Showing posts with label இந்தி திணிப்பு எதிர்ப்பு. Show all posts
Showing posts with label இந்தி திணிப்பு எதிர்ப்பு. Show all posts

Wednesday, 24 May 2017

பெரியார் ஈ.வெ.ரா. வழக்கு – 11.12.1938

பெரியார் ஈ.வெ.ரா. வழக்கு சர்க்கார் தரப்பு சாட்சியம் பெரியார் வாக்கு மூலம் 3 வருஷம் கடுங்காவல் 2000 ரூபாய் அபராதம்

சென்னை, டிச. 5

தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் 14-வது மகாநாட்டின் தலைவரும், சுயமரியாதை இயக்கத் தலைவருமான பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள் மீது, சென்னை அரசாங்கத்தாரால் 117-வது 7(1) ஏ செக்ஷன் கீழ் கொண்டுவரப்பட்ட வழக்கு, இன்று காலை 11-25 மணிக்கு சென்னை ஜார்ஜ்டவுன் போலீஸ் கோர்ட்டு 4-வது நீதிபதி தோழர் மாதவராவ் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் காலை 10-45 மணிக்கே படுக்கையுடன் தயாராகக் கோர்ட்டிற்கு வந்துவிட்டார். வழக்கைக் கவனிக்கத் தோழர்கள் ஸர்.ஏ.டி. பன்னீர் செல்வம், ஈ.வெ. கிருஷ்ணசாமி, டி. சுந்தரராவ் நாயுடு பி.எ. பி.எல்., கி.ஆ.பெ. விசுவநாதம், எஸ்.வி. ராஜன், பி.எ.பி.எல்., தாமோதரம்பிள்ளை, ராவ்சாகிப் தர்மலிங்கம் பிள்ளை, டி.ஆர். கோதண்டராம முதலியார் பி.எ., பி.எல்., சி. பாசுதேவ் பி.எ. பி.எல். திருவெற்றியூர் சண்முகம் பிள்ளை, சேலம் எ. சித்தையன், ஓ.எஸ். சதக்தம்பி மரைக்காயர், ஜமால் இப்ராஹிம், டி.எஸ். முகம்மது இப்ராகிம், சாமி சிதம்பரனார், திருப்பத்தூர் சேர்மன் துரைசாமி நாயுடு, ஈரோடு வேணுகோபால் பி.எ.பி.எல்., ஆகியோர் வந்திருந்தனர்.

கோர்ட்டில் எல்லோரையும் அனுமதிக்காததால் ஏராளமான தமிழ் மக்கள் கோர்ட்டிற்கு வெளியே பீச் ரோட்டில் நின்று வழக்கின் முடிவை ஆவலுடன் எதிர் நோக்கினர். பெரியார் ஈ.வெ.ரா. வந்திறங்கியதும் மக்கள் ஆரவாரித்து வாழ்த்தொலி செய்தனர்.

பெரியாருக்கு பிராசிக்கியூஷன் மரியாதை

நீதிபதி 11.25 மணிக்கு வந்து வழக்கை ஆரம்பித்தார். கிரவுன் பிராசிகூடர் தோழர் டி.எஸ். அனந்தராமன் சாட்சிகளை விசாரித்தார். கோர்ட்டார் பெரியாரைக் கூப்பிட்டதும் பெரியார் ஈ.வெ.ரா. எழுந்து நின்றார். உடனே கிரவுன் பிராசிக்கூட்டர் நீதிபதியிடம் தோழர் நாயக்கரவர்கள் உட்கார்ந்து கொள்ள அனுமதிக்க வேண்டுமென்று வேண்டினார். பின்னர் பெரியாரும் உட்கார்ந்து கொண்டார்.

ஆரம்பத்திலேயே ஈ.வெ.ரா. அவர்கள் தான் எதிர் வழக்காடப் போவதில்லை என்றும், தனக்கு யாரும் வக்கீல் இல்லை என்றும் கூறிவிட்டார்.

முதல் சாட்சி வாக்குமூலம்

சர்க்கார் தரப்பின் முதல் சாட்சியான சுருக்கெழுத்து சப்இன்ஸ்பெக்டர் தோழர் கேசவமேனன் தனது சாட்சியத்தில் கூறியதாவது:-

“நான் சர்க்காரின் இன்டெலிஜென்ஸ் டிபார்ட்மெண்டில் தமிழ் சுருக்கெழுத்து இன்ஸ்பெக்டராக சென்ற 5-வருடங்களாக இருந்து வருகிறேன். எனக்குத் தோழர் ஈ.வெ. ராமசாமி நாயக்கரை நன்றாகத் தெரியும். அவரது சொந்த ஊர் ஈரோடு. அவர் 1923-ம் வருஷம் வரை காங்கரசிலிருந்தார்.

பின்னர் சுயமரியாதை இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார். அவ்வியக்கம் பார்ப்பனரல்லாதாரின் சமூக முன்னேற்றத்திற்காக உழைக்கவும், பார்ப்பனரை எதிர்க்கவும் ஆரம்பிக்கப்பட்டது. ஜஸ்டிஸ், சுயமரியாதை இவை இரண்டும் ஒரே கொள்கை கொண்டுள்ளவை.

21.4.38ந் தேதிய 911நெ. இந்திக் கட்டாய பாட சர்க்கார் உத்தரவிற்குப் பிறகு இந்தி எதிர்ப்பு ஆரம்பிக்கப்பட்டது. அந்த உத்தரவிற்குப் பிறகே ஒரு பகுதி தமிழர்கள் இந்தி எதிர்ப்பியக்கத்தை ஆரம்பித்து கட்டாயபாட உத்தரவை ரத்து செய்யுமாறு முதன் மந்திரியை வற்புறுத்தி வருகின்றனர். பின்னர் சென்னை நகரத்திலும், சென்னைக்கு வெளியிலும் இந்தியைக் கண்டித்துப் பல கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் முதல் கூட்டம்

சென்னையில் இந்தி எதிர்ப்பு முதல் கூட்டம் 31-5-38 அன்று தியாகராய நகரில் நடைபெற்றது. இந்தி எதிர்ப்பிற்கென கட்டப்பட்ட புதுக்கட்டடத்தில் (நிலையம் ந.நி) அக்கூட்டம் நடைபெற்றது. கூட்டம் மாலை 6-30 முதல் 9-30 வரை நடைபெற்றது. ஸர்.கே.வி. ரெட்டி நாயுடு தலைமைவகித்தார். தோழர் எஸ். முத்தையா முதலியார் தமிழ்க்கொடி ஏற்றினார். நான் அக்கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். அன்று எதிரியும், முதல் சர்வாதிகாரி சி.டி. நாயகமும், மற்றும் பல இந்தி எதிர்ப்புத் தலைவர்களும் பேசினர். பல்லடம் பொன்னுசாமியை அவர் நாளை உண்ணாவிரதமிருக்கப் போவதாக தோழர் சி.டி. நாயகம் கூட்டத்திற்கு அறிமுகப் படுத்தினார். அடுத்த நாள் காலை 6-30 மணிக்குப் பல்லடம் பொன்னுசாமி, முதன் மந்திரி வீட்டின் முன் உண்ணாவிரதமிருந்தார். அப்படியே 2 நாட்கள் உண்ணாவிரதமிருந்தார். 3-6-38 அன்று அவர் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு முதல் “பேச” தொண்டர்கள் மறியலுக்காக வந்தனர். அவர்களும் கைது செய்யப்பட்டுத் தண்டிக்க பட்டனர். இதேபோல் 1-7-38 அன்று இந்து தியாலாஜிக்கல் பள்ளியின் முன்பும் தொண்டர்கள் மறியல் செய்யத் தொடங்கினர். 3 மாதம்வரை முதன் மந்திரி வீட்டின் முன் மறியல் நடந்து வந்தது. தொண்டர்கள் அவ்வப்போது கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். இரண்டு இடங்களிலுமாக நவம்பர் கடைசிவரை கைது செய்யப்பட்டவர்கள் சுமார் 400. இதில் முதன் மந்திரி வீட்டின் முன்பு கைதியானவர்கள் சுமார் 165. தியாகராய நகரிலிருந்த இந்தி எதிர்ப்பு நிலையம் பிரிக்கப்படும் வரை அங்கேயே மறியல் தொண்டர்கள் தங்கியும், உணவு உண்டும் வந்தனர்.

மே 28-ந் தேதி திருச்சியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கமிட்டிக் கூட்டத்தில் எதிரி இந்தி எதிர்ப்புக்கமிட்டியின் ஒரு அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாட்டில் 60-பள்ளிகளிலும், ஆந்திராவில் 54 பள்ளிகளிலும், மலையாளத்தில் 11 பள்ளிகளிலும் இந்தி கட்டாய பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றது. கட்டாய இந்திக்கு மலையாளத்திலும், ஆந்திராவிலும் எதிர்ப்பில்லை. எதிரி முதன் முதல் 31-5-38 அன்று சென்னையில் இந்தி எதிர்ப்புப்பிரசாரம் செய்தார். பின்னர் இந்தி எதிர்ப்புக் கமிட்டியின் ஆதரவில் நடைபெற்ற பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். ஈரோட்டிலிருந்து வெளிவரும் “விடுதலை” தினசரியும், “குடி அரசு” வார வெளியீடும் எனக்குத் தெரியும். தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவைகளின் வெளியிடுவோரும் ஆசிரியருமாவர். 13-11-38 ஒற்றைவாடைக் கொட்டகையில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மகாநாட்டிற்கு நான் சென்றிருந்தேன்.

நீதிபதி கேள்விக்கு பெரியார் பதில்

நீதிபதி: நீங்கள் ஏதாவது சாட்சியைக் கேட்க வேண்டுமா?

ஈ.வெ.ரா: அவர் கூறியது என் காதில் சரியாக விழவில்லை. இருந்தாலும் இந்தக் கோர்ட்டில் நியாயம் கிடைக்குமென்ற நம்பிக்கையில்லை. எனவே சாட்சியை நான் ஒன்றும் கேட்க வேண்டியதில்லை. கேட்பதாலும் ஒன்றும் பயனில்லை.

2-வது சாட்சி வாக்கு மூலம்

பின்னர் 2-வது சாட்சியாக தோழர் எ. கிருஷ்ணய்யர் (சுருக்கெழுத்து சப்இன்ஸ்பெக்டர்) விசாரிக்கப்பட்டார். அவர் கூறியதாவது:-

நான் சென்ற 20 வருஷங்களாக சுருக்கெழுத்து சப்இன்ஸ்பெக்டராக இருந்து வருகின்றேன். சென்னையில் 13-11-38 அன்று நடந்த தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். மாநாடு மாலை 2-45-க்கு ஆரம்பித்து இரவு 8-15-க்கு முடிவுற்றது. நான் கடைசிவரை இருந்தேன். மாநாட்டிற்கு வந்திருந்த 1500 பேரில் 700 பெண்கள் ஆகும். நடவடிக்கைகள் தமிழிலேயே நடைபெற்றன. தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் அம்மாநாட்டிற்கு வந்திருந்தார். அம் மாநாட்டில் எதிரி பேசினார். அவர் பேசும்பொழுதும் நான் அங்கிருந்தேன். நான் தமிழ்ச் சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்து பின்னர் தமிழ் நெட்டழுத்தில் எழுதினேன். அவர் பேச்சை ஒழுங்காகவே குறிப்பெடுத்தேன். மறுநாள் 14-11-38 பெத்துநாயக்கன் பேட்டை காசி விசுவநாதர் கோயில் முன் சாமி – அருணகிரிநாதர் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கும் சென்றிருந்தேன். அக்கூட்டம் மாலை 6-15க்கு ஆரம்பித்து 9-15க்கு முடிவுற்றது. அங்கு எதிரியும் பேசினார். அவர் பேச்சை சிறிதும் விடாது குறிப்பெடுத்தேன். அவரது பேச்சுகள் பொது மக்களிடையே மிகுந்த உணர்ச்சியை உண்டாக்கின. பின்னர் சாட்சி பெரியார் ஈ.வெ.ராவின் 2 பிரசங்கங்களையும் கோர்ட்டில் படித்தார்.

நீதி: இதில் ஏதாவது தவறிருக்கின்றனவா? சாட்சியை ஏதாவது கேட்க வேண்டுமா?

ஈ.வெ.ரா: பல தவறுகள் காணப்படுகின்றன. ஆனால் அதுபற்றி நான் ஒன்றும் கேட்க விரும்பவில்லை.

3-வது சாட்சி வாக்கு மூலம்

பின்னர் 3-வது சாட்சியாகத் தோழர் ரஞ்சித்சிங் (சுருக்கெழுத்து இன்ஸ்பெக்டர்) விசாரிக்கப்பட்டார். அவர் கூறியதாவது:-

நான் சர்க்காரின் இன்டெலிஜென்ஸ் செக்ஷனில் சுருக்கெழுத்தாளனாக இருக்கிறேன். 13-11-38ல் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். கடைசிவரை இருந்தேன். அம்மாநாட்டிற்கு மறுநாள் 14ந் தேதியன்று பெண்கள் இந்து தியாலாஜிக்கல் பள்ளி முன் மறியல் செய்தனர். அப்பெண்கள் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டனர். அவர்கள் அபராதம் செலுத்தவில்லை. இந்தி எதிர்ப்புக் கழக ஆதரவில் அன்று மாலை காசி விசுவநாதர்கோயில் முன்பு ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பின்னர் கிரவுன் பிராசிக்கூடர் இந்தப் பிரசங்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவேண்டியிருப்பதால் வாய்தா கொடுக்கவேண்டுமென்று கேட்டார்.

நீதிபதி: பிரசங்கங்கள் விளக்கமாக இருப்பதால் இதற்கு வாய்தா வேண்டியதில்லை. சில மணி நேரங்களில் மொழி பெயர்த்து விடலாம் என்று கூறினார்.

பின்னர் சர்க்கார் சாட்சிகள் மீண்டும் கிரவுன் பிராசிகூடரால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர்.

குறுக்கு விசாரணை

குறுக்கு விசாரணையில் முதல் சாட்சி கேசவமேனன் கூறியதாவது:- இந்தி உத்தரவை எடுக்குமாறு முதன் மந்திரியை வற்புறுத்தி முதன் மந்திரி வீட்டின் முன்பும் தியாலாஜிக்கல் பள்ளி முன்பும் மறியல் நடந்தன. அப்பள்ளியில் இந்தி கட்டாயபாடமாக்கப்பட்டிருப்பதால் பையன்களை படிக்கவிடாது தடுக்கவே மறியல்நடைபெறுகிறது. அப்படி பையன்கள் போகாவிட்டால் பள்ளிக்கூடம் மூடப்படும் என்று கருதியே இம்மறியலால் ஏற்படும் கூச்சல் ஆசிரியர்களையும் வகுப்பு நடத்த முடியாமல் தடை செய்கிறது.

3-வது சாட்சி தோழர் ரஞ்சிட்சிங் கூறியதாவது:-

14-11-38 அன்று 5 பெண்கள் இந்து தியாலாஜிக்கல் பள்ளி முன் நின்று இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!! என்று கூறி மறியல் செய்தனர். இதனால் ஆசிரியரும், பையன்களும் உள்ளே புக முடியாமலும், நடத்திக் கொண்டிருக்கும் வகுப்பு மேலும் நடைபெறாமலும் தடைப்படுகின்றது. வேடிக்கை பார்க்க ஆசிரியர்கள் வெளியே வந்து விடுகின்றனர்.

நீதி: நீங்கள் ஏதாவது வாக்கு மூலம் கொடுக்கின்றீர்களா?

ஈ.வெ.ரா: சிறிது அவகாசம் கொடுத்தால் சாட்சியங்களைப் பார்த்து வாக்கு மூலம் கொடுக்கின்றேன்.

நீதி: சாட்சிக் காப்பிகள் மாலை தான் கிடைக்கும். எனவே வழக்கை நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைக்கிறேன்.

மீண்டும் வழக்கு நாளை நடைபெறும்.

1-30 மணிக்கு வழக்கு முடிந்து பெரியார் கீழே வரும் வரை வெளியில் ஏராளமான மக்கள் காத்துக்கொண்டே நின்றனர். பெரியார் காரில் ஏறியதும் மக்கள் “பெரியார் ஈ.வெ.ரா. வாழ்க” என ஆரவாரம் செய்தனர். மக்கள் காட்டிய உணர்ச்சி அளவு கடந்ததாயிருந்தது. கோர்ட்டிலும் வெளியிலும் பலமான போலீஸ் பந்தோபஸ்து செய்யப்பட்டிருந்தது.

(மறுநாள் நடவடிக்கை)

சென்னை, டிச. 6-

சென்னை அரசாங்கத்தாரால் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் மீது 117-வது செக்ஷன் கீழ்க்கொண்டு வரப்பட்டிருக்கும் வழக்கு, சென்னை ஜார்ஜ் டவுன் 4-வது மாகாண நீதிபதி தோழர் மாதவராவ் முன்பு இன்று காலை 11-30 மணிக்கு மீண்டும் விசாரணைக் கெடுத்துக் கொள்ளப்பட்டது.

