Sunday, 23 January 2022

தமிழ்நாடு தமிழருக்கே - 1939 விடுதலை தலையங்கம் - 4

 தமிழ்நாடு தமிழருக்கே

“தமிழ்நாடு தமிழருக்கே” என்னும் தலைப்பில் இதற்கு முன் மூன்று தலையங்கங்கள் எழுதி இருப்பதுடன், அடுத்தபடி ஆரிய திராவிட சமய சம்பந்தமாக எழுதப்படும் என்று நேற்றைய தலையங்க முடிவில் குறித்திருந்தோம்.
அந்தப்படி இன்றைய தலையங்கத்தின்கீழ் ஆரிய திராவிட சமயங்கள் என்ன? சமய ஆதாரங்கள் என்ன? என்பவைகளைப் பற்றி எழுதப்புகுகின்றோம். இப்படி எழுதுவதில் நாம் பெரிதும் தற்காலம் பிரத்தியட்ச அனுபவத்தில் உள்ளவற்றையே பெரிதும் ஆதாரமாய்க் கொண்டு எழுதுகிறோமே ஒழிய நூல் ஆராய்ச்சியை அடிப்படையாய்க் கொண்டே எழுதப்புகவில்லை. அவ்வாராய்ச்சி விஷயங்களைப் பண்டிதர்களுக்கு விட்டுவிடுவோம். இன்றைய பிரத்தியட்ச காட்சிக்கும் கருத்துக்கும் ஆதாரங்களோ ஆராய்ச்சி களோ விரோதமாய் இருக்குமானால், அதற்கேற்றபடியாகிலும் அனுபவத்தை மாற்றிக் கொள்ளவாவது நாம் எழுதுவது பயன்படட்டும் என்று கருதியே இதில் தலையிடுகிறோம்.




இதற்கு முக்கியக் காரணம் என்னவெனில், சமயத்துறையில் ஏற்பட்ட கேடுகள்தான் பெரிதும் ஆரியர்களுக்கு இந்நாட்டில் ஆதிக்கம் வளர்ந்து நிலைத்திருப்பதற்குக் காரணம் என்றும், அதுபோல்தான் திராவிடர் வீழ்ச்சிக்கும் காரணம் என்றும் நாம் கருதுகிறோம். ஆதலால், ஆரிய திராவிட சமய சம்பந்தமான காரணங்கள் மக்களுக்கு விளங்கவேண்டுமென்று ஆசைப் படுகிறோம்.

திராவிட சமயம்

திராவிடர்க்கு ஆதியில் என்ன சமயம் என்பது திட்டவட்டமாய் விவகாரத்திற்கு இடமில்லாமல் கண்டுபிடிப்பது கஷ்டமான காரியமாய் இருந்தாலும், திராவிடருக்கு முன் பின் பிறவியோ, பிறவியின் பயனாக மேல், கீழ் ஜாதியோ, ஜாதிக்கேற்ற உலகமோ, விக்கிரக உருவமோ, பல கடவுள்களோ, அக்கடவுள்களின் முகத்திலோ, காலிலோ மக்கள் தோன்றியதோ முதலான கோட்பாடுகள் இருந்ததாகத் தெரியவில்லை. ஆகவே, அவற்றைப் பொறுத்தவரை அவை சம்பந்தமான சமயமும் கடவுள்களும் சமய நூல்களும் திராவிடருக்கு உடன்பாடானவை அல்ல என்பதும் உறுதியான உண்மையாகும்.

இந்த உறுதியை வைத்துக் கொண்டு பார்த்தால், பெரியார்  முகம்மது நபி பெருமான் அவர்கள் கடவுளைப் பற்றியும், சமுதாயத்தைப் பற்றியும் கூறியுள்ள கருத்துகளே தமிழர் கடவுளுக்கும் சமுதாயத்துக்கும் பொருத்தமானதென நினைக்கலாம். நபி அவர்கள் கடவுளுக்கு உருவம் இல்லை, பெயர் இல்லை என்று சொன்னதோடு இணையும் இல்லையென்றும், இணையே வைக்கக்கூடாது சொல்லக்கூடாது என்றும் நிபந்தமான திட்டம் செய்திருப்பதோடு, அப்படி யாராவது கடவுள் கொள்கைக்கு மாறானவர்களாவார்கள் என்றும் இஸ்லாமானவர்களாக மாட்டார்களென்றும் கண்டித்துக் கூறியிருக்கிறார்.

ஆகையால், திராவிடர்கள் கடவுளுக்கு உருவம் இல்லை இணை இல்லை என்ற அளவாவது ஒப்புக்கொள்வார்களே ஆனால், இன்று பெரும்பாகமான திராவிடர்கள் அனுஷ்டிக்கும் கடவுள் கொள்கைகள் தப்பானதென்றே உணருவார்கள். தப்பானதென்று சொல்லுவது மாத்திரமல்லாமல் திராவிடர்கள் இந்தத் தப்பான கொள்கையாலேயே ஆரியர்களுக்குச் சர்வத்திலும் அடிமைப்பட நேர்ந்தது என்றும் சுலபத்தில் உணருவார்கள்.
ஏனெனில், இன்று திராவிடர்கள் மீது சுமத்தப்பட்டிருப்பதும் பெரும்பான்மைத் திராவிட மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பதும் ஆரிய மதமாகிய இந்து மதம் என்று சொல்லப்படுவதே ஆகும். அதுபோலவே திராவிடர்கள் கடவுள்களும் இந்துமதக் கடவுள்களேயாகும். சமுதாயத்துறையிலும் திராவிடர்கள் பின்பற்றுவது இந்து சமயமுறையேயாகும்.

இந்து மதம்

உண்மையில் வெளிப்படையாக மனம் திறந்து பேச வேண்டு மானால், இந்து மதம் என்பதாக ஒரு மதமே இருந்ததில்லை என்பதோடு, இருக்கிறதாகச் சொல்லுவதற்கும் வகை இல்லை. ஆனால், பின் எப்படி இந்துமதம் என்று ஒரு சொல் இருந்து வருகிறது என்றால், ஆரியர்களுடைய மேன்மைக்கு ஆகவும், அவர்கள் மற்ற மக்களை அந்தகாரத்தில் வைத்துத் தங்களுக்கு அனுகூலமாக ஆண்டு கொள்வதற்கு ஆகவும் மற்றும் திராவிடர்களைச் சமயம்போல் - சவுகரியம்போல் பயன்படுத்திக் கொள்வதற்காகவும் ஏற்படுத்திக் கொண்ட சில சூழ்ச்சி முறைகளே இன்று இந்து மதமாய் இருக்கிறது.

ஏனெனில், இந்து மதம் என்கின்ற வார்த்தையே ஆரியர்களுக்குள் ளாகவாவது எப்போதாவது இருந்து வந்ததாகச் சொல்வதற்கு இல்லை. ஆரிய சம்பந்தமான எந்தப் பழைய ஆதாரங்களிலும் அவர்கள் சமயாதாரமாகச் சமீபகாலம் வரை ஏற்படுத்திக்கொண்ட எந்த ஆதாரங்களிலும்கூட இந்துமதம் என்கின்ற வார்த்தை இருந்ததாகத் தெரியவில்லை.

