Thursday, 9 May 2024

எட்டாவதாண்டு (1932)

 எட்டாவதாண்டு 


நமது ‘குடி அரசுக்கு’ ஏழு ஆண்டுகள் நிறைவேறி, இன்று எட்டாவது ஆண்டின் முதல் இதழ் வெளிவருகிறது. நமது ‘குடி அரசு’ பிறந்தது முதல் இது வரையிலும் நாட்டில் உண்டாக்கியிருக்கும் மாறுதலை எதிரிகளும் வயிற்றெரிச்சலோடு ஒப்புக்கொண்டுதான் தீருவார்கள்.

நமது ‘குடி அரசு’ மக்களுடைய உயர்வு தாழ்வுக்குக் காரணமான எல்லா மாசுகளையும் போக்கிச் சமத்துவத்தை உண்டாக்கும் கொள்கையுடன் ஏற்பட்டது என்பதை வாசகர்களுக்கு நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.

முதலில் புரோகிதப் புரட்டில் உள்ள சூழ்ச்சிகளையும் அர்த்தமற்ற செயல்களையும் வெளிப்படுத்திச் சிக்கனத்தையும், மூட நம்பிக்கையைப் போக்கிப் பகுத்தறிவையும் போதித்தது.

இரண்டாவது மக்களிடம் ஜாதி பேதத்தையும் எண்ணற்ற மூடநம்பிக்கைகளையும் உண்டாக்குவதற்குக் காரணமாக இருக்கும் வேதம், புராணம், இதிகாசம், ஸ்மிருதி முதலிய சாஸ்திரங்களின் ஆபாசங்களையும் பொய்யுரைகளையும், அவைகள் பார்ப்பனர்களின் சுயநலத்திற்காக உண்டாக் கப்பட்டவை என்பதையும் எடுத்துக்காட்டிற்று.

மூன்றாவது மக்கள் ஏமாறுவதற்கும், மக்களை ஏமாற்றுவதற்கும் காரணமான அவதாரம், நாயன்மார், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள், ஜீயர்கள், சந்நிதானங்கள், பாதிரிகள், முல்லாக்கள், புரோகிதர்கள், குருக்கள் முதலிய வர்களின் சூழ்ச்சிகளையும், மோசங்களையும் வெளிப்படுத்திற்று.

கடைசியாக, கடவுள், ஆன்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு முதலிய வற்றில் உள்ள சூழ்ச்சிகளையும் புரட்டுகளையும், இவ்வார்த்தைகளில் உள்ள அர்த்தமற்ற தன்மைகளையும் வெளிப்படுத்தியது.

மேற்கூறிய விஷயங்களைப் பிரச்சாரம் பண்ண நாம் எல்லா மதங்க ளையும் தாக்க வேண்டியதிருந்தது. மதங்களைத் தாக்காமல் மேற்கூறிய காரியங்களைச் செய்யவே முடியாது.

‘கடவுள்’, ‘வேதம்’, ‘ஆன்மா’, ‘மோட்சம்’, ‘நரகம்’, ‘மறுபிறப்பு’, ‘அவதாரம்’ ஆகிய புரட்டுகள் எல்லாவற்றையுமோ, அல்லது இவைகளில் சிலவற்றையோ, அல்லது பலவற்றையோ, அல்லது ஒன்றையோ அஸ்திவார மாகக் கொண்டிராத மதமே உலகில் இல்லை. ஆகவே மேற்கூறிய அஸ்தி வாரங்களையெல்லாம் அகழ்ந்தெரிய வேண்டுமானால் மதங்களையும் அடியோடு அழித்தே ஆகவேண்டுமென்ற முடிவுக்கு வந்தது.

பெண்களின் சமத்துவத்திற்கும் சுதந்திரத்திற்கும் “குடி அரசு” செய்திருக்கும் அவ்வளவு வேலை இந்தியாவில் வேறு எந்தப் பத்திரிகையும் செய்ததில்லையென்று தோள்தட்டிக் கூறலாம். இன்று நமது நாட்டில் நடைபெறும் எந்தப் பெண்கள் கூட்டத்திலும் சுயமரியாதைக்கான தீர்மானங் கள் நிறைவேற்றப்படுவதற்குக் ‘குடி அரசின்’ பிரசாரமே காரணமாகும்.

‘குடி அரசு’ இவ்வாறு மத விஷயத்திலும், சமூக விஷயத்திலும், பங்கு எடுத்துக் கொண்டதோடு மாத்திரம் நிற்காமல் அரசியல் விஷயத்திலும் மக்கள் ஏமாறாமலிருக்குமாறு அடிக்கடி எச்சரிக்கத் தவறவில்லை.

அரசியல்வாதிகளின் புரட்டுகளையும், அயோக்கியத்தனங்களையும், தாட்சண்யமில்லாமல் பொது ஜனங்களுக்குக் கூறி வந்தது. இதன் பலனாகத் தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்குப் பொது மேடைகளில் இடங்கிடைக்காத நிலைமையும் உண்டாயிற்று.  இன்று தென்னாட்டில் வருணாச்சிரம தருமி களுக்கும், காங்கிரஸ்காரர்களுக்கும் செல்வாக்கு இல்லாமலிருப் பதற்குக் காரணம் ‘குடி அரசின்’ பிரசாரமேயாகும். சுருங்கக் கூறினால் காங்கிரஸ் ஸ்தாபனத்தின் மதப் பிரசாரத்தையும், வருணாச்சிரம தருமப் பிரசாரத்தையும், முதலாளி ஆதிக்கப் பிரசாரத்தையும்  ஆரம்ப முதல் இன்று வரையிலும் வெட்ட வெளிச்சமாக்கிப் பொது ஜனங்களை ஏமாறாமல் இருக்கும்படி செய்து வருவதும், இக்காரணங்களில் காங்கிரஸ் ஸ்தாபனத்தை அடியோடு அழித்தால் ஒழிய நமது நாட்டுக்குச் சமதரும ராஜியம் கிடைப்பதற்கு வழி யில்லை என்று பிரசாரம் பண்ணி வருவதும் நமது ‘குடி அரசு’ ஒன்றேயாகும்.

இவ்வாறு ‘குடி அரசு’ மத விஷயத்திலும், சமூக விஷயத்திலும் அரசியல் விஷயத்திலும் உள்ள சூழ்ச்சிகளை வெளிப்படுத்தி வந்த காரணத்தினால் இதற்கு உண்டான எதிர்ப்புகள் எண்ணற்றவை.

‘மத பக்தர்’கள் எல்லோரும் ‘குடிஅரசு’ வாலிபர்களையெல்லாம் கெடுக்கிற தென்றும் ‘குடி அரசு’ பெண்களையெல்லாம் கெடுத்து விடுகிறது என்றும் ‘குடி அரசு’ப் பிரசாரத்தால் உலகமே முழுகிப் போய் விடுமென்றும் மறுபடியும் ‘கடவுள்’ அவதாரம் பண்ணித்தான் ‘குடி அரசையும்’ அதை ஆதரிக்கும் சுயமரியாதைக்காரர்களையும் தொலைக்க வேண்டுமென்றும் ஊர் ஊராகப் பிரசாரம் பண்ணினார்கள்; பத்திரிகைகளில் எழுதினார்கள்; புதிய பத்திரிகைகளும் ஆரம்பித்து நடத்தினார்கள்; அவர்கள் நம்பும் ‘ஆண்ட வனை’ நோக்கித் ‘தவமும்’ கிடந்தார்கள்.

இரண்டாவது, ‘குடி அரசு’ தோன்றுவதற்கு முன் சமூகச் சீர்திருத்தக் காரர்களாக விளங்கி வந்தவர்களெல்லாம் ‘குடி அரசை’க் கண்டு நடு நடுங்கினார்கள். ‘குடி அரசு’ சீர்திருத்த விஷயத்தில் அளவு கடந்து செல்லு கிறதென்றும், இவ்வாறு சென்றால் உள்ள சீர்திருத்தமும் அழிந்து விடும் என்றும், மதங்களையெல்லாம் அழித்துவிட்டுச் சீர்திருத்தம் பண்ணுவது முடியாத செயலென்றும், ஆப்கானிஸ்தானத்தில் மாஜி அரசர் அமனுல்லா கான்  அதிதீவிரச் சீர்திருத்தம் செய்ய முயன்றதனால் ராஜியத்தை இழக்கும் படி நேர்ந்ததைப் போல ‘குடி அரசு’க் கொள்கையும் மதிப்பிழந்து புறக்கணிக் கப்படுமென்றும், பலவாறாக பயமுறுத்தல் பிரசாரமும், அவதூறுப் பிரசாரமும் பண்ணினார்கள்.

மூன்றாவதாகப் பார்ப்பனர்களும், காங்கிரஸ்காரர்களும் பொறாமைக் காரர்களும் ‘குடி அரசை’ ஒழிப்பதற்குச் செய்த சூழ்ச்சிகள் எண்ணத் தொலையாதவை.  ‘குடி அரசை’த் தேசத் துரோகப் பத்திரிகையென்றும் அர சாங்க தாசப் பத்திரிகையென்றும், ஜாதித்துவேஷப் பத்திரிகையென்றும், நாஸ்திகப் பத்திரிகையென்றும் பலவாறு பொது மக்களிடம் பிரசாரம் பண்ணி னார்கள்.  ‘குடி அரசு’ பொது உடைமைப் பிரசாரம் பண்ணுகிறதென்றும், ஆகையால் அதையும் அதைச் சேர்ந்த கூட்டத்தாரையும் அடக்காவிட்டால் நாட்டில் கலகமும் கொள்ளையும் உண்டாகுமென்றும், அரசாங்கத்தாரிடமும், பொது மேடைகளிலும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பிரசாரம் பண்ணினார்கள்.

அதிலும் சென்ற இரண்டு ஆண்டுகளில், அதற்கு முந்திய ஆண்டு களைக் காட்டிலும் ‘குடி அரசை’யும் அதன் மூலம் உண்டான சுயமரியாதை இயக்கத்தையும் அழிக்கப்பாடுபட்டவர்களின் முயற்சி மிகவும் அதிகம் என்றே கூறவேண்டும், நமது நாட்டில் உப்புச் சத்தியாக்கிரகத்திலும், சட்ட மறுப்பிலும் ஈடுபட்ட பார்ப்பனர்களும், சில பார்ப்பனரல்லாதாரும் ‘குடி அரசை’ப் பற்றியும் ‘குடி அரசை’ ஆதரிப்போரைப் பற்றியும், ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு மேடையிலும், கூட்டத்திலும், நாள் தவறாமல், நாழிகை  தவறாமல் அவதூறுப் பிரசாரம் பண்ணினார்கள் நம்மவர்களுக்குள்ளேயே சிலர், புத்தி தடுமாற்றத்தினாலேயோ,  அல்லது சுய நலத்தினாலேயோ, அல்லது வேறு எந்தக் காரணத்தினாலேயோ எதிரிகளுடன் சேர்ந்து கொண்டும், ‘தேசீய சுயமரியாதை’ என்ற புதுப் பெயர் வைத்துக் கொண்டும் ‘குடி அரசை’யும் சுயமரியாதை இயக்கத்தையும் எதிர்த்தார்கள்.   இவ்வாறு எவ்வளவு பாடுபட்டுங்கூட அதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கையைச் சிறிதளவு குறைக்க முடிந்ததேயொழிய வேறு  இதன் கொள்கைகளின் நமது எதிரிகளால் ஒரு உரோமத்தைக் கூட அசைக்கமுடியவில்லை என்பது வாசகர்களுக்குத் தெரியாத செய்தியல்ல.

‘குடி அரசு’ தோன்றிய நாள் முதல் இது வரையிலும் தனது கொள்கையிலிருந்து சிறிதும் வழுவாமல், உழைத்து வருவதற்குக் காரணம், யாருடைய தயவையும் தாட்சண்யத்தையும் எதிர்பாராமல் வேலை செய்வதே யாகும்.  ஒரு கொள்கையைப் பிரசாரம் பண்ண ஏற்பட்ட எந்தப் பத்திரிகை யாகட்டும், எந்த ஊழியராகட்டும், பிறருடைய தயவு தாட்சண்யத்திற்குக் கட்டுப்படாமலிருந்தால் தான் கொள்கைக்காக உழைக்க முடியும் என்ற தத்துவத்திலிருந்து சிறிதும் பிசகாமலே ‘குடி அரசு’ இது வரையிலும் இருந்து வருகிறது.

எண்ணற்ற எதிர்ப்புக்களிருந்தும் ‘குடி அரசு’ பொது ஜனங்களின் கவனத்தை நாளுக்கு நாள் எதிர்பார்ப்பதற்கு அதிகமாகவே கவர்ந்து வருவதற்கு அதன் அசைக்கமுடியாததும், பகுத்தறிவுக்குப் பொருத்தமானதும் உண்மையில் நாட்டில் சமதருமத்தை யுண்டாக்கத் தகுந்ததும் ஆகிய கொள்கைகளே காரணமாகும் என்று நாம் கூறுவது மிகையேயாகும்.

ஆரம்பத்தில் ‘குடி அரசை’த் தங்களுடைய தேர்தல் பிரசாரத்திற்கு உபயோகப்படுத்தி கொள்ளாலாமென்று கருதி அதன் கொள்கைகளை ஒப்புக் கொள்வது போலச் சிலர் நடித்து வந்தார்களானாலும், நாளடைவில் அவர்கள் ‘குடி அரசின்’ உண்மைக் கொள்கைகளையும் அது யாருடைய தயவையும் போற்றுதல், தூற்றுதல்களையும் எதிர்பார்ப்பதல்ல என்பதையும் அறிந்த பின் “குடி அரசு” படிப்பதையும் அதன் கொள்கைகளைப் பற்றிப் பேசுவதையும் விட்டு விட்டதோடு மாத்திரமல்லாமல் மறைமுகமாகச் சிலர் எதிர்ப்பிரசாரங் கூடச் செய்ய ஆரம்பித்தார்கள் என்னும் விஷயம் ‘குடி அரசு’ வாசகர்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம்.    இப்படி இருந்தும்  ‘குடி அரசி’ன் கொள்கை களுக்கும் ‘குடி அரசு’க்கும் ஒரு குறைவும் உண்டாகவில்லை.

வைதீகர்களும், பார்ப்பனர்களும், காங்கிரஸ்காரர்களும் ‘குடி அரசை’ உபயோகப்படுத்திக் கொள்ள எதிர்பார்த்து ஏமாந்தவர்களும் ‘குடி அரசை’ ஒழிக்கப் பாடுபட்டாலும், ஆரம்பத்தில் ‘குடி அரசி’ன் சீர்திருத்தக் கொள்கை களை ஆதரித்து வந்த பணக்காரர்களும், உத்தியோகஸ்தர்களும், மந்திரி மார்களும் ‘குடி அரசை’ ஆதரிக்கவும், சுயமரியாதைக் கூட்டங்களுக்கு வரவும் பயந்து ஒதுங்கியிருந்தாலும் பணக்காரர்களில் சில உண்மையான சுயமரியாதைப் பற்றுடையவர்களைத் தவிர மற்ற எல்லாப் பணக்காரர்களும் ஜமீன்தாரர்களும் பெரிய உத்தியோகஸ்தர்களும் இவர்களுடைய கையாட் களாக வேலை செய்யும் ராஜ்யவாதிகளும் ‘குடி அரசு’க் கொள்கையை முந்திய ஆண்டுகளைவிடச் சென்ற ஆண்டில் அதிகமாக எதிர்த்துப் போராடி னாலும், அதன் வேலை சென்ற ஆண்டிலேயே அதிகமாக நடைபெற்றி ருக்கிறது என்று தைரியமாகவே கூறவேண்டும். உதாரணமாகச் சென்ற ஆண்டில் நடைபெற்ற சுயமரியாதை மகாநாடுகளை எடுத்துக்கொள்ளலாம்.

