ஜோசியம் என்றால் என்ன? அது உண்மையா?
இந்தியாவில் இந்துக்கள் என்பவர்கள் சாமி ஆடுதல் வாக்குச் சொல்லுதல், பூதம், பேய், பிசாசு, மனிதனை அடித்தல், மனிதனைப் பிடித்தல், மந்திரம் மந்திரித்தல், பில்லி சூனியம் செய்து மக்களுக்கு துன்பம் சாவு முதலியவை உண்டாக்குதல், குட்டி சாத்தான், கருப்பு முதலியவைகளைக் கொண்டு சித்து விளையாடுதல், வசியம் செய்து மக்களை ஸ்வாதீனப் படுத்தல், முன் ஜன்மம் பின் ஜன்மம் உண்டெனல் இவை முதலாகிய விஷயங்களில் நம்பிக்கைக் கொண்டு தங்கள் வாழ்க்கை நலத்திற்கு என்றும், எதிரிகளின் கேட்டிற்கு என்றும் எப்படித் தங்கள் பணத்தையும் நேரத்தையும் உபயோகிக்கின்றார்களோ அதுபோலவே தங்கள் வாழ்க்கைக்கு ஜோசியம் என்னும் ஒரு விஷயத்திலும் அதிக நம்பிக்கை வைத்து பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து வருகிறார்கள். இதனால் மக்களின் வாழ்க்கைக்கு எவ்வளவோ கெடுதிகளும், பொருள் நஷ்டம், காலம் நஷ்டம், தப்பு அபிப்பி ராயம் முதலியவைகளும் ஏற்பட்டு வருவதை கண்கூடாய்ப் பார்க் கின்றோம்.
சாதாரணமாய் எப்போதுமே ஜோசியன், மந்திரவாதி, கோயில் குருக்கள் ஆகிய மூவரும் மக்களின் பேராசைக்கும் முட்டாள் தனத்திற்கும் சரிபங்கு தாயாதிகளேயாவார்கள். எப்படி எனில் முதலில் ஜோசியன் ஒருவனுடைய ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்லுவதன் மூலம் கண்டம் நீங்க சாந்தி யும் கிரகதோஷ பரிகாரத்திற்கு சாமிகளுக்கு அர்ச்சனை அபிஷேகங்களும் செய்யும்படி சொல்லுவான். இதைக் கேட்ட அந்த மனிதன் தனது முட்டாள் தனத்தினால் ஏற்பட்ட பயத்திற்காகவும், ஆசைக்காகவும், மந்திரவாதியைக் கூப்பிட்டு சாந்தி கழிக்கச்சொல்லுவான். இந்த மந்திரவாதிகள் அனேகமாய் வைத்தியர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் சாந்தி கழிக்க கடைச்சாமான் பட்டியல் போடும் போதே ஒரு மண்டலம் (48 நாள்) அரைமண்டலம் நவகிரகங் களுக்கோ அல்லது குறிப்பிட்ட சனி செவ்வாய் முதலிய ஏதாவது ஒரு கிரகத்திற்கோ ஒருசாமிக்கோ, அர்ச்சனை, எள்ளு, பருத்திக்கொட்டை முதலிய தானம், விளக்கு வைத்தல் அபிஷேகம் செய்தல் ஆகியவை களையும், ஏதாவது புண்ணிய புராணம் படித்தல் முதலியவைகளையும் சொல்லிவிடுவான். இவைகளை எல்லாம் செய்வதால் மந்திரவாதிக்கும் அர்ச்சகனுக்கும் புராண பிரசங்கிக்கும் வரும் வரும்படியில் ஒரு பாகம் ஜோசியனுக்குச் சேர்ந்து விடும்.
இந்தப்படியே எங்கும் இப்போதும் நடப்பது வழக்கம். ஆகவே இந்த விஷயத்தில் மந்திரம் அர்ச்சனை ஆகியவைகளைப் பற்றி விசாரிக்குமுன் ஜோசியம் என்பதைப் பற்றியே முதலில் யோசிப்போம்.
