Sunday 1 October 2017

மகாத்மா காந்தியும் வருணாசிரமும் II – 28.08.1927

மகாத்மா காந்தியும் வருணாசிரமும் II


“மகாத்மா காந்தியும் வருணாசிரமமும்” என்னும் விஷயமாய் இரண்டு வாரங்களுக்கு முன் “குடி அரசி”ல் மகாத்மாவின் வருணாசிரம அபிப்பி ராயத்தை கண்டித்தெழுதியது நேயர்கள் பார்த்திருக்கக்கூடும். அதன் பிறகு பலர் பல பல விதமாக நமக்கு கடிதம் மூலமாய், மகாத்மாவை தாக்குவது தர்ம மல்லவென்றும், அபிப்பிராய பேதத்தை மகாத்மாவிடம் நேரில் தெரிந்து கொள்ளலாம் என்றும், நேரில் சொன்னால் நமது அபிப்பிராயத்தை மகாத்மா ஒப்புக் கொள்வார்கள் என்றும், எப்படி இருந்தாலும் மகாத்மாவைப் பற்றி ஒரு வார்த்தையாவது வித்தியாசமாய் எழுதினால் நமது செல்வாக்கே அடியோடு போய்விடும் என்றும், நமது பத்திரிகை ஆகிய “குடி அரசு” கூட ஜனங்களால் மதிக்கப்படாது போய் விடுமென்றும், மகாத்மா பார்ப்பனரல்லாதார் ஆதலால் அவர் பேரில் குற்றம் சொல்லக்கூடாது என்றும் இப்படியாக பல பேர் பல விதத்தில் கடித மூலமாயும் நேரிலும் நமக்கு தெரிவிக்கிறார்கள்.

மற்றும் சிலர், பல பத்திரிகைகளிலும் ஜாடை ஜாடையாய் நமது அபிப்பிராயத்தை கண்டித்தும், மகாத்மாவை ஆதரித்தும் எழுதி வருகிறார் கள். மற்றும் சிலர், எல்லாவற்றையும் குற்றம் சொல்லிவிட்டு நீர் என்னதான் செய்யப் போகிறீர், எதைத்தான் ஆதரிக்கிறீர்கள், உமது கொள்கைதான் என்ன என்று எழுதுகிறார்கள். ஆகவே, இவைகளுக்கு தனித்தனி பதிலும், சமாதா னமும் சொல்லிக் கொண்டிருப்பது மிகவும் கஷ்டமான காரியமானதால் இவற்றிற்கு பொதுவாக இந்த வாரம் சில விஷயங்களை எழுதுகிறோம்.

ஆரம்பத்தில் ஒரு விஷயத்தை பொது ஜனங்களுக்கு தெரியப் படுத்திக் கொள்ள ஆசைபடுகிறோம். அதென்னவெனில், நாமும் நமது பத்திரிகையும் வயிற்றுப் பிழைப்புக்கோ, பொது ஜனங்களின் செல்வாக்குப் பெறுவதற்கோ, பொது நன்மையின் பேரால் தொண்டு செய்ய வரவில்லை என்பதே. உண்மையை உண்மை என்றும், சரி என்று பட்டதை வெளிப்படுத் துவதற்கும், பொய்யென்றும் தப்பென்றும் பட்டதை கண்டிப்பதற்குமே நடைபெற்று வருகிறது என்பதாகவும், பத்திரிகையின் கொள்கையே அதுதான் என்பதாகவும் ஆதி முதற்கொண்டே பல தடவைகளில் வெளிப்படுத்தி இருக்கிறோம்.

இரண்டாவதாக, மகாத்மா காந்தியவர்களிடத்தில் மற்றவர்களுக்கு இருக்கும் அபிமானத்திலும், பக்தியிலும் நமது பக்தி எள்ளளவும் குறைந்த தல்ல என்பதையும் தெரிவிப்பதோடு, மகாத்மாவை தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தின அனேகருள் நாமும் ஒருவரென்றும் மகாத்மாவை பின்பற்றி வந்த விஷயத்திலும் இப்போது சிபார்சுக்கு வருகிற எல்லோரையும் விட நாம் பின்பட்டவரல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்

நிற்க, மகாத்மாவை குருட்டுத் தனமாய் ஆதரிக்கும் மூலமாய் வரும் செல்வாக்கு நமக்கு அவசியமில்லை என்றும், மகாத்மாவைப் பற்றி நாம் கண்டிக்கும் விஷயம் சரியா தப்பா என்று விசாரணை செய்து பார்த்து ஒரு முடிவுக்கு வர யோக்கியதை இல்லாமல் குருட்டு பக்தியாய் அபிப்பிராயம் கொள்ளுபவரது கண்டனத்தைப் பற்றி நமக்கு கவலை இல்லை என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நிற்க, இதுவரையில் கடிதமூலமாயும் பத்திரிகை மூலமாயும் நேரிலும் நமது கண்டனத்தை மறுத்தவர்களில் ஒருவராவது பிறவியில் வருணாசிரம தர்மமும் ஜாதி வித்தியாசமும் இல்லை என்ற மகாத்மா சொன்னதாகவாவது, பிறவியில் வருணாசிரம தர்மமும் ஜாதிப் பிரிவுகளும் உண்டு என்று அவர் சொல்லவில்லை என்றாவது ஒருவரும் சொல்லவே இல்லை. இனியும் யாராவது மகாத்மாவுக்கு பிறவியில் வருணாசிரம தர்மமும் ஜாதியும் இல்லை என்று சொல்வார்களேயானால், அல்லது இல்லை என்று மகாத்மா இன்ன இடத்தில் சொல்லியிருக்கிறார் என்று காட்டுவார்களேயானால் உடனே நான் எழுதியவைகளையும் மறுத்து எழுதிவிட்டு மகாத்மா விஷயமாய் நான் கொண்ட அபிப்பிராயத்தையும் மாற்றிக் கொண்டு எனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்ளத் தயாராயிருக்கிறேன்.

அப்படிக்கில்லாமல் “அவர் அப்படி எண்ணி இருக்கமாட்டார் இப்படி எண்ணி இருக்க மாட்டார், மகாத்மா சொல்வதற்கு அதுவல்ல அர்த் தம், இதுவல்ல பொருள்” என்பதான வெறும் உத்தேசமும் வியாக்கியானமும் நமது அபிப்பிராயத்தை ஒரு சிறிதும் மாற்றிக் கொள்ளும்படி செய்யவே முடியாது என்பதை வணக்கமாய் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

நிற்க, நமது கருத்தையும், மகாத்மா கருத்துக்கும் நமது கருத்துக்கும் மாறுபட்ட கருத்துக்களைப் பற்றியும் சென்றமாதம் மகாத்மா அவர்களிடம் நேரில் கலந்து பேசி நம்மைப் பொருத்த வரையிலும் ஒரு முடிவு கட்டிக் கொண்டே வந்து விட்டோம் “மகாத்மாவிடம் நான் கலந்து பேசினேன்” என்று சொல்லிக் கொள்வதும் எழுதிக் கொள்வதும் இக்காலத்தில் பெரிதும் தற்பெருமைக்கே உபயோகித்துக் கொள்ளக் கூடியதாய் விட்டபடியால் அந்த தற்பெருமை நமக்கு வேண்டாம் என்பதாகக் கருதியே நாம் அது சமயம் அதை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை.

