Sunday, 30 January 2022

காந்தியாருக்கு ஞாபகச் சின்னம் – தோழர் பெரியார்

 காந்தியாருக்கு ஞாபகச் சின்னம்


காந்தியாருக்கு ஞாபகச் சின்னம் ஏற்படுத்துவது அவசியம். அது நிரந்தரமானதாகவும், அதிசயமான பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். அதற்கு என் தாழ்மையான யோசனை :

1. இந்தியாவுக்கு ‘ஹிந்துஸ்தான்’ என்கிற பெயருக்குப் பதிலாக- ‘காந்தி தேசம்’ அல்லது  ‘காந்திஸ்தான்’ என்று பெயரிடப்படலாம்.

2. இந்து மதம் என்பதற்குப் பதிலாக  ‘காந்தி மதம்’ அல்லது ‘காந்தினிசம்’ என்பதாக மாற்றப்படலாம்.

3. இந்துக்கள் என்பதற்குப்பதிலாக-மெய்ஞ்ஞானிகள் அல்லது சத்ஞானஜன்’ என்று பெயர் மாற்றப்படலாம்.

4. காந்தி மதக் கொள்கையாக இந்தியாவில் ஒரே பிரிவு மக்கள்தான் உண்டு; வருணாசிரம தர்மமுறை அனுசரிக்கப்படமாட்டாது. ஞானமும் (அறிவும்) பசஷமும் (அன்பும்) அடிப்படையாகக்கொண்டது; சத்து அதாவது சத்தியமே தித்தியமானது என்பதான சன்மார்க்கங்களைக் கொண்டதாகும் என்பதாக ஏற்படுத்தி, கிறிஸ்து ஆண்டு என்பதற்குப் பதிலாக – ‘காந்தி ஆண்டு’  என்று துவக்கலாம்.



இப்படிப்பட்ட காரியங்கள் செய்வதனால்தான், புத்தர், கிறிஸ்து, முகம்மது முதலிய பெரியார்களுக்கு காந்தியார் ஒட்பானவராகவும், இன்றைய நிலைமைக்குத் தோன்றிய ஒச் சீர்திருத்த மகானாகவும் உலகமே கருதும்படியான நிலை ஏற்படும்; உலக மக்களால் நாம் நன்கு மதிக்கப்படுவோம்; இந்தியாவுக்கு சாபக்கேடு எது எது சொல்லிவரப்பட்டதோ அதெல்லாம் மறைந்துவிடும். ஆசிய சமாஜ், சீக் சமாஜ், பிரம்ம சமாஜ் என்பது முதலிய எத்தனையோ புதிய மார்க்கங்கள் (கொள்கைகள்) ஏற்பட்டும் ஒன்றும் இந்தியாவை வெற்றி கொள்ளவில்லை. ஆனால், பவுத்த மதம், கிறிஸ்து மதம், முகம்மதிய மதம் ஆகியவை வெற்றிபெற்றுவிட்டன. இதன் காரணம், இவை அரசாங்க மதங்களாய் இருந்து வருவதே யாகும். ஹிந்துஸ்தான் முப்பது கோடிக்கு மேற்கொண்ட மக்களைக் கொண்டது. அதன் அரசியல் திட்டமாக- ‘காந்தியம்’ என ஏற்பட்டுவிடுமானால், கண்டிப்பாக வெற்றிபெற்றே தீரும். இன்றைய முட்டாள்தனமும், மூர்க்கத்தனமும் ஆன கொலைபாதகப் பேயாட்டங்கள் இனி நடைபெற முடியாமலும் போகும்.

பெயர் மாறுதல்கள் காரணமாய் மதங்களுக்கும் தேசங்களுக்கும் கொள்கை, பெயர் மாற்றங்கள் ஏற்படுவது சகஜமாகவே இருந்து வந்திருக்கிறது.

உதாரணமாக, புத்தர், அசோகர் காலத்தில் ஏற்பட்ட மதக்கோட்பாடு மாறுதல்களும்; ரஷியா, ஸயாம் முதலிய நாடுகளுக்கு ஏற்பட்ட ‘சோவியத்லேண்ட்’, ‘தாய்லேண்ட் போன்ற பேர்களும் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். மற்றபடியாக சிறு ஊர்களுக்குப் பெயர் மாற்றுவதும் பெருந்தொகையாகப் பணம் வசூல்செய்து அதன்மூலம் சில பொதுநலக் காரியங்கள் செய்வதும் காந்தியாருக்கு நாம் ஏதோ நன்றி காட்டினதாகத்தான் வந்து முடியுமே தவிர, காந்தியாரால் உலகத்துக்கு நம் நாட்டுக்கு-அதாவது, மற்ற நாட்டாரால் தாழ்மையாகக் கருதப்பட்ட சரித்திரப் பிரசித்தமுள்ள நாட்டுக்கு ஏற்பட்ட மகா மேன்மையான காரியம் என்னவென்பதற்கு நல்ல ஆதாரம் இல்லாமல் போய்விடுகிறது. ஒருவரை மகான்-கிரேட் மேன்’ (Great Man) என்றால்-அவரால் ஏற்பட்ட நிரந்தரமான பெரிய காரியம் ஒன்று இருந்தாகவேண்டுமேயொழிய, அவர் காலத்தில் இன்னின்ன காரியம், அற்புதம், அதிசயம் நடந்தன என்பவை பிற்கால மக்களுக்குப் பயன்படுவதானதாக ஆகி விடாது. இது எனது தாழ்மையான அபிப்பிராயம்; கொள்ளவும், தள்ளவும், திருத்தவும், மாற்றவும் உங்களுக்குப் பூரண உரிமையுண்டு.

இதற்கு இது ஒரு நல்ல சமயம்: நல்ல வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இந்தியாவின் ஒரு பாகமாகிய சிந்து’வுக்கு இன்று பாகிஸ்தான் என்ற பெயர் ஏற்பட்டிருப்பது போல் இந்தியாவின் பெயரும் மாற்றப்படலாம். இந்து என்பதும் இந்தியா என்பதும்-அன்னி யர்கள் நமக்கும், நம் நாட்டிற்கும் கொடுத்த பெயர். (அதுவம் சிந்து நதி காரணமாக ஏற்பட்ட பெயர்) என்பதை எல்லா அறிஞர்களும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்; காந்தி யாரும் இதைச் சமீபத்தில் சொல்லியிருக்கிறார். இந்து மதம் என்பதாக ஒரு மதமும் இல்லை. ஆகவே, இந்தப்படியான மாற்றம் காந்தியார் உயிர்ப் பலியின் காரணமாக ஏற்பட்டுவிடுமானால் இனி இங்கு மத, சமுதாய, சாதி சம்பந்தமாக எந்தப் பிரச்சினையும் கலபத்தில் காணமுடியாது. 30 கோடி மக்களும் ஞானவான்களாக-ஒரே சமுதாய மக்களாக உலகத்தின்முன் திகழ்வார்கள்.


-- குடிஅரசு -14.2.1948

No comments:

Post a Comment