Friday, 23 June 2017

யோகப்புரட்டு

                       யோகப்புரட்டு

மூச்சடிக்கிப் பலவகையாக யோகஞ் செய்வதன் மூலம் சிறிது சரீர திடம் பெறுவதற்கு ஏதாவது மார்க்கமிருக்குமேயொழிய அதில் வேறு “தெய்வீகத்தன்மை” யாதொன்றுமில்லை யென்பதே நமது அபிப்பிராய மாகும். ஆகவே இதுவும் கழைக் கூத்து, சர்க்கஸ், ஜால வித்தை முதலியவை களைப் போல ஒன்றுதான் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் நமது மக்கள் யோகத்தில் ஏதோ “தெய்வீகத்தன்மை” இருப்ப தாக நம்பியிருப்பதால் அநேகர் யோகிகள் என்று கிளம்பி, சில ஜாலங்களைச் செய்து, பாமர மக்களை மலைக்கச் செய்து ஏமாற்றி வருகின்றனர். ஜன சமூகமும் இவர்கள் பால் பரம்பரையாகவே ஏமாந்து கொண்டும் வருகிறது.

இதற்கு உதாரணமாகச் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கவனித் தால் விளங்கும். “ஹட யோகம்” என்பதில் சித்தி பெற்றவராகச் சொல்லப்பட்ட நரசிம்மசாமி யென்பவர் சென்னை, கல்கத்தா முதலிய இடங்களில், பிரபல ரசாயன சாஸ்திரிகளின் முன்னிலையில், கொடிய விஷம், கண்ணாடித் துண்டுகள், ஆணிகள் முதலியவற்றை விழுங்கி உயிரோடிருந்தாராம். இந்த நிகழ்ச்சியைக் கண்டு ரசாயன சாஸ்திரிகள் எல்லோரும் மலைத்துப் போய் விட்டனர். ஆகவே யோகத்தின் மகிமையைப் பற்றிப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டது.

ஆனால் இதே நரசிம்ம சாமியார் சில தினங்களுக்கு முன் ரெங்கூனில் இரண்டாம் முறையாக விஷங்களையும் கண்ணாடித் துண்டுகளையும்  விழுங்கிய கொஞ்ச நேரத்திற்குள் மரண யோகம் பெற்று விட்டார். இதற்குக் காரணம் விஷம் உண்டவுடன் ‘ஹட யோகம்’ பண்ணுவதற்குக் கொஞ்சம் நேரமாகிவிட்டது என்று பத்திரிகைகளில் சொல்லப்படுகின்றது. ஆனால், அவைகளை உட்கொள்ளும் சாதுரியத்திலோ அல்லது மாற்று மருந்தை உட்கொள்ளுவதிலோ அல்லது பழக்கப்பட்ட அளவை உட்கொள்ளுவதிலோ தவறிவிட்டார் என்று ஏன் சொல்லக் கூடாதென்று தான் நாம் கேட்கின்றோம்.

யோகத்தில் ‘தெய்வத் தன்மை’ உண்டென்பது வீண் புரட்டேயொழிய வேறில்லை. சாதுரியத்தினாலோ அல்லது பழக்கத்தினாலோ அல்லது மாற்று மருந்துகளினாலோ செய்யப்படும் காரியங்களையெல்லாம் யோகமென்றும், மந்திரமென்றும், தேவதையென்றும், தெய்வசக்தியென்றும் சொல்லி ஒரு கூட்டத்தார் ஜன சமூகத்தை ஏமாற்றி வருகிறார்கள் என்பதை அறிய வேண்டு கிறோம். ஆகையால் இனியேனும் இது போன்ற மோசடியான காரியங்களைக் கண்டு ஏமாறாமலிருக்கும்படி எச்சரிக்கை செய்கிறோம்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 03.04.1932

Saturday, 10 June 2017

பசுப் பாதுகாப்பு அயோக்கியத்தனம்

பசுப் பாதுகாப்பு அயோக்கியத்தனம்

இன்று காங்கிரஸ் விரோதிகளுக்கு, சமதர்ம விரோதிகளுக்கு, ஜாதிப் பெருமையால் பிழைக்கும் அயோக்கி யர்களுக்கு; காங்கிரசையும் சமதர்மக் கொள்கையையும் எதிர்த்துக் குறை கூறவோ, தடுத்துப் பேசவோ, ஆதாரம் எதுவும் இல்லாததால் மதக் குறிப்பு களைச் சாக்காக வைத்து அதுவும் யோக்கியமான முறையில் அல்லாமல்; அயோக்கியத் தனமான முறையில் பாமர மக்களின் முட்டாள்தனத்தை மூல தனமாகக் கொண்டு நாட்டில் கொலை பாதக புரட்சிகளைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டுப் பார்ப்பன அயோக்கியர்கள். மதக்குறிப்பு என்று எதைக் கூறுகிறேன் என்றால் பசுவதையைத் தடுக்க சட்டமியற்ற வேண்டும் என்ற பிரச்சனையைக் காரணமாகக் கொண்டு காலித்தனம் செய்வதைத்தான் கூறுகிறேன்.

ஜீவஇம்சை செய்யக்கூடாதபடி சட்டம் இயற்ற வேண்டும் என்றால் அதற்கு அர்த்தம் உண்டு. இதற்கு ஒரு சட்டம் முன்னமே 50, 60 வருடங்களுக்கு மேலாகவே நமது நாட்டில் இருந்து வருகிறது. இந்தச் சட்டம் கோழிகளை தலைகீழாகத் தொங்கும்படி பிடித்துக் கொண்டு போவது முதல் புண்பட்ட கழுத்துள்ள மாட்டை வண்டியில், ஏரில் பூட்டி ஓட்டுவது வரை குற்றமாகக் கரு தும்படியான சட்டம் இருந்து வருகிறது.

ஜீவஇம்சை ஆகவே ஜீவஇம்சை தடுப்பு என்பது மதச்சார்பற்ற பொதுப் பிரச்னையாக ஆக்கி பாதுகாப்பளிக்கப் பட்டிருக்கிறது. மற்றும் கோயில் முதலிய இடங்களில் பலியின் பேரால் ஆடு, மாடு, எருமை முதலிய ஜீவன்களை வெட்டிப் பலி கொடுக்கப்படுவதையும் அரசாங்கம் உத்தரவு போட்டுத் தடுத்து வருகிறது. ஜீவ இம்சையை முன்னிட்டு மற்றும் சில காரியங்களையும் அரசாங்கம் செய்து வருகிறது. இப்படி இருக்க, முட்டாள் தனமாகவும், அரசாங்கத்திற்குத் தொல்லை கொடுத்து ஆட்சியைக் கவிழ்க்க வேண் டும் என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டும், மத உணர்ச்சியை ஆதார மாகக் கொண்டு, பசுவதையை சட்டத் தின் மூலம் தடுக்க வேண்டுமென்று நாட்டில் யோக்கியமற்ற சுயநல உணர்ச் சியுள்ள சிலர் அதே தரமுள்ள பத்திரி கைக்காரர்களின் உதவி கொண்டு பெருத்த கலவரம் ஆரம்பித்து விட் டார்கள்.

பசுவைக் கொல்லுபவர்கள் எதற் காகக் கொல்லுகிறார்கள்? யாருடைய மனதையாவது புண்படுத்தவா? அல்லது அநாவசியமாகவா? அல்லது பயனற்ற முட்டாள்தனமான மத உணர்ச்சி காரணமாகவா? அல்லது மற்ற யாருக்காவது கெடுதி செய்ய வேண்டும் என்பதற்காகவா? எதற்காக பசுவைக் கொல்லுகிறார்கள்? உலக மக்கள் தங்கள் உணவுக்காக ஆடு, கோழி, பன்றி, மீன், பறவை, முயல், காட்டு மிருகங்கள் முதலியவற்றை உணவுக்காக கொல்லுவதைப் போல் மாட்டையும் கொன்று தின்கின்றார்கள். இது இன்றல்ல; நேற்றல்ல, 5000 வருடங்களுக்கு முன் னிட்ட காலம் முதல் பார்ப்பனர்கள் அவர்கள் முன்னோர்களாக கூறப்படுகிற ரிஷிகள், தேவர்கள் பல கடவுள்கள் உள்பட ஆகாரமாக, உணவாகப் பயன்படுத்தி வந்த ஒரு காரியத்தை - பசுவைக் கொன்று தின்று வந்ததை இன்றைய தினம் அதுவும் வேறு காரணத்தை முன்னிட்டு தகாத காலத்தில், தகாத முறையில் கிளர்ச்சி ரூபமாய் துவக்கி அதன் பேரால் தீவைத்தல், கொலை செய்தல், நாசவேலைகள் செய்து கோடிக் கணக்கான ரூபாய் பெறுமான பொருள் களை நாசமாக்குதல் முதலிய காரியங்கள் செய்யத் துணிந்து காரியத்தில் ஈடுபட்டால் இதற்கு என்ன பெயரிடுவது?

பசுவைக் காப்பது என்ற பேரால் பார்ப்பன ஜாதியைக் காப்பதே

பசுவதை செய்வதைத் தடுத்து பசுவைக் காப்பாற்றவேண்டும் என்பதற்கும், சமுதாய சமதர்மத்தைத் தடுத்து பார்ப்பன ஜாதி உயர்வைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லுவதற்கும் என்ன வித்தியாசம் சொல்ல முடியும்? பசுவதைத் தடுப்புக்கு எந்த ஆதாரங்களைக் காட்டுகிறார்களோ அதே ஆதாரங்களின் கீழ்தான் பார்ப்பான் (பிராமணன்) மேலான ஜாதி, கடவுளால் மேல் ஜாதியாக பிறப்பிக்கப்பட்ட ஜாதி என்று இருக்கின்றது, ஏன்? அதை விட மேலான ஆதாரங்கள் தர்மமாக, சாத்திய மாக கடவுள்கள் வாக்காக 1000, 2000, 3000 ஆண்டு அனுபவமாக இருந்து வருகிறது!

இதுபோல்தான் ஜாதித்தொழில்களும் இருந்து வருகின்றன.

இதுபோல்தான் செல்வவானுக்கும் (குபேரனுக்கும்) அதே ஆதாரங்களில் உரிமை இருந்து வருகிறது. மற்றும் அநேக காரியங்களுக்கும், மத, சாத்திர, கடவுள் கட்டளை ஆதாரங்கள ஏராளமாக இருக் கின்றன. இவற்றில் பசுவதைத் தடுப்புக்கு சட்டம் கொண்டுவந்து தடுக்க வேண்டியது அவசியமாகத்தானே முடியும்? நாமும் ஒப்புக் கொண்டதாகத்தானே அர்த்தம்?
மத ஆட்சி ஆதிக்கமெனில் அரசியல் ஏன்?

பிறகு சட்டசபை எதற்கு? பார்லி மெண்ட் எதற்கு? அரசியல் சட்டம் எதற்கு? மனுதர்ம சாத்திரத்தையும் இராமாயண, பாரத, புராணங்களையும் அரசியல் சட்டங்களாக வைத்து சங்கராச்சாரிகளை - வருணாச்சிரம தர்ம பாதுகாவலர்களையும், மந்திரிகளாக இருக்கச் செய்துவிட்டால், உலகம் தர்மப்படி ஆட்சி நடந்து வருமே. மற்றபடி ஜனநாயகம் எதற்கு? மந்திரிசபை எதற்கு? சட்டசபை, பார்லிமெண்ட் சபை எதற்கு? என்றுதானே பிரச் சினைகள் முடியும். இந்த லட்சியத்தில் தானே இன்றைய போராட்டம் துவக்கப்பட்டி ருக்கிறது? புராணங்களில் வீட்டுக்கு வந்த விருந்தாளிகளுக்குப் பசுவைக்கொன்று, நல்ல பசுங்கன்றுகளைக் கொன்று சபைக்கு விருந்தளிக்கப் பட்டிருக்கிறது.

மனுதர்ம சாத்திரத்தில் இன்ன மிருகங்களைக் கொன்று சமைத்து திதி செய்தால் பிதிர்கள் இத்தனை, இத்தனை நாட்களுக்கு மோட் சத்தில் இருப்பார்கள் என்று பல சுலோ கங்கள் இருக்கின்றன! மற்றும் யாகங்களில் பசுயாகம், அஜ (ஆடு) யாகம், குதிரையாகம் முதலிய பல மிருக ஜந்துகள் யாகங்கள் இருக்கின்றன. இவ்வளவையும் வைத்துக் கொண்டு இந்த சாத்திரங்கள் புராணங்கள் ஆகியவைகளின் தர்மங்கள்தான் எங் களுடைய தர்மம் என்று ஒரு புறம் சொல்லிக் கொண்டு மற்றொரு புறம் பசுவதைத்தடை செய்வதுதான் எங்கள் தர்மம் என்று சொல்லிக்கொண்டு இப்படிப் பட்ட மக்களைத் தூண்டுவதுமான காரி யங்கள் செய்வதானால் வேறு இராஜ்ய மாயிருந்தால் இந்நேரம் இவர்கள் கதி என்ன ஆகி இருக்கும்?

நமது அரசாங்கம் பலவீனமான அர சாங்கம்; மெத்த பலவீனமான அரசாங்கம். நவம்பர் 6-ஆம் தேதி டில்லியில் கலவரச் செய்தி எட்டியவுடன் அல்லது கலவரக் குறி தோன்றியவுடன் 3 மணி நேர நோட் டீஸ் கொடுத்து விட்டு இராணுவத்திடம் இராஜ் யத்தை ஒப்புவித்து இருந்தால் இன்றைய கொடுமையான அயோக்கிய மான அக்கிரமமான இந்தக் காரியங்கள் நடைபெற்று இருக்குமா? இராணுவம் என்றால் அவர்கள் யார்? நாட்டின் ஆட்சியின், மக்களின் பாதுகாப்புக்காக நாட்டு மக்களின் வரிப் பணத்தில் நாட்டு மக்களின் ஜனநாயக ஆட்சியால் நியமிக் கப்பட்ட பாதுகாப்பு ஸ்தாபனம்தானே? அதை அரசாங்கம் சரியானபடி பயன் படுத்தி இருந்தால் இந்த இரண்டு வருஷ காலமாக சென்னை முதல் பல மாநிலங் களிலும் நடந்த அட்டூழியங்கள் நாச வேலைகள் உயிர்ச்சேதங்கள் முதலிய 10-20 கோடி ரூபாய் பெருமான நட் டங்கள் நேர்ந்திருக்காது என்று சொல்வேன்.

எனவே, டில்லிக் கலவரத்திற்கு காரணம் - பார்ப்பனர்களையும், சங்க ராச்சாரியும் சாது சன்னியாசிக் குண்டர் களையும் மாத்திரம் குற்றம் சொன்னால் போதாது. இவர்களுக் குள் ஆட்களாய் இருந்த மந்திரிமார்களும் எதிரிக்கூட்டங் களைச் சேர்ந்த துரோகிகளான அதி காரிகள், போலீசு இலாகாத் தலைவர்கள், சிப்பந்திகள் ஆகியவர்களும் பெருங் காரணம் என்று சொல்வேன்.

இனி வரப்போகிற அரசாங்கம் எப்படி அமையுமோ? இந்த அளவுக்குப் பார்த் தாலும் காமராசர் ஆதரவற்றவராக இருக் கிறார். அதுமாத்திரமல்லாமல் துரோகிகள் மத்தியில்தான் இருக்கிறார் என்றுதான் நினைத்து வேதனைப்பட வேண்டி இருக்கிறது.

நூல்: காமராசர் கொலை முயற்சி சரித்திரம்

Wednesday, 7 June 2017

ஜாதி மதப் பெயர் கொடுக்காதீர்கள் – 09.11.1930

ஜாதி மதப் பெயர் கொடுக்காதீர்கள்



முக்கியமான வேண்டுகோள்

இவ்வருஷக் கோடியில் சர்க்காரால் ஜனங்களுடைய எண்ணிக்கை யை எடுக்கும் சென்சஸ் வேலை நடைபெறும். அதில் கணக்கெடுப்பவர்கள் உங்களிடம் வந்து விசாரிக்கையில் நீங்கள் ஜாதி மதத்தைப் பற்றி கேட்கப் படுவீர்கள். அப்போது முறையே இந்தியன் என்றும் பகுத்தறிவுக்காரன் என்றும் மாத்திரம் தான் சொல்ல வேண்டுமே ஒழிய எவ்வித மதத்தின் பேரா வது ஜாதியின் பேராவது சொல்லக் கூடாது என்று தெரிவித்துக் கொள்ளு கிறேன்.