தவிரவும் அது சமயம் நமக்கும் மகாத்மாவுக்கும் நடந்த சம்பாஷ ணைகளின் விபரத்தை மகாத்மாவின் சம்மதம் பெற்றே வெளிப்படுத்த வேண்டியதான ஒரு நிபந்தனைக்கும் நாம் சம்மதம் கொடுத்து வந்ததால் அதையும் வெளியிட முடியாத நிலையில் இருக்கிறோம்.

முக்கியமாய் மூன்று விஷயத்தைப் பற்றியே தான் மகாத்மாவினிடம் நாமும் நமது நண்பரான ஸ்ரீமான் .எஸ். ராமநாதனும் சம்பாஷித்தோம். அதா வது என்னுடைய அபிப்பிராயமாக மகாத்மாவுக்கு எடுத்துச் சொன்னதெல் லாம் இந்தியாவின் விடுதலைக்கும், சுயமரியாதைக்கும் மூன்று முக்கிய காரியங்கள் செய்து முடிக்க வேண்டும் என்றும், அது முடிவு பெறாமல் நமது நாட்டுக்கு விடுதலை இல்லை என்றும் நாம் முடிவு செய்திருக்கிறோம் என்பதாகச் சொன்னோம்.

அதாவது, ஒன்று, காங்கிரசு என்பதை ஒழிக்க வேண்டியது. இரண் டாவது, இந்து மதம் என்பதை ஒழிக்க வேண்டியது, மூன்றாவது, பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டியது என்பவைகளாகும்.

முதல் இரண்டை ஒழித்தாலே பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்து விடுமானா லும், இவ்விரண்டின் மூலமாய் ஒழிந்தது போக பாக்கி கொஞ்ச நஞ்சம் இருந் தாலும் அதையும் ஒழிப்பது என்கிற கொள்கையும் அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தையே காட்டினோம்.

இது விஷயமாய் நடந்த தர்க்கங்கள் முன் சொன்ன காரணத்தால் வெளியிடக்கூடியதல்ல. ஆதலால் இனி இதைப் பற்றி மகாத்மாவிடம் மறுபடி யும் கலந்துபேசித்தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்றும் இல்லை என்ப தையும் மகாத்மாவினிடம் நேரிலேயே இம்மூன்று விஷயங்களைப் பற்றியும் மகாத்மா சொன்ன சமாதானங்கள் எம்முடைய அபிப்பிராயத்தை மாற்றக் கூடியதாயில்லை என்றும் சொல்லி மகாத்மாவினிடம் உத்திரவு பெற்றுக் கொண்டு வந்து விட்டோம். மகாத்மாவும் தான் சொன்ன சமாதானத்தால் நாம் திருப்தி அடையவில்லை என்பதை தெரிந்துகொண்டதாகவும், இன்னம் இரண்டொரு தடவை அதைப்பற்றி பேசவேண்டும் என்றும் சொன்னார். எனது நண்பர் ஸ்ரீமான் ராமநாதன் அவர்கள் கூட மகாத்மா சொன்னது போலவே மறுபடியும் இரண்டொரு தடவை மகாத்மாவிடம் பேசலாம் என்று கூட சொன்னார். இதற்கு உடனே நாம் மகாத்மா நம்முடைய அபிப்பிரா யத்தை மாற்றும்படி திருப்தி செய்வார்கள் என்று நம்புகிறீர்களா அல்லது மகாத்மா அபிப்பிராயத்தை நாம் மாற்றக்கூடும் என்பதாக கருதுகிறீர்களா என்று கேட்டதில், மகாத்மா சொல்வதைக் கொண்டு நம்முடைய அபிப்பிரா யங்களை மாற்றிக் கொள்ள கூடியதாய் ஏற்படாது என்றும் ஒருக்கால் நமது அபிப்பிராயத்துக்கு மகாத்மா இணங்கக்கூடியதானால் நமது பிரசாரத்திற்கு இன்னம் உதவியாக இருக்காதா என்றும் சொன்னார். உடனே நாம் அந்தப்படி எதிர்பார்ப்பது தப்பு என்றும் மகாத்மாவை திருத்தும் படியாக நாம் சொல்லி சரி செய்ய முடியாது என்றும், நம்ம அபிப்பிராயத்தை நாம் வெளிப்படுத்த வேண்டியது தான் நமது கடமை என்றும் சொல்லிவிட்டோம். இன்ன இன்ன விஷயங்களைப் பற்றி மகாத்மா அவர்களுடன் சம்பாஷித்ததாக திரு.சி. ராஜ கோபாலாச்சாரியார் அவர்களிடம் தெரிவித்து விட்டே உத்திரவு பெற்றுக் கொண்டு வந்து விட்டோம்.

எனவே இது சம்மந்தமாக இனி மகாத்மாவின் அபிப்பிராயம் எப்படி என்பதைப் பற்றி நாம் மறுபடியும் அவரைக் கண்டு கேட்கவேண்டியதில்லை என்பதைப் பற்றியும், அதைப்பற்றி நாம் கொண்டுள்ள அபிப்பிராயத்தில் நமக்கு கொஞ்சமும் சந்தேகமில்லையென்பதையும் தெரிவித்துக் கொள்ளு கிறோம். வருணாசிரம விஷயமாய் மகாத்மாவுடன் சம்பாஷித்ததை ஆதார மாய் வைத்துக் கொள்ளாமலேயே மகாத்மாவே மைசூரில் பேசினதைக் கொண்டும், அதற்கும் அவர் எழுதினதைக் கொண்டும் தான் அந்த மறுப்பு எழுதப்பட்டது. தவிர மகாத்மாவின் வருணாசிரம தர்ம நியமனமும் ஜாதி வித்தியாச நியமனமும் பிறப்பை ஒட்டியது என்பதாக இதற்கு முன் எத்த னையோ தடவைகளில் மகாத்மாவின் பேச்சினாலும் எழுத்துக்களினாலும் நாம் தெரிந்தே இருக்கிறோம்.

மகாத்மா பார்ப்பன மதமான ஆரியரின் மதத்தைத்தான் இந்து மதம் என்று சொல்லிக்கொண்டு தன்னையும் அதே இந்து இந்து என்று அடிக்கடி சொல்லிவருகிறார். தன்னுடைய பிரசங்கங்களுக்கும் அடிக்கடி ஆரியக் கதை களான புராணங்களைத்தான் அதாவது ராமாயணம், பாரதம், பாகவதம் முதலியவைகளையே தனக்கு ஒரு படிப்பினைகளாகவும் மேற்கோள் களாவும் காட்டிக் கொண்டும் வருகிறார். இந்த மாதிரி புராண வழுக்கலானது எப்படியாவது மகாத்மாவை சேற்றில் கொண்டு போய் அழுத்தியே தீரும் என்பதே நமது துணிபு.

