Showing posts with label பெரியார். Show all posts
Showing posts with label பெரியார். Show all posts

Sunday, 20 February 2022

மண்ணுருண்டை மாளவியாக்கள்

 மண்ணுருண்டை மாளவியாக்கள்

திரு. காந்தியார் அவர்கள் தீண்டாதார்க்கு ஏற்பட்டிருந்த தனித் தொகுதியை ஒழிக்கும் பொருட்டுச் சில தினங்களுக்கு முன் உண்ணா விரதமிருக்கத் தொடங்கியதும், அதன் பின் தலைவர்கள் என்பவர்கள் பம்பாயில் சமரச மகாநாடு கூட்டியதும், அதில் தீண்டாதாரின் தனித் தொகுதி முறை பலிகொடுக்கப்பட்டதும் பழய சங்கதிகளாகி விட்டனவென்று கூற முடியாது. இவ்வாறு தலைவர்களின் மகாநாட்டைக் கூட்டி ஒரு சமரச முடிவை யுண்டாக்கப் பாடுபட்டவர்களில் திரு. பண்டித மாளவியாவே முதன்மை யானவர் என்று எங்கும் புகழப்பட்டு வருகிறது. தனித்தொகுதியை ஒழிக்க விரதமிருந்த திரு. காந்தியாரோ தனித் தொகுதியை ஒழிப்பது மட்டும் போதாது, தாழ்த்தப் பட்டார்க்கு “ஜாதி இந்துக்களுக்கு இருந்து வரும் சகல உரிமைகளும் கொடுக்கப்படவேண்டும்” என்று கூறினார். ஆகையால் தீண்டாதார் தலைவர்கள் தனித் தொகுதியை விட்டுக் கொடுத்துப் பொதுத் தொகுதித் தேர்தல் முறையை ஒப்புக் கொள்ளும்படி செய்வதற்காக நாடெங்கு முள்ள காங்கிரஸ் வாதிகளும், சீர்திருத்தவாதிகளும் தீண்டாமையை விலக்கு வதற்கு முயற்சி செய்வதாகப் பாவனைகள் செய்தனர். வடநாட்டில் பல கோயில்களைத் திறந்து விட்டு விட்டதாகவும் சில இடங்களில் தீண்டாத வகுப்பினருடன் உயர்ந்த வகுப்பு இந்துக்கள் சமபந்தி போஜனம் செய்த தாகவும், தண்ணீர் அருந்தியதாகவும், தின்பண்டம் தின்றதாகவும் செய்திகள் வெளிவந்தன.

தீண்டாதார்க்குப் பூணூல் போட்டு தீட்சை செய்வித்து அவர்கள் மீது ஒட்டிக் கொண்டிருக்கும் “சண்டாளத்துவ”த்தைப் போக்க முயற்சித்த திரு. மாளவியா புரோகிதர், ஒரு நிபந்தனையுமில்லாமல் தன்னுடைய வீட்டிற்குத் தீண்டாதாரை அழைத்துச் சென்றதாகவும் தனது வீட்டிலுள்ள சொந்தக் கோயிலைத் தீண்டாதார்க்காகத் திறந்து விட்டதாகவும் பத்திரிகைகளில் வெளிவந்தன. வேதங்களையும், ஆகமங்களையும், ஸ்மிருதிகளையும், புராணங்களையும் உருப்போட்டு உருப்போட்டு மூளையில் சுரணையே இல்லாமல் இருக்கும் மரக்கட்டை வைதீகர்களுக்கெல்லாம் தலைவராக விளங்கும் திரு. பண்டித மாளவியாவே பூணூல் போடுதல், தீiக்ஷ செய் வித்தல், கங்கையில் குளிப்பாட்டுதல் ஆகிய ஒரு சடங்குமில்லாமலேயே தீண்டாமையை ஒழித்துவிட்டார் என்னும் செய்தியைக் கேட்டவுடன் பத்திரிகைகளெல்லாம் அவரை அளவு கடந்து புகழத் தொடங்கின; வைதீகப் பார்ப்பனர்கள் ஒன்றும் சொல்லுவதற்கு வழியில்லாமல் திகைப்படைந்தனர்.

ஆனால் நாம் மாத்திரம், இவைகளெல்லாம், தீண்டாதார்களை ஏமாற்றித் தனித் தொகுதித் தேர்தல் முறையை ஒழிப்பதற்காகச் செய்யப்படும் கண்கட்டி வித்தைகள் என்றே கூறிவந்தோம்.

இந்து மதத்தை அப்படியே வைத்துக் கொண்டு இந்துமத சாஸ்திரங்களை அப்படியே வைத்துக் கொண்டு தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று கூறுவது சுத்த அயோக்கியத்தனம் என்று சொல்லிக் கொண்டே வந்தோம். இத்தகைய நமது அபிப்பிராயம் சிறிதும் குற்றமுள்ள தல்ல என்பதைக் காட்ட திரு. மாளவியாவைப் பற்றித் தற்போது வெளி வந்திருக்கும் செய்தி ஒன்றே போதுமானதாகும்.

“வைதீக மாளவியா தீண்டாமையை ஒழிப்பதற்கு முனைந்து விட்டார் என்று புகழப்பட்ட வருணாச்சிரம தரும மாளவியா, களிமண்ணும் கங்கா ஜலமும் எடுத்துக் கொண்டு இங்கிலாந்துக்குக் கப்பலேறிச் சென்ற மாளவியா, பம்பாயைச் சேர்ந்த கல்பதேவி என்னுமிடத்தில் சென்ற 2 – 10 -32ல் ஒரு கூட்டத்தில் பேசும்போது ‘பழய கருப்பனே கருப்பன்’ என்னும் சங்கதிக்கு வந்து விட்டார். அவர்,

“சம்பந்தி போஜனம், கலப்புமணம் இவைகளைப் பொறுத்த வரையில் ஜாதிக் கட்டுப்பாடுகளை ஒழிக்கும் விஷயத்தை நான் ஒப்புக் கொள்ள முடியாது. தனிப்பட்ட வகையினாலோ, குடும்ப சம்பந்தத்தினாலோ இம்முறைகளை அனுசரிக்க முயற்சிப்பது முடியாது காரியம்”

என்று பேசியுள்ளார். இதிலிருந்த திரு. மாளவியா புரோகிதரின் மனப்பான்மை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஜாதிக் கட்டுப்பாடு அதாவது வருணாச்சிரம தர்மம் இருக்கும் வரையிலும் தீண்டாமை ஒழியும் என்று பகுத்தறியும் மூளையையுடைய எவராவது ஒப்புக் கொள்ள முடியுமா? இன்று நமது நாட்டு மக்கள் ஒருவரை ஒருவர் துவேஷிப்பதற்கும், ஒரு வகுப்பினர்க்கு மற்றொரு வகுப்பினர் கொடுமை செய்வதற்கும் காரணமாயிருப்பது பாழும் ஜாதிக்கட்டுப்பாடு, அதாவது வருணாச்சிரம தருமம் என்பதை கடுகளவு புத்தியுள்ளவர்கள் கூட மறுக்க முன் வரமாட்டார்களே. உயர்ஜாதி இந்துக்கள் தாம் வசிக்கும் தெருவில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடந்தால் தீட்டுப்பட்டுவிடும் என்று நினைப்பது ஜாதி அகங்காரமல்லவா? அவர்கள் தம்முடன் சமத்துவமாக உட்காரக் கூடாதென்று நினைப்பதும், பள்ளிக்கூடங்கள், காப்பி கிளப்புகள்  முதலியவைகளில் தம்முடன் சமமாக உட்கார்ந்து படிக்கவோ சாப்பிடவோ இடந்தராமலிருப் பதற்கும் காரணம் அர்த்தமற்ற ஜாதிக் கட்டுப்பாடு அல்லவா? ஆகையால் ஜாதிக் கடுப்பாட்டை வைத்துக் கொண்டால் ஜாதி உயர்வு தாழ்வை அப்படியே வைத்துக் கொண்டால் வருணச்சிரம தருமம் என்னும் அர்த்தமற்ற கொள்கையை ஒப்புக் கொண்டால் எப்படித் தீண்டாமை அடியோடு போக முடியும் என்று யோசனை செய்து பார்க்கும் படி கூறுகின்றோம்.

உண்மையிலேயே தீண்டாமை ஒழிய வேண்டுமானால் முதலில் சாதி வித்தியாசம் ஒழிந்தாக வேண்டும். சாதி வித்தியாசம் ஒழிய வேண்டுமானால் சாதிக்கட்டுப்பாடும், வருணாச்சிரம தருமங்களும் குழிவெட்டிப் புதைக்கப் பட்டாக வேண்டும். இவைகளை நிறைவேற்றச் சமபந்தி போஜனமும் கலப்பு மணமும் எங்கும் நடைபெற வேண்டும். தீண்டாதார்கள் மக்கள் எல்லாம் வைதீகப் பார்ப்பனர்களின் வீட்டு மாப்பிள்ளைகளாகவும், மருமக்கள்                     களாகவும் வேண்டும். வைதீகப் பார்ப்பனர்களுடைய மக்களும் தீண்டாதார் கள் வீட்டு மாப்பிள்ளைகளாகவும் மருமக்கள்களாகவும் ஆக வேண்டும். இவ்வாறே ஒவ்வொரு சாதிகளும் தமக்கு மேற்பட்ட சாதிகளுடனும், கீழ்ப்பட்ட சாதிகளுடனும் கலந்து ஒன்றாக வேண்டும். இப்படியே “பஞ்சமர்” முதல் “பார்ப்பனர்” வரையுள்ள எல்லா வகுப்புகளும் கலந்து ஒன்றாகும் வரையிலும் ஜாதிகள் ஒழியாது தீண்டாமையும் ஒழியாது.

இன்று இக்காரியங்களுக்குத் தடையாய் இருப்பன இந்து மதமும், அதில் உள்ள வேத, புராண, இதிகாச சாஸ்திரங்களும், அவைகளைப் படித்து விட்டுச் சொந்த புத்தியில்லாதிருக்கும் திரு மாளவியா போன்ற மண்ணு ருண்டைகளுமே யாகும்.

ஆனால் இந்த திரு. மாளவியா பண்டிதர், தீண்டாதார்களுக்குக் கோவில் பிரவேசம் அளிக்க வேண்டும் என்றும், குளம், கிணறு, நடைபாதை, பள்ளிக்கூடம் முதலியவைகளில் சமத்துவம் அளிக்க வேண்டும் என்று மாத்திரம் பேசுகிறார். இதன் பொருட்டுத் தென்னாட்டிற்கும் பிரசாரம் பண்ணவரப் போகிறாராம். அவர் தென்னாட்டிற்கு வருவாரானால் கட்டாயம் அவமானப்படுவார் என்று மாத்திரம் தெரிவிக்க விரும்புகிறோம்.

சாதிகள் ஒழியாமல் – சாதி கட்டுப்பாடுகள் அழியாமல் – வருணாச்சிரம தருமம் மாளாமல் – திரு. மாளவியா சொல்லும்  தீண்டாமை ஒழியப் போவ தில்லை; ஒரு சமயம் சட்டத்தின் மூலம் கோயில் பிரவேசம் மற்றும் பொது ஸ்தாபனங்களில் சம உரிமை முதலியவைகளை ஏற்படுத்தாமலும் அதனால் தாழ்த்தப்பட்டார்க்கு எள்ளத்தனையும் நலங்கிடைக்கப் போவதில்லை. உயர்ந்த வகுப்பினர் என்பவர்கள் வாயில்லாப் பூச்சிகளாகிய அவர்களை இன்னும் ஈவு இரக்கமின்றிக் கொடுமைப் படுத்தவே முன்வருவார்கள் என்பது திண்ணம்.

தீண்டாமை ஒழிவதற்காக “இன்னொரு முறை பட்டினிகிடக்கப் போகிறேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் திரு. காந்தியடிகளும் இதே கொள்கையுடையவர் தான் என்பதை நாம் இப்பொழுது கூறவேண்டிய தில்லை. நமது “குடி அரசு” வாசகர்களுக்கெல்லாம் நன்றாய்த் தெரிந்த விஷயமாகும். ஆகையால்தான் திரு. காந்தியார், திரு. மாளவியா போன்ற வர்களின் ஆதிக்கத்தில் உள்ள ‘காங்கிரஸ்” சபையில் மதப் பாதுகாப்பையும் ஜாதிப் பாதுகாப்பையும், சாஸ்திரப் பாதுகாப்பையும்,  நாகரீகப் பாதுகாப்பை யும் திட்டங்களாக அமைத்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும் முன்பே பல தடவைகள் விளக்கிக் கூறப்பட்ட விஷயமாகும். ஆகையால் தற்போதைய கொள்கையையுடைய காங்கிரஸ் ஸ்தாபனம் இருக்கும் வரை யிலும் திரு. காந்தியார், திரு. பண்டித மாளவியா போன்றவர்கள் காங்கிரசைக் கைப்பற்றிக் கொண்டிருக்கும் வரையிலும் – ஜாதியோ, வருணாச்சிரம தருமமோ; ஜாதிக் கட்டுப்பாடோ, தீண்டாமையையோ ஒழிவதற்குச் சிறிதும் வழியேயில்லை யென்று சத்தியமாகக் கூறுவோம்.

இது நிற்க, இனி, திரு. மாளவியா அவர்களும் திரு. காந்தி அவர்களும் சொல்லுகிறபடியாவது, கோயில்களிலும் குளம் கிணறு நடைபாதை பள்ளிக் கூடம் முதலியவைகளிலுமாவது தீண்டாதார்க்குச் சமவுரிமையளிக்க நமது நாட்டு வைதீகர்கள் சம்மதிப்பார்களா என்று கேட்கின்றோம். தமிழ் நாட்டில், இப்பொழுதே எங்கும் பகுத்தறிவற்ற மண்ணுருண்டைக் கூட்டத்தார், “மதம் போச்சு, சாஸ்திரம் போச்சு, பழக்க வழக்கம் போச்சு” என்று கூச்சலிட ஆரம் பித்து விட்டார்கள். சில தினங் களுக்கு முன் (2 – 10 – 32) தஞ்சையில் வாயள வில் வைதீகம் பேசும் வக்கீல் பார்ப்பனர்கள் கூடிய வருணாச்சிரம தர்மக் கூட்டத்தில் தீண்டாதார்க்குக் கோயில் பிரவேசம் அளிக்கும் விஷயத்தைக் கண்டித்துத் தீர்மானங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அக்கூட்டத்தினர், கோயில் பிரவேசத்தின் பொருட்டு குருவாயூரில் திரு. கேளப்பன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்ததைக் கண்டித்தும், கள்ளிக் கோட்டை சாமொரின் அவர்கள் குருவாயூரில் கோயிலைத் தீண்டாதார்களுக்குத் திறந்து விடா மலிருந்த செய்கையைப் பாராட்டியும் தீண்டாமையை ஒழிக்க முயலுவதும், கோயில் பிரவேசமளிக்க முயலுவதும் இந்து மத ஆகம, வேத, புராண சாஸ்திரங்களுக்குப் பொருத்தமுடையதல்ல வென்றும் தீர்மானங்கள் நிறை வேற்றியிருக்கின்றார்கள். இன்னும் கோயில் பிரவேசத்தின் பொருட்டுச் சென்னைச் சட்டசபையில் சட்டம் நிறைவேற்ற அனுமதியளிக்கக் கூடாது என்று கவர்னர் வைசிராய் முதலியவர்களை வேண்டிக் கொள்ளுவதாகவும் தீர்மானம் பண்ணியிருக்கிறார்கள்.

