Tuesday, 18 July 2017

பூணூல் அடையாளம் எதற்கு? - 27.12.1925

பூணூல் அடையாளம் எதற்கு? 

பூணூல் இந்தியாவில் வகுப்பு வித்தியாசங்களைக் காட்டும் பல அறிகுறிகளில் ஒன்றாய் விளங்குவது. இது பூணூ - நூல் என்கிற இருபதம் சேர்ந்தது. இது மக்களுக்குப் பிறக்கும்போதே வித்தியாசத்தைக் காட்டக்கூடிய ஓர் அடையாளமாக உடன் பிறந்ததல்ல. ஆனால் மனிதர்கள் ஒரு பக்குவ நிலையை அடைந்ததாகக் காட்டுவதற்கு உபயோகப்படுவதாய்ச் சொல்லப்படும் அறிகுறியாய் விளக்குகிறது.

எப்படி தாழ்ந்த ஜாதியில் ஒரு குழந்தை பிறக்கிறபோது, பரிசுத்தமாகப் பிறந்து, பிறகு வளர வளர சரிவர குளியாததினாலும், அழுக்கான உடைகளை உடுத்திக் கொள்ளுவதினாலும், அதுவும் தீண்டத்தகாத வகுப்பென்று சொல்லப்பட்டுப் போய்விடுகிறதோ அதுபோலவே பிறந்து கொஞ்சக் காலமான பிறகு அது ஒரு பூணூலைப் போட்டுக் கொண்டவுடன், அது உயர்ந்த ஜாதி என்று சொல்லப்படும் தத்துவத்தை அடைந்துவிடுகிறது. ஆனால், தாழ்ந்த ஜாதியாரென்னப்படுவோர் தவிர, மற்றோர்கள் வீட்டில் இம்மாதிரி ஒரு குழந்தை பிறந்து அது நாளாக ஆக, அழுக்காகிச் சரிவரக் குளிப்பாட்டாமலும் அழுக்காடைகளைத் தரித்துக் கொண்டும் இருக்கிறது அது தாழ்ந்த ஜாதி தத்துவத்தை அடைகிறதில்லை. இதை இன்றைய தினமும் பார்த்து வருகிறோம். ஆனால் அழுக்காயிருப்பவன் மனப்பான்மையின் தான் கொஞ்சம் அழுக்குள்ளலனாயிருக்கிறேனென்று எப்படிக் கருதுகிறானோ, அதுபோல் பூணூல் போட்டுக் கொள்ளுகிறவன் தனது மனப்பான்மையில் தான் கொஞ்சம் உயர்ந்தஜாதி என்பதாகக் கருதிக் கொள்ளுகிறான். அது மாத்திரமல்லாமல் மற்றவர்கள் தாழ்ந்த ஜாதியென்றும் கருதுகிறான்.

ஆனால், இவ்விரண்டும் அநுபவத்துக்கு ஒத்துக் கொள்ளப்படுகிறதில்லை. பிராமணனாய் இருக்கிறவன் பூணூல் போட்டுக் கொண்டாலும் போட்டுக் கொள்ளாவிட்டாலும் உயர்ந்தவனென்று, தனக்குள் ஒரு எண்ணமும், தாழ்ந்த ஜாதியானென்பவன் அழுக்குடை தரித்திருந்தாலும், இல்லாவிட்டாலும் தாழ்ந்தவனென்கிற எண்ணமும் ரத்தத்தில் பரவியிருக்கிறது.

இந்தப் பூணூல் போட்டுக் கொள்ளுவதால், மனிதனின் தாழ்ந்தநிலை எப்படி உயர்த்தப்பட்டுப் போகும்? பூணூல் போட்டுக் கொண்டிருக்கிற பிராமணரல்லாதார் எல்லோருக்கும் பிராமணருக்குள்ள சமத்துவம் இருக்கிறதா? இப்பொழுது நமது தேசத்தில் சிங்கு ராவு, செட்டியார், ஆசாரியார், குயவர், வன்னியர், சௌராஷ்டிரர், தேவாங்கர், கோமுட்டி, செட்டியார், ராஜீ வன்னியர் பண்டாரம், நாயக்கரில் சில பிரிவார் இன்னும் பஞ்சமமென்று சொல்லப்படுவோரிலும், வள்ளுவர் என்னும் வகுப்பார் ஆகிய இவ்வளவு பெயர்கள் சொல்லப்படும் பிராமணரல்லாத சகோதரர்கள் பூணூல் போட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். பிராமணர்களுக்குச் சமமான இடம் இவர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறதா? பிராமணர்களென்று சொல்லிக் கொள்வோரிலேயே, சந்தியாவந்தனத்திலும், பூணூலிலும் அர்த்தமில்லையென்றும், அதில் நம்பிக்கையில்லாத பல நண்பர்கள் பூணூலையும் அறுத்தெறிந்து விட்டும் இருக்கிறார்கள். சிலர் பூணூலை மாத்திரம் போட்டுக் கொண்டு மற்றும் அதற்கென்று ஏற்பட்ட கருமங்களைச் செய்யாதிருக்கிறார்கள். பிராமணர்களும் மற்றவர்களும் அவர்களைப் பிராமணர்கள் என்றுதான் சொல்லுகிறார்கள். ஸ்ரீமான் வ.வெ.சு. ஐயர் போன்ற சில பிராமண சமாஜத்தாரும், ஸ்வாமி சிரத்தானந்தா லாலா லஜபதி போன்ற ஆரிய சமாஜத்தாரும் பிராமணருடை சமத்துவத்தை அடைவதற்கு பூணூலைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்லுவதில் என்ன அர்த்தமிருக்கிறது?