ஏனெனில் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க இந்தியாவில் எல்லாப் பிரமுகர்களும் ஒரே முகமாய் நின்று மும்முரமாய் வேலை செய்யும் போது நாம் மறுபடியும் அதைச் சொல்லிக் கொண்டிருப்பது மூடத்தனமும் கவலை யும் சுயமரியாதையும் அற்ற தன்மையுமாகும்.

அதுபோலவே இந்தியர்களில் யாராவது தன்னை இந்து என்று மதத்தின் பெயரைச் சொல்லுவதும் சுத்த முட்டாள் தனமாகும். இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லையென்றும் அப்படியிருப்பதாகச் சொல்லும் மதத்தின் தத்துவமும் மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிப்பதும் 20 கோடி இந்துக்கள் என்பவர்களில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் எல் லோரும் பார்ப்பனருக்கு அடிமைகள், அவர்களது தாசிமக்கள் என் கின்ற மானமற்ற தன்மை கொண்ட பொருளே இருப்பதால் சுயமரியாதை யுள்ள எவரும் தங்களை இந்துக்கள் என்று சொல்லக்கூடாது. தவிரவும் இந்து என்னும் பதத்திற்கு திருடன், அயோக்கியன், மோசக்காரன் என்று அர்த்தம் என்பதையுமுணருங்கள் என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

ஈ. வெ. ரா.

குடி அரசு – வேண்டுகோள் – 09.11.1930

Monday, 5 June 2017

பாரதியார் மண்டபமா? பார்ப்பனர் வெற்றிச் சின்னமா? - 18-10-1947


பாரதியார் மண்டபமா? பார்ப்பனர் வெற்றிச் சின்னமா?

(பாரதியார் பற்றி அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் ஒரு வித போதையான பிம்பத்தை கட்டிவைத்திருக்கிறது. அதிலும் ப(வெ)ட்டி மன்றங்களில் பாரதியாரைப் பற்றி பேசாத பேச்சாளர்கள் மிக மிகச் சொற்ப அளவினரே. முற்போக்காளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சில வலைப்பதிவர்கள் கூட அவரவர்கள் வலைப்பதிவில் பாரதியாரின் மேற்கோள்களை பதிவிட்டு ”பாரதியார் போதை” என்னும் மயக்கத்தில் தள்ளாடி வருகின்றனர்.

உண்மையில் பாரதியார் யார்? அவர் யாருக்காக? எதற்காக? என்ன நோக்கத்திற்காக பாடினார் -செயல்பட்டார் என்பதை இக்கட்டுரை அம்பலப்படுத்துகிறது. ஊன்றிப் படித்து உண்மையை உணர வேண்டுகிறேன். இக்கட்டுரை இரண்டு பகுதிகளாக வெளிவரும்)

தமிழ்நாட்டில் தமிழனுக்கு இன உணர்ச்சி தலையெடுத்து தமிழ் மொழிப்பற்றின் ஆர்வம் வெளியானது ஆச்சாரியார் கட்டாய இந்தியைப் புகுத்திய நேரத்தில் நிகழ்த்திய போராட்டத்தினாலாகும்.

தமிழ்பற்று மிகுந்து இன உணர்ச்சி தோன்றியபோது தான் தமிழ் மக்கள் தங்களின் உண்மையான பகைவர் யார்? பகைமைக் கருவிகள் யாவை? எனத் தீவிரமாகச் சிந்திக்கத் தலைப்பட்டனர். பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்று கூறுவதே இழிவு என உணர்ந்து தங்களுக்கென, தங்களையே குறிக்கும் தனிப் பெயர் கொள்ள விரும்பினார்கள். இவ்விருப்பம் இறுதியில் திராவிடர் என்று, வரலாற்றிற்கும், இழிந்த நிலை மாறி மனித நிலையடைதற்கும் பொருத்தமாக, யாரும் அசைக்க முடியாத உண்மைப் பெயராக, உணர்ச்சி தருங் கருவியாக அமைந்து விட்டது. இந்நிலையையுணர்ந்த தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள், இந்நிலை நீடிக்குமேயானால் தங்களின் சோம்பேறி வாழ்வு சுடுகாடாகும் என்பதை நன்கு உணர்ந்து, வழக்கம் போல சாம பேத தான தண்டம் என நான்கு வகை உபாயங்களையும் கையாளுகின்றனர்.

தமிழ் மக்களின் தமிழுணர்ச்சியை ஆரியர்க்கு விரோதமாக வீறிட்டெழுந்த விழுமிய உணர்ச்சி வெள்ளத்தை வேறு வகையில் திருப்பி திராவிடர்களுக்குள்ளேயே பிளவையுண்டு பண்ண வேண்டும் என்ற திட்டமிட்டே, தமிழர் - தெலுங்கர் போராட்டமாக மாற்றித் தவறுதலான வேறு வழியில் செல்ல இந்நாட்டுப் பார்ப்பனர்கள் முயலுகின்றார்கள். இம்முயற்சிக்கு, இந்நாட்டு வரலாற்றின் வாய்மைக்கிணங்கச் சில திராவிடர்களே தமிழர் தெலுங்கர் போராட்டத்தைத் தொடங்குகின்றார்கள் என வெளியுலகிற்குக் காண்பிக்கின்றது இந்நாட்டு ஆரியம். இவ்வுண்மையைத் தமிழ் நாட்டு அரசியல் போக்கைக் கண்ணுற்று வருகின்றவர்கள் நன்கு உணரலாம்.

தமிழுணர்ச்சி ஆரியத்தை அழிக்காமல் இருக்க வேண்டுமென்பதற்காகக் கையாளுகிற மற்றொரு வகை முயற்சிதான், பாரதி விழாவும் பாரதி ஒட்டிய பிற நினைவுக்குறி நிகழ்ச்சிகளும் ஆகும்.

தமிழ்நாட்டின் பெரும் புலவர்களாகிய தொல்காப்பியர், திருவள்ளுவர், அவ்வையார் போன்றவர்களை ஆரியக்கலப்பு என்று கூறி, இந்நாட்டு மக்களை ஆரியர்கள் இழிவு செய்து தன்னினத்திற்குப் பெருமை தேடிக் கொண்டதும், தமிழ் நாட்டின் பெருமையைச் சிதைத்து வந்த தமிழைக் கற்ற உ.வே.சாமிநாதய்யர், ராகவய்யங்கார் போன்ற ஆரியர்க்கு உயர்வு தந்து தன்னினப் பெருமையை நிலைநாட்டிக் கொண்டதும், தமிழ் வரலாற்றை அறிந்தோர் உணர முடியும்.

ஆரியர்கள் கையாண்டு வரும் பரம்பரை வித்தைக்கிணங்கவே சமீபத்தில் சுப்பிரமணிய பாரதியார் என்ற பார்ப்பனர்க்கு மண்டபம் எழுப்பிக் கும்பாபிஷேகம் செய்ததுமாகும்.

பாரதியாரை நல்லதொரு வெள்ளைக் கவிஞர் என்று கூறுவதிலோ, உணர்ச்சி ததும்பப் பாடுபவர் என்று கூறுவதிலோ நமக்கு எத்தகைய ஆட்சேபனையும் இல்லை. ஆனால் பாரதியாரைத் தமிழ் நாட்டுத் தனிப்பெருங் கவிஞர் என்றும், தமிழுணர்ச்சியை வளர்த்தவர் என்றும் தமிழன் தலைநிமிர்ந்து நடக்க வழி செய்தவர் என்றும் கூறுவதுதான் திராவிட இனத்திற்கே அழிவைத் தருவதாய், திராவிட உணர்ச்சியை ஒழிக்கவல்லதாய் இருக்கின்றது என்பதையும், ஆரியர்கள், பாரதியாரைக் காட்டித் திராவிட உணர்ச்சியை ஒடுக்க வழி செய்கிறார்கள் என்பதையும் எடுத்துக்கூற வேண்டிய நிலையை உண்டாக்கியிருக்கிறது.

தமிழறிஞர்களே! தமிழ்நாட்டு வரலாற்றைப் படித்த மாணவர்களே! நீங்கள் அறிந்த வரலாற்றை உங்களின் நினைவிற்குக் கொண்டு வாருங்கள். எந்த வரலாற்றிலாவது நீங்கள் வாழுகின்ற இத்தமிழ்நாடு ஆரிய நாடு என்று தீட்டப்பட்டிருக்கிறதா?.

தமிழ்நாட்டின் "அமரகவி" பாரதியார் கூறுவதைக் கேளுங்கள். நீங்கள் இப்பகுதிகளை அறிந்திருந்தாலும், அவை அறிவில் நிலையாதவாறு இந்நாட்டு ஆரியம் பேரொலி எழுப்பி, வெவ்வேறு வழிகளில் அறிவைச் செலுத்தச் செய்திருக்கின்றது என்பதனாலேயே, இங்கு அவற்றை எடுத்தியம்ப முன் வந்ததாகும்.

"உன்னத ஆரிய நாடெங்கள் நாடே"

என்று நாட்டின் பெயரைக் கூறி

"வானாறு பேரிமய வெற்பு முதல் பெண்குமரி யீறாகும் ஆரியநா டென்றே யறி"

என்று ஆரிய நாட்டிற்கு எல்லையும் கூறுகிறார்.

இவர் கூறுகின்ற எல்லை முன்பொரு காலத்தில், "ஒரு மொழிவைத் துலகாண்ட"

இமயவரம்பன் காலத்தில், தமிழ் நாட்டின் எல்லையாகும்," எனப் புறநாநூறு போன்ற தமிழிலக்கியங்கள் கூறும் பாரதியார், தமிழ்நாட்டின் எல்லையாக நூல்களில் குறித்திருப்பதையே ஆரிய நாட்டின் எல்லையாகக் கூறுகின்றார்.

தமிழ்நாட்டை ஆரிய நாடாகக் கூறுகின்ற பாரதியார் தமிழர்களின் பெருமையை ஆரியர்களின் பெருமையாகக் கூறுகின்றாரா என்றால் இல்லை.

"ஆதிமறை தோன்றிய ஆரிய நாடே" என்று கூறுகின்றார்.

மேலும்,

"முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்த வில் யாருடைய வில்" ஆரிய ராணியின் வில் ஆரிய ராணியின் சொல் ஆரிய தேவியின் தேர் என ஆரியர்களின் பெருமையாக ஆரிய இராமனின் பெருமையைக் கூறுகின்றார்.

ஆரியர்களுடைய வேதங்களைக் (ஆங்கில ஆட்சியின் துணையைக் கொண்டு) கற்றறிந்த திராவிடர்கள், வேதங்களின் உண்மையை எடுத்துக் கூறியிருக்கின்றார்கள்.

தங்களுக்கு மாறுபட்டவர்களாயிருப்பவர்கள், "உயர்ந்த மாடி வீடுகளில், சிறந்த அணிகளோடு, நிறைந்த வாழ்வு வாழுகின்றார்களே" என வயிறெரிந்து இந்திரனையும் பிற தேவர்களையும் அழைத்து, இந்தத் தஸ்யூக்களை அரக்கர்களை அழித்துவிடுக" என வேண்டிக் கொண்ட பகுதிகளே வேதத்தில் நிரம்பவுண்டு என்று விளக்கங் கூறுகின்றார்கள். மகாகவி பாரதியார் கிருஷ்ணனை அழைத்துக் கூறுகின்ற கூப்பாட்டை நன்கு சிந்தித்துப் பாருங்கள்.

"ஆரியர்தம் தர்மநிலை ஆதரிப்பான்" "ஆரியர் பாழாகாது அருமறையின் உண்மை தந்த" "எங்கள் ஆரிய பூமியெனும் பயிர் மங்களம் பெற" "ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே" "ஆரிய! நீயும் நின் அறமறந்தாயோ" "வெஞ் செயலரக்கரை வீட்டிடுவோனே" "ஆரியர் கோனே"

இக்கூப்பாட்டிற்கும் வேதங்களில் காணப்படும் பழைய ஆரியர்களின் கூப்பாட்டிற்கும் ஏதேனும் வேறுபாடு காண முடிகிறதா?.

தமிழருக்குத் தமிழ் மொழியைத் தந்தவர்களே ஆரியர்கள் தான் என்பது ஆரியர்களின் கூற்று. தமிழர்கள் காட்டுமிராண்டிகளாயிருந்தார்கள். அவர்களை நாரிகமுடையவர்களாக்கித் தமிழைச் செம்மையாக்கித் தந்தவர் குடத்திலிருந்து பிறந்த அகத்திய முனிவர் என்பது ஆரியர்கள் கூறுங்கதை. இதனையேதான் தமிழின் பெருமையாக உலக மகாகவி கூறுகின்றார்.

"ஆதிசிவன் பெற்று விட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு...... இலக்கணஞ் செய்து கொடுத்தான்"

எனவும்

"ஆன்ற மொழிகளினுள்ளே உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்"

இவ்வடிகளின் பொருளை நன்றாகச் சிந்தியுங்கள். இவை ஆரியத்தின் பெருமையை விளக்குகின்றதா? தமிழின் பெருமையை விளக்குகின்றதா?

வஞ்சத்திற்கு ஆண்மை என்பது ஆரியர்களின் அகராதிப் பொருள். வாலியை மறைந்து கொன்ற இராமன் பேராண்மையாளர் புருடோத்தமன் என ஆரியங்கூறும். அதே போல பாரதியார் ஆசையைப் பாருங்கள்!

"ஆரிய நாட்டினர் ஆண்மை யோடியற்றும் சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக"

எனக் கூறுகின்றார். இவ்வாறு, பாரதியார் ஆரிய நாடு, ஆரிய இனம், ஆரிய மொழி, ஆரியக் கலை, ஆரியக் கடவுள், பெருமைகளையே பெருமையாகப் போற்றிப் பாராட்டியிருக்க, அவரைத் திராவிட இனத்தவர் போற்றுவது மானத்தோடு பொருந்திய செயலாய் இருக்க முடியுமா?

தீபாவளி, கிருஷ்ணஜயந்தி, ராமநவமி, சமணர் கழுவேற்றப்பட்ட உற்சவம் ஆகியவற்றைக் கொண்டாடுவது ஆரியர்களின் பெருமையையும் திராவிடர்களின் சிறுமையையும் எவ்வாறு உணர்த்துகின்றதோ, அதுபோலத்தான் பாரதியார் விழாக் கொண்டாடுவதிலும், பாரதியாருக்கு மண்டபம் சமைப்பதிலும் உள்ளது என்றால் யாரேனும் மறுத்துக்கூறவியலுமா?

பாரதியாருக்குக் கோவில் கட்டுவதிலோ அல்லது அதுபோன்ற பிற செயல்களிலோ நமக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால், இத்தகைய செயல்களில் தமிழர்கள் திராவிடர்கள் கலந்து கொள்ளலாமா? எட்டையாபுரம் ராஜாவைப் போன்ற குறு நில மன்னர்கள், ஆரியத்தின் பெருமைக்கும் திராவிடத்தின் இழிவுக்கும் மடி தாங்கலாமா? என்ற கேள்வியை இனமானமுள்ள திராவிடன் கேளாமல் இருக்க முடியுமா?

திராவிட மந்திரிகளோ என்றால், அவர்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஏனெனில் அவர்கள் நிலைமை அப்படி. அவர்கள் பெயரையே, ஆரியர்கள், மந்திரிப் பட்டியலிலிருந்து அழிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கடைசி எழுத்திலே கையை வைத்து "ரி"யை அழித்த நிலையில்தான், இன்று அவர்கள் இராமயணத்தில் காணப்படும் குரங்கு வால்நரர்களைப் போல, ஆரிய உயர்வுக்குப் பாடுபட வேண்டியவர்களாய் ஆகிவிட்டார்கள். அனுமாரைப் போல இந்நாட்டு இளைஞர்களும் ஆகவேண்டும் என்று, திராவிட மந்திரிகளே வாய் விட்டுக் கூறுகின்றார்கள்.

நிற்க, அனுமார் கோவில்கட்டி அனுமார் படை ஏற்படுத்தி, வணங்கித் தொண்டு செய்யும் திராவிடர் இது செய்வதுதானா அருமை? என்று திராவிட இன உணர்வு கொண்டவர்கள் அமைதி கொள்ளலாம். ஆனால், பாரதியைப் பெருமைப்படுத்துகின்றவர்கள், உண்மையிலேயே தமிழைப் பெருமைப்படுத்தியவர்கள் என்றோ, தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்தியவர்கள் என்றோ தமிழரைப் பெருமைப்படுத்தியவரென்றோ கூறமுடியுமா? இதை நாம் கேட்கவில்லை. பாரதியார் பாடியன என்று மேலே எடுத்துக்காட்டிய பகுதிகளே இக்கேள்வியைக் கேட்கின்றன.

