும் அதற்கு வேறு இதற்கு வேறு என்பதாக இரண்டு வரி கொடுக்கப்பட்டு வருகிறது. புது சாமியார் வைத்துக் கொண்டதாக கேள்விப்பட்ட பழய சாமியார் குடும்பத்தோடு வீட்டிற்கு வந்து “ஹரி இரண்டானாலும் குரு இரண்டாகலாமா” என்பதாக கோபித்து சாபமிடுவதாகப் பயமுறுத்தி அதிகப் பணமும் வாங்கிக் கொண்டார்கள். அந்த சாபத்தால்தான் எனக்கு குழந்தை இல்லை என்றும் நான் குருத் துரோகியாகவும் மதத் துரோகியாகவும் போய் விட்டதாகவும் குருட்டு நம்பிக்கைக் கொண்ட கிழங்கள் பேசிக் கொள்ளுகின்றன. ‘திராவிடன்’ பத்திராதிபரான ஸ்ரீமான் கண்ணப்பர் அவர்கள் குடும்பத்துக்கு குரு என்கிற ஒரு ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யங்கார் பார்ப்பனர் ரிவினியூ போர்டாபீசில் மாதம் 75 ரூபாய் சம்பளத்திலிருக்கிறார். வருஷத்துக்கு ஒரு மாதம் சர்க்காரால் கொடுக்கப்படும் பிரிவிலேஜ் லீவு என்கிற சம்பளத்துடன் உள்ள லீவை உபயோகித்துக் கொண்டு கிராமங்களுக்கு பஞ்சகச்சம் கட்டி ஒரு கிழிந்த சால்வையைப் போர்த்துக் கொண்டு வந்து திண்ணையில் உட்கார்ந்து காணிக்கை வரி வசூலித்துக் கொண்டு மறுபடியும் உத்தியோகத்திற்கு போய் விடுகிறார்.

இவ்வளவு அழிம்பும் அக்கிரமமும் புரட்டும் பித்தலாட்டமும் ஏமாற்றமும் அயோக்கியத்தனமும் செய்து கொள்ளையடித்துக் கொண்டு போகிற இந்த ஆச்சாரியார், மடாதிபதி, லோககுரு, குலகுரு, சாமியார் இவர்களால் மக்களுக்கு ஏதாவது லாபம் உண்டா என்பதை கவனித்துப் பாருங்கள். இவர்களைப் பற்றி நமது தமிழ் ஆதாரங்களில் ஏதாவது எழுதப்பட்டிருக்கிறதா என்று பார்த்தால் எங்கும் கிடையவே கிடையாது. ஆனால் ஆரிய நூல்களில் இருந்தாலும், அது எவ்வளவு ஆபாசமாய் காணப்படுகிறது என்று பார்ப்பீர்களானால் அதன் உண்மை விளங்கும். குருபத்தினி சிஷ்யன் மேல் ஆசைப்பட்டு அவனைக் கெடுத்ததும் அதற்காக சிஷ்யன் சபிக்கப்பட்டதும் காணப்படுவதும், குருக்கள் ஒருவருக்கொருவர் பொறாமையால் சண்டைப் போட்டுக் கொள்ளுவதும், குருபத்தினி சம்பந்தம் செய்தால் அது இன்ன பாவம் என்றும் அதற்கு இன்ன பிராயச்சித்தமென்றும், சிஷ்யனாக ஆசைப்பட்டிருந்தால் இன்ன பிராயச்சித்தமென்றும், அந்தம்மாளாக ஆசைப்பட்டிருந்தால் இன்ன பிராயச்சித்தம் என்றும் புராணங்களும் ஸ்மிருதிகளும் எழுதப்பட்டிருக்கிறதும் அனுபவத்திலும் இம்மாதிரி அக்கிரமங்கள் நடந்து பலர் பாவத்திற்கு ஆளாவது பிராயச்சித்தத்தின் மூலம் பார்ப்பனர்களுக்கு பணம் கொடுப்பதுமல்லாமல் வேறு என்ன லாபம் உண்டாகிறது? ஆத்மார்த்தத்திற்காவது வாழ்க்கைக்காவது ஏதாவது பலன் உண்டா? ஏதாவது உபதேசம் உண்டா?

லோக குரு சங்கராச்சாரியார் முதலிய பணக்கார குருக்கள்மார்கள், நாம் சூத்திரனானதால் நம்மைப் பார்த்தது குற்றம், நம்முடன் பேசியது தோஷம், நமது பாஷையாகிய தமிழை உச்சரித்தது மகா பாவம் என்பதாகக் கருதுவதும், அதற்காக நம்ம பணத்தைக் கொண்டே பிராயச்சித்தம் செய்வதும், அதன் மூலம் பார்ப்பனர்களுக்குத் தானம் கொடுப்பதும் தவிர வேறு பலன் உண்டா? குலகுரு என்கிறவனும் நமது வீட்டிற்கு வந்தால் நமது பாயின் மேல் உட்காரக் கூட அசுசிப்பட்டுக் கொண்டு தாவிக் குதித்து கீழே உட்காருகிறான். ஆனால் அதே குரு அசுசியான வீதியில் நடந்து வரும் போது காலில் என்னென்னவோ மிதித்துக் கொண்டு நடந்து வருகிறான். அவன் நடந்து வந்த அசுசியான தெருவை விட நம்ம வீட்டுப் பாய் அசுசி என்பதாக கருதுகிறான். இப்படிப்பட்டவன் காலில்தான் நாம் விட்டம் போல் விழுந்து கும்பிட்டு பணம் கொடுக்கிறோம். இந்த சமயத்தில் குரு நமக்கு உபதேசம் செய்வதென்ன, நம்முடன் பேசுவதென்ன என்பதை கவனித்தீர்களா?

குரு : சவுக்கியமா?

சிஷ்யன் : தேவரீர் அனுக்கிரகத்தால் நாயேன் சவுக்கியம்.

குரு : உனக்கு எத்தனை குழந்தைகள் ?

சிஷ்யன் : நான்கு குழந்தைகள் .

குரு : பெண் எத்தனை ஆண் எத்தனை?

சிஷ்யன் : ஒரு பெண் மூன்று ஆண்.

குரு : ஆண்களுக்கு கல்யாணம் ஆய்விட்டதா?

சிஷ்யன் : இரண்டு ஆண்களுக்கு கல்யாணமாகிவிட்டது.

குரு :அப்படியா, இரண்டு ஆண்களுக்கு கல்யாணமாகி விட்டதா? அப்படியானால் அது இரண்டு குடும்பம், நீ ஒரு குடும்பம் ஆக மூன்று குடும்பமாகி விட்டது. ஆகவே மூன்று தலைக்கட்டுக்கு தலைக்கட்டு ஒன்றுக்கு ஒன்றே கால் ரூபாய் வீதம் மூன்றோன் மூன்று, மூக்கால் முக்கால் ஆக மூன்றே முக்கால் ரூபாய் அல்லவா காணிக்கை கொடுக்க வேண்டும். நீ ஒன்றேகால் ரூபாய் தானே வைத்திருக்கின்றாய் இது தர்மமா?

சிஷ்யன் :சுவாமி தேவரீர் என்னை மன்னிக்க வேண்டும். குடும்பம் இன்னும் பிரிக்கப்படவில்லையாதலாலும் அதுகளால் இன்னமும் ஒரு சம்பாதனையும் இல்லையாதலாலும் ஒரே குடும்பமாய் பாவித்து விட்டேன்.

குரு : நீ குடும்பம் பிரித்தால் என்ன, பிரிக்காவிட்டால் என்ன. அவர்கள் சம்பாதித்தால் என்ன. சம்பாதிக்காவிட்டால் என்ன. பெரிய சுவாமிகள் காலத்திலேயே உன் பெரியோர்களால் தலைக்கட்டுக்கு ஒன்றேகால் ரூபாய் கொடுப்பதாக பட்டயமிருக்கிறது. அல்லாமலும் சாஸ்திரத்திலும் தலைக்கட்டுக்குத் தனித் தனியாய் வாங்கும்படி ரிஷிகள் சொல்லி இருக்கிறார்கள் . அந்தப்படி கொடுக்க வேண்டும் என்றும் தர்ம சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.

சிஷ்யன் : சுவாமி! நாயேன் தெரியாத்தனத்தினால் செய்த குற்றத்தை மன்னிக்க வேண்டும். மூன்றே முக்கால் ரூபா காணிக்கையும் இந்த அபசாரத்திற்காக அபராதம் ஒன்றே கால் ரூபாயும் சேர்த்து ஐந்து ரூபாயாக வைத்திருக்கிறேன். பெரிய மனது செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

குரு : நிரம்ப திருப்தி. மடம் ரொம்பவும் பழுதாயிருக்கிறது. சிஷ்யர்கள் எல்லாம் ஒரு நாளைக்கு வந்து பார்த்து அது எப்படி செய்ய வேண்டுமோ அந்தப்படி செய்யுங்கள் . (தன்னைத்தானே) சுவாமிகள் ரம்பவும் அதனால் அசவுக்கியப்படுகிறார்கள் .

சிஷ்யன் : ஆ ஆகா. இதோ 10 நாளில் நாங்கள் எல்லோரும் மடத்திற்கு வந்து ரிபேர் செய்துவிட்டு வருகிறோம்.

இவ்வளவுதான் குருவுக்கும் சிஷ்யர்களுக்கும் சம்பாஷணை. இதைத் தவிர வேறு ஏதாவது நடந்ததை நான் பார்த்ததே இல்லை.

இப்படி இருந்தால் இது ஒரு பகற்கொள்ளையா அல்லவா என்று தான் கேட்கிறோம். இம்மாதிரி குருவையுடைய நாடாவது மக்களாவது சுயமரியாதை, அறிவு, விடுதலை முதலியவைகள் அடைய முடியுமா? எனவே ஒரு கூட்டத்தார் அதாவது பார்ப்பனர்கள் பிழைக்கவே அரசியல், கடவுள் , மதம், ஆச்சாரியார்கள் ஆகியவைகள் இருக்கின்றனவே அன்றி இவைகளால் ஏதாவது பலன் உண்டாகிறதா?

இம்மாதிரியான ஏமாற்றத்திலிருந்து விலகி அன்பு என்கிற உண்மையான கடவுளை அடைய சமத்துவம் என்கிற கொள்கைகளான மதத்தையும் சுயமரியாதை என்கிற குருவையும் அடைந்தால்தான் விடுதலையோ இன்பமோ மோட்சமோ அடைய முடியுமேயல்லாமல் வேறு ஒன்றினாலும் முடியாது என்பதை உணருங்கள் .

(குற்றாலத்தில் சொற்பொழிவு தொடர்ச்சி 4.9.27 குடிஅரசு, 11.9.27 குடிஅரசு.)

குடி அரசு - சொற்பொழிவு - 25.09.1927

Wednesday, 9 February 2022

மதங்கள் என்றைக்கும் மாறக் கூடாதென்று சொல்வதற்கு இடமில்லை

 

மதங்கள் என்றைக்கும் மாறக் கூடாதென்று சொல்வதற்கு இடமில்லை


தலைவரே! தாய்மார்களே! அன்பர்களே!

இன்று என்னை மதம் என்பது பற்றி சில வார்த்தைகள் சொல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. அக்கட்டளையை சிரமேற்கொண்டு என் அறிவிற்கெட்டிய சில முக்கிய விஷயங்களை மட்டும் எடுத்துக் கூற விரும்புகிறேன். அதனை நீங்கள் அப்படியே நம்பி ஒப்புக் கொள்ள வேண்டுமென்றோ, நான் ஓர் பெரிய அறிவாளி, ஆராய்ச்சிக்காரன் என்றோ சொல்ல வரவில்லை. நான் சொல்வதை நன்காராய்ந்து உங்களுக்குச் சரியெனத் தோன்றுவதை எடுத்துக் கொண்டு, சரியல்லவெனத் தோன்றுவதை ஒதுக்கி விடும்படிதான் நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

நான் பெரிய சீர்திருத்தக்காரனும் உபதேசக்காரனுமல்ல. ஆனால் என் அறிவுக்கெட்டிய வரை தீயவைகளாகத் தோன்றுவதைக் கண்டித்து, நல்லவைகளை எடுத்துக் காட்டி பொது ஜன உபயோகமான துறையில் செலவிட வேண்டுமென்பது தான் என் முக்கிய நோக்கமும் விருப்பமுமாகும். என்னுடைய அறிவுக்கு எது தீயதென்றும், எது ஒழிந்துபட்டு மறைந்தொழிய வேண்டுமென்றும் பட்டிருக்கின்றதோ, அதனைப் பல தலைப்புகளின் கீழ் பல விடங்களிலும் எடுத்துச் சொல்லி வருகின்றேனேயன்றி வேறல்ல. அதைத்தான் இங்கும் மதம் என்பதன் பெயரால் நான் உங்கள் முன்னிலையில் சொல்ல வந்திருக்கிறேன்.



நான் ஏன் மதம் என்பதைப் பற்றி பேசி வருகிறேன் என்றால், நான் ஏதோ சிறிது நேரமாயினும் பொது நன்மைக்கென்று செலவிட்டுக் கொண்டு வந்த வரையில் சில விஷயங்கள் நம் நாட்டுக்கு மட்டுமன்றி மனித சமூகத்திற்கே முன்னேற்றத் தடைகளாயிருப்பது மதத்தின் பெயரால் செய்யபடுபவைகள் தான் என்று நான் அபிப்பிராயப்படுகிறபடியால் தான். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மதமிருக்க வேண்டுமென்றும் சொல்லப்படுகிறது. அப்படியானால் அம்மதம் அவன் வாழ்நாளில் உபயோகமான நன்மைகளைச் செய்யக் கூடியதாயிருத்தல் வேண்டியது அவசியம். ஆயினும் நம் நாட்டில் ஒரு மனிதனின் மதம் என்பது அவன் வாழ்நாளில் அவனுக்கு எவ்வளவு உபயோகமில்லாததாயினும் அதன் கற்பனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியதாயிருப்பதைக் கண் கூடாகக் காண்கின்றோம்.

மகமதிய, கிறிஸ்துவ, இந்து, சைவ, வைஷ்ணவ சமயங்களெதுவாயினும் எல்லாம் ஒரே மாதிரி பல நிர்ப்பந்தங்களையுடைய மதங்களாகத் தானிருக்கின்றன. அந்த நிர்ப்பந்தங்களின்படி அந்தந்த மதஸ்தர்கள் நடக்க வேண்டுமென்ற கட்டுப்பாடுகளுமிருக்கின்றன. என்னுடைய அனுபவத்தில் எந்த மதத்தினரைக் கேட்டாலும் இதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்றும், அதற்கு மீறி நடக்கக் கூடாது என்றும், ஏதோ சில நிர்ப்பந்தங்களைச் சொல்லுகின்றார்களேயன்றி அதில் உள்ள ஒழுக்கத்தை பின்பற்றியதென்பது ஒரு சிறிதும் இல்லை.

