ஆட்சி புரிவது அரசியல் அல்ல; மத, சமூக, ஜாதி இயல்களே!
தோழர்களே! வரவேற்பு மடலில் முதலாவது அரசியல், மதம், சமுதாயம் ஆகிய துறைகளில் புரட்சிகரமான கருத்துகளைப் பரப்பி வருவதாகக் குறிப்பிட்டு உள்ளீர்கள்.
உண்மையிலேயே இத்துறைகளில் தொண்டாற்றி வருகின்றேன் என்றாலும், என்னைப் பொறுத்தவரையில் இந்த நாட்டில் அரசியல் என்று ஒன்று இல்லை என்று கருதுகிறவன். அதற்கு மாறாக மத இயலும், சமூக இயலும்தான் ஆட்சி புரிகின்றன என்றுதான் கூறவேண்டும். அரசியல் என்பது மத ஆட்சிக்கு அல்லது சமுதாய ஆட்சிக்குப் பயன்படுத்திக் கொண்ட சொல் ஆகும். இது சரித்திர காலம் தொட்டே இப்படி நடந்து வருகின்றது. மக்களுடைய நலனுக்காக இன்ன கொள்கையைப் பொறுத்து ஆள்வது என்று புராணக் காலங்களிலும் இல்லை. அடுத்த சரித்திரக் காலங்களிலும் இல்லை. இந்த நாட்டு அரசுகள் எல்லாரும் தம் சொந்த புத்தியைக் கொண்டு ஆண்டது இல்லை.
அடுத்து முஸ்லிம்கள் ஆண்டார்கள் என்றால், அவர்கள் தங்கள் மதம், தங்கள் ஜாதி இதன் பெருமையைக் கருதி ஆண்டார்களே ஒழிய, மக்களுக்காக இன்னக் கொள்கை என்று வகுத்து ஆளவில்லை அப்படி ஆண்டதாக ஆதாரம் காட்ட முடியாது.
அடுத்து வெள்ளைக்காரன் ஆட்சியில் மட்டும் என்ன நடந்தது? அவன் படித்தவன் நாகரிக நாட்டான் என்று கூறப்படுபவன். அவன் 200-ஆண்டுகள் ஆண்டுங்கூட நம் மக்களின் அத்தியாவசியம் ஆன குறைகளைப் போக்க முயலாமல் தங்கள் ஆட்சியைத் தொல்லை இல்லாமல் நடத்த யார் யார் தங்களுக்குப் பயன்பட்டார்களோ அந்தக் குறிப்பிட்ட மேல்ஜாதிக்காரர்களின் நலத்திற்குத்தான் வழிவகை செய்தான்.
எவனாவது மனித தருமத்தின்படி - நியாய முறைப்படி ஆண்டு இருப்பானேயானால் இப்படி 100 க்கு 80 பேர் தற்குறிகளாகவும், 100 க்குத் 97 பேர்கள் இழி மக்களாகவும் இருந்திருக்க மாட்டார்கள். உலகில் எந்த நாட்டிலும் இதுபோலத் தற்குறிகளும், அந்த நாட்டுக்கே சொந்தமான மக்கள் இழி மக்களாகவும் இருக்கவில்லை. இந்த நாட்டில்தான் இந்த அவல நிலை இருக்கின்றது.
நம் மதம் போல உளுத்துப்போன மதம் உலகில் வேறு எங்கும் நாம் காண முடியாது. இந்த உளுத்துப்போனக் காட்டுமிராண்டி இந்து மதம்தான் நம்மை இன்று ஆட்சி செய்கின்றது.
அடுத்து ஜாதி முறை. இது உலகிலேயே எங்கும் இல்லாத ஜாதி முறையாகும். மோசடியானதும், காட்டுமிராண்டித்தனம் ஆனதும், கொடுமை ஆனதும் ஆகும். இந்தச் ஜாதி முறைக்கும், மதத்திற்கும் பாதுகாப்ப அளிப்பதுதான் இன்றைய ஆட்சியின் சட்டமாக உள்ளது. இந்த நாட்டில் உண்மையிலேயே ஒரு மனிதன் பொதுத் தொண்டாற்ற வேண்டும் என்று கருதுவானேயானால் அவன் முதலாவதாகக் செய்ய வேண்டிய முக்கியத் தொண்டு ஜாதியை ஒழிக்கப் பாடுபடுவதும் மக்களின் இழி நிலையையும் மடமையையும் ஒழிக்கப் பாடுபடுவதும் ஆகும்.
மற்றத் தொண்டுகள் எல்லாம் வயிற்றுப் பிழைப்புத் தொண்டுகளாகும். சும்மா வியாபாரத் தொண்டு மாதிரியாகத்தான் கூறுவேன். மற்றத் தொண்டுகள் செய்ய வேண்டுமானால் நாட்டில் ஏராளமான மக்கள் வருவார்கள். ஆனால் எங்கள் தொண்டுகள் செய்ய எங்களைத் தவிர வேறு யாரும் முன் வருவதும் இல்லை. வந்தாலும் மிஞ்சுவதும் இல்லை. எங்கள் தொண்டில் ஈடுபட்டால் பொதுமக்களை அணுகி ஓட்டுப் பெற முடியாது. இதன் காரணமாக எவரும் இந்தத் துறைக்கு வருவது இல்லை.
