Sunday, 20 February 2022

வீர வாலி

 வீர வாலி

“தோழர்களே,

இங்கு நடித்த வீரவாலி கதை நடிப்பைக் கண்டீர்கள். இதைப் பற்றி தலைமை வகித்தவன் என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

இந்தக் கதை இராமாயணக் கதையில் வரும் ஒரு பாகத்தை யொட்டி செய்யப்பட்ட கற்பனைச் சித்திரமாகும். இராமாயணமே ஒரு கற்பனைக் கதை. அதை மதவாதிகள் மதக்கதையாகவும், ஒரு வகை ஆஸ்திகர்கள் கடவுள் கதையாகவும் ஆக்கிவிட்டார்கள். அக்கதை இன்று ஆரியர்களாலும் அவர்களது அடிமைகளாலும் மக்களுக்கு மதப் பிரச்சாரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த இராமாயணக் கதைக்கு மூலக்கதை என்று சொல்லப்படும் வால்மீகி ராமாயணக் கதைப்படி சரியாக எவரும் பிரச்சாரம் செய்வதில்லை, அந்தப்படி நடிப்பதும் இல்லை. ஏனெனில் அதை வால்மீகி ராமாயணப்படி நடித்தால், அது மதப்பிரச்சாரத்திற்கோ அல்லது கடவுள் பிரச்சாரத்திற்கோ சிறிதும் பயன்படாது.

காரணம் என்னவென்றால், அது ஆதியில் உண்டாக்கியவர் என்று சொல்லப்படும், (உண்மையில் அவரால் எழுதப்பட்டிருக்குமானால்) வால்மீகி முனிவர் என்பவர் அதை ஒரு மதக் கருத்துக் கொண்டோ அல்லது அதில்வரும் “நல்ல” பாத்திரங்கள் என்பவர்களான ராமன் முதலியவர் களை தெய்வங்களாகவோ, தெய்வாம்சங்களாகவோ, ஒழுக்கம் நீதி நாணயம் ஆகிய குணங் கொண்டவர்களாகவோ, அதைப் படிப்பவர்கள் கருத வேண்டுமென்றோ, அக்கருத்துக்களை அப்பாத்திரங்களுக்குள் புகுத்த வேண்டுமென்றோ கருதி சித்திரித்தாரென்று சொல்வதற்கில்லை.

இராமாயணம் மூலக்கதை அல்ல

இது ஒருபுறமிருக்க மற்றொரு சங்கதி என்னவென்றால், இந்த இராமாயணக் கதை வால்மீகியால் கொடுக்கப்பட்ட ஒரு மூலக்கதை என்றுகூட சொல்வதற்கில்லை, என்பதாகும்.

அதாவது இராமாயணமானது கந்தப்புராணம் என்னும் ஒரு சைவக் கதையைப் பார்த்து வைணவ பரமாக கற்பிக்கப்பட்டதென்றும், அதுவும் கந்தப்புராணத்தை விட வெகுகாலத்திற்குப் பிறகு கற்பிக்கப்பட்டதென்றும், சொல்ல வேண்டியிருக்கிறது. கந்தப் புராணம் புராணங்களில் சேர்ந்ததாகும். இராமாயணம் இதிகாசங்களில் சேர்ந்ததாகும். புராண காலம் முந்தியதும் இதிகாச காலம் பிந்தியதுமாகும். ஆகவே தான் புராண வகையில் சேர்ந்த கந்தப் புராணம் முந்தியதென்றும், இதிகாச வகையில் சேர்ந்த இராமாயணம் பிந்தியதென்றும் சொல்லுகிறேன்.

இரண்டும் ஒன்றே

இதில் இராமாயணம் கந்தப்புராணத்தைப் பார்த்து ஏற்படுத்தப் பட்டது என்று ஏன் சொல்லுகிறேன் என்றால், இரண்டு கதையும் ஒரே போக்கு, ஒரே கருத்து, ஒரே தன்மையதாக இருந்து வருகின்றன.

இதுவும்கூட வைணவ பரமாய் ஏற்படுத்தப்பட்டது என்பது மாத்திரமல்லாமல், வைணவபரத்தில் உள்ள மற்றொரு இதிகாசமாகிய பாரதக் கதையின் ஆபாசத்தை, இழிவை நீக்குவதற்காக, வேறு ஒரு கதை ஏற்படுத்த வேண்டி இருந்ததை அனுசரித்து, பாரதத்தில் உள்ள சில இழிவையும் அசிங்கத்தையும் பெரும் அளவுக்கு நீக்குவதற்கு கற்பிக்கப்பட்டதாகும்.

இராமாயணம் பாரதத்துக்குப் பிந்தியது

ஆதலால் இராமாயணம் கந்த புராணத்திற்கு பிந்தியதும் பாரதத்திற்குப் பிந்தியதுமாகும்.

கந்தப் புராணத்திலும் பாரதத்திலும் உள்ள சில பகுத்தறிவுக்கு ஒவ்வாத போக்குகள் இராமாயணத்தில் குறைக்கப்பட்டிருக்கின்றன. முந்தையவற்றுள் கந்தப் புராணத்தில் சிவனை முதல் கடவுளாகக் காட்டப்படுவதற்கு தேவர்கள் சிவனிடம் சென்று, அசுரர்களின் கொடுமையைப் பற்றி முறையிட்டு, தங்கள் கஷ்டங்களை நீக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாகவும், சிவன் சுப்பிரமணியனைப் பெற்றுக் கொடுத்தாகவும் கூறப்பட்டுள்ளது. இராமாயணத்தில் விஷ்ணுவை முதற்கடவுளாகக் காட்டுவதற்காக, தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று தங்களை ராக்ஷதர்கள் கொடுமைப்படுத்துவதாக முறையிட்டு தங்கள் கஷ்டங்களை நீக்க வகை செய்ய வேண்டுமென்று கேட்டதாகவும், விஷ்ணு தானே அவதாரமெடுத்து வருவதாகக் கூறியதாகவும் கூறப்பட்டிருக்கிறது, இரண்டும் ஒன்றேயாகும். சிவன் தனது மகனைக் கொடுத்தார். விஷ்ணு தானே வந்தார். இருவரும் ராக்ஷதர்களையும், அசுரர்களையும். அழிப்பதற்கு வந்தவர்கள். அசுரர் ராக்கதர் என்பவர்கள் ஆரியரல்லாதவர்கள் என்றும், கறுப்பு நிறமுள்ளவர்களைத் தான் அப்படி அழைக்கப்படுகிறது என்றும், சாஸ்திர ஆதாரங்களிலேயே காணப்படுகிறது. இந்தத் தன்மையில் தான் இந்தக் கதைகள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன.

வாலி கதை புதியது

இராமாயணத்தில் வாலியின் பாகம் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்றாலும், அது ஆரியர்களுக்கு ஒரு படிப்பினைக்காக சேர்க்கப் பட்டிருக்கிறது என்றே கருதுகிறேன். அதாவது ஒழுக்கம், நீதி, வீரம், என்பதெல்லாம் தன் காரிய சித்திக்கு சமயம் போல், சவுகரியம் போல் நடந்து கொள்ள வேண்டும் என்ற கொள்கையை புகுத்துவதற்கேயாகும். இது சாதாரணமாக பஞ்ச தந்திரக்கதை கொள்கையைப் பொருத்த ஒழுக்கம், நீதியேயாகும்.இந்தக் கதை மதத்திற்கும், தெய்வத் தன்மைக்கும், நீதி தர்மத்திற்கும் பயன்படும் படியாக பிற்காலத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டுவிட்ட படியால் அதில்கண்ட விஷயங்களை தந்திரம் என்று சொல்லாமல் அதை தெய்வத்தன்மை, பொது தர்மம், சாஸ்திர நீதி என்று சொல்லப்பட வேண்டியதாக ஆகி விட்டதுடன், அதற்கேற்ற சில்லரைத் திருத்தங்களும் சில செய்யப்பட வேண்டியதாகிவிட்டன.

அதோடு மாத்திரமல்லாமல் கதையில் வரும் குற்றமுள்ள பாத்திரங்களை குற்றமற்றவர் களாகவும், குற்றமில்லாதவர்களை கெட்டவர்களாகவும் காட்டப்பட வேண்டியதாகவும் ஆகிவிட்டது.

சாதாரணமாக வாலியை மறைந்து நின்று இராமன் கொன்றது என்பது நீதி என்றும், தெய்வத்தன்மை என்றும் ஏன் காட்டப்பட வேண்டி வந்த தென்றால் வாலி பலசாலி என்பது ஒன்று, அவன் எதிரில் நின்று எவராலும் போர் செய்ய முடியாத வரப்பிரசாதி என்பது இரண்டு, இப்படிப்பட்ட ஒரு எதிரி ஆரியர்களுக்கு ஏற்பட்டால் என்ன செய்வது என்பதற்கு உதாரணமாகத் தான் “அப்படிப்பட்டவனை அவனுக்குத் தெரியாமல் சூழ்ச்சி செய்து மறைந்து இருந்து கொல்ல வேண்டியது” என்பதை வெற்றி தர்மமாகக் காட்டப்பட்டிருக்கிறது.

விபீஷணன்

விபீஷணன் விஷயமும் இது போலவேதான். அதாவது எதிரி பலவானாய் இருந்தால், அவனை வெல்ல வேண்டுமானால் எதிரிக் கூட்டத்தில் வேற்றுமையையும், சுயநல லாப உணர்ச்சியையும் காட்டி, பிரிவினை உண்டாக்கி, ஒருவனுக்கு உதவி செய்து சுவாதீனப்படுத்திக் கொண்டு மற்றவனை (எதிரியை) ஒழித்துவிட வேண்டும் என்கின்ற வெற்றி தர்மத்தைக் காட்டவே விபீஷணன் பாகம் சித்திரிக்கப்பட்டதாகும்.

அனுமான் விஷயமாகவும் இதைத்தான் படிப்பினையாகக் காட்டப் பட்டிருக்கிறது. அனுமான் வாலியிடம் அனாமதேய அடிமையாக இருந்திருக்கிறான். சுக்கிரீவனும் கீழ்ப்பட்டவனாகவே இருந்திருக்கிறான். வாலி கிஷ்கிந்தைக்கு அரசனாவான். இருவரும் அவன் (வாலி) இல்லாத போது நாட்டைத்தங்கள் சுவாதீனம் செய்து கொண்டார்கள். வந்தவுடன் நிலைமை அறிந்து வாலியால் விரட்டி அடிக்கப்பட்டு விட்டார்கள். இராமலட்சுமணன் வந்தவுடன் அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு வாலியைக் கொல்ல வாக்கு வாங்கிக் கொண்டார்கள். இராமன் வாலியைக் கொன்று வாக்கை நிறைவேற்றி, அவர்களை பயன்படுத்தி தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டான். இது தான் ஆரியரின் வெற்றி தர்மமாக என்றும் இருக்க வேண்டியது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்; இன்று இருந்து வருவதுமாகும்.

இதன் படிப்பினை

ஆகவே “எவனைக் கொண்டும் என்ன செய்தும் காரியம் சாதித்துக் கொள்ளலாம்” என்பது தான் இராமாயணத்தின் படிப்பினையாகும். அனுமார், சுக்கிரீவன், விபீஷணன் ஆகிய இவர்கள் ஆழ்வார்களாக ஆக்கப்பட்டதற்கு காரணமும் இதுவேயாகும். “அயோக்கியர்கள் தான் ஆரியர்களால் மதிக்கப்படுவோர்கள்” என்பதற்கு நமக்கு இது ஒரு நல்ல உதாரணமாகும். இதை மெய்ப்பிக்கத்தான் நமக்கு இந்தக் கதை (வீரவாலி என்ற கதையை) நடிக்கப்பட்டது. இதில் நடிகர்கள் வாலியின் உயர் குணத்தையும் பெருந்தன்மையையும் முக்கியப்படுத்திக் காட்டி இருப்பதோடு சுக்கிரீவன், அனுமான் தன்மையையும் சரிவர வெளிப்படுத்திக் காட்டப்பட்டிருக்கிறது.

இந்த மாதிரியாக ஆரியக் கதைகளின் உட்கருத்துக்களை நன்றாக வெளிப்படுத்திக் காட்ட வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏனெனில் நம்மக்கள் இக்கதைகளை ஒரு தந்திரக் கதை என்று கொள்ளாமல் ஒரு தெய்வீகக் கதை என்று எண்ணுவதைப் போக்கவே ஒழிய வேறில்லை. இதற்கு ஆக நாம் கதையை மாற்ற வேண்டும் என்கின்ற அவசியம் கூட இல்லை. வால்மீகியார் எழுதி உள்ளபடி நடித்தால் போதும். அவர் (அதாவது வால்மீகியார்) இராமாயணத்தில் இராமனையும் சீதையையும் மிகமிக சாதாரண கீழ்த்தர மக்களாகத் தான் காட்டி இருக்கிறாரே ஒழிய, உயர்தரமாக எங்கும் நடவடிக்கைகள் வைத்துக் காட்டவில்லை.

வால்மீகி இராமாயணக் கதைப்படி இராமனது பட்டாபிஷேகம் நன்றாய் விளக்கப்படுகிறது

ராமன் சூட்சி

  1. அதாவது அயோத்தியை தசரதன், தான் கைகேயியை திருமணம் செய்த காலத்திலேயே கைகேயிக்கு கொடுத்துவிட்டான். அந்த நிபந்தனை மீதுதான் கேகயராஜன் தனது மகளை தசரதனுக்கு கொடுத்திருக்கிறான்.

இதை வால்மீகி இராமாயணக் கதையில் இராமன் வாயினாலேயே சொல்ல வைத்திருக்கிறார்.

இந்த விஷயத்தை இராமன் தெரிந்திருந்தே, பரதன் இல்லாத போது அவனுக்கும் அவன் தாய் கைகேயிருக்கும் தெரியாமல் பட்டாபிஷேகம் செய்து கொள்ள சம்மதித்து தகப்பன் சூழ்ச்சிக்கு இணங்குகிறான்.

தசரதன் சூட்சி

தசரதன் சூழ்ச்சி செய்கிறான் என்பதையும் வால்மீகி தசரதன் வாயினாலேயே சொல்ல வைக்கிறார். அதாவது:

இராமனைக் கூப்பிட்டு தசரதன் முடிசூட்டு விழாவைப் பற்றிச் சொல்லும்போது “பரதன் இங்கு இல்லாதிருக்கும் சமயமே முடிசூட்டுக்கு ஏற்றநாள்” என்றும் “அவன் வருவதற்குள் முடிசூட்டு நடக்கும் வரை ஜாக்கிரதையாக இரு” என்றும் தசரதன் சொன்னதாக சித்திரத்திருக்கிறார்.

சீதை இழிதன்மை

இதுபோலவே சீதையைப் பற்றியும் வால்மீகி, சீதை வாயினாலேயே அவளை கீழ்த்தரப் பெண்ணாக கித்தரித்திருக்கிறார்.

