Monday, 17 April 2017

இரண்டு அய்யங்கார் மந்திரிகள் கூற்று – 08.08.1937

இரண்டு அய்யங்கார் மந்திரிகள் கூற்று

பார்ப்பன ஆதிக்கம் வந்தால் தமிழ் மக்களுக்கு என்னென்ன கெடுதல்கள் வரும் என்று எதிர்பார்த்தோமோ அவைகள் ஒவ்வொன்றாக வரத்தொடங்கிவிட்டன.
தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் தோழர் டி.எஸ். எஸ். ராஜன் அய்யங்கார் அவர்களும் பார்ப்பன அய்யங்கார் மந்திரிகள். அவர்கள் கொள்கை எப்படியாவது தமிழ் மக்களை அடிமைப்படுத்தி பார்ப்பன ஆதிக்கம் தலைசிறந்து விளங்குவதற்கு வேண்டிய காரியங்கள் செய்ய வேண்டியதே யாகும். இதையறிந்து நாம் இந்த 20 வருஷகாலமாக தொண்டை கிழியவும் கை ஒடியவும் கத்தியும் எழுதியும் வந்திருக்கிறோம்.
இதை இந்த நாட்டு தமிழ் மக்கள் 100-க்கு 100 பேரும் உணர்வார்கள். இன்றும் இவ்வய்யங்கார் கோஷ்டிக்கு வால் பிடித்துத் திரியும் தமிழ் மக்கள் பூராவும் தோழர் சுப்பராயன் அவர்கள் முதல் தோழர்கள் குப்புசாமி அண்ணாமலை உபயதுல்லா கம்பெனிவரை சகல மக்களும் உணர்ந்தவர்களேயாவார்கள். மற்றும் அவ்வப்போது இவ்வபிப்பிராயங்களைப் பல வழிகளிலும் தெரிவித்தவர்களுமாவார்கள். அப்படி இருந்தும் நம்மக்களின் ஒற்றுமையின்மையாலும் சுயநலங்களாலும், வறுமையாலும் எப்போதும், ஒரு கூட்ட தமிழ் மக்கள் பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருந்து குலாம் களாகி சமூகத்தைக் காட்டிக் கொடுத்து விபூஷணன் கதை போலவும், அனுமார் கதை போலவும் நடந்து பார்ப்பன ஆதிக்கத்துக்கு உதவியும் ஆக்கமும் அளித்து வருகிறார்கள்.
நமது முயற்சி
இதற்காக ஒரு தனிப்பட்ட தமிழ் மகனை குற்றம் சொல்ல நாம் முன்வரவில்லை. தமிழ் மக்களில் இப்படி ஒரு கூட்டம் புராண காலம் – சரித்திரகாலம் முதற்கொண்டே இருந்து வந்திருக்கிறது. இக்கூட்டத்தை அடியோடு இல்லாமல் செய்து விடமுடியும் என்று நாம் எப்போதும் நினைத்து விடவில்லை. ஆனாலும் சுயநலமற்ற – சமூகத்தை காட்டிக் கொடுத்து வயிறு வளர்த்துத் தீரவேண்டிய அவசியமற்ற பொது மக்களும் சிறப்பாக பாமர மக்களும் இக்குலாம் கூட்டத்தின் பேச்சைக்கேட்டு ஏமாறாமல் இருப்பதற்காகவே நாம் முயற்சிக்கிறோம்.
நம் முயற்சி வீண் முயற்சி என்றோ நாம் சிறிதும் வெற்றி அடைய மாட்டோம் என்றோ சிறிதும் அதைரியம் கொள்ளவுமில்லை. ஏனெனில் இவ்விருபது முப்பது வருஷகாலங்களில் நமக்கு முன்னிருந்த அதிதீவிர வாலிபர்களும் கூட மனதினால் நினைத்திருக்கவும் முடியாத பல காரியங்கள் இன்று சர்வசாதாரணமாகி மக்கள் பலர் பின்பற்றவும் பல பலமான அமைப்புகள் இடிபடவும் பல அதி ஆச்சரியமான காரியங்கள் அமுலில் நடந்தேறவுமான காரியங்கள் நடந்து விட்டன.
அதுவும் பார்ப்பன எதிர்ப்பையும் அவர்களுடைய அடிமைகளான குலாம்களான பல தமிழ் மக்களின் எதிர்ப்பையும் தொல்லைகளையும் சமாளித்தும் வெற்றி பெற்றிருக்கின்றன.
நம் ஆசை
நம்முடைய முக்கியமான ஆசை – கொள்கை – ஆயுளுள்ள வரை ஈடுபட்டு தீருவது என முடிவு செய்துகொண்ட விஷயம் என்னவென்றால் ஒரே ஒரு காரியமாகும். அதாவது மனித சமுதாய அமைப்பை தலை கீழாக மாற்றுவது அல்லது உடைத்தெறிவது என்பதேயாகும்.
இதைத் தவிர அரசியலைப் பற்றியோ பொருளாதாரத்தைப் பற்றியோ நமக்கு சிறிதும் கவலை இல்லை. ஏனெனில் அரசியலும் பொருளாதாரமும் சமூக அமைப்பு பெற்ற பிள்ளைகளே தவிர தனித் தனி விஷயங்களல்ல. சமூக அமைப்பை எப்படி மாற்றி அமைக்கின்றோமோ எப்படி உடைத் தெறிகின்றோமோ அதைப் பொறுத்தே அரசியலும் பொருளாதாரமும் தானாகவே மாறுபாடு அடைந்துவிடும்.
ஒரு மாறுதல்
இன்றைய தினம் நமது சமூக அமைப்பில் ஒரு பெரிய மாறுதலை காண்கின்றோம். இது யாரால் ஏற்பட்டிருந்தாலும் சரி, ஒன்று மாத்திரம் நிச்சயம். அதாவது தோழர்கள் காந்தியாருக்கும் ராஜகோபாலாச்சாரியாருக்கும் சத்தியமூர்த்தியாருக்கும் எதிராகவும் மற்றும் தோழர்கள் முத்துரங்க முதலியார், வெள்ளியங்கிரிகவுண்டர், சீர்காழி சிதம்பரநாத முதலியார் ஆகியவர்களின் இஷ்டத்துக்கும் முயற்சிக்கும் எதிர்ப்புக்கும் விரோதமாகவும் அவர்களது விரோதங்களை சமாளித்துக்கொண்டு நடந்த காரியம் என்றே சொல்லுவோம்.
பறைய மந்திரி
அதாவது ஒரு “பறையனை” அரசியல் மந்திரியாக இன்று கண்டு விட்டோம். பறையன் என்று கூப்பிடுவது சட்ட விரோதமான காரியம் என்பதை அரசியல் ஆதாரத்தில் பார்த்துவிட்டோம். அவனவன் குலத்தொழில் பார்க்கும்படி செய்வது தான் சுயராஜ்யத்தின் முக்கிய தத்துவம் என்ற கீதைத் தத்துவத்தையும் மனு தத்துவத்தையும் இருக்குமிடம் தெரியாமல் கொளுத்திவிட்டோம். இவைகளை ஏன் தனியாக எடுத்துக் காட்டுகிறோம் என்றால் மேற்குறிப்பிட்ட கூட்ட மக்கள் இந்நிலை ஏற்படாமலிருப்பதற்காக பாடுபட்டார்கள், எதிர்ப்பை உபதேசித்தார்கள், இதற்கு மாறு ஏற்படாமல் இருக்கும்படி வைசிராய் இடம் தூது சென்றார்கள். இவ்வளவையும் சமாளித்தோம். மற்றும் சமூகத்துறையில் மதத்தின் பேரால் ஒதுக்கித்தள்ளி சமூகத்தின் பேரால் வெறுக்கச் செய்து தொடுவதற்கு அசூயைப்படத்தக்க முஸ்லீம் சமூகம் இன்று முற்போக்கு சமூகமாக இருக்கக் காண்கின்றோம்.
இந்த நிலை இனி ஒரு 15 வருஷங்களுக்கு கெடாமல் இருக்குமானால் அதற்கு அடுத்த பதினைந்து வருஷங்களில் இன்றுள்ள ஆட்சி பாடு பட்டுழைக்கும் மக்கள் அரசியலாக மாறிவிடும் என்பதில் நமக்கு ஆட்சேபணையில்லை.
பார்ப்பனச் சூழ்ச்சி
அப்படிப்பட்ட ஒரு நிலைமை நாட்டில் உண்டாகாமல் இருப்பதற்கு ஆகவும் உள்ள நிலைமையையும் கெடுப்பதற்கு ஆகவுமே இன்று அரசியலின் பேரால் பார்ப்பனர்கள் முயற்சிக்கிறார்கள். அதற்கே தோழர் காந்தியாரையும் சில சமூகத்துரோகிகளையும் பார்ப்பனர்கள் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள். அதுதான் இன்றைய காங்கரஸ் சூழ்ச்சியாகவும் மாகாண ஆட்சியாகவும் சுயராஜ்ய முயற்சியாகவும் இருந்து வருகிறது.
காங்கிரசின் பேரால் அரசியல் ஆதிக்கம் பெற்றுத் தலைமை ஸ்தானத்தில் பார்ப்பனர்கள் அமர்த்தவும் அவர்களது கண்ணோட்டம் எங்கே போயிற்று என்பதையும் விழிகளுக்குள் அடைந்து கிடந்து வெளிப்பட்ட ஆசை என்ன என்பதையும் தமிழ் மக்களை சற்று சிந்தித்து பார்க்கும்படி வேண்டுகிறோம்.
தோழர் ஆச்சாரியார் பட்டத்துக்கு வந்த 10 நாளில் இந்தியா பூராவும், தமிழ்நாடும் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்றார்.
இதை காங்கிரசிலுள்ள ஒரு தமிழ் மகனாவது கண்டிக்கவே இல்லை. ஒரு தமிழ்ப் பண்டிதனாவது ஆட்சேபிக்கவே இல்லை.
தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் எதற்கு ஆக சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்பதைப்பற்றிக் கூட எந்தத் தமிழனும் சிந்தித்ததாகவும் தெரியவில்லை.
தங்கள் பெண்ஜாதியின் துகிலை சபையில் ஒருவன் பலாத்காரமாய் அவிழ்ப்பதை பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறும் காட்டு மிராண்டித் தனமான கதைக்கு நிகராகவே இருக்கிறது இந்த சம்பவம்.
உண்மைத் தமிழருண்டா?
ஒரு பார்ப்பனர் தமிழ்மக்கள் பேரால் ஆட்சி பெற்று அரசியல் தலைமைப் பதவியில் இருந்து கொண்டு தமிழ் மக்களைப் பார்த்து “நீங்கள் எல்லோரும் சமஸ்கிருதம் படிக்க வேண்டும்” என்று சொன்னால் அவரது நெஞ்சுத் துணிவு எவ்வளவாய் இருக்க வேண்டும்? இதையும் மக்கள் பொறுத்துக் கொண்டிருப்பது என்று சொன்னால் இந்நாட்டில் உண்மைத் தமிழ்மக்கள் யாராவது இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? “தோலைக் கடித்து துருத்தியைக் கடித்து மனிதனைக் கடிக்க வந்து விட்டது” என்ற பழமொழிப்படி “ஜாதிப் பேச்சு கூடாது” “வகுப்பு பேச்சு கூடாது” “பாஷைப் பேச்சு கூடாது” என்றெல்லாம் ஞானோபதேசம் செய்துவிட்டு அந்தப்படி யாராவது பேசினால் அது துவேஷப் பேச்சாகுமென்றும் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லிவிட்டு இப்போது தைரியமாய் தலைமை அதிகாரி பதவியில் இருந்து கொண்டு “எல்லோரும் சமஸ்கிருதம் படிக்க வேண்டும்” என்று ஆக்கினை இடுகிறார். இதன் அவசியத்துக்கு காரணம் என்னவென்றால் சமஸ்கிருதம் படிப்பதன் மூலம்தான் மக்கள் புராண கால ஒழுக்கத்துக்கு போகமுடியும் என்று விளக்கிக் கூறுகிறார். தமிழ்மக்கள் எல்லோரும் ஹிந்தி படிக்க வேண்டும் என்று இவர்களால் சூழ்ச்சி செய்யப்பட்ட காலத்திலேயே நாம் இதை எடுத்துக் காட்டினோம். ஹிந்தி என்பதும் சமஸ்கிருத பாஷையே யாகும். இதை சுமார் 75 வருஷங்களுக்கு முன்பாகவே சரித்திரபுத்தகம் எழுதிய பாதிரிகள் வெளியிட்டிருக்கிறார்கள்.
அதாவது ஒரு பிரஞ்சு இந்திய பூமி சாஸ்திர புத்தகத்தில் இந்தியாவைப்பற்றி 70 வருஷத்துக்கு முன் எழுதும் போது,
ஸம்ஸ்கிருத யோக்கியதை
“இந்தியாவானது முற்காலத்தில் அநேகவிதமான கலைகளுக்கும் அற்புதமான அறிவு பெருக்கத்துக்கும் இருப்பிடமாய் இருந்தது. நல்ல கல்வி சாஸ்திரங்கள் இருந்து வந்தன.
ஆனால் பிற்காலத்தில் பிராமணர் மதம் வந்து புகுந்தது. நிச்சயமுள்ள கல்வி அறிவு சாஸ்திரங்களுக்கும் உண்மை சம்பவங் களுக்கும் பதிலாக கட்டுக்கதைகளையும் மட்டுக்கடங்கா அபத்தங் களையும் புனைந்த சாஸ்திரங்களை புராணங்களை சமஸ்கிருதமாகிய ஹிந்திபாஷையில் ஏற்படுத்தி இந்த தேச மக்களை அஞ்ஞான – அறியாமை அந்தகாரத்தில் அமிழ்த்தினார்கள்.
ஆதலால் அது முதல் இதுவரை நல்லொழுக்கத்திலும், வித்தை, அறிவு, கல்வி, சாஸ்திரங்களிலும் யாதோர் விருத்தியும் காணாமல் தாழ்வும், அதிக மூடத்தனமுள்ள அபத்தங்களின் நிலைமையும் மாத்திரமே காணப்படுகிறது.
ஆகவே மேல்கண்ட அஞ்ஞானமும் மெளடீகத்தனமும் மக்களுக்குள் வளர்ந்துவருவதற்கு ஆதாரமான புராணம், இதிகாசம், விதி நூல் ஆகியவைகளை கொண்ட சமஸ்கிருதத்தை இந்த 20-வது நூற்றாண்டில் பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் உள்ள மனிதன் படிக்க வேண்டுமென்று ஆட்சிதலைவர் ஆக்கினை இடுவாரானால் மக்களை பழயகால காட்டு மிராண்டித் தனமான வாழ்க்கைக்கு போகும்படி விரட்டி அடிக்கிறார் என்று தானே அருத்தம்?
சமஸ்கிருத பாஷையின் முக்கிய தத்துவம் வருணாச்சிரம தர்மமாகும். அதாவது வருணாச்சிரம தர்மத்துக்கு ஏற்ற கதை புராணம், சரித்திரம் “வேதவாக்கு” விதிநூல் ஆகியவைகளேயாகும். வருணாச்சிரம தர்மத்தின் முக்கியத் தத்துவம் பார்ப்பான் பிராமண ஜாதியை சேர்ந்தவன். மற்றவர்கள் சூத்திர (அடிமை) ஜாதியைச் சேர்ந்தவர்கள். முன்னையவனுக்கு பின்னைய வனுடைய சொத்து, பெண்டு பிள்ளை, சரீரம் ஆகியவை கட்டுப்பட்டவை களாகும் என்பதுதான். ஆகவே இந்த நிலையை மறுபடியும் ஏற்படுத்தப் பார்ப்பனர்கள் முயற்சியேதான் “தமிழ் மக்கள் சமஸ்கிருதம் படிக்க வேண்டும்” என்று ஆக்கினை இடுவதாகும்.
முஸ்லீம் ஆதிக்கத்துக்கு உலை
ஹிந்தி பாஷையை வளர்த்ததின் மூலம் ஒரு அளவுக்கு முஸ்லீம் ஆதிக்கத்தையும் ஒழிக்க ஏற்பாடு செய்தாய்விட்டது என்பதை மந்திரி யாயிருந்த தோழர் கலிபுல்லா சாஹிப் அவர்கள் வெகு நன்றாய் விளக்கி இருக்கிறார்.
ஆகவே இக்காரியங்களை பார்ப்பனர்கள் செய்வதானது இதுவரை குறிப்பாக இந்த 20 வருஷ காலமாக பார்ப்பனரல்லாத சமூக தலைவர்களும் சுமார் 35 வருஷங்களாக முஸ்லீம் தலைவர்களும் சமூக முன்னேற்றத்தில் செய்து வந்திருக்கும் அரிய வேலையையும் அதன் பயனையும் பாழ்படுத்தவும் இடித்தெறியவும் செய்யப்படும் சூழ்ச்சியேயாகும்.
மற்றொரு அய்யங்கார் சூழ்ச்சி
இந்த நம் அபிப்பிராயத்தை உறுதிப்படுத்த மற்றொரு அய்யங்கார் பார்ப்பன மந்திரி தோழர் டி.எஸ்.எஸ். ராஜன் அவர்கள் மற்றொரு மாணவர்கள் கூட்டத்தில் வெளியிட்டிருக்கும் அபிப்பிராயத்தைக் கொண்டு உணரலாம்.
அதாவது,
இந்த மாகாணத்தில் துரதிஷ்டவசமாக பொது வாழ்வில் வகுப்புவாத முறை வளர்ந்து வருகிறது. அவர்கள் அதிகாரத்தில் இருந்த பொழுது ஜாதியையே ஒழிக்க வேண்டுமென்று பேசிக்கொண்டு ஜாதியை சட்டபூர்வமாக நிரந்திரமாக்கி இருக்கிறார்கள். இருந்தாலும் நாம் இனி பயப்பட வேண்டியதில்லை”
என்று சென்ற ஜூலை மாதம் 31ந் தேதி வைத்திய மாணவர்கள் வகுப்பில் பேசி இருக்கிறார். இது “இந்து” பத்திரிகையில் காணப்படுகிறது. (மேற்கண்ட வாசகத்தில் அவர்கள் என்பது ஜஸ்டிஸ் கட்சியைக் குறிக்கிறது. ப-ர்)
இவரது ஆணவத்தைப் பாருங்கள், வகுப்பு வாரி முறையைப்பற்றி இனி பயப்பட வேண்டியதில்லையாம். அப்படி என்றால் என்ன? அதை தாங்கள் அடியோடு அழித்து விடப்போகிறோம் என்பதுதானே? எதற்கு ஆக அதை அழிப்பது?
வகுப்புவாத முறையை ஜஸ்டிஸ் கட்சியார் ஒழிக்க வேண்டு மென்று சொல்லிக்கொண்டு அதை ஒழிப்பதற்கு அனுகூலமாக வகுப்பு வாதம் உள்ள வரை வகுப்பு உரிமை கொடுத்து வந்தால் எதற்கு ஆக ஆதியில் வகுப்புவாதம் (யாரால் கற்பிக்கப்பட்டிருந்தாலும்) ஏற்பட்டதோ அந்த காரியம் அழிவதன் மூலம் வகுப்பு இல்லாமல் போய்விடும் என்று கருதியே வகுப்புரிமை அளித்திருக்கிறார்கள். தோழர் ராஜன் அய்யங்கார் சொல்வதையே ஒப்புக்கொள்வதானாலும் அதாவது ஜஸ்டிஸ் கòயார் வகுப்பு முறை அல்லது ஜாதி முறையை சட்ட பூர்வமாக நிலைக்கச் செய்துவிட்டார்கள் என்றே வைத்துக் கொள்வதானாலும்
வேத சாஸ்திர வகுப்பு வாதத்தை ஒழிக்க வழியுண்டா?
இப்பார்ப்பனர்கள் அதாவது தோழர்கள் ராஜன் அய்யங்கார், ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி சாஸ்திரியார் ஆகியவர்களின் முன்னோர்கள் இதே ஜாதி முறையை – வகுப்புமுறையை – வருணமுறையை மதத்தில் வேதத்தில் சாஸ்திரத்தில் புராணத்தில் ஏன்? “கடவுள்” வாக்கில் “கடவுள் சிருஷ்டியில்” உற்பத்தி செய்து நிரந்தரமாக்கி இருக்கிறார்களே இதற்கு என்ன சொல்லுகிறார்கள் என்று கேட்கிறோம். ஜஸ்டிஸ் கòயார் செய்த சட்டத்தை நாளைக்கு ஒரு அன்னக்காவடியோ தகரப்போகணியோ சட்டசபை அதிகார ஆசனத்தில் உட்கார்ந்து அழித்துவிடலாம். அதில் ஒன்றும் பிரமாதமில்லை. ஆனால் இந்த அய்யங்கார், ஆச்சாரியார், சாஸ்திரியார் கூட்டம் செய்த வேத சாஸ்திர கடவுள் வாக்கு ஆகியவைகள் மூலம் செய்யப்பட்ட கொடுமையான ஜாதிமுறையை எப்படி ஒழிப்பது? எந்தக் காலத்துக்கு யாரால் அழிப்பது? என்று கேட்கிறோம்.
ஹிந்தியை சமஸ்கிருதத்தைப் பாராட்டுவதேன்?
இவைகளை மேலும்மேலும் நிலைநிறுத்தத்தானே தோழர் ஆச்சாரியார் சமஸ்கிருதத்தையும் ஹிந்தியையும் படியுங்கள் என்று இன்று மாணவர்களுக்கு ஆக்கினையிடுகிறார். இந்தப் பார்ப்பனர்கள் “மனித வாழ்வில் ஒரே ஒரு ஜாதிதான் இக”பர”ங்களில் சுகமாகவும், சுதந்திரமாகவும் வாழ முடியும்” என்றும் அந்த ஒரு ஜாதிக்குத்தான் சுதந்திரமுண்டு என்றும் மற்ற ஜாதிகள் அந்த ஒரு ஜாதிக்கு அடிமையாய்த்தான் இருக்க வேண்டும் என்றும் இருந்து வந்த கொடுமையை ஜஸ்டிஸ் கட்சி ஒழிக்கத்தான் வகுப்பு உரிமை அதாவது சகல வகுப்புக்கும் சம உரிமை உண்டு என்பதை அமுலில் கொண்டு வரச்செய்ததே தவிர மற்றபடி ஜஸ்டிஸ்காரர் செய்த வகுப்பு முறையிலோ வகுப்பு உரிமை முறையிலோ எந்த ஜாதியையும் மேல் என்றோ கீழ் என்றோ எந்த ஜாதிக்கும் எந்த ஜாதியும் அடிமை என்றோ சட்டம் செய்யவில்லை. ஆகவே – ஜஸ்டிஸ்காரர் செய்த சட்டத்தைப் பற்றி பயப்படப்போவதில்லையென்றும் அதை அழிக்கவே தாங்கள் கங்கணங் கட்டிக்கொண்டு வந்திருப்பதாகவும் வீரப் பிரதாபம் கூறும் டாக்டர் ராஜன் அய்யங்கார் அவர்கள் வகுப்புரிமை, வகுப்புப் பிரிவு ஆகிய முறையைப்பற்றி உண்மையில் வருந்துபவராயிருந்தால் அவர் ஒரு காரியம் செய்வாரா என்று கேட்கின்றோம்.
எல்லாரும் அர்ச்சகராக இருக்கச் சட்டம் செய்வாரா?
அதாவது அவரது பதவி ஆதித்கத்திலுள்ள வகுப்பு முறை சுதந்திரத்தை ஒழிக்கிறாரா என்று கேட்கின்றோம் என்ன வென்றால் இன்று கனம் டாக்டர் ராஜன் அய்யங்கார் தேவஸ்தான இலாக்கா மந்திரியாயிருக்கிறார். அவர் ஆதீனத்தில் தான் இந்நாட்டுக் கோவில்களின் “தலையெழுத்து” பூராவும் இருக்கின்றன. சட்டசபையும் கனம் டாக்டர் ராஜன் காலாட்டினால் மற்றவர்கள் தலையை ஆட்டும்படியான மெஜாரிட்டியாய் இருக்கிறது. சர்க்காரோ, காங்கரசே சர்க்கார் – சர்க்காரே காங்கரஸ் என்று கனம் ராஜனே சொல்லிக்கொள்ளும் படியான நிலைமையில் இருக்கிறது. இந்நிலையில் இந்த கோவில்களுக் கெல்லாம் பார்ப்பானே மணி அடிக்கவேண்டும், பார்ப்பானே சோறு பொங்க வேண்டும், பார்ப்பானே வேதம் ஓத வேண்டும் என்பவை ஆன – பார்ப்பானே செய்யவேண்டும் என்கின்ற காரியங்களை மாற்றி “வகுப்பு வாதம் புரிகின்ற” ஜஸ்டிஸ் கòயார் உள்பட தனித்தொகுதி கேட்பதும் இந்து மதத்தை விட்டுப் போவதும் ஆபத்து என்று கூறி தடுக்கப்படும் ஷெடியூல் வகுப்பார் வரை உள்ள எல்லா இந்துக்களும் செய்யலாம் என்று ஒரு சட்டமோ உத்திரவோ செய்து வகுப்பு வாத ஆதிக்கத்தை ஒழிப்பாரா? என்று வணக்கமாய் கேட்கின்றோம்.
இதாவது நாளைக்கு செய்யட்டும். இன்றைக்கு எல்லா இந்துக்களும் வகுப்பு ஜாதி என்கின்ற வித்தியாச முறை இல்லாமல் “சர்வ சக்தியும், சர்வ வியாபகமும், சர்வ தயாபரமும் உள்ளவரான பகவானை தரிசிக்க சர்வ சுதந்திரமாய் அனுமதிக்கப்படும்” என்று உத்திரவு போடட்டுமே என்று தான் கேட்கிறோம்.
ஹோட்டல்களின் “பஞ்சம” போர்டை ஒழிப்பாரா?
இதாவது கொஞ்சம் தாமதிக்கட்டும். அதைவிட அவசரமாக இனிமேல் எந்தப் பார்ப்பானும் ஓட்டல்களிலோ, காப்பிக் கடைகளிலோ பிராமணாள் காப்பிக் கடை – பிராமணாள் ஓட்டல் – பிராமணாளுக்கு மாத்திரம் – பிராமணாளுக்கு இங்கே சூத்திராளுக்கு இங்கே – பஞ்சமன் நாய் பெரு வியாதிக்காரர்கள் ஆகியவர்கள் பிரவேசிக்கக் கூடாது – என்பன போன்ற போர்டு – போடக்கூடாது என்று உத்திரவுகள் போடட்டுமே பார்ப்போம். எனவே இத்தியாதி காரியங்கள் செய்ய அதிகாரமும் அவசியமும் செளகரியமும் இருந்தும் இவற்றை செய்யாமல் வகுப்பு ஆதிக்கக் கொடுமையையும் வகுப்பு முறை துன்பங்களையும் வைத்துக்கொண்டு “ஜஸ்டிஸ் வகுப்பு வகுப்புவாத முறை ஏற்படுத்தி விட்டது. நான் அதை ஒழிக்கப்போகின்றேன். பயப்பட வேண்டாம்” என்றால் என்ன அர்த்த மென்று கேட்கின்றோம். ஆகவே இந்தமாதிரிப் பேச்சுக்கள் எல்லாம் நாம் எதிர்பார்த்தபடியே கொடுங்கோன்மை ஆட்சிமுறைப் பேச்சென்றே வருத்தத்துடன் கூற வேண்டியிருக்கிறது.
குடி அரசு – தலையங்கம் – 08.08.1937

தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை இப்போதுதான் புத்தி வருகிறது - 09.05.1937

தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை இப்போதுதான் புத்தி வருகிறது


தாழ்த்தப்பட்ட மக்களை காங்கிரஸ்காரர்கள் ஏய்த்து விட்ட விஷயமாய் நாம் பல தடவை எழுதி வந்திருக்கிறோம். தாழ்த்தப்பட்ட மக்களில் எவ்வளவோ கல்வி அறிவுள்ளவர்களும் உலக ஞானமுள்ள வர்களும் இருந்தாலும் சமயத்தில் மோசம் போகும் புத்தி அவர்களுக்கு வெகுகாலமாகவே இருந்து வருகிறது. சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்தபோது அவர்களுடன் வாது செய்து வெற்றி பெற்றதின் பலனாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதாவது தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கு என்று சட்டசபையில் ஒரு அளவு ஸ்தானங்கள் தனித் தொகுதி மூலம் ஒதுக்கி வைக்கப்பட்டது. அதை காந்தியார் பட்டினி கிடப்பதாகப் பாசாங்கு செய்து அச் சமூக மக்களை ஏமாற்றி தனித் தொகுதி உரிமையை பாழாக்கி அடிமை உரிமைக்கு ஆளாகச் செய்து விட்டார்.
அப்பொழுதே தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதி அல்லது தலைவர்கள் என்பவர்களுக்கு எவ்வளவு புத்தி கூறியும் தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ஐரோப்பாவில் இருந்து தோழர் அம்பத்காருக்கு விஷயங்களை விளக்கி ஏமாந்து போகாதீர்கள் என்று அதாவது ஒரு காந்தியாரைவிட 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் கேவலமானதல்ல என்றும் 6 கோடி மக்கள் உயிர் உமது கையில் சிக்கி இருக்கிறது என்பதை மறந்து விடாதீர் என்றும் நீண்ட தந்தி கொடுத்திருந்தும் ஒன்றையும் லயம் செய்யாமல் தங்களை சிலர் மதித்து அழைத்து கெஞ்சிப் பேசுகிறார்கள் என்கின்ற மமதையில் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போட்டு தங்கள் உரிமையைப் பறிகொடுத்து விட்டார்கள். வாதாடி உரிமை வாங்கிக் கொடுப்பது ஒரு கூட்டம், அதை தட்டிவிட்டு வாயில் போட்டுக்கொண்டு போவது மற்றொரு கூட்டம் என்பதாக ஆகிவிட்டது. இதிலிருந்து இன்றுள்ள நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் சுதந்திரத்தோடு வாழ தகுதி அற்றவர்கள் என்பதும் அவர்கள் இன்னும் இரண்டு கோடி அதிகமாய் இருந்தாலும் அரசாங்கத்தின் பாதுகாவலில் இருக்கத்தான் தகுதி உடையவர்கள் என்றும் விளங்குகிறது. அவ்வகுப்பில் புத்திசாலிகள் முன் யோசனைக்காரர்கள் ஒருவர் கூட இல்லை என்பதாக விஷயங்கள் வெளியாகிவருகிறது.
தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாய் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட தலைவர்கள் அத்தனை பேரும் இன்று அழ ஆரம்பித்து விட்டார்கள். தோழர்கள் அம்பத்கார், ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா, என். சிவராஜ் முதலியவர்கள் எல்லோருமே தங்கள் தவறை உணர்ந்து விட்டார்கள். சாமி சகஜாநந்தம் என்பவரும் அழுக ஆரம்பித்து விட்டார். ஆகவே தாழ்த்தப்பட்ட மக்கள் காங்கிரஸ்காரர்களால் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் என்பது நிதர்சனமாக ஆகிவிட்டது.
தோழர் திவான்பகதூர் ரெட்டைமலை சீனிவாசன் அவர்கள் இது விஷயமாய் விடுத்த அறிக்கை மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதை வாசகர்கள் கவனமாய் படிக்க விரும்புகிறோம். அதில் காணும் முக்கிய விஷயங்களில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம்.
அதாவது,
“காங்கிரஸ் கேட்கும் உறுதி மொழியைக் கொடுப்பதானது 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்களையும் மற்ற சிறுபான்மை வகுப்பாரையும் கொடுமைப்படுத்த காங்கிரஸ்காரருக்கு சர்க்கார் காட்டிக் கொடுத்ததாகும்.”
“ஷெடியூல் வகுப்பாரின் (தாழ்த்தப்பட்ட மக்களின்) கல்வியில்லாத் தன்மையையும் ஏழ்மைத் தன்மையையும் காங்கிரசார் தங்களுக்கு சாதகமாய் உபயோகித்துக் கொண்டு 30 ஸ்தானங்களில் 26 ஸ்தானங்களைக் கைப்பற்றி விட்டார்கள்.”
“காங்கிரஸ்காரர்கள் வரி குறைக்கப்படும் என்று சொல்லி மிராசுதாரர்களை சுவாதீனம் செய்துகொண்டு அவர்கள் மூலமாகவும் தொண்டர்கள் மூலமாகவும் மிரட்டி பயமுறுத்தி ஓட்டு வாங்கி விட்டார்கள்.”
“இந்த அயோக்கியத்தனங்களை போலீசு, கிராம உத்தியோகஸ்தர்கள், மற்ற அதிகாரிகள் யாரும் தடுக்கவில்லை.”
“பூனா ஒப்பந்தத்தை கவுரவிப்பதற்குப் பதிலாக அதை மோசம் செய்து விட்டார்கள்”.
“தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்தில் கவலை எடுத்துக்கொண்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ்காரர்கள் பல தொல்லை விளைவித்து விட்டார்கள்.”
“சில உபாத்தியாயர்கள் வெகு தூரம் மாற்றப்பட்டார்கள். சிலர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்கள். சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சில குடிசைகள் கொளுத்தப்பட்டன. சிலர் மரத்தில் கட்டிவைத்து அடிக்கப் பட்டனர். சிலரிடமிருந்து பணம் பறிக்கப்பட்டது. நீர்ப்பாசன வசதிகள் நிறுத்தப்பட்டன. மற்றும் அளவற்ற கஷ்டங்கள் அனுபவித்து வருகிறார்கள்.”
“கூட்டுத் தொகுதி வேண்டியதில்லை. தனித்தொகுதி மூலம் 18 ஸ்தானமே போதுமானது.”
“பெருத்த கிளர்ச்சி செய்து சீக்கிரத்தில் கூட்டுத்தொகுதி முறையை ஒழிக்க வேண்டும்.”
“காங்கிரஸ்காரர்கள் மந்திரிபதவி ஏற்காமல் செய்ததற்கு கவர்னருக்கு நன்றி செலுத்துகிறேன்” என்றும் இன்னும் இதுபோன்ற முக்கிய விஷயங்களும் தோழர் ஆர். சீனிவாசன் அவர்கள் அறிக்கையில் மலிந்து கிடக்கின்றன.
இப்போதாவது அவர்களுக்கு புத்தி வந்ததற்கு நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைகிறோம். இதற்கு காங்கிரஸ்காரர்கள் இதுவரை யாதொரு பதிலும் சொல்லவில்லை.
எனவே தாழ்த்தப்பட்ட மக்களும் அவர்கள் தலைவர்களும் இனியும் ஏமாந்துவிடாமலும் ஒரு துண்டுரொட்டிக்கு மானத்தை விற்றது போல் தங்கள் தங்கள் சுயநலத்துக்கு ஆக மானங்கெட்டு மதிகெட்டு இழிவடைந்து காங்கிரஸ்காரர்களின் கால்களை நக்கிக்கொண்டு திரியாமலும் சுயமரியாதையோடு வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 09.05.1937

மந்திரத்தினால் மாங்காய் விழுமா? - 22.03.1936

மந்திரத்தினால் மாங்காய் விழுமா?