மனிதன் தன் அறிவிற்கெட்டிய உண்மைப்படி நடக்க வேண்டும் என்று ஒரு மதமும் சொல்வதில்லை. மேலும் அவர்கள் அக்கட்டுப்பாட்டிற்கு மாறாக எண்ணினால் பாவம், பேசினால் மதத் துவேஷம் என்றும் சந்தேக நிவர்த்திக்கு ஏதாவது ஒரு சிறிது முயற்சித்தால் அதை நாஸ்திகமென்றும் சொல்லுகின்றார்கள். இதனால் அறிவின் தன்மைக்கும் இயற்கைக்கும் ஒத்த மாதிரி ஏற்றவாறு நடக்க இடம் கொடுக்கும் படியான மதம் உலகில் மிக அருமையாகத் தானிருக்கிறது. உண்மையில், மதமென்பது என்னவென்பதையும் அதன் அவசியத்தையும் அறிந்திருப்போர் வெகு சிலர்; அது என்னவென்றேயறியாது பழமை என்பதனாலும் முன்னோர்களுடையது என்பதனாலும் பழக்க வழக்கங்களினாலும் கண்மூடித்தனமாகப் பின்பற்றிக் கொண்டுமிருப்பவர்கள் பெரும்பாலோர். பெரும்பாலோருக்கு அவர்கள் அனுசரித்துவரும் கொள்கைகளைப் பற்றியோ அல்லது தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள நிர்பந்தங்களைக் குறித்தோ ஒன்றுமே தெரியாது. ஆனால் அத்தகையோர் “பெரியோர்கள் சொன்னபடி கேட்க வேண்டும். அவர்கள் சென்ற வழி செல்ல வேண்டும். இல்லாவிட்டால் பாவம், தோஷம்” என்று ஏதோ சமாதானம் சொல்லுகின்றார்களேயன்றி அதன் உண்மையை யறியும் விஷயத்தில் ஒரு சிறிதும் முயற்சியில்லாமல் தானிருக்கின்றனர்.

என்ன காரியத்திற்காக மதம் இருக்க வேண்டுமென்று சொல்லப்படுகிறதோ அந்தக் காரியத்திற்காக மதம் உபயோகப்படுவதாய் காணப்படவில்லை. ஒருவரை உனக்கு மனைவி மக்களுண்டா? எவ்வளவு படித்திருக்கிறீர்கள்? என்ன சொத்து சுதந்திரம் இருக்கிறது? என்று விசாரிப்பது போலத்தான் ஒருவனை உன் மதம் என்னவென்று கேட்பதும் ஒரு சொத்தாய் மதிக்கக் கூடியதாயிருக்கின்றது. மதம் என்று சொல்வது எதற்காக? அது எப்போது ஏற்பட்டது? அது ஒரு நிலையாயிருக்க வேண்டுவதா? அல்லது அடிக்கடி மாறக் கூடியதா? அல்லது புதிதாக உண்டாக்கிக் கொள்ளக் கூடியதா! என்பனவற்றை ஆலோசிப்போமாயின் மற்ற தோற்றங்கள் மாறக்கூடியதாயிருப்பது போன்றே மதமும் அறிவிற்கு ஏற்றவாறு மாறக் கூடியதற்கு இடந்தர வேண்டும் என்பது புலனாகும். அன்றியும் ஒருவனுக்கு ஒரு மதமென்பது நித்தியமானதென்றும், அது என்றைக்கும் மாறக்கூடாதென்றும் சொல்வதற்கு இடமில்லை.

மதமானது அவ்வப்போதைய காலதேச வர்த்தமானத்திற்கேற்றவாறும், மக்களின் வாழ்க்கையை எப்படி நடத்துவதென்பதன் படியும், சரீர பலத்தினாலோ புத்தி பலத்தினாலோ அவரவர்கள் புத்திக்கு ஏற்றவாறு பல கொள்கைகளையும் கட்டுப்பாடுகளையும் நிர்ணயித்து அதைத்தான் மக்கள் பின்பற்றி நடக்க வேண்டுமென்றும் கட்டுப்படுத்தி நிர்ப்பந்தித்து வருவதையே தான் இப்போது மதம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கு பல ஆதாரங்களையும் அற்புதங்களையும் சொல்லி விடுகிறார்கள். அவைகள் ஒரு சமயம் அந்தக் காலத்திற்கு தகுந்ததாக ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பினும் இப்போது அவை ஒன்றும் ஒப்புக்கொள்ளக் கூடியவைகளா? என்பதை ஒரு சிறிதும் கவனிப்பதில்லை.

ஒவ்வொரு மதத்திலும் கடவுள், கடவுள் அவதாரம், கடவுள் மகன், கடவுள் மூலமான தூதன் என்று பலவாறு மதத்துடன் கடவுளை இணைத்து சொல்லப்படுகிறது. அக்காலத்து நிலைமையை உத்தேசித்து மக்களுடைய நன்மையை முன்னிட்டு அவ்வாறான பிரமாணங் கற்பனை செய்யப்பட்ட தென்றாலாவது ஏதோ ஒருவாறு ஒப்புக்கொள்ளலாம். அப்படிக்கின்றி கடவுள் அவதாரமாகவோ பிள்ளையாகவோ தோன்றி இதைச் சொன்னார், அதைச் சொன்னார் என்பதும், ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் நாயன்மார்கள் முதலிய பல பெயர்களுடையவர்கள் தோன்றி பல அற்புதங்கள் செய்து காட்டி இதைச் சொன்னார் அதைச் சொன்னார் என்பதும் தான் இவ்வுலகத்திற்குப் பெரிய கஷ்டத்தையும் துன்பத்தையும் தரக் காரணமாயிருப்பதுடன் மக்களை முழு மூடர்களாக்கிக் கொண்டும் வருகின்றது. (கரகோஷம்)

உலக வாழ்வில் மற்றொருவனுக்கு இம்சையின்றி பிறருக்கு எப்படி உபயோகப்படுவது என்பதையேதான் முக்கிய கொள்கையாகக் கொண்டுழைப்பவனுக்கு வேறு மதம் வேண்டுவதில்லை என்பதுடன், தேவகுமாரனும், நபியும், ஆழ்வாரும், ஆச்சாரியார்களும், நாயன்மார்களும், தெய்வீகமும், அற்புதங்களும் வேண்டியதில்லை என்பதே என் முடிவு. அம்மாதிரி தருமத்தையேஅனுபவமாக்கத்தக்க விதமாய் இப்போது போதிக்கத்தக்க மதமெதுவுமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அப்படிக்கு இருப்பதாக இப்போது சொல்ல வருவதெல்லாம் ஏதோ செல்லரித்த ஏட்டை எடுத்துக்கொண்டு வந்து இதோ பார் நீ சொல்வதெல்லாம் இதில் எழுதியிருக்கிறது என்று காட்டப்படுவதன்றி சமூக வாழ்க்கையின் அனுபவத்திலிருக்கின்றதெனச் சொல்லப்படும் மதமோ சமயமோ ஒன்றுமில்லை.

இவ்வளவு மதங்கள் சமயங்கள் இருந்தும் அனுபவத்திற்கும் இயற்கை இன்பத்திற்கும் ஒத்தது எது அவசியமானது எது, என்று கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கின்றதே ஒழிய தாராளமாய் பின்பற்ற ஒரு சமயமும் இடம் கொடுக்கவில்லை. அந்த விதமான ஒரு நிலைமை மனித சமூகத்திற்கு ஏற்பட்டாலொழிய மனித சமூகம் ஒற்றுமையுடனும் அன்புட னும் சுதந்திரத்துடனும் வாழ்வது கஷ்டந்தான். நாளுக்கு நாள் புதிய மதங்கள் உற்பத்தியாவதும்; பழைய மதங்களுக்குப் புதிது புதிதான பாஷியமும் பொருளும் சொல்லிப் பிரசாரங்கள் மிகுந்து கொண்டுமிருக்கின்றனவேயன்றி, மனித சமூகத்தின் அவசியம், தன்மை, கடமை முதலியவை என்னவென்றும் இத்தகைய பாஷியங்களும் மதமும் அவற்றிற்கு ஏற்றவைகளாயிருக்கின்றனவா? யென்றும் ஆலோசிப்பார் யாருமில்லை.

அக்கிராசனர் சொல்லியது போல் ஆயிரக்கணக்கானவர்கள் பல ஆயிரக்கணக்கான கொள்கைகளையும் தர்மங்களையும் எழுதி வைத்திருக்கலாம். அதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. எந்த மனிதனுக்கும் அவசியமெனச் சொல்லும் எக்கொள்கையும் அனுபவத்தில் எளிதாக அனுசரிக்கப்படுவதற்கு ஒத்ததாயிருக்கின்றதோ - அனுசரித்தே தீர வேண்டியதாயிருக்கின்றதோ அதனைத்தான் உத்தமமும் உண்மையுமுள்ள கொள்கையென்று சொல்ல வேண்டும். இல்லாமல், இப்படியிருக்க வேண்டும் அப்படியிருக்க வேண்டுமென்று கட்டுப்பாடுகளும் நிர்ப்பந்தங்களும் மாத்திரம் ஏற்படுத்திக் கொண்டு, அதை சிவன் சொன்னார், விஷ்ணு சொன்னார், கிறிஸ்து சொன்னார், நபி சொன்னார், புத்தர் சொன்னார், ரிஷி சொன்னார், முனி சொன்னார், மனு சொன்னார் என்பதாக சொல்லிக் கொண்டு காரியத்தில் நடைபெற முடியாமல் இருக்கும் மதங்கள் எவற்றினாலும் உலகம் ஒரு நாளும் உய்யப் போவதில்லை.

மனிதனுடைய இயற்கை தத்துவத்திற்கும் அனுபவத்திற்கும் விரோதமானதைப் புகட்டும் எந்த மதத்தையும் சுருட்டிக் கட்டி மடக்கி சமுத்திரத்தில் போட வேண்டியதுதான். புண்ணியம், பாவம், மதம், கொள்கை முதலிய இவற்றின் பெயரால் ஜன சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் கஷ்டங்களும், துன்பங்களும் இவ்வளவு என்று சொல்ல முடியாது. உலகத்தில் அநீதிகளும் மக்களுக்கு விரோதமான காரியங்களும் எவ்வளவு இருக்கக் காண்கிறோமோ அவ்வளவும் மதத்தின் பேராலும் தெய்வத்தின் பேராலும்தான் ஏற்படுகின்றதென்பதை உறுதியாய்ச் சொல்லுவேன். திருட்டுக்கும், விபசாரத்திற்கும், பொய், கொலை, முதலியத் தீத் தொழில்களுக்கும், குடிக்கும், சர்வ சதாகாலமும் மக்களை வஞ்சித்து பிறருடைய உழைப்பினால் சாப்பிட்டுக் கொண்டு சோம்பேறிகளாய் காலங்கழித்துக் கொண்டிருப்பதற்கும் மதங்களும் தெய்வங்களும் சம்மதப்பட்டு இடங் கொடுத்துக் கொண்டிருப்பதாய்ச் சொல்லி புராணங்களும் இதிகாசங்களும் எழுதி வைத்திருப்பதுடன் கடவுளுக்கும் அது இஷ்டந்தான் என்றும், கடவுளும் அவற்றில் ஆசைப்பட்டு நடந்திருப்பதாயும் எழுதி வைக்கப்பட்டு இருக்கின்றன. (கரகோஷமும் நகைப்பும்)

குடிப்பதே சில கடவுள்களுக்கு இன்பம். மற்றும் விபசாரம் திருட்டு முதலிய பல தீச் செயல்கள் செய்வதே சில கடவுளுக்கு விருப்பம். ஏழைகளை வதைத்து அவர்கள் உழைப்பினால் சுகமாக வாழ்வதே சில கடவுளுக்குச் சந்தோஷமென்று மதத்தின் பேரால் பலவாறாக ஆபாசமான கற்பனைகளும் புராண ஆதாரங்களும் வேதங்களுமேற்பட்டிருக்கவில்லையா? மக்களுக்கு உபயோகமற்றதும் இம்மாதிரி இயற்கைக்கு விரோதமானதுமாகிய கடவுளும் மதம் முதலியவைகளும் உலகத்தை விட்டொழியும்போதுதான் மக்களுக்கு சுகமுண்டாகும். மனிதனுக்கும் இத்தகைய சுகத்தைப் பெறுவதற்கான வழியைத் தேடுவதற்கு வேண்டிய தைரியம் வந்தால் தான் அந்த எண்ணமும் உதயமாகும். ஆனால் அந்த எண்ணம் உதயமாகுமுன்பே அந்நெறியிலிருந்து மனிதனை வலைவீசி இழுத்து பாழ்படுத்த பல முட்டுக்கட்டைகளும் நிர்ப்பந்தங்களுமிருக்கின்றன. மனிதன் இம்முயற்சியில் இவற்றிலிருந்து விடுபட வேண்டுமானால் எந்தவிதமான கட்டுப்பாட்டுக்கும் அடங்கியவனாக இருக்கக்கூடாது. எதையும் உடைத்தெறிந்து கலகம் செய்யத் தயாராய் இருக்க வேண்டும்.

மனிதன் தன்னுடைய அயலானுக்கு கஷ்டம் கொடுக்காமலும் எந்த விதத்தில் உதவி செய்யலாம், நாமும் இன்பமாய் வாழலாம் என்ற நோக்கமுடையவனாயும் வாழ வேண்டும். மற்றப்படி சிறு கூட்டங்களின் சுயநன்மைக்காகப் பலவித கட்டுப்பாடுகளையும், நிர்ப்பந்தங்களையும் வைத்துக் கொண்டு மக்களையும் ஏமாற்றித் திரியும் மதங்களையும், கொள்கைகளையும் வெட்டி ஆழப் புதைக்கவேண்டும். ஆதாரங்களை சுட்டுப் பொசுக்கி சமுத்திரத்தில் கரைத்து விட வேண்டும். ( கரகோஷம்)

நான் மதத்தைப் பற்றிப் பேசும்போது சிலருக்கு வருத்தமாகத் தான் இருக்கும். ஏனென்றால் அவர்கள் பார்க்கும் கண், இந்து மதத்தின் கொள்கைகளின் மூலமானதாயும், பிறரை வஞ்சித்து மோசம் செய்வது, இம்சிப்பது முதலான கொள்கைகளின் மூலமாகவும் பார்ப்பதுமாகவிருப்பதனால் தான். யாருக்கு எந்த மதத்தில் பற்று இருப்பினும் அதைக் குறித்து எனக்குக் கவலை இல்லை. ஆனால் அந்த மதத்தினால் நாடு என்ன நன்மை பெற்றது, மனித வர்க்கத்திற்கு என்ன பலனேற்பட்டது என்னும் கேள்வி முக்கியமானதாய் இருக்க வேண்டும். புல்லாகிப் பூண்டாகி புழுவாகி மனிதனாகிப் பிறகு கடவுள் பக்கத்தில் இருப்பவன் என்றும், பலவாறு பரிணாம நிலைகளை (நகைப்பு ) குறித்துச் சோம்பேறிகள் பெருமையாகப் பாடிக்கொண்டு போவதனால் என்ன பயன்? வேண்டுமானால் மூடர்கள் முன்னிலையில் ஆழ்வார்களாகவும் நாயன்மார்களாகவும் வாழலாம். (கரகோஷம்) 

மனிதனோ புல் பூண்டு, புழு மிருக முதலிய ஜீவராசிகளுக்கெல்லாம் மேலான அறிவைப் படைத்துள்ளவனென்று சொல்லப்படுகிறது. ஆனால் அவற்றினிடத்தும் மனித வருக்கத்திற்கு அப்புல் பூண்டு புழு பூச்சிகளை விட அறிவற்ற தன்மையும் துன்பமுமே தொடர்ந்து வரக் காண்கின்றோம். ஒரு சமயம் மனிதனுக்கும் அவற்றிற்குச் சமமான அறிவு இருந்திருந்தால் துக்கம் துக்கமென்ற, உணர்ச்சியில்லாமற் போயிருக்குமல்லவா? மனிதனுடைய உண்மையான நிலையை ஒருவருக்காவது கற்றுக் கொடுக்கக் கூடிய மதம் இல்லை. உள்ளதைக் கொண்டு திருப்தியடையுங்கள், அடுத்தவனுக்கு உபகாரியாய் நன்மை செய்யுங்களென்று எந்த மதமும் காரியத்தில் கற்பிக்கவில்லை. அதனை அறியும் வரை மனிதனும் பூச்சிப் புழுக்களைப் போல் நசுக்குண்டுதான் துன்பத்திலுழன்று கொண்டிருப்பான்.

