Wednesday, 12 January 2022

மூடப் பண்டிகைகளை கொண்டாடுவது சரியா? - தோழர் பெரியார்

 மூடப் பண்டிகைகளை கொண்டாடுவது சரியா?

இனி, அடுத்தாற்போல் வரும் புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்களும், திருப்பதி முதலிய நூற்றுக்கணக்கான சனிக்கிழமை பிடிப்பதன் மூலம் அவரவர்கள் வீட்டில் ஏராளமாய் சமைத்துக் கொண்டு சோம்பேறிகளையும், அயோக்கியர்களையும் மெனக்கட்டுத்தேடிப் பிடித்து வந்து அவர்களுக்கு வயிறு நிறையவும் போட்டு கஞ்சாவுக்கோ, கள்ளுக்கோ, சூதாடவோ கையில் பணமும் கொடுத்து, இவ்வளவும் போதாமல், அந்த நாளெல்லாம் பட்டினிக்கிடந்து அந்தச் சோம்பேறிகளின் காலிலும் விழுந்து மாலை 3 மணி 4 மணி சுமாருக்குச் சாப்பிடும் பண்டிகைகளிலோ, விரதத்திலோ கடுகளவு அறிவு இருக்கின்றதா என்று கேட்கின்றேன்.




புரட்டாசி சனிக்கிழமை வந்தால் எத்தனைப் பேர் தங்களுக்கும் பட்டை நாமம் போட்டுக் கொண்டு, சொம்புக்கும் நாமத்தைக் குழைத்துப் போட்டுக்கொண்டு, துளசியையும், அரளிப்பூவையும் அந்தச் சொம்புக்கு சுத்திக்கொண்டு, வெங்கிடாசலபதி கோவிந்தா என்றும், நாராயணா கோவிந்தா என்றும் கூப்பாடுப் போட்டு அரிசியோ, காசோ வாங்கிக் கொண்டு போவதில் ஏதாவது பலனுண்டா என்றுதான் கேட்கிறேன்.

மற்றும், திருப்பதிக்குப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு, தலை மயிரும் தாடி மயிரும் வளர்த்து வெறும் மஞ்சள் நனைத்த துணிகட்டிக்கொள்வதும், மேளம் வைத்துக் கொள்வதும், வருஷமெல்லாம் பணம்போட்டு மொத்தமாய் பணம் சேர்ப்பதும், அல்லது வேண்டுதலையின்மேல் இவ்வளவு பணம் என்று கடன் வாங்கியாவது எடுத்துக்கொள்வதும், அல்லது வியாபாரத்திலோ, வேறு வரும்படியிலோ லாபத்தில் இத்தனைப்பங்கு என்று கணக்கு வைத்துச் சேர்த்து எடுத்துக்கொள்வதும் ஆன பணமூட்டையைக் கட்டிக் கொண்டு, கடைவாயிலும், நாக்கிலும் வெள்ளிக் கம்பியைக் குத்திக்கொண்டு, போதாதக் குறைக்குத் தெருவில் கூட்டமாய், கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா என்று கூப்பாடுப் போட்டு, வீட்டு வீட்டுக்கு, கடை கடைக்குக் காசு பணம் வாங்கி, ஒரு பகுதியை ரயிலுக்குக் கொடுத்து திருப்பதி போவதும், அங்கு முழங்கால் முறிய மலையேறுவதும், ஆண்களும், பெண்களும் தலைமொட்டை அடித்துக்கொள்வதும், அந்த மலைசுனைத் தண்ணீரில் குளிப்பதும், அந்தப் பட்டை நாமம் போட்டுக் கொள்வதும், கொண்டு போன பணத்தைக் கடாரத்தில் காணிக்கையாகக் கொட்டுவதும், ஆண்களும், பெண்களும் நெருக்கடியில் இடிபடுவதும், பிடிபடுவதும், வெந்தும் வேகாததுமான சோற்றை தின்பதும், மற்றும் பல சோம்பேறிகளுக்கும், மேகவியாதி காரருக்கும் வேகவைத்ததோ, விலைக்கு வாங்கியோ போடுவதும், விறகுக் கட்டையிலும், வேர்களிலும் செய்த மரமணிமாலைகளை வாங்கி கழுத்தில் போட்டுக் கொள்ளுவதும், மலைக்காய்ச்சலோடு மலையை விட்டு இறங்கிவருவதும், வீட்டுக்கு வந்து மகேஸ்வரபூசை பிராமணசமார்த்தனை செய்வதும் தவிர, மற்றபடி இவைகாளல் ஏதாவது செய்தவனுக்கோ, கூடப்போன மக்களுக்கோ, நாட்டுக்கோ, ஒழுக்கத்திற்கோ, மதத்திற்கோ கடுகளவு நன்மை உண்டாகின்றதா என்று கேட்கின்றேன்.