வைதீகப்பழமான பண்டித மதன்மோகன மாளவியாவும் ஒரு சீர்திருத்தக்காரராம். அவருடைய சீர்திருத்தப்போக்கு மகா விநோதமானது. தீண்டாதார் தீக்ஷை பெற்றுவிட்டால் ஏனைய இந்துக்களைப் போல அவர்களும் ஆலயங்களுக்குள் போகலாம்; சுவாமி தரிசனம் செய்யலாம் என்பது அவருடைய கருத்து. ஆனால் தீண்டாமையைப்பற்றி ஸநாதனிகளுக்குள்ளேயே அபிப்பிராய பேதமிருந்து வருகிறது. பண்டித மாளவியா கோஷ்டியார் வேத சாஸ்திரங்களில் தீண்டாமைக்கு ஆதரவில்லை யென்கிறார்கள். ஏனைய மாறுதல் வேண்டாத ஸநாதனிகள் உண்டு என்கிறார்கள். மாறுதல் வேண்டாத ஸநாதனிகளும் அவர்களை ஆதரிப்பவர்களுமே அதிகமாயிருக்கிறார்கள். எனவே தீண்டாதார் துயரம் அவ்வளவு சுளுவாக நீங்குமென்று நம்புவதற் கில்லை. தீண்டாமையை ஒழிக்க எத்தனையோ பேர் இதற்குமுன் முயன்று பார்த்தும் பயன் ஏற்படாததினாலேயே மத மாறியாவது சுயமதிப்பைப் பெறுங்கள் என்று டாக்டர் அம்பேத்கார் தம் இனத்தாருக்கு யோசனை கூறுகிறார். அவர் யோசனைப்படி பலவிடங்களில் பலர் மத மாறியும் வருகிறார்கள். எனவே ஹிந்து அரசியல்வாதிகளுக்கு கிலி பிடித்திருக்கிறது. தீண்டாதார் மதம் மாறி விட்டால் ஹிந்துக்களின் அரசியல் பலம் குறைந்துவிடும். எனவே தீண்டாதாரை மேலும் ஹிந்து மதத்துக்குள்ளேயே வைத்திருக்க பண்டித மாளவியா போன்ற அரசியல் ஸநாதனிகள் பெருமுயற்சி செய்து வருகிறார்கள். சென்ற மஹா சிவராத்திரி காலத்து கங்கைக்கரையிலே அநேக தீண்டாதாருக்கு பண்டித மாளவியா தீக்ஷõ மந்திரம் உபதேசம் செய்து “சுத்தி”ப்படுத்தியதை நண்பர்கள் அறிந்திருக்கலாம். சென்ற 17ந் தேதியும் நாசிக்கில் அநேக தீண்டாதாருக்கு பண்டித மாளவியா தீக்ஷ மந்திரம் உபதேசம் செய்தாராம்.
நாசிக் ராமசாமி ஆலயத்தில் தரிசனம் செய்ய நாசிக் தீண்டாதார் வெகுகாலமாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். சத்தியாக்கிரகமும் செய்து பார்த்தார்கள். பலிக்கவில்லை. எனவே தீக்ஷ மந்திரம் மூலம் அவர்களை சுத்திப்படுத்தி ஆலயத்துக்கு அழைத்துச் செல்ல பண்டித மாளவியா முயன்று பார்க்கிறதாகத் தெரிகிறது. நாசிக் ஸநாதனிகளும் மாளவியா கோஷ்டியாரும் தீண்டாமை விஷயமாக விவாதம் நடத்திப் பார்த்தார்கள். பலம் பூச்சியம்தான். “ஐயோ அந்த வம்பர்களிடம் வாதம் செய்து ஜெயிக்க முடியாது” என்று சாது மாளவியாவே வாய்விட்டுக் கூறிவிட்டாராம். “என்னாலான மட்டும் முயன்று பார்த்தேன். திருப்தியான பலன் கிடைக்கவில்லை” என்றும் ஒப்புக்கொண்டாராம். தீண்டாமையை ஒழித்து, ஒடுக்கப்பட்டவர்களை முன்னேற்ற பண்டித மாளவியா உண்மை யாகவே ஆசைப்படலாம். அவரது அந்தரங்க சுத்தியைப்பற்றி நமக்குச் சந்தேகமே இல்லை. ஆனால் தீண்டாமையை ஒழிக்க அவர் கையாளும் முறை பலனளிக்கக் கூடியதுதானா என்பதே கேள்வி. முதலில் ஒடுக்கப் பட்டவர்களுக்கு தீக்ஷõ மந்திரம் உபதேசம் செய்யத் தேவையென்ன? ஹிந்துக்கள் அல்லாதவர்களை ஹிந்து மதத்தில் சேர்க்க தீக்ஷõ மந்திரம் உபதேசம் செய்தால் அதற்குப் பொருளுண்டு. ஒடுக்கப்பட்டவர்களும் ஹிந்துக்களே என்று பண்டித மாளவியா ஒப்புக்கொண்டிருக்கையில் அவர்களுக்கு தீக்ஷ மந்திரம் உபதேசம் செய்வது அவர்களை அவமதிப்பதே யாகும். சுயமரியாதையுடைய ஆதி இந்துக்கள் அதைப் பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். தீக்ஷ மந்திரம் உபதேசம் செய்வதினால் ஆதி இந்துக்களிடம் பிறவியிலேயே ஏதோ குறை இருப்பதாகக் கருதப்படு கிறது. உண்மையில் அத்தகைய குறைகள் எதுவுமில்லை. ஆதி இந்துக்களும் இந்துக்களானால் அவர்களும் ஏனைய இந்துக்களுக்கு ஒப்பானவர்களே. எனவே பண்டித மாளவியாவின் சீர்திருத்த முயற்சிக்கு அர்த்தமே இல்லை. இம்மட்டோ? அவருடைய முயற்சி ஆதி இந்துக்களை அவமதிக்கக் கூடியதாக இருக்கிறது.
பண்டித மாளவியாவின் மந்திரோபதேசத்தினால் தீண்டாமை யொழியவும் செய்யாது. பண்டிதரிடம் தீக்ஷõ மந்திரோபதேசம் பெற்றவர்கள், தீக்ஷை பெற்ற தீண்டாதவரா யிருப்பார்களேயன்றி இந்துக்கள் ஆகிவிட மாட்டார்கள். தீண்டாமைக்கு அடிப்படையாயுள்ளது ஜாதி. ஜாதி ஒழியாமல் தீண்டாமை ஒழியவே செய்யாது. ஆகவே பண்டித மாளவியாவின் முயற்சி வீண் முயற்சியாகும்.
குடி அரசு கட்டுரை 22.03.1936

Saturday, 15 April 2017

தீண்டாதார் துன்பம் – 21.02.1932

தீண்டாதார் துன்பம்


வெள்ளைக் காரர்களைப் பார்த்து “நீங்கள் எங்களைக் கொடுமைப் படுத்துகிறீர்கள்! ஆகையால் உங்களுடைய அரசாட்சி எங்களுக்குப் பிடிக்க வில்லை; ராஜ்யத்தை எங்களிடம் விட்டு விட்டு நீங்கள் உங்கள் தேசத்திற்குப் போய் விடுங்கள்; நாங்கள் ஒற்றுமையாயிருந்து எங்கள் தேசத்தை ஆண்டு கொள்ளுவோம்” என்று சுயராஜ்ய வாதிகள் கூச்சலிடுகின்றனர்; இதற்காகச் சட்டமறுப்பு செய்கின்றனர்; சிறைக்குச் செல்கின்றனர்; இன்னும் சத்தியாக் கிரகத்தின் பெயரால் என்னென்ன காரியங்களையோ செய்து கொண்டிருக் கின்றனர். ஆனால் வடநாட்டில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள கலகமும் வெறுப்பும் இன்னும் ஓய்ந்த பாடில்லை. இவர்கள் ஒற்றுமையாய் வாழ்வதற்குரிய காரியங்களைச் செய்யவும் இல்லை.
இது ஒரு புறமிருக்க மிகவும் பரிதாபகரமான வாழ்வில் இருந்து துன்பப்படும் ஆதிதிராவிடர் போன்ற தீண்டாத மக்களின் கதி இன்னும் மோசமானதாகவே இருந்து கொண்டிருக்கின்றது. தீண்டாதவர்கள் கோயில் பிரவேசத்தின் பொருட்டு நாசிக்கிலும், குருவாயூரிலும் சத்தியாக்கிரகம் புரிந்து கொண்டு துன்பப்படுதலும், அவர்களை வைதீக இந்துக்கள் எதிர்த்துத் துன்பப்படுத்துதலும் ஒரு புறமிருக்க, அவர்கள் தங்கள் மட்டிலாவது சுத்தமாகவும், நாகரீகமாகவும் சௌகரியமாகவும் வாழக்கூட மனஞ்சகிக்காத இந்துக்கள் அவர்களுக்குப் பண்ணும் கொடுமை மிகவும் அநீதமாக இருக்கின்றது என்ற விஷயம் நமது நாட்டு மக்களுக்கு தெரியாததல்ல. சென்ற ஆண்டில் ராமநாதபுரம் ஜில்லாவில் ஜாதி இந்துக்கள் தீண்டாதவர்களுக்குச் செய்த கொடுமையும், திருச்சி ஜில்லாவில் ஜாதி இந்துக்கள் தீண்டாத வர்களுக்குச் செய்த கொடுமையும் இன்னும் மறக்கப்படவில்லை. இது போலவே ஒவ்வொரு கிராமத்திலும் தீண்டாதவர்களுக்குப் பல கஷ்டங் களிருந்து வருகின்றன. ஆனால் அத்தீண்டாத மக்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு உயர் ஜாதி இந்துக்களின் கையையே எதிர்பார்த்திருப்பதாலும், பெரும்பாலானவர்கள் கல்வி அறிவும் உலக நாகரீக உணர்ச்சியும் இல்லாமை யால் “தங்களை ஆண்டவன் என்பவன் தீண்டாதவராகவே கஷ்டப்படும்படி படைத்தான்; எல்லாம் தமது தலை விதியின் படி நடக்கும்” என்ற நம்பிக்கை யுடையவர்களாயிருப்பதனாலும் தங்கள் துன்பத்தைச் சகித்துக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.
இப்படியில்லாமல் தீண்டாத மக்கள் கொஞ்சம் சுயமரியாதை உணர்ச்சி பெற்றுத் தங்களைச் சீர்திருத்தம் செய்து கொள்ள முந்துவார்களானால், அப்பொழுதே அவர்களை முன்னேற ஒட்டாமல் நசுக்கிப் பழைய சாக்கடை யிலேயே அமிழ்த்தி வைக்க ஜாதி இந்துக்கள் தயாராகிவிடுகிறார்கள். இதற்கு உதாரணமாக இப்பொழுது சேலம் ஜில்லா ராசிபுரம் தாலூக்கா, தாத்தைய் யங்கார் பட்டி கிராமத்திலிருக்கும் தீண்டத்தகாத மக்களை, அவர்கள் முன்னேற்றமடையாதபடி அடக்கி வைக்க உயர் ஜாதி மக்கள் அவர்களுக்கு விதித்திருக்கும் நிபந்தனைகளைப் பார்த்தால் விளங்கும். இதைப் பற்றி அவர்கள் சேலம் ஜில்லா கலெக்டருக்கும், போலீஸ் சூப்பரின்டெண்டுக்கும் செய்து கொண்டிருக்கும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுக் காட்டியிருக் கின்றனர்.
“எங்களூர்க் குடியானவர்கள், நாங்கள் நாகரிகமாய் இருப்பதற்காகப் பொறாமைப்பட்டு எங்களைக் கண்ட இடங்களில் எல்லாம் அடித்தும், எங்கள் தெருப் பெண்களை வாய்க்கு வந்தபடி திட்டியும் கஷ்டப்படுத்து கிறார்கள். அதோடு அல்லாமல் கீழ்க்கண்ட நிபந்தனைகள் ஏற்படுத்தி அதன்படி நடக்காது போனால் எங்கள் கால்களை ஒடித்து விடுவோம்” என்று சொல்லு கிறார்கள்.
நிபந்தனைகள் :-
  1. பறையர்கள் கிராப்பு வைக்கக் கூடாது
  2. பள்ளிக்கூடம் தெருவில் இருக்கவும் கூடாது, படிக்கவும் கூடாது.
  3. வெள்ளை வேஷ்டிக் கட்டக்கூடாது; அழுக்கு வேஷ்டி யிலிருந் தாலும் முழங்காலுக்கு மேல் கட்ட வேண்டும்.
  1. பெண்கள் மார் ஆடை போடக்கூடாது; மீறி மார் ஆடைப் போட் டால் மாரை அறுத்துவிடுவது.
  2. நாகரிகமான நகைகள் போடக் கூடாது.
  3. குடைகள் பிடிக்கவும் கூடாது; குடையிருந்தால் நெருப்பு வைத்துக் கொளுத்தி விடவேண்டும்.
  4. பெட்டிகள் கையில் கொண்டு வரக்கூடாது; புஸ்தகமும் கையில் பிடிக்கக்கூடாது.
என்பது தீண்டாதவர்களின் விண்ணப்பம். இந்தக் கொடுமைகளை யார் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? என்று கேட்கின்றோம். இந்த நிலைதான் கிராமாந்தரங்களிளெல்லாம் இருந்து வருகின்றது. இதை மாற்றுவதற்கு இது வரையிலும் என்ன முயற்சியை, எந்தத் தேசீயவாதிகள் செய்தார்கள் என்று கேட்கிறோம். அந்நியர்கையில் அதிகாரமும், தாங்கள் சுதந்தரமின்றி அந்நிய நாட்டினர்க்கு அடிமையாக இருக்கும் இக்காலத்திலேயே இந்த உயர்ஜாதி இந்துக்கள் தீண்டாதவர்களுக்கு இக்கொடுமையைச் செய்வார்களாயின் இவர்கள் கையில் ஆட்சியும் அதிகாரமும் கிடைத்துவிட்டால் அவர்களைச் சித்திரவதை செய்யமாட்டார்களா? என்று யோசித்துப்பாருங்கள்.
இம் மாதிரி வலுத்தவர்கள் இளைத்தவர்களுக்குக் கொடுமை செய்வதை பொருட்படுத்தாத ஒரு தேசீயம், அல்லது ராஜீயம் எதற்குப் பயன்படும்? இவ்வாறு தீண்டாதவர்களைக் கொடுமைப்படுத்தும் எண்ணத்தை உயர் ஜாதி இந்துக்களின் மனத்தில் பதிய வைத்திருப்பதற்கு காரணம், பாழும் மதமும், வைதீகமும், பழக்க வழக்கங்களுமே அன்றோ? ஆகையால் இந்தப் பாழும் மதமும், வைதீகமும், பழக்க வழக்க மூட நம்பிக்கையும் தொலைந்தாலொழிய உயர் ஜாதி இந்துக்களின் மனத்தில் மாறுதல் ஏற்படுமா? ஒருக்காலும் முடியாது. ஆகவே இனியும் தீண்டாத வர்கள் கடவுளையோ மதத்தையோ நம்பிக்கொண்டிருந்தால் ஒரு சிறிதும் முன்னேற்ற மடையப் போவதில்லை. தம்மையே நம்பி இடைவிடாது கிளர்ச்சிச் செய்வதன் மூலமும், வைதீகர்களாகிய அரசியல் கிளர்ச்சிகாரர்கள் எல்லாம் “சுயராஜ்யம் வந்தபிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறும் வார்த் தைக்கு ஏமாறாமல் முயற்சிசெய்வதன் மூலமும்தான், தாங்கள் விடுதலை பெற்று மனிதர்களாக வாழ முடியுமென்று எச்சரிக்கின்றோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 21.02.1932

Thursday, 13 April 2017

அண்ணல் அம்பேத்கர் பற்றி பெரியார் - III

அண்ணல் அம்பேத்கர் பற்றி பெரியார் - III

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசாங்க நிர்வாக சபை மெம்பர் என்கின்ற முறையில் சென்னைக்கு வந்து 4, 5 நாள்கள் தங்கி இருந்து பல இடங்களில் பேசிவிட்டுப் போய் இருக்கிறார்.
அப்படி அவர்கள் பேசிய பேச்சுகளில் பார்ப்பனர்கள் பெரிய உத்தியோகங்களில் பதவிகளில் இருந்தால் எப்படி பார்ப்பனிய ஆதரவுக்கும் நலத்துக்கும் துணிகரமாய் வெள்ளையாய் பேசுவார்களோ அதுபோலவே பச்சையாய் பேசுகிறார் என்பது மிகுதியும், அதிசயப்படவும், பாராட்டத்தக்கதுமான காரியமாகும்.

