Showing posts with label விவாகரத்து. Show all posts
Showing posts with label விவாகரத்து. Show all posts

Monday, 17 January 2022

குழந்தைகளுடன் மணமக்கள் திருமணம் - தோழர் பெரியார்

குழந்தைகளுடன் மணமக்கள் திருமணம்

 


சகோதரிகளே! சகோதரர்களே!!

இங்கு இன்று நடைபெறப்போகும் திருமணமானது நமது நாட்டில் இப்போது புதியதாய் தோன்றியிருக்கும் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளில் ஒரு அம்சமாகிய மூடப்பழக்க வழக்கங்களை ஒழிப்பதென் னும் திட்டத்தில் சேர்ந்ததாகுமே தவிர இதில் புதிதாய் புகுத்தும் கொள்கை ஒன்றுமே இல்லை. தீண்டாமை ஒழிப்பதென்பதற்கு முக்கியமாய் வேண்டி யது எப்படி வெறும் மனம் மாற்றம் என்பதைத்தவிர அதில் வேறு தத்து வமோ, தப்பிதமோ, தியாகமோ இல்லையோ அதுபோலவே தான் இந்த விதவா விவாகம் என்பதற்கும் எவ்வித தியாகமும் கஷ்டமும் யாரும் பட வேண்டியதில்லை. ஒரு பெண்ணையோ, பல பெண்களையோ மனைவி யாகக் கட்டி அனுபவித்தவனும் ஒரு பெண்ணையோ, பல பெண்களையோ வைப்பாட்டியாக வைத்தோ தற்காலிக விபசார சாதனமாக அனுபவித்தோ வந்துள்ள, அனுபவித்துக் கொண்டிருக்கின்ற ஒரு புருஷனை ஒரு புதுப் பெண் மணப்பது இன்று எப்படி வழக்கத்தில் தாராளமாய் இருந்து வரு கின்றதோ அதுபோலத்தான் அப்படிப்பட்ட ஒரு பெண்ணையும் ஒரு புருஷன் மணப்பது முறையாக வேண்டும் என்று சொல்லுகின்றோமே தவிர மற்றபடி காரியத்திற்கு ஒவ்வாததும் யுக்திக்கு ஒவ்வாததும் உலகத்தில் பெரும்பான்மையான மக்களின் நடப்புக்கு விரோதமாகக் கூட சில வகுப்பு களில் இருந்ததுமான தத்துவங்கள் எதுவும் அதிலில்லை.

நமது நாட்டிலுள்ள மூடப்பழக்க வழக்கங்களிலெல்லாம் இது மிகவும் முக்கியமான மூடப்பழக்கவழக்கமாகும். மற்றொருவர் அனுபவித்த பெண் ணை அல்லது அனுபவித்துக் கொண்டிருக்கிற பெண்ணை ஒரு புருஷன் பார்த்தால் அவளை அனுபவிப்பதற்கு திடீர் என்று ஆசை படுகிறான். அவற்றில் சிலது அனுபவிக்க கிடைத்து விட்டால் சிலசமயங் களில் தனது முழு வாழ்க்கையில் அடையாத ஒரு பெரும் பேற்றை அனுப வித்ததாக மகிழ்ச்சியடைவதோடு தனக்குள்ளாகவே ஒரு பெரும் பெருமை யையும் உற்சாகத்தையும் அடைகின்றான். அதிலும் தாசிகள், வேசிகள், பிரபல குச்சிக்காரிகள் ஆகியவர்கள் விஷயத்தில் மனிதன் கொள்ளும் ஆசைக்கு அளவே இல்லை. ஆகவே இம்மாதிரி தற்கால அவசியமாக செய்துவரும் காரியங்களில் உள்ள மனப்பான்மையைவிட இந்த மாதிரி விதவா விவாகத் தில் ஒரு மனிதனிடம் அதிகமான மனப்பான்மையோ மனமாற்றமோ நாம் ஒன்றும் எதிர்பார்க்கவில்லை.



ஆயிரம் பெண்களை அனுபவித்த புருஷனின் திருமண விஷயத் தில் இல்லாத குற்றம் ஒரு புருஷனை மாத்திரம் அனுபவித்த பெண்ணிடம் எப்படி வந்து விடும் என்று யோசித்துப் பார்த்தால், விதவா விவாகம் என்பது யாருக்கும் அதிசயமாய்த் தோன்றாது.

பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதும் பெண்கள் அடிமைப் பிறவி என்பதும் தான் விதவை தன்மையின் அஸ்திவாரமாகும். பெண்க ளுக்குச் சுதந்திரம் ஏற்பட்டு விட்டால் விதவைத் தன்மை தானாகவே பறந்துபோய்விடும். உதாரணமாக மனைவி இழந்த புருஷனைக் குறிப்பிட நமக்கு வார்த்தையே இல்லை. ஏன் இல்லை? அவர்களுக்குள்ள சுதந்திரத் தினால் தங்களின் அப்படிபட்ட ஒரு நிலையைக் காட்ட ஒருபெயரை பழக்கத்தில் கொண்டு வருவதற்கில்லாமல் செய்து விட்டார்கள்.

சாதாரணமாக கணவனிழந்த பெண்ணை எப்படி விதவை என்று கூப்பிடுகின்றோமோ அதுபோலவே மனைவியை இழந்த புருஷனை விதவன் என்று கூப்பிடவேண்டும். ஆனால் நமது நாட்டில்தான் அப்படிக் கூப்பிடுவதில்லை. மேல் நாட்டில் விடோ, விடோயர் என்கின்ற பதங்கள் இருக்கின்றன. இந்த விடோ என்பதும் விதவை என்பதும் ஒரு சொல் மூலத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன். இதுவும் வடமொழியாகவே இருப்பதால் வடமொழிக்கும், மேல் மொழிக்கும் மற்ற வார்த்தைகளுக்குள்ள சம்மந்தம் போலவே இதற்கும் இருக்கின்றது. ஆனால் நமது புராணங்களில் கூட விதவன் என்கின்ற வார்த்தை இல்லாத தால் புராணகாலம் முதலே ஆண்கள் செய்த சூட்சிதான் விதவைத் தன்மைக்கு காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆகவே இவ்விதத் திருமணம் பகுத்தறிவுக்கும் நடு நிலைக்கும் ஒத்ததே தவிர இதில் குருட்டு நம்பிக்கையோ, ஏமாற்றமோ, கொடுமையோ ஒன்றுமில்லை.

