திராவிட நாடு திராவிடருக்கே!
உங்களிலே ஆயிரத்தெட்டு ஜாதியினர் இருக்கின்றனர்; ஆயிரக்கணக்கான பாலிய மணங்கள் நடைபெற்று வருகின்றன; லட்சக்கணக்கான பாலிய விதவைகளிருக்கின்றனர்; இன்னும் பலர் வீட்டை விட்டுப் புறப்படுகையில் சகுனம் பார்த்தல், முதலிய மூடப் பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கடவுள் இன்னும் மானுஷீகத் தன்மையைப் பெறவில்லையென்று மேனாட்டான் சொல்லுகிறான் என்று மட்டும் சீறி விழுகிறார்களே ஒழிய உண்மையிலே இந்நாட்டில் அவைகள் இல்லையா? இல்லாததைச் சொல்லுகிறார்களா? என்று அவர்கள் யோசித்துப் பார்ப்பதில்லை. யோசித்துப் பார்ப்பவர்களுக்கு அதன் உண்மை விளங்காமல் போகாது. அவர்கள் சொல்லுவதற்கு ஆதாரம் இல்லையா? நம்மவர்களில் ஆயிரக்கணக்கான ஜாதிகள் இல்லையா? வகுப்பு வித்தியாசம் இல்லையா? தீண்டக் கூடாது தொடக் கூடாது என்ற பாகுபாடு இல்லையா? இன்றும் அவைகளைப் பிரத்யட்சத்தில் நாம் கண்டு வருகிறோம்.
சாஸ்திரங்களிலிருப்பதைப் பார்க்கிறோம். சட்டங்களில் குறிப்பிட்டிருப்பதைக் கண்டு வருகிறோம். இந்து முஸ்லிம், கிறிஸ்தவர், பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார்,தாழ்த்தப்பட்டோர் - உயர்ந்த ஜாதியார் என்ற போராட்டம் எங்கு இல்லாமல் போயிற்று என்று கேட்கிறோம். இந்தியாவில் எந்தப் பாகத்தில் இல்லாமலிருக்கிறது என்று யாரால் சொல்ல முடியும் என்று கேட்கிறோம். அதுபோலவே பாலிய விவாகம் இந்நாட்டில் நடைபெற்று வருகின்றன என்பதை யாரால் மறுக்க முடியும், பாலிய விதவைகளின் தொகை லட்சக்கணக்கிலிருப்பதை எவரால் மறைக்க முடியும் என்று கேட்கிறோம். மூடநம்பிக்கை இல்லையென்று எவரால் துணிந்து கூற முடியும், கடவுள் மனுஷத் தன்மை பெறவில்லை என்று பகுத்தறிவுவாதி கூறுவது போலத்தானே ரால் கட்டுக் கதைகள் இன்றும் உள்ளன.
கடல் நீரினுள் புகுந்து முத்துக்களையும், பவளங்களையும் எடுத்துவர கருவிகளையும், நீரினுள் புகுந்து செல்லும் சப்மரீன்களையும், டார்பிடோக்களையும் இன்னும் நவீன யந்திரங்களையும் கண்டுபிடித்து வருவர்களிடம் மச்சாவதாரத்தையும், வராக அவராதத்தையும், கூர்ம அவதாரத்தையும், குறித்துச்
சொன்னால் நகைக்காமல் என்ன செய்வார்கள் என்று கேட்கிறோம். ஆகவே இத்தகைய நாகரிகத்தையும், பழக்க வழக்கத்தையும், கலையையும், கொண்டவர் சுதந்திரத்தோடு வாழ்ந்துவிடப் போகிறார்கள்? இவர்களுக்கா சுதந்திரம் என்று எள்ளி நகையாடுகின்றனர். இத்தகைய நாகரிகத்தையும், கலையையும், தெய்வ வழிபாட்டையும் கொண்டது எது? எச்சமுகம்? எந்நாடு? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா வெறும் ரோசம் எதற்கு? ஏக தெய்வ வழிபாட்டையும், சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் தொழிலையே பிரதானமாகவும் கொண்ட கலையையும், நாகரிகத்தையும் உடைய சமூகம்,நாடு எத்தனை நாளைக்கு மேற்சொன்ன பழிச் சொற்களைத் தாங்கி நிற்கும் பயிர் நன்றாக வளர வேண்டும் என்ற ஆசை உடையவன் களைகளைக் களைந்தெறியப் பிரியப்பட மாட்டானா? அதற்கும் தண்ணீர் இறைத்து விட்டு இத்தனை நாள் வளர்த்தோமே இப்பொழுது அவைகளை எப்படிக் களைந்தெறிவது என்று பயித்திக்காரனாவது எண்ணுவானா? அது போலவே, நமது கலை. நாகரிகம் பழக்க வழக்கம் ஆகியவைகளை உலகுக்கு மறைத்து வரும் களை போன்ற ஆரிய நாகரிகம் கலை பழக்கவழக்கம் ஆகியவைகளானாலும் சரி. அவைகள் நிலை பெற்றிருக செய்யும் எந்தச் சட்டமானாலும் சரியே களைந்தெறிய வேண்டியது முதற் கடமையல்லவா என்று கேட்கிறோம்.