நம் எதிரிகள் அவரை சர்க்கார்தாசர் என்று சொல்லக்கூடும்.  அதைப் பற்றி அவர் சிறிதும் பயப்படவில்லை.  பதவிக்கு அவர் வந்த உடன் இந்தப் பதவிக்கு நான் வந்ததின் பயனாய் என் இன மக்களின் நலத்துக்கு இப்பதவியைப் பயன்படுத்த முடியுமானால் - என் இன மக்களுக்கு ஏதாவது நலம் செய்ய முடியுமானால் நான் இதில் இருப்பேன், இல்லாவிட்டால் நான் வெளிவந்துவிடுவேன் என்று சொன்னார்.  அதுபோலவே பதவிக்கு அவர் சென்றது முதல் ஒவ்வொரு மூச்சிலும் தன் இனத்தின் பெயரையும் நிலைமையையும் எடுத்துச் சொல்லி சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் தன் இனத்தின் நலத்துக்கு ஏதாவது காரியங்கள் செய்து கொண்டு எதிரிகளை வெள்ளையாய் கண்டித்துப் பேசி நடுங்கச் செய்தும் வருகிறார்.
அவருக்கு அவருடைய வகுப்பாருடைய ஆதரவு இருக்கிறதா என்றால் அது பூஜ்ஜியம் என்பதோடு இனத்தார் அத்தனை பேரும் தனக்கு ஆதரவளிக்கும்படியான வலிமை பொருந்திய ஸ்தாபனமும் இல்லை.  இனத்தின் தக்க செல்வமோ செல்வாக்கோ துணிந்து வெளிவந்து ஆதரவளிக்கக் கூடியது ஆளுகளும் மிகக்குறைவு.
100 க்கு 99 பேர் ஏழை, கூலி தரித்திர மக்கள்.  இப்படிப்பட்ட நிலையில் உள்ள அவர், உத்தியோகம் தனக்குக் கிடைக்கத்தக்க விதமாக தனது வாழ்வில் பல அவதாரம் எடுக்காமலும் எதிரிகளிடம் நல்ல பேர் வாங்க -_ அவர்கள் மெச்சும்படி நடக்காமலும், இந்துக்களையும் இந்து மதத்தையும், இராமாயணம், மனுஸ்மிருதி முதலியவைகளையும் பார்ப்பனர்களையும் பச்சையாய் வைது கண்டித்து சிலவற்றைக் கொளுத்த வேண்டும் என்றும், சிலவற்றைத் தீயில் கொளுத்தியும் நான் இந்து மதத்தை விட்டு வெளியே போய்விடுகிறேன் என்றும், தேசியம் என்பது புரட்டு, தேசிய சர்க்கார் என்பது பார்ப்பன ஆட்சி, தேசிய சர்க்காரைவிட இன்றுள்ள சர்க்காரே மேல் என்றும் பேசி வருகிறார்.  மற்றும் தேசிய சர்க்கார் ஏன் கெடுதி என்றால்,  எந்த சுதந்திர தேசிய சர்க்கார் வந்தாலும் அது பார்ப்பன, வர்ணாசிரம, சர்க்காராகத்தான் இருக்கும் என்றும் வெடி வெடிக்கும் மாதிரியில் பேசி, தன் இன மக்களின் நம்பிக்கையையும், பாராட்டுதலையும் பெற்றுக் கொண்டு சட்டதிட்டங்களை லட்சியம் செய்யாமல் பேசி வருகிறார்.
இவரைப் பார்ப்பனர் சபிக்கலாம், காங்கிரசுக்காரர்கள் வையலாம், தேசியம் பத்திரிகைகள் யோக்கியப் பொறுப்பில்லாமல் எழுதலாம்; மற்றும் வகுப்புப் பேரால் பதவி பெற்று பதவிக்குப் போய் வகுப்பை மறந்துவிட்டு தங்கள் குடும்ப நலத்திற்கு ஆக பதவி அனுபவிப்பவர்கள் பொறாமைப்பட்டு இந்தச் சனியன் பிடித்த டாக்டர் அம்பேக்கர் நம்ம யோக்கியதை வெளியாகும்படி நடக்கிறாரே என்று பொறாமையும் ஆத்திரமும் கொள்ளலாம். ஆனால் தோழர் அம்பேத்கர் மேற்கண்டபடி பேசுவதும் நடப்பதும் இந்த நாசமாய்ப் போன சுயமரியாதை அற்ற பார்ப்பனரல்லாத சமுதாயத்தைத் தவிர மற்ற சமுதாயக்காரர்களின் பதவி பெற்ற எவ்வளவு தாழ்ந்த மனிதனும் செய்கிற காரியமே தவிர அம்பேத்கருக்கு மாத்திரம் புதிதல்ல.  ஆனால் மற்றவர்களைவிட இவர் சற்று வெளிப்படையாய் பேசுகிறார், எழுதுகிறார் என்று சொல்லிக் கொள்ளலாம்.  உதாரணமாக டாக்டர் அம்பேத்கர் சென்னை நகரசபை வரவேற்புக்குப் பதில் சொல்லும்போது பேசியதைக் கவனிப்போம்.
ஒரு கூட்டத்தார் எனக்கு வரவேற்புக் கொடுக்க சம்மதிக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். அதற்கு ஆகவே இந்த வரவேற்பைப் பெற நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏன் எனில் இந்த வரவேற்பு சடங்குமுறை வரவேற்பல்ல என்பதும் எனக்கு வரவேற்புக் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்பவர்கள் பிடிவாதமாய் இருந்து மெஜாரிட்டியாய் இருந்து வெற்றிபெற்று எனக்குக் காட்டிய அன்பென்றும் கருதுவதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பேசினார்.
அடுத்தார்போல் தேசியப் பித்தலாட்டத்தைப் பட்டவர்த்தனமாக்கினார்.
என்னவெனில், தேசிய சர்க்கார் என்றால் பார்ப்பன சர்க்கார்தானே!  1937இல் தேசியம் வெற்றிபெற்ற 7 மாகாணங்களும் பார்ப்பன முதல் மந்திரிகள் ஆதிக்கத்தில்தானே இருந்து வந்திருக்கிறது. நாளைக்கு எல்லா மக்களுக்கும் ஓட்டுக் கொடுத்து அதன்மூலம் ஒரு சர்க்காரை ஏற்படுத்தினாலும் அதிலும் பார்ப்பனர்கள்தானே ஆட்சி செலுத்துவார்கள்? இது மாத்திரமா, பெண்களுக்கு ஸ்தானம் வழங்கினாலும் அதிலும் பார்ப்பனத்திகளே மெஜாரிட்டியாய் வருகிறார்கள்;  தொழிலாளருக்கு ஸ்தானம் வழங்கினாலும் அதற்கும் பார்ப்பனர்களே பிரதிநிதிகளாய் வருகிறார்கள்.  இதுமாத்திரமா, தீண்டாத வகுப்பாருக்கு ஸ்தானம் வழங்கினாலும் அதிலும் பார்ப்பனர்கள் பிடித்துவைக்கிற ஆள்கள் தான் வருகிறார்களே தவிர வேறு யார் வருகிறார்கள்?  ஆகவே தேசிய சர்க்கார் என்னும் பித்தலாட்டத்திற்கும் இந்த நாட்டின் மானக்கேடான அரசியல் நிலைக்கும் இந்த உதாரணம் போதாதா என்று பேசுகிறார். இதற்குப் பார்ப்பனர்கள் தானாகட்டும் தேசியர்கள் தானாகட்டும் என்ன பதில் சொல்லக் கூடும்?
நான்சென்ஸ், ரப்பிஷ் என்று குரைத்து தங்கள் அயோக்கியத்தனங்களை மறைக்க முயற்சிக்கக் கூடுமே ஒழிய வேறு என்ன சமாதானம் சொல்ல முடியும்? சுயமரியாதை இயக்கம் இல்லாவிட்டால் இதெல்லாம் (இப்படி பார்ப்பனர் வெற்றிபெற்றது) கடவுள் செயல், அந்தராத்மா கட்டளை என்று சொல்ல முடியும். இப்போது தலையைக் கவிழ்ந்துகொள்ள வேண்டியதைத் தவிர இதற்கு வேறு பதில் இல்லை.
- குடிஅரசு - தலையங்கம் - 30.09.1944

அண்ணல் அம்பேத்கர் பற்றி தந்தை பெரியார் - II

அண்ணல் அம்பேத்கர் பற்றி தந்தை பெரியார் - II


காலஞ்சென்ற நண்பர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் அரிய முயற்சியால் இந்தக் கல்வி ஸ்தாபனங்கள் ஆரம்பிக்கப்பட்டு அவரே இவைகளை தனது ஆயுள் முழுவதும் முன்னின்று நடத்திக்கொண்டு வந்தார் என்பதைக் கேள்விப்பட்டு நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்தியாவிலேயே தலைசிறந்த அறிவாளிகள் என்று கருதப்படும் சிலரில் ஒருவர் ஆவார். அவர் தனது வாழ்நாள் முழுவதும் மக்களை அறிவைப் பயன்படுத்கிறவர்களாகவும் அறிவுக்கு முழுச்சுதந்திரம் கொடுப்பவர்களாகவும் ஆக்கவேண்டும் என்பதற்காகவே பாடுபட்டவரும் ஆவார். அவர் நம்மைப் போலவே சாதாரண மனிதர்களில் ஒருவர் ஆவார்.
சக்திக்கு மேற்பட்ட எந்தவித தெய்வீக சக்தி என்பதோ தன்மையோ ஏதும் அவரிடத்தில் கிடையாது. அவர் ஒரு மகானோ, மகாத்மாவோ, முனிவரோ, ரிஷியோ, தவசிரஷ்டரோ, வரப்பிரசாதியோ அல்ல. அவர் சித்தார்த்தர் எப்படி ஒரு சாதாரண மனிதராக இருந்து மனித சமுதாயத்திற்கு எப்படிப்பட்ட தொண்டு ஆற்றமுடியுமோ அப்படிப்பட்ட தொண்டாற்றி வந்தார்.
புத்தர் அரச குடும்பத்தினராகப் பிறந்தார். ஆனால் அம்பேத்கர் அவர்களோ அந்த மாதிரி பிறக்கும் போதே வசதியோடு பிறந்தவர் அல்ல, டாக்டர் மிகவும் வசதியில்லாத நிலையிலிருந்து, தன்னுடைய உழைப்பாலும், சுய அறிவினாலும் முயற்சியாலும், உயர்ந்த நிலைக்கு வந்து மக்களுக்கு பயன்படத்தக்க மாதிரியான வகையில் தொண்டாற்றினார்.
இந்தியாவில் எத்தனையோ மகாத்மாக்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ரிஷிகள், தவிசிரேஷ்டர்கள், அவதாரங்கள் எல்லாம் தோன்றியிருக்கிறார்கள். ஏராளமாக ஆனால் அவர்களால் மக்கள் என்ன லாபம் பெற்றார்கள் என்று பார்த்தால், அந்த மகாத்மாக்கள் முதலியவர்கள் மோட்சத்திற்குப் போனார்கள், புகழ் பெற்றார்கள் என்பதைத்தவிர வேறு மக்களுக்கு எந்த வகையிலும் எந்தவித நன்மையும் ஏற்பட்டது கிடையாது. இந்த நாட்டில் மக்களைப் பார்த்து நீங்கள் உங்கள் அறிவுக்கு வேலைகொடுங்கள். அறிவின்படியே நடவுங்கள் என்று சொன்னவர்கள் 2500 வருஷங்களுக்கு முன் புத்தரும் அவருக்குப் பிறகு டாக்டர் அம்பேத்கரும்தான் காணப்படுகிறார்கள். வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம்.
இந்த இரண்டு பேர்களும் தங்களது வாழ்நாள் பூராவிலும் பலமான எதிர்ப்பைக் கண்டார்கள். அவர்களது தொண்டிற்குப் பலத்த எதிர்ப்பு இருந்தது என்பது உண்மை என்றாலும் அவர்களது கொள்கைக்கு மக்களிடத்தில் நல்ல மரியாதையும் செல்வாக்கும் வளர ஆரம்பித்தன. இந்த நாட்டில் எந்த முட்டாளும் மகான் ஆகலாம். எந்த மடையனும் மகாத்மா ஆகிவிடலாம். ஆனால் அறிவுப்படி நடவுங்கள் என்று கூறிப் பிரசாரம் செய்ய ரொம்ப துணிவும், எதிர்பைத் தாங்க மாபெரும் அறிவு சக்தியும், உண்மையான மக்கள் பற்றும் வேண்டும்.
தொண்டுக்கு அளவுகோல்
இன்றைக்கு இருக்கும் பெருந்தலைவர்கள் எனப்படும் பலரும் விளம்பரத்தாலும் மற்றவர்களுடைய பாராட்டினாலும் பெரிய ஆட்கள் ஆனார்களே தவிர, தங்களது அறிவினாலோ, அனுபவ ஆராய்ச்சி காரண-மாகவோ, அல்லது மக்களுக்குப் பயன்படும் வகையில் தொண்டாற்றியமை காரணமாகவோ கிடையாது. அப்படி உண்மையான தொண்டு புரிபவர்களுக்கு மக்களிடத்தில் செல்வாக்கும் புகழும் கிடைப்பதற்குப் பதில் எதிர்ப்பும் வசவுகளும்தான் கிடைக்கும். உண்மையான பொதுத்தொண்டுக்குரிய அளவுகோல் அதுதான். அந்த முறையில் சமுதாயத்தில் எதற்காக 100க்கு 97 பேராக இருக்கிற மக்கள் கீழ்ஜாதி மக்களாகவும், அடிமைகளாகவும், தற்குறி-களாகவும், உடலுழைப்புக்கார மக்களாகவும், இருக்க வேண்டும் என்பதாக உணர்ந்து அதற்குக் காரணமானவற்றை ஒழித்து, மனிதத் தன்மையும் அறிவும் உண்டாகும்படி டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பாடுபட்டார்கள். மனித சமுதாயத்தின் நல்வாழ்வுக்குப் பாடுபட்டதன் காரணமாகத்தான் அவர் புகழ் ஓங்கவேண்டிய அளவுக்கு ஓங்கவில்லை.
- விடுதலை - 04.03.1959

அண்ணல் அம்பேத்கர் பற்றி பெரியார் - I

அண்ணல் அம்பேத்கர் பற்றி பெரியார் - I


அம்பேத்கர் உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இவ்வளவு பெரிய அறிஞராக விளங்கக் காரணம் என்ன? படிப்பு, திறமை, என்று சொல்வதெல்லாம் இரண்டாவதுதான். அவரைவிடப் படித்தவர்கள், திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் அம்பேத்கர் பெரிய அறிவாளியாக விளங்கக் காரணம் அவரது படிப்பு, திறமை என்பவை மாத்திரமல்ல; அவருடைய படிப்பும் திறமையும் நமக்குப் பயன்படுகிற தன்மையில் இருப்பதால்தான் அவரை அறிவாளி என்று சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் படிப்புத் திறமையெல்லாம் வேறு விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.


