Sunday, 1 October 2017

மகாத்மா காந்தியும் வருணாசிரமும் II – 28.08.1927

மகாத்மா காந்தியும் வருணாசிரமும் II


“மகாத்மா காந்தியும் வருணாசிரமமும்” என்னும் விஷயமாய் இரண்டு வாரங்களுக்கு முன் “குடி அரசி”ல் மகாத்மாவின் வருணாசிரம அபிப்பி ராயத்தை கண்டித்தெழுதியது நேயர்கள் பார்த்திருக்கக்கூடும். அதன் பிறகு பலர் பல பல விதமாக நமக்கு கடிதம் மூலமாய், மகாத்மாவை தாக்குவது தர்ம மல்லவென்றும், அபிப்பிராய பேதத்தை மகாத்மாவிடம் நேரில் தெரிந்து கொள்ளலாம் என்றும், நேரில் சொன்னால் நமது அபிப்பிராயத்தை மகாத்மா ஒப்புக் கொள்வார்கள் என்றும், எப்படி இருந்தாலும் மகாத்மாவைப் பற்றி ஒரு வார்த்தையாவது வித்தியாசமாய் எழுதினால் நமது செல்வாக்கே அடியோடு போய்விடும் என்றும், நமது பத்திரிகை ஆகிய “குடி அரசு” கூட ஜனங்களால் மதிக்கப்படாது போய் விடுமென்றும், மகாத்மா பார்ப்பனரல்லாதார் ஆதலால் அவர் பேரில் குற்றம் சொல்லக்கூடாது என்றும் இப்படியாக பல பேர் பல விதத்தில் கடித மூலமாயும் நேரிலும் நமக்கு தெரிவிக்கிறார்கள்.

மற்றும் சிலர், பல பத்திரிகைகளிலும் ஜாடை ஜாடையாய் நமது அபிப்பிராயத்தை கண்டித்தும், மகாத்மாவை ஆதரித்தும் எழுதி வருகிறார் கள். மற்றும் சிலர், எல்லாவற்றையும் குற்றம் சொல்லிவிட்டு நீர் என்னதான் செய்யப் போகிறீர், எதைத்தான் ஆதரிக்கிறீர்கள், உமது கொள்கைதான் என்ன என்று எழுதுகிறார்கள். ஆகவே, இவைகளுக்கு தனித்தனி பதிலும், சமாதா னமும் சொல்லிக் கொண்டிருப்பது மிகவும் கஷ்டமான காரியமானதால் இவற்றிற்கு பொதுவாக இந்த வாரம் சில விஷயங்களை எழுதுகிறோம்.

ஆரம்பத்தில் ஒரு விஷயத்தை பொது ஜனங்களுக்கு தெரியப் படுத்திக் கொள்ள ஆசைபடுகிறோம். அதென்னவெனில், நாமும் நமது பத்திரிகையும் வயிற்றுப் பிழைப்புக்கோ, பொது ஜனங்களின் செல்வாக்குப் பெறுவதற்கோ, பொது நன்மையின் பேரால் தொண்டு செய்ய வரவில்லை என்பதே. உண்மையை உண்மை என்றும், சரி என்று பட்டதை வெளிப்படுத் துவதற்கும், பொய்யென்றும் தப்பென்றும் பட்டதை கண்டிப்பதற்குமே நடைபெற்று வருகிறது என்பதாகவும், பத்திரிகையின் கொள்கையே அதுதான் என்பதாகவும் ஆதி முதற்கொண்டே பல தடவைகளில் வெளிப்படுத்தி இருக்கிறோம்.

இரண்டாவதாக, மகாத்மா காந்தியவர்களிடத்தில் மற்றவர்களுக்கு இருக்கும் அபிமானத்திலும், பக்தியிலும் நமது பக்தி எள்ளளவும் குறைந்த தல்ல என்பதையும் தெரிவிப்பதோடு, மகாத்மாவை தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தின அனேகருள் நாமும் ஒருவரென்றும் மகாத்மாவை பின்பற்றி வந்த விஷயத்திலும் இப்போது சிபார்சுக்கு வருகிற எல்லோரையும் விட நாம் பின்பட்டவரல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்

நிற்க, மகாத்மாவை குருட்டுத் தனமாய் ஆதரிக்கும் மூலமாய் வரும் செல்வாக்கு நமக்கு அவசியமில்லை என்றும், மகாத்மாவைப் பற்றி நாம் கண்டிக்கும் விஷயம் சரியா தப்பா என்று விசாரணை செய்து பார்த்து ஒரு முடிவுக்கு வர யோக்கியதை இல்லாமல் குருட்டு பக்தியாய் அபிப்பிராயம் கொள்ளுபவரது கண்டனத்தைப் பற்றி நமக்கு கவலை இல்லை என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நிற்க, இதுவரையில் கடிதமூலமாயும் பத்திரிகை மூலமாயும் நேரிலும் நமது கண்டனத்தை மறுத்தவர்களில் ஒருவராவது பிறவியில் வருணாசிரம தர்மமும் ஜாதி வித்தியாசமும் இல்லை என்ற மகாத்மா சொன்னதாகவாவது, பிறவியில் வருணாசிரம தர்மமும் ஜாதிப் பிரிவுகளும் உண்டு என்று அவர் சொல்லவில்லை என்றாவது ஒருவரும் சொல்லவே இல்லை. இனியும் யாராவது மகாத்மாவுக்கு பிறவியில் வருணாசிரம தர்மமும் ஜாதியும் இல்லை என்று சொல்வார்களேயானால், அல்லது இல்லை என்று மகாத்மா இன்ன இடத்தில் சொல்லியிருக்கிறார் என்று காட்டுவார்களேயானால் உடனே நான் எழுதியவைகளையும் மறுத்து எழுதிவிட்டு மகாத்மா விஷயமாய் நான் கொண்ட அபிப்பிராயத்தையும் மாற்றிக் கொண்டு எனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்ளத் தயாராயிருக்கிறேன்.

அப்படிக்கில்லாமல் “அவர் அப்படி எண்ணி இருக்கமாட்டார் இப்படி எண்ணி இருக்க மாட்டார், மகாத்மா சொல்வதற்கு அதுவல்ல அர்த் தம், இதுவல்ல பொருள்” என்பதான வெறும் உத்தேசமும் வியாக்கியானமும் நமது அபிப்பிராயத்தை ஒரு சிறிதும் மாற்றிக் கொள்ளும்படி செய்யவே முடியாது என்பதை வணக்கமாய் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

நிற்க, நமது கருத்தையும், மகாத்மா கருத்துக்கும் நமது கருத்துக்கும் மாறுபட்ட கருத்துக்களைப் பற்றியும் சென்றமாதம் மகாத்மா அவர்களிடம் நேரில் கலந்து பேசி நம்மைப் பொருத்த வரையிலும் ஒரு முடிவு கட்டிக் கொண்டே வந்து விட்டோம் “மகாத்மாவிடம் நான் கலந்து பேசினேன்” என்று சொல்லிக் கொள்வதும் எழுதிக் கொள்வதும் இக்காலத்தில் பெரிதும் தற்பெருமைக்கே உபயோகித்துக் கொள்ளக் கூடியதாய் விட்டபடியால் அந்த தற்பெருமை நமக்கு வேண்டாம் என்பதாகக் கருதியே நாம் அது சமயம் அதை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை.

தவிரவும் அது சமயம் நமக்கும் மகாத்மாவுக்கும் நடந்த சம்பாஷ ணைகளின் விபரத்தை மகாத்மாவின் சம்மதம் பெற்றே வெளிப்படுத்த வேண்டியதான ஒரு நிபந்தனைக்கும் நாம் சம்மதம் கொடுத்து வந்ததால் அதையும் வெளியிட முடியாத நிலையில் இருக்கிறோம்.

முக்கியமாய் மூன்று விஷயத்தைப் பற்றியே தான் மகாத்மாவினிடம் நாமும் நமது நண்பரான ஸ்ரீமான் .எஸ். ராமநாதனும் சம்பாஷித்தோம். அதா வது என்னுடைய அபிப்பிராயமாக மகாத்மாவுக்கு எடுத்துச் சொன்னதெல் லாம் இந்தியாவின் விடுதலைக்கும், சுயமரியாதைக்கும் மூன்று முக்கிய காரியங்கள் செய்து முடிக்க வேண்டும் என்றும், அது முடிவு பெறாமல் நமது நாட்டுக்கு விடுதலை இல்லை என்றும் நாம் முடிவு செய்திருக்கிறோம் என்பதாகச் சொன்னோம்.

அதாவது, ஒன்று, காங்கிரசு என்பதை ஒழிக்க வேண்டியது. இரண் டாவது, இந்து மதம் என்பதை ஒழிக்க வேண்டியது, மூன்றாவது, பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டியது என்பவைகளாகும்.

முதல் இரண்டை ஒழித்தாலே பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்து விடுமானா லும், இவ்விரண்டின் மூலமாய் ஒழிந்தது போக பாக்கி கொஞ்ச நஞ்சம் இருந் தாலும் அதையும் ஒழிப்பது என்கிற கொள்கையும் அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தையே காட்டினோம்.

இது விஷயமாய் நடந்த தர்க்கங்கள் முன் சொன்ன காரணத்தால் வெளியிடக்கூடியதல்ல. ஆதலால் இனி இதைப் பற்றி மகாத்மாவிடம் மறுபடி யும் கலந்துபேசித்தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்றும் இல்லை என்ப தையும் மகாத்மாவினிடம் நேரிலேயே இம்மூன்று விஷயங்களைப் பற்றியும் மகாத்மா சொன்ன சமாதானங்கள் எம்முடைய அபிப்பிராயத்தை மாற்றக் கூடியதாயில்லை என்றும் சொல்லி மகாத்மாவினிடம் உத்திரவு பெற்றுக் கொண்டு வந்து விட்டோம். மகாத்மாவும் தான் சொன்ன சமாதானத்தால் நாம் திருப்தி அடையவில்லை என்பதை தெரிந்துகொண்டதாகவும், இன்னம் இரண்டொரு தடவை அதைப்பற்றி பேசவேண்டும் என்றும் சொன்னார். எனது நண்பர் ஸ்ரீமான் ராமநாதன் அவர்கள் கூட மகாத்மா சொன்னது போலவே மறுபடியும் இரண்டொரு தடவை மகாத்மாவிடம் பேசலாம் என்று கூட சொன்னார். இதற்கு உடனே நாம் மகாத்மா நம்முடைய அபிப்பிரா யத்தை மாற்றும்படி திருப்தி செய்வார்கள் என்று நம்புகிறீர்களா அல்லது மகாத்மா அபிப்பிராயத்தை நாம் மாற்றக்கூடும் என்பதாக கருதுகிறீர்களா என்று கேட்டதில், மகாத்மா சொல்வதைக் கொண்டு நம்முடைய அபிப்பிரா யங்களை மாற்றிக் கொள்ள கூடியதாய் ஏற்படாது என்றும் ஒருக்கால் நமது அபிப்பிராயத்துக்கு மகாத்மா இணங்கக்கூடியதானால் நமது பிரசாரத்திற்கு இன்னம் உதவியாக இருக்காதா என்றும் சொன்னார். உடனே நாம் அந்தப்படி எதிர்பார்ப்பது தப்பு என்றும் மகாத்மாவை திருத்தும் படியாக நாம் சொல்லி சரி செய்ய முடியாது என்றும், நம்ம அபிப்பிராயத்தை நாம் வெளிப்படுத்த வேண்டியது தான் நமது கடமை என்றும் சொல்லிவிட்டோம். இன்ன இன்ன விஷயங்களைப் பற்றி மகாத்மா அவர்களுடன் சம்பாஷித்ததாக திரு.சி. ராஜ கோபாலாச்சாரியார் அவர்களிடம் தெரிவித்து விட்டே உத்திரவு பெற்றுக் கொண்டு வந்து விட்டோம்.

எனவே இது சம்மந்தமாக இனி மகாத்மாவின் அபிப்பிராயம் எப்படி என்பதைப் பற்றி நாம் மறுபடியும் அவரைக் கண்டு கேட்கவேண்டியதில்லை என்பதைப் பற்றியும், அதைப்பற்றி நாம் கொண்டுள்ள அபிப்பிராயத்தில் நமக்கு கொஞ்சமும் சந்தேகமில்லையென்பதையும் தெரிவித்துக் கொள்ளு கிறோம். வருணாசிரம விஷயமாய் மகாத்மாவுடன் சம்பாஷித்ததை ஆதார மாய் வைத்துக் கொள்ளாமலேயே மகாத்மாவே மைசூரில் பேசினதைக் கொண்டும், அதற்கும் அவர் எழுதினதைக் கொண்டும் தான் அந்த மறுப்பு எழுதப்பட்டது. தவிர மகாத்மாவின் வருணாசிரம தர்ம நியமனமும் ஜாதி வித்தியாச நியமனமும் பிறப்பை ஒட்டியது என்பதாக இதற்கு முன் எத்த னையோ தடவைகளில் மகாத்மாவின் பேச்சினாலும் எழுத்துக்களினாலும் நாம் தெரிந்தே இருக்கிறோம்.

மகாத்மா பார்ப்பன மதமான ஆரியரின் மதத்தைத்தான் இந்து மதம் என்று சொல்லிக்கொண்டு தன்னையும் அதே இந்து இந்து என்று அடிக்கடி சொல்லிவருகிறார். தன்னுடைய பிரசங்கங்களுக்கும் அடிக்கடி ஆரியக் கதை களான புராணங்களைத்தான் அதாவது ராமாயணம், பாரதம், பாகவதம் முதலியவைகளையே தனக்கு ஒரு படிப்பினைகளாகவும் மேற்கோள் களாவும் காட்டிக் கொண்டும் வருகிறார். இந்த மாதிரி புராண வழுக்கலானது எப்படியாவது மகாத்மாவை சேற்றில் கொண்டு போய் அழுத்தியே தீரும் என்பதே நமது துணிபு.

தமிழ்நாட்டின் நாகரீகமும், தமிழ்நாட்டின் பழய பழக்க வழக்கங்களும் மகாத்மாவுக்கு தெரிவதற்கு சந்தர்ப்பமேயில்லை. மகாத்மா தென்னாப் பிரிக்காவில் இருந்த காலத்தில் வள்ளியம்மை, நாகப்பன் என்பது போன்ற சில தமிழ் மக்கள் மூலம் தமிழரின் வீரத்தை அறிந்திருக்கலாமே தவிர தமிழ் நாட்டைப்பற்றியும், தமிழ் மக்களைப் பற்றியும் பார்ப்பனர்களின் மூலமாகத் தவிர வேறொன்றும் அவர் அறிந்திருக்க முடியாது என்பதாக உறுதி கூறலாம்.

