Showing posts with label சுயமரியாதை மாநாடு. Show all posts
Showing posts with label சுயமரியாதை மாநாடு. Show all posts

Sunday, 6 February 2022

செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள் - 2

 

செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள்


ஜாதி வகுப்பு வித்தியாசத்தைக் காட்டும் பட்டங்களையும் சமய வித்தியாசத்தைக் காட்டும் குறிகளையும் விட்டுவிடவேண்டும் என்று செய்த தீர்மானம் நாட்டின் ஒற்றுமைக்கு மிகுதியும் அத்தியாவசியமானது என்பதைப் பற்றி முன் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

இத்தீர்மானத்தில் பொறாமை கொண்ட சில விஷமக்காரர்கள் வகுப்புப் பட்டம் நீக்க வேண்டும் என்கின்றவர்கள் வகுப்பு மகாநாடுகளில் கலந்து கொள்ளலாமா என்கின்ற ஒரு பிரசினையை கிளப்பிவிட்டிருக் கின்றார்கள். இதற்கு நாம் சொல்லும் சமாதானம் என்னவென்றால் ஒவ்வொரு வகுப்பாரும் தங்கள் தங்கள் வகுப்பு மகாநாடுகள் கூட்டி அவற்றில் இவ்விதத் தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றி அவற்றை முதலில் தங்கள் தங்கள் வகுப்புகள் என்பவைகளுக்குள் அமுலுக்குக் கொண்டு வருவதன் மூலம் வகுப்பு வித்தியாசங்களை ஒழியுங்கள் என்றுதான் கேட்கின்றோம். அதற்காகத்தான் வகுப்பு மகாநாடுகள் கூட்டுங்கள் என்கின்றோமே ஒழிய வேறில்லை. உதாரணமாக ஒரு வாணிய வைசிய மகாநாட்டில் நாம் பேசும் போது அவர்களுடைய பூணூலை எடுத்து விடும்படியும் தங்களை வைசியர் கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டாம் என்றே கேட்டுக் கொண்டோம், அது போலவே நாடார் க்ஷத்திரிய வகுப்பார் கூட்டத்தில் பேசும் போதும் தங்களை க்ஷத்திரியர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டாம் என்றும் பூணூலை எடுத்து விடும்படியும் பேசினோம்.

அதுபோலவே நாயுடுமார்கள் மகாநாட்டில் பேசும்போதும் தங்களை க்ஷத்திரியர்கள் என்று சொல்லிக் கொள்வதை விட்டுவிடும்படியே கேட்டுக் கொண்டோம். இம்மாதிரி சிறிதாவது விட்டுவிடவும் செய்தோம். ஆதலால் வகுப்புப் பிரிவுகள் எத்தனை உண்டோ அத்தனை வகுப்பும் மகாநாடுகள் கூட்டி வித்தியாசங்களை ஒழிக்க தீர்மானங்கள் செய்து கொள்ளாவிட்டால் எப்படி இந்தக் கொள்கைகள் ஒவ்வொரு வகுப்புக்குள்ளும் போய்ப் புகுந்து வகுப்பு நோயைத் தீர்க்க முடியும் என்பது நமக்கு விளங்காது. மற்றும் இப்போது ஆதிதிராவிட மகாநாடுகள் கூடுவதால் எவ்வளவு தூரம் அச் சமூகத்திற்கு உணர்ச்சி வந்து அவைகள் முன்னேற இடமேற் பட்டிருக் கின்றது என்பதை கவனித்தால் வகுப்பு மகாநாட்டின் அவசியம் விளங்கும். ஒரு பெரும் சமூகம் ஒற்றுமையையும் சீர்திருத்தமும் பெற வேண்டுமானால் அதிலுள்ள பிரிவுகளான ஒவ்வொரு சிறு சமூகமும் தங்களுக்குள் முதலில் ஒற்றுமையையும் சீர்திருத்தத்தையும் பெற்றாக வேண்டியது மிகவும் அவசியமாகும். இந்த உண்மை உலகத்திலுள்ள எந்த யோக்கியனுக்கும் விளங்கியே தீரும்.

உதாரணமாக தென்னாட்டில் பார்ப்பனரல்லாதார் மகாநாடு கூட்டப் படாமல் இருந்திருக்குமானால் பார்ப்பனர்களின் கொடுமை நாடு அறிந்து, அதிலிருந்து விடுதலையடைய மார்க்கம் ஏற்பட்டிருக்க முடிந்தே இருக்காது என்று சொல்லுவோம். அன்றியும் வகுப்பு மகாநாடுகள் அடிக்கடி கூடுவதால் தாங்கள் மற்ற வகுப்பார்களால் அடையும் துன்பமும் அதிலிருந்து விடுபட்டு மற்ற வகுப்பார்களும் தாங்களும் ஒற்றுமையாயிருக்க மார்க்கமும் அவசி யமும் தானாகவே ஏற்பட்டுவிடும். எனவே வகுப்பு வித்தியாசங்களால் வயிறு வளர்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் சுயநலச் சோம்பேரிகளைத் தவிர பொதுநலத்தில் கருத்துள்ள மற்ற யாவருக்கும் வகுப்பு வித்தியாசங் களை ஒழித்து ஒற்றுமைப்பட வகுப்பு மகாநாடுகள் கூட்டப்படுவது எந்த விதத்திலும் ஆபத்தாய் தோன்றாது.

ஜாதி பேதத்தை ஆதரிக்கின்ற மதம், வேதம், சாஸ்திரம், புராணம் ஆகியவைகளைப் பின்பற்றக் கூடாது என்பது.
இந்தத் தீர்மானத்தை எந்தவிதமான தீர்மானத்தைக் கொண்டும் யாரும் எதிர்க்க முடியாதானாலும் சமயத்தின் பேராலும் வேத சாஸ்திர புராணத்தின் பேராலும் தங்களது நித்திய வயிறு வளர்ப்பு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கும் இத் தீர்மானம் ஒருக்காலும் திருப்தியை அளிக்காது என்பதோடு அவர்களது சூக்ஷி விஷமப் பிரசாரம் இரகசியமாய் நடந்துதான் தீரும்.

இத்தீர்மானத்தின் கருத்துப்படி பார்த்தால் முக்கியமாக இந்து மதக் கொள்கைகளையும் அவற்றின் ஆதாரங்களையும் பின்பற்றக் கூடாது என்பதாகக் காணப்படுகின்றது என்றுதான் ஒவ்வொருவருக்கும் தோன்றும். ஏனெனில் உலகத்திலுள்ள எல்லா முக்கிய மதங்களைவிட இந்து மதம் என்பதிலும் அதன் ஆதாரங்கள் என்பதான வேத சாஸ்திர புராணங்களில் தான் ஜாதி வகுப்பு பிரிவும் பிறவியில் உயர்வு தாழ்வு உண்டு என்பதையும் அதிகமாக வலியுறுத்தப்படுகின்றது. ஆதலால் இத்தீர்மானம் மிகுதியும் இவற்றை குறை கொள்வதாக நினைப்பதில் அதிசயமில்லை. ஆனால் நம்மைப் பொறுத்தவரை உண்மையில் இந்து மதம் என்பதாக ஒரு மதமே இல்லை என்றும், இருப்பதாக கருதிக் கொண்டிருப்பதும் அதன் ஆதாரங்கள் என்று சொல்லப்படுவதும் ஒரு சிலருடைய சுயநலத்தாலும் நமது மக்களு டைய அறியாமையினாலும் வழங்கி வரும் ஒரு வெறும் மயக்க உணர்ச்சியே தவிர வேறில்லை என்றும், அம்மயக்க உணர்ச்சி ஒழியவே இந்துமதமும் அதன் ஆதாரங்களும் ஒழிய வேண்டுமென்கின்றோமே ஒழிய வேறில்லை.