தமிழ்நாட்டின் நாகரீகமும், தமிழ்நாட்டின் பழய பழக்க வழக்கங்களும் மகாத்மாவுக்கு தெரிவதற்கு சந்தர்ப்பமேயில்லை. மகாத்மா தென்னாப் பிரிக்காவில் இருந்த காலத்தில் வள்ளியம்மை, நாகப்பன் என்பது போன்ற சில தமிழ் மக்கள் மூலம் தமிழரின் வீரத்தை அறிந்திருக்கலாமே தவிர தமிழ் நாட்டைப்பற்றியும், தமிழ் மக்களைப் பற்றியும் பார்ப்பனர்களின் மூலமாகத் தவிர வேறொன்றும் அவர் அறிந்திருக்க முடியாது என்பதாக உறுதி கூறலாம்.

ஆரியக் கொள்கையான பார்ப்பன மதத்திற்கும் தமிழர் நாகரீக பழக்க வழக்கத்திற்கும் ஏறக்குறைய 2000,3000 வருஷங்களாகவே யுத்தங்கள் நடந்து வரும் விஷயங்களை மகாத்மாவுக்கு எடுத்துச் சொல்ல கூடியவர்கள் யார்? மகாத்மா மடத்தில் இருக்கிறார்கள். ஆதலால் தமிழ்நாட்டிற்கு ஆரியக் கொள் கைகள் கூடாது என்பதாக நாம் பிரசாரம் செய்வதானால் அதைப் பொருத்த வரை மகாத்மா கொள்கை கூடாது என்றுதான் நாம் சொல்லி ஆக வேண்டும். தொழிலின் மூலமாகக்கூட மக்களைப் பிரிக்கக் கூடாது. பிரிக்க முடியாது, பிரிப்பதும் உலகியற்கைக்கும் மனிதத் தன்மைக்கும் சரியல்லவென்று வாதாடுகிற நாம் “பிறவியில் ஜாதி உண்டு, தொழில் உண்டு இது பெரியோர் களால் ஏற்படுத்தப்பட்டது. கடவுளால் ஏற்படுத்தப்பட்டது, ரிஷிகளால் ஏற்படுத்தப்பட்டது” என்றால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும். ரிஷிகள், கிருஷ்ணன் முதலானவர்கள் காலமல்ல இது என்பதும், நாம் அந்தக்காலத்தில் இல்லை என்பதும், இந்தக் காலத்தில் அவர்கள் இல்லை என்பதும் அது சரியா தப்பா, நிஜமா பொய்யா என்பதற்கு சரியான ஆதாரமும், அவசியமும் சாத்தியமும் இல்லை என்பதும் ஒவ்வொரு பகுத்தறிவுள்ள மனிதனுக்கும் தானாக விளங்கும்போது ‘பாட்டி கதைக்கு’ எப்படி மரியாதை கிடைக்கும் என்பது நமக்கே விளங்கவில்லை.

மகாத்மாவும் வருணாசிரமமும் என்னும் வியாசத்தை மகாத்மா வுக்கும் அனுப்பித்தான் இருக்கிறோம். மற்றொன்றை அவரது அந்தரங்க சிஷ்ய கோடிகளுக்கும் அனுப்பி மகாத்மா தகவலுக்கு கொண்டுபோகும்படி கேட்டுக் கொண்டும் இருக்கிறோமேயல்லாமல் மகாத்மாவுக்குத் தெரியாமல் ஒன்றும் செய்துவிடவில்லை. ஆனால் அவரது பரமானந்த சிஷ்யர்கள் இம் மாதிரி விஷயங்களை லக்ஷியம் செய்யாதீர்கள். லக்ஷியம் செய்தால் மறுப் புக்கு அதிக யோக்கியதை உண்டாகிவிடும், மறுப்பவனுக்கும் அந்தப் பத்திரிகைக்கும் யோக்கியதை அதிகமாகிவிடும். ஆதலால் குப்பையில் போட்டு விடுங்கள் என்றுதான் சொல்லிக்கொடுப்பார்கள். அதை மீறுவதற்கு மகாத்மாவுக்கு இது சமயம் சக்தியில்லை என்பதே நமது அபிப்பிராயம். ஆகவே, இந்த விஷயம் முக்கியமானதாலும் நமது நாட்டின் விடுதலைக்கும், நமது சுயமரியாதைக்கும், வருணாசிரமம் என்கிற தத்துவமே அதிலும் பிறவியில் வருணாசிரமமும் ஜாதியும் உண்டு என்கிற தத்துவமே எமனாய் இருக்கிறது என்பதான கண்ணியமான முடிவுக்கு வந்திருப்பதாலும் அதை யொழிக்கப் பாடுபடுவதே நாட்டில் விடுதலையும் சுயமரியாதையும் கோரும் மனிதனின் கடமையென்று நாம் களங்கமற உணருவதாலும் கண்டிக்க வேண்டியதாயிருக்கிறதே என்பதாக வருத்தத்துடன் இதை எழுதுகிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 28.08.1927

மகாத்மாவும் வருணாசிரமும் I - 07.08.1927

மகாத்மாவும் வருணாசிரமும் I


மகாத்மா காந்தி “தீண்டாமை ஒழிய வேண்டும், மதத்திலும், சமுதாயத் திலும் சீர்திருத்தம் ஏற்பட வேண்டும்” என்கிற கொள்கை உடையவர் என்று ஜனங்கள் நம்பி வந்தாலும், அவரது எண்ணத்திலும் பேச்சிலும் அதற்கு நேர் விரோதமான கொள்கையை உடையவராகவே காணப்படுகிறார். இம்மாதிரி எண்ணத்தோடும் பேச்சுகளோடும் மகாத்மா காந்தியின் பிரசாரம் நடைபெற நடைபெற தீண்டாமையும் மூடக் கொள்கைகளும் நாட்டில் வலிமையோடு நிலைபெற இடம் ஏற்படுமே அல்லாமல் ஒருக்காலும் இவை ஒழிக்கப்படவே முடியாது. எந்த தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்று வெளிப்படையாய் பேசுகிறாரோ அதே தீண்டாமையை நிலை நிறுத்த அதே பேச்சை வியாக்கி யானம் செய்வதில் பாடுபடுகிறார்.

இதைப்பற்றி முன் ஒரு தடவை கூட எழுதி இருக்கிறோம். உண்மை யான தீண்டாமையை நமது நாட்டை விட்டு வெளிப்படுத்த வேண்டுமானால் மகாத்மா காந்தியையும் எதிர்த்து போராடித்தான் தீர வேண்டியிருக்கிறது.

தீண்டாமை இன்னது என்பது மகாத்மாவுக்கு இன்னமும் சரியாய் புலப்பட இல்லை என்பதே நமது அபிப்பிராயம். அவர் மதத்தின் பெயரைச் சொல்லிக் கொள்வதனால் பொது ஜனங்களிடம் உண்டாக்க கூடிய செல்வாக் கையும் உபயோகப் படுத்திக்கொள்ள நினைப்பதால் உண்மைத் தீண்டாமை தத்துவம், அவருக்கு புலப்பட மார்க்கமில்லாமல் போய்விடுகிறது. ஆதலால் மகாத்மாவினது தீண்டாமை விலக்கு கொள்கையைப் பின்பற்றுவோமானால் மறு படி தீண்டாமை சேற்றிலே சறுக்கி விழுக வேண்டிவரும் என்றே நாம் பயப்படுகிறோம். வெகு காலம் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தும், மூடி மூடி வைத்தும் கூட உண்மையான தீண்டாமை விலக்கையும், சுயமரியாதையையும் உத்தேசித்து வெளிப்படையாய் இப்போது அவரை தாக்கித் தீர வேண்டியதாய் ஏற்பட்டு விட்டதற்கு வருந்துகிறோம்.

