காந்தியார் முடிவுக்குப் பின்
மதவெறிகொண்ட மாபாதகக் கூட்டம் சதி செயல் புரிந்து, தந்திரமும் வஞ்சனையும் போர்த்து உலகப் பெரியாருள் ஒருவரான பெரியார் காந்தியாரைப் பலிகொண்டுவிட்டது; செய்தியைக் கேட்டுத் திகைத்தவர் பலர்; திகைப்பால் செத்தவர்கள் சிலர்; சாக விரும்பியவர்கள் சிலர் என்ற செய்திகளை எல்லாம் அவர் மறைந்ததிலிருந்து நாள்தோறும் கேட்டு வந்திருக்கின்றோம். மனிதத் தன்மை படைத்த எவருமே விரும்பாத, இழிவான இந்தப் படுகொலையைக்கண்டு, கேட்டு, எவருமே பதறாமல் இருக்கமுடியாது. கோட்ஸே கும்பல்கூட அல்ல; கோட்ஸேகூட மனம் பதறித்தான் இருப்பான், தன்னால் கொல்லப்பட்ட காந்தியார் குலைந்து மண்ணில் வீழ்ந்ததைக்கண்டு, ஏன்? அவனும் மனித உடல் போர்த்தவன்தானே.
சுயநலம் கொஞ்சமும் இல்லாமல், தனது முப்பது ஆண்டு வாழ்க்கையையும் இந்தியத் துணைக்கண்டத்து மக்களின் நன்மைக்காகவே, தன் மனதில் எது நன்மை என்று பட்டதோ அவ்வழியிலேயே உழைத்த பெரியார் காந்தியார், பலாத்கார முறைகளில் கொஞ்சமும் நம்பிக்கையில்லாமல் அகிம்சையையே தன் கருவியாகக் கொண்டவர். மத இயலில், மதத்திற்கு மதம் வேறுபாடில்லை என்றும், மத முடிவுகள் எல்லாம் ஒன்றுதான் என்றும் வற்புறுத்தியவர். கடவுள் இயலில், கடவுள் ஒன்றுதான் என்றும், அந்த ஒன்றைத்தான் பலரும் பலவாறு கூறிப் போனார்கள் என்றும், ஆனால் எல்லாவற்றையும், ஒன்றாகவேதான் நான் மதிக்கின்றேன் என்றும், விளக்கிக் கூறி கடவுள் வழிபாட்டிற்காக அமைந்த கோயில்களை “விபசார விடுதிகள்” என்று கூறி அங்கு தரகனோ, அந்தக் கடவுளுக்குப் பால், பழம், சோறோ வேண்டியதில்லை; திறந்த வெளியே போதும் என்றவர். அதாவது, விக்கிரக ஆராதனை கூடாது, பிரார்த்தனையே போதும் என்று வற்புறுத்தியவர். சமுதாய இயலில் ஒருவரை ஒருவர் சுரண்டுதல் கூடாது, பரம்பரையாக ஒருவர் உறிஞ்சிப் பிழைக்கவும், அதற்காக மற்றொருவர் நைந்து, வாழ்க்கை கசந்து வாழவும், அதற்காக ஒரு கூட்டம் ஒடுக்கப்பட்டவர்களாய்த் தாழ்த்தப்பட்டவர்களாய் இருந்து வருவது ஈனம் என்றும் வற்புறுத்தியவர். தேச இயலில் இந்தியத் துணைக்கண்டத்தை ஒரே நாடு என்றும், இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒரே நாட்டினர் பட்டினர் என்றும் வற்புறுத்தியவர்.
இவ்வாறான காந்தியாருடைய பல கொள்கைகள், மத வேறுபாடு, ஜாதி வேறுபாடு நிரம்பிய இந்த நாட்டிற்கு அவைகளைத் தீர்க்க ஓரளவிற்குப் போதுமானவை என்று கூறத் தகுந்ததாயினும், அக்கொள்கைகளைப் பரப்புவதற்கு அவர் கையாண்டுவந்த முறைகள், நிச்சயமாக விபரீதமான பலனைத்தான் கொடுக்குமென நாம் என்று அடிக்கடி வற்புறுத்தி விளக்கிக் கூறி வந்திருக்கின்றோம் என்பதையும், அதே நேரத்தில் அவரின் பல கொள்கைகள் இந்தப் பிற்போக்கான நாட்டிற்குத் தேவையானவை என்று உணரத தவறவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.