இராமன் காட்டுக்குப் போகும் போது அவன் சீதையை “அயோத்தியிலேயே இரு” என்று சொன்ன போது சீதை “என்னை பரதனுக்கு கூட்டிக் கொடுத்து அதனால் நாடு அடையப் பார்க்கிறாயா?” என்றும், லட்சுமணன் வனத்தில் சீதைக்கு காவலாக இருக்கும் போது மானின் பின் சென்ற இராமன் உடனே திரும்பி வராதது கண்டு லட்சுமணனை இராமனுக்கு உதவியாகச் செல்லும்படி சீதை சொன்னதை இலட்சுமணன் கேட்காமல், சீதைக்கு “காவல் இருக்க வேண்டியது முக்கியம்” என்று சொன்னவுடன், சீதை லட்சுமணனை “நீ என்னைக் கைப்பற்றவும் என்னை அனுபவிக்கவும் இப்படிப் பேசுகிறாய் அயோக்கியனே” என்றும், மற்றும் பல இழிமொழி சொன்னதாக சீதை வாயாலேயே சித்தரிக்கிறார்.

விபீஷணன் தன்மை

விபீஷணனை இராமன் சேர்த்துக் கொள்ளும் போது “விபீஷணன் அயோக்கியன் சகோதரத் துரோகி ஆதலால் அவனைச் சேர்க்கக் கூடாது” என்று பக்கத்தில் இருந்த லட்சுமணன் முதலிய நண்பர்கள் சொன்ன போது “அப்படிப்பட்ட அயோக்கின் தான் இப்போது நமக்கு வேண்டும்”, பரதனைப் போன்றவர்களால் நம் காரியம் ஈடேறாது என்பது ஆகச் சொல்லுவதாக இராமன் வாயாலேயே சொல்லச் செய்கிறதுடன், இவனால் நமக்கு கெடுதி செய்ய முடியாது என்று சொன்ன மாதிரியில் சித்தரிக்கிறார்.

மற்றும் பல ஒழுக்க ஈனம், நாணய ஈனம் ஆன காரியங்கள் ஏராளமாக இராமாயணக் கதையில் வரும் நல்ல பாத்திரங்கள் என்பவர்கள் மீது காணக்கிடைக்கிறது. ஆதலால் தான் வால்மீகி இராமாயணப்படி நாடகம் நடித்தாலே, இராமாயணத்தின் தெய்வீகத் தன்மை, மதத்தன்மை ஆகியவைகள் ஒழிந்து போகும் என்று சொல்லுகிறேன்” என்பதாகக் கூறி நாட்டில் நடைபெறும் கேடுகளை- விளக்க நாடக, சினிமா துறையில் செய்யவேண்டிய திருத்தங்களைப் பற்றியும் அவைகளைச் செய்யக் கறுப்புச் சட்டைப்படை வேலை செய்யும் என்றும், பேசினார்.

பின் குறிப்பு : சேலம் ஜில்லா எடப்பாடியில் 27.12.46 ஜலகண்டபுரம் தோழர் ஜே.பி.கண்ணன் அவர்களால் சித்தரிக்கப்பட்ட கதை, தோழர் பிரதான நடிகராக இருந்து அய்யா தலைமையில் காட்டிபோது நாடக முடிவில்  ஆற்றிய உரை

-- குடிஅரசு தலையங்கம் 05.01.1946

இராமனுக்கு பல பெண்டாட்டிகள்

 இராமனுக்கு பல பெண்டாட்டிகள்

இராமாயணம் என்பது சூரியகுல அரசர்களின் சரித்திரங்களில் ஒன்று என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், இராமாயணம் என்னும் பெயரால் பல நூற்றுக்கணக்கான இராமாயணங்கள் இருந்ததாகவும், நூறு கோடிக்கணக்கான சுலோகங்கள் இருந்ததாகவும், அவைகள் காலப் போக்கில் பல தெய்வீகக் காரணங்களால் மறைந்து போய் விட்டன வென்றும், ஆனாலும் இப்போது 24 விதமான இராமாயணங்கள் இருப்பதாகவும், அவற்றை திரு.கோவிந்ததாஸ் அவர்கள் வட இந்தியாவிலுள்ள ஒரு மடத்தில் தாமே நேரில் பார்த்ததாகவும் தான் எழுதிய இந்துமதம் என்ற புத்தகத்தில் எழுதியிருக்கின்றார். அதை அனுசரித்தே சென்னை மைலாப்பூர் இராமாயண விலாசம் என்னும் கிருகத்தில் உள்ள இராமாயணப் பிரசுரகர்த்தாவாகிய திரு.சி.ஆர்.சீனி வாசய்யங்கார் பி.ஏ. என்பவரால் எழுதப்பட்டு 1928ம் வருஷத்தில் அச்சிட்டு வெளிப்படுத்தியிருக்கும் இதர இராமாயணங்கள் என்னும் புஸ்தகத்தில் மேல்கண்ட விஷயங்கள் விளக்கப்பட்டு முதல் தடவையாக நான்கு இராமாயணங்கள் அதில் விவரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன. (அப்புஸ்தகத்தின் விலை ரூ.1) அவையாவன:- ஜைன ராமாயணம், பவுத்த ராமாயணம், யவன ராமாயணம், கிறைஸ்தராமாயணம் என்பவைகளாகும்.

இவற்றுள் யவன ராமாயணம், கிறைஸ்தராமாயணம் ஆகியவைகள் பெரும்பாலும் இராமாயணக் கதையைப் போன்ற போக்கில் இருந்தாலும் கதைகளில் வரும் பெயரும் மற்ற சில்லறை விஷயங்களும் பெரிதும் மாறுபட்டு அந்தந்த பாஷைக்கு ஏற்ற பெயர்களாக இருப்பதால் அதை நாம் இதில் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு உபயோகித்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் மற்ற இரண்டும் அதாவது ஜைன பவுத்த ராமாயணங்கள் பெரிதும் கதைப் போக்கிலும் பெயர்களிலும் எல்லாம் பொருத்தமாக இருக்கின்றன. ஆனால் சில்லறை விஷயத்தில் உண்மைகள் மாத்திரம் மாறுபட்டிருக்கின்றன. அதில் ஜைன ராமாயணம் என்பது இப்போதும் அடையாறு புத்தக சாலையில் வைக்கப்பட்டிருப்பதாகப் பதிப்பாசிரியரே எழுதியிருக்கின்றார். அதில் தசரதன், ராவணன் முதலியவர்களுடைய சந்ததிக்கிரமம், பிறப்பு, வளர்ப்பு முதலியவைகளும் சிறிது வித்தியாசப்பட்டாலும் மூல புருஷனாகிய தசரதனை அப்படியே ஏற்றுக் கொண்டு அவனுக்கு நான்கு மனைவிகள் என்றும் அவர்களின் பெயர்கள் 1. அபராஜிதை, 2. சுமத்தரை, 3. கைகேயீ, 4. சுப்ரபை என்றும் குறிப்பிட்டு விட்டு கைகேயிக்கு தசரதன் கொடுத்த இரண்டு வரத்தையும் அப்படியே குறித்திருப்பதுடன், அபராஜிதைக்கு ராமன் பிறந்ததாகவும் சுமத்திரைக்கு லட்சுமணன் பிறந்ததாகவும் கைகேயிக்கு பரதன் பிறந்ததாகவும் சுப்ரபைக்குச் சத்துருக்னன் பிறந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

இதுபோலவே சீதையை ஜனகராஜனுடைய மகள் என்றும், வில்லை வளைப்பவனுக்கு ஜனகன் சீதையைக் கொடுப்பதாக நிபந்தனை வைத் திருந்தான் என்றும், ஆகவே வில்லை வளைத்தே ராமன் சீதையை மணந்தான் என்றும், லட்சுமணனுக்கு 18 பெண்சாதிகள் என்றும், பரதனுக்கு ஜனகனுடைய சகோதரரின் குமாரத்தி கொடுக்கப்பட்டாளென்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. மற்ற பட்டாபிஷேகக் கதையும் வால்மீகி ராமாயணத்தைப் போலவே இருந்தாலும் சிறுசிறு மாறுதல்களுடன், தபசு செய்ததற்காக சம்பூகன் வதைக்கப்பட்டதும் குறிக்கப்பட்டிருப்பதோடு இராமனுக்கு நான்கு பெண்சாதிகள் என்றும் அவர்களின் பெயர்! சீதை, 2. பிரபாவதி, 3. ரதினிபா, 4. ஸ்ரீதாமா என்பவர்கள் என்றும் குறிக்கப்பட்டிருக்கிறது.

பவுத்த ராமாயணத்திலும், தசரதராஜனுக்குப் பதினாயிரம் மனைவிகள் என்றும் அவர்களில் மூத்தவளுக்கு ராமன், லட்சுமணன் என்பவர்களான இரண்டு ஆணும், சீதை என்று ஒரு பெண்ணும் ஆக மூன்று குழந்தைகள் பிறந்தன என்றும், அடுத்த மனைவிக்குப் பரதன் என்கின்ற ஒரு ஆண் குழந்தை மாத்திரம் பிறந்தது என்றும், அரசன் பரதனுக்கு பட்டம் கொடுப்பதாய் இளைய மனைவிக்கு வாக்குக் கொடுத்திருந்தான் என்றும், ஆனால் அரசன் அந்தப்படி செய்யாமல் ராமனுக்குப் பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்தான் என்றும், இளைய மனைவி கட்டாயப்படுத்தினதால் பரதனுக்குப் பட்டம் கொடுத்துவிட்டு ராமன், லட்சுமணன், சீதை ஆகிய சகோதர சகோதரிகளைப் பரதன் கொன்றுவிடுவான் எனப் பயந்து காட்டுக்கனுப்பி விட்டான் என்றும், பரதன் தமையனைத் தேடி காட்டுக்குப் போய் ராமனையே பட்டத்தை ஒப்புக் கொள்ளச் சொன்னதாகவும், ராமன் தன் தகப்பனார் இறந்த பிறகுதான் தாம் நாட்டுக்குத் திரும்பிவர முடியுமென்றும், அதுவரை தனது பாதரட்சையையும் மற்ற சகோதர சகோதரிகளையும் அனுப்பும்படி கேட்டு வாங்கி அழைத்து வந்ததாகவும் பன்னிரண்டு வருடமானபின் தசரதன் இறந்து போனதாகவும், பிறகு ராமன் அயோத்திக்கு வந்ததாகவும், வந்தவுடன் ஊர் ஜனங்கள் ராமனுடைய தங்கையாகிய சீதையை அவளது தமையனாகிய ராமனுக்குக் கலியாணம் செய்வித்து பட்டம் கட்டினதாகவும் எழுதப்பட்டிருக்கின்றது.

இவைகளை மெய்ப்பிக்க திரு. அய்யங்கார், அந்தக் காலத்தில் அண்ணனும், தங்கையும் கலியாணம் செய்து கொள்ளும் வழக்கம் உண்டு என்றும் எகிப்து தேச ராஜ தர்மமே சகோதரியை மணப்பதுதான் என்றும் இதை அறிந்து தான் ரிக்வேதம் 10- வது மண்டலத்தில் 10,12 சுலோகங்களில் சகோதரியை மணப்பது கண்டிக்கப்பட்டிருக்கின்றதென்றும், அதற்கு முன் அவ்வழக்கமிருந்து வந்ததற்கு மேலும் ஆதாரமாக சூரியனும் அக்கினியும் தங்களது தங்கைகளையே மணந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் எழுதியிருக்கின்றார்.

திரு.சி.ஆர்.சீனிவாசய்யங்கார் தாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வால்மீகி ராமாயணம் பின்பகுதிக் குறிப்பு 431ஆம் பக்கத்தில், சீதை தசரதனுடைய மகள் என்றும், அவளைத் தசரதன் ஜனகனுக்குத் தானம் கொடுத்தார் என்றும், அவள் பூமியில் பட்டால் பூமி இழுத்துக் கொள்ளும் என்றும், ஆதலால் பூமியில் விடாமல் காப்பாற்ற வேண்டுமென்ற நிபந்தனையுடன் தசரதன் கொடுத்தான் என்றும், தசரதன் இல்லாதபோது ஒரு நாள் சீதை பூமியின் மீது நின்றுவிட்டாள் என்றும், அதனால் அவள் பூமிக்குள் மறைந்துபோய் விட்டாள் என்றும், பிறகு கொஞ்சகாலம் பொறுத்து ஜனகன் பூமியை உழும்போது சீதை பூமிக்குள்ளிருந்து கலப்பையில் தட்டுப்பட்டு ஜனகனால் எடுத்து வளர்க்கப்பட்டாள் என்றும், ஆனால் ஜனகனுக்கு அவள் தான் முன் வளர்த்து வந்த சீதை என்று தோன்றவில்லையென்றும், ஆகவே அவளது தமையனாகிய ராமனுக்கே அவளைக் கலியாணம் செய்து கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டுவிட்டு இந்த விஷயம் வசிஷ்ட புராணத்திலும் கண்டோத்திர புராணத்திலும் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

அன்றியும் இதே திரு.சீனிவாசய்யங்கார், எவனொருவன் தன்னுடைய தங்கையை மணம் செய்து கொள்ளுகின்றானோ அவன் மனைவியைத் தூக்கிக் கொண்டு போவதால் உனக்கு மரணமுண்டு என்று ராவணனுக்கும் ஒரு காலத்தில் நாரதர் சாபம் கொடுத்திருந்ததாகவும், அந்தச் சாபத்தின் பலனாய் இராவணன் இராமன் தன் தங்கையாகிய சீதையை மனைவியாக மணந்து கொண்ட விஷயம் தெரியாமல் சீதையைத் தூக்கிக் கொண்டு போவதாகவும், அதனாலேயே இராவணன் இராமனால் கொல்லப்பட்டதாகவும், இராவணனுக்கு உண்மையில் ராமன் தன்தங்கையைக் கட்டிக் கொண்டது தெரியாதென்றும் தெரிந்திருந்தால் சீதையைத் தொட்டிருக்க மாட்டான் என்றும், இந்த உண்மைகள் பார்க்கவ புராணத்தில் இருப்பதாகவும் மேற்கண்ட 431- ம் பக்கத்திலேயே குறிப்பிட்டிருக்கின்றார்.