பெரியார் வருகை

சரியாகப் 11-மணிக்குப் பெரியார், ஸர்.ஏ.டி. பன்னீர் செல்வம், ஈ.வெ. கிருஷ்ணசாமி ஆகியவர்களுடன் படுக்கை சகிதமாகக் கோர்ட்டிற்கு வந்து சேர்ந்தார். கோர்ட்டிற்கு வெளியில் நின்றிருந்த பதினாயிரக்கணக்கான மக்கள் கைதட்ட வாழ்த்தொலி செய்தனர். இன்றும் கோர்ட்டுக்கு அருகில் யாரையும் வரவிடாது பலத்த போலீஸ் பந்தோபஸ்து இருந்தது. நேற்று இரவு 10 மணிக்குத்தான் பெரியாருக்கு சர்க்கார் சாட்சியத்தின் நகல் கிடைத்ததாகையால் கோர்ட்டில் வந்தும் விரைவாக வாக்கு மூலத்தின் எஞ்சிய பகுதிகளை எழுதிக் கொண்டிருந்தார்.

ரசாக்கான் சாட்சியம்

ஆரம்பத்தில் கிரவுன் பிராசிக்கூட்டர், சப் இன்ஸ்பெக்டர் தோழர் ரசாக்கானை சர்க்கார் சாட்சியாக விசாரிக்க வேண்டும். அவர் இந்து தியாலாஜிகல் பள்ளி இருக்கும் செக்ஷனின் சப்இன்ஸ்பெக்டர் என நீதிபதியைக் கேட்டார்.

நீதிபதியும் சம்மதிக்க, தோழர் சப்பின்ஸ்பெக்டர் ரசாக்கான் விசாரிக்கப்பட்டார். அவர் கூறியதாவது:-

நான் யானை கவுணிபோலீஸ் ஸ்டேஷன் சப்இன்ஸ்பெக்டர். இந்து தியாலாஜிக்கல் பள்ளி எனது ஜúரிஸ்டிக்ஷனில் உள்ளது. நாடோறும் நடைபெறும் மறியல் காலத்து நேரில் பள்ளி முன் இருந்து வருகிறேன். 14-11-38 அன்று 5-பெண்கள் பெரிய ஊர்வலமாக வந்து, பள்ளியின் வாசற்படிக்கு அருகில் நின்று கொண்டு “தமிழ் வாழ்க” “இந்தி வீழ்க” எனக் கூச்சலிட்டு மறியல் செய்தனர். அன்றும் நான் அங்கிருந்தேன். 2000 அல்லது 3000 பேர் ஊர்வலமாக வந்தனர். எதிரியும் ஊர்வலத்துடன் அன்று வந்தார். பெண்கள் மறியலால் ஆசிரியர்களும் மாணவர்களும் உள்ளே போகத் தடங்கலாயிற்று. வகுப்பு நடத்த முடியாமல் ஆசிரியர்கள் வெளியே வந்து விட்டனர். பெண்களை அங்கிருந்து போய்விடுமாறு நான் எச்சரித்தும், இந்தி ஒழிந்தால் ஒழிய போக மாட்டோமென்றனர். பின்னர் அவர்களைக் கைது செய்தேன். எதிரியும் நான் கைது செய்யும் வரை அங்கேயே இருந்தார். பின்னர் இரண்டாவது மாகாண நீதிபதி கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு பெண்கள் தண்டனை பெற்றனர்.

பெண்கள் அபராதங் கொடுக்க மறுத்தனர். கோர்ட்டிலும் எதிரி ஆஜராகியிருந்தார். இதன் பிறகு ஒவ்வொரு திங்கட்கிழமையும் பெண்கள் மறியல் செய்து வருகின்றனர். 21-11-38 அன்று 8-பெண்கள் மறியல் செய்தனர். அன்றும் பெரிய ஊர்வலமாக அவர்கள் வந்தனர். மேலும் அவர்கள் செய்யும் மறியலால் பெருங்கூட்டம் கூடி, போக்கு வரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுகின்றது. அவர்களையும் நான் எச்சரித்தேன். கேட்காததால் கைது செய்தேன். அவர்களும் தண்டனை பெற்றார்கள். அன்று வழக்கு முடிந்த பிறகு வழக்கைப் பார்க்க வந்திருந்த ஏராளமான மக்கள் திரும்பி 2 மணிக்கு வீட்டிற்குச் செல்லும்போது பல இடங்களில் கல்லெறிந்து பலருக்கு நஷ்டம் உண்டாக்கியிருக்கின்றனர். முதன் முதலில் தினமணி ஆபீஸ் மீது கல்லெறிந்ததாக அறிந்தேன். அதற்குப் பின் மற்றும் சில இடங்களில் குழப்பம் நேரிட்டதாகத் தெரிகிறது. ஆனால், நேரில் நான் பார்க்கவில்லை. அதன் பிறகு ஒவ்வொரு திங்கட்கிழமையும் பெண்கள் தொடர்ந்து மறியல் செய்து வருகின்றனர்.

கிராஸ் செய்ய பெரியார் மறுப்பு

ஈ.வெ.ரா. சாட்சியை ஒன்றும் கேள்வி கேட்க வேண்டியதில்லை என்று தெரிவித்தார்.

நீதி: உங்கள் பேரில் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றதாகையால் வழக்கிற்குச் சம்பந்தப்பட்ட ஸ்டேட்மெண்டைத்தான் கொடுக்க வேண்டும். சம்மந்தப்படாத வெளி விஷயங்களை நான் ஏற்க மாட்டேன்.

ஈ.வெ.ரா: நான் சட்ட நிபுணனல்ல. சாட்சியங்களைக் காதில் கேட்டேன். பார்த்தேன். பதில் கூறுகிறேன். எனக்கு பதில் கூற உரிமையுண்டு என்றால் ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் தள்ளிவிடுங்கள். நான் வழக்கிற்குச் சம்பந்தப்பட்டவைகளையே கூறுகின்றேன்.

பின்னர் பெரியார் தமது நீண்ட வாக்கு மூலத்தைப் படித்து நீதிபதியிடம் கொடுத்தார். படிக்கும்போது நடுவில் நீதிபதி சரி சரி யெனத் தலையை ஆட்டிக்கொண்டே இருந்தார்.

பின்னர் கிரவுன் பிராசிக்கூட்டர் எழுந்து தங்களுக்கு இவ் வழக்கில் தண்டனையளிக்க வசதியாயிருக்கும் பொருட்டு எதிரியின் பேச்சுகளில் ஆட்சேபகரமானவற்றை சிகப்பு மையினால் மார்க் செய்கிறேன் என்று கூறி, மார்க் செய்து அப்பகுதிகளைக் கோர்ட்டில் வாசித்துக் காண்பித்தார்.

அதன் பின் நீதிபதி குற்றப்பத்திரிகை வாசித்தார்.

தீர்ப்புக்கூற ஒத்தி வைப்பு

பெரியார் தான் குற்றவாளியல்லவென்றார்.

மணி 1-30 ஆனமையால் தீர்ப்புக் கூற வழக்கை மாலை 2 மணிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.

வழக்கைக் கவனிக்க வந்திருந்த முக்கிய பெரியார்கள் ஸர்.எ.டி. பன்னீர்செல்வம், ஈ.வெ. கிருஷ்ணசாமி, கி.ஆ.பெ. விசுவநாதம், டி. சுந்தரராவ் நாயுடு பி.ஏ.பி.எல்., டி. ஷண்முகம் பிள்ளை, பாரிஸ்டர் கே.சி. சுப்பிரமணியம் செட்டியார், எம். தாமோதரம் நாயுடு பி.எ.பி.எல்., ஜஸ்டிஸ் ஆசிரியர் டி.எ.வி. நாதன், சண்டே அப்சர்வர் ஆசிரியர் பி. பாலசுப்பிரமணியம், டி.ஆர். கோதண்டராம முதலியார், சாமி அருணகிரிநாதர், கடலூர் தெய்வசிகாமணி முதலியார், சேலம் சித்தையன், சர்வாதிகாரி எஸ். சம்பந்தம், எர்னஸ்ட் காவேரி பாக்கம் சம்பந்தம் முதலிய பல பெரியார்களாகும்.

தண்டனை

சரியாக மாலை 3-25 மணிக்கு நீதிபதி வந்து தீர்ப்பை வாசித்தார்.

இரண்டு பேச்சுகளும் 2 குற்றங்களாகின்றன. ஒரு குற்றத்திற்கு 1 வருஷம் கடுங்காவலும் 1000 ரூபாய் அபராதமும் அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவலும் விதிக்கிறேன்” என்றார். ஆக இரண்டு குற்றங்கட்கு 2 வருடம் 2000 ரூபாய் அபராதம் அல்லது மேலும் 1 வருஷம் ஆக 3 வருஷம் கடுங்காவல் தண்டனையாகும்.

இரண்டு தண்டனைகளையும் ஒன்றாக அனுபவிக்க வேண்டுமெனவும் நீதிபதி கூறினார்.

பெரியார் அபராதம் கட்ட மறுத்து 3 வருஷக் கடுங்காவல் தண்டனையைப் பெரு மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

ஸர். பன்னீர்செல்வம் கண்ணீர் 

தண்டனை பெற்ற பெரியாரை ஸர். எ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் கோர்ட்டிலேயே கட்டித் தழுவிக் கண்ணீர் விட்டார்.

பெரியார் அவர்கள் தான் இனி ஒரு கைதி (Prisoner) என சிரித்துக்கொண்டே கூறினார்கள்.

பின்னர் கோர்ட்டிற்கு வந்திருந்த எல்லா பெரியார்களும் வக்கீல்களும் தோழர்களும் பெரியார் ஈ.வெ.ரா. பாதத்தைத் தொட்டு இரு கண்களிலும் ஒற்றிக்கொண்டு வணக்கம் தெரிவித்தனர்.

சிறைக்குப் புறப்பாடு

காலையிலேயே பெரியார் படுக்கை பெட்டியுடன் வந்திருந்தார். அவைகளை எடுத்துக்கொண்டு மாலை 3-45 மணிக்கு “மோட்டார் வேனில்” ஏறும்போது வெளியே ஆவலாகக் காத்து நின்றிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் “பெரியார் வாழ்க” என்று ஆரவாரித்துக் கரகோஷம் செய்தனர். பெரியாருக்கு மாலைகளிடப்பட்டன. பெரியார் “ஈ.வெ.ரா. வாழ்க” என்ற வானலாவிய ஒலியினிடை பெரியார் ஏறியிருந்த கார்புகுந்துசென்றது. வழக்கைக் கவனிக்க காலை 10 மணிக்கு வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மாலை 4 – மணிக்கு வழக்கு முடியும் வரை மத்தியானம் சாப்பிடக்கூடப் போகாமல் காத்து நின்றனர். பெரியார் தண்டிக்கப்பட்டார் என்ற செய்தி கேட்டவுடன் மக்களிடையே ஏற்பட்ட உணர்ச்சி கரை கொள்ளாததாயிற்று.

சென்னை நகரத்தார் துயரம்

இச் செய்தியைக் கேட்டு சென்னைத் தமிழர்களனைவரும் எல்லையில்லாத் துயரமடைகின்றனர். இச் செய்தி சிறிது நேரத்திற்கெல்லாம் காட்டுத்தீபோல் நகரெங்கும் பரவிவிட்டது. வழக்கைக் கவனிக்க ஏராளமான பார்ப்பன வக்கீல்களும் கோர்ட்டிற்கு வந்திருந்தனர்.

பெரியார் வாக்குமூலம்

பெரியார் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-

நான் சம்மந்தப்பட்டிருக்கும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியானது காங்கரசிற்கு விரோதமானது என்றும், காங்கரஸ் கட்சியினரைக் கவிழ்ப்பதற்காக என்றும், பார்ப்பன துவேஷம் கொண்டதென்றும் கனம் முதல் மந்திரியாரே சட்டசபையிலும் பொதுக் கூட்டங்களிலும் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் கோர்ட்டு காங்கரஸ் மந்திரிகள் நிர்வாகத்திற்கு உட்பட்டது.

அடக்குமுறைக் காலத்து நியாயமேது?

தாங்களும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவை தவிர இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒழிக்கவேண்டுமென்பதில் காங்கரஸ் மந்திரிகள் அதி தீவிர உணர்ச்சி கொண்டிருக்கிறார்கள். அது விஷயத்தில் நியாயம் அநியாயம் பார்க்கவேண்டியதில்லை என்றும், கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்து உபயோகித்து ஒழித்தாக வேண்டும் என்றும், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைத் திடீரென்று வந்து புகுந்த திருடர்கட்கு ஒப்பிட்டு கனம் முதல் மந்திரியார் கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். எனவே இந்தி எதிர்ப்பு விஷயமாய் மந்திரிகள் எடுத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் அடக்கு முறையே என்பது எனது கருத்து. அடக்குமுறை காலத்தில் இம்மாதிரி கோர்ட்டுகளில் நியாயம் எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்.

ஆதலால் இந்தக் கோர்ட்டு நியாயத்தில் இந்த வழக்கில் எனக்கு நம்பிக்கையில்லை. இன்று நடக்கும் வழக்கு விசாரணையில் நான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று முடிவு செய்து கொண்டேன்.

பொது மக்களுக்கு அறிக்கை

பொது மக்கள் தவறுதலாய்க் கருதாமல் இருப்பதற்கும் தப்பு வழியில் செல்லாமலிருப்பதற்கும், நான் நிரபராதி என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவும் ஒரு அறிக்கை எழுத்து மூலமாகச் சமர்ப்பிக்கிறேன். அதனை வழக்கு ஆதாரங்களோடு சேர்த்துக் கொள்ள வேண்டிக்கொள்ளுகிறேன்.

நான் இந்த வழக்கு விசாரணைச் சடங்கில் கலந்துகொள்ளவில்லை. வக்கீல் வைக்கவில்லை.

சர்க்கார் கட்சி வக்கீல் ஆங்கிலத்தில் பேசினார். நான் எட்டி இருந்ததனாலும் ஆங்கிலம் சரியாய்த் தெரியாததனாலும் அவர்கள் பேசினதும் சில சாòகள் சொன்னதும் சரியாய்ப் புரியவில்லை. ஆனால் பின்னால் நடந்த சங்கதிகளைக் கவனித்தேன். ஒரு அளவுக்குப் புரிந்தது.

இவற்றுள் பிராதில், முதலாவதாக 21-4-38-ல் கவர்ன்மெண்ட்டார் இந்தி கட்டாயமாய்ப் படிப்பிப்பதை அமலுக்குக் கொண்டுவர உத்தரவு பிறப்புவித்தார்கள் என்றும், அதற்குப் பிறகு சில சுயநலக்காரர்களால் தாங்களே இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிப் பிரசாரகர் என்று பெயர் சூட்டிக்கொண்டு கனம் முதல் மந்திரியாரை நிர்ப்பந்தப்படுத்தி அந்த உத்தரவைக் கேன்சல் செய்யச் செய்ய வேண்டுமென்கிற நோக்கத்தோடு கனம் மந்திரியாரின் உரிமையைத் தடைப்படுத்தினார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது.

இந்தி எதிர்ப்புத் தோன்றியது எப்போது?

இது முழுவதும் உண்மைக்கு நேர் மாறானதாகும். மந்திரியார் ஜி.ஓ. 21-4-38-ல். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும், கிளர்ச்சி ஸ்தாபனமும் அதற்கு முன்பே ஏற்பட்டதாகும். 1930-ல் நடந்த நன்னிலம் சுயமரியாதை மகாநாட்டில் இந்தி புகுத்தும் நோக்கத்தையும், இந்தி புகுத்துவதால் ஏற்படும் கெடுதியையும் பற்றி இன்றைய காங்கரஸ் விளம்பர மந்திரியார் கனம் ராமநாதன் அவர்களே தீர்மானம் கொண்டு வந்து கண்டித்துப் பேசி அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்தியை எதிர்ப்போர்

தமிழ்ப் பண்டிதரும், தமிழ்ப் பாஷை, கலைகள் ஆகியவற்றில் நிபுணருமான சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள் இந்திப் பொதுமொழியாகுமா? என்று கண்டித்து எழுதியிருக்கிறார்கள்.

அண்ணாமலை சர்வகலாசாலைப் புரபசர் எஸ். சோமசுந்தர பாரதிப் பெரியார் அவர்களும் 1937-ம் வருஷத்திலேயே இந்தியைக் கண்டித்து கனம் முதல் மந்திரியாருக்குப் பகிரங்கக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

1937 டிசம்பரில் மாகாணத் தமிழர் மகாநாடு கூடி சென்னை மாகாண கவர்னர் பிரபுகளிடம் தூது சென்று இந்திக் கட்டாயத்தை மாற்றும்படிக் கேட்டுக்கொள்ளத் தீர்மானம் செய்யப்பட்டிருக்கிறது. அதில் பல பெரியார்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதன் பின் 1938 பிப்ரவரி வாக்கில் காஞ்சிபுரத்தில் ஒரு தமிழர் மகாநாடு சர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்கள் தலைமையில் கூடி காலம் சென்ற சர்.எம். கிருஷ்ணன் நாயரால் திறக்கப்பட்டுப் பல பெரியார்கள் முன்னிலையில் பல தீர்மானங்கள் இந்தியைக் கட்டாய பாடமாய்ப் புகுத்துவதைக் கண்டித்துத் தீர்மானங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

ஆதலால் கனம் முதல் மந்திரியாருடையவோ, சர்க்காருடையவோ ஜி.ஓ.வுக்குப் பிறகு சுயநலக்காரர்கள் கூடிக் கிளர்ச்சி செய்கிறார்கள் என்பது தவறு.