இவ்வாறு இந்தியத் துணைக் கண்டத்தின் நன்மைக்காக, பெருமைக்காக முன்னேற்றத்திற்காக உழைத்து வந்த பெரியார் காந்தியார் என்று சொல்லிக்கொள்ளக் தகுந்த நிலையிலிருந்தாலும், அவருடைய மறைவுக்குப் பிறகும் இந்த நாட்டில் வாழ்ந்தேயாக வேண்டிய மக்கள் எவ்வளவு தூரம் நன்மை, பெருமை, முற்போக்கு அடைந்திருக்கிறோம்? அடையாவிட்டால் அதற்குக் காரணம் என்ன? அடைவதற்கு நாம் என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டும்? என்பவைகளைப் பற்றி எண்ண வேண்டுமல்லவா? அவைகளை அடைந்தால்தானே உண்மையில் காந்தியாரின் கொள்கைகள் நிறைவேறியதாக, வெற்றி பெற்றதாக நாமும் சொல்லிக்கொள்ளமுடியும்; உலகமும் ஒப்புக்கொள்ளும். இந்த நாட்டின் பிற்போக்குச் சக்திகள் என்று காந்தியார் எவற்றைக் குறிப்பிட்டாரோ, அவற்றை ஒழிப்பதுதானே உண்மையாக அவரை மரியாதை செய்வதாக இருக்க முடியும். இதைத் தேசியத் திராவிடர்கள் மட்டுமல்ல, இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள, தேசியப் பல்வேறு இனங்களும் இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும்.
காந்தியாரை எந்த இந்துமதம் ஒழித்ததோ, அதாவது எந்த இந்து மதம் காந்தியார் உயிருடன் வாழ்வது, தான் அழிந்துபோவதற்கு ஏது என்று கருதியதோ, அந்த இந்து மதத்தின் வளர்ச்சிக்காகவா அவருடைய மறைவு பயன்படுத்தப்படவேண்டும்? தான் பெரிய ஜாதியாய் இருந்துகொண்டே. மற்ற ஜாதியெல்லாம் தனக்குக் கீழ்ப்பட்ட ஜாதியென்று சொல்லி, அவைகளை தலைநிமிரவொட்டாமல் தந்திரத்தாலும், வஞ்சகத்தாலும் சதிசெயல்புரிந்து, சாஸ்திரம் என்றும், சடங்கென்றும் கூறி ஏமாற்றி வாழ்ந்துவரும் எத்தர்கள் பிழைப்புக்காக இந்தப் பெரியாருடைய மறைவு பயன்படுத்தப்படவேண்டும்? அறிவற்ற மக்களின் மூடத்தனத்தைப் பெருக்கி, அவர்கள் அந்த மூடத்தனத்தில் இருந்து என்றும் மீளாத வழியாக பார்ப்பனியத்தின் காலைக் கழுவிக்குடித்து வாழும் ஜாதியாக என்றைக்கும் இருப்பதற்காகவா இந்தப் பெரியாரின் வஞ்சகமான படுகொலையை மறைத்து. வகையில் ஆடம்பரமாக, அநாவசியமாகப் பயன்படுத்தப்படவேண்டும்?
காந்தியார் முடிவின் பிறகு நாம் நாட்டிலே என்ன பார்க்கின்றோம்? உலகம் எல்லா மூலைகளிலிருந்தும், அவரைப் பாராட்டி, அவர் முடிவுக்கு வருந்தி, அவரைச் சுட்ட கொலை பாதகப் பார்ப்பனனைக் கண்டித்து ஏராளமான செய்திகள் வெளியாகி விட்டன. ஒருவன் குற்றம் செய்தால் அவனும் அவனைச் சார்ந்த சொந்தக்காரர்களும், அவன் குலத்தினருமே ஒழிக்கப்படவேண்டும் என்ற இந்து மதத்தின் பழங்கால நீதியை, இப்பார்ப்பனன் இந்திய விஷயத்திலும் கையாளப்படவேண்டும் என்று நாம் கூறவில்லை; விரும்பவுமில்லை; அது கூறப்பட்டாலும், நியாயமுமில்லை. ஆனால், அவனை ஒழித்து விட்டு, அவன் அந்தச் சதிச் செயலைச் செய்ய எந்த இந்துமத வெறிவுணர்ச்சி காரணமாக இருந்ததோ, அந்த இந்துமத செழிப்புக்கான காரியங்களைச் செய்வதுதான் நீதியா? நியாயமா? என்று கேட்க ஆசைப்படுகின்றோம். இந்தப் படுகொலைக்கு எந்த இந்துமத சாம்ராஜ்ய தெரிந்து கொள்ளக் கூடியதாய் வெறியுணர்ச்சி காரணமாக இருந்ததோ, அந்த இருக்க முடியும். உணர்ச்சியை ஆழக்குழி தோண்டி, சுட்டுப் பொசுக்கி, சமாதி வைப்பதல்லவா நீதியான செயலாக இருக்க முடியும் என்று கூறவும் ஆசைப்படுகின்றோம்.