ஆரியக் கொள்கையான பார்ப்பன மதத்திற்கும் தமிழர் நாகரீக பழக்க வழக்கத்திற்கும் ஏறக்குறைய 2000,3000 வருஷங்களாகவே யுத்தங்கள் நடந்து வரும் விஷயங்களை மகாத்மாவுக்கு எடுத்துச் சொல்ல கூடியவர்கள் யார்? மகாத்மா மடத்தில் இருக்கிறார்கள். ஆதலால் தமிழ்நாட்டிற்கு ஆரியக் கொள் கைகள் கூடாது என்பதாக நாம் பிரசாரம் செய்வதானால் அதைப் பொருத்த வரை மகாத்மா கொள்கை கூடாது என்றுதான் நாம் சொல்லி ஆக வேண்டும். தொழிலின் மூலமாகக்கூட மக்களைப் பிரிக்கக் கூடாது. பிரிக்க முடியாது, பிரிப்பதும் உலகியற்கைக்கும் மனிதத் தன்மைக்கும் சரியல்லவென்று வாதாடுகிற நாம் “பிறவியில் ஜாதி உண்டு, தொழில் உண்டு இது பெரியோர் களால் ஏற்படுத்தப்பட்டது. கடவுளால் ஏற்படுத்தப்பட்டது, ரிஷிகளால் ஏற்படுத்தப்பட்டது” என்றால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும். ரிஷிகள், கிருஷ்ணன் முதலானவர்கள் காலமல்ல இது என்பதும், நாம் அந்தக்காலத்தில் இல்லை என்பதும், இந்தக் காலத்தில் அவர்கள் இல்லை என்பதும் அது சரியா தப்பா, நிஜமா பொய்யா என்பதற்கு சரியான ஆதாரமும், அவசியமும் சாத்தியமும் இல்லை என்பதும் ஒவ்வொரு பகுத்தறிவுள்ள மனிதனுக்கும் தானாக விளங்கும்போது ‘பாட்டி கதைக்கு’ எப்படி மரியாதை கிடைக்கும் என்பது நமக்கே விளங்கவில்லை.

மகாத்மாவும் வருணாசிரமமும் என்னும் வியாசத்தை மகாத்மா வுக்கும் அனுப்பித்தான் இருக்கிறோம். மற்றொன்றை அவரது அந்தரங்க சிஷ்ய கோடிகளுக்கும் அனுப்பி மகாத்மா தகவலுக்கு கொண்டுபோகும்படி கேட்டுக் கொண்டும் இருக்கிறோமேயல்லாமல் மகாத்மாவுக்குத் தெரியாமல் ஒன்றும் செய்துவிடவில்லை. ஆனால் அவரது பரமானந்த சிஷ்யர்கள் இம் மாதிரி விஷயங்களை லக்ஷியம் செய்யாதீர்கள். லக்ஷியம் செய்தால் மறுப் புக்கு அதிக யோக்கியதை உண்டாகிவிடும், மறுப்பவனுக்கும் அந்தப் பத்திரிகைக்கும் யோக்கியதை அதிகமாகிவிடும். ஆதலால் குப்பையில் போட்டு விடுங்கள் என்றுதான் சொல்லிக்கொடுப்பார்கள். அதை மீறுவதற்கு மகாத்மாவுக்கு இது சமயம் சக்தியில்லை என்பதே நமது அபிப்பிராயம். ஆகவே, இந்த விஷயம் முக்கியமானதாலும் நமது நாட்டின் விடுதலைக்கும், நமது சுயமரியாதைக்கும், வருணாசிரமம் என்கிற தத்துவமே அதிலும் பிறவியில் வருணாசிரமமும் ஜாதியும் உண்டு என்கிற தத்துவமே எமனாய் இருக்கிறது என்பதான கண்ணியமான முடிவுக்கு வந்திருப்பதாலும் அதை யொழிக்கப் பாடுபடுவதே நாட்டில் விடுதலையும் சுயமரியாதையும் கோரும் மனிதனின் கடமையென்று நாம் களங்கமற உணருவதாலும் கண்டிக்க வேண்டியதாயிருக்கிறதே என்பதாக வருத்தத்துடன் இதை எழுதுகிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 28.08.1927

மகாத்மாவும் வருணாசிரமும் I - 07.08.1927

மகாத்மாவும் வருணாசிரமும் I


மகாத்மா காந்தி “தீண்டாமை ஒழிய வேண்டும், மதத்திலும், சமுதாயத் திலும் சீர்திருத்தம் ஏற்பட வேண்டும்” என்கிற கொள்கை உடையவர் என்று ஜனங்கள் நம்பி வந்தாலும், அவரது எண்ணத்திலும் பேச்சிலும் அதற்கு நேர் விரோதமான கொள்கையை உடையவராகவே காணப்படுகிறார். இம்மாதிரி எண்ணத்தோடும் பேச்சுகளோடும் மகாத்மா காந்தியின் பிரசாரம் நடைபெற நடைபெற தீண்டாமையும் மூடக் கொள்கைகளும் நாட்டில் வலிமையோடு நிலைபெற இடம் ஏற்படுமே அல்லாமல் ஒருக்காலும் இவை ஒழிக்கப்படவே முடியாது. எந்த தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்று வெளிப்படையாய் பேசுகிறாரோ அதே தீண்டாமையை நிலை நிறுத்த அதே பேச்சை வியாக்கி யானம் செய்வதில் பாடுபடுகிறார்.

இதைப்பற்றி முன் ஒரு தடவை கூட எழுதி இருக்கிறோம். உண்மை யான தீண்டாமையை நமது நாட்டை விட்டு வெளிப்படுத்த வேண்டுமானால் மகாத்மா காந்தியையும் எதிர்த்து போராடித்தான் தீர வேண்டியிருக்கிறது.

தீண்டாமை இன்னது என்பது மகாத்மாவுக்கு இன்னமும் சரியாய் புலப்பட இல்லை என்பதே நமது அபிப்பிராயம். அவர் மதத்தின் பெயரைச் சொல்லிக் கொள்வதனால் பொது ஜனங்களிடம் உண்டாக்க கூடிய செல்வாக் கையும் உபயோகப் படுத்திக்கொள்ள நினைப்பதால் உண்மைத் தீண்டாமை தத்துவம், அவருக்கு புலப்பட மார்க்கமில்லாமல் போய்விடுகிறது. ஆதலால் மகாத்மாவினது தீண்டாமை விலக்கு கொள்கையைப் பின்பற்றுவோமானால் மறு படி தீண்டாமை சேற்றிலே சறுக்கி விழுக வேண்டிவரும் என்றே நாம் பயப்படுகிறோம். வெகு காலம் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தும், மூடி மூடி வைத்தும் கூட உண்மையான தீண்டாமை விலக்கையும், சுயமரியாதையையும் உத்தேசித்து வெளிப்படையாய் இப்போது அவரை தாக்கித் தீர வேண்டியதாய் ஏற்பட்டு விட்டதற்கு வருந்துகிறோம்.

ஏனென்றால் சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு மகாத்மா காந்தி வரப்போகி றார். தீண்டாமையைப் பற்றி பேசும்போது அவரது வழக்கப்படியே தான் பேசித் தீருவார். அதன் மூலம் நமது எதிரிகளுக்கு அதிகமான பலம் ஏற்பட்டு நமது முயற்சியை ஒழிக்க அதை அவர்கள் உபயோகித்துக் கொள்ளுவார்கள். ஆதலால் அதை இப்போதே நாம் வெளிப்படுத்திவிடுவது மேலானதென்றே கருதுகிறோம். அதாவது மகாத்மா காந்தி நமது பார்ப்பனர்கள் சொல்லுவது போலவே நமது சமூக வாழ்வில் வருணாசிரம தர்மம் உண்டு என்றும் அது பிறவியிலேயே ஏற்பட்டது என்றும் அடிக்கடி சொல்லிவருகிறார். சமீபத்தில் மைசூரில் ஒரு கூட்டத்தில் தீண்டாமையைப் பற்றி பேசும் போதும் இந்து சமூகத்தில் வருணாச்சிரம தர்மம் உண்டு என்றும், அது நமது சமூகத்திற்கு அவசியம் என்றும், ஒவ்வொரு வர்ணத்தாருக்கு ஒவ்வொரு தர்மம் விதிக்கப் பட்டிருக்கிறதென்றும், அந்தந்த வர்ணத்தார் அந்தந்த தர்மத்தை செய்யும் போது அவரவர்கள் அம்மட்டி லுயர்ந்தவர்கள் என்றும், பிராமணன் அவன் தர்மத்தைச் செய்யும் போது உயர்ந்தவனாகிறதுபோலவே மற்ற வர்ணத் தானும் அவனவன் தர்மத்தைச் செய்யும்போது தான் உயர்ந்தவனாகிறான் என்பதாகவும் பேசியிருக்கிறார். இதைத்தான் பார்ப்பனர்களும் தாங்கள் பிறவியிலேயே உயர்ந்தவர்கள் என்பதற்கு காரணங்களாக சொல்லிவரு கிறார்கள்.

வருணாசிரம தர்மத்தின் மூலமாகத்தான் நமது நாட்டில் தீண்டாமை கொள்கை அமுலில் இருந்து வருகிறதே ஒழிய வருணாசிரமம் இல்லா விட்டால் தீண்டாமை கொள்கை பரவ மார்க்கமே கிடையாது. வருணாச்சிரம தர்மம் என்கிற ஒரு உடல் இல்லா விட்டால் தீண்டாமை என்கிற உயிருக்கு ஆட்டம் இல்லை. யோசித்துப்பார்த்தால் இந்த கொள்கைத் தத்துவம் எவருக்கும் விளங்காமல் போகாது. அந்தந்த வருணத்தானுக்கு ஏற்பட்ட தர்மப்படி அவனவன் நடக்க வேண்டும் என்று மகாத்மா சொல்லுவதைத்தான் தூவார் மகாநாட்டு “பிராமண சம்மேளன”மும் ஏகமனதாய் தீர்மானம் செய் திருக்கிறது.

மகாத்மா சொல்லும் வருணாச்சிரம தர்மம் அதுவல்ல என்பதற்கு வேறு ஆதாரம் என்ன? மகாத்மாவும் வருணாச்சிரமம் நான்கு என்று சொல்லு கிறார். அதாவது பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்கிறார். தூவார் பிராமணச் சம்மேளனத்தாரும் மகாத்மா சொல்லும் ஆதாரத்தைக் கொண்டே க்ஷத்திரியனும், வைசியனும் உலகத்தில் இப்போது காணப் படவில்லை. ஆதலால் பிராமணன், சூத்திரன் ஆகிய இரண்டு வருணத்தார் மாத்திரம்தான் இருக்கிறார்கள் என்கிறார்கள். மறைந்துவிட்ட இரண்டு வருணத்தாரைப் பற்றி நமக்கு கவலை இல்லை. இருக்கிற இரண்டு வருணத் தாரைப் பற்றிய வரையிலாவது இவர்களுக்கு ‘மகாத்மா’ கற்பிக்கும் தர்மங்கள் என்ன? என்பதுதான் நமது கேள்வி. வருணாசிரமத்தையும், அதன் தர்மத்தை யும் ஒப்புக்கொள்ளுகிற ஒருவர் – அதுவும் வருணாசிரமமும், அதனதன் தர்ம மும் மக்களுக்கு பிறவியிலேயே உண்டு என்று ஒப்புக்கொள்ளுகிற ஒருவர் – தீண்டாமை இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும். மகாத்மா கூறும் வருணாசிரமத்திற்கு பார்ப்பனர் கூறும் தர்மத்தைவிட வேறு ஏதாவது தர்மம் கற்பிக்க ஆதாரம் இருக்கிறதா? என்று பார்த்தால் நாளது வரை மகாத்மா அது வேறு என்று சொன்னதாகவே தெரியவில்லை. மைசூர் உபந்நியாசத்தில் ஜன சேவையே பிராமணர்களுடைய தர்மம் என்று சொல்லியிருக்கிறார். அது போலவே பிராமண சேவையே சூத்திரனுடைய தர்மம் என்றுதான் அவர் சொல்லி ஆக வேண்டும். பொது ஜன சேவைதான் பிராமண தர்மம் என்று சொன்ன சாஸ்திரங்களில்தான் “பிராமண சேவையே சூத்திர தர்மம்” என்று சொல்லப் பட்டிருக்கிறது.

பிராமணருக்குப் பொது ஜன சேவை செய்வதினால் மாத்திரம் உயர்வு உண்டாகுமானால் சூத்திரனுக்கு பிராமணசேவை செய்வதினால் மாத்திரம் தான் உயர்வு உண்டாகுமேயன்றி அதை விட்டு வேறு வேலை செய்வா னானால் சூத்திரன் கண்டிப்பாய் தாழ்ந்தவனாகிறான் என்றுதான் மகாத்மாவின் தத்துவத்திற்குப் பொருள் ஏற்படுகிறது. இந்தப்படியானால் எந்த விதத்தில் பிராமணனுக்கு சம அந்தஸ்தாக சூத்திரன் இருக்க முடியும் என்று மகாத்மா கருதுகிறார் என்பது நமக்கு விளங்கவில்லை.

அன்றியும் “அந்தந்த வருணத்தார் அந்தந்த தருமத்தைச் செய்து வருகையில் ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வு சொல்லிக் கொள்ள இடமேது” என்றும் பேசியிருக்கிறார். அப்படியானால், அந்தந்த வருணத் தாருக்குத் தனித்தனி தர்மம் ஏற்பட வேண்டிய அவசியம் என்ன என்பதைப் பற்றியாவது ஒரு வருணத்தான் மற்ற வருணத்தானுடைய தர்மத்தைச் செய்வதானால் கெடுதி என்ன என்பதைப் பற்றியாவது ஒரு வார்த்தையாவது இதுவரை மகாத்மா சொன்னதேயில்லை. “பொது ஜன சேவை என்பது பிராம ணர்களுக்கு மாத்திரம் சொந்தமானது, அதற்காகவே அவர்கள் பிறந்திருக் கிறார்கள்” என்றும் மகாத்மா சொல்லுவாரானால் மகாத்மா அவர்கள் நான்கு வருணத்தில், தான் எந்த வருணத்தைச் சேர்ந்தவர் என்று சொல்ல முடியும்? மகாத்மா சொல்லுகிற கொள்கைப்படி பார்த்தால் அவர் பிறவியில் ஒன்று சூத்திரராயிருக்க வேண்டும் அல்லது வைசியராயிருக்க வேண்டும். எனவே சூத்திரனுக்கும் வைசியனுக்கும் ஏற்பட்ட தர்மத்தைச் செய்வதை விட்டுவிட்டு பிராமணனுக்கு ஏற்பட்ட தர்மமாகிய பொது ஜன சேவையை செய்வதற்கு மகாத்மாவுக்கு உரிமையேது? தன்னாலேயே நடத்திக் காண்பிக்க முடியாத வருணாசிரம தர்மத்தை மற்றவர்களை ஏற்று நடத்தும்படி சொல்வதில் ஏதாவது பொருளுண்டா? இவைகளைப் பற்றி இவ்வளவு தூரம் எழுதினது தீண்டாமை விஷயத்தில் மகாத்மாவுக்கு உள்ள குழப்பத்தை காண்பிக்கவும், அவரும் குருட்டு நம்பிக்கையில் ஈடுபட்டவரே அல்லாமல் பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவராகப் புலப்படவில்லை என்பதையும் காட்டுவதற்குமே எழுதுகிறோமே அல்லாமல் அவர் மீது குறை கூறுவதற்காக அல்ல. அன்றி யும் மகாத்மா நாட்டிற்கும், மக்களுக்கும் செய்திருக்கும் அநேக நன்மை களைப் பற்றி நமக்கும் மகாத்மாவின் அந்தரங்க சிஷியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கட்கும் யாதொரு வித்தியாசமும் இல்லை. எனினும் இத் தீண்டாமை விஷயத்திலும், வருணாசிரம விஷயத்திலும் மகாத்மாவுக்கு தெளிவு ஏற்பட்டிருக்குமானால் நமது சமூகத்திற்கு எவ்வளவோ நன்மை உண்டாகும் என்கிற ஆசையே இதைப் பற்றி மேலும் மேலும் எழுதி வரவும் தூண்டுகிறது.