உதாரணமாக இந்துமதம் என்பதாக ஒருமதம் இல்லை என்று சொல்லி வந்திருக்கும் புஸ்தகங்களுக்கும் விஷயங்களுக்கும் இதுவரை யாரும் பதில் சொன்னவர்களே கிடையாது. ஞான சூரியன் புஸ்தகத்தில் காணப்படுவது போல ஒரு நாட்டின் இழி மக்களுக்கு அந்நாட்டு பாஷையில் சொல்லப்பட்ட ஒரு இழிவான பெயரே இந்து என்பது.
அப்பெயர் பெரும்பாலும் மகமதியர்களால் தங்கள் மதஸ்தர்கள் அல்லது தங்கள் நாட்டவர்கள் அல்லாத இந்தியா நாட்டவர்களுக்கு அளிக்கப் பட்டது. எப்படி ஐரோப்பியர்கள் நம்மைச் சுதேசிகள் என்று கூப்பிடு கிறார்களோ அதுபோலவே மகமதியர்கள் நம்மைச் சுதேசிகள் என்று கூப்பிடு வதற்கு பதிலாக இந்தியன் என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் சொல்லுவது போல இந்தி, அரபி, உருது முதலிய பாஷைகளில் இந்து என்று சொல்லி அழைத்தார்கள். இந்த நிலையில் இந்திய மக்கள் எல்லோரையும் குறிப்பிட வேறு பெயர் சமயத்தின் பேரிலோ நாட்டின் பேரிலோ ஜாதியின் பேரிலோ ஒரு குறிப்பும் இல்லாதிருந்ததால் இந்து என்கின்ற பெயரே எல்லோரையும் சேர்ப்பதற்கு ஒரு பொதுப் பெயராகவும் ஏற்பட்டதோடு ஆரியர்கள் கொள்கைகளுக்கே இந்து சமயம் என்னும் பெயர் தரப்பட்டு அது இந்தியர் கள் எல்லோர்கள் தலையிலுமே சுமத்தப்பட்டுவிட்டது. உதாரணமாக இந்து மதம் என்கின்ற வார்த்தை உச்சரிப்பு கூட சுமார் ஒரு 400, 500 வருஷங்க ளுக்கு முன்னால் இருந்ததாக எண்ணுவதற்கு ஒரு ஆதாரத்தையும் காணோம். சைவம் என்கின்ற பெயரும் சிவன் என்றால் அன்பு என்கிற வியாக்கியானமும் கூட ஆரியக் கொள்கைகளை சிறப்பாகவே ஆபாசங் களையும் வேள்வி கொடுமைகளையும் முறையே வெளியாக்கியும் அழிக்கவும் வந்த புத்த இயக்கத்தை எதிர்த்து அவரது கொள்கையை ஒழிக்கவே சைவம் என்பதாக ஒன்று கற்பிக்கப்பட்டதே தவிர மற்றப்படி அச்சைவம் என்பதற்கும் அதன் கொள்கைகளும் அதில் காணப்படும் பல்வேறு கடவுள்களுக்கும் தமிழ்நாட்டிற்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எவ்விதச் சம்மந்தமும் இருப்பதாகவோ இதுவரையெவ்வித ஆதாரமும் வெளிப்படுத்தப்படவில்லை. நாளாக நாளாக சைவ ஆரியக் கொள்கை கொண்ட சமயம் தமிழ் மக்களுக்குப் பொருத்தமில்லாமல் போவதை அறிந்த சில தமிழர்கள் ஆரியர் சைவ சமயம் என்பது வேறு தமிழர் சைவ சமயம் என்பது வேறு என்று பிரித்து ஆரியக் கொள்கைகளை கண்டித்து ஒதுக்கி அதற்கு பதிலாகத் தமிழ் மக்களுக்கு பொருத்தமானது என்பதாக சிலவற்றை தாங்களே நினைத்து, வேறு சில கொள்கைகளையும் வியாக்கியானங் களையும் புகுத்தித் தமிழ்ச் சிவன், தமிழ்வேதம், தமிழ்க் கடவுள் என்பதாக வெள்ளரிக்காய்க்கு பூண் போடுவது போல் இழுத்துப் பிடித்துக் கொண்டு வருகின்றார்கள். அன்றியும் சைவ சமயத்திற்கு ஜாதி மத வகுப்பு பேதங்கள் கிடையாது என்று சொல்லி சமரசத்தைப் பற்றி பேசுவதிலும் குறைவில்லை. ஆனால் உட்புகுந்து பார்த்தால் சமயாச்சாரிகள் எல்லோருக்கும் ஜாதி உண்டு, இது மாத்திரமல்ல. சைவக் கடவுள்கள் எடுத்த மனித ரூபங்கள் எல்லாவற் றிற்கும் ஜாதி உண்டு. இதுமாத்திரமல்ல. சைவ புராணங்கள் எல்லாவற்றிலும் அவற்றை செய்தவர்கள், செய்யப்பட்டவர்கள் உள்பட ஜாதி உண்டு. எனவே சைவ சமயம் ஜாதிகள் ஏற்பட்டதற்கு பின்பு உண்டானதென்றும் அதுவும் ஜாதி மத பேதங்களை ஒழிக்கப் புறப்பட்ட பவுத்த சமண கொள்கை களுக்குப்பின் உண்டானதென்றும் சொல்லித் தீர வேண்டியிருக்கின்றது. அது போலவே வைணவ சமய மென்பதும். அது போலவே ஆரியக் கொள்கைகள் நாட்டில் பெரும்பாலோரால் வெறுக்கப் பட்ட காலத்தில் அதனுடைய அடிப்படைகளை மாத்திரம் நிறுத்திக் கொண்டு சற்று திருத்தப்பட்ட கொள்கைகளை வைத்து வெளியாக்கப்பட்ட சமயமாகும். ஆனாலும் அதுவும் வார்த்தை அளவில் சில நல்ல கருத்துக்கள் சொல்லப் பட்டாலும் வைணவப் புராணங்களும் கடவுள்களும் ஆச்சாரியார்களும் ஆழ்வார் களும் சகலமும் ஜாதி வித்தியாசம் கற்பிக்கக் கூடியதாகவே தான் இருந்து வருகின்றது.

இச்சமயத்தைச் சேர்ந்த சில பெரியார்கள் என்பவர்கள் மாத்திரம் ஜாதி வித்தியாசமில்லை என்று சொன்னதாகக் காணப்பட்டாலும் அதற்கும் பல நிபந்தனைகள் சொல்லப்பட்டிருப்பதையும் காணாமல் இருக்க முடியாது. எனவே ஜாதி வித்தியாசம் இயற்கை என்பதும் அதை ஒழிப்பதற்கு நிபந்தனைகள் வேண்டியிருப்பதால் அவ்விரு சமயங்களும் சமரசம் செயற்கை என்றும் விளங்குகின்றது.

குடி அரசு – தலையங்கம் – 03.03.1929

செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள்

 

செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள்

இரண்டு மூன்று மாத காலமாய் தென்னிந்தியா முழுவதும் ஒரே பேச்சாயிருந்த முதலாவது சுயமரியாதை மாகாண மகாநாடு செங்கற்பட்டில் இம்மாதம் 17,18ஆம் தேதிகளில் வெகுவிமரிசையாகவும் மிக்க ஆடம்பர மாகவும் கூடி பல தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு கலைந்துவிட்டது. வெகு சொற்ப நாட்களுக்குள்ளாகவே செங்கல்பட்டில் இந்த மாகாண மகாநாடு நடத்த தீர்மானித்ததால் போதுமான சாவகாசமில்லாதிருந்தும்கூட செங்கற்பட்டு ஜில்லா போர்டு தலைவர் ராவ்பகதூர் கே.கிருஷ்ணசாமி யவர்கள் முயற்சியாலும் செங்கற்பட்டு சேர்மன் திரு.வேதாசலனாரவர்கள் ஊக்கத்தாலும் செங்கற்பட்டு பிரபுவும் ஜமீன்தாரருமான அப்பாசாமி வள்ளலாரின் வள்ளல் தன்மையாலும் ‘திராவிடன்’ பத்திராதிபர் திரு. கண்ணப்பரின் இடையறா உழைப்பாலும் மற்றும் அநேக கனதனவான்களின் உதவியாலும் தென்னிந்தியாவில் இதுவரை எங்கும் நடந்திராத மகாநாடு போல் இம்மகாநாடு நடந்தேறிவிட்டதும் மகாநாட்டின் பிரதிநிதிகளிலும் இதுவரை எந்த மகாநாட்டிலும் கூடாதமாதிரி எல்லா தரத்தவர்களும் ஏராளமாக வந்து கூடியிருந்ததும் குறிப்பிடத்தக்கதேயாகும்.


முதலாவதாக வைதீகர்கள் கூட்டமும் இரண்டாவதாக பண்டிதர்கள் கூட்டமும் மூன்றாவதாக ராஜாக்கள், மந்திரிகள், ஜமீன்தார்கள், உத்தியோ கஸ்தர்கள், ஆங்கிலம் படித்தவர்கள், செல்வந்தர்கள், மிராசுதாரர்கள், வியாபாரிகள் முதலியவர்களின் கூட்டமும் எதிர்பாராத அளவில் விஜயம் செய்திருந்தது மிகவும் குறிப்பிடத்தகுந்ததாகும். மற்றபடி பெண்மணிகள், தொழிலாளர்கள், ஏழைமக்கள், தாழ்த்தப்பட்டவர்கள், கொடுமை செய்யப்பட்டவர்கள் ஆகியவர்கள் மற்ற எல்லாரையும் விட அதிகமாகக் கூடியிருந்ததாலும் அவர்களே மகாநாட்டுக்குச் சொந்தக்காரர்களானதினால் அவர்கள் வந்திருந்ததில் நாம் ஒன்றும் அதிசயப்படுவதற்கில்லை. எனவே இம்மாதிரி குறிப்பிடத்தகுந்த அளவு மகாநாட்டின் பெருமைகள் ஒரு புறமிருக்க மகாநாட்டின் தீர்மானங்களைப் பற்றிச் சிறிது கவனிப்போம்.

இம்மகாநாட்டில் சுமார் இருபது தீர்மானங்கள் வரை நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. அவைகளில் சைமன் கமிஷன் பகிஷ்காரம் கூடாது என்றும் நேரு கமிட்டி ரிப்போர்ட்டை பகிஷ்கரிக்க வேண்டும் என்றும் செய்யப்பட்ட தீர்மானங்களைப் பற்றி அரசியல் துறையில் இருப்பவர்கள் என்பவர்களில் ஒரு சிறு சாரருக்கு அபிப்ராய பேதமிருக்கலாம். அதற்கு நம்முடைய சமாதானம் என்ன வென்றால், முதலாவதாக நமது சுயமரியாதை இயக்கத்தில் அரசியல் நிர்வாக சம்மந்தமான சீர்திருத்த விஷயங்களைப் பற்றிய பேச்சுக்களுக்கு இடமில்லை என்பது யாவரும் அறிந்ததேயாகும். ஆனால் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளும் திட்டங்களும் நிறை வேற்றப்படும்போது ஜனங்களின் உதவியை எப்படி எதிர்பார்க்க வேண்டி யிருக்கின்றதோ அதுபோலவே அரசாங்க உதவியையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. ஆதலால் அந்த அளவுக்கு அரசியல் தீர்மானம் இருந்துதான் தீர வேண்டியிருக்கின்றது. இன்றைக்கும் சுயமரியா தைக் கொள்கைகளில் அநேக விஷயங்களை நிறைவேற்ற வொட்டாமல் செய்ய நமது எதிரிகள் அரசாங்கத்தின் துணையை எதிர்பார்க்கின்றதை நாம் பார்க்கின்றோம். அநேக விஷயங்கள் அரசாங்க சட்டத்தின் மூலம் செய்யப் படவேண்டியிருக்கின்றதையும் உணர்ந்து அவைகளுக்கு சட்டசபைகளின் மூலம் சட்டம் செய்ய முயன்று கொண்டுமிருக்கின்றோம்.

