Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

Sunday, 16 January 2022

மதமும், கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள் - தோழர் பெரியார்

 
மதமும், கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள்.


மனிதனுக்குள் கடவுளைப் புகுத்துவது மனிதனை முட்டாளாக்கும் டானிக்(வைட்டமின் சத்து) ஆகும். இதை இன்று பார்ப்பனர்கள், சங்கராச்சாரிகள் கடவுள் பிரசாரம் செய்வதில் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

கடவுள் மனித நலத்துக்காகக் கண்டு பிடித்த சாதனம் அல்ல. மனிதனை முட்டாளாக்குவதற்குப் பயன்படுத்தும் சாதனமேயாகும். சூரியனை, சந்திரனை நெருப்பை, நீரை, காற்றை, கல்லை, மண்ணை எந்த மனிதனும் கண்டுப்பிடிக்கவில்லை. அவற்றின் பெயர்களைத்தான் மனிதன் தெரிந்து கொண்டான்.




இவற்றிற்கு விளக்கம் தேவை இல்லை. காரண காரியங்கள் தேவையில்லை. மனிதன் என்றால் இவைகளை அறிந்தே ஆகவேண்டும்; இவற்றின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.

ஆனால், கடவுள் அப்படி அல்ல; ஒருவன் சொல்லி அதுவும் சொல்லுவது மாத்திரமல்ல; நம்பும்படி செய்து, நம்பும்படி செய்வது மாத்திரமல்ல; நம்பும்படி கட்டாயப்படுத்தி மனித மூளைக்குள் புகுத்தியாக வேண்டும்.

இந்தக் கதி சர்வ சக்தியுள்ள "கடவுளுக்கு" ஏற்பட்டது பரிதாபம்! மகா பரிதாபம்!

கடவுள் கதை ஒரு முட்டாளுக்குத் தோன்றிய தோற்றம். இது உலக அறிவையே பாழாக்கிவிட்டது. அதாவது சிறு குழந்தை கையில் கிடைத்த நெருப்புப்பந்தம் வீட்டையே, ஊரையே எரித்து சாம்பலாக்கியது என்பது போல் கடவுள் எண்ணம் அறிவையே கொன்று விட்டது என்று சொல்லலாம்.

கடவுள் என்பது "பிடிக்குப்பிடி நமசிவாயம், (நமசிவாயம் என்றால், இங்கு ஓன்றும் இல்லை; சூனியம் என்றுதான் பொருள்)

அது "கடவுள்" என்றால் ஒரு "சக்தி," "சக்தி கூட அல்ல;" "ஒரு காரணம்" "காரணப் பொருள்கூட அல்ல" அப்படி நினைப்பது, நினைத்துக் கொள்வது மனிதனுக்கு ஒரு "சாந்தி" என்பதாக கா.சு.வும் (M.L .பிள்ளை), திரு.வி.க.வும் சொன்ன விளக்கம் - இதை பழைய "குடிஅரசு" இதழில் காணலாம். ஆனாலும் இவர்கள் விக்கிரக பூசையும், பட (உருவ) பூசையும் செய்து வந்தார்கள். கடைசியாக மாற்றிக் கொண்டார்கள்.


மனிதனுக்கு எதற்காக கடவுள் தேவைப்பட்டது என்பது எனக்கு இன்னமும் விளங்கவில்லை. அதிலும், கடவுளை நம்பும் எவனும் அதன் சர்வ சக்தியில் நம்பிக்கை வைப்பதே இல்லை. எவனும் சம்பிரதாயத்திற்காக "கடவுள் செயல்" என்கிறானே தவிர, காரியத்தில் மனிதன் செயல் என்றும், இயற்கை என்றும், அகஸ்மாத், தற்சம்பவம், ஆக்சிடெண்ட் என்றும் தான் முடிவு செய்து கொண்டவனாகிறான்.

சர்வம் கடவுள் செயல் என்று சொல்லுகின்ற எவனும் சர்வத்திற்கும் தற்காப்பு செய்து கொள்ளாமல் இருப்பதில்லை. சர்வம் கடவுள் செயலாயிருக்கும் போது நாஸ்திகன் - கடவுள் இல்லை என்பவன் எப்படித் தோன்றினான் என்பது பற்றிச் சிந்திப்பதில்லை.

மற்றும் சர்வத்திலும் வியாபகமாக இருக்கிற கடவுள் மக்களுக்கு ஏன் தான் இருப்பதாக, தன்னைத் தானாகத் தெரிந்து கொள்ளச் செய்ய முடியவில்லை என்பதை சிந்திக்கவே மாட்டேன் என்கிறான்.

கிருஸ்து பாதிரி இந்தக் கேள்விக்குப் பதிலாக "கடவுள் மனிதனுக்கு அறிவைக் கொடுத்துவிட்டான்; அந்த அறிவைக் கொண்டு கடவுளைத் தெரிந்து கொள்ள வேண்டியது மனிதன் கடமை" என்று சொல்லிவிட்டார்.

உன் அறிவுக்கு எட்டிய கடவுள் ஏன் என் அறிவுக்கு எட்டவில்லை? என்று கேட்டதற்கு, "பாபஜன்மங்களுக்கு எட்டாது" என்று சொல்லிவிட்டார்.

அந்த பாபஜன்மங்களை யார் படைத்தது? படைத்தது கடவுளானால், பாபஜன்மங்களை ஏன் படைத்தார்? கடவுள் பாபஜன்மங்களைப் படைக்கவில்லையானால், பாபஜன்மங்களைப் படைத்தது யார்? என்று கேட்டேன்.

'சாத்தான் படைத்தான்' என்றும், மற்றும் அவருக்கே புரியாத எதை எதையோ யோசித்துப் பேசினார்.

இஸ்லாத்தின் கதியும் இப்படித்தான். இந்துவின் கதியே மும்மூர்த்திகள், ஓங்காளி, மாரி, காத்தவராயன், மதுரை வீரன், கருப்பண்ணன், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சமாதி, கல்லுகள், படங்கள், பட்சிகள், மிருகங்கள், மரங்கள், சாணி (மூட்டை உருவ), உருண்டைகள், செத்துப்போன மனிதர்கள் முதலிய எத்தனையோ பண்டங்கள் கடவுள்களாக வணங்கத் தக்கவைகளாகவும் இருந்து வருகின்றன.