 

சென்ற ஆண்டில் தூத்துக்குடியில் ஒரு சுயமரியாதை மகாநாடு காரைக் குடியில் ஒரு சுயமரியாதை மகாநாடு, பொறையாற்றில் ஒரு சுயமரியாதை மகாநாடு, நன்னிலத்தில் ஒரு சுயமரியாதை மகாநாடு, லாலு குடியில் இரண்டு சுயமரியாதை மகாநாடுகள், விருதுநகரில் மாகாணச் சுயமரியாதை மகாநாடு, நாகப்பட்டினத்தில் ஒரு சுயமரியாதை மகாநாடு, சென்னையில் ஒரு சுய மரியாதை மகாநாடு ஆக பத்து சுயமரியாதை மகாநாடுகள் நடந்திருக்கின்றன. இவைகளைத் தவிர நாடெங்கும் நடைபெற்றுள்ள பொதுக்கூட்டங்கள் எண்ணற்றவை. இந்த மகாநாடுகளின் பயனாலும் பொதுக் கூட்டங்களின் பயனாலும் ஆயிரக்கணக்கான மக்கள் சுயமரியாதை யியக்கத்தின் உண்மைக் கொள்கைகளையறிந்து, அவைகளைக் கூடிய வரையிலும் பின்பற்றி நடக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதையும் யார் மறுக்க முடியும்? இவற்றுக்கெல்லாம் ‘குடி அரசின்’ அச்சமற்ற ஊழியம் அன்றோ காரணம்.

சுருங்கக் கூறவேண்டுமானால் சென்ற ஏழாண்டுகளாகக் “குடி அரசு” தனது கொள்கையை விட்டு நழுவாமலும் யாருடைய தயவுக்கும் கட்டுப் படாமலும், எவருக்கும் அஞ்சாமலும், உழைத்து வந்ததன் பலன் வீண் போகாமல் நாளுக்கு நாள் அதிகமான மக்கள் – ஆரம்பத்தில் அதன் கொள்கைகளில் நம்பிக்கையில்லாமலிருந்தவர்கள் கூட அதன் கொள்கை களைப் பற்றிச் சிந்திக்கவும் பின்பற்றவும் முன் வருகிறார்கள் என்ற உண் மையை அறியும் போது  ‘குடி அரசும்’ அதன் வாசகர்களும், பெருமையும், மேலும் மேலும் உறுதியோடும், அஞ்சாமையோடும் பிரசாரம் பண்ணுவதில் ஊக்கமும், தைரியமும் அடைய வேண்டுமேயொழிய வேறு தளர்ச்சியோ, கவலையோ படவேண்டிய அவசியமில்லையென்றே நிச்சயமாகக் கூறு வோம்.

மற்றொரு விஷயத்தையும்  ‘குடி அரசின்’ வெற்றிக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.   சென்ற நாலைந்து மாதங்களாக நமது ஆசிரியர் நமது நாட்டில் இல்லாமல் மேல் நாட்டுச் சுற்றுப் பிரயாணத்திற்காக தோழர் இராமநாதன் அவர்களுடன் சென்றிருந்தும் ‘குடி அரசி’ன் வளர்ச்சியில் ஒரு விதமான குறைவும் ஏற்படவில்லை என்பதைக் கொண்டும் அதன் கொள்கைக்கு தேசத்தில் எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதை அறியலாம்.

இனி எதிர்காலத்தில் சென்ற ஆண்டுகளைவிடக் “குடி அரசின்” வளர்ச்சியும் அதன் கொள்கைகளுக்கு ஆதரவும் அதிகப்படும் என்றே எதிர்பார்க்கிறோம்.  நமது ஆசிரியர் ஈ. வெ. ராமசாமி அவர்களும், தோழர் எஸ். ராமநாதன் அவர்களும் மேல் நாட்டினர் மத சமுதாய விஷயங்களில் எவ்வாறு முன்னேறியிருக்கின்றார்கள் என்பதையும், அவ்வாறு முன்னேறி யிருப்பதற்குக் காரணங்கள் என்ன என்பதையும் நேரில் பார்த்து அறிந்து கொள்ளும் பொருட்டு மேல் நாடுகளில் இப்பொழுது சுற்றுப்பிரயாணம் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் சுற்றுப் பிரயாணத்திலிருந்து திரும்பி வந்தவுடன்  ‘குடி அரசின்’ கொள்கைக்காக வேண்டி இன்னும் அதி தீவிரமாக உழைப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஆகவே இனி வருங் காலத்தில் பொது ஜனங்களின் கவனமும், வாசகர்களின் ஆதரவும்  ‘குடி அரசி’னிடமும் அதன் கொள்கைகளிடமும் அதிகமாகவே ஏற்படுமென்று உறுதியாக நம்புகின்றோம்.

குடி அரசு – தலையங்கம்  – 01.05.1932

ஏழாவதாண்டு (1931)

 ஏழாவதாண்டு 


நமது “குடி அரசு” தோன்றி ஆறாண்டு நிறைவு பெற்று ஏழாவதாண் டின் முதல் மலராய் இவ்வாரப்பதிப்பு வெளியாகின்றது. இந்த சென்ற ஆறாண்டுகளாய் “குடி அரசு”  நாட்டிற்கு செய்து வந்த தொண்டைப்பற்றி இதன் வாசகர்களுக்கு நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.

இந்த நாட்டின் சமுதாய உலகத்திலும், மத உலகத்திலும், அரசியல் உலகத்திலும் இந்த வீசம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாறுதல்களுக்கு ஒரு சிறு அளவாவது “குடி அரசு” தன்னை பொருப்பாளியாக்கிக் கொள்ளுவதில் யாரும் ஆnக்ஷபணையோ பொறாமையோ படமாட்டார்கள் என்றே கருதுகின்றோம்.

“குடி அரசி”ன் கொள்கைகளை ஆதிமுதற்கொண்டு இதுவரையில் கவனித்துவந்த எவரும் சற்று மேல்நிலையில் உள்ளவர்கள் அவற்றை “மிகவும் அதிதீவிரக்கொள்கை” யென்றும்,  “சாத்திய மற்றது” என்றும் . “இது எந்தக்காலத்தில் நடக்கப்போகின்றது” என்றும், “கொள்கை சரி, போக்கு சரியல்ல” என்றும், “மிக வேகமாய் போகின்றது” என்றும், மற்றும் இது போன்ற பல மாதிரியாகவே சொல்லிவந்ததும், சற்று கீழ் நிலையில் உள்ளவர் கள் குடி அரசு கொள்கை “கடவுள் மறுப்பு” என்றும், “மதம் மறுப்பு” என்றும் சொல்லி வந்ததும், சற்று பணக்காரர்களாயிருப்பவர்களும் உயர்ந்த ஜாதிக் காரரென்று எண்ணிக்கொண்டு இருப்பவர்களும், குடி அரசு கொள்கை, “கட்டுப்பாடு இல்லை;  மேல்படி கீழ்படி இல்லை”, “அத்து அடக்கம் இல்லை” என்று சொல்லி வந்ததும், பண்டிதக் கூட்டத்தாரில் உள்ளவர்கள் குடி அரசுக்கு “கல்வியில்லை, ஆராய்ச்சியில்லை, இலக்கண இலக்கியம் தெரியவில்லை, ஆதலால் என்ன என்னமோ கண்டதெல்லாம் எழுதுகின்றது, இதனால் சமயத்திற்கு ஆபத்து வந்துவிடும்.  சமய ஞானங் களுக்கும் சமயாச்சாரியார் வாக்குகளுக்கும் ஆபத்து வந்துவிடும்” என்று சொல்லிவந்ததும், அரசியலில் இருந்தவர்கள் “குடி அரசு” அரசியல் ஞானமற்றது, அதன் பிரசாரம் தேசீய உணர்ச்சிக்கு விரோதமா யிருக்கின்றதே” என்று சொல்லி வந்ததும், மற்றும் இந்த மாதிரியாகவே தனித்தனி வகுப்பார்கள், பிரிவார்கள், சுயநல லட்சிய வாதிகள் முதலாகிய கூட்டத்தார்களால் குற்றம் சொல்லவும் ,  எதிர்பிரசாரம் செய்து பாமர மக்களை குடி அரசுக்கு விரோதமாய்  கிளப்பி விடவும்  பல முயற்சிகள் நடைபெற்று வந்தது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனாலும் இதுவரை மேல் கண்ட எந்த மறுப்புக்காரர்களிலும் எவராவது  ஒருவர் குடி  அரசின் ஏதாவது ஒரு குறிப்பிட்ட கொள்கையைப்பற்றிய அபிப்பிராயத்தை எடுத்துக்கொண்டு விவகாரம் சொல்லி தர்க்கமாடி மறுத்து நியாயம் சொன்ன தாக ஏற்படவில்லை என்பதை நாம் எடுத்துக்காட்ட சிறிதும் தயங்கவில்லை.

ஆனால் குடி அரசு பிரவேசித்த  துறைகள்  சாதாரணமாய் வேறு யாரும் பிரவேசிக்கக்கூடாத அவ்வளவு கஷ்டமான துறைகளில் புகுந்து, வேலை செய்த முறையில், மேற்கண்ட சில்லரை சில்லரையான மறுப்பு களாவது,  அதிருப்திகளாவது, முண முணப்புகளாவது வராமலிருக்கும்  என்று எதிர்ப்பார்ப்பதும் நியாயமான காரியமாகாது என்பதையும் யாவரும் ஒப்புக்கொள்ளுவார்கள் என்றே கருதுகின்றோம்.

குடி அரசு பிரவேசித்த துறைகளில்  அதாவது,

  1. பார்ப்பனர்.
  2. அரசியல்.
  3. மதம்.
  4. கடவுள்.
  5. வேதம், சாஸ்திரம், இதிகாசம், புராணம்.
  6. சைவம்,வைணவம் முதலிய சிறு சமயங்கள்.
  7. காந்தீயம்.
  8. பண்டைய ஒழுக்கங்கள்,முறைகள், மூடப்பழக்க வழக்கங்கள்.
  9. செல்வ நிலைமை முதலாளி-தொழிலாளி முறை.
  10. ஆண், பெண் தன்மை.

முதலிய துறைகளில் பிரவேசித்து அவைகளில் மக்களுக்குள் ஒரு பெரிய மனமாறுதலை உண்டாக்கியிருக்கின்றது என்பதை    நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.  ஆனாலும் அதை சற்று விளக்குவதில் வாசகர்கள் சலிப்படைய மாட்டார்கள் என்று நினைக்கின்றோம்.  அதாவது,

  1. பார்ப்பன விஷயம்

இஃதானது குடி அரசு  தோன்றுவதற்கு முந்தியே பார்ப்பனர்கள் விஷயத்தில் “பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார்” என்கின்றதான ஒரு கிளர்ச்சி இந்நாட்டில் யிருந்திருந்தாலும் அது தப்பான வழியிலேயே தப்பான உத்தேசத்துடனேயே பொது மக்களுக்கு பயன்படாத முறையில் போய்க் கொண்டிருக்கின்றது என்ற ஒரு குற்றம் சொல்லப்பட்டது யாவரும் உணர்ந்ததாகும்.  எப்படியெனில் இது விஷயமான முந்திய கிளர்ச்சியின் கொள்கைகள் எல்லாம்  “பார்ப்பனீயம் நல்லது பார்ப்பனர்கள் தான் கெட்ட வர்கள்” என்று சிலரும், மற்றும் “வைதீகப் பார்ப்பனர்கள் யோக்கியர்கள், அரசியல் பார்ப்பனர்கள்தான்  அயோக்கியர்கள்” என்று  மற்றொரு சிலரும்  கருதி இருந்ததோடு  அக்கிளர்ச்சிக்காரர்கள் பெரிதும் உத்தியோகம், அரசியல் ஆகியவைகளில் உள்ள பார்ப்பனர்களை மாத்திரம் வெறுத்து பஞ்சாங்க, பரிசாரக, ஓட்டல்கார, கோவில்மணி அடிக்கிற முதலிய  பார்ப்பனர்களை வணங்கி “சுவாமிகளே!” என்று கூப்பிட்டு அவர்கள் காலில் விழுந்து  கும்பிட்டு  அவர்களின் காலைக்கழுவின தண்ணீரைக் கூட சில சமயங்களில் குடித்தும் வந்தார்கள்.

இந்த குணம் திருவாளர்கள் சர்.பி.தியாகராய செட்டியார், பனகல் அரசர், சர்.பாத்ரோ,  தணிகாசலம் செட்டியார் முதலியவர்கள் உள்பட  எல்லா பார்ப்பனரல்லாத தலைவர்கள் என்பவர்களுக்குள்ளும் ஒத்துழையாமை இயக்கத்தில் இருந்த திரு. திரு.வி.கல்யாணசுந்திர முதலியார் போன்ற அரசியல்வாதிகளுக்குள்ளும் இருந்து வந்தது என்பது யாவரும் அறிந்ததேயாகும்.

ஆனால் குடி அரசு தோன்றிய பிறகே இந்தமாதிரி எண்ணமானது அடியோடு மாறி இப்போது பொது ஜனங்கள் “எங்களுக்கு  எந்தப் பார்ப்பனர்கள் மீதும் தனிப்பட்ட அதிருப்தியோ வெறுப்போ இல்லை” என்றும், “அவர்களது பார்ப்பன தர்மமும், பார்ப்பன சடங்கும், பார்ப்பன ஆதீக்க சம்மந்தமான முறைகளும், ஆதாரங்களுமேதான் எங்களுக்குப் பிடிக்கவில்லை” என்றும்  “அவைகளை விட்டு விட்ட-பாராட்டாத பார்ப்பனர்களிடம் எங்களுக்கு ஆnக்ஷபணை இல்லை” என்றும் சொல்லப் புரப்பட்டதோடு  பார்ப்பனீயத்தன்மை உள்ள பார்ப்பனரல்லாதாரிடமும்  கூட இதுபோலவே வெறுப்பு ஏற்படும்படி செய்திருக்கின்றது.

ஆகவே இந்தத்துறையில் குடி அரசு அஸ்திவாரத்திலேயே கையை வைத்து பார்ப்பனீயத்தொல்லையை என்றுமில்லாமல் போகும்படி வேலை  செய்து வந்திருக்கின்றது-வருகின்றது-வரும்.