உதாரணமாக, ஆண்களுக்கொரு சட்டம், பெண்களுக்கொரு சட்டம் என்பதாகவும், பார்ப்பனருக்கொரு சட்டம், பார்ப்பனரல்லாதாருக்கொரு சட்டம் என்பதாகவும் உயர்ந்த சாதி என்பவர்களுக்கொரு சட்டம், தாழ்ந்த சாதி (தீண்டப்படாதவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டவர்கள்) என்பவர் களுக்கொரு சட்டம் என்பதாகவும் இருந்து வருவதையும் அவற்றை நாம் தினமும் அனுபவித்து வருவதையும் மாற்றி எல்லோருக்கும் சமமான நீதி ஏற்படுத்த வேண்டுமானால், நமக்குள்ளாகவே நாம் செய்து கொள்ளும் படியாக எந்தக்காரியம் செய்தாலும் சரி, எந்தத் தீர்மானம் செய்தாலும் சரி, அவைகளினால் நமது லட்சியத்தை நிறைவேற்ற முடிவதில்லை என்பதும், அவைகளுக்குக் கண்டிப்பாய் அரசாங்கத்தின் மூலம் பழய சட்டங்களை மாற்றி புதிய சட்டங்கள் செய்தே தீரவேண்டும் என்பதும் யாராலும் மறுக்கப் படமுடியாத உண்மைகளாகும். அல்லாமலும், அவைகளில் அநேகவற்றிற்கு சட்டம் செய்யக் கூட நம்மவர்கள் ஏகமனதாய் ஒப்புக் கொள்வதாயிருந் தாலும்கூட முதலில் அரசாங்க அனுமதியையும் பெற வேண்டியதான நிபந்தனைகளும் இருக்கின்றன.

இஃதொருபுறமிருக்க, அரசாங்கம் எல்லா மக்களுக்கும் பொதுச் சொத்து என்பதையும் அரசாங்க உத்தியோகங்களும் பதவிகளும் எல்லோ ருக்கும் பொதுச் சொத்து என்பதையும் அதுபோலவே அரசாங்க வரிப் பணமும் எல்லா மக்களுக்கும் பொதுச் சொத்து என்பதையும் யாராவது மறுக்க முடியுமா? அது போலவே அப்பணத்திலிருந்து செலவு செய்யப்படும் ஒவ்வொரு காரியமும் எல்லாருக்கும் பொது என்பதையும் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். எனவே அப்பொதுக் காரியங்கள் உரிமைகள் எல்லாருக்கும் சமமாய் அனுபவிக்க சம சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டு மல்லவா. ஆதலால் இதற்கு நாம் அரசாங்க உதவி எதிர்பார்க்காமலிருக்க முடியுமா? என்பதை யோசித்துப் பார்க்க விரும்புகின்றோம்.

உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்கும் பொது உரிமைகளில் அதிகமான பங்கை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் மற்றவர் களை முன்னேறவிடாமல் தடுத்து சூழ்ச்சி செய்து முன்னணியில் இருந்து கொண்டிருப்பவர்களுக்கு மாத்திரம் இக்காரியங்களுக்காக அரசாங்கத்தை எதிர்பார்ப்பது என்பது ஒரு சமயம் தங்களது சுயமரியாதைக்குப் பங்கமா யிருப்பதாகக் காணப்படலாமே ஒழிய வெகுகுறைந்த உரிமைகளை அனுபவிப்பவர்களுக்கும் வெகு தாழ்ந்த பதவியில் தாழ்த்தப்பட்டிருப் பவர்களுக்கும் தங்கள் பதவிகளைக் கேட்பதும் விடுதலை பெறமுயற்சிப் பதும் ஒருக்காலும் அவர்களது சுயமரியாதைத் தத்துவத்திற்கு விரோதமானது என்று எவரும் சொல்ல முடியாதென்றே கூறுவோம்.

ஆதலால் இந்தமுறையில் சைமன் கமிஷனிடம் கொடுமைப்படுத்தப் பட்டவர்களும் பிறரால் ஏமாற்றப்பட்டுப் பின்னணியில் தள்ளப்பட்டவர் களும் தங்கள் கஷ்டங்களையும் தேவைகளையும் அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்துவது என்கின்ற முறையில் கமீஷனிடம் எடுத்துச் சொல்வதிலும் சம சுதந்திரமும் சம சந்தர்ப்பமும் ஏற்படுவதற்கு மார்க்க மில்லாத நேரு திட்டம் என்னும் அரசியல் திட்டத்தை சம சுதந்திரமும் சம சந்தர்ப்பமும் இதுவரை அனுபவியாத மக்கள் ஒப்புக் கொள்வதில்லை என்பதிலும் குற்றமொன்றுமில்லையென்றே சொல்லுவோம். ஆகவே இவை அரசியல் நிர்வாக விஷயத்தைச் சேர்ந்த தல்லவென்றும் ஒருசமயம் இவை அரசியல் நிர்வாக விஷயத்தைச் சேர்ந்தவைதான் என்று சொல்லப் படுவதா னாலும், அவை உண்மையான சுயமரியாதைத் தத்துவத்திற்கு தள்ளப்பட முடியாத விஷயமேயாகும் என்றும் சொல்லுவோம்.
நிற்க, மக்கள் பிறவியில் ஜாதி வித்தியாச உயர்வு தாழ்வு கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டுமென்பது. இது இந்நாட்டு மக்களில் பல துறைகளில் உள்ள எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்படுவதானாலும் அதற்கு விரோத மாயுள்ள ஆதார விஷயங்களில் உள்ள பிடிப்பை விட்டுவிட அநேகர் சம்மதியாமல் இருப்பதையும், மற்றொரு புறம் அக்கொடுமைகள் நிலைத் திருக்க மதத்தின் பேரால் மகாநாடுகளும் பிரசாரங்களும் அரசாங்கத்தினிடம் தூதுகளும் நடைபெறுவதையும் பார்க்கும்போது நம் நாடு சுலபத்தில் அக்கொடுமைகளை ஒழிக்கத் தயாரில்லை என்பதும் உயர்வு தாழ்வுக் கொடுமையின் அஸ்திவாரம் இன்னதென்று பலருக்குப் புலப்படவில்லை என்பதுமே விளங்குகின்றது. அதுபோலவே வர்ணாசிரமப் பிரிவுப் பாகு பாடுகள் விஷயத்திலும் தேசாபிமானி, மகாத்மா, சீர்திருத்தக்காரர் என்பவர் கள் முதல் கொண்டு அவற்றை ஆதரிப்பதும் அதற்காதாரமான மதம், வேதம் முதலியவற்றைப் பற்றிப் பிரசாரம் செய்வதும், அவற்றிற்கு வேறு வியாக்கியானங்கள் செய்வதுமான நிலையிலேயே இன்னும் இருப்பதை சற்று கூர்ந்து பார்த்தால் இது சம்மந்தமாக மகாநாட்டில் செய்யப்பட்ட தீர்மானங் களின் அவசியம் யாவருக்கும் நன்றாய் விளங்கும். நிற்க, அடுத்த படியாக,
வகுப்புப் பட்டங்களும் குறிகளும் விடப்படவேண்டும் என்னும் தீர்மானத்தின் அவசியமும் அதுபோலவேதான். எப்படியெனில் மக்களு டைய பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அவர்களது குணம், அறிவு, தன்மை முதலியவைகள் ஒன்றும் தெரியாமலே அவர்களை பிரித்து வேற்றுமையாய் நினைக்கத் தகுந்த மாதிரியில் அர்த்தமற்ற பிரிவினைகளைக் காட்டும் வித்தியாசங்கள் ஒழிந்தாலொழிய நமது நாட்டில் மக்கள் ஒன்று பட்டு ஒரே லக்ஷியத்திற்குழைத்து வாழ முடியாதாகையால் அவ்வித்தியாசங் களைக் காட்டும் பெயர்களும் குறிகளும் ஒழிக்கப்பட வேண்டும் என்பது ஒற்றுமையையும் சமத்துவத்தையும் விரும்பும் யாவராலும் ஒப்புக் கொள்ளப் படத்தக்கதேயாகும். மற்ற தீர்மானங்களைப் பற்றிய கருத்துகள் தொடரும்.

குடி அரசு – தலையங்கம் – 24.02.1929

Tuesday, 1 February 2022

சுயமரியாதை மகாநாடு - தோழர் பெரியார்

 

சுயமரியாதை மகாநாடு


சுயமரியாதை மாகாண மகாநாடு செங்கல்பட்டில் இந்த வாரம் இன்றைய தினம் நடைபெறுகின்றது. அதைப் பற்றிப் பலவாறாக பழிப்புரை களும் விஷமக் கருத்துக்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. அதாவது அரசாங்கத்தார் ஆதரவில் இம்மகாநாடு நடத்தப்படுவதாகவும் பார்ப்பன துவேஷத்தின் மீது நடத்தப்படுவதாகவும், மற்றும் போல்ஷ்விசம் பரப்ப அவர்கள் உதவிக் கொண்டு நடத்தப்படுவதாகவும், இதைப் பற்றி அரசாங்கத்திற்கும் சிலர் தெரிவித்ததாகவும் சொல்லப்படுவதுடன் சிலர் கவர்னரிடம் தூது சென்றதாகவும் தெரிகின்றது.