அன்றியும் இன்றைய மணமகனுக்கு முந்திய மனைவியால் ஏற்பட்ட குழந்தை ஒன்று இருப்பது போலவே மணமகளுக்கும் முந்திய கணவனால் ஏற்பட்ட குழந்தை ஒன்று இருக்கின்றது. இதிலும் நியாயத்திற்கும், யுக்திக்கும் ஒவ்வாத குற்றங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆணும் பெண் ணும் சம உரிமை உள்ளவர்கள் என்று உணர்ந்தால் இது சரி என்று தோன் றும். தவிரவும் பெண்ணுக்கு ஆணுக்குள்ளது போன்ற தனிச் சொத்துரிமை இருக்க வேண்டும் என்கின்ற கொள்கையை அனுசரித்து மணமகன் இந்த மணமகள் பேருக்கு சர்வ சுதந்திரமாய் 5000 ரூ. பெருமான சொத்தை எழுதி வைத்ததானது மிகவும் பாராட்டத்தக்க காரியமாகும்.

தவிரவும் இம்மாதிரி பெண்களுக்கு மறுமணம் என்பது எங்கள் பக்கங்களில் அநேக வகுப்புகளுக்குள் இருக்கின்றது.

சாதாரணமாக விதவைமணம் என்பது மாத்திரமல்லாமல் நமது நாட்டில் விவாகரத்து செய்து கொண்டு மறுமணம் முடித்துக் கொள்வது என்கின்ற வழக்கம் இருந்து வருகிறது. எங்கள் பக்கத்தில் வன்னியர்கள் அதாவது படையாச்சி வகுப்பார், தெலுங்கு செட்டியார்கள், அகம்படியர், சணப்பர்கள் என்று சொல்லும் செட்டிமார்கள், சில வகுப்புப் பண்டாரங்கள் என்பவர்கள், சில வகுப்பு ஆண்டிகள் என்பவர்கள், தேவாங்கர்கள், செங்குந் தர்கள், கற்பூரச் செட்டிமார்கள், போயர்கள், கொத்தர்கள், ஒக்கிலியர்கள் முதலிய வகுப்புகளில் சிலவற்றில் இரண்டும் சிலவற்றில் ஒன்று மாத்திரமும் இருந்து வருகின்றன. ஆனால் இப்போது மேற்கண்ட வகுப்பார்களில் கூட பலர் அவ்வழக்கங்கள் கூடாதென்று கருதுகின்றார்கள் என்று தெரிந்து விசனிக்கிறேன். சில இடங்களில் அனுபவத்தில் இல்லாமலும் இருக்கின்றது என்றாலும் எங்கள் வகுப்பு அதாவது பலுஜ நாயுடு என்பது போன்றவை களில் முன்னால் வழக்கம் இருந்ததோ இல்லையோ என்பதைக் கவனியா மல் இப்போது செய்யப்பட வேண்டும் என்று எங்கள் மகாநாடுகளில் தீர்மானமாய் இருக்கின்றது. எனது தங்கை பெண்ணுக்கே விதவை மணம் செய்யப் பட்டிருக்கின்றது.

ஆகவே இம்மாதிரி மணம் புதியதென்று சொல்வதற்கோ, அல்லது இயற்கைக்கும் மனிதத் தன்மைக்கும் விரோதமான தென்றோ யாரும் சொல்லிவிட முடியாது. இதை ஆட்சேபிப்பவர்களை நான் மனிதர்கள் என்றே ஒப்புக் கொள்ளமாட்டேன். அவர்களுக்குச் சுயமரியாதை இருக்கும் என்றும் நான் கருதமாட்டேன்.

சாதாரணமாக நமது நாட்டில் விதவைகள் உள்ள வீடுகளில் நடக்கும் காரியங்கள் எனக்கு நன்றாய்த் தெரியும். அநேகச் சிசு கொலைகளும் அநேக மன வருத்தங்களும் இயற்கைக்கு விரோதமான காரியங்களும் ஏதா வது ஒன்றும் நடந்த வண்ணமாகவே இருந்து வருகின்றது. இதனால் பல கொலைகளும் நடக்கின்றன. சில இடங்களில் பெண்கள் வெளியில் ஓட ஓட அழைத்து வந்து பந்தோபஸ்தில் வைக்கப்படுகின்றனர். சில இடங்களில் முறைகள் என்பது தவறியும் நடத்தப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் காரணம் என்னவென்று பார்த்தால் இயற்கை உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி வைப்பதேயாகும். இயற்கை உணர்ச்சியைக் கட்டுப்படுத்தும் படியான எந்த கொள்கைகளும், சட்டங்களும் ஒரு நாளும் சரியாக நடைபெறவே நடை பெறாது. அப்படி எங்காவது நடை பெற்றாலும் அது நிலைத்திருக்கவே முடியாது. இந்தக் கொடுமைகள் இப்படி இருக்குமானால் 4 பெண்கள் 5 பெண்கள் கூடி ஒரு ஆணைத் தங்கள் இன்பத்திற்கென்று ஏற்படுத்தி அவ னுக்கு நல்ல போஷனையும், அழகும் செய்து அடைத்து வைத்து அவனைத் தங்களது காம இச்சைத் தீர்க்கும் இன்பப் பொருளாய் அனுபவிக் கும் காலமும், வீட்டு அடிமையாய் நடத்தப்படும் காலமும் வந்துவிடும் என்று தான் கருதுகிறேன். அப்படி வந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஆண்களினது கருமத்தின் பயன் என்றுதான் அதைக் கருதுவேன்.

தவிர சுயமரியாதைக் கலியாணம் என்பதில் புதிய முறையோ, புதிய சடங்கோ ஒன்றுமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அர்த்தமற்றதும், பொருத்தமற்றதுமான சடங்குகள் வேண்டாம் என்பதும் அனாவசியமான அதிகச் செலவும் அதிகக் காலக் கேடும் இருக்கக்கூடாது என்பதும் தான் சுயமரியாதைக் கலியாணத்தின் முக்கிய தத்துவமாகும்.

ஆதலால் உள்ள சடங்குகளையும், பணச்செலவையும், காலச் செலவையும் குறைத்து நடத்துவதே இத்திருமணத்தின் முக்கிய கொள்கை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

மற்றும் திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் ஏற்பட்டக் கூட்டு வாழ்க்கையின் ஒப்பந்தம் என்பதும் இத்திருமணம் இந்த மணமக்களின் இந்த உலக மானுஷிக வாழ்க்கைக்கேதான் என்பதும் உணர்ந்து மணமக்கள் மணம் செய்துகொள்ளவேண்டும் என்பது சுய மரியாதைத் திருமணத்தில் மிகவும் முக்கியமானதாகும்.