குடி அரசு – தலையங்கம் – 07.08.1927

காந்தி, தீண்டாமைக்கு ஏன் சத்தியாக்கிரகம் செய்வதில்லை? இரண்டு சந்தேகம்?

காந்தி, தீண்டாமைக்கு ஏன் சத்தியாக்கிரகம் செய்வதில்லை?
இரண்டு சந்தேகம்?

1.போக்கிரி : திருமதி ஸ்லேட்டர் அம்மாளை மீராபாயம்மாளாக்கி, முக்காடு போட்டு ஆபாசமாக்கி சீமைக்கு அழைத்துப் போய் இந்திய நாகரீகத்தைப் பாருங்கள் என்று வெள்ளைக்காரர்களுக்கு காட்டுகிறாரே அது ஏன்? முக்காடு என்ன அவ்வளவு அழகா? அல்லது, தன்னை ஒரு சனாதன இந்து என்பதற்காகவா?

யோக்கியன்: அதைப்பற்றி கவலை உனக்கு எதற்கு? அது அவரவர்கள் இஷ்டத்தைப் பொறுத்தது.

போக்கிரி : சரோஜனி அம்மாள் அப்படியில்லையே?

யோக்கியன்: மறுபடியும் பேசுகிறாயே?

2. போக்கிரி: சரி, அதைப்பற்றி பின்னால் பேசிக்கொள்ளலாம். திரு. காந்திக்கு திரு.ஏ. ரங்கசாமி அய்யங்கார் அவர்களின் யோக்கியதை தெரி யுமா? தெரியாதா?

யோக்கியன்: தெரியும். ஏன்?

போக்கிரி : அவர் காந்தியை மீறித்தானே வட்டமேஜைக்குப் போனார்?

யோக்கியன்: ஆம்.

போக்கிரி : அப்படி இருக்க, திரு.காந்தி அவரை எதற்காகத் தனக்கு அரசியல் ஆலோசனை சொல்லும் அமைச்சராக வைத்துக்கொண்டார்.

யோக்கியன்: இது வேண்டுமானால் நல்ல கேள்வி. ஏன் வைத்துக் கொண்டார் என்றால், திரு. ஏ.ரங்கசாமி அய்யங்கார் ‘இந்து’ ‘சுதேசமித் திரன்’ பத்திரிகைகளின் ஆசிரியாய் இருக்கின்றார் என்பதற்காகத்தான். அன்றியும் திரு.ரங்கசாமி அய்யங்காரிடம் திரு.காந்தியின் கைவரிசை ஒன்றும் செல்லாது. ஏனெனில் இந்து பத்திரிகையொன்றாலே திரு.காந்திக்கு எப்போதும் நெஞ்சில் கொஞ்சம் நெருப்பு உண்டு.

போக்கிரி : அதெப்படி?

யோக்கியன்: காலஞ் சென்ற ஒத்துழையாமையின்போது கூட இந்து பத்திரிகை ஒத்துழையாமைக்கு விரோதமாய் விஷமப் பிரசாரம் செய்தும் திரு.காந்தி அடிக்கடி அதன் ஆசிரியருக்குக் கடிதம் எழுதி அவரைக் கைக் குள் போட்டு, ‘ஒத்துழையாமையை தயவு செய்து கவனித்துக் கொள்ளுங் கள்’ என்று கடிதமெழுதி இருக்கிறார். அன்றியும் ‘இந்து’வும் ‘சுதேச மித்திர’னும் சேர்ந்துதான் திரு.தாசுக்கு விளம்பரம் கொடுத்து அவரை ‘தேசபந்து’ வாக்கி ‘மகாத்மாவை’ தோற்கடித்து ஒத்துழையாமையைப் புதைத்து விட்டதுகள். ஆதலால் அதுபோலவே இப்போதும் செய்து விடுமோ என்கின்ற பயத்தால்தான் திரு.ரங்கசாமி அய்யங்காரை திரு.காந்தி தனது மந்திரியாக்கிக் கொண்டார்.

போக்கிரி : மற்றவர்களையெல்லாம்விட திரு.ஏ.ரங்கசாமி அய்யங் காரிடம் மாத்திரம் என்ன அவ்வளவு பயம்?

யோக்கியன்: ‘இந்து’ ‘சுதேசமித்திரன்’ என்றால் பார்ப்பனர்கள் என்று அருத்தம். அதுவும் ‘தென்னாட்டு அய்யங்கார் பார்ப்பனர்கள்’என்று அர்த்தம். திரு.காந்தியைப்போல் ஆயிரம் காந்தியை அய்யங்கார் பார்ப் பனர்கள் ஆக்கவும் கூடும். அழிக்கவும் கூடும். திரு.காந்தி இவையெல்லாம் தெரியாதவரல்ல. யார்யாரைப் பிடித்து எப்படி எப்படி சரிபண்ணலாம், எப்படி எப்படி விளம்பரம் செய்யலாம் என்பதில் அவருக்கு அனுபவ முண்டு - லார்டு இர்வினை ‘மகாத்மா இர்வின்’ என்று காந்தி கூப்பிட்டாரே எதற்கு? என்பது உமக்குத் தெரியுமா?

போக்கிரி : சரி, விளங்கிற்று இனி ஒன்றும் தெரியவேண்டாம்.

புதிய தொண்டரும் பழைய தொண்டரும்

புதுத் தொண்டர்: வட்டமேஜை முறிந்து போனால் என்ன செய்வது? ‘ஜனங்கள் மிகவும் கஷ்டப்பட வேண்டி வரும்’ என்று காந்தி சொல்லுகின்றாரே’.

பழய தொண்டர்: அட பயித்தியக்காரா! வட்டமேஜை மகாநாடு முறிந்தால் தான் நமக்கு நல்லது.

புதுத் தொண்டர்: அதென்ன அப்படி?

பழய தொண்டர்: வட்டமேஜை மகாநாடு முறிந்து போனால், திரு.காந்தி இந்தியாவுக்கு வந்து, மறுபடியும் ஏதாவது சத்தியாக்கிரகம்-சட்டமறுப்பு- என்பதாக, எதையாவது ஒன்றைச் செய்யச் சொல்வார்.

புதுத் தொண்டர்: அதனால் நமக்கென்ன லாபம்? ஜனங்களுக்கு கஷ்டம் தானே?

பழய தொண்டர்: அட முட்டாளே! ஜனங்கள் எக்கேடு கெட் டேனும் தொலையட்டும். அதைப் பற்றி நமக்கென்ன கவலை? நமக்கு எப்படியும் ஒரு வேலை இருக்குமல்லவா? அதனால் உண்டி வசூலிக்கவோ, பணம் வசூல் செய்யவோ, தேசாபிமானியாகவோ சவுகரியம் இருக்கும். அப்படியில்லா விட்டால் நம்மை எவன் சட்டை பண்ணுவான்?

புதுத் தொண்டர்: நமக்கு வேலை வேண்டியதற்காகவா தேசியத் தொண்டு செய்வது?

பழய தொண்டர்: சரி! சரி! உனக்கு ஒன்றும் தெரியாது. உங்கள் வீட்டில் ஏதோ சோற்றுக்குக் கொஞ்சம் வகை இருக்கின்றது போல் தெரி கின்றது, அதனால் உனக்கு வட்டமேஜை முறிய வேண்டிய அவசிய மில்லையென்று தோன்றுகின்றது.

புதுத் தொண்டர்: அதென்ன அப்படி சொல்லுகின்றாய்?

பழய தொண்டர்: வட்டமேஜை ஏதாவது ஒரு வழியில் வெற்றி பெற்று விட்டால், இந்தியாவில் வேலையில்லா கஷ்டம் எவ்வளவு அதிகரிக் கும் தெரியுமா? முக்கால்வாசிப் பத்திரிகைகள் ஒழிந்து போகும். முன்பெல் லாம் பாமர மக்களை ஏமாற்ற மதம் ஒன்று தான் இருந்தது. இப்போது நமது பிராமணப் பெரியோர்கள் தயவினால் தேசீயம் என்பதாக ஒன்று ஏற்பட்டு , இதில் அனேகம் பேருக்கு ஜீவனோபாயம் உண்டாயிற்று. மகாத்மா காந்தி அதற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறார். அதனால் இப்போது நம்போலியர்க்கெல்லாம் சோற்றுக்குச் சோறு, துணிக்குத்துணி, கை செலவுக்குத் தாராளமாகக் காசு இவ்வளவும் தவிர, போகின்ற பக்கம், வருகின்ற பக்கம் எல்லாம் திருப்பதி குடை யாத்திரைக்காரருக்கு காலில் தண்ணீர் விட்டு விழுந்து கும்பிட்டு, தட்டத்தில் காசு போடுகின்ற மாதிரியான மரியாதை-இவ்வள வெல்லாம் இருக்கின்ற போது, இவை அத்தனையும் ஒழிந்து போகின்ற மாதிரியில் ‘வட்டமேஜை வெற்றி பெற்றால்’ என்று கேட்கின்றாயே, பாவி! இதைக் கேட்டதும் எனக்குத் திகீர் என்கின்றது.

புதுத் தொண்டர்: கோபித்துக் கொள்ளாதீர்கள்! எனக்கு அனு போகம் இல்லாததினால் இப்படிக் கேட்டேனே ஒழிய, உங்கள் பிழைப்பில் நான் கை வைக்கவில்லை.

சத்தியாக்கிரகமும் தடையும்

கேள்வி: ‘சத்தியாக்கிரகம்’ என்பதை குற்றம் சொல்லுவதின் காரணம் என்ன?

விடை: சத்தியாக்கிரகம் என்கின்ற வார்த்தையில் மனிதத் தன்மைக்கு மீறினதான, ஏதோ ஒரு ‘தெய்வீக’சக்தி இருப்பதான கருத்து இருக்கின்ற படியால், தெய்வத்தன்மை என்பதை ஒப்புக்கொள்ளாதவன் சத்தியாக் கிரகத்தை ஒப்புக் கொள்ளமுடியாது.

கேள்வி: அப்படியானால் முழுச் சுயமரியாதைக்காரர்கள் என்பவர் கள் கூட சத்தியாக்கிரகம் செய்கின்றார்களே அதன் அருத்தம் என்ன?

விடை: பசிக் கொடுமையால் உலகில் நடக்கும் எத்தனையோ விதமான அற்புதமல்லாதவைகளில் சுயமரியாதைக்காரர் என்பவர்கள் சத்தியாக்கிரகம் செய்கின்றார்கள் என்பதும் சேர்ந்ததாகும். ‘யாரைவிட்டது காண் பசிக் கொடுமை எவரை விட்டது காண் பசிக் கொடுமை’ என்பதும், ‘பசி வந்திடப் பத்தும் பறந்து போம்’ என்பதும் இதில் சேர்ந்தவைதான்.

கேள்வி: ‘மகாத்மா’காந்தி எத்தனையோ காரியத்திற்கு சத்தியாக் கிரகம் செய்கின்றாரே? இந்த

தீண்டாமைக்கு ஏன் சத்தியாக்கிரகம் செய் வதில்லை?

விடை: அவர் தீண்டாமை விலக்குவதில் சத்தியம் இருக்கின்றதா இல்லையா என்பதில் இன்னமும் முடிவு காணாமல் இருக்கின்றார். ஆதலால் தான் தீண்டாமை ஒழிப்பதற்கு சத்தியாக்கிரகம் செய்யும் விஷயத்தில் பயப்படுகிறார்.

கேள்வி: அப்படியானால் வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு அவர் எப்படி உதவி செய்தார்?

விடை: வைக்கம் சத்தியாக்கிரகம் திரு காந்தி ஆரம்பித்ததல்ல. மற்றவர்கள் ஆரம்பித்து விட்டார்கள். ‘நம்பிக்கை இருக்கின்றவர்கள் செய் யுங்கள்’ என்று அனுமதி மாத்திரம் கொடுத்துவிட்டார்.

கேள்வி: வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு ‘மகாத்மா’ பணம் கூட கொடுத்தாரே.

விடை: ஆம். அந்தப் பணம் கொடுத்தது எதற்கென்றால் வைக்கம் சத்தியாக்கிரகத்தை நடத்தப் பஞ்சாப்பில் இருந்து சீக்கியர்கள் பதினாயிரக் கணக்கான ரூபாய்களுடன் வந்து விட்டார்கள். அவர்களைக் கொண்டு சத்தியாக்கிரகம் நடந்தால் ஜனங்கள் சீக்கியர்கள் ஆய்விடுவார்களே என்று கருதியும், மற்றும் பணம் தாராளமாய் இருந்தால் தீண்டாமை விலக்குக்கு நினைத்த இடங்களில் எல்லாம் சத்தியாக்கிரகம் தொடங்கப்பட்டு விடுமே என்று பயந்தும், சீக்கியர்களை திரும்பிப் போகும்படி செய்துவிட்டார். அதனால் சிறிது உதவி செய்ய வேண்டியதாயிற்று.

சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் அவர்களால் எழுதப்பட்ட உரையாடல் -  ”குடி அரசு” -  15.11.1931

காந்தி ஜெயந்தி புரட்டு - 06.10.1929

காந்தி ஜெயந்தி புரட்டு 


இவ்வாரம் 2-10-29 தேதி புதன்கிழமை தமிழ்நாட்டில் பல இடங்களில் திரு.காந்தியின் சஷ்ட்டி பூர்த்தி தின திருவிழா என்னும் காந்தி ஜயந்தி புரட்டு ஒன்று பார்ப்பனர்களால் வெகு அக்கரை உள்ளவர்கள் போல் கொண்டாடப் பட்டது. அவைகளை ஒன்றுக்கு இரண்டு பத்து வீதம் பத்திரிகைகளில் விளம்பரமும் செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் இரகசியம் என்ன வென்று பார்த்தால் கடுகளவு அறிவுள்ளவர்களுக்கும் உண்மை விளங்காமல் போகாது. அதாவது இந்தப் பார்ப்பனர்கள் காந்தி ஜயந்தியை திரு.காந்தி மீதுள்ள அன்புக்கும் பக்திக்கும் மரியாதைக்கும் அறிகுறியாக கொண்டாடினார்களா அல்லது திரு.காந்தியின் பெயரைச் சொல்லிக் கொண்டு தங்கள் ஆதிக்கத்திற்கு ஆதாரமாக பார்ப்பன விஷயத்தை பாராட்டக் கொண்டாடினார்களா? என்பது விளங்காமல் போகாது. தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்கு எப்போதாவது திரு.காந்தியிடம் மரியாதையோ பக்தியோ இருந்ததாக யாராவது சொல்ல முடியுமா? எந்தப் பார்ப்பனர் திரு. காந்தியைப் பிடித்து சிறையில் அடைக்கும் படிக்கும் அந்தப்படி அடைக்காவிட்டால் அராஜகம் பெருகி நாடும் சர்க்காரும் அழிந்துபோகும் என்று சர்க்காருக்குச் சொல்லி சர்க்காரிடம் மகாப்பட்டம் வாங்கினாரோ, அந்தப் பார்ப்பனராகிய திரு.சீனிவாச சாஸ்திரியாரும், எந்தப் பார்ப்பனர் காந்தி அரசியலுக்கு லாயக்கில்லை என்று சொன்னாரோ அந்தப் பார்ப்பனராகிய திரு.சத்தியமூர்த்தியும், எந்தப் பார்ப்பனர் திரு.காந்தியை பயித்தியக்காரர் என்று சொன்னதோடு அவரது இயக்கம் சட்டவிரோதமானது என்று சர்க்காருக்கு யோசனை சொன்னாரோ அந்தப் பார்ப்பனராகிய திரு.சீனி வாசய்யங்காரின் உண்மை சிஷ்யராகிய திரு. முத்துரங்கமும், திரு.காந்தியின் கொள்கையை ஒழிக்கப் புறப்பட்ட எதிரிகளுக்கு அடிமையாயிருந்தவரும் திரு.காந்திக்கு மண்டையில் மூளையில்லை என்று சொன்னவருமான திரு.வரத ராஜுலுவும் மற்றும் இவர்களது சிஷ்யகோஷ்டிகளும் முக்கியமாயிருந்து காந்தி ஜயந்தியை சென்னையில் கொண்டாடி இருப்பதுடன் வெளியிடங்களிலும் மேல்கண்ட கூட்டத்தைச் சேர்ந்த வக்கீல் பார்ப்பனர்களும் அவர்களது குமாஸ்தாக்கள் கட்சிக்காரர்களுமே முக்கியமாயிருந்திருக்கின்றார்கள். இந்த கூட்டத்திற்கு இப்போது திரு.காந்தியிடம் ஏற்பட்ட அபிமானத்திற்கும் பக்திக்கும் காரணம் என்ன என்பது வேடிக்கை விஷயமாகும்.



இவர்கள் ஒன்றாய் திரு.காந்தி செல்வாக்கில் இருந்த காலத்தில் அவர்களை உண்மையில் பின்பற்றினவர்களாகவாவது இருந்திருந்தாலும் அல்லது அவர் இப்போது மூலையில் அடங்கிவிட்டாலும் அவருடைய அப்போதைய கொள்கையையாவது அல்லது இப்போதைய கொள்கையை யாவது பின்பற்றுகின்றவர்களாகவாவது இருந்தாலும் ஒரு விதத்தில் காந்தி ஜயந்தி கொண்டாட யோக்கியதை உடையவர்கள் என்று சொல்லலாம்.

அப்போதும் கீழ்ப்படியாமல், இப்போதும் ஏற்றுக் கொள்ளாமல் மூலையில் உட்கார வைத்து ஜயந்தி கொண்டாடுவது எதற்கு சமானம் என்று பார்க்கப் போனால் புத்தரை நாஸ்திகர் என்று பழி சுமத்தி அவர் கொள்கையை அடியோடு அழித்து நாட்டில் செல்வாக்கில்லாமல் செய்துவிட்டு புத்தர் ‘மகா விஷ்ணு’வின் பத்தாவது அவதாரம் என்று புராணங்கள் எழுதிவைத்து வணங்கி வந்ததைத்தான் சமானமாகச் சொல்லலாம். இந்தத் தமிழ் நாட்டில் ஒரு பார்ப்பனராவது திரு.காந்தி அபிப்பிராயத்தை ஒப்புக்கொள்ளுகின்றார் என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம். உதாரணமாக சாரதா மசோதாவுக்கு ஆதரவளித்ததில் பெண்களுக்கு 18 வயதும் ஆண்களுக்கு 24 வயதும் கல்யாண வயதாயிருக்க வேண்டும் என்று சொன்னதை எந்தப் பார்ப்பனர் ஒப்புக் கொண்டார் என்று கேட்கின்றோம். தீண்டாமை ஒழிந்தா லல்லாது நமக்கு சுயராச்சியம் கிடைக்காதென்றும், தீண்டாமையை அடியோடு ஒழிக்காவிட்டால் நாம் சுயராச்சியத்திற்கு அருகரல்லவென்றும் சொன்னதை எந்தப் பார்ப்பனராவது ஒப்புக்கொண்டு தீண்டாமையை ஒழிக்க முயற்சித்தாரா? முயற்சிக்கிறாரா? முயற்சிக்கப்போகிறாரா? என்று கேட்கின்றோம். கோவில் களில் தீண்டப்படாதாரை விடாவிட்டால் அது மிகவும் அக்கிரமம் என்று சொன்னாரே, அதை எந்தப் பார்ப்பனராவது ஒப்புக் கொண்டு கோயிலுக்குள் விட்டார்களா என்று கேட்கின்றோம். விதவைகளுக்கு மறுமணம் செய்யுங்கள் என்றும் மறுமணம் செய்யப்படாத விதவைகள் வீட்டைவிட்டு ஓடிப்போய் யாரையாவது கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்றும் சொன்னதை எந்தப் பார்ப்பனராவது கேட்டார்களா என்று கேட்கின்றோம்.

மற்றும் காங்கிரஸ் விளையாட்டுப் பிள்ளைகள் கூட்டம் என்றும், பூரண சுயேச்சை என்பது பயித்தியக்காரத்தனமென்றும் சொன்னதை யாராவது எந்தப் பார்ப்பனராவது மதித்தார்களா? அன்றியும் கோயில்களில் கடவுள்கள் இல்லை என்றும், கோயில்கள் விபசார விடுதிகள் என்றும் சொன்னதை யாராவது மதித்து எந்தக் கோயில்களை யாராவது இடித்தார்களா அல்லது அடைத்தார்களா என்று கேட்கின்றோம். அன்றியும் லாகூர் காங்கிரசில் ஒரு காரியமும் ஆகப் போவதில்லை; காங்கிரசியக்கமும் ஒழுங்காயில்லை; ஆதலால் நான் காங்கிரஸ் தலைமை ஒப்புக் கொள்ளமாட்டேன் என்று சொன்னதற்கு யாராவது பதில் சொல்லவோ அல்லது காங்கிரசை விட்டு வெளிவரவோ அல்லது காங்கிரசின் கொள்கைகளைத் திருத்தவோ ஒப்புக் கொண்டார்களா என்று கேட்கின்றோம். கடைசியாக திரு.காந்தி இன்னமும் தனக்கு ஒத்துழையாமையில்தான் நம்பிக்கை இருக்கின்றது என்று அடிக்கடி சொல்லி வருகின்றாரே! இதையாவது எந்தப் பார்ப்பனராவது கேட்டு உத்தியோகத்தை விடவோ சட்டசபையை விடவோ, பட்டத்தை விடவோ, பள்ளியை விடவோ, வக்கீல் வேலையை விடவோ, சம்மதித்தார்களா என்றும் கேட்கின்றோம். திரு.காந்தி சொல்வதில் ஒன்றைக்கூட கேட்காமல் அவரை பயித்தியக்காரரென்றும், முட்டாள் என்றும், மூளை இல்லை என்றும், அரசியலுக்கு லாயக்கில்லை என்றும், அராஜகன் என்றும், சட்ட விரோதி என்றும் மற்றும் அயோக்கியன், மடையன், போக்கிரி (கும்பகோணம் பம்பாய் முதலிய இடங்களில்) என்றும் சொல்லிவிட்டு அதுவும் சென்ற வாரத்தில் சொல்லிவிட்டு இந்த வாரத்தில் அதே பார்ப்பனர்களும் அவர்களது அடிமைகளும் கூலிகளும் சேர்ந்து காந்தி ஜயந்தி கொண்டாடுவதென்றால், இதைப் போன்ற வஞ்சகமும் சூட்சியும் வேறு உண்டா என்றுதான் கேட் கின்றோம்.

ஒரு காரியத்திற்காக காந்தி ஜயந்தி கொண்டாடப்பட்டது என்றால், அதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டியது தான். அதாவது தென்னிந்தியாவில் வருணாச்சிரமப் பிரசாரம் செய்ததற்கும் இந்த ஜென்மத்தில் “சூத்திரன்” தனது வருண தர்மத்தைச் செய்தால் அடுத்த ஜன்மத்தில் “வைசியனாக”, அடுத்த ஜன்மத்தில் “க்ஷத்திரியனாக”, அடுத்த ஜன்மத்தில் “பிராமண”னாகலாம் என்று சொன்னதற்கும், மற்றும் ராமாயண, பாரத பிரசாரம் செய்ததற்கும் கதரின் பேரால் லட்சக்கணக்காக பணம் பிடுங்கி பார்ப்பனாதிக்கத்திற்கு செலவு செய்ய பார்ப்பனர்கட்கு இடம் கொடுத்துவிட்டுப் போனதற்கும் வேண்டுமானால் பார்ப்பனர்கள் காந்தி ஜயந்தி கொண்டாடலாம் என்பதை நாம் ஒப்புக் கொள்ளு கின்றோம். ஆனால் சுயமரியாதை உள்ள பார்ப்பனரல்லாதார்கள் அதில் கலந்து கொண்டதற்கு நாம் வெட்கப்படாமலிருக்க முடியவில்லை. இன்றைய தினமும் நமது நாட்டில் நடக்கும் அனேக ஜயந்திகளும் பண்டிகைகளும் திருநக்ஷத் திரங்களும் உற்சவங்களும் பார்ப்பனாதிக்கத்திற்கும் பார்ப்பனரல்லாதார் இழிவுக்கும் அறிகுறியாக நடத்தப்படுகின்றது என்பதை பலர் அறிந்தும் அவ்வித பண்டிகைகளையும் உற்சவங்களையும் இன்னமும் அறிவும் உணர்ச்சி யுமற்ற பார்ப்பனரல்லாதார்கள் செய்து கொண்டுதான் வருகின்றார்கள். அது போலவே காந்தி ஜயந்தியும் கொண்டாடப்பட்டது என்றுதான் நாம் வருத்தத் துடன் சொல்ல வேண்டியிருக்கின்றது. எனவே இனியாவது பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் உள்ள பார்ப்பனரல்லாதார்கள் இம்மாதிரியான பார்ப்பன சூட்சியிலும் வஞ்சகத்திலும் விழாமலிருக்க எச்சரிக்கை செய்கின்றோம்.

தந்தைபெரியார் - "குடி அரசு" - துணைத் தலையங்கம் - 06.10.1929

Friday, 29 September 2017

சரஸ்வதி பூசை அறிவுக்கொவ்வாமுறை - 13.10.1950

சரஸ்வதி பூசை அறிவுக்கொவ்வாமுறை


சரஸ்வதி பூஜை என்பது ஒரு அர்த்தமற்ற பூஜை. கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும் வித்தை வரும் என்றும் சொல்லி நம்மை பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு,நாம். அந்தசாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு நம்மை படிப்பு வர முடியாத மக்குகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

முதலாவது சரஸ்வதி யெனும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்களின் புராணக்கதைகளின் படியே மிக்க ஆபாசமானதாகும்.


சரஸ்வதி உற்பவக்கதை

அதாவது சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரமனுடைய சரீரத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பிறகு, அவளுடைய அழகைக்கண்டு அந்த பிரமராலேயே மோகிக்கப்பட்டு அவளுடன் இன்பமனுபவிக்க அவளை அழைக்கையில் அவள் பிரமனை தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண் மான் உருவெடுத்து ஓடவும், பிரமன் தானும் ஒரு ஆண் மான் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேடன் உருவெடுத்து ஆண் மானைக் கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து பிரமனுக்கு மனைவியாக சம்மதித்ததாகவும் சரஸ்வதி உற்பவக்கதை சொல்கிறது.

அதாவது பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது. தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தை செலவு செய்து, போதாவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட இதனால் யாதொரு நன்மையும் ஏற்படுவதாகச் சொல்வதற்கே இல்லாமல் இருக்கின்றது.

ஆயுதத்தை வைத்து பூசை செய்து வந்த, நம் நாட்டு அரசர்கள் கதி என்னவாயிற்று? ஆயுதத்தை வைத்து பூசை செய்தேயறியாத வெள்ளையன் துப்பாக்கி முனை கண்டிடவில்லையா?

சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய் கணக்கு எழுதாமலோ, தப்புநிறை நிறுக்காமலோ, குறைஅளவு அளக்காமலோ இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? அதுபோலவே, கைத் தொழிலாளிகளும் தங்கள் ஆயுதங்களிடத்தில் வெகுபக்தியாய் அவைகளை சந்தனம், குங்குமம், பொட்டு வைத்து போட்டுவிழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நடந்து கொள்கின்றார்கள் என்றாவது அல்லது அவர்களுக்கு தாராளமாக தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்வதற்கு இல்லாமலே இருக்கின்றார்கள்.

அதுபோலவே, புத்தகங்களையும், பென்சிலையும் கிழிந்த காகிதக் குப்பைகளையும் வைத்து சந்தனப் பொட்டு இட்டு பூசை செய்கிறார்களே அல்லாமல், காலோ கையோ பட்டுவிட்டால் தொட்டு கண்ணில் ஒத்திக் கும்பிடுகின்றார்களேயல்லாமல், நமது நாட்டில் படித்த மக்கள் 100க்கு 5 பேர்களுக்குள்ளாகவே இருந்து வருகின்றார்கள். இவ்வளவு ஆயுத பூசை செய்தும், சரஸ்வதி பூசை செய்தும், இவ்வளவு விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் கதி என்னவாயிற்று? நமது வியாபாரிகள் நிலை என்ன? எவ்வளவு பேர் நஷ்டமடைந்து வருகிறார்கள். நமது தொழிலாளர்கள் தொழில் இல்லாமல் பிழைப்புக்காக வேறு நாட்டிற்குக் குடிபோகின்றார்கள்?

அது நிற்க, வருடா வருடம் சரஸ்வதி பூசை செய்துவரும் நம் நாட்டில், நம் மக்களில் 5 பேர்களே படித்திருக்கிறார்கள். அதிலும், சரஸ்வதியின் இனத்தைச் சேர்ந்த பெண்களில் ஆயிரத்திற்கு ஒன்பது பேரே படித்திருக்கிறார்கள். இதன் காரணமென்ன?

நாம் செய்யும் பூசைகளை சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் பிரமனால் உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு, அந்த பிரமராலேயே மோகிக்கப்பட்டு அவளுடன் இன்பமனுபவிக்க அவளை அழைக்கையில் அவள் பிரமனை தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண் மான் உரு வெடுத்து ஓடவும், பிரமன் தானும் ஒரு ஆண் மான் உருவெடுத்து அவளைப் பின்தொடர்ந்து ஓடவும் சிவன் வேடன் உருவெடுத்து ஆண்மானைக் கொல் லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவ பிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து பிரமனுக்கு மனைவியாக சம்மதித்ததாகவும் சரஸ்வதி உற்ப வக்கதை பெற்றெடுத்த தன் தகப் பனையே மணந்து கொண்டவள் ஆகிறது.