அன்றியும் இந்து மதம் என்றால் என்ன? அதன் கொள்கை என்ன என்று நிர்ணயித்துச் சொல்லக்கூடியதாகவும் ஒன்றும் இல்லை. எப்படிப்பட்டவன் இந்து? எப்படிப்பட்டவன் இந்து அல்லாதவன் என்று சொல்லுவதற்கும் ஒரு நியதி இல்லை. இந்தியாவில் உள்ள ஒரு முகமதியனையோ, ஒரு கிறித்துவனையோ, ஒரு பார்சியையோ, சீக்கியனையோ, ஒரு பிரமசமாஜக்காரனையோ, ஒரு மதமும் ஒரு கடவுளும் இல்லாத பகுத்தறிவு வாதியையோ இந்து அல்லாதவன் என்று சொல்ல ஓர் ஆதாரமும் இல்லை. இந்து மதம் என்று சொல்ல இன்று ஒரே ஓர் ஆதாரம்தான் அனுபவத்தில் பயன்பட்டு வருகிறது. அதாவது ஆரியர்கள் மேன்மைக்கு அவர்களது நலனுக்கும் மாறாகப் பேசுவதும், இருப்பதும் எல்லாம்தான் இன்று இந்து மதமல்லாததாய் இருக்கிறதே தவிர இந்து மதம் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட கொள்கையும் திட்டமும் இல்லை. ஆரியர்களின் மேன்மையையும் அவர்களது மேன்மைக்கு ஆதரவான ஆதாரங்களையும் குறித்து வாதம் புரியாமல் ஒருவன் கடவுளே இல்லை, வேதங்கள் பொய், சாஸ்திரங்கள் பொய், புராணங்கள் பொய் என்று சொன்னாலும்கூட “அவர் ஒரு பெரிய வேதாந்தி அல்லது ஒரு துறவி” என்று சொல்லப்பட்டு விடுவான்.

ஆனால், ஜாதி ஏது, பார்ப்பான் ஏது, பறையன் ஏது எல்லாம் பித்தலாட்டம் என்றும், கடவுள் பேரால் - மதத்தின் பேரால் ஆரியர்கள் மக்களை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்றும் சொல்லிவிட்டால், அவன் எப்படிப்பட்ட பக்திமானானாலும் நாஸ்திகனாய் விடுவான்.

ஆராய்ச்சி முடிவு

பொதுவாகவே இந்துமதம் என்பதுபற்றிப் பல ஆராய்ச்சிக்காரர்கள் அப்படி ஒரு மதமே இல்லை என்று முடிவுகட்டி மெய்ப்பித்து இருக்கிறார்கள். இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்று அய்ரோப்பியர்களாலும், இந்நாட்டுப் பெரும் புலவர்களாலும் எழுதப்பட்ட ஆராய்ச்சிப் புத்தகங்கள் எத்தனையோ இன்றும் இருக்கின்றன.

இந்து என்கின்ற வார்த்தையே திருடன், அயோக்கியன், தொல்லை கொடுப்பவன், நம்பிக்கைத் துரோகக்காரன், அடிமை-கூலி-காட்டுமி ராண்டி என்கிறதான கருத்துக்களைக் கொடுப்பது என்று பல பாஷைகளில் பரிச்சயமுள்ள அநேகர் எழுதி இருப்பதோடு, இதை மெய்ப்பிக்க இன்னும் பல இங்கிலிஷ்  அகராதிகள் இருக்கின்றன.

பொதுவாகவே இந்து மதம் என்றால் ஆரியர் கொள்கை என்றும், புரோகித சமயம் என்றும், பார்ப்பனர்களை உயர்வாய்க் கொண்ட தென்றும், இந்து என்றால் பார்ப்பனர்களைப் பின்பற்றுகிறவன் என்றும், விந்தியமலைக்கு வடக்கே உள்ள மக்களைக் குறிப்பதென்றும், ஆதிகால மனிதத் தன்மையைக் குறிப்பிடுவதென்றும், அகராதிகளிலும் சகல கலாநிதி என்னும் பழங்கால முதல் நாளது வரையில் ஆராய்ச்சி செய்த அறிவு நூல்களிலும் பரக்கக் காணலாம்.

திராவிடர் இந்துக்களா?

அவை எப்படியோ இருக்கட்டும், நாம் இன்று அம்மாதிரியான ஆராய்ச்சியில் புகவில்லை. ஆனால் திராவிட மக்கள் பிறவியில் சாதி பேதத்தையும் பல கடவுள்களையும், உருவ வழிபாட்டையும் கொண்ட ‘இந்து’ மதத்தில் சேர்ந்தவர்கள் ஆவார்கள் என்பதே நமது பிரச்சினையாகும்.

திராவிட நாட்டில் உள்ள வைணவர்கள் “நாங்கள் ஆரியக் கடவளை வணங்குகிறவர்கள்” என்றும், சைவர்கள் “நாங்கள் ஆரியக் கடவுளை வணங்குகிறவர்கள் அல்ல, திராவிடக் கடவுளாகிய சிவனை வணங்குகிறவர்கள்” என்றும், மற்றும் சிலர் “நாங்கள் சிவனையும் திருமாலையும் வணங்குகிறவர்கள் அல்ல, முருகன் என்கின்ற இயற்கை அழகையும் இளமையும் வலிவையும் குணமாகக் கொண்ட இயற்கையை வணங்குகிறவர்கள்” என்றும், சிலர் “எந்தக் குணத்தையும் குறியாய்க் கொண்டு வணங்குகிறவர் அல்ல, கந்தழி என்கின்ற உருவம் குணம் இல்லாத தூய்மையினை - தன்மையை வணங்குகிறவர்கள்” என்றும் பல மாதிரி நம்மால் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களை, ஏன் அவர்களுக்குமே சிலருக்குப் புரிந்திராத விஷயங்களை அந்தந்தச் சமயத்தவர்களிலேயே ஒவ்வொருவர் ஒவ்வொருவிதமாக வாயில் சொல்லலாம்.