அதாவது கலியாணம் மனிதத்தன்மைக்கு மேற்பட்டதென்றும் “ஆத்மார்த்த”த்திற்கு என்றும், அதில் ஏதோ “தெய்வீகம்” இருக்கிறதென் றும் கருதி வாழ்க்கையில் உள்ள சுதந்திரங்களையும், இயற்கை இன்பங்களை யும் அடையமுடியாமல் செய்யும் ஜீவனற்ற உணர்ச்சியை ஒழிக்க வேண்டு மென்பதே முக்கியமானதாகும்.

தெய்வீகம் என்கின்ற பதமே சாதாரணமாக நமக்குத் தெரியாது என்பதற்குத்தான் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதோடு ஆத்மார்த்தம் என்பதும் புலனறிவற்ற சூனியத்திற்குச் சமமானதற்கே பெரிதும் பயன்படுத்தப் படுகின்றது. ஆகவே மனித வாழ்க்கையின் முக்கியமான தத்துவமான இன்ப உணர்ச்சியின் இயற்கை அனுபவத்தை அடைய முடியாமல் தடைசெய்வதற்கு மாத்திரம் பயன்படும் படியாகத் தெரியாத, அர்த்தமற்ற தெய்வீகத்தையும் ஆத்மார்த்தத்தையும் இப்படிப் பட்ட விஷயத்தில் கொண்டு வந்து புகுத்தியதானது மனிதனை வெறும் பிணமாக்குவதற்கும் அடிமையாக்குவதற்குமே பயன்படுத்தச் செய்த புரட்டே யொழிய வேறில்லை. தெய்வீகக் கலியாணத்தில், ஆத்மார்த்த கலியாணத்தில் புருஷனுக்கும் பெண்ணுக்கும் வித்தியாச நிபந்தனைகளும் எஜமான் அடிமைத் தன்மைகளும் எதற்காக ஏற்படுத்த வேண்டும். தெய்வீகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தியாசமுண்டா? ஆத்மார்த் தத்தில் ஆண் ஆத்மா; பெண் ஆத்மாவென்கின்ற பிரிவுண்டா?

எவ்வளவு பெரிய புரட்டுகளை இந்த முக்கியமான காரியத்தில் கொண்டு வந்து போட்டு, இன்பமும், சுதந்திரமும் பாழாக்கப்பட்டுவிட்டது என்பதை யோசித்துப் பாருங்கள். ஆகையால் புருஷனுக்காகப் பெண்ணும், பெண்ணுக்காக புருஷனும் இரண்டு பேரும் சேர்ந்து இன்பமடைவதற்கு என்பதை தவிரத் திருமணத்தில் வேறு தத்துவமொன்றும் இல்லவே இல்லையென்பதுதான் திருமணத்தைப் பற்றிய நமது அபிப்பிராயம். இம் மாதிரி மணமக்கள் இருவரும் ஒரு பொது வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டதற்கு அவர்களுக்குள் செய்து கொள்ளும் ஒப்பந்தத்திற்குச் சாட்சியத்தைத் தவிர நமக்கு இதில் வேறு வேலை இல்லை. ஆகவே நாம் எல்லோரும் சாட்சியத்திற்காகவே அழைக்கப்பட்டிருக்கின்றோம், கூடி இருக்கின்றோமென்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மாதிரியான சமுதாய உதவி கூட்டு வாழ்க்கையில் கலந்துள்ள ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் செய்து கொள்ள வேண்டியதேயாகும். இதில் மணமக்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்ன வென்றால் தங்களில் எவருக்கும் எந்த விதத்திலும் வாழ்க்கை நடத்துவதில் பொருப்போ உரிமையோ ஜாஸ்த்தி கம்மியாய் இருக்கின்றது என்று யாரும் கருதிக் கொள்ளக் கூடாது என்பது தான். அதாவது பெண் தான் புருஷ னுக்கு அடிமையாயிருக்க கடவுளால் பிறப்பிக்கப்பட்ட ஒரு சுய உணர்ச்சி யற்ற ஜீவனென்றோ “கல்லென்றாலும் கணவன் புல்லென்றாலும் புருஷன்,” அவன் அடித்தாலும், உதைத்தாலும் அன்னியருக்கு கூட்டிவிட்டு ஜீவித்தாலும் புருஷனே தெய்வம் என்று கருதுகின்ற அடிமை உணர்ச்சிக் கண்டிப்பாய் பெண்ணுக்கிருக்கவே கூடாது. நமது கணவனும் நம்மை போன்ற மனித ஜீவனேயாகும். பெண்ணிடம் அவன் எப்படி நடந்து கொள்ளுகிறானோ அப்படி தான் அவள் தன்னிடமும் நம்மை நடந்து கொள்ள எதிர்பார்க்க முடியும். ஒழுக்கத்திலோ, சுதந்திரத்திலோ, உணர்ச்சி யிலோ நமக்கும் அவனுக்கும் வித்தியாசம் கிடையாதென்று எண்ணவேண் டியது மாத்திரமல்லாமல் ஒவ்வொரு துறையிலும் அனுபவத்தில் கொண்டு வர வேண்டும். அப்படிப்பட்ட பெண்கள்தான் பெண்கள் நாயகம் என்று அழைக்கப்படத் தக்கவர்கள் ஆவதோடு பெண்கள் உலகத்திற்கும் பெரிய உபகாரம் செய்தவர்களாவார்கள். முக்கியமாய் இதற்காக வேண்டியேதான் ஆத்மார்த்தம் தெய்வீகம் என்பவைகளிலுள்ள புரட்டுகளை வெளியாக்கக் கட்டாயப் படுத்தப்படுகின்றோம். இது போலவே மணமகனும் தனக்குள்ள உணர்ச்சி, அவா, சுதந்திரம் ஆகிய காரியங்கள் எல்லாம் பெண்ணுக்கும் உண்டென்றும், தான் எவ்வளவு காரியம் பெண்ணிடம் எதிர்பார்க்கின் றோமோ அவ்வளவு காரியம் பெண்ணுக்கும் தன்னிடம் எதிர்பார்க்க முடி யும் என்றும் கருதி அனுபவத்திலும் அதுபோலவே நடக்கவிட வேண்டும். தனக்கு அடிமைக்காக ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டோமென் கின்ற உணர்ச்சியை அடியோடு மறந்து விட வேண்டும்.