மற்றும் இதே திரு. சீனிவாசய்யங்கார் அதற்குக் கீழேயே சீதை இராவணன் மகள் என்றும், அவர்கள் பிறந்த கால தோஷத்தால் தகப்பனுக்கு (இராவணனுக்கு) ஆபத்து விளையும் என்று நாரதர் இராவணனுக்குச் சொன்னதாகவும், அந்தக் காரணத்தால் இராவணன் தன் மகளாகிய சீதையை ஒரு பெட்டியில் வைத்து சமுத்திரத்தில் கொண்டுபோய் எறிந்துவிட்டதாகவும், அது ஜனகனது ராஜ்யத்தில் ஓடும் ஆற்றிலடித்துக் கொண்டு வரப்பட்டதாகவும் அதை ஜனகன் கண்டெடுத்து வளர்த்து ராமனுக்குக் கொடுத்ததாகவும், இராமனும் சீதையும் வனத்திலிருக்கும்போது இராவணன் சீதையைத் தன் மகள் என்று தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து விட்டதாகவும், குறிப்பிட்டு விட்டு இந்த உண்மை மவுட்கலிய இராமாயணத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இவைகள் உண்மையாய் இருக்கலாம் என்பதற்கு அவர் ஒரு யுக்தி காரணமும் சொல்லுகின்றார். அதாவது, சீதையின் பிறப்பைப் பற்றியோ அவளுடைய பழைய சங்கதியைப் பற்றியோ வால்மீகர் எங்கும் ஒருவரி கூட எழுதவில்லை. ஆதலால் இந்தக் கூற்றுகள் உண்மையாக இருக்கலாம் என்கின்றார்.

எனவே சீதை தசரதனுக்கு மகள் என்பதற்கும் இராமனுக்குத் தங்கை என்பதற்கும் இதுவரை 4,5 ஆதாரங்களும், ராவணனுக்கு மகள் என்பதற்கு இரண்டு ஆதாரங்களும் கிடைக்கின்றன. இன்னமும் மற்ற இராமாயணங்களில் என்னென்ன பந்துத்வங்களும் இருக்குமென்பது ஊகிக்கக் கூடவில்லை.

---  தந்தை பெரியார் - ‘குடிஅரசு’ கட்டுரை, 03.03.1929

இராமாயண எரிப்பு ஏன்?

 இராமாயண எரிப்பு ஏன்?


இராமாயணத்தை ஆரியர் - திராவிடர் போராட்டம் என்றும்; ‘இராமாயணக் கதை திராவிடரை இழிவுபடுத்துவதற்காகவே ஆரியர்களால் கற்பனை செய்யப்பட்ட கட்டுக்கதை’ என்றும்; ‘இராமாயணக் கதை ஆரியருக்குத் திராவிடர்கள் மீது இருந்த வெறுப்பைக் காட்டுவதற்கென்றே ஆரியரால் (பார்ப்பனரால்) புனையப்பட்ட கதை’ என்றும்; ‘இராமன் ஆரியத் தலைவன் - இராவணன் திராவிட அரசன்’ என்றும்; மற்றும் ‘இராமாயணம் புத்தனுக்குப் பின் கற்பனை செய்து பார்ப்பனரால் எழுதப்பட்டது’ என்றும்; ‘இராமாயணம் நடந்த கதையல்ல, சரித்திரத்தில் பட்டது அல்ல, நீதியும் அல்ல’ என்றும்; ‘இராமாயணம் பார்ப்பனர்கட்கு அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைத் தொகுப்பு’ என்றும் - மற்றும் பலவாறாகச் சரித்திர ஆசிரியர்கள் முதல் ஆய்வாளர்கள் உள்படப் பார்ப்பனராலும், வெளிநாட்டு அறிஞர்களாலும், சுயமரியாதை உணர்ச்சியுள்ள தமிழறிஞர்களாலும் ஆதாரங்களுடன் சொல்லப்பட்டிருக்கிறது. இவற்றிற்கு ஆதாரங்களும் நம்மிடம் இருக்கின்றன. அவைகட்கு அன்று முதல் இன்று வரை எந்த அறிவாளியும் - தமிழரில் எந்தப் புலவரும் ஆட்சேபணையோ, மறுப்போ கூறியது கிடையாது.

மற்றும், இந்த இராமாயணத்தைப் பற்றி அதில் காணப்படும் ஆபாசங்களுக்கு, ஒழுக்கக் கேடான காரியங்களுக்கு, அநீதிகளுக்கு நாளதுவரை எந்தப் புலவரும் மறுப்புக் கூறியதும் கிடையாது.

இப்படிப்பட்ட நிலையிலுள்ள இராமாயணத்தைக் கடவுள் கதையாகப் பாவித்து, பாமர மூட மக்களிடம் புலவர்கள் புகுத்தி, அதில் பயன் பெறுகிறார்கள் என்றால் - இதற்கு எதை ஒப்பிடுவது? இப்புலவர்களுக்கு எதை உதாரணமாக்குவது?

தோழர்களே! சிந்தியுங்கள்! நன்றாய்ச் சிந்தியுங்கள்!

புலவர்களுக்குப் புத்தி, மானம் இல்லாவிட்டாலும் நீங்களாவது கொளுத்துங்கள் கம்ப இராமாயணத்தை!

(‘விடுதலை’ - தலையங்கம், 276.10.1972)

இதுதான் இராமாயணம் இவன் தான் ‘ராமன்’

 இதுதான் இராமாயணம் இவன் தான் ‘ராமன்’

இராமாயணம் அவரவர் சாதிகளையும், பிரிவுகளையும் தானே நிலைநாட்டுகிறது?

ஒரு இடத்தில் அனுமார் இராமன் காலில் விழுகிறான். இராமன் அனுமாரைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு மன்னிப்புக் கேட்கிறான். ‘நீயோ ஒரு பிராமணன். நான் க்ஷத்திரியன். என் காலில் வந்து விழலாமா? இந்தப் பாவத்தை நான் எங்கே போய்த் தீர்ப்பேன்?” என்று கூறுகிறான்.

இராமன் அயோத்தியில் இருந்து காட்டுக்குப் புறப்படும் சமயம், “என் பணத்தையும், சொத்துக்களையும், என்னிடத்தில் இப்போது இருக்கும் மாடுகளையும் கொண்டு வாருங்கள். முழுவதையும் பிராமணருக்குக் கொடுத்து விடுகிறேன்!” என்பதாகச் சொல்லுகிறான்.

சீதை, “என் நகைகள் முழுவதையும் கொண்டு வாருங்கள். பிராமணனுக்குக் கொடுத்து விட்டுப் போனால் புண்ணியம்” என்பதாகச் சொல்கிறாள்.

சூர்ப்பனகை, ‘என்னைத் திருமணம் செய்துகொள்’ என்று கேட்கும்போது, ‘நீ ஒரு சாதி, நான் ஒரு சாதி, எப்படித் திருமணம் செய்து கொள்வது?’ என்கிறான்.

ஒரு இடத்தில் தாடகை மகனை இலட்சுமணன் கொன்றுவிட்டு, ‘இந்தப் பாவத்திற்கு என்ன செய்வேன்?’ என்று வருத்தப்பட்டுக் கொள்கிறான். அதற்கு இராமன், ‘சூத்திரனைத் தானே கொன்றாய், அதனால் பாவமில்லை கவலையை விடு’ என்று கூறுகிறான்.

சம்பூகன் ஒரு சூத்திரன். அவன் தவம் செய்ய உரிமையில்லை என்று கூறி அவனைக் கண்டங் கண்டமாக வெட்டி விடுகிறான். இப்படி எங்கு பார்த்தாலும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வருணாசிரம தர்மம் தாண்டவ மாடுகிறது. இப்படி இருக்கும் இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்பதில் என்ன தப்பு?”

(பெரியார், ‘விடுதலை’ 13.9.56)

இராமாயணமும் பார்ப்பனீய தந்திரமும்

 இராமாயணமும் பார்ப்பனீய தந்திரமும்


முதலாவது திரு.ஆச்சாரியார் இராமாயணத்தை ஒரு மத சம்பந்தமான புஸ்தகமாய் கருதுகின்றாரா? அல்லது இலக்கிய சம்பந்தமான ஒரு பொது கதை புஸ்தகமாய் கருதுகின்றாரா? என்பதே நமது கேள்வி.

ஒரு சமயம் அவர் அதை இலக்கிய நூலாகக் கருதுவதாயிருந்தால் அந்தப்படி கம்பராமாயணத்தை மாத்திரம் கருதுகிறாரா? அல்லது வால்மீகி இராமாயணத்தையும் சேர்த்து கருதுகிறாரா? அல்லது இரண்டையுமே கருதுகின்றாரா என்பதே இரண்டாவது கேள்வியாகும்.

நிற்க, திரு.ஆச்சாரியார் தனது பிரசங்கத்தில் “இராமாயணம் நடந்த கதை அல்ல” என்று ஒப்புக் கொண்டுவிட்டார். ஆனால் அதைப் பற்றி மற்றவர்கள் விவகரிப்பது தப்பு, மூடத்தனம் என்கின்றார்.

இந்த புத்தி இவர்களுக்கு இவ்வளவு நாளாக எங்கு போயிற்று என்று கேட்கின்றோம். இராமாயணம் பொய் என்று நாம் சொன்ன காலத்தில் நம்மை நாஸ்திகர்கள் என்று சொன்ன இந்தக் கூட்டத்தார்கள் இப்போது தாங்களாகவே இராமாயணம் பொய், அதைப்பற்றி ஒன்றும் பேசாதீர்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் இப்போது இவர்களுக்கு ஏன் வந்தது? என்று பார்ப்போமானால்.

இராமாயணக் கதை பூராவையும் வெளியில் இழுத்து, அதன் வண்டவாளத்தை வெளிப்படுத்த தைரியம் கொண்டதால் இப்போது “போதும் போதும் இராமாயணம் நடந்ததல்ல பொய்” என்று சொல்ல வந்துவிட்டார்.

ஏன் அப்புத்தகத்தில் இருப்பதாக நாம் வெளிப்படுத்தி வந்த விஷயங்களில் ஒரு வார்த்தையைக் கூட ஆஷேபிக்க முடியாமல் போய்விட்டதேதான் என்பதை மாத்திரம் இனி யாரும் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயமாய்விட்டது.

“காலானிக்கி வேஸ்தே மூலானிக்கி வொஸ்துரு” என்கின்ற ஆந்திரப் பழமொழிப்படி (பத்துக்கு அடிப்போட்டால் தான் அய்ந்துக்காவது வருவார்கள்) இராமாயணம் ஆரியர் திராவிடர் சரித்திரம் என்று ஆராய்ச்சிக்காரர்கள் சொல்ல வந்த பிறகே தான் இராமாயணம் பொய் என்று பார்ப்பனர்கள் சொல்லித் தீரவேண்டிய அவசியத்திற்கு வந்துவிட்டார்கள்.

இல்லாவிட்டால் இராமாயண ஆராய்ச்சியால் பார்ப்பனக் கொடுமை வெளியாகி விடும் என்கின்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. தவிரவும் திரு.ஆச்சாரியார் ‘ராமனை போற்றுகின்றவர்களை எப்படி மூடர்களாகக் கொள்ளுகின்றேனோ அவ்வாறே இராவணனை போற்றுகின்றவர்களையும் மூடர்களாக கருதுகின்றேன்’ என்று சொல்லுகின்றார்.

அப்படியானால் இந்தப் புத்தியும் இவருக்கு இத்தனை நாளாக எங்கு போய் இருந்தது என்று கேட்கின்றோம். இராவணனை யாரும் கடவுள் என்று சொல்லிப் போற்றுவதே இல்லை.

ஆனால், இராமனை கடவுள் அவதாரம் என்றும், கடவுளே என்றும் சொல்லிபோற்றி வணங்குகின்றார்கள். அதுவும் வெகுகாலமாய் அப்படிச் செய்து வருகின்றார்கள். இராவணனையோ என்றால் நேற்று முதற்கொண்டுதான் போற்ற ஆரம்பித்தார்கள்.

அதுவும் ஏனென்றால் ராமன் கடவுள் அவதாரமல்ல என்று சொன்னவர்களை நாத்திகர்கள் என்றும், மதத்துரோகிகள் என்றும் திரு.ஆச்சாரியார் கூட்டம் சொன்னதால், “சரி அப்படியானால் இராமாயணக் கதைப்படியே இராவணன் யோக்கியன், அவன் போற்றப் பட வேண்டியவன்.

இராமன் அயோக்கியன், அவன் இழித்துப் பழிக்கப்பட வேண்டியவன்” என்று மெய்ப்பிக்க மக்கள் துணிந்து ஆரம்பித்த பிறகே இப்போது திரு .ஆச்சாரியார் “பிச்சை போடாவிட்டாலும் பரவாயில்லை நாயை பிடித்துக் கட்டு” என்கின்ற பழமொழிப்படி யார் ராமனை வணங்கா விட்டாலும் பரவாயில்லை ராவணனைப் போற்ற வேண்டாம் என்று சொல்லித் தீரவேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டார்.

மற்றும், இராமனுக்கும் இராவணனுக்கும் பெயரளவில் வியாக்கியானம் செய்வதில் இராமன் என்கின்ற பெயரை விட இராவணன் என்கின்ற பெயருக்கு அதிக மதிப்பு கொடுக்கவும் வந்துவிட்டார். ஆனால் அதை பித்தலாட்டமான முறையில் சொல்லுகின்றார். என்னவென்றால் இராமன் என்பது இரா - மன் = இராமன் - இல்லாத அரசன் என்றும் இராவணன் என்பது இராமனின் அண்ணன் என்றும் பொருள்படுவதாக வடமொழியை தென்மொழியில் அர்த்தப்படுத்தி காட்டி ஏய்க்கப் பார்க்கிறார்.

தவிரவும் “இராமாயணம் பொய்க்கதை ஆகையால் இராவணன் பெருமையைப் பற்றிப் பேசுவது மூடநம்பிக்கை” என்கின்றார். உண்மையிலேயே திரு. ஆச்சாரியார் மூட நம்பிக்கைக்காக பரிதாபப் படுபவரானால் அவருடைய முதல் வேலை இராமாயண ஆராய்ச்சிக்காரரையும் இராமாயண இரகசியம் வெளிப்படுத்துபவர்களையும் திருத்துவதல்ல என்றும், மற்றென்னவெனில் ராமாயணத்தின் பெயரையும் ராமன் பெயரையும் சொல்லிக் கொண்டு செட்டிநாட்டில் கொள்ளை அடிக்கும் சோம்பேறி அயோக்கியர்களையும், இராமாயணத்தையும் ராமனையும் உண்மை என்று நம்பிக்கை கொண்டு மேற்படி அயோக்கியர்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கும் முழு மூடர்களையும் திருத்த வேண்டியதே முதல் வேலையாகும் என்று மறுபடியும் திரு. ஆச்சாரியாருக்கு சொல்லுகிறோம்.

மற்றபடி அந்த வேலையை விட்டுவிட்டு “இராமனுக்கு கொடுத்தால் இராவணனுக்கும் கொடுங்கள்” “இராமன் யோக்கியனென்றால் இராவணன் அவனை விட யோக்கியன்” என்று சொல்லுகிறவர்களிடம் வந்து இவர் பரிதாபப்பட வேண்டியதில்லை என்பதே நமது கருத்து.