மற்றொரு வைதீகராகிய திரு. ராஜா பகதூர் கிருஷ்ணமாச்சாரியார் என்பவர் தீண்டாமை ஒழிக்கும் விஷயத்தில் அரசாங்கமே கவனம் செலுத்திவரும் சுதேச முஸ்லிம் சமஸ்தானமாகிய ஹைதராபாத்திற்குப் போய் தீண்டாமை விலக்குக்கு எதிர் பிரசாரம் பண்ணுகிறார். ஹைதராபாத்தில் சென்ற 30 – 9 – 32ல் கூடிய வக்கீல்களில் மகாநாட்டில், திரு. ராஜா பகதூர் கிருஷ்ணமாச்சாரியார் தலைமை வகித்துப் பேசும் போது,

“சமூக, மத சம்பந்தமான விஷயங்களில் அரசாங்கத்தார் தலையிடக்கூடாது”

என்றும்,

“இந்து மதமும், இஸ்லாம் மதமும் கடவுளால் வெளியிடப் பட்ட மதமாதலால் இவைகளில் சட்டத்தைப் புகுத்துவது சரியாகாது”

என்றும் வைதீகப்பிரசாரம் பண்ணியிருக்கிறார். திரு. ஆச்சாரியார் இந்து மதத்துடன் மதத்தையும் சேர்த்துக் கொண்டு பேசியது முஸ்லிம் மதத்தைப் பற்றி அவருக்குள்ள கவலையைக் காட்டவா? அல்லது ஹைதராபாத் அரசாங்கத்தாரை ஏமாற்றவா? என்று கேட்கின்றோம்.

இன்னும் வைதீக பார்ப்பனர்களுடைய பிடிவாதத்தை அறிய வேண்டு மானால் சில நாட்களுக்கு முன் ஒரு பிரபலமான தமிழ் தினசரி ஒன்றில் பார்ப்பன கனபாடி ஒருவர் எழுதியிருக்கும் ஒரு கட்டுரையில் உள்ள சில விஷயங்களைக் கவனித்தால் உண்மை விளங்கும். அவை:-

“ஒரு வகுப்பாரது நோக்கத்தை நிறைவேற்ற இன்னொரு வகுப்பாரது உணர்ச்சி பாதிக்கப் படலாகாது. நமது தேசத்தவர் “ஹிந்துக்கள்” என ஒரு வழிப்பாடாய் அழைக்கப்பட்டாலும், வெவ்வேறு வகுப்பிற்குரிய வாழ்க்கையையும் உடையவர்களாகவே இருக்கின்றனர். ஒரு வகுப்பாரைப் புண்படுத்திப் பட்டினிகிடந்து ஒன்றைப் பெறுவது சிலாக்கிய மல்ல”

என்று குறிப்பிட்டிருப்பதைக் கொண்டு, தற்போதிருக்கும், ஜாதி வித்தி யாசங்களும், பழக்கவழக்கங்களும் மாற்றுவதும் மாற்றுவதற்கு முயலுவதும் சரியல்ல என்பதே வைதீகர்களின் எண்ணம் என்பதை உணரலாம். ஆகவே, இனி திரு. காந்தியவர்கள் பட்டினி கிடந்தாலும் அதை எந்த வைதீகரும் ஆதரிக்கப் போவதில்லையென்பதையும் இப்போழுதே நிச்சயப்படுத்திக் கொள்ளலாம். மேலும்,

“உத்சவ காலங்களில் சுவாமி ஊர்வலம் வருவதும், உத்சவ முடிவில் நடக்கப்படும் ரதோத்சவமும் தாழ்ந்த வகுப்பினருக்குக் காட்சி கொடுக்கவே யென்பதை யாவரும் அறியலாம். ரதோத்சவ காலங்களில் தீண்டாதார்கள் என்பவர்களைத் தீண்டலும் தகும் என்பது வைதீகர்களது கொள்கை.  எனவே தாழ்த்தப்பட்டவர்களை இந்துக்கள் சமஉரிமை கொடுத்துச் சகோதரர்களாகவே பாவிக் கின்றனர். இப்பொழுது புதிய வழியில் அவர்களைக் கோவில்களில் புகுந்து வணங்கச் செய்ய வேண்டுமெனத் தலைவர்கள் முயலுவதைக் கண்டு வைதீகர்களாகிய நாங்கள் வருந்துகிறோம்.”

என்று குறிப்பிட்டிருப்பதைக் கொண்டு கோயில் பிரவேச விஷயத்தில் வைதீகர் கொண்டுள்ள மனப்பான்மையை அறியலாம்.

மேற்கூறிய பல விஷயங்களையும் உதாரணங்களையுங்கொண்டு, திரு. மாளவியா பண்டிதர் பிரசாரம் பண்ணப் போவதாகக் கூறும் போலித் தீண்டாமை ஒழிப்புப் பிரசாரத்தைக் கூட ஆதரிக்க எந்த வைதீகரும் தயாராயில்லை என்பதை அறியலாம்.

ஆகவே யாரும் திரு. காந்தியோ அல்லது, திரு. மாளவியாவோ, அல்லது காங்கிரசோ செய்யும் தீண்டாமை விலக்குப் பிரசாரத்தைக் கண்டு ஏமாற வேண்டாம், தீண்டாமை ஒழிப்புப் பிரசாரம் பண்ணும் காங்கிரஸ் பார்ப்பனர்களை “ஜாதிகளை அழிப்பதற்கும் ஜாதிக்கட்டுப்பாடுகளை அழிப்பதற்கும், காரணமாக இருக்கும் கலப்பு மணத்தையும் சமபந்தி போஜனத்தையும் ஒப்புக் கொள்ளுகிறார்களா” என்று கேட்டால் அவர் களுடைய குட்டு வெளிப்பட்டுப் போகும். சமபந்தி போஜனத்திற்கு அனேகர் ஒப்புக் கொண்டாலும், கலப்பு மண விஷயத்தை ஒப்புக் கொள்ளத் துணிய மாட்டார்கள். இதற்கு நமது நாட்டு பார்ப்பனர்கள் சிலர் மனப்பூர்வமா ஒப்புக் கொண்டாலும், திரு. மாளவியா போன்ற வைதீகர்கள் ஒரு நாளும் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். ஆகையால் எல்லோருக்கும் இந்து மதப்பிரசாரம் பண்ணும் காங்கிரசிடமும் அதன்பிரச்சாரகர்களிடமும் ஜாக்கிரதையாயிருக் கும்படி எச்சரிக்கை செய்கின்றோம்.

-- குடி அரசு – தலையங்கம் – 09.10.1932

தாழ்த்தப்பட்டார் விடுதலை

 

தாழ்த்தப்பட்டார் விடுதலை


இந்துக்கள் மாயவலை

பொதுவாக உலகில் வாழும் ஜீவப் பிராணிகளெல்லாம் இன்பத்தையே அடைய விரும்புகின்றன. இது உலக சுபாவமாகும். இது போலவே அறிவில் சிறந்தவர்கள் என்று கருதப்படும் மனிதர்களும் இன்பத்தோடு வாழ விரும்புவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் மற்ற ஜீவப் பிராணி களுக்கும், மனிதர்களுக்கும் தாங்கள் சௌக்கிய மடையும் விஷயத்தில் ஒரு வித்தியாசம் மாத்திரம் உண்டு. மற்றய பிராணிகள் வேறுள்ள ஜீவன் களையெல்லாம் தங்களுக்கு அடிமையாக வைத்துக்கொண்டு, அவைகளின் உழைப்பால் தாங்கள் கஷ்டப்படாமல் சௌக்கியமாக ஜீவிக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. ஒவ்வொரு ஜீவப் பிராணி வகையும் தாமே உழைத்து வருந்திச் சௌக்கியமடைகின்றன. ஆனால் மனிதன் மாத்திரம் பிற மனிதன் தமக்குக்கீழ் அடங்கி நடக்கும்படி செய்து, அவர்கள் உழைப்பைக் கொண்டு, தான் சிறிதும் கஷ்டப்படாமல் சுகம் அனுபவிக்க ஆசைப் படுகின்றான். இக் குணம் முற்காலத்தில் ஒரு மனிதனிடம் உற்பத்தியாகி, பின்பு அது பல மனிதர்களிடம் பரவி, கடைசியில் ஒரு கூட்டத்தினரிடம் நிலைத்து விட்டது என்று யூகித்துக் கூறுவது பொருத்தமாக இருக்கலாம். இக்குணத்திற்கே ‘சுயநலம்’ என்று சொல்லப்படுவது. இக்குணத்தையே தொழிலாகக் கொண்ட ஒரு கூட்டம் பல்லாயிரக்கணக்கான வருஷங்களாக உலகில் இருந்து கொண்டுதான் வருகிறது.

இக்கூட்டத்தினரின் சூழ்ச்சியினால் தான் உலகில் தற்போது நமது கண்முன் காணப்படும் எண்ணற்ற சாதிப் பிரிவுகளும், மதவேற்றுமைகளும், கொடுமைகளும், குருட்டுப்பழக்க வழக்கங்களும் ஏற்பட்டு நிலை பெற்று வருகின்றன,

எங்கும் “சமத்துவம்” “சகோதரத்துவம்” “விடுதலை” “சுதந்திரம்” என்னும் வார்த்தைகள் தோன்றி சுயநலக்கூட்டத்தாரின் சூழ்ச்சியால் அடிமைப்பட்டு மனிதத் தன்மையை மறந்து கிடந்த மக்களை விழிக்கச் செய்கின்ற இக்காலத்திலும் பரம்பரையாக கஷ்டமின்றிச் சுகம் அனுபவித்து வந்த கூட்டத்தார் தங்கள் சுயநலத்தை விட்டுக்கொடுக்கச் சம்மதிக்கா மலிருப்பதில் ஆச்சரியமில்லை.  நெடுங்காலமாக அனுபவித்து வந்த சௌக்கியத்தைத் திடீரென்று எப்படி தியாகம் பண்ணிவிட முடியும்?  தங்கள் சமத்துவத்திற்குப் போராடத் தூக்கத்தினின்று எழுந்து புதிய ஊக்கத்துடன் முன்வந்திருக்கும் மக்களை மீண்டும் அடிமைப்படுகுழியில் வீழ்த்தவே முயற்சி செய்வார்கள் என்பதில் ஐயமில்லை.

ஆனால் “மனுதருமத்தை”ச் சட்டமாகவும், அதை ஆக்கிய பார்ப்பனர்களை மந்திரிகளாகவும், குருமார்களாகவும் வைத்துக் கொண்டு அரசாண்ட இந்திய மன்னர்களின் அரசாட்சி ஒழிந்து “பிரிட்டிஷ்” அரசாட்சி ஏற்பட்டதின் பலனாக, இன்று மனிதத்தன்மையை மறந்து அடிமையாகக் கிடந்த மக்கள், தங்கள் மனிதத் தன்மையைப் பெற முயற்சிக்கின்றனர். பழய இந்து மன்னர்களின் அரசாங்கம் இப்பொழுதும் நமது நாட்டில் நிலைத்திருக் குமாயின் இன்று தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் விரும்புவது போலவும், கிளர்ச்சி செய்வது போலவும், சமத்துவத்திற்கும், சுதந்திரத்திற்கும் கிளர்ச்சி செய்வார் களானால் கட்டாயம் அச்சமூகத்தார் முழுவதும் சித்திரவதைக்கும் சிரச்சேதத் திற்கும் உட்படுவார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்பட்டபின் தாழ்த்தப்பட்ட மக்களில் சிலர் கொஞ்சம் கல்விப் பெற்றதன் பயனாலும், தாங்களும் மற்றவர்களைப் போல் மனிதர்கள் தான் என்பதை உணர்ந்ததன் பயனாலும், தாங்கள் உழைக்க பிறர் அதைக் கொண்டு உயிர் வாழ்ந்து, தங்கள் தலை மேலேயே உட்கார்ந்து கொண்டு அமிழ்த்திக் கொண்டிருக்கும் கொடுமையை உணர்ந்ததன் பயனாலும், தாங்கள் இந்துக்களினின்றும் தனியாகப் பிரிந்தாலொழிய தங்களுக்கு ஒருவித விமோசனமும் ஏற்படாது என்பதை அறிந்து அதற்காகக் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தனர். இக்கிளர்ச்சி சமூகத்திலிருந்து ஆரம்பித்து அரசியலிலும் நுழைந்து விட்டது.

இந்துக்களின் அரசாட்சி ஒழிந்துவிட்ட கால முதலே அவர்கள் ஆதிக்கமும் குறைந்துவிட்டது. ஆகையால் எப்பொழுதும் அடக்கி ஆண்டு வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை மதத்தைக் கொண்டாவது. வேத சாஸ்திரங்களைக் கொண்டாவது, பலாத்கார அதிகாரத்தைக் கொண்டாவது இனியும் அடக்கி வைத்திருக்க முடியாது என்பது நிச்சயம். ஆகவே அரசியல் ஆதிக்கம் பெற்றால் தான் அவர்களை முன்போல அடக்கி ஆளமுடியும். இந்தக் காரணத்தால் தான் வெள்ளைக்காரர்களின் ஆதிக்கத்தைக் குறைத்து தங்கள் கையில் ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் வைத்துக் கொள்ளக் கூடிய “சுயராஜ்ய”த்திற்காகச் செய்யப்படும் கிளர்ச்சியில், உயர்ந்த சாதிக்காரர் களும், வைதீகர்களும், மத பக்தர்களும் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

 திரு. காந்தி உள்ளிட்ட காங்கிரஸ்காரர்களும், பண்டித மாளவியா, திரு மூஞ்சே யுள்ளிட்ட இந்து மகாசபைக்காரர்களும் தாழ்த்தப்பட்ட கூட்டத் திற்குத் தனித் தொகுதி ஏற்படுத்தக் கூடாது என்று பலமாக எதிர்ப்பதற்குக் காரணம் இதுவேயாகும். முஸ்லீம்கள் தனித் தொகுதி வேண்டிப் பிரிந்து நிற்கும் காலத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தாரும், மற்ற சிறுபான்மைச் சமூகத்தாரும், தனித்தொகுதி பெற்றுப் பிரிந்து நிற்பார்களாயின் இந்து சமூகத்தாரின் கூட்டம் சட்ட சபைகளில் மைனாரிட்டியாகி விடும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறாகி விட்டால், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் தமக்கு வேண்டிய சௌகரியங்களை முஸ்லீம்களுடையவும் மற்றச் சிறுபான்மைச் சமூகத்தினருடையவும் பிரதிநிதிகளின் உதவி பெற்றுச் சட்ட சபைகளின் மூலம் செய்து கொள்ளலாம் என்பதில் சந்தேக மில்லை. இவ்வகையாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் சமத்துவம் பெறக்கூடிய சந்தர்ப்பம் பெற்று விட்டால் அது, இதுவரையிலும் அவர்களைக் கொடுமைப் படுத்தி அடக்கியாண்டு வந்த உயர்ந்த சமூக இந்துக்களின் சுயநலத்திற்குப் பாதகம் உண்டாக்காமற் போகாது. இக் கருத்துகளைக் கொண்டுதான் “காங்கிரஸ்” பிரதிநிதி என்ற பெயரோடு “வருணாச்சிரம தரும”த்தின் பிரதிநிதியாகச் சென்ற திரு. காந்தி யவர்களும் மற்ற இந்து மகாசபையைச் சேர்ந்தவர்களுமான வட்டமேஜை மகாநாட்டுப் பிரதிநிதிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித் தொகுதி ஏற்படுத் துவதை ஒரே அடியாக எதிர்த்தார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஆனால்  இச்சூழ்ச்சியை அறிந்த தாழ்த்தப்பட்ட மக்கள், தங்களுக்குத் தனித் தொகுதியே வேண்டுமென விரும்புகின்றனர். அச்சமூகத்தின் தலைவர்களாகிய திருவாளர்கள் டாக்டர் அம்பெட்கார், ஆர். சீனிவாசன், எம், சி. ராஜா, வி. ஐ. முனுசாமி பிள்ளை போன்ற தலைவர்களெல்லாம் தங்களு டைய சமூகத்திற்குத் தனித் தொகுதியே வேண்டுமென்று கிளர்ச்சி செய்தனர். இவர்களில் திரு. எம். சி. ராஜா அவர்களைத் தவிர மற்றவர்கள் இன்றும் தனித் தொகுதி வேண்டுமென்பதிலேயே உறுதியாக இருக்கின்றனர்.