அரசாங்கத்தாரும் இவற்றிற்கு காது கொடுத்து சற்று துடிக்கின்றதாகவும் தெரிய வருகின்றது. எப்படி இருந்தாலும் நமக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. நமக்கு வேண்டியது சுயமரியாதை என்பதுதான். உலகத் திலே உயிரையுங் கூட கொடுத்துப் பெற வேண்டியதாக அவ்வளவு மதிப்பும் விலையும் பெறுமானமுள்ளது சுயமரியாதையே ஆகும். என்றாலும் சிலர் தங்களுக்கு அவ்வார்த்தையே பிடிக்கவில்லை என்றும், சிலர் ஜஸ்டிஸ் கக்ஷி இருக்கும் போது சுயமரியாதை இயக்கம் ஒன்று தனியாக எதற்கென்றும் மதத்திலும் மனிதனுடைய நம்பிக்கை உணர்ச்சியிலும் கை வைப்பது தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றும், சுயமரியாதை இயக்கத்தால் நாஸ்திகம் பரவுவதாகவும், அரசியல் கெட்டுப் போவதாகவும், தேசீயம் தடைப்படு வதாகவும் இன்னும் பல மாதிரியாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.
இவற்றிற்கு நமக்குத் தோன்றிய பதில் சொல்ல ஆசைப்படுகின்றோம். ஒரு இயக்கத்திற்கு ஒரு பெயரை எதற்காக இடுவது என்றும் அது காதுக் கினிமையாக விருப்பதற்காகவா அல்லது இயக்கத்தின் தத்துவத்தையும் கொள்கைகளையும் உணர்த்துவதற்காகவா என்று கேட்கின்றோம். ‘சுய மரியாதை இயக்கம் என்றால், சுயமரியாதை இல்லாதவர்களின் இயக்கம் என்று பிறர் கருதமாட்டார்களா’ என்கின்றார்கள். அப்படியானால் நாம் அவர்களை “சன்மார்க்க இயக்கம் என்றால் அது துன்மார்க்கர்களுடைய இயக்கமாகிவிடுமா? ஜீவகாருண்ய இயக்கம் என்றால் அது ஜீவ காருண்யமில்லாத ‘கசாப்புக் கடைக்காரர்கள்’ இயக்கமென்றாகிவிடுமா? சைவ சித்தாந்த இயக்கம் என்பது ‘அசைவர்கள்’ கூட்டமாகிவிடுமா? அது போலவே ஜஸ்டிஸ் இயக்கம் என்பது இன்ஜஸ்டிஸ்காரர்கள் இயக்கம் என்றாகிவிடுமா?” என்று கேட்கின்றோம். ஒரு சமயம் அப்படியே அர்த்த மாகிவிடும் என்று சொல்வதானாலும் கூட சுயமரியாதை இயக்கம் என்பதற்கு பொருள் சுயமரியாதை இல்லாதவர்கள் அதை அடைய ஏற்படுத்திக் கொண்ட இயக்கம் என்பதில் நமக்கு ஆnக்ஷபனை இல்லை என்றே சொல்லுவோம். இதற்கு உதாரணம், முதலாவது சுயமரியாதை இயக்கம் என்கின்ற பெயர்கள் பிடிக்கவில்லை என்று சொல்லுகின்றவர்கள் தங்களையே அதாவது தங்கள் உருவத்தை கண்ணாடியில் பார்த்து ‘உனக்கு சுயமரியாதை இருக்கின்றதா’ என்பதாக ஒரு கேள்வி கேட்டுக் கொண்டு, தனது உருவம், நடை, உடை, குறி, கொள்கை இவைகளை வெளிப்பார்வையிலும் தனது எண்ணம், நம்பிக்கை, தான் நடந்து கொண்டமுறை, நடந்து கொள்ள இருக்கின்ற கருத்து ஆகிய வைகளை உள்ளுக்குள்ளாகவும் தான் கட்டுப்பட்டிருக்கும் ஆக்ஷி, தான் பின்பற்றிவரும் மதம், மத உணர்ச்சி, மதச் சடங்கு, மதக்கொள்கை ஆகிய வைகளை அனுபோகத்தைக் கொண்டும் மற்றும் தங்களைப் பற்றி மற்ற வர்கள் என்ன பேசிக் கொள்ளுகின்றார்கள் என்பதையும் சற்று யோசித்துப் பார்த்தால் எவ்வளவோ மோசமானவர்களாகவும் எவ்வளவோ சுயநலக் காரர்களாகவும் இருப்பவர்களுக்குங்கூட தங்களின் சுயமரியாதையற்ற தன்மை சூரிய வெளிச்சம் போல் விளங்காமற் போகாது என்றே நினைக் கின்றோம்.

மற்றும் ‘ஜஸ்டிஸ் கட்சி இருக்கும்போது இது எதற்கு’ என்பவர்கள், ஜஸ்டிஸ் கட்சியின் மூலம் 10 வருஷ காலமாய் விளைந்து வந்த உணர்ச்சிகளையும் சுயமரியாதைக் கிளர்ச்சியில் இந்த இரண்டு வருஷத்தில் விளைந்த உணர்ச்சியையும் கவனித்துப் பார்க்க வேண்டுகின்றோம். சமீப காலம் வரை ஜஸ்டிஸ் கக்ஷி அரசியலில் மாத்திரம் மிதவாதம் அமிதவாதம் என்கின்ற முறையில் மிதவாதிகளின் கொள்கைகள் என்பனவற்றைப் பின்பற்றிக் கொண்டு பார்ப்பனரிடமிருந்த உத்யோகங்களைப் பிடுங்கி எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுக்கும் வேலையில் மாத்திரம் ஒருவாறு வெற்றிபெற்று வந்ததே ஒழிய மற்ற வகைகளில் தாராளமாய் முன்னேற முடியாதபடி தடைப்படுத்தப்பட்டே வந்திருந்தது. சுருக்கமாகச் சொல்வோ மானால் பார்ப்பனரல்லாதார் என்கின்ற ஒரு குறிப்பிடத்தகுந்த சமூகம் தமிழ் நாட்டில் இருக்கும் சங்கதியை வெளி மாகாணங்களுக்குத் தெரிய முடியாமல் இருந்தது என்றும், கொஞ்சநஞ்சம் தெரிந்தாலும் அது “தேசத்துரோகிகள், முட்டாள்கள், காட்டு மிராண்டிகள்” என்று பிறர் கருதும் படியாகச் செய்து வந்த எதிரிகளை சமாளிக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததும் யாரும் மறுக்க முடியாது. அன்றியும் அரசாங்கத்தாராலும் இது ஒரு தனி வகுப்புவாதக் கட்சியென்று மாத்திரம் மதிக்கப்பட்டு அவர்களால் தங்கள் சுய நலத்திற்காக இது உபயோகப்படுத்தப்பட்டு வருவதாகவே கருதியும் வந்திருந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் இதே ஜஸ்டிஸ் கட்சியை மதித்திருக்கின்றார்கள் என்பதற்கும், அதற்கு எவ்வளவு கட்டுப்பட்டு இருக்கின்றார்கள் என்பதற்கும், இது வெளி மாகாணங்களில் எவ்வளவு மதிக்கப்பட்டிருக்கின்றது என்பதற்கும் இந்த வருஷத்திய அதாவது 27 – 28ஆம் வருஷத்திய இந்தியா கவர்மெண்ட் ரிப்போர்ட்டைப் பார்த்தால் விளங்காமல் போகாது. சமூக விஷயத்திலும் மக்களின் உணர்ச்சி எவ்வளவு முற்போக்கடைந்திருக்கின்றது என்பதற்கும் மதுரை மகாநாடு முதல் இதுவரை நடந்துவந்த பார்ப்பனரல்லாதார் மகாநாட்டு நடவடிக்கைகளையும் தீர்மானங்களையும் கவனிப்பவர்களுக்கு விளங்காமல் போகாது. அரசியலில் ஜஸ்டிஸ் கட்சியை சர்க்கார் தாசர்கள் என்று நமது எதிரிகள் சொல்லி வந்ததை கோயமுத்தூர் தீர்மானத்தின் மூலமாகவும் அதற்குப்பின் அரசாங்கத்தில் ஜஸ்டிஸ் கட்சிக்குள்ள மதிப்பின் மூலமாகவும்தான் பொது ஜனங்களுக்கு பொய்ப்பித்துக் காட்ட முடிந்தது. ஆகவே சுயமரியாதை இயக்கம் ஜஸ்டிஸ் கட்சிக்கு எவ்வளவு ஆதரவைத் தந்திருக்கின்றது என்பதைக் கவனித்தால் எந்த வகையிலும் அது அவசியமில்லாதது என்று சொல்ல முடியவே முடியாது என்று சொல்லுவோம்.

மத விஷயத்தில் பிரவேசிப்பதாய் சொல்லுவது:-
மதம் என்பது மனிதனின் வாழ்க்கை நலக் கூட்டுறவுக்கும் ஒழுக்கத் திற்கும் தேவையானதே ஒழிய மதத்திற்கு மனிதன் தேவையில்லை என்றே சொல்லுவோம். ஆதலால் இப்போது வாழ்க்கை நலக் கூட்டுறவுக்கும் ஒழுக்கத்திற்கும் ஆதாரமான எந்த மதத்தில் அது பிரவேசித்து என்ன கெடுதியைச் செய்தது அல்லது அதனால் என்ன விளைந்தது என்று யாராவது எடுத்துக்காட்ட முடியுமா என்று கேட்கின்றோம். அன்றியும் கூட்டுறவு நலத்திற்கும் ஒழுக்கத்திற்கும் சமரச உணர்ச்சிக்கும் விரோதமாக எது இருந் தாலும் அதை அழிக்க வேண்டுமா வேண்டாமா என்றும் நாம் அவர்களைக் கேட்கின்றோம்.

மனிதனுடைய நம்பிக்கை உணர்ச்சியை கெடுக்கின்றது என்று சொல்லப்படுவது:-
எந்த விஷயத்தையும் மனிதன் தன் அறிவைப் பொருத்து ஒரு விஷயத்தை நம்ப வேண்டுமா அல்லது குருட்டு நம்பிக்கையால் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்று கேட்கின்றோம். அதுபோலவே நாஸ்திகம் என்பதும் அர்த்தமற்ற வார்த்தையேயாகும் என்பதே நமது அபிப்ராயம். கடவுள் உண்டா இல்லையா என்பதைப் பற்றி வாதம் செய்து முடிவு கட்டுவது சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை அல்லவே அல்லவென்பதையும் அதற்காக அனாவசியமாய் நேரம் செலவழிக்காது என்பதையும் பொது ஜனங்கள் உணரவேண்டுகின்றோம். ஆனால் நமது இயக்கக் கொள்கைகளை நடைபெறவொட்டாமல் தடுப்பதற்காக கடவுள் என்பதைக் கொண்டுவந்து தடையாகவோ முட்டுக்கட்டையாகவோ போடச் சூழ்ச்சி செய்தால் அதற்குச் சற்றும் இடம் கொடுக்கமுடியாது என்பது தான் சுயமரியாதை இயக்கத்தின் உறுதியான கொள்கையாகும். அறிவையும் தன்னம்பிக்கையையும் தன் முயற்சியையும் அன்பையும் ஒழுக்கத்தையும் தன்னகத்தில் கொண்ட எந்த சமயத்தினுடையவும் ஒத்துழைப்பை சுயமரியாதை இயக்கம் வலிய வரவேற்கும் என்றும் உறுதி கூறுகின்றோம்.

