தந்தை பெரியார் 91-வது பிறந்தநாள் செய்தி
எனது நிலை
எனக்கு 90வது ஆண்டு: “பிறந்த நாள் விழா” மலரில்
“எனது நிலை’ என்கின்ற கட்டுரை எழுதும் போது, 91வது ஆண்டு “பிறந்த நாள் விழா” மலருக்கு எனது நிலை என்பது பற்றி எழுத வேண்டிய வாய்ப்பு இருக்குமா என்ற சந்தேகத்தில் எழுதினேன். என்றாலும் எப்படியோ 91வது ஆண்டு “பிறந்த நாள் விழா” மலருக்கும் எனது நிலை என்பது பற்றி எழுதும்படியான வாய்ப்பு எனக்கு ஏற்பட்டுவிட்டது. அதாவது 90வது ஆண்டு “பிறந்த நாள் விழா” மலரில் 'எனது நிலை என்ற கட்டுரையில்
“எனக்கு வயது 90.
உடல் நிலை மிகவும் மோசம். கைகால் நடுக்கம் அதிகம். சிறுநீர் கழிக்கும்போது சப்தம் போட்டுக்கொண்டுதான் கழிக்கிறேன் அதாவது அவ்வளவு வலி.தூக்கம் சரியாய் வருவதில்லை. நினைத்தபோது உடலில் ஏதாவது ஒரு பாகத்தில் வலியேற்பட்டு சில ஏப்பமோ காற்றுப் பிரிவோ ஏற்பட்ட பிறகு நோய் விலகுகிறது.
உண்ட உணவு சரியானபடி ஜீரணமாவதில்லை. முன்போல் உணவும் சரியாய் உட்கொள்ள முடியவில்லை. எந்தக் காரியம் பற்றியும் மனதிற்கு உற்சாகம் ஏற்படுவதில்லை. களைப்பு அடிக்கடி ஏற்படுகிறது. நெஞ்சில் வலி திடீரென ஏற்படுவதும் வந்த பிறகு குறைவுதுமாக இருக்கிறது.
எதைப் பற்றியும் சலிப்பும், வெறுப்பும் ஏற்பட்டு விடுகிறது. சுருக்கமாக சொல்வதானால் வாழ்வே வெறுப்பாக இருக்கிறது.
என்றாலும் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன்.
நினைத்தபடி நினைத்த ஊருக்கெல்லாம் என்னை அழைக்காதீர்கள்.
அந்தப் படி என்னை மக்கள் அழைக்காமல் இருப்பதற்காகவே எனது வழிச் செலவுத் தொகையை ரூ.100-ல் இருந்து ரூ.150-ஆக ஏற்படுத்தி விட்டேன்.
நூறு ரூபாய் எனக்கு வண்டிச் செலவு, ரிப்பேர் செலவு, வைத்தியச் செலவு முதியவைகளுக்கு அனேகமாக சரியாய்ப் போய் விடும். சுயீல சமயங்களில் போதாமல் போகும். ஒரு தடவையில் 2/3 பயணம் ஏற்பட்டால் ஒரு அளவு மீதியாகி பிரசாரத்திற்கு பயன்படும்.
இப்போது எனக்குப் பெரிய வண்டி வரப்போகிறது. செலவு அதிகமாகும். எனக்கு பிராசாரத்திற்கே வேறு அநேக செலவு இருக்கிறது. எனக்கு இனி பிரசாரத்தில் ஆசை இல்லை. ஒரு வாரப்பத்திரிக்கைத் துவக்கி அதற்கு ஆசிரியனாக இருந்து எழுதிக் கொண்டு இருக்க வேண்டும் எனபதில் தான் ஆசை அதிகமாக இருக்கிறது. வெளியாக்கப்பட வேண்டிய விஷயம் அதிகம் இருக்கிறது. இதற்காக எளிதில் காணமுடியாத ஒரு தனி இடத்திற்கு போகலாமா அல்லது ஈரோட்டிற்கே போய் விடலாமா என்று கூட எண்ணுகிறேன்
இனி என் ஆயுள் எவ்வளவு இருக்க முடியும் என்பதில் எனக்கு கவலை இல்லை. இருந்தவரைக் தொண்டு செய்யலாம் என்றுதான் திட்டம் போடுகிறேன்.ஆனால் எதிர்பாராத சம்பவங்கள் நடப்பதும், ஏற்படுவதும் இயற்கையேயாகும். அது போல் என் முடிவும் இருக்கலாம்.
பொதுவாக என் மனம் குழப்பமாக இருக்கிறது. துறவி ஆகிவிடுவேனோ என்னவோ !”