திரு. எம். சி. ராஜா மட்டிலும், எவ்வித சூழ்ச்சியினாலோ ஏமாற்றப்பட்டு இந்து மகாசபையைச் சேர்ந்த திரு. மூஞ்சே அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தனித் தொகுதியை எதிர்த்தும், கூட்டுத் தொகுதியை ஆதரித்தும் பிரசாரம் பண்ணிக் கொண்டு வருகிறார். உண்மையில் இப்பிரசாரத்திற்கு காரணம், இந்துக்களின் சூழ்ச்சி என்பதில் சிறிதும் ஐயமில்லை. .இந்துக்களின் வலையிற் சிக்கி இருக்கும், திரு, எம். சி. ராஜா அவர்களைப்போல் அவர் களுடைய வலையிற் சிக்கிய வெகு சிலரே ராஜாவின் பேச்சை ஆதரிக் கின்றார்கள்.

ஆனால் திரு. ராஜா அவர்களின் அபிப்பிராயந்தான் தாழ்த்தப்பட்ட வர்களின் அபிப்பிராயம் என்று நினைக்குமாறு, இந்துக்களின் ஆதிக்கத் திலிருக்கும் தேசீயப் பத்திரிகைகள் எனப் பெயர் வைத்துக் கொண்டிருப் பவை, திரு. ராஜாவை ஆதரித்து விளம்பரம் பண்ணிக் கொண்டு வருகின்றன.

உண்மையில் தாழ்த்தப்பட்ட சமூகம் சமத்துவம் பெற வேண்டு மானால், அவர்கள் இந்துக்களினின்றும் பிரிந்து தங்கள் கால்பலத்தில் நின்று கொண்டே கிளர்ச்சி செய்தால் தான் முடியும் என்பதை நாம் அடிக்கடி எடுத்துக் காட்டியிருக்கிறோம். ஆகவே டாக்டர். அம்பெட்கார், சீனிவாசன், வி. ஐ. முனிசாமி பிள்ளை ஆகியவர்கள் விரும்புகிறபடி அரசியல் சீர்திருத் தத்தில் தனித் தொகுதி பெற்றால் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலை பெற முடியும். இவர்கள் கூறுவது தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தாரின் அபிப்பிராயம் என்பதையும், திரு. எம். சி. ராஜாவின் அபிப்பிராயம் இந்துக்களின் அபிப் பிராயமே தவிர தாழ்த்தப் பட்ட சமூகத்தாரின் அபிப்பிராயம் அல்ல வென்ப தையும் சென்ற 5-5-32ல் கமிட்டியில் திரு. வி.ஐ. முனுசாமி பிள்ளை அவர்கள் தலைமையின் கீழ் கூடிய அகில இந்திய தாழ்த்தப்பட்டார் காங்கிரஸ் தீர்மானத்தைக் கொண்டும், சென்ற 10-7-32ல் பம்பாயில் திரு. எம். சி. ராஜா அவர்கள் தலைமையில் கூடிய தாழ்த்தப்பட்டார் மகாநாட்டைக் கொண்டும் அறியலாம். டாக்டர் அம்பெட்கார் கட்சியை ஆதரிப்போரால் கூட்டப்பட்ட கமிட்டி காங்கிரசுக்கு, பல மாகாணங்களிலிருந்தும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பிரதிநிதிகள் வந்திருந்தனர். தனித் தொகுதியை எதிர்க்கும் கட்சி யினரும் வந்திருந்தனர். அவர்கள் மிகச் சிலராக இருந்த காரணத்தால் மகாநாட்டை விட்டு வெளியேறி விட்டனர். ஆகவே தனித்தொகுதியை ஆதரிப்பதாகவும், இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டின் போது இங்கிலாந்தில் செய்து கொள்ளப்பட்ட சிறுபான்மையோர் ஒப்பந்தத்தை ஆதரிப்பதாகவும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இந்த மகாநாட்டிற்கு இந்துக்களின் எதிர்ப்பு இருந்ததே தவிர ஆதரிப்பு சிறிதும் இல்லை. ஆகவே இம் மகாநாட்டுத் தீர்மானங்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தாரின் உண்மையான அபிப்பிராயம் என்று கூறுவதற்கு என்ன தடையுண்டு?

பம்பாயில் திரு. எம். சி. ராஜா கட்சியினரால் கூட்டப்பட்ட மகா நாட்டிற்கு சுமார் 200, பிரதிநிதிகளே வந்திருந்தனர். மகாநாட்டிற்கு எதிராகத் தனித் தொகுதியை ஆதரிக்கும் கட்சியைச் சேர்ந்தவர்கள் 250 பேர்கள் மகாநாட்டுக் கொட்டகைக்குள் விடப்படாமல் தடுக்கப்பட்டிருக்கின்றனர். 250 என்னும் எண்ணிக்கை,  பொதுத் தொகுதியை ஆதரிக்கும் தேசீயப் பத்திரிகை களில் காணப்படுகின்றதாதலால், இது உண்மையாக இருக்க முடியாது. 250க்கு மேல் அதிகமாகத்தான் இருக்க வேண்டும். அன்றியும் இம் மகாநாடு இந்துக் களின் ஆதரவின் மேல்தான் கூட்டப்பட்டதாகும். ஆகவே இம் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானங்கள் இந்துக்களின் அபிப்பிராயத்தைச் சேர்ந்தனவே யொழிய, தாழ்த்தப்பட்ட சமூகத்தாரின் அபிப்பிராயத்தைச் சேர்ந்தவை யென்று கூற முடியாது என்பது நிச்சயம். இம் மகாநாட்டில் தான் கூட்டுத் தொகுதியை ஆதரிப்பதாகவும், “ராஜா – மூஞ்சே ஒப்பந்த”த்தை ஆதரிப்பதாகவும், வட்டமேஜை மகாநாட்டில் செய்யப்பட்ட ‘சிறுபான்மை யோர் ஒப்பந்த’த்தை எதிர்ப்பதாகவும் தீர்மானித்திருக்கிறார்கள்.

இந்து மகாசபைக்காரர்களின் தூண்டுதலால் நடத்தப்பட்ட இந்த மகா நாட்டில் தலைமை வகித்த திரு. எம். சி. ராஜா அவர்கள் பேச்சில் காணப்படும் வாதங்களிலும் ஒரு புதுமையும் தோன்றவில்லை. வழக்கம்போல் இந்துக் களை ஆதரித்தால்தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்கு அரசாங்கத்தில் மந்திரி முதலிய உத்தியோகப் பதவி கிடைக்குமென்றும், இந்துக்களின் துணையோ, உதவியோ இல்லாமல் தாழ்த்தப்பட்ட சமூகத்தார் சமத்துவமோ, சுதந்திரமோ பெற முடியாதென்றும் கூறியிருக்கிறார்.

அடிக்கடி இவர் மந்திரி பதவியையே கூட்டுத்தொகுதிக்கு உதாரண மாகக் கூறி வருவதைக் கொண்டு, மந்திரிப் பதவி மோகத்தினாலேயே இந்து மகாசபைக்காரரின் பாட்டுக்குத் தாளம் போடுகிறார் என்று கூறுகிறார்கள். அது எப்படியாவது இருக்கட்டும். இந்து சமூகத்தினரின் உதவியோ, துணையோ இல்லாமல், தாழ்த்தப்பட்டார் சமத்துவம் பெற முடியாது என்னும் வாதத்தை மாத்திரம் கவனிப்போம்.

இது வரையிலும் பல ஆயிரக்கணக்கான வருஷங்களாக இந்துக் களின் தயவை எதிர்பார்த்து வாழ்ந்து வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு அவர்கள் செய்த நன்மை என்ன? தாழ்த்தப்பட்டவர்களைக் கல்வி கற்க அனுமதிக்காமலும் தெருவில் நடக்க அனுமதிக்காமலும், நல்ல உடை உடுத்த அனுமதிக்காமலும், கிணறு குளங்களில் தண்ணீர் எடுக்க அனுமதிக்காமலும் செய்ததுதான் கிடைத்த பலன். பிரிட்டிஷ் அரசாங்கம் இருக்கின்ற இக் காலத்தில் கூட தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பொது இடங்களில் சமத்துவம் கொடுக்க மறுக்கிறார்கள் என்றால் பிரிட்டிஷ் அரசாங்கமில்லாமல் தங்கள் கையிலேயே எல்லா அதிகாரமும் இருக்குமானால் என்னதான் செய்ய மாட்டார்கள் என்று கேட்கிறோம். இதைபற்றி நாம் அதிகமாக விரித்துக் கூற வேண்டியதில்லை. “இந்துக்களின் தயவை எதிர்பார்த்துக் கொண்டும், தங்களையும் இந்துக்கள் என்று நினைத்துக் கொண்டும் இருக்கும் வரையிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விமோசனமே உண்டாகப் போவதில்லை” யென்று கோபுரத்தின் மேல் நின்றும் கூறுவோம்.

ஆகையால் இந்து மகாசபைக்காரர்களின் வலையிற் சிக்குண்டு கிடக்கும்  திரு எம். சி. ராஜா கூட்டத்தாரின் பேச்சைக் கேட்டு ஏமாறக்கூடாது என்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.

கொடுமைபடுத்தப்பட்டு, நசுக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டுக் கிடக்கும் சமூகத்தின் சமத்துவத்திற்கும், முன்னேற்றத்திற்கும், உண்மையாகப் பாடுபடுகின்றவர்கள் யார் என்பதை வெகு சுலபமாகத் தெரிந்து கொள்ள ஒரு வழியுண்டு. அவ்வழியாவது:-

தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் விடுதலைக்கு உண்மையாக பாடுபடுபவர் அச்சமூகத்தைத் தாழ்த்தி வைத்திருக்கும் கூட்டத்தினரால் கட்டாயமாக எதிர்க்கப்படுவார்கள், தூஷிக்கப்படுவார்கள். பல விதமான பழிகளுக்கு ஆளாக்கப்படுவார்கள் என்பது நிச்சயம். ஆதலால் தாழ்த்தப் பட்ட சமூகத்தினரின் பரம்பரை விரோதிகளாகிய உயர்ந்த சமூகத்தினரால் ‘தேசத்துரோகி’ என்றும் ‘சமூகத்துரோகி’ ‘தேசாபிமான மில்லாதவர்” என்றும் தூற்றப்படுகின்றவர்கள் யாரோ அவர்களே அச்சமூகத்தின் உண்மை யான சமத்துவத்திற்கும், சுதந்திரத்திற்கும் பாடுபடுகின்றவர்கள் என்பதை உணரலாம்.

இப்படி இல்லாமல் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் விரோதிகளாகிய உயர்ந்த சமூகத்தினரால், தாழ்த்தப்பட்ட சமூகத்தலைவர்கள் என்றும் விடுதலைக்குப் பாடுபடுகிறவர்கள் என்றும், “தேசாபிமானிகள்” என்றும், இவர்கள் பேச்சைக் கேட்டால்தான் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு விடுதலை உண்டு என்றும் பிரசாரம் செய்யப்படுபவர்களால் அச்சமூகத்திற்கு உண்மை யான விடுதலை ஏற்பட முடியாது என்பது நிச்சயம், ஆகையால் எவர் தங்கள் சமூகத்தின் உண்மையான விடுதலைக்குப் பாடுபடுகின்றவர் என்பதை அறிந்து அவர்களைப் பின்பற்றுமாறு தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு எச்சரிக்கின்றோம்.

இந்து மகா சபைக்காரர்களின் சூழ்ச்சி வலையிற் சிக்கியும், தேசா பிமான வேஷக்காரர்களின் பசப்பு வார்த்தைகளுக்கும், தட்டிக் கொடுத் தலுக்கும் ஏமாற்றமடைந்தும், தங்கள் சமூக நன்மையை, இதுவரையிலும் விரோதிகளாகவே இருந்து வரும் சமூகத்தார் கையிலேயே ஒப்படைக்க வேலை செய்யும் ஏமாந்தவர்களின் பேச்சைக் கேட்டு மோசம் போகாம லிருத்தலே தாழ்த்தப்பட்டார் கடமையாகும்.

குடி அரசு – தலையங்கம் – 17.07.1932

வீர வாலி

 வீர வாலி

“தோழர்களே,

இங்கு நடித்த வீரவாலி கதை நடிப்பைக் கண்டீர்கள். இதைப் பற்றி தலைமை வகித்தவன் என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

இந்தக் கதை இராமாயணக் கதையில் வரும் ஒரு பாகத்தை யொட்டி செய்யப்பட்ட கற்பனைச் சித்திரமாகும். இராமாயணமே ஒரு கற்பனைக் கதை. அதை மதவாதிகள் மதக்கதையாகவும், ஒரு வகை ஆஸ்திகர்கள் கடவுள் கதையாகவும் ஆக்கிவிட்டார்கள். அக்கதை இன்று ஆரியர்களாலும் அவர்களது அடிமைகளாலும் மக்களுக்கு மதப் பிரச்சாரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த இராமாயணக் கதைக்கு மூலக்கதை என்று சொல்லப்படும் வால்மீகி ராமாயணக் கதைப்படி சரியாக எவரும் பிரச்சாரம் செய்வதில்லை, அந்தப்படி நடிப்பதும் இல்லை. ஏனெனில் அதை வால்மீகி ராமாயணப்படி நடித்தால், அது மதப்பிரச்சாரத்திற்கோ அல்லது கடவுள் பிரச்சாரத்திற்கோ சிறிதும் பயன்படாது.