ஏனென்றால் சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு மகாத்மா காந்தி வரப்போகி றார். தீண்டாமையைப் பற்றி பேசும்போது அவரது வழக்கப்படியே தான் பேசித் தீருவார். அதன் மூலம் நமது எதிரிகளுக்கு அதிகமான பலம் ஏற்பட்டு நமது முயற்சியை ஒழிக்க அதை அவர்கள் உபயோகித்துக் கொள்ளுவார்கள். ஆதலால் அதை இப்போதே நாம் வெளிப்படுத்திவிடுவது மேலானதென்றே கருதுகிறோம். அதாவது மகாத்மா காந்தி நமது பார்ப்பனர்கள் சொல்லுவது போலவே நமது சமூக வாழ்வில் வருணாசிரம தர்மம் உண்டு என்றும் அது பிறவியிலேயே ஏற்பட்டது என்றும் அடிக்கடி சொல்லிவருகிறார். சமீபத்தில் மைசூரில் ஒரு கூட்டத்தில் தீண்டாமையைப் பற்றி பேசும் போதும் இந்து சமூகத்தில் வருணாச்சிரம தர்மம் உண்டு என்றும், அது நமது சமூகத்திற்கு அவசியம் என்றும், ஒவ்வொரு வர்ணத்தாருக்கு ஒவ்வொரு தர்மம் விதிக்கப் பட்டிருக்கிறதென்றும், அந்தந்த வர்ணத்தார் அந்தந்த தர்மத்தை செய்யும் போது அவரவர்கள் அம்மட்டி லுயர்ந்தவர்கள் என்றும், பிராமணன் அவன் தர்மத்தைச் செய்யும் போது உயர்ந்தவனாகிறதுபோலவே மற்ற வர்ணத் தானும் அவனவன் தர்மத்தைச் செய்யும்போது தான் உயர்ந்தவனாகிறான் என்பதாகவும் பேசியிருக்கிறார். இதைத்தான் பார்ப்பனர்களும் தாங்கள் பிறவியிலேயே உயர்ந்தவர்கள் என்பதற்கு காரணங்களாக சொல்லிவரு கிறார்கள்.

வருணாசிரம தர்மத்தின் மூலமாகத்தான் நமது நாட்டில் தீண்டாமை கொள்கை அமுலில் இருந்து வருகிறதே ஒழிய வருணாசிரமம் இல்லா விட்டால் தீண்டாமை கொள்கை பரவ மார்க்கமே கிடையாது. வருணாச்சிரம தர்மம் என்கிற ஒரு உடல் இல்லா விட்டால் தீண்டாமை என்கிற உயிருக்கு ஆட்டம் இல்லை. யோசித்துப்பார்த்தால் இந்த கொள்கைத் தத்துவம் எவருக்கும் விளங்காமல் போகாது. அந்தந்த வருணத்தானுக்கு ஏற்பட்ட தர்மப்படி அவனவன் நடக்க வேண்டும் என்று மகாத்மா சொல்லுவதைத்தான் தூவார் மகாநாட்டு “பிராமண சம்மேளன”மும் ஏகமனதாய் தீர்மானம் செய் திருக்கிறது.

மகாத்மா சொல்லும் வருணாச்சிரம தர்மம் அதுவல்ல என்பதற்கு வேறு ஆதாரம் என்ன? மகாத்மாவும் வருணாச்சிரமம் நான்கு என்று சொல்லு கிறார். அதாவது பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்கிறார். தூவார் பிராமணச் சம்மேளனத்தாரும் மகாத்மா சொல்லும் ஆதாரத்தைக் கொண்டே க்ஷத்திரியனும், வைசியனும் உலகத்தில் இப்போது காணப் படவில்லை. ஆதலால் பிராமணன், சூத்திரன் ஆகிய இரண்டு வருணத்தார் மாத்திரம்தான் இருக்கிறார்கள் என்கிறார்கள். மறைந்துவிட்ட இரண்டு வருணத்தாரைப் பற்றி நமக்கு கவலை இல்லை. இருக்கிற இரண்டு வருணத் தாரைப் பற்றிய வரையிலாவது இவர்களுக்கு ‘மகாத்மா’ கற்பிக்கும் தர்மங்கள் என்ன? என்பதுதான் நமது கேள்வி. வருணாசிரமத்தையும், அதன் தர்மத்தை யும் ஒப்புக்கொள்ளுகிற ஒருவர் – அதுவும் வருணாசிரமமும், அதனதன் தர்ம மும் மக்களுக்கு பிறவியிலேயே உண்டு என்று ஒப்புக்கொள்ளுகிற ஒருவர் – தீண்டாமை இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும். மகாத்மா கூறும் வருணாசிரமத்திற்கு பார்ப்பனர் கூறும் தர்மத்தைவிட வேறு ஏதாவது தர்மம் கற்பிக்க ஆதாரம் இருக்கிறதா? என்று பார்த்தால் நாளது வரை மகாத்மா அது வேறு என்று சொன்னதாகவே தெரியவில்லை. மைசூர் உபந்நியாசத்தில் ஜன சேவையே பிராமணர்களுடைய தர்மம் என்று சொல்லியிருக்கிறார். அது போலவே பிராமண சேவையே சூத்திரனுடைய தர்மம் என்றுதான் அவர் சொல்லி ஆக வேண்டும். பொது ஜன சேவைதான் பிராமண தர்மம் என்று சொன்ன சாஸ்திரங்களில்தான் “பிராமண சேவையே சூத்திர தர்மம்” என்று சொல்லப் பட்டிருக்கிறது.

பிராமணருக்குப் பொது ஜன சேவை செய்வதினால் மாத்திரம் உயர்வு உண்டாகுமானால் சூத்திரனுக்கு பிராமணசேவை செய்வதினால் மாத்திரம் தான் உயர்வு உண்டாகுமேயன்றி அதை விட்டு வேறு வேலை செய்வா னானால் சூத்திரன் கண்டிப்பாய் தாழ்ந்தவனாகிறான் என்றுதான் மகாத்மாவின் தத்துவத்திற்குப் பொருள் ஏற்படுகிறது. இந்தப்படியானால் எந்த விதத்தில் பிராமணனுக்கு சம அந்தஸ்தாக சூத்திரன் இருக்க முடியும் என்று மகாத்மா கருதுகிறார் என்பது நமக்கு விளங்கவில்லை.