இந்த நாட்டில் பொதுவாக ஒழுக்கம் சீர்பட வேண்டுமானால் விபசார மென்னும் காரியத்தில் உள்ள கெடுதிகள் நீங்க வேண்டுமானால் விதவைத் தன்மையும், ஆண்களுக்கு விபசார தோஷமில்லை என்கின்ற நடப்பையும் ஒழித்தாக வேண்டும். இவை ஒழிந்தால் உண்மையான காதலின்பமும், வாழ்க்கையில் திருப்தியும், சாந்தியும், ஒழுக்கமும், கட்டாயம் ஏற்பட்டு விடும்.

ஆகவே மேற்கண்ட இரண்டு காரியங்களே பெரிதும் மனிதத் தன்மைக்கும், இயற்கை இன்ப நுகர்ச்சிக்கும் இடையூராய் இருந்து வரு கின்றது.

பெண்களைப் பெற்றோர்களும் ஒரு விஷயத்தை முக்கியமாய் கவனிக்க வேண்டும்.

அதாவது பெண்களுக்கும் 16 வயது வரை நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும். மனித இயற்கைக்கு விரோதமாக ஆணுக்கு ஒரு விதமும், பெண்ணுக்கு ஒரு விதமுமாக அடக்கத்தையும் அடிமை உணர்ச்சியையும் கற்றுக் கொடுக்கக்கூடாது.

பெண்ணின் தாய்மார்கள் பெண்களை அவர்களின் மாமியார்கள் வீட்டுக்கு அடிமைக்காக அனுப்புவதாய்க் கருதி, அதற்குத் தயார் செய்யும் வழக்கத்தைவிட்டுவிட வேண்டும். எந்தப் பெண்களையும் தான் ஆண் களுக்குக் கீழ்பட்ட ஒரு பெண் என்றும், தனக்கு ஆண்களைவிட சில அடிமை குணங்களோ, அடக்கக்  குணங்களோ வேண்டுமென்று கருதும் படி கற்றுக் கொடுக்கக் கூடாது.

அநேகமாய்த் தானே தனக்கு வேண்டிய காதலனை தெரிந்தெடுத்துக் கொள்ள பெண்களைப் பழக்கப்படுத்த வேண்டும். இம்மாதிரியாகப் பழக்கினோமானால் பெண்கள் உலகம் தலைசிறந்து சுதந்திரம் பெற்று உலகத்திற்குப் பெருத்த உதவியாக இருக்கும்.

இப்போது பெரும்பான்மையான தெய்வீகத் திருமணங்கள் என்பது வெறும் அடிமைத் திருமணமாகவும் பிறர் இஷ்டத்திற்கே முழுப்பொறுப்பும் விடப்பட்டதாகவும், நிற்பந்தத்திற்கும், ஒரு கட்டுப் பாட்டிற்கும் கட்டிக் கொண்டு எப்படி இருந்தாலும் சரிப்படுத்திக் கொள்ள வேண்டியதாகவும் இருக்கின்றது. ஆகையால் அந்த முறைகளும் ஒழிய வேண்டும்.

இன்றையதினம் ஒரு குழந்தையுடனுள்ள ஒரு விதவைப் பெண்ணை மணம் செய்து கொள்ள ஏற்பட்டதால் பலர் விதவையானாலும் குழந்தை இல்லாத விதவை கிடைக்க வில்லையா என்று சொல்ல வந்து விட்டார்கள்.

இதற்கு முன் பக்குவமான “சாந்தி முகூர்த்தமான” விதவையைக் கலியாணம் செய்தபோது பக்குவமாகாத விதவை கிடைக்கவில்லையா என்றார்கள்.

வேறு ஜாதியில் ஒரு “விதவை”யைக் கல்யாணம் செய்து கொண்ட போது நமது ஜாதியிலேயே ஒரு விதவை இல்லையா என்றார்கள். ஆதலால் இவ்விஷயங்களில் நாம் பொது ஜன அபிப்பிராயத்தைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல வார்த்தையில் மிதமான வழியில் செய்யப்படும் முயற்சி கைகூடவே கூடாது. ஏனென்றால் நமது மக்கள் பெரிதும் பாமர மக்களா கவே வைக்கப்பட்டிருக்கிறார்கள். அடிமைகளுக்கு லக்ஷணமே ஒரு சிறு மூட்டையைத் தூக்கச் சொன்னாலும் “முடியாது போ, உன் வேலையை பார்” என்றுதான்  சொல்வார்கள். ஆனால் டவாலியைக் கழற்றி இரண்டு கொடுத் தால் பெரிய மூட்டையாய் இருந்தாலுங் கூட “தூக்குவதற்குள் என்னையா அவசரம்” என்பார்கள். ஆகையால் நாட்டைப் புதுப்பிக்க வேண்டுமானால் அமிதமான கொள்கையில் போய்க் கொண்டே இருக்க வேண்டும். அப் போது ஒருபடி நமது பின்னாலேயே மக்கள் வந்து கொண்டிருப்பார்கள்.

குறிப்பு :-  நாகர்கோவில் கோல்டன் தியேட்டரில் திரு. நல்லசிவனுக்கும் திருமதி. கமலாம்பாளுக்கும் 10-09-1930 காலை நடைபெற்ற விதவை மறுமணத்தில் தலைமை ஏற்று ஆற்றிய உரை.

குடி அரசு – சொற்பொழிவு – 28.09.1930

விவாகரத்து - தோழர் பெரியார்

 

விவாகரத்து


சமீபத்தில் சென்னையில் நடந்த ஸ்திரீகள் மகாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை வாசகர்கள் அறிந்திருக்கலாம். அவைகளில் முக்கியமாக இரண்டு தீர்மானங்கள் மாத்திரம் அதிகமான விவாதத்திற்குக் காரணமாயிருந் தன. “ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சரிசமானமான ஒழுக்க முறைகள் ஏற்படுத்த வேண்டும்” என்பது ஒன்று. “கலியாணமானப் பெண்கள் தகுந்த காரணமிருப்பின் தங்களுக்கிஷ்டமான போது தங்கள் விவாகத்தை ரத்து செய்து கொள்ளலாம்” என்பது இரண்டு. இந்த இரண்டு தீர்மானங்களும் பெரிய படித்த மனிதர்கள் என்பவர்களையும் பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுகிற வர்கள் என்பவர்களையும் சரியான பரீட்சை பார்த்துவிட்டது என்றே சொல் வோம். நமது தென்னிந்தியாவிலுள்ள பத்திரிகைகள் எல்லாம் ஒன்றுவிடாமல் “விவாகரத்து” தீர்மானத்தை கண்டித்துவிட்டன.