காரணம் என்னவென்றால், அது ஆதியில் உண்டாக்கியவர் என்று சொல்லப்படும், (உண்மையில் அவரால் எழுதப்பட்டிருக்குமானால்) வால்மீகி முனிவர் என்பவர் அதை ஒரு மதக் கருத்துக் கொண்டோ அல்லது அதில்வரும் “நல்ல” பாத்திரங்கள் என்பவர்களான ராமன் முதலியவர் களை தெய்வங்களாகவோ, தெய்வாம்சங்களாகவோ, ஒழுக்கம் நீதி நாணயம் ஆகிய குணங் கொண்டவர்களாகவோ, அதைப் படிப்பவர்கள் கருத வேண்டுமென்றோ, அக்கருத்துக்களை அப்பாத்திரங்களுக்குள் புகுத்த வேண்டுமென்றோ கருதி சித்திரித்தாரென்று சொல்வதற்கில்லை.

இராமாயணம் மூலக்கதை அல்ல

இது ஒருபுறமிருக்க மற்றொரு சங்கதி என்னவென்றால், இந்த இராமாயணக் கதை வால்மீகியால் கொடுக்கப்பட்ட ஒரு மூலக்கதை என்றுகூட சொல்வதற்கில்லை, என்பதாகும்.

அதாவது இராமாயணமானது கந்தப்புராணம் என்னும் ஒரு சைவக் கதையைப் பார்த்து வைணவ பரமாக கற்பிக்கப்பட்டதென்றும், அதுவும் கந்தப்புராணத்தை விட வெகுகாலத்திற்குப் பிறகு கற்பிக்கப்பட்டதென்றும், சொல்ல வேண்டியிருக்கிறது. கந்தப் புராணம் புராணங்களில் சேர்ந்ததாகும். இராமாயணம் இதிகாசங்களில் சேர்ந்ததாகும். புராண காலம் முந்தியதும் இதிகாச காலம் பிந்தியதுமாகும். ஆகவே தான் புராண வகையில் சேர்ந்த கந்தப் புராணம் முந்தியதென்றும், இதிகாச வகையில் சேர்ந்த இராமாயணம் பிந்தியதென்றும் சொல்லுகிறேன்.

இரண்டும் ஒன்றே

இதில் இராமாயணம் கந்தப்புராணத்தைப் பார்த்து ஏற்படுத்தப் பட்டது என்று ஏன் சொல்லுகிறேன் என்றால், இரண்டு கதையும் ஒரே போக்கு, ஒரே கருத்து, ஒரே தன்மையதாக இருந்து வருகின்றன.

இதுவும்கூட வைணவ பரமாய் ஏற்படுத்தப்பட்டது என்பது மாத்திரமல்லாமல், வைணவபரத்தில் உள்ள மற்றொரு இதிகாசமாகிய பாரதக் கதையின் ஆபாசத்தை, இழிவை நீக்குவதற்காக, வேறு ஒரு கதை ஏற்படுத்த வேண்டி இருந்ததை அனுசரித்து, பாரதத்தில் உள்ள சில இழிவையும் அசிங்கத்தையும் பெரும் அளவுக்கு நீக்குவதற்கு கற்பிக்கப்பட்டதாகும்.

இராமாயணம் பாரதத்துக்குப் பிந்தியது

ஆதலால் இராமாயணம் கந்த புராணத்திற்கு பிந்தியதும் பாரதத்திற்குப் பிந்தியதுமாகும்.

கந்தப் புராணத்திலும் பாரதத்திலும் உள்ள சில பகுத்தறிவுக்கு ஒவ்வாத போக்குகள் இராமாயணத்தில் குறைக்கப்பட்டிருக்கின்றன. முந்தையவற்றுள் கந்தப் புராணத்தில் சிவனை முதல் கடவுளாகக் காட்டப்படுவதற்கு தேவர்கள் சிவனிடம் சென்று, அசுரர்களின் கொடுமையைப் பற்றி முறையிட்டு, தங்கள் கஷ்டங்களை நீக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாகவும், சிவன் சுப்பிரமணியனைப் பெற்றுக் கொடுத்தாகவும் கூறப்பட்டுள்ளது. இராமாயணத்தில் விஷ்ணுவை முதற்கடவுளாகக் காட்டுவதற்காக, தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று தங்களை ராக்ஷதர்கள் கொடுமைப்படுத்துவதாக முறையிட்டு தங்கள் கஷ்டங்களை நீக்க வகை செய்ய வேண்டுமென்று கேட்டதாகவும், விஷ்ணு தானே அவதாரமெடுத்து வருவதாகக் கூறியதாகவும் கூறப்பட்டிருக்கிறது, இரண்டும் ஒன்றேயாகும். சிவன் தனது மகனைக் கொடுத்தார். விஷ்ணு தானே வந்தார். இருவரும் ராக்ஷதர்களையும், அசுரர்களையும். அழிப்பதற்கு வந்தவர்கள். அசுரர் ராக்கதர் என்பவர்கள் ஆரியரல்லாதவர்கள் என்றும், கறுப்பு நிறமுள்ளவர்களைத் தான் அப்படி அழைக்கப்படுகிறது என்றும், சாஸ்திர ஆதாரங்களிலேயே காணப்படுகிறது. இந்தத் தன்மையில் தான் இந்தக் கதைகள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன.

வாலி கதை புதியது

இராமாயணத்தில் வாலியின் பாகம் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்றாலும், அது ஆரியர்களுக்கு ஒரு படிப்பினைக்காக சேர்க்கப் பட்டிருக்கிறது என்றே கருதுகிறேன். அதாவது ஒழுக்கம், நீதி, வீரம், என்பதெல்லாம் தன் காரிய சித்திக்கு சமயம் போல், சவுகரியம் போல் நடந்து கொள்ள வேண்டும் என்ற கொள்கையை புகுத்துவதற்கேயாகும். இது சாதாரணமாக பஞ்ச தந்திரக்கதை கொள்கையைப் பொருத்த ஒழுக்கம், நீதியேயாகும்.இந்தக் கதை மதத்திற்கும், தெய்வத் தன்மைக்கும், நீதி தர்மத்திற்கும் பயன்படும் படியாக பிற்காலத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டுவிட்ட படியால் அதில்கண்ட விஷயங்களை தந்திரம் என்று சொல்லாமல் அதை தெய்வத்தன்மை, பொது தர்மம், சாஸ்திர நீதி என்று சொல்லப்பட வேண்டியதாக ஆகி விட்டதுடன், அதற்கேற்ற சில்லரைத் திருத்தங்களும் சில செய்யப்பட வேண்டியதாகிவிட்டன.

அதோடு மாத்திரமல்லாமல் கதையில் வரும் குற்றமுள்ள பாத்திரங்களை குற்றமற்றவர் களாகவும், குற்றமில்லாதவர்களை கெட்டவர்களாகவும் காட்டப்பட வேண்டியதாகவும் ஆகிவிட்டது.

சாதாரணமாக வாலியை மறைந்து நின்று இராமன் கொன்றது என்பது நீதி என்றும், தெய்வத்தன்மை என்றும் ஏன் காட்டப்பட வேண்டி வந்த தென்றால் வாலி பலசாலி என்பது ஒன்று, அவன் எதிரில் நின்று எவராலும் போர் செய்ய முடியாத வரப்பிரசாதி என்பது இரண்டு, இப்படிப்பட்ட ஒரு எதிரி ஆரியர்களுக்கு ஏற்பட்டால் என்ன செய்வது என்பதற்கு உதாரணமாகத் தான் “அப்படிப்பட்டவனை அவனுக்குத் தெரியாமல் சூழ்ச்சி செய்து மறைந்து இருந்து கொல்ல வேண்டியது” என்பதை வெற்றி தர்மமாகக் காட்டப்பட்டிருக்கிறது.

விபீஷணன்

விபீஷணன் விஷயமும் இது போலவேதான். அதாவது எதிரி பலவானாய் இருந்தால், அவனை வெல்ல வேண்டுமானால் எதிரிக் கூட்டத்தில் வேற்றுமையையும், சுயநல லாப உணர்ச்சியையும் காட்டி, பிரிவினை உண்டாக்கி, ஒருவனுக்கு உதவி செய்து சுவாதீனப்படுத்திக் கொண்டு மற்றவனை (எதிரியை) ஒழித்துவிட வேண்டும் என்கின்ற வெற்றி தர்மத்தைக் காட்டவே விபீஷணன் பாகம் சித்திரிக்கப்பட்டதாகும்.

அனுமான் விஷயமாகவும் இதைத்தான் படிப்பினையாகக் காட்டப் பட்டிருக்கிறது. அனுமான் வாலியிடம் அனாமதேய அடிமையாக இருந்திருக்கிறான். சுக்கிரீவனும் கீழ்ப்பட்டவனாகவே இருந்திருக்கிறான். வாலி கிஷ்கிந்தைக்கு அரசனாவான். இருவரும் அவன் (வாலி) இல்லாத போது நாட்டைத்தங்கள் சுவாதீனம் செய்து கொண்டார்கள். வந்தவுடன் நிலைமை அறிந்து வாலியால் விரட்டி அடிக்கப்பட்டு விட்டார்கள். இராமலட்சுமணன் வந்தவுடன் அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு வாலியைக் கொல்ல வாக்கு வாங்கிக் கொண்டார்கள். இராமன் வாலியைக் கொன்று வாக்கை நிறைவேற்றி, அவர்களை பயன்படுத்தி தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டான். இது தான் ஆரியரின் வெற்றி தர்மமாக என்றும் இருக்க வேண்டியது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்; இன்று இருந்து வருவதுமாகும்.

இதன் படிப்பினை

ஆகவே “எவனைக் கொண்டும் என்ன செய்தும் காரியம் சாதித்துக் கொள்ளலாம்” என்பது தான் இராமாயணத்தின் படிப்பினையாகும். அனுமார், சுக்கிரீவன், விபீஷணன் ஆகிய இவர்கள் ஆழ்வார்களாக ஆக்கப்பட்டதற்கு காரணமும் இதுவேயாகும். “அயோக்கியர்கள் தான் ஆரியர்களால் மதிக்கப்படுவோர்கள்” என்பதற்கு நமக்கு இது ஒரு நல்ல உதாரணமாகும். இதை மெய்ப்பிக்கத்தான் நமக்கு இந்தக் கதை (வீரவாலி என்ற கதையை) நடிக்கப்பட்டது. இதில் நடிகர்கள் வாலியின் உயர் குணத்தையும் பெருந்தன்மையையும் முக்கியப்படுத்திக் காட்டி இருப்பதோடு சுக்கிரீவன், அனுமான் தன்மையையும் சரிவர வெளிப்படுத்திக் காட்டப்பட்டிருக்கிறது.

இந்த மாதிரியாக ஆரியக் கதைகளின் உட்கருத்துக்களை நன்றாக வெளிப்படுத்திக் காட்ட வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏனெனில் நம்மக்கள் இக்கதைகளை ஒரு தந்திரக் கதை என்று கொள்ளாமல் ஒரு தெய்வீகக் கதை என்று எண்ணுவதைப் போக்கவே ஒழிய வேறில்லை. இதற்கு ஆக நாம் கதையை மாற்ற வேண்டும் என்கின்ற அவசியம் கூட இல்லை. வால்மீகியார் எழுதி உள்ளபடி நடித்தால் போதும். அவர் (அதாவது வால்மீகியார்) இராமாயணத்தில் இராமனையும் சீதையையும் மிகமிக சாதாரண கீழ்த்தர மக்களாகத் தான் காட்டி இருக்கிறாரே ஒழிய, உயர்தரமாக எங்கும் நடவடிக்கைகள் வைத்துக் காட்டவில்லை.

வால்மீகி இராமாயணக் கதைப்படி இராமனது பட்டாபிஷேகம் நன்றாய் விளக்கப்படுகிறது

ராமன் சூட்சி

  1. அதாவது அயோத்தியை தசரதன், தான் கைகேயியை திருமணம் செய்த காலத்திலேயே கைகேயிக்கு கொடுத்துவிட்டான். அந்த நிபந்தனை மீதுதான் கேகயராஜன் தனது மகளை தசரதனுக்கு கொடுத்திருக்கிறான்.

இதை வால்மீகி இராமாயணக் கதையில் இராமன் வாயினாலேயே சொல்ல வைத்திருக்கிறார்.

இந்த விஷயத்தை இராமன் தெரிந்திருந்தே, பரதன் இல்லாத போது அவனுக்கும் அவன் தாய் கைகேயிருக்கும் தெரியாமல் பட்டாபிஷேகம் செய்து கொள்ள சம்மதித்து தகப்பன் சூழ்ச்சிக்கு இணங்குகிறான்.

தசரதன் சூட்சி

தசரதன் சூழ்ச்சி செய்கிறான் என்பதையும் வால்மீகி தசரதன் வாயினாலேயே சொல்ல வைக்கிறார். அதாவது:

இராமனைக் கூப்பிட்டு தசரதன் முடிசூட்டு விழாவைப் பற்றிச் சொல்லும்போது “பரதன் இங்கு இல்லாதிருக்கும் சமயமே முடிசூட்டுக்கு ஏற்றநாள்” என்றும் “அவன் வருவதற்குள் முடிசூட்டு நடக்கும் வரை ஜாக்கிரதையாக இரு” என்றும் தசரதன் சொன்னதாக சித்திரத்திருக்கிறார்.

சீதை இழிதன்மை

இதுபோலவே சீதையைப் பற்றியும் வால்மீகி, சீதை வாயினாலேயே அவளை கீழ்த்தரப் பெண்ணாக கித்தரித்திருக்கிறார்.

இராமன் காட்டுக்குப் போகும் போது அவன் சீதையை “அயோத்தியிலேயே இரு” என்று சொன்ன போது சீதை “என்னை பரதனுக்கு கூட்டிக் கொடுத்து அதனால் நாடு அடையப் பார்க்கிறாயா?” என்றும், லட்சுமணன் வனத்தில் சீதைக்கு காவலாக இருக்கும் போது மானின் பின் சென்ற இராமன் உடனே திரும்பி வராதது கண்டு லட்சுமணனை இராமனுக்கு உதவியாகச் செல்லும்படி சீதை சொன்னதை இலட்சுமணன் கேட்காமல், சீதைக்கு “காவல் இருக்க வேண்டியது முக்கியம்” என்று சொன்னவுடன், சீதை லட்சுமணனை “நீ என்னைக் கைப்பற்றவும் என்னை அனுபவிக்கவும் இப்படிப் பேசுகிறாய் அயோக்கியனே” என்றும், மற்றும் பல இழிமொழி சொன்னதாக சீதை வாயாலேயே சித்தரிக்கிறார்.