திருப்பதிக்குப் போய்வந்த பிறகாவது யாராவது தங்கள் துர்க்குணங்களையோ, கெட்ட செய்கைகளையோ விட்டு விட்டதாகவாவது, அல்லது திருப்பதி யாத்திரையானது இம்மாதிரி குணங்களை விடும்படிச் செய்ததாகவாவது நம்மில் யாராவது பார்த்திருக்கின்றோமா என்று கேட்பதுடன், இம்மாதிரி அறிவீனமான காரியத்திற்காக நமது நாட்டில் வருஷத்திற்கு எத்தனைக் கோடி ரூபாய் செலவாகின்றது என்பதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணராவது கணக்குப் போட்டார்களா என்று கேட்கின்றேன்.

இனி, அடுத்த மாதம் தீபாவளிப் பண்டிகை என்று கஷ்டமும் நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வரப்போகின்றது. அதிலும் ஏதாவது அறிவுடைமை உண்டா என்று கேட்கின்றேன். தீபாவளி பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டு மிராண்டித்தனமானதுமாகும். அதவாது விஷ்ணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசூரன் என்பவன் வருணனுடைய குடையைப் பிடுங்கிக்கொண்டதால் விஷ்ணு கடவுள் கிருஷ்ணாவதாரத்தில் கொன்றாராம். அந்தத் தினத்தைக் கொண்டாடுவதற்கு அறிகுறியாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவதாம்.

சகோதரி, சகோதரர்களே! இதில் ஏதாவது புத்தியோ, மனிதத்தன்மையோ இருக்கின்றதா என்று பாருங்கள். விஷ்ணு என்னும் கடவுள் பூமியைப் புணருவது என்றால் என்ன என்றாவது, அது எப்படி என்றாவது, நரகாசூரன் என்றால் என்ன? வருணன் என்றால் என்ன? என்பதாவது, அப்படி ஒன்று இருக்கமுடியுமா என்றாவது, இவைகள் உண்மையா என்றாவது, கருதிப் பாருங்கள்.

இப்படிப் பொய்யானதும், அர்த்தமற்றதுமான பண்டிகையினால், எவ்வளவு கஷ்டம், எவ்வளவு ரூபாய் நஷ்டம், எவ்வளவு கடன், எவ்வளவு மனஸ்தாபம், எவ்வளவு பிரயாணச் செலவு என்பவைகளை ஒரு சிறிது கூட நமது மக்கள் கவனிப்பதில்லையே. அப்பண்டிகையை உத்தேசித்து ஒவ்வொருவனும் தனது யோக்கியதைக்கும் தேவைக்கும் மேற்பட்ட பணம் செலவு செய்து, துணிவாங்க ஆசைப்படுகிறான்; தன்னிடம் ரூபாய் இல்லாவிட்டாலும் கடன் வாங்குகிறான்; கடன் என்றால் வட்டி அல்லது ஒன்றுக்கு ஒன்றரை பங்கு கிரையம் ஏற்பட்டு விடுகின்றது.

