Monday, 5 June 2017

பாரதியார் மண்டபமா? பார்ப்பனர் வெற்றிச் சின்னமா? - 18-10-1947


பாரதியார் மண்டபமா? பார்ப்பனர் வெற்றிச் சின்னமா?

(பாரதியார் பற்றி அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் ஒரு வித போதையான பிம்பத்தை கட்டிவைத்திருக்கிறது. அதிலும் ப(வெ)ட்டி மன்றங்களில் பாரதியாரைப் பற்றி பேசாத பேச்சாளர்கள் மிக மிகச் சொற்ப அளவினரே. முற்போக்காளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சில வலைப்பதிவர்கள் கூட அவரவர்கள் வலைப்பதிவில் பாரதியாரின் மேற்கோள்களை பதிவிட்டு ”பாரதியார் போதை” என்னும் மயக்கத்தில் தள்ளாடி வருகின்றனர்.

உண்மையில் பாரதியார் யார்? அவர் யாருக்காக? எதற்காக? என்ன நோக்கத்திற்காக பாடினார் -செயல்பட்டார் என்பதை இக்கட்டுரை அம்பலப்படுத்துகிறது. ஊன்றிப் படித்து உண்மையை உணர வேண்டுகிறேன். இக்கட்டுரை இரண்டு பகுதிகளாக வெளிவரும்)

தமிழ்நாட்டில் தமிழனுக்கு இன உணர்ச்சி தலையெடுத்து தமிழ் மொழிப்பற்றின் ஆர்வம் வெளியானது ஆச்சாரியார் கட்டாய இந்தியைப் புகுத்திய நேரத்தில் நிகழ்த்திய போராட்டத்தினாலாகும்.

தமிழ்பற்று மிகுந்து இன உணர்ச்சி தோன்றியபோது தான் தமிழ் மக்கள் தங்களின் உண்மையான பகைவர் யார்? பகைமைக் கருவிகள் யாவை? எனத் தீவிரமாகச் சிந்திக்கத் தலைப்பட்டனர். பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்று கூறுவதே இழிவு என உணர்ந்து தங்களுக்கென, தங்களையே குறிக்கும் தனிப் பெயர் கொள்ள விரும்பினார்கள். இவ்விருப்பம் இறுதியில் திராவிடர் என்று, வரலாற்றிற்கும், இழிந்த நிலை மாறி மனித நிலையடைதற்கும் பொருத்தமாக, யாரும் அசைக்க முடியாத உண்மைப் பெயராக, உணர்ச்சி தருங் கருவியாக அமைந்து விட்டது. இந்நிலையையுணர்ந்த தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள், இந்நிலை நீடிக்குமேயானால் தங்களின் சோம்பேறி வாழ்வு சுடுகாடாகும் என்பதை நன்கு உணர்ந்து, வழக்கம் போல சாம பேத தான தண்டம் என நான்கு வகை உபாயங்களையும் கையாளுகின்றனர்.

தமிழ் மக்களின் தமிழுணர்ச்சியை ஆரியர்க்கு விரோதமாக வீறிட்டெழுந்த விழுமிய உணர்ச்சி வெள்ளத்தை வேறு வகையில் திருப்பி திராவிடர்களுக்குள்ளேயே பிளவையுண்டு பண்ண வேண்டும் என்ற திட்டமிட்டே, தமிழர் - தெலுங்கர் போராட்டமாக மாற்றித் தவறுதலான வேறு வழியில் செல்ல இந்நாட்டுப் பார்ப்பனர்கள் முயலுகின்றார்கள். இம்முயற்சிக்கு, இந்நாட்டு வரலாற்றின் வாய்மைக்கிணங்கச் சில திராவிடர்களே தமிழர் தெலுங்கர் போராட்டத்தைத் தொடங்குகின்றார்கள் என வெளியுலகிற்குக் காண்பிக்கின்றது இந்நாட்டு ஆரியம். இவ்வுண்மையைத் தமிழ் நாட்டு அரசியல் போக்கைக் கண்ணுற்று வருகின்றவர்கள் நன்கு உணரலாம்.