விபீஷணன் தன்மை

விபீஷணனை இராமன் சேர்த்துக் கொள்ளும் போது “விபீஷணன் அயோக்கியன் சகோதரத் துரோகி ஆதலால் அவனைச் சேர்க்கக் கூடாது” என்று பக்கத்தில் இருந்த லட்சுமணன் முதலிய நண்பர்கள் சொன்ன போது “அப்படிப்பட்ட அயோக்கின் தான் இப்போது நமக்கு வேண்டும்”, பரதனைப் போன்றவர்களால் நம் காரியம் ஈடேறாது என்பது ஆகச் சொல்லுவதாக இராமன் வாயாலேயே சொல்லச் செய்கிறதுடன், இவனால் நமக்கு கெடுதி செய்ய முடியாது என்று சொன்ன மாதிரியில் சித்தரிக்கிறார்.

மற்றும் பல ஒழுக்க ஈனம், நாணய ஈனம் ஆன காரியங்கள் ஏராளமாக இராமாயணக் கதையில் வரும் நல்ல பாத்திரங்கள் என்பவர்கள் மீது காணக்கிடைக்கிறது. ஆதலால் தான் வால்மீகி இராமாயணப்படி நாடகம் நடித்தாலே, இராமாயணத்தின் தெய்வீகத் தன்மை, மதத்தன்மை ஆகியவைகள் ஒழிந்து போகும் என்று சொல்லுகிறேன்” என்பதாகக் கூறி நாட்டில் நடைபெறும் கேடுகளை- விளக்க நாடக, சினிமா துறையில் செய்யவேண்டிய திருத்தங்களைப் பற்றியும் அவைகளைச் செய்யக் கறுப்புச் சட்டைப்படை வேலை செய்யும் என்றும், பேசினார்.

பின் குறிப்பு : சேலம் ஜில்லா எடப்பாடியில் 27.12.46 ஜலகண்டபுரம் தோழர் ஜே.பி.கண்ணன் அவர்களால் சித்தரிக்கப்பட்ட கதை, தோழர் பிரதான நடிகராக இருந்து அய்யா தலைமையில் காட்டிபோது நாடக முடிவில்  ஆற்றிய உரை

-- குடிஅரசு தலையங்கம் 05.01.1946

இராமனுக்கு பல பெண்டாட்டிகள்

 இராமனுக்கு பல பெண்டாட்டிகள்

இராமாயணம் என்பது சூரியகுல அரசர்களின் சரித்திரங்களில் ஒன்று என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், இராமாயணம் என்னும் பெயரால் பல நூற்றுக்கணக்கான இராமாயணங்கள் இருந்ததாகவும், நூறு கோடிக்கணக்கான சுலோகங்கள் இருந்ததாகவும், அவைகள் காலப் போக்கில் பல தெய்வீகக் காரணங்களால் மறைந்து போய் விட்டன வென்றும், ஆனாலும் இப்போது 24 விதமான இராமாயணங்கள் இருப்பதாகவும், அவற்றை திரு.கோவிந்ததாஸ் அவர்கள் வட இந்தியாவிலுள்ள ஒரு மடத்தில் தாமே நேரில் பார்த்ததாகவும் தான் எழுதிய இந்துமதம் என்ற புத்தகத்தில் எழுதியிருக்கின்றார். அதை அனுசரித்தே சென்னை மைலாப்பூர் இராமாயண விலாசம் என்னும் கிருகத்தில் உள்ள இராமாயணப் பிரசுரகர்த்தாவாகிய திரு.சி.ஆர்.சீனி வாசய்யங்கார் பி.ஏ. என்பவரால் எழுதப்பட்டு 1928ம் வருஷத்தில் அச்சிட்டு வெளிப்படுத்தியிருக்கும் இதர இராமாயணங்கள் என்னும் புஸ்தகத்தில் மேல்கண்ட விஷயங்கள் விளக்கப்பட்டு முதல் தடவையாக நான்கு இராமாயணங்கள் அதில் விவரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன. (அப்புஸ்தகத்தின் விலை ரூ.1) அவையாவன:- ஜைன ராமாயணம், பவுத்த ராமாயணம், யவன ராமாயணம், கிறைஸ்தராமாயணம் என்பவைகளாகும்.

இவற்றுள் யவன ராமாயணம், கிறைஸ்தராமாயணம் ஆகியவைகள் பெரும்பாலும் இராமாயணக் கதையைப் போன்ற போக்கில் இருந்தாலும் கதைகளில் வரும் பெயரும் மற்ற சில்லறை விஷயங்களும் பெரிதும் மாறுபட்டு அந்தந்த பாஷைக்கு ஏற்ற பெயர்களாக இருப்பதால் அதை நாம் இதில் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு உபயோகித்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் மற்ற இரண்டும் அதாவது ஜைன பவுத்த ராமாயணங்கள் பெரிதும் கதைப் போக்கிலும் பெயர்களிலும் எல்லாம் பொருத்தமாக இருக்கின்றன. ஆனால் சில்லறை விஷயத்தில் உண்மைகள் மாத்திரம் மாறுபட்டிருக்கின்றன. அதில் ஜைன ராமாயணம் என்பது இப்போதும் அடையாறு புத்தக சாலையில் வைக்கப்பட்டிருப்பதாகப் பதிப்பாசிரியரே எழுதியிருக்கின்றார். அதில் தசரதன், ராவணன் முதலியவர்களுடைய சந்ததிக்கிரமம், பிறப்பு, வளர்ப்பு முதலியவைகளும் சிறிது வித்தியாசப்பட்டாலும் மூல புருஷனாகிய தசரதனை அப்படியே ஏற்றுக் கொண்டு அவனுக்கு நான்கு மனைவிகள் என்றும் அவர்களின் பெயர்கள் 1. அபராஜிதை, 2. சுமத்தரை, 3. கைகேயீ, 4. சுப்ரபை என்றும் குறிப்பிட்டு விட்டு கைகேயிக்கு தசரதன் கொடுத்த இரண்டு வரத்தையும் அப்படியே குறித்திருப்பதுடன், அபராஜிதைக்கு ராமன் பிறந்ததாகவும் சுமத்திரைக்கு லட்சுமணன் பிறந்ததாகவும் கைகேயிக்கு பரதன் பிறந்ததாகவும் சுப்ரபைக்குச் சத்துருக்னன் பிறந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

இதுபோலவே சீதையை ஜனகராஜனுடைய மகள் என்றும், வில்லை வளைப்பவனுக்கு ஜனகன் சீதையைக் கொடுப்பதாக நிபந்தனை வைத் திருந்தான் என்றும், ஆகவே வில்லை வளைத்தே ராமன் சீதையை மணந்தான் என்றும், லட்சுமணனுக்கு 18 பெண்சாதிகள் என்றும், பரதனுக்கு ஜனகனுடைய சகோதரரின் குமாரத்தி கொடுக்கப்பட்டாளென்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. மற்ற பட்டாபிஷேகக் கதையும் வால்மீகி ராமாயணத்தைப் போலவே இருந்தாலும் சிறுசிறு மாறுதல்களுடன், தபசு செய்ததற்காக சம்பூகன் வதைக்கப்பட்டதும் குறிக்கப்பட்டிருப்பதோடு இராமனுக்கு நான்கு பெண்சாதிகள் என்றும் அவர்களின் பெயர்! சீதை, 2. பிரபாவதி, 3. ரதினிபா, 4. ஸ்ரீதாமா என்பவர்கள் என்றும் குறிக்கப்பட்டிருக்கிறது.

பவுத்த ராமாயணத்திலும், தசரதராஜனுக்குப் பதினாயிரம் மனைவிகள் என்றும் அவர்களில் மூத்தவளுக்கு ராமன், லட்சுமணன் என்பவர்களான இரண்டு ஆணும், சீதை என்று ஒரு பெண்ணும் ஆக மூன்று குழந்தைகள் பிறந்தன என்றும், அடுத்த மனைவிக்குப் பரதன் என்கின்ற ஒரு ஆண் குழந்தை மாத்திரம் பிறந்தது என்றும், அரசன் பரதனுக்கு பட்டம் கொடுப்பதாய் இளைய மனைவிக்கு வாக்குக் கொடுத்திருந்தான் என்றும், ஆனால் அரசன் அந்தப்படி செய்யாமல் ராமனுக்குப் பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்தான் என்றும், இளைய மனைவி கட்டாயப்படுத்தினதால் பரதனுக்குப் பட்டம் கொடுத்துவிட்டு ராமன், லட்சுமணன், சீதை ஆகிய சகோதர சகோதரிகளைப் பரதன் கொன்றுவிடுவான் எனப் பயந்து காட்டுக்கனுப்பி விட்டான் என்றும், பரதன் தமையனைத் தேடி காட்டுக்குப் போய் ராமனையே பட்டத்தை ஒப்புக் கொள்ளச் சொன்னதாகவும், ராமன் தன் தகப்பனார் இறந்த பிறகுதான் தாம் நாட்டுக்குத் திரும்பிவர முடியுமென்றும், அதுவரை தனது பாதரட்சையையும் மற்ற சகோதர சகோதரிகளையும் அனுப்பும்படி கேட்டு வாங்கி அழைத்து வந்ததாகவும் பன்னிரண்டு வருடமானபின் தசரதன் இறந்து போனதாகவும், பிறகு ராமன் அயோத்திக்கு வந்ததாகவும், வந்தவுடன் ஊர் ஜனங்கள் ராமனுடைய தங்கையாகிய சீதையை அவளது தமையனாகிய ராமனுக்குக் கலியாணம் செய்வித்து பட்டம் கட்டினதாகவும் எழுதப்பட்டிருக்கின்றது.

இவைகளை மெய்ப்பிக்க திரு. அய்யங்கார், அந்தக் காலத்தில் அண்ணனும், தங்கையும் கலியாணம் செய்து கொள்ளும் வழக்கம் உண்டு என்றும் எகிப்து தேச ராஜ தர்மமே சகோதரியை மணப்பதுதான் என்றும் இதை அறிந்து தான் ரிக்வேதம் 10- வது மண்டலத்தில் 10,12 சுலோகங்களில் சகோதரியை மணப்பது கண்டிக்கப்பட்டிருக்கின்றதென்றும், அதற்கு முன் அவ்வழக்கமிருந்து வந்ததற்கு மேலும் ஆதாரமாக சூரியனும் அக்கினியும் தங்களது தங்கைகளையே மணந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் எழுதியிருக்கின்றார்.

திரு.சி.ஆர்.சீனிவாசய்யங்கார் தாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வால்மீகி ராமாயணம் பின்பகுதிக் குறிப்பு 431ஆம் பக்கத்தில், சீதை தசரதனுடைய மகள் என்றும், அவளைத் தசரதன் ஜனகனுக்குத் தானம் கொடுத்தார் என்றும், அவள் பூமியில் பட்டால் பூமி இழுத்துக் கொள்ளும் என்றும், ஆதலால் பூமியில் விடாமல் காப்பாற்ற வேண்டுமென்ற நிபந்தனையுடன் தசரதன் கொடுத்தான் என்றும், தசரதன் இல்லாதபோது ஒரு நாள் சீதை பூமியின் மீது நின்றுவிட்டாள் என்றும், அதனால் அவள் பூமிக்குள் மறைந்துபோய் விட்டாள் என்றும், பிறகு கொஞ்சகாலம் பொறுத்து ஜனகன் பூமியை உழும்போது சீதை பூமிக்குள்ளிருந்து கலப்பையில் தட்டுப்பட்டு ஜனகனால் எடுத்து வளர்க்கப்பட்டாள் என்றும், ஆனால் ஜனகனுக்கு அவள் தான் முன் வளர்த்து வந்த சீதை என்று தோன்றவில்லையென்றும், ஆகவே அவளது தமையனாகிய ராமனுக்கே அவளைக் கலியாணம் செய்து கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டுவிட்டு இந்த விஷயம் வசிஷ்ட புராணத்திலும் கண்டோத்திர புராணத்திலும் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

அன்றியும் இதே திரு.சீனிவாசய்யங்கார், எவனொருவன் தன்னுடைய தங்கையை மணம் செய்து கொள்ளுகின்றானோ அவன் மனைவியைத் தூக்கிக் கொண்டு போவதால் உனக்கு மரணமுண்டு என்று ராவணனுக்கும் ஒரு காலத்தில் நாரதர் சாபம் கொடுத்திருந்ததாகவும், அந்தச் சாபத்தின் பலனாய் இராவணன் இராமன் தன் தங்கையாகிய சீதையை மனைவியாக மணந்து கொண்ட விஷயம் தெரியாமல் சீதையைத் தூக்கிக் கொண்டு போவதாகவும், அதனாலேயே இராவணன் இராமனால் கொல்லப்பட்டதாகவும், இராவணனுக்கு உண்மையில் ராமன் தன்தங்கையைக் கட்டிக் கொண்டது தெரியாதென்றும் தெரிந்திருந்தால் சீதையைத் தொட்டிருக்க மாட்டான் என்றும், இந்த உண்மைகள் பார்க்கவ புராணத்தில் இருப்பதாகவும் மேற்கண்ட 431- ம் பக்கத்திலேயே குறிப்பிட்டிருக்கின்றார்.

மற்றும் இதே திரு. சீனிவாசய்யங்கார் அதற்குக் கீழேயே சீதை இராவணன் மகள் என்றும், அவர்கள் பிறந்த கால தோஷத்தால் தகப்பனுக்கு (இராவணனுக்கு) ஆபத்து விளையும் என்று நாரதர் இராவணனுக்குச் சொன்னதாகவும், அந்தக் காரணத்தால் இராவணன் தன் மகளாகிய சீதையை ஒரு பெட்டியில் வைத்து சமுத்திரத்தில் கொண்டுபோய் எறிந்துவிட்டதாகவும், அது ஜனகனது ராஜ்யத்தில் ஓடும் ஆற்றிலடித்துக் கொண்டு வரப்பட்டதாகவும் அதை ஜனகன் கண்டெடுத்து வளர்த்து ராமனுக்குக் கொடுத்ததாகவும், இராமனும் சீதையும் வனத்திலிருக்கும்போது இராவணன் சீதையைத் தன் மகள் என்று தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து விட்டதாகவும், குறிப்பிட்டு விட்டு இந்த உண்மை மவுட்கலிய இராமாயணத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இவைகள் உண்மையாய் இருக்கலாம் என்பதற்கு அவர் ஒரு யுக்தி காரணமும் சொல்லுகின்றார். அதாவது, சீதையின் பிறப்பைப் பற்றியோ அவளுடைய பழைய சங்கதியைப் பற்றியோ வால்மீகர் எங்கும் ஒருவரி கூட எழுதவில்லை. ஆதலால் இந்தக் கூற்றுகள் உண்மையாக இருக்கலாம் என்கின்றார்.

எனவே சீதை தசரதனுக்கு மகள் என்பதற்கும் இராமனுக்குத் தங்கை என்பதற்கும் இதுவரை 4,5 ஆதாரங்களும், ராவணனுக்கு மகள் என்பதற்கு இரண்டு ஆதாரங்களும் கிடைக்கின்றன. இன்னமும் மற்ற இராமாயணங்களில் என்னென்ன பந்துத்வங்களும் இருக்குமென்பது ஊகிக்கக் கூடவில்லை.