செவியுடையோர் சிந்தனை செய்யும் திறமுடையோர் இதை நன்கு உணரலாம்.

இவ்விழாவிற்குப் பொருளுதவி செய்தவர்களும், விழாவில் போய் மகிழ்ந்தவர்களும், விழாவை வெவ்வேறு வகையில் பெருமைப்படுத்தியவர்களும், ஆரியத்தின் பெருமை, ஆரிய உயர்வு, என்பதல்லாமல் தமிழின் பெருமை, தமிழ்நாட்டின் உயர்வு என வாயால் பேச முடியுமா? என மனதில் கையை வைத்துக் கூறுங்கள்.

திராவிட உணர்ச்சியைச் சிதைப்பதற்காகச் செய்யப்படும் ஆரியர்களின் சூழ்ச்சிகளில் ஒன்றே, இப்பாரதி மண்டப விழாவும் பாரதி விழாவும் என்பதை, இப்போதாவது திராவிடர்கள் உணர்ந்து விழித்தெழுவார்களாக!

'ஈட்டி' என்ற புனைப்பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை."குடிஅரசு", 18-10-1947

** நன்றி: தமிழ் ஓவியா
** நன்றி : periyaarwritings.org

Friday, 2 June 2017

கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்து - பெரியார் - 3.6.1972

கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்து - பெரியார்

மாண்புமிகு கலைஞர் டாக்டர் கருணாநிதி அவர்களுக்கு 49ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா நடப்பது குறித்து நான் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன்.



டாக்டர் அவர்களது வாழ்நாள் ஒவ்வொன்றும் மக்கள் நலம் பற்றி சிந்திப்பதிலும், தொண்டாற்றுவ திலுமே நடந்து கழிவதை நான் மனப்பூர்வமாக உணர்கிறேன். மனம் பூரித்து திருப்தி அடைந்து வருகிறேன்.

டாக்டர் செய்து வருகிற காரியங்கள் பெரிதும் மற்றவர் சிந்திக்கக்கூட பயப்படும்படியான காரியங்கள் என்பதோடு, அவைகளை வெகு எளிதிலே செய்து முடித்து விடுகிறார்.

இதன் பயனாகவே அரசியல் உலகில் அவருக்கு எதிர்ப்பாளர்கள் அதிகமாகி வருகிறார்கள். காரணம், டாக்டர் அவர்களது ஆட்சி நீண்ட நாளைக்கு நிலைத்து விடுமோ என்கின்ற பொறாமையும் வேதனையும்தான் என்றாலும், டாக்டர் அவர்கள் யாருடைய எதிர்ப்புக் கும் பயப்படாமல் எப்படிப்பட்ட தொல்லைக்கும் சளைக்காமல் துணிந்து காரியமாற்றி வருகிறார்.

பொதுவாகவே சமுதாயத்துறையில் சீர்திருத்த தொண்டு ஆற்றினால் யாருக்கும் சுய நலக்காரருடையவும், பழைமை விரும்பி களினுடையவும் எதிர்ப்பு ஏற்பட்டுத் தான் தீரும். கலைஞர் டாக்டர் அவர்களுடைய புரட்சிகரமான தொண்டுக்கு எதிர்ப்பும், தொல்லையும் ஏற்படுவது அதிசயமல்ல. அவற்றைப்பற்றி சிறிதும் இலட்சியம் செய்யாமல் துணிந்து தொண்டாற்றி வரும் டாக்டர் அவர்களை மனதாரப் பாராட்டி அவர் வாழ்வு எல்லையற்று நீண்டு மக்களுக்கு புதிய உலகம் ஏற்பட வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.

-- தந்தை பெரியார்  3.6.1972

Wednesday, 31 May 2017

இராசிபுரம் தாலுகா தாழ்த்தப்பட்ட மக்கள் மாநாட்டில் பெரியார் - 29.09.1935

இராசிபுரம் தாலுகா தாழ்த்தப்பட்ட மக்கள் மாநாட்டில் பெரியார்

தோழர்களே!
இந்நாட்டில் இன்று எங்கு பார்த்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் மகாநாடு என்பதாகப் பல மகாநாடுகள் கூட்டித் தாழ்த்தப்பட்ட மக்கள் குறைகளைப் பற்றிப் பேசப்படுகின்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் சுதந்திரம் பெற வேண்டும் என்றும், சுயமரியாதை பெற வேண்டும் என்றும், இந்த 10, 18 வருஷகாலமாகத்தான் வெளிப்படையாகவும், தைரியமாகவும் கிளர்ச்சி செய்யச் சந்தர்ப்பமும் சௌகரிய மும் பெற்றிருக்கிறார்கள் என்பதோடு, உங்களுக்கே இந்த உணர்ச்சியும் இப் போதுதான் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நாட்டில், புராண காலங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் மேம்பாட்டிற் காகப் பொதுவாக உழைத்ததாகவோ, உழைக்க ஆசைப்பட்டதாகவோ காண முடியவில்லை என்றாலும், ஏதோ இரண் டொருவர் நந்தன், பாணன், சொக்கன் என்பதாகச் சிலர் தங்கள் தங்கள் சொந்தத் தில் முக்தி அடையவோ, கடவுளைத் தரிசிக்கவோ என்று பாடுபட்டதாகப் புராணங்களில் காணலாம்.
அவை வெற்றி பெற்றதாகக் கதைகள் இருந்தபோதிலும் அவை நம்ப முடியாததும், சாதிக்க முடியாத பெரிய நிபந்தனைகள் மீது அதாவது நெருப்பில் குளித்து விட்டு வந்தும், கடவுளுடைய சம்மதமும் உத்தரவும் பெற்ற பிறகும் ஏதோ முக்தியோ, மோட்சமோ அடைந்ததாகத்தான் காணப்படுகின்றனவே ஒழிய, இந்த உலகத்தில் மற்ற மனிதர்களைப் போல் மானத்துடன் வாழ முயற்சித்த தாகவோ, வாழ முடிந்த தாகவோ பொய்க் கதைகள் கூடக் கிடையாது.

அது மாத்திர மல்லாமல் இந்து (ஆரிய) அரசர்கள் காலத் திலும், நீங்கள் இன்றுள்ள நிலையைவிட மிக்க கேவலமான நிலையில் நடத்தப்பட்ட தாகத்தான் காண முடிகின்றது. அன்றியும், தமிழ் அரசர்கள் மூவேந்தர்கள் முதலியவர் களுடைய ஆட்சிக் காலத்திலும் நீங்கள் மிக கேவலமாகவே உயிர்வாழ்ந்ததாகத்தான் காணக்கிடக்கிறது.

அவற்றிற்கு உதாரணம் திருவாங்கூர், கொச்சி முதலிய இந்து அரசர்கள் வாழும் நாட்டில் நீங்கள் எப்படி நடத்தப்பட்டீர்கள்? நடத்தப்படுகிறீர்கள்? என்பதைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

இந்து அரசர்கள் அல்லாத முகமதியர் அரசர்கள், கிறிஸ்தவ அரசர்கள் ஆகிய வர்கள் ஆட்சிக் காலமே உங்களை ஒரு அளவுக்காவது மனிதர்களாக நடத்தப் பட்டதாகச் சரித்திரமும் பிரத்தியட்ச அனு பவமும் காணப்படுகின்றது. உண்மையா கவே இந்நாட்டில் முகமதிய அரசர்கள் ஆட்சி 600, 700 வருஷகாலம் நடந்திருக்க வில்லையானால், தாழ்த்தப்பட்ட தீண்டப் படாத மக்களின் எண்ணிக்கை இன்று தோட்டத்தில் முக்கால் பாகம் கிணறு என்பதுபோல் சுமார் 15, 20 கோடி மக்களுக் குக் குறையாமல் இருந்திருக்கும்.
தீண்டப் படாதவர்கள் எண்ணிக்கை இன்று இந்திய ஜனத்தொகையில் 5-ல் ஒரு பாகத்திற்கு உள்ளாக இருப்பதற்குக் காரணம் முகமதிய ஆட்சியே ஆகும். அது பெருகாமல் அந்த அளவுக்கு உள்ளாகவே இருந்து வருவ தற்கும், கூடிய சீக்கிரத்தில் அடியோடு ஒழிந்து போவதற்கும் நம்பிக்கைக்கு இடம் ஏற்படக் காரணமாய் இருப்பது பிரிட்டிஷ் அரசாட்சியின் பயனே ஆகும்.

இந்த இரண்டு ஆட்சியும் எந்தக் கார ணத்தாலோ இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்க வில்லையானால் இந்தியாவில் ராஜ குடும்பமும், பார்ப்பனர் குடும்பமும் தவிர, மற்ற மக்கள் எல்லோரும் தீண்டத்தகாத வர்களாய், தாழ்த்தப்பட்ட மக்களாய்த்தான் இருந்திருக்க வேண்டும். இன்றுகூடப் பார்ப்பனரொழிந்த மற்ற மக்கள் கீழ் ஜாதிக்காரராய் மத சம்பிரதாயப் படியும், பழக்க வழக்கப்படியும் ஏன் அரசாங்க சட்ட முறைப்படியும் குறிப்பிடப் பட்டிருப்பதை யாரே மறுக்க முடியும்?

பழைய கால அரசர்கள் யோக்கி யதைகள் பார்க்க வேண்டுமானால், அவர்கள் மக்களை எப்படி நடத்தினார்கள் என்பதை உணர வேண்டுமானால், ராமன், அரிச்சந்திரன், சந்தனராஜன், பாண்டியன் முதலிய இந்து அரசர்கள் என்பவர்கள் நாடகத்தைப் பார்த்தாலே அறியலாம். முதன் முதலாக அரசன் கொலு மண்டபத் துக்கு வந்தவுடன் என்ன கேட்கின்றான்? மந்திரி! நமது நாட்டில் பிராமணர்கள் ஜபதபம், ஓமம், எக்கியம், யாகம் முதலிய வைகளைச் செய்து சுகமாக வாழ்கின் றார்களா?

அவர்களுக்கு மான்யங்கள் முதலிய வைகள் தாராளமாக விடப்பட்டிருக்கின் றனவா? சூத்திரர்கள், பிராமணர் முதலிய வர்களுக்கு அடங்கி ஒடுங்கி ஒழுங்காகத் தொண்டு செய்து வருகிறார்களா? என்று தானே நகர விசாரணை செய்கிறார்களே ஒழிய வேறு என்ன? ஆனால் இன்றுள்ள பிரிட்டிஷ் ஆட்சியின் நகர விசாரணை எப்படி இருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள். சமீப காலத்தில் பாராளுமன்றம் என்னும் பார்லிமெண்டைத் துவக்கியபோது, அரசர் பெருமான் என்ன சொன்னார்?

என்னுடைய பிரஜைகள் எல்லோரை யும் அவர்கள் எந்த ஜாதியினராய் இருந் தாலும், எவ்வித வித்தியாசமும் இல்லாமல் எல்லாத் துறையிலும் சரி சமமாய் நடத் துவேன் என்று சொல்லித் திறந்து வைத்தார். அந்தப்படி அவர் நடத்துவார் என்பதற்கு என்ன நம்பிக்கை என்று ராமராஜ்ய ஸ்தா பிதர்களாகிய காந்தியாரும், காந்தி பக்தர் களும்  கேட்கலாம்.

மற்ற காரியங்களில் பிரிட்டிஷ் அரசாங்கம் எப்படி நடந்து கொண்டு வந்தது என்றாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களாகிய உங்களைப் பொறுத்தமட்டில் யோக்கியமாகவும் கூடிய அளவுக்கு நீதியாகவும் ஆட்சி புரிந்திருக் கிறது என்று தைரியமாய்ச் சொல்லுவேன்.

இன்று தாலுகா போர்டு, ஜில்லா போர்டு, பஞ்சாயத்துச் சபை, சட்டசபை, இந்திய சட்டசபை ஆகியவைகளில் உங்களுக்கு ஸ்தானம் அளித்து பெரிய சாஸ்திரிகள், கனபாடிகள், சங்கராச்சாரிய சுவாமிகள், ராஜாக்கள், ஜமீன்தார்கள் என்பவர் களுக்குச் சமமாய் நடத்துகிறார்கள். ராம ராஜ் ஜியத்தில் இந்தச் சபைகளுக்கு கக்கூஸ் வாரவோ, பங்கா போடவோ கூட உங்களை அனுமதிக்க மாட்டார்கள்.

உதாரணமாக இன்னும் சில அக்கிர காரங்களில்  எச்சிலை எடுக் கவோ, குப்பை கூட்டவோ, கக்கூஸ் வாரவோ கூட உங்களை அனுமதிப்பதில்லை. கும்ப கோணம் முனிசிபாலிட்டி யில் அக்ராகாரத் துக்கு கக்கூஸ் எடுக்கச் சூத்திரர்கள் என்பவர்களை நியமிக்க வேண்டும் என்று பாடுபட்டது உங்களுக்குத் தெரியாதா? இப்படி பிரிட்டிஷ் அரசாங்கம் உங்களைப் பொருத்தவரை எவ்வளவோ நன்மை செய்து வந்திருப்பதோடு உங்களுக்கு ஒரு மந்திரி ஸ்தானமும் கிடைக்கும் படியான அளவுக்குச் சட்டசபைகளில் பிரதிநிதித்து வம் கிடைக்கும்படி சீர்திருத்தம் வழங்கி யிருக்கிறது.

ஆகவே நான் ஏதோ ராஜ விசுவாசம் உபன்யாசம் செய்வதாய் தேசாபிமான வீரர்களுக்குத் தோன்றலாம். பிரிட்டிஷ் அரசாங்கம் மாத்திரமே அல்லாமல், உலகில் உள்ள அரசாங்கங்கள் எல்லாமே ஒழிந்து போக வேண்டும் என் கின்ற ஆசையுள்ளவன் நான். ராஜாக்கள் என்பவர்களே இன்றைய உலகுக்கு அவசியமில்லாதவர்கள் என்றும் பொது ஜனங்களுடைய சுயமரியா தைக்குக் கேடானவர்கள் என்றும் கருதியும், சொல்லியும் எழுதியும் வருகின்றவன் நான்.

ராஜாக்கள் மாத்திரமல்லாமல் பணக் காரர்கள், ஜமீன்தார்கள், வியாபாரிகள், முதலாளிகள் என்கின்றதான கூட்டங்கள் கூடப் பொது ஜனங்களை அரித்துத் தின்னும் புழுக்கள் ஆனதால் அவை அழிக்கப்பட வேண்டியவை என்றும் கூடச் சொல்லுகிற வன் நான். உங்களைப் பொறுத்த வரை யிலும் நீங்கள் காந்தி ராஜ்ஜியத்துக்கோ, ராமராஜ்ஜியத் துக்கோ கராச்சி சமதர்ம ராஜ்ஜியத்துக்கோ போவதைவிட பிரிட் டிஷ் அரசாங்கம் ஆயிரம் மடங்கு மே லானது என்று பறை அடிப்பேன்.

ராமராஜ்ஜியத்தில் ஆகட்டும், காந்தி ராஜ்ஜியத்திலாகட்டும், கராச்சி திட்ட சமதர்ம ராஜ்ஜியத்திலாகட்டும், வருணா சிரம தர்மமோ, ஜாதிப் பாகுபாடோ, இவைகள் சம்பந்தப்பட்ட பழைய பழக்க வழக்கங்கள் அது சம்பந்தமான கலைகளோ சிறிதுகூட மாற்ற முடியாது என்றும், அவை பத்திரமாகக் காப்பாற்றப்படும் என்றும் மேல் ஜாதியாருக்கு வாக்குறுதிகள் கொடுக்கப்பட் டிருக்கிறது.