  1. இதுபோலவே அரசியல் துறையிலும் குடி அரசு தோன்றுவதற்கு முன் அரசியலில் தலைப்பட்டிருந்த சில ஆட்கள் மீதும், அதன் பயனை யனுபவிக்கும் சில ஆட்கள்  மீதும் மாத்திரமே சிலருக்கு சந்தேகமும் பொறாமையும் கொண்டு அரசியலின் மூலம் பிழைப்பை நடத்த உத்தேசித் திருக்கும் ஆட்களுள் மாத்திரமே போட்டி போடுவதன் மூலம் அரசியல் துறையின் கிளர்ச்சிகள் நமது நாட்டில் நடந்து வந்தன.  ஆனால் குடி  அரசு தோன்றிய பின்னர்தான் “அரசியலிலுள்ளஆட்களைப்பற்றி நமக்கு கவலையில்லை, அதன் அடிப்படையான கொள்கைகளைப் பற்றியே கவலை கொள்ள வேண்டும்” என்கின்ற உணர்ச்சியேற்பட்டு அரசியல் கொள்கை களையே தலை கீழாய் மாற்றும்படியான நிலைமை உண்டாக்கியிருக்கின்றது டன் அந்தப்படி அரசியல்காரரும் உணர்ந்து அவர்களையே பழைய கொள்கைகளைப்பற்றி பேச வெட்கப்படும்படி செய்து வருகின்றது.

மேலும்  காங்கிரஸ் விஷயத்திலும் குடி அரசு தோன்றுவதற்கு  முன் பொது ஜனங்களுக்குள் “காங்கிரசு நல்லது.   அதை நடத்துகிறவர்கள்தான் கெட்டவர்கள்” என்கின்ற உணர்ச்சி இருந்தது மாறி குடி  அரசு தோன்றிய பின்  “காங்கிரசே நாட்டின் நலத்துக்கு மோசமானது. அது உத்தியோகத் திற்கும், அதிகாரத்திற்கும், பதவிக்கும் விண்ணப்பம் போடும் தபால் பெட்டி” என்கின்ற  உணர்ச்சியை மக்களுக்கு ஊட்டி வருகின்றது.

  1. மத விஷயத்திலும் குடி அரசு தோன்றுவதற்கு முன் மக்களுக்கு “மதமே பிரதானம்” என்றும் “இந்துமதமே உலகில் சிரந்த மதம்” என்றும் பொது மக்களுக்கும் இந்து மக்களுக்கும் இருந்துவந்த வெகுநாளைய உணர்ச்சிகள் மாறி இப்போது “இந்துமதம் என்பதாக ஒரு மதம் உண்டா? அதற்கு ஏதாவது கொள்கைகள் உண்டா?”  என்கின்ற எண்ணமும் “மக்களுக்கு மதம் அவசியமா?” என்கின்ற எண்ணமும் “மதம் என்பதும் மற்ற வியாபாரங்களைப்  போல் மக்களுக்கு ஒரு வியாபாரமும், மூட நம்பிக்கையுமானதல்லவா” என்கின்ற எண்ணமும் ஏற்பட்டு மதத்தின் பேரால் வாழ்க்கையும், பெருமையும் அடைய கருதி இருக்கின்றவர்கள் இடமும் மூடர்களிடமும், தவிர மற்றவர்களிடம் அதற்கு யோக்கியதையே இல்லாமல் இருக்கும்படி செய்துகொண்டு வருகிறதுடன், மதத்தை வெகு காலமாய் அனுசரித்து பின்பற்றி வந்தவர்களும் தாங்கள் இதுவரை எவ்வித பலனும் அடையாமல் வீண்  காலத்தை அதில் செலவிட்டு விட்டோமே  என்று தங்கள் ஏமாந்த தன்மையைப்பற்றி வருந்தும்படியாகவும் செய்து வந்திருக்கிறது.
  2. கடவுள் விஷயத்திலும் குடி அரசு தோன்றுவதற்குமுன் அதைப் பற்றி மக்கள் வெகுபிரதானமாகக் கருதி வந்தவைகள் எல்லாம் குடி அரசு தோன்றிய பின்பு அதனால் ஏற்பட்ட பெரும் பெரும் கிளர்ச்சிகளின் பயனாய்  சிலருக்கு “கடவுள் உண்டோ இல்லையோ என்பதைப் பற்றிய கவலையும், விசாரணையும் அனாவசியம்” என்று கருதும்படியாகவும், சிலருக்கு “மக்களுக்கு உலகவாழ்க்கை சுலபமாய் நடைபெறுவதற்கு கடவுள் உண்டு என்கின்ற உணர்ச்சியுடன் இருப்பது நல்லது” என்கின்ற முடிவுக்கு வரும் படியாகவும் மற்றும் அனேகருக்குள் “கடவுளைப்பற்றிய கவலை ஏன்” என்கின்ற எண்ணத்தையும் உண்டாக்கிவிட்டதுடன் “கடவுள் இல்லை என்று நினைத்துக்கொள்வதால் மனிதன் உலகத்தில் வாழ்வதற்கு தகுதியுடைய வனாகத் தகுந்த அறிவு, பொருப்பு, தன்னம்பிக்கை, குற்றம் உணர்தல் முதலிய அருங்குணங்கள் ஏற்படும்”  என்கின்ற ஒரு உணர்ச்சியையும் அனேகருக்கு உண்டாக்கி இருக்கின்றது.
  3. வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம் என்பவைகளும் குடி யரசு தோன்றுவதற்கு முன் அவற்றிற்கு இந்நாட்டில் இருந்த பெருமைகள் எவ்வளவு என்பதை நாம் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.  ஆகவே அவ்வளவு பிரமாதமான மதிப்புகள் அவைகளுக்கு இருந்த உணர்ச்சிகள் எல்லாம் இப்போது மாறி “வேதம், சாஸ்திரங்கள்”என்பவைகள் எல்லாம் ஒரு சாராரின் ஆதீக்கத்திற்கும், பிழைப்பிற்கும் ஏற்பட்டதென்றும், அவை களுக்கு  தாங்கள் கட்டுப்பட்டவர்கள் அல்லவென்றும், தங்களுக்கு அது  ஆதாரங்கள்  அல்லவென்றும், புராணங்கள் என்பவைகள் கட்டுக்கதைகள், ஒழுக்கத் திற்கும், உண்மைக்கும், இயற்கைக்கும் மாறுபட்ட, வெறுக்கத்தகுந்த புஸ்தகங் கள், அவை கீழ் மக்களால் பெரிதும் தொடுக்கப்பட்டவைகள், இதிகாசங்கள் என்பவை நடந்தவை  அல்ல, மதிக்கத்தகுந்தவை அல்ல,  பூஜிக்கத்தகுந்தவை அல்ல என்று பண்டிதர்கள் முதல்  அனேக அறிவாளி களும் பாமரமக்களும் வெளியில் தாராளமாய் சொல்லப் புரப்பட்டு விட்டதோடு,  அவைகளில் ஒரு சிலவற்றை மாத்திரம் கலைகளுக்காகவும் அதாவது கவி அழகு, கற்பனை அழகு, இலக்கண இலக்கிய அழகு ஆகியவைகளுக்காக மாத்திரம், அதுவும் அந்தக்கருத்துடனேயேதான்  பார்க்கத்தக்கது என்கின்ற அளவுக்கு அபிப்பி ராயம் சொல்ல வந்து விட்டதுடன், புராணங்களைப்பற்றி, சாஸ்திரங்களைப் பற்றி பேசுவதற்கே மக்கள் வெட்கப்படும்படியான  நிலையையும் ‘குடி அரசு’ கொண்டுவந்து விட்டுவிட்டது.
  4.  மற்றபடி சைவம், வைணவம் ஆகிய சமயங்களைப்பற்றியோ என்றால் ‘குடி அரசு’ தோன்றுவதற்குமுன் அச்சமயங்களே எல்லா  மக்களு டையவும் வாழ்க்கையின் லக்ஷியமாய் இருந்து தாண்டவமாடினதுடன், அவைகளே மக்களுக்கு செல்வமாகவும், செல்வாக்காகவும், கீர்த்தியாகவும், அழகாகவும், பெருமையாகவும், நாகரீகமாகவும் விளங்கியதோடு சமய ஆச்சாரிகளும், மடாதிபதிகளும், ராஜாக்களுக்கு சமானமாய் கருதப்பட்டு வந்தவைகளும் எல்லாம் ‘குடி அரசு’ தோன்றியபின் அவைகள் சிரிப்பாய் சிரிக்கத்தகுந்த நிலைமைக்கு வந்து, சமய வேஷமும்,  சமயப் பெருமையும் பரிகசிக்கத் தகுந்த நிலைக்கு வந்துவிட்டதுடன், அதனதன் கொள்கை களுக்கும், சமய  ஆச்சாரிகளுக்கும், சமயதெய்வங்களுக்கும் முன்பிருந்த மதிப்பற்று, புதிய புதிய தத்துவார்த்தங்கள் சொல்லி, “குடி அரசுக் கொள்கை கள் தான் எங்கள் சமயக் கொள்கைகள்” என்பதாக  வியாக்கியானம் செய்வதன் மூலம்  அவை காப்பாற்றப்பட வேண்டிய நிலைமைக்கு  வந்து  விட்டன. மற்றும் ‘குடி அரசு’  தோன்றுவதற்குமுன் இவை ஒன்றை ஒன்று  வைது கொண்டு இருந்தவைகள் இப்பொழுது எல்லாவற்றையும் மறந்து எப்படியாவது எந்தக் கொள்கையுடனாவது  சமயம் என்பதாக ஒன்று உயிர் வாழ்ந்தால் போதும்  என்கின்ற நிலையில் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.

 

  1. அடுத்தாப்போல் திரு.காந்தியவர்கள் விஷயமும் வேறு பல வழிகளில் “மகத்தான வெற்றி இருப்பதாக” பேசிக் கொள்ளப்பட்டாலும் அரசியல் சமுதாய இயல் ஆகியவைகளைப்பற்றிய விஷயங்களில் அவரது  அபிப்பிராயங்களில்  மிகவும் தாராளமாய் கண்டிக்கப்படத் தக்கதாகி விட்டது.  அவருடைய கதர் விஷயமும் சைவத்திற்கும், விபூதி, ருத்திராட்சத் திற்கும் என்ன சம்மந்தமோ அதுபோல் காந்திக்கும்-  கதருக்கும்  என்பதாக ஆகிவிட்டது.  ஏதோ  பார்ப்பனருக்கும் பார்ப்பனீயத்திற்கும்  அவர் உற்ற துணையாய் இருப்பதாலும் மற்றும் அதுபோலவே தேசீயத்தின் பேராலேயே வாழ்ந்து தீரவேண்டிய ஒரு கூட்டத்திற்கும் அவருடைய பெயரை உச்சரிக்க வேண்டியது  இன்றியமையாததாய் போய்விட்டதாலும்,  காந்தி காந்தி என்கின்ற ஒரு சத்தம்  கொஞ்சம் ஊசலாடுகின்றதே தவிர  மற்றபடி அவரிடம் இந்நாட்டு மக்களுக்கு சொந்தபக்தி எவ்வளவோ மாறியிருப்பது தானாகவே  விளங்கும்.
  2. பழையபழக்கம், வழக்கம், வார்சு பாத்தியம், பெரியோர் வார்த்தை கள் என்கின்றவைகளின்  மூலமாய் இருந்துவந்த மூடப்பழக்க வழக்கங்கள் எல்லாம் அநேகமாய் இப்பொழுது வர வர காரணகாரியம் சொல்லி பகுத்தறிவிற்கும், அனுபவத்திற்கும் ஒத்திருக்கின்றதா என்று பார்க்கின்ற நிலைக்கு வந்துவிட்டது.
  3. கடைசியாக பணக்காரர்களுடைய தொல்லை எதிர்பார்த்த அளவுக்கு ஒழியவில்லை. ஆனாலும் அவர்களுக்கும் இறங்குமுகம் ஏற் பட்டு, சிறிதுசிறிது பொது உணர்ச்சியில் அவர்களுக்கு மதிப்பு குறைந்து விட்ட தென்றே  சொல்லுவோம். தொழிலாளிகளின் மேல் முதலாளிகளுக்கு  இருந்துவந்த ஆதீக்கமும் மறைந்து தொழிலாளிகளுக்கு வரவர தைரிய மும், முதலாளிகளுக்கு வரவர பயமும் ஏற்பட்டுக்கொண்டு  வருகின்றது.  ஆனாலும் வரப்போகும் வருஷத்தில் தெளிவாய் காணக்கூடிய அளவுக்கு இந்தத்துறை இன்னமும்  எவ்வளவோ தூரம் முற்போக்கடையும்  என்கின்ற தைரியம் இருக்கின்றது என்கின்ற நம்பிக்கைக்கு  இடம் இருக்கின்றது.
  4. ஆண், பெண் தன்மை இந்தத் துறையானது குடி அரசு தோன்று வதற்குமுன் மக்கள் வாயில் பேசுவதற்கும், மனதில் நினைப்பதற்கும் அஞ்சக்கூடிய விஷயங்கள் எல்லாம் குடி அரசு தோன்றியபின் அடியோடு மாறி, ஆணுக்கும், பெண்ணுக்கும் எந்த விஷயத்திலும், எவ்வித வித்தி யாசமும் இல்லை என்கின்ற உணர்ச்சியையும், ஆண்களுக்கு கட்டுப்பட்டு அடங்கி பெண்கள் இருப்பது இருவருடைய சுயமரியாதைக்கும் குறைவு என்றும், பெண்ணுக்கு ஆண் கட்டுப்பட்டு அடங்கி நடப்பது பெருமையும், நாகரீகமும், முறையும் என்கின்றதுமான உணர்ச்சியும் ஏற்பட்டு விட்டது.

ஆகவே இத்யாதி துறைகளில் குடி அரசின் தொண்டு பலனளித் திருக்கின்றது என்று திருப்தியுடனேயே சொல்லுகின்றோம்.

ஆனால் சென்ற வருஷம் அதாவது குடி அரசின் ஆறாவது  வருஷ­ ஆரம்ப மலரின் தலையங்கத்தில் கண்டதுபோலவே 6-வது வருஷம் முழுவதும் குடி அரசுக்கு  முந்திய வருஷங்கள் போன்ற செல்வாக்கு பெருக்கம் இருந்தது என்று சொல்லுவதற்கில்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம். ஆனாலும் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை களுக்கு  சென்ற ஐந்து வருஷத்தைவிட ஆறாவது வருஷத்தில் தான்  ஒரு முக்கிய பதவியும், கௌரவமும், பொதுமக்கள்   ஆமோதிப்பும்,  “இனிமேல் அதை எதிர்ப்பதோ குற்றம் சொல்லுவதோ முடியாத காரியம்” என்று, அதன் எதிரிகளாய் இருந்தவர்கள் எல்லாரும் எண்ணி, எப்படி யாவது அதன் பெயரைச் சொல்லிக்கொள்ளக்கூடிய சௌகரியம் நமக்கும் வந்தால் தேவ லாம் என்று கருதும்படியான ஒரு நிலைமை ஏற்பட்டது என்கின்ற விஷயத் தில் நமக்கு சிறிதும் ஐயமில்லை.