---  தந்தை பெரியார் - ‘குடிஅரசு’ கட்டுரை, 03.03.1929

இராமாயண எரிப்பு ஏன்?

 இராமாயண எரிப்பு ஏன்?


இராமாயணத்தை ஆரியர் - திராவிடர் போராட்டம் என்றும்; ‘இராமாயணக் கதை திராவிடரை இழிவுபடுத்துவதற்காகவே ஆரியர்களால் கற்பனை செய்யப்பட்ட கட்டுக்கதை’ என்றும்; ‘இராமாயணக் கதை ஆரியருக்குத் திராவிடர்கள் மீது இருந்த வெறுப்பைக் காட்டுவதற்கென்றே ஆரியரால் (பார்ப்பனரால்) புனையப்பட்ட கதை’ என்றும்; ‘இராமன் ஆரியத் தலைவன் - இராவணன் திராவிட அரசன்’ என்றும்; மற்றும் ‘இராமாயணம் புத்தனுக்குப் பின் கற்பனை செய்து பார்ப்பனரால் எழுதப்பட்டது’ என்றும்; ‘இராமாயணம் நடந்த கதையல்ல, சரித்திரத்தில் பட்டது அல்ல, நீதியும் அல்ல’ என்றும்; ‘இராமாயணம் பார்ப்பனர்கட்கு அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைத் தொகுப்பு’ என்றும் - மற்றும் பலவாறாகச் சரித்திர ஆசிரியர்கள் முதல் ஆய்வாளர்கள் உள்படப் பார்ப்பனராலும், வெளிநாட்டு அறிஞர்களாலும், சுயமரியாதை உணர்ச்சியுள்ள தமிழறிஞர்களாலும் ஆதாரங்களுடன் சொல்லப்பட்டிருக்கிறது. இவற்றிற்கு ஆதாரங்களும் நம்மிடம் இருக்கின்றன. அவைகட்கு அன்று முதல் இன்று வரை எந்த அறிவாளியும் - தமிழரில் எந்தப் புலவரும் ஆட்சேபணையோ, மறுப்போ கூறியது கிடையாது.

மற்றும், இந்த இராமாயணத்தைப் பற்றி அதில் காணப்படும் ஆபாசங்களுக்கு, ஒழுக்கக் கேடான காரியங்களுக்கு, அநீதிகளுக்கு நாளதுவரை எந்தப் புலவரும் மறுப்புக் கூறியதும் கிடையாது.

இப்படிப்பட்ட நிலையிலுள்ள இராமாயணத்தைக் கடவுள் கதையாகப் பாவித்து, பாமர மூட மக்களிடம் புலவர்கள் புகுத்தி, அதில் பயன் பெறுகிறார்கள் என்றால் - இதற்கு எதை ஒப்பிடுவது? இப்புலவர்களுக்கு எதை உதாரணமாக்குவது?

தோழர்களே! சிந்தியுங்கள்! நன்றாய்ச் சிந்தியுங்கள்!

புலவர்களுக்குப் புத்தி, மானம் இல்லாவிட்டாலும் நீங்களாவது கொளுத்துங்கள் கம்ப இராமாயணத்தை!

(‘விடுதலை’ - தலையங்கம், 276.10.1972)

இதுதான் இராமாயணம் இவன் தான் ‘ராமன்’

 இதுதான் இராமாயணம் இவன் தான் ‘ராமன்’

இராமாயணம் அவரவர் சாதிகளையும், பிரிவுகளையும் தானே நிலைநாட்டுகிறது?

ஒரு இடத்தில் அனுமார் இராமன் காலில் விழுகிறான். இராமன் அனுமாரைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு மன்னிப்புக் கேட்கிறான். ‘நீயோ ஒரு பிராமணன். நான் க்ஷத்திரியன். என் காலில் வந்து விழலாமா? இந்தப் பாவத்தை நான் எங்கே போய்த் தீர்ப்பேன்?” என்று கூறுகிறான்.

இராமன் அயோத்தியில் இருந்து காட்டுக்குப் புறப்படும் சமயம், “என் பணத்தையும், சொத்துக்களையும், என்னிடத்தில் இப்போது இருக்கும் மாடுகளையும் கொண்டு வாருங்கள். முழுவதையும் பிராமணருக்குக் கொடுத்து விடுகிறேன்!” என்பதாகச் சொல்லுகிறான்.

சீதை, “என் நகைகள் முழுவதையும் கொண்டு வாருங்கள். பிராமணனுக்குக் கொடுத்து விட்டுப் போனால் புண்ணியம்” என்பதாகச் சொல்கிறாள்.

சூர்ப்பனகை, ‘என்னைத் திருமணம் செய்துகொள்’ என்று கேட்கும்போது, ‘நீ ஒரு சாதி, நான் ஒரு சாதி, எப்படித் திருமணம் செய்து கொள்வது?’ என்கிறான்.

ஒரு இடத்தில் தாடகை மகனை இலட்சுமணன் கொன்றுவிட்டு, ‘இந்தப் பாவத்திற்கு என்ன செய்வேன்?’ என்று வருத்தப்பட்டுக் கொள்கிறான். அதற்கு இராமன், ‘சூத்திரனைத் தானே கொன்றாய், அதனால் பாவமில்லை கவலையை விடு’ என்று கூறுகிறான்.

சம்பூகன் ஒரு சூத்திரன். அவன் தவம் செய்ய உரிமையில்லை என்று கூறி அவனைக் கண்டங் கண்டமாக வெட்டி விடுகிறான். இப்படி எங்கு பார்த்தாலும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வருணாசிரம தர்மம் தாண்டவ மாடுகிறது. இப்படி இருக்கும் இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்பதில் என்ன தப்பு?”

(பெரியார், ‘விடுதலை’ 13.9.56)

இராமாயணமும் பார்ப்பனீய தந்திரமும்

 இராமாயணமும் பார்ப்பனீய தந்திரமும்


முதலாவது திரு.ஆச்சாரியார் இராமாயணத்தை ஒரு மத சம்பந்தமான புஸ்தகமாய் கருதுகின்றாரா? அல்லது இலக்கிய சம்பந்தமான ஒரு பொது கதை புஸ்தகமாய் கருதுகின்றாரா? என்பதே நமது கேள்வி.

ஒரு சமயம் அவர் அதை இலக்கிய நூலாகக் கருதுவதாயிருந்தால் அந்தப்படி கம்பராமாயணத்தை மாத்திரம் கருதுகிறாரா? அல்லது வால்மீகி இராமாயணத்தையும் சேர்த்து கருதுகிறாரா? அல்லது இரண்டையுமே கருதுகின்றாரா என்பதே இரண்டாவது கேள்வியாகும்.

நிற்க, திரு.ஆச்சாரியார் தனது பிரசங்கத்தில் “இராமாயணம் நடந்த கதை அல்ல” என்று ஒப்புக் கொண்டுவிட்டார். ஆனால் அதைப் பற்றி மற்றவர்கள் விவகரிப்பது தப்பு, மூடத்தனம் என்கின்றார்.

இந்த புத்தி இவர்களுக்கு இவ்வளவு நாளாக எங்கு போயிற்று என்று கேட்கின்றோம். இராமாயணம் பொய் என்று நாம் சொன்ன காலத்தில் நம்மை நாஸ்திகர்கள் என்று சொன்ன இந்தக் கூட்டத்தார்கள் இப்போது தாங்களாகவே இராமாயணம் பொய், அதைப்பற்றி ஒன்றும் பேசாதீர்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் இப்போது இவர்களுக்கு ஏன் வந்தது? என்று பார்ப்போமானால்.

இராமாயணக் கதை பூராவையும் வெளியில் இழுத்து, அதன் வண்டவாளத்தை வெளிப்படுத்த தைரியம் கொண்டதால் இப்போது “போதும் போதும் இராமாயணம் நடந்ததல்ல பொய்” என்று சொல்ல வந்துவிட்டார்.

ஏன் அப்புத்தகத்தில் இருப்பதாக நாம் வெளிப்படுத்தி வந்த விஷயங்களில் ஒரு வார்த்தையைக் கூட ஆஷேபிக்க முடியாமல் போய்விட்டதேதான் என்பதை மாத்திரம் இனி யாரும் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயமாய்விட்டது.

“காலானிக்கி வேஸ்தே மூலானிக்கி வொஸ்துரு” என்கின்ற ஆந்திரப் பழமொழிப்படி (பத்துக்கு அடிப்போட்டால் தான் அய்ந்துக்காவது வருவார்கள்) இராமாயணம் ஆரியர் திராவிடர் சரித்திரம் என்று ஆராய்ச்சிக்காரர்கள் சொல்ல வந்த பிறகே தான் இராமாயணம் பொய் என்று பார்ப்பனர்கள் சொல்லித் தீரவேண்டிய அவசியத்திற்கு வந்துவிட்டார்கள்.

இல்லாவிட்டால் இராமாயண ஆராய்ச்சியால் பார்ப்பனக் கொடுமை வெளியாகி விடும் என்கின்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. தவிரவும் திரு.ஆச்சாரியார் ‘ராமனை போற்றுகின்றவர்களை எப்படி மூடர்களாகக் கொள்ளுகின்றேனோ அவ்வாறே இராவணனை போற்றுகின்றவர்களையும் மூடர்களாக கருதுகின்றேன்’ என்று சொல்லுகின்றார்.

அப்படியானால் இந்தப் புத்தியும் இவருக்கு இத்தனை நாளாக எங்கு போய் இருந்தது என்று கேட்கின்றோம். இராவணனை யாரும் கடவுள் என்று சொல்லிப் போற்றுவதே இல்லை.

ஆனால், இராமனை கடவுள் அவதாரம் என்றும், கடவுளே என்றும் சொல்லிபோற்றி வணங்குகின்றார்கள். அதுவும் வெகுகாலமாய் அப்படிச் செய்து வருகின்றார்கள். இராவணனையோ என்றால் நேற்று முதற்கொண்டுதான் போற்ற ஆரம்பித்தார்கள்.

அதுவும் ஏனென்றால் ராமன் கடவுள் அவதாரமல்ல என்று சொன்னவர்களை நாத்திகர்கள் என்றும், மதத்துரோகிகள் என்றும் திரு.ஆச்சாரியார் கூட்டம் சொன்னதால், “சரி அப்படியானால் இராமாயணக் கதைப்படியே இராவணன் யோக்கியன், அவன் போற்றப் பட வேண்டியவன்.

இராமன் அயோக்கியன், அவன் இழித்துப் பழிக்கப்பட வேண்டியவன்” என்று மெய்ப்பிக்க மக்கள் துணிந்து ஆரம்பித்த பிறகே இப்போது திரு .ஆச்சாரியார் “பிச்சை போடாவிட்டாலும் பரவாயில்லை நாயை பிடித்துக் கட்டு” என்கின்ற பழமொழிப்படி யார் ராமனை வணங்கா விட்டாலும் பரவாயில்லை ராவணனைப் போற்ற வேண்டாம் என்று சொல்லித் தீரவேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டார்.

மற்றும், இராமனுக்கும் இராவணனுக்கும் பெயரளவில் வியாக்கியானம் செய்வதில் இராமன் என்கின்ற பெயரை விட இராவணன் என்கின்ற பெயருக்கு அதிக மதிப்பு கொடுக்கவும் வந்துவிட்டார். ஆனால் அதை பித்தலாட்டமான முறையில் சொல்லுகின்றார். என்னவென்றால் இராமன் என்பது இரா - மன் = இராமன் - இல்லாத அரசன் என்றும் இராவணன் என்பது இராமனின் அண்ணன் என்றும் பொருள்படுவதாக வடமொழியை தென்மொழியில் அர்த்தப்படுத்தி காட்டி ஏய்க்கப் பார்க்கிறார்.

தவிரவும் “இராமாயணம் பொய்க்கதை ஆகையால் இராவணன் பெருமையைப் பற்றிப் பேசுவது மூடநம்பிக்கை” என்கின்றார். உண்மையிலேயே திரு. ஆச்சாரியார் மூட நம்பிக்கைக்காக பரிதாபப் படுபவரானால் அவருடைய முதல் வேலை இராமாயண ஆராய்ச்சிக்காரரையும் இராமாயண இரகசியம் வெளிப்படுத்துபவர்களையும் திருத்துவதல்ல என்றும், மற்றென்னவெனில் ராமாயணத்தின் பெயரையும் ராமன் பெயரையும் சொல்லிக் கொண்டு செட்டிநாட்டில் கொள்ளை அடிக்கும் சோம்பேறி அயோக்கியர்களையும், இராமாயணத்தையும் ராமனையும் உண்மை என்று நம்பிக்கை கொண்டு மேற்படி அயோக்கியர்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கும் முழு மூடர்களையும் திருத்த வேண்டியதே முதல் வேலையாகும் என்று மறுபடியும் திரு. ஆச்சாரியாருக்கு சொல்லுகிறோம்.

மற்றபடி அந்த வேலையை விட்டுவிட்டு “இராமனுக்கு கொடுத்தால் இராவணனுக்கும் கொடுங்கள்” “இராமன் யோக்கியனென்றால் இராவணன் அவனை விட யோக்கியன்” என்று சொல்லுகிறவர்களிடம் வந்து இவர் பரிதாபப்பட வேண்டியதில்லை என்பதே நமது கருத்து.

தவிரவும் “ராமன் க்ஷத்திரியனே தவிர பிராமணன் அல்ல” என்கின்றார். இராமன் பிராமணனானாலும், க்ஷத்திரியனானாலும் தவம் செய்ததற்காக ஒரு சூத்திரனைக் கொன்றான் என்று எழுதியிருப்பதால் அவன் பிராமணத் தன்மை கொண்டவனும் பிராமணனை விட அதிகமான அயோக்கியனும் என்று தான் கொள்ள வேண்டியதே தவிர அதில் ஒன்றும் விதிவிலக்கு இருப்பதாகவும் நமக்கு சிறிதும் தோன்றவில்லை.

இனி கம்பரைப் பற்றி திரு. ஆச்சாரியார் மிகப் புகழ்ந்து அவருக்கு வக்காலத்து பேசுகிறார். திருவள்ளுவரை தலைகாட்டாமல் அடித்த இந்தப் பார்ப்பனர்களுக்கு கம்பர் மீது இவ்வளவு கருணை வந்ததற்குக் காரணம் என்னவென்றுப் பார்த்தாலே கம்பர் யோக்கியதை நன்றாய் விளங்கும். கம்பரை ஷேக்ஸ்பியர், ஹோமர், ஷெல்லி முதலிய மேல்நாட்டு கவிகளுக்கு ஒப்பிட்டு ஷேக்ஸ்பியர் வேண்டுமா? இந்தியா வேண்டுமா? என்று ஒரு ஆங்கிலேயனைக் கேட்டால் அவன் ஷேக்ஸ்பியர் வேண்டுமென்றுதான் சொல்வான் என்று இதற்கு உதாரணங்காட்டி கம்பராமாயணம் என்கின்ற காவியம் இந்திய நாட்டை விடசிறந்தது என்று சொல்லுகின்றார். அதாவது இந்தியாவை இழந்தாவது ராமாயணத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிறார்.