அன்றியும் “அந்தந்த வருணத்தார் அந்தந்த தருமத்தைச் செய்து வருகையில் ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வு சொல்லிக் கொள்ள இடமேது” என்றும் பேசியிருக்கிறார். அப்படியானால், அந்தந்த வருணத் தாருக்குத் தனித்தனி தர்மம் ஏற்பட வேண்டிய அவசியம் என்ன என்பதைப் பற்றியாவது ஒரு வருணத்தான் மற்ற வருணத்தானுடைய தர்மத்தைச் செய்வதானால் கெடுதி என்ன என்பதைப் பற்றியாவது ஒரு வார்த்தையாவது இதுவரை மகாத்மா சொன்னதேயில்லை. “பொது ஜன சேவை என்பது பிராம ணர்களுக்கு மாத்திரம் சொந்தமானது, அதற்காகவே அவர்கள் பிறந்திருக் கிறார்கள்” என்றும் மகாத்மா சொல்லுவாரானால் மகாத்மா அவர்கள் நான்கு வருணத்தில், தான் எந்த வருணத்தைச் சேர்ந்தவர் என்று சொல்ல முடியும்? மகாத்மா சொல்லுகிற கொள்கைப்படி பார்த்தால் அவர் பிறவியில் ஒன்று சூத்திரராயிருக்க வேண்டும் அல்லது வைசியராயிருக்க வேண்டும். எனவே சூத்திரனுக்கும் வைசியனுக்கும் ஏற்பட்ட தர்மத்தைச் செய்வதை விட்டுவிட்டு பிராமணனுக்கு ஏற்பட்ட தர்மமாகிய பொது ஜன சேவையை செய்வதற்கு மகாத்மாவுக்கு உரிமையேது? தன்னாலேயே நடத்திக் காண்பிக்க முடியாத வருணாசிரம தர்மத்தை மற்றவர்களை ஏற்று நடத்தும்படி சொல்வதில் ஏதாவது பொருளுண்டா? இவைகளைப் பற்றி இவ்வளவு தூரம் எழுதினது தீண்டாமை விஷயத்தில் மகாத்மாவுக்கு உள்ள குழப்பத்தை காண்பிக்கவும், அவரும் குருட்டு நம்பிக்கையில் ஈடுபட்டவரே அல்லாமல் பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவராகப் புலப்படவில்லை என்பதையும் காட்டுவதற்குமே எழுதுகிறோமே அல்லாமல் அவர் மீது குறை கூறுவதற்காக அல்ல. அன்றி யும் மகாத்மா நாட்டிற்கும், மக்களுக்கும் செய்திருக்கும் அநேக நன்மை களைப் பற்றி நமக்கும் மகாத்மாவின் அந்தரங்க சிஷியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கட்கும் யாதொரு வித்தியாசமும் இல்லை. எனினும் இத் தீண்டாமை விஷயத்திலும், வருணாசிரம விஷயத்திலும் மகாத்மாவுக்கு தெளிவு ஏற்பட்டிருக்குமானால் நமது சமூகத்திற்கு எவ்வளவோ நன்மை உண்டாகும் என்கிற ஆசையே இதைப் பற்றி மேலும் மேலும் எழுதி வரவும் தூண்டுகிறது.

குடி அரசு – தலையங்கம் – 07.08.1927

காந்தி, தீண்டாமைக்கு ஏன் சத்தியாக்கிரகம் செய்வதில்லை? இரண்டு சந்தேகம்?

காந்தி, தீண்டாமைக்கு ஏன் சத்தியாக்கிரகம் செய்வதில்லை?
இரண்டு சந்தேகம்?

1.போக்கிரி : திருமதி ஸ்லேட்டர் அம்மாளை மீராபாயம்மாளாக்கி, முக்காடு போட்டு ஆபாசமாக்கி சீமைக்கு அழைத்துப் போய் இந்திய நாகரீகத்தைப் பாருங்கள் என்று வெள்ளைக்காரர்களுக்கு காட்டுகிறாரே அது ஏன்? முக்காடு என்ன அவ்வளவு அழகா? அல்லது, தன்னை ஒரு சனாதன இந்து என்பதற்காகவா?

யோக்கியன்: அதைப்பற்றி கவலை உனக்கு எதற்கு? அது அவரவர்கள் இஷ்டத்தைப் பொறுத்தது.

போக்கிரி : சரோஜனி அம்மாள் அப்படியில்லையே?

யோக்கியன்: மறுபடியும் பேசுகிறாயே?

2. போக்கிரி: சரி, அதைப்பற்றி பின்னால் பேசிக்கொள்ளலாம். திரு. காந்திக்கு திரு.ஏ. ரங்கசாமி அய்யங்கார் அவர்களின் யோக்கியதை தெரி யுமா? தெரியாதா?

யோக்கியன்: தெரியும். ஏன்?

போக்கிரி : அவர் காந்தியை மீறித்தானே வட்டமேஜைக்குப் போனார்?

யோக்கியன்: ஆம்.

போக்கிரி : அப்படி இருக்க, திரு.காந்தி அவரை எதற்காகத் தனக்கு அரசியல் ஆலோசனை சொல்லும் அமைச்சராக வைத்துக்கொண்டார்.

யோக்கியன்: இது வேண்டுமானால் நல்ல கேள்வி. ஏன் வைத்துக் கொண்டார் என்றால், திரு. ஏ.ரங்கசாமி அய்யங்கார் ‘இந்து’ ‘சுதேசமித் திரன்’ பத்திரிகைகளின் ஆசிரியாய் இருக்கின்றார் என்பதற்காகத்தான். அன்றியும் திரு.ரங்கசாமி அய்யங்காரிடம் திரு.காந்தியின் கைவரிசை ஒன்றும் செல்லாது. ஏனெனில் இந்து பத்திரிகையொன்றாலே திரு.காந்திக்கு எப்போதும் நெஞ்சில் கொஞ்சம் நெருப்பு உண்டு.

போக்கிரி : அதெப்படி?

யோக்கியன்: காலஞ் சென்ற ஒத்துழையாமையின்போது கூட இந்து பத்திரிகை ஒத்துழையாமைக்கு விரோதமாய் விஷமப் பிரசாரம் செய்தும் திரு.காந்தி அடிக்கடி அதன் ஆசிரியருக்குக் கடிதம் எழுதி அவரைக் கைக் குள் போட்டு, ‘ஒத்துழையாமையை தயவு செய்து கவனித்துக் கொள்ளுங் கள்’ என்று கடிதமெழுதி இருக்கிறார். அன்றியும் ‘இந்து’வும் ‘சுதேச மித்திர’னும் சேர்ந்துதான் திரு.தாசுக்கு விளம்பரம் கொடுத்து அவரை ‘தேசபந்து’ வாக்கி ‘மகாத்மாவை’ தோற்கடித்து ஒத்துழையாமையைப் புதைத்து விட்டதுகள். ஆதலால் அதுபோலவே இப்போதும் செய்து விடுமோ என்கின்ற பயத்தால்தான் திரு.ரங்கசாமி அய்யங்காரை திரு.காந்தி தனது மந்திரியாக்கிக் கொண்டார்.

போக்கிரி : மற்றவர்களையெல்லாம்விட திரு.ஏ.ரங்கசாமி அய்யங் காரிடம் மாத்திரம் என்ன அவ்வளவு பயம்?