இத்தீர்மானம் சம்பந்தமாக பத்திரிகைகளில் நடந்த வாக்குவாதங்களும், மறுப்புகளும், கண்டனங்களும் அவைகளுக்கு எழுதப்பட்ட பதில்களும் நமது வாசகர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். வயது சென்ற ஸ்திரீகள் என்று சொல்லக்கூடியவர்களில் சிலர் தீர்மானத்தின் உண்மையை உணராமல் இதை எதிர்த்த விஷயம் நமக்கு மிகவும் ஆச்சரியமாகவே இருக்கிறது.

ஸ்திரீகள் மகாநாடு நடைபெற்ற அன்றைய தினமே, இவ்விதமான தீர் மானங்கள் கொண்டு வருவது தனக்கு இஷ்டமில்லையென்று சொல்லி, அக்கி ராசனர் ஸ்ரீமதி சீனிவாசய்யங்கார் அவர்கள் தன்னுடைய அக்கிராசனப் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார்கள். பிறகு வேறு ஒருவருடைய அக்கிரா சனத்தில் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு மேற்சொன்ன தீர்மானங்களும் இன்னும் இதர தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பிறகு இது சம்பந்தமாக பிரபல ஸ்திரீகள் சிலருக்குள் அபிப்பிராய பேதம் ஏற்பட்டு பத்திரிகைகள் மூலியமாக இரு சாரார்களுடைய அபிப்பிராயங்களையும் வெளியிட்டு வந்தார்கள். இன்னும் அத்தீர்மானங்களின் சம்பந்தமான அபிப்பிராயங்கள் பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஆதலால்தான் இந்த முக்கியமான விஷயத்தைப் பற்றி நமது அபிப்பிராயத்தையும் வெளியிட விரும்புகிறோம். மேலும் சென்னை மாகாணத்தின் முதலாவது சுயமரியாதை மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மேற்கண்ட இதே இரண்டு தீர்மானங் களுக்கு இப்போதிருக்கும் எதிர்ப்புக்களைவிட பலமான எதிர்ப்புகள் தோன்றியதும் வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம். அந்த சந்தர்ப்பத்தில் இதைவிட “வேகமானதும்” “புரட்சியானதும்” என்று பிறரால் அநாவசியமாக தூற்றப்பட்ட சில இதர தீர்மானங்களைப் பற்றி நாம் எழுத வேண்டியதா யிருந்ததால், ஸ்திரீகளைப் பற்றி மேற்கண்ட இரண்டு தீர்மானங்களைப் பற்றி அதிகமாக விவரித்து எழுத அவகாசமில்லாது போயிற்று. ஆகையால் இந்த சந்தர்ப்பத்திலாவது இது சம்பந்தமாக நமது கருத்தை விளக்கிவிட வேண்டு மென்று எண்ணுகிறோம்.
முதலாவதாக, ஆண், பெண், இருபாலாருக்கும் சமமான ஒழுக்க முறைகள் இருக்க வேண்டுமென்பது, இது விஷயமாக அபிப்பிராய பேதமே இருக்காது என்று எதிர்பார்த்தோம். ஆனால், இதில்கூட படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் கூட மாறுபாடான அபிப்பிராயத்தைக் கொண்டி ருக்கிறார்கள் என்பதை அறிந்தவுடன் நமக்கு, பெரிய அதிசயமாகவே இருந்தது. உதாரணமாக பார்ப்பனரல்லாதாருக்காக உழைக்கும் “ஜஸ்டிஸ்” பத்திரிகையில் ஆண், பெண்ணுக்கு சமமான சட்டம் இருக்க வேண்டு மென்று சென்னை ஸ்திரீகள் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கண்டித்துத் தலையங்கம் எழுதியிருந்ததைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனோம் ஏழை மக்களுக்காகவும், நியாயத்திற்காகவும், சகோதரத்துவத்திற் காகவும், சமத்துவத்திற்காகவும் உழைப்பதாகச் சொல்லும் “ஜஸ்டிஸ்” பத்திரி கையானது சாஸ்திரங்களை உதாரணமாகக் காட்டி இத்தீர்மானத்தை கண்டித்த தானது நாம் என்றும் எதிர்பாராததும், ஏமாற்றமுமான விஷயமேயாகும். பகுத்தறிவுக்கு ஏற்றதான காரணங்களைச் சொல்லாமல் “ஜஸ்டிஸ்” பத்திரிகையானது, “பொதுவாகவே பெண்கள் இயக்கம் சரிவர நடத்தப்படுவ தில்லை”என்ற பெரும் குற்றத்தைச் சுமத்துகிறது. இந்த அபிப்பிராயம் உண்மையா? இல்லையா என்பதைப் பற்றி நமக்கு அதிகக் கவலையில்லை. ஆனால், நமக்கு வேண்டியதெல்லாம் இது மாதிரி விஷயங்களில் பெண் பாலருடைய முடிவான அபிப்பிராயம் என்னவென்பதே. ஏனெனில், பெண் கள் சம்பந்தமான விஷயங்களைப் பற்றி ஆண்கள் முடிவு செய்வதை விட பெண்களது அபிப்பிராயத்தையே பின்பற்றுவதுதான் முறையான வழியாகும். இன்று நமது நாட்டிலும் பிற நாடுகளிலும் பெண்கள் நிலைமை சற்று தாழ்மை யாகவே இருப்பதற்குக் காரணம் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விதிகள் சட்டதிட்டங்களெல்லாம் பெண்மக்கள் படித்திராத காலத்தில் ஆண் மக்களால் ஏற்படுத்தப்பட்டதால் தான். பார்ப்பனரல்லாதார் படிக்காத காலத் தில் எப்படி நம்மைப் பற்றி தூஷித்து நம்மை ‘அடிமைகள்’ என்பது புராணம் முதலானவைகள் எழுதி வைத்தார்களோ அதே மாதிரியாகத்தான் ஆண் மக்களும் தங்களுக்கு ஏற்றவாறு பாரபட்சமான சட்ட திட்டங்களை ஏற்படுத்தி னார்கள். உதாரணமாக புருஷன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏற வேண்டுமென்ற கட்டாயத்திற்கு பெண்கள் சம்மதித்திருப்பார்களா என்று யோசித்துப் பாருங்கள். அப்படி சம்மதித்திருந்தாலும் அதே மாதிரி மனைவி இறந்த புருஷனையும் உடன்கட்டை ஏற்ற வேண்டு மென்றாவது கேட்டிருக்க மாட்டார்களா என்பதும் சற்று யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயமாகும்.
ஆகவே, இம்மாதிரியாக பலவழிகளிலும் பெண் மக்களை அடிமைப் படுத்தி வைத்திருப்பதற்கு ஆண்களுடைய சுயநலமே காரணம் என்பது “ஜஸ்டிஸ்” போன்ற பத்திரிகைகளுக்கு இன்னும் இவை தெரியாமலா இருக்கிறது என்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துரிமை, ஒழுக்கம் முதலிய விஷயங்களில் சமமான சட்டங்கள் இருத்தலே அவசியம் என்பதை “ஜஸ்டிஸ்” போன்ற பத்திரிகைகள் மறைத்தாலும் அல்லது எதிர்த்தாலும் நமது நாட்டுப் பெண்கள் ஆயிரக் கணக்காய்ப் படிக்க ஆரம்பித்து விட்ட இக்காலத்தில் ஆண் மக்களது சுயநல அபிப்பிராயங்களுக்கு எவ்வித செல்வாக்கும் மதிப்பும் இருக்காது என்பது நமக்கு நன்றாக தெரியும். ஆகவே இந்த அடிப்படையான முக்கிய கொள்கையிலேயே நமது சகோதரப் பத்திரிகையின் அபிப்பிரா யத்துக்கு நாம் மாறுபட வேண்டியிருக்கும் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை.
இரண்டாவதாக உள்ள “விவாகரத்து” விஷயந்தான் சற்று கூர்ந்து கவனிக்கவேண்டிய விஷயமாகும். இது சம்பந்தமாக செங்கற்பட்டு சுய மரியாதை மகாநாட்டிலும் சென்னை ஸ்திரீகள் மகாநாட்டிலும் நிறைவேற்றப் பட்ட தீர்மானமானது பொறுப்பற்றவர்களால் செய்யப்பட்டதல்லவென்பது வாசகர்களுக்குத் தெரியும். ஆண் மக்களே நூற்றுக்கு 95க்கு மேல் கூடி யிருந்த செங்கற்பட்டு மகாநாடும், பெண்மக்களே நூற்றுக்கு நூறு கூடியிருந்த சென்னை ஸ்திரீகள் மகாநாடும் ஒரே தீர்மானத்தை நிறைவேற்றியிருக் கின்றனவென்றால் இதில் ஏதாவது தவறு இருப்பதற்கு மார்க்கமிருக்கிறதா என்று கேட்கின்றோம்.

