Sunday, 9 April 2017

உண்ணாவிரதப் பலன் – 02.10.1932

உண்ணாவிரதப் பலன் (குடி அரசு – தலையங்கம் – 02.10.1932)


திரு. காந்தியவர்கள் உண்ணாவிரதமிருந்ததன் பலனாகத் தாழ்த்தப் பட்டோர்க்கு ஏற்பட்டிருந்த தனித்தொகுதித் தேர்தல் முறை ரத்து செய்யப் பட்டுவிட்டது. புனாவில் இந்துத் தலைவர்கள் என்பவர்களும், தாழ்த்தப்பட்ட வகுப்புத் தலைவர்கள் என்பவர்களும் கூடிச் செய்து கொண்ட சமரச முடிவை பிரிட்டிஷ் பிரதம மந்திரியவர்கள் ஆட்சேபணையின்றி ஒப்புக் கொண்டு விட்டார். திரு. காந்தியும் தனது உண்ணா விரதத்தை முடித்து விட்டார்.
திரு. காந்தியவர்கள் உண்ணாவிரதமிருந்ததனாலும், தலைவர்கள் என்பவர்கள் சமரச மகாநாடு கூடி ஒப்பந்தஞ் செய்து கொண்டதனாலும், அவ் வொப்பந்தத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் அங்கீகரித்துக் கொண்டு, தாழ்த்தப் பட்டவர்களின் தனித் தொகுதித் தேர்தல் முறையை ரத்து செய்ததனாலும் உண்டான பலன் என்ன என்பதை மாத்திரம் பார்ப்போம்.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வகுப்புப் பிரச்சினைத் தீர்ப்பின்படி, தாழ்த்தப்பட்டோர்க்கு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மகாணச் சட்டசபை களுக்கும் ஏற்பட்டிருந்த மொத்த ஸ்தானங்கள் எழுபத்தொன்று. இந்த எழுபத் தொன்று ஸ்தானங்களுக்கும் தெரிந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் அனை வரும், அந்த வகுப்பினரின் ஓட்டுக்களாலேயே தெரிந்தெடுக்கப் படுவார் களாகையினால், அவர்கள் யாருடைய தயவுக்கும், தாட்சண்யத்திற்கும் கட்டுப்படாமல் தங்கள் சமூக நன்மைக்கு உண்மையாகவும், உறுதியாகவும், தைரியமாகவும் போராடலாம். தங்கள் சமூகத்திற்கு எதிராக உள்ள வேறு கூட்டத்தாரின் தயவில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுடைய தயவு தாட் சண்யங்களுக்கும் கட்டுப்பட்டிருக்கும் நிலையில் உள்ள நூற்றுக்கணக்கான பிரதிநிதிகளைவிட, யாருடைய தயவையும் பொருட்படுத்தாமல் சுயேச்சை யாகத் தமது சமூக உரிமைக்குப் போராடும் நிலையில் உள்ள சில பிரதிநிதிகள் இருந்தாலும் போதும் என்பதே நமது அபிப்பிராயம். இதனாலேயே நாம் ஆதி முதல் தாழ்த்தப்பட்டார்க்குத் தனித்தொகுதித் தேர்தல் முறைதான் வேண்டு மென்றும் கூறி வந்தோம். அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இவ்வாறே கூறிவந்தார்கள். ஆனால் திரு. காந்தியவர்கள் பட்டினி கிடந்ததன் பலனாகத் தாழ்த்தப்பட்டார்க்கு ஏற்பட்டிருந்த இந்தச் சௌகரியம் பலிகொடுக்கப்பட்டு விட்டது.