தவிரவும் “ராமன் க்ஷத்திரியனே தவிர பிராமணன் அல்ல” என்கின்றார். இராமன் பிராமணனானாலும், க்ஷத்திரியனானாலும் தவம் செய்ததற்காக ஒரு சூத்திரனைக் கொன்றான் என்று எழுதியிருப்பதால் அவன் பிராமணத் தன்மை கொண்டவனும் பிராமணனை விட அதிகமான அயோக்கியனும் என்று தான் கொள்ள வேண்டியதே தவிர அதில் ஒன்றும் விதிவிலக்கு இருப்பதாகவும் நமக்கு சிறிதும் தோன்றவில்லை.

இனி கம்பரைப் பற்றி திரு. ஆச்சாரியார் மிகப் புகழ்ந்து அவருக்கு வக்காலத்து பேசுகிறார். திருவள்ளுவரை தலைகாட்டாமல் அடித்த இந்தப் பார்ப்பனர்களுக்கு கம்பர் மீது இவ்வளவு கருணை வந்ததற்குக் காரணம் என்னவென்றுப் பார்த்தாலே கம்பர் யோக்கியதை நன்றாய் விளங்கும். கம்பரை ஷேக்ஸ்பியர், ஹோமர், ஷெல்லி முதலிய மேல்நாட்டு கவிகளுக்கு ஒப்பிட்டு ஷேக்ஸ்பியர் வேண்டுமா? இந்தியா வேண்டுமா? என்று ஒரு ஆங்கிலேயனைக் கேட்டால் அவன் ஷேக்ஸ்பியர் வேண்டுமென்றுதான் சொல்வான் என்று இதற்கு உதாரணங்காட்டி கம்பராமாயணம் என்கின்ற காவியம் இந்திய நாட்டை விடசிறந்தது என்று சொல்லுகின்றார். அதாவது இந்தியாவை இழந்தாவது ராமாயணத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிறார்.

இது சிறிதாவது பொருத்தமுள்ள உதாரணம் என்றோ அறிவுள்ள உதாரணம் என்றோ யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம். ஷேக்ஸ்பியரையும் ஷெல்லியையும் ஆங்கிலேயர்களில் எந்த முட்டாளும் கடவுளாகக் கும்பிடுவதில்லை என்பதையும் ஷேக்ஸ்பியரிலும் ஷெல்லியிலும், வரும் நாடக பாத்திரர்களுக்கு ஆங்கிலேயரில் எந்த மடையனும் கோயில்கட்டி, கல்யாண உற்சவமும், தெப்ப உற்சவமும், வைரத்திலும் செகம்பிலும் நாமமும் நகையும் போடுவதில்லை என்பதையும் திரு.ஆச்சாரியார் அறியாரா? அல்லது அறிந்தே ஏய்க்கிறாரா? என்று கேட்கின்றோம்.

தவிரவும் நமக்கு இராமாயணத்தில் உள்ள தகராரெல்லாம் ராமனையும் சீதையையும் அநுமாரையும் கடவுளாகக் கும்பிடுவதிலேயே ஒழிய கவி நயத்தில் அல்ல என்பதை திரு.ஆச்சாரியார் தெரிந்து கொள்ளாதது விசனிக்கத் தகுந்ததேயாகும். தவிரவும் திரு ஆச்சாரியார் கம்பரானவர் உலக நன்மையை கோரி பொருள், போகம், வேகம் ஆகியவைகளை மக்களுக்கு ஊட்டுவதற்காக ஒரு வீரனது கதையை எழுதியதாக சொல்லுகின்றார்.

இந்த இடத்தில் திரு.ஆச்சாரியாரின் கருத்து கம்பராமாயணமானது மக்கள் ஒழுக்கத்திற்கேற்ற கதைச்சுவை உடையது என்பதேயாகும். இங்குதான் கம்ப இராமாயணத்திற்கும் நமக்கும் தகராறு இருக்கின்றது என்கின்றோம். அதாவது ஆச்சாரியார் கருத்தில் கம்பர் ராமனை வீரனாகக் கொண்டு எழுதினாரா அல்லது இராவணனை வீரனாகக் கொண்டு எழுதினாரா என்றும் கேட்பதோடு கம்பர் ராமனைத் தான் வீரனாக்க கொண்டு எழுதி இருப்பார் என்றே எண்ண வேண்டியிருக்கின்றது என்றும் ஏனெனில் அதற்கு பெயர் ராமாயணம் என்று ஏற்பட்டிருப்பதால் இராவணனைக் கொண்டல்ல என்பது வெள்ளிடை மலையாகும்.

திரு. ஆச்சாரியாரின் இராமாயண ஆராய்ச்சி அறிவுப்படி இராமாயண இராமன் வீரனாவானா? என்பதே நமது கேள்வி. சரி கம்பர்தான் ராமாயணத்தை வீரர் கதையாகக் கொண்டெழுதினார் என்று வைத்துக் கொண்டாலும் வால்மீகி உலக நன்மைக்காக ராமாயணத்தை வீரர் கதையாக எழுதினாரா? அல்லது பார்ப்பனர் களின் வயிற்றுப் பிழைப்பு கதையாக எழுதினாரா என்று கேட்கின்றோம்.

தவிர திரு.ஆச்சாரியார் “ஷேக்ஸ்பியர் ஆங்கிலேயராயிருந்தும் டென்மார்க்குஅரசரைப் பற்றி ஒரு நாடகம் எழுதினது போல் கம்பரும் இராமர் கதையை எழுது முறையா” என்று சொல்கின்றார்.

இதை எதற்காக எடுத்துச் சொன்னார் என்பதற்கு ஆதாரம் அப்பிரசங்கத்தில் காணப்படவில்லையானாலும் ஒரு திராவிட கவி ஆரிய (வடநாட்டு) அரசன் கதையை ஏன் எழுதினார் என்பதற்கு சமாதானம் சொல்லவே இதைச் சொல்லி இருக்கின்றார். ஆகவே, அக்கதை வடநாட்டு அரசன் கதை என்பது திரு.ஆச்சாரியாரை அறியாமலே வெளியாய்விட்டது பற்றி மகிழ்ச்சி ஒருபுறமிருந்தாலும், ஆச்சாரியார் விஷயத்தில் பரிதாபப் படாமலுமிருக்க முடியவில்லை.

கம்பர் ஒரு வீரன் கதை எழுதுவதாக கருதி எழுதியிருப்பாரானால் இந்து மத வருணாச்சிரம தர்மங்கள் அதில் புகுந்திருப் பதற்கு என்ன காரணம் என்பதற்கு திரு.ஆச்சாரியார் ஒரு சமாதானமும் சொல்லவே இல்லை.

தவிர ராமன் உண்மை, நன்மை, அழகு என்கின்ற மூன்று லட்சியங்களின் பிரதிநிதி என்று சொல்லுகின்றார். ஆனால் ராமனிடம் என்ன உண்மை, என்ன நன்மை, என்ன அழகு இருந்தது என்று மாத்திரம் எடுத்துச் சொல்லவில்லை.

ஆகவே, திரு.ஆச்சாரியார் கூட்டத்தினிடம் உள்ள இந்த மனப்பான்மையின் யோக்கியதையை வெளிப்படுத்தத்தான் இராமாயண ஆபாசம், இராமாயண இரகசியம், இராமாயண ஆராய்ச்சி ஆகியவைகள் வெளியாக வேண்டியிருக்கின்றது என்பதை பொது ஜனங்களுக்கு எடுத்துக் காட்டுகின்றோம். தவிரவும் ராமன் என்பதற்கு மகிழ்விப்பவன் என்றும் ராவணன் என்பதற்கு அழச் செய்பவன் (கஷ்டப்படுத்துபவன்) என்றும் பொருள் கூறுகின்றார்.

இது எந்த அகராதியில் இருக்கின்றதோ தெரியவில்லை. எப்படி இருந்தாலும் இராமாயணக் கதைப்படி இராமன் யாரை மகிழ்வித்தான்? இராவணன் யாரை அழ வைத்தான்? என்பது வெளியாக வேண்டாமா என்று கேட்கின்றோம். தவிரவும் இராவண ராஜ்யத்தில் பொருள் செருக்கு, கல்வி செருக்கு இருந்ததாக திரு.ஆச்சாரியார் சொல்லுகின்றார். இதற்கு ஆதாரம் இலங்கை 700 யோசனை தூரமும் உலகில் உள்ள உயர்ந்த பொருள்கள் எல்லாம் அங்கு இருந்தனவாம்.

ஆனால் ராமராஜ்யத்தில் என்ன இருந்தது என்பதே இவர் காட்டவே இல்லை. அங்கிருந்த பார்ப்பன செருக்கையும், அறுபது ஆயிரம் பெண்டாட்டியை கட்டிக் கொண்டு பிள்ளையில்லாமல் யாகம் செய்து பிள்ளை பெற்ற ஆண்மையற்ற பார்ப்பனியச் செருக்கையும், பெண்டாட்டி மீது சந்தேகப்பட்டு கர்ப்பத்துடன் காட்டில் கொண்டு போய் விட்டுவிட்ட அற்ப புத்தி செருக்கையும், கொடுமைப் புத்திச் செருக்கையும் அடியோடு மறைத்து விட்டார்.

மொத்தத்தில் ராமாயணம் நடந்த கதையா? பொய்க்கதையா? என்பது நமது கவலையே அல்ல. ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டாவது ராமாயணக் கதை மனிதத் தன்மையும் ஒழுக்கமும் படிக்கத் தகுந்ததுமான கதையா என்பதே நமது கேள்வி. இதற்கு ஒரு வார்த்தையில் பதில் சொல்லுவதற் கில்லாமல் வெறும் தந்திரமும் சூழ்ச்சியும் பித்தலாட்டமும் செய்வதில் என்ன பலன் அடையக்கூடும் என்று இந்தக் கூட்டத்தார்கள் நினைக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.

தவிர கம்பராமாயணத்தை கவி அழகுக்காக காப்பாற்ற வேண்டும் என்கின்றார். அப்படியானால் வால்மீகி ராமாயணத்தை என்ன அழகுக்காக காப்பாற்ற வேண்டும் என்றோ அல்லது அதை ஒழிக்க வேண்டுமென்றோ திரு.ஆச்சாரியார் ஒரு வார்த்தைகூட சொல்லவே இல்லை.

சாதாரணமாக இந்தக் கூட்டத்தார் நாம் வால்மீகி ராமாயணத்தைக் குற்றஞ் சொல்லும்போது கம்பர் “கவி நயத்தைக்” கொண்டு வந்து போட்டுத் தப்பித்துக் கொள்ளுவதும் கம்பர் கவிநயத்தைக் குற்றம் சொல்லும் போது வால்மீகி ராமாயணத்தின் “தத்துவார்த்தத்தை”ச் சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்ப்பதும் குலதர்மமாகப் போய்விட்டது.

தவிர கம்ப ராமாயணத்தை உண்மைக் கதை என்று நினைத்திருந்தால் வால்மீகி எழுதியிருப்பதற்கு மாறுபாடாக எழுதி இருப்பாரா என்று திரு.ஆச்சாரி யார் கேட்கின்றார். நாமும் கம்பராமாயணத்தை உண்மைக் கதை என்று நம்பினார் என்று சொல்ல வரவில்லை.

ஆனால் கம்பரும் பார்ப்பனர்களும் சேர்ந்து மற்ற மக்களை ராமாயணம் உண்மைக் கதை என்றும் ராமன் கடவுள் என்றும் நம்பச் செய்வதற்காக செய்த சூழ்ச்சி என்று தான் சொல்கின்றோம்.

தவிரவும் கம்பருக்கு சமஸ்கிருதம் தெரியாது என்றும், வால்மீகி ராமாயணத்தை பார்ப்பனர் மொழி பெயர்த்துச் சொல்ல அதை அனுசரித்து கவி உண்டாக்கியதாகவும், நினைத்தபடி சிலபுரட்டுகள் இருப்பதால் கம்பருக்கு வால்மீகி ராமாயணத்தில் இன்னது இருந்தது என்று தெரியுமா என்று நினைப்பதற்கில்லாமல் இருக்கின்றது என்று சொல்லி சில கம்பதாசர்கள் தப்பித்துக் கொள்வதையும் பார்த்திருக்கிறோம்.

தவிர திரு.ஆச்சாரியார் கடவுள் உண்டா இல்லையா என்கின்ற விவகாரமே இந்து மதத்தில் இல்லை என்றும் ஒவ்வொருவனும் தன்னைத் தானே கடவுள் என்று நினைத்துக் கொள்வதே வேதத்தின் முடிவான கொள்கை என்றும் ஒவ்வொருவருடைய உயர்ந்த லட்சியங்களே கடவுள் என்றும் சொல்லுவதோடு மற்றும் அதற்கு நேர் விரோதமாய் ரசாயன ஆராய்ச்சியில் கடவுள் இல்லையென்றும், வான சாஸ்திர ஆராய்ச்சியில் கடவுள் இல்லையென்றும் இதை ஒப்புக் கொள்ளாதவர்களே நாஸ்திகர்கள் என்றும் சொல்லுகின்றார்.

இது கடவுள் சம்பந்தமாக மக்களை குழப்பத்திற்குள்ளாக்குவதையும் சமயம் போல் பேசத் தக்கபடியான முன்னுக்குப் பின் முரணையும் காட்டுகின்றது. இதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனெனில், சயன்சுக்கும் அதாவது விஞ்ஞான சாஸ்திரத்திற்கும் கடவுளுக்கும் சண்டை துடங்கியாய் விட்டது.

கடவுளை நிலை நிறுத்த எவ்வளவு பெரிய அவதாரங்கள் வந்தாலும், மதங்களை நிலை நிறுத்த எவ்வளவு பெரிய கடவுள் தன்மை வாய்ந்தவர்கள் வந்தாலும் யார் தவங்கிடந்தாலும் அதுவே பார்த்துக் கொள்ளும்.

கடைசியாக, ராமாயணம் என்பது எந்த முறையிலும் எந்த அர்த்தத்திலும் நாட்டுக்கு மனிதத் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதை எடுத்துக்காட்டவும் இதற்கு விரோதமாய் கிளம்பும் எதிர்ப்புகளுக்கு சமாதானம் சொல்லவும், இந்த வியாசமானது இவ்வளவு நீட்டி எழுதப்பட்டது என்பதோடு இதை முடிக்கின்றோம்.

குறிப்பு :- 17.11.1929 குடி அரசு தொடர்ச்சி

(குடி அரசு - கட்டுரை - 24.11.1929)

இராமாயணம்

 இராமாயணம்

இராமாயணம் என்னும் கதையில் காணப்படும் விஷயங்கள், சம்பவங்கள் முதலியவை பெரிதும் அராபியன் னைட், ஷேக்ஸ்பியர், மதனகாமராஜன், பஞ்சதந்திரக் கதைகள் முதலிய கட்டுக் கதைகளைப் போன்று இயற்கைக்கும் மனித ஆற்றலுக்கும் பொருத்த மற்றதும், அனுபவத்தில் சாத்தியப்படாததுமான அசாதாரணமானவைகளாய் இருப்பதால் இக்கதை உண்மையாய் நடந்த சம்பவங்களைக் குறிப்பிடுவ தில்லை என்று உறுதியாய்க் கூறலாம்.