இதைப் பற்றி ஆராய்வதற்கு முன்பு இது சம்பந்தமாக அநேக தப்ப பிப்பிராயம் கொண்டுள்ளார்கள் என்பதை விளக்க வேண்டியது அவசியமா கின்றது. “விவாகரத்து” சட்டமானால் உடனே எல்லாப் பெண்களும் தங்கள் கணவர்களை விட்டு ஓடிப்போவார்கள் என்றும், “கற்புநிலை” அடியோடு கெட்டுப் போகுமென்றும் பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். பாதுகாப் பிற்கும், அவசியத்திற்கும் ஒரு சட்டம் செய்தால் ஜனங்கள் எல்லோரும் அதே வேலையாயிருப்பார்களென்பதே நியதியல்ல. அவசியமான சந்தர்ப் பங்களில் மாத்திரம்தான் ஜனங்கள் அதனைக் கையாளுவார்கள். ஏனெனில், அதனால் ஏற்படக்கூடிய கஷ்டநஷ்டங்களுக்கு தாங்களே பாத்தியப்பட்டவர் கள் என்பது அநுபவத்தினால் மக்களுக்கு நாளடைவில் விளங்கிவிடும். ஆகவே “விவாகரத்து” அனுமதிக்கப்படுமானால் ஏதோ ஆபத்து வந்துவிடு மென்று சிலர் நினைத்துக் கொண்டிருப்பது அவர்களது சுயநலத்தினால் ஏற்படக்கூடிய பயம் என்றுதான் சொல்லுவோம்.

“விவாகரத்து” சட்டமாவது பெண்கள் சமூகத்திற்கு ஒரு இன்றியமையாத பாதுகாப்புக்கருவி என்பது நமது முடிவான அபிப்பிராயம். புருஷனுக்கும் மனைவிக்கும் பரஸ்பர அன்பும் சமமான வாழ்க்கையும் ஏற்படவேண்டுமானால் இருவருக்கும் தனித்தனியாக உரிமையிருந்தால்தான் முடியும். இப்போதிருக்கும் “இந்திய” சமூகத்திலுள்ள மணவாழ்க்கையானது பல வழிகளிலும் பெண் மக்களுக்கு பாதகமான முறையிலேயே நடைபெற்று வருகிறது. ஒரு புருஷன் தனக்குத் தேவையில்லாதபோது தனது மனைவி அளித்திருக்கும் நமது சட்டமானது, பெண்களுக்கு அதே உரிமையைக் கொடுக்காமலிருப்பது வருந்தத்தக்க விஷயமாகும். இந்த உரிமை மனிதனுக்கு இருப்பதால், எல்லாப் புருஷர்களும், இதே வேலையாகவா இருக்கிறார்கள் என்று தான் கேட்கி றோம். ஆகவே, இதே உரிமையை பெண் மக்களுக்கும் அளிக்கவேண்டியது நியாயமும் சமமும் ஆகும் என்பதை இன்னும் ஏன் ஆண்மக்களில் சிலர் அறியவில்லை என்பதுதான் நமக்கு விளங்கவில்லை. இந்த விவாகரத்துத் தீர்மானத்தை வைதீகப் பத்திரிகைகள் தான் கண்டித்தனவென்றால், நமது “ஜனநாயக”த் தினசரியான “ஜஸ்டிஸ்” பத்திரிகையும் கண்டித்ததுதான் நமக்கு விளங்கவில்லை. எது எப்படியாயினும், இந்தத் தீர்மானத்தின் அவ சியத்தை நமது சுயமரியாதை இயக்கத்து அன்பர்கள் நன்கு அறிவார் களாகையால், இம்மாதிரி சமத்துவமான நோக்கமுடைய விஷயங்களில் எவ் வளவு எதிர்ப்பு இருந்தாலும், அதற்காக நாமோ அல்லது நமது இயக்கத்தைச் சேர்ந்தவர்களோ எங்கள் கடமையினின்றும் பின்வாங்க மாட்டோம் என் பதை மாத்திரம் உறுதி கூறுகிறோம். கடைசியாக “ஜஸ்டிஸ்” பத்திரிகைக்கு ஒன்று கூற விரும்புகிறோம். பொது மக்களின் உணர்ச்சிக்காக ஏற்படுத்தப் பட்ட அப்பத்திரிகையானது இனியாகிலும் மக்களின் அபிப்பிராயத்தை ஒட்டி சீர்த்திருத்தத்தில் முன்னணியில் நின்று தனது பழைய குருட்டு நம்பிக்கைகள் ஏதேனும் மிஞ்சி இருக்குமானால் அவைகளை உடனே ஒழித்து சமூகத் தொண்டையே பிரதானமாகக்கொண்டு வேலை செய்யும் என்று எதிர்பார்க் கிறோம். மற்றொரு சந்தர்ப்பத்தில் இதுசம்பந்தமாக இன்னும் விவரமாக எழுதுவோம்.