இது தவிர, மாமனார் வீட்டுச் செலவு எவ்வளவு? தவிர, சுத்த முட்டாள்தனமான பட்டாசு கொளுத்துவது எவ்வளவு? மற்றும் இதனால், பலவித நெருப்பு உபாதை ஏற்பட்டு வீடு வேகுதலும், துணியில் நெருப்புப்பிடித்து மருந்து வெடித்து, உடல் கருகி கண், மூக்கு, கை, கால், ஊமையாவதுமான காரியங்கள் எவ்வளவு நடக்கின்றது. இவ்வளவும் அல்லாமல், இந்தப் பண்டிகை கொண்டாடுவதற்கு அறிகுறியாக எவ்வளவு பேர்கள் கள்ளு, சாராயம் குடித்து மயங்கி தெருவில் விழுந்து புரண்டு மானம் கெடுவது எவ்வளவு? மேலும், இதற்காக இனாம்! இனாம்!! என்று எத்தனைப் பாமர மக்கள் பிச்சை எடுப்பது? அல்லது தொந்தரவு கொடுத்துப் பணம் வசூல் செய்வது? ஆகிய இந்தக் காரியங்களால் எவ்வளவு பணம், எவ்வளவு நேரம், எவ்வளவு ஊக்கம், எவ்வளவு பணம் செலவாகின்றது என்று கணக்குப் பாருங்கள்.

இவைகளை எல்லாம் எந்த இந்தியப் பொருளாதார தேசிய நிபுணர்களாவது கவனிக்கிறார்களா என்று கேட்கின்றேன். துலாஸ்நானம் தவிரவும், இந்த மாதத்திலேயே அய்ப்பசி துலாஸ்நான மென்று புதுத் தண்ணீர் காலத்தில் நதிகளில் போய் அழுக்குத் தண்ணீரில் தினம் தினம் காலையில் குளிப்பதும், புதுத்தண்ணீர் ஒத்துக்கொள்ளாமல் கஷ்டப்படுவதும், இதற்காக ஊரை விட்டு ஊர் பணம் செலவு செய்து கொண்டு போய் கஷ்டப்படுவதும், ஒன்று இரண்டு தண்ணீரில் இழுத்துக் கொண்டு போகப்படுவதும், குளித்து முழுகிவிட்டு நதிக்கரையில் இருக்கும் பார்ப்பனர்களுக்கும் அரிசி, பருப்பு, பணம், காசு கொடுத்து அவன் காலில் விழுவதுமான காரியங்கள் செய்வதும், ஆதிமுதல் அந்தம்வரை அத்தனையும் பொய்யும் ஆபாசமுமான காவேரிப் புராணம் படிக்கக் கேட்பதும், அதற்காக அந்தப் பொய்யையும் கேட்டு விட்டுப் பார்ப்பானுக்கு சீலை, வேஷ்டி, சாமான், பணம் கொடுத்து காலில் விழுவதுமான காரியம் செய்கின்றோம். காவேரியை பெண்தெய்வ மென்பதும், அதில் ஆண்கள் குளிப்பதுமான காரியம் ஆபாசமல்லவா?