எதிர்ப்பின் நோக்கம்

கனம் முதல் மந்திரியார் இந்த வேண்டு கோள்களையும் பொதுஜன அபிலாஷைகளையும் லôயம் செய்யாமல் இவற்றை அலòயப் படுத்துவதற்குச் சாக்காக “இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி (அவரது) நண்பர் ஒரு இராமசாமி நாயக்கர் தான் செய்கிறாரே தவிர இது பொது ஜனக்கிளர்ச்சி அல்ல” என்று சட்டசபையிலேயே சொல்லி விட்டதால் பொது ஜனங்கள், இதைப் பொது ஜனங்களது கிளர்ச்சியென்று கனம் முதல் மந்திரியாரும், கவர்னர் பிரபுவும் அறிய வேண்டும் என்பதற்காகவே, இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒரு டெமான்ஸ்ட்ரேஷன் (Demonstration) ஆகச் செய்யப்பட்டு வருகிறதே ஒழிய, அதில் எவ்வித நிர்ப்பந்தப்படுத்தும் கருத்தும் இல்லை என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

காரியக் கமிட்டித் தீர்மானம்

அன்றியும் இந்தியைப் பொது பாஷையாக்கக் கூடாதென்றும், பள்ளியில் வைப்பது முதலிய இந்திப் பிரசாரம் செய்வது வகுப்புக் கலவரத்தை உண்டாக்குகின்றதென்றும், காங்கரஸ் கூட்ட நடவடிக்கைகளுக்கு இந்தி தெரிந்து கொள்ளும்படிச் செய்தால் போதுமென்றும், காங்கரஸ் காரியக்கமிட்டி தீர்மானித்திருக்கிறது.

சென்னை மாகாணத்தில் நடக்கும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி இந்தி மீதுள்ள அபிப்பிராய பேதத்தால் நடைபெறுவதாகவும் அதை விளக்கிக் காட்டிச் சரிசெய்யும்படிக் காங்கரஸ் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களைக் கேட்டுக்கொண்டுமிருக்கிறது. ஆகவே இந்தக் கிளர்ச்சி காங்கரஸ் துவேஷத்தால் செய்யப்படுவதும் அல்ல என்பதற்கு இதுவே ஆதாரம் போதுமென நினைக்கிறேன்.

1938 ஜüன் மாதம் முதல் தேதி கனம் முதல் மந்திரியார் வீட்டிற்கு முன் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் நடவடிக்கைகளுக்கும் எனக்குமாவது இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி ஸ்தாபனத்திற்காவது யாதொரு சம்பந்தமுமில்லை.

எதிர்ப்பாளர் கொள்கை

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி ஸ்தாபனத்தின் கொள்கைகளில் சட்டம் மீறக் கூடாதென்பது முக்கிய காரியமாகும்.

முதன் மந்திரியார் வீட்டிற்கு முன் தொண்டர்கள் எந்தக் காரியத்தை முன்னிட்டும் போகக்கூடாதென்று தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டு அறிக்கை விடுத்திருக்கிறேன். அந்த வேண்டுகோள் பொது ஜனங்களாலும், தொண்டர்களாலும் மதிக்கப்பட்டு, அது முதல் முதன் மந்திரியார் வீட்டின் முன் தொண்டர்கள் செல்லவில்லை. அதற்குப் பிறகு, பள்ளிக்கூடத்திற்கு முன் நடந்ததாகச் சொல்லப்படும் காரியங்களும் சரியல்ல. அங்கு தொண்டர்கள் செல்வது உபாத்தியாயர்களையும், பிள்ளைகளையும் தடுப்பதற்காக வல்ல. இந்தியைப் பொதுஜனங்கள் ஏற்கவில்லை என்பதைக் காட்டுவதற்காகவேயாகும். எந்த உபாத்தியாயரும் எந்த பிள்ளைகளும் தங்களைத் தடுத்ததாகவோ அல்லது இந்தக் காரியத்தால் தங்கட்குப் பள்ளிக் கூடத்திற்குப் போக முடியாமல் போயிற்றென்றோ, இனியும் உபாத்தியாயரோ மாணாக்கரோ இதனால் ஒரு நாளாவது “ஆப்சென்ட்” ஆனதாகவோ சொல்லப்படவோயில்லை; ருசுக்களோ இல்லை. பிராதில் குறிப்பிட்ட விஷயங்கள் சரியல்ல. சட்டத்திற் கண்டபடி, குற்றமாவதற்கு ஜோடித்தவைகளேயாகும். நான் பேசியிருப்பதாய்ச் சொல்லப்படும் 2 பேச்சுகளிலும் சட்டம் மீறும்படி நான் யாரையும் தூண்டவேண்டுமென்றோ, தூண்டும்படியான கருத்துக் கொண்டோ பேசவில்லை. அந்தக் கருத்துகள் கொண்ட வாக்கியம் பேசியதாகக் குறிப்பிட்டிருப்பது உண்மையல்ல. ஏனெனில் நான் சம்பந்தப்பட்ட சுயமரியாதை இயக்கமும், தமிழரியக்கமும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும், ஜஸ்டிஸ் இயக்கமும் எதுவும் சட்டப்படி சட்டத்திற்கு உட்பட்டுக் கிளர்ச்சிசெய்ய வேண்டும் என்கிற கொள்கை கொண்டதேயாகும். இதுவரை அக்கொள்கை மாற்றப்படவேயில்லை. என்னுடைய பேச்சு பூராவையும் படித்துப் பார்த்தால் இது விளங்கும்.

மற்றும் அப்பேச்சுகளில் சட்டம் மீறக்கூடாது, யாருக்கும் எவ்வித தடையும், சங்கடமும் மனநோவும் உண்டாக்கக் கூடாது. துவேஷ உணர்ச்சி கட்டுப்பாட்டிற்கு விரோதமான உணர்ச்சி கூடாதென்றெல்லாம் வியக்தமாய்ப் பேசியிருப்பதை அதில் காணலாம்.

பெண்கள் மகாநாட்டுத் தீர்மானம்

என் பேச்சிற்குப் பிறகே பெண்கள் பள்ளிக்கு முன் போய் நின்றார்கள் என்று சொல்வதும் சரியல்ல. நான் பேசுவதற்கு முன்பேயே மகாநாட்டில் தீர்மானம் ஆகியிருக்கிறது. அதையும் என்பேச்சிலேயே காணலாம்.

பெண்களும் எவ்வித தடங்கலான காரியம் செய்தார்களென்றும் எவ்விதக் குற்றமான காரியங்கள் செய்தார்களென்றும் எப்போதும் ருசு செய்யப்படவில்லை. ஏதாவது ஒரு கிளர்ச்சி நடக்க வேண்டுமென்றால் ஒரு முறை கொண்டுதான் நடத்த வேண்டும். அம்முறையால் குற்றம், தடை, பலாத்காரம், துவேஷம் உண்டாகும்படி இருக்கக்கூடாது என்பதில் நான் எப்போதும் கவலை கொண்டிருக்கிறேன்.

குற்றச்சாட்டு சரியானதல்ல

நான் சம்பந்தப்பட்ட எந்த ஸ்தாபனத்திலும் இவ்வித தப்பான கொள்கைகட்கு இடம் கொடுக்கவே யில்லை. காங்கரஸ்காரர்கள், காங்கரஸ் மந்திரிகள் ஆதிக்கத்தில் உள்ள காலத்தில் பல தடையான காரியங்கள் அதாவது கிராம்பு மறியல் முதற்கொண்டு பிரசாரக் கூட்டங்கள் நடைபெறாமல் தடை, குழப்பம், பலாத்காரம் முதலியன நடத்துவது வரையில் நடந்த காரியங்கள் குற்றமாகக் கருதப்படவில்லை. காங்கரஸ் சர்க்காரும் அவை கூடாதென்று உத்தரவு போட்டதில்லை. தவிரவும் என்மீது சுமத்தப்பட்ட இந்த சட்டப்பிரிவும் கொஞ்சமும் சரியானதல்ல. இது ஏதாவது ஒரு குறிப்பிட்ட வியாபாரம் செய்கை ஆகியவைகளைத் தடுப்பதற்கு என்பதும் அதையும் பொது மக்களும் குறிப்பாகக் காங்கரஸ்காரர்களும் வெறுத்துக் குறைகூறிக் கண்டித்த தென்பதும் பொது மக்கள் அறிந்ததேயாகும். அப்படியிருக்க அந்தச் சட்டத்தை ஒரு நியாயமான உரிமையுள்ள காரியத்தைச் செய்ய தடுப்பதற்கு உபயோகப்படுத்துவது அந்தச் சட்டத்தின் தத்துவத்திற்கே முரண்பட்டதாகும்.

சாட்சி சுயமரியாதை இயக்கம் பார்ப்பனருக்கு விரோதமான உணர்ச்சி ஊட்டக் கூடியது என்று சொன்னார். தோழர் வக்கீலும் அந்த உணர்ச்சி இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியிலுமிருப்பதாகக் கருதும்படிச் செய்யப் பிரயத்தனப்பட்டார். அந்தக் கருத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் என் இரண்டாவது பேச்சாகக் கோர்ட்டில் ஒப்புவிக்கப்பட்ட சர்க்கார் ஆதாரத்திலேயே இருக்கிறது.

அறிக்கை வெளியிட்டதின் நோக்கம்

ஆகவே, இந்த விஷயங்களைத் தங்கள் கவனத்திற்கு என்றே நான் சமர்ப்பிக்கவில்லை. தங்களால் காங்கரஸ் மந்திரிகள் இடத்திற்கு விரோதமாக எதுவும் செய்ய முடியாது. பொது ஜனங்களுக்கு விஷயம் தெரியட்டும் என்றும், நான் சட்டம் மீறினேனென்றும் மற்றவர்கள் கருதி அதைச் செய்யத் துணிந்துவிடக் கூடாது என்பதற்கும் இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும் என்னுடைய எவ்வித முயற்சியும் செய்கையும் இன்று வரையிலும் கூடச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டதென்றும், துவேஷம், குரோதம், பலாத்காரம் சிறிதும் சம்மதப்பட்டதல்ல வென்றும் தெரிவிப்பதற்காகவே யாகும். ஆகவே, கோர்ட்டாரவர்கள் தாங்கள் திருப்தியடையும் வண்ணம் அல்லது மந்திரிமார்கள் திருப்தியடையும் வண்ணம் எவ்வளவு அதிக தண்டனையைக் கொடுக்க முடியுமோ அவைகளையும் பழிவாங்கும் உணர்ச்சி திருப்தியடையும் வரைக்கும் எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க உண்டோ அதையும் கொடுத்து இவ்வழக்கு விசாரணை நாடகத்தை முடித்து விடும்படி வணக்கமாகக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

லட்ச்சியத்திற்கு விலை

மற்றும் வழக்கை வக்கீல் முடித்துவிட்ட பிறகும் சட்டப்படிக் குற்றம் ஏற்படத் தகுந்த மாதிரி, வக்கீல் சாட்சியை மிரட்டி வாக்குமூலம் வாங்கி சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்ற தென்பதாகவும் எழுதிக் கொடுத்தார்.

எவ்வளவு நியாயமான லட்சியத்தை அடைய வேண்டுமானாலும் அதற்காகக் கஷ்ட நஷ்டங்களடைதல் என்னும் விலை கொடுக்க வேண்டுமாதலால் அவ்வாறு வேண்டிக் கொள்கிறேன்.

(ஒப்பம்)

ஈ.வெ. ராமசாமி.

குடி அரசு – நீதிமன்றத்தில் அறிக்கை – 11.12.1938

ஹிந்தியும் முஸ்லிம்களும் – 26.06.1938

ஹிந்தியும் முஸ்லிம்களும்


ஹிந்தி எதிர்ப்பு கிளர்ச்சியில் முஸ்லிம்கள் சம்மந்தம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று காங்கரஸ் பத்திரிகைகள் முஸ்லிம்களுக்கு உபதேசம் செய்யப் புறப்பட்டு விட்டன. இந்த பத்திரிகைகளுக்கு திடீரென்று இந்த ஞானம் உதயமானது நமக்கு ஆச்சரியத்தை விளைவிக்கவில்லை.

ஏனெனில் காங்கரஸ் பார்ப்பன ஆதிக்கமுள்ள ஸ்தாபனம் என்பதும் இந்நாட்டில் பார்ப்பனர்களுக்கு பார்ப்பனர் அல்லாத மக்கள் மீது இவ்வளவு ஆதிக்கம் அதாவது பார்ப்பனர்கள் 100 -க்கு 3 பேர்களாயிருந்தும் பாக்கி உள்ள மக்களை விட தாங்கள் பெரிய ஜாதி என்றும், மற்ற ஜாதி மக்கள் மோக்ஷத்திற்கு போவதற்குத் தாங்களே தான் வழிகாட்டிகள் என்றும், தங்கள் மூலமே தான் எவரும் மோஷத்திற்குப் போகமுடியும் என்றும் மற்றும் எவன் எப்படிப்பட்ட பாதகமான பாவகாரியங்களைச் செய்தாலும் தங்கள் மூலமாக மன்னிப்புக் கேட்டு கொண்டால்தான் மன்னிக்கப்படும் என்றும் சொல்லிக் கொண்டு – உலக மக்கள் பாவத்தை அகலச் செய்ய கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்று உரிமை பாராட்டிக் கொண்டு சரீரத்தால் பாடுபடாமல் வயிறு வளர்த்துக் கொண்டிருப்பதற்கு காரணம் தாங்கள் தவிர மற்ற மக்களை ஆயிரக்கணக்கான பிரிவுகளாகவும், நூற்றுக்கணக்கான உயர்வு, தாழ்வு படிகளாகவும் பிரித்து வைத்து அவற்றை வெகு பத்திரமாகக் காப்பாற்றி வருவதையே மத தருமமாகக் கொண்டு அதைப் பலப்படுத்தி பரிபாலிப்பதே கடவுள் தன்மையாக பிரசாரம் செய்து வருவதனால் அவர்களுக்கு மற்றவர்கள் மீது சுலபத்தில் ஆதிக்கம் செலுத்த முடிகிறது. இதை ஒழிக்க வேண்டுமென்று பாடுபடுபவர்களில் முன்னணியில் நிற்பவர்கள் சுயமரியாதைக்காரர்களாய் இருப்பதால் பார்ப்பனர்களுக்கும் அவர்கள் அடிமைகளான பார்ப்பனரல்லாத சில காங்கரஸ்காரர்களுக்கும் சுயமரியாதைக்காரர்கள் “ராட்சதர்”களாக “அசுரர்”களாக “அரக்கர்”களாக காணப்படுகிறார்கள். அதனாலேதான், சுயமரியாதைக்காரர்களோடு, மற்ற யாராவது கிறிஸ்தவர்களோ, முஸ்லிம்களோ, ஆதி திராவிடர்களோ சேருகிறார்கள் என்றால் பார்ப்பனர்களுக்கும் அவர்களது அடிமைகளுக்கும் ஆத்திரம் பொங்கி அறிவில்லாமல் மானமில்லாமல் உளறி தங்களின் முட்டாள் தனத்தையும் அயோக்கியத் தனத்தையும் இழி பிறப்பையும் காட்டிக் கொள்ளுவதில் ஆச்சரியமில்லை.

சு.ம. காரர் ஹிந்தியை எதிர்க்கக் காரணம்:

சுயமரியாதைக் காரர்களும் ஹிந்தியை எதிர்க்கிறார்கள் என்பது இன்று உலகறிந்த விஷயம். அதை அவர்கள் மறைக்கவில்லை. அவர்கள் ஹிந்தியை எதிர்ப்பதற்கு முக்கிய காரணம் என்னவெனில் ஆங்கிலப் படிப்பினாலும் சுயமரியாதைக்காரர்கள் பிரசாரத்தினாலும் ஆடிப்போய் நெக்குவிட்ட பார்ப்பனீயத்தை மறுபடியும் பலப்படுத்தி நிலைநிறுத்தி பார்ப்பனர்கள் “ராம ராஜ்ய” காலத்து பூதேவர்கள் தன்மையை அடைவதற்காக வருணாச்சிரம முறையை பார்ப்பனரல்லாத சிறுவர்களுக்குள் புகுத்தச் செய்யப்படும் சூழ்ச்சி என்றும் மற்றும் பார்ப்பனரல்லாத குழந்தைகள் பொது-ஞானக்- கல்வியில் முன்னேற்றமடையாமல் “சூத்திரத்” தொழிலுக்கே அவர்கள் லாயக்காக வேண்டும் என்பதற்காகவே பார்ப்பன மந்திரியால் கட்டாயமாகப் புகுத்தப்படுகிறது என்றும் உண்மையாய் மனதாலும் வாக்காலும் மெய்யாலும் உணருவதால்தான் ஹிந்தியை எதிர்க்கிறார்கள்.

இந்தக் கருத்தை முஸ்லிம் சமூக தலைவராகிய தோழர் ஜனாப் ஜின்னா அவர்களும் சொல்லி இருக்கிறார். அதாவது “காங்கரஸ்காரர்கள் பள்ளிக் கூடங்களில் ஹிந்தியை கட்டாயமாகப் புகுத்துவதானது முஸ்லிம் ஆண் பெண் குழந்தைகளுக்கு ஆரிய மததுவத்தை கட்டாயமாகப் புகுத்துவதாகும்” என்று சொல்லி இருக்கிறார்.

கிறிஸ்தவர், ஆதி திராவிடர் எதிர்க்க வில்லையா?