இந்து மதமென்றாலும் வேறு மற்றெந்த மதமென்றாலும் நாட்டையும் ஜன சமூகத்தையும் பாழ்படுத்த எவ்வளவு, கட்டுப்பாடுகளும் நிர்ப்பந்தங்களும் நிறைந்திருக்கக் கூடுமோ அவ்வளவும் நிறைந்து வழியக் கூடியவைகளாகத் தானிருக்கின்றன. காரிய அளவில் இந்து மதம் என்பதும் அதன் பெயரால் கொள்ளப்படும் கொள்கைகளும் மற்றெல்லா மதங்களைவிட மனிதனை ஏமாற்றிக் கட்டுப்படுத்தி நிர்பந்தங்களுக்குள்ளாக்கக் கூடியவைகளாகத் தானிருக்கின்றன.

கூடியவரை புத்த மதக் கொள்கைகள் ஒரு விதத்தில் உயரிய கருத்தைக் கொண்டதாக இருப்பதாய் சொல்லப்படுகின்றது. மேலும் மற்றெல்லாம் மதங்களைவிட புத்த மதத்தில் கருத்துக்கள் விசாலமாக மனித தர்மத்திற்கும் அனுபவத்திற்கும் ஒத்ததாக விருக்கின்றன என்று சொல்லப் படுகின்றது. இதனை நான் முழு ஆராய்ச்சியினால் சொல்லுவதாகக் கருதி விடக்கூடாது. உலகத்தில் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தைச் சொன்னால் என்ன இது புத்த மதமாயிருக்கிறதே என்று சொல்லப்படுவது இயற்கையாயிருப்பதிலிருந்துதான் இம் மதத்தின் கருத்துக்களை அனுமானித்தேன்.

இன்றைய தினம் இங்கு கூட்டப்பட்டுள்ள மகாநாட்டில் நீங்கள் இப்படி நடக்க வேண்டும். அப்படி நடக்க வேண்டுமென்று கட்டுப்படுத்தும் தீர்மானங்களும் செய்யப்படலாம். அதனாலேயே முடிவான நன்மைகள் விளைந்து விடாது. உலகத்திலுள்ள பெரிய மதங்கள் என்பவை ஏன் மக்களை உயரிய கருத்துக்களை அனுசரித்து வாழ்க்கையிலுய்யுமாறு பக்குவப்படுத்தவில்லை என்னும் கேள்விக்கும் பதில் சொல்லக் கடமைப் பட்டுமிருக்கின்றோம். அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஒத்ததாயுள்ள மதம் என்றால் மக்களுள் பெரும்பாலோரால் ஏன் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால் இதற்கு “எதிரிகளின் சூழ்ச்சிகளினால்தான்” என்று பதில் சொல்லப்பட்டிருக்கின்றது. எல்லா மதத்தினரும் இவ்வாறு தான் சொல்லுகின்றனர். எந்த மதம் மக்களுடைய வாழ்க்கையைக் கைப்பற்றி அவர்களைப் பக்குவப்படுத்தியிருக்கின்றது என்று பார்ப்போமானால் ஒன்றைக் கூடச் சொல்வதற்கில்லை. மதத்தின் பெயரால் செய்யப்படும் காரியங்கள் ஒன்றாவது மக்களை மனிதத் தன்மைக்குத் திருப்புபவைகளாயிருக்கவில்லை. ஆதலால் இம்மாதிரியான மகாநாடுகள் மனிதனை மனிதத் தன்மைக்குத் திருப்புவது என்ற முயற்சிகளிலிறங்கி நிர்ப்பந்தமின்றி அனுபவத்தில் எளிதில் கைக்கொண்டனுசரிக்கத்தக்க - அனுசரித்துத் தீர வேண்டியதான கொள்கைகளை பகுப்பது உசிதமாகும்.

எது மனித தர்மத்திற்கு விரோதமோ எது அறிவுக்கு விரோதமாக முட்டுக்கட்டையாக நிற்கின் றதோ அதை எல்லாம் அழிக்க தைரியமாக முன் வந்து அவ் வேலையில் ஒரு கட்டுப்பாட்டுக்கும் நிர்பந்தத்திற்கும் இடங்கொடாது அவற்றை அழித்து மனிதத் தன்மையைப் பரவச் செய்வதனால்தான் இது சாத்தியமாகும். உலகமும் மனித சமூகமும் சுகமும் சுதந்திரமுமடையக்கூடும். (பெருத்த கரகோஷம்)

இந்து மதமென்பதாக ஒரு மதமில்லை என்பது தான் என் அறிவுக்கு எட்டிய முடிவு. ஆனால் பல மதங்கள் (சைவம், வைணவம் முதலியன) சேர்ந்தது இந்து மதமென்று சிலர் சொல்லுகின்றனர். இந்து மதமென்பதில் சைவம், வைணவமாகிய இத்தியாதி மதங்கள் சேர்ந்த தொடர்பெனச் சிலர் சமாதானம் கூறினாலும் அவை எவ்வித உண்மைக்கும் ஒத்ததல்லவென்பது தான் என் அபிப்பிராயம். இந்து மதம் என்பதில் சைவம், வைணவம் என்றும் இரண்டு சமயமும் வெறும் புரட்டையே அஸ்திவாரமாகக் கொண்டு கட்டப்பட்டது. மகமதிய மதமும், கிறிஸ்துவ மதமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏற்பட்டதென்றும், அதனை உண்டாக்கியவரைக் குறித்தும், கொள்கைகளைப் பற்றியும் சில ஆதாரங்களுமிருப்பதாகச் சொல்லப் படுகின்றது. ஆனால் சைவம், வைணவம் முதலிய மதங்கள் சேர்ந்த தொடர்பான இந்து மதமென்பது எக்காலத்தில் எப்படி ஏற்பட்டதென்ற அஸ்திவாரம் குறிப்பிடுவதற்கில்லாமலிருக்கின்றது. இம்மதங்களென்பது ஜனங்கள் அறியாமை காரணமாக வளர்ந்து கொண்டு இந்நாட்டினரை ஒன்றுபடுத்துவதற் கிடமில்லாமலிருக்கின்றது.

நானும் கூடியவரை அந்தந்த மதத்தில் சம்பந்தப்பட்டவர்கள் சொல்லும் சமாதானங்களையும் அவர்கள் அபிப்பிராயங்களையும் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். மதங்களால் ஒரு பெரிய சமூகம் சிதறுண்டு பல கஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் இலக்காகியிருக்கின்றது. மதங்கள் என்ற பித்தலாட்டங்களும் சமயங்கள் என்ற புரட்டுகளும் மக்களை அந்தகாரத்தில் ஆழ்த்தி வருகின்றன. பெரும்பகுதியான மக்களின் உன்னத நாகரீகமும் செல்வ வளர்ச்சியும் நிறைந்த நாட்டு மக்களை மக்களெனச் சொல்ல முடி யாது மாக்களாக்கியிருப்பதும் இம்மதமென்ற புரட்டுக்கள்தான். (கரகோஷம்)

பெரும் இடையூறுகளை எளிதில் சொல்லமுடியாதாயினும் சிறுமையாகவிருக்கும் தடைகளைச் சீக்கிரத்திலேயே ஒழிக்க முயல வேண்டும். “மகாத்மா” காந்தி என்பவரும் மக்களைச் சமத்துவப்படுத்தி சகோதரத்துவத்தை நிலைநாட்ட ஊரெல்லாம் சுற்றுப் பிரயாணம் செய்ய வந்தவர் கடைசியில் விலங்கைத் தறித்து குட்டையிலடைத்து விட்டதுபோல் செய்து வைத்தார். (கரகோஷம்) அவருடைய சமீப மாறுதல்களால் அவர் உலகத்திற்கு பெரும் தீங்கிழைத்திருப்பது புலனாகும்.

ராமானுஜர் சமத்துவத்திற்காக பாடுபட்டதாகச் சொல்லப்பட்டாலும் அவர் மதம் இப்போது வித்தியாசமில்லாதவர்களுக்குள்ளும் வித்தியாசத்தைப் புகுத்தி விட்டது. (நகைப்பு) சங்கராச்சாரியார் மனிதனுக்கு மனிதன் பேதமில்லை என்று சொல்லி பெரும் பேதத்தை உண்டாக்கி மக்கள் வாழ்க்கையை பாழ்படுத்தி வைத்தார். இவ்வாறு மற்றும் பல மதத்தலைவர்களும் ஆச்சாரியார்களும் குழப்பத்தில் தான் கொண்டு வந்து விட்டிருக்கின்றனர்.

இந்து மதம் என்பதை இன்னும் பிரித்து பிரித்து நன்காராய்ந்தால் அதன் பெயரால் கஷ்டங்களும் ஆபாசங்களும் மிகுந்து மக்களை மேன்மேலும் கொடுமைகளுக்கும் அவமானத்திற்கும் உட்படுத்தியிருப்பது தான் தெளிவாகக் காண்கின்றன. அதனால் இதற்காக புதிதான கொள்கைகளும் மார்க்கமும், சமயமும் அவசியமில்லை. உள்ள மார்க்கத்தில் எது எது இயற்கைக்கும் அனுபவத்திற்கும் விரோதமாயும் மனிதத் தன்மைக்கு முரணாயுமிருக்கின்றதோ அவற்றை எல்லாம் உடைத்தெறிய வேண்டும். அதற்காக ஒருவன் பிறக்கப் போகிறான் என்பதும் மூட நம்பிக்கையாகும். ஒவ்வொருவரும் அதை உடைத்தெறிய சுதந்திரமுடையவர்கள் என்ற கொள்கை மனித வர்க்கத்தினர் யாவருக்கும் உதிக்க வேண்டும்.

நிற்க மனித வர்க்கத்தில் பாதியான ஸ்திரீ வர்க்கத்தை நம் நாட்டிலும் கேவலமாகத்தான் நடத்தப்பட்டு வருகின்றது. இதைப்பற்றி எல்லா மதமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இயற்கைத் தோற்றத்திலேயே பெண் என்றால் தாழ்ந்தவர்கள் என்ற உணர்ச்சிதான் ஆண் மக்களுக்கு தோன்றுகிறது. பல மதங்களில் பெண் மக்களுக்குச் சுதந்திரமும் உரிமைகளுமளிக்கப்படுவதாகத் தோன்றினாலும் அவர்கள் இன்னும் பழைய அடிமைத்தனத்திலிருந்து விடுபட எந்த ஆண்மகனும் யாரும் சம்மதிப்பதாக காணவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த நிலையாலும் எவ்வித வித்தியாசமும் கற்பிக்கப்பட்டிருக்கவில்லை என்ற தத்துவத்தை மனிதன் உணரும் போதுதான் மனிதத்தன்மை என்பது வெளிப்படக்கூடும். (கரகோஷம்) இயற்கைக்கும் அனுபவத்திற்கும் விரோதமான கட்டுப்பாடுகளை எல்லாம் உடைத்தெறியத்தக்க கொள்கைதான் மனித வர்க்கத்திற்கு அவசியமானதென்று கருதுவதின் மூலம்தான் அவர்கள் ஒரு காலத்தில் அந்நிலைமைக்கு வந்து சேரக் கூடுமென்றும் நம்பிக்கையும் எனக்குப் பூர்ணமாய் ஏற்பட்டிருக்கின்றது. (கரகோஷம்) நான் இது வரை கூறியதில் உங்களுக்குச் சரி எனப் படுவதை ஏற்றுக் கொண்டு தப்பாகத் தோன்றுவதை ஒதுக்கி என் அறியாமைக்கு என்னிடம் பரிதாபப்பட்டு, என்னை மன்னிப்பீர்களென்று கேட்டுக் கொள்ளுகிறேன். (கரகோஷம்)

(குறிப்பு: 07.04.1928 இல் சென்னை சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் லட்சுமி நரசு அவர்களின் தலைமையில் நடந்த தென் இந்திய பவுத்தர்களின் மூன்றாவது மாநாட்டில் மதங்கள் குறித்து ஆற்றிய உரை. குடி அரசு - சொற்பொழிவு - 15.04.1928)

கடவுள், மதம், ஜாதி, புராணம், இதிகாசம்: இருக்க வேண்டிய இடம் குப்பைத் தொட்டி

 
x

கடவுள், மதம், ஜாதி, புராணம், இதிகாசம்: இருக்க வேண்டிய இடம் குப்பைத் தொட்டி


இதுவரை நம்மிடையே நடைபெற்று வந்த நிகழ்ச்சியானது கல்யாணம், விவாகம் என்னும் பெயரால் நடைபெற்று வந்ததோடு, அதன் மூலம் பெண்களை அடிமைப்படுத்தவும், பெண்களை ஆண்களுக்கு நிரந்தர அடிமையாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டதால், மனித ஜீவனில் ஒருபாகமானப் பெண்கள் மனித சமுதாயத்திற்குப் பயன்பட முடியாமல் போய்விட்டனர். நம் மத, சாஸ்திரம், புராணம் யாவும் பெண்களை அடிமைகளாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதேயாகும். இந்த நாட்டிலே பெண்கள் விடுதலைக்காக முதன் முதல் தொண்டாற்றியது சுயமரியாதை இயக்கமேயாகும்.




பழைய முறை என்பவற்றின் அடிப்படை, முதலாவது பெண்களை அடிமையாக்குவது. இரண்டாவது, ஆண்களை அறிவு கொண்டு சிந்திக்கமுடியாமல் அவர்கள் அறிவை முடமாக்கி, அவர்களை மூட நம்பிக்கைக்காரர்களாக்குவது. அடுத்து மூன்றாவதாக, நம் சமுதாயத்தில் சாஸ்திரத்தின் பெயரால் இருந்து வந்த ஜாதி இழிவை நிலைநிறுத்துவதுமாகும். இப்படி மூன்று அடிப்படைகளைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டதே கல்யாணம், விவாகம் என்பதெல்லாமாகும்.