இனி, அதற்கு அடுத்த மாதமாகிய கார்த்திகை மாதம் வந்தால் கார்த்திகைப் பண்டிகை என்று வீணாக ஆயிரக்கணக்கான தீபம் கொளுத்துவதின் மூலம் எண்ணெயையும், நெய்யையும் பாழாக்கிப் புகைப்பதும், மலைகளில் பேரில் கட்டைகளையும் விறகுகளையும் போராய்க் குவித்து அதில் நெய்யையும், வெண்-ணெயையும் டின்னு டின்னாய் குடம் குடமாய்க் கொட்டிக் கொளுத்துவதும், இந்த வேடிக்கைப் பார்க்க திருவண்ணாமலை, திருச்செங்கோடு முதலிய மலைக் கோயில் உள்ள ஊர்களுக்கு ஜனங்கள் லட்சலட்சமாய்ப் பணம் செலவு செய்து, இரயில் சார்ஜ்கொடுத்து நெருக்கடியில் சிக்கிக் கஷ்டப்பட்டு, கண்ட ஆகாரத்தைப் புசித்து வயிற்றைக் கெடுத்துக்கொண்டு ஊர் வந்து சேருவதும், விளக்கு நெருப்புப்-பிடித்து உடல் வெந்து சாவதும் ஆகிய காரியங்கள் இல்லாமல், அவைகளால் வேறு ஏதாவது பலன் உண்டா என்று கேட்கிறேன். முன்போலவே, இந்தப்பண்டிகை மூலமும் வருஷம் ஒன்றுக்கு இந்த நாட்டில் எவ்வளவு ரூபாய்கள் செலவாகிறது என்றும், எவ்வளவு நேரமும் அறிவும் செலவாகின்றது என்றும், எந்த இந்திய தேசிய பொருளாதார நிபுணர்-களாவது கணக்குப் பார்த்தார்களா? என்று கேட்கின்றேன்.

இனி, அதற்கு அடுத்த மார்கழிமாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம்கூட்டமாய் சீரங்கம் முதலிய ஊர்களுக்குப் பணம் செலவு செய்துகொண்டு போவதும், தை மாதம் வந்தால் பூசம் காவடிகளைத் தூக்கிக் கொண்டு பழனி முதலிய மலைகளுக்குப் போவதும் பொய்யையும் புளுகையும் காவடிக்கதையாய் சொல்வதும், அறுத்துச்சமைத்த பாம்பும், மீனும், கோயிம், உயிர்பெற்று விட்டது என்பதும், மண்ணு சக்கரையாகி விட்டது என்பதும், வெட்டித் துண்டாக்கப்பட்ட குழந்தை உயிர்பெற்று எழுந்துவிட்டதென்பதும், இன்னும் இதுபோல பல பொய்களை வெட்கமில்லாமல் சொல்லுவதும், அழுக்குக் குளங்களில் குளித்து, அழுக்குத் தண்ணீரைச் சாப்பிட்டு, பஞ்சாமிர்தம் என்னும் ஒரு அசிங்கமான வஸ்துவை கண்டபடி சாப்பிட்டு வயிற்றுப் போக்கெடுத்து காலரா ஏற்பட்டு, திரும்பிப்போகும் போது வழியில் சாவதும், சிலர் அந்தக் காலராவைத் தங்கள் தங்கள் ஊருக்குக் கொண்டு போய் பரவவிட்டு, அங்குள்ளவர்களைக் கொல்வதும், அவர்கள் நதி வாய்க்கால் ஓரங்களில் குடி இருந்தால் அந்தக் காலரா அசிங்கம் வாய்க்கால்களில் கலந்து, கரை ஓரங்களில் இருக்கும் ஊர்களிலெல்லாம் பரவி மக்கள் நூற்றுக்கணக்காகச் சாவதுமான காரியங்கள் வருஷந்தோறும் நடைபெறுகின்றன.

சாதாரணமாக, சீரங்கம் வைகுண்ட ஏகாதசி உற்சவத்திலும், பழனி தை பூச உற்சவத்திலுமே ஏற்பட்ட சுகாதாரக் கெடுதியால் ஒவ்வொரு வருஷமும் முதல் முதல் அங்கு காலரா உற்பத்தியாகி பிறகு இரண்டு மூன்று மாதம் தென்னாடெல்லாம் பரவி, வருஷம் ஆயிரம் பேருக்குக் குறைவில்லாமல் கொள்ளைக் கொண்டு போகின்றது.