ஆனால் ஏழாவது ஆண்டின் எதிர்கால நிலையைப்பற்றி எழுது வதில், அது ஆறாவது ஆண்டைப் போலவே இவ்வருஷ­ வேலைத் திட்டமும் சற்று கஷ்டமானதாயிருந்தாலும் , பத்திரிகை முற்போக்கைப் பற்றி ஆறாவது வருஷம் போல் தடைப்படாது என்பதுடன் அதிக முற்போக்கடையும் என்கின்ற தைரியமும், நம்பிக்கையும் நமக்கு உண்டு.  ஏனெனில் இந்த ஒரு வருஷத்திய நமது பிரசாரம் மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கும் ஒரு உணர்ச்சி யும், அரசியல் கிளர்ச்சியிடம் சிலர் வைத்திருந்த நம்பிக்கை ஏமாற்றமடைந்த பலனும், இவ்வருஷம் நடக்கப் போகும் அரசியல் (காங்கிரஸ் – காந்தி) பிரசாரமும் மற்றும் இரண்டொரு விஷயங்களும் மக்களுக்கு அறிவை ஊட்டி உண்மையை விளக்கித் தெளிவைக் கொடுக்கும் என்கின்ற நம்பிக்கை நமக்கு தாராளமாய் இருக்கின்றது.

குடி அரசு – தலையங்கம் – 03.05.1931

ஆறாவது ஆண்டு (1930)

 ஆறாவது ஆண்டு 


நமது “ குடி அரசு” ஐந்து ஆண்டு நிறைவு பெற்று ஆறாவதாண்டு முதல் மலராய் இவ்வாரம் வெளியாகின்றது.

“குடி அரசு” தான் ஏற்றுக் கொண்ட ஆரம்பக் கொள்கையில் இருந்து சிறிதும் பின் வாங்காமலும் விருப்பு, வெருப்புக்கு கொள்கைகளை மாற்றிக் கொள்ளாமலும் ஏதோ தன்னால் கூடிய தொண்டை மனப் பூர்வமாய் செய்து கொண்டு வந்திருக்கின்றது. அன்றியும் குடி அரசானது ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இது வரை மக்களிடம் செல்வாக்கும் மதிப்பும் பெற்று வந்ததுடன் நாளுக்கு நாள் முற்போக்கடைந்தும் வந்திருக்கின்றது.

இவ்வாறாவது ஆண்டும் அந்தப்படி முடியும் என்கின்ற விஷயத்தில் நமக்கு அதிக நம்பிக்கை இல்லை. ஏனெனில் அது இனிச் செய்யக் கருதி இருக்கும் தொண்டானது கொஞ்ச காலத்திற்கு பாமர மக்களிடம் நமக்குள்ள செல்வாக்கையும் பணக்காரர்கள் பண்டிதர்கள் பெரிய அதிகாரிகள் பதவியா ளர்கள் என்பவர்களிடம் நமக்கு உள்ள செல்வாக்கையும் இழக்க நேரிடு வதுடன் “குடி அரசை” இது வரை ஆதரித்து வந்தவர்களாக காணப்பட்ட வர்களின் எதிர்ப்பையும் அனுபவிக்க வேண்டிய நிலையைக் கொண்டு வந்துவிடும் என்றே நினைக்கிறோம். அதாவது நாம் சென்னைக்கு போகும் போது ஒரு தலையங்கத்தில் தெரிவித்தது போல “குடி அரசு” பார்ப்பனர் களை வைது அவர்கள் செல்வாக்கை ஒழித்து பார்ப்பனர்களிடம் இருக்கும் உத்தியோகங்களைப் பிடுங்கிப் பார்ப்பனரல்லாதார் வசம் ஒப்புவிக்க மாத்திரம் ஏற்பட்டதல்ல என்றும் பாமர மக்களை ஏய்த்துப் பிழைக்கின்ற வர்கள் எல்லோரையும் வெளியாக்கி மத இயலில் உள்ள மூட நம்பிக்கையை ஒழிக்க முயற்சிப்பது போலவே அரசியல், உத்தியோக இயல், பொருளாதார இயல், சமூக இயல், பத்திரிகை இயல், பண்டித இயல், வைத்திய இயல், பணக்கார இயல், பார்ப்பனரல்லாதார் இயக்க இயல் என்பன முதலாகியவை களில் உள்ள மூட நம்பிக்கைகளையும் புறட்டுகளையும் வெளியாக்கி அவைகளையும் ஒழிக்க வேண்டிய வேலைகளை மேற்போட்டுக் கொள்ளும் போது இவ்வளவு இயல்களின் எதிர்ப்பும் நமக்கு மிக்க கஷ்டத்தை கொடுத்து தான் தீரும். சிற்சில சமயங்களில் அவ்வெதிர்ப்புகளை சமாளிக்க நமக்கு சக்தி இல்லாமல் போனாலும் போகலாம். அதனால் பத்திரிகை முற்போக்கும் செல்வாக்கும் சற்று, ஏன்? அதிகமாகவும் குறைந்தாலும் குறையலாம்.

ஆன போதிலும் அவைகள் இந்நாட்டிற்கு அதிலும் பார்ப்பன ஆதிக்கம் குறைந்த இந்த சந்தர்ப்பத்திற்கு முக்கியமாய் தேவையானதாய் இருப்பதால் நமது செல்வாக்கையும் பத்திரிகை முன்னேற்றத்தையும் பிரதானமாய்க் கருதாமல் மக்களின் மூட நம்பிக்கைகளையும் சுயநலக்காரர் களின் புறட்டுகளால் மக்கள் ஏமாறுவதையும் ஒழிப்பதையே பிரதானமாய்க் கருதி அதில் இறங்கித் தீர வேண்டியவர்களாயிருக்கின்றோம்.

ஏனெனில் நாம் காங்கிரசிலிருந்து தொண்டாற்றிய காலத்தில் நம்முடன் கூட உழைத்து வந்த திருவாளர்கள் வரதராஜுலு, ராஜகோபாலாச்சாரியார், திரு. வி. கலியாணசுந்தர முதலியார் போன்றவர்களிடம் இருந்து நாம் பிரிந்ததும் அவர்களோடு அபிப்பிராய பேதங்கொண்டு சண்டை போட்டதும் எதற்காக? மற்றும் நாம் தலைவராய்க் கொண்டு கண் மூடித்தனமாய் பின்பற்றி வந்த திரு. காந்தியாரையும் கண்டித்து வருவது எதற்காக?
சொந்த விரோதத்திற்காகவா? அல்லது சொந்த சுய நலத்திற்காகவா? என்பதை யோசித்துப் பார்த்தால் உண்மைக் காரணம் விளங்காமல் போகாது. அவர்களது கொள்கை பிடிக்கவில்லை. அவர்களது தொண்டு நாட்டிற்கு நலந்தருவதல்லவென்கின்ற காரணங்களையே முக்கிய ஆதாரங்களாய் வைத்து அவர்களோடு போராடி அவர்களிடம் நமக்கு காணப்படும் குறைகளை வெளிப்படுத்தி வந்தோம். இன்றும் வருகின்றோம். அதே போல் இப்போது சுயமரியாதை இயக்கத்தின் பேராலோ ஜஸ்டிஸ் கட்சியின் பேராலோ சீர்திருத்தத்தின் பேராலோ நம்முடன் உழைத்து வந்தவர்களின் அபிப்பிராய பேதத்தையும் அவர்களது கொள்கைகளால் நாட்டின் நலத் திற்கோ நமது தொண்டிற்கோ விபரீதம் ஏற்படும் என்கின்ற நிலை தோன்றும் போது அவர்களுடன் போராட வேண்டியது நமது கடனாகி விட்டது. ஆகையால் இந்த ஆறாவது ஆண்டு பலருக்கு இன்பத்தை கொடுக்காத தானாலும் நமது உண்மை நண்பர்களுக்கு பூரண திருப்தியையே அளிக்கும் என்கின்ற நம்பிக்கையின் மீது இறங்கி விட்டோம்.

குடி அரசு – தலையங்கம் – 04.05.1930

நமது பத்திரிகை ஐந்தாவதாண்டு (1929)

 நமது பத்திரிகை ஐந்தாவதாண்டு (1929)


“குடி அரசு” அபிமானிகளே!
நமது “குடி அரசு” தோன்றி நான்காவதாண்டு கடந்து, ஐந்தாவதாண் டின் முதல் இதழ் வெளியாக்கும் பேறு பெற்றமைக்கு மகிழ்வெய்துகின்றோம். அது தோன்றிய நாள் தொட்டு இற்றைய நாள்வரை மக்கள் முன்னேற்றத் திற்கும், நாட்டின் விடுதலைக்கும் தன்னால் இயன்றதைச் சிறிதும் ஒளிக்காமல் தொண்டாற்றி வந்திருக்கும் விஷயம் நாம் எடுத்துக் காட்டாமலே அன்பர்கள் உணர்ந்திருக்கலாம்.

இதன் ஆசிரியராகிய யாம் சுமார் 30 ஆண்டு உலக வாழ்க்கை அனுபவம், அதாவது வியாபாரம், விவசாயம் அனுபவமும் சுமார் இருப தாண்டு பொது நலவுழைப்பு என்பதின் பேரால் அதாவது உள் ஊர் அக்கப்போர்கள், ஜில்லா பொதுநல சர்க்கார் சம்பந்தமில்லாத ஸ்தாபனங்கள், சர்க்கார் சம்பந்தமுள்ள ஸ்தல ஸ்தாபனம் முதலியவைகளில் நிர்வாக விஷய அனுபவமும் அரசர்கள், அதிகாரிகள் ஆகியவர்களின் கூட்டுறவு அனுபவ மும், ஜமீன்தார்கள், பிரபுக்கள், ஏழைகள், காலிகள் ஆகியவர்களின் நெருங் கிய நேச அனுபவமும், இவைகளெல்லாம் அல்லாமல் வீட்டையும் குடும்பத்தையும் விட்டு துறவறம் கொள்ள எண்ணம் கொண்டு வெளிக் கிளம்பி சன்னியாசி வேஷமிட்டு காவி தரித்து சாமியாராகி இந்தியா முழுவதும் சுற்றி அலைந்த பிறகு அதையும் விட்டு, வெறும் கோவணத் துடன் தெருப்பிச்சை எடுத்து பிறகு அதையும் விட்டு எச்சிலையில் கிடப்பதை எடுத்து உண்டது ஆகிய வாழ்க்கைகளிலும் ஈடுபட்ட அதன் அனுபவமும், கடைசியாக அரசியலுக்கும் சமூக இயலுக்கும் என்று சென்னை மாகாண சங்கம் உபதலைவராகவும், தேசீயவாதிகள் சங்க காரிய தரிசியாகவும், காங்கிரஸ் இயக்கம் என்பதில் ஒத்துழையாமை இயக்கத்திற்கு மாகாணத் தலைவர், காரியதரிசி ஏக தலைவர் ஆகிய பதவிப் பேறும், வைதீக ஒத்துழையாமை கொள்கைக்கு முக்கிய தலைமையும் மற்றும் சத்தியாக்கிரகம், சர்க்கார் உத்திரவு மீறுதல், உண்மையை ஒளிக்காமல் பேசுதல் ஆகியவை களுக்கு ஆக பல தடவை அரசாங்க தண்டனைக்கு ஆளாகி சிறைவாசம் அடைதல் ஆகிய பல பேறுகளும் பெற்றதன் மூலம் சிறிது சிறிதாய் உலக அனுபவம் பெற்று, அவைகளின் பயனாய் நமது நாட்டின் உண்மை விடுதலைக்கு விரோதியாயிருப்பது பார்ப்பனீயமே என்பதையும், அதன் ஆதிக்கம் வலுத்திருப்பதற்குக் காரணம் நமது மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியும், அறிவு வளர்ச்சிக்கு இடமும் இன்மையே என்பதையும் அதற்கு முக்கிய காரணம் மூட நம்பிக்கையே என்பதையும் உணர்ந்து, சுயமரியாதை உணர்ச்சியை உண்டாக்கி அறிவை வளரச் செய்து மூட நம்பிக்கைகளை ஒழித்துப் பார்ப்பனீயத்தை அடியோடு அழித்து மக்களை அடிமைத் தனத் திலிருந்து மீட்கவேண்டும் என்கின்ற ஒரே ஆசையின் மீதே இக் “குடி அரசு” பத்திரிகையை ஆரம்பித்த நாம் அதற்கேற்ப இத்தமிழ்நாடு முழுவதும் இடைவிடாமல் சுற்றிச் சுற்றி அலைந்து திரிந்து சொற்பொழிவாற்றிக் கொண்டுமிருப்பவராவோம்.

