காந்தியார் முடிவு
"உலக மக்களுக்குத் தொண்டாற்றுவதற்கு ஆக 125 வயது வரை நான் உயிருடன் வாழ்ந்து வருவேன்" என்று கூறிக் கொண்டே, அதற்கு ஏற்ற வண்ணம் உடலையும் பாதுகாத்துக் கொண்டே, பெருவாரியான மக்களின் போற்றுதலையும், பாராட்டுதலையும் பெற்று அதற்கு ஆக உண்மையாய் உழைத்து வந்த மகான் காந்தியார், தனது 79ஆம் ஆண்டில் அகால மரணத்தால் முடிவெய்தி விட்டார்.
இவரது முடிவைப் போல், கேட்டதும் மக்களுக்குத் திடுக்கிடும் தன்மையும், அலறிப் பதறித் துடிதுடித்துத் துக்கப்படும் தன்மையும் இதுவரை நம் நாட்டிற்கு வேறு எவருடைய முடிவும் தந்ததில்லை என்பதோடு, இப்படிப்பட்ட இவரே இக்கதிக்கு ஆளான பின்பு இனி எவர் எக்கதியானால் தான் என்ன? என்றும் கூறலாம்.
காந்தியார் கொள்கையில் அதிருப்தி கொண்டவர் சிலர் ஏன் பலர் இருக்கலாம் என்றாலும், அப்படிப்பட்டவர்களும் காந்தியாரிடத்தில் மரியாதையும், அன்பும் வைத்தவர்களாகவே இருந்தார்கள்.
கம்யூனிஸ்ட்டுகளும், சமதர்மவாதிகளும், காந்தியார் கொள்கையில் எவ்வளவு குறை கண்டாலும், அவரிடத்தில் மதிப்பும், மரியாதையும் வைத்தவர்களாகவே இருந்து வந்தார்கள். வெள்ளையர்கள் மீதில் இந்தியர்களுக்கு எப்படிப்பட்ட குரோத மனப்பான்மை ஏற்பட்ட காலத்திலும், வெள்ளையர் அரசாங்கம் காந்தியாரை மதிப்பதிலோ, அவரைப் பாதுகாப்பதிலோ சிறிதுகூடத் தவறியதில்லை. அனுபவத்திற்கு ஏற்றதோ ஏற்காததோ என்ற கவலையற்று, காந்தியார் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு இலட்சியவாதியாகவே இருந்த பெரியாராவார். ஆதலால், அவரிடத்தில் சொந்த விருப்பு வெறுப்புக் கொண்டு யாவரும் அவரை வெறுத்ததில்லை.
திராவிடர் கழகத்தாருக்கும் காந்தியாரிடம், அவர் வருணாச்சிரம தர்மத்தைக் காப்பதில் பிடிவாதமான கவலை கொண்டிருக்கிறாரே என்பது தவிர, மற்றக் காரியங்களில் அவருடன் பிரமாதமான முரண்பட்ட கருத்துக்கொண்டிருக்கவில்லை என்பதோடு, அவர்கள், “காந்தியார் கூடிய சீக்கிரத்தில் இந்த விஷயத்திலும் சரிப்பட்டு விடுவார்கள் என்றே கருதி, அதை மாத்திரமே முக்கியமாய்க் காந்தியாருக்கு எடுத்துக் கூறிக் குறிப்பிட்டு வந்தார்கள்.