அம்பேத்கர் ஒரு நாஸ்திகர். அவர் இன்றல்ல; நீண்ட நாளாகவே நாஸ்திகர். ஒன்று சொல்லுகிறேன். உலகத்தில் யார் யார் பெரிய அறிவாளிகளாக இருக்கிறார்களோ அவர்களெல்லாம் நாஸ்திகர்கள்தான்; நாஸ்திகனாக இருக்கிறவர்கள்தான் ஆராய்ச்சியின் சிகரமாக, அறிவு பிரகாசிக்கக் கூடிய மனிதராக ஆகமுடிகிறது. அவர்கள்தான் தங்கள் படிப்பை, திறமையைப் பயன்படுத்துகிறார்கள்.
நம் நாட்டில் அறிஞர் கூட்டம் என்பவரெல்லாம் எடுத்துச் சொல்லப் பயப்படுவார்கள். இதுபோலல்லாமல் தைரியமாக அம்பேத்கர் எடுத்துச் சொல்லி வந்திருக்கிறார்.
இப்பொழுது அதிசயமாக உலகம் பூராவும் நினைக்கும்படியான சம்பவம் ஒன்று நடந்தது. அதுதான் அம்பேத்கர் புத்தமதத்தில் சேர்ந்தது. இப்போது பேருக்குத்தான் அவர் புத்தமதத்தில் சேர்ந்ததாகச் சொல்கிறாரே தவிர அம்பேத்கர் வெகுநாட்களாகவே புத்தர்தான்.
டாக்டர் அம்பேத்கர் 20, 30 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தே இந்து மதத்தை ஒத்துக்கொள்வதில்லை. அவர் காந்தியைப்பற்றிச் சொல்லும் போது ‘காந்தி ஒரு பச்சை இந்து. மனுதர்ம முறை, வருணாசிரம முறையைப் பாதுகாக்க நினைப்பவர். அவர் ஆதித்திராவிட மக்களுக்கு என்ன செய்ய முடியும்?’ என்று கடுமையாகத் தாக்கி வருணாசிரம ஆதார சுலோகங்களையெல்லாம்கூட எடுத்துப்போட்டு, காந்தி பச்சை இந்துவாக இருப்பதால்தான் அவர் புத்தி இப்படிப் போகிறது என்று எழுதினார்.
1930_35லேயே ஜாதி ஒழிப்பில் அம்பேத்கர் தீவிரக் கருத்துள்ளவராக இருந்தார்; ஜாதி ஒழிப்புக்காக பஞ்சாபில் (“ஜாத்மத்தோடகமண்டல்’’ என்று கருதுகிறேன்.) ஒரு சபை ஏற்படுத்தியிருந்தார்கள். என்னைக்கூட, அதில் ஒரு அங்கத்தினராகச் சேர்த்திருந்தார்கள். அந்தச் சபையினர் ஜாதி ஒழிப்பு மாநாடு என்பதாக ஒரு மாநாடு கூட்ட ஏற்பாடு செய்து அந்த மாநாட்டுக்கு அம்பேத்கர் அவர்களைத் தலைமை வகிக்கக் கேட்டுக் கொண்டார்கள். அவரும் ஒத்துக் கொண்டு தலைமையுரையாக (ணீபீபீக்ஷீமீss) 100 பக்கம் ஆங்கிலத்தில் எழுதினார். அதில் பல ஆதாரங்களை எடுத்துப்போட்டு ஜாதி ஒழிய இந்து மதமே ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். இதைத் தெரிந்து அவரிடம் ‘உங்கள் மாநாட்டுத் தலைமை உரையை முன்னாடியே அனுப்புங்கள்’ என்று கேட்டு வாங்கிப் பார்த்தார்கள். அதில் ஆதாரத்தோடு இந்து மதம் ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்துவிட்டு “உங்கள் தலைமையுரை எங்கள் சங்க மாநாட்டில் படிப்பதற்கு ஏற்றதாக இல்லை. ஜாதி ஒழிப்புச் சங்கமே தவிர, இந்து மத ஒழிப்புச் சங்கமல்ல. ஆகையால் நீங்கள் இந்து மதம் ஒழிய வேண்டும் என்கிற அந்த ஒரு அத்தியாயத்தை (சிலீணீஜீtமீக்ஷீ) நீக்கிவிடவேண்டும் என்று அம்பேத்கரிடம் கேட்டார்கள். அதற்கு அம்பேத்கர் ‘ஜாதி ஒழிப்பிற்கு இந்து மதம் ஒழியவேண்டும்’ என்கிறதுதான் அஸ்திவாரம். அதைப்பேசாமல் வேறு எதைப்பேசுவது? ஆகையால், அதை நீக்கமுடியாது என்று சொல்லிவிட்டார்.
பின் மாளவியா ஏதேதோ சமாதானமெல்லாம் சொன்னார். அதற்கும் அவர் “நான் தலைமை உரையைப் பேசுகிறபடி பேசுகிறேன்; நீங்கள் வேண்டுமானால் அதைக் கண்டித்து மாநாட்டில் பேசுங்கள்: தீர்மானம் வேண்டுமானாலும் போடுங்கள், நான் முடிவுரையில் அதுபற்றிப் பேசுகிறேன்’’ என்று சொல்லிவிட்டார். பிறகு மாநாடே நடக்காமல் போய்விட்டது. நான் அம்பேத்கரிடம் அந்தப் பேச்சை வாங்கி “ஜாதியை ஒழிக்கும் வழி’’ என்று தமிழில் புத்தகமாகப் போட்டு வெளியிட்டேன். அவர் அப்போதே அவ்வளவு தீவிரமாக இருந்தார்.
நாம் இராமாயணத்தைப்பற்றி வாயால் பேசிக்கொண்டிருக்கும் போதே, அதாவது 1932 லேயே அவர் இராமாயணத்தைக் கொளுத்தினார். அந்த மாநாட்டுக்கு சிவராஜ்தான் தலைவர், இதெல்லாம் குடியரசில் இருக்கிறது.
அவர் ஒரு தடவை சென்னைக்கு வந்திருந்தபோது, கீதையைப்பற்றிப் பேசும்போது, கீதை ஒரு பைத்தியக்காரனின் உளறல் என்றே பேசினார். அப்போது சி. பி. ராமசாமி அய்யர் போன்றவர்கள் இதென்ன அக்ரமம்; வெறும் அம்பேத்கர் பேசியிருந்தால்கூடக் கவலையில்லை; ஒரு கவுன்சில் மெம்பராக இருக்கிற அம்பேத்கர் அதுவும் சென்னையில் வந்து, கீதை பைத்தியக்காரனின் உளறல் என்று பேசுவதென்றால் அக்ரமம் என்றெல்லாம் கூச்சல் போட்டார்கள்.
நான் 1930இல் ஈரோட்டில் நடந்த சீர்திருத்த மாநாட்டிற்கு அம்பேத்கரை அழைத்தேன். அந்த மாநாட்டுக்கு, சண்முகஞ் செட்டியார் வரவேற்புரை அளித்தார். என்ன காரணத்தாலோ அம்பேத்கர் வரவில்லை. அவருக்குப் பதிலாக ஜெயக்கர் வந்திருந்தார். அவர் ஏதோ நம்மைப் பாராட்டிப் பேசிவிட்டுப் போய்விட்டார். அம்பேத்கர் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அந்தச் சமயத்தில்தான் அம்பேத்கர் இஸ்லாம் ஆகப்போகிறேன் என்று சொன்னார். நானும் ராமனாதனும் இங்கிருந்து தந்தியடித்தோம். தயவுசெய்து அவசரப்பட்டுச் சேர்ந்துவிடாதீர்கள். குறைந்தது 1 லட்சம் பேராவதுகூட பின்னால் வந்தார்கள் என்றால்தான் அங்கும் மதிப்பிருக்கும்; இல்லா விட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும். அவர்களோ கைவைக்கக் கூடாத மதம் (றிமீக்ஷீயீமீநீt ஸிமீறீவீரீவீஷீஸீ) என்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். எவனுக்குமே கைவைக்க உரிமையில்லை என்பவர்கள். வெறும் தொழுகை அது இது எல்லாம் உங்களுக்கு ஜெயில் போலத்தான் இருக்கும். தனியே போவதால் அங்கும் மரியாதை இருக்காது, உதைக்க வந்தால்கூட சிபாரிசுக்காவது ஆள்வேண்டாமா? என்று சொன்னோம். அதன் பிறகு யார் யாரோ அவர் வீட்டிற்குப் போய் மதம் மாறக்கூடா தென்று கேட்டுக் கொண்டார்கள். பத்திரிகையில் வந்தது. அப்போதே அவர் மதம் மாறுவதில் தீவிர எண்ணம் வைத்திருந்தார். எப்படியோ கடைசியாக இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார்.
என்றாலும் அவர் ஏற்கெனவே புத்தர்தான்.
நாங்கள் உலக புத்தர் மாநாட்டிற்குச் சென்றபோது அவரை பர்மாவில் சந்தித்தேன். புத்தர் மாநாட்டில் நான் பேசுவதாக ப்ரோகிராமில் (நிகழ்ச்சி நிரல்) போட்டிருந்தார்கள். ஆனால், எனக்குச் சொல்லவில்லை. நான் போனேன். பிறகு என்னமோ வேறொருவரை பேசச் சொல்லிவிட்டார்கள் அப்போது அம்பேத்கர் என்னிடம் இன்றைக்குக் கையெழுத்துப்போட்டு புத்தமதத்தில் சேர்ந்துவிடுவோம், என்று சொன்னார்.
அதோடு தைரியமாக இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார். சேர்ந்த பிறகு ஒரு அறிக்கை வெளியிட்டார். நான் இனிமேல் ராமன், கிருஷ்ணன், சிவன், இந்திரன் முதலியவைகளைக் கடவுளாக ஏற்றுக் கொள்வதில்லை. அவதாரங்கள் என்பவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. உருவ வணக்கத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ஜாதிமுறையில், இன்னும் மோட்சம் நரகம் இவற்றை நம்பு-வதில்லை; சடங்கு, திதி - திவசங்கள் ஆகியவைகளில் நம்பிக்கையில்லை. இனிமேல் இவைகளைச் செய்யமாட்டேன். இதுபோல இன்று நாம் எதை எதைக் கண்டிக்கிறோமோ, ஒத்துக்கொள்வதில்லையோ, அதையெல்லாம் சொல்லியிருக்கிறார்.
அம்பேத்கர் மக்களுக்கு வழி காட்டுபவர். ஜாதிமதக் குறைபாடுகளை மனதில்பட்டதைத் தைரியமாக எடுத்துக் கூறிவந்தார். சுயநலமில்லாமல் பாடுபட்டவர்; இந்தியா பூராவும் விளம்பரம் பெற்றவர். அவர் தமது மக்களுக்குப் பௌத்த மதத்திற்குப் போகும்படி வழி காட்டியிருக்கிறார். இங்கு பலபேர் மாறக்கூடிய நிலை ஏற்படும். தன் சமுதாயத்திற்குப் படிப்பு, உத்தியோகம் முதலிய காரியங்களில் முயற்சி செய்து பல வசதிகளைச் செய்திருக்கிறார். உத்தியோகத்தில் 100க்கு 15 என்று வாங்கிக்கொடுத்தார்.
அவர் உள்ளபடியே ஒரு பெரிய தலைவர். அவருக்குப் பிறகு அவரைப் போன்ற ஒரு தலைவர் தோன்ற முடியாது. அவர் சமதர்ம காலத்திற்குமுன் ஏற்பாடு செய்யப்பட்ட தலைவர். அம்பேத்கருக்குப் பிறகு அவரைப் போன்ற தலைவர் ஏற்பட முடியாது.
(26.10.1956இல் வேலூர் நகராட்சி மன்றத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு (‘விடுதலை’ -7.12.1956)

Wednesday, 12 April 2017

சென்னை அரசாங்க உள் நாட்டு மெம்பர் பதவி


சென்னை அரசாங்க உள் நாட்டு மெம்பர் பதவி


உள் நாட்டு மெம்பர் பதவி:சென்னை அரசாங்க நிர்வாக சபையில் இம்மாதக் கடசியில் ஒரு மெம்பர் ஸ்தானம் அதாவது கடந்த 5 – வருஷ காலமாக டாக்டர் கனம் சர் மகமது உஸ்மான் அவர்கள் வகித்து வந்த உள்நாட்டு மெம்பர் ஸ்தானம் 5 வருஷ காலாவதியின் காரணமாக காலி ஆகக் கூடுமென்பதாய் தெரிய வருகின்றது. அதை உத்தேசித்து அநேக கனவான்கள் அதை அடைய முயற்சி செய்து வருவதாகவும் தெரிய வருகின்றது. அரசாங்கத்தாரும் அந்தப் பதவியை யாருக்குக் கொடுக்கலாம் என்பதாக யோசனை செய்து கொண் டிருப்பதாகவும் தெரிய வருகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தாருக்கு இது விஷயமாக நாம் நமது அபிப்பிராயத்தைத் தெரிவித்துவிட வேண்டியது நமது கடமை என்று நினைக் கின்றோம். ஆதியில் அதாவது சுமார் 20 வருஷத்திற்குமுன் மேன்மை தங்கிய கவர்னரவர்களின் நிர்வாக சபையில் இரண்டு அங்கத்தினர்கள் இருந்ததை மூன்றாக மாற்றியதின் முக்கிய காரணமே இந்தியர்களுக்கும் அதில் இட மிருக்க வேண்டும் என்கின்ற எண்ணமே யாகும். பிறகு மூன்றை நான்காக் கியதும் அவைகளில் இந்தியர்களில் ஜாதி மதப் பிரிவுக்குத் தக்கபடி தாராள மாய் பிரித்துக் கொடுக்க சவுகரியப்படுத்திக் கொண்டு வரப்பட்டது. அதன் காரணமாகவே சட்ட மெம்பர் ஸ்தானத்தை பார்ப்பனர்களுக்கும் மற்றொன் றாகிய உள்நாட்டு மெம்பர் ஸ்தானத்தை ஒரு மகமதியருக்கும் கொடுத்து வரப்பட்டது. சென்ற வருஷத்தில் சட்ட மெம்பர் ஸ்தானம் காலியாக நேரிட் டதும் அதை பார்ப்பனருக்கென்றே முடிவு கட்டிவிடக் கூடாதென்றும் மற்ற சமூகத்தாருக்கும் வரிசைக் கிரமமாய் மாறிவர வேண்டும் என்றும் வாதாடி அதை ஒரு பார்ப்பனரல்லாதவருக்குக் கிடைக்கும்படி செய்யப் பட்டது. அதுபோலவே இப்போது 10 – வருஷ காலமாய் மகமதிய கனவான் கள் பார்த்து வந்த ஸ்தானமும் காலியாவதால் அதை நிர்வாக சபையில் இதுவரை இருந்து வராத ஒரு சமூகத்திற்கே அதை வினியோகிக்க வேண்டும் என்பதாக வலியுறுத்துகின்றோம். அதாவது நாம் அரசியலில் வகுப்பு வாரிப்பிரதி நிதித்துவம் கேட்கும் போதெல்லாம் ஆதியில் இருந்தே இந்தியர்களில் 5 பிரிவுகளைத்தான் பிரித்துக் காட்டி கேட்டு வந்திருக்கின்றோம். அதாவது,
இந்தியர்களுக்கு என்று கொடுக்கப்படும் பதவிகள் ஸ்தானங்கள் முதலியவைகளை இந்துக்கள் அதாவது இந்துக்களில் பார்ப்பனர், பார்ப்பன ரல்லாதார், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் மகமதியர்கள், கிறிஸ்தவர்கள் என்கின்ற ஐந்து பிரிவுகளாகப் பிரித்தே பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி வந்திருக்கின்றோம். அவற்றுள் பார்ப்பனர், பார்ப்பனரல்லா தார் என்கின்ற பிரிவுகளைப் பற்றி இந்த சமயம் அவசியமில்லை என்று பார்ப்பனரல்லாதார் கட்சித் தலைவர்கள் சொல்வதனாலும் சென்ற வருஷம் சர். சி. பி. அய்யர் ஸ்தானம் காலியானதும் இந்த முறையைக் கொண்டேதான் வற்புறுத்தி அதை இதுவரை பார்ப்பாருக்கே கொடுக்கப்பட்டு வந்திருந்தாலும் அதை மாற்றி சர். கிருஷ்ணன் நாயர் அவர்களுக்குக் கிடைக்கும்படி செய் தோம். அது போலவே இது சமயம் காலியான சர். மகமது உஸ்மான் அவர்கள் ஸ்தானமும் மகமதிய கனவான்களே பார்த்து வந்திருந்தாலும் இதுவரை பார்த்திராத வகுப்பாரான தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கே கொடுக்க வேண்டி யது நியாயமாய் இருக்கின்றது என்று சொல்ல வேண்டியதாயிருக்கின்றது. ஏனெனில் இதுவரை அப்படிப்பட்ட பதவிகளை மற்ற வகுப்பார்கள் எல்லாம் அனுபவித்து வந்ததுடன் இன்றைய தினமும் அது போன்ற செல்வாக்கும் அதிக சம்பளமும் உள்ள உயர்ந்த பதவிகளில் எல்லாம் அவ்வகுப்பாரை (தாழ்த்தப்பட்ட வகுப்பாரை) தவிர மற்ற வகுப்பார்கள் எல்லாரும் இருந்து கொண்டு வருகின்றார்கள். எங்ஙனமெனில்,
ஒரு பார்ப்பனர் மந்திரியாகவும், மூன்று பார்ப்பனரல்லாதார்கள் அதா வது சட்ட மெம்பராக ஒரு பார்ப்பனரல்லாத மலையாள கனவானும், மந்திரி யாக இரண்டு பார்ப்பனரல்லாத கனவானும் இருப்பதோடு மற்றும் பப்ளிக் சர்விஸ் கமிஷனில் ஒரு மகமதியரும், ஒரு கிருஸ்தவரும் இருப்பதோடு ஏரக்குறைய இரண்டு வருஷகாலம் ஒரு கிருஸ்தவ கனவான் மந்திரியாகவும் இருந்திருக்கிறார்.
ஆகவே தாழ்த்தப்பட்ட வகுப்பு என்பது ஒன்றைத் தவிர மற்ற வகுப்புகள் எல்லாம் “சீர்திருத்தத்தின்” பலனாய் ஏற்பட்ட ஒவ்வொரு பெரும் பதவிகளையும் அனுபவித்தே வந்திருக்கின்றார்கள். மற்றும் இந்து மத பரிபாலன போர்டிலும் இந்துக்கள் என்பவர்களில் பார்ப்பனரும் பார்ப்பன ரல்லாதாருமே அனுபவித்து வந்திருக்கிறார்களே ஒழிய இந்துக்கள் என்கின்ற தலைப்பின் கீழ் இருந்தும் தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கு எவ்வித பிரதிநிதித் துவமும் பதவியும் இதுவரை கிடைத்ததாக யாரும் சொல்ல முடியாது என்றே நினைக்கின்றோம். ஆகையால் இந்த நிர்வாக சபை மெம்பர் பதவியை கண்டிப்பாய் அந்த, அதாவது தாழ்த்தப்பட்ட வகுப்பார் என்பவர்களுக்கே கொடுக்க வேண்டியது நியாயமும் யோக்கியமும் ஆன காரியம் என்பதே நமது அபிப்பிராயம்.
தாழ்த்தப்பட்ட வகுப்பார் என்பது இந்தியாவிலாகட்டும் சென்னை மாகாணத்தில் ஆகட்டும் ஒட்டு மொத்த ஜனத்தொகையில் சற்றேரக்குறைய 5ல் அல்லது 6ல் ஒரு பங்குள்ள ஜனத்தொகை கொண்ட சமூகமாகவும் வெகுகாலமாகவே தாழ்த்தப்பட்டு வந்ததாகவும் மிக்க கொடுமையையும் கஷ்டத்தையும் அனுபவித்து வந்ததாகவும் இருப்பதுடன் இன்றைக்கும் பிரிட்டீஷ் கவர்ண்மென்டு இந்தியாவில் இருக்கவே கூடாது என்று யாராவது சொல்லுவார்களேயானால் அதை மறுத்து கண்டிப்பாய் அந்தக் கவர்ண் மென்டு இருந்துதானாகவேண்டும் என்று சொல்லுவதற்கு தகுந்த காரணஸ் தர்களாயுமிருக்கின்ற சமூகத்தார்களுமாவார்கள். ஏனெனில் அரசாங்கத்தார் கள் இந்தியாவில் அரசியல் கிளர்ச்சி ஏற்பட்ட காலங்களிலெல்லாம் தாங்கள் இந்தியாவின் நன்மையைக் கோரியும் இந்திய மக்களில் இளைத்தவர்களை வலுத்தவர் துன்புறுத்தாமலும் உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்பவர்கள் தாழ்ந்த ஜாதிக்காரர் என்பவர்களை கொடுமைப்படுத்தாமலும் இருப்பதற்காகவும் எல்லோரையும் சமமமாகப்பார்ப்பதற்காகவும் இருப்பதாய்ச் சொல்லிக் கொண்டு இருப்பதை மெய்ப்பிக்கவும் சந்தர்ப்பத்தை கொடுக்கக் கூடியசமூகத்தார்களாயிருப்பதேயாகும். அன்றியும் சைமன் கமீஷன் இந்தியாவுக்கு வந்த காலத்தில் இந்தியர்களில் சிலர் அதை பகிஷ்கரித்ததற்கும் பலர் அதை வரவேற்கச் செய்ததற்கும் முக்கிய காரணஸ்தர்களுமாவார்கள். அதாவது தாழ்த்தப்பட்ட வகுப்பார்கள் முன்னேற்றமடைவதற்கும் சமத்துவம் அடை வதற்கும் பிரதிநிதித்துவம் பெருவதற்கும் இந்திய அரசியல் காரர்க ளின் சூட்சியிலகப்படாமல் இந்த அரசாங்கம் நியாயமாகவும் யோக்கியமாக வும் நடந்து கொள்ளுமென்றும், மேலும் எந்தப்படி நடந்து கொள்ள சைமன் கமிஷன் வழி செய்யுமென்றும் நினைத்தே நம்பியே ஆதரித்தவர்களா வார்கள். அன்றியும் நாமும் நமது சுயமரியாதை இயக்கமும் இந்த தத்து வத்தை அடிப்படையாகக் கொண்டுதான் சைமன் கமீஷனை உயர்ந்த ஜாதிக் காரர்கள் என்பவர்கள் தங்கள் சுயநல எண்ணத்தைக் கொண்டு அதற்கு விரோதமாகச் செய்த கிளர்ச்சிகளின் சூட்சிகளை வெளியாக்கி அவைகளை அழித்து ஆதரித்ததுமாகும். அன்றியும் இன்றைய தினமும் பலருக்கு காங்கிரசினிடம் ஏன் திரு காந்தியாரிடமும் கூட நம்பிக்கையில்லாமல் போன தும் காங்கிரசை விட்டும் திரு காந்தியின் சத்தியாக்கிரகம் பூரண சுயேச்சை ஆகிய சம்பந்தமான காரியங்களை விட்டும் விலகிக் கொண்ட தற்கும் (சிலருக்கு ஜெயில் பயமிருந்தாலும் மற்ற பெரும்பான்மையோர்களுக்கு) இந்த சமூகத் தாரும் இவர்களின் முற்போக்கு விஷயத்தில் கவர்ண்மென்டாரிட முள்ள நம்பிக்கையுமாகும். ஆகவே சென்னை அரசாங்கத்தாரும் இந்திய அரசாங் கத்தாரும் இந்த நம்பிக்கைக்கு விரோதமோ துரோகமோ செய்யாமல் தங்க ளுக்கு கிடைத்த இந்த நல்ல சமயத்தை ஒழுங்காய் உபயோகித்துக் கொள்வார் கள் என்று நினைக்கின்றோம்.