இவைகளை ஏன் சொல்லுகிறேன் என்றால், ஒரு சர்வ சக்தியுள்ள கடவுளுக்குத் தன்னைப்பற்றித் தெரிவித்துக் கொள்ள – தன் உருவத்தை விளக்க சக்தியில்லை என்பதைக் காட்டத்தான்.

பிறகு – முன்ஜென்மம் - பின் ஜென்மம், கருமம், விதி, நரகம், சொர்க்கம், வைகுண்டம், கைலாயம் இப்படி இன்னும் பல பைத்தியக்காரனுக்குக் கள் ஊற்றினது போல் உளறல் மேல் உளறல்கள்.

மனிதனுக்குப் பிறகு முதல் சாவுவரை எதத்னையோ துன்பமும், தொல்லையும், இருக்க இந்தக் கடவுள், கருமம், மோட்ச – நரகத் தொல்லைகள் ஒருபுறம் மனிதனைச் சித்திரவதை செய்கிறது. மனிதன் (ஜீவ கோடிகள்) பிறப்புக்கும், வாழ்க்கைக்கும், சாவுக்கும் இடையில் அனுபவிக்கும் இன்பம், துன்பம், கவலை, தொல்லை முதலிய காரியங்களுக்கு அவசியம் என்ன? காரணம் என்ன? என்பதை எவனாலும் இதுவரை தெரிந்து கொள்ள முடியவில்லையே! இத்தனைக்கும் மனிதன் கழுதை, குதிரை, நாய், நரி, எருமை, யானை, புலி, சிங்கம், ஈ, எறும்பு முதலான எண்ணிறந்த ஜீவராசிகளைவிட அதிகமான அறிவு (பகுத்தறிவு) படைத்தவனாவான்.

இந்தப் பகுத்தறிவின் பயனால்தான் மற்ற ஜீவப்பிராணிகளுக்கு இல்லாத தொல்லையை மனிதன் அனுபவிக்கிறான். காரணம், இந்தப் பாழாய்ப்போன கடவுளால் தான் அதிகத் தொல்லை என்பேன்.

"உள்ளத்தைப் பங்கிட்டு உண்பது," "உழைப்பைப் பங்கிட்டுச் செய்வது" என்ற நிலை ஏற்பட்டால் கடவுளுக்கு, வேலையோ, அவசியமோ இருக்காது.

இப்போது கையில் வலுத்தவன் காரியமாகவும், அயோக்கியன் ஆதிக்கமாகவும் இருப்பதால், மனிதன் அறிவு இருந்தும் தொல்லைக்கும் துன்பத்திற்கும் ஆளாகிறான் - அடிமையாக வாழ்கிறான்.

இனி ஒரு அய்ம்பது ஆண்டுக்குள் மனிதனுக்கு சராசரி வயது 100–ஆகப் போகிறது. இது உறுதி. இப்பொழுதே பல நாடுகளில் சராசரி மனித வயது
67-முதல் 74-வரை இருந்து வருகிறது. நமது நாட்டில் 1950–ல் சராசரி வயது 32- ஆக இருந்தது. இன்று 50-ஆக ஆகிவிட்டது! இதற்குக் காரணம், 1940–ல் படித்த மக்கள் நம்நாட்டில் 100–க்கு 9–பேராக இருந்தவர்கள் காமராசர் முயற்சியால் 100– க்கு 50–பேராக ஆனதுதான். அதோடு கூடவே, "கடவுளும்," "கடவுள் செயலும்" வெகுதூரம் குறைந்து மறைந்து வருவதும் தான் என்று சொல்லுவேன்.

கடவுள் மறைய மறைய மனிதனுக்கு அறிவு வளரும்; சுதந்திரம் அதிகமாகும். நமது பெண்களுக்குப் பூணர சுதந்திரம் இருக்குமானால் - வாழ்வில் சுயேச்சையும், சமத்துவமும் ஏற்படுமானால், மனிதன் அறிவும், ஆயுளும் எல்லை இல்லாமல் வளர்ந்து கொண்டே போகும்.

முதலில் கடவுள் எண்ணம் மறையட்டும். இன்னும் நம்நாட்டு ஆட்சியாளர்களுக்கு (உண்மையான) தி.மு.க. காரருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவர்கள் (தி.மு.க.காரர்) இனியும் இரண்டு லட்சம் மெம்பர்களைச் சேர்க்க வேண்டும். பிறகு இவர்களை அசைக்க எந்த மாஜிகளாலும் முடியாது.

இது தான் கடவுள் இரகசியம்.



----------------------------------03.11.1970- "விடுதலை" நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்

Thursday, 13 January 2022

கடவுளுக்குத் தூதர் எதற்கு? - தோழர் பெரியார்

 

கடவுளுக்குத் தூதர் எதற்கு?


பகுத்ததறிவுள்ள மனிதன் இந்த 20- ஆம் நூற்றாண்டில் கடவுள், மதம், வேதம், மதத் தலைவர் என்றெல்லாம் நம்பிக் கொண்டும் ஏற்றுக்கொண்டும் நடப்பது மனித சமூதாயத்திற்கு மிகமிக வெட்கக்கேடான காரியமாகும். ஏனென்றால் இவையெல்லாம் 1000, 2000, 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கால மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட கருத்தும், காரியங்களுமாகும். இவைகள் அறியாமையின் காரணமாகவும், அக்காலக் காட்டுமிராண்டித்தன்மை காரணமாகவும், நல்லெண்ணத்துடனோ அல்லது கெட்ட எண்ணத்துடனோ பல கற்பனையான அதிசயம் அற்புதம் என்பவைகளை உண்டாக்கி, அவற்றின் மூலம் மக்களை நம்பச் செய்து ஏற்பாடு செய்யப்பட்டவைகளேயாகும்.




ஏன் அப்படிச் சொல்கிறேனென்றால், கடவுள், மதம், வேதம், வேத தத்துவம், மதத் தலைவர்கள் என்பவர்கள் ஆகியவை எதுவும் நம்பியாக வேண்டியதே ஒழிய, அறிவுக்கு, ஆராய்ச்சிக்கு, அனுபவத்திற்கு, சாத்தியத்திற்குப் பொருத்தமில்லாததாகவே இருப்பதால் தான் இப்படிச் சொல்கிறேன். அக்காலத்திய எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும், அந்த மதத் தலைவர்கள், தன்மைகள் எல்லாம் அறிவுக்கு, ஆராய்ச்சிக்கும், அனுபவத்திற்கும், பொருத்தமில்லாமல் நம்பித் தீரவேண்டியவர்களேயாவார்கள்.

