Saturday, 1 January 2022

சுயமரியாதைத் திருமணமும் வைதீகத் திருமணமும் புரோகிதத்தின் லக்ஷணம் என்ன? - தோழர் பெரியார்

 சுயமரியாதைத் திருமணமும் வைதீகத் திருமணமும் புரோகிதத்தின் லக்ஷணம் என்ன?

தோழர்களே!

இன்று இங்கு நடந்த திருமண ஒப்பந்தத்தை கேட்டதோடு அதன் வினைமுறைகளையும் பார்த்தீர்கள். இதைத்தான் இன்று பலர் சுயமரியாதைத் திருமணம் என்று சொல்லுகிறார்கள். மற்றும் சிலர் சீர்திருத்த திருமணம் என்றும் சொல்லுகிறார்கள். இரண்டும் ஒன்றுதான். எப்படிச் சொன்னாலும் சரி, வயது வந்த ஒரு பெண்ணும், ஒரு ஆணும் வாழ்க்கையில் பிரவேசிப்பதற்கு ஆக தங்களுக்குள் செய்து கொள்ளும் ஒப்பந்த வினையைத்தான் இன்று நாம் திருமணம் என்கிறோம்.



அந்த வினைகள் பல விதமாக செய்யப்பட்டு வருகின்றன. அத்தனை விதங்களுக்கும் ஆதாரமோ அவசியமோ என்ன என்பதற்கு யாராலும் காரணம் சொல்ல முடியாவிட்டாலும் ஏதோ பழக்க வழக்கம் என்று சொல்லிக் கொண்டு தங்கள் கௌரவங்களையும் நினைத்துக்கொண்டு என்ன என்னமோ செய்து வருகிறார்கள்.

உலகில் மக்கள் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு துறையிலும் மாற்றம் ஏற்பட்டு வருவதுபோல் இத்திருமணம் என்கின்ற முறையிலும் காலதேச வர்த்தமானத்தை உத்தேசித்து பல மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. மற்றும் பல துறைகளிலும் அனாதியான பழக்க வழக்கம் என்பவைகளிலும் கூட அறிவு விசாலத்தை முன்னிட்டும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

மற்றும் பல துறைகளில் வெறும் மாறுதலை விரும்பியே பல பல மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இவை உலக இயற்கையே யாகும். ஏதோ ஒரு விதத்தில் மாறுதல்கள் ஏற்படுவது தள்ள முடியாத காரியமாகும். இந்த உண்மையை நமது வாழ்க்கையையும் அனுபவத்தையையும் ஞாபகப் படுத்திப் பார்த்தால் அதன் விபரம் பூராவும் நமக்கு நன்றாய்விளங்கும்.

நாம் மாறுதல்களுக்கு கட்டுப்பட்டவர்களும் அடிமைப்பட்டவர்களும் ஆசைப்பட்டவர்களும் ஆவோம்.

ஆதலால் அந்த மாறுதலேதான் அதுவும் அறிவு ஆராய்ச்சி ஆகிய காரணங்களைக் கொண்டுதான் இந்தத் திருமணமுறையில் காணப்படுகிற மாறுதல்கள் ஏற்பட்டவைகளாகும்.

திருமணங்களை இப்போது பெரும்பாலும் ஒரு நாளில் முடித்து விடுவது என்பது பெரும்பாக மக்களுக்குள் அதுவும் அறிவாளிகளான மக்கள் என்பவர்களுக்குள்ளாகவே ஒப்புக்கொண்ட விஷயமாகி விட்டது. அதோடு சடங்கு முதலியவைகளும் கூட பெரிதும் சவுகரியத்திற்கு ஏற்றபடி நழுவவிட்டும் மாற்றியும் அமைத்துக்கொண்டாகி விட்டது. நகை உடை ஆகியவைகளும் முன்பு சமயத்துடனும் சடங்குடனும் பிணைத்திருந்ததெல்லாம் இப்போது விடுவிக்கப்பட்டு சௌகரியம்போல் அமைத்துக் கொள்ளப்பட்டு விட்டது. பெரிதும் பாமரத்தன்மை உள்ள வகுப்புகளில்தான் ஏதோ பல பிடிவாதங்களை காண்கின்றோமே அல்லாமல் மற்றபடி அனேக விஷயங்கள் திருத்தி அமைத்துக் கொள்ளப்பட்டு வருகின்றதை காண்கின்றோம். எப்படியோ மக்கள் மாறுதல்களை விரும்பவும் சகிக்கவும் வந்து விட்டார்கள். ஆனால் அவை வெறும் மாறுதல்களுக்கு ஆகவே இல்லாமல் அறிவுக்கும் அனுபவ சவுகரியத்திற்கும் ஒத்ததாக இருக்க வேண்டும் என்பது தான் நமது ஆசை. அது தான் இன்று நமது தொண்டும் ஆகும். இந்தத் திருமணத்தில் நாம் காணும் மாறுதல்கள் அதை அனுசரித்தன என்று தான் உங்களிடம் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.