தாழ்த்தப்பட்டு கொடுமை செய்யப்பட்ட மக்களை விடுதலை செய்ய வேண்டுமானால் அவர்களுக்கு அதிகாரங்களில் உயர் பதவி கொடுப்பதன் மூலமே தான் சீக்கிரத்தில் செய்யக்கூடுமே தவிர வேறு காரியங்களாலல்ல. உதாரணமாக பார்ப்பனர்களால் மற்றப் பார்ப்பனரல்லாதார்களை சூத்திரன் இழிந்த பிரப்பான் என்றும் மகமதியர்களை மிலேச்சர்களென்றும், கிருஸ்தவர் களை நீச்சர்களென்றும் சொல்லிக் கொண்டிருந்த கொடுமைகள் எல்லாம் இன்றைய தினம் வேகமாய் மறைந்து மறைந்து போய்க் கொண்டிருப்பதற்கு காரணம் அந்தந்த சமூகங்கள் அரசியல் அதிகாரங்களில் ஆதிக்கம் பெற்ற தினாலேயே ஒழிய மற்றபடி வேறு எந்தக் காரணங்களாலாவது என்று சொல்லி விட முடியாது.

ஆகவே அரசாங்கத்தார் தங்கள் பொருப்புகளையும் நாணயங்க ளையும் காலதேச நிலைமையையும் உணர்ந்து கண்டிப்பாய் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கே இந்தப் பதவியை வழங்க வேண்டுமென்று மற்றுமொரு முறை வேண்டுகின்றோம்.
மற்றபடி அந்தச் சமூகத்தில் அந்தப் பதவியை வகிக்கத் தகுந்த கனவான்கள் இல்லை என்று ஏதாவது சாக்குச் சொல்ல வருவார்களே ஆனால் அதை நாம் சிறிதும் ஒப்புக் கொள்ள முடியாது என்பதோடு அதில் சிறிதும் உண்மையும் நாணயமும் இருக்க முடியாது என்றே சொல்லுவோம். 

ஏனெனில் இன்றைய தினம் சென்னை மாகாணத்தில் உள்ள தாழ்த்தப் பட்ட மக்களின் பிரதிநிதியாக இந்திய சட்ட சபையில் இருக்கவும் சென்னை மாகாண மக்களின் பிரதிநிதியாக இந்தியாவுக்கே அரசியல் பரீட்சை செய்தும் மேல்கொண்டு சீர்திருத்தம் வழங்கத் திட்டங்கள் ஏற்படுத்தும் சைமன் கமிஷன் கமிட்டியில் ஸ்தானம் வகித்து இருக்கவும் மேற்படி சமூகத்தில் கனவான்கள் இருக்கும் போது, சென்னை அரசாங்கத்தில் அதுவும் சுமார் இரண்டொரு வருஷத்திற்குள் மறைந்துபோக இருக்கும் ஒரு நிர்வாக சபையில் நால்வரில் ஒருவராக இருக்கும் ஒரு மெம்பர் ஸ்தானத்திற்கு அந்த சமூகத்தில் நபர்கள் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும் என்றுதான் கேழ்க்கின்றோம். அன்றியும் நாமாகவே உயர்திரு ராவ்பகதூர் எம். சி. ராஜா, எம். எல்.ஏ., அவர்கள் பெயரையும் ஞாபக மூட்டுகின்றோம். கடைசியாக அரசாங்கத்தார் இந்த விஷயத்தில் நியாயம் செய்யாமல் அலட்சியமாக இருந்து விடுவார்களேயானால் சர்க்காரின் நல்ல எண்ணத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்கும் அவர்களிடம் அனுதாப முள்ளவர்களுக்கும் சிறிதாவது உள்ள நம்பிக்கையும் ஆட்டம் கொடுத்துவிடு மென்பதையும் வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

குடி அரசு – தலையங்கம் – 09.03.1930

தேவஸ்தான போர்டும் துணிகர மந்திரியும்

தேவஸ்தான போர்டும் துணிகர மந்திரியும்


தேவஸ்தான போர்டு நிர்வாக கமிஷனர்கள் நியமனமும் சர்க்கிள் கமிட்டி அங்கத்தினர் நியமனமும் ஒருவாறு முடிவு பெற்றது. இந்த நியமனங் களை பொறுத்தமட்டில் ஏற்பட்ட விசேஷம் என்ன வென்றால் தேவஸ்தான போர்டு தலைவர்கள் ஐந்து பேரும் பார்ப்பனரல்லாதவராக நியமிக்கப்பட்டி ருக்கின்றனர். அதோடு நீலகிரி ஜில்லா தேவஸ்தான கமிட்டிக்கு ஒரு ஆதி திராவிட கனவானும் அங்கத்தினராக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நியமனங்கள் உறுதியாகி சர்க்கார் கெஜட்டிலும் பிரசுரமாகிவிட்டது.

“தேவஸ்தானம்” என்னும் பதம் பார்ப்பனருக்கும் அவரைச் சுற்றித் திரியும் சில ஆஸ்தீகக் கூலிகளுக்குமே உரியது, மற்றையோர் குறிப்பாக ஆதிதிராவிடர் போன்ற தாழ்த்தப்பட்ட மக்கள் அப்பதத்தை நினைக்கவும் உச்சரிக்கவும் கூடாதென்ற கட்டுப்பாட்டைக் கொண்டு இருந்த காலத்தையும் ஒரு கூட்டத்தாரின் மனப்பான்மையும் விரட்டி அடித்து அவ்வித சுயநல துர் எண்ண ஆதிக்கத்துக்குச் சாவு மணி அடித்து மக்களில் உயர்வு தாழ்வு பேதம் ஒழிய வேண்டும் என்னும் சுயமரியாதைக்கு வழி காட்டியாக முன்வந்து நியமனங்களைத் துணிகரமாகச் செய்துள்ள மந்திரி கனம் டாக்டர் சுப்பராயன் அவர்களுடைய தைரியத்தையும் நிர்வாகத்தையும் சுயமரியாதை உலகம் பாராட்டற்பாலது.

தொட்டதற்கெல்லாம் தன் இஷ்டப்படி கைத்தூக்க இரட்டை மெஜா ரிட்டி வைத்திருந்த ஜஸ்டிஸ் மந்திரிகள் காலத்திலும் செய்வதற்குப் பயப்படும் படியான காரியங்கள் இந்தக் காலத்தில் வெகு தாராளமாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.


குடி அரசு – துணைத் தலையங்கம் – 25.05.1930

Tuesday, 11 April 2017

"தினமணி"யின் ஊளை - 06.02.1938

"தினமணி"யின் ஊளை - 06.02.1938

நீடாமங்கலம், காங்கரஸ் அரசியல் மகாநாட்டில், ஆதி திராவிடத் தோழர்களுக்கு நேரிட்ட கொடுமையை, ஆதார பூர்வமாக, ருசுக்களுடன், கொடுமைக்கு ஆளானவர்களின் ஸ்டேட்மெண்டுகளுடன், நாம் எடுத்துக்காட்டியது, உள்ளபடியே தமிழ் நாட்டில், ஒரு பெருங்கிளர்ச்சியை உண்டாக்கிவிட்டதுடன் காங்கரசின் உடுக்கைகளுக்கு, கிலி பிடித்துவிட்டது. இந்தக்கொடுமையை விபரமாக விளக்கிக் காட்ட காங்கரஸ் சிகாமணிகளின் யோக்கியதையும், இவர்களுக்குத் தாளம் போடும், தன்னலக்காரரின் வண்டவாளமும் வெளிப்பட்டு, சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டது. ஆகவே, போகும் மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள, கையில் எது அகப்படுகிறதோ அதை எடுத்துப்போர்த்துக்கொள்ளலாயினர். வறுமை காரணமாக, மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய நிலையில் இல்லாத ஏழை மக்கள், தங்கள் மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள கந்தலையும், தழையையும், கைகளையும் உபயோகித்துக்கொள்வதுபோல, "தினமணி"க்கு ஒரு பரிதாபகரமான நிலை ஏற்பட்டது காண, நமக்கு ஒரு பக்கம் இரக்கமும், மற்றொரு பக்கம் அது பேசும் "லண்ட" பாஷையைக்கண்டு சிரிப்புமே வருகிறது.

அபத்தம் தவிர வேறொன்றும் "தினமணிக்கு" அகப்பட ஏதுவில்லை! ஏன்? நீடாமங்கலத்துக் கொடுமை மறைக்க, மறுக்க மறக்க முடியாத உண்மை. விஷயம் எவ்வளவு தூரம் வளர்ந்தாலும், அதிகார பலம் முழுதும்கொண்டு எதிர்ப்பதானாலும், நம்மால் உண்மையை விளக்கப் போதுமான ருசுக்கள் தயாராக இருக்கின்றன. ஆகவே இடையிடையே, தமது மானம் போவதால் ஏற்படும் துக்கங் காரணமாக, இவர்கள் ஊளையிடுவதை நாம் பொருட்படுத்தப்போவதில்லை என்றாலும், விஷயங்களை மறுபடி ஒருமுறை விளக்கமாகக் கூறி, எவ்வளவு அநாச்சாரமான, அயோக்கியத்தனமான, பேடித்தனங் கலந்த போக்கிரித்தனமான சூழ்ச்சிகளை நமது எதிரிகள் கையாளுகிறார்கள் என்பதைப் பொது மக்கள் உணர வேண்டுமென இதை எழுதுகிறோம்.

நேற்றைய "தினமணி"யில் ஒரு ஒட்டை வேட்டு, கிளப்பப்பட்டிருக்கிறது. அது எழும்பியவிதம், அதை வெளிப்படுத்திய ஆசாமி, அவருக்கும் நீடாமங்கல அக்ரமத்திற்கும் உள்ள தொடர்பு, அதைப் பரிசாக ஏற்றுக்கொண்ட பிரமுகர், அதற்கு "ததாஸ்து" கூறும் புளுகுமணி இவைகளின் யோக்யதையை இனி அலசுவோம். நாற்றம் அதிகமாகத்தான் இருக்கும். இருப்பினும் இது நமது குற்றமல்லவே! ஆப்பை அவர்களாக அசைத்துவிட்டுத் தானே அவஸ்தைப்படுகிறார்கள்!

நீடாமங்கலத்தில் நடந்த காங்கரஸ் அரசியல் மகாநாட்டு, சமபந்தி விருந்தில் கலந்து கொண்டதற்காக, ஆதி திராவிடத் தோழர்களை மிருகத்தனமாகக் கொடுமைப்படுத்தி, தலையை மொட்டை அடித்து, சாணிப்பால் ஊற்றிய கொடுமையை நாம், ஜனவரி 3ந் தேதி வெளியிட்டோம். அதை மறுக்கும் நாணயஸ்தர்கள் யார் வருகிறார்கள் பார்ப்போம் என பொறுத்துப்பார்த்தோம். எங்கும் நிசப்தம், உப்புக்கண்டம் பறி கொடுத்த பாப்பாத்தி போல, இவர்கள் முக்காடிட்டுத் திரிந்தார்கள்! ஜனவரி 12ந் தேதி, கோவை ஜில்லா, "ஹரிஜன்" ஊழியராகிய , தோழர் எம்.கோளப்பன் என்பவர், "விடுதலை" மூலமாக பிரதம மந்திரிக்கே ஒரு "சவால்" விடுத்தார். மந்திரியார் ஏதாவது வாயைத் திறந்தாரா? அவரது கோஷ்டி ஏதாவது முணுமுணுத்ததா? இல்லை! மறுபடியும், பழைய மெளனந்தான். பகிரங்கமாக ஒன்றும் சொல்வதற்கில்லாமற்போகவே திரைமறைவிலே சூழ்ச்சிகள் நடைபெற ஆரம்பித்தன. அடிபட்ட - மானத்தைப் பறிகொடுத்த ஆதி திராவிடரை, ஆசை காட்டியும் பயமுறுத்தியும் நாணயமற்ற முறையிலே ஒரு மறுப்பு வாங்கப் பிரயத்தனம் செய்யப்பட்டது. நமது நிருபர் இதை ஜனவரி 16ந் தேதி தெரிவித்தார். இந்தச்சூது நடக்குமென நாமும் ஜனவரி 17ந் தேதியே "விடுதலை"யில் வெளியிட்டோம். அதன்படியே 18ந் தேதி "தினமணி" யில் சு.ம.புளுகு என்ற விஷயமும், தோழர்கள் தேவசகாயம், சூசை, ஆறுமுகம் ஆகியவருடைய போட்டோ, ஒரு ஸ்டேட்மெண்டுடன் வெளி வந்தது மறுதினமே, அதாவது ஜனவரி 19ந் தேதியே நாம் "புளுகுவது எது, தினமணியா விடுதலையா" என மகுடமிட்டு, உபதலையங்கமெழுதி எம்மிடம் சகல ருசுக்களும் தயாராக இருப்பதையும் எவ்வித நடவடிக்கைக்கும் நாம் தயார் எனவும் எழுதினோம். மறுபடியும் நமது எதிரிகள் குதிருக்குள் குதித்துப் பதுங்கிக் கொண்டனர். நமது நிருபரை நீடாமங்கலம் சென்று சகல விஷயங்களையும் பரிசீலனை செய்யும்படி அனுப்பினோம். அப்போது காங்கரஸ்காரர் தப்பு ஸ்டேட்மெண்டு வாங்க கையாண்ட கேவலமான முறைகள் நமக்குத் தெரிய வந்தன. அடிபட்ட- ஹிம்சிக்கப்பட்ட தோழர்களை நிர்ப்பந்தப்படுத்தி கையெழுத்து வாங்கப்பட்டது. அதற்கு உடந்தையாக இருந்தவரே தோழர் சூசை என்பவர். அவர் மகாநாட்டு விருந்திலோ, அதற்குப் பிறகு நடந்த "மிருகத்தனத்திற்கோ" ஆளாகாதவர்; சம்பந்தப்படாதவர். மற்ற இரு தோழர்களும், ஜாதி ஆணவக்காரரிடம் அகப்பட்டு அவஸ்தைப்பட்டவர்கள் தான்.