தமிழுணர்ச்சி ஆரியத்தை அழிக்காமல் இருக்க வேண்டுமென்பதற்காகக் கையாளுகிற மற்றொரு வகை முயற்சிதான், பாரதி விழாவும் பாரதி ஒட்டிய பிற நினைவுக்குறி நிகழ்ச்சிகளும் ஆகும்.

தமிழ்நாட்டின் பெரும் புலவர்களாகிய தொல்காப்பியர், திருவள்ளுவர், அவ்வையார் போன்றவர்களை ஆரியக்கலப்பு என்று கூறி, இந்நாட்டு மக்களை ஆரியர்கள் இழிவு செய்து தன்னினத்திற்குப் பெருமை தேடிக் கொண்டதும், தமிழ் நாட்டின் பெருமையைச் சிதைத்து வந்த தமிழைக் கற்ற உ.வே.சாமிநாதய்யர், ராகவய்யங்கார் போன்ற ஆரியர்க்கு உயர்வு தந்து தன்னினப் பெருமையை நிலைநாட்டிக் கொண்டதும், தமிழ் வரலாற்றை அறிந்தோர் உணர முடியும்.

ஆரியர்கள் கையாண்டு வரும் பரம்பரை வித்தைக்கிணங்கவே சமீபத்தில் சுப்பிரமணிய பாரதியார் என்ற பார்ப்பனர்க்கு மண்டபம் எழுப்பிக் கும்பாபிஷேகம் செய்ததுமாகும்.

பாரதியாரை நல்லதொரு வெள்ளைக் கவிஞர் என்று கூறுவதிலோ, உணர்ச்சி ததும்பப் பாடுபவர் என்று கூறுவதிலோ நமக்கு எத்தகைய ஆட்சேபனையும் இல்லை. ஆனால் பாரதியாரைத் தமிழ் நாட்டுத் தனிப்பெருங் கவிஞர் என்றும், தமிழுணர்ச்சியை வளர்த்தவர் என்றும் தமிழன் தலைநிமிர்ந்து நடக்க வழி செய்தவர் என்றும் கூறுவதுதான் திராவிட இனத்திற்கே அழிவைத் தருவதாய், திராவிட உணர்ச்சியை ஒழிக்கவல்லதாய் இருக்கின்றது என்பதையும், ஆரியர்கள், பாரதியாரைக் காட்டித் திராவிட உணர்ச்சியை ஒடுக்க வழி செய்கிறார்கள் என்பதையும் எடுத்துக்கூற வேண்டிய நிலையை உண்டாக்கியிருக்கிறது.

தமிழறிஞர்களே! தமிழ்நாட்டு வரலாற்றைப் படித்த மாணவர்களே! நீங்கள் அறிந்த வரலாற்றை உங்களின் நினைவிற்குக் கொண்டு வாருங்கள். எந்த வரலாற்றிலாவது நீங்கள் வாழுகின்ற இத்தமிழ்நாடு ஆரிய நாடு என்று தீட்டப்பட்டிருக்கிறதா?.

தமிழ்நாட்டின் "அமரகவி" பாரதியார் கூறுவதைக் கேளுங்கள். நீங்கள் இப்பகுதிகளை அறிந்திருந்தாலும், அவை அறிவில் நிலையாதவாறு இந்நாட்டு ஆரியம் பேரொலி எழுப்பி, வெவ்வேறு வழிகளில் அறிவைச் செலுத்தச் செய்திருக்கின்றது என்பதனாலேயே, இங்கு அவற்றை எடுத்தியம்ப முன் வந்ததாகும்.

"உன்னத ஆரிய நாடெங்கள் நாடே"

என்று நாட்டின் பெயரைக் கூறி

"வானாறு பேரிமய வெற்பு முதல் பெண்குமரி யீறாகும் ஆரியநா டென்றே யறி"

என்று ஆரிய நாட்டிற்கு எல்லையும் கூறுகிறார்.

இவர் கூறுகின்ற எல்லை முன்பொரு காலத்தில், "ஒரு மொழிவைத் துலகாண்ட"

இமயவரம்பன் காலத்தில், தமிழ் நாட்டின் எல்லையாகும்," எனப் புறநாநூறு போன்ற தமிழிலக்கியங்கள் கூறும் பாரதியார், தமிழ்நாட்டின் எல்லையாக நூல்களில் குறித்திருப்பதையே ஆரிய நாட்டின் எல்லையாகக் கூறுகின்றார்.