மற்றொரு கதை சரஸ்வதியின் உற்பவத்தை குறித்து மற்றொரு கதையின்படி சரஸ்வதி பிரம்மாவுக்கு பேத்தி ஆகிறது அதாவது பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஆசைப்பட்ட போது வெளியான இந்திரியத்தை ஒரு குடத்தில் விட்டு வைக்க, அக்குடத்திலிருந்து அகத்தியன் வெளியாக அவ்வகத்தியன் சரஸ்வ தியைப் பெற்றான் என்று சொல்லப் படுகிறது. இதனால் பிரம்மனுக்கு சரஸ் வதி மகன் வயிற்றுப் பேத்தி ஆகிறாள்.

எனவே, சரஸ்வதியின் பிறப்பும், வளர்ப்பும், நடவடிக்கையும் பார்ப்பன புராணப்படி மிக்க ஆபாசமும் ஒழுக்க ஈனமும் ஆனதாகும்.
நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை மக்கள் எதற்காக பூசை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமாதலால் வித்தையின் பயன் தொழிலென்றும், தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் கருதிக்கொண்டு சரஸ்வதி பூசை என்றும் ஆயுத பூசை என்றும் ஒரு நாளைக் குறித்துவைத்துக் கொண்டு அந்த நாளை விடுமுறையாக்கி வைத்துப் பூசை செய்கிறார்கள்.

இந்தப் பூசையில் அரசன் தனது ஆயுதங்களையும் வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள் தராசு, படிக்கல், மரக்கால், படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும், தொழிலாளர்கள் தங்கள் தொழில் ஆயுதங்களையும் இயந்திர சாலைக்காரர்கள் இயந்திரங்களையும், மாணாக்கர் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகள் சேலை களையும், வாத்தியக்காரர்கள் தங்கள் வாத்தியக் கருவிகளையும் மற்றும் இதுபோல் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் இலட்சியத்துக்குப் பிழைப்புக்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை வைத்து பூசை செய்கிறார்கள்.

இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும்படிகளும் போய், பூஜை, ஓய்வு முதலிய ஆடம் பரங்களுக்காக விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் கதி என்னவாயிற்று? நமது வியாபாரிகள் நிலை என்ன? எவ்வளவு பேர் நஷ்டமடைந்து வருகிறார்கள்! நமது தொழிலாளர்கள் தொழில் இல்லாமல் பிழைப்புக்காக வேறு நாட்டிற்கு குடிபோகின்றார்கள்? நாம் செய்யும் பூஜைகளை சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்க வில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விசயங்களுக்கும் ஒன்றும் சம்பந்தமில்லையா? அல்லது சரஸ்வதி என் கின்ற ஒரு தெய்வமே பொய்க் கற்பனையா? என்பவைகளாகிய இம் மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்க வேண்டும்.

என்னைப் பொறுத்த மட்டில் இவை சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம். வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ கல்வி தெய்வம் என்கிற எண்ணமோ அறவே இல்லை.

அன்றியும் நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதியாய் கருதி தொட்டு, கண்ணில் ஒத்திக் கொண்டும் வருகிறோம். நமக்கு கல்வி இல்லை ஆனால் வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும் அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண் பெண் கள் படித்திருக்கிறார்கள். உண்மையில் சரஸ்வதி என்ற ஒரு தெய்வமிருக்கு மானால் பூசை செய்பவர்களை தற்குறிகளாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்திவாய்ந்த அறிவாளிகளாகவும் கல்விமான்களாகவும் செய்யுமா என்பதை யோசித்துப்பாருங்கள்.

யுத்த ஆயுதம் கைத்தொழில் ஆயுதம் வியாபார ஆயுதம் ஆகியவை உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால், அதை பூசை செய்யும் நாடு அடிமைப்பட்டும், தொழிலற்றும் வியாபாரமற்றும், கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை கனவிலும் கருதாதும் சரஸ்வதி பூசை செய்கிறவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டு மிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்தரத்துடனும், தொழிலாளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப்பாருங்கள்.

இந்த பூசையின் மூலம் நமது முட் டாள் தனம் எவ்வளவு வெளியா கின்றது பாருங்கள்.

ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது, இதற்காக மக்கள் பணம் செலவு செய்வது, நேரம் செலவு செய்வது, அறிவு செலவு செய்வது பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள், சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை பொரி சுண்டல் வடை, மேளவாத்தியம், பார்ப்பனர்களுக்கு தட்சனை சமாராதனை, ஊர்விட்டு ஊர்போய் ரயில் சார்ஜ் ஆகிய இவை எவ்வளவு செலவாகிறது.

இவை எல்லாம் யார் வீட்டுப் பணமா? நாட்டின் செல்வமல்லவா? ஒரு வருடத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும் நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்கு பார்த்தால் மற்ற பண்டிகை, உற்சவ புராணிய அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கிவிடும். இதை எந்தப் பொரு ளாதார இந்திய தேசீய நிபுணரும் கணக்குப்பார்த்ததே இல்லை.

தந்தைபெரியார் - “விடுதலை” 13.10.1950

சரஸ்வதி பூஜை என்பது என்ன? - தந்தை பெரியார் - - 20.10.1929

சரஸ்வதி பூஜை என்பது என்ன? - தந்தை பெரியார்


சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை! கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு, நம்மை படிப்பு நுகர முடியாத மக்குகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின் படியே மிக்க ஆபாசமானதாகும்.  அதாவது சரஸ்வதி என்கின்ற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு அந்த பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில் அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி அதற்கு உடன்படாமல் பெண் மான் உரு எடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் வேடன் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேடம் உருவெடுத்து ஆண் மானைக்கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மனுக்கு மனைவியாக சம்மதித்தாக சரஸ்வதி உற்பவக்கதை சொல்லுகிறது.

அதாவது தன்னை பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது. மற்றொரு விதத்தில் பிரம்மாவுக்கு பேத்தி என்று சொல்லப்படுகின்றது. அதாவது பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின்மீது  ஆசைப்பட்டபோது வெளியான இந்திரீயத்தை ஒரு குடத்தில் விட்டு வைக்க, அக்குடத்திலிருந்து அகத்தியன் வெளியாகி அவ்வகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகின்றது. இதனால் பிரம்மனுக்கு சரஸ்வதி மகன் வயிற்றுப் பேத்தி ஆகிறாள். எனவே, சரஸ்வதியின் பிறப்பும், வளர்ப்பும், நடவடிக்கையும் மேற்படி பார்ப்பனப் புராணப்படி மெத்த ஆபாசமும், ஒழுக்க ஈனமுமானதாகும்.

நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூஜை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமாதலால்  வித்தையின் பயன் தொழி லென்றும், தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் ஒரு நாளைக் குறித்துக்கொண்டு அந்த நாளை விடுமுறையாக்கி புஸ்தகங்களையும், ஆயுதங்களையும் வைத்து பூஜை செய்கிறார்கள். இந்த பூஜையில் அரசன் தனது ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள், திராசு, படிக்கல், அளவு மரக்கால், படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும், தொழிலாளிகள் தங்கள் தொழில் ஆயுதங்களையும், இயந்திர சாலைக்காரர்கள் தங்கள் இயந்திரங்களையும், மாணாக்கர்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும், சீலைகளையும், நகைகளையும், வாத்தியார்கள் வாத்தியக் கருவிகளையும் மற்றும் இதுபோலவே ஒவ்வொருவர்களும் அவரவர்கள் லட்சியத்திற்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை வைத்து பூஜை செய்கின்றார்கள். இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும்படிகளும் போய் பூஜை செலவு முதலிய ஆடம்பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தை செலவு செய்தும், போதாவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட யாதொரு நன்மையும் ஏற்படுவதாக சொல்லுவதற்கே இல்லாமல் இருக்கின்றது.
ஆயுதத்தை வைத்து பூஜை செய்து வந்த,- வருகின்ற அரசர்களெல்லாம் இன்றைய தினம் நமது நாட்டில் ஆயுதத்தை வைத்து பூஜை செய்யாத வெள்ளைக்கார அரசனுடைய துப்பாக்கி முனையில் மண்டி போட்டு சலாம் செய்துகொண்டு இஸ்பேட் ராஜாக்களாக இருந்து வருகின்றார்களே ஒழிய ஒரு அரசனாவது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகிய பூஜையின் பலத்தால் தன் காலால் தான் தைரியமாய் நிற்பவர்களைக் காணோம்.
சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில்  ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து  பொய் கணக்கு எழுதாமலோ, தப்பு நிறை நிறுக்காமலோ, குறை அளவு அளக்காமலோ இருக்கிறார் என்று சொல்ல முடியாது. அதுபோலவே கைத் தொழிலாளிக்கும் தங்கள் ஆயுதங்களிடத்தில்  வெகு பக்தியாய் அவைகளை கழுவி, விபூதி, சந்தனம், குங்குமப் பொட்டு முதலியவைகள் போட்டு விழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நடந்துகொள்கின்றார்கள் என்றாவது  அல்லது அவர்களுக்கு தாராளமாய் தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்லுவதற்கு இல்லாமலே இருக்கின்றார்கள். அது போலவே புஸ்தகங்களையும், பென்சிலையும், கிழிந்த காகிதக் குப்பைகளையும், சந்தனப் பொட்டு போட்டு பூஜை செய்கின்றார்களே அல்லாமல் காலோ, கையோபட்டுவிட்டால் தொட்டு கண்ணில் ஒத்திக் கும்பிடுகின்றார்களே அல்லாமல் நமது நாட்டில் படித்த மக்கள் 100-க்கு 5 பேர்களுக்குள்ளாகவே இருந்து வருகின்றார்கள்.
இவ்வளவு ஆயுத பூஜை செய்தும், சரஸ்வதி பூஜை செய்தும், இவ்வளவு விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் அடிமைகளாக இருக்கின்றார்கள், நமது வியாபாரிகள் நஷ்டமடைந்து கொண்டு வருகிறார்கள். நமது தொழிலாளர்கள் தொழிலில்லாமல் பிழைப்பைக்  கருதி வேறு நாட்டிற்கு குடி போகின்றார்கள். நமது மக்கள் நூற்றுக்கு அய்ந்து பேரே படித்திருக்கிறார்கள். சரஸ்வதியின் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் ஆயிரத்திற்கு ஒன்பது பேரே படித்திருக்கிறார்கள்.

இதன் காரணம் என்ன?

நாம் செய்யும் பூஜைகளை சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்தமில்லையா? அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய் கற்பனையா? என்பவையாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்கவேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம். வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ, கல்வி தெய்வம் என்கின்ற எண்ணமோ சுத்தமாய் கிடையாது.
அன்றியும் நாம் காகிதத்தையும் எழுத்தையும்  சரஸ்வதியாய் கருதி தொட்டுக்  கண்ணில் ஒத்திக் கொண்டும், நமக்கு கல்வி இல்லை. ஆனால், வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும், அவர்களில் நூற்றுக்கு  நூறு ஆண்களும், நூற்றுக்கு அறுபது பெண்களும் படித்திருக்கிறார்கள். உண்மையிலேயே சரஸ்வதி என்று ஒரு தெய்வமிருந்திருக்குமானால் பூசை செய்பவர்களை தற்குறிகளாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும், கல்வி மான்களாகவும் செய்யுமா என்பதைத் தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.

உண்மையிலேயே யுத்த ஆயுதம், கைத்தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகளுக்கு உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால் அதை பூசை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும், தொழிலற்றும், வியாபார மற்றும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை கனவிலும் கருதாததும் சரஸ்வதி பூசை செய்கின்றவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள். இந்தப் பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின்றது பாருங்கள்.

ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது, இதற்காக ஜனங்கள் பணம் செலவு  செய்வது, பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள், சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை, பொரி, சுண்டல், வடை, மேள வாத்தியம் வாழைக் கம்பம், பார்ப்பனர்களுக்கு  தட்சணை, சமாராதனை, ஊர்விட்டு ஊர்போக ரயில் சார்ஜ் ஆகிய இவைகள் எவ்வளவு செலவாகின்றது என்பதை எண்ணிப் பாருங்கள். இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா என்றுதான் கேட்கின்றேன். ஒரு வருஷத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும், நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்குப் பார்த்தால் மற்ற பண்டிகை, உற்சவம், புண்ணிய தினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கி விடும். இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை.

ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது - 20.10.1929 "குடிஅரசு" இதழில் வெளியானது.

Monday, 18 September 2017

RSS-ஐ தமிழ்நாட் டிற்குள் நுழைய விடாமல் வாசற்படியிலேயே அடித்துக்கொல்ல வேண்டும்.

உஷார் !உஷார்!! உஷார்!!! பார்ப்பனர்களின் புதிய தந்திரம்

இந்தியாவின் நன்மையின் பொருட்டும் மக்களின் சம உரிமையின் பொருட்டும் மகாத்மா காந்தியால் ஏற்படுத்தப்பட்ட நிர்மாணத் திட்டமும் பகிஷ்காரத் திட்டமும் கொண்ட ஒத்துழையாமையை காங்கிரசின் மூலம் நடத்தப்பட்டு வந்த காலத்தில் நாட்டில் சுயநலம் படைத்த பார்ப்பனர்களும் ஆங்கிலம் படித்த அடிமைகளும் தவிர மற்றவர்களுக்குள் ஒற்றுமையும் நம்பிக்கையும் கூடிய வரையில் கட்டுப்பாடும் இருந்து வந்தது என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். அதற்கு முன் இருந்து வந்த வகுப்பு உணர்ச்சி களுக்கும், வகுப்புத் தந்திரங்களுக்குங்கூட பலம் குறைந்திருந்தது என்பதை யும் யாரும் மறுக்க மாட்டார்கள்.