தங்கள் ஜாதிக்கே நேரிட்ட அவமானத்தை, காங்கரஸ்காரரின் கொடுமையை உலகறியட்டும் என்பதற்காகவே, எக் கஷ்டம் வரினும் ஏற்போம் என முடிவு செய்துகொண்டு, தோழர் தேவசகாயம், தனக்கும் தன் தோழர்களுக்கும் செய்யப்பட்ட கொடுமைகளையும், அதை மறைக்க தம்மை மிரட்டி தப்பு அறிக்கை வாங்கப்பட்ட சூதையும் விளக்கி, "ஹரிஜன" விவசாய மந்திரியான கனம் முனிசாமிப் பிள்ளைக்கும் "ஹரிஜன" மேயர் தோழர் சிவஷண்முகத்திற்கும் நமக்கும் மகஜர்கள் அனுப்பினார். நாம் அந்த மகஜரை தோழர் தேவசகாயத்தின் போட்டோவுடன் 26-ந் தேதி "விடுதலை"யில் பிரசுரித்தோம். ஆதி திராவிட வகுப்பில் பிறந்து, அந்தப் பெயரை உபயோகித்து பட்டம் பதவி பெற்று பரிமளிக்கும் அப்பிரமுகர்கள், "தேவசகாயம் மகஜருக்கு" ஏதாவது பரிகாரந் தேடினார்களா? அல்லது மறுக்கவாவது முன் வந்தார்களா? இல்லை! மறுபடியும் பழைய மெளனம். திருடனை தேள் கொட்டினால் அலறியா அழுவான்! விம்முவான். அதை போன்றே ஹரிஜன மந்திரியும், மேயரும் வாயைப் பொத்திக் கொண்டிருந்து விட்டனர். இந்த பேசாமடந்தைகளைப் பேச வைக்கவேண்டுமென ஜனவரி 27-ந் தேதி கனம் முனிசாமிப் பிள்ளை நேரில் வந்தால், கொடுமைக்காளான தோழர்களைக் காட்டுவதாக ஒரு " சவால்" விடப்பட்டது. 28-ந் தேதி ஈரோடு பொதுக்கூட்டத்திலே, தோழர் தேவசகாயம், நீடாமங்கல அக்ரமத்தை விளக்கிக்கூறினார். 29ந் தேதி சேலம் பொதுக்கூட்டத்தில் தோழர் தேவசகாயம், மட்டுமல்ல மற்றும் கொடுமைக்காளான தோழர் ரத்தினம், மொட்டையடித்த "பள்ளப்பரியாரி" ஆறுமுகம், ஆகிய மூவரும் பிரசன்னமாக இருந்தனர். தம் குறைகளையும் தெரிவித்தனர். நாணயமுள்ள யாவரும் மனங் கசிந்தனர். பிப்ரவரி முதல் தேதி மூன்று தோழர்களுமாகச் சேர்ந்து விரிவான அறிக்கையை "விடுதலை"யில் வெளியிட்டனர். அத்துடன் தோழர் ரத்தினத்தின் போட்டோவும் வெளிவந்தது. பிப்ரவரி 2ந் தேதி, பரியாரி மொட்டை அடித்த கதையை விளக்கினார். அதுவும், அவர் போட்டோவுடன் வந்தது. இவ்வளவும் நடந்து கொண்டிருக்கையில் சூரர்கள் என்ன செய்தார்கள்? மெளனமாகவே இருந்தனர்.

திடீரென, ஒரு ஒட்டை வேட்டு, "தினமணி" யில் பிப்ரவரி 2ல் வெளியாயிற்று. அதுதான் அபத்தத்தின் சிகரம்! அநாகரீகத்தின் உச்சி. போக்கிரித்தனமும் பேடித்தனமும் கலந்த விஷமம்!

நீடாமங்கல கோர நாடகத்தில் சம்பந்தப்படாத, தோழர் சூசை என்பவர், விளம்பர மந்திரி கனம் ராமநாதனிடம் நேரில் செய்து கொண்ட விண்ணப்பமாம்! அடிபட்ட தோழர்கள் மகஜர் அனுப்பியது, அவர்கள் ஜாதிக்காரப் பிரமுகர்களான, கனம் முனிசாமிப் பிள்ளைக்கும் மேயருக்கும்; அதற்குப் பதில் இல்லை! பதில் கூற வக்கில்லை. ஆனால் விளம்பர மந்திரியிடம் விஷயத்தில் சம்பந்தப்படாத தோழர் சூசை, " உண்மையை " விளக்குகிறாராம்! என்ன போக்கிரித்தனமான ஆபாசம்!!

தோழர் சூசை கூறுவது முழுதும் அபாண்டம். முழுப் பூசணியைச் சோற்றில் மறைக்கிறார்-அல்ல-கதர்த்துப்பட்டியில் மறைக்கிறார் என்று கூறுவோம். ஏன்? இவர் சம்பவத்தில் சம்பந்தப்படாதவர். தன் சமூகத்திற்கு ஏற்பட்ட அவமானத்தைப் போக்க முன்வராது, எதிரிகளிடம் கையாளாக இருக்கிறார். அபத்தமான இந்த அறிக்கையையும் சற்று அலசிப் பார்ப்போம். அதற்குள் சில கேள்விகளைப் பொது மக்கள் கவனத்திலிருத்த வேண்டுகிறோம். ஜனவரி 3ல் வெளி வந்த குற்றச்சாட்டிற்கு "தினமணி" பதில் கூற 15 நாள் ஆனதேன்? கயிறு திரிக்க 15 நாள் தேவையாக இருந்தது போலும். "ஹரிஜன" மந்திரியும் மேயரும் வாயை மூடிக்கொண்டிருப்பதேன்? வெளியில் சொல்லப்போனால் வெட்கக்கேடு என்பதினால்? பிரதம மந்திரிக்கு விடப்பட்ட சவாலுக்கு அவரும் மெளனமாக இருந்ததேன்? நடந்த உண்மையை எப்படி மறுப்பது என்பதினாலா அன்றி "அறிக்கைகள்" தயாராகாத குறையினாலா? அந்த சமயங்களிலெல்லாம் "தினமணி" யின் வாய் அடைந்து கிடந்த காரணமென்ன? ஒரே அடியாக "பொய்" பேச தினமணியின் வாயுங் கூசிற்றா? அன்றி, இவ்வளவு பிரமாண்டமான பொய் சொன்னால் பொது மக்கள் சும்மாவிட மாட்டார்களே என்ற திகிலா?

நிற்க தோழர் சூசை, "எங்களுக்கு 12.1.38 தபாலில் தனித்தனியாக அச்சடித்த காகிதங்கள் கிடைத்தன. அதை எடுத்துக்கொண்டு மறுநாள் மகாநாடு நடத்திய நீடாமங்கலம் உடையார் அவர்களிடம் போய்க்காட்டினேன்" என்று கூறுகிறார். இங்கு தான் இரகசியம் இருக்கிறது! நீடாமங்கல விஷயமாகத் தனக்கு வந்த கடிதத்தை உடையாரிடம் காட்டுவானேன்? தோழர் சூசை தற்குறியல்ல. மூன்றாவது பாரம்வரை படித்தவர். ஒரு பள்ளியில் உபாத்தியாயராகக்கூட இருக்கிறாராம். அப்படி இருக்க உடையாரை நாடிய காரணம் என்ன? "காரியம் மிஞ்சிவிட்டதே என்ன செய்வது என்று கைகளைப் பிசைந்துகொண்டு, மந்திராலோசனை செய்யச் சென்றாரா என்று கேட்கிறோம். "மறுபடியும் 15-ந் தேதி, நீடாமங்கலம் பங்களாவிற்குப் போனோம். நாங்கள் போனபோது மகாநாட்டை நடத்திய சில காங்கரஸ்காரர்களும் அங்கு இருந்தார்கள். மன்னார்குடி காங்கரஸ்காரர்களும் அங்கு இருந்தார்கள். மன்னார்குடி காங்கரஸ் காரியதரிசியான பிள்ளை அவர்களும் இருந்தார்" என்கிறார் தோழர் சூசை. 12ந் தேதி சென்ற பயணம் பலிக்காது, 15-ந் தேதி வேறே செல்லவேண்டி வந்ததோ எனக் கேட்கிறோம்? "அப்பொழுதுதான் 3.1.38 "விடுதலை" யிலிருந்து இது காப்பி என்று தெரிந்தது" என்ற தோழர் சூசை கூறுகிறார். பாபம்! அவ்வளவு உலக மறிந்தவராக இருக்கிறார். இவர் தான் இப்போது "ஹரிஜன"ங்களுக்கு இந்த "கைங்கரியம்" செய்ய முன் வருகிறார். அடிபட்ட தோழர்களிடம், "மகாநாட்டிலும் போஜனத்திலும் கலக்காத என்னை வலிய இப்படி சந்தியில் ஏன் இழுத்து விட வேண்டும்" என தோழர் சூசை அன்று சொன்னதை மறந்துவிடக்கூடிய அளவு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. நிற்க, அன்றே போட்டோ எடுக்கப்பட்டதாகவும், அப்போது தோழர் தேவசகாயத்திற்கு லு அங்குலம் மயிர் தலையிலிருந்ததாகவும், முன்புறம் மட்டும் க்ஷவரம் செய்திருந்தது எனவும் கூறி 26-ந் தேதி "விடுதலை"யில் வந்த போட்டோவைப் பார்த்தால், தோழர் தேவசகாயம் "அவன் உருவே மாறி" இருப்பதாக தோழர் சூசை உருகுகிறார். அவரை உருக வைக்கும் அற்புதத்தை நாம் அறிவோம். பொது மக்கள் "தினமணியில்" வந்த போட்டோவையும், ஒப்பிட்டுப்பார்த்து உண்மையை உணரட்டும் எனக் கூறுகிறோம். போட்டோ எடுத்த அன்று ஒரு தடவை தோழர் சூசை, "சு.ம. புளுகை" எழுதிக் கொடுத்தாராம். அத்துடன் நின்றாரா? இல்லையே! 16-ந் தேதி காங்கரஸ் காரியதரிசி நேரிலேயே அனுமந்தபுரம் வந்தாராம். அப்போது தோழர் சூசை தன் கையாலேயே மறுபடியும் விஷயத்தை எழுதிக்கொடுத்தாராம். மற்றத் தோழர்களுக்கு வாசித்துக் காட்டினாராம். சரிதான் என்று சம்மதித்தே தோழர் ஆறுமுகம் முதலில் கையெழுத்துப் போட்டாராம். அவருக்குத் தமிழ் எழுதப்படிக்கத்தெரியுமாம்! எழுதப்படிக்கத் தெரிந்த தோழர் ஆறுமுகம் இருக்கையில், ஏனோ பாவம், இந்த தோழர் சூசை இவ்வளவு கஷ்டப்பட்டு 2 நகல் எழுதி படித்துக் காட்டினார்? தோழர் தேவசகாயம் சிலரின் துர்ப்போதனையால் ஊரை விட்டுப்போனது அவனது பெற்றோருக்கும் மற்றுமுள்ள ஏழை ஹரிஜனங்களுக்கும் கவலையாக இருக்கிறதாம்! தோழர் தேவசகாயத்தின் உற்றார் பெற்றோரின் மனோ நிலையை விளக்கி நமக்கு கடிதம் வந்திருக்கிறது. தோழர் சூசை போன்ற ஏழை "ஹரிஜன"ங்களின் கவலையும் நமக்குத் தெரியும். "தினமணி" யே நீடாமங்கல அக்ரமத்தைக் கண்டித்து சென்னை தாழ்த்தப்பட்டார் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஜனவரி 17-ந் தேதி பிரசுரித்திருக்கிறது. அப்போதெல்லாம் தோழர் சூசையும், அந்தப் பொம்மையை ஆட்டி வைக்கும் சூத்திரதாரிகளும் மெளனமாக இருந்துவிட்டு, இப்போது சு.ம.காரர்கள், தேவசகாயத்தை அபகரித்து கொண்டுபோய், மொட்டை அடித்து பொய்ப்பிரசாரம் செய்து வருவதாகக் கூறுவது பேடித்தனங்கலந்த போக்கிரித்தனமன்றி வேறென்ன என்று கேட்கிறோம். விஷயம் விபரீதமாய் போகாதபடி, சப்பைக்கட்டுகட்டுவது இனி சாயாது. விளம்பர மந்திரியாய் இதில் சற்று முடுக்காகவே முனைந்து நிற்கிறார் என்ற தகவல் நமக்குக் கிடைத்துமிருக்கிறது. ஆனால் நாம் இதற்காக அஞ்சப் போவதில்லை. நம்மிடம் மறுக்கமுடியாத ருசுக்கள் இருக்கின்றன. எந்தவிதமான "அக்கினி" பரீட்சைக்கும் நாம் தயார். நாணயமும், ரோஷமும், மானமும் உள்ளவர்களானால் நேரிடையாக, பகிரங்கமாக விசாரணை நடத்தட்டும். திரைமறைவிலே, சில பொம்மைகளை வைத்துக் கொண்டு கோமாளிக்கூத்துக் காட்டுவது அசட்டுத்தனம். அதைப்பொதுமக்கள் லட்சியப்படுத்த மாட்டார்கள். தோழர்கள் தேவசகாயம் முதலியோருக்கு அன்று லு அங்குல மயிர் தலையில் இருந்தது, இன்று உருமாறி விட்டது என உருகும் சூசையோ, அன்றி மற்றவரோ, இந்த "மயிர் ஆராய்ச்சி"யை வேண்டுமானாலும் கூடச் செய்யட்டும். எதையும் நாணயமாக, பகிரங்கமாக செய்யட்டும். அதற்குத் தயார் தானா? என்றே நாம் கேட்கிறோம். மொட்டை அடிக்கும் தொழில் நமக்குக் கிடையாது. மொட்டை அடித்துவிட்டு மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் தொழிலில் "தினமணி" இறங்கியிருக்கிறது. இது வெற்றி பெறாது என்பதுடன் இந்தத் துடுக்குத்தனம், இனி சாயாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

- விடுதலை,தோழர் பெரியார், குடி அரசு -  06.02.1938

நீடாமங்கலத்துக்கு நீதி 19-௦6-1938

நீடாமங்கலத்துக்கு நீதி - 19-௦6-1938


நீடாமங்கலத்தில் 28-12-1937இல் நடைபெற்ற காங்கிரஸ்காரர்கள் மகாநாட்டில் நடந்த சாப்பாட்டு பந்தியில் சில ஆதிதிராவிட கிறிஸ்தவ தோழர்கள் உட்கார்ந்து சாப்பிட்டதற்காக அவர்களை அடித்துத் தொந்தரவு செய்து மொட்டை அடித்து அவமானப் படுத்தியதாக விடுதலைப் பத்திரிகையில் வந்த செய்தியை அம்மகாநாட்டை நடத்திய பிரமுகர்கள் பொய் என்று மறுத்ததுடன் அச்செய்தி வெளியானதால் தனக்கு மான நஷ்டம் ஏற்பட்டு விட்டதென்று விடுதலைப் பத்திரிகை பிரசுரிப்பவர் மீதும், ஆசிரியர் மீதும் டிப்டி மேஜிட்ரேட் கோர்ட்டில் பிராது கொடுத்திருந்ததும், அந்த வழக்கு சுமார் 4,5-மாதமாக நடந்து வந்ததும் வாசகர்கள் அறிந்த விஷயமேயாகும். இந்த 4,5-மாதமாக நடந்த வழக்கு சகல விசாரணையும் முடிந்த பிறகு இம்மாதம் 15தேதி முடிவு கூறப்பட்டது. அம்முடிவானது விடுதலை பிரசுரிப்பவரான தோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர் களுக்கு ரூ. 200 அபராதமும் விடுதலை பத்திராதி பரான தோழர் பண்டித முத்துச்சாமிப்பிள்ளை அவர் களுக்கு ரூ. 200 அபராதமுமாக தண்டனை விதித்து முடிவு பெற்றுவிட்டது.
இந்த வழக்கின் முடிவு இப்படித்தான் முடியலாம் என்று ஏற்கனவே பலரால் எதிர்பார்க்கப்பட்டதென்றே சொல்லலாம். ஏனெனில் காங்கிரஸ் தலைவர்களால் நடத்தப்பட்ட நடவடிக்கைகள் எதுவாய் இருந்தாலும் அதைக் குற்றமானதென்று காங்கிரஸ் ராஜ்ஜியத்தில் ஒரு வேலை காயமில்லாத நீதிபதியிடம் இருந்து நீதி பெற்றுவிடலாம் என்று யாரும் கருதமாட்டார்கள். காங்கிரஸ் பார்லிமெண்டரி செகரட்டரி என்பவர் பெட்டியேறிச் சரியாகவோ, தப்பாகவோ ஒரு கட்சிக்குச் சார்பாய்ச் சாட்சி சொல்லி இருக்கும்போதும் மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களும் ஒரு கட்சிக்கு அனுகூலமாய்ச் சாட்சி சொல்லியிருக்கும்போதும் ஒரு மேஜிஸ்ட்ரேட் நீதிபதி அதற்கு மாறாக முடிவு கூறுவ தென்றால் இது சராசரி யோக்கியதையுள்ளவர் களிடம் எதிர்பார்க்கக்கூடாத காரியமேயாகும். ஆதலால்தான் இந்த முடிவு ஏற்கனவே பலரால் எதிர்பார்க்கப்பட்ட தென்றே சொல்ல வேண்டியதாயிற்று. இந்த முடிவினால் யாரும் கலங்கவோ அல்லது நீடாமங்கலம் தோழர்களுக்கு காங்கிரஸ்காரர்கள் செய்த கொடுமை உண்மையற்றதாய் இருக்குமோ என்று யாராவது சந்தேகப்படவோ வேண்டிய தில்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
எந்தத் தைரியத்தைக்கொண்டு அப்படிச் சொல்லு கிறோமென்றால் நீடாமங்கலம் சம்பவம் நடந்ததாக விடுதலை, குடிஅரசு பத்திரிகைகளில் சேதி வந்தவுடன் அதன் உண்மையை விசாரிக்க சென்னை மாகாண தேவேந்திர வேளாள சங்கத்தார் உடனே ஒரு கூட்டம் கூடி இந்த விஷயத்தைப் பற்றி விசாரித்து முடிவு தெரிவிக்கும்படி ஒரு கமிட்டியை நியமித்து விட்டார்கள். அக்கமிட்டியில் சாதாரண ஆள்களை நியமிக்காமல் அச்சங்கத்தின் மாகாண பிரசிடெண்டான தோழர் எம். பாலசுந்தரராஜ் அவர்களையும், அச்சங்கத்தின் காரியதரிசி தோழர் விஜயராஜ் அவர்களையும், அக்கமிட்டியின் பொருளாளரும் காங்கிரஸ் எம்.எல். ஏயுமான தோழர் எ. சி. பாலகிருஷ்ணன் அவர்களையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மெம்பரான தோழர் ஏ. அய்யனார் அவர்களையும், தோழர் ஜே. தேவாசீர்வாதம், தோழர் எ.வி. அக்கினிமுத்து ஆகியவர்களையும் நியமித்தார்கள். அக்கமிட்டியார் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி நீடாமங்கலம் சென்று நீடாமங்கலத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அநேக சாட்சிகளை முறைப்படி விசாரித்து சாட்சி பதிவு செய்து கவலையோடு ஆராய்ந்து பார்த்து முடிவு எழுதி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். அவ்வறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால் - இந்த கமிட்டியார் உடனே புறப்பட்டு போய் நீடாமங்கலம் முதலிய சுற்றுப் பக்கங்களில் விசாரித்ததில் தாழ்த்தப்பட்ட மக்களுக் குச் செய்யப்பட்டக் கொடுமைகள் உண்மையானவை என்று தெரிந்தார்கள் என்பதாகவும் மற்றும் கட்டி வைத்து அடித்ததைப் பற்றியும், மொட்டை அடிக்கப் பட்டதைப் பற்றியும், சாணிப்பால் ஊற்றி அவமானப்படுத்தப்பட்டதைப் பற்றியும் பலபேர் சாட்சி சொன்னார்கள் என்றும், இதை மறைக்க  பலர் முயல்வதாய்த் தெரிகிறதென்றும் சொல்லி இருக்கிறார்கள்.
எனவே, இந்த விஷயம் நடந்தது உண்மையா? பொய்யா? என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகமில்லை என்பதோடு கோர்ட் நடவடிக்கையில் நியாயம் கிடைக்காத தால் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். மேற்படி கேஸ் சம்பந்த மான கோர்ட் ஜட்ஜ்மெண்டை நாம் பார்க்காததால் அதன் உள் விஷயங்களைப் பற்றி நாம் ஒன்றும் எழுத முற்படவில்லை என்றாலும், அந்த ஜட்ஜ்மெண்ட் எப்படிப் பட்டதாய் இருந்தாலும் நீடாமங்கலம் சம்பவம் சம்பந்தமாய் ஒரு முடிவுக்கு வருவதை அது தடுக்கவில்லை என்றே கருதுகிறோம். அதாவது, தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து சமுகத்தில் ஒரு மனிதனாய் இருந்து கொண்டு மானத் துடன் வாழ முடியாது என்பதுடன் இம்மாதிரியான அவமானங்களுக்கும் பரிகாரம் தேடிக்கொள்ள முடியாது என்பதேயாகும். அவமானப்பட்டு, அடிபட்டு, உதைபட்டு, துன்பப்பட்ட ஆட்களில் கிறிஸ்துவர்கள் அதிகமாய் இருந்துங்கூட அவர்களுக்கும் நியாயம் கிடைக்க முடிய வில்லை. ஆனால், இவர்கள் முஸ்லிம்களாய் இருந்து இப்படிப்பட்ட அவமானம் நடந்திருந்தால் இதற்குப் பரிகாரம் கிடைக்காமல் இருந்திருக்குமா என்பதை நீடாமங்கலம் ஆதி திராவிட தோழர்கள் சிந்தித்துப் பார்க்கும்படி வேண் டிக் கொண்டு இதை இப்போது முடிக்கிறோம். மற்றவை ஜட்ஜ்மெண்ட் பார்த்தபிறகு விளக்குவோம்.
குடிஅரசு - தலையங்கம்  - 19.06.1938