ஆனால், திராவிடத்தில் உள்ள மக்களில் கடவுள் வழிபாடுடையவர்கள் பெரும்பான்மையோரும் தங்கள் வழிபாட்டை எப்படி நடத்துகிறார்கள் என்பதிலிருந்துதான் திராவிடர்கள் திராவிட சமயத்தவராய், திராவிட தத்துவக் கடவுள் வழிபாடுடையவர்களாய், அதற்கு ஏற்ற ஆதார நூல்களுடையவர்களாய் இருக்கிறார்களா என்று பார்க்க ஆசைப்படுகிறோம். இன்று பிரத்தியட்சத்தில் வைணவர்கள், சைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் பெரும்பாலும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்கின்ற மும்மூர்த்திகளையும், அவைகளுக்கு ஆரியக் கற்பனைப்படி உருவமும் குணமும்,  பெண்டு பிள்ளை வாழ்க்கைத் தன்மைகளுடன்தான் வணங்கி வருகிறார்கள். ஆனால் விவகாரம் வரும்போது காந்தியார் பேசுவது போல் அதாவது எப்படி “என் வருணாச்சிரமம் வேறு” “என் ராமன் வேறு” “என் இந்து மதம் வேறு” என்று சொல்லித் தப்பித்துக் கொண்டு காரியத்தில் மனுதர்ம வருணாச்சிரமத்தையும், ராமாயணத்தையும், ராமாயண ராமனையும் ஆரிய மேன்மைக்கு உரித்தான இந்து மதத்தையும் நிலைநிறுத்தத் தக்க வண்ணமே நடந்து வருகிறாரோ அதுபோல், ஆரியக் கற்பனையான பிரம்மா, விஷ்ணு, சிவன்களைத்தான் திராவிடர்கள் சேர்ந்தோ தனித்தோ வணங்கி வருகிறார்கள். திராவிடர்களை ஆரியர்களுக்கு அடிமையாக ஆக்கி, அவர்களிடமிருந்து தப்பித்து வரமுடியாதபடித் திராவிடர்களைப் பிணைத்திருப்பது இந்து மதத்தைவிட இந்து மத ஆரியக் கடவுள்களேயாகும்.

நம் பண்டிதர்கள்

நம் பண்டிதர்கள் பெரும்பாலும் கடவுள், சமயம் ஆகியவற்றில் பண்டிதர்களாக இருக்கிறார்களே ஒழிய, பொது அறிவில் இயற்கை அறிவில் சக்தியில் பாண்டித்யம் பெற்ற பண்டிதர்கள் வெகு அருமையாய் இருக்கிறார்கள். ஆரியக் கடவுள்களுக்கும் சமயத் திற்கும் ஆக்கம் அளித்துத் திராவிடர்களை ஆரியர்க்கு அடிமை யாக்கியவர்கள் நம் சைவ வைணவ சமயப் பண்டிதர்கள்தான் என்றால், அவர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது என்றுதான் கேட்டுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஏனெனில், ஆரியக் கடவுள்கள் சம்பந்தமான திராவிட பாஷை நூல்கள் எல்லாம் உண்டாக்கியவர்கள், பரப்பினவர்கள், பிரச்சாரம் செய்தவர்கள் இன்றும் செய்பவர்கள் நம் பண்டிதர்களேயாவார்கள்.

திராவிட மக்களுக்கு 100-க்கு 95 பேர்கள் கல்வி அறிவில்லாத வர்கள் - எழுத்து வாசனை அற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களிடம் சமயத்தையும் கடவுளைப்பற்றியும் பேசும்போதும் இவர்கள் அறியும்படி சமயக் கதைகள், சமயப் பெரியார்கள் கதைகள், கடவுள் கதைகள் எழுதி பிரசங்கம் செய்தால்தான் - கடவுளுக்கு பெண்டு, பிள்ளை, வைப்பாட்டி கற்பித்துச் சாதம் நகை படைத்துக் கலியாணம், உற்சவம், பூசை, அபிஷேகம் ஆகியவைகள் செய்தும் காட்டினால்தான் புரியும் என்று சொன்னால், இது அறிவுள்ள அல்லது திராவிட ரத்தக் கலப்பில்லாத, தனித் தமிழ் மகன் கூற்று என்று யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கவேண்டி இருக்கிறது.

முஸ்லிம்களுக்கு ஒரு சமயம் இருக்கிறது கடவுளும் இருக்கிறது. அந்த முஸ்லிம்களும் 100-க்கு 90 பேர்கள் எழுத்து வாசனை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்குச் சமய உணர்ச்சியும், கடவுளுணர்ச்சியும் வருவதற்கு இப்படித்தான் செய்கிறார்களா? அப்படி செய்யாததால் அவர்களுக்கு கடவுள் உணர்ச்சியும், மத உணர்ச்சியும், மனிதத்தன்மை உணர்ச்சியும் இல்லை என்று யாராவது சொல்லக்கூடுமா? இப்போதைய உணர்ச்சி முஸ்லிம்கள் பெற்றதற்குக் கடவுளுக்குப் பெண்டு பிள்ளை, வைப்பாட்டி, சோறு, சாறு, அபிஷேகம், கலியாணம், உற்சவம் செய்தும் அது சம்பந்தமாக கதைகள் எழுதிப் படிக்கச் செய்தும்தான் அவர்கள் உணர்ச்சி பெற்றார்களா? என்பதை யோசித்தால், அப்படி சொல்லுகிறவர்கள் எண்ணம் சுத்தமானதா? அசுத்தமானதா? என்பது விளங்காமல் போகாது.

ஆரியர்களிடமிருந்தும், அவர்களுக்கு அனுகூலமானதும் நமக்குக் கேடானதுமான அவர்களுடைய சமயம், கடவுள்கள் ஆகியவை களிடமிருந்து திராவிட மக்கள் பிரிக்கப்பட்டால் ஒழிய ஆரியர்களுக்கு அடிமைப்பட்ட திராவிடர்களது மானமும் அறிவும் ஆத்மார்த்த போலி உணர்ச்சியும் விடுபடாதென்ற காரணத்திற்காகவே இவைகளைக் கூறுகிறோம்.

ஆகையால்தான் சைவ வைணவ பண்டிதர்கள் தங்கள் சுயநலத்தையே பிரதானமாகப் பாராமல் மக்கள் நலத்தைச் சிறிதாவது கருதி, பாமர மக்களின் அறிவின்மையையும் மூட பக்தியையும் போக்க முயலவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். தங்களின் குரங்குப்பிடியான சமயம் போனால் பண்டிதத் தன்மையே போய்விடும் என்றும், வாழ்க்கை போய்விடும் என்றும் சிலர் பயப்படுகிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

இது இப்பண்டிதர்களின் பாமரத்தன்மையேயாகும். ஷேக்ஸ்பியரும், ஷெல்லியும், பெர்னாட்ஷாவும், வெல்சும், வில்சனும் புராணங்களுக்குப் பொழிப்புரையும் கருத்துரையும் புது உரையும் எழுதித்தானா வாழ்ந்தார்கள் - வாழ்கிறார்கள்? உலகில் விளம்பர மானார்கள்? என்பதையே சிந்தித்துப் பார்க்க இப்பண்டிதர்களை வேண்டுகிறோம். ஏன் நாம் இப்படிச் சொல்லுகிறோம் என்றால், திராவிடர்களை ஆரியருக்கு அடிமையாக்கினதில் நம் பண்டிதர்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது.

இப்போது அவர்களை மீட்கவேண்டிய பொறுப்பும் சக்தியும் நம் பண்டிதர்களிடம்தான் இருக்கிறது என்பதை நாம் உணருவதாலேயாகும். மற்றொரு புறம் அது முடியவில்லையானால், ஆரியர்களுடனும் அவர்களது ஆயுதங்களுடனும் போராடுவது போலவே இப்பண்டிதர்களுடனும் போராட வேண்டிய தொல்லையும் ஏற்பட்டுவிடுமே என்கிற பயத்தினாலேயாகும்.