இந்துஸ்தானிலிருந்து திராவிட நாடு தனி நாடாகப் பிரியவேண்டும் என்பதிலும் காந்தியாருக்குப் பிடிவாதமில்லாமலேயே இருந்து வந்தது என்றாலும், அவரது நண்பர்களான மார்வாடிகள், குஜராத்திகளின் தாட்சணியம் காரணமாக மாத்திரமே, அது விஷயத்தில் தனது, அதிருப்தியைக் காட்டி வந்தார். எப்படி இருந்த போதிலும் திராவிடர் கழகத்தாருக்குள் ஒரு சிலருக்குக் காந்தியார் நட்புப் பெறவும், அவரிடம்
தங்கள் கொள்கைக்கு ஆதரவு தேடவும் ஆசை துடித்துக் கொண்டிருந்தது. 1948ஆம் ஆண்டு முடிவதற்குள் இது விஷயத்தில் ஒரு குறிப்பிடத் தகுந்த மாறுதல் கூட திராவிடர் கழகத்தில் ஏற்படலாம் போல் நிலைமை இருந்தது.
இப்படிப்பட்ட சமயத்தில் ஒரு பார்ப்பனப் பாதகன், மதவெறி காரணமாகக் கொடுஞ்செயல் செய்து தனது ஜாதிக்கே நீங்காப் பழியையும், மாசையும் உண்டாக்கிக் கொண்டான். காந்தியார் எப்படி இருந்தாலும் ஒரு நாளைக்குச் சாகக்கூடியவர் என்பதில் யாருக்கும் அய்யமில்லை . அவர் இளம் வயது உடையவருமல்ல. 80 வயதுடையவராய், உலகப் பெரியாராய், உத்தமராய் வாழ்ந்து விட்டார். அவர் அடைந்த சுகபோகம், ராஜ உபசாரம் என்பவை போதுமானதற்கு மேல் என்றே சொல்லலாம். மற்ற எவருக்கும் இதுபோல் சுலபத்தில் கிடைக்கக்கூடியதல்ல என்றும் சொல்லலாம். அவர் மக்களுக்குச் சொல்லவேண்டியவைகளை எல்லாம் சொல்லிவிட்டு அதுபோல் நடந்து காட்டவும் செய்தார். அவர் சாகும்போது அவருக்கு நினைவு, உணர்வு இருந்து இருக்குமானால், "கடவுள் என்னை அழைக்கிறார்'' என்று கருதித் திருப்தியுடன் தான் உயிர்விட்டிருப்பாரே ஒழிய, சிறிதும் அதிருப்தியாய் உயிர்விட்டிருக்கமாட்டார்.
என்றாலும், நடந்தது என்ன என்று பார்ப்போமேயானால், அவர் குறிப்பாக எந்த ஜாதி மக்களுக்குப் பாதுகாப்பாக இருந்து வந்து, எந்த ஜாதி மக்களை - "பிட்சாந்தேஹி” என்கின்ற உஞ்சவிருத்திக் கூட்டமாக இருந்து வந்தவர்களை - இன்று உயர்வாழ்வில் இருத்தி நாட்டை அவர்களது ஆட்சிக்கும், ஆக்கினைக்கும் உள்ளாக்கிக் கொடுத்தாரோ, அந்த ஜாதியே இன்று அவரை அழித்து விட்டதே என்பதுதான் இதில் ஆத்திரம் கொண்ட பரிதாபத்தோடு சிந்திக்க வேண்டியதாயிற்று.
உண்மையில் பிராமண (பார்ப்பன) ஜாதி என்பதாக ஒரு ஜாதி, அந்த ஜாதியின் நலனுக்கு ஆக, அதுவும் மற்ற ஜாதிகளை இழித்து, அழுத்திக் கசக்கிப் பிழிந்து, தாங்கள் மாத்திரம் நல்வாழ்வு வாழ்ந்தால் போதும் என்கின்ற கருத்துக்கு ஆக மாத்திரம் அல்லாமல், மற்றபடி வேறு எந்தக் காரியத்திற்கும் அந்த ஜாதி உலகத்துக்குத் தேவையே இல்லாத ஜாதியாகும். அப்படிப்பட்ட ஜாதியை அது ஒழியப்போகும் தருணத்தில் காப்பாற்றி அந்த ஜாதியாருக்குப் பொருந்தாத ஏற்றத்தைத் தந்து நிரந்தரமாய் நல்வாழ்வு வாழ வகையளித்தார். அப்படிப்பட்ட அந்த ஜாதிப் பாதகரே, அதற்குப் பிரதி உபகாரமாக இப்படிப்பட்ட பழிபாவத்திற்கு அஞ்சாத மகாபாதகமான காரியம் செய்தார் என்பது இது அவருடைய - அவ்வொருவருடைய செய்கையாக மாத்திரம் ஆகிவிட முடியுமா? ஒரு நாளும் முடியவே முடியாது. இதை “ஜாதி தர்மம்” என்றுதான் சொல்லவேண்டும்.