குடி அரசு – தலையங்கம் – 29.12.1929

Thursday, 6 January 2022

கல்யாண விடுதலை

 

கல்யாண விடுதலை

ஆண் பெண் கல்யாண விஷயத்தில் அதாவது புருஷன் பெண்சாதி என்ற வாழ்க்கையானது நமது நாட்டிலுள்ள கொடுமையைப் போல் வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது என்று சொல்லலாம். நமது கல்யாண தத்துவம் எல்லாம் சுருக்கமாகப் பார்த்தால் பெண்களை ஆண்கள் அடிமை யாகக் கொள்வது என்பதைத் தவிர வேறு ஒன்றுமே அதில் இல்லை. அவ் வடிமைத்தனத்தை மறைத்து பெண்களை ஏமாற்றுவதற்கே சடங்கு முதலிய வைகள் செய்யப்படுவதோடு அவ்வித கல்யாணத்துக்கு தெய்வீக கல்யா ணம் என்பதாக ஒரு அர்த்தமற்றப் போலிப் பெயரையும் கொடுத்து பெண் களை வஞ்சிக்கின்றோம்.

பொதுவாக கவனித்தால் நமது நாடு மாத்திரமல்லாமல் உலகத் திலேயே அநேகமாய் கல்யாண விஷயத்தில் பெண்கள் மிக்க கொடுமை யும், இயற்கைக்கு விரோதமான நிர்ப்பந்தமும் படுத்தப்படுகிறார்கள் என் பதை நடுநிலைமையுள்ள எவரும் மறுக்க முடியாது. ஆனால் நமது நாடோ இவ்விஷயத்தில் மற்ற எல்லா நாட்டையும் விட மிக்க மோசமாகவே இருந்து வருகிறது.

இக்கொடுமைகள் இனியும் இப்படியே நிலைபெற்று வருமானால் சமீப காலத்திற்குள்ளாக அதாவது ஒரு அரை நூற்றாண்டுகளுக்குள்ளாக கல்யாணச் சடங்கும், தொந்தமும் உலகத்தில் அனேகமாய் மறைந்தே போகும் என்பதை உறுதியாய்ச் சொல்லலாம். இதை அறிந்தே மற்ற நாடு களில் அறிஞர்கள் பெண்கள் கொடுமையை நாளுக்கு நாள் தளர்த்திக் கொண்டு வருகின்றார்கள். நம் நாடுமாத்திரம் குரங்குப் பிடியாய் பழய கருப் பனாகவே இருந்து வருகின்றது. ஆதலால் தலைகீழ் முறையான பெண்கள் கிளர்ச்சி ஒன்று நமது நாட்டில் தான் அவசரமாய் ஏற்பட வேண்டியிருக் கின்றது.

சென்ற வருஷம் செங்கல்பட்டு மகாநாட்டில் பெண்களுக்கும் ஆண் களுக்கும் தங்கள் தங்கள் கல்யாண விடுதலை செய்து கொள்ள உரிமை இருக்க வேண்டும் என்பதாக ஒரு தீர்மானம் செய்யப்பட்டவுடனும் சமீபத் தில் சென்னையில் கூடிய பெண்கள் மகாநாட்டில் கல்யாண ரத்துக்கு ஒரு சட்டம் வேண்டும் என்று தீர்மானித்தவுடனும் உலகமே முழுகி விட்டதாக சீர்திருத்த வாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் உட்பட பலர் கூக்குரலிட்டார்கள். ஆனால் செங்கற்பட்டுத் தீர்மானத்திற்கு பிறகு வெளி நாட்டிலும், இந்தியாவிலும் பல விடங்களில் கல்யாண ரத்துச் சட்டங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது. ருஷியாவில் கல்யாணமே தினசரி ஒப்பந்தம் போல் பாவிக்கப்பட்டு வருகிறது. ஜர்மனியில் புருஷனுக்கும் பெண் ஜாதிக்கும் இஷ்டமில்லையானால் உடனே காரணம் சொல்லாமலே கல்யா ணத்தை ரத்து செய்து கொள்ளலாம் என்பதாக சட்டம் கொண்டு வரப்பட்டது யாவருக்கும் தெரிந்த விஷயமாகும். சமீபத்தில் பரோடா அரசாங்கத்தாரும் கல்யாண ரத்துக்குச் சட்டசபையில் சட்டம் நிறை வேற்றிவிட்டார்கள். மற்ற மேல் நாடுகளிலும் இவ்விதச் சட்டங்கள் இருந்து வருகின்றது. நமது நாட்டில் மாத்திரம் இவ்விஷயம் சட்டம் செய்வதில் கவனிக்கப்படாம லிருந்து வருகின்றதானது மிகவும் அறிவீனமான காரியம் என்றே சொல்ல வேண்டும். சாதாரணமாக தென்னாட்டில் பத்திரிகைகள் மூலம் அனேக புருஷர்கள் தங்களது பெண் ஜாதிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு என்பதாய் கொலைகள் செய்ததாக தினம் தினமும் செய்திகள் வெளியாவதை பார்த்து வருகின்றோம்.