பின்னும் அரசியல், தேசீயம் ஆகியவற்றிற்கு சுயமரியாதை இயக்கம் தடையாயிருக்கின்றது என்பது:-
மக்களின் சுயமரியாதைக்காகத் தான், மக்கள் மானத்தோடு வாழ்வதற் காகத்தான் அரசாங்கமும் தேசீயமும் வேண்டுமேயொழிய மற்றபடி கேவலம் இவைகள் மனிதன் வயிறுவளர்க்க மாத்திரம் வேண்டியது என்றால் அதற்காக எந்த அரசாங்கமும் அரசியலும் தேசீயமும் கண்டிப்பாய் வேண்டியதில்லை என்றே சொல்லுவோம். இதுவரை நமது நாட்டில் ஏற்பட்டிருந்த ஏற்பட்டி ருக்கின்ற, எந்த அரசியல் இயக்கமாவது தேசீய உணர்ச்சியாவது மக்கள் சுயமரியாதைக்கேற்றதான திட்டங்களுடன் அமைக்கப்பட்டிருந்ததா யென்று அரசியல்வாதிகளையும் தேசீயவாதிகளையும் கேட்கின்றோம்.

எனவே, உண்மையான சுயமரியாதை உணர்ச்சி மக்களுக்குத் தோன்றிவிட்டால், அதுவே அரசியலையும் தேசீயத்தையும் மற்றும் மத இயலையும் தானாகவே சரிப்படுத்திக் கொள்ளும். அப்போது சுயமரியாதை வேறு, அரசியல் வேறு, தேசீயம் வேறு, மதஇயல் வேறு, ஒழுக்க இயல் வேறு, அன்பு இயல் வேறு என்கின்ற பாகுபாடுகளும் பிரிவுகளும் கண்டிப்பாய் மறைந்தோடி விடும்.

உதாரணமாக, நமக்கு மேலானதும் கீழானதுமான ஒரு வகுப்பு இருக்கக் கூடாது என்று சொன்னால் அந்த வார்த்தையிலேயே நமக்கு மேலானதாக ஒரு அரசாங்கமும் ஆட்சியும் இருக்கக் கூடாது என்பது தானாக உதயமாகிவிடும். அதுபோலவே நமக்கு மேலாகவோ கீழாகவோ ஒரு நாடு இருக்கக் கூடாது என்பதும் தோன்றிவிடும். பொதுவாக சுய மரியாதை என்கின்ற ஒரு இஞ்சினை பலப்படுத்தி சரியாக ஓடத்தகுந்த சக்தியை உண்டாக்கிவைத்து விட்டால் பிறகு அதில் எந்த இயந்திரத்தை (மிஷினை) கொண்டு வந்து அத்தோடு இணைத்து தோல்பட்டையை மாட்டிவிட்டாலும் அது தானாகவே ஓடும். அது இன்னவிதமான இயந்திரமாகத்தான் இருக்க வேண்டும் என்கின்ற கவலை யாருக்கும் வேண்டியதில்லை என்றே சொல்லுகின்றோம். மற்றபடி எல்லா உணர்ச்சிகளையும் விட சுயமரியாதை உணர்ச்சியே மேலானதும் மதிக்கத் தகுந்ததுமாகும் என்பதின் தத்துவத்தை உணர்ந்தவர்களுக்கு இந்த இயக்கத்தில் உண்மையான சந்தேகமே தோன்ற இடம் இருக்காது. அது இன்றைய தினம் வேண்டுமானால் ஏதோ ஒரு சிறு வகுப்பாருடன் போராடத் தோன்றியதாகத் தோன்றலாம். இதுவே அல்ல அதன் லட்சியம். ஒரு இயந்திரத்தை சுழற்றும்போது முதலில் சுற்றும் சிறுவேகம் போல் இன்று ஒரு சிறு வகுப்பார் உணர்ச்சியோடு போராடுவதாகக் காணப்படுவது. மற்றபடி பின்னால் அது உலகத்தையே ஒன்றுபடுத்த உலக மக்களையே ஒரு குடும்ப சகோதரர்களாகச் செய்யும் முயற்சியின் போதுதான் அதன் உண்மைச் சக்தியும் பெருமையும் வெளியாகும்.

அன்றியும் இது கிளம்பிவிட்டால் யாராலும் இதை அழிக்கவோ அல்லது சற்றாவது அடக்கி வைக்கவோ கண்டிப்பாய் முடியாது என்பதுடன் அடிக்க அடிக்க எழும்பும் பந்துபோல் எதிர்க்க எதிர்க்க வளர்ந்து கொண்டே போகும் சக்தி உடையது என்பதே நமது உறுதி. அன்றியும் எந்த விதத்திலும் எல்லோரும் எவ்வித அபிப்ராயமுடையவர்களும் இது இன்றைக் கில்லாவிட்டாலும் நாளைக்காவது சேர்ந்துதான் ஆக வேண்டும் என்பதுவும் நமது பலமான உறுதியாகும். அன்றியும் இவ்வியக்கம் ஒவ்வொன்றையும் பெரிதும் வேண்டாம் என்று சொல்லும் விரக்தியைப் பற்றி இருக்கின்றதே ஒழிய, வேண்டும் என்று சொல்லும் படியான ஆசையைப் பற்றவில்லை. ஆதலால் இது யாரும் ஏமாற்றமடைவதற்கு இடமேயில்லை. அன்றியும் இதற்குள் போட்டிகளுக்கும் இடமில்லை.

மற்றபடி இதைப்பற்றி சர்க்கார் எப்படி நினைத்துக் கொண்டாலும் நமக்கு அதைப்பற்றி சற்றும் கவலையில்லை. உலக வாழ்க்கையில் இறங்கி ஆசையிலீடுபட்டு உழலும் சம்சாரவாளிகளிடமிருந்து நமக்கு யாதொரு உதவியும் ஒத்துழைப்பும் தேவையில்லாததாலும், பெரிதும் பரிசுத்தமானதும் சுயநலமற்றதும் எதற்கும் எவ்வித தியாகத்திற்கும் தயாராயிருக்கும் இளங்காளைகளிடத்திலும் இளம் கன்னிகைகளிடத்திலும் திக்கற்றவர் களிடத்திலும் நமது இயக்கத்திற்கு பெரிதும் உதவி எதிர்பார்க்கின்ற படியாலும் அவர்களும் தாராளமாய் உதவி அளிக்கத் தயாராய் மேல்விழுந்து வருவதாலும் நாமும் இதன் முடிவைப் பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் கடமையையே பின்பற்றிக் கொண்டிருப்பதாலும் இவ்வியக்கத்தின் மூலம் எவ்வித நஷ்டமாவது கஷ்டமாவது அடைய வேண்டி வருமோ என்கின்ற எண்ணமே சிறிதும் கொள்ளாமல் இருக்கின்றோம்.

குடி அரசு – தலையங்கம் – 17.02.1929







தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு - தோழர் பெரியாரின் அழைப்பு

 

தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு


சுயமரியாதை இயக்கம் தோன்றிய சுமார் மூன்று வருஷ காலத்திற்குள் தமிழ்நாட்டில் அது அநேகமாக ஒவ்வொருவருடைய கவனத்தையும் இழுத்திருப்பதோடு இவ்வியக்க விஷயமாய் அநேகரை கூர்ந்து கவனிக்கும் படிக்கும் கவலைப்படும் படிக்கும் செய்து வந்திருக்கின்றது என்று சொல்லுவது மிகையாகாது.

இவ்வியக்கம் ஆரம்பமானது முதல் இதற்கு அநேக தத்துக்கள் ஒன்றின்பின் ஒன்றாய் வந்து கொண்டே இருந்தாலும் ஒருவாறு அவ்வளவையும் சமாளித்து வளர்ந்து கொண்டு வருவதை யாரும் மறுக்க முடியாது.




இதற்கு உதாரணம், இவ்வியக்க ஆரம்ப காலத்தில், காங்கிரஸ் துவேஷமென்றும், பிறகு பார்ப்பன துவேஷ இயக்கமென்றும், பின்னால் தேசத்துரோக இயக்கமென்றும், பிறகு சர்க்கார் பிரசார இயக்கமென்றும், பிறகு வைணவ துவேஷ இயக்கமென்றும், பிறகு சைவத் துவேஷ இயக்கமென்றும், பிறகு நாஸ்திக இயக்கமென்றும், பிறகு நிரீச்சுவரவாத இயக்கமென்றும் மற்றும் அநேகர் அநேக விதமாய் அதன்மீது பழி சுமத்தி அதற்கு பொது ஜனங்களிடம் எவ்வளவு தூரம் வெறுப்பும் துவேஷமும் ஏற்படச் செய்ய வேண்டுமோ அவ்வளவு தூரம் ஏற்பட வேண்டி, பலவழிகளிலும் பெரு முயற்சிகள் செய்தாய் விட்டது என்றாலும் இவ்வளவு செய்தும், இதன் முன்னேற்றம் சிறிதும் குந்தகப்படாமல் மேலும் மேலும் முன்னேறுவதைப் பார்க்கின்றபோது இவ்வியக்க எதிரிகள் வேறு சமாதானம் சொல்ல முடியாமல் “இது இனி எத்தனை நாளைக்கு நிற்கப் போகின்றது, அப்பேர்ப்பட்ட ஒத்துழையாமை இயக்கமே பழங்கதையாய் விட்டது, இதுதானா வாழப் போகின்றது? ஏதோ பார்ப்பனர்கள் மீது நமது நாட்டு மக்களுக்கு இருக்கும் துவேஷத்தினால் சிலர் ஆதரிக்கின்றார்கள். நாயக்கருக்கு இருக்கும் சொந்த செல்வாக்குக்கும் அரசாங்க செல்வாக்குக்கும் பயந்து சிலர் ஆதரிக் கின்றார்கள், இதெல்லாம் எத்தனை நாளைக்கு நிற்கும்?” என இம்மாதிரியாக சொல்லிக் கொள்வதன் மூலம் தங்கள் பொறாமைகளை ஒருவாறு திருப்தி செய்து கொள்வதோடு இரகசியமாய் தங்களால் கூடிய கெடுதியையும் செய்து கொண்டே வருகிறார்கள் என்பதும் இவ்வளவையும் தாண்டித் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு முக்கிய இடங்களிலும் மற்றும் வெளியிடங்களிலும் சுயமரியாதைச் சங்கங்களும் மகாநாடுகளும் பிரசாரங்களும் நடந்து வருவதும் அதன் கொள்கைகளில் பல சற்றும் எதிர்ப்பின்றி காரியத்தில் அனுஷ்டிக்கப்படுவதுமே போதுமான உதாரணமாகும்.