அதாவது:-
ஜோசியம் என்றால் என்ன? அது உண்மையா? அப்படி ஒன்று இருக்க முடியுமா? என்பன முதலாகிய விஷயங்களை ஆராய்ச்சி செய்து பார்ப்போம்.
ஜோசியம் என்பது உலக வழக்கில் அனுபவத்தில் ஒரு மனித ஜீவனுடைய பிறந்த காலத்தை ஆதாரமாய் வைத்து அந்த மனிதனின் வாழ்க்கை, அதன் சம்பவம், பலன் முதலாகியவைகளை மொத்தமாய் வருஷப் பலனாயும் மாதப் பலனாயும் தினப் பலனாயும் நிமிஷப் பலனாயும் சொல்லுவதும், அவற்றுள் துன்பம் வரத்தக்கது ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஏதாவது பரிகாரம் செய்து தடுத்துக் கொள்வதும், இஷ்ட சித்திக்கு ஏதாவது விரோதமாய் இருந்தால் அதற்கும் ஏதாவது பரிகாரங்கள் செய்வதன் மூலம் விரோதத்தை நீக்கி சித்தியடைய முயற்சிப்பதும் ஆகிய காரியங்களுக்கு உபயோகப்படுத்திக் கொள்வதாகும். இந்த ஜோசியம் முன் சொன்னது போல் பிறந்த காலத்தைக் கொண்டு சொல்வதோடு மற்றும் வேறு பல வழிகளிலும் அதாவது பேர் நாமத்தைக் கொண்டும் - கேள்க்கப்பட்ட நேரம், கேட்ப வரின் இருப்பு நிலை, கேட்ட சங்கதி, ஜோசியனுக்கு எட்டும் நேரம், கேட்பவ ரின் தாய், தகப்பன் சகோதரம் பந்து முதலானவர்களின் பிறந்தகால ஜாதகம் முதலியவைகளைக் கொண்டும் பலன் சொல்வது உண்டு. இன்னும் இது போன்ற பல வகை அதாவது ஏதாவது ஒரு எண், ஒரு புஷ்பம், ஒரு எழுத்து ஆகியவைகளைக் கேட்டல், ஒரு அங்கத்தை தொடுதல் முதலாகிய வைகளின் மூலமும் பலன் சொல்லுவதுமுண்டு. ஆகவே மேல்கண்ட எல்லாவற்றின் மூலம் பலன் சொல்ல முடியுமா? முடியாதா? என்பதைப் பற்றி யோசிப்பதில் முதலாவதாக ஜீவன் பிறந்த காலத்தை ஆதாரமாக வைத்துப் பலன் சொல்லக் கூடுமா? என்பதைப் பற்றி முதலில் ஆறாய்வோம்.
பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் இருக்கும்போது ஜீவன் (உயிர்) ஏற்பட்ட காலமா? அல்லது வயிற்றிலிருந்து 7, 8, 9, 10 மாதங்களில் எப்பொழுதானாலும் பிறக்கும் காலமா? அப்படி பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல்லது ஒரு நாள் அரை நாள் அக்குழந்தை கீழே விழாமல் கஷ்டப்படும் காலத்தில் தலை வெளியாகி நிலத்தில் பட்டு கால் நிலத்தில் விழாமல் தாய் சரீரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் காலமா? அல்லது கால் தலை ஆகிய யெல்லாம் மருத்துவச்சி கையில் விழுந்த நேரமா? அல்லது மருத்துவச்சி கையிலிருந்து கீழே விழுந்த நேரமா? என்பனவாகிய கேள்விகள் ஒரு புறமிருக்க ஜீவனுடைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்பதாக வைத்துக் கொண்டே பார்ப்போ மானாலும் அந்த நேரத்தை சரியாக எப்படி கண்டு பிடிக்க முடியும் என்பதை யோசிப்போம். குழந்தை கீழே விழுந்ததும் அது உயிருட னிருக்கிறதா? இல்லையா? ஆ™h பெண்ணா என்பன போன்றவைகளைப் பார்க்க சிறிது நேரமாவது செல்லும். பிறகு அந்தச் சேதியைக் கொண்டு வந்து வெளியில் இருக்கும் ஆண்களிடம் சொல்ல சிறிது நேரமாவது செல்லும். அந்த சேதியைக் கேட்டவன் நேரத்தை குறிக்க அங்கேயே அவனுக்கு கடிகாரம் வேண்டும். அந்த கடிகாரம் சரியான மணியா? என்பது தெரிய வேண்டும். கடிகாரமில்லாவிட்டால் வானத்தைப் பார்த்து நேரம் கண்டுபிடிப்பதாயிருந்தால் அதற்கு பிடிக்கும் நேரம் முதலியவை அல்லது அக்கம் பக்கம் கடிகார நேரம், அதுவுமில்லாவிட்டால் உத்தேச சுமார் நேரம் ஆகியவைகளின் தாமதங்களும் பிசகுகளும் எப்படி நேராமல் இருக்க முடியும்? இவை ஒரு புரமிக்க அந்த நேரத்தால் பலன் சொல்லுவதனால் அந்த நேரத்தில் உலகத்தில் பிறக்கும் ஜீவன்கள் எவ்வளவு இருக்கக்கூடும். மற்ற ஜீவன்களை எல்லாம் தள்ளிவிட்டு வெறும் மனித ஜீவனை மாத்திரம் எடுத்துக் கொண்டாலும் உலகத்தில் 170 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்ற கணக்குப்படி பார்ப்போமானால் சென்னை முதலிய பட்டணங்களின் சாதாரண அனுபவங்களின் படிக்கு உலகத்தில் நாள் ஒன்றுக்கு 226666 (இரண்டு லட்சத்து இருபத்தாராயிரத்து அறுநூற்று அறுபத்தாறு) குழந்தைகள் பிறப்பதாக கணக்கு ஏற்படுகின்றது. (இந்தக் கணக்கானது ஐந்து லட்சம் ஜனத்துகை உள்ள சென்னை நகரத்திற்கு தினம் ஒன்றுக்கு 70 - எழுபது குழந்தைகள் - பிறப்பதாக கணக்குப் போடப்பட்டிருக்கின்றது.) இதைத் தவிர கணக்குக்கு வராத விதவைகளின் குழந்தைகள், கல்யாணம் ஆகாத பெண்களின் குழந்தைகள், புருஷன் சமீபத்தில் இல்லாத ஸ்ரீகளின் குழந்தைகள் ஆகியவைகளைச் சேர்த்தால் இன்னமும் இந்தக் கணக்குக்கு அதிகமாகும். இது ஒரு புறமிருக்க மேல்படி சாதாரண கணக்குப் படிக்குப் பார்த்தாலே ஒரு நாளைக்கு பிறக்கும் குழந்தைகளைப் பங்கிட்டுப் பார்த்தால் ஒரு நிமிஷத்திற்கு சுமார் 160 குழந்தைகள் வீதம் பிறக்கிறதாக கணக்கு ஏற்படுகிறது. இதில் 33 கோடி ஜனத்தொகை கொண்ட நமது இந்தியாவுக்கு மாத்திரம் கணக்குப் பார்த்தால் நிமிஷத்திற்கு 33 குழந்தை வீதம் பிறக்கின்றதாக கணக்கு ஏற்படுகிறது. ஆகவே இந்த 33 குழந்தைகளுக்கு மாவது ஜாதகப் பலன் ஒத்து இருக்க முடியுமா? இவைகளுக்குச் சரியான நேரம் கண்டுபிடிக்க முடியுமா? என்பதை யோசிக்க வேண்டும்.