எனவே இப்படிப்பட்ட நிலையில் இதன் கொள்கை என்ன என்ப தையும் இது என்ன செய்தது என்பதையும் உலகமே அறிந்ததாதலால் இதைக் குறிப்பிட வேண்டிய தில்லை என்றே நினைக்கின்றோம். நிற்க இக் கொள்கை யைக் கடைபிடித்து நடந்து வந்த சென்ற நான்கு வருஷகாலமாய் “குடி அர”சானது முதலில் யாருடைய உதவியும் இன்றி பிரவாக வெள்ளத்தில் எதிர்நீச்சல் நீந்த வேண்டியது போன்ற மிகக் கஷ்டமான காரியத்தில் இறங்கி இருந்ததோடு செல்வமும் செல்வாக்கும் பெற்ற பெரியோர்கள் என்பவர்கள் முதற்கொண்டு மானமும் ஈனமும் அற்ற காலிகள் என்பவர்கள் வரையும், அறிவும் ஆராய்ச்சியும் உள்ளவர்கள் என்று சொல்லப்படும் பண்டிதர்கள் முதல் தனக்கும் அறிவில்லாமலும் பிறர் சொல்வதையும் கேட்க இயலாமலும் உள்ள பிடிவாத சுயநலக்காரர்கள் வரையிலும் உள்ளவர்களின் இரக்கமும் மனிதத் தன்மையும் அற்ற எதிர்ப்புக்கு ஆளாகி வந்தும், மேற்கூறிய எவ்வித எதிர்ப்பும் இடையூறும் இல்லாமல் தாராளமாய் விடப்பட்டிருந்து மேற்கண்ட வர்கள் எல்லாம் நேசமாயிருந்து உதவி செய்து வந்திருந்தாலும் கூட அது உத்தேசித்துள்ள காரியங்களில் எவ்வளவு செய்திருக்க முடியுமோ அவற்றை எல்லாம் விட குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகவே செய்திருக்கின்ற தென்றே நாம் மனப்பூர்வமாக உணருகின்றோம். இதற்கு உதாரணம் என்னவென்றால் முதலாவதாக “குடி அரசு” இன்றைக்கு வாரம் ஒன்றுக்கு 9500 பிரதிகள் வெளியாகின்றதும், அடிக்க அடிக்க பந்துகிளம்புவது போல் எதிர்க்க எதிர்க்க வாசகர்கள் அதிகமாவதும் மற்றும் “குடி அரசு” கொள்கை களை ஆதரிக்கும் பத்திரிகைகளுக்கும் இதுபோலவே பல ஆயிரக்கணக் காக பிரதிகளும் வாசகர்களும் பெருகிக் கொண்டு போதலும் இக்கொள்கைக் காக என்றே புதிதுபுதிதாகப் பத்திரிகைகள் துவக்கப்படுதலும் அவைகளுக் கும் ஆரம்பத்திலேயே செல்வாக்கு பெருகுதலும், இரண்டாவதாக இக் கொள்கைகளை அனுபவத்தில் ஏற்றுக் கொண்ட மக்களுக்கும், இக் கொள்கைகளை உபதேசிக்கும் மக்களுக்கும், இக்கொள்கைகளை ஒப்புக் கொண்ட ஸ்தாபனங்களுக்கும் நாட்டில் செல்வாக்கும் மதிப்பும் வளர்தலும், மூன்றாவதாக இக்கொள்கைகளுக்கு எதிரிடையாக உள்ள பத்திரிகை களுக்கும் தனிப்பட்ட நபர்களுக்கும் ஸ்தாபனங்களுக்கும் மதிப்பும் செல்வாக்கும் குறைந்து போதலும் முதலாகிய காரணங்களால் உணரலாம். அன்றியும் எங்கு பார்த்தாலும் அடிக்கடி இக்கொள்கைகளைப் பரப்புவதற் காக மாகாண ஜில்லா, தாலூக்கா, சுயமரியாதை மகாநாடுகள் நடப்பதும், இக்கொள்கைக்கு விரோதமான ஸ்தாபனங்கள் என்று சொல்லப்படும் காங்கிரஸ், தேசீயம் முதலிய அரசியல் புரட்டு ஸ்தாபனங்களுக்கு நாட்டில் சிறிதும் செல்வாக்கற்று இரண்டு மூன்று வருஷமாக நமது நாட்டில் அரசியலின் பேரால் மாகாண மகாநாடு கூட நடத்த முடியாமலும், ஜில்லா தாலூக்கா மகாநாடுகள் என்பதுகள் கூட நடப்பதென்பது மிக அருமையாயும் போய்விட்டதோடு சுயமரியாதைக் கொள்கைக்கு விரோதமான கூட்டத்தார் வெளியில் தலைகாட்டவோ மேடை ஏறுவதற்கோ லாயக்கில்லாத முறையில் அடங்கிக்கிடக்கவேண்டிய நிலைமையை உண்டாக்கியிருக்கின்றது. சுருங்கச் சொன்னால் அரசியல் சமுதாய இயல் ஆகிய புரட்டுகளை மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக்கி அதன் பேரால் ஏமாற்றி வயிறு வளர்த்தவர்களையும் ஆதிக்கம் பெற்று வந்தவர்களையும் ஒருவாறு ஒடுங்கச் செய்துவிட்ட தென்றே சொல்ல வேண்டும். நிற்க, சமயப் புரட்டுத் துறைகளிலும் எதிர்பாராத அளவு அவைகளை வெளியாக்கி அவற்றின் போலி ஆதிக்கத்தை ஒருவாறு அழித்துக் கொண்டு வருகின்றது என்றும் சொல்லலாம். உதாரணமாக ஆயிரக்கணக்கான சாமிகளுக்கு இருந்த மதிப்புகள் எல்லாம் மலை உச்சியிலிருந்து உருட்டிவிட்ட உருண்டைக் குன்றுபோல் வேகமாக இறங்கி வருகின்றது. அவற்றின் பூசைகள் உற்சவங்கள் ஆகியவைகளின் யோக்கிய தைகளுக்கும் முன்னிருந்த மதிப்பில் பகுதி மதிப்புக் கூட இல்லாமல் இருந்து வருகின்றது. சில இடங்களில் வெகுகாலமாய் நடந்து வந்த உற்சவங்களும் பூஜைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன, சாமிகளும் அவற்றின் பூசைகளும் உற்சவங்களும் இக்கதியனால் சடங்குப் புரட்டைப் பற்றி நாம் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் யாருக்கும் இருக்காது என்றே நினைக்கின்றோம். சுருங்கச் சொல்ல வேண்டுமானால் சடங்கை நிறுத்தினவர் களும் சாதிப் பட்டத்தை எடுத்துவிட்டவர்களும் சமயக் குறியைத் தள்ளி விட்டவர்களும் ஆயிரவாயிரக் கணக்காகத் தைரியமாகப் பெயர் கொடுத்து வருகின்றார்கள். இவ்வளவும் அல்லாமல் இத்தனைக் காலம் ஏமாற்றியதைப் போல் தேசத்தையும் தேசீயத்தையும் சுயராஜ்யத்தையும் சொல்லிக் கொண்டு தேர்தலுக்கு நிற்க யாருக்கும் யோக்கியதை இல்லாமலும் செய்துவிட்டது.

உதாரணம் பாமர மக்களுக்குள்ள மற்றொரு மூடநம்பிக்கையை ஆதாரமாய் வைத்துக் கொண்டு அதாவது மதத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு நிற்கப் போவதாய் வெளியிட வேண்டியதாய் விட்டதே போதுமானது.
சமுதாய புரட்டுத் துறையிலும் தீண்டாமை விலக்கைப் பற்றி எங்கும் வெகுதாராளமாய்ப் பேசப்படுகின்றது. சமபந்தி போஜனம் அதிசயிக்கத்தக்க வண்ணம் முன்னேறி வருகின்றது. பொதுவாக இவைகளுக்கு ஒரு கடுகளவு அறிவுள்ள கூட்டத்திலும் அணுவளவு ஆட்சேபமாவது அதிருப்தியாவது கிளம்புவதாக யாருமே சொல்ல முடியாத நிலைமை எய்திவிட்டது என்று உறுதியாய்ச் சொல்லலாம். ஆனால் பொறாமைக்காரர்களுடையவும் சுயநலக் காரர்களுடையவும் அவர்களது கூலிகளுடையவும் எதிர்ப்பும் அதிருப்தியும் சிறிதாவது இல்லையென்று சொல்ல முடியாது என்றாலும் அவர்களையும் இக்கொள்கைகளை நேரான முறையில் வெளிப்படையாய் எதிர்ப்பதற்கு தைரியமற்றவர்களாக்கி சூழ்ச்சியிலும் பித்தலாட்டத்திலுமேதான் மறைமுக மாய் தலைகாட்ட முடியும்படியாகச் செய்திருக்கின்றது.

இதுபோலவே கல்யாண முறையிலும் சாதாரணமாய் எதிர்பார்க்க முடியாத அளவு சீர்திருத்தமும், கலப்புமண உணர்ச்சியில் ஆண்களைவிட பெண்களுக்கே அதிக ஆவலும், பெண் உரிமையில் ஆண்களைவிட அதிகமான உரிமை பெண்களுக்கு வேண்டும் என்று பெண்களே கருதத்தக்க வண்ணமும் ஆண்கள் சிறிதும் ஆட்nக்ஷபிக்க முடியாமல் தலை குனிந்து ஒப்புக் கொள்ள வேண்டியதான உணர்ச்சியும் உண்டாயிருக்கின்றது.

இவைகள் தவிர சாஸ்திரம் புராணம் இதிகாசம் என்பவை முதலிய வற்றின் யோக்கியதைகளும் புரட்டுகளும் சந்தி சிரிக்கத் தக்கவண்ணம் வெளியாகி முக்கிய சாஸ்திரங்கள் இதிகாசங்கள் என்பவைகளை அதாவது வருணாசிரமக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவைகளை ஆயிரம் பதினாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தின் முன் நெருப்பு வைத்துக் கொளுத்தத்தக்க ஆவேசமும் உணர்ச்சியும் ஏற்பட்டு விட்டது. தினம் தினம் வருணாசிரம மகாநாடுகளும் அடிக்கடி சைவ சமய மகாநாடுகளும் மூலை முடுக்குகளில் கூட்டி ‘குடி அரசை’யும் அதன் கொள்கைகளையும் கண்டிப்பதும் சட்டசபைகளில் சரமாரியாக கேள்விகள் கேட்பதும் ஆகிய பல அவசியத்தைக் கொண்டு வந்தும் விட்டுவிட்டது.

இந்த சொற்ப காலத்திற்குள் இவ்வளவு காரியங்கள் நடைபெற்றதற்கு காரணம் என்னவென்று பார்ப்போம். நாம் இத்தொண்டில் இறங்கிய காலம் முதல் இதுவரை யாருடைய வாக்குச் சகாயமாவது பண சம்பந்தமான உதவியாவது கடுகளவு கூடக்கிடையாது. இதற்கு விரோதமாய் எதிர்ப்புகள் மாத்திரம் மலிந்து கிடந்தன. பள்ளிக் கூட படிப்பில்லாமலும் பத்திரிகை அனுபவம் சிறிதுமில்லாமலும் உள்ள நிலையில் இப்பத்திரிகை ஆரம்பிக் கப்பட்டதும் நமக்கெதிராக அநேக பத்திரிகைகள் ஒன்று சேர்ந்து சதியாலோசனை செய்து எதிர்த்துக் கொண்டிருந்தன. உதாரணமாக நமது பத்திரிகை விளம்பரத்தைக் கூட எவ்வளவு பணம் கொடுத்தாலும் விளம்பரப் படுத்த “சுதேசமித்திரன்” “நவசக்தி” போன்றவைகள் மறுத்துவிட்டன. பத்திரிகை வெளிப்படுத்தும் விஷயத்தில் தபால் ரயில் இலாகாவிலுங்கூட சகிக்க முடியாத தொல்லைகள் அனுபவிக்க வேண்டியதாயிற்று. எங்கு சென்றாலும் ஆங்காங்குள்ள ஸ்தல அதிகாரிகளின் தொல்லையும் வெகு தொல்லையாயிருந்தது. இவ்வளவு மல்லாமல் நமது எழுத்துக்களையும் சொற்களையும் நமது எதிரிகள் பாமர மக்களுக்கு திரித்து எழுதியும் கூறியும் வந்த தொல்லைகள் எல்லாவற்றையும் விட அதிகமாக இருந்தன. அதோடு மாத்திரமல்லாமல் பத்திரிகை ஆரம்பித்தவுடன் நம்மை தேசத்துரோகி என்று தீர்மானித்து காங்கிரசிலிருந்து வெளியாக்கிவிட்டதாக ‘நவசக்தி’ முதலிய பத்திரிகைகளின் பிரசாரமும், நாம் காங்கிரசிலிருந்து பணம் திருடிக் கொண்டதாக ‘தமிழ்நாடு’ முதலிய பத்திரிகைகளின் பிரசாரமும் பறை அடிப் பதுபோல் மூலை முடுக்குகளில் எல்லாம் செய்து வந்ததல்லாமல் மலேயா முதலிய வெளிநாடுகளுக்கும் ஆட்களை அனுப்பி அங்கும் விஷமப் பிரசாரம் செய்தும் சில சந்தாதாரர்களிடம் “குடி அரசு” வரவழைப்பதை நிறுத்திவிட்டால் “தமிழ்நாடு”வை இலவசமாய் அனுப்புகின்றோம் என்று சொல்லியும் “குடி அரசை” நிந்தித்து தாங்களே கடிதம் எழுதி அதில் பாமர சந்தாதாரர்கள் கையெழுத்து வாங்கி நமக்கனுப்புவதும் “குடி அரசு”க்கு விளம்பரம் கொடுத்திருப்பவர்களிடமெல்லாம் சென்று “குடி அரசு”க்கு விளம்பரம் கொடுக்கக்கூடாது என்று சகல செல்வாக்கையும் செலுத்தி பலவந்தம் செய்தும் கடைசியாக ‘குடி அரசு’ விளம்பரத்தை நிறுத்திக் கொண்டால் “தமிழ்நாடு”வில் இலவசமாய் விளம்பரம் போடுவதாகச் சொல்லி “குடி அரசு”க்கு வந்த விளம்பரங்களை நிறுத்தியும், மற்றும் ஒவ்வொரு சமூகத்தாரையும் நமக்கு விரோதமாய்க் கிளப்பிவிடக் கருதி நாம் சொல்லாதவைகளையும் எழுதாதவைகளையும் எழுதியும் தங்கள் நிருபர் களைவிட்டு உட்கலகம் செய்யும்படி செய்தும், உதாரணமாக விருதுநகர் நாடார் சமூகத்தை நமக்கு விரோதமாகக் கிளப்பிவிட சூழ்ச்சி செய்ததும் ஆகிய எத்தனையோ இழித் தகைமையான எதிர்ப்புகள் எல்லாம் இருந்தும் இன்று “குடி அரசு”ம் அதன் கொள்கையும் வெற்றியில் இருப்பதற்கு காரணம் என்ன என்று யோசித்துப் பார்க்க வேண்டாமா? அப்படி யோசித்தால் என்ன பதில் கிடைக்கும்? ஒரே ஒரு பதில்தான் கிடைக்கும். அதாவது ‘குடி அர’சோ அதன் ஆசிரியரோ ஆரம்பகாலம் முதல் மனதில் பட்டதை ஒளிக்காமல் சொல்லுவதும் கொள்கைகளில் சமயத்திற்குத் தகுந்தபடி சுயநலத்தையே கருதி அடிக்கடி குட்டிக்கரணம் போடாமல் இருந்ததும் வேறு யாருடைய தயவையும் கையையும் எதிர்பாராமல் தன் காலிலேயே நின்று தன்னுடைய சொந்தச் செலவிலேயே இயக்கத்தை நடத்தினதுமே முக்கிய காரணமாகும் என்பதே. இதில் யாருக்காவது சந்தேகம் இருக்குமானால் விளக்குவதற்கு வெளிப்படையாகவே சொல்லுகின்றோம். அதாவது “குடி அரசு” ஆரம்பித்த காலம் முதல் இன்றையவரை ஏதோ சிலர் கல்யாண காலத்திலும் “கருமாதி” காலத்திலும் 4 அணா, 8 அணா ஒரு ரூபாய் வீதம் நன்கொடையாக அளித்து வந்ததில் மொத்தம் சுமார் 100 அல்லது 120 ரூபாய்கள் தவிர மேற்கொண்டு ஒரு அம்மன் காசாவது கொடுத்தவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லு வோம். ஆனால் ‘குடி அர’சின் கொள்கையையும் தொண்டையும் ஒப்புக் கொண்ட சில நண்பர்கள் “குடி அரசு”க்கு சில சமயங்களில் பண உதவி செய்ய தாங்களாகவே முன்வந்த போதும் அதை திருப்பி விட்டு வேண்டு மானால் தயவு செய்து “திராவிட”னுக்கு உதவுங்கள் என்று கேட்டு கொண்ட தன் மூலம் “திராவிட”னுக்கு உதவித் தொகை அளிக்கப்பட்டிருக்கின்றது என்றாலும் “திராவிடன்” “குடி அரசு”க்கு உதவியாய் நின்றதன் பயனாக “குடி அரசு”க்கு ஏற்பட்ட உதவிக்கு நாம் நன்றி செலுத்தியாக வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

இதுதவிர அதுபோலவே, நமது சுற்றுப் பிரயாணங்களுக்கும் நமது பிரசாரர்களுக்கும் நண்பர்களுக்கும் இன்றைவரை யாரும் எவ்வித பண உதவியும் செய்யப்பெறவில்லை என்றும், தைரியமாய்ச் சொல்லுவோம். பத்திரிகை நடத்துவதிலும், “குடி அரசு” ஆரம்பித்த காலம் முதல் இது ஒரு வருஷம் தவிர அதாவது மலேயா நாட்டுக்கு நமது சகோதரர் சந்தா சேர்க்கச் சென்றுவந்த வருஷம் தவிர, மற்றபடி நஷ்டத்திலேயே நடைபெறுகின்ற தேயல்லாமல் வேறில்லை.