ஆகவே, பண்டிதர்கள் திராவிடர்களுடைய சமயம் இன்னது, அவர்களுடைய கடவுள் இன்னது, அவற்றின்கோட்பாடு இன்னது என்று துலக்கமாக வரையறுத்துவிட வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறோம். அதற்கு ஏற்ற கலைகளையே உற்பத்தி செய்ய வேண்டுமென்றும் வேண்டிக் கொள்கிறோம். இது விஷயமாகப் பல திராவிட பண்டிதர்கள் நம் கருத்துக்கு அனுகூலமாகச் சொல்லி இருக்கும் பல அபிப்பிராயங்கள் இருக்கின்றன. என்றாலும், அவைகளைச் சமயம் வந்தபோது வெளிப்படுத்தி  கொள்கிறோம். இன்றைய நமது ஆசையெல்லாம் நாம் பரிசுத்தமாக ஆரியர்கள் சமயக் கடவுள்கள், அவற்றின் கொள்கைகள் ஆகியவற்றிலிருந்து பிரிந்துகொள்ளவேண்டும் என்பதே அல்லாமல் வேறொன்றும் இல்லை என்பதைப் பண்டிதர்கள் நம்பவேண்டுமென்று மறுபடியும் வேண்டிக் கொள்கிறோம்.

அரசியலில் நமது நாடு ஆரியர்களிடமிருந்து பிரிந்துகொள்ள பிரிட்டிஷார் தயவு எப்படி வேண்டி இருக்கிறதோ அப்படியே சமயம், கடவுள், சமுதாயம் ஆகியவைகளிலும் நமது நாடு ஆரியர்களிடம் இருந்து பிரிந்துகொள்ள நம் பண்டிதர்களுடைய தயவு வேண்டி இருக்கிறது.

நிற்க, திராவிடர் பூரண விடுதலை அடைகிறவரை மானமே மதமாகவும் அறிவே கடவுளாகவும், அதற்கு ஆன ஆராய்ச்சியே பிரார்த்தனையாகவும் இருக்க வேண்டும்.

பிறகு எந்தச் சமயமானாலும், எந்தக் கடவுளானாலும், எப்படிப்பட்ட பிரார்த்தனையானாலும் வைத்துக் கொள்ளலாம்; அவை திராவிடனை ஒன்றும் செய்துவிடாது.

வியாதியஸ்தனாக, ஜெயில் கைதியாக, கவிழப் போகும் ரயிலில் பிரயாணக்காரனாக, முழுகப் போகும் கப்பலில் பயணக்காரனாக, சண்டையில் போர் வீரனாக இருக்கிற காலங்களில் எப்படிச் சிற்சில நித்தியவாடிக்கைகளையும்  பற்றுக்கோடான எண்ணங்களையும், சில ஆச்சார அனுஷ்டானங்களையும் லட்சியம் செய்யாமலும் ஒத்திவைத்தும் நடந்து கொள்ளுகிறோமோ அதுபோல் திராவிடமும் திராவிடரும் விடுதலை பெறுகிறவரை அவைகளில் சிலவற்றை ஒத்திவைத்து அல்லது சிறிது தளர்த்தி விட்டு விடுதலையில் கவலை கொள்ள வேண்டுமென்று முஸ்லிம், கிறிஸ்தவர் உள்பட எல்லாத் திராவிட மக்களையும் வேண்டிக் கொள்ளுகிறோம்.

மற்ற சமயக்காரர்

கிறிஸ்தவ சமய உணர்ச்சியையும் முஸ்லிம்கள் சமய உணர்ச்சியையும் பார்த்தாவது திராவிடர்கள் நடந்துகொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். கிறித்துவ சமய உணர்ச்சி கிறித்தவர்களை இன்று உலகப் பார்வையில் எவ்வளவு உயர் நிலையை அடையச் செய்திருக்கிறது. அதுபோலவே இஸ்லாமியர்களை அவர்களது சமய உணர்ச்சி உலகத்திற்கு முன்பு எவ்வளவு மேன்மை நிலையை அடையச் செய்திருக்கிறது. ஐப்பானியர்களின் சமய உணர்ச்சி உலகத்தின் முன்பு அவர்களை எவ்வளவு மேல் நிலையை அடையச் செய்திருக்கிறது என்பவை களைத் திராவிட மக்களின் பண்டிதர்களும் பாமரர்களும் எண்ணிப் பார்க்க வேண்டும். இவர்களது சமயங்களை இச்சமூகத்தார் எழுத்து கமா, புள்ளி தவறாமல் பின்பற்றி இருந்தால், இவர்களும் திராவிடர்களைவிட மிகக் கேவலமான நிலையில்தான் இருந்திருப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் நாட்டார், சமூகத்தார் மானத்தோடும் மேன்மையாயும்,  மற்றவர்களுக்கு எவ்விதத்திலும் அடிமைகளாய், எத்துறையிலும் தாழ்மையாய் இல்லாமலும் வாழ வேண்டும் என்பதையே சமயமாய்க் கொண்டு மற்றதையெல்லாம் கொஞ்சம் தியாகம் செய்து முயற்சித்து வந்திருக்கிறார்கள். அதனாலேயே இன்று அவர்கள் தனித் தன்மானமுள்ள சமூகமாகச் சுதந்தரர்களாக வாழுகிறார்கள்.

எல்லோரும் கிறித்துவர்களாகவே வாழும் மேல்நாட்டில் பைபிளுக்குக் கருத்துரையும் புது வியாக்கியானமும் எழுதிக் கொண்டு அதன்படியேதான் நடந்துதீர வேண்டும் என்று கிறிஸ்தவப் பண்டிதர்களோ பாதிரிமார்களோ செய்து வந்திருப்பார்களேயானால், இன்று கிறிஸ்தவர்களில் ஒருவருக்காவது வாயில் பற்களே இருந்திருக்காது. இடுப்பில் துணியே இருந்திருக்காது. ஏனெனில், அவர்களது சமயம் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டச் சொல்லுகிறது. மேல் வேட்டியைக் கேட்டால் இடுப்பு வேட்டியையும் அவிழ்த்துக் கொடுக்கச் சொல்லுகிறது. அப்படிப்பட்ட சமயக்காரர்கள் இன்று அவரவர்கள் நாட்டையும் அன்னியர் நாட்டையும் ஆளுகிறார்கள். உலக நாகரிகத்துக்கும் அற்புதங்களைக் கண்டுபிடிப்பதற்கும் வழிகாட்டிகளாய், வாத்தியார்களாய் இருக்கிறார்கள். மேல் நாட்டில் நித்திய வாழ்க்கையில், வாழ்க்கை நடவடிக்கையில் சிறிது கூடச் சங்கடமோ தாட்சணியமோ, மனக் கசப்போ ஏற்படுவதற்கு இல்லாத மாதிரியில் திட்டங்கள் வகுத்துக் கொண்டு சுதந்திர வாழ்க்கையில் வாழ்கின்றார்கள். வாழ்க்கையின் சகலபடிகளுக்கும் திட்டம் வகுத்துக் கடிகாரம் நடப்பதுபோல் நடந்து கொள்ளுகிறார்கள்.