அவர் மறைந்த பதின்மூன்றாம் நாள், அவருடைய சாம்பல்களை எல்லாம் இந்த நாட்டின் “புண்ணிய நதிகளில் கரைத்து விடப்பட்ட ஒரு சடங்கையும், அதைப் பக்தி விசுவாசமாகப் பலர் பார்த்துத் தரிசித்துச் சென்றனர் என்ற விளம்பரச் செய்திகளையும், அதை அங்கங்கே உள்ளவர்கள் அவைகொண்டு போகப்பட்டபோதும், கரைத்தபோதும் ஏராளமாகக் கண்டு வணங்கிச் சென்றனர் என்ற செய்திகளையும் பார்க்கும்போது நாம் பெரிதும் வருத்தமடைகின்றோம். காந்தியாரின் படுகொலை விளைவித்த வருத்தத்தைக் காட்டிலும், அவருடைய முடிவு இந்தப்படி சித்திரவதைச் செய்யப்படுவது, நமக்கு மட்டுமல்ல பகுத்தறிவுடைய எவருக்கும் அதிக வருத்தத்தையே உண்டு பண்ணும் என்னலாம்.
இந்தச் செயலால் மக்களுடைய காலமும், பொருளும் வீணாகக் கழிந்தன என்றுகூட நாம் குறிப்பிட ஆசைப்படவில்லை. ஆனால், விலைமதிக்க முடியாததான மக்களின் அன்புணர்ச்சி - காந்தியார் படுகொலையைக் கேட்டுத் திகைப்படைந்து இதற்கு ஏதாவது வழி செய்யவேண்டும் என்று பிறந்த தெளிவுணர்ச்சி - காந்தியாரிடத்தில் நாம் மரியாதையுடையவர்கள் என்று காட்டவேண்டும் என்று தோன்றிய நன்றியுணர்ச்சி, பரிதாபமான முடிவைக் கேட்டு நம் மீது அதிகமான சுமை ஏற்றப்பட்டிருக்கிறது. சமுதாய முன்னேற்றத்திற்கு நம்மாலான தொண்டைச் செய்தேயாகவேண்டும் என்று உண்டான வீரஉணர்ச்சி, "காந்தியார் எலும்பைக் கண்டு தரிசித்தோம்", "ஆற்றில் சாம்பலைக் கரைக்கும்போது அந்த அருமையான காட்சியைக் கண்டு களிப்டைந்தோம்" "இதற்காக எவவளவு கஷ்டப்பட்டு எப்படி எப்படியெல்லாமோ போய் ஏதோ ஒரு மாதிரியாய்ப் பார்த்து வணக்கத்தைச் செலுத்தி விட்டோம்" என்று எண்ணி மனத்திருப்திப்படும் அளவிலா மனதிலுண்டான நல்லுணர்ச்சிகள் எல்லாம் கரைத்து விடப்படவேன் என்று கேட்கிறோம். காந்தியார் எலும்பையே காவிரி நதியிலும், மற்ற நதிகளி கொண்டு போய்க் கலப்பது புண்ணியமென்றால், அந்த நதிகளில் நம் முன்னோர் எலும்பையும், சாம்பலையும் கொண்டு போய்க் கலப்பது தானே புண்ணியமானதாகும்; இந்த ஏற்பாடுதானே புனிதமானது என்கிற முடிவைத்த இந்தச் செயல் மற்ற மக்களைக் கொள்ளச் செய்யும். அஸ்தியை ஆற்றில் கரை அய்யருடைய உதவி தேவை என்கிற முடிவில், பார்ப்பனர் வகுத்த சாஸ்திரங்கள் அவர்களின் வயிற்றுப் பிழைப்பு பராமரிப்பதற்குத்தானே இந்த நடவடிக்கை பயன்படுவதாக இருக்க முடியும்? இந்திய யூனியன் மதமற்றது என்று கூறப்பட்டாலும் அது இந்து மதத்தைப் பின்பற்றியே நடக்கக்கூடியது என்கிற உண்மையைத் தானே அரசாங்கம் காட்டும் ஆதரவிலிருந்து மக்கள் தெரிந்து கொள்ளக் கூடியதாம் இருக்க முடியும்?