இனி இப்பொழுது ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தத்தைப் பற்றிச் சிறிது ஆராய்வோம். இவ்வொப்பந்தப்படி, இந்தியா முழுவதுமுள்ள எல்லா மாகாண சட்டசபைகளுக்கும், பொதுத் தொகுதியின் மூலம் தேர்ந்தெடுக்கப் படும் மொத்த ஸ்தானங்களில் எண்ணிக்கை நூற்றுநாற்பத்தெட்டாகும். இந்த நூற்று நாற்பத்தெட்டு ஸ்தானங்களுக்கும் தேர்ந்தெடுக்கப்படும் நூற்று நாற்பத்தெட்டு பிரதிநிதிகளும் இந்துக்கள் ஓட்டினாலும் தாழ்த்தப்பட்டார் களின்  ஓட்டினாலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதில் ஒவ்வொரு ஸ்தானங்களுக்கும் அபேட்சகராக நான்கு பிரதிநிதிகளே முன்வரலாம். இந்த நான்கு பிரதிநிதிகளும் முதலில் தாழ்த்தப்பட்ட வகுப்பு ஓட்டர்களால் மாத்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டு பிறகு அவர்கள் பொதுத் தொகுதியில் போட்டி போட வேண்டும்.
இவ்வாறு தாழ்த்தப்பட்டாருக்கு முன்னிருந்ததைக் காட்டிலும் இரண்டு பங்கு ஸ்தானங்களுக்கு மேல் அதிகமான ஸ்தானங்கள் ஏற்பட்டு விட்ட தனாலும் பூர்வாங்கத் தேர்தல் முறை ஏற்பட்டிருப்பதனாலும் தனித் தொகுதியை விட அதிக சௌகரியம் ஏற்பட்டு விட்டதென்றும் தேசீயப் பத்திரிகைகள் என்பன வெல்லாம் ஒரேயடியாக ஆர்ப்பாட்டம் புரிகின்றன. ஆனால் உண்மையில் எவ்வளவு ஸ்தானங்கள் அதிகப்பட்டாலும் இதனால் தனித்தொகுதியை விட அச்சமூகத்திற்கு ஒன்றும் நன்மையுண்டாகி விட வழியில்லை என்பதில் சந்தேகமில்லை. டாக்டர். அம்பெட்காரின் பிடிவாதத் தினால் பூர்வாங்கத் தேர்தல் முறை ஏற்பட்டிருப்பது ஒன்றுதான், சிலராவது அச்சமூகத்தினரின் நம்பிக்கைக்குப் பாத்திரமுள்ள பிரதிநிதிகள் தேர்ந்தெடுக் கப்பட்டலாம் என்று எண்ண இடமிருக்கிறது.
தாழ்த்தப்பட்டவர்களில் வயது வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை அளித்தாலும் கூட, உயர்ந்த  ஜாதி இந்துக்களின் ஓட்டர்கள் தொகையே அதிகமாக இருக்கும். இந்நிலையில் தாழ்த்தப்பட்டவர்களாலேயே பூர்வாங்க மாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொதுத் தொகுதியில்  நிறுத்தப்படும் நான்கு அபேட்சகர்களில் யார் உயர்ந்த ஜாதி இந்துக்களின் நம்பிக்கைக்குப் பாத்திர மாயிருக்கிறார்களோ அவர்கள் தான் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட முடியும். முற்றும் தாழ்த்தப்பட்டார் உரிமைக்கு அஞ்சாமல் போராடும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படமுடியாது. உதாரணமாக, ஒரு ஸ்தானத்திற்கு நடைபெற வேண்டிய பூர்வாங்கத் தேர்தலில், ராவ் பகதூர், சீனிவாசன், டாக்டர் அம்பெட்கார், திரு. வி. ஐ. முனிசாமி பிள்ளை, ஒரு வெற்றிவேலு இன்னுஞ் சிலர்  போட்டிப் போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். இவர்களில் முதல் மூவரும், அவ்வகுப்பினரின்  மெஜாரிட்டியான ஓட்டர்களால் தெரிந் தெடுக்கப்படுவார்கள் என்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை. நான்காவதாக, உள்ள வெற்றிவேலு என்பவரிடம் அச்சமூக மக்களுக்கு நம்பிக்கையில்லாவிட்டாலும், இந்து சமூகத்தைச் சேர்ந்த பெரிய மிராசு