நிமிஷக் கணக்கே இப்படி நிமிஷத்துக்கு 33 குழந்தைகள் பிறப்பதாயிருக்கும் போது ஒரு சோதிடம் சொல்லுவதற்கு போதுமான காலமாகிய ஒரு லக்கினம் நட்சத்திரம் ஆகியவைகளின் காலத்திற்குள் எத்தனை குழந்தைகள் பிறக்கக்கூடும் என்பதைப் பார்த்தால் இது சிறிதும் பொருத்த மற்றதென்பதாகவே காணலாம்.
சாதாரணமாய் ஒரு ஜாதகம் என்பது வருஷம், மாதம், தேதி, கிழமை, மணி (அல்லது நாளிகை) அந்த சமயத்தின் லக்கினம் நட்சத்திரம் ஆகிய வைகளைக் குறித்துள்ளதேயாகும். உதாரணமாக பிரமாதி வருஷம் புரட்டாசி மாதம் 2-ந் தேதி புதன் கிழமை காலை சுமார் 10 1/2 மணிக்கு விருச்சிக லக்கினத்தில் அஸ்த நட்சத்திரத்தில் ஒருவன் பிறந்தான் என்பதாக ஒரு துண்டு சீட்டில் எழுதி ஒரு ஜோசியனிடம் கொடுத்து விட்டால் இதன் பேரில் அந்த ஜோசியன் பலன் சொல்லிவிடக் கூடும் என்பதே அநேகமாக ஜோசியத்தின் லட்சணம். ஆகவே இந்த விருச்சிக லக்கினம் என்பது 5 1/4 நாளிகை உடையதாகும். இந்த ஐந்தே கால் நாளிகைக்குள் அதாவது 126 நிமிஷ நேரத்திற்குள் உலகத்திலே 20160(இருபதாயிரத்து நூற்று அறுபது) குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். இது ஒரு புறமிருக்க மேலும் இந்த லக்கினத்தில் நடப்பன, பறப்பன, ஊர்வன, நீந்துவன ஆகிய பூதக் கண் ணாடிப் பூச்சி முதல் யானை வரையில் உள்ள ஜீவன்களின் குழந்தைகள்பல நூறு கோடிக்கு மேல் பிறந்து இருக்க வேண்டும். இதுவுமொரு புறமிருக்க,
இந்தியாவில் மாத்திரம் அந்த விருச்சிக லக்கினத்தில் முன் சொல்லப் பட்ட கணக்குப் படிக்கு 4158 (நாலாயிரத்து நூற்று ஐம்பத்தெட்டு) குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும்.
ஆகவே அன்றைய தினம் இந்த விருச்சிக லக்கினத்தில் பிறந்த காரணத்திற்காக மேற்படி 4158 பேருக்கும் வாழ்க்கையில் ஒரு விதமான பலன் அனுபவமிருக்க முடியுமா? அந்தப்படி இருக்கின்றதா? என்பதை முதலில் யோசிக்க வேண்டும்.
தவிர இந்த பலன் அனுபவங்கள் மனிதனுக்குத் தானாக ஏற்படுவதா? அல்லது ரக்ஷிக்கிற கடவுள்களின் தன்மையால் ஏற்படுவதா? அல்லது முன் ஜென்மத்தில் செய்த கர்மத்தின் பலனாய் பலன் ஏற்படுவதா? அல்லது விதியின் பயனாய் பலன்கள் ஏற்படுவதா? என்பவைகளையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.
இந் நான்கிலும் மனிதனுக்குப் பலன் அவனது சொந்த இஷ்டத்தால் செய்கையால் தற்சம்பவமாய் ஏற்படுமானால் மேல்காட்டியவைகளில் அது தவிர மற்றவைகள் மூன்றும் அடிபட்டுப்போகும். கிரகங்களின் தன்மை யினால் ஏற்படும் என்றால் இதைத் தவிர மற்ற மூன்றும் அடிபட்டு போகும். முன் ஜன்ம கர்மத்தின்படி என்றால் இது தவிர மற்ற மூன்றும் அடிபட்டுப் போகும். மூலைவிதிப்படி என்றால் இதுதவிர மற்ற மூன்றும் அடிபட்டுப் போகும். ஆகவே மனிதனுடைய அனுபவ பலனுக்கு இவற்றுள் ஏதாவது ஒன்றுதான் காரணமாய் இருக்க முடியுமே தவிர இன் நான்கும் சேர்ந்து குழப்பிக் கொண்டிருக்க முடியாது. இது ஒரு புறமிருக்க இந்த வியாசத்திற்கு அவசியமான பிறந்த நேர லக்கினத்தால் ஏற்பட்ட கிரகத் தன்மைப் பலனைப் பற்றியே மேலும் ஆராய்வோம்.