யோக்கியன்: ‘இந்து’ ‘சுதேசமித்திரன்’ என்றால் பார்ப்பனர்கள் என்று அருத்தம். அதுவும் ‘தென்னாட்டு அய்யங்கார் பார்ப்பனர்கள்’என்று அர்த்தம். திரு.காந்தியைப்போல் ஆயிரம் காந்தியை அய்யங்கார் பார்ப் பனர்கள் ஆக்கவும் கூடும். அழிக்கவும் கூடும். திரு.காந்தி இவையெல்லாம் தெரியாதவரல்ல. யார்யாரைப் பிடித்து எப்படி எப்படி சரிபண்ணலாம், எப்படி எப்படி விளம்பரம் செய்யலாம் என்பதில் அவருக்கு அனுபவ முண்டு - லார்டு இர்வினை ‘மகாத்மா இர்வின்’ என்று காந்தி கூப்பிட்டாரே எதற்கு? என்பது உமக்குத் தெரியுமா?

போக்கிரி : சரி, விளங்கிற்று இனி ஒன்றும் தெரியவேண்டாம்.

புதிய தொண்டரும் பழைய தொண்டரும்

புதுத் தொண்டர்: வட்டமேஜை முறிந்து போனால் என்ன செய்வது? ‘ஜனங்கள் மிகவும் கஷ்டப்பட வேண்டி வரும்’ என்று காந்தி சொல்லுகின்றாரே’.

பழய தொண்டர்: அட பயித்தியக்காரா! வட்டமேஜை மகாநாடு முறிந்தால் தான் நமக்கு நல்லது.

புதுத் தொண்டர்: அதென்ன அப்படி?

பழய தொண்டர்: வட்டமேஜை மகாநாடு முறிந்து போனால், திரு.காந்தி இந்தியாவுக்கு வந்து, மறுபடியும் ஏதாவது சத்தியாக்கிரகம்-சட்டமறுப்பு- என்பதாக, எதையாவது ஒன்றைச் செய்யச் சொல்வார்.

புதுத் தொண்டர்: அதனால் நமக்கென்ன லாபம்? ஜனங்களுக்கு கஷ்டம் தானே?

பழய தொண்டர்: அட முட்டாளே! ஜனங்கள் எக்கேடு கெட் டேனும் தொலையட்டும். அதைப் பற்றி நமக்கென்ன கவலை? நமக்கு எப்படியும் ஒரு வேலை இருக்குமல்லவா? அதனால் உண்டி வசூலிக்கவோ, பணம் வசூல் செய்யவோ, தேசாபிமானியாகவோ சவுகரியம் இருக்கும். அப்படியில்லா விட்டால் நம்மை எவன் சட்டை பண்ணுவான்?

புதுத் தொண்டர்: நமக்கு வேலை வேண்டியதற்காகவா தேசியத் தொண்டு செய்வது?

பழய தொண்டர்: சரி! சரி! உனக்கு ஒன்றும் தெரியாது. உங்கள் வீட்டில் ஏதோ சோற்றுக்குக் கொஞ்சம் வகை இருக்கின்றது போல் தெரி கின்றது, அதனால் உனக்கு வட்டமேஜை முறிய வேண்டிய அவசிய மில்லையென்று தோன்றுகின்றது.

புதுத் தொண்டர்: அதென்ன அப்படி சொல்லுகின்றாய்?

பழய தொண்டர்: வட்டமேஜை ஏதாவது ஒரு வழியில் வெற்றி பெற்று விட்டால், இந்தியாவில் வேலையில்லா கஷ்டம் எவ்வளவு அதிகரிக் கும் தெரியுமா? முக்கால்வாசிப் பத்திரிகைகள் ஒழிந்து போகும். முன்பெல் லாம் பாமர மக்களை ஏமாற்ற மதம் ஒன்று தான் இருந்தது. இப்போது நமது பிராமணப் பெரியோர்கள் தயவினால் தேசீயம் என்பதாக ஒன்று ஏற்பட்டு , இதில் அனேகம் பேருக்கு ஜீவனோபாயம் உண்டாயிற்று. மகாத்மா காந்தி அதற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறார். அதனால் இப்போது நம்போலியர்க்கெல்லாம் சோற்றுக்குச் சோறு, துணிக்குத்துணி, கை செலவுக்குத் தாராளமாகக் காசு இவ்வளவும் தவிர, போகின்ற பக்கம், வருகின்ற பக்கம் எல்லாம் திருப்பதி குடை யாத்திரைக்காரருக்கு காலில் தண்ணீர் விட்டு விழுந்து கும்பிட்டு, தட்டத்தில் காசு போடுகின்ற மாதிரியான மரியாதை-இவ்வள வெல்லாம் இருக்கின்ற போது, இவை அத்தனையும் ஒழிந்து போகின்ற மாதிரியில் ‘வட்டமேஜை வெற்றி பெற்றால்’ என்று கேட்கின்றாயே, பாவி! இதைக் கேட்டதும் எனக்குத் திகீர் என்கின்றது.

புதுத் தொண்டர்: கோபித்துக் கொள்ளாதீர்கள்! எனக்கு அனு போகம் இல்லாததினால் இப்படிக் கேட்டேனே ஒழிய, உங்கள் பிழைப்பில் நான் கை வைக்கவில்லை.

சத்தியாக்கிரகமும் தடையும்

கேள்வி: ‘சத்தியாக்கிரகம்’ என்பதை குற்றம் சொல்லுவதின் காரணம் என்ன?

விடை: சத்தியாக்கிரகம் என்கின்ற வார்த்தையில் மனிதத் தன்மைக்கு மீறினதான, ஏதோ ஒரு ‘தெய்வீக’சக்தி இருப்பதான கருத்து இருக்கின்ற படியால், தெய்வத்தன்மை என்பதை ஒப்புக்கொள்ளாதவன் சத்தியாக் கிரகத்தை ஒப்புக் கொள்ளமுடியாது.

கேள்வி: அப்படியானால் முழுச் சுயமரியாதைக்காரர்கள் என்பவர் கள் கூட சத்தியாக்கிரகம் செய்கின்றார்களே அதன் அருத்தம் என்ன?

விடை: பசிக் கொடுமையால் உலகில் நடக்கும் எத்தனையோ விதமான அற்புதமல்லாதவைகளில் சுயமரியாதைக்காரர் என்பவர்கள் சத்தியாக்கிரகம் செய்கின்றார்கள் என்பதும் சேர்ந்ததாகும். ‘யாரைவிட்டது காண் பசிக் கொடுமை எவரை விட்டது காண் பசிக் கொடுமை’ என்பதும், ‘பசி வந்திடப் பத்தும் பறந்து போம்’ என்பதும் இதில் சேர்ந்தவைதான்.

கேள்வி: ‘மகாத்மா’காந்தி எத்தனையோ காரியத்திற்கு சத்தியாக் கிரகம் செய்கின்றாரே? இந்த

தீண்டாமைக்கு ஏன் சத்தியாக்கிரகம் செய் வதில்லை?

