Thursday, 13 April 2017

அண்ணல் அம்பேத்கர் பற்றி பெரியார் - III

அண்ணல் அம்பேத்கர் பற்றி பெரியார் - III

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசாங்க நிர்வாக சபை மெம்பர் என்கின்ற முறையில் சென்னைக்கு வந்து 4, 5 நாள்கள் தங்கி இருந்து பல இடங்களில் பேசிவிட்டுப் போய் இருக்கிறார்.
அப்படி அவர்கள் பேசிய பேச்சுகளில் பார்ப்பனர்கள் பெரிய உத்தியோகங்களில் பதவிகளில் இருந்தால் எப்படி பார்ப்பனிய ஆதரவுக்கும் நலத்துக்கும் துணிகரமாய் வெள்ளையாய் பேசுவார்களோ அதுபோலவே பச்சையாய் பேசுகிறார் என்பது மிகுதியும், அதிசயப்படவும், பாராட்டத்தக்கதுமான காரியமாகும்.

நம் எதிரிகள் அவரை சர்க்கார்தாசர் என்று சொல்லக்கூடும்.  அதைப் பற்றி அவர் சிறிதும் பயப்படவில்லை.  பதவிக்கு அவர் வந்த உடன் இந்தப் பதவிக்கு நான் வந்ததின் பயனாய் என் இன மக்களின் நலத்துக்கு இப்பதவியைப் பயன்படுத்த முடியுமானால் - என் இன மக்களுக்கு ஏதாவது நலம் செய்ய முடியுமானால் நான் இதில் இருப்பேன், இல்லாவிட்டால் நான் வெளிவந்துவிடுவேன் என்று சொன்னார்.  அதுபோலவே பதவிக்கு அவர் சென்றது முதல் ஒவ்வொரு மூச்சிலும் தன் இனத்தின் பெயரையும் நிலைமையையும் எடுத்துச் சொல்லி சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் தன் இனத்தின் நலத்துக்கு ஏதாவது காரியங்கள் செய்து கொண்டு எதிரிகளை வெள்ளையாய் கண்டித்துப் பேசி நடுங்கச் செய்தும் வருகிறார்.
அவருக்கு அவருடைய வகுப்பாருடைய ஆதரவு இருக்கிறதா என்றால் அது பூஜ்ஜியம் என்பதோடு இனத்தார் அத்தனை பேரும் தனக்கு ஆதரவளிக்கும்படியான வலிமை பொருந்திய ஸ்தாபனமும் இல்லை.  இனத்தின் தக்க செல்வமோ செல்வாக்கோ துணிந்து வெளிவந்து ஆதரவளிக்கக் கூடியது ஆளுகளும் மிகக்குறைவு.
100 க்கு 99 பேர் ஏழை, கூலி தரித்திர மக்கள்.  இப்படிப்பட்ட நிலையில் உள்ள அவர், உத்தியோகம் தனக்குக் கிடைக்கத்தக்க விதமாக தனது வாழ்வில் பல அவதாரம் எடுக்காமலும் எதிரிகளிடம் நல்ல பேர் வாங்க -_ அவர்கள் மெச்சும்படி நடக்காமலும், இந்துக்களையும் இந்து மதத்தையும், இராமாயணம், மனுஸ்மிருதி முதலியவைகளையும் பார்ப்பனர்களையும் பச்சையாய் வைது கண்டித்து சிலவற்றைக் கொளுத்த வேண்டும் என்றும், சிலவற்றைத் தீயில் கொளுத்தியும் நான் இந்து மதத்தை விட்டு வெளியே போய்விடுகிறேன் என்றும், தேசியம் என்பது புரட்டு, தேசிய சர்க்கார் என்பது பார்ப்பன ஆட்சி, தேசிய சர்க்காரைவிட இன்றுள்ள சர்க்காரே மேல் என்றும் பேசி வருகிறார்.  மற்றும் தேசிய சர்க்கார் ஏன் கெடுதி என்றால்,  எந்த சுதந்திர தேசிய சர்க்கார் வந்தாலும் அது பார்ப்பன, வர்ணாசிரம, சர்க்காராகத்தான் இருக்கும் என்றும் வெடி வெடிக்கும் மாதிரியில் பேசி, தன் இன மக்களின் நம்பிக்கையையும், பாராட்டுதலையும் பெற்றுக் கொண்டு சட்டதிட்டங்களை லட்சியம் செய்யாமல் பேசி வருகிறார்.