இவ்வெண்ணம் நம்நாட்டிலே இன்று நேற்று தோன்றியதாக யாரும் கருதி விட முடியாது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே டாக்டர் டி.எம். நாயர், சா.பி. தியாகராயப் பெருமான் மனதிலும் தோன்றிவிட்டது. ஆரிய ஆதிக்கத்திலிருந்து திராவிட மக்களை, திராவிட நாட்டைக் காப்பாற்ற வேண்டும், இந்நாட்டிலிருந்து ஆரியக் களையை களைந்தெறிய வேண்டும் என்ற கருத்தின் மீது பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை தோற்றுவித்தார்கள். இந்த எண்ணம் அன்று இருந்ததினாலேதான் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தார் ''திராவிடன்" என்ற பத்திரிகையை தோற்றுவித்து நடத்தி வந்தார்கள். இப்பொழுது அவ்வெண்ணம் கொழுந்து விட்டெரிகிறது. திராவிட இரத்தம் கொதிக்கிறது. அதன் காரணமாகவே சென்ற 10ஆம் தேதி நாடெங்கும் தமிழ்நாடு தமிழருக்கே" என்ற முழக்கம் ஒலித்தது. திராவிட நாட்டை தனியாகப் பிரித்துவிட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு தமிழருக்கே என்றால் சரித்திர அறிவோ, அரசியல் அறிவோ அற்ற ஒரு சிறு கூட்டம் பரிகாசம் பண்ணுகிறது. தமிழ்நாடு தமிழருக்கே ஆய்விட்டால் கன்னடர். ஆந்திரா கேரளர் என்னாவது என்று கேட்கின்றன அம்முண்டங்கள், தமிழ் தாய் மொழியென்றும் அதிலிருந்துதான் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகள் பிறந்தன மொழி ஆராய்ச்சி வல்லுநர்கள் புகலுகின்றனரே. அப்படியிருக்க தமிழ் தமிழருக்கேயென்றால் அவர்களைச் சேர்ந்த குழுவினர்களாகிய கன்னடர் தெலுங்க மலையாளிகள் தனித்துப் பிரிந்துபோய் விடுவார்களா? இந்த அற்ப விஷயம் எட அந்த மர மண்டைகளில் ஏறப் போகிறது? அது ஒருநாளும் ஏறப் போவதில் என்பதையும் நாமறிவோம்.
பழைய நாகரிகத்தை ஏன் இவ்வளவு பிடிவாதமாக ஆதரிக்கிறோம் என்றால், புது உலகு சமைப்பதற்கான திட்டங்களும், கொள்கைகளும் முறைகளும் நமது தமிழர் கலையிலும், நாகரிகத்திலும், பழக்க வழக்கத்திலும் இருப்பதினாலே ஆகும். இது அரசியல் துறையிலும், பொருளாதாரத் துறையிலும், சமுகத் துறையிலும், சீர்குலைந்து க்ஷிணதிசையடைந்து வாழ்ந்து வருவதற்குக் காரணம் ஆரிய ஆதிக்கமேயென்று நாம் எந்த மலையுச்சியிலிருந்தும் கூசாது கூறுவோம். சரித்திர ஆதாரங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் காட்டுவோம். அறிஞர் கூற்றுகள் எத்தனை வேண்டுமானாலும் தீட்டுவோம். நம் நாடு அந்நிய ஆதிக்கத்திலிருப்பதற்கும் நாம் அடிமையாய் இருப்பதற்கும் பார்ப்பனியமே அதாவது, ஆரியமே காரணம் என சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார். இந்நாட்டில் பார்ப்பனியம் இழைத்த கொடுமைகள் பல என தோழர் காந்தியார் பார்ப்பனிய வலையில் விழுவதற்குமுன் கூறியிருக்கிறார். ஆகவே, திராவிட நாடு முன்னேற வேண்டும் ஆரிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்காகவே மக்கள் தமிழ்நாடு தமிழருக்கே வர வேண்டும் எனக் கோருகிறார்கள்.