தமிழ்நாட்டை ஆரிய நாடாகக் கூறுகின்ற பாரதியார் தமிழர்களின் பெருமையை ஆரியர்களின் பெருமையாகக் கூறுகின்றாரா என்றால் இல்லை.

"ஆதிமறை தோன்றிய ஆரிய நாடே" என்று கூறுகின்றார்.

மேலும்,

"முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்த வில் யாருடைய வில்" ஆரிய ராணியின் வில் ஆரிய ராணியின் சொல் ஆரிய தேவியின் தேர் என ஆரியர்களின் பெருமையாக ஆரிய இராமனின் பெருமையைக் கூறுகின்றார்.

ஆரியர்களுடைய வேதங்களைக் (ஆங்கில ஆட்சியின் துணையைக் கொண்டு) கற்றறிந்த திராவிடர்கள், வேதங்களின் உண்மையை எடுத்துக் கூறியிருக்கின்றார்கள்.

தங்களுக்கு மாறுபட்டவர்களாயிருப்பவர்கள், "உயர்ந்த மாடி வீடுகளில், சிறந்த அணிகளோடு, நிறைந்த வாழ்வு வாழுகின்றார்களே" என வயிறெரிந்து இந்திரனையும் பிற தேவர்களையும் அழைத்து, இந்தத் தஸ்யூக்களை அரக்கர்களை அழித்துவிடுக" என வேண்டிக் கொண்ட பகுதிகளே வேதத்தில் நிரம்பவுண்டு என்று விளக்கங் கூறுகின்றார்கள். மகாகவி பாரதியார் கிருஷ்ணனை அழைத்துக் கூறுகின்ற கூப்பாட்டை நன்கு சிந்தித்துப் பாருங்கள்.

"ஆரியர்தம் தர்மநிலை ஆதரிப்பான்" "ஆரியர் பாழாகாது அருமறையின் உண்மை தந்த" "எங்கள் ஆரிய பூமியெனும் பயிர் மங்களம் பெற" "ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே" "ஆரிய! நீயும் நின் அறமறந்தாயோ" "வெஞ் செயலரக்கரை வீட்டிடுவோனே" "ஆரியர் கோனே"

இக்கூப்பாட்டிற்கும் வேதங்களில் காணப்படும் பழைய ஆரியர்களின் கூப்பாட்டிற்கும் ஏதேனும் வேறுபாடு காண முடிகிறதா?.

தமிழருக்குத் தமிழ் மொழியைத் தந்தவர்களே ஆரியர்கள் தான் என்பது ஆரியர்களின் கூற்று. தமிழர்கள் காட்டுமிராண்டிகளாயிருந்தார்கள். அவர்களை நாரிகமுடையவர்களாக்கித் தமிழைச் செம்மையாக்கித் தந்தவர் குடத்திலிருந்து பிறந்த அகத்திய முனிவர் என்பது ஆரியர்கள் கூறுங்கதை. இதனையேதான் தமிழின் பெருமையாக உலக மகாகவி கூறுகின்றார்.

"ஆதிசிவன் பெற்று விட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு...... இலக்கணஞ் செய்து கொடுத்தான்"

எனவும்

"ஆன்ற மொழிகளினுள்ளே உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்"

இவ்வடிகளின் பொருளை நன்றாகச் சிந்தியுங்கள். இவை ஆரியத்தின் பெருமையை விளக்குகின்றதா? தமிழின் பெருமையை விளக்குகின்றதா?

வஞ்சத்திற்கு ஆண்மை என்பது ஆரியர்களின் அகராதிப் பொருள். வாலியை மறைந்து கொன்ற இராமன் பேராண்மையாளர் புருடோத்தமன் என ஆரியங்கூறும். அதே போல பாரதியார் ஆசையைப் பாருங்கள்!

"ஆரிய நாட்டினர் ஆண்மை யோடியற்றும் சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக"

எனக் கூறுகின்றார். இவ்வாறு, பாரதியார் ஆரிய நாடு, ஆரிய இனம், ஆரிய மொழி, ஆரியக் கலை, ஆரியக் கடவுள், பெருமைகளையே பெருமையாகப் போற்றிப் பாராட்டியிருக்க, அவரைத் திராவிட இனத்தவர் போற்றுவது மானத்தோடு பொருந்திய செயலாய் இருக்க முடியுமா?