உதாரணமாக கடவுளை உண்டாக்கியவன் யார் என்பதே யாருக்கும் தெரியாது. "தானாக உண்டானான்" என்று தான் சொல்லுவார்கள். எப்போதென்பது யாருக்கும் தெரியாது. இவை இரண்டும் தெரிய முடியாமல் இருப்பது தான் கடவுள் என்றால் அதைப்பற்றி அறிவுள்ள மக்களுக்குத் தெரியப்படாமல் போனதற்குக் காரணம் என்ன? அன்றியும், கடவுள் ஏன் உண்டானார்? ஏன் ஏற்பட்டார்?அவர் வேலை என்ன? அந்த வேலைகளை அவர் ஏன் மேற்கொண்டார்? இவை மனிதனுக்கு மாத்திரம்தானா? இவை இல்லாமல் இருந்தால் என்ன? என்பனபற்றி யாருக்காவது தெரியுமா? கடவுள் சர்வ சக்தி உள்ளவர் என்றால் இந்த அடிப்படைக்குக் காரியம் - கருத்துக்கூட மனிதனுக்குத் தெரியும்படி செய்ய சர்வ சக்திக்கு முடியாமல் போனது ஏன்? தவிரவும், சர்வ சக்தியுள்ள கடவுள் இருப்பதாக நம்ப வேண்டி இருக்கிறதே ஒழிய தெரிந்து கொள்ள, அறிந்து கொள்ள காணமுடிவதில்லையே! மற்ற ஜீவராவிகளுக்குச் சொன்னால் தெரியாதே! அது ஏன்?

தவிர, இந்துக்கள் என்பவர்கள் (பார்ப்பனர்களும், பார்ப்பனதாசர்களும்) முதலில் உலக நடப்புக்குக் "கடவுள்" தான் காரணம் என்பதைத் தெரிந்து கொள்ளாமல், மனிதத் தன்மைக்கு மேற்பட்ட குணமுள்ளவர்களான தேவர்கள் என்பவர்கள் தாம் காரணம் என்றும், இந்திரன், வருணன், வாயு, பிரமன், விஷ்ணு, ருத்திரன், எமன், சந்திரன், சூரியன் முதலியவர்கள் உலகத்தை நடத்துகிறார்கள் என்றும் கருதி, சொல்லி நடந்து வந்தார்கள். பிறகு பிரமா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்கள் என்று ஆக்கினார்கள். பிறகு அவற்றை மனிதனை விட இழிதன்மை - குணங்கள் உடையவனாக ஆக்கிப் பிரச்சாரத்தால் நிலை நிறுத்திவிட்டார்கள். இதிலிருந்து ஒரு கடவுள் என்பதும் கடவுள் சர்வசக்தி உடையது என்பதும் பெரிதும் மறைந்துவிட்டன.

அதன் பிறகு இந்த மூன்று கடவுள்களின், அவற்றின் மனைவி, மக்கள்களின் அவதாரம், அம்சம் என்பதாகக் கருதி, 300- கடவுள்கள், 3000 -கடவுள்களாக ஆக்கப்பட்டு விட்டன. அதன் பின்பு பார்ப்பனர் தங்கள் வயிற்றுப் பிழைப்பைக் கருதி, இந்த ஆயிரக்கணக்கான கடவுள்களுக்குச் சோறு, சிலை, கல்யாணம், சண்டை, சச்சரவு, மக்களைக் கொல்லுதல் என்பன போன்ற காரியங்களைக் கற்பித்து, மக்களுக்குள் புகுத்தி, மக்களைப் பயன்படுத்தி ஜீவித்து வருகிறார்கள். இந்தக் கருத்து தத்துவத்தில் உலகில் பல பாகங்களில் இருந்தது என்றாலும் இந்தியாவில் மாத்திரம் நிலை பெற்று நடந்துவருகிறது.

மற்ற பாகங்களில் இக்கருத்து பெரிதும் மறைந்து, ஒரு கடவுள், அதற்கு உருவமில்லை, அதற்கு ஒன்றும் தேவையில்லை, கடவுளைப் பிராத்தனை செய்வது தான் கடவுள் காரியம் என்பதாகக் கருதி பலர் நடந்துவருகிறார்கள். இந்தக் கருத்துக்கு மேற்பட்ட மதங்கள், மதத் தலைவர்கள், வேதங்கள் இருந்து வருகின்றன. இந்த மதக்காரர்களுக்குப் பிராத்தனை, ஜெபம், தொழுகை முதலியவைகள் தாம் முக்கிய கடவுள் தொண்டாக இருந்து வருகின்றன. இதற்குக் காலம், தலைவர், வேதம் இருந்தாலும் அவையும் பெரிதும் மூட நம்பிக்கை அடிப்படையில் தான் கற்பிக்கப்பட்டிருக்கிறன்றன.

"இந்து மதத்திற்கு"க் காலம் பல ஆயிரம் வருஷங்கள் கொண்ட யுகக் கணக்கில் சொல்லப்படுகின்றது. தலைவர்கள் - ரிஷிகள் - முனிகள் - தெய்வீகத்தன்மை கொண்ட அவதாரங்கள், புருஷர்கள் என்கிறான். வேதங்களோ தெய்வங்களால் அசரீரியாய்ச் சொல்லப்பட்ட சப்தங்கள் என்கிறான். இந்த மூன்றையும் ஓப்புக்கொள்ளாவிட்டால் இந்துமதம் (ஆரிய மதம்) என்பது இருப்பதற்கில்லை. அதாவது அசரீரியாய் இருந்த வேதத்தைப் பராசரன் மகன் வியாசன் தொகுத்து உருவாக்கினானாம். இந்தப் பராசன் என்பவன் பாண்டவர்களுக்குப் பாட்டனாம். இந்த வியாசன்தான் பாரதத்தைச் சொன்னானாம். இவன் சொல்ல கணபதி என்கின்ற கடவுள் எழுதினானாம். இவற்றையெல்லாம் நம்பினால் தான் இந்து (ஆரிய) மதம் ஏற்றத்தக்கதாகும்.