விடை: அவர் தீண்டாமை விலக்குவதில் சத்தியம் இருக்கின்றதா இல்லையா என்பதில் இன்னமும் முடிவு காணாமல் இருக்கின்றார். ஆதலால் தான் தீண்டாமை ஒழிப்பதற்கு சத்தியாக்கிரகம் செய்யும் விஷயத்தில் பயப்படுகிறார்.

கேள்வி: அப்படியானால் வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு அவர் எப்படி உதவி செய்தார்?

விடை: வைக்கம் சத்தியாக்கிரகம் திரு காந்தி ஆரம்பித்ததல்ல. மற்றவர்கள் ஆரம்பித்து விட்டார்கள். ‘நம்பிக்கை இருக்கின்றவர்கள் செய் யுங்கள்’ என்று அனுமதி மாத்திரம் கொடுத்துவிட்டார்.

கேள்வி: வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு ‘மகாத்மா’ பணம் கூட கொடுத்தாரே.

விடை: ஆம். அந்தப் பணம் கொடுத்தது எதற்கென்றால் வைக்கம் சத்தியாக்கிரகத்தை நடத்தப் பஞ்சாப்பில் இருந்து சீக்கியர்கள் பதினாயிரக் கணக்கான ரூபாய்களுடன் வந்து விட்டார்கள். அவர்களைக் கொண்டு சத்தியாக்கிரகம் நடந்தால் ஜனங்கள் சீக்கியர்கள் ஆய்விடுவார்களே என்று கருதியும், மற்றும் பணம் தாராளமாய் இருந்தால் தீண்டாமை விலக்குக்கு நினைத்த இடங்களில் எல்லாம் சத்தியாக்கிரகம் தொடங்கப்பட்டு விடுமே என்று பயந்தும், சீக்கியர்களை திரும்பிப் போகும்படி செய்துவிட்டார். அதனால் சிறிது உதவி செய்ய வேண்டியதாயிற்று.

சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் அவர்களால் எழுதப்பட்ட உரையாடல் -  ”குடி அரசு” -  15.11.1931

காந்தி ஜெயந்தி புரட்டு - 06.10.1929

காந்தி ஜெயந்தி புரட்டு 


இவ்வாரம் 2-10-29 தேதி புதன்கிழமை தமிழ்நாட்டில் பல இடங்களில் திரு.காந்தியின் சஷ்ட்டி பூர்த்தி தின திருவிழா என்னும் காந்தி ஜயந்தி புரட்டு ஒன்று பார்ப்பனர்களால் வெகு அக்கரை உள்ளவர்கள் போல் கொண்டாடப் பட்டது. அவைகளை ஒன்றுக்கு இரண்டு பத்து வீதம் பத்திரிகைகளில் விளம்பரமும் செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் இரகசியம் என்ன வென்று பார்த்தால் கடுகளவு அறிவுள்ளவர்களுக்கும் உண்மை விளங்காமல் போகாது. அதாவது இந்தப் பார்ப்பனர்கள் காந்தி ஜயந்தியை திரு.காந்தி மீதுள்ள அன்புக்கும் பக்திக்கும் மரியாதைக்கும் அறிகுறியாக கொண்டாடினார்களா அல்லது திரு.காந்தியின் பெயரைச் சொல்லிக் கொண்டு தங்கள் ஆதிக்கத்திற்கு ஆதாரமாக பார்ப்பன விஷயத்தை பாராட்டக் கொண்டாடினார்களா? என்பது விளங்காமல் போகாது. தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்கு எப்போதாவது திரு.காந்தியிடம் மரியாதையோ பக்தியோ இருந்ததாக யாராவது சொல்ல முடியுமா? எந்தப் பார்ப்பனர் திரு. காந்தியைப் பிடித்து சிறையில் அடைக்கும் படிக்கும் அந்தப்படி அடைக்காவிட்டால் அராஜகம் பெருகி நாடும் சர்க்காரும் அழிந்துபோகும் என்று சர்க்காருக்குச் சொல்லி சர்க்காரிடம் மகாப்பட்டம் வாங்கினாரோ, அந்தப் பார்ப்பனராகிய திரு.சீனிவாச சாஸ்திரியாரும், எந்தப் பார்ப்பனர் காந்தி அரசியலுக்கு லாயக்கில்லை என்று சொன்னாரோ அந்தப் பார்ப்பனராகிய திரு.சத்தியமூர்த்தியும், எந்தப் பார்ப்பனர் திரு.காந்தியை பயித்தியக்காரர் என்று சொன்னதோடு அவரது இயக்கம் சட்டவிரோதமானது என்று சர்க்காருக்கு யோசனை சொன்னாரோ அந்தப் பார்ப்பனராகிய திரு.சீனி வாசய்யங்காரின் உண்மை சிஷ்யராகிய திரு. முத்துரங்கமும், திரு.காந்தியின் கொள்கையை ஒழிக்கப் புறப்பட்ட எதிரிகளுக்கு அடிமையாயிருந்தவரும் திரு.காந்திக்கு மண்டையில் மூளையில்லை என்று சொன்னவருமான திரு.வரத ராஜுலுவும் மற்றும் இவர்களது சிஷ்யகோஷ்டிகளும் முக்கியமாயிருந்து காந்தி ஜயந்தியை சென்னையில் கொண்டாடி இருப்பதுடன் வெளியிடங்களிலும் மேல்கண்ட கூட்டத்தைச் சேர்ந்த வக்கீல் பார்ப்பனர்களும் அவர்களது குமாஸ்தாக்கள் கட்சிக்காரர்களுமே முக்கியமாயிருந்திருக்கின்றார்கள். இந்த கூட்டத்திற்கு இப்போது திரு.காந்தியிடம் ஏற்பட்ட அபிமானத்திற்கும் பக்திக்கும் காரணம் என்ன என்பது வேடிக்கை விஷயமாகும்.



இவர்கள் ஒன்றாய் திரு.காந்தி செல்வாக்கில் இருந்த காலத்தில் அவர்களை உண்மையில் பின்பற்றினவர்களாகவாவது இருந்திருந்தாலும் அல்லது அவர் இப்போது மூலையில் அடங்கிவிட்டாலும் அவருடைய அப்போதைய கொள்கையையாவது அல்லது இப்போதைய கொள்கையை யாவது பின்பற்றுகின்றவர்களாகவாவது இருந்தாலும் ஒரு விதத்தில் காந்தி ஜயந்தி கொண்டாட யோக்கியதை உடையவர்கள் என்று சொல்லலாம்.