இந்த வாக்குறுதிகள் உங்க ளுக்கு எவ்வளவு ஆபத்து என்பது இப் போது ஒரு சமயம் உங்களுக்குத் தெரியா மல் இருக்கலாம். இந்த வாக்குறுதிகள் எவ்வித முற்போக்குக்கும் முட்டுக் கட்டையாக வந்து தடுத்துக் கொள்ளும்.
ஏதோ ஒரு காலத்தில் விக்டோரியா மகாராணியார், உங்கள் மத விஷயங்களில் பிரவேசிப்பதில்லை என்று வாக்குறுதி கொடுத்ததாகக் கூறிக் கொண்டு, இன்று, அவ்வாக்குறுதியை, ஏதாவது ஒரு பொதுக் கிணற்றில் எல்லோரும் தண்ணீர் இறைத்துக் கொள்ளலாம் என்றாலும், ஏதாவது ஒரு பொது ரோட்டில் எல்லோரும் நடக்கலாம் என்றாலும், ஒரு பொதுச் சத்திரத்தில் எல் லோரும் இருக்கலாம் என்றாலும், விபசாரத் துக்குக் கடவுள் பேரால் பெண்களுக்கு (பொட்டுக்கட்டு) லைசென்சு கொடுக்கக் கூடாது என்றாலும், ஏதாவது ஒரு கடவுள் என்பதைக் கோயிலில் சென்று தரிசிக்கலாம் என்றாலும், பால் குடிக்கும் குழந்தைகளைச் சீலை கட்டத் தெரியாத குழந்தைகளைப் பெண் ஜாதியாக ஆக்கிப் படுக்கை வீட்டிற் குள் விடக் கூடாது என்றாலும் அவ்வாக் குறுதிகள் வந்து முட்டுக்கட்டையாக இருக்கும்படி பயன்படுத்தப்படுகின்றன.

இப்படி இருக்கும்போது, பழைய பழக்க வழக்கங்கள், சாஸ்திரங்கள், கலைகள், தொழில் முறைகள் ஆகியவை காப்பாற் றப்படும் என்று வாக்குறுதி கொடுத்து ஒரு சமதர்ம ராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பதென்றால், அந்த சமதர்த ராஜ்ஜியத்துக்குக் காந்தியா ரால் ராமராஜ்ஜியம் என்றும் வருணாசிரம ராஜ்ஜியம் என்றும் பாஷ்யம் சொல்லப்பட்டு இருக்கிறது என்றால் சர்வ வியாதிக்கும் ஒரே மாத்திரை என்பது போல் சகலவித சீர்திருத்தத்துக்கும் இந்த ஒரு வாக்குறுதியே எமனாய் வந்து கொன்றுவிடாதா என்று யோசித்துப் பாருங்கள்.

இந்த வாக்குறுதி யின் கீழ் என்ன என்ன சீர்திருத்தமோ, ஏதாவது ஒரு மாறுதலோ செய்ய முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். இன்று உங்கள் மக்களுக்கு இருக்கும் தரித்திரமும், கொடு மையும் சேர்த்து இந்த ராமராஜ்ஜியத்தை ஆதரிக்கச் செய்கின்றது. ஏன் உங்களைவிட பெரிய ஜாதி என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனரல்லாத மேல் ஜாதி இந்துக்கள் என்பவர்களுடைய வயிற்றுப் பசியால், தங் களுடைய சூத்திரப் பட்டம் இந்த ராமராஜ் ஜியத்தில் வருணாசிரம ராஜ்ஜியத்தில், கராச்சி சமதர்ம ராஜ்ஜியத்தில் ஒழியாது என்று தெரிந்திருந்தும், எத்தனை பேர் இன்று அதை ஆதரிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, உங்களில் சிலர் ஆதரிப் பதைப் பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை.

இவ்வளவு தூரம் நான் இவற்றை விவரித்துச் சொல்லக் காரணம், இன்று உள்ள உங்கள்  குறைகள், இழிவுகள் நீங்கி மனிதத் தன்மை பெறுவதற்கு நீங்கள் பிரிட்டிஷ் ஆட்சியைத் தான் நம்ப வேண்டு மென்றும், அது உள்ள காலத்திலேயே உங்கள் குறைகளை, இழிவுகளை நிவர்த் தித்துக் கொள்ள முயல வேண்டும் என்றும், அரசாங்கத்துக்கு விரோதமாகப் பேசவோ, மக்களுக்குள் விரோத உணர்ச்சி ஏற்படச் செய்கின்றதான, அரசாங்கத்தாரோடு போர் புரிவதாகவோ சொல்லிக் கொள்கின்ற கட்சியிலோ, கூட்டத்திலோ நீங்கள் கலந்து கொள்ளக் கூடாது என்றும் சொல்லுவதற்கு ஆகவே இவற்றைச் சொல்லுகிறேன்.

நீங்கள் எல்லாம் அப்படிச் செய்ய வில்லையா என்றும், மற்றும் எத்தனையோ பேர் அந்தப்படி அரசாங்கத்துக்கு விரோத மாய் நடந்து கொண்டு வாழவில்லையா என்றும் கேட்பீர்கள். அவர்கள் நிலை வேறு, உங்கள் நிலை வேறு. அவர்களில் சிலர் இன்று மதத்தில் கீழாக மதிக்கப்பட்டாலும், பழக்க வழக்கத்தில் பலர் சமமாக மதிக்கப் படுகிறார்கள். கல்வியில்  சிறிது முன்ன ணிக்கு வந்து விட்டார்கள். உத்தியோகம்,  தொழில்கள் ஆகியவைகளில் எதிலும் போட்டி போடத் தகுதி அடைந்து விட்டார் கள். பார்ப்பனர்கள் சங்கதியோ கேட்க வேண்டியதில்லை.

எல்லா விதத்திலும் மதத்தாலும் பழக்க வழக்கத்தாலும் பிரத்தி யட்சத்திலும் மேல் நிலையில் இருக் கிறார்கள். பாடுபடாமல் வாழ்க்கை நடத்தும் யோக்கியதை அடைந்துவிட்டார்கள். 100க்கு 100 பேர் படித்து இருக்கிறார்கள். 100க்கு 90க்கு மேல் உத்தியோகங்கள் அவர்கள் கைவசம் இருக்கின்றன.
இனி அவர்களுக்கு வேண்டியதெல் லாம் அவர்களோ, அவர்களது அடிமை களோ நாட்டை ஆள வேண்டியது என் பதைத் தவிர வேறு இல்லை. ஆதலால் அவர்கள் அரசாங்கத்தாரோடு போராடவும், சட்டம் மீறுவதும், அரசாங்கத்துக்குச் சதா தொல்லை விளைவிக்கவும் சௌகர்ய முடையவர் களாகயிருக்கிறார்கள்.

இது மாத்திரமல்லாமல் அவர்கள் மதத்துக்கும், பழக்க வழக்கத்துக்கும் விரோ தமாக அரசாங்கம் சில சீர்திருத்தங்களை செய்ய முற்படுவதாலும், அதனால் பார்ப்பன ஆதிக்கத்துக்குப் பங்கம் வரும்போல் இருப்பதாலும், அச் சீர்திருத்தங்களைச் செய்ய வொட்டாமலும் செய்து விட்டால் அது அமலில் நடத்தப்படாமலும் இருப்ப தற்கு ஆக வேண்டியாவது, அரசாங்கத்தை வழிமறிப்பதற்காக அரசாங்கத்துக்குத் தொல்லை விளைவிக்க வேண்டியவர் களாக இருக்கிறார்கள்.

ஆதலால், அவர்களுடன் நீங்கள் சேரக் கூடாது என்று சொல்ல வேண்டியவனாய் இருக்கிறேன்.

ராசிபுரம் தாலுகா தாழ்த்தப்பட்ட மக்கள் மாநாட்டில்- தந்தை பெரியார்  29.09.1935 இல்  ஆற்றிய தலைமை உரை-" குடிஅரசு" - சொற்பொழிவு - 06.10.1935

ஜாதிக்கொடுமை,உயர்வு தாழ்வு ஒழிய - பெரியார் இருகூர் திராவிட முன்னேற்ற சங்கம் முதலாவதாண்டு விழா

ஜாதிக்கொடுமை,உயர்வு தாழ்வு ஒழிய - பெரியார்
இருகூர் திராவிட முன்னேற்ற சங்கம் முதலாவதாண்டு விழா

ஜாதிக்கொடுமை, உயர்வு தாழ்வு ஒழிய,
கடவுள் நம்பிக்கையையும், மத நம்பிக்கையையும்,
வினை, விதி நம்பிக்கையையும் அடியோடு ஒழிக்க வேண்டும்.


சகோதரர்களே! சகோதரிகளே!!

உங்கள் சங்க ஆண்டு விழாவில், சங்க சம்மந்தமாகவும் மற்றும் உங்கள் முன்னேற்ற விஷயமாகவும் பெரியோர்களான ராவ்சாகிப் ராமச் சந்திரம் செட்டியார், சின்னப்பாவு, சுப்பையா ஆகியவர்கள் பேசியது கேட்டி ருந்தீர்கள். உங்களது குறைகளை யெல்லாம் எடுத்துக்காட்டினார்கள். உங்களைத் தெருவில் நடக்கவிடாததைப் பற்றியும், உங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கவிடாமல் தடுத்து கலகம் செய்ததைப்பற்றியும், உங்கள் பிள்ளைகள் படிப்பதனால் இந்த ஊர் உயர்ந்த ஜாதியார்கள் என்பவர் கள் தங்கள் பிள்ளைகளை நிறுத்திக் கொண்டதைப் பற்றியும், மற்றும் ராமநாத புரம் ஜில்லாவில் ஆதிதிராவிட சமூகத்தை மற்ற சமூகத்தார் செய்யும் கொடுமைகளைப்பற்றியும் இங்கு பேசியவர்கள் எடுத்துச் சொன்னதை கேள்க்க எனக்கு மிக மிக ஆத்திரமாய் இருக்கின்றது. ஆனால் இதற்கு யார் ஜவாப்புதாரிகள் என்பதைப்பற்றி யோசித்துப் பார்க்கையில் உங்களை இக் கொடுமை செய்பவர்கள் ஜவாப்தாரியல்ல வென்றும் நீங்களும் இக் கொடுமை அனுபவத்தில் உங்கள் சமூகத்தை உத்தேசித்து பரிதாபப்பட நியாயமில்லை என்றும் எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் அவர்கள் தங்களது நம்பிக்கை யின் பேரில் தங்களது பழக்க வழக்கங்களின் பேரில் தங்களது மத உணர்ச்சி, மத ஆதாரம் ஆகியவைகளில் உள்ள பற்றுதலின் பேரில் அவர்கள் நம்பும் - வணங்கும் கடவுளின் கட்டளை, செய்கை என்ற உறுதியின் பேரில் தங்கள் முன் ஜென்மத்தின் கர்மம் - பூர்வ புண்ணியம் - தலைவிதி என்கின்ற சுதந்திரத் தின் பேரில் ஒரு உரிமைப்பாராட்டி அம்மாதிரி செய்கின்றார்களே ஒழிய வேறில்லை. அதுபோலவே நீங்களும் பிறர் உங்களை நடத்துகின்ற அந்த மாதிரியான கொடுமைகளை நினைத்து மாத்திரம், அதுவும் அந்த சமயத்தில் மாத்திரம் சிறிது அக்கிரமமாகவும் கொடுமையாகவும் இருப்பதாக கருது கின்றீர்களே ஒழிய இதற்கு காரணமென்ன? இப்படிப்பட்ட ஒரு கொடுமை யானதும், அக்கிரமமானதுமான காரியம் ஏன் நடக்கின்றது? என்கிற விஷயத்திலும் இதை எப்படி அடியோடு ஒழிப்பது? இதற்காக என்ன செய்ய வேண்டியது? என்கின்ற விஷயங்களை நீங்கள் நினைப்பதுமில்லை. அப்படிப்பட்டவைகளை வேறு யாராவது எடுத்துச் சொன்னாலும் அவை களை ஒப்புக்கொண்டு நடவடிக்கையில் நடப்பதற்கு துணிவதுமில்லை. வீணாய் இப்படிப்பட்ட ஏதாவது ஒரு சமயங்களில் உங்களில் தனிப்பட்ட வர்களுக்கு ஏதாவது சங்கடம் வந்த காலத்தில் மாத்திரம், இரண்டொரு வார்த்தைகளால் அதுவும் இதன் அஸ்திவாரத்தை கவனியாமல் தனிப்பட்ட நபர் மீதோ வகுப்பார் மீதோ குற்றம் சொல்லி கூப்பாடு போடுவதும் பிறகு நாலுநாள் கடந்து விட்டால் அது மறைந்து போய் பழையபடி ஆய்விடுவதும் வழக்கமாக இருந்து வருகின்றது. பொதுவாழ்க்கையில் உள்ள சில கனவான் களும் உங்களுக்குப் பரிந்து பேசுவதுபோல் வக்காலத்து பேசுவதுபோல் சில வார்த்தைகளைப் பேசிவிட்டு பிறகு அவரவர்கள் சொந்தவேலையை அவரவர்கள் பார்ப்பதும், பிறகு என்றும் போல் சாதாரணமாயிருப்பதும் வழக்கமாக இருக்கின்றது.

என்னுடைய சுமார் 20, 30 வருஷ­ பொது வாழ்க்கைத் தொண்டில் இந்த சம்பவங்கள் அநேகம் எனக்கு அனுபவ முண்டு. உங்களிடத்தில் ரொம்பவும் அனுதாபமிருப்பது போல் பேசி கண் களில் கண்ணீர் வடித்துவிட்டுப்போவார்கள். பிறகு அவர்கள் வீட்டிற்குப் போனவுடன் பழைய உணர்ச்சிதான் அவர்களிடம் தாண்டவமாடும். இதற்கு உதாரணம் வெளியில் போய்த் தேடவேண்டியதில்லை உங்களிடத்திலேயே இருப்பதை ஞாபகப்படுத்திப் பார்ப்பீர்களானால் விளங்கும். அதாவது உங்களில் பலர் உங்களை விட உயர்ந்த ஜாதியார் என்று சொல்லிக் கொள்ளும் அய்யர், கவுண்டர், நாயுடு முதலிய ஜாதியார் உங்களைத் தாழ்மையாகக் கருது வதை மாத்திரம் நினைத்து வருத்தப்படுகின்றீர்களே யல்லாமல் பறையர் சக்கிலியர்கள் என்பவர்களை நீங்கள் உங்களிலும் தாழ்ந்த ஜாதியாகக் கருதி அவர்களை உங்களுக்குச் சமமாக நினைத்து சுதந்திரங்கள் கொடுக்க மறுக் கின்றீர்கள். இதற்கு எல்லாம் காரணம் உங்கள் மத உணர்ச்சியும், உங்கள் கடவுள் உணர்ச்சியும், உங்கள் விதி உணர்ச்சியுமேயாகும். மத சம்பிரதாயப்படி நீங்கள் சக்கிலியரை பறையர்களை விட உயர்ந்த ஜாதியாராகவும் கடவுள் அந்தப்படி உங்களைப் படைப்பித்ததாகவும் அதற்குக் காரணம் உங்களு டைய பூர்வஜன்ம கர்மத்தின் விதி யென்றும் கருதுகிறீர்கள். உங்களைத் தாழ்ந்த ஜாதியாய் கருதியிருப்பவர் களும் அப்படியேதான் மத ஆதாரத் தாலும் கடவுள் செயலாலும் பூர்வ ஜன்மாந்தர கர்ம விதியாலும் அப்படிப் பிறந்ததாகக் கருதியிருக்கின்றார்கள்.

இந்த மாதிரியான மதம் கடவுள் ஜென் மாந்திர விதி ஆகிய மூன்றையும் நம்பியிருக்கின்றவன் இம்மூன்றையும் பாதுகாக்க விரும்புகின்றவன் எப்படி மற்ற மக்களை சமமாகக் கருதக்கூடும்? பணக்காரனும் தான் பணக்காரனா யிருப்பதற்கு இதே காரணம்தான் கருதிக் கொண்டிருக்கிறான். திருடனும் தான் திருடனாய் இருப்பதற்கும், அயோக்கி யனும் தான் அயோக்கியனாய் இருப்பதற்கும், அரசனும் தான் அரசனா யிருப்பதற்கும், கூலியும் தான் கூலியாயிருப்பதற்கும், ஏழையும் தான் ஏழை யாயிருப்பதற்கும், கொடுங்கோல் ஆட்சியில் கஷ்டப்படும் குடிகளும் (பிரஜையும்)தாங்கள் கஷ்டப்படுவதற்கும் மத சம்பிரதாயத்தையும் கடவுள் சித்தத்தையும் பூர்வ ஜன்ம கர்மவிதியையும் காரணமாய் கருதி தங்கள் நிலையில் திருப்தி கொண்டு இருக்கின்றார்கள். இந்த மாதிரி மக்களை உடைய தேசத்தில் எந்த மாதிரியான முன்னேற்றத்தைக் காணக்கூடும்? இந்த தேசத்தை மனிதத் தன்மையுடைய தேசமாகவும், மானமுள்ள தேசமாகவும், சுவாதீனமும் சமத்துவமுமுள்ள தேசமாகவும், ஆகச் செய்யவேண்டுமானால் மேல்கண்ட மூன்றும் அதாவது மதம், கடவுள், விதி ஆகிய மூன்றும் அடியோடு ஒழிக்கப் பட்டாக வேண்டும். அந்தப்படி யில்லாதபட்சம் வெறும் பேச்சுதான் நடை பெறுமே யொழிய காரியத்தில் ஒரு சிறிதும் பயனடைய முடியாது என்று நான் உறுதியாய்ச் சொல்லுவேன்.