இதுபோல் தான் மற்ற கிறிஸ்து, இஸ்லாம் (முகமது) முதலிய மதங்களுமாகும்.கிருஸ்துவ மதத்தலைவர் ஏசு கிருஸ்து என்பவர் 2000 - ஆண்டுகளுக்கு முன் தகப்பனில்லாமல், பரிசுத்த ஆவிக்குப் பிறந்தாராம். ஆகவே அவர் கடவுளுக்கு மகனாம் (தேவதுமாரனாம்) ஆகவே அவர் சிலுவையில் அறையப்பட்டுக்) கொல்லப்பட்டாராம். செத்தவர் மறுபடியும் பிழைத்தாராம். பல அற்புதங்களைச் செய்தாராம். வியாதிகளைப் பார்வையால் சவுகரியப்படுத்தினாராம். ஒரு ரொட்டித் துண்டை ஆயிரக்கணக்கான பேர்களுக்குக் கொடுத்துப் பசியாற்றினாராம். குருடர்களுக்கு கண்ணைக் கொடுத்தாராம். இப்படி பல காரியங்கள் செய்தாராம். இவற்றையெல்லாம் நம்பினால் தான் கிருஸ்தவ மதம் இருக்க முடியும்.

அறிவைக் கொண்டு பார்த்தால் தேவனுக்கு, கடவுளுக்குக் குமாரன் எதற்கு? கடவுள் ஒருவனை மாத்திரம் குமாரனாக ஆக்குவது ஏன்? கடவுள் தோன்றி எத்தனையோ காலம் ஆனபிறகு அப்போது (2000 வருடங்களுக்கு முன்) மாத்திரம் எதற்காக மகனை உண்டாக்கினார்? அதற்கு முந்தின காலத்தில் ஏன் உண்டாக்கவில்லை? அப்போதெல்லாம் செத்தவர்கள் இல்லையா? குருடர்கள் இல்லையா? பசித்தவர்கள் இல்லையா? அந்த (கி.பி. 1 - ஆவது) வருஷம் மாத்திரம் என்ன சிறந்தது? கடவுள் செய்யவேண்டியதை - சொல்ல வேண்டியதை ஒரு மனிதனைக் கொண்டு மாத்திரம் ஏன் சொல்ல வேண்டும்? அதுவும் ஒரு சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன் சொல்ல வேண்டும்? அந்தக் காரியங்கள் இப்போது ஏன் நடப்பதில்லை? இன்று ஏன் அவர் வரவில்லை? இப்போது கிருஸ்துவை ஏற்காதவர்கள், நம்பாதவர்கள், வழிபடாதவர்கள் ஏனிருக்கிறார்கள்? தேவகுமாரனுக்கு இவ்வளவு தான் சக்தியா?

இது போலத்தானே இஸ்லாம் மதம் என்பதும் சொல்லப்படுகிறது? முகம்மது கடவுளுக்கு (கடவுளால் அனுப்பப்பட்ட) தூதராம். கடவுளுக்குத் தூதர் எதற்கு? குரான் கடவுளால் தூதரருக்கு (நபிக்கு)ச் சொல்லப்பட்ட செய்தியாம். கடவுள் மக்களுக்குச் செய்தி சொல்ல வேண்டுமானால் ஒரு மனிதர் (தூதர்) வாயினால் தான் சொல்லச் செய்ய வேண்டுமா? கடவுளால் எல்லா மனிதருக்கும் ஏககாலத்தில் தெரியும்படிச் செய்ய முடியாதா? உலகில் மனிதன் தோன்றி எத்தனையோ இலட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஊரிலே, யாரோ ஒரு சிலருக்கு மாத்திரம் சொல்லும்படி ஏன் சொல்லுகிறார்? மற்றவர்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை? முகமது நபி என்பதை ஏற்றுக் கொண்டு, அவரை நம்பினவர்களுக்குத்தானே குரான்? மற்றவர்கள் அதை ஏற்பதில்லையே! மற்றவர்களுக்குப் பயன்படுவதில்லையே! ஏன்?

கடவுள் சொல், அப்படி ஏன் நம்பச் செய்தவர்களுக்கு மாத்திரம் தெரிய வேண்டும்? இன்னும் எத்தனை மக்கள் நம்பியாக வேண்டி இருக்கிறது! இதுதான் கடவுள் தன்மையா? இவையெல்லாம் மனிதத் தன்மையா? மனிதக் கற்பனையா? தெய்வத்தன்மையா? ஒரு சர்வசக்தியுள்ள தெய்வம், தெய்வத்தால் அனுப்பப்பட்ட அவதாரம், அம்சம், மகன், குமாரன், தூதர், வேதம் ஏன் உண்டாக்க வேண்டும்? இருந்தால் இத்தனை வேதங்கள், குமாரர், தூதர், வேதம் ஏன் உண்டாக்க வேண்டும்? இருந்தால் இத்தனை வேதங்கள், குமாரர், அவதாரம், தூதர்கள், சமயங்கள், மதங்கள், போதகர்கள் இருக்க வேண்டிய அவசியமென்ன என்பதைச் சிந்தித்தால் இவையெல்லாம் மூட நம்பிக்கை, அதாவது அறிவைக் கொண்டு சிந்திக்காமல் கண்முடித்தனமாய் நம்ப வேண்டியவை ஆகின்றனவா இல்லையா? இது மனிதர் என்பவர்களுக்கு ஏற்றதா என்று கேட்கிறேன். இதற்காகக் கோபிப்பதில் பயன் என்ன?

மூடநம்பிக்கை ஒழிய வேண்டுமானால் மக்களிடம் உள்ள இப்படிப்பட்ட கருத்துக்கள் ஒழியாமல் எப்படி ஒழிய முடியும்? அறிவுள்ளவர்களே! பகுத்தறிவாதிகளே! சிந்தித்துப் பாருங்கள்! இது சந்திர மண்டலத்திற்கு மனிதன் போய் வரும் காலம்; காட்டுமிராண்டிக் காலமல்ல. எனவே சிந்தித்துப் பாருங்கள்! பின் சந்ததி மக்களை மடையர்களாக்காதீர்கள்!

(14-06-1971 "உண்மை" இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்.)