தார்கள், அய்யர், அய்யங்கார்கள் முதலியவர்களின் முயற்சியால் அவர் நான்காவது அபேட்சகராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். இவ்வாறு பூர்வாங்கத் தேர்தலில், தாழ்த்தப்பட்ட சமூகத் தாரின் முழு ஆதரவோடும் முதன்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராவ் பகதூர் சீனிவாசன், டாக்டர் அம்பெட்கார் திரு. வி. ஐ. முனிசாமி பிள்ளை ஆகியவர்கள் இந்து மிராசுதாரர்கள் அய்யர், அய்யங்கார்கள் ஆகியவர் களின் சொல்லுக்குத் தாளம் போடும் வெற்றிவேலு ஆகிய நால்வரும் ஒரு ஸ்தானத்திற்கும் போட்டி போடுவார்களானால் இவர்களில் யார் தேர்ந்தெடுக் கப்படுவார்கள் என்று கேட்கின்றோம். பணக்கார மிராசுதார்களின் சொல்லை யும், அய்யர், அய்யங்கார்களின் சொல்லையும், கைகட்டி, வாய்பொத்திக் குனிந்து நின்று கேட்டு அதன்படி நடக்கத் தயாராக இருக்கும் வெற்றிவேலு என்பவரே தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதை யார் மறுக்க முடியும்? ஆகவே இத்தகைய பிரதிநிதிகளாகவே சட்டசபைக்கு வந்து சேர்வார்களாயின் அவர் களால் அச்சமூகத்திற்கு என்ன நன்மை உண்டாகிவிட முடியும்? இத்தகைய பிரதிநிதிகளின் எண்ணிக்கை எவ்வளவு இருந்தால் என்ன?
இப்படி யில்லாமல் பூர்வாங்கத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் நான்கு பிரதிநிதிகளும் அச்சமூகத்தின் நம்பிக்கைக்கும் பாத்திரமுடைய பிரதிநிதிகளாகவே தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் பொதுத்தொகுதியில் போட்டிப் போட்டு வெற்றி பெறும் பிரதிநிதி அச்சமூகத்தின் உண்மையான பிரதிநிதியாக இருக்க முடியும். இவ்வாறே இந்த 148 ஸ்தானங்களுக்கும் பூர்வாங்கத் தேர்தல் நடத்தினாலும் அவைகளுக்கு அபேட்சகர்களாக நின்று வெற்றி பெறும் 592 அபேட்சகர்களும் அச்சமூகத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமுடையவர்களாகத்தான் இருப்பார்களென்று கூற முடியாது. ஆகை யால் புதிய தேர்தல் முறையின்படி, தாழ்த்தப்பட்டோர் சமூகத்தின் உண்மை யான பிரதிநிதிகளாக ஒரு சில பிரதிநிதிகளாவது தேர்ந் தெடுக்கப்படு கிறார்களோ இல்லையோ என்பது சந்தேகம் என்றுதான் கூறுவோம். இக் காரணங்களால் தான் தனித் தொகுதி தேர்தல் முறையைவிட கூட்டுத் தொகுதி தேர்தல் முறை எந்த வகையினும் சிறந்ததல்ல என்று கூறுகின்றோம். தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் கூறுகின்றார்கள்.
ஆயினும் பூர்வாங்கத் தேர்தல் முறையை ஏற்படுத்தியிருப்பதன் மூலம் உண்மையுடன் போராடக் கூடிய சில பிரதிநிதிகளாவது சட்டசபைக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கைக்கு இடமாக இவ்வொப்பந்த மாவது ஏற்பட்டது பற்றிச் சிறிது ஆறுதலடைகின்றோம். இதன் மூலம் திரு. காந்தியவர்களின் பிராணத்தியாகத்தைத் தடுத்த டாக்டர் அம்பெத்கார், சர். சாப்ரூ, திரு. ஜெயகர் முதலியவர்களின் முயற்சியையும் பாராட்டுகின்றோம். ஆனால் திரு. காந்தியவர்களின் பட்டினியின் மூலம் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சட்டசபை பிரதிநிதித்துவத்தில் ஏற்பட்டிருந்த நன்மையில் முக்கால் பாகம் நாசமாக்கப் பட்டது என்பதையும் கூறாமல் இருக்க முடியவில்லை.