அதுபோலவே ஆதிதிராவிட சமூகத்தலைவர்களான தோழர்கள் திவான்பகதூர் ஆர். சீனிவாசன் எம்.எல். சி., மாஜி மந்திரி ராவ்பகதூர் எம்.சி. ராஜா எம்.எல்.ஏ., ராவ்சாகிப், என்.சிவராஜ் பி.ஏ., பி.எல்., எம்.எல்.ஏ., முதலியவர்களும் “காங்கரஸ்காரர்கள் ஹிந்தியைக் கட்டாயமாகப் புகுத்துவதின் இரகசியம் ஆதி திராவிட குழந்தைகளின் கல்வியை தடுப்பதேயாகும் என்றும் கிறிஸ்தவ சமூகத்தின் தலைவர்களான தோழர்கள் ஜார்ஜ் ஜோசப், சர்.எ.டி. பன்னீர் செல்வம், ரெவரெண்ட் அருள் தங்கையா, ரத்தினசாமி முதலியவர்களும் அது போலவே கட்டாய ஹிந்தியைக் கண்டித்தும் எதிர்த்துப் பேசியும் அதிருப்தி காட்டியும் இருக்கிறார்கள்.

பார்ப்பனர், மடாதிபதிகள் எதிர்க்கவில்லையா?

மற்றபடி பார்ப்பனரல்லாதார்களிலும் காங்கரசில் இருப்பவர்கள் முதற்கொண்டு மற்றும் ஒவ்வொரு கட்சியில் துறையில் இருப்பவர்களும் ஏகோபித்து எதிர்த்து அதிருப்தியைக் காட்டி வருகிறார்கள். பல பார்ப்பன பெரியார்களும் பார்ப்பன பண்டிதர்களும் எதிர்த்துப் பேசித் தங்கள் அதிருப்தியைக் காட்டி வருகிறார்கள். பல மடாதிபதிகளும் சன்யாசிகளும் கூட எதிர்க்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் ஹிந்தி எதிர்ப்புக்காரர்கள் சுயமரியாதைக் காரர்கள் ஆனதால் அவர்களுடன் முஸ்லிம்கள் சேரக்கூடாது என்றும், மற்றவர்கள் சேரக்கூடாது என்றும் சில பார்ப்பனக் கூலிப் பத்திரிக்கைகள் எழுதுவதின் அருத்தம் என்ன? என்பதும் அதற்கு யோக்கியமான காரணங்கள் காட்டாமல் சு.ம. காரர்கள் சாமி இல்லை மதம் இல்லை என்று சொல்லுகிறவர்களாச்சுதே அவர்களுடன் சேரலாமா என்றெல்லாம் அயோக்கியத்தனமான காரணம் சொல்லுவதின் கருத்து என்ன நமக்கு விளங்கவில்லை. இந்துக்களை பல ஜாதியாய்ப் பிரித்து சின்னா பின்னமாக்கியது போல் முஸ்லிம்களையும் இந்துக்களுடன் சேராமல் பிரித்து தனிக் கூட்டமாக ஆக்கி அதிலும் சில கூலிகளைப் பிடித்து கலகமுண்டாக்கி கட்சி பிரித்து சிதறடித்து முஸ்லிம்களையும் ஆதிதிராவிடர்கள் போல் – மிலேச்ச ஜாதியாய் நடத்தலாம் என்கின்ற கருத்து அல்லாமல் வேறு என்ன இருக்க முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை.

நவாப் ஹக்கீம் சாயபு சொன்னதென்ன?

தமிழ்நாட்டில் கொடை வள்ளலாயும் உண்மையிலேயே நூற்றுக்குத் தொண்ணுற்றொன்பது இந்து முஸ்லிம் மக்களின் உள்ளத்தைக் கவர்ந்திருந்த உத்தமரான காலம் சென்ற சொளகார் நவாப் அப்துல் ஹக்கீம் சாயபு அவர்கள் தோழர் பிரதம மந்திரி கனம் ஆச்சாரியார் பேசும் கூட்டத்திலேயே தைரியமாய் எழுந்து “ஆச்சாரியாரை ஹிந்தியை கட்டாயபாடமாக வைக்கக் கூடாது” என்று தியாகராய நகர் கூட்டத்தில் கேட்டுக் கொண்டு இருக்கிறார். இந்த சேதி காங்கரஸ் – பார்ப்பன பத்திரிக்கைகளிலேயே பிரசுரமாகி இருக்கிறது.

மற்றும் தமிழ் நாட்டில் முஸ்லிம் லீக் மாகாண தலைவரான தோழர் ஜமால் மகம்மது சாயபு அவர்கள் திருச்சியில் ஒரு ஆண்டு விழாவில் தலைமை வகித்துப் பேசிய தலைமைப் பிரசங்கத்தில் “ஆச்சாரியார் ஹிந்தியை கட்டாய பாடமாக ஆக்க மாட்டார்” என்று முஸ்லிம்களுக்கு உறுதி கூறினார். இவை தவிர இன்று தமிழ் நாடு முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்து வீர கர்ஜனை புரிந்து வெற்றிக் கொடி நாட்டிவரும் தமிழ் நாட்டு முஸ்லிம் லீக்கின் உண்மையான தலைவரும் செல்வாக்குள்ளவருமான தோழர் பி. கலிபுல்லா சாயபு எம்.ஏ.பி.எல்., எம்.எல்.ஏ., மாஜி மந்திரி அவர்கள் ஹிந்தி எதிர்ப்பைத் தமிழ் நாட்டில் முதல் முதல் ஆரம்பித்தவர் என்பதோடு இன்றும் முஸ்லிம்களைத் தட்டி எழுப்பி ஹிந்தியை இஷ்டப்பாடமாகக் கூட வைக்க இடங் கொடுக்க கூடாது என்று சங்க நாதம் முழக்கி வருவது எவரும் அறியாததல்ல. ஆகவே முஸ்லிம்கள் ஹிந்தியை வெறுக்கிறார்கள் – எதிர்க்கிறார்கள் என்பதற்குக் காங்கரஸ்காரர்கள் இனி யாருடைய அத்தாட்சி வேண்டுமென்கின்றார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.

முஸ்லிம்களுக்குப் புகலிடம் எங்கே?

தமிழ் நாட்டில் காங்கரஸ்காரர் ஆகட்டும் பார்ப்பனர்கள் ஆகட்டும் முஸ்லிம்களின் பிரதிநிதியாக யார் இருக்கிறார்கள் என்று சொல்லட்டுமே பார்ப்போம். தோழர்கள் ஜனாப் உபயதுல்லா சாயபு அவர்களும் ராமாயண சாயபு என்று மறுபேர் வழங்கப்படும் ஜனாப் அல்ஹாஜ் தாவூத்ஷா சாயபுமல்லாமல் வேறு யார் இருக்கிறார்கள் என்பதோடு, இவர்கள் தவிர வேறு எந்த தெரிந்த முஸ்லிம் இருக்கிறார்கள் என்று கேட்கின்றோம். ஆகவே இந்நாட்டு முஸ்லிம்கள் தங்களின் ஏகோபித்த ஹிந்தி எதிர்ப்பைக் காட்டிக்கொள்ள இந்தக் காங்கரஸ் எச்சிலைப் பத்திரிகைகள் வேறு ஏதாவது ஒரு வழி காட்டிவிட்டு சுயமரியாதைக்காரர்களுடனோ அல்லது வேறு ஏதாவது இந்தி எதிர்ப்புக் கட்சியுடனோ சேராதீர்கள் என்று முஸ்லிம்களுக்கு ஞானோபதேசம் செய்ய முன் வந்திருந்தால், அதை ஒரு அளவுக்காவது நாணையமுடையது – யோக்கியமுடையது என்று சொல்லலாம். அப்படிக்கில்லாமல் ஹிந்தி தெய்வீக பாஷை – தேசீய பாஷை – சுயராஜ்யத்துக்கு (ராமராஜ்யத்துக்கு) அவசியமான பாஷை – வெள்ளைக்காரர்கள் இந்தியாவை விட்டு ஓட்டப்பட்டு விட்டால் பிறகு ஆளப்படவேண்டிய – பாஷை – சர்க்கார் உத்தியோகம் வேண்டுமானால் யோக்கியதாம்சம் காட்டப்படவேண்டிய பாஷை- துளசிதாஸ் ராமாயணம் தெரிந்து கொள்ளக் கூடிய பாஷை – சமஸ்கிருத சாஸ்திரங்கள், புராணங்கள் தெரிந்து கொள்ள சவுகரியமான பாஷை – கல்வி பூர்த்தியாகக் கட்டாயமாக படித்தாக வேண்டிய பாஷை – மெஜாரிட்டி ஓட்டில் வெற்றி பெற்று பதவியேற்று சர்க்கார் ஆட்சியில் இருக்கும் ஒருவன் தான் நினைத்தபடி செய்ய முடிகின்றதா இல்லையா என்பதற்கு அறிகுறியாய் பரீøை பார்க்க வைத்திருக்கும் பாஷை – 10, 11, 12 வயதில் 1, 2, 3, வது பாரத்தில் மாத்திரம் படித்து பாஸ் பண்ணாமல் மார்க்கு வாங்காமல் 13வது வயதில் 4வது பாரத்தில் அடியோடு விட்டுவிட வேண்டிய பாஷை – ஹிந்தி கட்டாயமென்பது பேச்சில் தான் கட்டாயமே ஒழிய காரியத்தில் ஒன்றும் கட்டாயமில்லை என்று மழுப்பும் பாஷை – முதலில் ஹிந்தி என்று சொல்லிவிட்டு முஸ்லிம் எதிர்ப்பு வலுத்தவுடன் ஹிந்துஸ்தானி என்று பெயர் கொடுத்து ஏமாற்றும் பாஷை – இந்தியா பூராவுக்கும் ஒரு தேசீய பாஷை வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் உருது எழுத்திலும் இந்துக்கள் சமஸ்திருத எழுத்திலும் படிக்கலாம். அதிலும் இரண்டு பேரும் ஒரே புராணக் கதை பாடத்தின் மூலம்தான் படிக்க வேண்டும் என்று சொல்லும் பாஷை. ஆகையால் இப்படிப்பட்ட பாஷையை கட்டாயமாகப் படிக்க வைத்தே தீருவேன், இதனால் என்ன ஆகிவிட்டாலும் சரி என்று மார்தட்ட ஆரம்பித்தால் முஸ்லிம்களுக்கு போக்கிடம் எங்கு என்று கேட்கின்றோம்.

நாஸ்தீக ராமநாதன் மட்டும் இனிப்பானேன்?

சுயமரியாதைக்காரர்கள் கடவுள் கூடாது மதம் கூடாது என்று சொல்லுகிறார்கள் என்று சிலர் சொல்லுவதாலேயே அவர்களுடன் யாரும் சேரக்கூடாதா என்று கேட்கின்றோம். சுயமரியாதைச் சங்கத்தில் காரியதரிசியாயிருந்து சாமிக்கூடாது மதம் கூடாது என்று பிரசாரம் செய்து வந்தவரும் இன்றும் முழு நாஸ்த்திகராயும் மதமற்றவராயும் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளுவது மாத்திரமல்லாமல் மனித சமூகத்துக்கு ஒழுக்கமும் கட்டுப்பாடும் கூடத் தேவை இல்லை என்கின்ற கொள்கை உடையவராய் இருந்தவரை தங்கள் கட்சியில் சேர்த்து எல்லா சமய சமூகத்தாருக்கும் பொதுவான அரசியலில் மந்திரியாக்கி முழு ஆஸ்த்திகர் என்று சொல்லிக் கொள்ளும் ஆச்சாரியார் தம்மை விளம்பரம் செய்ய விளம்பர அதிகாரம் கொடுத்து தனக்கு முன்னோடும் பிள்ளையாய் செல்லும் இடங்களுக்கெல்லாம் அழைத்துப்போய் முன்னிறுத்தி பின்னின்று வாழ்கின்றாரே இது குற்றமில்லையா என்று கேட்கின்றோம். ஆகவே இப்படிப்பட்டவர்களையெல்லாம் இந்த காங்கரஸ் எச்சிலைப் பத்திரிகைகள் படம் போட்டு, புகழ்ந்து, கவிபாடி அவரது சேதிகளை பிரசுரிக்கின்றனவே இவைகளுக்கு மானமோ ஈன உணர்ச்சியோ, நற்குடிப்பிறப்போ இருக்கின்றனவா என்று கேட்கின்றோம்.

ஜவஹர்லால் ஆஸ்திகரா?

சாமி இல்லை, சத்தியம் இல்லை என்று சொல்லி கோர்ட்டில் சத்தியம் செய்யக்கூட மறுத்த தோழர் ஜவஹர்லால் அவர்களை ஆஸ்திக உருவரும் “தினம் கடவுளுடன் பேசும் பக்த”ருமான தோழர் காந்தியார் (ஆச்சாரியார் கனம் ராமநாதனைப் பாவிப்பது போல்) பாவித்து பயன்படுத்திக் கொண்டிருப்பதோடு அவரை காங்கரசுக்கே தலைவராக்கி தலைமையில் உள்ள காங்கரசில் பல மெளலானாக்கள், மெளல்விகள், பல அஜாத்துக்கள், ஆலி ஜனாப்கள், அல் ஆஜ்ஜúக்கள் தலைவணங்கி பின்பற்றுபவர்களாக இருந்தார்களே இருக்கிறார்களே இதில் ஒன்றும் மானங்கெட்டுப் போகவில்லையா? ஒழுக்கம் கெட்டுப் போகவில்லையா? நாணையம் கெட்டுப் போகவில்லையா? கடவுள் மதபக்தி கெட்டுப் போகவில்லையா என்று கேட்கின்றோம். இன்னும் பல முஸ்லிம் வாலிபர்கள் காங்கரசிலுள்ள பொது உடமை – சமதர்ம நாஸ்திகர்களுக்கு சிஷ்யர்களாக சகாவாக பின்பற்றுபவர்களாக இருக்கிறார்களே இவர்களால் அச்சமூகத்துக்கு ஆபத்து வந்துவிட்டதாக இந்த எச்சிலைப் பத்திரிக்கை எப்போதாவது எடுத்துக் காட்டிற்றா என்று கேட்கின்றோம்.

எனவே இந்த எச்சிலைப் பத்திரிகை முஸ்லிம்களை எவ்வளவு பயித்தியக்காரர்கள் என்று கருதியிருந்தால் இவ்வளவு தைரியமாக முஸ்லிம்களுக்கு ஞானோபதேசம் செய்ய முன் வந்திருக்கும் என்பதை ஒவ்வொரு முஸ்லிம் தோழரும் யோசித்துப் பார்க்க வேண்டுமென்று விரும்புகிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 26.06.1938

Friday, 28 April 2017

நெருக்கடி என்றுமில்லா நெருக்கடி– 15.05.1938

நெருக்கடி என்றுமில்லா நெருக்கடி


நம்நாட்டுப் பார்ப்பனீயமானது “தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து இப்போது மனிதனைக் கடிக்க வந்துவிட்டது” என்பது போல் உத்தியோக வேட்டை ஆடி, பிறகு நம் பிரமுகர்களையும் நமது ஸ்தாபனங்களையும் ஒழிக்க முயற்சியெடுத்து வெற்றி பெற்று பதவியும் ஆதிக்கமும் பெற்றவுடன் இனி என்றென்றும் தமிழ் மக்கள் சமூகமே தலையெடுக்க வொண்ணாதபடி செய்வதற்கு பல வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்த முறைகளை திரை மறைவில் கையாடி வந்து இன்று வெளிப்படையாகவே வெளிவந்து ஹிந்தி என்ற கத்தியுடனும், வார்தா கல்வித்திட்டம் என்ற சூலாயுதத்துடனும் நின்றுகொண்டு தமிழர்களை வெட்டியும் குத்தியும் கொன்று புதைக்க முனைந்து விட்டது.

பார்ப்பனீயப் போராட்டம்:

தமிழ் மக்களில் எவருடைய ஆக்ஷேபணையையும் எப்படிப் பட்டவர்களுடைய கூக்குரலையும், யாருடைய அழுகையையும் லòயம் செய்யாமல் ஒரே அடியாய் “சம்ஹாரம் செய்து விட்டுத்தான் அமருவேன்” என்ற ஆணவத்துடன் அது (பார்ப்பனீயம்) தலைவிரித்தாடுகிறது. தமிழனுக்கு இன்று கதி இல்லை, நாதி இல்லை, நடுத் தெருவில் பெண்டு பிள்ளைகளுடன் இழுத்துப் போட்டு உதை உதை என்று உதைத்தாலும், அடி அடியென்று அடித்தாலும், பெண்டு பிள்ளைகளை நிர்வாணத்துடன் புரட்டிப் புரட்டி மானபங்கப்படுத்தினாலும் ஏன் என்று கேட்க ஆளில்லாமல் போய்விட்டது என்று கருதும்படியான சந்தர்ப்பமும் ஏற்பட்டு விட்டது.