அதுபோலவே இஸ்லாமியரும் குரானுக்கு வியாக்கியானம் செய்துகொண்டு தாடி எத்தனை அங்குலம், தலைமயிர் எப்படி, குல்லா எப்படி, சட்டை எப்படி என்பதைக் துருவிக் கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு, எப்படியிருந்தால் மனிதனாக வாழலாம் என்பதில் கவலைகொண்டு துருக்கி, ஆப்கானிஸ்தானம், பர்ஷியா, ஈஜிப்ட் முதலிய நாடுகள் மற்ற சமூகத்திற்கு அடிமையாகாமல் நாடு வாரியாய் சுதந்திரத்தோடு வாழுகிறார்கள். இந்தியாவிலும் ஒரு “தாடி இல்லாத இஸ்லாமே” தலைவராய் இருந்து தாங்கள் மைனாரிட்டியென்று சொல்லிக் கொள்ளகூடிய பயம் இல்லாமல் சுதந்தரத்தோடு தன்மானத்தோடு வாழ நிபந்தனை விதிக்க மற்றவர்கள் திகைக்கச் செய்ய வசதியோடு இருக்கிறார்கள்.

அதுபோலவே ஜப்பான்காரரும், திராவிடத்தைவிடச் சிறிய நாடாயும் திராவிடர்களைவிடக் குறைந்த ஜனத்தொகை கொண்ட சமூகமாயும் இருந்தும், இன்று தனி அரசாங்க உலக வல்லரசுகளில் ஒன்றாக இருந்துகொண்டு தனக்கு நாற்புறமும் அதைவிட 3 பங்கு 4 பங்கு விஸ்தீரணமும் ஜனத்தொகையும் கொண்டதாக உள்ள நாடுகளை விரட்டி நடுக்கிக் கொண்டு சகல துறைகளிலும் முன்னேறிக் கொண்டு வருகிறது. ஒருபுறம் 18 கோடி ஜனமும், 18 லட்சம் மைல் விஸ்தீரணமும் கொண்ட ரஷியாவும், மற்றொருபுறம் 12 கோடி ஜனத்தொகை கொண்ட இரண்டு அமெரிக்க கண்டமும், மற்றொருபுறம் 45 கோடி மக்களுக்கும் பல தேசத்துக்கும் கண்டத்துக்கும் சக்கரவர்த்தியாய் இருக்கும் பிரிட்டனும், தன்னை அடுத்தாற்போல் 45 கோடி ஜனத்தொகையும் பரந்தநாடும் கொண்ட சைனாவும் எதிரிகளாக இருக்கச் சிறிதும் பயமில்லாமல் தலை நிமிர்ந்து நடக்கிறது; தற்காப்பில் வல்லரசாய் இருக்கிறது. இப்படிப்பட்ட இந்த நாடு தங்கள் சமயமாகிய புத்தர் சொன்ன அஹிம்சையைப் பிடித்துக் கொண்டு ஜாதகக் கதைகளுக்குப் புது உரை எழுதிக்கொண்டு சின்னத்தோடு இருந்திருக்குமானால், அதன் கதி என்னவாயிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அப்படி இருக்கத் திராவிடம் இவைகளைப் பார்த்துப் படிக்க வேண்டிவைகளைப் படித்துக் கொள்ள வேண்டாமா என்று யோசித்துப் பார்க்கும்படி மறுபடியும் பண்டிதர்களையும் பாமர மக்களையும் வேண்டிக் கொள்ளுகிறோம்.

இம்மாதிரியான ஒரு திராவிடர் ஆரியர் உணர்ச்சி என்று ஒன்று ஏற்பட்டிருக்கவில்லையானால், இப்பண்டிதர்கள் கதிதான் என்னாகி இருக்கும் என்பதைத் தயவு செய்து சிறிது சிந்தித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொண்டு இதை முடிக்கிறோம்.

இனி அடுத்த தலையங்கத்தில் ஆரியர் சமயம் என்பது பற்றி விளக்குவோம்.

- விடுதலை - தலையங்கம் - 24.11.1939

தமிழ்நாடு தமிழருக்கே - 1939 விடுதலை தலையங்கம் - 3

 தமிழ்நாடு தமிழருக்கே

நேற்று முன்தினமும், நேற்றும் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற தலைப்பின் கீழ் அதன் கருத்தையும், அவசியத்தையும், முறையையும் விளக்கி எழுதியிருந்ததுடன், மறுபடியும் அதைப்பற்றித் தொடர்ந்து திராவிடருக்கும் அன்னியருக்கும் உள்ள வாழ்க்கைமுறைப் பேதம் பற்றி எழுதப்படும் என்று குறிப்பிட்டிருந்தோம். அதன்படி இன்று எழுதப் போகும் இந்த 3-ஆவது தலையங்கத்தில் முதலாவதாகத் திராவிடர்கள் - ஆரியர்கள் என்பவர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களிருவருக்கும் எப்படிச் சம்பந்தமேற்பட்டது, அவர்களுடைய வாழ்க்கைமுறைப் பேதம் எப்படிப்பட்டது என்பவைகளை எடுத்துக்காட்ட இதை எழுதுகிறோம்.




திராவிட நாட்டுக்கு ஆரியர்கள் குடியேறித் திராவிடர்களை அடக்கிக் கீழ்மைப்படுத்தியவர்கள் என்பதைப்பற்றி நாம் விளக்க வேண்டியதில்லை. ஆரியர் திராவிடர் நாட்டுக்கு வருவதற்கும் முன் திராவிட நாடு கலைகளிலும், நாகரிகத்திலும்  தலைசிறந்து விளங்கி வந்தது என்பது பற்றியும், நாம் விளக்க வேண்டியதில்லை என்றாலும், இவ்விரண்டுக்கும் ஆதாரமாக இரண்டொரு சரித்திராசிரியர்கள் அபிப்பிராயங்களை எடுத்துக்காட்டுவது பொருந்துமென நினைக்கிறோம்.

“மேற்குத் திபேத்தையும் ஆப்கானிஸ்தானத்தையும் தாண்டி ஆரியர்கள் இந்தியாவுக்குக் குடியேறியவர்களாவார்கள். அவர்களது பாஷை சமஸ்கிருதம் போன்றது, இந்தியாவுக்கு வந்ததும் தங்கள் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், மத நம்பிக்கைகள் முதலியவற்றைத் தங்கள் இஷ்டப்படித் தங்கள் பாஷையிலேயே எழுதிவைத்துக் கொண்டார்கள்”.

என்று சர்  என்றி ஜான்ஸ்பட்டளர் என்கின்ற பிரசித்திபெற்ற ஆராய்ச்சியாளர், “இந்தியாவில் அன்னியர்கள்” என்ற புத்தகத்தில்
19-ஆவது பக்கத்தில் ஆதாரங்களோடு எடுத்துக்காட்டி இருக்கிறார்.

“ஆரியர்கள் மதுவருந்துவதும் சூதாடுவதுமான ஒழுக்க ஈனமான காரியங்களில் பற்றுடையவர்கள்.”

இது ராகேஸ் என்னும் பேராசிரியர், “வேதகால இந்தியா” என்பதில் எடுத்துக்காட்டி இருக்கிறார்.