புத்த தர்மம் கெட்டது யாரால்? சமண தர்மம் கெடுக்கப்பட்டுச் சமணர்கள் கழுவேற்றப்பட்டது யாரால்? மற்றும் பாதகமானதும் வஞ்சனையானது என்று திரும்பவும் கேட்கிறோம். மாகிய பல கொடுஞ்செயல்கள் புராண காலத்திலும், சரித்திர காலத்திலும் நடந்ததாகக் காணப்படுபவை யாரால் நடந்தவை?
இவை போன்றவைகளைக் கூர்ந்து கவனிப்போமேயானால், காந்தியார் போன்ற பெரியார்கள் பார்ப்பனரால் படுகொலை செய்யப்பட்டது என்பது அதிசயமோ, சிறிதும் ஆச்சரியமோ அல்ல என்பதை உணருவோம். இதற்கு ஆக பார்ப்பன ஜாதியை குறைகூறுவது முற்றும் சரியானதாகி விடாது. அவர்கள் தங்கள் சுயநல வாழ்வுக்கு ஆக ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் மதக் கற்பனைகளே, இப்படிப்பட்ட பார்ப்பனர்களை உற்பத்தி செய்யும் விளைநிலமாக இருந்து வருகிறது. உண்மையிலேயே, மதமாற்சரியம், வகுப்பு மாச்சரியம், இனமாச்சரியம் முதலிய துவேஷங்களுக்குப் பார்ப்பன மதம் தவிர, மற்றபடி இந்த நாட்டில் வேறு காரணம் யாராவது சொல்ல முடியுமா? தனிப்பட்ட எந்தப் பார்ப்பனரை நாம் குற்றம் கூறக் கூடும்? என்று கேட்கிறோம்.
நன்றாக ஆழ்ந்து நிதான புத்தியுடன் கூர்ந்து சிந்திப்போமானால், “வெள்ளையன் ஆட்சி கூடாது'' “முஸ்லிம் ஆட்சி கூடாது'' என்ற உணர்ச்சியை இந்திய மக்களுக்கு ஊட்டவும், அதனால் குரோதம், துவேஷம் ஏற்படவும், அதனால் வெட்டு, குத்து, கொலை, கொள்ளை, நாசம் ஏற்படவும் பார்ப்பன மதம் காரணமல்லாமல், வேறு ஏதாவது கொள்கைகள், திட்டங்கள், ஆட்சி தர்மங்கள் காரணம் என்று யாராலாவது சொல்ல முடியுமா? சொல்லக் கூடுமானால் வெள்ளையன் ஆட்சியும், முஸ்லிம் ஆட்சியும் ஒழிந்தன. இந்துஸ்தான் சுயஆட்சி பெற்றது என்று சொல்லப்பட்ட பின்பும், இந்து முஸ்லிம் போராட்டம் என்னும் பேரால் இந்த ஒரு ஆண்டுகாலமாக நடந்துவரும் அட்டூழியமான நடத்தைகள் நடப்பதற்குப் பார்ப்பன மதம் காரணமல்லாமல், வேறு காரணம் என்று யாராலாவது எதையாவது சொல்லமுடியுமா?