சகோதரர்களே! உங்கள் இழிவு அதாவது தாழ்ந்த ஜாதித்தன்மை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. வேதகாலத்தில் இருந்திருக்கின்றது. அரிச் சந்திரன் காலத்தில் இருந்திருக்கின்றது. ராமன் காலத்தில் இருந்திருக் கின்றது. எல்லா ஆழ்வார், நாயன்மார் காலத்திலும் இருந்திருக்கின்றது. அதற்குமேல் இனி எப்போது இருந்திருக்க வேண்டும் என்று சொல்ல ஆசைப் படுகின்றீர்கள்?

மனிதனுக்கு கடவுள் உணர்ச்சி தோன்றிய காலந்தொட்டே இந்த நாட்டில் மேல் கீழ் ஜாதி உணர்ச்சி தோன்றிவிட்டது. கடவுள் பேராலேயே மேல் ஜாதி கீழ் ஜாதி உணர்ச்சிகளை காட்டப்பட்டிருக்கின்றன. இந்துமதம் என்பதில் வைணவத்திலாவது சைவத்திலாவது ஜாதிப்பிரிவு உயர்வு தாழ்வு தத்துவம் காணப்படாத கடவுள்களோ அவதாரங்களோ, திருவிளையாடல் களோ, கடவுளைக் காட்டிய பெரியார்களோ, புராணங்களோ, இதிகாசங்களோ ஏதாவது ஒன்றைக்காட்ட முடியுமா? என்று கேட்கின்றேன். 64 நாயன்மார் களுக்கும், 64 ஜாதிக்காரர்களாய் பிறந்திருக்கிறார்கள். 12 ஆள்வார்களும் 12 ஜாதிக்காரர்களாய் பிறந்திருக்கிறார்கள். இந்து மதத்திற்கு ஆதாரமான - சட்டமான மனுதர்ம சாஸ்திரம் முதலியவைகளை எடுத்துக்கொண்டால், அவைகளில் அளவில்லாத ஜாதியும் அதற்கு தாரதம்மியமும் காணப் படுவதை யாரும் மறுக்கமுடியாது. ஆகவே எந்த நிலையில் எந்த ஆதாரத் தைக் கொண்டு இன்று உங்கள் மத நம்பிக்கைக்காரனும், அதைச்சேர்ந்த கடவுள் நம்பிக்கைக்காரனும், அது சம்பந்தமான வேதம் சாஸ்திரம், புராணம், இதிகாச நம்பிக்கைக்காரனும் உங்களிடம் வந்து ஜாதி பாகுபாடும், ஜாதி வித்தியாசமும் இல்லை என்று சொல்ல முடியும்? என்று கேட்கிறேன்.

இந்து மத சம்பிரதாயப்படி ஜாதி இல்லை என்று உங்களிடம் யார் சொல்ல வந்தாலும் அவர்களை மூடர்கள் என்றோ மோசக்காரர்கள் என்றோதான் கருத வேண்டும். மற்றும் சிலர் தொழில் பாகுபாட்டைக் கண்டு ஜாதி வகுக்கப்பட்டதே ஒழிய பிறவியைக் கொண்டு பிரிக்கப்பட வில்லை. ஆதலால் தொழில் பிரிவு இருக்கத்தான் வேண்டும் என்று சொல்லி “கீதை யில் பகவான் சொல்லுகின்றார்” என்று உங்களை ஏய்க்கக்கூடும். அவர் களும் அதுபோலவே அறியாதவர்களாகவோ, ஏய்க்க வந்தவர்களாகவோ தான் இருக்க வேண்டும். தொழிலுக்காக வந்தாலும் ஏன் பாகுபாடு இருக்க வேண்டும் என்றுதான் கேட்கின்றேன். ஒரு மனிதன் காலையில் தச்சனாகவும், மத்தியானம் வியாபாரியாகவும், இராத்திரியில் உபாத்தியராக வும், ஒருவனை ஒருவன் இம்சைப்படுத்துகின்ற காலத்தில் அவனை உபத்திரவத்தில் இருந்து மீட்பவனாகவும் ஏன் இருக்கக்கூடாது என்று கேட்கிறேன். மறுநாள் காலையில் உழுகின்றவனாகவும், பகலில் நெய்கின்ற வனாகவும், மாலையில் விற்கின்றவனாகவும், இரவில் காவல்காரனாகவும் ஏன் இருக்கக்கூடாது? என்று கேட்கின்றேன்.

ஆகவே பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்று சொல்லுகின்றவர்களும், அந்தணர், அரசர், வணிகன், வேளாளர், குடிமக்கள் என்று சொல்லுகிறவர்களும், இவர்கள் பிறவியினால் என்று சொல்லுகிறவர்களும், இவர்கள் தொழிலினால் என்று சொல்லுகிறவர்களும், ஒரே மாதிரியானவர்களே தவிர இவர்களில் அறிவாளி களோ அல்லது யோக்கியர்களோ இருக்க முடியாது என்றே சொல்லுவேன். இந்தப்படி ஒரு முறையும் நமக்கு வேண்டியதில்லை என்றும் சொல்லுவேன். அது மக்களுக்கு எந்த முறையிலும் எந்த அர்த்தத்திலும் பயன் விளைவிக்க வேயில்லை.

இவையெல்லாம் உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை, எஜமான், அடிமை, முதலாளி, கூலி முதலிய கொடுமைத் தன்மைகளைத்தான் உண்டாக்க பயன்படுகின்றனவே ஒழிய மக்கள் சமத்துவத்திற்கும், சுதந்திரத் திற்கும் சிறிதும் பயன்படவில்லை. ஆகையால் மக்களில் எந்த வகையிலும் உயர்வு தாழ்வு உணர்ச்சி ஏற்பட முடியாத மாதிரியில் தான் உலக வாழ்க்கை நடப்பு ஏற்பட வேண்டும் அதற்கு தகுந்த மார்க்கமே செலாவணியாகப் பார்க்க வேண்டும். இல்லாதவரை இன்றைய கொடுமைகள் ஒழிய மார்க்கமே இல்லை. இத்தொண்டில் தயவு தாக்ஷண்ணியம் பார்ப்பதும் முன்னே செய்த வேலையை பின்னே அழித்துக் கொண்டு போவதாகும். இந்த விஷயங்கள் வரவர ரத்தக்களரியும் மண்டை உடையவும், உயிர்ச் சேதமும் ஏற்படத் தேவையான நிலைக்கே கொண்டுவந்து விட்டுக் கொண்டிருக்கின்றன. இதைக் கண்டு யாரும் பயந்து விடக்கூடாது. இன்றைய அஹிம்சா தர்மம் என்பவைகள் எல்லாம் பெரிதும் புரட்டுகளாகவே முடிந்துகொண்டு வருவதை நேரில் பார்க்கின்றோம். தந்திரசாலிகள் எல்லாம் அடிபடாமல் தப்பித்துக் கொள்ளவும் சாதாரண ஜனங்களும் யோக்கியர்களும் அடியும் உதையும் மண்டை உடைவும் துப்பாக்கி வெடியும் அடையவும்தான் அஹிம்சா தர்மமாய் இருக்கின்றது. அது எப்படியிருந்தாலும் மனிதன் மனித சுதந்திரம் அதாவது, தெருவில் நடப்பது, குளத்தில் தண்ணீர் மொள்ளுவது, மனிதனுக்கு மனிதன் தொடுவது, முதலிய சுதந்திரங்கள் கூட கொடுப்பதற்கு தன்தன் நாட்டினனாலேயே தன் இனத்தாலேயே தடைப்படுத்தப்பட்டிருக்கும் போது அதுவும் மதத்தின் பேராலும் கடவுள் பேராலும் நடக்கும்போது வேறு நாட்டானிடம் அரசாக்ஷி சுதந்திரம் என்று கேட்கப்படுவதைப் பார்த்தால் இதை எதற்கு ஒப்பிடுவது? என்பது எனக்கு புலப்படவில்லை. ஒன்றா உங்களுக்கு மனித சுதந்திரம் கிடைக்கவேண்டும். அல்லது நீங்கள் இந்த நாட்டிலாவது இதை மதத்திலாவது இந்த சமூகத்திலாவது இல்லாமல் இருக்கவேண்டும். இந்த முடிவைத் தவிர எப்படியோ உயிர்வாழ்ந்தால் போதும் என்று நினைத்துக்கொண்டு இப்படியே இருப்பது மிகவும் மானங்கெட்டத்தனமாகும். இவ்விஷயத்தில் பொருத்துப் பொருத்து பார்க்கலாம் என்பதும் பேடியின் கொள்கையேயாகும். எவ்வளவு நாள் பொருப்பது? எவ்வளவு மெள்ளப் போவது? இவற்றிற்கு ஏதாவது நாணையமோ யோக்கியப் பொறுப்பான அர்த்தமோ வேண்டாமா? இந்த நிலைக்காக இதற்கு முன் எத்தனையோ பேர் ஆயிரக்கணக்கான வருஷங்களாய் வக்காலத்துப் பேசியாய் விட்டது. எத்தனையோ பேர் தர்ம நியாயம் பேசியாய் விட்டது. அவ்வளவும் பழய நிலையை பலப்படுத்தவே முடிந்தது. “தோலைக்கடித்து துருத்தியைக் கடித்து வேட்டை நாய் ஆய்விட்டது” என்பதுபோல் தேசீயமானது ஒரு பக்கம் அரசியல் சுதந்திரம் கேட்டுக் கொண்டும் மற்றொரு பக்கம் வர்ணாசிரம சுயராஜ்ஜியமும் பெற முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்த விழிப்பாசை மயக்கத்தில் கூட “ஜாதி வித்தியாசம் இருக்கவேண்டும், பரையர் வேண்டும், தீண்டாமை வேண்டும், மனுதர்மம் வேண்டும்” என்று மகாநாடுகள் கூடிப் பேசப்படுகின்றன. இதை ஏன் என்று கேட்க ஆட்கள் இல்லை. தேசிய வீரர்களில் வெள்ளைக்காரன் ஒடிப்போகவேண்டும் என்று சொல்ல மாத்திரம் அனேக ஆட்கள் இருக்கின்றனர்.

சகோதரர்களே! இன்றைய தினம் வெள்ளைக்காரன் இருப்பதா? போவதா? என்பது நமது கவலையல்ல. உங்களுக்கும் அந்தக் கவலை வேண்டாம். நம்மீதும் உங்கள் மீதும் நமது மக்களால் சுமத்தப்பட்ட இழிவு களும் நடத்தப்படும் கொடுமைகளும் ஒழிவதாக வேண்டும் என்பதை முடி வான லக்ஷியமாய்க் கொள்ளுங்கள். அதற்காக உயிரைவிட நீங்களும் உங்கள் பெண்டு பிள்ளைகளும் தயாறாயிருங்கள். இன்றைய தினம் உலகத் தில் பல தேசங்கள் பணக்காரன், ஏழை என்கிற வித்தியாசமும் எஜமான் கூலிக்காரன் வித்தியாசமும் இருக்கக்கூடாது என்று முடிவு கட்டி வேலை செய்து வெற்றியடைந்து கொண்டு வருகிற காலத்தில் நீங்கள் பார்ப்பார ஜாதி பரச்சாதி ஒருவரை ஒருவர் பார்த்தால் தொட்டால் தெருவில் நடந்தால் தீட்டு என்ற கொள்கையை வைத்துக் கொண்டிருந்தால் நமக்கும் அவர்களுக்கும் எவ்வளவு தூரம் இருக்கின்றது என்கிறதை யோசித்துப் பாருங்கள். இந்த உணர்ச்சிகள் உங்களுக்கு தோன்றாமல் இருப்பதற்கு காரணம் உங்கள் முட்டாள் தனமும் அதற்கு ஆதரவான உங்கள் மத நம்பிக் கையும் தெய்வ நம்பிக்கையுமே ஆகும். ஆதலால் அதை முதலில்விட்டு விரட்டி அடியுங் கள். பிறகு தானாகவே சுயமரியாதை தோன்றி நியாயமும் சமத்துவமும் கிடைத்துவிடும்.

கடைசியாக சென்ற வருஷம் உங்கள் சங்கத்தை திறந்து வைத்து பல உபன்யாசங்கள் புரிந்து பல உதவியும் புரிந்து உங்கள் முன்னேற்றத்தில் சதா கவலையும் கொண்டு உழைத்து வந்தவரும் இன்றும் இங்கு வந்து உங்களுக்கு அரிய உபன்யாசம் செய்தவருமான திரு. சி.எம். ராமச்சந்திரம் செட்டியார் அவர்களுக்கு அரசாங்கத்தில் ராவ் சாகிப்பட்டம் அளிக்கப் பட்டிருப்பதைக் கேட்க நீங்கள் எல்லோரும் மிக்க மகிழ்ச்சி அடைவீர்கள். ஆகவே அக்கனவானை உங்கள் சார்பாக நான் பாராட்டுகின்றேன். மற்றும் கோவை சிவிக் அசோசியேஷன் செகரட்டரி திரு. சின்ன அப்பாவு அவர்கள் உங்கள் முற்போக்கில் கவலை கொண்டு அடிக்கடி கவனித்து உங்களுக்கு அரிய புத்திமதிகள் சொல்லி வந்ததற்கும் உங்கள் சார்பாய் நான் மனப்பூர்வமாய் பாராட்டுகின்றேன். கோவை திரு. சுப்பன் அவர்கள் இன்று உங்களுக்கு முக்கியமான பிரசங்கம் செய்ததற்கும் அவரையும் பாராட்டுகிறேன். இந்த முதலாவது ஆண்டு விழாவுக்கு தலைமை வகித்து நடத்தும் பெருமையை எனக்குக் கொடுத்து எனக்கு செய்த வரவேற்புக்கும் நீங்கள் வாசித்துக் கொடுத்த வரவேற்புப் பத்திரத்திற்கும் எனது நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

கோவை, இருகூரில் 03.01.1931 அன்று நடைபெற்ற இருகூர் ஆதி திராவிட சமூகத்தினர்களால் நிறுவப்பட்ட திராவிட முன்னேற்ற சங்க ஆண்டு விழாவில் தந்தைபெரியார் அவர்கள்  ஆற்றிய  தலைமையுரை."குடி அரசு" - சொற்பொழிவு - 11.01.1931

Tuesday, 30 May 2017

பொட்டுக்கட்டு நிறுத்தும் சட்டம் டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி மசோதா - 30.03.1930

பொட்டுக்கட்டு நிறுத்தும் சட்டம் டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி மசோதா

டாக்டர். முத்து லட்சுமி ரெட்டியின் பொட்டறுப்பு மசோதா விஷயமாக அபிப்பிராயம் தெரிவிக்க வேண்டுமென்று சென்னை சர்க்கார் கேட்டுக் கொண்டதற்கிணங்க திரு. ஈ. வெ. ராமசாமியார் சென்னை சட்ட சபை காரியதரி சிக்கு அனுப்பி இருக்கும் ஒரு கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது

1. ஹிந்துப் பெண்களை ஹிந்து ஆலயங்களில் பொட்டுக் கட்டு வதினால் அவர்கள் வியபிசாரம் செய்யும்படி தூண்டப்படுகிறார்கள்.

2. பண ஆசையினால் தேவதாசிகள் வியபிசாரம் செய்வதினால் அவர்களது வாழ்க்கை இயற்கைக்கு விரோதமாகவும், ஆபாசமாகவும் இருக்கிறது. இந்த வியபிசாரிகளால் மேக வியாதிகள் பரப்பப்படுவதினால் அந்நோய் அந்நியர்களுக்குப் பரவாமல் தடுக்க வேண்டியதும் முக்கிய மானதாகும்.