ஒரு பெண் தானாக சுதந்திரம் பெற வேண்டுமானால், விபச்சாரி என்ற பெயரோடுதான் சுதந்திரம் பெற முடியும். பின் அவர்கள் விடுதலைக்காக ஆண்கள்தான் முற்பட வேண்டும். அதற்காக நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால், பெண்கள் 20 வயது வரை படிக்க வேண்டும். படிக்கும் போதே தனது ஜீவனத்திற்காக ஒரு தொழிலையும் கற்றுக் கொள்ள வேண்டும். பெண்களுக்குப் படிப்பும், ஜீவனத்துக்கான தொழிலும் இருந்தால் அந்தப் பெண், தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கருதவே மாட்டாள். ஆணுக்கு அடிமைப் பட்டிருக்கவும் மாட்டாள்.

அடுத்து இரண்டாவது காரியம், மூட நம்பிக்கையை நிலை நிறுத்துவதற்காகவேயாகும். திருமணமென்றால் முகூர்த்தம், நேரம், சகுனம், ஜாதகம், ஜோசியம் பார்ப்பதும், அறிவிற்கும் தேவைக்கும் சற்றும் பொருத்தமற்ற அம்மியைக் கொண்டு வந்து வைப்பதும், பானையை அடுக்குவதும், ஓமம் வளர்ப்பதும், மனிதனை மடையனாக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டவையே ஒழிய, அவை வேறு எதற்கும் பயன்படுவது கிடையாது. தாலி கட்டுவது என்பது பெண்களை அடிமை என்பதைக் காட்டுவதற்கும், கணவன் இறந்தால் அதை அறுத்து முண்டச்சி என்பதைக் காட்டிக் கொள்வதற்காகவுமே தவிர, வேறு எதற்காகத் தாலி பயன்படுகிறது என்பதை சிந்திக்க வேண்டும்.

மூன்றாவதாக, ஜாதி நிலை நிறுத்தப்படுவதற்கு நம் நாட்டில் முக்கிய காரணம், ஜாதியானது தொழிலோடு இணைக்கப்பட்டதாலேயே ஆகும். பரம்பரைப் பரம்பரையாக அந்தந்த ஜாதியைச் சார்ந்தவன் அந்தந்த ஜாதிக்கு என்று ஏற்பாடு செய்யப்பட்ட அந்தந்த தொழிலைச் செய்து வந்ததால், ஜாதியானது நிலை நிறுத்தப்பட்டு வருகின்றது. இதன் காரணமாகத்தான் ஜாதி காப்பாற்றப்பட வேண்டுமென்பதால்தான் பள்ளிக்கூடம் வைக்காமல் இருந்தனர். பள்ளிக் கூடங்கள்

வைத்தால் மனிதன் அறிவு பெற்று விடுவான். அறிவு பெற்றால் நான் ஏன் தாழ்ந்த ஜாதி? அவன் மட்டும் ஏன் உயர்ந்த ஜாதி? என்று சிந்திக்க ஆரம்பித்துவிடுவான் என்பதோடு, எவனும் தான் தாழ்ந்த ஜாதியாக இருக்க விரும்ப மாட்டான். ஆனதால் அரசாங்கங்கள், பள்ளிக்கூடங்கள் வைக்க முன்வரவில்லை என்பதோடு, மனிதனின் மூடநம்பிக்கை, முட்டாள்தனம் வளரும்படியான காரியங்களையே செய்து வந்தன.

எனக்கு இந்த மருத்துவ சமுதாயத்தோடு 12 வயது முதல் தொடர்பு உண்டு. எனது வீட்டிற்குப் பின்னால் இந்த சமுதாயத்தைச் சார்ந்தவர்களின் வீடுகள் இருந்தன. அங்கிருந்து என்னோடு இரண்டு பையன்கள் பள்ளிக்கூடத்திற்குப் படிக்க வருவார்கள். அவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வரும்போதே வீட்டிலிருந்து ஓலைப் பாயைக் கையில் சுருட்டி எடுத்துக் கொண்டு வருவார்கள். பள்ளிக்கூடத்தில் நாங்கள் எல்லாம் உள்ளே போய் வகுப்பில் உட்காருவோம். அவர்கள் வகுப்புக்கு வெளியே தாழ்வாரத்தில் பாயை விரித்து அதில் உட்கார்ந்து கொள்வார்கள். வாத்தியார் சொல்வது அவர்கள் காதில் விழாது. 8 வருஷம் படித்தால் தங்கள் பெயரை அதுவும் தப்பும் தவறுமாக எழுதவே கற்றுக் கொள்வார்கள்.

பள்ளிக்கூடத்தில் மட்டும் அவர்களுக்கு இந்த நிலையில்லை. டிஸ்ட்ரிக் போர்டு-தாலுக்கா போர்டு மெம்பராக இருந்தாலும் அவர்கள் ஆபீஸ் கட்டடத்திற்கு வெளியேதான் உட்கார வேண்டும். என்ன பேசுகிறார்கள், என்ன தீர்மானம் போடுகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. "மினிட் புக்'கை கொண்டு போய் இங்கு கையெழுத்துப் போடு என்று பியூன் காட்டினால், அந்த இடத்தில் கையெழுத்துப் போடுவார்கள். காங்கிரஸ் காலத்திலும் இந்த நிலைதான். இவர்களுக்காக சுயமரியாதை இயக்கம்தான் போராடி அவர்களுக்கு உரிமை வழங்கச் செய்ததே தவிர, வேறு எவரும் அவர்களின் உரிமைக்காகப் போராடவில்லை. அரசாங்கமும், ஜாதி ஆணவமும் மக்களை முன்னேற முடியாமல் செய்து விட்டன.

நாம் கடவுள், மதம், ஜாதி, புராணம், இதிகாசம் இவற்றையெல்லாம் குப்பைத் தொட்டியில் போட வேண்டும். பழமை, முன்னோர் என்பது பற்றி சிந்திக்கவே கூடாது. நமக்கு முன் நடக்கும் நடப்புகளைப் பார்த்து அறிவிற்கேற்ப நடந்து கொள்ள முன்வர வேண்டும். 

(திருச்சியில் 14.5.1969 அன்று நடைபெற்ற திருமணத்தில் ஆற்றிய உரை)

Sunday, 6 February 2022

செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள் - 2

 

செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள்


ஜாதி வகுப்பு வித்தியாசத்தைக் காட்டும் பட்டங்களையும் சமய வித்தியாசத்தைக் காட்டும் குறிகளையும் விட்டுவிடவேண்டும் என்று செய்த தீர்மானம் நாட்டின் ஒற்றுமைக்கு மிகுதியும் அத்தியாவசியமானது என்பதைப் பற்றி முன் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

இத்தீர்மானத்தில் பொறாமை கொண்ட சில விஷமக்காரர்கள் வகுப்புப் பட்டம் நீக்க வேண்டும் என்கின்றவர்கள் வகுப்பு மகாநாடுகளில் கலந்து கொள்ளலாமா என்கின்ற ஒரு பிரசினையை கிளப்பிவிட்டிருக் கின்றார்கள். இதற்கு நாம் சொல்லும் சமாதானம் என்னவென்றால் ஒவ்வொரு வகுப்பாரும் தங்கள் தங்கள் வகுப்பு மகாநாடுகள் கூட்டி அவற்றில் இவ்விதத் தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றி அவற்றை முதலில் தங்கள் தங்கள் வகுப்புகள் என்பவைகளுக்குள் அமுலுக்குக் கொண்டு வருவதன் மூலம் வகுப்பு வித்தியாசங்களை ஒழியுங்கள் என்றுதான் கேட்கின்றோம். அதற்காகத்தான் வகுப்பு மகாநாடுகள் கூட்டுங்கள் என்கின்றோமே ஒழிய வேறில்லை. உதாரணமாக ஒரு வாணிய வைசிய மகாநாட்டில் நாம் பேசும் போது அவர்களுடைய பூணூலை எடுத்து விடும்படியும் தங்களை வைசியர் கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டாம் என்றே கேட்டுக் கொண்டோம், அது போலவே நாடார் க்ஷத்திரிய வகுப்பார் கூட்டத்தில் பேசும் போதும் தங்களை க்ஷத்திரியர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டாம் என்றும் பூணூலை எடுத்து விடும்படியும் பேசினோம்.

அதுபோலவே நாயுடுமார்கள் மகாநாட்டில் பேசும்போதும் தங்களை க்ஷத்திரியர்கள் என்று சொல்லிக் கொள்வதை விட்டுவிடும்படியே கேட்டுக் கொண்டோம். இம்மாதிரி சிறிதாவது விட்டுவிடவும் செய்தோம். ஆதலால் வகுப்புப் பிரிவுகள் எத்தனை உண்டோ அத்தனை வகுப்பும் மகாநாடுகள் கூட்டி வித்தியாசங்களை ஒழிக்க தீர்மானங்கள் செய்து கொள்ளாவிட்டால் எப்படி இந்தக் கொள்கைகள் ஒவ்வொரு வகுப்புக்குள்ளும் போய்ப் புகுந்து வகுப்பு நோயைத் தீர்க்க முடியும் என்பது நமக்கு விளங்காது. மற்றும் இப்போது ஆதிதிராவிட மகாநாடுகள் கூடுவதால் எவ்வளவு தூரம் அச் சமூகத்திற்கு உணர்ச்சி வந்து அவைகள் முன்னேற இடமேற் பட்டிருக் கின்றது என்பதை கவனித்தால் வகுப்பு மகாநாட்டின் அவசியம் விளங்கும். ஒரு பெரும் சமூகம் ஒற்றுமையையும் சீர்திருத்தமும் பெற வேண்டுமானால் அதிலுள்ள பிரிவுகளான ஒவ்வொரு சிறு சமூகமும் தங்களுக்குள் முதலில் ஒற்றுமையையும் சீர்திருத்தத்தையும் பெற்றாக வேண்டியது மிகவும் அவசியமாகும். இந்த உண்மை உலகத்திலுள்ள எந்த யோக்கியனுக்கும் விளங்கியே தீரும்.

உதாரணமாக தென்னாட்டில் பார்ப்பனரல்லாதார் மகாநாடு கூட்டப் படாமல் இருந்திருக்குமானால் பார்ப்பனர்களின் கொடுமை நாடு அறிந்து, அதிலிருந்து விடுதலையடைய மார்க்கம் ஏற்பட்டிருக்க முடிந்தே இருக்காது என்று சொல்லுவோம். அன்றியும் வகுப்பு மகாநாடுகள் அடிக்கடி கூடுவதால் தாங்கள் மற்ற வகுப்பார்களால் அடையும் துன்பமும் அதிலிருந்து விடுபட்டு மற்ற வகுப்பார்களும் தாங்களும் ஒற்றுமையாயிருக்க மார்க்கமும் அவசி யமும் தானாகவே ஏற்பட்டுவிடும். எனவே வகுப்பு வித்தியாசங்களால் வயிறு வளர்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் சுயநலச் சோம்பேரிகளைத் தவிர பொதுநலத்தில் கருத்துள்ள மற்ற யாவருக்கும் வகுப்பு வித்தியாசங் களை ஒழித்து ஒற்றுமைப்பட வகுப்பு மகாநாடுகள் கூட்டப்படுவது எந்த விதத்திலும் ஆபத்தாய் தோன்றாது.

ஜாதி பேதத்தை ஆதரிக்கின்ற மதம், வேதம், சாஸ்திரம், புராணம் ஆகியவைகளைப் பின்பற்றக் கூடாது என்பது.
இந்தத் தீர்மானத்தை எந்தவிதமான தீர்மானத்தைக் கொண்டும் யாரும் எதிர்க்க முடியாதானாலும் சமயத்தின் பேராலும் வேத சாஸ்திர புராணத்தின் பேராலும் தங்களது நித்திய வயிறு வளர்ப்பு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கும் இத் தீர்மானம் ஒருக்காலும் திருப்தியை அளிக்காது என்பதோடு அவர்களது சூக்ஷி விஷமப் பிரசாரம் இரகசியமாய் நடந்துதான் தீரும்.

இத்தீர்மானத்தின் கருத்துப்படி பார்த்தால் முக்கியமாக இந்து மதக் கொள்கைகளையும் அவற்றின் ஆதாரங்களையும் பின்பற்றக் கூடாது என்பதாகக் காணப்படுகின்றது என்றுதான் ஒவ்வொருவருக்கும் தோன்றும். ஏனெனில் உலகத்திலுள்ள எல்லா முக்கிய மதங்களைவிட இந்து மதம் என்பதிலும் அதன் ஆதாரங்கள் என்பதான வேத சாஸ்திர புராணங்களில் தான் ஜாதி வகுப்பு பிரிவும் பிறவியில் உயர்வு தாழ்வு உண்டு என்பதையும் அதிகமாக வலியுறுத்தப்படுகின்றது. ஆதலால் இத்தீர்மானம் மிகுதியும் இவற்றை குறை கொள்வதாக நினைப்பதில் அதிசயமில்லை. ஆனால் நம்மைப் பொறுத்தவரை உண்மையில் இந்து மதம் என்பதாக ஒரு மதமே இல்லை என்றும், இருப்பதாக கருதிக் கொண்டிருப்பதும் அதன் ஆதாரங்கள் என்று சொல்லப்படுவதும் ஒரு சிலருடைய சுயநலத்தாலும் நமது மக்களு டைய அறியாமையினாலும் வழங்கி வரும் ஒரு வெறும் மயக்க உணர்ச்சியே தவிர வேறில்லை என்றும், அம்மயக்க உணர்ச்சி ஒழியவே இந்துமதமும் அதன் ஆதாரங்களும் ஒழிய வேண்டுமென்கின்றோமே ஒழிய வேறில்லை.