அப்போதும் கீழ்ப்படியாமல், இப்போதும் ஏற்றுக் கொள்ளாமல் மூலையில் உட்கார வைத்து ஜயந்தி கொண்டாடுவது எதற்கு சமானம் என்று பார்க்கப் போனால் புத்தரை நாஸ்திகர் என்று பழி சுமத்தி அவர் கொள்கையை அடியோடு அழித்து நாட்டில் செல்வாக்கில்லாமல் செய்துவிட்டு புத்தர் ‘மகா விஷ்ணு’வின் பத்தாவது அவதாரம் என்று புராணங்கள் எழுதிவைத்து வணங்கி வந்ததைத்தான் சமானமாகச் சொல்லலாம். இந்தத் தமிழ் நாட்டில் ஒரு பார்ப்பனராவது திரு.காந்தி அபிப்பிராயத்தை ஒப்புக்கொள்ளுகின்றார் என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம். உதாரணமாக சாரதா மசோதாவுக்கு ஆதரவளித்ததில் பெண்களுக்கு 18 வயதும் ஆண்களுக்கு 24 வயதும் கல்யாண வயதாயிருக்க வேண்டும் என்று சொன்னதை எந்தப் பார்ப்பனர் ஒப்புக் கொண்டார் என்று கேட்கின்றோம். தீண்டாமை ஒழிந்தா லல்லாது நமக்கு சுயராச்சியம் கிடைக்காதென்றும், தீண்டாமையை அடியோடு ஒழிக்காவிட்டால் நாம் சுயராச்சியத்திற்கு அருகரல்லவென்றும் சொன்னதை எந்தப் பார்ப்பனராவது ஒப்புக்கொண்டு தீண்டாமையை ஒழிக்க முயற்சித்தாரா? முயற்சிக்கிறாரா? முயற்சிக்கப்போகிறாரா? என்று கேட்கின்றோம். கோவில் களில் தீண்டப்படாதாரை விடாவிட்டால் அது மிகவும் அக்கிரமம் என்று சொன்னாரே, அதை எந்தப் பார்ப்பனராவது ஒப்புக் கொண்டு கோயிலுக்குள் விட்டார்களா என்று கேட்கின்றோம். விதவைகளுக்கு மறுமணம் செய்யுங்கள் என்றும் மறுமணம் செய்யப்படாத விதவைகள் வீட்டைவிட்டு ஓடிப்போய் யாரையாவது கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்றும் சொன்னதை எந்தப் பார்ப்பனராவது கேட்டார்களா என்று கேட்கின்றோம்.

மற்றும் காங்கிரஸ் விளையாட்டுப் பிள்ளைகள் கூட்டம் என்றும், பூரண சுயேச்சை என்பது பயித்தியக்காரத்தனமென்றும் சொன்னதை யாராவது எந்தப் பார்ப்பனராவது மதித்தார்களா? அன்றியும் கோயில்களில் கடவுள்கள் இல்லை என்றும், கோயில்கள் விபசார விடுதிகள் என்றும் சொன்னதை யாராவது மதித்து எந்தக் கோயில்களை யாராவது இடித்தார்களா அல்லது அடைத்தார்களா என்று கேட்கின்றோம். அன்றியும் லாகூர் காங்கிரசில் ஒரு காரியமும் ஆகப் போவதில்லை; காங்கிரசியக்கமும் ஒழுங்காயில்லை; ஆதலால் நான் காங்கிரஸ் தலைமை ஒப்புக் கொள்ளமாட்டேன் என்று சொன்னதற்கு யாராவது பதில் சொல்லவோ அல்லது காங்கிரசை விட்டு வெளிவரவோ அல்லது காங்கிரசின் கொள்கைகளைத் திருத்தவோ ஒப்புக் கொண்டார்களா என்று கேட்கின்றோம். கடைசியாக திரு.காந்தி இன்னமும் தனக்கு ஒத்துழையாமையில்தான் நம்பிக்கை இருக்கின்றது என்று அடிக்கடி சொல்லி வருகின்றாரே! இதையாவது எந்தப் பார்ப்பனராவது கேட்டு உத்தியோகத்தை விடவோ சட்டசபையை விடவோ, பட்டத்தை விடவோ, பள்ளியை விடவோ, வக்கீல் வேலையை விடவோ, சம்மதித்தார்களா என்றும் கேட்கின்றோம். திரு.காந்தி சொல்வதில் ஒன்றைக்கூட கேட்காமல் அவரை பயித்தியக்காரரென்றும், முட்டாள் என்றும், மூளை இல்லை என்றும், அரசியலுக்கு லாயக்கில்லை என்றும், அராஜகன் என்றும், சட்ட விரோதி என்றும் மற்றும் அயோக்கியன், மடையன், போக்கிரி (கும்பகோணம் பம்பாய் முதலிய இடங்களில்) என்றும் சொல்லிவிட்டு அதுவும் சென்ற வாரத்தில் சொல்லிவிட்டு இந்த வாரத்தில் அதே பார்ப்பனர்களும் அவர்களது அடிமைகளும் கூலிகளும் சேர்ந்து காந்தி ஜயந்தி கொண்டாடுவதென்றால், இதைப் போன்ற வஞ்சகமும் சூட்சியும் வேறு உண்டா என்றுதான் கேட் கின்றோம்.

ஒரு காரியத்திற்காக காந்தி ஜயந்தி கொண்டாடப்பட்டது என்றால், அதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டியது தான். அதாவது தென்னிந்தியாவில் வருணாச்சிரமப் பிரசாரம் செய்ததற்கும் இந்த ஜென்மத்தில் “சூத்திரன்” தனது வருண தர்மத்தைச் செய்தால் அடுத்த ஜன்மத்தில் “வைசியனாக”, அடுத்த ஜன்மத்தில் “க்ஷத்திரியனாக”, அடுத்த ஜன்மத்தில் “பிராமண”னாகலாம் என்று சொன்னதற்கும், மற்றும் ராமாயண, பாரத பிரசாரம் செய்ததற்கும் கதரின் பேரால் லட்சக்கணக்காக பணம் பிடுங்கி பார்ப்பனாதிக்கத்திற்கு செலவு செய்ய பார்ப்பனர்கட்கு இடம் கொடுத்துவிட்டுப் போனதற்கும் வேண்டுமானால் பார்ப்பனர்கள் காந்தி ஜயந்தி கொண்டாடலாம் என்பதை நாம் ஒப்புக் கொள்ளு கின்றோம். ஆனால் சுயமரியாதை உள்ள பார்ப்பனரல்லாதார்கள் அதில் கலந்து கொண்டதற்கு நாம் வெட்கப்படாமலிருக்க முடியவில்லை. இன்றைய தினமும் நமது நாட்டில் நடக்கும் அனேக ஜயந்திகளும் பண்டிகைகளும் திருநக்ஷத் திரங்களும் உற்சவங்களும் பார்ப்பனாதிக்கத்திற்கும் பார்ப்பனரல்லாதார் இழிவுக்கும் அறிகுறியாக நடத்தப்படுகின்றது என்பதை பலர் அறிந்தும் அவ்வித பண்டிகைகளையும் உற்சவங்களையும் இன்னமும் அறிவும் உணர்ச்சி யுமற்ற பார்ப்பனரல்லாதார்கள் செய்து கொண்டுதான் வருகின்றார்கள். அது போலவே காந்தி ஜயந்தியும் கொண்டாடப்பட்டது என்றுதான் நாம் வருத்தத் துடன் சொல்ல வேண்டியிருக்கின்றது. எனவே இனியாவது பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் உள்ள பார்ப்பனரல்லாதார்கள் இம்மாதிரியான பார்ப்பன சூட்சியிலும் வஞ்சகத்திலும் விழாமலிருக்க எச்சரிக்கை செய்கின்றோம்.

தந்தைபெரியார் - "குடி அரசு" - துணைத் தலையங்கம் - 06.10.1929