Tuesday, 16 May 2017

கடவுளுக்கு நோட்டீஸ் கொடுங்கள்! - பெரியார் - 29.2.1948

கடவுளுக்கு நோட்டீஸ் கொடுங்கள்!-பெரியார்


இழிவுக்குக் கடவுள்தான் காரணம் என்று உங்களுக்குத் தோன்றினால் அந்தக் கடவுளுக்கு உடனே நோட்டீஸ் கொடுங்கள். இந்த நோட்டீஸ் விண்ணப்பத்தை அறிந்த இரண்டு வாரத்திற்குள் நீ ஏதாவது ஒரு முடிவான பதில் தெரிவிக்கா விட்டால் உன் கோயிலை இடித்து விடு வோம் என்று எச்சரிக்கை செய்யுங்கள்!

எவனாவது உங்களைப் பார்த்து, ஒதுங்கிப் போ என்று சொன்னால், ஏனப்பா, நான் ஒதுங்க வேண்டும்; என் காற்றுப்பட்டால் உனக்கு என்ன காலராவா  வந்துவிடும்? என்று கேளுங்கள். அவன் தானாகவே ஒதுங்கிப் போய் விடுவான். எவனாவது உங்களைக் கண்டு ஒதுங்கிப்போனால், அவனையும் சும்மா விடாதீர்கள்.

என்னப்பா என்னைப் பார்த்து தவளை மாதிரி எட்டிக் குதிக்கிறாய்? நான் என்ன மலமா, தொட்டால் நாற்றமடிக்க? அல்லது நான் என்ன நெருப்பா, தொட்டால் சுடும் என்று கூற; ஏனப்பா இப்படிப் பித்தலாட்டம் செய்கிறாய்? மலத்தைக் தொட்டால்கூட கையைக் கழுவிவிட்டால் சரியாய்ப் போகிறது என்கிறாய்; என்னைத் தொட்டால் உடுத்தியிருக்கிற வேட்டியோடு குளிக்க வேண்டுமென்று சொல்கிறாயே; இதற்கு என்னப்பா அர்த்தம்? என்று கேளுங்கள். நீங்களே சிந்தித்துப் பாருங்கள்  இவை யெல்லாம் கலப்பற்ற அயோக்கியத்தனமா, அல்லவா என்று! நீங்கள், உங்களது இந்த சமுக இழிவுபற்றிக் கவலைப்படாத - உங்கள் மூடநம்பிக்கை நடத்தை பற்றிக் கவலைப்படாத கிஸான் சபையை நம்பாதீர்கள். கூலி உயர்வால் மட்டுமே உங்கள் இழிவு போய்விடாது. எஜமான் கூலி என்கிற அந்த வேற்றுமையும் அதனால் மறைந்து விடாது. உழைக்காத சோம்பேறிக்கு ஏன் உடைமை இருக்க வேண்டும்? உழைக்கும் பாட்டாளி ஏன் அவனிடம் கூலி பெற்று வாழவேண்டும்? என்று நீங்கள் கேளுங்கள்.

 நீங்கள் முதலில் சரிசமம் ஆன மனிதனாகுங்கள்; பிறகு உடைமையைச் சரிசமமாக்கிக் கொள்ள நீங்கள் பாடுபடுங்கள். உடைமையில் அதிகமான உடைமைக்காரர்களாக இருந்தும் அனேகம் பேருக்கு இழிவு நீங்கவில்லை. உடைமை வரும்; போகும் தற்செயலாய். இழிவு அப்படி அல்ல.. ஆகவே, ஒரு காலணா கூலி உயர்வுக்காக அடிபட்டுச் சாவதைவிட, அவன் ஏன் மேல்ஜாதி, அவன் ஏன் முதலாளி, நான் ஏன் தொழிலாளி என்று கேட்பதில் உயிர் விடுங்கள். கிஸான் தலைவர்களும் அர சாங்கத்தின் ஏவலாளர்கள்; மிராசு தாரரின் கையாள்கள்; பெரிதும் சுயநலமி கள்; நீங்கள் உங்கள் அறிவு காட்டும் வழியைப் பின்பற்றி நடவுங்கள். அரசியலில் வோட்டுரிமை பெறவும், சமுக இயலில் இழிவு நீங்கவும், பொருளாதாரத்தில் முதலாளி ஒழியவும் நீங்கள் ஒன்றுபட்டுக் கிளர்ச்சி செய்யுங்கள்.

நமது மக்கள் மாத்திரம் பெரிதும் பலகாலமாகவே முன்னேற்றமடையாமல் இருக்கக் காரணம் என்ன என்று யோசிக்க வேண்டும். இப்படிப்பட்ட நாளை இவ்வாறு சிந்தனை செய்யத்தான் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெகுகாலமாகவே நம் மக்கள் அறிவு வளர்ச்சியடையாமல் இருந்துவரக் காரணம் கடவுள் இல்லாத குறையாலா? அல்லது அவைகளுக்குப் பூஜை சரிவர நடத்தி வைக்காததாலா? அல்லது அவற்றை மதிக்கத் தவறி விட்டதாலா? யாரேனும் பூஜை நடத்தி வைக்கவில்லை என்றோ, கடவுளை நாம் மதிக்கவில்லை என்றோ, அல்லது கடவுள்களுக்கு நம் நாட்டில் பஞ்சம் என்றோ நம்மீது குற்றம் கூற முடியுமா? அப்படியிருக்க, மற்ற சமு தாய மக்களுக்குள்ள வசதியும் வாய்ப்பும் நமக்கேன் இல்லாமற் போய்விட்டன? இவற்றை நீங்கள் சிந்திக்க வேண்டு மென்பதுதான் எனது முக்கிய கருத்து. எனது வாழ்நாளில் கிடைக்கும் வசதியை இந்தக் காரியத்திற்கே பெரிதும் பயன் படுத்த நான் ஆசைப்படுவதால், இதைப் பற்றித் திருப்பித் திருப்பிக் கூறுகிறேன்.