திராவிட நாட்டில் இதுபோது நடந்துவரும் திராவிடர்-ஆரியர் நாடு பிரிவினைப் போராட்டங்களுக்கும், பார்ப்பன மதம் காரணம் என்பதல்லாமல் வேறு காரணம் ஏதாவது சொல்ல முடியுமா? இப்படிப்பட்ட ஒரு மததர்மம் காந்தியாரைக் கொன்றதில் அதிசயமென்ன? என்று திரும்பவும் கேட்கிறோம்.
பார்ப்பனிய மதக் கொடுமைக்கு திராவிட நாட்டில் எப்படியோ ஒரு விதத்தில் இதுவரை இப்படிப்பட்ட பாதகங்களுக்கு இடமில்லாமல் பலரால் பல காரியங்கள் செய்யப்பட்டு வந்திருக்கிறது என்றாலும், பார்ப்பனர்கள் இனி சும்மா இருக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது.
இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பார்ப்பனரும் தமது பார்ப்பன மதத்தைக் காப்பாற்றத்தான் அரசியலில் கலந்து கொண்டும், பத்திரிகைகள் நடத்திக் கொண்டும், காந்தியார் முன் ஆஷாடபூதி மறைத்தும் வேஷம் போட்டுக் கொண்டு தக்களி சுற்றுவதும், கதர் கட்டிக் கொள்வதும், கோணல் குல்லாயை போட்டுக் கொள்வதும், தேசியக் கொடி பிடித்துக் கொண்டு காங்கிரஸ் பித்தர்கள் போல் நடிப்பதுமாய் இருந்து வந்தார்களே ஒழிய, நாட்டுப் பற்றால் என்றோ, மக்களுக்கு விடுதலை ஏற்பட வேண்டும் என்ற விடுதலை வேட்கையால் என்றோ, எந்தப் பார்ப்பனரையாவது அவர்களது எந்த நடவடிக்கைகளையாவது சுட்டிக் காட்ட முடியுமா என்று கேட்கிறோம்.
வடநாட்டில் காந்தியாரை வீழ்த்தியதன் பயனாய் பார்ப்பனர்களின் செல்வாக்கு ஒரு அளவுக்கு இந்த நாட்டிலும் இனி குறைந்துதான் தீரும் என்பதோடு, இந்து முஸ்லிம் போராட்டமும் பெரும் அளவுக்கு அடங்கித்தான் தீரும் என்பதை உணர்ந்த தென்னாட்டுப் பார்ப்பனர்கள், இங்கு திராவிட மக்கள் மீது அவ்வஞ்சகத் தன்மையைத் திருப்ப இப்போதே துவங்கிவிட்டார்கள் என்றே சொல்லலாம்.
முதலாவதாக தென்னாட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகள் காந்தியாரை சுட்டவன் பார்ப்பான் என்பதை வேண்டுமென்றே மறைத்து, மக்கள் முஸ்லிம்கள் மீதும், காங்கிரசுக்கு மாறுபட்ட கருத்துக் கொண்டவர்கள் மீதும் பாயும்படியான மாதிரியில் அயோக்கியத்தனமாக மறைத்தும் திருத்தியும் பிரசுரித்தார்கள். அதுமாத்திரமா என்று பார்த்தால், திராவிடர் கழகத்தார் மீதும் துவேஷம் ஏற்படும்படி இரட்டை அயோக்கியத்தனமாக, "கருப்புச் சட்டைக்காரர்களின் கலாட்டா' என்ற தலைப்புக் கொடுத்து மக்களை அவர்கள் மீது கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இந்தக் காரியத்தைச் "சுதேசமித்திரன்" பத்திரிகையே முதன்முதலாக தைரியமாய்க் கையாண்டிருக்கிறது. உண்மையாக, இந்த நாட்டில் “இந்து'', "சுதேசமித்திரன்'' என்ற இந்த இரண்டு பேயாட்ட வெறிகிளப்பும் விஷமப் பத்திரிகை இல்லாமல் இருந்திருக்குமானால், இந்த நாடு எவ்வளவோ முன்னேற்றமடைந்து, இந்த நாட்டு மக்கள் எவ்வளவோ அந்நியோன்ய பாவமடைந்து, ஞானமும், செல்வமும், ஆறாகப் பெருகும் நன்நாடாக ஆகி லலாண்டுகள் ஆகியிருக்கும், இன்றைய கலவரங்களிலும், கேடுகளிலும், நாசங்களிலும் 1000இல் 999 பாகமும் இல்லாமல் இருந்திருக்கும்.