3. டாக்டர். முத்துலட்சுமி மசோதாவின் நோக்கம் வியபிசாரத்தை அடியோடு ஒழிப்பதல்லவானாலும் வியபிசாரம் விருத்தியாவதற்குள்ள ஒரு முக்கியமான வழியை அடைப்பதுதான் அதன் நோக்கம். வியபிசாரத்தை அடியோடு ஒழிக்கத்தக்கவாறு இந்திய சமூகம் இன்னும் முன்னேற்றமடைய வில்லை. வெளிநாட்டு நிலைமையும் இவ்வாறே இருந்து வருகிறது. பணத்துக் காகப் பெண்கள் வியபிசாரம் செய்வதைத் தடுக்க சட்டம் இயற்றும் காலம் இன்னும் வரவில்லை. ஆனால் சமயத்தின் பேரால் மதக் கடமையாகப் பெண் கள் வியபிசாரம் செய்வதைத் தடுக்க நாம் முன்னாடியே சட்டம் இயற்றி இருக்க வேண்டும். தற்காலச் சட்டப்படி 18 வயதிற்குப் பிறகு பொட்டுக் கட்டப் படும் பெண்களுக்கும் கூட இள வயது முதலே பெற்றோராலும் வளர்ப் போராலும் வியபிசாரம் செய்யத் தூண்டப்பட்டும் தயார் செய்யப்பட்டும் வருகிறார்கள். பொட்டுக் கட்டி வியபிசாரம் செய்வது மோட்ச்ச சாதனமான தென்றும், பணம் சம்பாதிக்க நல்ல வழி என்றும், சிறு வயது முதலே அப் பெண்களுக்குப் போதிக்கப்பட்டு வருகிறது. பெண்களை வியபிசாரத்தில் ஈடு படுத்தாமல் சட்டம் ஏற்படும் வரை பெற்றோரும் வளர்ப்போரும் அவர்களை வியபிசாரம் செய்யப் பழக்கிப் பணம் சம்பாதிக்கத் தான் செய்வார்கள்.

4. மைனர் பெண்களுக்குப் பொட்டுக் கட்டக் கூடாதென்று ஏற்கனவே சட்டம் ஏற்படுத்தி மதவிதிகள் அப்போதே மீறப்பட்டு விட்டது. எனவே இம்மசோதா விஷயத்தில் மதத்துக்கு ஆபத்து என்னும் வாதத்தைக் கிளப்ப இடமே இல்லை. பருவமடைந்த பெண்களுக்குப் பொட்டுக்கட்ட சாஸ்திரங் களில் அனுமதி இல்லை. ஆதலால், சாஸ்திரங்களுக்குப் பயந்து பருவ மடைந்த பெண்கள் பொட்டுக் கட்டைத் தடுக்க சட்டமியற்ற சர்க்கார் பயப் படத் தேவையில்லை. டாக்டர். முத்து லட்சுமி மசோதா விரும்பும் சீர்திருத்தம் இந்து சமூக சுயமரியாதையை உத்தேசித்து எவ்வளவோ காலத்துக்கு முன்னாடியே அமுலில் வந்திருக்க வேண்டும். எனவே அம்மசோதாவை நான் பூர்ணமாக ஆதரிக்கிறேன்.

குடி அரசு - கடித அறிக்கை - 30.03.1930

தேவதாசி ஒழிப்புச் சட்டம் - 23.03.1930

தேவதாசி ஒழிப்புச் சட்டம்

கோயில்களில் பெண்களை பொட்டுக்கட்டுவதைத் தடுக்க சட்டம் செய்யவேணுமாய் திரு. முத்துலக்ஷிமி அம்மாள் அவர்களால் சட்டசபைக்கு அனுப்பப்பட்டிருக்கும் சட்டத்தை சர்க்கார் நமக்கு அனுப்பி அதன் மீது நமது அபிப்பிராயம் கேட்டிருக்கின்றார்கள்.

இதற்காக சர்க்கார் பொதுஜனங்களின் அபிப்பிராயம் கேட்பது என்பது கோமாளித்தனம் என்பதே நமது அபிப்பிராயம். ஏனெனில் கோவில்களில் கடவுள்கள் பேரால் பெண்களுக்கு பொட்டுக்கட்டி அவர்களையே பொது மகளீர்களாக்கி நாட்டில் விவசாரித்தனத்திற்கு செல்வாக்கும் மதிப்பும், சமய சமூக முக்கிய ஸ்தானங்களில் தாராளமாய் இடமும் அளித்து வரும் ஒரு கெட்ட வழக்கம் நமது நாட்டில் வெகுகாலமாய் இருந்து வருகின்றது. அன்றி யும் நாளாவட்டத்தில் இது ஒரு வகுப்புக்கே உரியது என்பதாகி, இயற்கையு டன் கலந்த ஒரு தள்ளமுடியாத கெடுதியாய் இந்த நாட்டில் நிலைபெற்றும் விட்டது. ஒரு நாட்டில் நாகரீகமுள்ள அரசாங்கமாகவாவது அல்லது நாட்டின் சுயமரியாதையையோ, பிரஜைகளுடைய ஒழுக்கத்தையோ, நலத்தையோ, கோரின அரசாங்கமாகவாவது ஒன்று இருந்தால் இந்த இழிவான கெட்ட பழக் கம் கடவுள் பேராலும் மதத்தின் பேராலும் சமூகத்தின் பேராலும் தேசிய வழக்கத்தின் பேராலும், இருந்து வர ஒரு க்ஷண நேரமும் விட்டுக்கொண்டு வந்திருக்காதென்றே சொல்லுவோம்.

ஆனால் நமது இந்தியாவில் வெள்ளைக்கார ஆட்சி குடி புகவும் நிலை பெறவும், நம் நாட்டுச் சுயநலப் பார்ப்பனர்கள் உளவாளிகளாகவும் உதவி யாகவும் இருந்து வந்ததால் அப்பார்ப்பனர்களுக்கு அனுகூலமாக வெள்ளைக்காரர்களும் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருந்ததால் அந்தப் பார்ப்பனர்கள் சொல்லுகின்றபடியே நடந்து (வெள்ளைக்காரர்கள்) தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில் பட்டு விட்டார்கள். இந்தக் காரணங்களால் அவர்கள் பார்ப்பனர்களுக்கு விரோத மாய் சீர்திருத்தத் துறையிலாவது, மனிதத்தன்மைத் துறையிலாவது இதுவரை ஒருவித முற்போக்கான காரியமும் செய்யாமலே இருக்க வேண்டியவர்களாகி விட்டார்கள். ஆனால் இப்போது கொஞ்ச காலமாய் அப்பார்ப்பனர்களின் தந்திரத்தையும் சூழ்ச்சியையும் கண்டுபிடித்து அவர்களது யோக்கியதைகளை அடியோடு வெளியாக்கி சீர்திருத்தங்களை உத்தேசித்து நாமும் வெள்ளைக் காரர்களை மிரட்டக்கூடிய சமயம் மிரட்டியும், ஆதரிக்கக் கூடிய சமயம் ஆதரித்தும் பார்ப்பனர்களின் செல்வாக்கை ஒழித்து நமது சத்தியத்தையும் தீவிர ஆசையையும் காட்ட ஆரம்பித்துவிட்டதால், இப்போது ஏதோ சிறிது அளவுக்காவது சர்க்காரார் சீர்திருத்தத் துறையில் நமது இஷ்டத்திற்கும் இணங்கும்படியான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

இந்த நிலைமையின் பலனேதான் இப்போது நமது கொள்கைகள் சிலது நாட்டில் பிரசாரம் செய்யவும் செல்வாக்குப் பெறவும் இடம் ஏற்பட்டதும்; சட்டசபையில் இது சமயம் ஒரு முடிவை பெற்று தீரவேண்டிய அவசியம் ஏற்பட்டுப் பொதுஜன அபிப்பிராயத்திற்கு வர நேர்ந்ததுமாகும்.

நிற்க, இப்போது திருமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்டசபைக்கு அனுப்பப்பட்டிருக்கும், “பொட்டுக் கட்டுவதை ஒழிக்கும்” இந்த மசோதாவானது வெகு காலமாகவே ஜனப் பிரதிநிதிகள் என்பவர்களால் பொதுக்கூட்டங்களிலும் பொதுமகாநாடுகளிலும் கண்டித்துப் பேசப்பட்டிருப்பதுடன் இம்மாதிரி ஒரு சட்டம் செய்ய வேண்டுமென்று இந்திய சட்டசபைக் கூட்டங்களிலும் அடிக்கடி பிரஸ்தாபிக்கப்பட்டும் வந்திருக்கின்றது. இது சம்மந்தமாக, திருமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்கள் ஒரு துண்டு பிரசுரம் வெளியிட்டு இருக்கிறார். அதன் சுருக்கமாவது.

தேவதாசி மசோதா

இந்த சமூகக் கொடுமையை ஒழிக்க ஆரம்பித்த கிளர்ச்சியானது 1868 வருஷ முதல் நடைபெற்று வருகிறது. 1906, 1907 வருஷம் உலக தேசீய மகாநாட்டில், இந்தக் கொடிய கெட்ட வழக்கத்தை ஒழிப்பதற்காகப் பல மாகாண சர்க்கார் அபிப்பிராயங்களையும் அறிந்து தம்மால் கூடியவரை ஒழிப்பதென முடிவு செய்ததினின்று, இந்தியா கவர்ன்மெண்டும், இந்த தேவதாசி மசோதாவில் அதிக சிரத்தைக் காட்டி வந்தது.

1912 வருஷம் பழய இம்பீரியல் சட்ட நிரூபண சபையில் மூன்று இந்திய அங்கத்தினர்கள், கனம் மாணிக்ஜிதாதாபாய், முதோல்கர், மேட்கித் ஆகியவர்கள், இந்த கொடிய பழக்கத்தை ஒழிப்பதற்கு இதே எண்ணத்தோடு வேறே மூன்று மசோதாக்கள் கொண்டு வந்தனர். இந்திய சர்க்கார் உள்நாட்டு சர்க்காருக்கு இந்த மசோதாவை அனுப்பி, அவர்களது அபிப்பிராயம் தந்த உடன் 1913 வருஷம் செப்டம்பர் மாதம் தாங்களாகவே ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார்கள். மீண்டும் அம்மசோதா ஒரு செலக்ட் கமிட்டிக்கு அனுப்பப்பட்டு அவர்களது ரிப்போர்ட்டையும் 1914 வருஷம் மார்ச்சு மாதம் பெற்றார்கள். அந்த ரிப்போர்ட் மறுபடியும் இப்போதைப் போலவே பொதுஜன அபிப்பிராயத்துக்கு விடப்பட்டது. இம்மசோதாவை நிறைவேற்றுவதில் எல்லோருக்கும் பூரண எண்ணமிருந்த போதிலும், அத்தகைய பெண்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது போன்ற சில சில்லரை விவாதங்கள் கிளப்பிவிடப்பட்டதால் அம்மசோதா தானாகவே அது சமயம் மறைந்து விட்டது. அதன் பின்னர் மகாயுத்தக் கிளர்ச்சியினால் அது கவனிக்கப்பட முடியாமல் போயிற்று. பிறகு 1922 வருஷம் டாக்டர் கோர் மீண்டும் அதை இந்திய சட்டசபையில் கொண்டு வந்தார். ³ தீர்மானத்தின் மேல் விவாதம் நிகழ்ந்து கடைசியாக அது மறுபடியும் பொது ஜன அபிப்பிராயத்திற்கு பிரசுரிக்கப்பட வேண்டுமென்ற பிரரேபனை அதிகப் படியான ஓட்டுகளால் தோற்கடிக்கப்பட்டது. பிறகு மேல்படி 1922 -ம் வருஷத்திய தீர்மானத்தின் மீது 1924 -ம் வருஷம் அதை சட்டமாக்கப் பட்டதோடு, அதை அனுசரித்து இந்தியன் பினல்கோடு 372, 373 செக்ஷன்கள் திருத்தப்பட்டன. அதன் சட்டம் 1925 -ம் வருஷம் ஜனவரி மாதம் முதல் தேதியன்று அமுலுக்கு வந்தது. ஆதியில் 14 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்குப் பொட்டுக் கட்டுதல் கூடாதென்றே சாஸ்திரத்தால் தடுக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் பொட்டுக் கட்டப்பட வேண்டிய பெண் சாஸ்திரப்படி கன்னிகையாயிருக்க வேண்டு மாதலால் 14 வயதிற்குள்தான் இந்த சடங்கு செய்வது வழக்கமாக இருந்து வந்தது. அதாவது எந்தப் பெண்ணையும் 14 வயதிற்கு மேல் பொட்டுக்கட்ட எந்தக் கோயில் அதிகாரி யும் அனுமதிப்பதில்லை. ஆனால் இப்பொழுது மேற்படி சட்டம் வந்தபிறகு 16 வயதிற்குக் கீழ்ப்பட்ட பெண்களுக்கு பொட்டுக்கட்டப் பட்டால் கோயிலதிகாரிகள் குற்றவாளிகள் ஆவதோடு அந்த விதமாக அனேக கேஸ்கள் நடந்து அந்த 25வது சட்டப்படி தண்டனை யும் பெற்றிருக்கிறார்கள். ஆகவே வைதீகர்களது அபிப்பிராயப்படி பார்த் தாலும்கூட, சாஸ்திரப்படி 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு கோவில் களில் பொட்டுக்கட்ட மத அனுமதியில்லையென்று தெரிகிறது. இந்தியன் பினல்கோடுபடி ஒரு மைனர் பெண்ணைப் பொட்டுக் கட்டுவது குற்ற மென்றாலும், பேராசையுள்ள பெற்றோர்கள் சிலர் தங்கள் பெண்களுக்குப் பொட்டுக் கட்ட கோவிலினிடமிருந்து உத்திரவு பெற்று விடுகிறார்கள். இது வியபசாரத்துக்கு அனுமதி கொடுத்ததாகு மேயன்றி வேறில்லை. பொதுஜன அபிப்ராயம் இதை சட்டமாக்க அனுகூல மாயேயிருக்கிறது. பத்திரிகைகளில் இதை ஆதரித்து எழுதியும் பொதுக் கூட்டங்களில் ஆதரித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றியும், சுமார் 13 வருஷத்துக்கு மேற்பட்ட ஆண் பெண் சங்கங் களில் அதை ஆதரித்து தீர்மானங்கள் நிறைவேற்றியும் இந்தக் கொடிய பழக்கத்தினால் அல்லலுறும் சமூகத்தினரே இதை சட்டமாக்க வற்புறுத்தி எழுதியும் இருக்கின்றனர். டிஸ்டிரிக்டு போர்டு முனிசிபாலிட்டிகளிலும் தங்களது ஆதரவைத் தெரிவித்திருக்கின்றனர். இவ்வாறெல்லாமிருக்க இச்சட்டத்திற்குப் பொது ஜன அபிப்ராயத்தை அறிய விரும்புவானேன்? என்பது விளங்கவில்லை. இந்த நாள்பட்ட கொடிய சமூகக் கொடுமையை ஒழிக்க யாருக்கும் ஆட்சேபனையோ எதிர் அபிப்பி ராயமோ இருக்கவே முடியாது. இந்தியத் தலைவர்கள் கூறியிருப்பது போல் தேவதாசி என்று ஒரு வகுப்பு இருப்பது இந்து சமுதாயத்திற்கே இழிவானது மல்லாமல் இந்து மதத்திற்கே பெரும் பழியுமாகும். ஒரு தனிப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் இழிவு, பெண்ணுலகிற்கே ஏற்பட்டதாகுமாகையால் இவ்வழக்கம் பெண் களின் அந்தஸ்தையும் கௌரவத்தையும் பெரிதும் பாதிக்கக்கூடியதாயிருக் கிறது. அன்றியும் ஒரு குறிப்பிட்ட ஜாதியையோ, சமூகத்தையோ விபசாரத் திற்கு அனுமதி கொடுப்பதும், பின்னர் அவர்களை இழிந்த சமூகமாகக் கருதுவதும் பெரும் சமூகக் கொடுமையாகும். சிறு குழந்தைகளிலிருந்தே இத்தகைய துராசார வழிகளில் பயிற்றுவிப்பது ஜனசமூக விதிகளையே மீறியதாகும். எனவே இப்படிப் பட்ட நிலைமையில் இனி இதைப்பற்றி பொது ஜனங்களுடைய அபிப்பிராயத்தைத் தெரிய வேண்டிய அவசியமே இல்லை.