உதாரணமாக இந்துமதம் என்பதாக ஒருமதம் இல்லை என்று சொல்லி வந்திருக்கும் புஸ்தகங்களுக்கும் விஷயங்களுக்கும் இதுவரை யாரும் பதில் சொன்னவர்களே கிடையாது. ஞான சூரியன் புஸ்தகத்தில் காணப்படுவது போல ஒரு நாட்டின் இழி மக்களுக்கு அந்நாட்டு பாஷையில் சொல்லப்பட்ட ஒரு இழிவான பெயரே இந்து என்பது.
அப்பெயர் பெரும்பாலும் மகமதியர்களால் தங்கள் மதஸ்தர்கள் அல்லது தங்கள் நாட்டவர்கள் அல்லாத இந்தியா நாட்டவர்களுக்கு அளிக்கப் பட்டது. எப்படி ஐரோப்பியர்கள் நம்மைச் சுதேசிகள் என்று கூப்பிடு கிறார்களோ அதுபோலவே மகமதியர்கள் நம்மைச் சுதேசிகள் என்று கூப்பிடு வதற்கு பதிலாக இந்தியன் என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் சொல்லுவது போல இந்தி, அரபி, உருது முதலிய பாஷைகளில் இந்து என்று சொல்லி அழைத்தார்கள். இந்த நிலையில் இந்திய மக்கள் எல்லோரையும் குறிப்பிட வேறு பெயர் சமயத்தின் பேரிலோ நாட்டின் பேரிலோ ஜாதியின் பேரிலோ ஒரு குறிப்பும் இல்லாதிருந்ததால் இந்து என்கின்ற பெயரே எல்லோரையும் சேர்ப்பதற்கு ஒரு பொதுப் பெயராகவும் ஏற்பட்டதோடு ஆரியர்கள் கொள்கைகளுக்கே இந்து சமயம் என்னும் பெயர் தரப்பட்டு அது இந்தியர் கள் எல்லோர்கள் தலையிலுமே சுமத்தப்பட்டுவிட்டது. உதாரணமாக இந்து மதம் என்கின்ற வார்த்தை உச்சரிப்பு கூட சுமார் ஒரு 400, 500 வருஷங்க ளுக்கு முன்னால் இருந்ததாக எண்ணுவதற்கு ஒரு ஆதாரத்தையும் காணோம். சைவம் என்கின்ற பெயரும் சிவன் என்றால் அன்பு என்கிற வியாக்கியானமும் கூட ஆரியக் கொள்கைகளை சிறப்பாகவே ஆபாசங் களையும் வேள்வி கொடுமைகளையும் முறையே வெளியாக்கியும் அழிக்கவும் வந்த புத்த இயக்கத்தை எதிர்த்து அவரது கொள்கையை ஒழிக்கவே சைவம் என்பதாக ஒன்று கற்பிக்கப்பட்டதே தவிர மற்றப்படி அச்சைவம் என்பதற்கும் அதன் கொள்கைகளும் அதில் காணப்படும் பல்வேறு கடவுள்களுக்கும் தமிழ்நாட்டிற்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எவ்விதச் சம்மந்தமும் இருப்பதாகவோ இதுவரையெவ்வித ஆதாரமும் வெளிப்படுத்தப்படவில்லை. நாளாக நாளாக சைவ ஆரியக் கொள்கை கொண்ட சமயம் தமிழ் மக்களுக்குப் பொருத்தமில்லாமல் போவதை அறிந்த சில தமிழர்கள் ஆரியர் சைவ சமயம் என்பது வேறு தமிழர் சைவ சமயம் என்பது வேறு என்று பிரித்து ஆரியக் கொள்கைகளை கண்டித்து ஒதுக்கி அதற்கு பதிலாகத் தமிழ் மக்களுக்கு பொருத்தமானது என்பதாக சிலவற்றை தாங்களே நினைத்து, வேறு சில கொள்கைகளையும் வியாக்கியானங் களையும் புகுத்தித் தமிழ்ச் சிவன், தமிழ்வேதம், தமிழ்க் கடவுள் என்பதாக வெள்ளரிக்காய்க்கு பூண் போடுவது போல் இழுத்துப் பிடித்துக் கொண்டு வருகின்றார்கள். அன்றியும் சைவ சமயத்திற்கு ஜாதி மத வகுப்பு பேதங்கள் கிடையாது என்று சொல்லி சமரசத்தைப் பற்றி பேசுவதிலும் குறைவில்லை. ஆனால் உட்புகுந்து பார்த்தால் சமயாச்சாரிகள் எல்லோருக்கும் ஜாதி உண்டு, இது மாத்திரமல்ல. சைவக் கடவுள்கள் எடுத்த மனித ரூபங்கள் எல்லாவற் றிற்கும் ஜாதி உண்டு. இதுமாத்திரமல்ல. சைவ புராணங்கள் எல்லாவற்றிலும் அவற்றை செய்தவர்கள், செய்யப்பட்டவர்கள் உள்பட ஜாதி உண்டு. எனவே சைவ சமயம் ஜாதிகள் ஏற்பட்டதற்கு பின்பு உண்டானதென்றும் அதுவும் ஜாதி மத பேதங்களை ஒழிக்கப் புறப்பட்ட பவுத்த சமண கொள்கை களுக்குப்பின் உண்டானதென்றும் சொல்லித் தீர வேண்டியிருக்கின்றது. அது போலவே வைணவ சமய மென்பதும். அது போலவே ஆரியக் கொள்கைகள் நாட்டில் பெரும்பாலோரால் வெறுக்கப் பட்ட காலத்தில் அதனுடைய அடிப்படைகளை மாத்திரம் நிறுத்திக் கொண்டு சற்று திருத்தப்பட்ட கொள்கைகளை வைத்து வெளியாக்கப்பட்ட சமயமாகும். ஆனாலும் அதுவும் வார்த்தை அளவில் சில நல்ல கருத்துக்கள் சொல்லப் பட்டாலும் வைணவப் புராணங்களும் கடவுள்களும் ஆச்சாரியார்களும் ஆழ்வார் களும் சகலமும் ஜாதி வித்தியாசம் கற்பிக்கக் கூடியதாகவே தான் இருந்து வருகின்றது.

இச்சமயத்தைச் சேர்ந்த சில பெரியார்கள் என்பவர்கள் மாத்திரம் ஜாதி வித்தியாசமில்லை என்று சொன்னதாகக் காணப்பட்டாலும் அதற்கும் பல நிபந்தனைகள் சொல்லப்பட்டிருப்பதையும் காணாமல் இருக்க முடியாது. எனவே ஜாதி வித்தியாசம் இயற்கை என்பதும் அதை ஒழிப்பதற்கு நிபந்தனைகள் வேண்டியிருப்பதால் அவ்விரு சமயங்களும் சமரசம் செயற்கை என்றும் விளங்குகின்றது.

குடி அரசு – தலையங்கம் – 03.03.1929

செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள்

 

செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள்

இரண்டு மூன்று மாத காலமாய் தென்னிந்தியா முழுவதும் ஒரே பேச்சாயிருந்த முதலாவது சுயமரியாதை மாகாண மகாநாடு செங்கற்பட்டில் இம்மாதம் 17,18ஆம் தேதிகளில் வெகுவிமரிசையாகவும் மிக்க ஆடம்பர மாகவும் கூடி பல தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு கலைந்துவிட்டது. வெகு சொற்ப நாட்களுக்குள்ளாகவே செங்கல்பட்டில் இந்த மாகாண மகாநாடு நடத்த தீர்மானித்ததால் போதுமான சாவகாசமில்லாதிருந்தும்கூட செங்கற்பட்டு ஜில்லா போர்டு தலைவர் ராவ்பகதூர் கே.கிருஷ்ணசாமி யவர்கள் முயற்சியாலும் செங்கற்பட்டு சேர்மன் திரு.வேதாசலனாரவர்கள் ஊக்கத்தாலும் செங்கற்பட்டு பிரபுவும் ஜமீன்தாரருமான அப்பாசாமி வள்ளலாரின் வள்ளல் தன்மையாலும் ‘திராவிடன்’ பத்திராதிபர் திரு. கண்ணப்பரின் இடையறா உழைப்பாலும் மற்றும் அநேக கனதனவான்களின் உதவியாலும் தென்னிந்தியாவில் இதுவரை எங்கும் நடந்திராத மகாநாடு போல் இம்மகாநாடு நடந்தேறிவிட்டதும் மகாநாட்டின் பிரதிநிதிகளிலும் இதுவரை எந்த மகாநாட்டிலும் கூடாதமாதிரி எல்லா தரத்தவர்களும் ஏராளமாக வந்து கூடியிருந்ததும் குறிப்பிடத்தக்கதேயாகும்.


முதலாவதாக வைதீகர்கள் கூட்டமும் இரண்டாவதாக பண்டிதர்கள் கூட்டமும் மூன்றாவதாக ராஜாக்கள், மந்திரிகள், ஜமீன்தார்கள், உத்தியோ கஸ்தர்கள், ஆங்கிலம் படித்தவர்கள், செல்வந்தர்கள், மிராசுதாரர்கள், வியாபாரிகள் முதலியவர்களின் கூட்டமும் எதிர்பாராத அளவில் விஜயம் செய்திருந்தது மிகவும் குறிப்பிடத்தகுந்ததாகும். மற்றபடி பெண்மணிகள், தொழிலாளர்கள், ஏழைமக்கள், தாழ்த்தப்பட்டவர்கள், கொடுமை செய்யப்பட்டவர்கள் ஆகியவர்கள் மற்ற எல்லாரையும் விட அதிகமாகக் கூடியிருந்ததாலும் அவர்களே மகாநாட்டுக்குச் சொந்தக்காரர்களானதினால் அவர்கள் வந்திருந்ததில் நாம் ஒன்றும் அதிசயப்படுவதற்கில்லை. எனவே இம்மாதிரி குறிப்பிடத்தகுந்த அளவு மகாநாட்டின் பெருமைகள் ஒரு புறமிருக்க மகாநாட்டின் தீர்மானங்களைப் பற்றிச் சிறிது கவனிப்போம்.

இம்மகாநாட்டில் சுமார் இருபது தீர்மானங்கள் வரை நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. அவைகளில் சைமன் கமிஷன் பகிஷ்காரம் கூடாது என்றும் நேரு கமிட்டி ரிப்போர்ட்டை பகிஷ்கரிக்க வேண்டும் என்றும் செய்யப்பட்ட தீர்மானங்களைப் பற்றி அரசியல் துறையில் இருப்பவர்கள் என்பவர்களில் ஒரு சிறு சாரருக்கு அபிப்ராய பேதமிருக்கலாம். அதற்கு நம்முடைய சமாதானம் என்ன வென்றால், முதலாவதாக நமது சுயமரியாதை இயக்கத்தில் அரசியல் நிர்வாக சம்மந்தமான சீர்திருத்த விஷயங்களைப் பற்றிய பேச்சுக்களுக்கு இடமில்லை என்பது யாவரும் அறிந்ததேயாகும். ஆனால் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளும் திட்டங்களும் நிறை வேற்றப்படும்போது ஜனங்களின் உதவியை எப்படி எதிர்பார்க்க வேண்டி யிருக்கின்றதோ அதுபோலவே அரசாங்க உதவியையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. ஆதலால் அந்த அளவுக்கு அரசியல் தீர்மானம் இருந்துதான் தீர வேண்டியிருக்கின்றது. இன்றைக்கும் சுயமரியா தைக் கொள்கைகளில் அநேக விஷயங்களை நிறைவேற்ற வொட்டாமல் செய்ய நமது எதிரிகள் அரசாங்கத்தின் துணையை எதிர்பார்க்கின்றதை நாம் பார்க்கின்றோம். அநேக விஷயங்கள் அரசாங்க சட்டத்தின் மூலம் செய்யப் படவேண்டியிருக்கின்றதையும் உணர்ந்து அவைகளுக்கு சட்டசபைகளின் மூலம் சட்டம் செய்ய முயன்று கொண்டுமிருக்கின்றோம்.

உதாரணமாக, ஆண்களுக்கொரு சட்டம், பெண்களுக்கொரு சட்டம் என்பதாகவும், பார்ப்பனருக்கொரு சட்டம், பார்ப்பனரல்லாதாருக்கொரு சட்டம் என்பதாகவும் உயர்ந்த சாதி என்பவர்களுக்கொரு சட்டம், தாழ்ந்த சாதி (தீண்டப்படாதவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டவர்கள்) என்பவர் களுக்கொரு சட்டம் என்பதாகவும் இருந்து வருவதையும் அவற்றை நாம் தினமும் அனுபவித்து வருவதையும் மாற்றி எல்லோருக்கும் சமமான நீதி ஏற்படுத்த வேண்டுமானால், நமக்குள்ளாகவே நாம் செய்து கொள்ளும் படியாக எந்தக்காரியம் செய்தாலும் சரி, எந்தத் தீர்மானம் செய்தாலும் சரி, அவைகளினால் நமது லட்சியத்தை நிறைவேற்ற முடிவதில்லை என்பதும், அவைகளுக்குக் கண்டிப்பாய் அரசாங்கத்தின் மூலம் பழய சட்டங்களை மாற்றி புதிய சட்டங்கள் செய்தே தீரவேண்டும் என்பதும் யாராலும் மறுக்கப் படமுடியாத உண்மைகளாகும். அல்லாமலும், அவைகளில் அநேகவற்றிற்கு சட்டம் செய்யக் கூட நம்மவர்கள் ஏகமனதாய் ஒப்புக் கொள்வதாயிருந் தாலும்கூட முதலில் அரசாங்க அனுமதியையும் பெற வேண்டியதான நிபந்தனைகளும் இருக்கின்றன.

இஃதொருபுறமிருக்க, அரசாங்கம் எல்லா மக்களுக்கும் பொதுச் சொத்து என்பதையும் அரசாங்க உத்தியோகங்களும் பதவிகளும் எல்லோ ருக்கும் பொதுச் சொத்து என்பதையும் அதுபோலவே அரசாங்க வரிப் பணமும் எல்லா மக்களுக்கும் பொதுச் சொத்து என்பதையும் யாராவது மறுக்க முடியுமா? அது போலவே அப்பணத்திலிருந்து செலவு செய்யப்படும் ஒவ்வொரு காரியமும் எல்லாருக்கும் பொது என்பதையும் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். எனவே அப்பொதுக் காரியங்கள் உரிமைகள் எல்லாருக்கும் சமமாய் அனுபவிக்க சம சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டு மல்லவா. ஆதலால் இதற்கு நாம் அரசாங்க உதவி எதிர்பார்க்காமலிருக்க முடியுமா? என்பதை யோசித்துப் பார்க்க விரும்புகின்றோம்.

உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்கும் பொது உரிமைகளில் அதிகமான பங்கை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் மற்றவர் களை முன்னேறவிடாமல் தடுத்து சூழ்ச்சி செய்து முன்னணியில் இருந்து கொண்டிருப்பவர்களுக்கு மாத்திரம் இக்காரியங்களுக்காக அரசாங்கத்தை எதிர்பார்ப்பது என்பது ஒரு சமயம் தங்களது சுயமரியாதைக்குப் பங்கமா யிருப்பதாகக் காணப்படலாமே ஒழிய வெகுகுறைந்த உரிமைகளை அனுபவிப்பவர்களுக்கும் வெகு தாழ்ந்த பதவியில் தாழ்த்தப்பட்டிருப் பவர்களுக்கும் தங்கள் பதவிகளைக் கேட்பதும் விடுதலை பெறமுயற்சிப் பதும் ஒருக்காலும் அவர்களது சுயமரியாதைத் தத்துவத்திற்கு விரோதமானது என்று எவரும் சொல்ல முடியாதென்றே கூறுவோம்.