“வட இந்தியாவில் இருந்து திராவிட கலை நாகரிகம் முதலியவைகள் யாவும் ஆரியர்களால் அடியோடு ஒழிக்கப்பட்டுவிட்டன, ஆனால், தென்னிந்தியாவில் அவ்விதம் செய்ய முடியவில்லை,”

இது “பண்டைத் தமிழரின் வரலாறு” என்கின்ற ஆராய்ச்சிப் புத்தகத்தில் 4-ஆம் பக்கத்தில் இருக்கிறது. இந்த ஆராய்ச்சிக்குறியானது நாம் முன் தலையங்கத்தில் குறிப்பிட்ட அதாவது திராவிடம் இன்னமும் ஆரியமயமாகவில்லை என்பதற்கு ஆதரவளிப்பதாகும்.

“ஆரியரல்லாத இந்நாட்டுத் திராவிடப் பழங்குடி மக்கள் ஆரியர்களால் துன்புறுத்தப்பட்டு காடுகளுக்குத் துரத்தப்பட்டார்கள். இதுவும் போதாதென்று அவர்களை ராட்சதர்கள், அசுரர்கள் என்றும் நூல்கள் எழுதிகொண்டார்கள். இதுவும் போதாதென்று கருதி திராவிடர்களுக்கு தஸ்யூ என்றும், ஆரிய எதிரி என்றும், பெயரிட்டு அவற்றையே நாளாவட்டத்தில் பேய் என்றும், பூதம் என்றும், ராட்சசர் என்றும் பெயர்களாக மாறச் செய்துவிட்டார்கள்.”

இது சர் வில்லியம் வில்ஸன் ஹெனர் டாக்டர் கே.சி.எஸ்.அய். சி.அய்.ஈ. எல்-லய-டி எழுதின “இந்திய மக்களின் சரித்திரம்”

41-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே ஆக்கிக் கொண்டு, அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தித் தங்கள் இஷ்டம் போல் தங்களுக்கு அனுகூலமாகச் சகல விஷயங்களையும் உட்படுத்திக் கொண்டு, அதற்கு ஏற்றபடிக் கதைகளை உற்பத்தி செய்து எழுதி வைத்துக் கொண்டார்கள். இந்தக் கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் திராவிடரை அழுத்தி, அடிமைப்படுத்தி தங்களை உயர்த்திக் கொள்ளுவதற்கு ஆகவே எழுதிகொள்ளப்பட்டவைகளாகும்.”

இது பிரபல சரித்திராசிரியரான என்றி பெரிட்ஜ் என்பவரால் 1865-ஆம் வருஷத்திலேயே எழுதப்பட்ட விரிவான இந்திய சரித்திரம் முதல் பாகம் 15-ஆம் பக்கத்தில் இருக்கிறது.

“பாரத, ராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டுமிராண்டிகள், அசுரர்கள், ரட்சதர்கள், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடு என்பதெல்லாம் தென்னிந்தியாவை (திராவிடத்தைப்) பற்றியேயாகும்.”

இது ராலின்சன் சி.அய்.ஈ. எழுதிய ‘இந்தியா’ என்னும் புத்தகத்தில் 153-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“நம்மைச் சுற்றி 4 பக்கங்களிலும் தஸ்யூக்கள் (திராவிடர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் யாகங்கள் செய்வதில்லை. ஒன்றையுமே நம்புவதில்லை. அவர்கள் பழக்க வழக்கங்களே வேறாய் இருக்கின்றன. ஓ இந்திரனே! அவர்களைக் கொல்லு.”

என்பது ஆரியர்களின் பிரார்த்தனையாகும். இது ரிக் வேதம்

10-ஆம் அதிகாரம் சுலோகம் 22-8-இல் இருக்கிறது.

“இந்தியாவில் இருந்த ஆரியர்களிடம் மனிதர்களைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது என்று நிச்சயமாய்ச் சொல்லலாம்.” இம்பீரியல் இந்தியன் கெஜட்டில் 1909-ஆம் வருஷ வால்யூம் 1 - பக்கம் 405-இல் இருக்கிறது.

“தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியரல்லாதார்களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் ராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.”

இது ரோமேஸ் சந்திர டட் சி.அய்.ஈ., அய்.சி.எஸ். எழுதிய “புராதன இந்தியா” என்னும் புத்தகத்தில் 52-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“திராவிடர்கள் தங்கள்மீது படை எடுத்துவந்த ஆரியர்களோடு கடும்போர் புரியவேண்டி இருந்தது. இந்த விஷயம் ரிக் வேதத்திலேயே அநேக சுலோகங்களாக இருக்கின்றன.”

இது டாக்டர் ரோமேஷ் சந்திர மஜும்தார் எம்.ஏ.யின் “பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும்” என்னும் புத்தகத்தின் 22-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“ராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படை எடுத்து வெற்றிபெற்றதைச் சித்தரித்துக் காட்டுவதாகும்.”

இது பி. சிதம்பரம் பிள்ளை எழுதிய “திராவிடரும் ஆரியரும்” என்னும் புத்தகத்தின் 24-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“ராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும் யுத்த வீரர்களுக்கும் நடந்த போரைக் குறிப்பதாகும். ராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை - ஆரியரல்லாதவர்களைக் குறிப்பதாகும்.”
இது ரோமேஷ் சந்திரடட் எழுதிய “பண்டைய இந்தியாவின் நாகரிகம்” என்ற புத்தகத்தின் 139-141-ஆவது பக்கங்களில் இருக்கிறது.
“தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டடிருக்கிறார்கள்.”
இது “சுவாமி விவேகானந்தா அவர்களது சொற்பொழிவுகளும், கட்டுரைகளும்” என்ற புத்தகத்தில் “ராமாயணம்” என்னும் தலைப்பில் 587-589 பக்கங்களில் இருக்கிறது.

“ஆரியன் என்கிற பதம் இந்தியாவின் புராதன குடிமக்களிடமிருந்து தங்களைப் பிரித்துக் காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக் கொண்ட பதம்.

தஸ்யூக்கள் என்பது இந்திய புராதன குடிமக்களுக்கு அவர்கள் (ஆரியர்) கொடுத்த பெயராகும்.”

இது 1922-ஆம் வருஷம் பிரசுரிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ் “பழைய இந்தியாவின் சரித்திரம்” என்னும் புத்தகத்தில் இருக்கிறது.

பகைமைக்குக் காரணம்

“ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள் என்றும், தஸ்யூக்கள் அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதாருக்கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இருவகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும், அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைமைக்குக் காரணமாகும்.”

இது டாக்டர் ராதா குமுத்முகர்ஜீ எம்.ஏ., பி.எச்.டி. எழுதிய “இந்து நாகரிகம்” என்னும் புத்தகத்தில் 69-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“ராமாயணக் கதையின் உள் பொருள் என்னவென்றால், ஆரிய நாகரிகத்துக்கும், திராவிட நாகரிகத்துக்கும் (அவற்றின் தலைவர்களான ராமன் ராவணன் ஆகியவர்களால்) நடத்தப்பட்ட போராகும்.”