அவ்விதமிருந்த தேசத்தை, அது முன்னேறி நிர்மாணத் திட்டமும் பகிஷ்காரத் திட்டமும் வெற்றி பெற்று மக்கள் சமத்துவமும் சுதந்திரமும் அடைந்து விட்டால் ‘வாழ முடியாத’ வகுப்பார்களாகிய வஞ்சகப் பார்ப் பனர்களும் ஆங்கிலம் படித்த அடிமைகளும் இவற்றை எதிர்த்துப் பலவித சூழ்ச்சிகளால் கூடவே இருந்து குடியைக் கெடுத்து தேசத்தின் மக்களை பழய படி உயர்வு தாழ்வு வித்தியாசத்திலும் அடிமை வாழ்வில் பிழைக்க வேண் டிய அவசியத்திலும் கொண்டுவந்து விட்டு விட்டார்கள். இதன் பலனாய் இப்போது தேசத்தில் எங்கு பார்த்தாலும் பழயபடி வகுப்பு உணர்ச்சிகள் பெருகி, ஒவ்வொரு வகுப்பாரும் தங்கள் தங்கள் சுயமரியாதையையே சுதந் திரம் என்பதாகக் கொண்டு, தங்கள் தங்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபடு கிறார்கள். இப்படிப் பாடுபடுவதானது சாது ஜனங்களை ஏமாற்றி ஏற்கனவே பல சுதந்திரங்களும் சௌகரியங்களிலும் செய்து வைத்துக் கொண்டிருக்கிற பார்ப்பனர்களுக்கு தங்கள் அதிகாரமும் அதிக சுதந்திரமும் போய்விடுமே என்கிற கவலை ஏற்பட்டு, பொதுமக்கள் அடையும் சமத்துவத்திற்கும் முற் போக்கிற்கும் முட்டுக்கட்டையாய் இருக்க வேண்டியது. (நமது பார்ப்பனர் களின் வேதக் கடமையாய்ப் போய்விட்டது. இதற்காக ஆங்காங்குள்ள பார்ப்பனர்கள் ஒன்று கூடி எவ்வளவோ சூழ்ச்சிகளும் பகீரதப் பிரயத் தனங்களும் செய்து பார்க்கிறார்கள். உதாரணமாக வர்ணாசிரம சபை, இந்து மகாசபை, சங்கதன் சுத்தி, சுயராஜ்யக் கக்ஷி, பெங்கால் பேக்ட், இந்தி பாஷை, இரட்டை ஆக்ஷியை ஒழித்தல் ஆகிய இவ்வளவு இயக்கங்களும் பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும் ஆங்கிலம் படித்த ஒரு சிலர் வயிறு வளர்க் கவும் பொதுமக்கள் சமத்துவமும் சுயமரியாதையும் பெறுவதையும் பிற்பட்ட வர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் ஆகியவர்கள் விடுதலை பெற்று முன்னேறுவதைத் தடுக்கவும், முட்டுக்கட்டை போடவுமே ஏற்படுத் திக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் இப்போது வர வர பாமர ஜனங்கள் இவைகளை உணர்ந்து, இப் பார்ப்பனர்களின் சூழ்ச்சி வலையில் சிக்காமலும், சிக்கினவர்களும் சூழ்ச்சியறிந்து வெளிவருவதாலும் நமது பார்ப்பனர்களுக்கு இதுவரையில் ஏற்பட்டிருந்த கவலையை விட இப்போது கொஞ்சம் அதிகமான கவலை ஏற்பட்டு இதற்கு வழி தேடுகிறார்கள். தற்காலம் நமது நாட்டில் பார்ப்பனர்கள் ஆதிக்கத்தில் இருக்கும் எவ்வித ஸ்தாபனங்களுக்கும் பாமர ஜனங்களிடையில் மதிப்பில்லாமல் போய் விட்டபடியால், புதிதாய் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கி அதன் மூலம் ஜனங்களை மயக்க நமது பார்ப்பனர்கள் புதியதொரு தந்திரம் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

அது என்ன வென்றால், “தேசீய ஒற்றுமைச் சங்கம்” என்பதாக ஒன்றைப் புதிதாகத் தாங்களே சிருஷ்டித்து அதில் இரண்டொரு ராஜீய விளம்பரக்காரர்களிடம் கையெழுத்து வாங்கி தாங்களும் கையெழுத்திட்டு இன்னும் பல சுயநலத்திற்காக எதையும் தியாகம் செய்யத்தக்க “தியாக புருஷர்களின்?” கையெழுத்தையும் வாங்கப் போகிறார்கள்.

இந்து மகாசபை போலவே இச்சங்கத்தை ஒவ்வொரு ஊரிலும் ஸ்தா பிப்பார்கள். அதில் வகுப்பு நலன் நாடுபவர்கள் யாவரும் சேர்த்துக் கொள் ளப் படமாட்டார்களாம். இது ஒரு புதிய தந்திரமென்றே சொல்லுவோம்.

தமிழ்நாடு சார்பாய், ஸ்ரீமான்கள் சீனிவாச சாஸ்திரிகளும் சீனிவாசய் யங்காரும் கையெழுத்திட்டிருக்கிறார்களாம். இந்த இரண்டு பெரியார்களும் வகுப்பு உணர்ச்சியே இல்லாதவர்கள் போலும்! சமத்துவமே ஒரு உருவாய் வந்தவர்கள் போலும்! இருவர்களும் மகாத்மாவையும் ஒத்துழையாமையை யும் ஒழித்ததற்குக் கொஞ்சங் குறைய முழுப் பொறுப்பாளிகள். பண்டித மாள வியா அவர்களும் இதில் சேர்ந்து விட்டால் மூவரும் முழுப் பொறுப் பாளிகளாய் விடுவார்கள்.

இந்த சிகாமணிகள் தேச நன்மைக்குப் பாடுபடுகிறவர்களாம். இந்தியா வின் முட்டாள் தனத்தாலும், அடிமைத் தனத்தாலும் அன்னியர்க ளுக்கு ஒற்றர்களாயிருப்பதாலுமே வாழ வேண்டிய இந்த “பிரபுக்கள்” – இந்தியா சமத்துவமும் சுதந்திரமும் அடைந்த உடன் இந்த நாட்டை விட்டு ஓடவோ அல்லது இந்தியாவிற்கு வேற்றரசரைக் கூட்டி வரவோ வேண்டிய அவசிய முள்ள இந்த ‘வீரர்கள்’ இந்தியாவின் நன்மையை நாடுவதற்கு எப்படி அருகர் களாவார்கள்? இவர்கள் எப்படி நம்முடைய பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ள யோக்கியதை உடையவர்கள் ஆவார்கள்? ராஜீய – மத – வகுப்பு உணர்ச்சி உள்ளவர்களே இதில் சேரக்கூடாது என்று சொல்லி ஒரு சங்கம் ஸ்தாபித்தால், அதில் யார் போய்ச் சேரக்கூடும்? ராஜ்ஜியத்தை அன்னியனுக்குக் காட்டிக் கொடுக்கத் தயாராயிருக்கிறவனும், மதம் இல்லாத வனும், தான் எந்த வகுப்பு என்று தெரிந்து கொள்ள முடியாதவனும் அல்லா மல் வேறு யாராவது இந்த சங்கத்தில் சேரக்கூடுமா என்பது நமக்கு விளங்க வில்லை. மனிதனாய்ப் பிறந்த ஒருவன் தனது தேசாபிமானம் இல்லாமல் எப்படி இருக்க முடியும்? அது போலவே தனது மதாபிமானமும் குலாபி மானமும் இல்லாமல் எப்படி இருக்க முடியும்? இம் மூன்றையும் விட்டுவிட்டு இப்பார்ப்பனர்களிடம் வந்து ஒருவன் அனுபவிக்கப் போகிற லாபம் என்ன? இச்சங்கம் என்பது தற்காலம் ஒவ்வொரு மதஸ்தர்களுக்கும் ஒவ்வொரு வகுப்பாருக்கும் ஏற்பட்டிருக்கும் சுயமரியாதை உணர்ச்சியைக் கொல்ல ஏற் பட்ட சங்கமே அல்லாமல் வேறல்லவென்றே கூறுவோம். ஆதலால் நமது முஸ்லீம் சகோதரர்களே! கிறிஸ்துவ சகோதரர்களே! பார்ப்பனரல்லாத இந்து சகோதரர்களே! இம் மாய்கையில் சிக்கிக் கொள்ளாமல் உஷாராயிருக்க வேண்டும் . இந்து மகாசபையை எப்படித் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் மண்டையிலடித்து ஒழித்தோமோ, அதுபோலவே இத் தேசீய ஐக்கியச் சங்கம் என்னும் பார்ப்பன அயோக்கியச் சங்கத்தைத் தமிழ்நாட் டிற்குள் நுழைய விடாமல் வாசற்படியிலேயே அடித்துக்கொல்ல வேண்டும்.

இது சமயம் தமிழ் மக்களின் தலையெழுத்து எவ்வளவு மானக் கேடானதாகவும் இழிவானதாகவும் இருக்கிறது என்பதை சற்று நிதானமாய்க் கவனித்துப் பாருங்கள். கோடிக்கணக்கான தமிழ் மக்களுக்கு தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் யார்? ஸ்ரீமான்களான எஸ். சத்திய மூர்த்தி அய்யர்,எ. ரெங்கசாமி அய்யங்கார், எம்.கே.ஆச்சாரியார், எஸ்.சீனி வாசய்யங் கார், வி.எஸ்.சீனிவாச சாஸ்திரிகள் முதலிய பார்ப்பனர்களே. இவர்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? இவர்கள் பிறப்பு என்ன? இவர் கள் ஒழுக்கம் என்ன? இவர்கள் வளர்ப்பு என்ன? இவர்கள் ஜீவனம் என்ன? எந்த வகையில் இப்பொழுது மனிதர்களாய் வாழ்கிறார்கள்? என்ன எண் ணத்தின்மேல் நமக்கு இவர்கள் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளு கிறார்கள்? நமக்குத் தலைவர்களாய் இருக்க இவர்களுக்கு என்ன பாத்திய தையும் யோக்கியதையும் இருக்கிறது? பிச்சைக்கு வந்தவன் பெண்டுக்கு மாப்பிள்ளையானது போல் நமது நாட்டைக் காட்டிக் கொடுத்ததல்லாமல், அரசையும் போக போக்கியத்தையும் பாழாக்கியதல்லாமல் நமது சுயமரியா தையை அடியோடு துலைத்ததல்லாமல், நமக்குள் ஒற்றுமைக்கே மார்க்கமில் லாமல் செய்ததோடல்லாமல், நம்மைத் தாழ்ந்தவர்கள், தெருவில் நடக்கக் கூடாதவர்கள் கண்ணில் பார்க்கக் கூடாதவர்கள் , கூடப் பேசக் கூடாதவர்கள், சுவாமியினிடம் போகக் கூடாதவர்கள், கோயிலுக்குள் நுழையக் கூடாதவர் கள், தீண்டப்படாதவர்கள், தாசி மக்கள், வேசி மக்கள், தங்கள் வைப்பாட்டி மக்கள், சண்டாளர்கள் என இப்படிப் பல மாதிரியாக ஆக்கி வைத்துக் கொண்டதோடல்லாமல் இன்னமும் நம்மைக் கெடுத்து ‘நமது இரத்தத்தை’ உறிஞ்சிக்கொண்டிருக்கும் இந்தக் கூட்டம் கொஞ்சமேனும் அச்சமும் நாணமும் இல்லாமல் இனியும் நமக்குத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளவும் நாம் இவற்றைப் பொறுத்துக் கொள்ளவும் இருப்பதென்றால், நமக்கு அறிவு உணர்ச்சி ஆண்மை ரத்தம் இருக்கிறதா என்றுதான் கேட்கி றோம். ஆதலால் இந்து முஸ்லீம் கிறிஸ்துவ சகோதரர்களே! பார்ப்பனப் பூண்டு கலந்த எந்தச் சங்க மானாலும் எந்த ஸ்தாபனமானாலும் அதைத் திரும்பிக்கூடப் பார்க்காதீர்கள் ! மோக்ஷமானாலும் சரி நரகமானாலும் சரி, உங்கள் காலைக் கொண்டு நீங்கள் நில்லுங்கள். உங்களிடம் பார்ப்பனர்கள் உங்களை தங்களோடு சேரும் படிக்கோ அல்லது தங்களை உங்களுடன் சேர்த்துக் கொள்ளும் படிக்கோ வந்து கேட்பார்களேயானால் முதலாவதாக இந்து மகாசபையையும் வர்ணா சிரம சபையையும் ஒழித்துக் கதவடைத்து விட்டு வரச் சொல்லுங்கள்! தாங்கள் கடவுளின் முகத்திலிருந்து பிறந்தவர்கள், உயர்ந்தவர்கள் என்றும், நாம் அவர்கள் வைப்பாட்டி மக்கள், தாழ்ந்தவர்கள், அடிமைகள் என்று சொல்லும் சாஸ்திரங்களையும் ஆதாரங்களையும் நெருப்பில் போட்டுப் பொசுக்கி சாம்பலாக்கி விட்டு வரச் சொல்லுங்கள்! அதை யாராவது இனிமேல் வைத்திருந்தால் அவர்களைக் கழுவிலேற் றுவது என்றும் தூக்கில் போடுவது என்றும் சட்டம் செய்து கொண்டு வரும் படி சொல்லுங்கள்! ஒரு காலத்தில் அவர்கள் நம்மை இப்படிச் செய்துதான், அதாவது நம்முடைய பழைய ஆதாரங்களையும் நமது பெருமைகளையும் கூறும் நூல்களைப் பொசுக்கி அவர்களுக்கு சாதகமாகப் பலவித சட்டங் களைச் செய்து நம்மை இவ்விழிந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டு தாங் கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லும்படி செய்து கொண்டார்கள். நாம் அப்படிச் செய்யவில்லை. ஆனால் நாம் கேட்பது என்ன? சமத்துவமாக இருக்கச் சொல்லுகிறோம். “நீயும் சரி நானும் சரி, இருவ ருக்கும் சம உரிமை உண்டு” என்றுதான் சொல்லும்படி கேட்கிறோம். இந்து முஸ்லீம் கிறிஸ்துவ சகோதரர்களே! நல்ல சமயத்தைக் கைவிட்டு விடாதீர்கள்! பார்ப்பனரின் பசப்பு வார்த்தையில் ஏமாந்து விடாதீர்கள்! உங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள இத்தருணம் தப்பினால் இனி எத்தருணமும் வாய்க்காது! இதுதான் சமயம்! மகாத்மா காந்தியை நினையுங்கள்! மறுபடியும் அவரை உங்களது தலைவராயிருந்து இழிதன்மையையும் தாழ்மை நிலைமையையும் அடிமைத்தனத்தையும் போக்கிச் சுயமரியாதையையும் சமத்துவத்தையும் விடுதலையையும் சம்பாதித்துக் கொடுக்கச் சொல்லுங்கள்! இவைகளுக்காக உங்கள் உடல், பொருள், ஆவி மூன்றையும் தத்தம் செய்யத் தயாராயிருக்கிறோம் என்று உங்கள் சுத்தமான இரத்தத்தினால் பேனாவைத் துவைத்து உறுதி மொழிக் கையெழுத்திட்ட விண்ணப்பம் அனுப்புங்கள்! வருவார்! வருவார்!! வருவார்!!! வந்து வினை தீர்ப்பார்!!!!