அடுத்தபடியாக இவ்வுண்ணாவிரதத்தின் மூலம் ஏற்பட்ட பலன் என்ன என்பதைப் பார்ப்போம். திரு. காந்தியவர்கள் எதைச் செய்தாலும், எதைப் பேசினாலும் “கடவுள் கட்டளை” “கடவுள் அபிப்பிராயம்” என்ற பாடம் படிக்கின்றனவர் என்பது நமக்கு புதிய விஷயமல்ல. நமது நாட்டில் வாழும் குருட்டு நம்பிக்கையுள்ள பாமர மக்களையெல்லாம் ஏமாற்ற வேண்டு மானால், “கடவுளை”யும்,  “மதத்தை”யும் இழுத்தால் தான் முடியும் என்பது திரு. காந்தியவர்களுக்கு நன்றாய் தெரிந்த விஷயம். மனிதனுடைய செய்கைக் கும், அபிப்பிராயத்திற்கும் மதிப்பு கொடுக்கும் அறிவு இன்னும் நமது மக்களுக்கு உண்டாகவில்லை. ஆகையால் “எனது செய்கை” “எனது அபிப் பிராயம்” என்று சொல்லி யார் எதைச் செய்தாலும், சொன்னாலும், அவைகள் எவ்வளவு உண்மையாயிருந்தாலும், நன்மையுண்டாக்கக் கூடியவைகளா யிருந்தாலும், அவைகளுக்கு நமது தேசத்தில் கௌரவம் ஏற்படுவதில்லை. ஆகையால் தான் திரு. காந்தியார் எதையும் கடவுள் தலையில் போட்டுப் பாமர மக்களை ஏமாற்றுகிறார் என்பதில் கடுகளவு சந்தேகமில்லை. ஆகவே, வழக்கப்படி உண்ணா விரதத்திற்கும் “கடவுளை” இழுத்து விட்டார்.
அன்றியும், தமது உண்ணாவிரதத்தின் நோக்கமும் தனித் தொகுதியை ரத்து செய்வது மாத்திரமன்று, தாழ்த்தப்பட்டார்க்குத் தற்போதுள்ள சமூகத் தடைகளையெல்லாம் ஒழித்து அவர்களையும் இந்து சமூகத்துடன் ஒன்றுபடச் செய்ய வேண்டும்  என்று நன்றாக வற்புறுத்திக் கூறினார். இதனால், பலர் அச்சமூகத்தார்க்குக் கோயில் பிரவேச உரிமை அளிக்கவும், மற்றும் குளம், கிணறு, பள்ளிக் கூடம் முதலியவைகளில் சமஉரிமை அளிக்கவும் முயற்சி செய்தனர். இம்முயற்சியும் தீவிரமாக நடந்தது வடநாட்டிலேயாகும். தென் னாட்டில் அவ்வளவு மும்முரமாக நடைபெறவில்லை. ஆனால் பல விடங்களில் உபவாசங்களும், கோயில்களில் பூசைகளும், கூட்டங்களில் பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன. இவைகளின் மூலம் பாமர மக்களை, “உபவாசம்” “பூசை” “பிரார்த்தனை” முதலியவைகளில் தெய்வத் தன்மை யிருப்பதாகவும், அவைகளின் மூலம் காரிய சித்திகள் உண்டு என்பதாகவும் நம்பச் செய்யப்பட்டன. இத்தகைய முட்டாள் தனந்தான் நமது மக்களை இன்று சோம்பேறிகளாகவும், மூடர்களாகவும், அடிமைகளாகவும் ஆக்கி வைத்திருக்கின்றன என்பதை அறிந்திருந்தும், காந்தி பக்தர்கள் இப்பிரசாரம் பண்ணியது அயோக்கியத்தனத்தைத் தவிர வேறல்ல என்றே கூறுவோம். ஆகவே திரு. காந்தியின் விரதத்தால் நமது நாட்டுக்குக் கிடைத்த இரண்டா வது பலன் “உபவாசம்” “பூசை” “பிரார்த்தனை” என்னும் சோம்பேரித் தனப்பிரச்சாரமும், முட்டாள் தனப்பிரச்சாரமும், குருட்டு நம்பிக்கைப் பிரச் சாரமும் செய்யப்பட்டதுதான்.