இந்தப்படி எழுதி இருக்கிறேன். அதை ஊன்றிப் படித்தாலே நான் எழுதியதின் தன்மை விளங்கும்.
இப்போது எனக்கு 90 ஆண்டு முடிந்து 91 வது ஆண்டு நடக்கிறது என்றாலும், 90வது ஆண்டுக்கும் 91 வது ஆண்டுக்கும் இடையில் ஏற்பட்ட எனது உடல் நிலையின் தன்மை 91வது ஆண்டு போல் இல்லாமல் 94, 95 வது ஆண்டு என்று கருதும்படி அவ்வளவு கிழத்தன்மை ஏற்பட்டுவிட்டது என்று ஆகிவிட்டது.
இது உடல்நிலை மாத்திரமல்லாமல் பஞ்சேந்திரியங்க
ளோடு புத்தி, மனது, சிநதனா சக்தி முதலிய தன்மைகளும் மிக்கக் குறைந்து பலவீனப்பட்டு விட்டன.
என்றாலும் இவ்வோரண்டு நாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்தால் எனக்கு மற்ற கருவி காரணாதிகள் பலக் குறைவு எப்படி இருந்தாலும் மனம் உற்சாகம் அடையும் படியான பல நிகழ்ச்சிகள் காணப்படகின்றன.
முதலாவது நிகழ்ச்சி நமது தி.மு.க. ஆட்சியில் . மந்தரிகளில் பேரும் தமிழர்கள் என்பதோடு, 18 அய்க்கோர்ட் ஜட்ஜீகளில் 14 பேர் தமிழர்கள் பார்ப்பனரல்லாதவர்கள். டெல்லி ஆதிக்கமில்லாத அதிகாரங்களில் 100க்கு 50க்கு மேல் 75 வரை பார்ப்பனரல்லாதவர் இருக்கும்படி ஆகிவிட்டது.
அரசியலில் அளும் கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் தலைவர்கள், பணியாளர்கள் யாவருமே 100க்கு 100ம் தமிழர்களே யாவார்கள். இதை அனுசரித்தே மற்ற நிலைகளும் மாற்றடமடைந்து வருகின்றன. இவ்வளவுக்கும் காரணம் திமுக ஆட்சி என்றே சொல்லுவேன்.
காங்கிரஸ் மத்திய ஆட்சி ஆதிக்கத்தில் பச்சையாகப் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிளவும், வடநாடு-தென்னாடு என்கின்ற உணர்ச்சியும் காணப்படும் தன்மை உருவாகிவிட்டது. இவையெல்லாம் நம் தமிழர் சமுதாய விடுதலைக்கும், சயமரியாதைக்கும் நல்ல வெற்றி வாய்ப்பு என்றே சொல்லத்தக்கவையாகும்.
மற்றும் 90வது பிறந்த நாள் விழா மலரின் 'எனது நிலை கட்டுயிைல் நான் குறிப்பிட்ட சலிப்புகள் இப்போது எனக்கு குறைவென்றே சொல்லலாம்.
ஊதாரணமாக 90வது “பிறந்த நாள் விழா” மலரில் 'எனது நிலை’ என்ற கட்டுரை முடிவில் துறவி யாய்ப் போய் விடலாமா ? என்று எழுதி இருக்கின்றேன்.
இன்று எனக்கு அப்படி இல்லை. அந்த எழுத்தைப் பார்த்து உயர் காமராஜரும், அறிஞர் அண்ணாவும் எனக்குத் தெரிவித்தது போல், அதாவது “இப்போது உங்களுக்கு எதற்காக கவலை ? நீங்கள் நினைத்த காரியம் எது நடவாமல் இருக்கிறத? கவலையை விட்டு விடுங்கள் “ என்று சொன்ன சொற்கள் எனக்கு உற்சாகத்தைக் கொடுக்கின்றன.
இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் “விபீஷணப் பரம்பரை” வளர்ந்து வருவதுதான்.இது தமிழரில் சில “ஜாதிக்கு'(வகுப்புக்கு) இயற்கை என்றாலும் இது வருந்தத்தக்கதே .
ஆகவே எனது 90வது வயதை விட 91 வது வயது திருப்தியையும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுக்க கூடியதாக இருக்கிறது என்பது எனது கருத்து.
விபீஷணர்கள் திருந்துவார்களாக
திமுக ஆட்சி இனியும் குறைந்தது 10 ஆண்டுகளுக்காவது இருக்கும்படி மக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். எனக்கு இதற்கு மேல் கருத்தும் ஒடவில்லை எழுதவும் முடியவில்லை.
ஈ.வெ.ராமசாமி
No comments:
Post a Comment