இப்பத்திரிகைகள் தங்கள் ஜாதியார் செய்யும் அயோக்கியத்தனங்களை எல்லாம் பாதுமக்கள் ஆத்திரம்" என்று போட்டுவிட்டு, (கருப்புச்சட்டைக்காரர்கள் சயதார்களோ இல்லையோ) கருப்புச் சட்டைக்காரர்கள் நடத்தையைக் குறிப்பிடும்போது “கருப்புச்சட்டைக்காரர்கள் கலாட்டா” என்று போடுவதின் - அதுவும் இந்தச் சமயத்தில் போடுவதின் காரணம் வேறு என்னவாய் இருக்க இந்த நாட்டுக்கு எப்படிப்பட்ட ஆட்சி ஏற்பட்டாலும் “இந்து”, “சுதேசமித்திரன் என்னும் இந்த இரண்டு விஷ ஊற்றும் ஒழிக்கப்பட்டால் ஒழிய, மக்கள்' துவேஷம், குரோதம், வஞ்சகம் என்னும் விஷ நோய்கள் நீங்கப் போவதில் என்று உறுதியாய்க் கூறுவோம். இந்த சமயத்தில் பார்ப்பனர் செட் அயோக்கியத்தனங்கள் ஏராளமாக இருக்கும்போது அவைகளை மறைத்து, சுட்ட ஜாதியைக் கூட மறைத்து விட்டு "கருப்புச் சட்டைக்காரர்கள் கலாட்டா” என் எழுதுவதானது, சர்க்கார் அடக்குமுறையைப் பார்ப்பனர் பக்கம் திருப்புவதை விட்டு கருப்புச் சட்டைக்காரர் பக்கம் திருப்புவதற்கல்லாமல் வேறு எதற்கு ஆக இரும் முடியும்? இந்தப்படி செய்த மற்ற கூட்டத்தினருக்குப் பெயரைக் கொடுத்து அது பிரசுரித்ததா?
இப்படிப்பட்ட யோக்கியர்கள் உள்ள நாட்டில் எப்படி ஜாதி, வகுப்பு, ஒற்றுமை இருக்க முடியும்? மேலும் மேலும் துவேஷம், பிரிவு, ஏற்படாமல் எப்படி இருக்க முடியும்? மக்களுக்கு வெறி ஏற்பட்டிருக்கும் சமயத்தில் "கருப்புச் சட்டைக்காரர் கலாட்டா'' என்று எழுதினால், அதன் உள்மர்மம் என்னவாய் இருக்க முடியும்?
எனவே, பார்ப்பனிய விஷம மதம் அழிபட்டாலொழிய சாந்தியும், சமாதானமும் இந்த நாட்டுக்கு ஏற்படுவது அருமையிலும் அருமையாகத்தான் இருக்கும். கடவுள் இருப்பதாலேயே, மதம் இருப்பதாலேயே இக்கேடுகள் நிகழ்கின்றன என்று நாம் சொல்ல வரவில்லை. உலகில் மற்ற பாகங்களில் உள்ள அளவுக்கு அவை இங்கும் நன்றாய் இருக்கட்டும். ஆனால், வருணாச்சிரம தர்மப் பிரிவு கொண்ட பார்ப்பன மதம் வேண்டவே வேண்டாம் என்றுதான் சொல்லுகிறோம். அது உள்ளவரை நாட்டில் இன்றுள்ள கேடுகள் எல்லாம் இருந்துதான் தீரும்.