இத்திருமணத்தில் நீங்கள் என்ன மாறுதல் காண்கிறீர்கள்?

புரோகிதன் இல்லை; அது ஒரு முக்கிய மாறுதல். ஆனால் புரோகிதன் எதற்கு? புரோகிதன் என்றால் என்ன? என்பது முதலில் யோசிக்கத்தக்கதாகும். இன்று புரோகிதன் என்பவனுக்கு உள்ள லட்சணம் எல்லாம் முதலில் அவன் பெரிய ஜாதிக்காரனாக இருக்கவேண்டும். அவனுடைய நடத்தை தன்மை முதலியவைகளைப்பற்றி நமக்கு கவலையில்லை. பெரிதும் நமக்கு தெரியாத பாஷையில் அவசியம் புரியாத சடங்குகளைச் செய்யச் சொல்லி பணம் வசூலித்துக்கொண்டு போகிறவனையேதான் இன்று புரோகிதன் என்கின்றோம். மற்றும் அவன் காலில் நாமும் மணமக்களும் விழுந்து கும்பிடுகிறோம்; அவனை சாமி என்று அழைக்கிறோம். இவற்றைத் தவிர புரோகிதனுக்கு வேறு லக்ஷணம் சொல்லுங்கள் பார்க்கலாம். அல்லது வேறு பயனையாவது சொல்லுங்கள் பார்க்கலாம். இந்தப் புரோகிதன் நமக்கு எதற்கு என்று உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? அவன் நமது தமிழ் மக்கள் திருமணங்களில் எந்தக் காலத்தில் வந்து கலந்து கொண்டான் என்று உங்களுக்குள் யாருக்காவது தெரியுமா? அவனால் வகுக்கப்பட்ட சடங்குகள் மந்திரங்கள் முதலியவை எதற்கு ஆக எப்போது என்ன அவசியத்தின் மீது ஏற்பட்டதென்று உங்களுக்கு யாருக்காவது தெரியுமா? உங்கள் பழய இலக்கியங்கள் பழய ஆதாரங்கள் என்று சொல்லப்படுபவைகளில் இந்த புரோகிதனுக்கும் சொற்களுக்கும் அவன் சடங்குகளுக்கும் ஏதாவது ஆதாரங்கள் இருக்கின்றனவா? ஆகவே புரோகிதம் என்பது ஏதோ உங்கள் பழக்கம் அல்லது முன்னோர்கள் நடந்த வழி என்பது அல்லாமல் வேறு எந்த அவசியத்தைக் கொண்டது என்று யோசித்துப் பாருங்கள். ஆதலால் இங்கு புரோகிதன் இல்லாத ஒரு மாறுதலானது ஒன்றும் பிரமாத மாறுதல் அல்ல என்பதோடு அவனில்லாததால் எவ்வித குறையும் ஏற்பட்டு விடவில்லை என்பதையும் உணருகிறீர்கள்.

மற்றொரு மாறுதல் மணமக்களின் ஒப்பந்தம் என்பதில் நிகழ்ந்ததாகும். அதாவது பழய முறைப்படி செய்யப்படும் மண ஒப்பந்தத்தில் எஜமான் அடிமை ஒப்பந்த வாசகம் இருக்கும். அதாவது ஆணுக்கு பெண் அடிமை, பெண்ணுக்கு ஆண் எஜமான் என்பதும், பெண்ணை ஆண் எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்பதும், அதற்கெல்லாம் பெண் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்பதுமான அடிமை முச்சலிக்காவே ஒப்பந்தத்தில் மிளிரும்.