குடி அரசு – தலையங்கம் – 15.08.1926

Sunday, 17 September 2017

தந்தை பெரியார் 95-வது பிறந்தநாள் செய்தி

தந்தை பெரியார் 95-வது பிறந்தநாள் செய்தி


எனது பிறந்தநாள் செய்தி
எனது 95ம் ஆண்டு பிறந்தநாள் துவக்கத்துக்கு வழமைபோல் ஆண்டு மலரில் ஒரு கட்டுரை எழுதவேண்டி யிருக்கிறது. அதை முன்னிட்டு இக்கட்டுரை எழுதுகிறேன். அப்படி எழுதப்படும் இக்கட்டுரை என்னால் ஆண்டு மலர்களுக்கு எழுதப்படும் கட்டுரைகளில் இதுவே கடைசியான கட்டுரையாக இருந்தாலும் இருக்கலாம் . ஏன் இப்படி எழுதுகிறேன் என்றால், அடுத்த ஆண்டு மலர் எழுதப்பட வேண்டிய காலத்தில் நான் இருப்பேனோ, இல்லையோ என்கிற பிரச்னை மாத்திரமல்லாமல், எழுதும்படியான வாய்ப்பு இருக்குமோ, இருக்காதோ என்பதே முக்கிய காரியமாகும்.
ஏனெனில், இன்னும் நாம் இருப்பது போலவே அதாவது, இந்திய ஆட்சி என்பதற்குள் பிரஜையாகவும், சமுதாயத்தில் நாலாஞ் சாதி (சூத்திர மக்களாகவும்) சட்டப்படி, சாஸ்திரப்படி பார்ப்பானின் தாசி மகன் என்னும் பெயருடன் நமது தாய்மார்கள் பார்ப்பானின் தாசிகளாவும் இருக்கும் தன்மையாலேயே இருப்போமா என்கின்ற கருத்தைக்கொண்டே இப்படி எழுதுகிறேன்.
நம்மில் பலர் சிறையில் இருக்க நேரிடலாம்

இந்திய அரசியல் சட்டப்படி நாம் இந்திய ஆட்சியில் பிரஜையாக இருக்கும் வரை இந்துவாய் அதாவது, கிறிஸ்துவனாகவோ, முஸ்லீமாகவோ நாம் மதம் மாற்றிக் கொள்ளாதவரை நாம் நமது பண்டார சன்னதிகள் உட்பட பவுத்தனுக்கும், ஜெயினனுக்கும் சமானாக இருக்கும்படியாக இருந்தாலும் பகுத்தறிவுவாதியாக இருந்தாலும், வேறு எந்தப் பெயரில் வாழ்ந்து வருவபவனாக இருந்தாலும் சூத்திரர்களாகத்தான், பார்ப்பானின், தாசி மகனாகத்தான் இருந்தாக வேண்டும்.
இது தான் இன்றைய இந்திய அரசியல் சட்டமாகும். இந்த சட்டத்தைப் திருத்தவோ மற்றவோ நம் மக்களுக்கு ஒருநாளும் சக்தியோ, உரிமையோ ஏற்படும் என்று கருதவே முடியாத
நிலையில் இருக்கிறோம். அதுமாத்திரமல்லாமல் இந்திய ஆட்சியில் இருந்து தமிழ்நாட்டை விலக்கிக்கொள்ள முயற்சி செய்தே ஆகவேண்டிய ஒரு கட்டாயமான-நிர்பந்தமான நிலையில் இருக்கிறோம். இந்த முயற்சியில் நாம் இந்திய ஆட்சியிலிருந்து விலகிக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுமா என்பது பற்றி நமக்கு முடிவு செய்துகொள்ள முடியாமல் இருந்தாலும் இம்முயற்சியில் நாம் பலர் சிறையில் இருக்க நேரிடலாம் என்கிறதாலேயே தான் இந்தப்படி எழுதுகிறேன்.

உடனடியாக விடுதலை முயற்சியில் ஈடுபடவேண்டும்

நமக்கு இன்றைய இந்திய ஆட்சியில் அரசியல் பிரச்னை எப்படி இருந்தாலும், சமுதாயப் பிரச்னையில் நாம் இன்று இருக்கும் இழிதன்மையில் இருந்து, அதாவது சூத்திரனாக, தாசி மகனாக நம் தாய்மார்கள் தாசிகளாக சட்டப்படி, சாத்திரப்படி இருக்கும் நிலைமையை மாற்றிக்கொள்ள முயற்சிக்காமல் நாம் இருக்க முடியுமா ?
இந்தியாவில் நாம் இருக்கும் வரை இந்துவாகத்தான் இருந்து ஆகவேண்டும். இந்து என்றாலே, முஸ்லீம், கிறிஸ்துவம் தவிர மற்ற யாவருமே சூத்திரர் தாசிமக்கள் தான் என்று இருப்பதால், ஏதாவது முயற்சி செய்துதான் ஆகவேண்டும்.
நம் மக்கள் எளிதில் மதம் மாறமாட்டார்கள். மதம் மாறுவதை இழிவாய்க கருதுபவர்களாவார்கள்.
ஆதலால் நாம் உடனடியாக விடுதலை அதாவது இந்தியக் கூட்டாச்சியிலிருந்து விலகி சுதந்திரத் தமிழ் நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இம்முயற்சிக்கு இன்றைய நம் தி.மு.க. ஆட்சி இணங்கும் என்று கருதமுடியாது. ஏனெனில், தி.மு.க. ஆட்சி விரும்புவதெல்லாம் இந்திய கூட்டாச்சி ஆதிக்கத்திற்கு உள்பட்ட மாகாண சுயாட்சி தான் அது விரும்புகிறது.
மாகாண சுயாட்சி என்றால், அரசியலில் தான் ஏதோ சில மாறுதல்களைச் செய்து கொள்ள முடியுமே தவிர சமுதாயத் துறையில் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஒரு காரியமும் செய்ய முடியாது.

இந்து என்றால் சட்டப்படியான விளக்கம்
இந்திய அரசியல் சட்டத்தில் சமுதாய (மத) சம்பந்தமான காரியங்களைப் பற்றி பழைய மனுதர்ம நிலையை மிகமிகப் பலப்படுத்திக் கொண்டபடியிருக்கிறது. உதாரணமாக சொல்ல வேண்டுமானால், கர்ப்பகிரகத்திற்குள் சூத்திரன், அதாவது பண்டார சன்னமி உட்பட இந்து என்ற தலைப்பில் வரும் எவருமே, பார்ப்பான் தவிர்த்து எவருமே செல்ல முடியாதென்று உயர்நீதி (சுப்ரீம்) மன்ற தீர்ப்பு இருப்பதினாலும், இன்னும் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கென்று போகும் யாருமே தீண்டத்தகாதவர்கள் போல் வாயில்படிக்கு வெளியில்தான் எட்டி நிற்கவேண்டும் என்றால், மற்றபடி எதில் நாம் மாறுதலைக் காணமுடியும் ?
இதை அமுலில் இருக்கும் இந்து லா என்னும் சட்டத்திலும், பல உயர்நீதிமன்றங்களின் தீர்ப்பிலும், பார்ப்பனரல்லாத இந்து மக்கள் என்பவர்களைக் மிகமிக இழிவாகக் கூறி, நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இந்து என்னும் சொல்லுக்கு சட்டத்தில் கொடுத்திருக்கும் விளக்கம் என்னவென்றால்கிறிஸ்துவர்கள்-முஸ்லீம்கள் தவிர்த்த இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் இந்துக்கள் ஆவார்கள்இதன்படி நாத்திகன், பகுத்தறிவுவாதி, பரதேசி முதலிய சகலரும் இந்துக்கள் ஆகி சூத்திரர், பார்ப்பானின் தாசி மகன் என்று ஆகிவிடுகிறார்கள்.

சுயமரியாதை இயக்கத்தின் 50 வருட சாதனை

நான் முதலில், நான் இந்து அல்ல என்று சொல்லிவிட்டால் இழிவு நீங்கிவிடும் என்று தானட கருதினேன். பிறகு சட்டங்களைப் பார்க்க ஆரம்பித்த பிறகு கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் தவிர்த்த, இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் இந்துக்கள்-இந்துக்கள் என்றால் சூத்திரர்கள், வேசி மக்கள் என்று பல இடங்களில் காணப்படுகின்றன. ஆதலாலேயே தீவிர முயற்சி எடுக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
இன்று நம் நாட்டில் இந்துக்கள் எல்லோருக்குமே அரசியலில்தான் முக்கியகவனம் இருக்கிறது. அன்றியும் நாட்டுப் பிரிவினை என்றால், எல்லா மக்களுமே பயப்படுகிறார்கள். காரணம் பதவி கிடைக்காதே என்கின்ற காரணம் மாத்திரமல்லாமல், சிறைக்குச் செல்ல வேண்டுமே என்று பயப்படு கிறார்கள், 50 வருட காலமாக சுயமரியாதை இயக்கம் சாதித்தது என்ன என்று பார்த்தால், சிறிது படிப்பு-பல பதவி உத்தியோகம் பெற நேர்ந்ததோடு அரசியலில் பார்ப்பனர் கொட்டத்தை நல்ல அளவுக்கு அடக்கிற்று என்பதல்லாமல் சமுதாயத் துறையில் உள்ள அடிப்படை இழிவு நல்ல அளவுக்கு பலம் பெற்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

பதினாயிரக்கணக்கில் பாட்ஜிக்கு ஆர்டர்

எனவே, நாம் சட்டத்தைப் பற்றி பயப்படாமலும், பதவி கிடைக்காதே என்று கவலைப்படாமலும், சுதந்திரத் தமிழ்நாடு பெற ஒவ்வொருவரும் முடிவு செய்துகொண்டு முன்வர வேண்டியது ஒவவொரு தமிழனுக்கும் அவசியமான காரியம் என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
சுதந்திரத் தமிழ்நாடு எனது இலட்சியம்
என்ற சொற்களை ஒவ்வொருவரும் இலட்சியச் சொல்லாகக் கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். புதினாயிரக் கணக்கில் பாட்ஜிக்கு ஆர்டர் கொடுத்து தயார் செய்து மக்களுக்கு வினியோகிக்க ஆசைப்படுகிறேன். பொது மக்களுக்கும் இதுவே இலட்சியச் சொல் (கூப்பாடாக)லாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பொது மக்களே ! இளைஞர்களே ! பள்ளி, கல்லூரி மாணவர்களே !மாணவிகளே ! 

உறுதி கொள்ளுங்கள் !

உறுதி கொள்ளுங்கள் !!
உறுதி கொள்ளுங்கள் !!!.

ஈவெராமசாமி

தந்தை பெரியார் 94-வது பிறந்தநாள் செய்தி

தந்தை பெரியார் 94-வது பிறந்தநாள் செய்தி


பிறந்தநாள் செய்தி
எனக்கு (நான் பிறந்த) நாளது செப்டம்பர் மாதம் 17-ம்
தேதியோடு, 93 ஆண்டு முடிவடைந்து, 94-ம் ஆண்டு முதல் நாள் தோன்றிவிட்டது.
93 ஆண்டு என்றால், நான் பிறந்து, மாதங்களில் 16 மாதங்கள், நாட்களில் 34045 நாட்கள் பிறைகளில் (அமாவாசைகளும்) 1635 ஏற்பட்டு மறைந்துவிட்டன. இனிமேலும் எத்தனை காலத்துக்கு வாழ்ந்தாலும், வாழ்வில் தேய்மான தான் காண முடியுமே ஒழிய வளர்ச்சி காண்பது என்பது (இயற்கையில்) முடியாத காரியமே.
நினைத்தேன் - சொன்னேன் - நடத்திக்காட்டினேன்.
என் வாழ்நாளில் நான், மற்றவர் (அனேகர்) கடவுள், மதம், சாஸ்திர, முன்னோர்கள் கருத்து என்பவைகளில், யாரும் நினைக்காததும், நினைத்தாலும் வெளியில் சொல்ல பயப்படுவதும், துணிந்து சொன்னாலும் செய்கையில் நடவாததும் நடத்திக்காட்ட முடியாததுமான காரியத்தை, எளியதாக நினைத்து, வெளியில் எடுத்துச் சொல்லி (பிரசாரம் செய்து) காரியத்திலும் நடந்து வந்ததோடு, ஒரளவுக்கு மற்றவர்களுக்கும் தெரியும்படி விளங்கும்படி, ஒரளவுக்கு நடத்திக்காட்டியும் வந்திருக்கின்றேன்.
இந்த நிலை உலகெல்லாம் பரவவேண்டும் என்ற எண்ணங் கொண்டு அதற்காக வாழ்கிறேன், என்ற எண்ணத்தில் இருந்து வருகிறேன். அப்படிப்பட்ட காரியம் (எண்ணம்) என்னவென்றால், தெய்வம் இல்லை, தெய்வசக்தி என்பதாக எதுவும் இல்லை, மனிதத்தன்மைக்கு மேற்பட்ட தெய்வசக்தி-தெய்வீகத் தன்மை என்பதாக எதுவுமில்லை அப்படிப்பட்ட தெய்வீகத்தனம் கொண்டவர்கள் என்பதாக யாருமே இல்லை , அப்படிப்பட்ட காரியம் என்பதாகவும் எதுவுமே இல்லை என்றும் திண்ணமாயக் கருதி, உறுதியான பணியாற்றியும் வந்திருக்கின்றேன் -வருகிறேன்.
மக்களுக்கு எந்த கெடுதியும் ஏற்படவில்லையே
இந்த எனத நிலையில், எனது 93 ஆண்டு வாழ்நாளில் எனக்கு யாதொரு குறைவும் சங்கடமும், மனக்குறைவோ, அதிருப்தியோ கூட ஏற்பட்டதேயில்லை. மேற்கண்ட எல்லா காரியங்களிலும், மற்றவர்கள் எளிதில் பெறமுடியாத அநேக ஏற்றங்களை சாதாரணமாகப் பெற்றிருக்கிறேன் , மக்களால் நல்ல அளவுக்கு மதிக்கப்பட்டும், பாராட்டப்பட்டும், விரும்பப்பட்டும், போற்றப்பட்டும் வந்திருக்கிறேன்.
இதனால் உலகக்கு-மக்களுக்கு யாதொரு கெடுதியும் ஏற்பட்டதில்லை என்பதோடு நாட்டுக்கும் மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் யாவருக்குமே நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டுவருகின்றன என்றே சொல்லலாம்.
நோயும் சாவும் மட்டும் ஏராளம்

