Sunday, 30 January 2022

காந்தியார் மறைவுக்கு அனுதாபக் கூட்டம் - தோழர் பெரியார்

 காந்தியார் மறைவுக்கு அனுதாபக் கூட்டம் 


காந்தியார் அவர்கள் இயற்கைக்கு விரோதமாக மரணமாக்கப்பட்டது குறிக்க அனுதாபப்படவும், கொலைச் சம்பவத்தைக் கண்டிக்கவும் திராவிடர் கழகத்தின் சார்பாக ஒவ்வொரு ஊரிலும் திராவிடர் கழகத்தார் அனுதாபம் - கண்டனக் கூட்டம் 29.0248 ஞாயிற்றுக் கிழமையன்று ஏற்பாடு செய்ய வேண்டியது. கூட்டத்திற்கு ஆடம்பரம் கூடாது; செலவு கூடாது; ஒலிபெருக்கிக் கூடாது; சொற்பொழிவு கூடாது. தலைவர் அல்லது அவரால் அழைக்கப்பட்டவர் பின்வரும் தீர்மானத்தைப் படித்ததும், பொதுமக்கள் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுனமாக இருந்ததும், மிக அமைதியாக பிரிந்துவிட வேண்டியது.

 காந்தியார் மறைவுக்கு அனுதாபத் தீர்மானம் 

“சென்னை மாகாணத்தில் உள்ள, திராவிடர் கழகத்தின் கிளை ஸ்தாபனமாகிய ஜில்லா... ஊர் திராவிடர் கழகத்தார் சார்பாகக் கூட்டப்பட்டதும், திராவிடர் கழகத்தவர்கள் பெரிதும் கூடி உள்ளதுமான இக்கூட்டமானது, உலக மக்களால் போற்றப்பட்டவரும், இந்திய தேசிய காங்கிரஸ் நடப்புக்கு மூல காரணமாயிருந்து அதை நடத்தி வந்த முக்கிய தலைவரும், சத்தியம், அன்பு, ஒற்றுமை, முதலிய உயர் குணங்களை சதா சர்வ காலம் மக்களுக்குப் போதித்து வந்த உத்தமருமான ஒப்பற்ற பெரியார் காந்தியார் அவர்கள் இயற்கைக்கு மாறான தன்மையில் மரணமடைந்தது குறித்து, தனது ஆழ்ந்த துக்கத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. 

இம்மரணத்துக்குக் காரணமாக இருந்த கொலை பாதகனையும், அவனுக்கும் பின்னால் ஆதரவாகவும், நடத்துபவர்களாகவும் இருந்த ஸ்தாபனங்களையும் மக்களையும் வெறுப்பு காட்டிக் கண்டிக்கிறது

இந்தப் பரிதாபகரமான நிகழ்ச்சியின் விளைவைப் படிப்பினையாகக் கொண்டு இந்நாட்டு மக்கள் யாவருமே ஜாதி, மத, இன வேறுபாடு காரணமாய் வேற்றுமை உண இல்லாமல் ஒன்றுபட்டு வாழ்வோமாக! 

அன்பும், அறிவும், சத்தியமும், என்றும் எங்கும் நிகழ்வதாகுக, அவையே யாவற்றிலும் வெற்றி பெறுவதாகுக" 

இத்தீர்மானத்தை மத்திய நிலையத்துக்கும், காந்தியார் மகன் தோழர் தேவதாஸ் காந்திக்கும். பண்டித ஜவகர்லால் நேரு அவர்களுக்கும் அனுப்ப வேண்டியது. செய்தியை எல்லா பத்திரிகைகளுக்கும் அனுப்பவும்.


-- குடி அரசு - அறிவிப்பு - 21.02.1948 



"காந்தியாரின் மறைவு” 

"குடிஅரசு” ஆபீஸ் அனுதாப விடுமுறை ஈரோடு, பிப். 3- பெரியார் காந்தியாரின் துக்ககரமான மரணத்தைக் குறித்து 2.2.1948 ஆம் தேதி, திங்கள்கிழமை காலை “குடி அரசு" உதவி நிர்வாகி தோழர் எம்.கே. குகநாதன் தலைமையில் அனுதாபக் கூட்டம் நடைபெற்றது. “குடிஅரசு'' ஆசிரியர் புலவர் நா. மு. மாணிக்கம் அவர்கள் மதவெறியனின் படுமோசச் செயலைக் கண்டித்துப் பேசியதுடன், நமது தலைவர் பெரியார் அவர்களின் 31.1.1948 தேதியின் ரேடியோ சொற்பொழிவை எடுத்துக்காட்டி விளக்கிப் பேசினார். பின்னர், அன்று ஆபீஸ் விடுமுறை விடப்பட்டது. 


-- குடிஅரசு - துணுக்கு - 07.02.1948 

No comments:

Post a Comment