ஆனால் இந்த திருமண ஒப்பந்தத்தில் இருவரும் சமம் என்றும் வாழ்க்கை இன்ப துன்பங்களிலும் போக போக்கியங்களிலும் இருவருக்கும் சம உரிமை உண்டு என்றும் குறிப்பிட்ட சமத்துவபாவம் மிளிரும். இந்த மாறுதல் அவசியமா இல்லையா என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள். உங்கள் மனைவிமார்களை நினைத்துக்கொண்டே யோசிக்காதீர்கள். உங்களுடைய செல்வப் பெண் குழந்தைகளையும் அன்பு சகோதரிகளையும் மனதில் கொண்டு யோசித்துப்பாருங்கள். உங்கள் தாய்மார் சுதந்திரவாதிகளா யிருந்தால் நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள் என்பதையும் யோசித்துப் பாருங்கள். இன்று உலகில் கீழ் ஜாதியார் என்பவர்களுக்கு சம சுதந்தரம் வேண்டும் என்று போராடுகிறோம். அரசாங்கத்தினிடமிருந்து விடுதலை பெற்று சுதந்திரமாய் வாழவேண்டுமென்று போராடுகிறோம். அதே போராட்டத்தை நமது தாய்மார்கள் விஷயத்திலும் நமது சகோதரிகள் விஷயத்திலும் நமது பெண் குழந்தைகள் விஷயத்திலும் கவனிக்க வேண்டாமா? நமது வாழ்க்கைத் துணைகளிடத்திலும் கவனிக்கப்பட வேண்டாமா? அந்தப்படி கவனிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களானால் அதற்கு இந்த சந்தர்ப்பத்தைவிட வேறு சந்தர்ப்பம் எது என்று கேட்கின்றேன். இத்திருமணத்தை சீர்திருத்த மணம் என்றும் வைதீக மணம் என்றும் சொல்லாமல் இது ஒரு சுயமரியாதை மணம் என்றும் நாஸ்திக மணம் என்றும் சொல்லப்படுவதற்கு அந்த இரண்டு காரியங்களில் ஏற்பட்ட மாறுதல்கள் தான். அதாவது புரோகிதம் இல்லாததாலேயே நாஸ்திகம் என்றும் பெண்ணுக்கு சம சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதாலேயே சுயமரியாதை திருமணம் என்றும் சொல்லப்படுகிறது. அந்தப்படி சொல்லப்படுவதற்கு ஆக நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. திருமணங்களில் ஆஸ்திக நாஸ்திகத்துக்கு இடமே இல்லை. நாஸ்திகம் அவரவர்கள் உணர்ச்சி ஆராய்ச்சிதிறன் ஆகியவைகளைக் கொண்டதே தவிர அது ஒரு குணமல்ல ஒரு கக்ஷி அல்ல; ஒரு மத மல்ல. ஆகையால் இத் திருமணமுறை மாறுதல்களில் நாஸ்திகத்திற்கு இடமில்லை. கடவுள் நம்பிக்கைகாரர்கள் இந்த இடத்தில் கடவுள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? கடவுள் நம்பிக்கைக்காரர்கள் இந்த திருமணம் கடவுள் சித்தமில்லாமல் நடைபெற்றது என்று சொல்லிவிட முடியுமா? என் போன்றவர்கள் அப்படி சொல்லுவதானாலும் எந்த கடவுள் நம்பிக்கைக்காரராவது அதை நம்ப முடியுமா? ஆதலால் இதில் நாஸ்திகத்தை புகுத்துவது சரியல்ல. புரோகிதன் இல்லாததே நாஸ்திகம் என்றால் அவன் இல்லாமல் நாம் செய்யும் மற்ற அனேக காரியங்கள் நாஸ்திகம் என்று தான் அருத்தம். ஆதலால் அதையும் நாம் லக்ஷியம் செய்ய வேண்டியதில்லை. மற்றொரு விஷயமான ஆண் பெண் சமத்துவம் என்கின்ற சுயமரியாதை சிலருக்கு பிடிக்கவில்லையானால் நாம் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆண் பெண் சமத்துவமாய் பாவிக்கப்பட்டு சமத்துவமாய் நடத்தப்படுவதாய் இருந்தால் தான் இம்மாதிரி வாழ்க்கை ஒப்பந்தங்கள் அதாவது திருமண காரியங்கள் இருக்கவேண்டுமே ஒழிய அப்படி இல்லாவிட்டால் பெண்கள் “திருமணம்” இல்லாமல் தனித்து வாழ்வதே மேல் என்று சொல்லுவேன். எதற்காக ஆணுக்கு பெண் அடிமையாக இருக்க வேண்டும்? இஷ்டப்படா விட்டால் என்ன செய்யமுடியும்? அதற்கு என்ன நிர்ப்பந்தம் செய்ய யாருக்கு பாத்திய முண்டு? ஆகையால் வேறு எந்த காரியங்களில் மாறுதல் இல்லாவிட்டாலும் இந்த வாழ்க்கை சுதந்திரத்தில் சமசுதந்திரம் என்பது ஏற்பட்டுத்தான் ஆகவேண்டும். சுயமரியாதை இயக்கத்தின் முதல் லட்சியமே அதுவாகும். ஆதலால் அது விஷயத்தில் உள்ள ஏற்படப்போகும் மாறுதலை மக்கள் வரவேற்றுத்தான் ஆக வேண்டும்.