சில சமயங்களில் ஒரு பெண்ஜாதியின் நடவடிக்கை சந்தேகத்திற்கு பல கொலைகள் நடந்ததாகவும் பார்க்கிறோம். தெய்வீக சம்மதமான கல்யாணங்கள் இப்படி முடிவடைவானேன் என்பதைப் பற்றி தெய்வீகத்தில் பிடிவாதமுள்ள எவருக்குமே யோசிக்கப் புத்தியில்லை. பெண்கள் உலகம் முன்னேற்றமடைய வேண்டுமானால் அவர்களுக்கும் மனிதத்தன்மை ஏற்பட வேண்டுமானால் ஆண்களுக்கும் திருப்தியும், இன்பமும், உண்மை யான காதலும், ஒழுக்கமும் ஏற்பட வேண்டுமானால் கல்யாண ரத்துக்கு இடமளிக்கப்பட வேண்டியது முக்கியமான காரியமாகும். அப்படிக்கில்லாத வரை ஆண், பெண் இருவருக்கும் சுதந்திர வாழ்க்கைக்கு இடமே இல்லாமல் போய்விடும்.

நமது “சீர்திருத்தவாதிகள்” பலர் ஒரு மனிதன் இரண்டு பெண்டாட்டி களைக் கட்டிக் கொள்வதை பற்றி மாத்திரம் குடி முழுகிப் போய் விட்டதாகக் கூச்சல் போடுகின்றார்கள். இவர்கள் எதை உத்தேசித்து இப்படி கூச்சல் போடுகின்றார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. மதத்தை உத்தேசித்தா? அல்லது பகுத்தறிவை உத்தேசித்தா? அல்லது பெண்கள் நலத்தை உத்தே சித்தா? அல்லது மனித சுதந்திரத்தை உத்தேசித்தா? என்பது நமக்கு சிறிதும் விளங்கவில்லை. அல்லது மனித ஒழுக்கத்தை உத்தேசித்து இப்படி பேசு கின்றார்களா என்பதும் விளங்கவில்லை. இதைப் பற்றி மற்றொரு சமயம் விவரிப்போம்.

நிற்க, ஒரு பெண்சாதிக்கு மேல் மனிதன் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று சொல்லுபவர்களை நாம் ஒன்று கேட்கின்றோம்.

அதென்னவெனில் கல்யாணம் என்பது மனிதன் இன்பத்திற்கும், திருப்திக் குமா? அல்லது சடங்குக்காகவா? என்று கேட்பதோடு இஷ்ட மில்லாத, ஒற்றுமைக்கு இசையாத, கலவிக்கு உதவாத, ஒரு பெண் எந்த காரணத் தினாலோ ஒருவனுக்கு பெண்ஜாதியாக நேர்ந்து விட்டால் அப்போது புருஷனுடையக் கடமை என்ன என்று கேட்கிறோம். அதுபோலவே ஒரு பெண்ணுக்கும் அப்படிபட்ட ஒரு புருஷன் அமைந்து விட்டால் அப் பெண்ணின் கதி என்ன என்று தான் கேட்கின்றோம். கல்யாணம் என்பது தெய்வீகமாகவோ, பிரிக்க முடியாததாகவோ உண்மையில் இருக்குமாயின் அதில் இவ்வித குணங்கள் ஏற்பட முடியுமா என்பதை யோசித்தாலே தெய்வீகம் என்பது முழுப் புரட்டு என்பது எப்படிப்பட்ட மனிதனுக்கும் புரியாமல் போகாது. ஆகவே நமது நாட்டிலும் மற்ற நாடுகளில் இருப்பது போன்ற கல்யாண ரத்துக்குச் சட்டம் சமீபத்தில் ஏற்படாமல் போகுமாயின் கல்யாண மறுப்புப் பிரசாரமும் கல்யாணம் ஆன புருஷர்களுக்கும், பெண்களுக்கும் பலதாரப் பிரசாரமும் தான் செய்ய வேண்டிவரும், அன்றியும் இது சமயம் ஒற்றுமைக்கும் திருப்திக்கும் இன்பத்திற்கும் உதவாத பெண்களை உடைய புருஷர்கள் கண்டிப்பாக தைரியமாக முன் வந்து தங்களுக்கு இஷ்டமான பெண்களை திரும்பவும் மணம் செய்து கொள்ளத் துணிய வேண்டும் என்றும் தூண்டுகின்றோம். ஏனெனில் அப்படி ஏற்பட்டால் தான் தெய்வீகம் என்கின்ற பெயரைச் சொல்லி கொண்டு புருஷர்களுக்கும் பெண்களுக்கும் சம்மதமும் முன்பின் அறிமுகமில்லாமல் செய்யப் பட்டுவரும் கல்யாணங்களில் மக்கள் அடையும் துன்பம் ஒழிபட முடியும். மனிதன் ஏன் பிறந்தானோ ஏன் சாகிறானோ என்பது வேறு விஷயம். ஆதலால் அது ஒரு புறமிருந்தாலும் மனிதன் இருக்கும் வரை அனுபவிக்க வேண்டியது இன்பமும் திருப்தியுமாகும். இதற்கு ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் முக்கிய சாதனம்.

அப்படிப்பட்ட சாதனத்தில் இப்படிப்பட்ட துன்பத்திற்கிடமான இடையூறு இருக்குமானால் அதை முதலில் களைந்தெறிய வேண்டியது ஞானமுள்ள மனிதனின் கடமையாகும். மனித ஜீவ கோடிகளின் திருப்திக் கும் இன்பத்திற்கும் வேலை செய்பவர்கள் இதையே செய்ய வேண்டும். அப்படிக் கில்லாமல் “ஏதோ கல்யாணம் என்பதாக செய்து கொண்டோமே, செய்தாய் விட்டதே, எப்படி இருந்தாலும் சகித்துக் கொண்டுதானே இருக்க வேண்டும்” என்று கருதி துன்பத்தையும் அதிருப்தியையும் அனுபவித்துக் கொண்டிருப்பதும் அனுபவித்துக் கொண்டிருக்கச் செய்வதும் மனிதத் தன்மையும் சுயமரியாதையும் அற்ற தன்மையுமேயாகும் என்பதே நமதபிப் பிராயமாகும்.

குடி அரசு – தலையங்கம் – 17.08.1930