திரு. காந்தியின் விருப்பத்தின் படியும், திரு. ராஜகோபாலாச்சாரியின் அறிக்கையின் படியும், உபவாசமும், பிரார்த்தனையும் செய்த நமது நாட்டுப் பார்ப்பனர்களில் யாராவது தீண்டாதார்க்கு என்ன உபகாரம் பண்ணினார்கள் என்று கேட்கின்றோம். திரு. காந்தி இந்து மதத்தைக் காப்பாற்றப் பாடுபடுகிறார் என்னும் எண்ணத்துடன் அவர் பொருட்டு உபவாசமும் பிரார்த்தனையும் செய்தார்களேயொழிய தீண்டாதார் துயரம் அகல வேண்டும் என்னும் கருத்துடன் இவைகளைச் செய்த பார்ப்பனர் ஒருவரேனும் நமது நாட்டில் உண்டா?
தனித் தொகுதியை ஒழிக்கும் விஷயத்தில் உயிரைவிடத் துணிந்த திரு. காந்தியின் பொருட்டு நாடெங்கும், பத்திரிகைகளும் காந்தி பக்தர்களும் பிரசாரமும், விளம்பரமும் பண்ணியதில் பதினாயிரத்தில் ஒரு பங்காவது, தீண்டாமையை ஒழிக்க உண்ணாவிரத மிருக்கும் திரு. கேளப்பன் பொருட்டுச் செய்யப்படுகிறதா என்று பாருங்கள். குருவாயூர் கோயிலில் தாழ்த்தப்பட் டோரை அனுமதித்தாலொழிய தனது உண்ணா விரதத்தை நிறுத்துவ தில்லையென்று சென்ற 20 – 9 – 32 முதல் திரு. கேளப்பன் அவர்கள் உண்ணா விரதமிருந்து வருகிறார். இதற்காக எத்தனை பேர், உபவாசமும் பிரார்த் தனையும் செய்யப் போகிறார்கள்?  இதைக் கொண்டே தீண்டாமையை உண்மையாக விலக்கும் விஷயத்தில் நமது நாட்டு உயர்ந்த சாதி மக்களுக்கு எவ்வளவு கவலையிருக்கிறதென்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் திரு. காந்தியவர்கள், உண்ணா விரதத்தை முடித்தபின் கூறியுள்ள அபிப்பிராயத்திலும் அதற்குமுன் குறிப்பிட்டது போலவே, “தீண்டாமையை குறிப்பிட்ட ஒரு காலத்திற்குள் மும்முரமாக வேலை செய்து ஒழிக்காவிட்டால் மீண்டும் உண்ணாவிரத்தை கைகொள்ளுவேன்” என்று கூறியிருக்கிறார்.
இவ்வாறு உண்ணாவிரதமிருப்பாரானால், அப்பொழுது, தற்சமயம், திரு. கேளப்பன் அவர்களின் உண்ணாவிரதத்தின் பொருட்டு நமது நாட்டு பார்ப்பனர்களும், காந்தி பக்தர்களும் எவ்வளவு கவலை எடுத்துக் கொள்ளு கிறார்களோ அவ்வளவு கவலைதான் எடுத்து கொள்ளுவார்கள் என்று உறுதியாகக் கூறுகின்றோம்.
நாம் சென்ற வாரத்தில் குறிப்பிட்டிருந்தது போலவே ஒரு பார்ப்பன ராவது திரு. காந்தியிடம் அனுதாபங் காட்டமாட்டார் என்பது உண்மை. இப்பொழுதே தீண்டாமை விலக்குக்கு எதிர்ப் பிரசாரங்களும் கண்டனங் களும் புறப்பட்டு விட்டன இன்னும் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆகையால் இனி திரு. காந்தியை எந்த பார்ப்பனரும் லட்சியம் பண்ண மாட்டார்கள் என்பது நிச்சயம்.
ஆகையால் உண்மையிலேயே தீண்டாதார்க்கு விமோசனம் உண்டாக வேண்டுமானால் அவர்கள் இந்துக்களை நம்பியிருப்பதனாலாவது அவர்களோடு சேர்ந்திப்பதனாலாவது முடியாது என்பதை அறிய வேண்டும்.