இதனால் நம் நாட்டுக்கு என்ன பயன் ஏற்படுமென்றால் பிராமணரல்லாதாரில் பூணூல் இல்லாதாரில் சிலர் தங்களுக்குள் இருக்கும் சமத்துவ தன்மையைப் பிரித்து வைக்க உதவும் ஒரு மனிதன் பூணூல் போட்டுக் கொண்டாலே தன்னை மற்றவன் உயர்ந்தவனென்று சொல்லுகிறானா? இல்லையா? என்ற கவலையே இல்லாமல் மற்றவர்களைவிட தான் உயர்ந்தவன் என்கிற எண்ணம் மாத்திரம் வந்துவிடுகிறது. நாம் மேலே காட்டியுள்ள பூணூல் போட்டுள்ள வகுப்பார்கள். மற்ற பூணூல் போட்ட ஒரு வகுப்புக்கொரு வகுப்பு சமமென்று கருதுகிறார்களா? ஆதலால் இந்தப் பூணூல் போட்டுக் கொள்ளுகிற சமாஜத்தின் தத்துவங்கள் பல ஒழுங்கானதாய்க் காணப்படலாம். அது அமுலுக்கு வரக்கூடுமா? அப்படியானால், அதைவிடப் பல யோக்கியமான தத்துவங்கள் வருணாசிரம தர்மிகளென்று சொல்லக்கூடிய பூணூல் போட்டுக் கொண்ட பார்ப்பனர்கள் கொள்கையிலுமிருக்கிறது. அவர்கள் அதை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருகிறார்களா? எவ்வளவு அயோக்கியர்களும் விபசாரிகளும் குஷ்டரோகிகளும் இன்றையத்தினம், பார்ப்பனர்களாகவே துலக்குவதைப் பார்க்கிறோமா? இல்லையா? அதுபோலவே இதுவும் ஆகாதென்பதற்கு என்ன நம்பிக்கை?

இதற்கு முன்னும் நமத நாட்டில் சமத்துவம் ஏற்படுத்துவதற்காக, ஸ்ரீ ராமனுசர் போன்ற பல பெரியார்கள் தோன்றி அநேக தாழ்ந்த ஜாதியாரெனப்படுவோர் அநேகருக்கு பூணூல் முதலியவைகளைப் போட்டு பல சடங்ககள் செய்து உயர்ந்தோராக்கினார்கள். அதில் தந்திரத்திலும் சூழ்ச்சியிலும் வலுத்தவர்கள் பிராமணர்களாகி அதற்கு முன்னிருந்த பிராமணர்களைவிட மோசமாய் இன்றைய தினம் நமது சமூகத்துக்கும் நாட்டுக்குமே எமனாய்த் தோன்றி இருப்பதைப் பார்க்கிறோம். சக்தியற்றவர்கள் பூணூல் போட்டும் பழையபடியே இருக்கிறார்கள்.

பூணூலினால் என்ன சமநிலை ஏற்பட்டு விட்டது? கோடிக்கணக்கான பூணூல் இல்லாத ஜனங்களிருக்கிற நாட்டில் "அவர்கள் சமத்துவம் பெறவேண்டுமானால்" நடக்க வேண்டுமானால் அவர்கள் தெய்வத்தைத் தரிசிக்க வேண்டுமானால் வெகு சொற்பமாயிருக்கிற ஜனங்களைப் போல், வேஷம் போட்டுக் கொள்ள வேண்டுமென்று சொன்னால் இது யோக்கியமாகுமா? நமது தமிழ்நாட்டில், நமக்குப் பூணூல் இருந்துதான் ஆதியில் நாம் தெருவில் உலாவினோமா? கடவுளைத் தரிசித்தோமா? நம் எதிரிகளால் மத்தியில் தோன்றின நமது அழிவுக்கேற்பட்ட சில அக்கிரமங்கள் இன்றைய தினமும் நம்மை அவை வாட்டுகின்றன. இந்தியாவிலுள்ள இந்துக்களென்போர் மாத்திரமே சமத்துவம் அடைய வேண்டுமானால் இன்னும் 23- கோடிப்பேர் பூணூல் போட்டுக் கொள்ள வேண்டும்! முகமதியரும், கிறிஸ்தவரும் சமத்துவம் அடைய வேண்டுமானால் அதில் 8-கோடிப் பேர் பூணூல் போட்டுக் கொள்ள வேண்டியது! அப்படியில்லா விட்டால், பூணூல் போட்டுக் கொண்டவர்கள் தவிர, மற்றவர்களைத் தாழ்ந்தவர்களென்று கருதிக் கொண்டு மிலேச்சர்களென்றும் கூப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும்!

நமது நாட்டுக்கு இதைப்போல் கேடு சூழ்வதான காரியம் வேறொன்றுமில்லையென்பதுதான் நமது அபிப்பிராயம். இதிலிருந்து நமக்கு என்ன விளங்குகிறதென்றால், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு எப்படி தீண்டாமை ஒழிய வேண்டியது முக்கியமோ அதுபோலவே இந்த பூணூல் தத்துவமும் ஒழியவேண்டியது அதைவிட முக்கியமானதாகும்.

ஒரு மூட்டை அரிசியில் ஒரு படி கல்லிருந்தால் கீழே கொட்டி அதிலுள்ள ஒரு படி கல்லைப் பொறுக்கி எறிவது சுலபமா? அல்லது கல்லை விட்டுவிட்டு ஒரு மூட்டை அரிசியையும் பொறுக்கிக் கொண்டிருப்பது லாபமா? என்பதைக் கவனிக்க வேண்டுமாய் விரும்புகிறோம்.

தந்தைபெரியார் - "குடிஅரசு" 27.12.1925