உடல்நிலையும் முதலாவது கண்பார்வை சற்றுக் குறைவு, தலைவலி, அடிக்கடி மயக்கம், ஜீரண குறைவால் மார்பு வலி, பல்வலி, சிறிது காதிலும் தொல்லை, குடல்வாதம், அதிக வேலை செய்யக் கூடாது என்று பிரபல வைத்தியர்களின் கண்டிப்பான அபிப்பிராயம் முதலிய நெருக்கடியான கஷ்டத்தில் இருக்கின்றது.
தினப்படி வரும் தபால்களில் நூற்றுக்கணக்காய் வெறுக்கத்தக்க வண்ணம் புகழ்ந்தெழுதுபவை ஒருபுறமிருந்தாலும், வைதும் மிரட்டியும் எழுதப்பட்டு வரும் மொட்டைக் கடிதங்களுக்கும் குறைவில்லை. இவ்வளவு நிர்ப்பந்தங்களுக்கிடையில் நமது இயக்கம் ஒருவித நன்னிலை அடைந்து மேற்செல்லுவதையும், இவைகள் நமக்குப் பேரூக்கத்தை விளைவித்து வருவதையும் ஆயிரக்கணக்கான வாலிபர்கள் நம்மைத் தாங்கி நிற்பதையும், நாம் மனமார உணருகின்றோம். முடிவாக நமது கொள்கைகளிலாவது, நமது எழுத்துகளிலாவது சொற்களிலாவது நமக்கு சிறிதளவும் சந்தேகமோ மயக்கமோ இல்லாத அளவு தெளிவாயிருக்கின்றோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

கடைசியாக நமக்கு உதவியாக இருக்கும். ‘குமரன்’, ‘நாடார் குலமித்திரன்’, ‘தமிழன்’ ‘முன்னேற்றம்’, ‘விஸ்வநேசன்’, ‘சுயமரியாதைத் தொண்டன்’, ‘லட்சுமி’, ‘ரிவோல்ட்’, ‘திராவிடன்’, ‘முத்தமிழ்நாட்டின் பள்ளி உதயம்’, ‘பிரசண்ட மகாவிகடன்’, மலையாளமொழி பத்திரிகைகளாகிய ‘சகோதரன்’, ‘மிதவாதி’, ‘தேசாபிமானி’ முதலாகியவைகள் மொத்தம் சுமார் நாற்பதினாயிரம் சந்தாதாரர்களைக் கொண்டு நமக்காக உழைத்து வருவதற் கும் தென் இந்திய நல உரிமைச் சங்கத்திற்கும், பார்ப்பனரல்லாத வாலிப சங்கத்திற்கும், நாடார் மகாஜன சங்கத்திற்கும் மற்றும் சில, சைவ சமாஜம் சன் மார்க்க சங்கம் முதலாய சங்கங்களுக்கும் சிறிதும் தன்னலமின்றி தங்களது முழு நேரத்தையும் தங்களது உடல் பொருள் ஆவி ஆகியவைகளை யெல்லாம் இவ்வியக்கத்திற்கே உவந்தளிக்கக் காத்திருக்கும் எமது அருமை வாலிப இளஞ்சிங்கங்களுக்கும், அவசியமானபோது எவ்வித உதவியும் புரியத் தயாராயிருக்கும் செல்வமும் செல்வாக்கும் உண்மை ஆசையும் கொண்ட செல்வ நண்பர்களுக்கும், எமது நன்றியறிதலையும் தெரிவித்துக் கொண்டு நான்காவது ஆண்டைக் கடந்து ஐந்தாவது ஆண்டிற்குச் செல்கின்றோம்.

                                                                            குடி அரசு – தலையங்கம் – 05.05.1929

நமது பத்திரிகையின் நான்காவதாண்டு

 நமது பத்திரிகையின் நான்காவதாண்டு


‘குடி அரசு’ பத்திரிகை தோன்றி இன்றைக்கு மூன்றாவது ஆண்டு கழிந்து நான்காவது ஆண்டு தொடங்கிவிட்டது.

அது தோன்றிய நாள் முதல் இது வரை செய்து வந்த தொண்டைப் பற்றியும் அதனால் ஏற்பட்ட பலனைப் பற்றியும் பொது ஜனங்களுக்கு நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை என்றே நினைக்கின்றோம்.

‘குடி அரசின்’ கொள்கையை அதன் முதல் மலர் முதலிதழில் தலையங்கத்தில் தெரிவித்தபடி, அதாவது:-

“மக்களுக்குள் சுயமரியாதையும் சமத்துவமும் சகோதரத்துவமும் ஓங்கி வளர்த்தல் வேண்டும்…………

உயர்வு தாழ்வு என்கின்ற உணர்ச்சி ஒழிந்து அனைத்துயிரும் ஒன்றென்னும் உண்மை அறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும், சமயச் சண்டைகள் ஒழிய வேண்டும். இன்னோக்கங்கள் நிறைவேற உண்மை நெறி பற்றி இவர் எமக்கு இனியர் இவர் எமக்கு மாற்றார் என்கின்ற விருப்பு வெறுப்புகள் இன்றி… நண்பரே ஆயினும் ஆகுக. அவர் தம் சொல்லும் செயலும் கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித்தொதுக்கப்படும்.”


என்று நாம் உலகத்தாருக்கு ஆதியில் வாக்குக்கொடுத்தது போலவே இதுகாறும் ஒரு சிறிதும் மாறுதல் இன்றியும் கள்ளங் கபடின்றியும் தயவு தாக்ஷண்யம் இன்றியும் அது தனக்கு சரி என்று பட்டதை எவருக்கும் அஞ் சாது எப்பழிக்கும் பின் வாங்காது உண்மையுடன் உழைத்து வந்திருக்கின்றது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

எனவே இப் பத்திரிகையின் கொள்கை இன்னது என்பதையும் அது ஆரம்பித்த நாள் முதல் இது வரை அதையே கடைப்பிடித்து வந்திருக்கிறது என்பதையும் வெளிப்படுத்தவே இக் குறிப்பை வெளியிட்டோம்.

அன்றியும் ‘குடி அரசின்’ இக் கொள்கை கொண்ட உழைப்பானது மற்ற பெரும்பான்மையான பத்திரிகைகளின் உழைப்பைப் போல் பத்திராதி பரின் வாழ்வுக்கும் ஜீவனத்திற்கும் மாத்திரம் அனுகூலமாக்கி கொண்டு நாட்டை பாழ்ப்படுத்திக்கொண்டோ அல்லது ஒரு பயனும் இல்லாமல் மக்களை மூடபக்தியிலும் குருட்டு நம்பிக்கையிலும் அழுத்திக் கொண்டோ அல்லது சோம்பேறி வேதாந்தம் கற்பித்துக்கொண்டோ அல்லது அர்த்தமற்ற சுயராஜ்ய பேச்சோ தேசிய போச்சோ பேசிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டோ இருந்துவராமல் மக்களுக்குள் ஒரு வித உணர்ச்சியையும் எழுச்சியையும் கொடுத்து அறிவை விளக்கி வந்திருக்கின்றது என்பதை பல நண்பர்கள் நமக்கு எடுத்துக் காட்டி இருப்பதையே நாம் இங்கு இது சமயம் சுட்டிக் காட்டுகின்றோம்.

‘குடி அரசினால்’ தேசிய வாழ்வுக்காரரின் பிழைப்புக்கு ஆபத்து நேரிட்டிருப்பதும் புராணப்பிழைப்புக்காரருக்கு ஆபத்து நேரிட்டிருப்பதும் அவர்களை நம்முடன் வந்து விவரமில்லாமல் அடிக்கடி முட்டிக் கொள்வதாலேயே நாம் நன்றாய் உணருகின்றோம். ஆனாலும் அக் கூட்டத்தையும் அவர்களது கூச்சலையும் ஒரு கடுகளவும் லக்ஷியம் செய்யாமல் நாம் முனைந்து நிற்பதால் அவர்களால் நேரிடும் இடையூறுகள் யாவும் தூள் தூளாய் சின்னா பின்னப்பட்டு காற்றில் பறப்பதும் வாசகர்கள் நிதமும் உணர்ந்ததேயாதலால் அதை பற்றி நாம் அதிகம் எழுத வரவில்லை.

உதாரணமாக மோட்டார் வண்டிகள் தெருக்களில் வேகமாச் செல்லும் போது தெருப்பொறுக்கும் சுணங்குகள் அவ்வண்டியின் நிலையறியாது அதை வழிமறித்து தடுத்து கடித்தெறிந்து விடலாம் என்கின்ற ஆவலுடன் குரைத்துக் கொண்டு சிறிது தூரம் வண்டியைத் தொடர்ந்து ஓடி காலும் வாயும் வலித்த உடன் எப்படி முணு முணுத்துக்கொண்டு திரும்பிப்போய் விடு கின்றனவோ அது போல் ‘குடி அரசி’ன் வேகத்தினிடம் அநேகம் பத்திரிகை களும் தனி நபர்களும் வெகு ஆத்திரமாக அதை தடுத்து நிறுத்தி விடுவதுபோல் ஆர்ப்பாட்டம் செய்து பார்த்துவிட்டு அடங்கிபோனவை களும் சில மறைமுகமாய் விஷமம் செய்து கொண்டிருப்பதும் சில மானம் வெட்கமில்லாமல் நின்ற நிலையில் இருந்தே குரைத்துக் கொண்டதுமான நிலையை தினமும் உணருகின்றவர்களுக்கு ‘குடி அரசி’ன் வேகத்தைப் பற்றியோ தத்துவத்தைப் பற்றியோ அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதைப் பற்றியோ அறிவிக்க வேண்டியதில்லை.

நிற்க, தமிழ் நாட்டின் நிலைமைகளும் வயிற்றுப் பிழைப்புத் தேசீய வாழ்வுக்காரர்களின் யோக்கியதைகளும், பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் வேறுபாடுகளும், வெளிமாகாணக்காரருக்கும், வெளி தேசத்தாருக்கும் தெரியப்படுத்த சுமார் 10, 12 வருஷங்களாக பார்ப்பனரல்லாதார் இயக்கமும் ‘ஜஸ்டிஸ்’ ‘திராவிடன்’ பத்திரிகைகளும் எவ்வளவோ பாடுபட்டும் பார்ப்ப னருடையவும், அவர்களது கூலிகளுடையவும் பலவித சூழ்ச்சிகளால் அதன் குரல் வெளியில் போகாமல் தடுக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்த விஷயமாகும். அவ்வித தடைகளை எல்லாம் தாண்டி, இப்பொழுது வெளி மாகாணங்களுக்கும் மேல்நாடுகளுக்கும் கூட அவைகள் எட்டியிருப்பதற்கு, நம்நாட்டு தேசீயப் புரட்டும் பார்ப்பன சூழ்ச்சியும் பாமரர்கள் யாவரும் அறிந்திருப்பதற்கும் ‘குடி அரசி’ன் தொண்டு ஒரு சிறிதாவது காரணமென்று சொல்வது மிகையாகாது.

‘குடி அரசு’ முதல் வருஷத்தின் முடிவில் 2000 சந்தாதாரர்களையும், இரண்டாவது வருஷ முடிவில் 4500 சந்தாதாரர் களையும், மூன்றாவது வருஷ முடிவில் 7000 சந்தாதாரர்களையும் கொண்டு உலவி வருவதனாலேயே அது ஒரு விதத்தில் பொது ஜனங்களின் ஆமோதிப்பைப் பெற்று வருகின்றது என்று சொல்லலாம். அதோடு, தமிழ்நாட்டில் உள்ள தமிழ் தினசரி, வாரப் பத்திரிகைகள் எல்லாவற்றிலும் ‘குடி அரசே’ அதிகமான சந்தாதாரர்களை யும், வாசகர்களையும் கொண்டிருப்பதாகவும் சொல்லலாமானாலும் இனியும் அது அடையவேண்டிய உயர்ந்த எண்ணிக் கையை அது அடைந்து விட்டதாக நாம் சொல்வதற்கில்லை.

சற்றேறக்குறைய 2 கோடி மக்களையுடைய தமிழ்நாட்டில் ‘குடி அரசு’ 7000 பிரதிகள் மாத்திரம் உலவுவதானது ஒருக்காலும் போதாது என்பதே நமது அபிப்பிராயம். ஏனெனில் ‘குடி அரசு’ மேற்போட்டுக் கொண்டிருக்கும் தொண்டு இலேசானதல்ல என்பதாலும் அது அழிக்க முனைந்திருக்கும் கேடுகள் இன்று நேற்று ஏற்பட்ட கெடுதி அல்ல வென்பதும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் மயங்கும் படியான தெய்வத்தின் பேராலும் மோக்ஷத்தின் பேராலும் மதத்தின் பேராலும் ஏற்படுத்தப்பட்டு என்றென்றைக்கும் விடுதலையடைய மார்க்கமில்லாமல் கட்டிப் போடப் பட்டிருக்கின்றதாதலாலும் இந்த கேட்டை பரப்புவதையும் நிலை நிறுத்து வதையும் பார்ப்பனரல்லாதாரிலும் பலர் பக்தியாகவும் ஜீவனோபாயமாகவும் கொண்டிருக்கிறதினாலும் இப்புரட்டுகளும் சூழ்ச்சிகளும் உலகத்தில் நூற்றுக்கணக்கான வருஷங்களில் கூட அழிக்க முடியாதபடி கோவில் களாகவும் தெய்வங்களாகவும் வேதங்களாகவும் புராணங்களாகவும் படங் களாகவும் பஜனை பாட்டுக்களாகவும் இலக்கணங்களாகவும் இலக்கியங் களாகவும் நாடெல்லாம் நிறைந்து அரசன், செல்வந்தன், படித்தவன், பிச்சைக்காரன் ஆகிய எல்லோர் வாயிலும் மனத்திலும் குடிகொண்டதாலும் இப்படிப்பட்ட விஷயத்தை அது எவ்வளவு புரட்டானதானாலும் மோசமான தானாலும் மக்களுக்கு எவ்வளவு இழிவும் கேடும் சூழ்வதானாலும் அதை ஒழித்து உண்மையை வெளியாக்கி மக்களை சீர்படுத்துவதென்றால் அதை சில வருஷங்களில் வாரம் ஒரு 7000 பிரதி வெளியீட்டில் முடியக்கூடிய காரியம் என்று நினைப்பது பைத்தியக்காரத்தனமேயாகும். ஆதலால்தான் ஏழாயிரம் பிரதி போதாதென்பதோடு குறைந்தது 50,000 பிரதியாவது வாராவாரம் வெளியாக வேண்டுமென்பதே நமதபிப்பிராயம்.