தீபாவளி, கிருஷ்ணஜயந்தி, ராமநவமி, சமணர் கழுவேற்றப்பட்ட உற்சவம் ஆகியவற்றைக் கொண்டாடுவது ஆரியர்களின் பெருமையையும் திராவிடர்களின் சிறுமையையும் எவ்வாறு உணர்த்துகின்றதோ, அதுபோலத்தான் பாரதியார் விழாக் கொண்டாடுவதிலும், பாரதியாருக்கு மண்டபம் சமைப்பதிலும் உள்ளது என்றால் யாரேனும் மறுத்துக்கூறவியலுமா?

பாரதியாருக்குக் கோவில் கட்டுவதிலோ அல்லது அதுபோன்ற பிற செயல்களிலோ நமக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால், இத்தகைய செயல்களில் தமிழர்கள் திராவிடர்கள் கலந்து கொள்ளலாமா? எட்டையாபுரம் ராஜாவைப் போன்ற குறு நில மன்னர்கள், ஆரியத்தின் பெருமைக்கும் திராவிடத்தின் இழிவுக்கும் மடி தாங்கலாமா? என்ற கேள்வியை இனமானமுள்ள திராவிடன் கேளாமல் இருக்க முடியுமா?

திராவிட மந்திரிகளோ என்றால், அவர்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஏனெனில் அவர்கள் நிலைமை அப்படி. அவர்கள் பெயரையே, ஆரியர்கள், மந்திரிப் பட்டியலிலிருந்து அழிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கடைசி எழுத்திலே கையை வைத்து "ரி"யை அழித்த நிலையில்தான், இன்று அவர்கள் இராமயணத்தில் காணப்படும் குரங்கு வால்நரர்களைப் போல, ஆரிய உயர்வுக்குப் பாடுபட வேண்டியவர்களாய் ஆகிவிட்டார்கள். அனுமாரைப் போல இந்நாட்டு இளைஞர்களும் ஆகவேண்டும் என்று, திராவிட மந்திரிகளே வாய் விட்டுக் கூறுகின்றார்கள்.

நிற்க, அனுமார் கோவில்கட்டி அனுமார் படை ஏற்படுத்தி, வணங்கித் தொண்டு செய்யும் திராவிடர் இது செய்வதுதானா அருமை? என்று திராவிட இன உணர்வு கொண்டவர்கள் அமைதி கொள்ளலாம். ஆனால், பாரதியைப் பெருமைப்படுத்துகின்றவர்கள், உண்மையிலேயே தமிழைப் பெருமைப்படுத்தியவர்கள் என்றோ, தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்தியவர்கள் என்றோ தமிழரைப் பெருமைப்படுத்தியவரென்றோ கூறமுடியுமா? இதை நாம் கேட்கவில்லை. பாரதியார் பாடியன என்று மேலே எடுத்துக்காட்டிய பகுதிகளே இக்கேள்வியைக் கேட்கின்றன.

செவியுடையோர் சிந்தனை செய்யும் திறமுடையோர் இதை நன்கு உணரலாம்.

இவ்விழாவிற்குப் பொருளுதவி செய்தவர்களும், விழாவில் போய் மகிழ்ந்தவர்களும், விழாவை வெவ்வேறு வகையில் பெருமைப்படுத்தியவர்களும், ஆரியத்தின் பெருமை, ஆரிய உயர்வு, என்பதல்லாமல் தமிழின் பெருமை, தமிழ்நாட்டின் உயர்வு என வாயால் பேச முடியுமா? என மனதில் கையை வைத்துக் கூறுங்கள்.

திராவிட உணர்ச்சியைச் சிதைப்பதற்காகச் செய்யப்படும் ஆரியர்களின் சூழ்ச்சிகளில் ஒன்றே, இப்பாரதி மண்டப விழாவும் பாரதி விழாவும் என்பதை, இப்போதாவது திராவிடர்கள் உணர்ந்து விழித்தெழுவார்களாக!

'ஈட்டி' என்ற புனைப்பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை."குடிஅரசு", 18-10-1947

** நன்றி: தமிழ் ஓவியா
** நன்றி : periyaarwritings.org

No comments:

Post a Comment