இதுதானா காந்தியாருக்குச் செய்யும் நன்றி - மரியாதை? இவ்வாறு தரிசிப்பதும் மலர் மாலை சாத்துவதும் ஆன காரியங்களால் அவருடைய கொள்கைகள் நிறைவேரி விட்டன என்று கூற முடியுமா?
இயற்கையை ஏவல் கொண்டு, விரும்பியபடி எல்லாம் ஆட்டிவைக்கும் விஞ்ஞான முறையும் அதன் பயனாய்த் தோன்றிய இயந்திரங்களும், இங்கு இன்றைக்கும் வணக்கத்திற்குரியதாக இருக்கிறதேயன்றி வாழ்வின் நலனுக்காகக் கொள்ளப்பட்டது என்று சொல்ல முடியாத நிலையிலேயே இருக்கின்றோம். அறிவு உயர்ந்தது; அறிவைப் பெருக்குவது கல்வி; கல்வியைத் தருவது ஏடு. அந்த ஏடு வணக்கத்திற்குரியதாகவே இந்த நாட்டில் இருந்து வருகிறது என்று சொல்லலாமே தவிர, அந்த ஏட்டின் பயனைக் கண்டு அறிவு பெருகி வாழவேண்டும் என்ற போக்கைக் காணோமே? எது எது உயர்ந்தது என்று சொல்லப்படுகின்றதோ அதெல்லாம் வணக்கத்திற்குரியது; பூஜைக்குரியது என்கிற மனப்பான்மை இந்த நாட்டில் வேரூன்றி, வாழ்வில் அவைகளை ஏற்று நடக்கும் தன்மை இல்லாமல் போனதால்தானே, இந்தப் பழம் பெருமை வாய்ந்த நாடு கேடுகெட்ட நாடாக மாறிவிட்டது? சாரத்தை விட்டுவிட்டுச் சக்கையை ருசி பார்க்கும் நடவடிக்கைதானே பல காலமாக பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றது. அந்தப் போக்கைத்தானா இப்பொழுதும் மேற்கொள்ள வேண்டும்? என்று கேட்கிறோம்.
பார்ப்பனிய மதமான இந்து மதம் என்கிற கொடிய பாம்பிற்குக் காந்தியார் பாலூற்று வளர்த்து வந்தார். அப்பாம்பின் கொடுமையைப் பற்றி நாம் அவருக்கு அதிகமாகவே எடுத்துக் கூறினோம். சுயராஜ்யம் என்ற மகுடியை ஊதி வந்ததால், அதுவும் ஆடிப்பாடிய குதித்ததால், அதையடக்கிக் தன் வழிச் செலுத்தலாம் என்றே காந்தியார் முழுக்க முழுக நம்பினார். சுயராஜ்ய மகுடியை ஊதாத நேரத்தில் - ஊதத் தேவையில்லை என்று அவ கருதிய வேளையில், அப்பாம்பு தன் விஷப் பற்களுக்கு அவரையே இரையா கொண்டு விட்டது. இப்பொழுது அந்தப் பாம்பை என்ன செய்வது என்ற கேள்வி? நாம் நசுக்கி அழித்துவிட வேண்டும் என்றுகூடச் சொல்லவில்லை, அதனுடை விஷப்பற்களை மட்டும் பிடுங்கி எறிந்துவிட வேண்டும். இதைத்தான் இங்கு வற்புறுத்து சொல்ல ஆசைப்படுகின்றோம். இதற்கு வழியென்ன?