இழிவின் மூலகாரணத்தை நீக்குக:

நமது இழிவின் மூலகாரணத்தைக் கண்டுபிடித்து அதை நீக்குவதில்தான் நாம் பூரா கவனத்தையும் செலுத்த வேண்டும். நம் ஊரில் காலராவோ, மலேரியாவோ வந்தால் நாம் எப்படி அவற்றுக்குக் காரணமாயிருந்து வரும் அசுத்தங்களை யும், கசுமாலங்களையும் நீக்கி, அந்நோய் பரவவொட்டாமல் செய்கிறோமோ, அதே போல் நமது இழிவுக்குக் காரணமாயிருந்து வரும் சில கசுமாலங்களையும் நீக்க வேண்டும். நம் குறைபாடுகளுக்கு நாம் தழுவி நிற்கும் மதந்தான் காரணமே தவிர, கடவுள் ஒருபோதும் காரணகர்த்தராக மாட்டார். கடவுள் மீது பழி போடுவது என்பது அற்பத்தனம் அயோக்கியத்தனம். ஏனப்பா திருடினாய்? என்று ஒரு மாஜிஸ்ட்ரேட் ஒரு திருடனைப் பார்த்துக் கேட்டால், நான் என்ன செய்யட்டுமுங்க; கடவுள் செயல் என்னை அப்படிச் செய்துட் டதுங்க என்று சொன்னால், மாஜிஸ்ட்ரேட் ஒப்புக் கொள்வாரா? எவனாவது ஒரு போக்கிரி உங்கள் பாக்கெட்டில் கைபோட் டால், எல்லாம் கடவுள் செயல் என்று நீங்கள் யாராவது சும்மா இருந்து விடுவீர்களா?
கடவுள் இருக்கிறார் எல்லாம் பார்த்துக் கொள்வார்  என்று எந்த பக்தனாவது தனது பெட்டியைப் பூட்டாமல் விட்டு விடு கிறானா? கடவுள் காப்பாற்றுவார் என்று நினைத்து எவனாவது காசு, பணம் தேடா மல் தெருவில் சோம்பித் திரிகிறானா? அப்படியிருக்க, நமது இழிவு நீக்கத்திற்கு மட்டும் ஏன், எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நாம் விட்டு வைக்க வேண்டும்? நமது இழிவுக்கும் கடவுளுக் கும் சம்பந்தமில்லை. யாரோ, சில சுயநல நயவஞ்சகக் கூட்டத்தார் தம் சுகபோக வாழ்வுக்காகத் தம்மை மேன்மைப்படுத்தியும், மற்றவரைத் தாழ்மைப்படுத்தியும்  சாஸ்திர புராணங்களை எழுதி வைத்துக் கொண்டு, அவற்றைக் கடவுள் வாக் கென்று கூறி, நம்மை ஒப்புக் கொள்ளும்படி சொன்னால்  நாமும் பேசாமல் ஒப்புக் கொண்டு விடுவதா? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? என்ன குற்றம் செய்தோம்?

நாம் என்ன குற்றம் செய்ததற்காக நம்மைக் கடவுள் சூத்திரனாகப் படைத்தார்? நாம்தானே கோயில் கட்டுவதும் கும்பாபிஷேகம் செய்வதும்? நம் முன்னோர்தானே சாமிக்குப் படியளந்து வந்தார்கள்? அப்படியிருக்க, நம்மவர் கொடுத்ததை வாங்கி வயிறு வீங்க உண்டு, சோம்பேறி வாழ்வு நடத்திய பார்ப்பான், எப்படி உயர்ஜாதியாக்கப்பட்டான்? பாடு பட்டு உழைத்த நம்மவர், எப்படி கீழ்ஜாதி யாக்கப்பட்டார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.

இந்த இழிவிற்குக் கடவுள்தான் கார ணம் என்று உங்களுக்குத் தோன்றினால், அந்தக் கடவுளுக்கு உடனே நோட்டீஸ் கொடுங்கள். கடவுளே, நாங்கள்தான் உனக்கும், உன்னைக் குளிப்பாட்டிவரும் உனது அர்ச்சகனுக்கும் அன்றாடம் படி அளந்து வருகிறோம்; அதை உணராமல் நீ நன்றி மறந்து எங்களை இழிஜாதியாய்ப் படைத்து விட்டாய். பாடுபடாத உன்னை யும், பாடுபடுகிற என்னையும் ஏமாற்றுகிற அவனை  உயர்ஜாதி ஆக்கிவிட்டாய்; ஆகவே  ஒன்று இனி மக்களில் உயர்வு தாழ்வு இல்லை என்றாவது கூறு; அல்லது நீயல்ல அதற்குக் காரணம் என்றாவது ஒப்புக் கொண்டுவிடு. இந்த நோட்டீஸ் விண்ணப்பத்தை அறிந்த இரண்டு வாரத்திற்குள் நீ ஏதாவது ஒரு முடிவான பதில் தெரிவிக்காவிட்டால் உன் கோயிலை இடித்து விடுவோம் என்று எச்சரிக்கை செய்யுங்கள். கடவுள் என்று ஒன்று அந்தக் குழவிக் கல்லில் அடைந் திருக்குமானால், அது வாய் திறந்து பேசட்டும்! இன்றேல் அதை உதறித் தள்ளுங்கள். கடவுள் நரகத்திற்கு அனுப்பி விடுவார் என்று நீங்கள் அஞ்சாதீர்கள்; அப்படி ஒன்று இருக்குமானால், அது அர்ச்சகருக்கே சரியாய்ப் போய்விடும். நரகம் என்பது வெறும் கற்பனைப் பூச் சாண்டி; மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள  அறிவாராய்ச்சியைத் தடை செய்து தமது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள  சூழ்ச்சிக்காரர்கள் செய்த ஒரு தந்திரம்.

தந்தை பெரியார் --  “விடுதலை”, 29.2.1948

Monday, 15 May 2017

தமிழனுக்கு கடவுள் உண்டா? - 29.6.1930.

தமிழனுக்கு கடவுள் உண்டா?