தமிழ்ப் பிரதிநிதிகள் துரோகம்

தமிழன் பிரதிநிதி, தமிழ் நாட்டின் பிரதிநிதி என்று வேஷம் போட்டு வெளிவந்து தமிழ் மக்களை ஏமாற்றி காசு, பணம், பதவி, பட்டம் பெற்று பெரிய மனிதனான மக்களில் பெரும்பாலோர் இன்று தம் சமூகத்தை காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கவும், உயிர் வாழவுமான இழி நிலைக்கு வந்து விட்டார்கள். தாம் தமிழர் தமிழ்மக்கள் சந்ததி என்கின்ற சாக்கை சொல்லி உத்தியோகம் பெற்று பணம் தேடி அதனால் தங்களது பிள்ளைக்கும் குட்டிகளுக்கும் உத்தியோகமும், மேன்மையும் தேடிக்கொண்ட தமிழ் மக்கள் இன்று தமிழ் மக்களுக்கு வந்துள்ள இம் மாபெரும் நெருக்கடியைப் பார்த்துக் கொண்டு அறியாதவர் போல் மாய்மாலம் செய்து எதிரிகளின் கால் பெருவிரலை சூப்பிக்கொண்டு தனது வாழ்வில் சுயநல வேலையில் ஒரு இம்மியளவும் குறைவராமல் பார்த்துக் கொள்ளும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

எதிரிகளுக்கு உதவி:

அரசியல் மன்றங்களுக்கும் மற்றும் பிரதிநிதி ஸ்தாபனங்களுக்கும் தமிழன் பேரால் தமிழ் மக்கள் பிரதிநிதியாய் ஆவதற்குத் தன்னை உண்மைத் தமிழ் மகன் என்று சொல்லிக் கொண்டு தமிழர்களின் வாக்குகளைப் பெற்று பிரதிநிதி ஸ்தானம் அடைந்த தமிழ் மக்கள் இன்று தாம் தமிழ் மக்கள் என்பதை மறந்ததோடு மாத்திரமல்லாமல் தமிழர்களின் எதிரிகளிடம் சரண் புகுந்து அவ்வெதிரிகள் தமிழ் மக்களுக்குச் செய்யும் கொடிய வஞ்சகங்களை அலட்சியமாய்க் கருதி அவர்களுக்கு உதவி செய்து தன் சமூகத்தையே ஒழிக்க கத்தி தீட்டிக் கொடுப்பதான இணையில்லா இழிதொழில் செய்து வயிறு வளர்த்து வாழ வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள் என்றால், தமிழ் மக்கள் இது சமயம் சக்தியற்று நாதி அற்றுக் கிடக்கிறார்கள் என்பதற்கு இதைவிட என்ன எடுத்துக்காட்டு வேண்டும் என்று கேட்கின்றோம்.

மாஜி மந்திரிகள் என்ன செய்கிறார்கள்?

வெளிப்படையாகவே பேச ஆசைப்படுகிறோம். இன்று தமிழ் மக்களுக்கு இந்தியாவிலும், வார்தா கல்வித்திட்டத்தாலும் ஆபத்து இல்லை, கேடில்லை, தமிழன் மனிதத் தன்மையோடு வாழுவதற்கு தடையில்லை என்று எந்த தமிழ் மாஜி மந்திரியாவது கருதுகிறாரா? இல்லையே. எல்லா மாஜி மந்திரிகளும் ஒரு முகமாக இந்தியும் வார்தா கல்வித் திட்டமும் தமிழனுக்கு கேடு என்றும் தமிழன் தன்மானத்துக்கு தடையென்றும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டாய் விட்டது. இந்நிலையில் அந்த மாஜி மந்திரிகள் அக் கொடுமையிலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற என்ன முயற்சி செய்தார்கள்? செய்கிறார்கள்? செய்ய முன் வருகிறார்கள்? என்று கேட்கின்றோம்.

தமிழ் உத்தியோகஸ்தர்கள் செய்வதென்ன?

மற்றொரு சமயம் தனித்தனியாக இவர்களது சதிகளையும் வஞ்சகங்களையும் சுயநல வேட்டைகளையும் எடுத்துக் காட்டுவோம். இனி அடுத்தாப்போல் தமிழன் என்ற காரணத்தால் உத்தியோகம் பெற்று மேற்பதவி அடைந்து பெரிய பட்டம் பெற்ற தமிழனும் இன்று பெரும் பதவியில் இருக்கும் தமிழனும் இந்நெருக்கடிக்கு என்ன உதவி செய்கிறார் என்று ஒவ்வொரு பெரிய (தமிழ்) உத்தியோகஸ்தனையும் பற்றி நினைத்துப் பாருங்கள். அதைப்பற்றியும் பின்னால் எழுதுவோம்.

இன்று இரு சட்டசபையிலும் தமிழனுக்கு பிரதிநிதியாய் பார்ப்பானுக்கு காங்கரசுக்கு எதிர்க்கட்சியில் இருப்பதாய் சொல்லிக் கொள்ளும் தமிழர்களின் யோக்கியதைதான் என்ன? அதையும் பற்றி பின்னால் குறிப்பிடுவோம்.

காங்கரஸ் தமிழர்கள் நிலை என்ன?

“மற்றும் தேசத்துக்கு விடுதலை சம்பாதிக்கும் கட்சி காங்கரஸ்தான்” என்று சொல்லிக் கொண்டு பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு தமிழ் மக்கள் ஸ்தாபனத்தையே சீர் குலையச் செய்ய சம்மதித்து பார்ப்பனர்களை தஞ்சமடைந்து வயிறுவளர்க்கும் தமிழ் மக்கள் தானாகட்டும் தமிழனுக்கு ஏற்பட்ட இந்த மிகமிக நெருக்கடியான சமயத்தில் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். தோழர் டி.ஏ. ராமலிங்க செட்டியார் முதற்கொண்டு ஒவ்வொருவருடைய யோக்கியதையை முதலில் எடுத்துக்கொள்ளுவோம். இவர்கள் தான் என்ன செய்கிறார்கள்? தோழர் செட்டியார் தன்னை தமிழ் மகன் என்றும் தான் தமிழபிமானி என்றும் சொல்லிக்கொண்டு எவ்வளவு பெருமை பெற்றார் என்றெல்லாம் பார்ப்போமானால் தமிழனின் நிர்க்கதி விளங்கவில்லையா என்று கேட்கின்றோம். ஏன் இதை குறிப்பிடுகிறோம். ஏன் நமது பலவீனத்தையும் குறைகளையும் குற்றங்களையும் எடுத்துக்காட்டுகிறோம் என்று சிலர் கருதக்கூடும். ஏனெனில் நம் காலிலேயே நாம் நிற்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதை ஞாபகமூட்டவும் பாமர மக்களும் நம் வீர வாலிபர்களும், நேரடியில் அப்பெரியார்கள், பிரமுகர்கள் என்பவர்களை எதிர்பாராமல் இந் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்பதைத் தெரிவிக்கவுமே இதை எழுதுகிறோம்.

தமிழன் செய்ய வேண்டியதென்ன?

தமிழன் என்கின்ற உண்மை உணர்ச்சி யார் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் ஒவ்வொருவரும் இந்நெருக்கடி தீரத் தங்களால் என்ன செய்யமுடியும் என்பதைப்பற்றி தீவிர யோசனை செய்ய வேண்டும். ஹிந்தியை ஒழிப்பதற்கு மாத்திரமல்ல நாம் செய்யப் போகும் போராட்டம் என்பதையும் தாங்கள் யோசனை செய்வதற்கு முன் மனதிலிருத்திக் கொள்ள வேண்டும். பார்ப்பனீயக் கொடுமையில் இருந்து நாமும், நம் பின் சந்ததிகளும் தப்புவதற்கு ஆக செய்ய வேண்டிய அரிய முயற்சிகளைப் பற்றி யோசிக்கிறோம் என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் கருதி சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்த ஆசைப்படுகிறோம். அப்படி சிந்திக்கும்போது ஒவ்வொரு தமிழ் மகனும் தனது தன்மானத்தையும் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.

பார்ப்பனர் தமிழரை அடிமையாக்குவதெப்படி?

அதாவது 100-க்கு 3 பேராயுள்ள ஒரு சமூகம் அதாவது பார்ப்பன சமூகமோ, ஆரிய சமூகமோ, வைதீக சமூகமோ அல்லது பிச்சையெடுத்து வயிறு வளர்க்கும் புரோகித சமூகமோ எதுவானாலும் சரி அந்தச் சிறு சமூகம் இவ்வளவு பெரிய மாபெரும் சமூகமாகிய பழம் பெரும் குடிகளாகிய தமிழ் மக்களை சமுதாயத்தில், பொருளாதாரத்தில் ஆத்மார்த்தம் என்பதில் இவ்வளவு கீழாக இழிவாக தாழ்மையாக அழுத்தி வைத்து ஆதிக்கம் செலுத்த முடிகின்றது என்பதைச் சிந்திக்க வேண்டும். இக்கூட்டம் 100க்கு மூன்றே எண்ணிக்கை கொண்டதாக இருந்தாலும் இந்த 100க்கு மூன்றும் கெட்டியாகவும் – கட்டுப்பாடாகவும் – தன் சமூக நலனுக்கு உயிரைத் தவிர வேறு எதையும் தியாகம் செய்து பாடுபட வேண்டும் என்கின்ற ஒரே கொள்கையை உண்மையாய் கடைப்பிடித்து கட்டுப்பாடாய் உழைக்கும் சமூகமாய் இருந்து வருவதினாலேயே 100க்கு 97 கொண்ட சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

தமிழன் நிலைமை:

தமிழன் எண்ணிக்கையில் 100க்கு தொண்ணூறாய் இருந்தாலும் என்ன பயன்? அவன் பொருளாதாரத் துறையில் சர்வத்தையும் பார்ப்பானுக்கு அழுது விட்டு “மோக்ஷத்தில் இடம்” தேடிக்கொள்ள கற்பிக்கப்பட்டவனாகி விட்டான். சமுதாயத் துறையில் பார்ப்பானுக்கு தொண்டு செய்து தன்னையே பார்ப்பானுக்கு அற்பணமாக்கி பார்ப்பான் கால் கழுவிய நீரை தீர்த்தமாக உட்கொண்டு அதன் மூலம் தான் தினந்தோறும் செய்யும் “பாவத்துக்கு” மன்னிப்புத் தேடிக் கொள்ள வேண்டியவனாக ஆகிவிட்டான்.

பார்ப்பனர் உயர்வுக்குக் காரணம்

அரசியல் துறையிலும் பார்ப்பானையே தலைவனாக்கி பார்ப்பானுக்கு ஊழியனாக இருந்து பார்ப்பானை தலைமை மந்திரியாக்கி அவன் மூலம் ஆட்சி “விடுதலை” பெற அடிமைத்தொழில் செய்ய வேண்டியவனாக ஆகிவிட்டான். இப்படிப்பட்ட இந்த கேவல நிலையிலும் ஒரு தமிழனுக்கு தோன்றும் எண்ணம் மற்றொரு தமிழனுக்கு பிடிக்காது, ஒரு தமிழன் மேல் நிலையில் இருப்பது மற்றொரு தமிழனுக்கு சகிக்காது. எந்த நிலைமையிலும் ஒருவனுக்கொருவன் ஏறுமாறு நடத்தையை கொண்டவனாக இருக்கிறான். ஆனால் பார்ப்பானோ, ஆரியனோ, புரோகிதனோ அப்படியில்லை. தென்கோடி கன்னியாகுமரியில் உள்ள “ஒரு ஒழுக்கங் கெட்ட” பார்ப்பானுக்கு தன் சமூக பாதுகாப்பு விஷயமாய் மற்ற சமூக மக்களை அடக்கி ஒடுக்கி ஆதிக்கம் செலுத்தும் விஷயமாய் “ஒரு அபிப்பிராயம் தோன்றுமேயானால் அதே சமயத்தில் வடகோடி இமயமலை உச்சியில் இருக்கும் ஒரு “தவசிரேஷ்ட” பார்ப்பானுக்கு அதே அபிப்பிராயம் தோன்றி செயலில் இறங்கி விடுவான். இந்த ஒரு குணமே பார்ப்பனர் எண்ணிக்கையில் உழைப்பில் முறையே எவ்வளவு சிறிய தொகையாகவும் சோம்பேறிகளாகவும் இருந்தாலும் அவர்கள் பாடுபடாமல் மேன்மையான நிலையில் இருந்து கொண்டு மற்ற சமூகங்களின் மீது ஆதிக்கம் செலுத்தவும் மற்ற சமூகங்களை என்றென்றும் தலையெடுக்க வொட்டாமல் செய்து அழுத்தி வைக்கவும் முடிகின்றது.

ஹிந்திப்போர் நோக்கம்:

இதிலிருந்து தமிழ் மக்கள் தப்பவேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டே இந்த ஹிந்திப் போரை நடத்த வேண்டுமேயொழிய கேவலம் ஹிந்தி ஒழிந்தால் மாத்திரம் போதும் என்கின்ற அற்ப ஆசையால் அல்ல என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் உணரவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

ஹிந்திப் போரானது பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க தமிழனின் தன்மானத்தைக் காக்க கிடைத்த ஒரு ஒப்பற்ற ஆயுதம் என்பதாகக் கருதி ஒவ்வொரு தமிழனும் அதில் பங்கு கொண்டு அந்த ஆயுதத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்.

1922-ல் ஆச்சாரியார்

இன்று இந்நாட்டு அரசியல் தலைவராகவும், அரசாங்க முதல் மந்திரியாகவும், சமுதாயத்தில் மேல் ஜாதிக்காரர் என்பவராகவும் இருக்கிற நமது தோழர் கனம் ஆச்சாரியார் அவர்கள் ஒரு காலத்தில் அதாவது 1922ம் வருஷத்தில் திருப்பூரிலும், தர்மபுரியிலும் சொன்ன சில அகம்பாவமான வார்த்தைகளை இன்று தமிழ் மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறோம். (இவை முன்னமும் இரண்டொரு சமயம் எடுத்துக் காட்டிய விஷயங்களேயாகும்.)

அதாவது 1922-ல் திருப்பூர் தமிழ்நாடு மாகாண மகாநாட்டில் கோவில் பிரவேச சம்மந்தமாக வந்த தீர்மான விவாத விஷயமாகவும் தோழர் வரதராஜúலு நாயுடு அவர்கள் தலைமையில் நடத்த தர்மபுரி தாலூகா அரசியல் மகாநாட்டில் கோவில் பிரவேச விஷயமாய் வந்த தீர்மான சம்மந்தமாகவும் நடந்த வாதப்பிரதி வாதங்களில் பார்ப்பனீயத்தைத் தாக்கிப் பேசிய விஷயங்களைப் பற்றி அங்கேயே பின்னால் சாவகாசமாக நடந்த சம்பாஷணைகளின் போது ஆச்சாரியார் அவர்கள் சொன்ன வார்த்தைகளை ஞாபகமிருக்கும்வரை அப்படியே எடுத்துக்காட்ட ஆசைப்படுகிறோம். அதாவது “பார்ப்பன ஆதிக்கம் நீங்கள் கருதுகிறபடி அவ்வளவு சுலபத்தில் ஒழிக்கக்கூடியதல்ல. அதை ஒழிக்க சரித்திர காலங்களில் புத்தரால் ஒரு கை பார்த்தாய்விட்டது, புராண காலங்களில் மகாவலிமை பெற்ற பல அரசர்களாலும் ஒரு கை பார்த்தாய்விட்டது. இவ்வளவையும் சமாளித்துக்கொண்டு நீங்கள் ஒழிக்க கருதும் பார்ப்பன ஆதிக்கம் இன்று உயிர் வாழ்கின்றது. அப்படிப்பட்டதை நீங்கள் ஒழிக்க வேண்டுமென்று கருதினால் அது ஆகக்கூடிய காரியமா” என சொன்னதோடு “அப்படி பார்ப்பனராதிக்கத்தை அழிக்கும் வேலையில் ஈடுபடுகிறவர்கள் தங்களைத்தான் ஒழித்துக் கொள்வார்கள்” என்றும் சொன்னார். இவ்வளவு வலிமையுடன் அவர் பேசிய காரணம் பார்ப்பன சூழ்ச்சிக்கு இருக்கும் சக்தியையும் (தமிழ் மக்களுக்குள் இருக்கும் தன்மானமற்ற தன்மையையும்) தமிழ் மக்களுக்கு மதத்தின் பேரால் பார்ப்பனீயம் ஊட்டி இருக்கும் அடிமைத் தன்மையையும் நன்றாய் உணர்ந்து பார்த்துக் கூறியதேயாகும்.

தமிழர் விடுதலை பெற வேண்டுமானால்?

இந்த ஹிந்தி எதிர்ப்பின் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற வேண்டுமானால் அவன் சரீரத்தில் ஓடும் பார்ப்பன மத உணர்ச்சி ரத்தம் அவ்வளவும் வெளியாக்கப்பட்டு புதிய சுதந்திர அறிவு ரத்தம் பாய்ச்சப்பட்டு ஆகவேண்டும்.

ஏனெனில் பார்ப்பனீயம் இன்று ஹிந்தியை தமிழ் மக்களுக்குள் கட்டாயமாக புகுத்த வேண்டும் என்கின்ற மூர்க்கப் பிடிவாதத்தைக் கொண்டிருப்பதின் உண்மைக் கருத்து என்ன வென்றால் அரசியலுக்கு அல்ல, பொருளியலுக்காக வல்ல அல்லது பார்ப்பனர்களுக்கு வேலையில்லாத திண்டாட்டத்தை ஒழிப்பதற்கு என்பதற்காக அல்ல இவைகளுக்காக என்று சொல்லுவதும் நம்மை கருதும்படி செய்வதும் நம்மை ஏமாறச் செய்வதற்காகவே யாகும்.