இதன் உண்மையை ஒருவரும் அறியாமல் பேதியாயி, மாரியாயி, ஓங்காளியாயி, ஊருக்கு ஒருகுடம் எண்ணெய் கொண்டு வந்து ஆளுக்கு அரை கரண்டி கொடுத்துவிட்டாள் என்று சொல்லி ஊரிலுள்ள மக்களின் சிலபாகம் செத்து - காலரா தானாக ஒடுங்கிய பின் ஓங்காளியின் பொங்கலும், காளி பூசையும் செய்து பேதியை நிறுத்திவிட்டதாக வெட்கமில்லாமல் பேசிக்கொள்வதும், அன்றியும், கிராமங்களில்லெல்லாம் மார்கழி, தை மாதங்களிலேயே மாரியம்மன் பண்டிகை கொண்டாடி, வெந்தும் வேகாத பொங்கலும், பச்சை மாவுமாய், சரியாய் சுத்தம் செய்யாத வேகாத மாமிசமும் கண்டபடி புசிப்பதால் அஜீரணம், காலரா முதலிய வியாதிகள் உண்டாவதையும் பார்க்கின்றோம். பொதுவாகவே, நமது நாட்டில் கூட்டம் சேர்ந்தாலே அசுத்தம் உண்டாகி வியாதிகள் ஏற்படுவதை அனுபவத்தில் பார்த்து வருகின்றோம்.


இனி, அதற்கடுத்த மாசி மாதம் வந்தால் சிவராத்திரி என்று கண்டபடி கிழங்கு வகைகளையும், தானிய வகைகளையும், பலகாரவகைகளையும் ஒரே நாளில் செய்து அளவுக்கு மேல்தின்று குழந்தைகளையும் தின்னச் செய்து அஜீரணத்தையும், வயிற்று வலியையும் உண்டாக்கிக் கொள்வதோடு, இதனால் ஏற்படும் செலவு எவ்வளவு என்பதை யாராவது யோசித்துப் பார்க்கின்றார்களா? என்று கேட்கின்றோம்.

இப்படியே ஒவ்வொரு மாதமும் உற்சவமும், பண்டிகைகளும், விரதங்களும், சடங்குகளும் ஏற்பட்டு மொத்தத்தில் வருஷத்தில் எவ்வளவு கோடி ரூபாய்கள் செலவு? எவ்வளவு வியாதிகள் வரவு? எவ்வளவு உயிர்கள் போக்கு? என்பவைகளை யார் கவனிக்கின்றார்கள்.

இந்தப் பணம் எல்லாம் தேசிய பணமல்லவா? ஏழை தேசம், தரித்திரதேசம், அடிக்கடி பஞ்சம் வரும் தேசம், வேலையில்லாமல், தொழிலில்லாமல் கூலிக்காரர்கள் கும்பல் கும்பலாய் பட்டினிக் கிடந்து மடிவதுடன், பெண்டுபிள்ளை, குழந்தைகளுடன் வெளிநாட்டிற்குக் கூலிக்காகக் கப்பலேறும் தேசம் என்று சொல்லிக்கொண்டிருக்கின்ற நாம், எத்தனை நாட்களை, எத்தனை ரூபாய்களை, எத்தனை ஊக்கங்களை இந்தப்பாழும் அர்த்தமற்ற, பொய்யான, ஒரு காசுக்கும் உதவாததான, நமக்கு இழிவையும் அவமானத்தையும் தருவதான பண்டிகைக்கும், உற்சவத்திற்கும் பூசைக்கும், சடங்குக்குமாக ஒவ்வொருவரும் செலவு செய்கின்றோம் என்பதைக் கவனித்தால், இந்த நாடு பணமில்லாத நாடா அல்லது புத்திய இல்லாத நாடா என்பது நன்றாய் விளங்கும்.