அவருடைய நினைவாகப் பெரும் பொருளை நிதியாகச் சேர்த்து கஸ்தூரிபாய் நிதி போலவும், கமலா நேரு நதிபோலவும் சில பொதுக் காரியங்களுக்குச் செலவு செய்து விட்டால், அது உண்மையாகவே அவருக்குத் தகுந்த ஞாபகார்த்தமாக விடுமா? அவருடைய உருவச் சிலைகளை அங்கங்கே வைத்துப் பூஜை நடத்தி வருவதினால் அது அவருடைய தொண்டைச் செய்ததாக முடியுமா? காந்தியார் கழகம் என்று பெயர் வைத்து அவர் எழுதியவைகளை எல்லாம் ஒன்று சேர்த்து (காலப் போக்கில் பார்ப்பனியப் பிடியில் சிக்கி நல்லதையெல்லாம் சுட்டெரித்துவிட்டு மாற்றித் திருத்தி வைத்துக் கொண்டு) வெறும் வேதாந்த விசாரணையில் ஈடுபட்டால் அது அவடைய கொள்கைகளைப் பரப்பியதாக ஆகுமா? அவர் எப்படி உண்ணாவிரதமிருந்தாரோ, மவுன விரதமிருந்தாரோ அவைகளை நாங்களும் எங்கள் வாழ்க்கையில் பின்பற்றப் போகின்றோம் என்று சிலபேர் முடிவு கட்டுவதால், அது பலருக்கு உண்மையாகவே நன்றி காட்டியதாக ஆகுமா? அவருடைய நினைவுக்கு அறிகுறியாக போஸ்டல் முத்திரைகளை அச்சிட்டு வெளியிடுவதோ, அதைப்போன்ற செயல்களைச் செய்வதோ காந்தியாரின் கொள்கைகள் இந்த நாட்டில் நிலைபெறுவதற்கு வழி செய்யும் காரியங்களாகுமா? வெறும் பஜனைபாடும் அளவிலும், பால் பழம் பூ வைத்து நைவேத்தியம் செய்யும் அளவிலும் நின்றால், அவர் உயர்ந்தவர், ஒரு பெரியார், ஒரு மகாத்மா, ஒரு மகான் என்று பெருமையாகப் பேசிக் கொள்வதற்குப் பேருதவியாக இருக்குமே தவிர, அவரால் இந்த நாட்டிற்கு நிலையான பயனேற்பட வழிசெய்ததாக ஆகுமா? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
பார்ப்பனியத்தை வளர்ப்பதற்கென்றே தோன்றி, அதைப் பராமரித்து இப்பொழுது முடிவுப் பாதையில் விரைவாகப் போய்க் கொண்டிருக்கும் இந்து மதமே, இந்த நாட்டின் சிதைவுக்கு மூலகாரணமென்று உணர்ந்து, அதை விட்டொழிப்பதே மனிதன் மனிதனாக வாழ்வதற்குச் செய்யப்பட வேண்டியதென்று விளக்கித் தங்களுக்கும், இந்து மதத்திற்கும் சம்பந்தமில்லை என்பதைக் காட்ட தங்களை திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்ளும் திராவிடர் பெருமக்களின் தந்தை பெரியாரவர்கள், இந்த நேரத்தில் மிகமிக அருமையான யோசனையை வழங்கியிருக்கின்றார்கள். அதனை ஆச்சாரியார், நேரு, பட்டேல் முதலியவர்களுக்கும் அனுப்பியிருக்கிறார்கள். அதை நாம் மற்றோரிடத்தில் வெளியிட்டிருக்கின்றோம். அதனை ஆழ்ந்து படித்து, அதாவது எழுத்தெண்ணிப் படிப்பது என்று கூறுவார்களே. அந்த முறையில் படித்து இந்த மாதிரியான திட்டம் இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு சமுதாய ஒற்றுமைக்கு - நாட்டின் நலத்திற்கு - உலகம் உள்ளவரை உலகத்தில் எங்குமே மறைந்து விடாதபடி காந்தியாரின் நிலையான அறிகுறியாக இருப்பதற்கு - ஏற்றதுதானா? செய்யப்படவேண்டியதுதானா? என்பதை தர சிந்தித்து பார்க்கும்படியாக காந்தி பக்தர்களையும் தேசிய தலைவர்களையும் தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
இந்தியத் துணைக்கண்டம் என்று கூறப்படுவதாய், பலவேறு நாடுகள், பலவேறு மதங்கள் என்று பிரிந்து பலவேறு கேடுகளுக்கு உள்ளாகி இருக்கும் இந்தத் துணைக்கண்டம் ஒரே நாட்டினர், ஒரே வகுப்பினர், ஒரே மதத்தினர் என்று கூறத்தக்க நிலையில் பலவேறு முற்போக்குக்களையும் அடைய உண்மையாகவே உங்களுக்கு அக்கறையிருக்கிறதா? ஆசையிருக்கிறதா? அந்த நல்ல காரியத்திற்கு மக்களின் வன்புணர்ச்சி - தியாகவுணர்ச்சி - நன்றி உணர்ச்சி வெள்ளத்தைத் திருப்பி விடுவதற்கு வழி வகுத்திடுங்கள் ! அதற்குத் துணை செய்யும் முறையில் காந்தியாரின் ஞாபகச் சின்னம் பயன்படட்டும் ! அது நிரந்தரமானதாய் நிலைத்திருக்கட்டும் ! அதே நேரத்தில், மிகவும் அற்புதமான நன்மையான பயனை உண்டாக்குவதாகவும் இருக்கட்டும் ! என்று பெரியாரவர்கள் விரும்புவதைப் போலவே நாமும் விரும்புகிறோம்.
-- குடி அரசு - தலையங்கம் - 14.2.1948
No comments:
Post a Comment