ஹிந்தி புரட்டின் அந்தரங்க நோக்கம்

மற்றபடி உண்மையான காரணம் என்னவென்றால் இன்று தமிழ் மக்கள் பெரும்பாலோருக்குள் ஏற்பட்ட சுயமரியாதை உணர்ச்சியால் ஆட்டம் கொடுத்து இருக்கும் பார்ப்பனீய மத உணர்ச்சியை தமிழ் மக்களுக்குள் மறுபடியும் சரியானபடி புகுத்தி அதை கெட்டிப் படுத்தி பார்ப்பனீயத்துக்கு தமிழ் மக்களை புராண காலம் போல நிரந்தரமாய் அடிமையாக்குவதற்காகவேயாகும். அதனால்தான் சோழவந்தான் ஹிந்தி எதிர்ப்பு மகாநாட்டில் அதன் தலைவர் “ஹிந்தியை கட்டாய பாடமாக ஆக்கப்படுவதை ஒழித்தால் போதாது. ஹிந்தியை கட்டாய பாடமாக்க வேண்டும் என்பதற்கு உள்ள உள் காரணங்களை ஒழிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

அரிய சந்தர்ப்பம்

ஆதலால் தமிழ்மக்களுக்கு ஹிந்திப் போர் ஒரு கிடைத்தற்கரிய பாக்கியம் என்றே ஒவ்வொரு தமிழ் மகனும் கருத வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். இது போன்ற ஒரு பயனளிக்கத்தக்க போராட்டம் இனி சுலபத்தில் ஏற்படும் என்று எந்த தமிழ் மகனும் லேசில் கருதமுடியாது என்பதோடு இது அவ்வளவு சுலபமானதும் அவ்வளவு பெரிய பயனை அளிக்கக்கூடியதுமான ஒரு அரும்பெரும் போராட்டமாகும். அதிக காலம் நீடிக்காது அதிக துன்பமும் தொல்லையும் இருக்காது. அதிக பண நட்டமும் கூட இருக்காது என்று சொல்லத் தகுந்த ஒரு போர் என்றே சொல்லுவோம். ஆகவே இப்படிப்பட்ட ஒரு அருமையான சந்தர்ப்பத்தை எந்த தமிழ் மகனும் இழந்துவிடாமல் ஆங்காங்கு உள்ள தமிழ் மக்கள் ஆங்காங்கு அதாவது எந்த எந்த ஊர்களில் உள்ள பள்ளிக் கூடங்களில் ஹிந்தி புகுத்தப்படுகிறதோ ஆங்காங்குள்ள தமிழ் மக்கள் இப்போதே ஹிந்தி எதிர்ப்பு கமிட்டி போட்டு அங்கத்தினர்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு ஹிந்தி எதிர்ப்புத் தலைமைக் கமிட்டியாரிடமிருந்து என்ன கட்டளை வருகிறதோ என்று எதிர்பார்த்துக் கொண்டு சகல தியாகத்துக்கும் தயாராய் இருக்க வேண்டுகிறோம்.

சென்னை எதிர்ப்பு
சென்னையில் ஒரு தோழர் உண்ணாவிரதம் என்னும் பட்டினி நோன்பு இருக்கிறார். மற்றும் பல தோழர்கள் கிளர்ச்சிக் கூட்டம் முதலியன போட்டு பேசி கிளர்ச்சி ஊர்வலம் முதலியன செய்கிறார்கள் – கூடிய சீக்கிரத்தில் இவைகள் இன்னும் ஒவ்வொரு துறையிலும் பெருகலாம். நடைமுறைக்காகவும் கிளர்ச்சிக்காகவும் என்று பல தக்க வழிகளை கமிட்டியார் ஆராய்ந்தெடுப்பார்கள். அனேகமாக சென்னை காரியங்கள் தோழர் சி.டி. நாயகம் அவர்களது ஆலோசனையிலும் மேற்பார்வையிலும் நடைபெறக் கூடும்.

இம்மாதம் முடிவுக்குள் ஹிந்தி எதிர்ப்பு கமிட்டி கூட்ட தோழர் விசுவநாதம் அவர்கள் நாள் குறிப்பார். அதற்குள் இன்னும் அனேக தொண்டர்கள் பதிவு செய்து கொள்ள ஆசைப்படுகிறோம். பெண்மணிகளும் தாராளமாய் வேண்டும்.

பண உதவி

பண விஷயத்தில் ஒவ்வொரு தமிழ் மகனும் தாராள நோக்கம் கொண்டு பணத்தை காரியதரிசி விசுவநாதம் அவர்களுக்கு அனுப்பி கொடுக்க வேண்டும். பொதுவாக காரியங்கள் ஒரு கை முறையாக நடத்தப்பட வேண்டும் என்பது நமது ஆசை. தனித்தனியாக பணம் வசூலிப்பது தனித்தனியாக அறிக்கைகள் விடுவது தனிதனியாக காரியங்கள் துவக்கப்படுவது முதலிய காரியங்கள் அவ்வளவு வலுவைக் கொடுக்கும் என்று கருத முடியவில்லை.

எதிர்ப்பு முறை:

ஒவ்வொரு ஊரிலும் ஹிந்தி எதிர்ப்பு சங்கம் இருக்க வேண்டும். அவை தலைமை சங்கத்துடன் சம்மந்தம் வைத்துக் கொள்ள வேண்டும். தீவிர செயல்கள் ஆற்றுவதற்கு துணிவும் சக்தியும் உள்ள அங்கத்தினர்கள் அக் கமிட்டிகளில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கமிட்டிகள் பேரால் தொகை வசூலித்து பத்திரப்படுத்தி சிக்கனமாய் செலவழிக்கவேண்டும். தொண்டர்களையும் அவர்கள் ஆற்றும் செயல்களையும் அவர்கள் மற்ற ஜனங்களிடம் நடந்து கொள்ளும் நடத்தைகளையும் பொதுஜனங்கள் கண்ணியமாகவும் பச்சாதாபப்படும் படியாகவும் அன்பும் ஆதரவும் காட்டும்படியாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆவலோடு எதிர்பார்த்து வணக்கத்தோடு கேட்டுக் கொள்ளுகிறோம். தயார்! தயார்!! போர் நெருங்கி விட்டது!!! வெற்றி நிச்சயம்!!!!

குடி அரசு – தலையங்கம் – 15.05.1938

தமிழா என்ன செய்யப்போகிறாய் இந்தி வந்து விட்டது! – 15.05.1938

தமிழா  என்ன செய்யப்போகிறாய் இந்தி வந்து விட்டது!


பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்த – தமிழனின் தன் மானத்தை அழித்து தமிழனை ஆரியருக்கு என்றென்றும் நிலையான அடிமையாக்க ஹிந்தி தமிழ் மக்களுக்கு கட்டாயப் படிப்பாக ஏற்படுத்தப்பட்டாய் விட்டது.
யாரால்? ஆரியரால்
எப்படி? தமிழ் மக்களின் ஒன்றுபட்ட கூக்குரலைச் சிறிதும் மதியாமல்
தமிழா இனி என்ன செய்யப்போகிறாய்?
தலை வணங்கி வரவேற்கப் போகிறாயா?
எதிர்த்து நின்று விரட்டி அடிக்கப்போகிறாயா?
இதில்தான் தமிழன் இருப்பதா இறப்பதா என்கின்ற முடிவு இருக்கிறது.
தலை வணங்குவதானால் காங்கரசில் இரு. எதிர்த்து நிற்பதானால் உன் பெயரை எதிர்ப்புக் கமிட்டிக்குக் கொடு.
குடி அரசு – அறிவிப்பு – 15.05.1938