தவிர இதுவிஷயத்தில் சாஸ்திர சம்மந்தமான வைதீகர்களின் ஆட்சேபணைக்கும் இடமில்லை. ஏனெனில் சாஸ்திரத்தில் 14 வயதுக்கு முன் கன்னிப் பெண்ணாய் இருக்கும் போதுதான் பொட்டுக் கட்ட வேண்டும் என்று இருக்கின்றது. இந்தியன் பினல்கோட் 372, 373 செக்ஷன்களின்படியோ 18 வயதுக்குள் பொட்டுக் கட்டக்கூடாது என்றும், கட்டினால் ஒரு வருஷக் கடினக் காவல் தண்டனையும் அபராதமும் என்றும் இருக்கின்றது. ஆகவே இது விஷயத்தில் வைதீகமும் இந்து மதமும் 1924 வருஷத்திலேயே ஒழிந்துவிட்டது. இந்நிலையில் இப்போதைய வைதீகர்கள் என்பவர்கள் இதை ஆட்சேபிப்பதானால் ஒன்று அவர்களது சாஸ்திரம் அவர்களுக்குத் தெரியாமல் இருக்க வேண்டும்; அல்லது தாசிகள் மூலம் தங்கள் வகுப்பார் களில் சிலர் வயிறுவளர்ப்பது கெட்டுப் போகுமே என்கின்ற ஜாதி அபிமான மாக இருக்க வேண்டும்.

அடுத்தாப்போல் பொது ஜனங்கள் எந்த விதத்திலாவது இந்தச் சட்டத்தை ஆட்சேபிப்பார்களா என்று எண்ணுவதும் ஒன்று முட்டாள்தன மாகவோ அல்லது யோக்கியப் பொறுப்பற்றத் தன்மையாகவோதான் இருக்க வேண்டும். ஏனெனில் இந்து சமூகத்தில் கடவுள் பேரால் மதத்தின் பேரால் விவசாரிகளை ஏற்படுத்த வேண்டும் என்று எந்த சமூகத்தாரோ, தேசத்தாரோ கருதுவார்களானால், அவர்களைப் போல் காட்டுமிராண்டிகளோ கெட்டவர் களோ இருக்கவே முடியாது. மற்றபடி எந்த சமூகமாவது இம்மாதிரியான தொழில் தங்கள் வகுப்புக்கு இருக்க வேண்டுமென்று கேட்பார்களேயானால் அவர்களைப் போல் சுயமரியாதையற்றவர்களும் இழிகுலமக்களும் வேறு யாரும் இருக்க முடியாது. எந்தப் பெண்களாவது இந்தத் தொழிலில் ஜீவிக் கலாம் என்று கருதி அதற்காக சுவாமியையும் மதத்தையும் உதவிக்கு உப யோகப்படுத்த நினைத்தால் அவர்களைப் போல் ஈனப்பெண்கள் வேறு எங்கும் இருக்கவே முடியாது. ஆகவே இந்தச் சட்டம் சென்ற சட்டசபைக் கூட்டத்திலேயே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டியது மிக்க அவசியமும் யோக்கியமுமான காரியமுமாகும். ஆனால் அந்தப்படி நிறைவேற்றப்படாமல் இருக்க சட்ட மெம்பர் ஆட்சேபணைகளைக் கிளப்பி இதைப் பொது ஜன அபிப்பிராயத்திற்கு அனுப்புவது என்னும் பேரால் தடைப்படுத்தி விட்டது மிகவும் வருந்தத்தக்கதாகும். அதற்கு அனுகூலமாய் ஜஸ்டிஸ் கட்சி அங்கத் தினர்கள் ஓட்டுக் கொடுத்தது அவர்களுக்கு மிகுதியும் மானக்கேடான காரியமாகும். அக்கட்சியார்கள் இந்த காரியத்தைகூட செய்ய முடியவில்லை யானால் பின் என்ன வேலை செய்யத்தான் அந்த சட்ட சபையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குப் புலனாகவில்லை. “காங்கிரஸ்காரர் கள் சட்டசபையில் இல்லாததால் இச்சட்டம் நிறைவேற்றாமல் போயிற்று” என்று திருமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் நமக்கு எழுதி இருப்பதைப் பார்க்க நமக்குத் தாங்க முடியாத அவமானமாகவே இருந்தது.

எப்படியானாலும் அடுத்த சட்ட சபைக் கூட்டத்திலாவது இச்சட்டம் நிறைவேறாமல் போகுமேயானால் சர்க்காரின் யோக்கியத்திலும் ஜஸ்டிஸ் கட்சியாரின் சுயமரியாதையிலும் தெருவில் போகின்றவனுக்குக் கூட மதிப் பும் நம்பிக்கையும் இருக்காதென்றே சொல்லுவோம்.

தோழர் பெரியார், குடி அரசு - தலையங்கம் - 23.03.1930

மகா விஷ்ணுவுக்கும் லட்சுமிக்கும் நடந்த சம்பாஷணை - சித்திரபுத்திரன் - 09.03.1930

மகா விஷ்ணுவுக்கும் லட்சுமிக்கும் நடந்த சம்பாஷணை 

மகா விஷ்ணுவான ஸ்ரீரங்கம் ரங்கநாதர்:- அடீ என் அருமைக் காதலியாகிய லட்சுமி! இந்த உலகத்திலும் மேல் உலகத்திலும் உள்ளவர்களுக் கெல்லாம் ஐசுவரியம் கொடுத்துவரும் செல்வ தெய்வமாகிய உன்னையே நான் மனைவியாகக் கொண்டு இருந்தும் என்னையே நீ சாப்பாட்டிற்கே லாட்டரி சீட்டு போடும்படியாய் செய்து விட்டாயே இது யோக்கியமா?

லட்சுமியான ஸ்ரீரங்க நாயகி:- நாதா என் பேரில் என்ன தப்பு? நீங்கள் என் ஒருத்தியோடு மாத்திரம் இருந்தால் பரவாயில்லை. இன்னமும் எத்தனையோ பேர்களை மனைவியாகக் கொண்டிருக்கிறீர்கள். இதெல்லாம் நீர் நன்றாய் நெய்யும் தைரும் சாப்பிட்டதால் உமக்கு கொழுப்பு ஏறியதினால் தானே? உங்கள் பக்தர்களுடைய பெண்களையெல்லாம் கூட கை வைத்து விட்டீர். இப்படிப்பட்ட உம்மை சாப்பாட்டுக்கே லாட்டரி போடும்படியாக ஏன் செய்யக்கூடாது?

விஷ்ணு:- ஐய்யய்யோ அதனாலா இப்படி செய்து விட்டாய்! நான் இதை ஒரு தப்பாக நினைக்கவே இல்லையே. அப்படி செய்வதும் ஒரு லட்சுமிகடாக்ஷம் என்று தானே நினைத்திருந்தேன். உனக்கு கோபமாயிருந் தால் நாளைய தினமே அவர்களையெல்லாம் விரட்டி அடித்து விடுகிறேன்.

லட்சுமி:- விளையாட்டுக்குச் சொன்னேன். கோபித்துக் கொள்ளா தீர்கள். இன்னம் எத்தனை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங் கள். எனக்கு அதைப்பற்றி கவலையில்லை.

விஷ்ணு:- பின்னையேன் லாட்டரி சீட்டு போடச் செய்தாய்?

லட்சுமி:- வேறு சிலருக்கு அதாவது லாட்டரி சீட்டு போடுபவர் களுக்கு செல்வத்தை கொடுப்பதற்காக லாட்டரி சீட்டின் மூலமாய் செல் வத்தை சேர்ப்பதற்கு அப்படிச் செய்யச் சொன்னேன்.

விஷ்ணு:- அப்படியானால் அது எனக்கல்லவா அவமானமாய் இருக்கின்றது. எங்கு பார்த்தாலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் லாட்டரி சீட்டு, ரங்க நாதர் லாட்டரி சீட்டு என்று அல்லவா பணம் வசூல் செய்கின்றார்கள். இந்த அவமானத்தில் உனக்கும் பங்கில்லையா?

லட்சுமி:- அடேயப்பா இதில்தானா உமக்கு பெரிய அவமானம் வந்துவிட்டது? உங்கள் பேருக்கு முன்னால் பொட்டுகட்டி உங்கள் தாசி யென்று பெயரும் செய்து கண்ட கண்ட பசங்கள் எல்லாம் கொளுத்துகிறார் களே, அதிலில்லாத அவமானம்தானா உமக்கு லாட்டரி சீட்டில் வந்து விட்டது? பக்தர்களின் பெண்களை தாங்கள் கைப்பற்றுவதும் தங்கள் தாசி களை பக்தர்கள் அனுபவிப்பதும் தங்களுக்கும் பக்தர்களுக்கும் உள்ள பந்துத்துவமாகும்.

விஷ்ணு:- அதெல்லாம் தான் இப்போது நமது உண்மை பக்தர் களாகிய சுயமரியாதைக்காரர்கள் தோன்றி சட்டசபை மூலமும் குடிஅரசு மூலமும் நிருத்தி நமது மானத்தைக் காப்பாற்றி விட்டார்களே. இனி என்ன பயம். ஏதோ சில கெழடுகிண்டு இன்னம் கொஞ்ச நாளைக்கு இருக்கும் அப்புரம் நம்ம பேரால் இந்த அவமானமான காரியமாகிய அக்கிரமங்கள் நடக்காது.

லட்சுமி:- அப்படியானால் அது போலவே இந்த காரியமும் (அதாவது லாட்டரி சீட்டு போட்டு நமக்கு சோரு போடும் காரியமும்) அவர்களாலேயே சீக்கிரம் நிறுத்தப்பட்டு விடும் கவலைப்படாதீர்கள், இன்னம் கொஞ்ச நாளைக்குப் பொருத்துக் கொண்டிருந்தால் போதும்.

சித்திர புத்திரன் - குடி அரசு - உரையாடல் - 09.03.1930

Monday, 29 May 2017

புரட்சித் திருமணம் என்றால் என்ன? - 14-03-1950

புரட்சித் திருமணம் என்றால் என்ன?

சுயமரியாதைத் திருமணம் என்பது எது?

நமக்கு மேலான மேல் ஜாதிக்காரன் என்பவனை புரோகிதனாக வைத்து நடத்தாத திருமணம் சுய மரியாதைத் திருமணமாகும்.

பகுத்தறிவுத் திருமணம் என்றால் என்ன?

நமக்குப் புரியாததும், இன்ன அவசியத்திற்கு இன்ன காரியம் செய்கிறோம் என்று அறிந்து கொள்ளாமலும், அறிய முடியாமலும் இருக்கும்படியானதுமான காரியங்களைச் (சடங்குகள்) செய்யாமல் நடத்தும் திருமணம் பகுத்தறிவு திருமணம் ஆகும்.

தமிழர் திருமணம் என்றால் என்ன?

புருஷனுக்கு மனைவி அடிமை (தாழ்ந்தவள்) என்றும், புருஷனுக்கு உள்ள உரிமைகள் மனைவிக்கு இல்லை என்றும் உள்ள ஒரு இனத்திற்கு ஒரு நீதியான மனு நீதி இல்லாமல் வாழ்க்கையில், கணவனும் மனைவியும் சரிசம உரிமை உள்ள நட்பு முறை வாழ்க்கை ஒப்பந்தமாகக் கொண்ட திருமணம் தமிழர் (திராவிடர்) திருமணமாகும்.

சுதந்திரத் திருமணம் என்றால் என்ன?

ஜோசியம், சகுனம், சாமி கேட்டல், ஜாதகம் பார்த்தல் ஆகிய மூடநம்பிக்கை இல்லாமலும், மணமக்கள் ஒருவருக்கொருவர் நேரில் பார்க்காமல், அன்னியர் மூலம் ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்தும், அல்லது தெரிந்து கொள்வதைப் பற்றிக் கவலையில்லாமல் மற்றவர்கள் கூட்டி வைக்கும் தன்மை இல்லாமலும், மணமக்கள் தாங்களாகவே ஒருவரை ஒருவர் நன்றாய் அறிந்து திருப்தி அடைந்து காதலித்து நடத்தும் திருமணம் சுதந்திரத் திருமணமாகும்.

புரட்சித் திருமணம் என்றால் என்ன?

தாலி கட்டாமல் செய்யும் திருமணம் புரட்சித் திருமணமாகும்.

சிக்கனத் திருமணம் என்றால் என்ன?

கொட்டகை, விருந்து, நகை, துணி, வாத்தியம், பாட்டுக் கச்சேரி, நாட்டியம், ஊர்வலம் முதலிய காரியங்களுக்கு அதிகப் பணம் செலவு செய்வதும், ஒருநாள் ஒரு வேளைக்கு மேலாகத் திருமண நிகழ்ச்சியை நீட்டுவதும் ஆன ஆடம்பர காரியங்கள்
சுருங்கின செலவில், குறுகிய நேரத்தில் நடத்துவது சிக்கனத் திருமணமாகும்.

இவைகளையெல்லாம் சேர்த்து நடத்துகிற திருமணத்திற்கு ஒரே பேராக என்ன சொல்லலாம்?

நவீனத் திருமணம் அல்லது தற்காலமுறைத் திராவிடத் திருமணம் என்று சொல்லலாம்.


தந்தை பெரியார் அவர்கள் “சித்திர புத்திரன்” என்கிற புனைப் பெயரில் 14-03-1950 "விடுதலை" நாளிதழில் எழுதியது.

பகுத்தறிவைப் பயன்படுத்து! - பெரியார் - 25.3.1951

பகுத்தறிவைப் பயன்படுத்து!

அறிவுடைய மனிதன் எல்லாத் துறைகளிலும் அறிவு பெற்றிருக்கிறானா என்றால் சில துறைகளில் மாத்திரம்தான் பெற்றிருக்கிறான். ஆனால், சில துறைகளிலே பயன்படுத்தவே மாட்டான். பயன்படுத்தினால் பாபம் என்று சொல்லி விட்டனர். அதனால் பயந்து சில துறைகளிலே பயன்படுத்தவே மாட்டான். பயன்படுத்துவதே இல்லை. அந்தக் காரணத்தினாலேதான் நாம் சூத்திரர்களாக, பஞ்சமர்களாக, கீழ்மக்கள், பிற்பட்ட மக்கள் என்று சொல்லும்படியாக இருக்கிறோம். அந்தத் துறையில் நாம் ஆராய்வது இல்லை. ஆராய்ந்தால் பாபம் என்று சொல்லுவார்கள். அப்படி ஆராய்வதாலே ஏதாவது தண்டனை ஏற்பட்டு விடும் - கிடைத்து விடும் என்று பயந்து ஆராயாமல் இருக்கிறார்கள்.

ஆனால், மனிதனுக்கு அறிவு இல்லை என்று சொல்ல முடியுமா? அறிவு இருக்கிறது; சில காரியங்களில்தான் அந்த அறிவைப் பயன்படுத்துகிறார்கள். சில காரியங்களில் பயன்படுத்துவதே இல்லை.

விருந்துக்கு அழைக்கப்பட்டவர் கால், கைகளைக் கழுவிக் கொண்டு இலையில் உட்கார்ந்ததும், சாணி உருண்டையை வைத்துச் சாப்பிடுங்கள் என்று சொன்னால் அவன் என்ன செய்வான்? என்ன அயோக்கியப் பயல், நம்மை மடையன் என்று நினைத்தானா, அல்லது அவன் மடையனா என்று ஆத்திரம் அடைந்து எழுந்து போய்விடுவான், ஏன்? - அறிவு இருக்கிறதினாலே!   எந்த மடையனாவது சாணியைச் சாப்பிடுவானா? என்று கருதியேயாகும்.

ஆனால், அதே மனிதனிடத்தில் அதே சாணியைக் கொழுக்கட்டை பிடித்து, அதன் தலையிலே அருகம்புல் குத்தி வைத்து, குங்குமத்தை இட்டு, விழுந்து கும்பிட்டுவிட்டு வா சாப்பிடப் போகலாம் என்றால் உடனே கும்பிடுவான். சோறாக வைத்த பொழுது கோபம் அடைந்த மனிதன் அதைச் சாமியாக வைத்தால் விழுந்து கும்பிடுகிறான். தலையில் குட்டிக் கொள்ளுகிறான். இது ஏன்? அவனுக்கு அறிவு இல்லையா?

அறிவு இருக்கிறது; அந்த அறிவைச் சோற்றுச் சங்கதியில் செலுத்தலாம். ஆனால், கடவுள் சங்கதியில் செலுத்தினால் அழிந்தே போய் விடுவோம் என்கிற பயம் உண்டாக்கப் பட்டிருப்பதால் அவன் சிந்திப்பதில்லை. இரண்டும் அறிவுதான். ஆனால், பாபம், தோஷம் என்கிற தடை குறுக்கே நிற்கின்றது.
மனிதனுக்கு நல்ல பகுத்தறிவு, ஆலோசனை அறிவு, சிந்திக்கத் தகுந்த அறிவு இருந்தாலும் மேல் காட்டியபடி சில விஷயங்களில் உபயோகப்படுத்துவான், சில விஷயங்களிலே உபயோகப்படுத்துவதே இல்லை.
ஏன் நெற்றியில் சாம்பல் அடித்துக் கொள்கிறாய் என்றால் கோபம் வந்து விடும்.