மற்றப்படி இதற்கு ஏற்படும் எதிரிகளைப் பற்றியோ எதிர்ப்பிரசாரத்தைப் பற்றியோ நாம் ஒரு போதும் கவலைப்படுவதில்லை. ஏனெனில் இது வரை பல எதிரிகள் வெளிப்படையாகவும் திருட்டுத்தனமாகவும் தானாகவும் கூலிக்கும் தனது உண்மை அபிப்பிராயத்திற்கும் தனது சுயநலத் துக்கும் ஆக பலவிதங்களில் எதிர்த்துப் பார்த்து விட்டார்கள். நமது வாசகத் தையும் எழுத்தையும் திரித்தும் பழித்தும் விஷமம் பிரசாரம் செய்தும் பார்த்து விட்டார்கள். இவைகளினாலெல்லாம் ‘குடி அரசி’ன் அபிப்பிராயம் பரவுவதிலும் பிரதிகள் உயர்வதிலும் எவ்வித தடையும் ஏற்படவில்லை என்கின்ற காரணத்தினாலேயே உறுதி கூறலாம்.

அன்றியும் ‘குடி அரசை’யும் அதன் கொள்கைகளையும் எதிர்ப்பதாகவோ வெளியில் எதிர்த்து பிரசாரம் செய்வதாகவோ வெளியில் வந்த யாரும் இதுவரை ‘குடி அரசில்’ கண்ட விஷயங்களில் எதற்காகவாவது ஒன்றுக்கு யோக்கியமான சமாதானம் சொல்லவும் முன்வரவில்லை என்ப தினாலும் உணரலாம்.
ஆனாலும் ‘குடி அரசு’ தமிழ் நாட்டில் 50000 பிரதிகள் உலவி அதில் காணும் முக்கிய விஷயங்களை ஜில்லா தோறும் பதினாயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் வெளியாக்கி வினியோகித்து வந்தால் மாத்திரம் சரியானபடி பரவக்கூடுமேயல்லாமல் இந்த 7000 பிரதியோ அல்லது 17000 பிரதியோ ஒரு காரியமும் செய்து விடாது என்றே சொல்லுவோம்.

தவிர, “குடி அரசு” இனி ஈரோட்டிலிருந்து வெளிவருவது சற்று கஷ்டமாகவேதான் காணப்படுகிறது. ஏனெனில் யந்திரங்கள் போதுமானதாயில்லாததோடு போதிய சவுகரியமும் இல்லை. இன்னம் ஒரு மிஷின் வாங்க வேண்டியதாயும் இருக்கின்றது. இதல்லாமல் இனி “குடி அரசு” ஒரு தனிப்பட்ட மனிதனின் ஆதிக்கத்தில் இருப்பதும் சரியல்ல வென்றே நினைக்கிறோம். என்னவெனில் இப்படி ஒருவராலேயே நடத்தப்படுவதாயிருந்தால் இது இனி வெகு காலத்திற்கு நடந்து வர முடியுமா என்பதுதான். ஆதலால் “குடி அரசை” ஒரு லிமிடெட் கம்பெனியாக்கி இந்த கொள்கை கொண்ட ஒரு நிர்வாக கம்பெனியிடம் ஒப்படைத்து இன்னமும் கொஞ்சம் குறைந்த விலையில் அதாவது ஒரு வருஷம் 2 ரூபாய் சந்தாவில் இனியும் அதிகமான பிரதிகள் வெளியாக்கத்தக்க மாதிரியிலும் இனியும் அதிகம் பேர் படிக்கத்தக்க மாதிரியிலும் செய்ய வேண்டுமென்றே ஆசைப்படுகின்றோம். சாதாரணமாக 20,000 பிரதிகள் வாரா வாரம் வெளியானால் வருட சந்தா 2 ரூபாயாக ஆக்கினாலும் நஷ்டம் வராது என்பது நமது துணிவு. பக்கங்களை வேண்டு மானாலும் குறைத்துக் கொள்ளலாம். லிமிடெட் கம்பெனி ஆக்க வேண்டு மென்பது பொறுப்பை உண்டாக்கவே ஒழிய பணம் அதிகம் தேவை என்பதாகவல்ல என்றும் சொல்லுவோம். இனி ஒரு மிஷினைத் தவிர வேறு ஒன்றும் வேண்டியதில்லை. தவிர நமக்கு எவ்வளவு மனஉறுதி இருந்தாலும் சற்று உடல் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. என்னவெனில் 2, 3, 4 மணி நேர மானாலும் பேசுவது சுலபமாயிருக்கின்றதேயல்லாமல் எழுதுவது அரைமணி நேரமானாலும் தலைவலி வந்து விடுகின்றது. கையும் வலி எடுத்துக் கொள்ளு கின்றது. அடிக்கடி மயக்கம் வருகின்றது. இது தவிர இங்கிலீஷ் வாரப் பத்திரிகையும் (ரிவோல்ட்) நடத்த வேண்டியிருப்பதாலும் அடிக்கடி பிரசாரத் திற்காக வெளியில் போகவேண்டியிருப்பதாலும் ‘திராவிடன்’ பத்திரிகை யின் பொறுப்பையும் ஒப்புக் கொண்டிருப்பதாலும் இவ்வளவு காரியமும் ஒரு மனிதன் தலையிலேயே போடக்கூடிய காரியம் ஆகுமா என்பதும் யோசிக்க வேண்டிய காரியமாகும். அன்றியும் இக்கொள்கைக்கு ஒரு கட்டுப்பாடான இயக்கம் ஏற்படுத்தி அதற்கு ஜில்லா தாலூக்கா பிரசாரக்காரர்களையும் ஏற்படுத்தி அவ்வியக்கத்தின் சார்பாய் இப்பத்திரிகைகள் நடைபெறுவது நலமளிக்குமாதலால் அம்மாதிரி இயக்கம் ஒன்று வேண்டியிருப்பதோடு அதற்கு வேறு பல பிரயத்தனங்களும் செய்ய வேண்டி இருக்கிறது. இவற்றை யெல்லாம் நன்றாய் யோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வரும்படி வாசகர் களைக் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

குடி அரசு – தலையங்கம் – 29.04.1928

நமது பத்திரிகை (குடி அரசு - 3ஆம் ஆண்டு தொடக்கம் -1927)

 நமது பத்திரிகை


சகோதர வாசகர்களே !

நமது “குடி அரசு” ஆரம்பமாகி இரண்டு வருஷம் முடிந்து மூன்றாவது வருஷத்தின் முதல் இதழ் இன்று வெளியாகிறது. “குடி அரசு” ஆரம்ப இதழில் “குடி அரசு” என்று ஒரு தலையங்கமும், ஆறு மாதம் கழிந்து “நமது பத்திரிகை” என்று ஒரு தலையங்கமும் ஒரு வருஷம் முடிந்து இரண்டாவது வருஷ ஆரம்பத்தில் “நமது பத்திரிகை” என்று ஒரு தலையங்கமும் எழுதி இருக்கிறோம்.

இப்போது இரண்டு வருஷம் முடிந்து மூன்றாவது வருஷ ஆரம்ப முதல் இதழிலும் அவ்வாறே “நமது பத்திரிகை” என்று தலையங்கமிட்டு ஒரு குறிப்பு எழுத ஆசைப்படுகிறோம்.

நமது நாட்டு மக்களுக்குள் சுயமரியாதையும் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உண்டாக்கக் “குடி அரசு” என்னும் ஒரு பத்திரிகையை ஆரம்பிக்க வேண்டும் என்பதாக முதல் முதல் நானும் எனது நண்பர் ஸ்ரீமான் தங்கபெருமாள் பிள்ளையும் 1922ல் கோயமுத்தூர் ஜெயிலில் சிறைவாசம் செய்யும் போதே நினைத்தோம். அதுபோலவே வெளியில் வந்த கொஞ்ச நாட்களுக்குள் “குடி அரசு” என்று ஒரு வாரப் பத்திரிகையும், “கொங்கு நாடு” என்று ஒரு மாதாந்திரமும் நடத்தப் போவதாய் 19.1.23 தேதியில் சர்க்காரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது.

இவ்விஷயத்தை முதலில் ஸ்ரீமான் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் அவர்களிடம் சொன்னேன். அவர் எனது கொள்கையை கேட்டவுடன் சந்தோஷப்பட்டு “இப்படி ஒரு பத்திரிகை வேண்டியதுதான். அதற்கு நீயே சரியானவன். நீ ஆரம்பித்தால் தமிழ் நாட்டிலேயே பதினாயிரக்கணக்கான சந்தாதாரர்கள் சேருவார்கள். ஆனால் அதிக நாள் நிலைக்காது. ஒரு கூட்டத்தார் எப்படியாவது அதை ஒழித்து விடுவார்கள். ஆனாலும், நடந்த வரை லாபம், நடத்துங்கள்” என்றார். பிறகு ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்களிடம் சொன்னேன். அவரும் மிகச் சந்தோஷப்பட்டு “சீக்கிரத்தில் வெளியாக்க வேண்டுமென்று விரும்புவதாகவும், வெளியாகத் தாமத மேற்பட்டால் அதுவரை தனது பத்திரிகையில் வேண்டுமானாலும் எழுதி வரும் படியும் சொன்னார்.” பிறகு ஸ்ரீமான் ஸி. ராஜகோபாலாச்சாரியார் அவர்களிடம் சொன்னேன். அவர் “இந்தச் சமயம் இப்படிப்பட்ட பத்திரிகை கூடாது. அல்லாமலும் மகாத்மா ஜெயிலில் இருக்கும்போது இதை விட்டு விட்டு நீ பத்திரிகை நடத்தப் போவது சரியல்ல. உன்னுடைய சேவை இது சமயம் மிகவும் அவசியமானது ஆனதால் கண்டிப்பாய்ப் போகக் கூடாது” என்று சொல்லி விட்டார். அதன் பேரில் அந்த எண்ணத்தை ஒத்தி வைத்து விட்டு மறுபடியும் ஒத்துழையாமைக்காகவே உழைத்தேன். தற்செயலாய் வைக்கம் சத்தியாக்கிரகம் ஏற்பட்டது. ஸ்ரீமான் ஜார்ஜ் ஜோசப் அவர்களும் வைக்கத்திலிருந்து “என்னை பிடிக்கப் போகிறார்கள். நான் இதோ ஜெயிலுக்குப் போகிறேன். வேறு யாரும் இல்லை. நீ வந்து ஒப்புக்கொள்” என்று எழுதின கடிதமும் தந்தியும் என்னைக் குடும்பத்துடன் வைக்கத்திற்குப் போகும்படி செய்து விட்டது. அங்கு ஜெயிலில் இருக்கும்போதும் இதே எண்ணம்தான். அதாவது வெளியில் போனதும் பத்திரிகை நடத்த வேண்டும் என்கிற ஆவல் அதிகமாயிற்று. அதுபோலவே வெளியில் வந்ததும் பத்திரிகை ஆரம்பிக்கத் தீர்மானித்து விட்டேன். அதற்கேற்றாற்போல் திருப் பாப்புலியூர் ஞானியார் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சிவஷண்முக மெய்ஞான சிவாச் சார்ய சுவாமிகளும் கோயம்புத்தூருக்கு வந்திருக்கிறார்கள் என்று கேள்விப் பட்டு அவர்களை இங்கு அழைத்து அவர்களைக் கொண்டே ஆரம்ப விழா நடத்திவிடலாம் என நினைத்து, கோயம்புத்தூர் சென்று அழைத்ததும், யாதொரு ஆnக்ஷபணையும் சொல்லாமல் அவர்கள் ஒப்புக்கொண்டு ஈரோட்டிற்கு வந்து, ஆரம்ப விழா நடத்திக் கொடுத்தார்கள். அது சமயம் பத்திரிகாலயத்தைத் திறந்து வைக்கும்படி ஞானியார் சுவாமிகளை கேட்டுக்கொண்ட போது, “அநேக பத்திரிகைகள் நமது நாட்டிடை இருந்தாலும் அவைகள் தங்கள் மனச்சாக்ஷிக்கு உண்மை என்று பட்டதை தெரிவிக்க அஞ்சுகின்றன. அதனால்தான் நான் இப்பத்திரிகை ஆரம்பிக்கிறேன். மற்றப் பத்திரிகை போலல்லாமல் மனதில் பட்டதைத் தைரியமாய் பொது ஜனங்க ளுக்கு உள்ளது உள்ளபடி தெரிவிக்க வேண்டுமென்பது எமது நோக்கம்” என்று சொல்லி இருக்கிறேன். ஞானியார் சுவாமிகளும் பத்திரிகாலயத்தைத் திறக்கும்போது, நமது நாட்டில் பல பத்திரிகை இருந்தும் இப்பத்திரிகை போன்ற கருத்துடைய பத்திரிகை வேறொன்றுமில்லை.

“உயர்வு தாழ்வு என்கிற ஆணவம் மிகுந்திருக்கிறது.” “சமத்துவம் என்ற உணர்ச்சி எங்கும் பரவ வேண்டும்.” “குடி அரசின்” கருத்து இதுவே என நான் அறிந்துகொண்டேன்.

“சமயத்திலிருக்கும் கேட்டை முதலில் ஒழிக்க வேண்டும்.” “இவை குடி அரசின் முதல் கொள்கையாய் விளங்க வேண்டும்.” இப் பத்திரிகையில் ஸ்ரீமான் நாயக்கருக்கு எவ்வளவு சிரத்தை உண்டோ அவ்வளவு எனக்கும் உண்டு” என்று ஆசிர்வதித்திருக்கிறார். முதல் இதழ் தலையங்கத்திலும் நமது நோக்கத்தை வெளியிட்ட தலையங்கத்திலும் நாம் குறிப்பிட்டிருப்பதாவது,

“ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும்”. “இதை அறவே விடுத்து வெறும் தேசம், தேசம் என்று கூக்குரல் இடுவது எமது பத்திரிகையின் நோக்கமன்று.”

“மக்களுக்குள் சுயமரியாதையும் சமத்துவமும் சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும்.”

“உயர்வு தாழ்வு என்ற உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்து வரும் ஜாதிச் சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால், இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிர் ஒன்றென்றெண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வளர வேண்டும்.” …………….இன்னோறென்ன பிற நறுங்குணங்கள் நம் மக்கள் அடையப்பாடுபடுவது நமது நோக்கமாகும்.”

“எவர் எனக்கு இனியர் இவர் எனக்கு இன்னார் என்ற விருப்பு வெறுப்பின்றி,”

“நகுதற் பொருட்டன்று நட்டல், மிகுதிக் கண்மேச் சென்றிடித்தற் பொருட்டு” என்ற வாக்கைக் கடைபிடித்து நண்பரே யாயினுமாகுக. அவர்தம் சொல்லும் செயலும் கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித்தொதுக் கப்படும்……..” என்று எழுதி இருக்கிறோம். இவையாவும் 2-5-25 தேதி குடி அரசில் காணலாம்.