பண்டித நேருவும், இராஜகோபாலாச்சாரியாரும் எவ்வளவு தியாகிகளாகவும், யோக்கியர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருந்தாலும், அவர்கள் இந்த வர்ண தர்மத்தை வைத்துக் கொண்டு எப்படிப்பட்ட நல்லாட்சியைக் கொண்டு வந்தாலும், அதில் காந்தியாருக்கு ஏற்பட்ட கதிதான் இவர்களுக்கும் - ஏன் நமக்கும்கூட ஏற்பட்டுத்தான் தீரும். பார்ப்பன மதம் அவ்வளவு விஷத்தன்மை கொண்ட மதமாகும். ஏன் இப்படிச் சொல்லுகிறோமென்றால், பர்மாவில் சுயராஜ்யம் மக்களுக்கு எவ்வளவோ நன்மைகளைச் செய்துவிட்டது. இலங்கையில் சுயராஜ்யம் அவ்விடத்திய மக்களுக்கு எவ்வளவோ நன்மைகளைச் செய்துவிட்டது. எப்படிச் செய்ய முடிந்தது என்றால், அங்கு வருணாச்சிரம ஜாதி முறை இல்லை. பார்ப்பான் இல்லை; இந்துக்கள் நாட்டில் - இந்துஸ்தானில் சுயராஜ்யம் வந்து என்ன செய்தது? காந்தியார் உயிரைப் பலி வாங்கி விட்டது. ஏன் என்றால் இங்கு வருண ஜாதியும் பார்ப்பானும் உண்டு. இனியும் என்ன என்ன செய்யப்போகிறதோ இவை? இன்றைய சுயராஜ்ய ஆட்சி மந்திரிகளில் - ஒருவர் மது மற்றொரு மந்திரி சந்தேகப்பட்டுக் குற்றப்பத்திரிகை வாசிக்கிறார். அதாவது போதுமான பாதுகாப்பு முயற்சி எடுத்துக் கொள்ளாததாலேயே, உள்நாட்டுக் கலகமும் காந்தியார் கொலை பாதகமும் ஏற்பட்டது என்று பண்டித நேரு பாதுகாப்பு மந்திரி மீது குற்றமேற்படும்படி சொல்லுகிறார். நேருவின் நண்பரும் சமதர்மக் கட்சித் தலைவருமான தப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் வெட்ட வெளிச்சமாகவே இதை "பாதுகாப்பு
மந்திரி (சர்தார் பட்டேல் அவர்கள்) அந்தப் பாதுகாப்பு இலாகாவுக்குத் தகுதி அற்றவர் என்று சொல்லுகிறார். பொதுமக்களும் இந்தக் கொலைக்குச் சர்தார் மீதும் பழிபோட இடமிருக்கிறது என்றே கருதுகிறார்கள். காந்தியாரும் உயிருடன் இருக்கும்போது “எனக்கும் பட்டேலுக்கும் விரோதம் இருப்பதாகக் கருதாதீர்கள்” என்று சொல்லி அவர் மீது மக்களுக்கு உள்ள தப்பபிப்ராயத்தை மாற்ற முயன்று இருக்கிறார். சர்தார் பட்டேல் அவர்களும் "காந்தியார் பட்டினியின் போதே செத்து இருந்தால் நன்மையாக இருந்து இருக்கும்” என்று தனது துக்கச் சேதியில் நுழைத்துச் சொல்லி இருக்கிறார். இதன் காரணமாய் மந்திரிகளுக்குள்ளும் அபிப்பிராய பேதம் வலுத்து மந்திரி சபையில் மாற்றமோ, கோளாறோ ஏற்பட்டாலும் ஏற்படலாம்.