உலகத்தில் மற்ற மதக்காரர்களுடைய கடவுளைப்பற்றிக் கவனித்துப் பார்த்தாலும், இவ்வளவு ஆபாசமாக இல்லா விட்டாலும், யுக்திக்கோ, வாதத்திற்கோ நிற்க முடியாமல் அவைகளுக்கு பெரிதும் பரிகசிக்கத்தக்கதாய்த் தானிருக்கின்றது. அதாவது, உலக சிருஷ்டிக்கு கடவுளைப் பொறுப்பாக்கி அதனோடு கடவுளைப் பொருத்துகிறபோது எல்லாக் கடவுள்களின் யோக்கியதைகளும் ஒரே மாதிரியாகத் தானிருக்கின்றன. உதாரணமாக, இந்துமதத்தில் உலக சிருஷ்டிக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் சொல்லுகிறபோது, கடவுள் முதலில் தண்ணீரை உண்டாக்கி, அதன்மீது இருந்து கொண்டு அதில் ஒரு விதையைப் போட்டு. அந்த வித்திலிருந்து உலகத்தை உண்டாக்கி அவ்வுலகத்திலிருந்து பிர்மாவை சிருஷ்டித்து, அந்த பிர்மா அந்த உலகத்தை இரண்டாக்கி ஒன்றைச் சுவர்க்கமாகவும், மற்றொன்றை பூலோகமாகவும் செய்து, அந்த பூலோகத்தில் பஞ்ச பூதங்களையுண்டாக்கி, பிறகு மனிதர், மிருகம், பட்சி முதலிய ஜாதிகளை சிருஷ்டித்து என்று ஆரம்பித்து மற்றும் இவைபோல அடுக்கடுக்காக எப்படிச் சொல்லிக் கொண்டே போகின்றதோ, அதுபோலவே தான் கிறிஸ்து முதலிய இதர மதங்களிலும் கடவுள் முதல்நாள் ஒன்றை சிருஷ்டித்தார், மூன்றாவது நாள் வேறொன்றைச் சிருஷ்டித்தார் என்பதுபோலவே சொல்லிக் கொண்டு போகப்படுகின்றன.

ஆகவே, அஸ்திவாரத்தில் கடவுள் சிருஷ்டியைப்பற்றிச் சொல்லுகிற விஷயம் எல்லா மதத்திலும் ஒன்று போலவேதானிருக்கின்றன. இவை ஏன் இப்படியிருக்கின்றன என்று பார்ப்போமேயானால், கடவுள் உண்டு என்பதற்கு சமாதானம் சொல்லும் போது, உலக உற்பத்திக்கு ஒரு ஆதாரம் வேண்டாமா? என்று கேட்டுவிட்டு, அதற்காக கடவுள் உலகத்தை உண்டாக்கினார் என்று ஆரம்பித்து, அந்த உண்டாக்கப்பட்டவையென்பதை முதலில் இன்னதையுண்டாக்கினார் இன்னார் என்பதாகச் சில மதமும், முதல் நாள் இன்னதை யுண்டாக்கினார், இரண்டாவது நாள் இன்னதையுண்டாக்கினாரென்பதாகச் சில மதமும் சொல்லுகின்றன. ஆகவே, இந்த இடம் மாத்திரம் எல்லாம் ஒன்றுபோலாகவேதானிருக்கின்றன. இதில் ஏதாவது தகராறு ஏற்படுமானால் எல்லா மதக் கடவுளுக்கும் ஒரே கதிதான் நேரும். கடவுள் ஸ்தாபனத்திற்கு ஒரே மாதிரி அஸ்திவாரம் ஏற்படுவதற்குக் காரணமென்னவென்று பார்ப்போமானால், முதன் முதலாக ஆரிய மதத்திலிருந்து சீர்திருத்தமாக கிறிஸ்தவ மதமேற்பட்டதும், அதிலிருந்து சீர்திருத்தமாக மகம்மதிய மதமேற்பட்டதும் நமக்குக் காணப்படுகிறபடியால், எல்லா மதமும் அதையே பின்பற்றிக்கொண்டு வருவதாயிற்றே தவிர வேறில்லை என்றே தோன்றுகிறது. ஆனால், நாம் ஒரு தமிழர் என்கின்ற முறையில் கடவுள் என்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்வோமானால், "கடவுள்" என்கின்ற பதமே கட+உள் = (கடவுள்) என்பதான இரண்டு சொற்கள் சேர்ந்த பகுபதமாக இருக்கின்றதே தவிர, வட மொழியிலும், ஆங்கில மொழியிலும் இருப்பது போன்ற பகவான் காட் (படின) அல்லா என்பது போன்ற ஒரு தனி வார்த்தையோ அல்லது அந்த விதங்களான அர்த்தத்தைக் கற்பிக்கக் கூடியதான வாக்கியமோ, தமிழில் இல்லையென்பதை உணர வேண்டும். தமிழர்களுக்கு பாஷை தோன்றிய காலத்தில் "கடவுள்" உணர்ச்சி இருந்து இருக்குமானால் அதற்கு ஒரு தனி வார்த்தை இருந்திருக்கும். அது மாத்திரமல்லாமல், ஆங்கிலம் முதலிய பாஷைகளில் கடவுள் இல்லை என்று சொல்லப்படுவதை உணர்த்துவதற்கு எப்படி எத்தீசம், எத்தீஸ்ட், நாஸ்திகம், நாஸ்திகன் என்கின்ற வார்த்தைகள் இருக்கின்றனவோ அவைபோலவே தமிழிலும் கடவுள் இல்லை என்று சொல்லுவதை உணர்த்துவதற்கும், கடவுள் இல்லை என்று சொல்லுபவனைக் குறிப்பிடுவதற்கும் அப்பொருள்கள் கொண்ட ஏதாவது ஒரு வார்த்தை இருந்திருக்கும். ஆகவே, அவற்றிலிருந்து தமிழர்களுக்கும் (அதாவது தமிழ் நாட்டாருக்கும்) கடவுளுக்கும் ஆதியில் எவ்வித சம்பந்தமுமிருந்ததில்லை என்பது ஒருவாறு புலப்படும். இறைவன் என்கின்ற பதத்தை கடவுளுக்கு உள்ள தமிழ்ப் பதம் என்று பண்டிதர்கள் சொல்லக் கூடுமானாலும் அது அரசனுக்கும், தலைவனுக்கும் ஏற்பட்டதே தவிர, கடவுளுக்காக ஏற்பட்ட தனிப் பொருளமைந்த சொல் அல்லவென்றே சொல்லுவோம். ஆனால், கடவுள் என்பது எப்பொருளுக்கும் தலைவன் என்கின்ற முறையில் வேண்டுமானால் இறைவன், பெரியவன் எனினும் பொருந்தும் என்று சப்புக் கட்டலாமேயொழிய அது அதற்கே ஏற்பட்ட தனி வார்த்தை ஆகாது. நிற்க;