ஆதலால் இந்தமுறையில் சைமன் கமிஷனிடம் கொடுமைப்படுத்தப் பட்டவர்களும் பிறரால் ஏமாற்றப்பட்டுப் பின்னணியில் தள்ளப்பட்டவர் களும் தங்கள் கஷ்டங்களையும் தேவைகளையும் அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்துவது என்கின்ற முறையில் கமீஷனிடம் எடுத்துச் சொல்வதிலும் சம சுதந்திரமும் சம சந்தர்ப்பமும் ஏற்படுவதற்கு மார்க்க மில்லாத நேரு திட்டம் என்னும் அரசியல் திட்டத்தை சம சுதந்திரமும் சம சந்தர்ப்பமும் இதுவரை அனுபவியாத மக்கள் ஒப்புக் கொள்வதில்லை என்பதிலும் குற்றமொன்றுமில்லையென்றே சொல்லுவோம். ஆகவே இவை அரசியல் நிர்வாக விஷயத்தைச் சேர்ந்த தல்லவென்றும் ஒருசமயம் இவை அரசியல் நிர்வாக விஷயத்தைச் சேர்ந்தவைதான் என்று சொல்லப் படுவதா னாலும், அவை உண்மையான சுயமரியாதைத் தத்துவத்திற்கு தள்ளப்பட முடியாத விஷயமேயாகும் என்றும் சொல்லுவோம்.
நிற்க, மக்கள் பிறவியில் ஜாதி வித்தியாச உயர்வு தாழ்வு கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டுமென்பது. இது இந்நாட்டு மக்களில் பல துறைகளில் உள்ள எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்படுவதானாலும் அதற்கு விரோத மாயுள்ள ஆதார விஷயங்களில் உள்ள பிடிப்பை விட்டுவிட அநேகர் சம்மதியாமல் இருப்பதையும், மற்றொரு புறம் அக்கொடுமைகள் நிலைத் திருக்க மதத்தின் பேரால் மகாநாடுகளும் பிரசாரங்களும் அரசாங்கத்தினிடம் தூதுகளும் நடைபெறுவதையும் பார்க்கும்போது நம் நாடு சுலபத்தில் அக்கொடுமைகளை ஒழிக்கத் தயாரில்லை என்பதும் உயர்வு தாழ்வுக் கொடுமையின் அஸ்திவாரம் இன்னதென்று பலருக்குப் புலப்படவில்லை என்பதுமே விளங்குகின்றது. அதுபோலவே வர்ணாசிரமப் பிரிவுப் பாகு பாடுகள் விஷயத்திலும் தேசாபிமானி, மகாத்மா, சீர்திருத்தக்காரர் என்பவர் கள் முதல் கொண்டு அவற்றை ஆதரிப்பதும் அதற்காதாரமான மதம், வேதம் முதலியவற்றைப் பற்றிப் பிரசாரம் செய்வதும், அவற்றிற்கு வேறு வியாக்கியானங்கள் செய்வதுமான நிலையிலேயே இன்னும் இருப்பதை சற்று கூர்ந்து பார்த்தால் இது சம்மந்தமாக மகாநாட்டில் செய்யப்பட்ட தீர்மானங் களின் அவசியம் யாவருக்கும் நன்றாய் விளங்கும். நிற்க, அடுத்த படியாக,
வகுப்புப் பட்டங்களும் குறிகளும் விடப்படவேண்டும் என்னும் தீர்மானத்தின் அவசியமும் அதுபோலவேதான். எப்படியெனில் மக்களு டைய பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அவர்களது குணம், அறிவு, தன்மை முதலியவைகள் ஒன்றும் தெரியாமலே அவர்களை பிரித்து வேற்றுமையாய் நினைக்கத் தகுந்த மாதிரியில் அர்த்தமற்ற பிரிவினைகளைக் காட்டும் வித்தியாசங்கள் ஒழிந்தாலொழிய நமது நாட்டில் மக்கள் ஒன்று பட்டு ஒரே லக்ஷியத்திற்குழைத்து வாழ முடியாதாகையால் அவ்வித்தியாசங் களைக் காட்டும் பெயர்களும் குறிகளும் ஒழிக்கப்பட வேண்டும் என்பது ஒற்றுமையையும் சமத்துவத்தையும் விரும்பும் யாவராலும் ஒப்புக் கொள்ளப் படத்தக்கதேயாகும். மற்ற தீர்மானங்களைப் பற்றிய கருத்துகள் தொடரும்.

குடி அரசு – தலையங்கம் – 24.02.1929

Wednesday, 2 February 2022

அறிஞர் அண்ணா மறைவு குறித்து தந்தை பெரியார்

 அறிஞர் அண்ணா மறைவு குறித்து தந்தை பெரியார் 


யாருக்கும் கிடைக்காத பெருமை

அண்ணா முடிவெய்திவிட்டார். அண்ணா வாழ்க! அதாவது அண்ணா கொள்கை வாழ்க! நோய் வருவதும், முடி-வெய்துவதும் மனித ஜீவனுக்கு இயற்கையேயாகும். ஆனால், அதற்காக மக்கள் வருந்துவதும், துக்கம் கொண்டாடுவதும் மக்களுக்கு ஒருசம்பிரதாயமே ஆகும். என்றாலும் இவ்விஷயத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் சம்பிரதாயத்தையெல்லாம் தாண்டி மக்களின் உச்சநிலை துக்கக் கொண்டாட்டத்தைப் பெற்றுவிட்டார்.

யானறிந்தவரை, சரித்திரம் கண்டவரை அண்ணா முடிவுக்கு பொதுமக்கள் காட்டிய துக்க கொண்டாட்டத்தில் 4-இல், 8-இல் ஒரு பங்கு அளவுகூட வேறு எவருடைய முடிவுக்கும் காட்டியதான நிகழ்ச்சி கிடையவே கிடையாது. அந்த அளவுக்கு அண்ணா தமிழ் மக்கள் உள்ளத்தில் இடம் பெற்று விட்டார்கள். இது அண்ணாவின் இரண்டாண்டு ஆட்சியால் தமிழர்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சி என்பதோடு இவ்விஷயத்தில் மனித வாழ்வில் வேறு யாருக்கும் கிடைக்க முடியாத பெருமையை அண்ணா அடைந்து விட்டார். எனவே, அண்ணாவின் நற்குண நற்செய்கை; பெருமைக்கு இதற்கு மேல் எடுத்துக்காட்டு காட்டமுடியாது.

-- தந்தைபெரியார் அவர்கள் 4-2-1969 அன்று வானொலியில் ஆற்றிய உரை - "விடுதலை" 5-2-1969




அண்ணாவின் மறைவு தமிழ்நாட்டிற்கு மாபெரும் கஷ்டம் என்றே சொல்லவேண்டும். தமிழ்நாடும், தமிழ்ச் சமுதாயமும் அண்ணா ஆட்சியில் எவ்வளவோ அதிசயமான முன்னேற்றமடையக் காத்திருந்தது. அவரும் பகுத்தறிவுக்கொள்கைகளைப் பரப்பி அதை உருவாக்குவதே தனது கடமை என்று கருதி இருந்தார்.

நான் இந்த (என்னுடைய) மந்திரிசபையையே பெரியாருக்குக் காணிக்கையாக வைத்துவிட்டேன் என்று கூறி இருக்கிறார். அப்படி என்றால் பெரியார் கொள்கைப்படி நான் நடப்பேன் என்று சொன்னதாக நான் கருதுகிறேன்.

அதற்கேற்ப அவர் செய்த அரும்பெரும் காரியங்களில் முக்கியமானது சுயமரியாதைத் திருமண செல்லுபடி சட்டமாகும். அதில் கடவுளுக்கோ, மதத்திற்கோ, சாஸ்திரத்திற்கோ இடமில்லை என்பதாகும். இது தமிழ் நாட்டிற்கு மாத்திரமல்லாமல் உலகத்திற்கே மாபெரும் துணிச்சான காரியம் என்று கருதப்பட்டது.

மற்றும் பொதுப்பணி இடங்களிலுள்ள கடவுள் படங்களை அப்புறப்படுத்திவிட-வேண்டியது என்கின்ற அரசுக் கட்டளை-யானது மிக மிகத் துணிச்சலான சீர்திருத்தமாகும்.

மற்றும் இந்தி மொழி தமிழ்நாட்டுக்கு கட்டாயம் என்பது ஒப்புக்கொள்ள முடியாது என்று சட்டசபை மூலமே தீர்மானம் செய்ததானது தனது பதவி போனாலும் சரியென்று துணிவு கொண்ட காரியமாகும். இவை தவிர உத்தியோகங்களில், பதவிகளில் தமிழர்களின் உரிமையைப் பாதுகாத்ததாகும். இதில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க அதிசயம் என்னவென்றால், இவைகள் செய்யப்பட்ட பிறகும் நாட்டில் எல்லா கட்சியாருடனும் எல்லா மக்களுடனும் மிக்க நேசமாகவும், அன்புக்குரியவராகவும் இருந்து வந்ததாகும்.

அண்ணாவின் குணம் மிக மிக தாட்சண்ய சுபாவமுடையது என்றுதான் சொல்ல வேண்டும். யாரையும் கடிந்து பேசமாட்டார். தன்னால் முடியாத காரியமாய் இருந்தாலும் முடியாது என்று சொல்ல மிகவும் தயங்குவார். நல்ல ஆராய்ச்சி நிபுணர் என்று தான் சொல்ல வேண்டும்.......................

................அதாவது, நான் தி.மு.க.வுக்கு அது தேர்தலில் வெற்றி பெறும்வரை நான் அக்கழகத்திற்குப் படு எதிரியாக இருந்தவன். தேர்தலுக்குப் பிறகு அண்ணா என் எதிர்ப்பை மறந்து, அடியோடு மறந்து மிகப் பெருந்தன்மையோடு நட்பு கொள்ள ஆசைப்பட்டு என்னை அவர் பிரிவதற்கு முன் இருந்த மரியாதையுடன் நண்பராகவே நடத்தினார். அதன் பயனாக எனக்கும், மக்களிடையே அதிக மதிப்பு ஏற்பட்டதுடன், என் அந்தஸ்தும் அதிகமாயிற்று என்றுகூட சொல்லலாம். அதற்கு நான் கடமைப்-பட்டவனாக இருக்கவேண்டியதும் என் கடமையாகிவிட்டது.

இதன் பயன் தி.மு.க.வை என்றென்றும் பகுத்தறிவுக்கழகமாகவே இருக்க உதவும் என்று நினைப்பதோடு அண்ணா என்னிடம் காட்டிய அன்பும், ஆதரவும், அளித்த பெருமையும் தி.மு.க.வுக்குள் எந்தவிதக் கருத்து வேற்றுமையையோ, கட்சி மனப்பான்மையையோ கழகத்திற்குள் புகுத்தவிடாமல் கழகம் பெருமையோடு விளங்கவும், மக்களுக்குத் தொண்டாற்றவும் பயன்படும் என்று உறுதி கொண்டிருக்கின்றேன். அதற்கேற்ற தன்மைகளை, அண்ணா தம்பிமார்களுக்கு ஊட்டியும் இருக்கிறார் என்பதில் அய்யமில்லை.

இப்படிப்பட்ட ஓர் அற்புத குணம் படைத்த அண்ணா முடிவானது தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் பரிகாரம் செய்யமுடியாத நட்டமேயாகும். இப்படிப்பட்ட ஒரு நிலையில் ஏற்பட்ட அண்ணாவின் இந்த முடிவு இந்த நாட்டில் மற்ற எவருக்கும் எளிதில் கிடைக்க முடியாத உயர்தர முடிவாகும். அண்ணா நல்ல பதவியில், நல்வாழ்வில் எல்லா மக்களாலும் கொண்டாடி, புகழ்ந்து பாராட்டி முடிவைப் பற்றி துக்கம் கொண்டாடும்படியான அரியவாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காத வாய்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

மனிதன் தன் வாழ்நாளில் அடைந்த வெற்றிக்கு, மேன்மைக்கு அறிகுறி முடிவின்போது அடையும் புகழ்தான் என்பது எனது கருத்து. அதுபோலவே அண்ணா அடைந்த புகழ் மிகப் பாராட்டுதற்குரியதாகும்.

------------------- தந்தைபெரியார் - "விடுதலை" தலையங்கம் - 3-2-1969


அண்ணாவின் மறைவு தமிழ்நாட்டிற்கு மாபெரும் நஷ்டம் என்றே சொல்ல வேண்டும். தமிழ்நாடும், தமிழர் சமுதாயமும் அண்ணா ஆட்சியில் எவ்வளவோ அதிசயமான முன்னேற்றங்கள் அடையக் காத்திருந்தது. அவரும் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பி அதை உருவாக்குவதே தனது கடமை என்ற கருதி இருந்தார்.

அதற்கேற்ப, அவர் செய்த அரும்பெரும் காரியங்களில் முக்கியமானது, ‘சுயமரியாதைத் திருமணச் செல்லுபடி சட்டம்’ ஆகும். இதில் கடவுளுக்கோ, மதத்திற்கோ, சாத்திர சம்பிரதாயத்திற்கோ இடமில்லை. மற்றும் ‘பொதுப் பணி இடங்களிலுள்ள கடவுள் படங்களை அப்புறப்படுத்த வேண்டியது’ என்ற கட்டளை மிக மிகத் துணிச்சலான சீர்திருத்தமாகும்.
யானறிந்தவரையில், சரித்திரம் கண்டவரை அண்ணா முடிவுக்குப் பொது மக்கள் காட்டிய துக்கத்தில் நாலில் எட்டில் ஒரு பங்கு கூட வேறு எவருக்கம் காட்டியதாக நிகழ்ச்சி கிடையாது. அந்த அளவுக்கு அண்ணா தமிழ் மக்கள் உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டார்கள். இது அண்ணாவின் இரண்டாண்டு ஆட்சியால் தமிழர்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சி என்பதோடு, இவ்விஷயத்தில் மனித வாழ்வில் வேறு யாருக்கும் கிடைக்க முடியாத பெருமையை அண்ணா அடைந்துவிட்டார். எனவே, அண்ணாவின் நற்குண நற்செய்கை பெருமைக்கு இதற்கு மேல் எடுத்துக்காட்டு காட்டமுடியாது.

(பகுத்தறிவு - தந்தை பெரியார் 98வது பிறந்தநாள் மலர்)



Tuesday, 1 February 2022

சுயமரியாதை மகாநாடு - தோழர் பெரியார்

 

சுயமரியாதை மகாநாடு


சுயமரியாதை மாகாண மகாநாடு செங்கல்பட்டில் இந்த வாரம் இன்றைய தினம் நடைபெறுகின்றது. அதைப் பற்றிப் பலவாறாக பழிப்புரை களும் விஷமக் கருத்துக்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. அதாவது அரசாங்கத்தார் ஆதரவில் இம்மகாநாடு நடத்தப்படுவதாகவும் பார்ப்பன துவேஷத்தின் மீது நடத்தப்படுவதாகவும், மற்றும் போல்ஷ்விசம் பரப்ப அவர்கள் உதவிக் கொண்டு நடத்தப்படுவதாகவும், இதைப் பற்றி அரசாங்கத்திற்கும் சிலர் தெரிவித்ததாகவும் சொல்லப்படுவதுடன் சிலர் கவர்னரிடம் தூது சென்றதாகவும் தெரிகின்றது.