இது ராதா குமுத்முகர்ஜீ எழுதிய “இந்து நாகரிகம்” என்னும் புத்தகத்தின் 141-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென் கிழக்கிலும், இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியார்களால் பேசும் பாஷை.”

இது சர் ஜேம்ஸ்மர்ரே எழுதிய புதிய இங்கிலிஷ் அகராதியின் பக்கம் 67-டி-யில் இருக்கிறது.

“ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லாதாருக்குள் புகுத்த முயற்சித்து முடியாமல் போனதால் ஆரியரல்லாதாருடைய பாஷைகளைக் கற்றுக்கொண்டு அவர்களது நாகரிகத்தையும் பின்பற்ற வேண்டி வந்தன.”

இது பண்டர்காரின் கட்டுரைகள் வால்யூம் 3, பக்கம் 10-இல் இருக்கிறது.

“தமிழர்கள் ஆரியர்களை வடவர் வடநாட்டவர் என்று அழைத்தார்கள். ஏனெனில் ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தவர்களானதால்.”

இது கிருஷ்ணசாமி அய்யங்கார் எம்.ஏ., பி.எச்.டி., அவர்கள் எழுதிய “தென் இந்தியாவும் இந்தியக் கலையும்” என்ற புத்தகத்தின் 3-ஆது பக்கத்தில் இருக்கிறது.

“ராமாயணத்தில் தென் இந்தியா (திராவிட தேசம்) தஸ்யூக்கள் என்ற ராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது.

இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே நாகரிகமடைந்தவர்களாய் இருந்தார்கள்.”

இது பி.டி. சீனிவாசய்யங்கார் எழுதிய “இந்திய சரித்திரம் முதல் பாகம்” என்னும் புத்தகத்தில் 10-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்து பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்.”

இது ஷோஷி சந்தர்டட் எழுதிய “இந்தியா அன்றும், இன்றும்” என்னும் புத்தகத்தில் 105-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“ஆரியக் கடவுள்களைப் பூசித்தவர்களும், அவர்களைப் பின்பற்றியவர்களும், தேவர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். இந்த ஆரியக் கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப்பகை இருந்துகொண்டே வந்தது.”

இது ஸி.தாஸ், எம்.ஏ.,பி,எல், எழுதிய “ரிக் வேதகாலத்து இந்தியா” என்னும் புத்தகத்தில் 151-ஆம் பக்கத்தில் இருக்கிறது.

“ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில் தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

“ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.”

- இது சி.எஸ். சீனிவாசாச்சாரி எம்.ஏ. அண்டு எம்.எல். ராமசாமி அய்ங்கார் எம்.ஏ. ஆகிய சரித்திர போதகர்கள் எழுதிய “இந்திய சரித்திரம் முதல் பாகம்” என்னும் புத்தகத்தில், “இந்து இந்தியா” என்னும் தலைப்பில் 16, 17-ஆவது பக்கங்களில் இருக்கிறது.

“ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிடமிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக் கொண்டார்கள்.”

இது எச்.ஜி. வெல்ஸ் எழுதிய “உலகத்தின் சிறு சரித்திரம்” என்னும் புத்தகத்தில் 105-ஆம் பக்கத்தில் இருக்கிறது.

“ஜாதிப் பிரிவுகள் நான்கில் அதாவது பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவைகளில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரிய சம்பந்தப்பட்டவர்கள், கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதன குடிகள்.”

இது “ “New Age Encyclopedia,  ”(நியூ ஏஜ் என்சைக்ளோபீடியா
Vol. II 1925)  பக்கம் 237-இல் இருக்கிறது.

“ராமாயணம் தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதையும் அதைக் கைப்பற்றியதையும் உணர்த்தும் நூல்.”

இது இப்போது கல்வி மந்திரியாய் இருந்த சி.ஜே.வர்க்கி எம்.ஏ., எழுதிய “இந்திய சரித்திரப் பாகுபாடு” என்னும் பத்தகத்தின் 15-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“விஷ்ணு என்கின்ற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக் கொடுக்கவும் யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப்பட்டது.”

இது இ.பி. ஹாவெல் 1918-இல் எழுதிய “இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் சரித்திரம்” என்னும் புத்தகத்தின் 32-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“பாரதத்தில் இடும்பி என்று ஓர் ஆரியரல்லாத பெண்மணியைப் பற்றி எழுதிய பார்ப்பனக் கவி தனக்குள்ள ஜாதி துவேஷத்தால், ராட்சசி என்று எழுதி இருக்கிறான். ராட்சதர் என்கின்ற பயங்கர புரளி வார்த்தை வைதிகப் பார்ப்பானின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்.”

இது நாகேந்தரநாத் கோஷ் பி.ஏ., பி.எல். எழுதிய “இந்திய ஆரியரின் இலக்கியமும், கலையும்” என்ற புத்தகத்தின் 194-ஆவது பக்கம்.

“ராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாகக் கூறவும், திராவிடர்களை இழிவுபடுத்திக் காட்டவும் எழுதப்பட்ட நூலாகும்.”

இது பண்டிதர் டி. பொன்னம்பலம் பிள்ளையால் எழுதப்பட்ட “மலபார் குவார்ட்டர்லி ரிவ்யூ” என்னும் புத்தகத்தில் இருக்கிறது.

“இந்திய அய்ரோப்பியர்களால் (அதாவது ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட கறுப்பு மனிதர்களை (திராவிடர்களை) தஸ்யூக்கள் என்றும், கொள்ளைக்காரர்கள் என்றும் அடிக்கடி பிசாசுகளாக மாறக்கூடியவர்கள் என்றும் வேத இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கின்றது.”

இது பால்மாசின் அவர்செல் எழுதிய  “புராதன இந்தியாவும் இந்தியாவின் நாகரிகமும்” என்ற புத்தகத்தில் 19-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

இவையும், இவை போன்றவுமாகிய பல விஷயங்கள் பெயர் பெற்ற ஆராய்ச்சியாளகளுடைய ஆராய்ச்சியிலும், பல ஆரியப் பார்ப்பனர்களுடைய ஆராய்ச்சியிலும் ஆரிய வேத புராண இதிகாசங்களிலும் இருந்தே கண்டுபிடிக்கப்பட்டிருப்பவைகளாகும்.

ஆனால், ஆரியர் வருவதற்கு முன் திராவிட நாடு எப்படி இருந்தது என்பதற்கு ராமாயணத்திலேயே ஆதாரங்கள் இருக்கின்றன.

அதாவது - ராமாயணம் கிட்கிந்தா காண்டத்தில் சீதையைத் தேடுவதற்குத் தென் பாகத்திற்கு அனுப்பப்பட்ட அனுமானுக்குச் சுக்கிரீவனால் சொல்லி அனுப்பப்பட்ட வழிக் குறிப்புகளில்,

“காவேரி நதியைத் தாண்டிப் பொருநை நதியைக் கடந்து அப்பாற் சென்றால், பாண்டியனுடைய பொற்கதவமிட்ட மதிலரணைக் காண்பாய்” என்று சொன்னதாக வால்மீகியார் ராமாயணத்தில் கூறுகிறார்.