அதுமாத்திரமல்லாமல், இப்போது எந்தவிதமான மகாநாடு எங்கு நடந்தாலும் சுயமரியாதைக் கொள்கைகள் கொண்ட தீர்மானங்களேதான் நிறைவேற்றப்பட்டு வருவதும் சமூக மகாநாடு, சமரச மகாநாடு, பெண்கள் மகாநாடு, பார்ப்பனரல்லாத வாலிபர் மகாநாடு, சீர்திருத்த மகாநாடு ஏன் சில அரசியல் மகாநாடுகள் – ஆகியவைகளில் எல்லாம் மேல்கண்ட தீர்மானங் களே நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இவ்வியக்கத்திற்கு ஆதாரமாக ருஷியா, ஜப்பான், சைனா, துருக்கி, ஈஜிப்ட், ஆப்கனிஸ்தானம் முதலிய நாடுகள் வழிகாட்டியும் வருகின்றதைப் பார்த்தால் இவ்வியக்கம் தளர்ந்து விடும் என்றோ, மறைந்துவிடும் என்றோ, நினைப்பவர்கள் கண்டிப்பாய் ஏமாந்து விடுவார்கள் என்பது தெளிவாகாமல் போகாது. அன்றியும் நமது நாட்டு அரசியல் தலைவர் கள் என்பவர்களும் அநேகமாக இக்கொள்கைகளை உச்சரிப்பதன் மூலமா கவே செல்வாக்கு பெறுவதையும் பார்க்கும்போது இக்கொள்கைகளின் தத்துவம் எவ்வளவு மேன்மையானது என்பதும் விளங்காமல் போகாது. இவ்வளவும் இருந்தாலும் இவ்வியக்கத்திற்கு ஒரு நிலையான ஸ்தாபனமும் பிரசார பலமும் ஏற்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமான வேலை என்று நமக்குப் படுகின்றது. மேல்நாடுகளிலும் ஒவ்வொரு தேசத்திலும் இக்கொள்கைகள் கொண்ட இயக்கம் அதிக பலமான அஸ்திவாரத்தின் மீது கட்டப்பட்டு வெகு விரிவான முறையில் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது. உதாரணமாக,




லண்டனில் சு.ஞ.ஹ. என்னும் பகுத்தறிவாளர்கள் சங்கமும் அமெரிக்காவில் பிரீ திங்கர்ஸ் அசோசியேஷன் என்னும் தாராள எண்ணக் காரர்கள் (அறிவு எவ்வளவு தூரம் செல்லுமோ அவ்வளவு தூரம் செலுத்துவது) என்கிற சங்கமும், ருஷியாவில் ஆண்டி காட் சொசைட்டி (கடவுள் உற்சவம் வணக்கம் ஆகியவைகள் அவசியமில்லை) என்கின்ற (ருஷிய கவர்ன்மெண்டாராலும் ஆதரிக்கப்பட்ட) சங்கமும் சைனாவில் யங் சைனீஸ் அதாவது வாலிப சைனாக்காரர்கள் என்கின்ற சங்கமும் மற்றும் ஆப்கானிஸ்தானம் துருக்கி முதலிய சர்க்காரால் அநேக இடங்களில் குருட்டு நம்பிக்கைகளையும் மூடப்பழக்க வழக்கங்களையும் ஒழிக்கும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன. அதுபோலவே நமக்கும் நமது அரசாங்கம் அடியோடு நமது இயக்கத்தின் சுவாதீனத்திற்கு வருமளவும் அதாவது சுயமரியாதை அரசாங்கம் ஏற்படும்வரை நமக்கு தக்க ஆஸ்பதம் வேண்டியிருக்கின்றது. அநேகமாய் இவற்றை உத்தேசித்தே அடுத்தமாதம் 2-வது 3-வது வார வாக்கில் செங்கல்பட்டில் தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அம்மகாநாட்டுக்கு சைமன் கமீஷனும் அழைக்கப்பட்டிருக்கின்றது. மற்றும் இம்மகாநாட்டில் அநேக பெரியார்களும் செல்வாக்குக்காரர்களும் உண்மைத் தொண்டர் களும் செல்வந்தர்களும் பங்கெடுத்துக் கொள்ள சம்மதித்தும் இருக்கின் றார்கள். இதுவரை சுமார் 10 ஆயிரம் ரூபாய் போல வசூலும் செய்யப் பட்டிருக்கின்றது.

திருவாளர்கள் ராவ் பகதூர் எம்.கெ.ரெட்டியார், சி.ஜயராம நாயுடுகார், கே.வி. மேனன், கண்ணப்பர் முதலியவர்களும் மற்றும் பல பிரமுகர்களும் இவ்வேலையில் பூரணமாய் ஈடுபட்டு உழைத்தும் வருகின்றார்கள். சுமார் இருபத்தைய்யாயிரம் மக்களுக்குக் குறையாமல் கூடக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இம்மகாநாட்டிற்கு வந்து சில தீர்மானங்களை எதிர்க்கவேண்டும் என்கின்ற எண்ணத்தோடு சிலர் இரகசியமாய் கக்ஷி சேர்ப்பதாகவும் தெரிய வருகின்றது. எப்படியானாலும் சரி, நமக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. நமது நிலைமையையும் உண்மை என்று நாம் நினைப்பதையும் வெளிப்படுத்தி அதற்கு ஏற்ற நடவடிக்கைகள் நடத்த ஒரு பலமான ஸ்தாபனமும் பிரசாரமும் ஏற்படுத்த வேண்டும் என்பது தான் நமது கவலை. ஆதலால் நாட்டின் nக்ஷமத்திலும் மக்களின் முன்னேற்றத் திலும் கவலையுள்ள மக்கள் யாவரும் அங்கு வந்து கூடி தங்கள் கடமையைச் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். ஒவ்வொருவரும் தங்கள் மனைவி மக்களுடனேயே வரவேண்டியது மிகவும் அவசியமானது என்பதை மிகவும் அழுத்தமாய் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

தனிப்பட்ட ஸ்திரீகளும், தங்களை விதவைகள் என்றோ வேசிகள் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்களும் அவசியம் வரவேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றோம். தவிர, அரசாங்க உத்தியோகஸ்தர்களும் அதிகாரிகளும் கண்டிப்பாய் வரவேண்டியது மிகவும் அவசியமாகும் என்று தெரிவிப்பதோடு இந்த மகாநாடு எவ்வழியிலும் அரசியல் மகாநாடு என்ப தல்ல என்றும் அவர்களுக்கு உறுதி கூறுகின்றோம். அன்றியும் அரசாங்க சட்டமெம்பர் திவான்பகதூர் கனம் கிருஷ்ண நாயர் அவர்களும் மற்றும் பல பெரிய அதிகாரிகளும் வரச் சம்மதித்து இருக்கின்றார்கள்.
முக்கியமாக இம்மகாநாட்டில் யோசித்து தீர்மானிக்கப்படும் விஷயங் கள் என்னவென்றால், சமத்துவம், சமஉரிமை, சமசந்தர்ப்பம், சிக்கனம், அன்பு, இரக்கம், ஒழுக்கம் ஆகியவைகள் ஏற்படவும், குருட்டு நம்பிக்கை, மூடப் பழக்க வழக்கம், தீண்டாமை, பெண் அடிமை ஆகியவைகள் எடுபடவும் எளியோரை வலியோர் அடக்கி ஆளாமலும், பாமரர்களை படித்தவர்கள் ஏமாற்றாமலும், ஏழைகளை செல்வந்தர் கொடுமைப்படுத்தாமலும் இருப்ப தற்கும் பகுத்தறிவு வளர்ச்சி பெறவும் தன் முயற்சியில் நம்பிக்கை உண்டாக வுமான தன்மைகள் போன்ற விஷயங்களே தான் அங்கு நடைபெறும். ஆகையால் இவைகளை அரசியல் விஷயமென்று யாரும் சொல்ல முடியாது. அரசியல் விஷயம் என்று ஏதாவது சொல்ல வந்தால் அது மேல்கண்ட விஷயங்கள் நிறைவேறி அமுலுக்குவர அரசாங்கத்தின் உதவி ஏதாவது வேண்டி யிருந்தால் அந்த அளவுக்கு அதுவும் அரசாங்கத்தின் ஆதரவை எதிர்பார்க்கும் அளவுக்கு ஏதாவது பேசப்படுமே ஒழிய வேறு ஒன்றும் நடை பெறாது என்று உறுதி கூறுவோம்.
இந்த 3,4 வருஷத்திய மகாநாடுகளில் இதுவே முக்கியமான மகாநாடாக இருக்கும். அன்றியும் இனி நமது பிரசாரமும் வேலைத் திட்டமும் எப்படி இருக்க வேண்டும் என்பதும் இம்மகாநாட்டில் தான் முடிவு செய்யப் படும். ஆதலால் செங்கற்பட்டு மகாநாட்டிற்கு எல்லோரும் முக்கியமாய் வாலிபர்களும், பெண்களும், தாழ்த்தப்பட்டவர்களும் அவசியம் வர வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகின்றோம்.

குடி அரசு – தலையங்கம் – 13.01.1929

Thursday, 18 May 2017

சுயமரியாதை சுய ஆட்சி உரையாடல் - சித்திரபுத்திரன் (பெரியார்) - 22.06.1930

சுயமரியாதையும் சுய ஆட்சியையும் பற்றி ஒரு சுய ஆட்சிப் பார்ப்பானுக்கும் சுயமரியாதை பார்ப்பனரல்லாதாருக்கும் சம்பாஷணை


சுய ஆட்சி:- என்ன சுயமரியாதை! உன்னை ஒரு வாரமாகக் கண்ணிலேயே காண முடியவில்லை. எங்கு போய் விட்டாய்?
சுயமரியாதை:- ஓ! சுய ஆட்சியே! நான் ஈரோட்டுக்குப் போயிருந்தேன்.