எனவே, இப்படிக்கெல்லாம் சொல்வதைப் பார்த்தால் இந்தப் பண்டிகைகளையும், உற்சவம் முதலியவைகளையும், ஏற்படுத்தியவர்கள் எல்லோரும் அறிவில்லாதவர்களா என்கின்ற கேள்வி பிறக்கலாம். நான் அவர்களை அறிவில்லாதவர் என்று சொல்ல இஷ்டப்படமாட்டேன். மற்றபடியோ என்றால் பெரும்பாலும் அவர்கள், சுயநலக்காரர்களும், தந்திரக்காரர்களும், அதிகாரம் ஆசை உடையவர்களுமாயிருக்க வேண்டுமென்றே சொல்லுவேன்.

என்புத்திக்குட்பட்ட வரையில் இந்தப் பண்டிகை, உற்சவம் முதலியவைகள் எல்லாம் புரோகிதர்களான பார்ப்பனர்களும், ஆட்சிக்காரர்களான அரசர்களும் கலந்து கண்டு பிடித்துச் செய்த தந்திரமென்பதே எனது அபிப்பிராயம்.

உலகத்தில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அறியாமைக்கும், கொடுமைக்கும், புரோகிதர்களும், அரசர்களுமே சேர்ந்து கூட்டுப் பொறுப்பாளர்களாவார்கள்.

இவ்விருவர்களும், ஜனங்களை ஏய்த்து ஆதிக்கம் செலுத்தவகை கண்டுபிடிக்கவேண்டிய அவசிய முடையவர்கள்.

அந்தப்படி, மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வாழ வேண்டுமானால், அந்த மக்களை அறிவினாலும், செல்வத்தினாலும் தாழ்மைப்படுத்தி வைத்திருந்தால்தான் முடியும். ஒரு மனிதன் அறிவுடையவனாயிருப்பானானால் புரோகிதனுக்கு ஏமாற மாட்டான். செல்வமிருக்குமானால், அரசனுக்குப் பயப்படமாட்டான். ஆகையால், அறிவும், செல்வமும் இல்லாமல் செய்வதற்கே கோயில், உற்சவம், பண்டிகை, சடங்கு ஆகியதான செலவுக்கு ஏற்ற வழிகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

மக்கள் சம்பாதிக்கும் பணங்களில் கணக்குப் பார்த்தால் பெரும்பாகமும் இவைகளுக்கே செலவு செய்யும்படியாகவும், மேல் கொண்டு மீதி ஆவதெல்லாம் இவர்கள் சமூகத்திற்கே பயன்படும்படியாகவும், மற்றும், மேல்கொண்டு ஒவ்வொரு குடும்பமும் அதாவது, நூற்றுக்குத் தொண்ணூறு குடும்பங்கள் இவைகளின் பயனாய் கடன்காரர்களாக இருக்கவுமே இருந்துவரப்படுகின்றது. எனவே, நமது நாடு என்றைக்காவது அறிவுள்ள நாடாகவும், செல்வமுள்ள நாடாகவும், சுயமரியாதை உள்ள நாடாகவும் இருக்கவேண்டுமானால், முதலில் உற்சவம், பண்டிகை, சடங்கு, கோயில் பூசை ஆகியவைகள் ஒழிந்தாக வேண்டும்.

இவைகளை வைத்துக்கொண்டு மலைகளை எல்லாம் தங்கமும் வைரமுமாக ஆக்கினால், சமுத்திரங்களையெல்லாம் பாலும், நெய்யும், தேனுமாக ஆக்கினாலும் மேல் கண்ட உற்சவம், சடங்கு, கோவில், பூசை, பண்டிகை ஆகியவைகளே சாப்பிட்டுவிடும். ஆதலால் இனிமேலாவது இம்மாதிரியான காரியங்களுக்கு அடிமையாகி வீண்செலவு செய்யக்கூடாது என்பதே எனது ஆசை.

--------------- ஈரோடு உண்மை நாடுவோர் சங்கக் கூட்டத்திலும், பார்ப்பனரல்லாதார் வாசகசாலை கூட்டத்திலும் கலந்து கொண்டு தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் மற்றொரு பகுதி. 20.10.1929 "குடிஅரசு" இதழில் வெளியானது.

No comments:

Post a Comment