மற்றொரு காரணம் என்னவென்றால், ஒரு மாகாணம் மற்றொரு மாகாணத்தை எந்தவித காரணத்தினாலும் சுரண்டக் கூடாது என்பதினாலே ஆகும். இப்பொழுது நம்மாகாணம் அறிவுத்துறையிலே சிறந்து விளங்கியும், அதாவது உயர்ந்த கல்வியிலே நம்மவர்கள் புத்தி கூர்மையுள்ளவர்களாயிருந்தும், வர்த்தகம், செல்வம் ஆகிய இரு விஷயங்களிலே வடமாகாணத்துக்கு இளைத்தே இருந்து வருகிறது. வர்த்தகத்துறையிலே அதாவது அகமதாபாத் மில், கான்பூர் மில் ஆகிய ஜவுளி தினுசுகள்தான் இந்நாட்டிலே எங்கு பார்த்தாலும் பரவி வருகிறது. எந்த குக்கிராமத்தில் பார்த்தாலும் அகமதாபாத் வேஷ்டியை பார்க்கலாம். தமிழகத்தில் மட்டிலுமல்ல; திராவிட மக்கள் எங்கெங்கெல்லாம் குடியேறியிருக்கிறார்களோ அங்கெல்லாம் அகமதாபாத் வேஷ்டியைப் பார்க்கலாம். ஆனால், நமது கோவை மில் வேஷ்டியை வடநாட்டிலே எங்கேயாவது பார்க்கலாமா என்று பார்த்தால் அது குதிரைக் கொம்பாயிருக்கிறது. ரெண்டாவது, தென்னாட்டிலுள்ள செல்வம் எல்லாம் வடநாட்டிலே போய் குவிகிறது. இந்து தேச சரித்திரத்தைப் படித்தவர்களுக்குத் தெரியும். வடநாட்டிலே எத்தனை வேற்றரசர்கள் படையெடுத்து வந்து ஒரு நாட்டு பொருளை மற்றொரு நாட்டுக்குக் கொள்ளையடித்துக் கொண்டு போனார்கள் என்பது. ஆனால், தமிழகத்தில் அம்மாதிரி நிகழ்ச்சிகள் நடந்ததாக படித்திருக்க முடியாது. அதனால்தான் மக்கள் அவ்வளவு செழிப்பாக வீரத்தோடு வாழ்ந்து வந்தார்கள் என்று அறிகிறோம். ஆனால், இன்று நம் மக்கள் நிலை என்ன? வீரம் எங்கே? என்று பார்த்தால் வடநாட்டு ஆதிக்கத்தினால் அதாவது என்று வடநாட்டிலிருந்து மார்வாடிகளும், குஜராத்திகளும் இங்கு கால் வைத்தார்களோ அன்றே அவை எல்லாம் தொலைந்தது என்பது நன்கு விளங்கும். தென்னாட்டிலுள்ள செல்வத்தை வருடந்தோறும் லட்சக்கணக்கில் வாரிச் செல்லுகின்றனர். செல்வத்தை இழந்த மக்கள் உயிர் வாழ்வதற்காக வெளிநாடு செல்கின்றனர். கடல் கடந்து உற்றார் உறவினர்களைப் பிரிந்து செல்லுகின்றனர். தோட்டங்களில் அட்டைக் கடியிலும் கொசுக்கடியிலும் உழன்று வருகின்றனர். வடநாட்டார் நமது செல்வத்தைக் கொண்டு உண்டு கொழுத்து வருகின்றனர்.