அடுத்தபடி ஆறு மாதம் முடிந்த இதழில் ‘நமது பத்திரிகை’ என்னும் தலையங்கத்திலும்,

“குடி அரசு” குறிப்பிட்ட கருத்தைப் பிரசாரம் செய்யும் பத்திரிகையே அல்லாமல் வெறும் வர்த்தமானப் பத்திரிகை அல்லவாதலால் ………பிரதி வாரமும் ‘குடி அரசு’ தனது ஆத்மாவை வெளிப்படுத்தும் (தத்துவத்தை விளக்கும்) போது கண்ணீர் கொட்டாமலிருக்க முடிவதே இல்லை. இதன் பலனால் உயர்ந்தோர் என்று சொல்லிக் கொள்வோராகிய பிராமணர் முதலிய சமூகத்தாருக்கும், ராஜீயத் தலைவர் என்று சொல்வோராகிய பல ராஜ தந்திரி களுக்கும் விரோதியாகவும் அவர்களுடைய சூழ்ச்சிகளுக்கும் நமது ‘குடி அரசு’ ஆளாக வேண்டியிருப்பதால் இது சீக்கிரத்தில் பாமர ஜனங்களின் செல்வாக்கைப் பெற முடியாமலிருப்பது ஆச்சரியமல்ல என்றும்,

“உண்மையில் ‘குடி அரசுக்கு’ எந்த பிராமணனிடத்தும் குரோதமோ வெறுப்போ கிடையாது. ஆனால் பிராமணன் உயர்ந்தவன் என்றும், மற்றவர்கள் தீண்டாதவர்கள், தெருவில் நடக்கக் கூடாதவர்கள் என்பன போன்ற இழிவான மிருக உரிமைக்கும் பாத்திரமில்லாதவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் எண்ணத்தினிடத்திலும், தங்கள் வகுப்பார் தான் முன்னணியில் இருக்க வேண்டும், மேன்மையுடன் பிழைக்க வேண்டும், மற்றவர்கள் என்றென்றைக்கும் தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அதற்காகச் செய்யும் சூழ்ச்சிகளிடத்திலும் தான் குடி அரசுக்குக் குரோதமும் வெறுப்பும் இருப்பதுடன், அதை அடியோடே களைந் தெறிய வேண்டும் என்ற ஆவல் கொண்டு உழைத்து வருகிறது” என்றும்,

“குடி அரசு” ஏற்பட்டு ஆறுமாத காலமாகியும், அது வரை ஆயிரத்துச் சில்லரை சந்தாதாரர்களே சேர்ந்திருக்கிறார்கள், அதனைப் படிக்க வேண்டிய அளவு ஜனங்கள் படிக்கவில்லை என்றும், பாமர ஜனங்கள் சரியானபடி குடி அரசை ஆதரிக்கவில்லையானால் அது தானாகவே மறைந்து போகவேண்டி யதுதான் அதன் கடமையே அல்லாமல் வியாபார தோரணையாய் நடந்து வராது” என்றும் எழுதியிருந்தது, (இதை 1-11-25 தேதி இதழிற் பார்க்கலாம்).

பிறகு ஒரு வருஷம் முடிந்து, இரண்டாவது வருஷ ஆரம்ப இதழில் “நமது பத்திரிகை” என்ற தலையங்கத்திலும், “இதுவரை நமக்குள்ள 2000 சந்தாதாரர் களில் நால்வர் அதிருப்திக்கே ஆளாகிறோம் என்று எழுதிவிட்டு, “குடி அரசு” எவருடைய தயவுக்கோ, முகஸ்துதிக்கோ, சுயநல வாழ்வுக்கோ, கீர்த்திக்கோ, நடைபெற வில்லை. யோக்கியமாய் உண்மையாய் நடக்கக் கூடிய காலம் வரை நடக்கும். அவ்விதம் நடக்க அதற்கு யோக்கியதை இல்லையானால், அது தானே மறைந்து விடுமே யல்லாமல், மானங்கெட்டு விலங்குகளைப் போல் வாழாது, “குடி அரசு” தோன்றிய பிறகு அது ராஜீய உலகத்திலும், சமூக உலகத்திலும், பெரிய மாறுதல் ஏற்பட்டிருக்கிறது, என்று பலர் நமக்கு எழுதியிருப்பதை நாமும் உபயோகப்படுத்திக் கொள்ளுகிறோம், என்றும் எழுதி இருக்கிறோம்.

ஆகவே, இப்போது இரண்டு வருடங்கள் முடிந்து மூன்றாவது வருடம் ஆரம்ப இதழில் அதே தலையங்கத்துடன் ஒரு குறிப்பு எழுத ஆசைப்படு கிறோம். முதலாவதாக, ஒரு விஷயத்தைத் தெரியப்படுத்துகிறோம். அதா வது “குடி அரசு”க்கு ஆறு மாதத்தில் ஆயிரம் சந்தாதாரர்களும், ஒரு வருஷத்தில் இரண்டாயிரம் சந்தாதாரர்களும் இப்போது இரண்டு வருஷத் தில் நாலாயிரத்து ஐந்நூறு சந்தாதாரர்களும் இருப்பதால் கூடுமான வரையில் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று இருக்கிறது என்பதை சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

“ஆரம்பத்திலிருந்து இதுவரை முன்னாற் குறிப்பிட்ட கொள்கை களில், அது ஒரு சிறிதும் தவறாமல் ஏற்றுக் கொண்டபடி நடந்து வந்தி ருக்கிறது என்பதையும் மெய்ப்பித்து விட்டோம். ஆகவே, “குடி அரசு” குறைந்தது ஒரு பதினாயிரம் பிரதிகளாவது அச்சிட்டு வெளியாக வேண்டும் என்கிற ஆசை நமக்கு இருந்தாலும் இந்நாலாயிரத்து ஐந்நூறைக் கொண்டு நான் சந்தோஷமடைகிறேனே தவிர, ஒரு சிறிதும் அதிருப்தி அடைய வில்லை. அன்றியும், எமது விருப்பத்தை நிறைவேற்ற அநேக நண்பர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். 250 சந்தாதாரர் களை ஏற்படுத்திக் கொடுத்தும் இனியும் இருநூற்றைம்பது சந்தாதாரர்களை ஒரு மாதத்தில் சேர்ப்பதாய் வாக்களித்த சிங்கப்பூர் நண்பர்களுக்கும், மற்றும் 250 சந்தாதாரர்களை எதிர்பார்க்கும் மலேயா நண்பர்களுக்கும் எனது மன மார்ந்த நன்றியைச் செலுத்துகிறேன். தமிழ்நாட்டிலும், ஊர்கள் தோறும் “குடி அரசின்” வளர்ச்சியையும் பரவுதலையும் எம்மைவிட அதிக கவலை கொண்டு எதிர்பார்க்கும் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள், என்பதும் எனக்குத் தெரியும். அவர்கள் “குடி அரசு”க்காக உழைத்து வந்ததற்கும், சந்தாதாரர் களைச் சேர்த்துக் கொடுத்ததற்காகவும் “குடி அரசு”க் கொள்கைகளைப் பரப்பப் பாடுபட்டதற்கும், நான் மனப்பூர்வமாய் நன்றி செலுத்துகிறேன். “குடி அரசு”க்கு இரண்டாவது வருடத்தில் நஷ்டமில்லை. முதல் வருடத்தின் நஷ்டம் அடைபட வேண்டும். ஆனால் இன்னமும் கொஞ்சம் நல்ல இதழில் இன்னும் நாலு பக்கம் அதிகப்படுத்த வேண்டும் என்கிற ஆவல் இருந்து வருகிறது. இக் காரியங்களுக்கு இப்போது ஆகும் செலவை விட இன்னமும் வருஷம் ஒன்றுக்கு 2000 ரூ. அதிகமாகச் செலவு பிடிக்கும். இனியும் கொஞ்சம் சந்தாதாரர்கள் அதிகமானால் இவைகளைச் செய்ய சௌகரிய மாயிருக்கும்.இவ்வருஷம் புதிதாகச் சொல்வதற்கு ஒன்றும் அதிகமாய் இல்லை என்றே நினைக்கிறேன்.

பொதுவாக நமது பிரசங்கத்தினாலும் “குடி அரசி”னாலும் நான் செய்து வந்த பிரசாரத்தில் அரசியல் இயக்கங்கள் என்பவைகளைக் கண்டித்தேன், அரசியல் தலைவர்கள் என்பவர்களைக் கண்டித்தேன், மதம் என்பதைக் கண்டித்தேன், மதத் தலைவர்கள் என்பவர்களைக் கண்டித்தேன், மதச்சடங்கு என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன்; குருக்கள் என்பவர்களைக் கண்டித் திருக்கிறேன்; கோவில் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; சாமி என்பதைக் கண்டித்திருக்கிறேன்; வேதம் என்று சொல்வதைக் கண்டித்திருக்கிறேன்; சாஸ்திரம் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; புராணம் என்பதைக் கண்டித் திருக்கிறேன்; பார்ப்பனீயம் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; ஜாதி என்பதைக் கண்டித்திருக்கிறேன்; அரசாங்கம் என்பதைக் கண்டித்திருக் கிறேன்; உத்தியோகம் என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன்; நீதி ஸ்தலம் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; நியாயாதிபதி என்பவர்களைக் கண்டித் திருக்கிறேன்; நிர்வாக ஸ்தலங்கள் என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன்; ஜனப் பிரதிநிதித்துவம் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; பிரதிநிதிகள் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; தேர்தல் என்பதைக் கண்டித்திருக்கிறேன்;

கல்வி என்பதைக் கண்டித்திருக்கிறேன்; சுயராஜ்யம் என்பதைக் கண்டித்திருக் கிறேன்; ஸ்ரீமான்கள் கல்யாணசுந்தர முதலியார், வரதராஜுலு நாயுடு, சி. ராஜகோபாலாச்சாரியார் முதலிய ஒரே துறையில் வேலை செய்து வந்த நண்பர்களைக் கண்டித்திருக்கிறேன்; இன்னும் என்னென்னவற்றை யோ யார் யாரையோ கண்டித்திருக்கிறேன், கோபம் வரும்படி வைதும் இருக்கிறேன்; எதைக் கண்டித்திருக்கிறேன், எதைக்கண்டிக்கவில்லை என்பது எனக்கு ஞாபகத்திற்கு வரமாட்டேன் என்கிறது. இன்னமும் ஏதாவது எழுதலாம் என்று பேனாவை எடுத்தாலும், பேசலாம் என்று வாயைத் திறந்தாலும் கண்டிக்கவும் வையவும் துக்கப்படவுமான நிலைமை ஏற்படுகிறதே ஒழிய வேறில்லை. கண்டிக்கத்தகாத, வையத்தகாத இயக்கமோ, திட்டமோ, அபிப்பிராயமோ என் கண்களுக்குப் படமாட்டேன் என்கிறது. இவைகளன்றி எனது வார்த்தை களும், எழுத்துகளும், செய்கைகளும் தேசத் துரோகமென்றும், வகுப்புத் துவேஷமென்றும், பிராமணத் துவேசமென்றும், மான நஷ்டமென்றும், அவ தூறு என்றும், ராஜதுரோகம் என்றும், ராஜத் துவேஷமென்றும், நாஸ்திக மென்றும், மத தூஷணை என்றும், சிலர் சொல்லவும் ஆத்திரப் படவும் ஆளானேன். அரசியல் தலைவர்கள், தேசாபிமானிகள், தேசபக்தர்கள் என்பவர்கள் என்னை வையவும் என்னை தண்டித்து ஜெயிலில் வைக்கும்படி அரசாங்கத்தைக் கெஞ்சவும் ஆளானேன். இந்த இன்பமற்ற காரியங்களை நான் ஏன் செய்ய வேண்டும்? சிலருக்காவது மன வருத்தத்தையும், அதிருப்தி யையும் கொடுக்கத்தக்க காரியத்தை ஏன் செய்ய வேண்டும்? என்று நானே யோசிப்பதுண்டு. சிற்சில சமயங்களில் யாரோ எப்படியோ போகட்டும், நாம் ஏன் இக்கவலையும் இவ்வளவு தொல்லையும் அடையவேண்டும்? நமக்கென்ன இதனால் ஜீவனமா? பணம், புகழ், கீர்த்தி, சம்பாதனையா? ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்? ஒரு பத்திரிகையாவது உதவியுண்டா? ஒரு தலைவராவது உதவியுண்டா? ஒரு தேச பக்தராவது உதவியுண்டா? இமயமலை வெய்யிலில் காய்கிறது என்று குடை பிடிப்பது போல் இருக்கிறது என்பதாக நினைத்து விலகி விடலாமா என்று யோசிப்பதுமுண்டு. ஆனால் விலகுவதில் தான் என்ன லாபம்? ஏறக்குறைய நமது ஆயுள் காலமும் தீர்ந்துவிட்டது. இனி நாலோ அய்ந்தோ அல்லது அதிகமாயிருந்தால் பத்து வயது காலமோ இருக்கலாம். இந்த கொஞ்ச காலத்தை ஏன் நமது மனச் சாட்சிக்கு விட்டு விடக் கூடாது? விலகித்தான் என்ன பெரிய காரியம் செய்யப் போகிறோம்? என்பதாக கருதி மறுபடியும் இதிலேயே உழன்று கொண்டிருக்கிறோமே அல்லாமல் வேறில்லை. உண்மையில் நாம் முன் சொன்ன அரசியல் மத விஷயம் முதலியதுகளைக் கண்டிக்க நேரிட்டபோது உண்மையான அரசியல் மத இயல் இவைகளை நாம் கண்டிக் கவே இல்லை. எதைப் பார்த்தாலும் புரட்டும், பித்தலாட்டமும் பெயரைப் பார்த்து ஏமாறத் தகுந்ததாயிருக்கிறதே அல்லாமல் தத்துவங்கள் எல்லாம் நமக்கும் நமது நாட்டுக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகவும் கொஞ்சங் கூட ரிபேர் செய்வதற்கில்லாமல் அடியோடு அழித்து மறுபடியும் புதிதாய் உண்டாக்க வேண்டியதாகவே இருக்கிறது. நமது காலத்தில் இவை திருத்தப்பாடடையும் என்கின்ற நம்பிக்கை கொஞ்சமும் இல்லா விட்டாலும் வேறு யாராவது மகாத்மாவைப் போன்ற மகான்கள் வந்தால் அவர்களுக்கு பக்குவம் செய்து வைத்திருக்கக் கூடாதா என்றும், அதுவும் முடியாவிட்டால் பலன் எப்படி யானாலும் கடமையைச் செய்ய வேண்டியதுதானே என்கிற முடிவும் கிடைக்கிறது. ஆகவே, இக்கஷ்டமானதும், மனதுக்கு இன்பத்தைக் கொடுக் கக்கூடுமானதுமான இக்காரியத்தில் இறங்கிவிட்டோம். உலகம் ஒப்புக் கொண்டாலும் சரி தள்ளிவிட்டாலும் சரி நமக்கு அதைப்பற்றி கவலை யில்லை. நமது கடமையை எப்படி நாம் பிரதானமாய்க் கருதி இறங்கி இருக்கி றோமோ அது போலவே பொது ஜனங்களும், அதாவது இக்கடமையைச் சரி என்று எண்ணியவர்கள் தங்கள் தங்களது கடமையையும் எண்ணி அக் கடமையைச் செலுத்துவார்கள் என்று நம்புகிறோம்.


                                                                குடி அரசு – தலையங்கம் – 01.05.1927