அசாதாரண சம்பவங்களால்தான் கடவுள் தன்மை அவதாரத் தன்மை முதலிய தெய்வீகத் தன்மைகளைக் கற்பிக்க முடியும் என்று சொல்லப்படுமானால், இக்கதையில் காணப்படும் அசாதாரண விஷயங்கள் பெரிதும் பொருத்தமற்றதும், தேவையற்றதும், நீதியற்றது மாய் இருப்பதோடு பொது நடத்தையில், தேவை உள்ள சந்தர்ப்பங்களில் அதாவது உயர் குணமும் முன் யோசனையும், கருணையும், சத்தியமும், தூரதிருஷ்டியும் நல்லெண்ணமும் காட்டப்பட வேண்டிய சாதாரணக் காலங்களில் அசாதாரண சம்பவத்தில் காட்டப்படும் தெய்வீகத் தன்மையோ அல்லது மிக மிக சாதாரணத் தன்மையில் காட்டப்படும் சராசரி மனிதத் தன்மையோ கூட இல்லாமல் இருக்கின்றன.

கதாநாயகனாகிய இராமனைக் கடவுளின் அவதாரம் என்று மக்கள் கருத வேண்டும் என்பதாகக் கருதியே கற்பனை செய்திருக்கும் இந்த இராமாயணக் கதையில், இராமனுடைய எண்ணம், பேச்சு, நடத்தை ஆகியவைகளில் வஞ்சகம், பொய், சூது, வன்னெஞ்சம், பேராசை, கொலை, மதுவருந்தல், மாமிசம் புசித்தல், மறைந்திருந்து கொல்லுதல், அபலைகளை, குற்றமற்ற வர்களை கொடுமை செய்தல் முதலிய தீயகுணங்களும் கூடா ஒழுக்கங்களும் ஏராளமாகக் காணப்படுகின்றன. இதனாலேயே இராமனும், இராமாயணக்கதையும் தெய்வீகத்தன்மை பொருந்தியவை அல்ல என்பதும், அவை சராசரித் தன்மையைவிடக் கீழ்ப்பட்டவை என்பதும் தெள்ளென விளங்கும் என்பதோடு மற்றும் இராமனுடையவும் இராமாயணத்தினுடையவும் எந்தக் காரியமும் எண்ணமும் தமிழ் மக்களுக்கு படிப் பினைக்கோ பின்பற்றுதலுக்கோ ஏற்றதல்ல என்பதை யும் தெளிவுபடுத்தும்.

கதை தோற்றம்

இராமாயணக் கதை தோற்றத்திற்காக அதில் கூறப்படும் காரணங்கள் பெரிதும் பகுத்தறிவுக்கும், தெய்வீகத் தன்மைக்கும் ஒத்ததாகச் சிறிதும் காண் பதற்கில்லாமல் இருக்கிறது. அதாவது:-

தேவர்கள் தாங்கள் செய்யும் யாகத்தை இராவணன் முதலிய இராட்சதர்கள் வந்து அழிப்பதாய் நான்முகனிடம் வந்து முறையிடுகின்றார்கள். நான் முகன் தன் தந்தையாகிய திருமாலிடம் சென்று முறையிடுகிறான். திருமால் தாம் பூமியில் இராமனாகப் பிறந்து இராவணனைக் கொல்லுவதாக ஒப்புக் கொள்ளுகிறார் இதுவே இராமாயண கதை தோன்றக் காரணம்.

திருமால் மனிதனாகப் பூமியில் பிறந்து பல சங்கடங்களை அனுபவிக்கக் காரணம் என்னவெனில், முன்பு அவர் செய்த பாபச்செயல்களுக்காக அவருக்கு ஏற்பட்ட சில சாபக்கேடுகள் என்பதாகத் தெய்வீகப் புராணங்கள் சொல்லுகின்றன. அவையாவன:- திருமால் பிருகு முனிவரின் மனைவியைக் கொன்ற பாவத்திற்காக ஏற்பட்ட சாபம் என்றும், திருமால் ஜலந்திராசூரன் மனைவியை வஞ்சகமாய்க் கூடின பாவத்திற்காக ஏற்பட்ட சாபம் என்றும், திருமால் திருமகளைப் பகல் காலத்தில் பிறர் அறியக் கலவி செய்த பாவத்திற்காக ஏற்பட்ட சாபம் என்றும், இன்னும் இப்படிப் பலவாறாகப் புராணங்களில் கூறப்பட்டி ருக்கின்றன.

இக்காரணங்கள் ஒருபுறமிருக்க, இவற்றினுள் கூறப்பட்ட தேவர்கள் என்பவர்கள் யார்? அசுரர்கள், அரக்கர்கள் என்பவர்கள் யார்? இராட்சதர்கள் என்பவர்கள் யார்? யாகம் என்றால் என்ன? கடவுளாகிய திருமாலுக்கு கொலை, களவு, காமம், விபச்சாரம் ஆகிய தீய காரியங்கள் செய்யும் குணங்கள் ஏன் ஏற்பட்டன? இக் காரியங்களைச் செய்பவர்கள் கடவுளர்கள் ஆவார்களா? தேவலோகத்துக்கும், பூலோகத்துக்கும் சம்பந்தம் என்ன? தேவர்கள் யாகம் செய்ய பூலோகத்துக்கு ஏன் வரவேண்டும்? ஜீவப்பிராணிகளைச் சித்திரவதை செய்து கொன்று, பக்குவப்படுத்தி, மந்திரம் சொல்லி, மதுவோடு உண்பதுதானா யாகம்? இப்படிப்பட்ட காரியங்களுக்கு மகிழ்ந்துதானா கடவுள், தேவர்களுக்கும் யாகம் செய்யும் மற்றவர்களுக்கும், உயர்பதவியும் மேன்மையும் அளிக்க வேண்டும்? இப்படிப்பட்ட கொடுமையும் கொலையுமான பாதகச் செயல்களை நடைபெறாமல் தடுப்பது கெட்ட காரியமா? கொலை செய்கிறவர்கள் தேவர்களாகவும் அதைத் தடுக்கிறவர்கள் இராட்சதர்களாகவும் கருதப் படுவதுதான் கடவுள் நீதியா? என்பவை போன்ற நீதிகள் அறிஞர்களால் யோசிக்கப்பட வேண்டியதாகும்.

இன்றைய நாட்களிலேயே ஜீவப் பிராணிகளை இம்சிப்பதும், மதுவருந்துவதும் முதலாகிய காரியங்கள் கூடாத காரியம் என்று பொது மக்களும் அரசாங்கமும் கருதி பழிப்பும் ஆக்கினையும் தண்டனையும் விதிக்கப்பட்டு இருக்கும்போது, அக்காலத்தில் அதைத்தடுப்பது ஒழுக்கமாகவும் நீதியாகவும் இருந்திருக்காதா? அதிலும் சிவபக்தனான இராவணனுடைய நாட்டிலும், ஆட்சியிலும், இம்சையும் உயிர்க்கொலையும் கொண்ட யாகத்தைக் குற்றமானதென்றும் தடுக்கப்பட்ட காரியம் என்றும், சட்டமும் ஆக்கினையும் செய்யவேண்டியது கடமையாக இருந்திருக்காதா? இந்தத் தடுத்தல் கடமையை ஒரு அரசன் செய்ததினாலேயே அந்த அரசனையும் அவனது குலத்தையும், குடிபடைகளையும் நாட்டையும் அடியோடு ஒழிப்பதற்காக அவதாரம் எடுத்து வர வேண்டியது கடவுள் தன்மையா? என்பனவும், இவை போன்ற பிறவுமே, இராமாயணக் கதையின் தோற்றமும் அதன் காரணங் களும் ஆபாசக் களஞ்சியமாய் இருந்து வருவதை விளக்கும்.

மகப்பேறு யாகம்

இராமாயணக் கதையின் முதல் காண்டம் என்னும் பாலகாண்டம்,அயோத்தி அரசனாகிய தசரதன் தனக்கு மகப்பேறு உண்டாக யாகம் செய்கிறான் என்றும், அந்த யாகத்தில் கொன்று பலியிடுவதற்குகாக, ஆடு, மாடு, குதிரை, பறவை, பாம்பு, ஆமை முதலிய நடப்பன, பறப்பன, ஊர்வனவாகிய ஜீவப் பிராணிகளைக் கொண்டு வந்து வைத்திருந்ததாகவும் கூறுகிறது.

ஒருவனுக்குப் பிள்ளை உண்டாக, இத்தனை ஜீவன்கள் பலியால் மாள வேண்டுமா? இந்தப் பலிகளை ஏற்றுத்தான் கடவுள் ஒருவனுக்குப் பிள்ளை கொடுக்க வேண்டுமா என்பது ஒருபுறமிருக்க, இதைக்கண்டு தேவர்கள் திருப்தி அடையலாமா? இப்படிப்பட்ட தேவர்களுக்கு ஓரரசன் இருக்கிறானாம்.அவன் பெயர் தேவேந்திரனாம்! இவனது கொடுஞ்செயலையும், கூடா ஒழுக்கத்தையும் இவன் சம்பந்தப்பட்ட கதைகளில் பார்ப்போமானால், அவை பல இராமாயணம் ஆகலாம்.

நிற்க, தசரதன் செய்யும் இந்த யாகத்தில், யாகப் பசுவாகிய குதிரையை தசரதன் மனைவிகளில் ஒருத்தியாகிய கவுசலை என்பவள் ஒரே வெட்டில் வெட்டிக் கொன்று, அந்த செத்த குதிரையுடன் ஒரு இரவு முழுதும் கட்டி அணைந்து படுத்துக் கொண்டிருக்கிறாள். இதுதான் தெய்வீகத் தன்மை போலும். இனி இவர்களது மானுஷீகத் தன்மை, எப்படி இருக்கும் என்பதை நினைக்கவே நம்மால் முடியவில்லை. இவ்வளவுதானா? இன்னும் இந்த யாகத்தின் யோக்கியதையை, யாகசாஸ்திரப்படி பார்ப்போமானால், அது நினைப்பதற்கே உடல் துடிக்கும். அந்த ஆபாசங்கள் ஞானசூரியன் என்னும் மற்றொரு குடிஅரசு பதிப்பில் காணலாம். இரவு முடிந்தவுடன், இந்த கவுசலையையும் மற்றும் தசரதனின் இரு மனைவி களாகிய சுபத்திரை, கைகேயி ஆகியவர்களையும், யாகப் புரோகிதர்களாகிய ருக்வித்துக்களுக்கு தசரதன் தட்சணையாகக் கொடுத்துவிடுகிறான்.

இந்தப் புரோகிதர்கள் மூவரும் இப்பெண்களைக் கைப்பற்றித் தங்கள் இஷ்டம்போலெல்லாம் கூடித்திரிந்து அனுபவித்து விட்டுப் பிறகு, அதற்காகக் கூலியோ, கிரையமோ தசரதனிடம் வாங்கிக்கொண்டு திருப்பிக்கொடுத்து விடுகிறார்கள். அதன்பிறகே இம்மனைவிகள் கர்ப்பவதி களாகக் காணப்படுகிறார்கள். (ஆங்கில மொழி பெயர்ப் பாளராகிய மன்மதநாத் தத்தர் இந்த இடத்தில் அரசனது மனைவிகளை ஹோதா, அத்வர்யு, உக்தா ஆகிய மூவரும் புணர்ந்தார்கள் என்று எழுதுகிறார்) இதுதான் தசரதன் செய்த புத்திர காமேஷ்டி யாகத்தின் தத்துவம்.

இந்த யாகத்தின் முறைகளையும், அங்கு நடந்த காரியங்களையும், சாஸ்திரப்படியும், கதைப்படியும், பகுத் தறிவைக் கொண்டு நன்றாய் ஆராய்ந்து பார்த்தால் இந்த மூன்று மனைவிமாருக்கும் பிறந்ததாகச் சொல்லப்படும் நான்கு குழந்தைகளும் தசரதனுக்குப் பிறந்த குழந்தைகளாக இருக்க முடியாது என்றும், அவை அந்த யாகப் புரோகிதர்களுக்குத்தான் பிறந்திருக்க வேண்டுமென்றும் விளங்கும். இதை விளக்கமாகச் சொல்லவேண்டு மானால் யாகம் செய்யும்போது தசரதனுக்கு வயது அறுபது ஆயிரம். அவனுக்கு மனைவிமார்களோ அறுபது ஆயிரம் பேர்கள் என்று, கம்பன் சொல்லி இருந்தாலும், முன்னூற்று அய்ம்பது மனைவிகள் என்று வால்மீகி கூறுகிறார்.

இதிலிருந்து தசரதன் படுகிழவன் என்பதும், அவன் பல நூற்றுக் கணக்கான மனைவிகளை மணந்து, கலந்து வாழ்ந்த காமாந்தகன் என்பதும் நன்கு விளங்கும். இப்படிப் பட்டவன் தனக்கு ஆண்மை இழந்து பிள்ளை உண்டாகும் சக்தி இல்லாமல் போவதும், வெறும் சபலத்தால் பெண்களுடன் கூடிக் குலாவித் திரிவதும் இயற்கையேயாகும். ஆகவே இந்தக் காரணங்களால், இத்தனை காலம் கர்ப்பமடையாதிருந்த இவனது மனைவிமார்கள் அந்த யாகம் செய்த அன்று ஒரு நாளில் மூன்று பேரும் ஏக காலத்தில் கிழவனாகவும் ஆண்மை யற்றவனாகவும் இருந்த தசரதனால் கர்ப்பம் அடைந்திருக்க முடியுமா? என்பதும் யோசிக்கத் தக்கதாகும்.

அன்றியும், அப்பெண்கள் மூவரும் யாகப் புரோகிதர்கள் மூவருக்குக் கொடுக்கப்பட்டு அவர்கள் மூவரும், இப்பெண்களை இஷ்டப்படி அனுபவித்து விட்டு, அதற்காக அரசனிடம் பணம் வாங்கிக்கொண்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டார்கள் என்றால் அப்பெண் களின் கர்ப்பத்திற்கு தசரதன் நாதனாக இருக்கமுடியும் என்று யார்தான் சொல்ல முடியும்?

உண்மையிலேயே இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கன் என்கின்ற நான்கு பிள்ளைகளும் தசரதனுக்கே பிறக்காமல், யாகப் புரோகிதர்களுடைய கருவுக்கே பிறந்திருந்தாலும், ஆரிய தர்மப்படி அதில் குற்றம் சொல்லவோ இழிவு கற்பிக்கவோ இடமில்லை. ஏனெனில், ஆரியரில் ஒருவன் அல்லது ஒருத்தி தனக் குப் பிள்ளை இல்லாவிட்டால், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வேறு ஒருவனிடம் கூடிப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தர்ம சாஸ்திரங்களும், ஸ்மிருதிகளும் கூறுகின்றன.