அரசாங்கத்தாரும் இவற்றிற்கு காது கொடுத்து சற்று துடிக்கின்றதாகவும் தெரிய வருகின்றது. எப்படி இருந்தாலும் நமக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. நமக்கு வேண்டியது சுயமரியாதை என்பதுதான். உலகத் திலே உயிரையுங் கூட கொடுத்துப் பெற வேண்டியதாக அவ்வளவு மதிப்பும் விலையும் பெறுமானமுள்ளது சுயமரியாதையே ஆகும். என்றாலும் சிலர் தங்களுக்கு அவ்வார்த்தையே பிடிக்கவில்லை என்றும், சிலர் ஜஸ்டிஸ் கக்ஷி இருக்கும் போது சுயமரியாதை இயக்கம் ஒன்று தனியாக எதற்கென்றும் மதத்திலும் மனிதனுடைய நம்பிக்கை உணர்ச்சியிலும் கை வைப்பது தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றும், சுயமரியாதை இயக்கத்தால் நாஸ்திகம் பரவுவதாகவும், அரசியல் கெட்டுப் போவதாகவும், தேசீயம் தடைப்படு வதாகவும் இன்னும் பல மாதிரியாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.
இவற்றிற்கு நமக்குத் தோன்றிய பதில் சொல்ல ஆசைப்படுகின்றோம். ஒரு இயக்கத்திற்கு ஒரு பெயரை எதற்காக இடுவது என்றும் அது காதுக் கினிமையாக விருப்பதற்காகவா அல்லது இயக்கத்தின் தத்துவத்தையும் கொள்கைகளையும் உணர்த்துவதற்காகவா என்று கேட்கின்றோம். ‘சுய மரியாதை இயக்கம் என்றால், சுயமரியாதை இல்லாதவர்களின் இயக்கம் என்று பிறர் கருதமாட்டார்களா’ என்கின்றார்கள். அப்படியானால் நாம் அவர்களை “சன்மார்க்க இயக்கம் என்றால் அது துன்மார்க்கர்களுடைய இயக்கமாகிவிடுமா? ஜீவகாருண்ய இயக்கம் என்றால் அது ஜீவ காருண்யமில்லாத ‘கசாப்புக் கடைக்காரர்கள்’ இயக்கமென்றாகிவிடுமா? சைவ சித்தாந்த இயக்கம் என்பது ‘அசைவர்கள்’ கூட்டமாகிவிடுமா? அது போலவே ஜஸ்டிஸ் இயக்கம் என்பது இன்ஜஸ்டிஸ்காரர்கள் இயக்கம் என்றாகிவிடுமா?” என்று கேட்கின்றோம். ஒரு சமயம் அப்படியே அர்த்த மாகிவிடும் என்று சொல்வதானாலும் கூட சுயமரியாதை இயக்கம் என்பதற்கு பொருள் சுயமரியாதை இல்லாதவர்கள் அதை அடைய ஏற்படுத்திக் கொண்ட இயக்கம் என்பதில் நமக்கு ஆnக்ஷபனை இல்லை என்றே சொல்லுவோம். இதற்கு உதாரணம், முதலாவது சுயமரியாதை இயக்கம் என்கின்ற பெயர்கள் பிடிக்கவில்லை என்று சொல்லுகின்றவர்கள் தங்களையே அதாவது தங்கள் உருவத்தை கண்ணாடியில் பார்த்து ‘உனக்கு சுயமரியாதை இருக்கின்றதா’ என்பதாக ஒரு கேள்வி கேட்டுக் கொண்டு, தனது உருவம், நடை, உடை, குறி, கொள்கை இவைகளை வெளிப்பார்வையிலும் தனது எண்ணம், நம்பிக்கை, தான் நடந்து கொண்டமுறை, நடந்து கொள்ள இருக்கின்ற கருத்து ஆகிய வைகளை உள்ளுக்குள்ளாகவும் தான் கட்டுப்பட்டிருக்கும் ஆக்ஷி, தான் பின்பற்றிவரும் மதம், மத உணர்ச்சி, மதச் சடங்கு, மதக்கொள்கை ஆகிய வைகளை அனுபோகத்தைக் கொண்டும் மற்றும் தங்களைப் பற்றி மற்ற வர்கள் என்ன பேசிக் கொள்ளுகின்றார்கள் என்பதையும் சற்று யோசித்துப் பார்த்தால் எவ்வளவோ மோசமானவர்களாகவும் எவ்வளவோ சுயநலக் காரர்களாகவும் இருப்பவர்களுக்குங்கூட தங்களின் சுயமரியாதையற்ற தன்மை சூரிய வெளிச்சம் போல் விளங்காமற் போகாது என்றே நினைக் கின்றோம்.

மற்றும் ‘ஜஸ்டிஸ் கட்சி இருக்கும்போது இது எதற்கு’ என்பவர்கள், ஜஸ்டிஸ் கட்சியின் மூலம் 10 வருஷ காலமாய் விளைந்து வந்த உணர்ச்சிகளையும் சுயமரியாதைக் கிளர்ச்சியில் இந்த இரண்டு வருஷத்தில் விளைந்த உணர்ச்சியையும் கவனித்துப் பார்க்க வேண்டுகின்றோம். சமீப காலம் வரை ஜஸ்டிஸ் கக்ஷி அரசியலில் மாத்திரம் மிதவாதம் அமிதவாதம் என்கின்ற முறையில் மிதவாதிகளின் கொள்கைகள் என்பனவற்றைப் பின்பற்றிக் கொண்டு பார்ப்பனரிடமிருந்த உத்யோகங்களைப் பிடுங்கி எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுக்கும் வேலையில் மாத்திரம் ஒருவாறு வெற்றிபெற்று வந்ததே ஒழிய மற்ற வகைகளில் தாராளமாய் முன்னேற முடியாதபடி தடைப்படுத்தப்பட்டே வந்திருந்தது. சுருக்கமாகச் சொல்வோ மானால் பார்ப்பனரல்லாதார் என்கின்ற ஒரு குறிப்பிடத்தகுந்த சமூகம் தமிழ் நாட்டில் இருக்கும் சங்கதியை வெளி மாகாணங்களுக்குத் தெரிய முடியாமல் இருந்தது என்றும், கொஞ்சநஞ்சம் தெரிந்தாலும் அது “தேசத்துரோகிகள், முட்டாள்கள், காட்டு மிராண்டிகள்” என்று பிறர் கருதும் படியாகச் செய்து வந்த எதிரிகளை சமாளிக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததும் யாரும் மறுக்க முடியாது. அன்றியும் அரசாங்கத்தாராலும் இது ஒரு தனி வகுப்புவாதக் கட்சியென்று மாத்திரம் மதிக்கப்பட்டு அவர்களால் தங்கள் சுய நலத்திற்காக இது உபயோகப்படுத்தப்பட்டு வருவதாகவே கருதியும் வந்திருந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் இதே ஜஸ்டிஸ் கட்சியை மதித்திருக்கின்றார்கள் என்பதற்கும், அதற்கு எவ்வளவு கட்டுப்பட்டு இருக்கின்றார்கள் என்பதற்கும், இது வெளி மாகாணங்களில் எவ்வளவு மதிக்கப்பட்டிருக்கின்றது என்பதற்கும் இந்த வருஷத்திய அதாவது 27 – 28ஆம் வருஷத்திய இந்தியா கவர்மெண்ட் ரிப்போர்ட்டைப் பார்த்தால் விளங்காமல் போகாது. சமூக விஷயத்திலும் மக்களின் உணர்ச்சி எவ்வளவு முற்போக்கடைந்திருக்கின்றது என்பதற்கும் மதுரை மகாநாடு முதல் இதுவரை நடந்துவந்த பார்ப்பனரல்லாதார் மகாநாட்டு நடவடிக்கைகளையும் தீர்மானங்களையும் கவனிப்பவர்களுக்கு விளங்காமல் போகாது. அரசியலில் ஜஸ்டிஸ் கட்சியை சர்க்கார் தாசர்கள் என்று நமது எதிரிகள் சொல்லி வந்ததை கோயமுத்தூர் தீர்மானத்தின் மூலமாகவும் அதற்குப்பின் அரசாங்கத்தில் ஜஸ்டிஸ் கட்சிக்குள்ள மதிப்பின் மூலமாகவும்தான் பொது ஜனங்களுக்கு பொய்ப்பித்துக் காட்ட முடிந்தது. ஆகவே சுயமரியாதை இயக்கம் ஜஸ்டிஸ் கட்சிக்கு எவ்வளவு ஆதரவைத் தந்திருக்கின்றது என்பதைக் கவனித்தால் எந்த வகையிலும் அது அவசியமில்லாதது என்று சொல்ல முடியவே முடியாது என்று சொல்லுவோம்.

மத விஷயத்தில் பிரவேசிப்பதாய் சொல்லுவது:-
மதம் என்பது மனிதனின் வாழ்க்கை நலக் கூட்டுறவுக்கும் ஒழுக்கத் திற்கும் தேவையானதே ஒழிய மதத்திற்கு மனிதன் தேவையில்லை என்றே சொல்லுவோம். ஆதலால் இப்போது வாழ்க்கை நலக் கூட்டுறவுக்கும் ஒழுக்கத்திற்கும் ஆதாரமான எந்த மதத்தில் அது பிரவேசித்து என்ன கெடுதியைச் செய்தது அல்லது அதனால் என்ன விளைந்தது என்று யாராவது எடுத்துக்காட்ட முடியுமா என்று கேட்கின்றோம். அன்றியும் கூட்டுறவு நலத்திற்கும் ஒழுக்கத்திற்கும் சமரச உணர்ச்சிக்கும் விரோதமாக எது இருந் தாலும் அதை அழிக்க வேண்டுமா வேண்டாமா என்றும் நாம் அவர்களைக் கேட்கின்றோம்.

மனிதனுடைய நம்பிக்கை உணர்ச்சியை கெடுக்கின்றது என்று சொல்லப்படுவது:-
எந்த விஷயத்தையும் மனிதன் தன் அறிவைப் பொருத்து ஒரு விஷயத்தை நம்ப வேண்டுமா அல்லது குருட்டு நம்பிக்கையால் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்று கேட்கின்றோம். அதுபோலவே நாஸ்திகம் என்பதும் அர்த்தமற்ற வார்த்தையேயாகும் என்பதே நமது அபிப்ராயம். கடவுள் உண்டா இல்லையா என்பதைப் பற்றி வாதம் செய்து முடிவு கட்டுவது சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை அல்லவே அல்லவென்பதையும் அதற்காக அனாவசியமாய் நேரம் செலவழிக்காது என்பதையும் பொது ஜனங்கள் உணரவேண்டுகின்றோம். ஆனால் நமது இயக்கக் கொள்கைகளை நடைபெறவொட்டாமல் தடுப்பதற்காக கடவுள் என்பதைக் கொண்டுவந்து தடையாகவோ முட்டுக்கட்டையாகவோ போடச் சூழ்ச்சி செய்தால் அதற்குச் சற்றும் இடம் கொடுக்கமுடியாது என்பது தான் சுயமரியாதை இயக்கத்தின் உறுதியான கொள்கையாகும். அறிவையும் தன்னம்பிக்கையையும் தன் முயற்சியையும் அன்பையும் ஒழுக்கத்தையும் தன்னகத்தில் கொண்ட எந்த சமயத்தினுடையவும் ஒத்துழைப்பை சுயமரியாதை இயக்கம் வலிய வரவேற்கும் என்றும் உறுதி கூறுகின்றோம்.

பின்னும் அரசியல், தேசீயம் ஆகியவற்றிற்கு சுயமரியாதை இயக்கம் தடையாயிருக்கின்றது என்பது:-
மக்களின் சுயமரியாதைக்காகத் தான், மக்கள் மானத்தோடு வாழ்வதற் காகத்தான் அரசாங்கமும் தேசீயமும் வேண்டுமேயொழிய மற்றபடி கேவலம் இவைகள் மனிதன் வயிறுவளர்க்க மாத்திரம் வேண்டியது என்றால் அதற்காக எந்த அரசாங்கமும் அரசியலும் தேசீயமும் கண்டிப்பாய் வேண்டியதில்லை என்றே சொல்லுவோம். இதுவரை நமது நாட்டில் ஏற்பட்டிருந்த ஏற்பட்டி ருக்கின்ற, எந்த அரசியல் இயக்கமாவது தேசீய உணர்ச்சியாவது மக்கள் சுயமரியாதைக்கேற்றதான திட்டங்களுடன் அமைக்கப்பட்டிருந்ததா யென்று அரசியல்வாதிகளையும் தேசீயவாதிகளையும் கேட்கின்றோம்.

எனவே, உண்மையான சுயமரியாதை உணர்ச்சி மக்களுக்குத் தோன்றிவிட்டால், அதுவே அரசியலையும் தேசீயத்தையும் மற்றும் மத இயலையும் தானாகவே சரிப்படுத்திக் கொள்ளும். அப்போது சுயமரியாதை வேறு, அரசியல் வேறு, தேசீயம் வேறு, மதஇயல் வேறு, ஒழுக்க இயல் வேறு, அன்பு இயல் வேறு என்கின்ற பாகுபாடுகளும் பிரிவுகளும் கண்டிப்பாய் மறைந்தோடி விடும்.

உதாரணமாக, நமக்கு மேலானதும் கீழானதுமான ஒரு வகுப்பு இருக்கக் கூடாது என்று சொன்னால் அந்த வார்த்தையிலேயே நமக்கு மேலானதாக ஒரு அரசாங்கமும் ஆட்சியும் இருக்கக் கூடாது என்பது தானாக உதயமாகிவிடும். அதுபோலவே நமக்கு மேலாகவோ கீழாகவோ ஒரு நாடு இருக்கக் கூடாது என்பதும் தோன்றிவிடும். பொதுவாக சுய மரியாதை என்கின்ற ஒரு இஞ்சினை பலப்படுத்தி சரியாக ஓடத்தகுந்த சக்தியை உண்டாக்கிவைத்து விட்டால் பிறகு அதில் எந்த இயந்திரத்தை (மிஷினை) கொண்டு வந்து அத்தோடு இணைத்து தோல்பட்டையை மாட்டிவிட்டாலும் அது தானாகவே ஓடும். அது இன்னவிதமான இயந்திரமாகத்தான் இருக்க வேண்டும் என்கின்ற கவலை யாருக்கும் வேண்டியதில்லை என்றே சொல்லுகின்றோம். மற்றபடி எல்லா உணர்ச்சிகளையும் விட சுயமரியாதை உணர்ச்சியே மேலானதும் மதிக்கத் தகுந்ததுமாகும் என்பதின் தத்துவத்தை உணர்ந்தவர்களுக்கு இந்த இயக்கத்தில் உண்மையான சந்தேகமே தோன்ற இடம் இருக்காது. அது இன்றைய தினம் வேண்டுமானால் ஏதோ ஒரு சிறு வகுப்பாருடன் போராடத் தோன்றியதாகத் தோன்றலாம். இதுவே அல்ல அதன் லட்சியம். ஒரு இயந்திரத்தை சுழற்றும்போது முதலில் சுற்றும் சிறுவேகம் போல் இன்று ஒரு சிறு வகுப்பார் உணர்ச்சியோடு போராடுவதாகக் காணப்படுவது. மற்றபடி பின்னால் அது உலகத்தையே ஒன்றுபடுத்த உலக மக்களையே ஒரு குடும்ப சகோதரர்களாகச் செய்யும் முயற்சியின் போதுதான் அதன் உண்மைச் சக்தியும் பெருமையும் வெளியாகும்.