கேவலம் கோயில் பிரவேசத்தால் மாத்திரம் அவர்கள் நன்மை யடைந்து விட முடியாது. கோயில்களின் மேல் பக்தி கொண்டு நம்பிக்கை வைத்துக் கொண்டு அவைகளில் பிரவேசிக்கும் உரிமை மாத்திரம் பெறுவார் களாயின் நன்மைக்குப் பதிலாகத் தற்பொழுது இருப்பதை விட அவர்களுக்கு இன்னும் அதிக தீமையையே உண்டாகும் என்பதில் தடையில்லை கொஞ்சம் நஞ்சம் சம்பாதிக்கும் பொருளையும் கோயில் உற்சவங்களுக்குச் செல்லுவ தன் மூலமும் ‘அர்ச்சனைகள்’ ‘பூஜைகள்’ என்பவைகளின் பெயரால் செலவழிப்பதன் மூலமும் இன்னும் வறுமையடையவார்களென்பது திண்ணம். ஆகையால் ‘பொதுச் சொத்தாகிய கோயிலில் நமக்கும் செல்ல உரிமையிருக்க வேண்டும்’ என்னும் எண்ணத்துடன் மாத்திரம் கோயில் பிரவேசத்தை ஆதரிக்க வேண்டும் என்றுதான் நாம் தாழ்த்தப்பட்ட சமுகத் தார்க்கு எச்சரிக்கை செய்கின்றோம்.
நிற்க திரு. காந்தியின் உண்ணாவிரதத்தின் மூலம் தீண்டாமை விலக்கு விஷயத்தில் வெற்றி ஏற்பட்டதா என்று பார்த்தால் நமது தமிழ்நாட்டை பொறுத்த வரையிலும் ஒன்றுமில்லை என்று தான் சொல்ல வேண்டி யிருக்கிறது.
இனி திரு. காந்தியின் வெற்றி என்று எல்லோரும் பிரசாரம் பண்ணு வதில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா? என்று பார்ப்போம். அவர் இதற்கு முன் தாழ்த்தப்பட்டார்களும் பொதுத் தொகுதியின் மூலம் போட்டிபோட்டுச் சட்ட சபைகளுக்கு வரவேண்டும் என்று கூறினாரே யொழிய பொதுத் தொகுதியில் ஸ்தானங்கள் ஒதுக்கி வைப்பதைக் கூட ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் இப்பொழுதோ, பொதுத் தொகுதியில் ஸ்தானங்கள் ஒதுக்கி வைப்பதையும் அதற்கும் கூடத் தனித் தொகுதித் தேர்தல் போலவே பூர்வாங்கத் தேர்தல் நடத்தும் முறையும் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆகவே இதில் திரு. காந்தியின் கொள்கைக்கு வெற்றி ஏதாவது இருக்கிறதா? என்று பாருங்கள். தனித் தொகுதித் தேர்தல் முறையை ரத்து செய்த வெற்றியை அவர் கடவுள் சக்தியால் பெற்றார்  ‘ஆத்ம சக்தி’யால் பெற்றார் என்று கூறுவதும் புரட்டு என்று சொல்வோம். “கடவுள் சக்தி”யும் ‘ஆத்ம சக்தியும்’ இருந்தால் இவர் ஏன் பட்டினி கிடந்து பிடிவாதம் பண்ண வேண்டும்? பட்டினி கிடந்து பிடி வாதம் பண்ணினால் தான் ‘கடவுள் சக்தி’யும் ‘ஆத்ம சக்தி’யும் தன்னுடைய அதிகாரத்தைச் செலுத்துமா?  ஆகையால் ‘கடவுள் சக்தி’ ‘ஆத்ம சக்தி’ என்று பிரசாரம் பண்ணுவதெல்லாம் மக்களை ஏமாற்ற வேண்டிச் செய்யப் படும் பிரசாரம் என்றே சொல்லுவோம்.
ஆகையால் திரு. காந்தியின் உண்ணாவிரதத்தால் நமது நாட்டுக்கு ஏற்பட்டபலன் தீண்டாதார்களின் சட்டசபைப் பிரதிநிதித்துவம் பாதிக்கப் பட்டதும் ‘உபவாசம்’, ‘பிரார்த்தனை’ முதலிய மூட நம்பிக்கைகளைப் ‘பிரசாரம்’ பண்ணப்பட்டதும் தான் என்று அறியலாம்.
குடி அரசு – தலையங்கம் – 02.10.1932

No comments:

Post a Comment