இதற்கு அனுபவ பூர்வமாய் ஆதாரம் வேண்டுமானால் மற்றொரு ஆரியக் கதையாகிய பாரதத்தில் பார்க்கலாம். அதில் யாகம் என்கின்ற (சாக்கு) காரணம்கூட இல்லாமல், பல விதவைகள் தமது குல குருவாகிய வியாசனிடம் கூடி, பல பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டிருக் கிறார்கள்.

திருதராஷ்டிரன், பாண்டு முதலியவர்கள் அந்தப்படி பிறந்தவர்களேயாவார்கள். இன்னும் அநேகம் பேர்கள் பாரதத்தில் இதுபோலவே காணப் படுகிறார்கள். மற்றும் சீதையின் பிறப்பைப் பார்த்தாலும், அவளது தாய், யாராலோ சீதையைப் பெற்று காட்டில் எறிந்து, புழுதியில் கிடந்த பெண்ணாகவே கிடைத் திருக்கிறாள். இந்தக் காரணத்தால் சீதைக்குத் திருமணம் கூட வெகுநாள் தடைப்பட்டிருக்கிறது. இதை சீதையே சொல்லுகிறாள்.

மற்றும், ஆரியர்களின் இதிகாச புராண சாஸ்திரங் களைப் பார்த்தால், அதில் வரும் மக்களுக்குக் கருவு உண்டாக்கியவர்கள் அல்லது பெற்றவர்கள், மனிதர் களாகக் கூட இருந்திருக்கவில்லை என்பது தெரியவரும். ஆதலால் இந்த யாகத்துக்கும் மகப்பேறுக்கும் சம்பந்த மில்லை என்பதும், யாகம் என்றால் மதுவருந்தி மாமிசம் சாப்பிட்டுக் கோலாகலமாய்த் திரியும் பண்டிகை என்பதும், அதனால் மதிக்கத்தக்க பலன் இல்லை என்பதும் இனிது விளங்கும்.

---  தந்தை பெரியார் -"குடிஅரசு" - கட்டுரை - 11.12.1943

இராமாயணத்தின் ஆபாசம்

இராமாயணத்தின் ஆபாசம்


உலகத்தில், ஒரு சமூகத்தை மற்றொரு சமூகம் ஆழ்த்தி வைப்பதற்குரிய சான்றுகள் ஆழ்த்தும் சமூகத்திற்றான் காணப்படுவது வழக்கம்.

ஆனால் தமிழ் மக்களை மிருகங்கள், குரங்குகள், பேய்கள், இராக்கதர்கள், கொடியவர்கள், குடிகாரர்கள், சோரம் புரிபவர்கள், கொலை நிகழ்த்துபவர்கள், அநாகரிகர்கள், வரன்முறையற்றவர்கள், தாசி மக்கள், அடிமைகள், குரூபிகள் என்ற வகையில் திரித்துக் கூற ஆரியர்கள் இராமாயணம் என்னும் ஒரு கட்டுக் கதையை வரைந்து, அது ஒரு மதியின்மிக்க ஆரிய முனிவனால் எழுதப்பட்டது என்று அதனைப் போற்றி, அண்டமுகடு முட்டும் வரையிற் புகழ்ந்து, அதற்கோர் மொழி பெயர்ப்பு போன்ற கம்பராமாயணத்தையும் வரைந்து இத் தென்னிந்தியாவில் புதுக்கியதும், இத்தென்னிந்திய மக்கள் தம் இழிவையே அடிப்படையாகக் கொண்டு வரையப் பெற்ற இராமாயணத்தை ஒரு இதிகாசம் என ஏற்று அதனை மெய் என்று நம்பி அவ்விதிகாச கதாநாயக, நாயகிகளை தெய்வங்களாக ஏற்றதும் வருந்தத்தக்கதோர் உண்மையாகும்.

அறிவுடைய திராவிட மக்கள் சூழ்ச்சியில் மிகுந்த ஆரியக் கதையாம் இராமாயணத்தை நம்பி பார்ப்பனர் வலையிற் சிக்கியதற்குக் காரணம், சிந்திக்குந்தோறும் சிந்திக்கும் தோறும் எளிதில் தோற்றக் கூடியதாயில்லை.

என்றாலும் பொருள் காப்பாளன் அறிவிலும் வலிவிலும் மற்றும் உள்ள எல்லாத் துறைகளிலும் மிகுந்த ஆற்றல் உடையவனாய் இருப்பினும், அறிவிலும் சீலத்திலும் குன்றிய ஓர் கள்வன், அப்பொருளை ஏகதேசம் கவர்ந்து செல்லுவது போல, அறிவுடைய நம் திராவிட மக்கள் இப்பார்ப்பன ஆபாசக் கதையாகிய இராமாயணக் கதையை ஏற்று மதிமோசம் போயினர். பார்ப்பனர் சூழ்ச்சியை பத்து கோடி முறை வலியுறுத்தினும் நாம் ஏமாற்றம் அடைந்தது அடைந்ததுதான்.எனவே, நம்மை இப்பார்ப்பனர்கள் இற்றை வரையில் ஆழ்த்தி அவர் நாகரிகத்தையும், ஒழுக்கத்தையும், கடவுள்களையும் நம்மவை என்று ஏற்று நடக்குமாறு செய்ததற்கு இத்தகைய கதைகளே சீவநாடிகளாய் இருக்கின்றன.

பார்ப்பன வேதங்களையும் வேதாந்தங்களையும் பார்ப்பனரே அறியாதவர்களாய் இருக்க, நம்மவர்கள் பெரும்பாலும் அறிவதற்கு இல்லை. நம்மவர்கள் தெய்வங்கட்கும்; சமூக ஒழுக்கங்கட்கும்; மற்றும் எல்லாவிதமான இயல்கட்கும் இப்பொழுது நமக்கு ஆதாரமாய் உள்ளவை பார்ப்பனப் புத்தகங்களேயாம் என்பதில் தடையுளதோ? இல்லை.

எனவே, நாம் நம்முடைய உண்மை நிலைமையை அறியவும், பார்ப்பனர்கள் நம்மை தாழ்மைப்படுத்த இன்று வரை நம்மை அடர்ந்தரசு புரியும் சூழ்ச்சி முறையை தெரிந்து அதனை கத்தரித்து சுயமரியாதை உணர்ச்சிப் படைக்கவும், இராமாயணத்தில் உள்ள ஆபாசங்களை “இராமாயணத்தின் ஆபாசம்” என்னும் நூல் நமக்கு கண்ணளிக்கும் என்பதில் ஐயமின்று.

இந்நூலில் நம் அறிய குடியரசில் வாரந்தொறும் வெளிப் போந்த கட்டுரைகளே மிளிர்வதனால், கட்டுரை ஆசிரியர் திரு.சந்திரசேகரப் பாவலரின் ஆராய்ச்சிக்கு, நாம் ஒரு ஆராய்ச்சி வெளியிடுதல் மிகையாகும்.

ஆதலின் உண்மை திராவிட மக்கள் தொடர்ச்சியாக நம் பதிப்பகத்தால் வெளியிடப்படும் ‘இராமாயணத்தின் ஆபாசம்’ என்னும் அரிய ஆராய்ச்சி நூலை வாங்கிப் படித்து உண்மை உணர்ந்து எதிரிகட்குத் தக்க ஆப்பிறுத்துவது இன்றியமையாததாகும்.

(குடி அரசு - நூல் மதிப்புரை - 03.11.1929)

Friday, 11 February 2022

கோர்ட்டு என்பது சூதாடுமிடம்

கோர்ட்டு என்பது சூதாடுமிடம்

நமது வகுப்பார் சீர்குலைந்து மானங்கெட்டு பார்ப்பனர்களின் அடிமைகளாகி அவர்களின் வாலைப் பிடித்துக் கொண்டு திரிவதற்கு முக்கியக் காரணம் நம் நாட்டில் ஏற்பட்டிருக்கும் கோர்ட்டுகள் என்று சொல்லப்படும் சூதாடுமிடங்களும், அவைகளுக்கு ஜட்ஜுகள் என்று சொல்லப்படும் சூதாட்ட நிர்வாகிகளுமே ஆவார்கள்.

சீட்டு மேஜை

அதாவது ஒருவர் ஒரு வீட்டை சூதாட்டத்திற்கு வாடகைக்கு கொடுத்திருந்தால் அவ்வீட்டில் சூதாடிகளை ஒன்று சேர்த்து அவ்வாட்டத்திற்கு அநுகுணமான சாமான்களையும் ஆட வசதியையும் செய்து கொடுத்து சீட்டு மேஜைக் காசு என்னும் கூலி வாங்குகிறவன் ஒருவனுண்டு. சூது ஆட வருகிறவர்கள் ஒவ்வொரு வெற்றிக்கும் இவ்வளவு என்று கொடுத்து வருவதுண்டு. சாதாரணமாக காலை முதல் மறுநாள் காலை வரையில் ஆளுக்கு இவ்வளவு என்பதாக கையில் பணம் வைத்துக் கொண்டு சூதாட ஆரம்பித்தால் கடைசியாய் எழுந்து போகும் போது நாலுபேர் தோல்வி அடைந்து கடன்காரராய் எழுந்து போவதும் இருவர் சம்பாதிப்பவர்களாகவும் இருவர் அசலோடு போவதாகவும் காணப்படும். சம்பாதித்தவர் என்பவர்களுக்கு அவரவர்கள் அசலும் மேல்கொண்டு கால் ரூபாயோ அரை ரூபாயோ லாபமிருப்பதாகத் தெரியும். அதுவும் தோற்றவர்கள்மேல் கடன் விட்டிருக்கும் தொகையாயிருக்கும். ஆனால் தோற்ற பணமும் கடன்காரராக்கிய பணமும் எங்கு போய் விட்டதென்று பார்ப்போமேயானால் வீட்டு வாடகைக்காரனுக்கும் சீட்டாட வசதி செய்து கொடுத்த சீட்டு மேஜைக் காரனுக்கும் அந்த இடம் தெரிந்து அங்கு வந்து மிரட்டிய போலீசுக்காரனுக்கும்தான் போயிருக்குமே ஒழிய ஆடினவர்களுக்கு லாபமிருக்காது. இப்படியே தினப்படி வந்து சூதாடுவதும் தினப்படி பலர் தோல்வியடைவதுமாயிருக்குமே ஒழிய ஜயித்தவர்களுக்கு தோற்றவர்கள் பணம் அவ்வளவும் வந்திருக்காது.

அதுபோலவே கோர்ட்டு நீதி என்பது இடம் கொடுத்தவர்களுக்கு சமானமாகிய அரசாங்கத்திற்கும், ஆட வசதி செய்து கொடுத்து சீட்டு மேஜை வாங்கியவர்களுக்குச் சமானமாகிய வக்கீலுக்கும், மிரட்டி காசு வாங்கும் போலீசுகாரனுக்கு சமானமாகிய கோர்ட்டு சிப்பந்திகளுக்கும் தூணுகளுக்கும் போய்ச் சேர்ந்து விடுகிறதே தவிர உண்மையான விவகாரக்காரனுக்கு ஒன்றும் மீதியாவதில்லை.

தோற்றாலும் கெடுதி ஜயித்தாலும் கெடுதி

விவகாரத்திற்கு வரும் வாதி தோற்றால் அனேகமாய் பாப்பராய் விடுகிறான். ஜயித்தால் செலவு செய்த தொகையை அடைந்தவனாகிறான். அது போலவே பிரதிவாதியும் ஜயித்தாலும் தோற்றாலும் அனியாயமாய் கெட்டுப் போகிறான். இதன் காரணம் என்னவென்று பார்ப்போமேயானால் பிரிட்டிஷ் கோர்ட்டுகள் என்று சொல்வது பலருக்கு உத்தியோகம் கிடைக்கவும் வக்கீல்கள் பிழைக்கவும் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டனவே அன்றி குடிமக்கள் நீதி அடைய அல்லவே அல்ல என்பதுதான்.

நியாயம் கிடைக்கும் தன்மை

வக்கீல்களின் புரட்டுகளாலும் தந்திரங்களாலும் விவகாரக்காரனுக்கு கையில் பணமிருக்கிறவரை “நியாயம்” கிடைக்கும் மாதிரி வசதி செய்யப் பட்டிருக்கிறது. சிற்சில சமயங்களில் சில விவகாரக்காரனுக்கு கைப்பணம் தீர்ந்துபோன பிறகு கூட கடன் கிடைப்பதாயிருந்தால் மறுபடியும் கூட “நியாயம்” கிடைக்க வழியிருக்கிறது. பெரிய விவகாரங்களில் நியாயம் என்பது சட்டத்தைப் பொருத்ததாகவே இல்லை. மாதிரி கேசுகளில் இதற்கு முன் உள்ள ஜட்ஜுகள் என்ன அபிப்பிராயம் கொடுத்திருக்கிறார், இன்ன ஊர் ஜட்ஜு எப்படி தீர்ப்பு சொல்லி இருக்கிறார் என்று பழைய ஜட்ஜுகளின் அபிப்பிராயமே சட்டமாயிருக்கிறது. சில கேசுகளில் அந்தந்த ஜட்ஜு கொள்ளும் அபிப்பிராயமே சட்டமாகும்.

நீதி ஸ்தலங்கள் என்பது வரிசைக் கிரமமாய் முன்சீப் கோர்ட், ஜில்லா ஜட்ஜு அல்லது சப் ஜட்ஜு அபீல், ஹைக்கோர்ட் அபீல், புல் பெஞ்சு அபீல், லட்டர்ஸ் பேட்டெண்ட் அபீல், ரிவிஷன் பிரிவு கவுன்சில் என படிப்படியாய் பல ஸ்தானங்கள் விவகாரக்காரன் அறிவீனத்திற்கும் ஆணவத்திற்கும் பணத்திமிருக்கும் தக்கபடி அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவுக்கும் தூண்டுகோலென வக்கீல் கூட்டங்களும் இவர்களை நத்திப் பிழைக்கும் இவர்களது புரோக்கர்களும் மலிந்து வருகின்றன. இவ்வித நியாய ஸ்தல முறையும் நியாயவாதி முறையும் நியாயங் கிடைக்குமுறையும் நீங்காமல் மக்கள் சுயராஜ்யமடைந்து விடலாம் என்பது சமுத்திர நீரை எல்லாம் குடித்து விடலாம் என்பது போலவே ஆகும். கோர்ட்டு ஏற்படுத்தினதின் கருத்து பொதுவாய் நோக்குமிடத்து இம்முறைகள் நாட்டின் விடுதலைக்கு விரோதமாகவும் பார்ப்பன ஆதிக்கத்திற்கு அநுகூலமாகவும் சர்க்காரும், பார்ப்பனரும் கூடிச் செய்த சூழ்ச்சியே அல்லாமல் வேறல்ல.