அன்றியும் இது கிளம்பிவிட்டால் யாராலும் இதை அழிக்கவோ அல்லது சற்றாவது அடக்கி வைக்கவோ கண்டிப்பாய் முடியாது என்பதுடன் அடிக்க அடிக்க எழும்பும் பந்துபோல் எதிர்க்க எதிர்க்க வளர்ந்து கொண்டே போகும் சக்தி உடையது என்பதே நமது உறுதி. அன்றியும் எந்த விதத்திலும் எல்லோரும் எவ்வித அபிப்ராயமுடையவர்களும் இது இன்றைக் கில்லாவிட்டாலும் நாளைக்காவது சேர்ந்துதான் ஆக வேண்டும் என்பதுவும் நமது பலமான உறுதியாகும். அன்றியும் இவ்வியக்கம் ஒவ்வொன்றையும் பெரிதும் வேண்டாம் என்று சொல்லும் விரக்தியைப் பற்றி இருக்கின்றதே ஒழிய, வேண்டும் என்று சொல்லும் படியான ஆசையைப் பற்றவில்லை. ஆதலால் இது யாரும் ஏமாற்றமடைவதற்கு இடமேயில்லை. அன்றியும் இதற்குள் போட்டிகளுக்கும் இடமில்லை.

மற்றபடி இதைப்பற்றி சர்க்கார் எப்படி நினைத்துக் கொண்டாலும் நமக்கு அதைப்பற்றி சற்றும் கவலையில்லை. உலக வாழ்க்கையில் இறங்கி ஆசையிலீடுபட்டு உழலும் சம்சாரவாளிகளிடமிருந்து நமக்கு யாதொரு உதவியும் ஒத்துழைப்பும் தேவையில்லாததாலும், பெரிதும் பரிசுத்தமானதும் சுயநலமற்றதும் எதற்கும் எவ்வித தியாகத்திற்கும் தயாராயிருக்கும் இளங்காளைகளிடத்திலும் இளம் கன்னிகைகளிடத்திலும் திக்கற்றவர் களிடத்திலும் நமது இயக்கத்திற்கு பெரிதும் உதவி எதிர்பார்க்கின்ற படியாலும் அவர்களும் தாராளமாய் உதவி அளிக்கத் தயாராய் மேல்விழுந்து வருவதாலும் நாமும் இதன் முடிவைப் பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் கடமையையே பின்பற்றிக் கொண்டிருப்பதாலும் இவ்வியக்கத்தின் மூலம் எவ்வித நஷ்டமாவது கஷ்டமாவது அடைய வேண்டி வருமோ என்கின்ற எண்ணமே சிறிதும் கொள்ளாமல் இருக்கின்றோம்.

குடி அரசு – தலையங்கம் – 17.02.1929







தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு - தோழர் பெரியாரின் அழைப்பு

 

தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு


சுயமரியாதை இயக்கம் தோன்றிய சுமார் மூன்று வருஷ காலத்திற்குள் தமிழ்நாட்டில் அது அநேகமாக ஒவ்வொருவருடைய கவனத்தையும் இழுத்திருப்பதோடு இவ்வியக்க விஷயமாய் அநேகரை கூர்ந்து கவனிக்கும் படிக்கும் கவலைப்படும் படிக்கும் செய்து வந்திருக்கின்றது என்று சொல்லுவது மிகையாகாது.

இவ்வியக்கம் ஆரம்பமானது முதல் இதற்கு அநேக தத்துக்கள் ஒன்றின்பின் ஒன்றாய் வந்து கொண்டே இருந்தாலும் ஒருவாறு அவ்வளவையும் சமாளித்து வளர்ந்து கொண்டு வருவதை யாரும் மறுக்க முடியாது.




இதற்கு உதாரணம், இவ்வியக்க ஆரம்ப காலத்தில், காங்கிரஸ் துவேஷமென்றும், பிறகு பார்ப்பன துவேஷ இயக்கமென்றும், பின்னால் தேசத்துரோக இயக்கமென்றும், பிறகு சர்க்கார் பிரசார இயக்கமென்றும், பிறகு வைணவ துவேஷ இயக்கமென்றும், பிறகு சைவத் துவேஷ இயக்கமென்றும், பிறகு நாஸ்திக இயக்கமென்றும், பிறகு நிரீச்சுவரவாத இயக்கமென்றும் மற்றும் அநேகர் அநேக விதமாய் அதன்மீது பழி சுமத்தி அதற்கு பொது ஜனங்களிடம் எவ்வளவு தூரம் வெறுப்பும் துவேஷமும் ஏற்படச் செய்ய வேண்டுமோ அவ்வளவு தூரம் ஏற்பட வேண்டி, பலவழிகளிலும் பெரு முயற்சிகள் செய்தாய் விட்டது என்றாலும் இவ்வளவு செய்தும், இதன் முன்னேற்றம் சிறிதும் குந்தகப்படாமல் மேலும் மேலும் முன்னேறுவதைப் பார்க்கின்றபோது இவ்வியக்க எதிரிகள் வேறு சமாதானம் சொல்ல முடியாமல் “இது இனி எத்தனை நாளைக்கு நிற்கப் போகின்றது, அப்பேர்ப்பட்ட ஒத்துழையாமை இயக்கமே பழங்கதையாய் விட்டது, இதுதானா வாழப் போகின்றது? ஏதோ பார்ப்பனர்கள் மீது நமது நாட்டு மக்களுக்கு இருக்கும் துவேஷத்தினால் சிலர் ஆதரிக்கின்றார்கள். நாயக்கருக்கு இருக்கும் சொந்த செல்வாக்குக்கும் அரசாங்க செல்வாக்குக்கும் பயந்து சிலர் ஆதரிக் கின்றார்கள், இதெல்லாம் எத்தனை நாளைக்கு நிற்கும்?” என இம்மாதிரியாக சொல்லிக் கொள்வதன் மூலம் தங்கள் பொறாமைகளை ஒருவாறு திருப்தி செய்து கொள்வதோடு இரகசியமாய் தங்களால் கூடிய கெடுதியையும் செய்து கொண்டே வருகிறார்கள் என்பதும் இவ்வளவையும் தாண்டித் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு முக்கிய இடங்களிலும் மற்றும் வெளியிடங்களிலும் சுயமரியாதைச் சங்கங்களும் மகாநாடுகளும் பிரசாரங்களும் நடந்து வருவதும் அதன் கொள்கைகளில் பல சற்றும் எதிர்ப்பின்றி காரியத்தில் அனுஷ்டிக்கப்படுவதுமே போதுமான உதாரணமாகும்.

அதுமாத்திரமல்லாமல், இப்போது எந்தவிதமான மகாநாடு எங்கு நடந்தாலும் சுயமரியாதைக் கொள்கைகள் கொண்ட தீர்மானங்களேதான் நிறைவேற்றப்பட்டு வருவதும் சமூக மகாநாடு, சமரச மகாநாடு, பெண்கள் மகாநாடு, பார்ப்பனரல்லாத வாலிபர் மகாநாடு, சீர்திருத்த மகாநாடு ஏன் சில அரசியல் மகாநாடுகள் – ஆகியவைகளில் எல்லாம் மேல்கண்ட தீர்மானங் களே நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இவ்வியக்கத்திற்கு ஆதாரமாக ருஷியா, ஜப்பான், சைனா, துருக்கி, ஈஜிப்ட், ஆப்கனிஸ்தானம் முதலிய நாடுகள் வழிகாட்டியும் வருகின்றதைப் பார்த்தால் இவ்வியக்கம் தளர்ந்து விடும் என்றோ, மறைந்துவிடும் என்றோ, நினைப்பவர்கள் கண்டிப்பாய் ஏமாந்து விடுவார்கள் என்பது தெளிவாகாமல் போகாது. அன்றியும் நமது நாட்டு அரசியல் தலைவர் கள் என்பவர்களும் அநேகமாக இக்கொள்கைகளை உச்சரிப்பதன் மூலமா கவே செல்வாக்கு பெறுவதையும் பார்க்கும்போது இக்கொள்கைகளின் தத்துவம் எவ்வளவு மேன்மையானது என்பதும் விளங்காமல் போகாது. இவ்வளவும் இருந்தாலும் இவ்வியக்கத்திற்கு ஒரு நிலையான ஸ்தாபனமும் பிரசார பலமும் ஏற்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமான வேலை என்று நமக்குப் படுகின்றது. மேல்நாடுகளிலும் ஒவ்வொரு தேசத்திலும் இக்கொள்கைகள் கொண்ட இயக்கம் அதிக பலமான அஸ்திவாரத்தின் மீது கட்டப்பட்டு வெகு விரிவான முறையில் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது. உதாரணமாக,




லண்டனில் சு.ஞ.ஹ. என்னும் பகுத்தறிவாளர்கள் சங்கமும் அமெரிக்காவில் பிரீ திங்கர்ஸ் அசோசியேஷன் என்னும் தாராள எண்ணக் காரர்கள் (அறிவு எவ்வளவு தூரம் செல்லுமோ அவ்வளவு தூரம் செலுத்துவது) என்கிற சங்கமும், ருஷியாவில் ஆண்டி காட் சொசைட்டி (கடவுள் உற்சவம் வணக்கம் ஆகியவைகள் அவசியமில்லை) என்கின்ற (ருஷிய கவர்ன்மெண்டாராலும் ஆதரிக்கப்பட்ட) சங்கமும் சைனாவில் யங் சைனீஸ் அதாவது வாலிப சைனாக்காரர்கள் என்கின்ற சங்கமும் மற்றும் ஆப்கானிஸ்தானம் துருக்கி முதலிய சர்க்காரால் அநேக இடங்களில் குருட்டு நம்பிக்கைகளையும் மூடப்பழக்க வழக்கங்களையும் ஒழிக்கும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன. அதுபோலவே நமக்கும் நமது அரசாங்கம் அடியோடு நமது இயக்கத்தின் சுவாதீனத்திற்கு வருமளவும் அதாவது சுயமரியாதை அரசாங்கம் ஏற்படும்வரை நமக்கு தக்க ஆஸ்பதம் வேண்டியிருக்கின்றது. அநேகமாய் இவற்றை உத்தேசித்தே அடுத்தமாதம் 2-வது 3-வது வார வாக்கில் செங்கல்பட்டில் தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அம்மகாநாட்டுக்கு சைமன் கமீஷனும் அழைக்கப்பட்டிருக்கின்றது. மற்றும் இம்மகாநாட்டில் அநேக பெரியார்களும் செல்வாக்குக்காரர்களும் உண்மைத் தொண்டர் களும் செல்வந்தர்களும் பங்கெடுத்துக் கொள்ள சம்மதித்தும் இருக்கின் றார்கள். இதுவரை சுமார் 10 ஆயிரம் ரூபாய் போல வசூலும் செய்யப் பட்டிருக்கின்றது.

திருவாளர்கள் ராவ் பகதூர் எம்.கெ.ரெட்டியார், சி.ஜயராம நாயுடுகார், கே.வி. மேனன், கண்ணப்பர் முதலியவர்களும் மற்றும் பல பிரமுகர்களும் இவ்வேலையில் பூரணமாய் ஈடுபட்டு உழைத்தும் வருகின்றார்கள். சுமார் இருபத்தைய்யாயிரம் மக்களுக்குக் குறையாமல் கூடக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இம்மகாநாட்டிற்கு வந்து சில தீர்மானங்களை எதிர்க்கவேண்டும் என்கின்ற எண்ணத்தோடு சிலர் இரகசியமாய் கக்ஷி சேர்ப்பதாகவும் தெரிய வருகின்றது. எப்படியானாலும் சரி, நமக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. நமது நிலைமையையும் உண்மை என்று நாம் நினைப்பதையும் வெளிப்படுத்தி அதற்கு ஏற்ற நடவடிக்கைகள் நடத்த ஒரு பலமான ஸ்தாபனமும் பிரசாரமும் ஏற்படுத்த வேண்டும் என்பது தான் நமது கவலை. ஆதலால் நாட்டின் nக்ஷமத்திலும் மக்களின் முன்னேற்றத் திலும் கவலையுள்ள மக்கள் யாவரும் அங்கு வந்து கூடி தங்கள் கடமையைச் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். ஒவ்வொருவரும் தங்கள் மனைவி மக்களுடனேயே வரவேண்டியது மிகவும் அவசியமானது என்பதை மிகவும் அழுத்தமாய் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

தனிப்பட்ட ஸ்திரீகளும், தங்களை விதவைகள் என்றோ வேசிகள் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்களும் அவசியம் வரவேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றோம். தவிர, அரசாங்க உத்தியோகஸ்தர்களும் அதிகாரிகளும் கண்டிப்பாய் வரவேண்டியது மிகவும் அவசியமாகும் என்று தெரிவிப்பதோடு இந்த மகாநாடு எவ்வழியிலும் அரசியல் மகாநாடு என்ப தல்ல என்றும் அவர்களுக்கு உறுதி கூறுகின்றோம். அன்றியும் அரசாங்க சட்டமெம்பர் திவான்பகதூர் கனம் கிருஷ்ண நாயர் அவர்களும் மற்றும் பல பெரிய அதிகாரிகளும் வரச் சம்மதித்து இருக்கின்றார்கள்.
முக்கியமாக இம்மகாநாட்டில் யோசித்து தீர்மானிக்கப்படும் விஷயங் கள் என்னவென்றால், சமத்துவம், சமஉரிமை, சமசந்தர்ப்பம், சிக்கனம், அன்பு, இரக்கம், ஒழுக்கம் ஆகியவைகள் ஏற்படவும், குருட்டு நம்பிக்கை, மூடப் பழக்க வழக்கம், தீண்டாமை, பெண் அடிமை ஆகியவைகள் எடுபடவும் எளியோரை வலியோர் அடக்கி ஆளாமலும், பாமரர்களை படித்தவர்கள் ஏமாற்றாமலும், ஏழைகளை செல்வந்தர் கொடுமைப்படுத்தாமலும் இருப்ப தற்கும் பகுத்தறிவு வளர்ச்சி பெறவும் தன் முயற்சியில் நம்பிக்கை உண்டாக வுமான தன்மைகள் போன்ற விஷயங்களே தான் அங்கு நடைபெறும். ஆகையால் இவைகளை அரசியல் விஷயமென்று யாரும் சொல்ல முடியாது. அரசியல் விஷயம் என்று ஏதாவது சொல்ல வந்தால் அது மேல்கண்ட விஷயங்கள் நிறைவேறி அமுலுக்குவர அரசாங்கத்தின் உதவி ஏதாவது வேண்டி யிருந்தால் அந்த அளவுக்கு அதுவும் அரசாங்கத்தின் ஆதரவை எதிர்பார்க்கும் அளவுக்கு ஏதாவது பேசப்படுமே ஒழிய வேறு ஒன்றும் நடை பெறாது என்று உறுதி கூறுவோம்.
இந்த 3,4 வருஷத்திய மகாநாடுகளில் இதுவே முக்கியமான மகாநாடாக இருக்கும். அன்றியும் இனி நமது பிரசாரமும் வேலைத் திட்டமும் எப்படி இருக்க வேண்டும் என்பதும் இம்மகாநாட்டில் தான் முடிவு செய்யப் படும். ஆதலால் செங்கற்பட்டு மகாநாட்டிற்கு எல்லோரும் முக்கியமாய் வாலிபர்களும், பெண்களும், தாழ்த்தப்பட்டவர்களும் அவசியம் வர வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகின்றோம்.

குடி அரசு – தலையங்கம் – 13.01.1929