மற்றும், அவர் கூறுவது விந்தியமலைக்கு அப்பாலுள்ள திராவிட நாட்டில் தண்டகாருண்யம் கடந்தால் பிறகு.

“ஆந்திரம், சோழம், கேரளத்தோடு கூடிய பாண்டிய நாடுகளைக் காண்பீர்கள்”
“அதில் தேவரம்பையர் வந்து நீராடும்படியான தெளிந்த நீரையுடைய திவ்வியமான காவேரி நதியைக் காண்பீர்கள்.”

“பிறகு முதலைகள் நிரம்பிய தாமிரபரணியைக் காண்பீர்கள்”

“பிறகு பொன்னிறத்தாயும், முத்து மயமானதாயும், பாண்டியர்க்கு யோக்கியமானதாயுமுள்ள கபாடபுரத்தைக் காண்பீர்கள்.”

“அப்புறம் சமுத்திரத்தைக் காண்பீர்கள், அங்குச் சென்று உங்கள்  காரிய நிச்சயத்தைச் செய்யுங்கள்” என்று கூறியிருப்பதாக வடமொழி ராமாயணத்தில் காண்கிறோம். ஆகையால், திராவிட நாடு ஆரியர் இந்நாட்டிற்கு வருவதற்கு முன் மேன்மையாயும், நாகரிகத்துடனும், செல்வத்துடனும் தனிப்பட்ட அரசாட்சி உடையதாயும் இருந்து வந்திருக்கிறது என்பது விளங்குவதோடு, இப்படிப்பட்ட திராவிடமும், திராவிட மக்களும் ஆரியர் ஆதிக்கமும் கொடுமையும் ஏற்பட்ட பிறகே திராவிடர்கள் குரங்குகளாகவும், ராட்சதர்களாகவும் கற்பிக்கப்பட்டதோடு சூத்திரன் அடிமை, மிலேச்சன், சண்டாளன் என்பதுபோன்ற இழிமொழிகளுக்காளாகிச் சூத்திரர்களுக்கு (திராவிடர்களுக்கு) ஒரு நீதியும், ஆரியர்களுக்கு ஒரு நீதியும் கற்பிக்கப்பட்ட மனுதர்ம நீதி வழங்கப்பட்டிருக்கிறது.

அதாவது, பிராமணனுக்குத் தலையை முண்டிதம் செய்வது கொலைத் தண்டமாகும், மற்ற வருணத்தாருக்குக் கொலைத் தண்டமுண்டு.                                                       மனு அத். 11.379

அந்தணன் பூனை, அணில், காடை, தவளை, நாய், உடும்பு, கோட்டான், காகம் இவைகளைக் கொன்றதால், ஒரு சூத்திரனைக் கொன்றதாய்ச் செய்ய வேண்டி பிராயச்சித்தம் செய்யவேண்டும்.
மனு அத். 9.132

வைதிகக் கருமமாயிருந்தாலும், லௌகீகக் கருமமாயிருந்தாலும் அக்கினி எப்படி மேலான தெய்வமாயிருக்கிறதோ, அப்படியே பிராமணன் ஞானியாயிருந்தாலும், மூடனாயிருந்தாலும் அவனே மேலான தெய்வமாவான்.                                            மனு அத். 6.317

பிராமணன் துர்ச்செய்கையுள்ளவனாயிருந்த போதிலும், சகலமான சுபாசுபங்களிலும் பூசிக்கத்தக்கவன்; அவன் மேலான தெய்வமாதலால்.
மனு அத். 7.318-19

கருமானுஷ்டமில்லா பிராமணனேனும் அவன் அரசன் செய்ய வேண்டிய தீர்ப்புகளைச் செய்யலாம். சூத்திரன் ஒருபோதும் செய்யக்கூடாது.                                                       மனு அத். 8, 20

சூத்திரன் விலை கொடுத்து அடிமையாக வாங்கப்பட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் அவனைப் பிராமணன் நிர்ப்பந்தப்படுத்தி வேலை வாங்கலாம். ஏனென்றால் கடவுள் சூத்திரனைப் பிராமணனுக்கு வேலை செய்யும் ஒரே நிமித்தமாகவே படைத்திருக்கிறார்.    மனு அத். 8, 413

பிராமணன் சூத்திரனுடைய பொருளை முழுமனச் சமாதானத்துடன் (சற்றாயினும் பாவமென்றெண்ணாமல்) கைப்பற்றிக் கொள்ளலாம். ஏனெனில், அவனுக்குச் சொந்தமான தொன்றுமில்லையாதலாலும், அவன் சொத்தை அவன் எஜமான் எடுத்துக் கொள்ளலாமாதலாலும்,
மனு அத். 8, 417

ஒரு பிறப்பாளன் (சூத்திரன்) இருபிறப்பாளரை (பிராமணரை)த் திட்டினால், அவன் நாவை அறுத்தெறிய வேண்டும்.
மனு அத். 8, 270

அவன் அவர்கள் பேரையாவது, சாதியையாவது தூஷித்தால், பத்துவிரல் நீளமுள்ள பழுக்கக் காய்ச்சிய இரும்பை அவன் வாய்க்குள் செலுத்த வேண்டும்.                                                  மனு அத். 8,27

அவன் அகந்தையால் குருமாருக்கு அவர்களுடைய கடமைகளைப் பற்றி போதிப்பானானால், அவன் வாய்க்குள்ளும், காதுக்குள்ளும் கொதிக்கிற எண்ணெயை ஊற்றும்படிச் செய்வது அரசன் கடமை.                                                       மனு அத். 8,.280

அவன் உயர் குலத்தானை அடிப்பதற்குக் கையையாவது தடியையாவது உயர்த்தினால், அவன் கையை வெட்டியெறிந்து விட வேண்டும். அவன் கோபத்தினால் அவனை உதைத்தால், அவன் காலை வெட்டி யெறிந்துவிட வேண்டும்.                   மனு அத். 7.272

தாழ்குலத்தான், உயர்குலத்தோடு சமமாக உட்கார எத்தனித்தால், அவனை இடுப்பிற் சூட்டுக் கோல்கொண்டு சுட்டுத் தேசத்தை விட்டுத் துரத்திவிட வேண்டும். அவன் பின்பக்கத்தை வெட்டியெறிந்து விடலாம்.                                                                மனு அத். 7.281

அவன் அகந்தையால் அவன் மேல் உமிழ்ந்தால், அவன் உதடுகளிரண்டையும் அரசன் வெட்டியெறியும்படிச் செய்யவேண்டும்.
மனு அத். 8.282

இதுவரை எழுதி வந்தவை ஆரியர் - திராவிடர் யார் என்பதும், அவரவர்கள் வாழ்க்கைமுறை, தன்மை என்ன என்பதும், ஆரியரால் திராவிடம் இன்றைய இழிநிலை அடைந்ததற்குக் காரணம் விளங்கும்படி விளக்கப்பட்டவைகளாகும். இனி ஆரிய திராவிட சமய சம்பந்தமான விஷயங்கள் முதலியவை பற்றி அடுத்த தலையங்கத்தில் விளக்குவோம்.

-- விடுதலை - தலையங்கம் - 23.11.1939