அடுத்து உள்ள வரவேற்புப் பத்திரத்தில் அந்நிய ஆட்சியை அடியோடு அழிக்க அரும்பாடுபட்டதாகக் குறித்து இருகின்றீர்கள். இது மிகவும் முட்டாள்தனம் என்றே கருதுகின்றேன். நாம் தற்குறிகளாக இருக்கும்போதே - அறிவு பெறுவதற்கு முன்னமேயே அநியாயமாக மேலும் சிக்கலில் மாட்டிக் கொள்ளத்தான் இந்தச் சுதந்திரம் பயன்பட்டது என்று கூறுவேன்.
சுதந்தர, ஜனநாயக ஆட்சியில் தான் ஜாதியை - மதத்தைக் காப்பாற்றப்படும் என்று அரசமைப்புச் சட்டம் உள்ளது.
நாட்டில் இன்றையத் தினம் மக்களிடத்தில் உள்ள கட்டுப்பாடுகள், கிளர்ச்சிகள் இருப்பதற்கு வெளிநாட்டுக்காரனாக இருந்தால் கட்டாயம் ஜாதியையும் மதத்தையும் ஒழித்து இருப்பான். இந்த இந்திய ஆட்சி ஜாதியையும், மதத்தையும் காப்பாற்றுவதால் தான் இவற்றை ஒழிக்க முடியவில்லை.
ஜாதியை, மதத்தை, சாஸ்திரத்தை ஒழிக்கக் காரணமாக உள்ள எனக்கு இப்படி வரவேற்புக் கொடுத்துள்ளீர்கள். இந்தப் பணிக்கு உற்சாகப்படுத்துகின்றீர்கள்.
மற்ற நாட்டார்கள் போல நாமும் (தமிழர்களும்) சீக்கிரம் முன்னேற்றம் அடைய வேண்டும். நாம் இந்த 20-ஆம் நூற்றாண்டிலும் ஆமை வேகத்தில்தான் போய்க் கொண்டு இருக்கின்றோம். சீக்கிரம் போய் மற்ற நாட்டார் நிலையினைப் பிடிக்க வேண்டும்.
இன்றைய விஞ்ஞான - அதிசய - அற்புதக் காலத்தில் மணிக்கு 20.000, 25.000- மைல்கள் மனிதன் பறக்கும் சக்தியைப் பெற்றுவிட்டான். நாய்க் குட்டி எல்லாம் சந்திர மண்டலத்துக்குப் போய் உயிருடன் திரும்பி வந்துவிட்டது. அடுத்து மனிதனே போகப் போகின்றான். நம்முடைய அறிவின் நிலையோ மிகமிகப் பாதாளத்திலேயே இன்னும் உள்ளது.
உலகில் மனிதன் மற்ற ஜீவராசிகளை (உயிர்ப் பிறவிகளை) விடச் சிறந்தவனாகக் கருதப்படுவது அவன் எல்லையற்ற சக்தி அறிவு பெற்று இருப்பதால்தான்.
மற்ற நாட்டு மனிதன் அந்த அறிவினைப் பயன்படுத்தி மிகமிக முன்னுக்கு வந்திருக்கின்றான். ஆனால் இந்த நாட்டு மனிதனோ அந்த அறிவினைப் பயன்படுத்தாத காரணத்தினால் மிகமிகப் பின்னுக்குப் போய்க் கொண்டு இருக்கின்றான்.
இங்கு நாம் "ஞானபூமி", "வெங்காய பூமி" என்று சொல்லிக் கொண்டு செய்த காரியம் என்ன? கோயில் குளம் கட்டுவதும், சாமி சோறு கேட்கின்றது, சாறு கேட்கின்றது, பெண்டாட்டி - தேவடியாள் கேட்கின்றது என்று கூறிக் கொண்டு, தூக்கித் திரிந்து கொண்டு தானே உள்ளோம்?
நாம் துணிந்து இப்படிச் சமுகக் கேடானவைகளை எல்லாம், அறிவுக்குப் பொருத்தமற்றவைகளை எல்லாம் மாற்ற வேண்டும். இப்படிப்பட்ட நகராட்சியில் அங்கம் வகிப்பவர்களும், இளைஞர்களும், துணிந்து இந்தத் துறையில் இறங்கிப் பாடுபட வேண்டும்.
இன்று இதற்குமேல் அரசியலில் என்ன வேண்டியுள்ளது? இதற்கு மேலே சுதந்திரம் வர வழியும், நியாயமும் இல்லை. எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்குக்கூட ஓட்டு அளிக்கப்பட்டு உள்ளது. எவன் வேண்டுமானாலு; - ஓட்டர் லிஸ்ட்டில் (வாக்காளர் பட்டியல்) பேர் உள்ளவன் தேர்தலில் நிற்கலாம்; பதவிக்கு வரலாம் என்று உள்ளது. இதைவிட வேறு என்ன வேண்டும்?
25-03-1961- அன்று கோவையில் பெரியார் ஈ.வெ.ரா சொற்பொழிவு. ”விடுதலை”02-04-1961
No comments:
Post a Comment