இவரைப் பார்ப்பனர் சபிக்கலாம், காங்கிரசுக்காரர்கள் வையலாம், தேசியம் பத்திரிகைகள் யோக்கியப் பொறுப்பில்லாமல் எழுதலாம்; மற்றும் வகுப்புப் பேரால் பதவி பெற்று பதவிக்குப் போய் வகுப்பை மறந்துவிட்டு தங்கள் குடும்ப நலத்திற்கு ஆக பதவி அனுபவிப்பவர்கள் பொறாமைப்பட்டு இந்தச் சனியன் பிடித்த டாக்டர் அம்பேக்கர் நம்ம யோக்கியதை வெளியாகும்படி நடக்கிறாரே என்று பொறாமையும் ஆத்திரமும் கொள்ளலாம். ஆனால் தோழர் அம்பேத்கர் மேற்கண்டபடி பேசுவதும் நடப்பதும் இந்த நாசமாய்ப் போன சுயமரியாதை அற்ற பார்ப்பனரல்லாத சமுதாயத்தைத் தவிர மற்ற சமுதாயக்காரர்களின் பதவி பெற்ற எவ்வளவு தாழ்ந்த மனிதனும் செய்கிற காரியமே தவிர அம்பேத்கருக்கு மாத்திரம் புதிதல்ல.  ஆனால் மற்றவர்களைவிட இவர் சற்று வெளிப்படையாய் பேசுகிறார், எழுதுகிறார் என்று சொல்லிக் கொள்ளலாம்.  உதாரணமாக டாக்டர் அம்பேத்கர் சென்னை நகரசபை வரவேற்புக்குப் பதில் சொல்லும்போது பேசியதைக் கவனிப்போம்.
ஒரு கூட்டத்தார் எனக்கு வரவேற்புக் கொடுக்க சம்மதிக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். அதற்கு ஆகவே இந்த வரவேற்பைப் பெற நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏன் எனில் இந்த வரவேற்பு சடங்குமுறை வரவேற்பல்ல என்பதும் எனக்கு வரவேற்புக் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்பவர்கள் பிடிவாதமாய் இருந்து மெஜாரிட்டியாய் இருந்து வெற்றிபெற்று எனக்குக் காட்டிய அன்பென்றும் கருதுவதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பேசினார்.
அடுத்தார்போல் தேசியப் பித்தலாட்டத்தைப் பட்டவர்த்தனமாக்கினார்.
என்னவெனில், தேசிய சர்க்கார் என்றால் பார்ப்பன சர்க்கார்தானே!  1937இல் தேசியம் வெற்றிபெற்ற 7 மாகாணங்களும் பார்ப்பன முதல் மந்திரிகள் ஆதிக்கத்தில்தானே இருந்து வந்திருக்கிறது. நாளைக்கு எல்லா மக்களுக்கும் ஓட்டுக் கொடுத்து அதன்மூலம் ஒரு சர்க்காரை ஏற்படுத்தினாலும் அதிலும் பார்ப்பனர்கள்தானே ஆட்சி செலுத்துவார்கள்? இது மாத்திரமா, பெண்களுக்கு ஸ்தானம் வழங்கினாலும் அதிலும் பார்ப்பனத்திகளே மெஜாரிட்டியாய் வருகிறார்கள்;  தொழிலாளருக்கு ஸ்தானம் வழங்கினாலும் அதற்கும் பார்ப்பனர்களே பிரதிநிதிகளாய் வருகிறார்கள்.  இதுமாத்திரமா, தீண்டாத வகுப்பாருக்கு ஸ்தானம் வழங்கினாலும் அதிலும் பார்ப்பனர்கள் பிடித்துவைக்கிற ஆள்கள் தான் வருகிறார்களே தவிர வேறு யார் வருகிறார்கள்?  ஆகவே தேசிய சர்க்கார் என்னும் பித்தலாட்டத்திற்கும் இந்த நாட்டின் மானக்கேடான அரசியல் நிலைக்கும் இந்த உதாரணம் போதாதா என்று பேசுகிறார். இதற்குப் பார்ப்பனர்கள் தானாகட்டும் தேசியர்கள் தானாகட்டும் என்ன பதில் சொல்லக் கூடும்?
நான்சென்ஸ், ரப்பிஷ் என்று குரைத்து தங்கள் அயோக்கியத்தனங்களை மறைக்க முயற்சிக்கக் கூடுமே ஒழிய வேறு என்ன சமாதானம் சொல்ல முடியும்? சுயமரியாதை இயக்கம் இல்லாவிட்டால் இதெல்லாம் (இப்படி பார்ப்பனர் வெற்றிபெற்றது) கடவுள் செயல், அந்தராத்மா கட்டளை என்று சொல்ல முடியும். இப்போது தலையைக் கவிழ்ந்துகொள்ள வேண்டியதைத் தவிர இதற்கு வேறு பதில் இல்லை.
- குடிஅரசு - தலையங்கம் - 30.09.1944

No comments:

Post a Comment