மற்றபடி இத்திருமணத்தில் உள்ள மாறுதல் செலவு சுருக்கம் என்பது. இதையெல்லோரும் ஒப்புக்கொள்ளுவீர்கள் என்றே நினைக்கிறேன். இந்தியாவின் பொருளாதார நிலையைப்பற்றி கண்ணீர் வடிக்காத அரசியல்வாதிகள் கிடையாது. அதை நம்பி கோவிந்தா போடாத பாமர மக்களும் கிடையாது. அது உண்மையாய் இருக்குமானால் இந்த மாதிரி ஒரு 5 நிமிஷ காரியத்துக்கு ஆக 4 வரி ஒப்பந்த வார்த்தைக்கு ஆக ஆயிரக்கணக்காகவும் பதினாயிரக்கணக்காகவும் செலவழிக்க அனுமதிக்கப் படலாமா என்று கேட்கிறேன். இப்படி செலவு செய்வது கிரிமினல் குற்றமாகாதா என்று யோசித்துப் பாருங்கள். இந்தியாவில் ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு அணா வரும்படி என்கிறார்கள். அப்படியானால் தினம் நான்கு அணாவே வரும்படி உள்ள ஒரு ஜோடிக்கு இந்த வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்திற்கு எவ்வளவு ரூபாய் செலவழிப்பது. குறைந்தது 250 ரூபாய் செலவானாலும் 1000 நாளைய வரும்படி செலவழிக்கப்படுகிறதா இல்லையா என்று பாருங்கள். இந்த வழக்கம் இது வரை அனுமதிக்கப்பட்டிருப்பதிலிருந்தே இந்த நாட்டில் பொறுப்புள்ள சீர்திருத்தக்காரரோ, பொருளாதார துணைவர்களோ, நல்ல அரசியல் தலைவர்களோ, ஜீவகாருண்யமுடையவர்களோ, தேசீயவாதிகளோ இல்லை என்று அருத்தமாகவில்லையா? நான் ஒரு நிமிஷம் அரசனாய் இருந்தாலும் முதல் முதல் இம்மாதிரியான பொருள் விரையத்தை தடுக்கவே தூக்கு தண்டனை நிபந்தனையுடன் சட்டம் செய்வேன். இம்மாதிரியான பொருள் நஷ்டம் தான் இன்று இந்தியாவுக்கு பிடித்த பெரும்பிணி என்று சொல்லுவேன். சம்பாதனை மார்க்கங்கள், பொருள் உற்பத்தி மார்க்கங்கள் நாளுக்கு நாள் அருகிக்கொண்டு போகின்றன. செலவு மார்க்கங்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டு வருகின்றன. நமது மக்கள் வாழ்க்கைக்கு பொருளாதார கணக்கு வரவு செலவுத் திட்டமே கிடையாது. அப்படிப்பட்ட நாடு எந்தக் காலத்திலும் எந்த ஆட்சியினும் பொருளாதார சவுக்கியத்தை உண்டாக்கவே முடியாது. நமது திருமணங்கள் மாத்திரமல்லாமல் நமது தெய்வங்களின் திருமணங்கள் நமக்கு பெரியதொரு கழுத்தறுப்பாகும். மற்றவை நம் வாழ்க்கை சடங்கு முறைகள், ஜாதி ஆச்சார முறைகள் ஆகியவைகளில் உள்ள பொருளாதாரக் கொடுமையாகும். இவைதவிர பாடுபட ஒருவன், பயன் அடைய ஒருவன், உட்கார்ந்து சாப்பிட ஒருவன் என்கின்ற முறை நமது பொருளாதாரத்தை எவ்வளவு பாதிக்கிறது என்பதை நாம் உணருவதில்லை. ஆகையால் இம்மாதிரி திருமணங்களில் மக்களின் சராசரி வரும்படியில் ஒரு 10 நாள் அல்லது 15 நாள் வரும்படிக்கு மேல் செலவு செய்ய அனுமதிக்கவே கூடாது. மற்றும் நாள் சுருக்கமும் ஒரு மாறுதலாகும். இதை இன்று வைதீக ஜாதியான பார்ப்பனர் முதல் ஒப்புக்கொண்டு விட் டார்கள். ஆதலால் அந்த மாறுதல் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டதே யாகும்.

இன்னும் பல மாறுதல் செய்ய வேண்டியதும் உண்டு. அவை தம்பதிகள் தங்களில் தெரிந்தெடுத்துக்கொள்ள வேண்டியதும், தக்க பொருத்தம் இருக்க வேண்டியதும் தக்க வயதும் தொழிலும் ஏற்பட்ட பின் மணத்தில் இறங்க வேண்டியதும் மற்றும் பல காரியங்களும் உண்டு.

-- 06.12.1936 ஆம் நாள் திருப்பூரில் நடைபெற்ற எஸ்.ஆர். சுப்பிரமணியம் சென்னியம்மாள் திருமணத்திலும் 09.12.1936 ஆம் நாள் நடைபெற்ற துரைசாமி லட்சுமிபாய் அம்மாள் திருமணத்திலும் தலைமைவகித்து ஆற்றிய சொற்பொழிவு. --"குடி அரசு" சொற்பொழிவு 13.12.1936

No comments:

Post a Comment