இது சிறிதாவது பொருத்தமுள்ள உதாரணம் என்றோ அறிவுள்ள உதாரணம் என்றோ யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம். ஷேக்ஸ்பியரையும் ஷெல்லியையும் ஆங்கிலேயர்களில் எந்த முட்டாளும் கடவுளாகக் கும்பிடுவதில்லை என்பதையும் ஷேக்ஸ்பியரிலும் ஷெல்லியிலும், வரும் நாடக பாத்திரர்களுக்கு ஆங்கிலேயரில் எந்த மடையனும் கோயில்கட்டி, கல்யாண உற்சவமும், தெப்ப உற்சவமும், வைரத்திலும் செகம்பிலும் நாமமும் நகையும் போடுவதில்லை என்பதையும் திரு.ஆச்சாரியார் அறியாரா? அல்லது அறிந்தே ஏய்க்கிறாரா? என்று கேட்கின்றோம்.

தவிரவும் நமக்கு இராமாயணத்தில் உள்ள தகராரெல்லாம் ராமனையும் சீதையையும் அநுமாரையும் கடவுளாகக் கும்பிடுவதிலேயே ஒழிய கவி நயத்தில் அல்ல என்பதை திரு.ஆச்சாரியார் தெரிந்து கொள்ளாதது விசனிக்கத் தகுந்ததேயாகும். தவிரவும் திரு ஆச்சாரியார் கம்பரானவர் உலக நன்மையை கோரி பொருள், போகம், வேகம் ஆகியவைகளை மக்களுக்கு ஊட்டுவதற்காக ஒரு வீரனது கதையை எழுதியதாக சொல்லுகின்றார்.

இந்த இடத்தில் திரு.ஆச்சாரியாரின் கருத்து கம்பராமாயணமானது மக்கள் ஒழுக்கத்திற்கேற்ற கதைச்சுவை உடையது என்பதேயாகும். இங்குதான் கம்ப இராமாயணத்திற்கும் நமக்கும் தகராறு இருக்கின்றது என்கின்றோம். அதாவது ஆச்சாரியார் கருத்தில் கம்பர் ராமனை வீரனாகக் கொண்டு எழுதினாரா அல்லது இராவணனை வீரனாகக் கொண்டு எழுதினாரா என்றும் கேட்பதோடு கம்பர் ராமனைத் தான் வீரனாக்க கொண்டு எழுதி இருப்பார் என்றே எண்ண வேண்டியிருக்கின்றது என்றும் ஏனெனில் அதற்கு பெயர் ராமாயணம் என்று ஏற்பட்டிருப்பதால் இராவணனைக் கொண்டல்ல என்பது வெள்ளிடை மலையாகும்.

திரு. ஆச்சாரியாரின் இராமாயண ஆராய்ச்சி அறிவுப்படி இராமாயண இராமன் வீரனாவானா? என்பதே நமது கேள்வி. சரி கம்பர்தான் ராமாயணத்தை வீரர் கதையாகக் கொண்டெழுதினார் என்று வைத்துக் கொண்டாலும் வால்மீகி உலக நன்மைக்காக ராமாயணத்தை வீரர் கதையாக எழுதினாரா? அல்லது பார்ப்பனர் களின் வயிற்றுப் பிழைப்பு கதையாக எழுதினாரா என்று கேட்கின்றோம்.

தவிர திரு.ஆச்சாரியார் “ஷேக்ஸ்பியர் ஆங்கிலேயராயிருந்தும் டென்மார்க்குஅரசரைப் பற்றி ஒரு நாடகம் எழுதினது போல் கம்பரும் இராமர் கதையை எழுது முறையா” என்று சொல்கின்றார்.

இதை எதற்காக எடுத்துச் சொன்னார் என்பதற்கு ஆதாரம் அப்பிரசங்கத்தில் காணப்படவில்லையானாலும் ஒரு திராவிட கவி ஆரிய (வடநாட்டு) அரசன் கதையை ஏன் எழுதினார் என்பதற்கு சமாதானம் சொல்லவே இதைச் சொல்லி இருக்கின்றார். ஆகவே, அக்கதை வடநாட்டு அரசன் கதை என்பது திரு.ஆச்சாரியாரை அறியாமலே வெளியாய்விட்டது பற்றி மகிழ்ச்சி ஒருபுறமிருந்தாலும், ஆச்சாரியார் விஷயத்தில் பரிதாபப் படாமலுமிருக்க முடியவில்லை.

கம்பர் ஒரு வீரன் கதை எழுதுவதாக கருதி எழுதியிருப்பாரானால் இந்து மத வருணாச்சிரம தர்மங்கள் அதில் புகுந்திருப் பதற்கு என்ன காரணம் என்பதற்கு திரு.ஆச்சாரியார் ஒரு சமாதானமும் சொல்லவே இல்லை.

தவிர ராமன் உண்மை, நன்மை, அழகு என்கின்ற மூன்று லட்சியங்களின் பிரதிநிதி என்று சொல்லுகின்றார். ஆனால் ராமனிடம் என்ன உண்மை, என்ன நன்மை, என்ன அழகு இருந்தது என்று மாத்திரம் எடுத்துச் சொல்லவில்லை.

ஆகவே, திரு.ஆச்சாரியார் கூட்டத்தினிடம் உள்ள இந்த மனப்பான்மையின் யோக்கியதையை வெளிப்படுத்தத்தான் இராமாயண ஆபாசம், இராமாயண இரகசியம், இராமாயண ஆராய்ச்சி ஆகியவைகள் வெளியாக வேண்டியிருக்கின்றது என்பதை பொது ஜனங்களுக்கு எடுத்துக் காட்டுகின்றோம். தவிரவும் ராமன் என்பதற்கு மகிழ்விப்பவன் என்றும் ராவணன் என்பதற்கு அழச் செய்பவன் (கஷ்டப்படுத்துபவன்) என்றும் பொருள் கூறுகின்றார்.

இது எந்த அகராதியில் இருக்கின்றதோ தெரியவில்லை. எப்படி இருந்தாலும் இராமாயணக் கதைப்படி இராமன் யாரை மகிழ்வித்தான்? இராவணன் யாரை அழ வைத்தான்? என்பது வெளியாக வேண்டாமா என்று கேட்கின்றோம். தவிரவும் இராவண ராஜ்யத்தில் பொருள் செருக்கு, கல்வி செருக்கு இருந்ததாக திரு.ஆச்சாரியார் சொல்லுகின்றார். இதற்கு ஆதாரம் இலங்கை 700 யோசனை தூரமும் உலகில் உள்ள உயர்ந்த பொருள்கள் எல்லாம் அங்கு இருந்தனவாம்.

ஆனால் ராமராஜ்யத்தில் என்ன இருந்தது என்பதே இவர் காட்டவே இல்லை. அங்கிருந்த பார்ப்பன செருக்கையும், அறுபது ஆயிரம் பெண்டாட்டியை கட்டிக் கொண்டு பிள்ளையில்லாமல் யாகம் செய்து பிள்ளை பெற்ற ஆண்மையற்ற பார்ப்பனியச் செருக்கையும், பெண்டாட்டி மீது சந்தேகப்பட்டு கர்ப்பத்துடன் காட்டில் கொண்டு போய் விட்டுவிட்ட அற்ப புத்தி செருக்கையும், கொடுமைப் புத்திச் செருக்கையும் அடியோடு மறைத்து விட்டார்.

மொத்தத்தில் ராமாயணம் நடந்த கதையா? பொய்க்கதையா? என்பது நமது கவலையே அல்ல. ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டாவது ராமாயணக் கதை மனிதத் தன்மையும் ஒழுக்கமும் படிக்கத் தகுந்ததுமான கதையா என்பதே நமது கேள்வி. இதற்கு ஒரு வார்த்தையில் பதில் சொல்லுவதற் கில்லாமல் வெறும் தந்திரமும் சூழ்ச்சியும் பித்தலாட்டமும் செய்வதில் என்ன பலன் அடையக்கூடும் என்று இந்தக் கூட்டத்தார்கள் நினைக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.

தவிர கம்பராமாயணத்தை கவி அழகுக்காக காப்பாற்ற வேண்டும் என்கின்றார். அப்படியானால் வால்மீகி ராமாயணத்தை என்ன அழகுக்காக காப்பாற்ற வேண்டும் என்றோ அல்லது அதை ஒழிக்க வேண்டுமென்றோ திரு.ஆச்சாரியார் ஒரு வார்த்தைகூட சொல்லவே இல்லை.

சாதாரணமாக இந்தக் கூட்டத்தார் நாம் வால்மீகி ராமாயணத்தைக் குற்றஞ் சொல்லும்போது கம்பர் “கவி நயத்தைக்” கொண்டு வந்து போட்டுத் தப்பித்துக் கொள்ளுவதும் கம்பர் கவிநயத்தைக் குற்றம் சொல்லும் போது வால்மீகி ராமாயணத்தின் “தத்துவார்த்தத்தை”ச் சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்ப்பதும் குலதர்மமாகப் போய்விட்டது.

தவிர கம்ப ராமாயணத்தை உண்மைக் கதை என்று நினைத்திருந்தால் வால்மீகி எழுதியிருப்பதற்கு மாறுபாடாக எழுதி இருப்பாரா என்று திரு.ஆச்சாரி யார் கேட்கின்றார். நாமும் கம்பராமாயணத்தை உண்மைக் கதை என்று நம்பினார் என்று சொல்ல வரவில்லை.

ஆனால் கம்பரும் பார்ப்பனர்களும் சேர்ந்து மற்ற மக்களை ராமாயணம் உண்மைக் கதை என்றும் ராமன் கடவுள் என்றும் நம்பச் செய்வதற்காக செய்த சூழ்ச்சி என்று தான் சொல்கின்றோம்.

தவிரவும் கம்பருக்கு சமஸ்கிருதம் தெரியாது என்றும், வால்மீகி ராமாயணத்தை பார்ப்பனர் மொழி பெயர்த்துச் சொல்ல அதை அனுசரித்து கவி உண்டாக்கியதாகவும், நினைத்தபடி சிலபுரட்டுகள் இருப்பதால் கம்பருக்கு வால்மீகி ராமாயணத்தில் இன்னது இருந்தது என்று தெரியுமா என்று நினைப்பதற்கில்லாமல் இருக்கின்றது என்று சொல்லி சில கம்பதாசர்கள் தப்பித்துக் கொள்வதையும் பார்த்திருக்கிறோம்.

தவிர திரு.ஆச்சாரியார் கடவுள் உண்டா இல்லையா என்கின்ற விவகாரமே இந்து மதத்தில் இல்லை என்றும் ஒவ்வொருவனும் தன்னைத் தானே கடவுள் என்று நினைத்துக் கொள்வதே வேதத்தின் முடிவான கொள்கை என்றும் ஒவ்வொருவருடைய உயர்ந்த லட்சியங்களே கடவுள் என்றும் சொல்லுவதோடு மற்றும் அதற்கு நேர் விரோதமாய் ரசாயன ஆராய்ச்சியில் கடவுள் இல்லையென்றும், வான சாஸ்திர ஆராய்ச்சியில் கடவுள் இல்லையென்றும் இதை ஒப்புக் கொள்ளாதவர்களே நாஸ்திகர்கள் என்றும் சொல்லுகின்றார்.

இது கடவுள் சம்பந்தமாக மக்களை குழப்பத்திற்குள்ளாக்குவதையும் சமயம் போல் பேசத் தக்கபடியான முன்னுக்குப் பின் முரணையும் காட்டுகின்றது. இதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனெனில், சயன்சுக்கும் அதாவது விஞ்ஞான சாஸ்திரத்திற்கும் கடவுளுக்கும் சண்டை துடங்கியாய் விட்டது.

கடவுளை நிலை நிறுத்த எவ்வளவு பெரிய அவதாரங்கள் வந்தாலும், மதங்களை நிலை நிறுத்த எவ்வளவு பெரிய கடவுள் தன்மை வாய்ந்தவர்கள் வந்தாலும் யார் தவங்கிடந்தாலும் அதுவே பார்த்துக் கொள்ளும்.

கடைசியாக, ராமாயணம் என்பது எந்த முறையிலும் எந்த அர்த்தத்திலும் நாட்டுக்கு மனிதத் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதை எடுத்துக்காட்டவும் இதற்கு விரோதமாய் கிளம்பும் எதிர்ப்புகளுக்கு சமாதானம் சொல்லவும், இந்த வியாசமானது இவ்வளவு நீட்டி எழுதப்பட்டது என்பதோடு இதை முடிக்கின்றோம்.

குறிப்பு :- 17.11.1929 குடி அரசு தொடர்ச்சி

(குடி அரசு - கட்டுரை - 24.11.1929)

இராமாயணம்

 இராமாயணம்

இராமாயணம் என்னும் கதையில் காணப்படும் விஷயங்கள், சம்பவங்கள் முதலியவை பெரிதும் அராபியன் னைட், ஷேக்ஸ்பியர், மதனகாமராஜன், பஞ்சதந்திரக் கதைகள் முதலிய கட்டுக் கதைகளைப் போன்று இயற்கைக்கும் மனித ஆற்றலுக்கும் பொருத்த மற்றதும், அனுபவத்தில் சாத்தியப்படாததுமான அசாதாரணமானவைகளாய் இருப்பதால் இக்கதை உண்மையாய் நடந்த சம்பவங்களைக் குறிப்பிடுவ தில்லை என்று உறுதியாய்க் கூறலாம்.

அசாதாரண சம்பவங்களால்தான் கடவுள் தன்மை அவதாரத் தன்மை முதலிய தெய்வீகத் தன்மைகளைக் கற்பிக்க முடியும் என்று சொல்லப்படுமானால், இக்கதையில் காணப்படும் அசாதாரண விஷயங்கள் பெரிதும் பொருத்தமற்றதும், தேவையற்றதும், நீதியற்றது மாய் இருப்பதோடு பொது நடத்தையில், தேவை உள்ள சந்தர்ப்பங்களில் அதாவது உயர் குணமும் முன் யோசனையும், கருணையும், சத்தியமும், தூரதிருஷ்டியும் நல்லெண்ணமும் காட்டப்பட வேண்டிய சாதாரணக் காலங்களில் அசாதாரண சம்பவத்தில் காட்டப்படும் தெய்வீகத் தன்மையோ அல்லது மிக மிக சாதாரணத் தன்மையில் காட்டப்படும் சராசரி மனிதத் தன்மையோ கூட இல்லாமல் இருக்கின்றன.

