ஆறாவது ஆண்டு
நமது “ குடி அரசு” ஐந்து ஆண்டு நிறைவு பெற்று ஆறாவதாண்டு முதல் மலராய் இவ்வாரம் வெளியாகின்றது.
“குடி அரசு” தான் ஏற்றுக் கொண்ட ஆரம்பக் கொள்கையில் இருந்து சிறிதும் பின் வாங்காமலும் விருப்பு, வெருப்புக்கு கொள்கைகளை மாற்றிக் கொள்ளாமலும் ஏதோ தன்னால் கூடிய தொண்டை மனப் பூர்வமாய் செய்து கொண்டு வந்திருக்கின்றது. அன்றியும் குடி அரசானது ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இது வரை மக்களிடம் செல்வாக்கும் மதிப்பும் பெற்று வந்ததுடன் நாளுக்கு நாள் முற்போக்கடைந்தும் வந்திருக்கின்றது.
இவ்வாறாவது ஆண்டும் அந்தப்படி முடியும் என்கின்ற விஷயத்தில் நமக்கு அதிக நம்பிக்கை இல்லை. ஏனெனில் அது இனிச் செய்யக் கருதி இருக்கும் தொண்டானது கொஞ்ச காலத்திற்கு பாமர மக்களிடம் நமக்குள்ள செல்வாக்கையும் பணக்காரர்கள் பண்டிதர்கள் பெரிய அதிகாரிகள் பதவியா ளர்கள் என்பவர்களிடம் நமக்கு உள்ள செல்வாக்கையும் இழக்க நேரிடு வதுடன் “குடி அரசை” இது வரை ஆதரித்து வந்தவர்களாக காணப்பட்ட வர்களின் எதிர்ப்பையும் அனுபவிக்க வேண்டிய நிலையைக் கொண்டு வந்துவிடும் என்றே நினைக்கிறோம். அதாவது நாம் சென்னைக்கு போகும் போது ஒரு தலையங்கத்தில் தெரிவித்தது போல “குடி அரசு” பார்ப்பனர் களை வைது அவர்கள் செல்வாக்கை ஒழித்து பார்ப்பனர்களிடம் இருக்கும் உத்தியோகங்களைப் பிடுங்கிப் பார்ப்பனரல்லாதார் வசம் ஒப்புவிக்க மாத்திரம் ஏற்பட்டதல்ல என்றும் பாமர மக்களை ஏய்த்துப் பிழைக்கின்ற வர்கள் எல்லோரையும் வெளியாக்கி மத இயலில் உள்ள மூட நம்பிக்கையை ஒழிக்க முயற்சிப்பது போலவே அரசியல், உத்தியோக இயல், பொருளாதார இயல், சமூக இயல், பத்திரிகை இயல், பண்டித இயல், வைத்திய இயல், பணக்கார இயல், பார்ப்பனரல்லாதார் இயக்க இயல் என்பன முதலாகியவை களில் உள்ள மூட நம்பிக்கைகளையும் புறட்டுகளையும் வெளியாக்கி அவைகளையும் ஒழிக்க வேண்டிய வேலைகளை மேற்போட்டுக் கொள்ளும் போது இவ்வளவு இயல்களின் எதிர்ப்பும் நமக்கு மிக்க கஷ்டத்தை கொடுத்து தான் தீரும். சிற்சில சமயங்களில் அவ்வெதிர்ப்புகளை சமாளிக்க நமக்கு சக்தி இல்லாமல் போனாலும் போகலாம். அதனால் பத்திரிகை முற்போக்கும் செல்வாக்கும் சற்று, ஏன்? அதிகமாகவும் குறைந்தாலும் குறையலாம்.
ஆன போதிலும் அவைகள் இந்நாட்டிற்கு அதிலும் பார்ப்பன ஆதிக்கம் குறைந்த இந்த சந்தர்ப்பத்திற்கு முக்கியமாய் தேவையானதாய் இருப்பதால் நமது செல்வாக்கையும் பத்திரிகை முன்னேற்றத்தையும் பிரதானமாய்க் கருதாமல் மக்களின் மூட நம்பிக்கைகளையும் சுயநலக்காரர் களின் புறட்டுகளால் மக்கள் ஏமாறுவதையும் ஒழிப்பதையே பிரதானமாய்க் கருதி அதில் இறங்கித் தீர வேண்டியவர்களாயிருக்கின்றோம்.
ஏனெனில் நாம் காங்கிரசிலிருந்து தொண்டாற்றிய காலத்தில் நம்முடன் கூட உழைத்து வந்த திருவாளர்கள் வரதராஜுலு, ராஜகோபாலாச்சாரியார், திரு. வி. கலியாணசுந்தர முதலியார் போன்றவர்களிடம் இருந்து நாம் பிரிந்ததும் அவர்களோடு அபிப்பிராய பேதங்கொண்டு சண்டை போட்டதும் எதற்காக? மற்றும் நாம் தலைவராய்க் கொண்டு கண் மூடித்தனமாய் பின்பற்றி வந்த திரு. காந்தியாரையும் கண்டித்து வருவது எதற்காக?
சொந்த விரோதத்திற்காகவா? அல்லது சொந்த சுய நலத்திற்காகவா? என்பதை யோசித்துப் பார்த்தால் உண்மைக் காரணம் விளங்காமல் போகாது. அவர்களது கொள்கை பிடிக்கவில்லை. அவர்களது தொண்டு நாட்டிற்கு நலந்தருவதல்லவென்கின்ற காரணங்களையே முக்கிய ஆதாரங்களாய் வைத்து அவர்களோடு போராடி அவர்களிடம் நமக்கு காணப்படும் குறைகளை வெளிப்படுத்தி வந்தோம். இன்றும் வருகின்றோம். அதே போல் இப்போது சுயமரியாதை இயக்கத்தின் பேராலோ ஜஸ்டிஸ் கட்சியின் பேராலோ சீர்திருத்தத்தின் பேராலோ நம்முடன் உழைத்து வந்தவர்களின் அபிப்பிராய பேதத்தையும் அவர்களது கொள்கைகளால் நாட்டின் நலத் திற்கோ நமது தொண்டிற்கோ விபரீதம் ஏற்படும் என்கின்ற நிலை தோன்றும் போது அவர்களுடன் போராட வேண்டியது நமது கடனாகி விட்டது. ஆகையால் இந்த ஆறாவது ஆண்டு பலருக்கு இன்பத்தை கொடுக்காத தானாலும் நமது உண்மை நண்பர்களுக்கு பூரண திருப்தியையே அளிக்கும் என்கின்ற நம்பிக்கையின் மீது இறங்கி விட்டோம்.
குடி அரசு – தலையங்கம் – 04.05.1930
No comments:
Post a Comment