ஆகவே, பண்டித நேரு அவர்களும், ராஜகோபால ஆச்சாரியார் அவர்களும், அவர்கள் விலகுவதற்கு முன்போ, ஓய்வெடுத்துக் கொள்ளுவதற்கு முன்போ, இல்லையானால், இனி இப்படி நேராமல் இருக்கப் பாதுகாப்பு முறைகள் கையாளுவதற்கு முன்போ "காந்தியார் பலியாக்கப்பட்டதின் காரணமாய் இந்து மக்கள் சமுதாயத்தில் வருணாச்சிரம தர்மமுறை அதாவது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதான பிரிவு (பிறவி உரிமை முறை இனி கிடையாது. வருண முறையைக் குறிக்கும் சட்டம், சாஸ்திரம், சம்பிரதாயங்களும் இந்தச் சுயாஜ்யத்தில் இனி அனுஷ்டிக்கப்பட மாட்டாது. இவை ஒழியும்படியாக அவசியமான எல்லா ஏற்பாடுகளும் கையாளப்படும்” என்று சுயராஜ்ய சர்க்கார் பேரால் ஏற்பாடு செய்துவிடுவார்களேயானால், இந்த நாட்டைப் பிடித்த எந்தவிதமான கேடும், ஒரே அடியாய்த் தீர்ந்துவிடும். இதைச் செய்த உடனே அப்புறம் ஒரு உத்தரவு போட்டுவிடலாம். அதாவது "பிறவி ஜாதிமுறை எடுபட்டு விட்டதால் இனி இந்த நாட்டில் பிராமணர் பாதுகாப்புச் சங்கமோ, பிராமணர் சேவா சங்கமோ, வன்னிய சத்திரியர் மகாஜன சங்கமோ, நாடார் கட்சி மகாஜன சங்கமோ, வாணிய வைசியர் சங்கமோ, மருத்துவர் சங்கமோ, அருந்ததியர் சங்கமோ மற்றும், இப்படிப்பட்ட பல பல ஜாதி வகுப்புச் சங்கமோ, உள் வகுப்புச் சங்கமோ எதுவும் இனிச் சட்ட விரோதமாகக் கருதப்படும். அதனதன் தலைவர்களும் பிரமுகர்களும் பந்தோபஸ்தில் வைக்கப்பட்டு அவர்கள் சொத்துகளைப் பறிமுதல் செய்யப்படும்” என்று உத்திரவு போட்டு விடலாம்.
பிறகு நமக்கு என்னதான் வேண்டும். தானாகவே சமதர்மமும், பொதுவுடைமையும் தனித்தனி நாடு சுதந்திரமும் தாண்டவமாடும்.
இந்தப்படி சர்க்கார் செய்யாமல் வேறு எந்தவித முயற்சி செய்தாலும் அடுத்த பலிக்கு மந்திரிமார் உள்பட நாம் யாவரும் தயாராய் இருக்க வேண்டியதுதான். இந்த நல்ல சமயத்தில் இதைச் செய்யாமல் இந்து மகாசபை ஒழிக்கப்பட்டாலும் சரி, ராஷ்டிரிய சுயம் சேவக் சபை ஒழிக்கப்பட்டாலும் சரி, மாறுதல் ஒன்றும் ஏற்படப் போவதில்லை என்பது நமது கல் போன்ற உறுதியாகும்.
திராவிடர் கழகத்தார் முக்கியமாக இந்த சந்தர்ப்பத்தில் தங்கள்மீது என் குற்றமும் குறையும் எவரும் கூறுவதற்கு இடமில்லாமல் அடக்கமாய், அமைதியாய் உண்மையாய், நிரபராதியாய் நடந்துகொண்டு, தங்கள் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம்.
-- குடிஅரசு - தலையங்கம் - 07.02.1948
திராவிட மக்கள் எப்படிப்பட்ட நிலையிலும் அமைதியுடனும், சகிப்புத்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
- ஈ.வெ.ரா
குடிஅரசு - வேண்டுகோள் - 07.02.1948
No comments:
Post a Comment