Wednesday, 26 April 2017

ஹிந்தி வந்துவிட்டது இனி என்ன? ஒருகை பார்க்க வேண்டியதுதான் – 08.05.1938

ஹிந்தி வந்துவிட்டது இனி என்ன? ஒருகை பார்க்க வேண்டியதுதான்


தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கு ஹிந்தி பாஷையை கட்டாய பாடமாக கற்பிக்க வேண்டுமென்று பார்ப்பன மந்திரி தோழர் ராஜகோபாலாச்சாரியார் பிடிவாதமாக முடிவு செய்துவிட்டார். தமிழ் மக்கள் எவ்வளவோ தூரம் முயன்றும், எத்தனையோ கூட்டங்கள் மூலம் தங்களது அதிருப்தியையும், ஆத்திரத்தையும் காட்டியும் கனம் ஆச்சாரியார் சிறிதும் லட்சியம் செய்யவில்லை. உண்மையில் தமிழ் மக்களுக்கு ஹிந்தி நஞ்சு என்பதை எடுத்துக்காட்ட தமிழ் மக்கள் எடுத்துக்கொண்ட முயற்சி கொஞ்ச நஞ்சமல்ல. இன்று கனம் ஆச்சாரியார் மாத்திரமல்லாமல் கல்வி மந்திரியார் உள்பட மற்ற மந்திரிகளும் அவர்களது காரியதரிசிகளும் தமிழ் நாட்டில் பொதுக் கூட்டங்களில் தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் இந்த ஹிந்தியை கட்டாயமாக நுழைக்க முயற்சித்ததுதான் என்பதை மனப்பூர்த்தியாக ஆச்சாரியார் உணர்ந்தும் அறைக்குள்ளாகவே இருந்து கொண்டாவது ஹிந்தியை புகுத்திவிட்டுத் தான் மறு காரியம் பார்ப்பது என்கின்ற விரதம் பூண்டு விட்டார். எனவே இனி கேட்டுக் கொள்ளுவதாலோ கெஞ்சிக் கொள்ளுவதாலோ சமாதானமான முறையில் வேறு ஏதாவது முயற்சி செய்வதாலோ எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை என்கின்ற நிலைமை காணப்படுகிறது.
முயற்சி எல்லாம் பாழாய் விட்டது
இம்மாதிரி காரியங்களுக்குப் பரிகாரம் தேட இந்த முறை ஒருபுறமிருக்க வேறு ஒரு வழியிலும் முயன்று பார்க்கலாம் என்கின்ற எண்ணத்தினால் சர்க்கார் தலைமை அதிகாரி என்பவரான கவர்னர் பிரபுவையும் அணுகத் துணிந்து அவருக்கும் இது சம்மந்தமான குறைகளை எடுத்துக்காட்டியாய் விட்டது. கவர்னர் பிரபுவும் தன்னால் ஆவதொன்றுமில்லையென்று கையை விரித்துவிட்டார். நேரில் சென்று குறைகளை சொல்லிக் கொள்ள பல பெரியார்கள் முன்வந்து விண்ணப்பித்துக் கொண்டும் கூட அதற்கும் முடியாது என்று முடிவு கூறிவிட்டார்.
இனிச் செய்ய வேண்டியது என்ன?
இனி தமிழ் மக்கள் செய்ய வேண்டியது என்ன என்பதுதான் இப்போது முக்கிய பிரச்சினையாயிருக்கிறது. இதைப் பற்றி யோசிப்பதற்குமுன், இந்நாட்டு மாபெரும் சமூகமும் பழம்பெரும் குடிகளுமாகிய, இந்தியாவிலேயே இணையிலா வீரமும் மானமும் பெற்றுள்ள தமிழ் மக்களுக்கு பார்ப்பனர்களால் இக்கதி நேரக் காரணம் என்ன? இத் தமிழ் மக்களின் கூப்பாடும் அழுகையும் கேள்வி கேப்பாரற்றுப் போனதற்குக் காரணம் என்ன? கவர்னர் பிரபுவும், இத்தமிழ் மக்களின் குறைகளை இவ்வளவு துச்சமாய் கருதி நேரில் வந்து கண்டு கொள்ளக் கூட தரிசனம் அளிக்காமல் அலட்சியப்படுத்தக் காரணம் என்ன? என்பன போன்ற விஷயங்களை மனதில் இருத்தி அவற்றிற்கு சமாதானம் தெரிந்த பிறகே மேலால் என்ன செய்வது என்பதைப்பற்றி யோசித்தால் ஏதாவது ஒரு சரியான வழி கிடைக்கலாம் என்று கருதுகிறோம். அதல்லாமல் வெறும் கோபத்திலோ ஆளுக்கு ஒரு யோசனை சொல்லுவதினாலோ ஆத்திரப்படுபவர்கள் அத்தனை பேரும் தனித்தனி வழியில் தங்கள் கடமை ஆற்ற எண்ணுவதினாலோ ஒரு வித பரிகாரமும் ஏற்பட்டு விடாதென்றே கருதுகிறோம்.
அலச்சியத்திற்கு காரணம்
தமிழ் மக்களை இன்று பார்ப்பனர்களும், கவர்னர் பிரபுவும் மதிக்காமல் அலட்சியமாய்க் கருதி இழிவுபடுத்தி வருவதற்குக் காரணம் மக்களில் எவரும் இதுவரை தனக்கு மானமோ வீரமோ இருப்பதாக காட்டிக் கொள்ளவே இல்லை. தமிழனுக்குள் ஒற்றுமை இல்லை; தமிழனுக்கு பொதுநல உணர்ச்சி இல்லை; தமிழன் ஒரு வேளை கூழுக்கு மானத்தை விற்பான்; தமிழன் கூலிக்கு மாரடிக்க அருகனே ஒழிய தலைப் பதவிக்கு அருகனல்ல. எதையும் விற்று தனது தனிவாழ்வுக்கு வழி தேடுவான் என்று பார்ப்பனரும், பிறநாட்டு மக்களும் கருதும்படியாகவே பெரும்பாலோர் நடந்து வருகிறார்கள்; நடந்தும் வந்திருக்கிறார்கள். தமிழன் பெருமைக்கு இன்று ஏதாவது சான்று வேண்டுமானால், புராணங்களில் இருந்தும் பழம் பெரும் காவியங்களிலிருந்தும் தாள் ஆதாரங்கள் காட்டலாமே ஒழிய பிரத்தியக்ஷ அல்லது சமீப சரித்திர சான்றுகள் ஒன்றையும் காணோம். தமிழ் மக்கள் புராண காலம் தொட்டு சூத்திரனாக மதிக்கப்பட்டு அந்தச் சூத்திரப் பட்டம் தமிழ் மக்களாலேயே ஏற்கப்பட்டு சில தமிழ் மக்களால் தாங்கள் மாத்திரம் சற்சூத்திரரானால் போதும் என்று தனி முயற்சிகள் செய்யப்பட்டு வந்திருக்கின்றன என்றுதான் சொல்ல இடமிருக்கிறது.
50 வருஷகால வாழ்வு
இவை தவிர நாமறிய இந்த 50 வருஷகால வாழ்வில் தமிழ் நாட்டில் ஒரு தமிழ் மகனாவது பிரபலஸ்தனாக இருந்து தமிழ் நாட்டை நடத்தினான், தமிழ் மக்களை நடத்தினான் என்று சொல்லத்தக்க ஆதாரமும் இல்லை.
தமிழ் நாட்டு ராஜாக்கள், ஜமீன்தார்கள், பெருத்த செல்வந்தர்கள் ஆகியவர்களின் சமீபகால சரித்திரமும் வாழ்க்கைக் குறிப்புகளும் தற்கால நிலையும் அவர்களது தன்மையும் ஆகியவற்றை கவனிப்போமேயானால் அது மிக மிகக் கேவலம் என்று தான் சொல்லத்தக்க வண்ணம் ஆதாரங்கள் கிடைக்குமே தவிர வீரனென்றோ மானியென்றோ தமிழ் நாட்டிற்கோ, தமிழ் மக்களுக்கோ, உழைத்தவர் உதவினவர் என்றோ, தமிழ் மக்களை நடத்தினவர் நடத்தத் தகுதி உடையவர் என்றோ சொல்ல எதையும் காண முடியாது என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.
இன்று தானாகட்டும் தமிழ் நாட்டில் மானமுள்ள பொது நல உணர்ச்சியுள்ள தனி சுயநலமற்ற ஒரு தமிழ் மன்னனோ, தமிழ் ஜமீன்தாரனோ, தமிழ் செல்வவானோ யார் இருக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. இதுதான் போகட்டுமென்றாலோ இன்று தமிழ் மக்களுக்கு பூர்வகாலந் தொட்டு, வேத புராண சரித்திர காலந்தொட்டு எதிரியாய் – பிறவி வைரியாய் இருந்து தமிழ் மக்களை தாழ்த்தி, அழுத்தி, இழிவுபடுத்தி வரும் பார்ப்பனருக்கு அடிமையாய் ஒற்றனாய் காட்டிக் கொடுத்து ஈன வயிறு வளர்க்கும் இழி குணம் இல்லாத தமிழ் மக்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கிட முடியுமா?
மாபெரும் விரோதி
ஆகவே இவையும் இவை போன்ற இன்னும் பல காரணங்களும் ஏராளமாய் இருக்கும்போது தமிழ் மக்கள் மானம், கல்வி, கலை, வீரம், அறிவு ஆகியவைகளுக்கு மாபெரும் விரோதியாய் “எம”னாய் “உளைமாந்தையாய்” இருக்கும் ஹிந்திபாஷையை பார்ப்பனர்கள் கட்டாயமாக தமிழ் மக்களுக்குள் செலுத்தும் அடாத கொடுங்கோன்மை காரியத்தை எப்படி தடுக்கமுடியும் என்று கேட்கின்றோம்.
கனம் ஆச்சாரியார் பார்ப்பனராய் இருந்தாலும், ஹிந்தியை ஒரு தமிழ் மகனை அதுவும் இந்நாட்டுப் பழங்குடி – பெருங்குடி மக்கள் சமூகத்தைச் சேர்ந்த, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் வேளாள வகுப்பைச் சேர்ந்த ஒரு தனித்தமிழ் மகனாகும் தோழர் டாக்டர் சுப்பராயனைக் கொண்டு அவர் கையில் கூரிய வேலை கொடுத்தல்லவா தமிழ் மக்கள் கண்களைக் குத்தும்படி கட்டளையிடுகிறார்.
ஆச்சாரியார் மூர்க்க பலம்
மற்றும் கனம் ஆச்சாரியார், என்றும் பார்ப்பனர் தனித்த முறையில் தமிழ்மக்கள் சமூகத்தையே என்றும் தங்களுக்கு அடிமையாக இருக்கும்படி சூத்திரர்களாக ஆக்க ஹிந்தியைப் பலவந்தமாக நுழைக்கிறார் என்றாலும் அவரது அரசியல் சபையில் “ஆம், ஆம்” “நன்று, நன்று” “நடத்து நடத்து” என்று சொல்லி கைதூக்கித் தலையாட்ட எத்தனை தமிழ் மக்கள் கைகூப்பி சிரம் வணங்கக் காத்திருக்கிறார்கள்? இவர்கள் சமூகத்தைச் சேர்ந்த நாம் எந்த முறையில் தமிழ்மக்களுக்கு பிடித்தமில்லாத – தமிழ்மக்களுக்குக் கேடு சூழும்படியான ஹிந்தியை கனம் ஆச்சாரியார் (பார்ப்பனர்கள்) மூர்க்க பலத்தில் புகுத்துகிறார் என்று சொல்லுவது என்று கேட்கிறோம்.
ஆகவே, தமிழ் மக்களின் பழம் பெருமைகளும், பாட்டிக் கதைகளும் எவ்வளவு மேன்மையாக இருந்தபோதிலும், தமிழ் மக்களின் இன்றைய நிலைமை பூர்வ பெருமைக்கேற்றதாக இல்லை என்பதோடு தமிழ் மக்கள் பார்ப்பனக் கொடுமையிலிருந்து அதி இலேசாக தப்புவதற்குத் தகுதியான நிலையிலும் இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதற்கு ஆகவே இவற்றைக் குறிப்பிட்டோம்.
இதனால் எந்த தமிழ் மகனும் பயந்துவிட வேண்டியதில்லை. அவநம்பிக்கை கொண்டுவிட வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக ஹிந்தியை தடுப்பதற்காக நாம் செய்யப் போகும் காரியங்களை திட்டப்படுத்துவதற்கு முன் நம் நிலையை நன்றாக உணர்ந்து அதற்கு ஏற்றபடி அதாவது மாற்றான் வலியையும் நம் வலியையும் அளவு கண்டு மேலால் சிந்திக்க வேண்டும் என்பதை வலியுறுத்த இவற்றைக் குறிப்பிட்டோமே ஒழிய நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்ளவல்ல. இனி நாம் செய்ய வேண்டியது என்ன?
நாம் வேண்டுபவர்
உண்மை தமிழ் ரத்தம் அதாவது சிறிதும் கலப்பற்ற சுத்த தமிழ் ரத்தம் ஓடும் வாலிபர்களே ஹிந்தி எதிர்ப்பு இயக்கத்துக்கு வேண்டும்.
எப்படிப்பட்ட பார்ப்பன தந்திரத்துக்கும் இணங்க முடியாத பெரியவர்களே நமக்கு வேண்டும்.
பார்ப்பன தயவு இல்லாது வாழ முடியாது என்கின்ற தமிழ்மகன் முடிபுனைந்த மன்னனாயிருந்தாலும் அவனிடம் காசு பெறலாமே ஒழிய அவனது நிழலும் இம்முயற்சியில் பட இடம் கொடுக்கக் கூடாது.
இரண்டிலொன்று அதாவது இந்தி பலாத்காரத்தை ஒழித்தாலொழிய தனது சொந்த வாழ்வை கவனிப்பதில்லை என்கின்ற முடிவுக்காரர்கள் மாத்திரமே எதிர்ப்பு முயற்சி நிர்வாகத்தில் அங்கத்தினராய் இருக்க வேண்டும்.
அடுத்தபடியாக பொருளாதார விஷயத்தில் போதுமான பொருள் உதவி கிடைக்கலாம் என்றாலும் ஒரு சமயம் கிடைக்காமல் போய்விட்டாலும் கிடைத்ததைக் கொண்டு கிடைக்காவிட்டால் பிச்சை எடுத்தாவது பசியை ஆற்றிக்கொண்டு உழைப்பதற்கு உறுதி செய்து கொண்டவர்களே செயலில் கலந்து கொள்ள வேண்டும்.
ஏற்படுத்திக் கொள்ளும் திட்டங்களுக்கு கட்டுப்பட்டு ஒரு கை முறையாய் பின்பற்றி ஒழுங்காகவும், ஒழுக்கமாகவும் நடந்து வருவதாக ஒவ்வொரு இளைஞனும் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகேதான் இம்மாபெரும் முயற்சிக்கு ஏதாவது திட்டம் வகுப்பது பயன்படத் தக்கதாகும்.
அப்படிக்கு இன்றி ஆளுக்கொரு உபாயம் (ஆளுக்கு ஒரு அபிப்பிராயம்) ஆளுக்கு ஒரு அறிக்கை என்பது போன்ற காரியங்கள் நடைபெறுமானால் ஆய்ந்தோய்ந்து செய்யப்படாத காரியம் போல் முடியவேண்டியதாகிவிடும்.
காலம் அடுத்து விட்டது
கோடை விடுமுறை முடிந்த உடன் ஹிந்தி கட்டாய பாட முறை அமுலுக்கு வரப்போகிறது. ஆகையால் அதிக சாவகாசம் இல்லை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். சகல பொறுப்புகளும் மானமுள்ள பரிசுத்த இளைஞர் கையில் இருக்கிறது என்பதையும் அவர்கள் சரியாய் நடத்தப்பட வேண்டும் என்பதையும் யாவரும் உணர வேண்டும்.
தோழர்கள் எஸ். எஸ். பாரதியார், உமாமகேசுவரம் பிள்ளை, கி.ஆ.பெ. விசுவநாதம், வள்ளல் சிவஞான தேசிகர் போன்றவர்கள் கீழிறங்கி வந்து வினைஞர்களாகி மற்ற வாலிபர்களுக்கு வழிகாட்டிகளாகச் செல்ல வேண்டும்.
சிறை புகுவது அற்ப விஷயம்
தாங்கள் முடிக்க எண்ணும் கருமத்திற்கு சிறை செல்லுவது என்பது மிக சாதாரண காரியம் ஆகும். அதுவே கடைசிக்காரியமாகவும் கருதிவிடக் கூடாது. ஆச்சாரியார் அதை சுலபத்தில் கையாள சம்மதிக்க மாட்டார். ஆதலால் சிறை செல்லத் தயாராய் இருந்தால் போராதா என்று எண்ணிவிடக் கூடாது. சிறை செல்லுவது ஒரு அற்பக் காரியமேயாகும். அதில் யாதொரு கஷ்டமோ நஷ்டமோ கிடையாது. அதை 3 – ந் தரக் காரர்களுக்கு விட்டுவிட வேண்டும். பிரமுகர்களும், பொறுப்பாளிகளும் அடிபடவும், உயிர் விடவும் தயாராய் இருக்க வேண்டும். ஏனெனில் நாம் போராடக் கருதுவது நெஞ்சிரக்கமற்ற மறத்தன்மை கொண்ட மக்களோடு என்பதை ஒவ்வொருவினைஞரும் ஞாபகத்தில் வைக்க வேண்டும். அதிலும் நாம் போராடக் கருதுவது எவ்வித இழிவான காரியத்தையும் செய்யத் துணிபவர்களும், சூழ்ச்சியில் திறமை உடையவர்களுமான மகா கொடியவர்களுடன் என்பதையும் ஒவ்வொரு எதிர்ப்பாளனும் மனதில் இருத்த வேண்டும்.
இந்த நிலைமைகளை நன்றாக உணர்ந்து இதற்கேற்றபடி நமது திட்டங்களை வகுத்துக் கொண்டு கருமத்தில் இறங்கி விடுவோமேயானால் நமக்கு வெற்றி நிச்சயம் என்பதில் சிறிதும் ஐயமில்லை என்பது நமது அபிப்பிராயம். தமிழ் இளைஞர்களுக்கு ஒரு விண்ணப்பம்.
இளைஞர்களுக்கு வேண்டுகோள்
இளைஞர்களே! இதுவரை உங்களில் சுமார் 200, 300 பேர்கள் வரை ஹிந்தி எதிர்ப்புப் போருக்கு “நான் தயார்” “நான் தயார்” “நானும் என் மனைவியும் தயார்” “உண்ணாவிரதத்துக்கு தயார்” “உயிர் விடத் தயார்” என்பதாக தெரிவித்துக் கொண்டிருக்கிறீர்கள். அவரவர்கள் கஷ்ட ஜீவனம் நடத்தவும், அடிபடவும் ராப்பட்டினி பகல் பட்டினி கிடக்கவும், துலைவழி நடக்கவும் தயார் செய்து கொள்ளுங்கள். போர் முனை சிப்பாய் போல் ஆக்கினைக்கு அடிபணியவும் தயார் செய்து கொள்ளுங்கள்.
பெரியோர்களுக்கு விண்ணப்பம்
பெரியோர்களே! முன்மாதிரி காட்ட வாருங்கள். உங்களுடைய உள்ளங்களுக்கு புதிய அங்கியை மாட்டிக் கொள்ளுங்கள். தனியுரிமை வாழ்க்கைக்கு கருதப்படும் மானம் அபிமானம் வேறு பொதுநல தொண்டுக்கு கருதப்படும் மானம், அபிமானம் வேறு என்பதை மனதிலிருத்தி அதற்குத் தகுந்தபடி உங்களது மானம், அபிமானம் ஆகியவற்றை மாற்றி அவைகளை உயிராய் கருதுங்கள். உங்கள் மார்பைப் பார்க்காதீர்கள், அடிச்சுவட்டைப் பாருங்கள், வீர இளைஞருக்கு நீங்கள் வழி காட்டுகிறவர்கள் என்பதை ஒவ்வொரு அடிவைக்கும்போதும் ஞாபகத்தில் வையுங்கள்.
செல்வர்களுக்கு ஒரு வார்த்தை
தமிழ்ச் செல்வர்களே உங்களுக்கு ஒரு விண்ணப்பம். உங்கள் பழைய நடத்தைகளை மறந்து விடுகிறோம். இப்போது தமிழர் இருப்பதா இறப்பதா என்கின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலைக்கு நீங்களும் பங்காளிகள் என்று நாம் சொல்வதால் நீங்கள் முனிவு கொள்ளாதீர்கள் நடந்தது நடந்து விட்டது. அதை பரிகரிக்க உங்களால் செய்யக் கூடியது நீங்கள் மானத்திலும் உயிரிலும் பெரிதாக மதிக்கும் உங்கள் செல்வத்தை தாராளமாக இக்கருமத்திற்கு உதவி, பெரிய வீரராகுங்கள். இவ்விஷயத்தில் உங்கள் கை நீளுவதற்கேற்ற பயனை அடைவீர்கள்.
பொது மக்களுக்கு மாபெரும் விண்ணப்பம்
பொதுத் தமிழ் மக்களுக்கு மாபெரும் விண்ணப்பம் தமிழ்த் தோழர்களே இந்த 50 வருட காலத்தில் தமிழ் மக்களுக்கு இப்படிப்பட்ட ஒரு நெருக்கடி ஏற்பட்டதில்லை. இன்று நடப்பது பிரிட்டிஷ் ஆட்சியல்ல. வருணாச்சிரம புரோகித ஆட்சியாகும். அதன் ஒவ்வொரு மூச்சும் தமிழ் மக்களை விலங்குகளாக்குவதற்காக விடப்படும் மூச்சாகும். விலங்குகளாக வாழ்வதை விட மடிவது மேலான காரியம். ஏதோ விளக்கமுடியாத பல காரணங்களால் தமிழ் மக்களில் பலர் புரோகித ஆட்சிக்கு அடிமைப்பட்டு கிடந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் அவர்களும் நாமும் நம் பின் சந்ததியும் மனிதர்களாக வாழ முயற்சிக்க வேண்டியது நமது கடமை என்பதை உணருங்கள். இதை ஒரு கட்சி போராக, முயற்சியாக கருதுங்கள். உங்கள் செளகரியங்களுக்கு அடங்கின சகல பரிசுத்தமான ஆதரவுகளையும் அளியுங்கள். உங்களது வாலிப இளைஞர்களை போருக்குக் கச்சை கட்டி விரட்டி அடியுங்கள்.
மடாதிபதிகளுக்கு மன்னிப்பு
தமிழ் மடாதிபதிகள் என்பவர்களே, நீங்கள் இது வரை நடந்து கொண்டதையும் மறந்து விடுகிறோம். இந்த சமயத்தில் தைரியமாய் முன்வந்து உங்களாலான காசு உதவுவதோடு உங்களிடம் பக்தி, விசுவாசம் காட்டுபவர்களை எங்களிடம் விரட்டி விடுங்கள். தமிழ் நாட்டில் மானமுள்ள சுத்தத் தமிழ் மக்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை உலகம் உணர இதைவிட வேறு தக்க சமயம் இனி சுலபத்தில் கிடைக்காது, கிடைக்காது.
ஆகவே பொதுமக்களே, இளைஞர்களே தயாராகுங்கள். முன் வாருங்கள், ஒரு கை பாருங்கள்.
குடி அரசு – தலையங்கம் – 08.05.1938