சு. ஆ:- ஈரோட்டில் ஒரு வாரமாக என்ன வேலை உனக்கு?

சு. ம:- ஈரோட்டில் சுயமரியாதை மகாநாடு நடந்ததல்லவா? அதற்காக ஒரு வாரம் முன்னேயே போய் மகாநாட்டு வேலையில் கலந்து கொண்டு என்னால் கூடியதைச் செய்து கொண்டிருந்தேன்.

சு. ஆ:- ஆமா! ஆமா!! நான் கூட கேள்விப் பட்டேன். சுயமரியாதை மகாநாடு நிரம்ப நன்றாய் நடந்ததாகவும் மூன்று நான்கு ஆயிரம் பேருக்கு மேலாகவே வந்திருந்ததாகவும், பெண்களும், ஆண்களும், ஆதி திராவிடர்களும் கூட ஏராளமாய் வந்திருந்ததாகவும் கேள்விப் பட்டேன்.

சு. ம:- ஆதி திராவிடர்கள் வந்திருந்தது மாத்திரம்தானா நீ கண்டாய்? சமையல் பரிமாறினதில் கூட ஆதி திராவிடர்கள் கலந்திருந்தார்கள். மற்றொரு சமையல் இடத்தில் 2, 3 ஆதி திராவிடர்களும் ஒரு ஆதி திராவிடப் பெண்ணும் மாத்திரமேதான் சமையல் செய்து பரிமாறினார்கள். மகாநாட்டுத் தலைவர் திரு. எம்.ஆர். ஜெயகருக்கும் அவருடன் கூட இறங்கி இருந்த கனவான்களுக்கும் ஆதிதிராவிட சமையல்தான் நடந்தது.

சு. ஆ:- பிரதிநிதிகளுக்கு சமையல் செய்த சமையல்காரர்கள் யார்? மதுரை, கோயமுத்தூர் கான்பரன்சுகள் போல சைவர்கள்தானே?

சு. ம:- இல்லவே இல்லை. ஒரு சைவனையாவது சமையல் வீட்டிற்குள் விடவே இல்லை.

சு. ஆ:- பின்னை யார் சமையல் செய்தார்கள். பிராமணனா?

சு. ம:- சைவனுக்கு இடமில்லையென்றால், பார்ப்பானுக்கு அங்கு இடம் கிடைத்து விடுமா?

சு. ஆ:- பின் யார்தான் சமையல் செய்தார்கள்?

சு. ம:- விருது நகரிலிருந்து வரவழைக்கப் பட்டிருந்த முதல் தரமான நாடார் சமையல்காரர்களே சமையல் செய்தார்கள்.

சு. ஆ:- அவர்கள் சமையல் நன்றாயிருந்ததா? ஜனங்கள் சாப்பிட் டார்களா?

சு. ம:- நன்றாயிருந்ததா என்றா கேட்கின்றாய். மகாநாட்டிற்கு பார்ப்பன சமையற்காரனையாவது, சைவ சமையற்காரனையாவது வைத்திருந்தால் குறைந்தது ஒரு பத்து மூட்டை அரிசியாவது குறைந்திருக்கும். நாடார்களை வைக்கப் போக மூன்று நான்கு நாளில் 40, 50 மூட்டை அரிசியும் தீர்ந்து விட்டது.

சு. ஆ:- அது என்ன அப்படி சொல்லுகின்றாய்?

சு. ம:- அனேகமாய் ஒவ்வொரு ஆளும் ஒன்றரை ஆள் சாப்பாடு சாப்பிட்டார்கள். இது நான் சொல்லுவதல்ல, பிரதிநிதிகளே சொன்னது. ஏனென்றால் சாப்பாடு அவ்வளவு சுத்தமாகவும் ருஜியாகவும் இருந்ததோடு வெகு அன்பாகப் பரிமாறினார்கள் என்று சொல்லிக் கொண்டார்கள்.

சு. ஆ:- எல்லா பிரதிநிதிகளும் சாப்பிட்டார்களா?

சு. ம:- எல்லா பிரதிநிதிகளுமே சாப்பிட்டார்கள். இன்னம் ஒரு விசேஷம் என்ன தெரியுமா? ஆதிதிராவிட வாலண்டியர்கள் சாப்பாடு பரிமாறி னார்கள். மற்றும் மகமதியர் வாலண்டியர்களும், கிறிஸ்தவ வாலண்டியர்களும் பரிமாறினார்கள். திருப்தியாகவே எல்லோரும் சாப்பிட்டார்கள்.

சு. ஆ:- அப்படித்தான் இருக்க வேண்டும். எனக்கு இந்த விஷயம் காதில் கேழ்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாயிருக்கின்றது.

சு. ம:- நீங்கள் எல்லாம் வாயில் சந்தோஷப்பட்டு விட்டு போகின்றவர் களே தவிர காரியத்தில் வரும் போது மறைந்து கொள்ளுகின்றவர்கள் தானே?

சு. ஆ:- அதென்ன அப்படிச் சொல்லுகின்றாய்

சு. ம:- சொல்லுவதென்ன. நீதான் சொல்லேன் பார்ப்போம். எந்த அரசியல் கான்பிரன்சிலாவது இன்றைய வரை பார்ப்பனர்களைத் தவிர வேறு வகுப்பார்களை வைத்து சமையல் செய்திருக்கின்றீர்களா?

முதலாவது சமபந்தியாய் வைத்து சாப்பாடு போட்டிருக்கின்றீர்களா?

ஒத்துழையாமையின் போதுகூட பார்ப்பன சமையற்காரர்கள் தான் - அதற்கு பிறகு கூட பார்ப்பன சமையற்காரர்கள் தான் - யாராவது கேட்டால் அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று சொல்லி ஏமாற்றிவிடுவீர்கள்.

காங்கிரஸ் முதலிய கூட்டங்களுக்கு வேறு மாகாணங்களுக்கு போனால் கூட அவ்விடத்திற்கும் இங்கிருந்தே பார்ப்பன சமையல்காரர்களைக் கூட்டிக் கொண்டு போய் அங்கும் வேறு வேறாக உட்கார வைத்துச் சாப்பாடு போட்டு அவமானப் படுத்துவீர்கள். வாயில் மாத்திரம் சமத்துவம், சுதந்திரம், சுயராஜ்ஜியம், பூரண சுயேச்சை பேசுவீர்கள்.

சு. ஆ:- கொஞ்சம் கொஞ்சமாகத் தானே ஆக வேண்டும். ஒரே நாளில் ஆய்விடுமா? அதன் பாட்டுக்கு அதுவும் நடக்க வேண்டியது தான். சுய ஆட்சி பாட்டிற்கு அதுவும் வரவேண்டியதுதான். சரிசமமாய் உட்கார்ந்து சாப்பிடுவதற்கும் சுய ஆட்சிக்கும் சம்பந்தம் வைத்துக் கொண்டிருந்தால் முடியுமா? இது இன்று நேற்று ஏற்பட்ட விஷயமா? ஏதோ ஒரு நன்மைக் காகத்தான் பெரியவர்கள் இந்த ஏற்பாடுகளெல்லாம் செய்து வைத்திருக் கிறார்கள். அதை அழிப்பது அவ்வளவு சரியான காரியமாய் விடாது. இருந்தாலும் மெள்ள மெள்ளச் சரிப்படுத்த முயற்சிக்க வேண்டியதுதான். அது எப்படியோ இருக்கட்டும். இப்பொழுது சாப்பாட்டிற்கு என்ன அவசரம் வந்து விட்டது? மகாநாட்டு மற்ற நடவடிக்கைகளைப் பற்றி பேசுவோம் - மகாநாடு ரொம்பவும் நன்றாய் நடந்ததென்று தான் சொன்னார்கள். ஆனால் என் அபிப்பிராயத்தில் ஒரே ஒரு தவறு தான் நடந்து விட்டது என்று படுகிறது.

சு. ம:- அதென்ன தவறு?

சு.ஆ:- உப்புச் சத்தியாக்கிரகத்தை பாராட்டியும் கஷ்டப்பட்டவர்களுக்கு அனுதாபம் காட்டியும் ஒரு தீர்மானம் போட்டிருந்தால் மற்ற காரியங்கள் எல்லாம் எப்படி இருந்தாலும் மறைந்து போயிருக்கும். அதில் தான் சற்றுத் தவறி விட்டீர்கள்.

சு. ம:- அப்படியா நினைக்கின்றாய்! எனக்கு அந்த காரியத்தினால் தான் மகாநாடு ரொம்ப சரியாய் நடந்து கொண்டது என்பதாகப் படுகின்றது. மகாநாடு அந்தத் தீர்மானங்களைச் செய்திருந்ததேயானால் கண்டிப்பாய் மகாநாட்டின் யோக்கியதையும் குறைந்திருக்கும். சுயமரியாதை இயக்கத்திற்கும் சாவுமணி அடித்திருக்கும்.

சு. ஆ:- அதென்ன அப்படிச் சொல்லுகின்றாய்?

சு. ம:- ஆம், அப்படித்தான் ஜஸ்டிஸ் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்தால் எப்படி அந்தக் கட்சிக்கு சாவுமணியோ அதுபோல் சுயமரியாதை இயக்கத்தில் அரசியல் சம்மந்தமான எந்தப் பிரச்சினையை கொண்டு வந்தாலும் இதற்கு சாவு மணியேயாகும். இவ்வியக்கத்தின் நாணயமே அடியோடு போய்விடும்.

சு. ஆ;- இதனால் என்ன கெடுதி வந்து விடும்?