வெளிநாட்டிலும் இப்பொழுது இந்தியர்களுக்கு வேலையில்லையென்று - சொல்லித் துரத்துகிறார்கள். இனி தமிழன் எங்குப் போய் உயிர் வாழ்வான்? வாழ வழியின்றி தவிக்கின்றான். ஆகவே, தமிழன் மாள்வதா வாழ்வதா என்ற முடிவுக்கு வந்துவிட்டான். ஆகவேதான் தமிழ்நாடு தமிழருக்கே இருக்க வேண்டும் எனக் கோருகிறான். அந்நாட்டில் அந்நியன் எவனுக்கும் ஆதிக்கமிருத்தல் கூடாதென்ற முடிவுக்கு வந்து விட்டான். இதற்காக எத்தகைய கஷ்டம் வந்தாலும் சகிக்க தமிழன் நெஞ்சம் உரம் கொண்டுவிட்டது. இரண்டில் ஒன்று பார்த்து விடுவதென்றே தமிழன் துணிந்து விட்டான். அதை சென்ற 10-ஆம் தேதி நிகழ்ச்சி நன்கு விளக்கி விட்டது. தமிழன் தனது "லட்சியம்'' வெற்றி பெறும் வரை அயர மாட்டான் அல்லும் பகலும் அதே சிந்தனையாயிருப்பான். தமிழன் இத்துணிச்சலைப் பெற்றிருப்பதில் அதிசயம் ஒன்றுமில்லை. இன்று உலகிலே நடைபெற்று வரும் சம்பவங்களைப் பார்ப்பவர்களுக்கு இதில் ஒன்றும் அதிசயம் காண மாட்டார்கள் அய்ரோப்பாக் கண்டத்தில் எத்தனை சிறு நாடுகள் நமது திராவி நாட்டைவிட ஜனத் தொகையிலும், விஸ்தீரணத்திலும் எவ்வளவோ சிறிய நாடுகள் தங்கள் சுதந்திரத்திற்காக போராடி வருகின்றன என்பதை யாவரும் அறிவர். ஏன் அவைகள் தங்கள் சுதந்திரத்திற்காக அவ்வாறு போராடுகின்றனவென்றால், அப்பொழுதுதான் தங்கள் கலை, நாகரிகம் முதலியவைகள் காப்பாற்ற முடியும் என்ற காரணத்தினாலேயாகும். அய்ரோப்பா எல்லாம் ஒன்றாய்விட்டால் மெஜாரிட்டியினர்களுடைய நாகரிகத்தைப் புகுத்தி மற்றவைகளை அழிக்கச் செய்துவிடுமென்ற அச்சம் ஒவ்வொரு நாடும் கொண்டிருப்பதினால்தான் இன்று அவ்வாறு போராடுகின்றன. ஆகவே. உலகம் போற்றும் நமது கலை, நாகரிகம் பழக்க வழக்கம் ஆகியவை வளர வேண்டுமானால் - உலகிலேயே பிரகாசிக்க வேண்டுமானால் முதலில் நமது நாட்டுக்கு அதாவது திராவிட நாட்டுக்குச் சுதந்திரம் வேண்டும். ஏற்கெனவே மாகாணங்களுக்கு சுய ஆட்சி வழங்கப்பட்டு விட்டது. இப்பொழுது நாம் கோருவதெல்லாம் நமது கலையின் மீதும், நாகரிகத்தின்மீதும், பொருளாதாரத்தின் மீதும் வேறு எந்த மாகாணமும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதேயாகும். இந்தப் பாதுகாப்பைக் கோருவதில் என்ன தப்பு என்று கேட்கிறோம். நிலம் படைத்தவன் தனது நிலத்தைச் சுற்றி அடுத்த நிலத்துக்காரனது ஆடு மாடுகள் வந்து பயிரை அழித்துவிடாமல் பார்த்துக் கொள்வதற்காக வேலி போட மாட்டானா? அப்படி அவன் வேலி போடுவது தவறா? என்று கேட்கிறோம். இது போலவேதான் நமது மாகாணத்திற்கு பந்தோபஸ்து தேடுகிறோம். இது எப்படிக் குற்றமாகும் என்பது நமக்கு விளங்கவில்லை.
எனவே, திராவிடநாடு திராவிடருக்கே என்ற முழக்கம் திராவிடநாடு தனியாகப் பிரிக்கப்படுகிறவரை சலிக்காமல் ஒலிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, அதற்கு ஆவன செய்ய ஒவ்வொரு தமிழனும் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
திராவிட நாடு! திராவிடருக்கே!
-- குடிஅரசு - தலையங்கம் - 17.12.1939
No comments:
Post a Comment