உதாரணமாக இன்ன இன்ன கிரகம் இன்ன இன்ன வீட்டில் இருப்பதாலும் இன்ன இன்ன காலத்தில் இன்ன இன்ன கிரகங்கள் இன்ன இன்ன கிரகங்களைப் பார்ப்பதாலும் இந்த ஜாதகன் இன்ன இன்ன காரியம் செய்து இத்தனை தடவை சிறைக்குப் போவான் என்பதாக ஒரு சரியான பிறந்த காலத்தைக் கண்டு பிடிக்கப்பட்ட ஜாதகன் ஒருவனுக்கு சரியான கெட்டிக்கார ஜோசியன் ஒருவன் பலன் சொல்லுகின்றான் என்பதாக வைத்துக் கொள்ளுவோம். இவற்றுள் இந்த ஜாதகன் இன்ன வேளையில் இன்னாரைக் கொன்று ஜெயிலுக்குப் போவான் என்று இருந்தால் அந்தக் கொல்லப்பட்ட வனுடைய ஜாதகத்திலும் இன்ன வேளையில் இன்னாரால் கொல்லப்பட்டுச் சாவான் என்று இருந்தாலொழிய ஒருக்காலமும் பலன் சரியாய் இருக்கவே முடியாது என்பது உறுதியானதாகும். இந்த இரண்டு ஜாதகர்களுடைய பலனும் இருவருக்கும் தெரிந்து விட்டதாகவே வைத்துக் கொண்டாலும் இவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டாவது தப்பித்துக் கொள்ள முடியுமா? என்றால் ஒருக் காலமும் முடியவே முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் தப்பித்துக் கொண்டால் சோதிடம் பொய்யாய் விடும். அன்றியும் ஒரு சமயம் தப்பித்துக் கொள்வதாகவே வைத்துக் கொண்டால் அந்த இருவர்கள் ஜாதகத்திலும் “இந்த சங்கதி தெரிந்து இருவரும் ஜாக்கிரதையாய் இருப்பதின் மூலம் இருவருக்கும் அந்தக் காலத்தில் அந்த சம்பவங்களால் கொலையோ சிறைவாசமோ கண்டிப்பாய் ஏற்படாது” என்று தான் அந்த ஜாதகத்தின் முடிவு இருந்தாக வேண்டும். அப்படி இருக்கு மானால் இந்த விஷயத்தை அவ்விருவரும் தெரிந்து ஜாக்கிரதையாயிருந் தாலும் தெரியாமல் கவலையற்றே அஜாக்கிரதையாயிருந்தாலும் இருவருக் கும் கொலையும் சிறைவாசமும் கிடைக்க முடியவே முடியா என்பதிலும் சந்தேகமில்லை. ஏனெனில் ஜாதகத்தில் ஏற்கனவே இருக்கின்றபடி நடந்து தானே தீரும். இதற்கு சாந்தி தோஷ பகிஷ்காரம் என்பவைகள் செய்வதன் மூலமா வது ஏதாவது பலனை மாற்றி விட முடியுமா என்பதையும் யோசித்துப் பார்க்கலாம். அதாவது இன்ன கிரகம் இன்ன வீட்டில் இருப்ப தால் இன்ன கெடுதியான பலன் ஏற்படும். ஆதலால் இன்ன தோஷ பரிகார சாந்தியும் இன்ன கிரக தேவதைக்கு இத்தனை நாள் அர்ச்சனையும் செய்தால் நிவர்த்தி யாகும் என்று ஜோசியன் சொல்வானானால் அல்லது ஜாதகத்தில் இருக்கு மானால் இந்த சாந்தியின் மூலமாகவோ அர்ச்சனையின் மூலமாகவோ அந்த கிரகங்களை அந்த காலத்தில் அந்த வீட்டை விட்டு மாற்ற முடியுமா அல்லது அவைகள் மாறுமா என்பதைக் கவனிக்க வேண்டும். அது மாத்திர மில்லாமல் இம்மாதிரி சாந்தியோ பரிகாரமோ செய்வதன் மூலம் தப்பித்துக் கொள்வான் என்றும் அதில் இருந்தாக வேண்டாமா? அப்படிக்கில்லாத பக்ஷம் எந்தவித சாந்தியாலும் தோஷம் பரிகாரமாக முடியாது. முடிந்தால் ஜோசியம் பொய்யென்றே தீர்மானமாகி விடும்.