நீடாமங்கல உண்மை - 30.01.1938

நீடாமங்கல உண்மை - 30.01.1938


நீடாமங்கலத்தில் நடந்த தென் தஞ்சை ஜில்லா 3- வது அரசியல் மகாநாட்டில் ஆதி திராவிட தோழர்கள் சிலர் சாப்பாட்டுப் பந்தியில் கலந்து கொண்டதற்காக அவர்களை துன்புறுத்தி மொட்டையடித்து சாணி ஊற்றிக் கொடுமை செய்து தண்டித்த நடத்தையைப்பற்றி அவர்கள் பெயர்கள் உட்பட நமக்கு கிடைத்த உண்மையான சேதி “விடுதலை” “குடிஅரசு” பத்திரிகைகளில் வெளியாக்கப்பட்டதை வாசகர்கள் உணர்ந்திருக்கலாம். ஆனால் அதை காங்கரஸ் தோழர்கள் கவனித்து சமாதானம் சொல்லாமல் நடந்த விஷயத்தையே அடியோடு மறுத்துக் கூறுவதுடன் அவற்றைப் பொய்யாக்கிக் காட்ட தப்பான வழியில் முயற்சித்து வருவது மிகவும் வெறுக்கத்தக்கதாகும்.
பொறுப்புள்ள ஆதி திராவிட சமூகப் பிரமுகர்களுங்கூட இவ் விஷயத்திற்காகத் துக்கப்படாமல் பரிகாரம் தேட முயற்சிக்காமல் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு அடியோடு மறைக்க ஆசைப்படுவது மிகமிக வெறுக்கத்தக்கதும் கண்டிக்கத்தக்கதுமான செய்கையாகும். “விடுதலை”யில் இது விஷயமாய் வெளியான சேதிகளுக்கு 15 நாள் பொறுத்து – நாட்டில் கிளர்ச்சி ஏற்பட்ட பிறகு அடிபட்ட உதைபட்ட மொட்டை அடித்து சாணி அபிஷேகம் செய்யப்பட்ட ஆதி திராவிட மக்கள் சிலரை பிடித்துக்கொண்டு வந்தும் மிரட்டி அம்மாதிரியான காரியம் ஒன்றுமே நடக்கவில்லையென்று எழுதிக்கொண்டு அதில் அவர்களது கையெழுத்து வாங்கி அதில் சேராதவர்களின் போட்டோவையும் வாக்குமூலத்தையும் பத்திரிகைகளில் போட்டு மக்களை ஏமாற்றப் பார்ப்பதுடன் “விடுதலை பத்திரிகை பொய்யான சேதியை வெளிப்படுத்திற்று” என்று தலைப்புக் கொடுத்து சேதி போடுவது என்றால் இக்கூட்டத்தார் தீண்டாமை ஒழிக்கவோ ஆதி திராவிடர்களை சமமாக நடத்தவோ ஆசைப்படுகிறார்களா? அல்லது பழய ராமராஜியப்படி சாமி கும்பிட்டதற்காக ஒரு பார்ப்பனரல்லாதவனின் தலையை வாங்கியது போல் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டதற்காக அவனை கொலை செய்ய வேண்டும் என்ற உணர்ச்சியை கிளப்புகிறார்களா என்று பயப்பட வேண்டியிருக்கிறது.
தஞ்சை ஜில்லாவில் ஆதிதிராவிடர்களின் நிலைமை இந்திய சமதர்மவாதிகளும் தேசீயவாதிகளும் தேசபக்தர்களும் அறிய வேண்டிய காரியமாகும். தஞ்சை ஜில்லாவில் ஆதிதிராவிடர்கள் நிலைமை பழயகால அடிமைத் தன்மையே ஆகும். அங்குள்ள நிலங்களில் உள்ள மரங்கள் எப்படி அந்த நிலக்காரனுக்கு சொந்தமோ அது போலவும் அந்த நிலம் விற்கப்பட்டால் எப்படி மரமும் வாங்கினவனுக்கு சேருமோ அது போலவும் ஒவ்வொரு நிலத்துக்கும் சில ஆதிதிராவிட மக்கள் அடிமைகளாக இருந்து பூமி கை மாறியவுடன் அவர்களும் கூடவே பூமியை விலைக்கு வாங்கினவனுக்கு அடிமையாவது இன்றும் வழக்கம். அந்த ஆதிதிராவிடன் அந்த வயல் நிலத்தில் வயல்காரனுடைய கருணையால் குடியிருக்க வேண்டியவனாவான். நந்தன் கதையில் உள்ளது போல் அந்தந்த வயலுக்கு அங்கங்கிருக்கும் ஆதிதிராவிடனே பரம்பரை பண்ணை ஆளாக இருக்க வேண்டியவனாவான். அவனுடைய சகல சுதந்திரமும் வாழ்வும் மிராசுதாரர் என்று அழைக்கப்படுகிற பூமிக்குடையவனை சேர்ந்ததாகும். பூமிக்குடையவன் அவனை அடித்தாலும் உதைத்தாலும் வேறு என்ன கொடுமை செய்தாலும் கேட்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அந்த மிராசுதாரன் மீது பிராது செய்யவும் எவனும் துணிய மாட்டான். அப்படி ஏதாவது பிராது செய்து விட்டால் அவனுக்கு வேறு போக்கிடம் கிடையாது. அப்படிப்பட்டவன் குடியிருக்க இடமில்லாமலும் சாப்பாட்டுக்கு வகை இல்லாமலும் பட்டினி கிடந்து தெருவில் செத்துக் கிடக்க வேண்டியதுதான். வேறு மிராசுதாரன் இதற்கு சிபார்சுக்கு வரவோ ஆதரிக்கவோ ஆரம்பித்தால் பிறகு அவனது அடிமையை அவன் மீது ஏவி விட்டு விடுவார்கள். ஆதலால் மிராசுதாரர் கொடுமைக்கு ஆளாக இஷ்டப் படவில்லையானால் ஒரு ஆதிதிராவிடன் மலாய் நாட்டுக்கோ, மோரீஷிக்கோ ஓட வேண்டியதுதானே தவிர அவனுக்கு அந்நாட்டில் போக்கிடம் கிடையாது. ஆதலால் அங்கு ஆதிதிராவிடர்கள் மிருகங்களிலும் கேவலமாக கருதப்படுகிறார்கள்.
இதனாலேயே சிங்கப்பூர், மோரீஷ், சுஞ்சிபார் முதலிய தீவுகளில் அதிகம் தஞ்சை ஜில்லா ஆதி திராவிடர்களே கூலிகளாய் ஓடிப்போய் இருக்கிறார்கள். இந்த விஷயத்தை உணர்ந்த ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் தஞ்சை ஜில்லா ஆதிதிராவிடர்களுக்கு குடி இருக்க நிலம் வாங்கிக் கொடுக்கும்படி சர்க்காரில் ஏற்பாடு செய்தார்கள். அது சமயம் தஞ்சை மிராசுதாரர்கள், பார்ப்பனர்கள் உள்பட கூப்பாடு போட்டதால் அக்காரியம் சரிவர நடத்தப்பட முடியாமல் போய்விட்டது.
இந்த நிலையில் அவர்கள் இவ்வளவு இழிநிலைக்கும், கஷ்டத்துக்கும் ஆளாகி வருகிறார்கள். இதைப் பற்றி கவனிக்க இந்த காங்கரஸ் ராஜியத்தில் யாரையும் காணோம். ஆதிதிராவிட மந்திரி கனம் முனிசாமி பிள்ளை அவர்கள் இந்தக் கொடுமையை மறைக்க உடந்தையாய் இருப்பதும், இக்குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்காமல் இருப்பதும் யோக்கியமாகுமா? என்று கேட்க வேண்டி இருக்கிறது.
இந்த லட்சணத்தில் கனம் முனிசாமி பிள்ளை அவர்கள் திருநெல்வேலியில் இதை மறைத்துப் பேசும்போது நீடாமங்கல சேதி பொய்யென்றும் அயோக்கியத்தனமான விஷமப் பிரசாரமென்றும் பேசியிருக்கிறார். இவர் ஆதிதிராவிடர்களுக்கு யோக்கியமான பிரதிநிதியா என்று கேட்கிறோம். அப்படி இருந்தும் அவர் அதே சமயத்தில் தன்னை அறியாமலே வேறு ஒரு உண்மையை கக்கி விட்டார்.
அதாவது அங்கு அவர் பேசுகையில் “திருப்பதியில் ஒரு ஆதி திராவிடர் சாமி கும்பிட்டதற்காக அவனை அடித்து துன்புறுத்தினார்கள். இது நியாயமா” என்று கேட்டிருக்கிறார்கள். இந்தச் சேதி 21.1.38ம் தேதி தினமணி 8-ம் பக்கம் 4வது கலத்தில் இருக்கிறது.
மற்றும் கனம் முனிசாமி பிள்ளை மதுரை கள்ள அழகர் கோவிலில் வெளியில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காகவும் அதுசமயம் கோவில் அதிகாரிகள் அவருக்கு மரியாதை செய்ததற்காகவும் கோவில் அதிகாரிகள் பேரில் நடவடிக்கை நடத்துவதாக சொல்வதல்லாமல் கோவில் சுத்தம் செய்ய வேண்டுமென்றும் இந்த மாகாண மதுரை வருணாச்சிரம சுய ராஜ்ஜிய சங்கத் தலைவர் தோழர் மதுரை நடேச சாஸ்திரியார் அவர்கள் கோவில் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். கனம் மந்திரிக்கும் இதைப்பற்றி கண்டித்தெழுதி இருக்கிறார். இது 25.1.38 தேதி இந்து பத்திரிகையில் 8 பக்கம் 6வது கலத்தில் இருக்கிறது.
மற்றும் தோழர் கனம் முனிசாமி பிள்ளை அவர்கள் “வேறு மதத்திற்கு போனால்தான் ஆதிதிராவிடர்களுக்கு சட்ட உரிமை கிடைக்கும்” என்பதாகவும் அங்கு பேசி இருக்கிறார்.
ஆகவே அவர் தங்கள் சமூகங்களுக்கு இந்து மேல் ஜாதியார்களும் குறிப்பாக பார்ப்பனர்களும் செய்யும் கொடுமையை உணர்ந்து கொண்டே 500 ரூ சம்பளத்துக்கும், 300 ரூ படிக்கும் பார்ப்பனர்களுக்கு – மேல் ஜாதியாருக்கு வக்காலத்து பேசுகிறார் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த லக்ஷணத்தில் நீடாமங்கலம் சேதியை விடுதலை பிரசுரித்திருப்பதற்காக அதன் பிரசுரகர்த்தா தோழர் உ.ங. கிருஷ்ணசாமி மீதும், ஆசிரியர் தோழர் கு.முத்துசாமி பிள்ளை மீதும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளப் போவதாக தஞ்சை வக்கீல் தோழர் கே.டி. பாலசுப்பரமணிய அய்யர் பி.ஏ., பி.எல்., அவர்கள் ஒரு உடையாருக்காக நோட்டீசு கொடுத்திருக்கிறார்கள். தோழர் சந்தான ராமசாமி உடையார் அவர்கள் சிறுவயது. சுமார் 20 வயதே இருக்கும். அவரை இந்தப் பார்ப்பனர்கள் சுவாதீனப்படுத்திக்கொண்டு அவர்களது பணத்துக்கு தாறுமாறாக செலவு வைப்பதுடன் சிவில் கிரிமினல் கோர்ட்டுகளில் நடவடிக்கை எடுத்துக் கொள்ளுவதாகவும் நம்மை பயமுறுத்துகிறார்கள். உண்மையில் நாம் இவ்விஷயத்தில் எந்த தனிப்பட்ட நபரிடமோ தனிப்பட்ட ஜாதியாரிடமோ குறோதம் வைத்தோ குறைவு படுத்த எண்ணம் வைத்தோ இவ்விஷயங்களை எழுதுவதில்லை, பேசுவதில்லை. சம்மந்தப்பட்ட நபர்களைப் பற்றி நமக்கு விஷயமும் தெரியாது அறிமுகமும் கிடையாது. ஆனால் இந்த 20வது நூற்றாண்டில் பிரிட்டிஷ் சர்க்கார் இந்த நாட்டில் ஆட்சி செய்யும்போது பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டதற்கு அடித்து துன்புறுத்தி மொட்டையடித்து சாணி அபிஷேகம் செய்து விட்டு இந்த விஷயத்தை வெளிப்படுத்தினதற்கு நம்மீது சிவில் கிரிமினல் நடவடிக்கை எடுத்துக் கொள்ளுவது என்றால் இந்த நாட்டில் மக்கள் வாழ முடியுமா? என்று பயப்பட வேண்டியிருக்கிறது.
துன்புறுத்தப்பட்ட தோழர்களான பலர் இனி அந்த கிராமத்தில் வாழ முடியாதென்று வேறு ஊருக்கு ஓடிவிட்டார்களாம். அவர்களது வாழ்வுக்கு உதவி செய்ய வேண்டிய பொறுப்பும் இது வெளியிட்டதற்கு ஆக சிவில் கிரிமினல் கோர்ட்டுகளில் நடவடிக்கைகளுக்கு சமாதானம் சொல்ல வேண்டிய பொறுப்பும் அதற்காக 1000, 2000 ரூபாய்கள் செலவிட வேண்டிய பொறுப்பும் நம் தலையில் விடியும் போல் இருக்கிறது. ஆகவே பொதுமக்கள் நமது நிலைமை எவ்வளவு கஷ்டமாயிருக்கிறது என்பதையும், காங்கரஸின் தன்மை மேல் ஜாதியாரின் யோக்கியதை அவர்களடைந்த சுயராஜ்யத்தின் போக்கு எப்படி இருக்கிறது என்பதையும் ஊன்றி கவனித்து பார்க்கும்படி தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு – தலையங்கம் – 30.01.1938