நமது கருத்து வெளியீடும் பிரசாரமும் துவக்கப்பட்ட காலத்தில்
, நமது மக்களின் சராசரி ஆயுள் (வாழ்நாள்) பத்து ஆண்டேயாகும். கல்வியில் நமது மக்கள் 100க்கு 8 பேர், 10பேர் என எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் ஆவார்கள். ஏராளமான நோய் நலிவுகள் அவற்றுள் பரிகாரம், சவுக்கியம் செய்ய முடியாத நோய்கள் அதிகம். காலரா (வாந்தி பேதி) வந்தால் 100க்கு 90 பேர் சாவார்கள் , பிளேக் வந்தால் 100க்கு 100ம் சாவார்கள். இருமல் (கீயம்) வந்தால் 100க்கு 80 பேர் சாவார்கள். அம்மை (வைசூரி) வந்தால் 100க்கு 50 பேர்களுக்கு மேல் சாவார்கள். தொத்து நோய்களும் பல குழந்தைச் சாவுகளும் ஏராளம். கர்ப்பஸ்திரீகள் சாவுகளும் ஏராளம் இருந்தன. இதற்கு ஏற்ப ஏழ்மையும் கீழ்த்தரமான வாழ்க்கை நிலையும் இருந்து வந்தன.
அரசியலில் அந்நிய ஆதிக்கம், பார்ப்பன ஆதிக்கம் தலைவிரித்தாடின. அது போலவே உத்தியோகத் துறையிலும் பார்ப்பன மயமும் முன்னேற்ற வகுப்பார் ஆதிக்கமும் இருந்து வந்தன. முதலாளிகள் ஆதிக்கமும், எஜமான்-அடிமைத் தன்மையும் இயற்கை என்று சொல்லும் தன்மையில் தாண்டவமாடின. செல்வநிலையோ, ஒரு லட்சம் என்பதுதான் உயர்ந்தநிலை 10லட்சம் என்பது மிக மிக உயர்ந்த நிலையாய் இருந்தது. மற்றும் எவ்வளவோ  கீழ் நிலைக்கு ஆளாகியிருந்தது மாத்திரமல்லாமல், அந்நிலைபற்றி வெட்கப்படாமலும் கவலைப்படாமலும் வாழ்ந்து வந்தோம்.
எல்லாம் கடவுள் செயல் நம்மால் ஆவதில்லை
இப்படிப்பட்ட நிலையில், இந்த நிலைபற்றி யாருமே கவலைப்படாமல் -இவற்றின் விளைவு பற்றி யாருமே கவலைப்படாமல்எல்லாம் கடவுள் செயல், நம்மாலாவது ஒன்றுமே இல்லைஎன்று கருதி, நிம்மியுடன் மக்கள் இருந்த காலத்தில், நான் ஒருவன் மாத்திரமே தீவிரமாய் சிந்தித்து, இந்த நிலைக்குக் காரணம் நமது முட்டாள்தனமும் இதுவரை சிந்திக்காததும்தான் என்று கருதி, துணிந்து கடவுளையும், மதத்தையும், சாஸ்திரங்களையும் முன்னோர் கூற்றையும் அழித்து, ஒழித்துக்கட்டி, மக்களுக்கு புது எண்ணங்களை-அறிவை உண்டாக்கவேண்டும் என்று பாடுபட்டு வந்ததே இம்மாற்றங்களுக்கு வழியேற்படக் காரணமாயிற்று.
கடவுள்,மதம்,சாஸ்திர,முன்னோர் கூற்று ஆகியவைகளை எதிர்க்கவும் அழிக்கவும் ஒழிக்கப்படவும் துணிவு எனக்கு எப்போது, ஏன் வந்தது , எப்படி வந்தது என்றால் மேற்கண்ட அவை எல்லாம் மனித சமுதாயத்தின் காட்டுமிராண்டிக் காலமான சுமார் 2000-3000 ஆண்டுகளுக்கு முந்தின மிருகப்பிராயத்தில் ஏற்பட்டவைகளே. அக்காலம் அறிவில்லாத காலம் என்பது மாத்திரம் அல்லாமல் , தாய்-மகன், தந்தை-மகள், அண்ணன்-தங்கை என்பவைகளான முறை பேதங்கள் இல்லாத காலம். அவை மாத்திரமா ? பகுத்திறவு, சிந்தனை அற்ற காலம் , வளர்ச்சி என்பதாக ஒரு தன்மை இருக்கிறது என்பதே தெரியாத காலம்.
எவ்வளவு காட்டுமிராண்டியாக இருந்திருப்பார்கள் ?
சாதாரணமாகக் கந்த புராணம், வாயு புராணம், பாரத புராணம், இராமயண புராணம் முதலிய கடவுள் சம்பந்தமான, மத சம்பந்தமான, சாஸ்திர சம்பந்தமான சாஸ்திர புராண இதிகாசங்களையும், சிவ புராணம், விஷ்ணு புராணம், பாகவதம், வெகு சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட பகத விஜயம், திருவிளையாடல் புரணாம், பெரிய புராணம் முதலிய ஆதாரங்களையும், இலக்கியங்களையும் பார்த்தாலே நல்ல வண்ணம் உண்மை விளங்கும்.
மற்றும் இந்த மடமைக் கூளங்களை இன்றைய தினத்திலேயே நம்மில் 100க்கு 80க்கு மேற்பட்ட மக்கள், அதிகம் புலவர், பண்டிதர்,வித்துவான், மகாமகோதபாத்தியாய பி.ஏ., எம்.ஏ., டாக்டர் பெற்ற பெரிய படிப்பபாளி, அறிவாளி என்பவர்களெல்லாம் கூட நம்பி. அதன்படி நடக்கத் துணிந்தவர்களும் இருக்கிறார்கள் என்றால், பக்தி என்றாலே, இதைக் காட்டுமிராண்டிக் காலத்திய கற்பனையை நம்புவதும், நடிப்பதும், அதற்கேற்ற கோயில், குளம், உற்சவம், பண்டிகைகள் ஆகியவைகளை ஏற்படுத்தி பரப்பி, கொண்டாடி வந்தனர் என்றால், அறிவிலிகள் எவ்வளவு மோசமாக ஏமாற்றப்பட்டவர்களாக, காட்டுமிராண்டிகளாக இருந்திருக்க மாட்டார்கள் ?

ஈ.வெ.ராமசாமி

தந்தை பெரியார் 93-வது பிறந்தநாள் செய்தி

தந்தை பெரியார் 93-வது பிறந்தநாள் செய்தி


பிறந்த நாள் விண்ணப்பம்
எனது 93-வது ஆண்டு பிறந்தநாள் மலருக்கு ஒரு செய்தி வேண்டும் என்று நணபர் திரு.வீரமணி அவர்கள் கேட்டார். சற்றேறக்குறைய 10 ஆண்டுகளாகவே எனது பிறந்தநாள் மலருக்கு சேதி கொடுத்துக் கொண்டு தான் வருகிறேன். முதலாவதாக எனது பிறந்தநாள் என்பது எனது பிராசாரத்திற்கு ஒரு சாதனமாக ஒரு ஆதாரமாக விளங்குகிறது என்பது ஒரு நல்ல சேதியாகும்.
நான் ஒரு சமத்துவத் தொண்டன்
நான் சமுதாய சமத்துவத்திற்குப் பாடுபடுகின்ற ஒரு தொண்டனாவேன். அதாவது ஜாதி அமைப்பை அடியோடு ஒழிக்கப் பாடுபவன், ஜாதி அமைப்பு என்பதுகடவுள், மதம்மற்றும் அவைகள் சம்பந்தமான எதையும் ஒழித்தாக வேண்டும் என்று கருதி அவைகளை ஒழிக்கப் பாடுபடுகின்றவன். அதில் எந்த அளவும் மக்களுக்குச் சந்தேகமில்லாமல் நடந்தும் வருகின்றேன். மக்களோ பெரும்பாலும் கடவள் நம்பிக்கை உடையவராக ஆவார்கள். கடவுள் ஒழிப்பு என்பது மக்களுக்கு ஆத்திரத்தையும் கோபத்தையும் உண்டாக்கக் கூடியதாகும். இது மாத்திரமல்ல, நம்மைச் சபிக்கவும் கூடியதாகும். ஆகையால் சபிக்கப்பட்டும் வருகின்றேன். சபிக்கும் மக்களோ கடவைள சர்வசக்தி உடையவர் என்று பலமாக நம்பகின்றவர்கள். அவர்கள் சாபம் பலிக்காவிட்டாலும் கடவுள் என்னை சும்மா விட்டுக்கொண்டு இருக்கமாட்டார் என்றும் நம்புகிறவர்கள் ஆவார்கள்.
கடவுள் இருந்தால் இப்படி நடக்குமா ?
நானோ எனது பிரசாரத்தில், கடவளே இல்லை என்று சொல்வதற்காகவே சிறுமைப்படுத்தி, இழிவுபடுத்தி செய்கையாலும் காட்டிக்கொண்டே, நடந்து கொண்டே வருபவன். இந்த நிலையில், எனது 92-வது வயதில் கடவுள் நம்பிக்கை ஒரு மூடநம்பிக்கையில் பட்டதென்பதை நல்ல வண்ணம் மக்களுக்கு விளங்கும்படிகடவுளை செருப்பால் அடிக்கும்படிநான் சொல்லும் அளவுக்கு ஆளாகி இருக்கின்றேன்.
இந்த நிலையில் எனது 92-வது வாழ்நாள் முடிந்து 93-வது வாழ்நாள் தோன்றிவிட்டது என்றால் கடவுள் இருந்தால் இப்படி நடக்குமா ? விட்டுக்கொண்டு இருப்பானா என்று, எந்தஎப்படிப்பட்ட கடவுள் நம்பிக்கை பக்தனும் நினைத்து அவனுக்கு ஒரு சிறு அறிவிருந்தாலும் கடவுளாவது வெங்காயமாவது என்று கருதி, ஒரளவுக்காவது தெளிவு பெற முடியும் என்பது எனது கருத்து. அதனாலேயே எனது 93-வது வருஷப் பிறப்பு என்பது எனது பிராசாரத்திற்கு ஆதாரம் என்று கருதுகிறேன்.
மக்களிடையே மாறுதல்
சென்ற எனது 92-ம் ஆண்டு மலருக்கு நான் எழுதிய பிறந்தநாள் செய்தியில்எனது 91-வது ஆண்டு எனக்கு உற்சாகமாகவே கழிந்தது. மனசலிப்பு அடைய வேண்டிய அவசியம் இல்லாமல் இருப்பது மாத்திரமல்லாமல், இதுபோல் வாழ்நாள் நீண்டால் மேலும் பல முன்னேற்றகரமான காரியம் செய்ய வாய்ப்பு ஏற்படலாம் என்று தோன்றுகிறது. மற்றும் மக்களிடையில் ஒரு மாறுதலைக் காண்கின்றேன். அதுவும் தீவிரமான மாறுதலுக்கு இணங்குபவர்கள் போல் மக்களை காண்கிறேன்.
கடவுள், மதம், ஜாதி முதலிய விஷயங்களால், மக்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மாறுதல் அடைய பக்குவமாய் இருக்கிறார்கள் என்றே காண்கிறேன். இந்த நிலைதான் எனது உற்சாகத்திற்கும், மேலும் இருந்து தொண்டு செய்யலாம் என்ற நம்பிக்கைக்கும் அவாவிற்கும் காரணமாகும்
சலிப்பை நீக்கிய ஆட்சி
இந்தப்படி எழுதிய நான், முந்திய ஒரு ஆண்டில் எனக்கு மனச் சலிப்பு ஏற்பட்டுநான் ஏன் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றிற்றுஎன்று எழுதி சலிப்படைந்து இருக்கின்றேன். இந்த சலிப்பைக்கண்டு காலஞ்சென்ற மாண்பு மிகு அறிஞர் அண்ணா அவர்களும் திரு.காமராஜர் அவர்களும் எனக்கு ஆறதல் எழுதி உற்சாக மூட்டினார்கள்.
அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியவர்களது ஆட்சி ஏற்பட்டதற்குப் பிறகுதான் நான் உண்மையிலேயே நன்னம்பிக்கையும் உற்சாகமும் அடைந்தேன்.

சாதி முறையின் மூலபலம்
?

     உண்மையில் எனது தொண்டு ஜாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும்
, அது நமது நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரசாரமாகத் தான் முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம்தான் சாதி ஒழிந்த இடமாகும். இவற்றில் எது மீதி இருந்தாலும் ஜாதி உண்மையிலேயே ஒழிந்ததாக உள்ளது.
ஏன் எனில், ஜாதி என்பது இந்த நான்கில் இருந்தும் ஆக்கப்பட்டதே ஆகும்.
இப்போதும் சொல்லுவேன் : நாகரிகத்திற்காக சிலர் ஜாதி ஒழியவேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால், அவர்கள் மேற்கண்ட நான்கையும் ஒழிக்கத் துணிவு கொள்ளமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களால் நமக்கு ஒரு பயனும் ஏற்படாது. சில சமயங்களில் அவர்கள் நமக்கு எதிரிகளாகவும் ஆகக்கூடும். மனிதனை மடையனாக, அடிமையாக ஆக்கப்பட்ட பின்புதான் ஜாதி புகுத்தப்பட்டதாகும். சுதந்திர உணர்ச்சியும் அறிவும் ஏற்படாமல் சாதியை ஒழிக்க முடியாது. மடமைக்கும் அடிமைத் தன்மைக்கும் ஆக்கம் அளித்து ஜாதியை நிலைநிறுத்துவது தான், ஜாதியை ஒழியாமல் பாதுகாப்பது தான் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் என்பவைகளாகும்.
உண்மையில் ஜாதி ஒழியவேண்டும் என்று கருதுபவர்கள், இந்த நான்கு ஒழிப்புக்கும் சம்மதித்தவர்களாகவே தான் இருப்பார்கள். நமது மக்களில் பெரும்பாலோர் இன்று அப்படி ஆகிவிட்டார்கள் என்பது தான் எனது உற்சாகத்திற்கும் காரணமாகும். அதனை அடுத்து நடந்த நமது தி.மு.க. தேர்தலையும் (பொதுத் தேர்தலையும்) கொண்டு தான் இப்படிச் சொல்லுகின்றேன்.
ஜாதி ஒழிப்பிற்கு எதிர்ப்பு இல்லை
அதாவதுகடவுளை செருப்பால் அடித்ததாக” 10 லட்சக்கணக்காக பத்திரிகைகள், 10 லட்சக்கணக்கான துண்டு பிரசுரங்கள், வக்கீல்கள், அதிகாரிகள், சில பெண்கள், மற்றும் காங்கிரஸ் இயக்கம், சுதந்திரா இயக்கம், ஜனசங்க இயக்கம் முதலிய ஜாதி துவேஷமற்ற தமிழ் உணர்ச்சிக்கு மாறான பல இயக்கங்களும் எதிராகப் பாடபட்டு 230 இடங்களில் 200 இடங்களுக்கு மேல் (தி.மு.க) வெற்றிபெற நேர்ந்தது என்றால், சென்ற ஆண்டு பிறந்த நாள் செய்திகள் நான் கொண்ட கருத்து அதன் அளவுக்கு மேல் மெய்யாகி வெற்றி பெற்றது என்பது யாருக்கும் விளங்கும்.
இனி, நமது ஜாதி ஒழிப்புக்கு மக்களில் யாரும் எதிர்ப்பு இல்லை என்பது உறுதியான செய்தியாகிவிட்டடது.
எனது திட்டம்
இந்த நிலையில், நான் நமது மக்களை அடிபணிந்து வேண்டிக் கொள்வதெல்லாம் - கோயில்களுக்குப் போகாமல் இருக்க வேண்டும்; உற்சவங்களில் கலவாமல், மதப் பண்டிகைகள் கொண்டாடாமல், நெற்றிக்குறி அணியாமலும் இருக்கவேண்டும் என்பதேயாகும்.
மற்றும் நான் நினைக்கின்றேன் - அண்மையில் ஒர் மாநாடு கூட்டி, கோயில்களுக்குப் போகின்றவர்களை அடிபணிந்து வேண்டிக் கொள்வது மூலம் போகாமல் இருக்கச் செய்யலாமா என்று, யோசணை கேட்டு காரியத்தில் தொடரலாமா என்று சிந்திக்கிறேன்.

ஈ.வெ.ராமசாமி