நன்நிலம் மகாநாடு ஹிந்தி கண்டனம் – 14.06.1931

நன்நிலம் மகாநாடு ஹிந்தி கண்டனம்


தஞ்சை ஜில்லா நன்நிலத்தில் இம்மாதம் 7-ந் தேதி கூடிய நன்னிலம் தாலூகா மகாநாட்டில் ஹிந்தி பாஷையைக் கண்டனம் செய்து ஒரு தீர்மானம் செய்யப்பட்டிருக்கின்றது.  அத்தீர்மானமாவது:-
“பழைய புராணக் கதைகளைச் சொல்லுவதைத் தவிர வேறு அறிவு வளர்ச்சிக்கும் மற்ற பொது விஷயங்களுக்கும் உதவாத சமஸ்கிருதம், ஹிந்தி முதலிய பாஷைகளைத் தேசீயத்தின் பேரால் அரசியல் காரணங்களுக்காக வென்று படிக்கச் செய்வதானது பார்ப்பனீயத்திற்கு மறைமுகமாக ஆக்கம் தேடுவதாகுமென்று இம்மகாநாடு கருதுவதோடு, தற்கால விஞ்ஞான அறிவை நமது மக்களிடம் பரப்பவும், நவீனத்தொழில் முறைகளை நமது நாட்டில் ஏற்படுத்தவும், மற்ற தேசங்களில் எழும்பியிருக்கும் சீர்திருத்த முற்போக்கு உணர்ச்சிகளை நமது மக்களிடம் தோற்றுவிக்கவும், உலக பாஷையாக வழங்கிவரும் இங்கிலீஷ் பாஷையையே நமது வாலிபர்கள் கற்க வேண்டு மென்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது” என்ற தீர்மானமாகும்.  இதைபற்றி நாம் 1926 ம் வருஷத்திலேயே “குடி அரசு” பத்திரிகையில் “தமிழுக்குத் துரோகமும், ஹிந்தியின் இரகசியமும்” என்பதாக ஒரு வியாசம் எழுதி இருக்கின் றோம்.  அது மாத்திரமல்லாமல் “இந்து மதப் புராண இதி காசங்களை உண்மை யாய் உணரவேண்டுமானால் – துளசிதாஸ் இராமாயணத்தை நன்றாய் அறிய வேண்டுமானால் ஹிந்தி படிக்கவேண்டும்” என்று சென்னை திருவாளர் கே. பாஷ்யம் அய்யங்கார் என்ற “ஒரு தேச பக்தர்” சென்ற வாரத்தில் கூட பேசி யிருக்கின்றார்.  இதிலிருந்தும் ஒருவாறு ஹிந்தியின் இரகசியம் அறியலாம்.
அன்றியும் ஹிந்தி பாஷையைப் பொது பாஷையாக ஆக்குவது முடியாத காரியமென்றும், அது கூடாத காரியமென்றும் பார்ப்பனீயப் புராணக் கதைகளை பரப்பத்தான் முடியுமென்றும் வங்காளம் மாடர்ன் ரிவ்யூ பத்திராதி பரான பாபு ராமாநந்த சட்டர்ஜி அவர்கள் தமது பத்திரிகை யில் எழுதி இருக்கிறார்கள்.
 இதிலிருந்தும்  ஒருவாறு ஹிந்தியானது பார்ப்பனப் பிரசாரபாஷை என்றும், அரசியலுக்கு அது சாத்தியப்படாத பாஷை என்றும் விளங்கும்.
இந்நாட்டில் பார்ப்பனீயம் தாண்டவமாடத் தொடங்கிய காலம் முதல் ஏதாவது ஒரு வகையில் புராணங்களையும், பார்ப்பனீயங்களையும், பரப்பும் நோக்கத்துடனேயே எல்லாப் பாஷைகளும் ஆதிக்கம்பெற்று வந்திருக் கின்றன.  உலக வழக்கில் ஒரு சின்னக்காசுக்கும் பயன்படாத சமஸ்கிருத பாஷைக்கு இன்றைய தினம் இந்நாட்டில் இருக்கும் ஆதிக்கமும், அதற்கெ னவே பல ஏற்பாடும், செலவும், மெனக்கேடும் பார்ப்பனீயத்தைப் பரப்பவே செய்யப்பட்டு வருகின்றன.  சமஸ்கிருத காலேஜ், சமஸ்கிருதப் பாடசாலை, மற்றும் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஏற்ற முயற்சிகள் முழுவதும் சமஸ்கிருதம் வாழ்க்கைக்கு சிறிது பாகமும் வேண்டிய அவசியமில்லாத மக்களின் செல விலேயே நடைபெற்று வருகின்றன.  இது இந்த நாட்டு மக்களின் சுய மரியாதையற்ற தன்மைக்கு ஒரு பெரும் உதாரணமாகும்.  இதை தட்டிப்பேச இன்றைய சட்டசபை, மந்திரிசபை ஆகியவைகளில் ஒரு சிறு மூச்சுவிடவும் ஆள்கள் இல்லை.  போதாக் குறைக்கு இன்று ஹிந்தி பாஷை ஒன்று புதிதாக முளைத்து இந்தியமக்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிகள் வெகு பலமாய் செய்யப்பட்டு வருகின்றது.  இது இந்நாட்டு மக்களுக்கு பாஷை விஷயத்திலும் சுயமரியாதையில்லையென்பதற்கு ஒரு உதா ரணமாகும்.
தமிழ்நாட்டுக்கு ஹிந்தி என்ன அவசியத்திற்கு என்று கேட்க ஒரு தேசபக்தராவது இன்று தேசீய வாழ்வில் இல்லை . தேச பக்த குழாம் பெரிதும் கூலிக்கு மாரடிப்பவர்களாலேயே நிறப்பப்பட்டுவிட்டதால் பார்ப்பனத் தலைவர்களுக்கும் பார்ப்பனர்களால் பிடித்து வைக்கப்பட்ட தலைவர் களுக்கும் அடிமைகளாய் இருந்து அவர்கள் உபதேசித்த தேசீய மந்திரத்தை உருப்போட்டு ஜெபித்து வயிறு வளர்ப்பதைவிட வேறு யோக்கியதை இல்லாமல் போய்விட்டது.
இந்த நாட்டில் இன்றைய தமிழ் பாஷையே தமிழ் மக்களின் சுயமரியாதைக்கும், மனிதத் தன்மைக்கும், சுதந்திரத்திற்கும் நேர் விரோதமாக விருக்கின்றது என்பதைப் பல தடவை சொல்லி வந்திருக்கின்றோம்.  இன்றைய தமிழ் பாஷையில் பெரிய இலக்கியமாய் பாவிக்கப்படுவதாகிய கம்பராமாயணம் பெரிய புராணம் ஆகிய இவ்விரண்டும் கூட மானமுள்ள, சுயமரியாதை – வீரம் ததும்பிய, இரத்த ஓட்டமுள்ளதமிழ் மக்களால் சுட்டுப் பொசுக்க வேண்டிய புஸ்தகமாகும்.  தமிழ் மக்கள் என்று சொல்லிக் கொள்ளு கின்றவர்களுக்கு போதிய மான உணர்ச்சி இல்லாததாலேயே அவற்றிற்கு தமிழ் நாட்டில் இன்னமும் இடமிருக்க வேண்டியதாகிவிட்டது.  இன்றைய தினம் தமிழ் படித்து தமிழ் பாஷையில் பற்றுகொண்டு தமிழைத் தாய் பாஷை யாய்க் கொண்ட ஒருவனாவது தன்னுடைய தமிழ் தாய்  வடமொழிப் புருஷனுடன் சோரத்தனம் செய்து கொண்டிருக்கின்றாளா? இல்லையா வென்றும் பிள்ளை களையெல்லாம் கூட வடமொழிப் புருஷனுக்கு உதவும்படியாகவே அவனைப் போலவே பெற்றுக்கொண்டுமிருக்கின்றாளா? இல்லையா வென்றும், அப்படிச் சோரத்தனம் செய்ததில் முதல்தரப் பிள்ளை களாயும் சிரஞ்சீவி பிள்ளைகளாயும்  இந்தக் கம்பராமாயணமும் பெரிய புராணமும் இருக்கின்றதா இல்லையா? என்றும் கேட்பதோடு இந்த வடமொழிப் புருஷனுக்கு தங்களது தமிழ்த்தாயை கூட்டிவிட்டு பெருமை யடைவதன் மூலமே தமிழ் பண்டிதர்கள் இன்று உயிர் வாழ்ந்து ஜீவனம் செய்து வருகின்றார்களா? இல்லையா வென்றும் கேட்கின்றோம்.
தமிழ்த்தாய் தானாகவே சமஸ்கிருதப் புருஷன் மீது ஆசைப்பட்டு “விபசாரம்” செய்வதில் நமக்கு ஆnக்ஷபணை இல்லை.  ஆனால் இந்தப் பண்டிதர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு, தங்கள் சுயநலப் பெருமைக்கு தமிழ்த்தாயை கூட்டி விட்டுப் பிழைப்பதைத்தான் நாம் வெறுக்கின்றோம்.  அப்படிக் கூட்டிவிடுவதாவது தமிழ்த்தாயின் மக்கள் சமூகத்திற்காவது அவர்களது சுயமரியாதைக்காவது ஆபத்தில்லாமல் இருக்குமானால் நமக்கு ஆnக்ஷபணையில்லை.  அப்படிக்கின்றி இன்று நாட்டைப் பாழாக்கி விட்டது  இந்த சமஸ்கிருதப் புருஷனிடம் தமிழ்த்தாயை சம்பந்தப்படுத் தியதே என்று தெரிந்து இருந்தும், மறுபடி இதையே ஆதரித்தால் இதற்கு எதை ஒப்பிடுவது என்பது நமக்கு விளங்கவில்லை.  இது இப்படியிருக்க   இப்பொழுது மற்றொரு புருஷனை (ஹிந்திப்பாஷையை) தமிழ்த்தாயிக்கு நமது தேச பக்தர்கள் கண்டு பிடித்து இருப்பது மிகவும் ஆச்சரியமாகவே இருக்கின்றது.  இனி தமிழ்த்தாயிக்கு தகுந்த புருஷன் வேண்டுமானால் மானத்துடனும் வீரத்துடனும் அறிவுடனும் பிள்ளைகளைப் பெற்று அவைகளை வைத்துக் காப்பாற்றும் புருஷன்தான் இருக்கவேண்டும்.  அதுவும் தகுந்தபடியான சுதந்திர காதல் மணமாகத்தான் செய்விக்க வேண்டுமேயொழிய இனியும் இம்மாதிரி வயிற்றுப் பிழைப்பை மாத்திரம் கருதிய சம்மந்தமாகவும், அதுவும் தமிழ்த்தாயிக்கு அல்லாமல் மற்றவர்களுடைய சுயநலத்திற்காகவும் இருக்கும் அடிமை மணமாகவும் இருக்கக்கூடாது என்றே சொல்லுவோம்.
தமிழ்த்தாயிக்கு யோக்கியதை இருந்து அவள் தகுந்த மானமுள்ள மக்களைப் பெற்று இருந்தால் நாட்டு நலனுக்கு ஏற்ற சகல விஷயத்தையும் தமிழிலேயே ஆக்கியிருக்கவேண்டும்.  நாட்டிற்கு தமிழே போதுமான தாயிருக்க வேண்டும்.  அப்படி இல்லையானால் தமிழ்த் தாயின் தகுதிக்கும் அவசியத்திற்கும் ஏற்றது எதுவோ அதைக் கொள்ளவேண்டும். இன்றையத் தினம் நாட்டிற்கு கவியழகு, கற்பனையழகு, புராண அழகு, மோட்ச அழகு, பகவான் வாக்கு அழகு. அவதாரப் பெருமை அழகு அல்ல வேண்டி யிருப்பது.  இவை சோம்பேரிகளுக்கும் மக்கள் கஷ்டத்தை உணராத வன் நெஞ்சகர்களுக்கும் ஊரான் உழைப்பில் வயிறு வளர்க்கும் அயோக்கியர் களுக்கும் அவசியம் உணரமுடியாத அறிவிலிகளுக்குமே இவை வேண்டிய தாகும்.  மற்றபடி மானமுள்ள மக்களுக்கு – பக்ஷhதாபமுள்ள மக்களுக்கு – யோக்கியர்களுக்கு அறிவாளிகளுக்கு இந்தியாவின் 35 கோடி மக்கள் சமத்துவ உணர்ச்சியுடன் இருக்கவும் வயிற்றுப் பிழைப்புக்கு மானத்தை விற்காமல் வாழவும், பணக்காரன், படித்தவன், மேல்ஜாதிக்காரன் என்கின்ற வஞ்சகர்களால் மிதிபட்டு நசுக்கப்படாமல் இருப்பதற்கும் குழந்தைகளுக்கு பூச்சாண்டியையும், காக்கையையும் பிராக்கு காட்டி கையில் இருப்பதை தட்டிப் பிடிங்கிக்கொள்வது போல் மோட்சத்தையும், காவியத்தையும், கவியழகையும், கடவுளையும், கலைகளையும் காட்டித் தட்டிப் பிடுங்கிக் கொள்ளாமல் அவரவர்கள் பாடுபட்டது அவரவர்களுக் காவது உதவவும்,  “நீ வீதியில் நடக்க வேண்டாம். அருகில் வரவேண்டாம், கண்களில் தென்பட வேண்டாம்,  படிக்க வேண்டாம் “சர்வ தயாபரனும் சர்வ கருணாமூர்த்தியும் சர்வ சக்தனும்” ஆகிய “கடவுளிடம்” கூட பக்கத்தில் நெருங்க வேண்டாம்” என்கின்ற அயோக்கியத்தனம் நீங்கவும் வேண்டியது முக்கியமாய் இருக்கின்றபடியால் அதற்கு எந்த பாஷை வேண்டும்? எந்த பாஷைப் படித்தால் இந்த மாதிரியான அற்பபுத்தி நீங்கும்? என்பதுதான் நமது கேள்வி.  ஆகவே இன்றைய இந்தத் தேவைக்கு – இன்று இந்த நாட்டிற்கு ஹிந்தி வேண்டுமா? இங்கிலீஷ் வேண்டுமா? என்பதை மானத்துடன் உள்ளவர்கள் நடு நிலைமையிலிருந்து யோசித்துப் பார்த்து சொல்லட்டும் என்றே வேண்டு கின்றோம்.  ஹிந்தி பாஷையை படிக்க வேண்டும் என்கின்ற நிர்பந்தத்தை காங்கிரசில் கொண்டு வந்து புகுத்தியதே வருணாச்சிரமத்தை நிலை நிறுத்தவும்  அதைக் கட்டாயப்படுத்தி மக்களுக் குள் புகுத்தவுமே செய்த சூக்ஷியான காரியமாகும்.  இந்த அயோக்கியத் தனத்திற்கு திரு. காந்தி அவர்கள் கண்டிப்பாய் உளவாளி என்றே சொல்லுவோம்.  இதனால் வாய் வெந்து போவதானாலும் சரி. தலையில் இடி விழுவதானாலும் சரி,  முன் காலத்து ரிஷிகளும், முனிவர்களும் நமக்கு எவ்வளவு கொடுமையை விளை வித்தவர்கள் என்பதாக இப்போதைய மானமுள்ள மக்கள் எப்படிக் கருது கின்றார்களோ அதற்கு ஒரு முந்திரி கூட குறைவல்ல இன்றைய மகாத்மாக் களால் நமக்கு வரும் ஆபத்தும் இழிவும் என்பதில் எமக்குச் சிறிதும் சந்தேக மில்லை.  யாருக்காவது சந்தேகம் இருந்தால் சென்ற வாரம் திரு. காந்தியவர் கள் யங்இந்தியாவில் “வர்ணாச்சிரம தர்மம்” என்கின்ற தலைப்பில் எழுதிய தலையங்கத்தை யுற்று கவனியுங்கள்.
“வர்ணாச்சிரம தர்மங்களில் குறிப்பிட்ட நான்கு தர்மங்களில் எனக்கு நம்பிக்கையுண்டு. இந்தப்பாகுபாடுகள் பரம்பரைத் தொழில் சம்பந்தமாக ஏற்பட்டது.”
“பிராமணன் வித்தை கற்றுக்கொடுக்கவும், க்ஷத்திரியன் சக்தியற்றவர் களைப் பகைவரிடமிருந்து காக்கவும், வைசியன் உழவுத்தொழில் செய்யவும், சூத்திரன் உடலால் உழைத்து வேலை செய்யவும் என்று ஏற்பட்டவை களாகும்.”
“இந்து மதம் இவற்றை ஜனசமூக வாழ்வில் அங்கீகரித்து கிரமமாக நடத்தையிலும் அனுஷ்டித்து வருகின்றது”.
“இந்தப்படியான அவரவருக்கு உரிய காரியத்தை அவரவர் செய்யத் தவறியதால்தான் இப்போது வருண தருமம் அழிந்து பல ஜாதிகள் தோன்றின”.
“வகுப்பு ஒற்றுமைக்கும் கலப்பு விவாகம், சமபந்திபோஜனத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பது எனது திடமான அபிப்பிராயம்.”
“கலப்பு விவாகங்களால் நாட்டில் வகுப்பு ஒற்றுமை ஏற்பட்டு விடு மென்று நான் நம்பவில்லை.”
“மனிதர் யாவருமே சமம்.  ஆனால் இந்த சமம் என்பது ஆத்மா வைப் பொறுத்த வரையில் தானேயொழிய சரீரத்தை பொறுத்த வரை சமமல்ல.”
என்ற குறிப்புகளை அதில் எழுதி இருக்கிறார்.  இந்த மாதிரியான வருண தர்மத்தை நிலை நாட்ட வந்த புருஷனை ‘பிராமணர்கள்’ மகாத்மா என்று கூறுவதிலும், அவரைப் பின் பற்றுவதிலும், அவர் சொல்லுகிறபடி யெல்லாம் ஹிந்தி படிப்பதிலும், கீதை படிப்பதிலும், ராமராஜ்ஜியம் ஸ்தாபிப் பதற்காக கள்ளுக்கடை, ஜவுளிக்கடை மறியல் செய்வதிலும் யாதொரு அதிசயமும் கொள்ளஇடமில்லை.  ஆனால் “நாங்களும் சுயமரியாதைக் காரர்கள்தான்” தமிழ்மக்கள் இந்த மாதிரியான வருணாச்சிரமத்திற்குக் கட்டுப் பட்டவர்கள் அல்ல…………. என்று சொல்லுகின்ற மக்கள் இந்த மகாத்மா வையும், அவர்களை மகாத்மாவாக்கின பார்ப்பனர்களின் வால்களையும் பிடித்துத் தொங்கிக் கொண்டு திரிவதில்தான் நமக்கு அதிசயம் காணப்படுகின்றது.
இதைப் பார்க்கின்றபோது “பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்” என்று சொன்ன வார்த்தை மிகவும் பொருத்தமும், அருத்தமும் கொண்ட வார்த்தை என்றே தோன்றுகின்றது.
குடி அரசு – தலையங்கம் – 14.06.1931

இந்தியை இன்று எதிர்க்கவில்லை 12 வருடங்களுக்கு முன்பிருந்தே எதிர்க்கிறோம் – 11.09.1938

இந்தியை இன்று எதிர்க்கவில்லை 12 வருடங்களுக்கு முன்பிருந்தே எதிர்க்கிறோம்


சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த அதாவது 1923-ம் வருடத்திலிருந்தே இந்தியைக் கண்டித்து வந்திருக்கிறது. அந்த இயக்கத்தின் சார்பில் கூடுகிற ஒவ்வொரு மகாநாடுகளிலும் இந்தியைக் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றியும் பட்டிருக்கின்றன.
உதாரணமாக 1931 வருடம் ஜúன் மாதம் 7-ந் தேதி கூடிய நன்னிலம் தாலூகா சுயமரியாதை மகாநாட்டில் இந்தியை கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.
அந்த தீர்மானத்தை தோழர் சாமி சிதம்பரனார் அவர்கள் பிரேரேபித்தார். தோழர் கு. ராமநாதன் (இப்பொழுது விளம்பர மந்திரியாக இருப்பவர்) அவர்கள் ஆமோதித்து அதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றிப்பேசி இருக்கிறார்.
அந்தத் தீர்மானத்தின் பேரில் 1931-ம் வருடம் ஜூன் மாதம் 14-ந் தேதி “குடி அரசு” பத்திரிகை ஒரு நீண்ட தலையங்கம் எழுதி இருக்கிறது. அந்தத் தலையங்கத்தில் பெரிதும், அந்தத் தீர்மானத்தை பிரேரேபித்தவரும் ஆமோதித்தவரும் பேசிய பேச்சுக்களையே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது பின்னார் பிரசுரிக்கப்படும்.
அந்த மகாநாட்டில் நிறைவேறிய தீர்மானம் வருமாறு:-
“பழைய புராணக் கதைகளைச் சொல்லுவதைத் தவிர வேறு அறிவை வளர்க்கும் விஷயங்களுக்குதவாத சமஸ்கிருதம், ஹிந்தி முதலிய பாஷைகளை நமது மக்கள் படிக்கும்படி செய்வது பார்ப்பனீயத்திற்கு மறைமுகமாக ஆக்கந் தேடுவதாகுமென்று இம்மகாநாடு கருதுவதோடு, தற்கால விஞ்ஞான அறிவை நமது மக்களிடை பரப்பவும், நவீன தொழில் முறைகளை நமது நாட்டில் ஏற்படுத்தவும், மற்ற தேசங்களில் எழும்பியிருக்கும் சீர்திருத்த உணர்ச்சியை நமது மக்களிடை தோற்றுவிக்கவும், உலக பாஷையாக வழங்கிவரும் இங்கிலீஷ் பாஷையையே நமது வாலிபர்கள் கற்க வேண்டுமென்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது.”
பிரேரேபித்தவர்,
சாமி சிதம்பரனார்.
ஆமோதித்தவர்,
எஸ். இராமநாதன்.
குடி அரசு – கட்டுரை – 11.09.1938