தற்கால “தேசாபிமானி” என்பவருக்கும் “பொது நல சேவை செய்பவர்” என்பாருக்கும் இம்மாதிரி கோர்ட்டுகளையும், நியாயம் கிடைக்கும் முறைகளையும் இன்னும் அதிகமாக உற்பத்தி பண்ணுவதே யோக்கியதாம்சமாயிருக்கிறது. சமீபத்தில் சட்டசபைக்கு நின்ற கனவான்களில் ஒருவர் தன்னுடைய யோக்கியதாம்சத்தை வெளிப்படுத்திய ஒரு அறிக்கையில் நான் இன்ன ஊருக்கு கோர்ட்டுகள் வைக்கும்படி செய்தேன், இன்ன ஊரில் எடுபட்டு விட இருந்த கோர்ட்டை நிலை நிறுத்தினேன். ஆதலால் எனக்கு ஓட்டுச் செய்யுங்கள் என்று வெளியிட்டிருந்தார். இதுபோலவே ஒரு ஓட்டர் ஒரு சட்டசபை அபேக்ஷகருடைய யோக்கியதையைப் பரிசீலிக்கையில் அவ்வபேக்ஷகரைப் பார்த்து “நீர் இந்த ஊரில் ஏற்பட இருந்த சப்கோர்ட்டை வேண்டாமென்று சொன்னீராம், ஆதலால் உமக்கு தேசபக்தி இல்லை நீர் பொது நல சேவைக்காரராகமாட்டீர், உமக்கு ஓட்டு செய்ய முடியாது” என்று சொன்னாராம். அதற்கு அந்த அபேக்ஷகர் நீர் தப்பாய் நினைத்துக் கொண்டீர்; நான் இந்த ஊருக்கு ஒரு ஜில்லா கோர்ட்டே வரவேண்டுமென்கிற ஆசையினால் சப்கோர்ட் வேண்டாமென்று சொன்னேன். இந்த ஊர் நிலைமைக்கு இங்கொரு ஜில்லா கோர்ட்டு வேண்டாமா? அனேக ஜில்லாக்களில் இரண்டு ஜில்லா கோர்ட்டு இருப்பது போல் இந்த ஜில்லாவுக்கும் இரண்டு ஜில்லா கோர்ட்டு வேண்டும், அதற்கு இந்த ஊர்தான் தகுதி என்று சொன்னாராம். இதிலிருந்து இம்மாதிரி ஓட்டர்களுக்கும் அபேக்ஷகர்களுக்கும் எவ்வளவு தேச பக்தியும் பொது நல சேவையும் இருக்கிறது என்று யோசித்து பார்த்தால் தெரியும்.

சட்டமெம்பரின் தேசபக்தி

அரசாங்கத்தாரின் மற்றபடி சட்ட சம்மந்தமான இலாகா சட்டமெம்பரின் வேலைதான் என்ன? இவ்வருஷம் சட்ட கலா சாலையில் (லா காலேஜில்) படித்துத் தேறிய பிள்ளைகள் தொகை எவ்வளவு? இறந்துபோன வக்கீல்கள் தொகை எவ்வளவு? அதுகளுக்கு பதில் செய்து சரிகட்டின பிள்ளைகள் போக மீதி தொகை எவ்வளவு? இவர்கள் பிழைப்புக்கு புதிதாய் உற்பத்தி பண்ணின உத்தியோகமெவ்வளவு? போக பாக்கியுள்ள பிள்ளைகளின் வயிற்றுப் பிழைப்புக்கு எந்தெந்த ஊரில் நிரந்தர முன்சீப் கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம், எந்தெந்த ஊரில் நிரந்தர சப்கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம், எந்தெந்த ஊரில் நிரந்தர ஜில்லா கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம், எந்தெந்த ஊரில் தற்கால சாந்தியாக முன்சீப் கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம், எந்தெந்த ஊரில் தற்கால சப் ஜட்ஜி கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம், எந்தெந்த ஜில்லாவுக்கு உதவி சப் ஜட்ஜிகளையோ குறிப்பிட்ட காரியங்களுக்கு என்கிற ஜட்ஜிகளையோ நியமிக்கலாம் என்கிற கவலையே தவிர வேறென்ன இருக்கிறது?

சட்ட மெம்பரும் வக்கீல் பேட்டியும்

சட்ட மெம்பரை வக்கீல்கள் கூட்டம் கூடி பேட்டி காணுவதிலும் என்ன வேண்டுகோள் இருக்கிறது. “அய்யா எங்களுக்கு பிழைப்பு குறைந்து போய்விட்டது. ஒரு கோர்ட்டிலேயே எல்லா வக்கீல்களும் வந்து முட்டிக் கொள்ளுகிறார்கள். இதனால் வக்கீல் பிழைப்புக்கும் மரியாதை குறைகிறது. ஆதலால் இக்கூட்டத்தைக் கொஞ்சம் குறையுங்கள் அல்லது இன்னம் ஒரு கோர்ட்டாவது ஏற்படுத்துங்கள். பார்ப்பனரல்லாத வக்கீல்கள் அதிகமாகி விடுகிறார். ஆதலால் வக்கீல் பரீiக்ஷயை இன்னம் கொஞ்சம் அதிக செலவும் கஷ்டமும் ஆக்குங்கள். நம்மைபோல் பிச்சை எடுத்து அவர்கள் படிக்க முடியாது. வேறு வேலைக்குப் போய்விடுவார்கள். பார்ப்பனரல்லாத வக்கீல்கள் அதிகமாய் வரக்கூடாது என்கிற எண்ணத்தின் பேரில் 2-வது கிரேடு வக்கீல் பரீiக்ஷகளையும் 1-வது கிரேடு வக்கீல் பரீiக்ஷகளையும் எடுத்தும் கூட பி.ஏ. பி.எல்., வகுப்பிலும் பார்ப்பனரல்லாத பிள்ளைகள் படித்து வருகிறார்களே இதை எப்படியாவது ஒழித்து இன்னம் கொஞ்சம் செலவும், அதிகமான கஷ்டமும் வைத்து அவர்களை இந்த இலாகாவில் தலையிடாமல் செய்ய முடியாதா” என்பதாகிற இதுகள்தான் வேண்டுகோளாயிருக்கிறதே தவிர வேறென்ன என்பது யோக்கியர்களுக்கு விளங்காமல் போகாது.

கோர்ட்டுகள் அதிகமாவதினாலே வழக்குகள் அதிகமாகிறது

எத்தனைக்கெத்தனை கோர்ட்டுகள் அதிகமாய் வைக்கிறார்களோ அத்தனைக்கத்தனை வழக்குகள் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் வழக்குகளும் விவகாரங்களும் உற்பத்தியாவதற்கு கோர்ட்டுகளே காரணமல்லாமல் வேறென்ன? உதாரணம் வேண்டுமென்றால் கள்ளுக்கடைகளையும் தாசி வீடுகளையும் மோட்டார் வசதிகளையும் பார்த்தால் நன்றாய் விளங்கும். நாம் ஏன் கள்ளுக்கடைகளை குறைக்கும்படி சர்க்காரை வேண்டுகிறோம்? கடை குறைந்தால் குடிகாரரின் எண்ணிக்கையும் குடிக்கும் அளவும் குறையும் என்றுதானே தவிர வேறென்ன? நாலு தாசிகள் இருக்கும் ஊரில் நடக்கும் விபசாரித்தனத்துக்கும் 40 தாசிகளிருக்கும் ஊரில் விபசாரித்தனத்துக்கும் கணக்குப் பார்த்தால் அதிக தாசிகள் உள்ள ஊர்களில் விபசாரித்தனம் செய்கிற ஆள்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்குமா அல்லவா? அது போலவே ஒரு ஊருக்கு ஒரு தரம் போய்வரும் போக்குவரத்து வசதிகளுக்குப் பதிலாக நான்கு தரம் போய் வரும்படி போக்குவரத்து வசதி ஏற்படுத்தினால் அதற்கேற்ற பிரயாணிகள் அதிகமாக ஏற்படுவார்களா இல்லையா? அது போலவே கோர்ட்டுகள் அதிகமாகவும், ஊர் ஊராகவும் ஏற்பாடு செய்தால் விவகாரம் வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.

பழைய நிலைமையும் புதிய நிலைமையும்

ஆதியில் கோயமுத்தூர் ஜில்லாவுக்கு இரண்டு முன்சீப் கோர்ட்டுகளும் ஒரு ஜட்ஜி கோர்ட்டும்தான் இருந்தன. இப்போது கொள்ளேகாலம் உள்பட 8 முன்சீப் கோர்ட்டுகளும் 3 சப் ஜட்ஜி கோர்ட்டுகளும் இருக்கின்றன. இரண்டு ஜில்லா கோர்ட்டும் இருக்கின்றன. இவ்வளவும் போதாமல் இனியும் ஒரு சப் ஜட்ஜி வேண்டுமென்று பலரும் இனியும் ஒரு ஜில்லா கோர்ட்டு வேண்டுமென்று பலரும் விரும்புகிறார்கள் (யாவர்? வக்கீல் கூட்டத்தார்.)

கோர்ட்டுக்கு அவசியமுண்டா?

இதிலிருந்து நாம் அறிய வேண்டியதென்ன? இவ்வளவு நீதி ஸ்தலங்கள் ஏற்படும்படியான அளவுக்கு இந்த ஜில்லாவில் சென்ற 40, 50 வருஷத்தில் ஜனத்தொகை பெருகிவிட்டதா? அல்லது இவ்வளவு கோர்ட்டுகள் ஏற்படும்படி ஜனங்கள் அவ்வளவு அயோக்கியர்களாகி விட்டார்களா? என்று பார்த்தால் ஜனத்தொகை ஏறக்குறைய முன் இருந்த அளவுக்கு 4-ல் ஒரு பாகம்தான் அதிகமாகி இருக்கிறது. இந்த அளவுக்கு சுமார் 1/4 (கால் ) முன்சீப் கோர்ட்டு அதிகமாயிருந்தால் போதும். அதிகமானால் ஒரு முன்சீப் கோர்ட்டு அதிகமாகலாம் என்றே வைத்துக் கொண்டாலும் 5 அல்லது 6 முன்சீப் கோர்ட்டுகளும் ஜில்லா ஜட்ஜி அதிகாரமுள்ள ஒரு மேல்கண்ட ஜட்ஜியும் 2 சப் ஜட்ஜியும் அதிகமாகக் காரணமென்ன? இதைப் பார்க்கும் போது இவ்வளவு கோர்ட்டுகளுக்கும் வக்கீல்களுக்கும் வேலை உண்டாக்கத்தக்க மாதிரிக்கு ஜனங்களை அயோக்கியர்களாகவும், சர்க்காரும் பார்ப்பனர்களும் பழக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லுவது. அல்லாமலும் முன் காலங்களில் முன்சீப்புகள் 5 மணி வரை வேலை செய்வார்கள்; சம்பளமும் அவர்களுக்கு 200, 300 தான். இப்போது 11 - 30 மணிக்கு கச்சேரிக்கு வந்தால் 2 அல்லது 3 மணிக்கு வீட்டுக்குப் போய் விடுகிறார்கள்; சம்பளம் 500, 600 வாங்குகிறார்கள்.

இனியும் ஒரு கோர்ட்டு வேண்டுமாம்

இவ்வளவும் போதாமல் இனியும் ஒரு சப் ஜட்ஜி கோர்ட்டு வேண்டுமென்றால் இவ்வயோக்கியத்தனத்திற்கு எதைச் சமமாகச் சொல்லுவது ; இதையும் நமது ஜில்லாவில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் ஊருக்கு வரும்படி எதிர்பார்க்கிறார்களாம்.

கோர்ட்டு வந்தால் வந்த ஊருக்கு ஏற்படும் கெடுதி

எந்த ஊரில் வைத்தாலும் வேலை ஏற்படும் என்கிற விஷயத்தில் நமக்கு சந்தேகமில்லை. அப்பீல் செய்ய இஷ்டமில்லாதவனுக்கெல்லாம் அப்பீல் செய்து பார்க்கலாம் என்கிற ஆசை வந்து விடும். விவகாரத்தில் ஆசை இல்லாமலும் அசலூருக்குப் போய் விவகாரம் செய்வதில் சௌகரியமில்லாமல் தங்களுக்குள்ளாகவே பைசல் செய்து கொள்ளலாம் என்கிறவர்களுக்கெல்லாம் உள்ளூரில் கோர்ட்டு வந்துவிட்டால் பிராது செய்துவிடலாம் என்கிற எண்ணம் ஏற்பட்டுவிடும். அலக்ஷியமாகவும் அனாவசியமாகவும் மறதியில் இருந்த வழக்குகளுக்கெல்லாம் வக்கீல்கள் முதன்மை ஸ்தானம் கற்பித்துக் கொடுத்து வழக்கிலிழுத்து விட்டுவிடுவார்கள். இன்னமும் எவ்வளவோ கஷ்டங்கள் அவ்வூரிலுள்ள ஏழைக் குடிமக்களுக்கு ஏற்பட்டு விடும். முதலாவது வீட்டு வாடகை உயர்ந்துவிடும். காய், கறி, மோர், தயிர், பால், நெய், விறகு விலைகள் உயர்ந்துவிடும். கூலி ஆட்களின் கூலி அதிகமாய் விடும். ஜனங்களுக்குள் கட்டுப்பாடும் பெரியவர், சிறியவர் என்கிற மரியாதையும் மாறிவிடும். இவ்வளவு அக்கிரமங்களோடு நாணயமும் குறைந்துவிடும். இவ்வளவு கஷ்டங்கள் ஏற்படுவதாயிருந்தாலும் ஒரு வகுப்பாரின் வயிற்று பிழைப்புக்கு கோர்ட்டுகளை அதிகப்படுத்துவதே தேச சேவையாயும், இதற்கனுகூலமாயிருக்கும் அதிகாரிகளே பூரண கும்பம் எடுக்கத்தக்க யோக்கியதை உள்ளவர்களாகவும் போய் விட்டது. இந்தக் கூட்டத்தார் தான் நமக்கு சுயராஜ்யம் வாங்கிக் கொடுக்கத்தக்க யோக்கியர்களாம்.

விவகாரக்காரருக்கு ஏதாவது வசதி உண்டா?