நிற்க, முடிவாக எந்தக் காரணத்தைக் கொண்டாவது ஜோசியம் நிஜம் என்றாகி விட்டால் எந்த மனிதன் மீதும் எந்தக் குற்றமும் சொல்வதற்கு இடமுண்டா?
ஜாதகபலன்படி நடவடிக்கைகள் நடந்தால் அதற்கு ஜாதகன் மீது குற்றம்சொல்லுவது மடமையும் யோக்கியப் பொருப்பற்றத் தன்மையும் ஆகாதா? என்று கேட்க்கின்றோம். ஒரு மனிதனுக்கு இன்ன காலத்தில் திருடரால் பொருள் நஷ்டம் ஏற்படும் என்று இருந்தால் அதே நேரத்தில் மற்றொரு மனிதனுக்கு திருட்டுத் தொழிலில் பொருள் லாபம் கிடைக்கும் என்று ஜாதகப் பலன் இருந்துதான் ஆக வேண்டும். அதுமாத்திரமல்லாமல் திருட்டுக் கொடுத்தவனுக்கு பணம் கொடுத்து யார் யார் நஷ்ட மடைந் தார்களோ அவர்கள் ஜாதகத்திலும் இன்ன காலத்தில் இன்னாருக்கு பணம் கொடுத்து அது திருட்டுப் போய் அதனால் நஷ்டமடைய வேண்டும் என்று இருந்தேயாக வேண்டும். அதுபோலவே திருடினவனிடமிருந்து பணம் வாங்கியவர்களுக்கும் இன்ன காலத்தில் இன்னான் இன்னாரிடம் திருடு வதால் இன்ன இன்னாருக்கு லாபம் வரும் என்று அவர்கள் ஜாதக பலனும் இருந்தாக வேண்டும்.
ஆகவே இந்தப்படி எல்லாம் ஜோசிய உண்மை இருந்துவிட்டால் பிறகு கடவுள் செயல் எங்கே? மோட்ச நரகம் எங்கே? தலைவிதி எங்கே? முன் ஜன்ம வினைப்பயன் எங்கே? இவைகளுக்கு வேலை ஏது? என்பதைப் பற்றி யோசித்தால் இவை அவ்வளவும் பொய்யாகவே முடியும்.
இவைகளுக்கெல்லாம் நேரமும் இடமும் சம்பாதித்து மெய்ப்படுத்தக் குழப்புவதாக வைத்துக் கொண்டாலும் கண்டிப்பாக ஒரு மனிதனின் நடவடிக்கைகளுக்கு அந்த மனிதனுடைய பொறுப்பையாவது அடியோடு விட்டுத்தானாக வேண்டும். இனியும் இதைப்பற்றிய விபரங்கள் மற்றொரு சமயம் விரிப்போம்.
தந்தைபெரியார் - “ குடி அரசு” - தலையங்கம் - 06.07.1930
No comments:
Post a Comment