தமிழ்நாட்டில் பலர் காலம்சென்ற பிதுர்க்களையும், செல்வாக்குள்ள பெரியார்களையும் அன்பினாலும், வீரர்களை கீர்த்தியாலும் வழிபட நினைத்து அவர்களை உருவகப்படுத்த என்று ஒரு கல் நட்டு அக்கல்லை வணங்கி வந்ததாக மாத்திரம் சொல்லப்படுவதை நான் கேட்டிருக்கிறேன். மற்றபடி இப்போதைய கடவுள்களான சிவன், விஷ்ணு, பிரமன், பிள்ளையார், சுப்பிரமணியன் முதலிய கடவுள்களையோ மற்றும் அது சம்பந்தமான குட்டிக் கடவுள்களையோ தமிழ் மக்கள் வணங்கி வந்தார்கள் அல்லது நம்பி இருந்தார்கள் என்றாவது சொல்லுவதற்குக்கூட இடமில்லை என்று கருதுகிறேன். இதற்கெனக்குத் தோன்றும் ஆதாரம் என்னவென்றால், இப்போது உள்ள கருப்பன், காத்தான் முதலிய பேர்கள் கொண்ட நீச்சக் கடவுள்கள் தவிர மற்ற கடவுள்கள் பெயர்களெல்லாம் வடமொழியிலேயே இருக்கின்றதென்பதே போதுமானதாகும். ஆனால், வடமொழிப் பெயருள்ள சில கடவுள்களின் பெயர்களை தமிழில் மொழிபெயர்த்து அந்தக் கடவுள்களை தமிழில் அழைப்பதைப் பார்க்கின்றோம். என்றாலும், இவை தமிழர்களுக்குள்ளும் ஆதியில் இருந்தது என்பதற்குத் தக்க சமாதானம் சொல்ல யாரும் முன் வருவதை நான் பார்க்கவில்லை. இது மாத்திரமல்லாமல், சைவம், வைணவம் என்று சொல்லப்படும் சமயங்களாகிய தமிழ் மக்களைப் பிடித்த நோய்களான சைவ, வைணவ மதக் கடவுள்கள் எல்லாம் வட மொழிப் பெயர்கள் உடையதாகவும், அவற்றின் ஆதாரங்கள் முழுவதும் வடமொழி வேத சாஸ்திர புராண இதிகாசங்களாகவும்தானே இருக்கின்றதே அல்லாமல், தமிழ் ஆதாரத்தால் ஏற்பட்டதாகச் சொல்லக்கூடிய கடவுள் ஒன்றையுமே நான் கண்டதும் கேட்டதும் இல்லை.

இவற்றுக்கு செய்யப்படும் பூசை முதலியவையும், வடமொழி நூல்கள் ஆதாரப்படி, வடமொழிப் பெயர்கள் கொண்ட வஸ்துகளும் செய்கைகளுமாகவே இருப்பதையும் காணலாம். அதாவது அருச்சனை, அபிஷேகம், பலி, கற்பூரம், சாம்பிராணி, காணிக்கை முதலியவையாகும். தவிரவும், மேற்கண்ட இரண்டு சமயங்களின் பேரால் சொல்லப்படும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் முதலிய சமயாச்சாரியார்களும், பக்தர்மார்களும் கும்பிட்டதும், தேவாரம், திருவாசகம், திருத்தாண்டகம், பிரபந்தம் முதலியவை பாடினதும், மற்ற மக்கள் வாழ்க்கையில் உபயோகப்படுத்துவதும், ஆகிய எல்லாம் வடமொழிப் பேர் கொண்ட கடவுள்களைப் பற்றியும், அவர்களது செய்கைகளைப் பற்றிச் சொல்லப்பட்ட வடமொழிப் புராண இதிகாசங்களிலுள்ள கதைகளைப் பற்றியுமே இருக்கின்றனவே அல்லாமல் மற்றபடி அவை தமிழர்களோ அல்லது தமிழ் பண்டிதர்களோ தமிழர்களுக்கு ஆதியில் இருந்தது என்று சொல்லத்தக்கதாக ஒன்றையுமே, ஒருவர் வாக்கையுமே நான் பார்த்ததும் இல்லை; பிறர் சொல்லக் கேட்டதும் இல்லை. மற்றும், சமயக் குறிகள் என்று சொல்லப்படும் விபூதி, நாமம் முதலிய சின்னங்களின் பெயர்கள்கூட வடமொழியில் உள்ளதே தவிர, தமிழில் உள்ளவையல்ல என்பதே எனது அபிப்பிராயம். வேண்டுமானால் அதை தமிழில் - விபூதியை திருநீறு என்றும், திருமண் என்றும் சொல்லிக் கொள்ளுகிறோம். ஆனாலும், அது சரியான மொழி பெயர்ப்பல்லவென்று சொல்வதோடு, விபூதி, நாமம் என்கின்ற பெயர்கள் எந்தக் கருத்துடன் சொல்லப்படுகின்றனவோ அந்தக் கருத்தும், பொருளும் அவற்றில் இல்லை என்றே சொல்லுவேன்.

விபூதி என்றும், நாமம் என்றும் சொல்லப்படும் வஸ்துகள் சாம்பலும், மண்ணுமாய் இருப்பதால் அந்தப் பெயரையே அதாவது, சாம்பலுக்குள்ள மாறு பெயராகிய நீறு என்றும், மண்ணை மண் என்றும் திரு என்பதை முன்னால் வைத்து திருநீறு, திருநாமம் என்று சொல்லப்படுகின்றதே ஒழிய வேறில்லை என்றே தோன்றுகின்றது. ஆகவே, தமிழில் காட், அல்லா, பகவான் என்பவற்றைக் குறிப்பதற்கு ஒரே வார்த்தையாக ஒன்றுமே இல்லை என்பதும், அதன் சின்னங்களையும் குறிப்பிடுவதற்கு தமிழில் வார்த்தைகள் இல்லை என்பதும், அனுபவத்திலுள்ள கடவுள்களும், பெயர்களும் அவற்றின் நடவடிக்கைகளும்கூட தமிழில் இல்லை என்பதும், மற்றபடி இப்போது இருப்பவை எல்லாம் வடமொழியில் இருந்து தமிழர்கள் எடுத்துக்கொண்டு தங்களுடையனவாக்கிக் கொண்ட மயக்கமே என்றும் எனக்குப் பட்டதை உங்களுக்குச் சொன்னேன்.



- கண்ணனூர் செவ்வாய் தரும சமாஜ ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்களின் தலைமை முடிவுரை --"குடிஅரசு"- 29.6.1930.