கதாநாயகனாகிய இராமனைக் கடவுளின் அவதாரம் என்று மக்கள் கருத வேண்டும் என்பதாகக் கருதியே கற்பனை செய்திருக்கும் இந்த இராமாயணக் கதையில், இராமனுடைய எண்ணம், பேச்சு, நடத்தை ஆகியவைகளில் வஞ்சகம், பொய், சூது, வன்னெஞ்சம், பேராசை, கொலை, மதுவருந்தல், மாமிசம் புசித்தல், மறைந்திருந்து கொல்லுதல், அபலைகளை, குற்றமற்ற வர்களை கொடுமை செய்தல் முதலிய தீயகுணங்களும் கூடா ஒழுக்கங்களும் ஏராளமாகக் காணப்படுகின்றன. இதனாலேயே இராமனும், இராமாயணக்கதையும் தெய்வீகத்தன்மை பொருந்தியவை அல்ல என்பதும், அவை சராசரித் தன்மையைவிடக் கீழ்ப்பட்டவை என்பதும் தெள்ளென விளங்கும் என்பதோடு மற்றும் இராமனுடையவும் இராமாயணத்தினுடையவும் எந்தக் காரியமும் எண்ணமும் தமிழ் மக்களுக்கு படிப் பினைக்கோ பின்பற்றுதலுக்கோ ஏற்றதல்ல என்பதை யும் தெளிவுபடுத்தும்.

கதை தோற்றம்

இராமாயணக் கதை தோற்றத்திற்காக அதில் கூறப்படும் காரணங்கள் பெரிதும் பகுத்தறிவுக்கும், தெய்வீகத் தன்மைக்கும் ஒத்ததாகச் சிறிதும் காண் பதற்கில்லாமல் இருக்கிறது. அதாவது:-

தேவர்கள் தாங்கள் செய்யும் யாகத்தை இராவணன் முதலிய இராட்சதர்கள் வந்து அழிப்பதாய் நான்முகனிடம் வந்து முறையிடுகின்றார்கள். நான் முகன் தன் தந்தையாகிய திருமாலிடம் சென்று முறையிடுகிறான். திருமால் தாம் பூமியில் இராமனாகப் பிறந்து இராவணனைக் கொல்லுவதாக ஒப்புக் கொள்ளுகிறார் இதுவே இராமாயண கதை தோன்றக் காரணம்.

திருமால் மனிதனாகப் பூமியில் பிறந்து பல சங்கடங்களை அனுபவிக்கக் காரணம் என்னவெனில், முன்பு அவர் செய்த பாபச்செயல்களுக்காக அவருக்கு ஏற்பட்ட சில சாபக்கேடுகள் என்பதாகத் தெய்வீகப் புராணங்கள் சொல்லுகின்றன. அவையாவன:- திருமால் பிருகு முனிவரின் மனைவியைக் கொன்ற பாவத்திற்காக ஏற்பட்ட சாபம் என்றும், திருமால் ஜலந்திராசூரன் மனைவியை வஞ்சகமாய்க் கூடின பாவத்திற்காக ஏற்பட்ட சாபம் என்றும், திருமால் திருமகளைப் பகல் காலத்தில் பிறர் அறியக் கலவி செய்த பாவத்திற்காக ஏற்பட்ட சாபம் என்றும், இன்னும் இப்படிப் பலவாறாகப் புராணங்களில் கூறப்பட்டி ருக்கின்றன.

இக்காரணங்கள் ஒருபுறமிருக்க, இவற்றினுள் கூறப்பட்ட தேவர்கள் என்பவர்கள் யார்? அசுரர்கள், அரக்கர்கள் என்பவர்கள் யார்? இராட்சதர்கள் என்பவர்கள் யார்? யாகம் என்றால் என்ன? கடவுளாகிய திருமாலுக்கு கொலை, களவு, காமம், விபச்சாரம் ஆகிய தீய காரியங்கள் செய்யும் குணங்கள் ஏன் ஏற்பட்டன? இக் காரியங்களைச் செய்பவர்கள் கடவுளர்கள் ஆவார்களா? தேவலோகத்துக்கும், பூலோகத்துக்கும் சம்பந்தம் என்ன? தேவர்கள் யாகம் செய்ய பூலோகத்துக்கு ஏன் வரவேண்டும்? ஜீவப்பிராணிகளைச் சித்திரவதை செய்து கொன்று, பக்குவப்படுத்தி, மந்திரம் சொல்லி, மதுவோடு உண்பதுதானா யாகம்? இப்படிப்பட்ட காரியங்களுக்கு மகிழ்ந்துதானா கடவுள், தேவர்களுக்கும் யாகம் செய்யும் மற்றவர்களுக்கும், உயர்பதவியும் மேன்மையும் அளிக்க வேண்டும்? இப்படிப்பட்ட கொடுமையும் கொலையுமான பாதகச் செயல்களை நடைபெறாமல் தடுப்பது கெட்ட காரியமா? கொலை செய்கிறவர்கள் தேவர்களாகவும் அதைத் தடுக்கிறவர்கள் இராட்சதர்களாகவும் கருதப் படுவதுதான் கடவுள் நீதியா? என்பவை போன்ற நீதிகள் அறிஞர்களால் யோசிக்கப்பட வேண்டியதாகும்.

இன்றைய நாட்களிலேயே ஜீவப் பிராணிகளை இம்சிப்பதும், மதுவருந்துவதும் முதலாகிய காரியங்கள் கூடாத காரியம் என்று பொது மக்களும் அரசாங்கமும் கருதி பழிப்பும் ஆக்கினையும் தண்டனையும் விதிக்கப்பட்டு இருக்கும்போது, அக்காலத்தில் அதைத்தடுப்பது ஒழுக்கமாகவும் நீதியாகவும் இருந்திருக்காதா? அதிலும் சிவபக்தனான இராவணனுடைய நாட்டிலும், ஆட்சியிலும், இம்சையும் உயிர்க்கொலையும் கொண்ட யாகத்தைக் குற்றமானதென்றும் தடுக்கப்பட்ட காரியம் என்றும், சட்டமும் ஆக்கினையும் செய்யவேண்டியது கடமையாக இருந்திருக்காதா? இந்தத் தடுத்தல் கடமையை ஒரு அரசன் செய்ததினாலேயே அந்த அரசனையும் அவனது குலத்தையும், குடிபடைகளையும் நாட்டையும் அடியோடு ஒழிப்பதற்காக அவதாரம் எடுத்து வர வேண்டியது கடவுள் தன்மையா? என்பனவும், இவை போன்ற பிறவுமே, இராமாயணக் கதையின் தோற்றமும் அதன் காரணங் களும் ஆபாசக் களஞ்சியமாய் இருந்து வருவதை விளக்கும்.

மகப்பேறு யாகம்

இராமாயணக் கதையின் முதல் காண்டம் என்னும் பாலகாண்டம்,அயோத்தி அரசனாகிய தசரதன் தனக்கு மகப்பேறு உண்டாக யாகம் செய்கிறான் என்றும், அந்த யாகத்தில் கொன்று பலியிடுவதற்குகாக, ஆடு, மாடு, குதிரை, பறவை, பாம்பு, ஆமை முதலிய நடப்பன, பறப்பன, ஊர்வனவாகிய ஜீவப் பிராணிகளைக் கொண்டு வந்து வைத்திருந்ததாகவும் கூறுகிறது.

ஒருவனுக்குப் பிள்ளை உண்டாக, இத்தனை ஜீவன்கள் பலியால் மாள வேண்டுமா? இந்தப் பலிகளை ஏற்றுத்தான் கடவுள் ஒருவனுக்குப் பிள்ளை கொடுக்க வேண்டுமா என்பது ஒருபுறமிருக்க, இதைக்கண்டு தேவர்கள் திருப்தி அடையலாமா? இப்படிப்பட்ட தேவர்களுக்கு ஓரரசன் இருக்கிறானாம்.அவன் பெயர் தேவேந்திரனாம்! இவனது கொடுஞ்செயலையும், கூடா ஒழுக்கத்தையும் இவன் சம்பந்தப்பட்ட கதைகளில் பார்ப்போமானால், அவை பல இராமாயணம் ஆகலாம்.

நிற்க, தசரதன் செய்யும் இந்த யாகத்தில், யாகப் பசுவாகிய குதிரையை தசரதன் மனைவிகளில் ஒருத்தியாகிய கவுசலை என்பவள் ஒரே வெட்டில் வெட்டிக் கொன்று, அந்த செத்த குதிரையுடன் ஒரு இரவு முழுதும் கட்டி அணைந்து படுத்துக் கொண்டிருக்கிறாள். இதுதான் தெய்வீகத் தன்மை போலும். இனி இவர்களது மானுஷீகத் தன்மை, எப்படி இருக்கும் என்பதை நினைக்கவே நம்மால் முடியவில்லை. இவ்வளவுதானா? இன்னும் இந்த யாகத்தின் யோக்கியதையை, யாகசாஸ்திரப்படி பார்ப்போமானால், அது நினைப்பதற்கே உடல் துடிக்கும். அந்த ஆபாசங்கள் ஞானசூரியன் என்னும் மற்றொரு குடிஅரசு பதிப்பில் காணலாம். இரவு முடிந்தவுடன், இந்த கவுசலையையும் மற்றும் தசரதனின் இரு மனைவி களாகிய சுபத்திரை, கைகேயி ஆகியவர்களையும், யாகப் புரோகிதர்களாகிய ருக்வித்துக்களுக்கு தசரதன் தட்சணையாகக் கொடுத்துவிடுகிறான்.

இந்தப் புரோகிதர்கள் மூவரும் இப்பெண்களைக் கைப்பற்றித் தங்கள் இஷ்டம்போலெல்லாம் கூடித்திரிந்து அனுபவித்து விட்டுப் பிறகு, அதற்காகக் கூலியோ, கிரையமோ தசரதனிடம் வாங்கிக்கொண்டு திருப்பிக்கொடுத்து விடுகிறார்கள். அதன்பிறகே இம்மனைவிகள் கர்ப்பவதி களாகக் காணப்படுகிறார்கள். (ஆங்கில மொழி பெயர்ப் பாளராகிய மன்மதநாத் தத்தர் இந்த இடத்தில் அரசனது மனைவிகளை ஹோதா, அத்வர்யு, உக்தா ஆகிய மூவரும் புணர்ந்தார்கள் என்று எழுதுகிறார்) இதுதான் தசரதன் செய்த புத்திர காமேஷ்டி யாகத்தின் தத்துவம்.

இந்த யாகத்தின் முறைகளையும், அங்கு நடந்த காரியங்களையும், சாஸ்திரப்படியும், கதைப்படியும், பகுத் தறிவைக் கொண்டு நன்றாய் ஆராய்ந்து பார்த்தால் இந்த மூன்று மனைவிமாருக்கும் பிறந்ததாகச் சொல்லப்படும் நான்கு குழந்தைகளும் தசரதனுக்குப் பிறந்த குழந்தைகளாக இருக்க முடியாது என்றும், அவை அந்த யாகப் புரோகிதர்களுக்குத்தான் பிறந்திருக்க வேண்டுமென்றும் விளங்கும். இதை விளக்கமாகச் சொல்லவேண்டு மானால் யாகம் செய்யும்போது தசரதனுக்கு வயது அறுபது ஆயிரம். அவனுக்கு மனைவிமார்களோ அறுபது ஆயிரம் பேர்கள் என்று, கம்பன் சொல்லி இருந்தாலும், முன்னூற்று அய்ம்பது மனைவிகள் என்று வால்மீகி கூறுகிறார்.

இதிலிருந்து தசரதன் படுகிழவன் என்பதும், அவன் பல நூற்றுக் கணக்கான மனைவிகளை மணந்து, கலந்து வாழ்ந்த காமாந்தகன் என்பதும் நன்கு விளங்கும். இப்படிப் பட்டவன் தனக்கு ஆண்மை இழந்து பிள்ளை உண்டாகும் சக்தி இல்லாமல் போவதும், வெறும் சபலத்தால் பெண்களுடன் கூடிக் குலாவித் திரிவதும் இயற்கையேயாகும். ஆகவே இந்தக் காரணங்களால், இத்தனை காலம் கர்ப்பமடையாதிருந்த இவனது மனைவிமார்கள் அந்த யாகம் செய்த அன்று ஒரு நாளில் மூன்று பேரும் ஏக காலத்தில் கிழவனாகவும் ஆண்மை யற்றவனாகவும் இருந்த தசரதனால் கர்ப்பம் அடைந்திருக்க முடியுமா? என்பதும் யோசிக்கத் தக்கதாகும்.

அன்றியும், அப்பெண்கள் மூவரும் யாகப் புரோகிதர்கள் மூவருக்குக் கொடுக்கப்பட்டு அவர்கள் மூவரும், இப்பெண்களை இஷ்டப்படி அனுபவித்து விட்டு, அதற்காக அரசனிடம் பணம் வாங்கிக்கொண்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டார்கள் என்றால் அப்பெண் களின் கர்ப்பத்திற்கு தசரதன் நாதனாக இருக்கமுடியும் என்று யார்தான் சொல்ல முடியும்?

உண்மையிலேயே இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கன் என்கின்ற நான்கு பிள்ளைகளும் தசரதனுக்கே பிறக்காமல், யாகப் புரோகிதர்களுடைய கருவுக்கே பிறந்திருந்தாலும், ஆரிய தர்மப்படி அதில் குற்றம் சொல்லவோ இழிவு கற்பிக்கவோ இடமில்லை. ஏனெனில், ஆரியரில் ஒருவன் அல்லது ஒருத்தி தனக் குப் பிள்ளை இல்லாவிட்டால், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வேறு ஒருவனிடம் கூடிப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தர்ம சாஸ்திரங்களும், ஸ்மிருதிகளும் கூறுகின்றன.

இதற்கு அனுபவ பூர்வமாய் ஆதாரம் வேண்டுமானால் மற்றொரு ஆரியக் கதையாகிய பாரதத்தில் பார்க்கலாம். அதில் யாகம் என்கின்ற (சாக்கு) காரணம்கூட இல்லாமல், பல விதவைகள் தமது குல குருவாகிய வியாசனிடம் கூடி, பல பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டிருக் கிறார்கள்.

திருதராஷ்டிரன், பாண்டு முதலியவர்கள் அந்தப்படி பிறந்தவர்களேயாவார்கள். இன்னும் அநேகம் பேர்கள் பாரதத்தில் இதுபோலவே காணப் படுகிறார்கள். மற்றும் சீதையின் பிறப்பைப் பார்த்தாலும், அவளது தாய், யாராலோ சீதையைப் பெற்று காட்டில் எறிந்து, புழுதியில் கிடந்த பெண்ணாகவே கிடைத் திருக்கிறாள். இந்தக் காரணத்தால் சீதைக்குத் திருமணம் கூட வெகுநாள் தடைப்பட்டிருக்கிறது. இதை சீதையே சொல்லுகிறாள்.

மற்றும், ஆரியர்களின் இதிகாச புராண சாஸ்திரங் களைப் பார்த்தால், அதில் வரும் மக்களுக்குக் கருவு உண்டாக்கியவர்கள் அல்லது பெற்றவர்கள், மனிதர் களாகக் கூட இருந்திருக்கவில்லை என்பது தெரியவரும். ஆதலால் இந்த யாகத்துக்கும் மகப்பேறுக்கும் சம்பந்த மில்லை என்பதும், யாகம் என்றால் மதுவருந்தி மாமிசம் சாப்பிட்டுக் கோலாகலமாய்த் திரியும் பண்டிகை என்பதும், அதனால் மதிக்கத்தக்க பலன் இல்லை என்பதும் இனிது விளங்கும்.

---  தந்தை பெரியார் -"குடிஅரசு" - கட்டுரை - 11.12.1943