அது சிவபிரானை வணங்கும் பக்திச் சின்னம். முன்னோர்கள் காலம் முதற் கொண்டு செய்து வருகிறோம். அது மேலே பட்டால் பாபம் போகும். அதைக் குற்றம் சொல்லுகிறாயே என்று கேட்பார்கள். அந்தச் சாம்பலை அடுப்பிலிருந்து முறத்தில் வாரி வந்து தெருவிலே நின்று அவன் முகத்திலே கொஞ்சம் வாரி அடித்தால் உடனே அவன், என் முகத்தைக் குப்பைத் தொட்டி என்று நினைத்துக் கொண்டாயா என்று சண்டைக்கு வந்துவிடுவான். மற்றும் அதே சாம்பலை ஒரு தட்டிலே வைத்துக் கொண்டு, இந்தப் பொண்ணுக்குப் பேய் பிடித்து இருக்கிறது. பேய் ஓடக்கடவது என்று சொல்லி ஒரு பெண்ணின் முகத்திலே அடித்தால் பக்கத்தில் யாராவது பாட்டிகள் இருந்தால், இன்னும் கொஞ்சம் நன்றாய்ப் போடுங்கள் என்று சொல்வார்கள். வெறும் சாம்பலை ஒருவனுக்குத் தெரியாமல் அள்ளி வந்து, இது சாமிப் பிரசாதம் என்று கொடுத்தால் பக்தியோடு இரண்டு கைநீட்டி வாங்கி வாயிலும் போட்டுக் கொள்ளுகிறான். அதற்காக விழுந்தும் கும்பிடுகிறான். தட்டதிலே தட்சிணையும் போடுகிறான். ஆனால், இதைப் பற்றிச் சிந்திக்கிறதேயில்லை.

ஆனால், நான் சொல்லுவதென்னவென்றால், எந்தச் சங்கதியாக இருந்தாலும் நன்றாகச் சிந்திக்க வேண்டும். ஆராய்ந்து பார்க்க வேண்டும். இது கடவுளாச்சே, இது சாஸ்திரமாச்சே, மதமாச்சே, பகவான் வாயிலிருந்து வந்ததாச்சே, பெரிய புராணம் சொல்லுதே, சிறிய புராணம் கழறுதே என்றெல்லாம் நினைக்கக் கூடாது.
நமக்கு அறிவு இருக்கிறது; அனுபவம் ஆராயும் திறன் இருக்கிறது. அதைக் கொண்டு எந்தச் சக்தியானாலும் ஆராய்ந்து பார்த்துத்தான் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். அதுதான் திராவிடர்களுடைய நீதியாகிய குறள் வாக்கியம். அதாவது வள்ளுவர் சொல்லுகிறார், எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. மனிதனுக்கு அறிவு இருக்கிறது என்றால் போதாது. அந்த அறிவுக்குச் சில காரணம் வேண்டும். யார் சொல்லுவதாக இருந்தாலும் நன்றாக அலசிப் பார்த்து அதனுடைய உண்மையை அறிவதற்குப் பெயர்தான் அறிவே தவிர, முட்டாள்தனமாக கண் மூடிப் பின்பற்றுவது அறிவல்ல. ஆராய்ந்து பார்த்து அதனுடைய உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். அதை யார் சொன்னாலும் ஆராய வேண்டும் ஒருமுறை என்று சொல்லியிருக்கிறார். இன்னுமொருமுறை அது எப்படிப்பட்ட சங்கதியாக இருந்தாலும் ஆராய்ந்து பார்க்கத்தான் வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். எப்பொருள் எத்தன்மைத் தாயினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. எப்படிப்பட்ட சங்கதியாக இருந்தாலும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அது எதுவாக இருந்தாலும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதுதான் மனிதனுடைய அறிவுக்கு லட்சணம். அந்த அறிவினுடைய சிந்திக்கிற தன்மையிலே உலகத்திலே உள்ள நாட்டாருக்கு எல்லாம் சுதந்திரம் உண்டு. ஆனால், நம் நாட்டாருக்குத்தான் அறிவுச் சுதந்திரம் கிடையாது.
மற்ற நாட்டாருக்கு எல்லாம் அறிவிலே சுதந்திரம் இருப்பதனாலே தங்கு தடை இல்லாமல் யோசிக்கிற தன்மை இருக்கிறதனாலே அவர்கள் அற்புதமான அதிசயங்களை எல்லாம் கண்டுபிடித்தார்கள்.

ஆனால், நமக்கு இவ்வளவுதான் யோசிக்கலாம், இவ்வளவுதான் பார்க்கலாம், அதற்கு மேல் யோசனை செய்தால் பாபம் என்று ஏற்பட்டிருக்கிறதனாலே நாம் இன்னமும் கீழ் ஜாதித் தன்மையில் இருக்கிறோம்.

மனிதன் தாராளமாகச் சிந்திக்கிற உரிமை கொண்டு இருக்கிறதினாலே அவனுடைய அறிவு வளருகிறது. அவன் நாடு முன்னேற்றம் அடைகிறது. அவன் வாழ்க்கை இன்பம் நிறைந்ததாக இருக்கிறது. சகல சவுகரியங்களும், போக போக்கியமும் ஏற்படுகிறது. எல்லா அதிசயங்களையும் கண்டு மகிழ வசதி ஏற்படுகிறது.

25.3.1951 அன்று பெரம்பூர் - செம்பியம் திராவிடர் கழக 3-ஆம் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து... - "விடுதலை" 26.3.1951

Friday, 26 May 2017

உணவுப் பஞ்சம் போக்க வழி

உணவுப் பஞ்சம் போக்க வழி 

உணவு முறை

ஆறு அறிவு படைத்த நமக்கு இன்று ஏற்பட்டுள்ள பெருங் கவலையும், குறையும், தொல்லையும் ``உணவு விஷயத்தில் பஞ்சம் - தேவை'' என்பது முதலாவதாகும். இப்படிப்பட்ட கவலை தோன்று வது பைத்தியக்காரத்தனமான குறைபாடேயாகும். ஏனெனில் முதலா வது இக்குறை நமக்கு நாமாகவே ஏற்படுத்திக்கொண்ட முறையாகும். எப்படியென்றால்,

(1) நம் மக்களுக்கு அரிசிச்சோறு தேவையற்றதும் பயனற்றதுமாகும்; பழக்கமற்றதுமாகும்.நம்வயல்கள் எல்லாம் சமீபத்தில் ஓராயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் உண்டாக்கப்பட்டவைதான்.

(2) நாம் மாமிசம் சாப்பிடுவதைவிட்டு, காய்கறிப் பண்டங்களைஉண்பதும் நமக்குக் கேடான பழக்கமாகும். இவைகளும் அரிசிக்குப் பின் உண்டாக்கப்பட்டவைகளே.

காப்பி சாப்பிடுவது என்ற கெட்ட வழக்கம் நம் நாட்டில் ஏற்பட்ட பிறகு, பாலுக்கும் சர்க்கரைக்கும் பஞ்சம் தீர்ந்தபாடில்லாமல், நிரந்தரப் பஞ்சமாகி வருகிறது. நெல்விளையும் நிலங்களில் நல்ல அளவுக்கு கரும்பு பயிராக்கப்பட்டு வருகிறது. பாலெல்லாம் பெரிதும் காபிக்குச் செலவாகிறபடியால், நாட்டுக் குழந்தைகள் பெரிதும் உரம் பெற முடியாமல் தேவாங்குகளாகவே வளரவேண்டிய தாகி விட்டன. மற்றும், சத்துள்ள தயிர், மோர், நெய் ஒரு சிலருக்குத் தான் கிடைக்கிறது.சர்க்கரை ஏறக்குறைய 90 பாகம் காபிக்கே செலவாகிற படியால் விளைநிலம், நல்ல சர்க்கரை உற்பத்தி செய்யப் பட்டாலும், சர்க்கரைப் பஞ்சம் வளர்ந்துகொண்டே வருகிறது பால் பஞ்சமும் அப்படியேதான் வளர்ந்துகொண்டே போகிறது. அனாவசியமாகச் சத்தற்ற காய்கறிகள் உண்ணும் வழக்கம் வளர்ந்து, வேளாண்மைக் கேடும், பயனற்ற உணவு வளர்ச்சியும், ஏற்பட்டுப் ``போதிய அரிசி கிடைப்பது'' கஷ்டமாகி விடுகிறது.

இவைகளின் பயனாய் மனிதனின் உணவுச் செலவு, அதுவும் சத்தற்ற உணவுக்குச் செலவு 100-100 விகிதம் ஆகப்பெருகி, வாழ்க்கைச் செலவுக்குப் பணம் போதாத நிலையே வளர்கிறது.






மாற்றம் அவசியமே

இவைகளில் மாற்றம் ஏற்படுத்துவது என்பது கடவும், மதம், வேதம் விஷயத்தில் மாற்றம் ஏற்படுவதைவிட மிகக் கஷ்டமான காரியமாகவே இருக்கின்றது.

பார்ப்பானும் சைவனும் மாமிசம் சாப்பிடுவதில்லை. அதனால் அவர்கள் தங்களுக்குப் பெருமை ஏற்படுத்திக் கொண்டதோடு அல்லாமல், மற்றவர்களைப் பற்றிச் சிறிதும் கவலை இல்லாது இருக்கிறார்கள். அதோடு, அவர்கள் மாமிசம் சாப்பிடுவதை வெறுப்பதும், தாழ்வாய் கருதுவதுமான முறையில், மாமிசம் சாப்பிடுபவர்களை இழிவாய், கீழ் மக்களாய் கருதுகிறார்கள்.

இந்தப் பார்ப்பனரின் முன்னோர் ஆடு, மாடு மாத்திர மல்லாமல் , பன்றி, கழுதை, குதிரை, எருமை, மனிதன் வரை சாப்பிட்டதாக இவர்களே உண்டாக்கி வைத்திருக்கும் வேத, சாஸ்திர, மத ஆதாரங்களை மறந்துவிட்டு வக்கணை பேசுகிறார்கள்.

ஆகவே, இன்றை தினம் நம் உணவு விஷயங்களில் பெரும் மாற்றம் செய்யவேண்டியது இரண்டாந்தர, மூன்றாந்தர வாழ்க்கைத் தரத்தின் உண்மைகளைப் பொறுத்தவரையாவது மிக மிக அவசியமாகும்.

முதலாவது, மக்கள் காபி சாப்பிடுவதைக் கண்டிப்பாகத் தடை செய்தாக வேண்டும். காய்கறி உற்பத்திகளை லைசென்சு கொடுப்பது மூலம் முக்கால் அளவைக் குறைத்து மாமிசம் சாப்பிடாத ஜாதியான பார்ப்பனர், சைவர்களுக்கு மாத்திரம் தேவையான அளவுக்கு உற்பத்தி
செய்யும்படி செய்யவேண்டும்.


மாட்டிறைச்சி அதிகம் கிடைக்க வழி செய்க

ஆடு, கோழி, பன்றி முதலிய மாமிசம் சாப்பிடும் மக்களை மாட்டிறைச்சியும் சாப்பிடும்படிச் செய்து, அது எளிதாய்க் குறைந்த விலைக்குக் கிடைக்கும்படிச் செய்ய வேண்டும். மேல்நாடுகளைப் போல் மாட்டுப்பண்ணைகளை வைத்துக்கொள்ளவேண்டும். பசு மாடுகளைப் பால் கறவைக்கு வைத்துக்கொள்ளவேண்டும். மேல்நாடுகளைப் போல் விவசாயத்துக்கு மாடுகளே தேவையில்லாமல் எந்திரங்களைப் பயன்படுத்தச் செய்ய வேண்டும்.

உணவுப் பக்குவ முறை

உணவுப் பக்குவ முறையும் - சுத்த சோம்பேறிகள், உடல் நலுங்காமல் ஊரார் உழைப்பில் உயிர்வாழும் சோம்பேறிகளால் திட்டப்படுத்தப்பட்ட முறையாதலால், நம் உணவு முறை நம் மக்களுக்குப் பெரிய பாரமாக இருக்கிறது. பகலில் சோறு, குழம்பு, ரசம், பொறியல்(ஒரு காய் ), மோர். காலையில் இட்லி அல்லது தோசை, உப்புமா, காபி அல்லது டீ. இரவிலும் இவையோ,இவற்றில் ஏதாவது ஒன்று எவ்வளவு வருமானம் குறைந்த சமுதாயமும் இவற்றும் ஏதாவது ஒன்றைத்தான் குறைத்துக் கொம்வார்களே தவிர முறையை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இவற்றிலும் வடநாட்டார் பெரிதும் சுருக்கி,

(1) சப்பாத்தி அல்லது பூரி.

(2) இதற்கு ஏதாவது காய்வகை அல்லது பருப்பு, பணக்காரர் இவற்றுடன் இனிப்புப் பண்டங்களைப் பயன்படுத்திக்கொம்வர்.

உலகில் உள்ள சுமார் 370 கோடி மக்களில் 15 கோடிமக்கள் தான் மாட்டு மாமிசம் சாப்பிட்டுப் பழகாதவர்களாக இருக்கக்கூடும்.

உணவுப் பஞ்சம் போக்க வழி

விவசாயத் துறையில் இன்று நடைபெறும் வயல்பரப்பிலும் முயற்சியிலும் பாதி நேரத்தைக் குறைத்துக் கொண்டு அந்த நேரத்தில் ஆடு. மாடு, கோழி, பன்றி, மீன், வளர்ப்பில் கவனம் செலுத்தி நல்ல அளவுக்குப் பெருக்குவோமானால் - காபியையும் தடைப்படுத்தி விடுவோமானால் உணவுப் பஞ்சம் என்கின்ற சொல் அகராதியில் கூட இல்லாத அளவுக்கு ஒழித்துவிடலாம்.

காபி என்பதற்கு நாகரிகத்தினால் மனிதன் அடிமைப்பட்டு வாழ்க்கைச் செலவைப் பெருக்கிக்கொண்டான். அதுபோலவே அரிசிச் சாதமும் நாகரிகத்தில் பட்டுவிட்டதால் இதற்கு மனிதன் அடிமைப் பட்டு வாழ்க்கைச் செலவையும் பெருக்கிக்கொண்டு சத்துள்ள கேப்பை, கீரைகளையும் புறக்கணித்துவிட்டான். இன்று உழைப்பாளிகள் வேலை நேரமும் குறைந்துவிட்டதற்கும் வேலை செய்யும் நேரங்களிலும் அவர்கள் நாணயக் குறைவாக நடப்பதற்கும் இந்தச் சத்தற்ற உணவுமுறை தான் காரணம் என்று சொல்லுவேன்.


புரட்சி அவசியம்

எனவே உணவுத் துறையில் நம் நாட்டில் பெரிய மாறுதல் ஏற்படவேண்டும். அரிசிக்குப் பதிலாக வேறு ஏதாவது இராசாயனப் பொருளைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும். நாம் எந்திரம் ஓட்டுவதற்கு முதலில் நெருப்பைக் கொளுத்தி நீராவியில் இயங்க வைத்தோம். பிறகு மண்ணெண்ணை, குரூட் ஆயில், பெட்ரோல், மின்சாரம் என்று காலத்திற்கேற்றார் போல் மாற்றி ஓடச் செய்கிறோம். அதுபோலவே மனித எந்திரத்தையும் பெருந்திண்டி மூலம் ஓடச் செய்யாமல் மின்சாரம் போன்ற சக்தி வஸ்துவைக் கண்டு பிடித்து(சிறிய உணவை) அதைக் கொண்டே மனிதனை இயங்கும் படியும். உயிர் வாழும் படியும் செய்யவேண்டும். இது செய்ய நாளாகும் என்றாலும் இப்போது அவசரத்தில் ரொட்டியையும்,ஆடு, மாடு, பன்றி, மீன் முதலிய இறைச்சிகளையும் தேவையான அளவுக்கு குறைந்த செலவில் உற்பத்தி செய்து எல்லோருக்கும் கிடைக்கும்படிச் செய்வது அவசியமாகும். இதைக்கண்டு நமது நாட்டு மக்கள் என் மீது ஆத்திரப்படுவார்கள் அவர்களுக்கு நான் கூறும் பதில், மற்ற நாட்டுக்காரர்களையும் நம் மக்களையும் பாருங்கள் என்பது தான்.


தந்தைபெரியார் - நூல்: -கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தொகுத்த "பெரியார் ஒரு வாழ்க்கைநெறி" பக்கம் 3-7