சு. ம:- சுயமரியாதை இயக்கத்திற்கு எப்படி கடவுளைப் பற்றி கவலை இல்லையோ அதுபோலவே சுய ஆட்சியைப் பற்றியும் கவலையே இல்லை. சுய ஆட்சி வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி. ஏனெனில் கடவுள் என்கின்ற வார்த்தையைப் போலவே சுய ஆட்சி என்கின்ற வார்த்தையும் அர்த்தமற்றதாகும். வயிற்றுப் பிழைப்புக்கும், சுயநலத்திற்கும் கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு இருப்பது போலவே சுய ஆட்சி பெயரையும் சிலர் சொல்லிக் கொண்டிருப்பதைத் தவிர வேறு இல்லை. ஆகையால் சுய மரியாதைக்காரருக்கு எப்படி மக்களுக்கு கடவுள் உணர்ச்சியும் கடவுள் கவலையும் போக வேண்டும் என்கின்ற கவலை இருக்கின்றதோ, அது போலவே சுய ஆட்சி உணர்ச்சியும் கவலையும் போக வேண்டும் என்கின்ற கொள்கையும் உண்டு. ஆதலால் அவைகளைப் பற்றி மகாநாடு கவனிக் காததே நல்ல காரியமாகும்.

சு. ஆ:- அப்படி ஆனால் மகாத்மா காந்தி கூடவா அர்த்தம் தெரியாமல் செய்கின்றார் என்கின்றாய்?

சு. ம:- அதென்ன மகாத்மா செய்வதாயிருந்தால் எல்லாக் காரியமும் சரியானதாய் இருக்கும் என்பது உனது அபிப்பிராயமோ? மகாத்மாவை சுயமரியாதைக்காரர்கள் ஒப்புக் கொள்வதில்லை என்பது உனக்குத் தெரியாதா?

சு. ஆ:-அதென்ன இந்த சங்கதி எனக்கு அதிசயமாயிருக்கிறது?

சு. ம:- அதிசயமென்ன? மகாத்மா என்கின்ற பட்டத்தை கூட நாங்கள் சேர்ப்பதில்லை. அது உனக்குத் தெரியாதா?

அவர் உலகத்திற்கு பெரியவராய் இருக்கலாம் எங்களைப் பொருத்தவரை நாங்கள் அவர்கள் கொள்கையை ஒப்புக் கொள்ள முடியாது. வெள்ளைக்காரர்கள் வேண்டுமானாலும் அவரை ஒப்புக் கொள்ளும்படியான காலம் வரலாம். சுயமரியாதைக்காரரான நாங்கள் அவரை எங்கள் பிரதிநிதி என்று ஒரு காலமும் ஒப்புக் கொள்ளவே மாட்டோம். ஏனென்றால் எங்கள் கொள்கைப்படி அவரும் ஒரு மூட நம்பிக்கைக்காரரே யாவார். சுருக்கமாகச் சொன்னால் பார்ப்பன ஆதிக்கத்திற்கு தாசர் ஆவார். அவரது ராமன், சீதை, அரிச்சந்திரன், கிருஷ்ணன், நாராயணன் முதலியவர்கள் எல்லாம் நமக்கு பிடிக்காதவர்கள். அன்றியும் அவரது கடவுள், செயல், ஜாதி உணர்ச்சி, வருணாசிரமக் கொள்கை, மனுதர்ம சாஸ்திர பக்தி, கீதை உபாசனை முதலான வைகள் எல்லாம் எங்களுக்கு அடியோடு உதவாது. இந்த விஷயங்களில் அவர் எப்படி மூட நம்பிக்கையும் பார்ப்பனீயதாசத் தன்மையும் கொண்டு இருக்கிறாரோ அதே மாதிரிதான் ராஜரீக விஷயத்திலும் மூட நம்பிக்கையும் பார்ப்பன ஆதிக்கதாசத் தன்மையும் கொண்டு இருக்கிறார் என்று எண்ணு கின்றோம். ஆதலால் அவரது கொள்கைகளை யெல்லாம் நாம் ஒப்புக்கொள் ளவும் முடியாது. பின்பற்றவும் முடியாது. அதோடு அதில் பாமர மக்கள் ஏமாந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் நமது கடனாகும்.

சு. ஆ:- நீ இப்படிச் சொல்லி விட்டதினாலேயே எல்லோரும் உன் பேச்சை கேட்டு விடுவார்களா?

சு. ம: - அது வேற சங்கதி. ஜனங்கள் கேட்பார்களா இல்லையா என் பதை நாங்கள் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. நாங்கள் சொல்வது சரியா தப்பா என்பதை யோசிக்க வேண்டியதைத் தவிர மற்றவர்கள் கேட்பார்களா? கேட்க மாட்டார்களா? என்பதல்ல நாங்கள் கவனிக்க வேண்டியது. உதாரணமாகச் சங்கராச்சாரியை நாங்கள் லோக குரு என்று ஒப்புக் கொள்வ தில்லை. இந்து மதம் என்று ஒரு மதம் இருப்பதாக நாங்கள் ஒப்புக் கொள்வ தில்லை. சாமி செயல், கோவில் உற்சவம் இவைகளை யெல்லாம் நாங்கள் ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் பத்துலட்சக்கணக்கான மக்கள் இவைகளை ஒப்புக் கொண்டு கூத்தாடுகிறார்கள். அதனாலேயே நாங்கள் ஒப்புக் கொள்ளாதது தப்பிதமாய் விடுமா? அல்லது அவர்கள் ஒப்புக் கொள்வது சரியானதாகி விடுமா?

சு. ஆ: - சுயராஜியமும் வேண்டாம். கடவுளும் வேண்டாம். சங்கராச் சாரியும் வேண்டாம். மகாத்மாவும் வேண்டாம். ஒன்றும் வேண்டாம். என்கின்றீர்களே பின்னை எதற்காகத்தான் இவ்வளவு ரூபாய் செலவு செய்து மகாநாடு நடத்தினீர்கள்.

சு. ம: - அப்படிக் கேள். எங்களுக்கு சுயமரியாதை வேண்டும். பகுத்தறிவு வேண்டும். சமத்துவம் வேண்டும்.

சு. ஆ: - இப்பொழுது சுயமரியாதை இல்லாமல் என்ன விதமான அவமரியாதை அனுபவிக்கிறீர்கள்?

சு. ம: - என்ன அவமரியாதை என்றா கேட்கிறாய்? உனக்கு உண்மையிலேயே தெரிய வில்லையா?

சு. ஆ: - தெரியவில்லையே.

சு. ம: - தெரியச் சொல்லுகிறேன் கேள் - முதலில் நீ யார்? சொல்லு பார்ப்போம்.

சு. ஆ: - நான் ஒரு பிராமணன்.

சு. ம: - நான் யார்? சொல்லு பார்ப்போம்.

சு. ஆ: - நீ ஒரு பிராமணனல்லாதவன்.

சு. ம: - அப்படிச் சொன்னால் முடியாது. உனக்கு நீ பிராமணன் என்கின்ற பட்டம் வைத்துக் கொண்டது போல் எனக்கு அதே முறையில் இருக்கும் பட்டத்தைச் சொல்லு.

சு. ஆ: - அதற்கென்ன சூத்திரன் என்று சொல்லுவார்கள்.

சு. ம: - நான் சூத்திரனாயிற்று. சரி. திரு. எம். சி. ராஜா யார் சொல் பார்ப்போம்.

சு. ஆ : - அவர் ஆதி திராவிடர்.

சு. ம: - அப்படிச் சொன்னால் முடியாது. நீ பிராமணன். நான் சூத்திரன் என்பது போல் அவருக்குள்ள பட்டத்தையும் சொல்லு.

சு. ஆ: - பறையர் அல்லது பஞ்சமர் என்று சொல்லுவார்கள்.

சு. ம: - சரி எங்களை நீங்கள் தொடுவீர்களா?

சு. ஆ: - தொட்டால் என்ன ஒட்டிக் கொள்ளுமோ?

சு. ம: - அதெல்லாம் தெரியாது. நீங்கள் அதாவது உங்கள் ஜாதியார் எங்களையும் எம்.சி. ராஜாவையும் தொடுவார்களா?

சு. ஆ: - பெரியவர்கள் தொடமாட்டார்கள்.

சு. ம: - ஏன் தொடமாட்டார்கள்?

சு. ஆ: - என்னமோ வெகுகாலமாக அப்படி ஒரு வழக்கம் ஏற்பட்டு விட்டது. அது நாங்கள் ஏற்படுத்தியதா நீங்கள் ஏற்படுத்தியதா?

சு. ம: - யாரோ ஏற்படுத்தி இருக்கட்டும் அதைப் பற்றி கவலையில்லை. ஏன் தொட மாட்டார்கள் அதைச் சொல்லு.

சு. ஆ: - பிராமணாள் சற்று மேல் ஜாதி. சூத்திரன் பஞ்மன் என்பது சற்று கீழ் ஜாதி என்று ஏற்படுத்தி விட்டார்கள். அதனால் தொடக் கூடாது என்றும், தொட்டால் தீட்டு என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் எனக்கு அந்த வித்தியாசம் இல்லை.

சு. ம: - உனக்கு இருந்தாலும் சரி இல்லா விட்டாலும் சரி முன் சொன்ன அந்தக் கீழ் ஜாதியில் எங்களை சேர்க்கப் பட்டிருப்பதே தான் எங்களுடைய சுயமரியாதைக் குறைவுக்கு முதல் உதாரணம். இப்படி இன்னும் எத்தனை வேண்டுமானாலும் சொல்லுவேன்.

சு.ஆ:- அப்படியானால் உங்களுக்குள் அந்த வித்தியாசம்இல்லையா?

சு. ம: - இருந்தாலும் இருக்கலாம். அதுவும் உங்களால் வந்த வினை தான். இருந்தாலும் சுயமரியாதை இயக்கத்தில் அந்த வித்தியாசமே இருக்கக் கூடாது, என்பது தான் முதற் கொள்கை. அதற்கு உதாரணமாகவே தான் சாப்பாடு விஷயத்தில் எல்லோரும் சமமாயும் மேல், கீழ் என்கின்ற ஜாதி வித்தியாசம் இல்லாமலும் சாப்பாடு கொடுப்பனை கொள்வனை ஆகிய காரியங்கள் நடந்து வருகின்றது.

சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய உரையாடல் - ”குடி அரசு” 22.06.1930