இவ்வளவு அக்கிரமங்களுக்கிடையில் ஏற்படுத்தப்படும் கோர்ட்டுகளில் விவகாரக்காரர்களுக்கு ஏதாவது கடுகளவு சௌகரியமோ, யோக்கியதையோ அல்லது அவர்களையும் ஒரு மனிதர்களாய் கருதத்தக்க நிலைமையோ இருக்கிறதா என்று பார்த்தால் அது கொஞ்சமாவது நினைக்கத்தக்க காரியமே அல்ல. நியாயாதிபதியாயிருக்கிறவர் பொது ஜனங்களின் பணத்திலிருந்து மாதம் 500, 1000, 2000, 3000 சம்பளம் வாங்கிக்கொண்டு மோட்டாரில் வந்து இறங்குவதும்; தனி அறையில் இளைப்பாறுவதும், பங்கா வீசுவதும், பக்கத்தில் சேவகர்கள் கை கட்டிக்கொண்டு நிற்பதும், தனி கக்கூசு, தனி சிற்றுண்டி அறை ஆகிய போக போக்கியமும் விவகாரக்காரரை ஏமாற்றி 50, 100, 1000, 2000 என்பதாக பீசு வாங்கும் வக்கீல்கள் குதிரை வண்டிகளிலும், மோட்டார் கார்களிலும் வந்து இறங்குவதும், பங்காவின் கீழ் உட்காருவதும், தங்களுக்கென இளைப்பாறும் அறைகளுமான போக போக்கியங்களும் அடைவதுமாயிருக்கிறார்களே ஒழிய விவகாரக்காரரைப் பற்றியோ, விவகாரத்தின் பொருட்டு, சாட்சிக்கு வருகிறவர்களைப் பற்றியோ, கொஞ்சமாவது கவலையே இல்லை. கோர்ட்டுகளில் விவகாரக்காரருடைய பரிதாபம் அவர்கள் உட்கார சௌகரியமில்லை, தங்க இடமில்லை, ஒதுங்க மார்க்கமில்லை! வாய்ப்பேச மார்க்கமில்லை.

கோர்ட்டு எல்லைக்குள் இருக்கும் வரை ஜெயிலில் கைதி இருப்பது போல் பயந்து ஒடுங்கி நிற்கவும், ஏதாவது ஒருவருக்கொருவர் வாயைத் திறந்தால் அங்குள்ள சேவகர்கள், “உஸ்”, “அஸ்” என்று இடையன் ஆடு மாடுகளை ஓட்டுவது போலவும், “பேசாதே” என்று மரியாதை இல்லாமல் கட்டளையிடுவதுமான ஹீனத்தன்மைக்கு ஆளாக வேண்டியதேயல்லாமல் அங்கு வாதியாகவோ பிரதிவாதியாகவோ சாட்சியாகவோ வருகிறவர்கள் மனிதர்கள் என்று எண்ணிய மாதிரியாய் ஏதாவது காணப்படுகிறதா? அல்லாமலும் கோர்ட்டுகள் மெத்தை மீது சிலதும் சந்துக்களில் சிலதும் இருப்பதால் கூப்பிட்டாலும் காது கேட்கத் தக்க அவ்வளவு தூரத்திலாவது நிற்கக்கூட இடமில்லாமல் இருப்பதோடு வக்கீலிடம் பேசவோ, ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்லவோ இடமில்லை.

வாய்தாக்கள்

இத்தனையும் போதாமல் ஒரு விவகாரத்தை 3 வருஸ 4 வருஸ நீட்டி 25 - வாய்தா, 30 - வாய்தா போடும் உபத்திரவங்கள் அல்லாமல் காலை 11 மணிக்கு கோர்ட்டுக்குள் நுழைந்தால் மாலை 5 மணி வரையில் நின்று கொண்டே காத்திருக்க வேண்டும். சிலசமயங்களில் இன்று கேஸ் நடக்காது என்று தெரிந்தாலும் 5 மணி வரை வாய்தா எப்பொழுது என்று தெரிவதற்குக் காத்திருக்க வேண்டும். எப்பொழுது நடக்கும்? இந்த வாய்தாவில் நடக்காதா? என்கிற விவரங்கள் கட்சிக்காரரோ சாட்சிக்காரரோ அறிய வசதியில்லை. இதனால் இவர்களுக்கு கட்டும் சாட்சியபடி போக வர செலவு, மெனக்கேடு எவ்வளவென்பதைப்பற்றி யாருக்கும் கவலையில்லை. ஜட்ஜி பெண்சாதிக் காலில் எறும்பு கடித்துவிட்டால் அன்றைய கேசுகள் முழுவதும் வாய்தா போட்டாய்விடும். வக்கீல் வீட்டில் அமாவாசை சமையலாக நேரமாய் விட்டால் குமாஸ்தா வாய்தா வாங்கிவிடுவான். வக்கீலுக்கு வேறு கோர்ட்டுக்குப் போக வேலையிருந்தால் கேசை மாலையில் எடுத்துக்கொள்ளும்படி ஜட்ஜைக் கேட்டு வாய்தா வாங்கி விடுவான். இப்படி எவ்வளவு கஷ்டங்கள் ஏற்படுகின்றன.

நிற்க, சாட்சிக்கு உடம்பு சௌகரியமில்லாவிட்டால் டாக்டர்களுக்கு 20, 30 கொடுத்து சர்ட்டிபிகேட் வாங்க வேண்டும். வேறு அவசர வேலையிருந்தால் 20, 30 கொடுத்து வயிற்றுக் கடுப்பு என்று பொய் சர்ட்டிபிகேட் வாங்க வேண்டும். இப்படியாக எவ்வளவு கொடுமைகள் விவகாரக்காரருக்கு இருந்து வருகிறதென்பதும் வாய்தாக்கள் ஏற்படுவது கட்சிக்காரர்களாலா அல்லது வக்கீல்களாலா, ஜட்ஜிகளாலா என்பதைப் பார்த்தால் 100-க்கு 90 விவகாரங்களுக்கு ஜட்ஜிகளும் வக்கீல்களுமேயல்லாமல் வாதி பிரதிவாதி காரணமேயில்லை என்பதும் விளங்கும்.

மேல் அதிகாரிகளோ?

இவற்றைப் பற்றி மேல் அதிகாரிகளுக்கு எழுதினால் “அசல் அநியாயம் அபீலில் அதுவே காயம்” என்பதுபோல் “இதெல்லாம் சகஜம் தான்” என்று சொல்லுவார்கள். காரணம் என்னவென்றால் முனிசீப்பு ஸ்தானம் முதல் ஹைக்கோர்ட்டு ஜட்ஜி, சட்ட மெம்பர் ஆகிய ஸ்தானம் வரையில் இந்த வக்கீல் கூட்டத்திலிருந்தும் இதனாலே வயிறு வளர்க்கக் கூடிய கூட்டத்திலிருந்துமே தான் ஆள்பிடிக்கிறார்களே தவிர வேறில்லை. வக்கீல் கூட்டத்திலிருந்து நியாயாதிபதிகளை நியமிப்பது என்கிற அக்கிரமம் ஒரு நாட்டில் இருக்கும் வரை பார்ப்பன ஆதிக்கமும் விவகாரமும் வலுக்கவும், குடியானவர்கள் நாசமாய்ப் போகவும், நாடு குட்டிச்சுவராகவும்தான் ஏற்படுமேயல்லாமல் ஒரு நாளும் நாம் உருப்படியாகி சுயராஜ்யம் பெறப் போவதில்லை என்பது உறுதி.

(குடி அரசு - கட்டுரை - 06.03.1927)

“வகுப்பு உரிமை” வேண்டாம் என்று சொல்லித் திரியும் போலி தேசாபிமானி, தேசீயவாதிகளுக்கு ஒரு விண்ணப்பம்

 

“வகுப்பு உரிமை” வேண்டாம் என்று சொல்லித் திரியும் போலி தேசாபிமானி, தேசீயவாதிகளுக்கு ஒரு விண்ணப்பம்


நமது சென்னை அரசாங்கத்தின் 1925, 26 -வது வருஷத்திய நிர்வாக அறிக்கைபடி உத்தியோக விஷயங்களில் கீழ்கண்ட கணக்குகள் குறிக்கப்பட்டிருக்கின்றன.



நமது சர்க்கார் உத்தியோகம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது (1) கெஜட்டட் ஆபீசர் என்று சொல்லுவது. இது குறைந்தது சுமார் 250 ரூபாய்க்கு மேல்பட்டு 5500 ரூபாய் சம்பளம் வரையில் வாங்கக் கூடியது. இரண்டாவது 100 ரூபாய்க்கு மேல்பட்டு 250 ரூபாய் வரை வாங்கக் கூடியது. மூன்றாவது 35 ரூபாய்க்கு மேல்பட்டு 100 ரூபாய் வரையில் உள்ளது. ஆகவே, இந்த மூன்று உத்தியோகத்திலும் பார்ப்பனர்கள் இவ்வளவு பேர்கள் இருக்கிறார்கள் என்றும், பார்ப்பனரல்லாதார் இவ்வளவு பேர்கள் இருக்கிறார்கள் என்றும் கணக்கு போட்டிருக்கிறார்கள். இவ்வுத்தியோகங்களிலும் பார்ப்பனர்களே ஏகபோகமாய் அனுபவித்து வரும் நீதி இலாகா அதாவது முனிசீப், சப்ஜட்ஜி, ஜட்ஜிகள் முதலிய உத்தியோகங்களைப் பற்றி குறிப்பிடவே இல்லை. அதில்லாமலே உள்ள உத்தியோகங்களுக்கு சர்க்கார் குறிப்புப்படி எப்படி இருக்கிறது என்று பார்த்தால் நம்மில் நம்மவர்களுக்கும் விகிதாச்சாரம் உத்தியோகம் வேண்டுமென்று கிளர்ச்சி செய்பவர்கள் வகுப்பு உரிமைக்காரரா? அல்லது வேண்டாம் என்று சொல்லுகிறவர்கள் வயிற்று சோற்று உரிமைக்காரரா? என்பது வெளிப்பட்டுவிடும்.

கணக்கு விபரம்:-

 250க்கு மேல்பட்டு 5500 ரூபாய் வரை
சம்பளம் பெறக்கூடியவர்கள்
100 ரூபாய்க்கு மேல்பட்டு 250 ரூபாய் வரை சம்பளம் பெறக்கூடியவர்கள் 35 ரூபாய்க்கு மேல்பட்டு 100 ரூபாய் வரை சம்பளம் பெறக்கூடியவர்கள் 
பார்ப்பனர்40234098197
பார்ப்பனரல்லாத
இந்துக்கள்
21519015238
தாழ்ந்த வகுப்பார்-254
முகமதியர்கள்533231139
கிறிஸ்தவர்கள்109456643

 

100-க்கு மூன்று வீதம் உள்ள பார்ப்பனர் மொத்தம் = 12,008

100-க்கு 97 வீதம் உள்ள பார்ப்பனரல்லாதார் எல்லோரும் சேர்த்து = 10,133

நமது சென்னை அரசாங்கத்தின் 1925, 26 -வது வருஷத்திய நிர்வாக அறிக்கைபடி உத்தியோக விஷயங்களில் கீழ்கண்ட கணக்குகள் குறிக்கப்பட்டிருக்கின்றன.

நமது சர்க்கார் உத்தியோகம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது (1) கெஜட்டட் ஆபீசர் என்று சொல்லுவது. இது குறைந்தது சுமார் 250 ரூபாய்க்கு மேல்பட்டு 5500 ரூபாய் சம்பளம் வரையில் வாங்கக் கூடியது. இரண்டாவது 100 ரூபாய்க்கு மேல்பட்டு 250 ரூபாய் வரை வாங்கக் கூடியது. மூன்றாவது 35 ரூபாய்க்கு மேல்பட்டு 100 ரூபாய் வரையில் உள்ளது. ஆகவே, இந்த மூன்று உத்தியோகத்திலும் பார்ப்பனர்கள் இவ்வளவு பேர்கள் இருக்கிறார்கள் என்றும், பார்ப்பனரல்லாதார் இவ்வளவு பேர்கள் இருக்கிறார்கள் என்றும் கணக்கு போட்டிருக்கிறார்கள். இவ்வுத்தியோகங்களிலும் பார்ப்பனர்களே ஏகபோகமாய் அனுபவித்து வரும் நீதி இலாகா அதாவது முனிசீப், சப்ஜட்ஜி, ஜட்ஜிகள் முதலிய உத்தியோகங்களைப் பற்றி குறிப்பிடவே இல்லை. அதில்லாமலே உள்ள உத்தியோகங்களுக்கு சர்க்கார் குறிப்புப்படி எப்படி இருக்கிறது என்று பார்த்தால் நம்மில் நம்மவர்களுக்கும் விகிதாச்சாரம் உத்தியோகம் வேண்டுமென்று கிளர்ச்சி செய்பவர்கள் வகுப்பு உரிமைக்காரரா? அல்லது வேண்டாம் என்று சொல்லுகிறவர்கள் வயிற்று சோற்று உரிமைக்காரரா? என்பது வெளிப்பட்டுவிடும்.

கணக்கு விபரம்:-

 250க்கு மேல்பட்டு 5500 ரூபாய் வரை
சம்பளம் பெறக்கூடியவர்கள்
100 ரூபாய்க்கு மேல்பட்டு 250 ரூபாய் வரை சம்பளம் பெறக்கூடியவர்கள் 35 ரூபாய்க்கு மேல்பட்டு 100 ரூபாய் வரை சம்பளம் பெறக்கூடியவர்கள் 
பார்ப்பனர்40234098197
பார்ப்பனரல்லாத
இந்துக்கள்
21519015238
தாழ்ந்த வகுப்பார்-254
முகமதியர்கள்533231139
கிறிஸ்தவர்கள்109456643

 

100-க்கு மூன்று வீதம் உள்ள பார்ப்பனர் மொத்தம் = 12008

100-க்கு 97 வீதம் உள்ள பார்ப்பனரல்லாதார் எல்லோரும் சேர்த்து = 10133

இவற்றுள் 100-க்கு 25 வீதம் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பார் = 56

இதோடு முனிசீப்பு ஜட்ஜிகளின் கணக்கு சேர்ந்தால் எப்படி இருக்கும் என்பதையும், இந்தக் கணக்கை வெளியிட்டவர்கள் அந்தக் கணக்கையும் வெளியிட ஏன் பயப்படுகிறார்கள் என்பதையும், சுயராஜ்யம் வந்தாலும் இந்த கணக்குதான் ஏற்படுமா அல்லது வேறு கணக்கு ஏற்பட வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்பதையும் யோசித்துப் பார்த்து, வகுப்புரிமை வகுப்புவாதம் வேண்டாம் என்று சொல்லும் “தேசீயவாதிகள்” வகுப்புவாதம் அல்லது வகுப்பு உரிமை தவிர வேறு வழிகளால் முக்கியமாய் தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் சமத்துவமடைய முடியுமா? என்பதையும், உத்தியோகம் பார்ப்பதும் “சுயராஜ்ஜியத்தில்” ஒன்று அல்லவா என்பதையும் தெரிவிக்க வேண்டுகிறோம்.

(குடி அரசு - கட்டுரை - 27.03.1927)

தஞ்சை ஜில்லா போர்டு

தஞ்சை ஜில்லா போர்டின் ஆதரவில் நடைபெறும் பள்ளிக் கூடங்களில் 25 ஆதிதிராவிடர் பிள்ளைகளுக்கு உண்டி உடை கொடுத்து இலவசமாய்க் கல்வி போதிக்க ஏற்பாடு செய்திருப்பதாகக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.   பார்ப்பனரல்லாத பிரசிடெண்டு வந்ததினால்தான் இவ்வித சௌகரியம் செய்ய முடிந்தது.   இதற்காக போர்டாரைப் பெரிதும் பாராட்டுகிறோம்.

(குடி அரசு - பெட்டிச் செய்தி - 27.03.1927)

d